நண்பர்களே,
வணக்கம். மதராசபட்டினம் மறக்க இயலா அனுபவங்களைத் தரும் தனது அளப்பரிய ஆற்றலை மீண்டுமொருமுறை நிலைநாட்டியுள்ளது ! பதிப்புலகத் துறைக்கு ஒரு பாலைவனச் சோலையாகி விட்ட புத்தகத் திருவிழா இம்முறையும் தன பிரம்மாண்டத்தை சிறுகச் சிறுகக் கட்டவிழ்த்து விட - சென்ற வாரத்தின் இறுதி நாட்கள் சகலமும் நமக்கு சுவையான தருணங்களாகிப் போயின !
ஸ்டாலுக்குள் வெள்ளி மாலை நானும் ஜூனியரும் நுழைந்தே போதே "போஸ்டர் தப்பா இருக்கு சார் !" என்று முகம் நிறைந்த சிரிப்போடு என் கரங்களை வாஞ்சையோடு பற்றிக் கொண்ட வாலிபரின் வயது 78 ! 'ஏழு முதல் எழுபத்தி ஏழு வரை' என்ற நமது பேனரை சுட்டிக் காட்டிய அந்த நண்பர் - ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக சீனியரான பைக் மெகானிக் ! ஆனால் தன வீட்டு விசேஷத்தில் பங்கேற்கும் உத்வேகத்தோடு பில் போடுவதிலும், புத்தகங்களை பேக் செய்து கொடுப்பதிலும் நம்மாட்களுக்கு உதவிக் கொண்டிருந்தார் இந்தக் காமிக்ஸ் காதலர் ! அடுத்தாண்டில் நாம் அச்சிடும் பேனரை '8 to 88' வரை என அவரின் பொருட்டு மாற்றிடுவதாய் வாக்குத் தந்தேன் !
வழக்கம் போல் நம் நண்பர்களில் பலர் உள்ளூர்-வெளியூர் பாகுபாடின்றி நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்து தங்களது சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டது மனதுக்கு ரொம்பவே இதமாய் இருந்தது ! நாகர்கோவிலில் இருந்து வெள்ளி காலையே வந்து, புத்தகங்களை அடுக்கிக் கொடுப்பது முதல் ஸ்டாலை நிர்மாணிப்பது வரை 2 முழு நாட்களும் நமக்காகச் செலவிட்டவர் நிச்சயமாய் எனக்குக் கிறுக்கனாகத் தெரியவுமில்லை ; அவரது பேச்சிலோ பாணியிலோ கிறுக்கல்களும் புலனாகவில்லை ! இரவு ரயிலைப் பிடிக்கும் டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டும், சக நண்பர்களின் கேள்விகளைச் சுமந்து வந்து விடாப்பிடியாய் கணைகளைத் தொடுத்த திருப்பூராரோ ப்ளுபெர்ரியின் பிடிவாதத்தை இரவல் வாங்கி வந்திருந்தார் என்பது கண்கூடு ! சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொரு நண்பரும் பரஸ்பரம் மொபைல் நம்பர்களைப் பரிமாறிக் கொண்டு சகஜ தோழர்களாய் உருமாறிக் கொண்டதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமான "இரும்புக்கை மாயாவி எங்கே ? ஸ்பைடர் எங்கே ?" என்ற கேள்விகளை விட இந்தாண்டு நான் எதிர்கொண்ட வினவல்களின் பெரும்பகுதி -
- "இந்தாண்டும் NBS போல் ஒரு தடி புக்கோடு புத்தக விழாவைச் சந்தித்திருக்கலாமே ?"
- "லயன் ஆண்டுமலர் 30-ல் முழுசும் டெக்ஸ் கதைகள் தானே ?"
- "+6 இந்தாண்டும் உண்டா - கிடையாதா ?"
- Million Hits Special ??
- "சிங்கத்தின் சிறுவயதில் ??"
