நண்பர்களே,
வணக்கம். அக்னி நட்சத்திரம் துவங்க இன்னும் நாட்கள் சில பாக்கியுள்ள போதிலும், கடந்த சில தினங்களாய் இங்கே நமது வலைப்பதிவில் வெப்பத்தின் அளவுகள் கூடி வருவதை நாம் அறிவோம் ! அதைப் பற்றிய ஆராய்ச்சிக்குள் தலையை நுழைப்பதற்கு முன்பாக நமது மாமூலான வேலைகளோடு பிள்ளையார் சுழியைப் போடுவோமா ?
மே துவங்கவிருப்பது நாளைய தினமே எனினும் நமக்கோ 'காமிக்ஸ் மே' ஒரு வாரத்திற்கு முன்பாகவே புலர்ந்து விட்டது! 3 கதைகளையும் படித்து, விமர்சித்து முடித்த கையோடு - what next ? என்ற கொட்டாவியோடு அமர்ந்திருக்கிறோம். LMS ன் பணிகள் ஒரு பக்கம் ஓசையின்றி நடந்து வரும் போதிலும் - இடைப்பட்ட ஜூன் & ஜூலை மாதங்களுக்கான ரெகுலர் இதழ்களை 'சட சட' வென்று பூர்த்தி செய்து விட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்குமென்ற எண்ணம் எனக்குள் குடி கொண்டு விட்டதால் ஜூன் & ஜூலை issues ஜரூராய்த் தயாராகி வருகின்றன ! 2014-ல் முதல் தடவையாக வுட்சிடியின் கோமாளிகளும், கோடீஸ்வரக் கோமானும் தலை காட்டப் போவது ஜூன் மாதத்தில் ! இதோ சிக் பில் & கோவின் முழுநீளக் காமெடி கலாட்டாவின் அட்டைப்படம் + உட்பக்க teaser !
ஒரிஜினல் அட்டைப்படமே அழகாய் அமைந்திருந்தபடியால் அதனை நோண்டும் அவசியம் ஏதும் நேரவில்லை ; கதையின் பெயர், இத்யாதிகளை மாத்திரம் இங்கும் அங்குமாய் பொருத்தி விட்டு மேகி நூடுல்ஸ் பாணியில் விரைவாகத் தயார் செய்து விட முடிந்தது. பின்னட்டையில் கதைச்சுருக்கம் மட்டுமே சேர்ந்திடும் அச்சாகும் முன்பாக ! வழக்கம் போல ஷெரிப் & ஆர்ட்டின் அடிக்கும் கூத்துக்களே கதையின் highlight என்ற போதிலும், பின்பாதியில் சிக் பில் & குள்ளன் பொறுப்பாய் இணைந்து கொள்கிறார்கள் ! 1953 முதலாய் சிக் பில் கதைகள் பிரெஞ்சில் வெளியாகி வரும் போதிலும், இதர மொழிகளில் அத்தனை பெரிதாய் சோபிக்கவில்லை என்பது தான் புதிரான விஷயம் ! வேற்று மொழிகளில் வெளியிட டிமாண்ட் அதிகம் இல்லாது போனதால் இத்தொடரின் அனைத்துக் கதைகளையும் டிஜிட்டல் கோப்புகளாக்கும் முயற்சியில் படைப்பாளிகள் வேகம் காட்டவில்லை ! தொடரின் புதுக் கதைகள் நீங்கலாக வண்ணத்தில் எஞ்சி இருப்பது 1960-களில் வெளியான இத்தொடரின் ஆரம்பத்து ஆல்பம்கள் மாத்திரமே ! அத்தனை பழைய கதைகளில் கையாளப்பட்டிருக்கும் சித்திர பாணியில் ; கதாப்பாத்திரங்களின் தன்மைகளில் நிறையவே வேறுபாடுகள் இருக்குமென்பதால் அவற்றால் நமக்குப் பெரியதொரு புண்ணியம் கிடையாது ! Cinebook போன்ற சாவதேச ஜாம்பவான்கள் யாரேனும் சிக் பில்லை வெளியிட முன்வந்தால் அவர்களின் பொருட்டாவது தயாராகக் கூடிய டிஜிட்டல் பைல்கள் நமக்கும் பயன்படும் ! நம்புவோம் - அப்படியொரு நாள் புலருமென்று !