என்ற கேள்விகள் தான் ! வழக்கம் போல் நான் கல்லுளிமங்கனாக இருந்ததில் நண்பர்கள் கடுப்பாகியும் போய் இருக்கலாம் - ஆனால் "செய்து விட்டுச் சொல்கிறேனே - ப்ளீஸ் !" என்ற எனது மாமூல் டயலாக்கை (வேறு வழியின்றி) ஏற்றுக் கொண்டனர் ! நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது நான் கேட்க நேரிட்ட மாமூலான டயலாக்கும் இல்லாதில்லை ! "நாள் தவறாது நம் வலைப்பதிவுக்கு விஜயம் செய்து விடுவோம் ; ஆனால் நாங்கள் அமைதியான பார்வையாளர்கள் மாத்திரமே ! ஒரு பின்னூட்டம் விடாமல் படித்து விடுவோம் !" என்று சொன்ன நண்பர்களின் எண்ணிக்கை நிச்சயம் கணிசம் !
சென்றாண்டைப் போல நம்மிடம் பருமனில் ; விலையில் தாட்டியமான இதழ் ஏதும் இல்லாது போயினும், இம்முறை அதன் இடத்தில் ஜனவரியின் 4 புது இதழ்களும் 'பளிச்' என இடம் பிடித்திருந்தன ! "தினகரன்" குழுமத்திலிருந்து மதிப்பிற்குரிய திரு.K.N.சிவராமன் அவர்கள் நம் ஸ்டாலுக்கு வருகை தந்த போது புதிய இதழ்களை அவர் கையில் மகிழ்ச்சியோடு கொடுத்தேன் ! தோர்கல் இதழைப் புரட்டியவர் ஆர்ட் பேப்பரிலிருந்து எழும் அந்த மசியின் fresh மணத்தை வாஞ்சையோடு ஒரு முறை நுகர்ந்து விட்டு பக்கங்களைப் புரட்டிய போது இத்துறையில் அவருக்கிருக்கும் அனுபவம் அப்பட்டமாய்ப் புலனானது ! அவரது அடக்கமான வார்த்தைகளும், நேசமான பாராட்டுக்களும் நமது முயற்சிகளுக்கு பெரும் பெருமிதம் தந்தது நிஜம் ! ஞாயிறு தினகரனில் 5 முழு வண்ணப் பக்கங்களை ஒதுக்கி காமிக்ஸ் மீது ; நம் பதிப்பகத்தின் மீது ஒளிவட்டம் விழச் செய்த அவரது பெருந்தன்மைக்கும் , பேட்டியை சுவாரஸ்யமாய் வழங்கி இருந்த எழுத்தாளர் "அணில்" அவர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாய் தினகரன் குழுமத்திற்கும் நன்றிகள் சொன்னேன் ! 16.50 லட்சம் சர்குலேஷன் கொண்டதொரு இதழில் இத்தனை விஸ்தீரணமானதொரு விளம்பரம் நமக்கு பரிவின் பெயரால் கிட்டியதை நம் நல்லதிர்ஷ்டம் என்பதைத் தாண்டி வேறு என்னவென்பது ?
|
நடுவில் இருப்பவர் திரு சிவராமன் அவர்கள்.. |
முதல் நாள் மாலை மெலிதான கூட்டம் மட்டுமே விழா முழுவதினிலும் இருந்தது சற்றே ஏமாற்றமாய் இருந்த போதிலும், நமது ஸ்டாலில் நான்கே மணி நேர விற்பனையின் எண்ணிக்கை ரூ.39,000 என்பதை அறிந்த போது - "ஆவென " வாயைப் பிளந்தேன் ! இம்முறை நான் கவனித்த மிக அழகான விஷயங்கள் இரண்டு ! முதலாவதும், மிகப் பிரதானமானதும் - பெண்கள் நமது காமிக்ஸ் மீது காட்டிய அசாத்திய ஆர்வத்தை பார்த்திட முடிந்ததே ! நமது ஸ்டாலின் பெயர் பலகையைப் பார்த்த மாத்திரத்தில் 'விறு விறு'வென்று உள்ளே நுழைந்து - இருந்த இதழ்களின் சகலத்தையும் வாங்கிய வாசகியர் முதல் இரு நாட்களின் விற்பனையில் ஒரு 40 சதவிகிதமாவது பங்களித்திருப்பர் ! நான் யாரென்று கேட்டுக் கொள்ளாமலே கொஞ்ச நேரம் என்னிடம் பேசி விட்டு, இதழ்களை வாங்கி விட்டு, அப்புறமாய் "You are ..?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டு "Keep up the good work ! " என்று சொல்லிச் சென்ற சகோதரி - காமிக்ஸ் ஆண்களின் சாம்ராஜ்யம் மாத்திரமே அல்ல என்று சொல்லாமல் சொல்லிச் சென்றது போல் பட்டது ! நிறைய குடும்பங்கள் நம் ஸ்டாலுக்குள் அடி வைத்து விட்டு - ஆளுக்கு ஒரு திசையில் புத்தகங்களைப் புரட்டி ; விவாதித்து ; வாங்கிச் சென்றது மறக்க இயலா கணங்கள் ! நான் ரசித்த விஷயம் # 2 - காமிக்ஸ் சிநேகமற்ற புதியவர்கள் கூட, நமது இதழ்களை லேசாகப் புரட்டத் துவங்கி விட்டு, வண்ணங்களை, சித்திரங்களைப் பார்த்து லயித்துப் போய் நேரம் செலவிட்டது தான் ! வழக்கமாய் ஏதோ ஒரு ஆர்வத்தில் உள்ளே நுழைபவர்கள், மேலோட்டமாய் ஒன்றிரண்டு புத்தகங்களை அசுவாரஸ்யமாய்ப் புரட்டி விட்டு, இடத்தை காலி செய்திடுவது தான் வாடிக்கை ! ஆனால் இம்முறையோ லயிப்போடு இதழ்களைப் புரட்டியதொடு - ஒருவருக்கொருவர் காமிக்ஸ் பற்றிப் பேசிக் கொள்வதை கண்குளிரக் காண முடிந்தது !
"இந்த மாமா யாரு ? ...ஆங் ..இவர் கார்சன்...இது..? குட்..இவர் லக்கி லூக் ! " ஜாலி ஜம்பர் எங்கேப்பா ?" என்ற வண்ணம் ஒரு ஒன்றரை + வயதிலான குட்டி மாடஸ்டியை அழைத்து வந்ததொரு இளம் குடும்பம் ! அந்த மழலையின் ஆதர்ஷ நாயகன் லக்கி லூக் என்றும், போஸ்டரில் இருந்த TEX + CARSON கூட்டணி கூட அந்த வாண்டுக்குப் பரிச்சயம் என அவர்கள் சொல்லிய போது நிஜமாக உற்சாகமாய் இருந்தது ! இந்த வயதிலேயே காமிக்ஸ் எனும் சுவாசத்தை நுகரத் தொடங்கி விட்ட அந்தக் குட்டி வாசகியை எண்ணி மகிழ்வதா ? - அல்லது இச்சிறு வயதிலேயே காமிக்ஸையும் புகட்ட வேண்டுமென்று ஆர்வம் காட்டிய பெற்றோரைப் பாராட்டுவதா ? பதில் தெரியாது மண்டையைச் சொறிந்தேன் ! சொல்லி வைத்தார் போல ஸ்டாலுக்குள் நுழைந்த அத்தனை வாண்டுகளும் நேராய்ப் போய் புரட்டியது லக்கி லூக்கின் இதழ்களை மாத்திரமே ! சுட்டி டி.வீயின் சீரியல் ஏற்படுத்திய தாக்கமா - அல்லது ஆங்கில லக்கி காமிக்ஸ்கள் உண்டாக்கிய பரிச்சயமா தெரியவில்லை ; அத்தனை சுட்டிகளுக்கும் தஞ்சம் தந்தது லக்கி தான் ! கார்ட்டூன் நாயகர்களுள் அசைக்க இயலா # 1 அண்ணன் LUCKY LUKE தான் என்பது சுட்டிகளின் சார்பான தீர்ப்பு !