"சென்னைப் புத்தக சங்கமம்" மிதமான விற்பனையைத் தந்த வகையில் பெரியதொரு ஏமாற்றம் ஏதுமில்லாது தலை தப்பிக்க உதவியது ! ஜூலை மாதம் நெய்வேலியில் நடக்கவிருக்கும் புத்தக விழா நமது அடுத்த இலக்கு ! அந்தப் பகுதிகள் நமக்கு முற்றிலுமாய் புதுசு என்பதால் அங்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் நமது இதழ்களை அங்குள்ள வாசகர்களுக்கு அறிமுகம் செய்திட ஒரு வாசல் திறக்கும் ! விண்ணப்பித்துள்ளோம் - நம்பிக்கையோடு ! ஸ்டால் கிட்டும் பட்சத்தில் 'சூப்பர் 6'-ன் முதலாவது BOOK FAIR SPECIAL அங்கே அரங்கேறிடும் ! "மேஜிக் விண்ட்" முதல் வண்ண இதழும், டெக்சின் "காவல் கழுகு" 114 பக்க B &W சாகசமும் நெய்வேலிக்கென target செய்துள்ளோம் ! குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டால்கள் மாத்திரமே நெய்வேலியில் அனுமதிக்கப்படும் என்பதால் புதியவர்களுக்கு entry கிடைப்பது சுலபமல்ல என்றும் சக புத்தக வெளியீட்டாளர்கள் மூலமாய் அறிந்து கொள்ள முடிந்தது ! ஆனால் அதன் அமைப்பாளர்கள் நம் மீது பரிவு காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்துள்ளோம் ! மேஜிக் விண்ட் கதைகளின் வண்ண டிஜிட்டல் பைல்கள் ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக நம்மை வந்து சேர்ந்தன ! ரொம்பவே வித்தியாசமான கதைக்கு, ரொம்பவே மாறுபட்ட வர்ணக் கலவை தரப்பட்டுள்ளது ! டெக்ஸ் ; டயபாலிக் சைஸ்களில் ஆர்ட் பேப்பரில் முழுவண்ணத்தில் வரக் காத்திருக்கும் இந்தத் தொடர் மட்டுமல்லாது, இந்த format -ம் கூட நம்மை ரசிக்கச் செய்யுமென்று நினைக்கிறேன் ! Fingers crossed !
அப்புறம் கடந்த பதிவின் பின்னூட்டக் கோர்வைகளில் கலந்துள்ள தேவையற்ற உஷ்ணத்தைப் பற்றி ! இந்த வலைப்பூ தனது இரண்டரை ஆண்டுகாலப் பயணத்தில் பார்த்திடும் முதல் சலனமோ, இறுதிச் சலனமோ இதுவல்ல எனும் போது இதற்கெனப் பெரிதாய் தூக்கத்தைத் தொலைக்காது நம் பாதையில் எப்போதும் போலத் தொடர்வது தானே லாஜிக் ? அபிப்ராயங்களில் ; அவற்றை வெளிப்படுத்தும் தொனிகளில் வேறுபாடு இருப்பினும், நிஜமான அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் பிரியமின்றி, புனைப்பெயர்களோடு திடுமென இங்கு உலவுவோரும் கூட நம்மோடு வேறு பல சந்தர்ப்பங்களில் நேசத்தைப் பரிமாறிய நண்பர்களே என்பதையும் நினைவில் கொள்வோமே ? ஏளனத்துக்கு ஏளனம் ; வெப்பத்துக்கு வெப்பம் என்றுமே பதிலாகாது என்பதை அறியாதவர்களா நாம் ? So அந்த கணத்தின் தூண்டுதலில் காரமாய் பதில் சொல்லி தேவையற்ற சர்ச்சைகளை வளர்க்க வேண்டாமே ? சங்கடத்தை உருவாக்கும் விதமாய் பின்னூட்டங்கள் இனி இங்கு இடப்படும் பட்சத்தில் தேர்தலில் தற்போது தரப்பட்டுள்ள "வாக்களிக்கப் பிரியமில்லை" என்ற ரீதியிலான உபாயத்தை நாமும் கையாள்வோம் ! "இந்தக் கருத்தோடு நான் உடன்படவில்லை!" என்று நாசூக்காய் பதிவு செய்து விட்டு நகன்று செல்வோமே ? "பணிந்தவன் பயந்தவனில்லை" என்பது ஆட்டோ பின்பக்கத்து வாசகமாய் மட்டுமே இருத்தல் அவசியமாகாது அல்லவா ? அதே போல யாரையேனும் நேரடியாகவோ, ஜாடையாகவோ காயப்படுத்தும் விதமாய் பதிவு ஏதேனும் இருப்பின், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அதை நான் களைந்து விடுவேன் ! 'இங்கு ஜால்ரா அடிக்கும் விதமான சிந்தனைகளுக்கு மாத்திரமே இடமுண்டு !" என்ற ரீதியிலான விமர்சனத்தை அது கொண்டுவரினும் பரவாயில்லை ! ஏனெனில் அதனைப் பதிவு செய்வோர்க்கே தெரியும், அத்தகையக் குற்றச்சாட்டில் காலணாவிற்கு சரக்குக் கிடையாதென்று !