அதே போல not so குட்டி வாசகர்களின் கண்களும், கரங்களும் சென்றது நேராய் நம் இரவுக் கழுகாரின் திசையில் தான் ! கறுப்பு-வெள்ளையில் இருப்பினும் கூட டெக்ஸ் இதழ்கள் செம விறுவிறுப்பாய் விற்பனை ஆகின ! In fact முதலில் தீர்ந்து போனது டெக்ஸ் தீபாவளி மலர் தான் ! தொடர்ந்த நாட்களில் டெக்சின் இதர இதழ்களும் விற்பனையில் மின்னல் வேகம் காட்டின ! இங்கும் கூட ஒரு out of court தீர்ப்பு கிட்டி இருப்பது போலாய் எனக்கொரு பட்சி சொல்கிறது !! உங்களுக்கும் ஏதேனும் கேட்கிறதா folks ? நிறைய பிரபல வலைப்பதிவாள நண்பர்களும் நமது ஸ்டாலுக்கு ஆர்வமாய் வந்திருந்து நேரம் செலவிட்டது நமக்குப் பெருமை சேர்ப்பதாய் இருந்தது ! அனைவருமே ஒற்றை வரியாய் - "Carry on the good work !" என்று முழு மனதாய் வாழ்த்திச் சென்றனர் ! "நாளைக்கு என் மனைவி சகிதம் வருகிறேன் சார் - உங்களிடம் சொல்ல அவர் புகார் ஒன்று வைத்திருக்கிறார் !" என்று நண்பர் ஒருவர் புதிர் போட, மறு நாள் மாலை சொன்னபடியே ஆஜரானார் துணைவியாருடன் ! "நீங்கள் புத்தகமும், வலைப்பதிவும் போட்டாலும் போட்டீர்கள் - அவர் வீட்டிலிருக்கும் நேரம் முழுவதும் காமிக்ஸோடு அல்லது கணினியின் முன்னே தான் செலவிடுகிறார் சார் !" என்று சொன்ன சகோதரியின் முகத்திலோ புன்னகை ! "சிறுகச் சிறுக நானும் இந்த ரசனைக்குப் பரிச்சயம் ஆகிக் கொள்ள உதவிடும் விதமாய் குட்டிக் கதைகளாய் கொஞ்சம் போடுங்களேன் ! "என்று அவரே கோரிக்கையும் வைத்த போது அருகில் நின்ற கணவரின் முகத்தில் பெருமிதத் தாண்டவம் ! ஒரு பக்கத்திற்கு எட்டுப் பத்துக் கட்டங்கள் ; அவற்றினுள் எண்ணற்ற பலூன்கள் ; வசனங்கள் ; சித்திரங்கள் - இவை நம்மிடையே ஏற்படுத்தும் இந்தத் தாக்கத்தை எண்ணி வியக்காதிருக்க இயலவில்லை !
சனிக்கிழமை புத்தக விழா காலை 11 மணிக்கே துவங்கி விட்ட போதிலும், சன் செய்திகள் தொலைகாட்சியினில் - 2014 புத்தக விழாவின் செய்திச் சேகரிப்பு வரிசையில் காமிக்ஸ் வெளியிடும் நம்மைப் பற்றி ; பொதுவாக காமிக்ஸ் பற்றிப் பேசிட அவர்களது ஸ்டுடியோவிற்கு நான் வர இயலுமா ? எனக் கோரி இருந்தனர் ! 'புத்தக விழாவிலேயே ; நமது ஸ்டாலிலேயே நேர்முகக் காணலை வைத்துக் கொண்டால் சுலபமாகி விடுமே !' என்று நான் அபிப்ராயப்பட்டேன் ! ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாய் இது போன்ற சின்ன பேட்டிகளுக்கும், நண்பர்களின் முழு நீள கேள்விகள் session க்கு பதில் சொல்லியும் இருந்ததால் அதே போலச் சமாளித்து விடலாமே என்று பார்த்தேன் ! ஆனால் - 'ஸ்டுடியோவில் எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்' என சன் செய்திகளின் எடிடர் கருதியதால் தலையாட்டி வைத்திருந்தேன். சனி பகலில் சன் குழும அலுவலகத்தினுள் நானும், ஜூனியரும் நுழைந்த போதே "ஆவென" விரிந்த வாய் மூட நேரம் நிறைய எடுத்தது ! 10 மாடிகள் ; பிரமாண்டமான ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு செயல்பாடு என தொலைக்காட்சித்துறையின் உச்ச திறமைசாலிகள் அங்கு பம்பரமாய் சுழலுவதை முதன்முறையாப் பார்க்க வாய்ப்புக் கிட்டியது ! நேசமாய் வரவேற்ற திரு நெல்சன் அவர்கள் முதல் மாடியில் இருந்த ஸ்டுடியோவினை காட்டி விட்டு, இலக்கியம் + சினிமா தொடர்பாய் ஒரு நேர்காணலை நடத்தச் சென்றார். 'கண்ணாடிக்குப் பின்னே இருந்த production அறையில் இருந்து பாருங்களேன் !' என என்னையும், விக்ரமையும் அமரச் செய்தார் ! 3 காமெராக்கள் ; எண்ணற்ற தொழில் நுட்பச் சாதனங்கள் ; அவற்றை லாவகமாய்க் கையாளும் கலைஞர்கள் என அந்தச் சின்ன அறையே பரபரப்பாய் இருக்க, கண்ணாடிக்கு மறு பக்கமோ பேட்டி துவங்கியது ! கேள்விகளை சரமாரியாய் திரு நெல்சன் பாய்ச்ச ; சற்றும் சளைக்காது, சரளமாய் பதில்கள் வந்து விழுந்தன ! அது வரை ஒரு பாவ்லாவில் வண்டியை ஒட்டி வந்திருந்த எனக்கு உள்ளுக்குள் உதறத் தொடங்கியது ! காமிக்ஸ் என்பது நமக்கு நேசமானதொரு விஷயம் தான் ; அது தொடர்பான கேள்விகளுக்கு homework பண்ணிக் கொண்டு வராமலே பதிலளிக்க முடியும் தான் என்ற நம்பிக்கை உள்ளுக்குள்ளே பூரணமாய் இருந்த போதிலும், முதன் முறையாய் இது போன்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் நேரம் சொதப்பித் தொலைக்காமல் இருந்தால் போதும்டா சாமி!! என்ற சிந்தனையே உள்ளுக்குள் ஓடியது ! நீண்ட காத்திருப்புக்குப் பின் மதியம் மூன்று மணிக்கு என்னை கிரீன் ரூமுக்குள் அழைத்தனர் - ஷூட்டிங் துவங்கலாமென்று சொல்லி ! திரு. நெல்சன் தான் பேட்டி எடுக்க வருவார் என்ற எதிர்பார்ப்பில் நான் உள்ளே இருந்த சொகுசுச் சேரில் சென்று அமர - இளம் பெண் நிருபரான Ms.அபர்ணா உள்ளே வந்தார் சின்னதொரு புன்சிரிப்போடு !