இது காமிக்ஸ் எனும் சுவையை நட்போடு பகிர்ந்து கொள்ளும் பொதுத் தளம் ! இங்கு எவ்விதமான கமெண்ட்கள் இருந்திட வேண்டும் ; எத்தனை கமெண்ட்கள் இருந்திட வேண்டும் ; என்ன ரீதியிலான கோரிக்கைகள் ; விவாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் நிர்ணயம் செய்யும் உரிமையோ, பிரதிநித்துவமோ நிச்சயமாய் எவருக்கும் கிடையாது ! இங்கு ஜாலியாய், சந்தோஷமாய் பதிவிடுவோரெல்லாம் ஆற்றலில், விவேகத்தில் குறைச்சலானவர்கள் என்ற அபத்த சிந்தனைகளுக்கோ ; பள்ளி வகுப்பறைரீதியிலான அமைதி காக்கப்பட வேண்டுமென்ற code of conduct எதுவுமோ நிச்சயம் அமலில் இல்லை ! எப்போதும் போலவே மனதில் தோன்றுவதை சந்தோஷமாய் பகிர்ந்திட இந்தத் தளம் தனது கதவுகளை 24/7 திறந்தே வைத்திருக்கும் !
அதே சமயம் நண்பர்களுக்கு சின்னதாய் சில வேண்டுகோள்களும் கூட :
- பதிவுகளை இங்கொன்றும், அங்கொன்றுமாய் சிதறல்களாய் வெளியிட்டிடாமல் கோர்வையாக எழுதினால் படிக்கவோ / தாண்டிச் செல்லவோ ஏதுவாக இருக்கும் - அவரவர் விருப்பத்தைப் பொருத்து !
- பல சந்தர்ப்பங்களில் நான் உங்களது பின்னூட்டங்களுக்குப் பதில் போட முனைவது நடுச்சாமத்திலோ, அதிகாலையிலோ தான் ! அயர்ச்சியின் காரணமாகவோ, திடீர் மின்வெட்டின் காரணமாகவோ ; தொங்கிக் கொண்டிருக்கும் கதைகளின் எழுத்துப் பணிகளின் பொருட்டோ- நண்பர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் தர முடியாது போகலாம் ! "அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிட்டுகிறது ; எனக்கில்லையா ?" என்ற ரீதியில் சில சமயங்களில் உளைச்சல்களை இது ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்பது எனக்குப் புரியாமல் இல்லை ! நிச்சயமாய் நண்பர்களுக்குள் பாகுபாடு பார்க்கும் அவசியம் எனக்குக் கிடையவே கிடையாது ! அதே போல உங்கள் கேள்விகள் / அபிப்ராயங்கள் பகிரப்படுவது என் ஒருவனை நோக்கி மாத்திரமே என்பதால் அதனை நீங்கள் மறக்காதிருப்பது சுலபம் ! ஆனால் என் நிலையோ வேறு - பதிவின் பின்னூட்ட எண்ணிக்கை நூறைத் தாண்டிடும் நிலையிலேயே - யார் என்ன சொன்னார்கள் ? ; யாருக்கு நான் என்ன பதில் சொன்னேன் ?என்பது என் தலைக்குள் சாம்பாராகிப் போயிருக்கும் ! So அதன் பொருட்டு அவ்வப்போது நேரக்கூடிய சிற்சிறு மனவருத்தங்களுக்காக எனது apologies !