'ஆஹா....உளறாமல் இருக்கணுமே சாமி !" என்று நொடிக்கொரு முறை உலர்ந்து போய்க் கொண்டிருந்த நாக்கோடு மனசுக்குள் இன்னும் தீவிரமாய் பிரார்த்தித்துக் கொண்டேன் ! அங்கிருந்த Aquafina -வில் பாதியை மடக்-மடக்கெனக் குடித்து விட்டு அபர்ணாவிடம் லேசாய் பேசிப் பார்த்தேன் ! அவர் இது நாள் வரை களப்பணியாற்றி வந்தவர் என்பதையும், அவரது முதல் ஷோ இது தான் என்றும் தெரிந்து கொண்டேன் ! 'சரி..நம் பிரார்த்தனைகளை சாமி கேட்காமல் போனாலும், முதல் ஷோ நன்றாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கும் அந்த யுவதியின் பெயரைச் சொல்லியாச்சும் நாமும் கரை சேர்ந்து விடலாம் டோய் !" என்று மனசுக்குள் சிந்தனை ஓடியது. சட்டையில் மைக்கை மாட்டி விட்டு, காமெராக்களை சரியாக நிலைப்படுத்தி விட்டு கலைஞர்கள் அகன்று விட - அந்த அறைக்குள் நாங்கள் இருவர் மாத்திரமே இருந்தோம். கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாய் வர, நான் பதில் சொல்லத் துவங்கினேன். இது நாள் வரை நம் வாசகர்கள் கேட்கும் கதைகள் ; வெளியீடுகள் தொடர்பான கேள்விகளாய் இல்லாது, பொதுவான கேள்விகளாய் அவை இருந்ததால் 'பர பர' வென்று பதிலுக்குள் பாய்ந்திடாமல் சற்றே நிதானமாய் பேசிட முயற்சி செய்தேன். "ஞீ" என்று எந்த நிமிடம் குரலில் அபஸ்வரம் குடி கொள்ளுமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே இருந்தாலும், சற்றே குறைவான வேகத்தில் பேசியது தொண்டையையும் காப்பாற்றியது ; கொஞ்சமாய் யோசித்து பதில்களை சொல்லவும் இடம் தந்தது ! கிட்டத்தட்ட 35 நிமிடங்களின் முடிவில் ஷூட்டிங் நிறைவுற்ற போது - "நான் இப்போ எங்கே இருக்கேன் ?" என்று கேள்வி கேட்காத குறை தான் ! என்ன பேசினோம் இத்தனை நேரமாய் என்று துளியும் மண்டையில் நிற்கவில்லை ! கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஜூனியரிடம் "தேறுமா தம்பு ? " என்று கேட்ட போது - நன்றாகவே இருந்ததாய் சொன்னான் ! அபர்ணாவுக்கும், நெல்சன் அவர்களுக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டு நேராய் புத்தக விழாவிற்குத் திரும்பிய போது "சொதப்பவில்லை !" என்பது மட்டும் மண்டைக்குள் நின்றது.
"சரி...எப்படியும் எடிட்டிங்கில் கத்திரி போட்டு விட்டு ஒரு நாலைந்து நிமிடங்கள் தானே போடுவார்கள் !" என்ற சிந்தனை ஆறுதலைத் தர - புத்தக விழாவின் மும்முரம் பற்றிக் கொண்டது ! சனிக்கிழமை திகுடு முகுடான கூட்டம் - விழா முழுவதினிலும் ! நம் ஸ்டால் முதல் நுழைவு வாயிலின் வரிசையிலேயே அதிர்ஷ்டவசமாய் அமைந்து இருந்ததால் - ஏராளமான குடும்பங்கள் வருகை தந்தன ! நண்பர்களும், ஆர்வமாய் குழுமி இருக்க கச்சேரி களை கட்டியது ! அப்போது குமுதம் இதழின் ஆசிரியர் அன்போடு நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்ததோடு மட்டுமல்லாது, நம் இதழ்களின் ஒரு முழு செட்டையும் வாங்கிச் சென்றார் ! 'பணம் வேண்டாமே சார்...!' என்று நான் எத்தனை வற்புறுத்தியும், காதில் போட்டுக் கொள்ளாமல் - "இவை அனைத்தும் நான் படிக்கும் புத்தகங்கள் ; நிச்சயமாய் பணம் கொடுத்தே தீருவேன் !" என்று சாதித்து விட்டார் ! "உங்களின் சின்ன வயது அனுபவங்களை கட்டுரையாய் எழுதுவதை நான் ரசித்துப் படிப்பேன் !" என்று அவர் சொன்ன போது எனக்கு வார்த்தைகள் வரவில்லை ! தமிழ் இதழியலின் ஒரு ஜாம்பவானிடமிருந்து கிட்டிய அந்தப் பாராட்டு என் நாளை முழுமையாக்கியது ! கண்ணதாசன் பதிப்பகத்தின் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் நம் ஸ்டாலுக்கு வந்த போது வாய் நிறையப் பாராட்டுக்களோடு என் தோளில் தட்டிக் கொடுத்தார் ! அவருடன் வந்திருந்த நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் திரு ராம்குமார் சிவாஜி அவர்களும் அன்பாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, நமது காமிக்ஸ் இதழ்களைப் புரட்டினார் ! Classics Illustrated கதைகளை தமிழில் போடுங்களேன் என்று அவர் அபிப்ராயம் சொன்ன போது - 'நிச்சயம் யோசிக்கிறேன் சார் !' என்று சொன்னேன் !