- "அவ்வப்போது தட்டி வைக்கப்படாவிடால் ஆசாமிக்கு மண்டைக்கனம் ஏறி விடும் ! " என்ற ரீதியிலான அபிப்ராயங்கள் நண்பர்களின் ஒரு சிறுபான்மைக்கு உள்ளதை அவ்வப்போது வரும் சில மின்னஞ்சல்களும், மாற்றுப் பெயரிலான பின்னூட்டங்களும் சொல்வதை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை ! இதன் பொருட்டே கூட விமர்சனங்களில் காரம் எனும் வத்தல் (தேவைக்கு அதிகமாகவே) தூக்கலாய் ஆங்காங்கே இருப்பதையும் உணரவும் செய்கிறேன் ! வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் பிரதானமாகத் தெரிவது இயல்பே ! நான் தற்போது நிலைகொண்டுள்ள பருவத்தில் - எழுத்தும், அது கொண்டு வரும் திருப்தியுமே என்னை இயக்கும் பெட்ரோல் ! அவ்வப்போது நண்பர்களின் கனிவான வார்த்தைகளைப் படிக்கும் போது எழும் சின்னதொரு சந்தோஷத்தைத் தாண்டி இறுமாப்பிற்குப் படிக்கட்டுகளாய் அவை ஒரு நாளும் இருந்ததில்லை ; இருக்கவும் போவதில்லை! I know I am as good or as bad as my last hit or my last flop ! ஏப்ரலில் ஷெல்டனும், லக்கியும் கச்சிதமாய் அமையப் பெற்றதால் 'ஹிட்' அடிக்க முடிந்தது ! ஆனால் 25 நாட்களே கடந்த நிலையில் - கதைகளில் ; தர எதிர்பார்ப்புகளில் கொஞ்சமேனும் குறைகள் எட்டிப் பார்க்கும் போதே பிசிறடிக்கும் எண்ணச் சிதறல்கள் நிலவரத்தைப் பறை சாற்றுகின்றன ! So உயர மிதக்கிறேன் பேர்வழி என்று பறந்து விட்டு, மோடேர் என்று பூமியைப் பதம் பார்ப்பதை விட கால்கள் தரையில் திடமாய் ஊன்றி நிற்பது சாலச் சிறந்தது என்பது எனது வாழ்க்கைப் பாடம் !
- Last but not the least, ஒவ்வொரு முறையும் ஈகோ எனும் முகமில்லா மாயாவி நம்மிடையே உலவும் வேளை வரும் போது தான் முட்டல்களும் , மோதல்களும் தலைதூக்குகின்றன ! ஏதேதோ சிற்சிறு மனத்தாங்கல்களால் மனதளவில் விலகி நிற்கும் நண்பர்கள் அனைவரும் நேசமெனும் கரத்தை முன்நீட்டினால் "இனி எல்லாம் சுபமே !" என்று end card போட்டு விடலாம் அல்லவா ? நானும் இங்கே மாங்கு மாங்கென்று 'அட்வைஸ் அய்யாசாமியாய்' அவதாரம் எடுப்பதற்குப் பதிலாய் - அண்ணன் "மேஜிக் விண்ட்" அவர்களோடுடனான பணிகளைக் கவனிக்கச் செல்வேன் அல்லவா ? Take care folks ! See you around !
P.S: கடந்த பதிவில் ஆங்காங்கே காயம் செய்யும் விதமாய் பரிமாறப்பட்டுள்ள பின்னூட்டங்களை ஒட்டு மொத்தமாய் களைந்திட நினைத்தேன் ; ஆனால் முன்பு ஒருமுறை செய்த அந்த "மொத்த இருட்டடிப்பு" வேண்டாமே என்று தோன்றியது ! மன உளைச்சல்களுக்கு நானும் ஒரு விதத்தில் காரணம் ஆகி விட்டதற்கு மீண்டும் apologies !!