நண்பர்கள் கால் கடுக்க நின்று கொண்டே இருந்தனர் நம் ஸ்டாலில் விற்பனைக்கும் அவ்வப்போது ஒத்தாசை செய்து கொண்டே ! போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை அவ்வப்போது நண்டு பிரையின் வாசம் காட்டியே நான் சமாளிக்க - இன்னுமொரு இளம் குடும்பம் வந்தது ! இல்லத்தரசியும், அவரது தங்கையும் தீவிர காமிக்ஸ் ரசிகைகளாய் இருக்க, "மாடஸ்டி கதைகளைப் போடுங்களேன் !" என்ற கோரிக்கை வைத்தனர் ! "நிச்சயம் முயற்சிக்கிறேன் !" என்று சொல்லி விட்டு, அக்குடும்பம் லக்கி லூக்கின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை ரசித்த போது - என்றோ - எப்போதோ இந்தத் துறையில் ஒரு துவக்கம் தந்த என் தந்தையின் தீட்சண்யம் என் மனதில் நிழலாடியது ! காமிக்ஸ் எனும் உலகின் பரிமாணம் எத்தகையது என்பதை உணர்ந்திட இணையமோ ; உலகளாவிய காமிக்ஸ் சேகரிப்புகளோ இல்லாத அந்தப் புராதன நாட்களிலேயே ஒரு கோடு போட்டு வைத்த அவரது ஆற்றலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ! நண்பர்களிடம் விடை பெற்று விட்டுப் புறப்பட்ட போது பாக்கெட்டில் ரூ.70,000 வசூல் பணம் இருந்தது ! தொடரும் நாட்களில், விடுமுறைகள் நிறையவே இருப்பதால் - இந்தாண்டு வளமான விற்பனை எண்ணங்களை நமக்குக் காட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடையைக் கட்டினேன் ! எத்தனையோ பணிகளுக்கு மத்தியினில் நமக்காக நேரம் செலவிட்டதற்கும், துளியும் குறையா அன்பைப் பொழிவதற்கும், ஏற்ற தாழ்வுகள் எது வந்தாலும், குறைவிலா காமிக்ஸ் காதலோடும் வாழ்ந்து வரும் இந்தச் சிறு வாசகக் குடும்பத்திடம் நாங்கள் பட்டிருக்கும் கடன் மலையளவிலானது ! "ஈரோட்டில் சந்திப்போம் ! " என்று ஆத்மார்த்த அன்போடு சொல்லிச் சென்றுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் ஒரு பரிபூரண விருந்து படைக்கும் பொறுப்பு எங்களுக்குள்ளது ! தவற மாட்டோம் ! Take care all ! அனைவருக்கும் சந்தோஷப் பொங்கல் வாழ்த்துக்கள் !
P.S : ஞாயிறு காலை சன் டி-வியிலிருந்து நெல்சன் அவர்கள் போன் செய்து மதியம் 1 மணிக்கும், மாலை 5-க்கும் ; இரவு 10-30க்கும் பேட்டி ஒளிபரப்பாகிறது என்று சொன்ன போது பூம் பூம் மாடைப் போல் தலையை ஆட்டி விட்டு சத்தமின்றி இருந்து விட்டதும், . நண்பர் விஸ்வா SMS தட்டி விட, அந்தப் பட்டியலில் எனது தந்தையும் இருந்திட, குடும்பத்தில் அனைவரும் ஆங்காங்கே டி.வி. முன்னே ஆஜர் ஆகிட்டதும் , எனக்கோ சென்னையில் சன் செய்திகள் தெரியாது போக, பின்னே கணினியில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்ததும் எப்போதோ நிகழ்ந்தவை போல் மனதில் நிழலாடுகின்றன !