Powered By Blogger

Sunday, September 29, 2013

ஒரு சகாப்தம் - ஒரு சாம்ராஜ்யம் !

நண்பர்களே,

வணக்கம். புதியதொரு திக்கில் மூட்டைகளைக் கட்டிக் கொண்டு இவ்வாரத் துவக்கத்தில் புறப்பட்ட போது எனது இலக்குகள் ஐரோப்பாவின் இரு பேஷன் தலைநகரங்களாய் இருந்தன ! திரும்பிய திசையெல்லாம் மிரளச் செய்யும் designer brands ; perfumes என்று உலகுக்கே உச்ச ஸ்டைலையும் ; நவநாகரீகத்தையும் அடையாளம் காட்டும் பெருமை இத்தாலியின் மிலான் நகருக்கும் , பிரான்சின் பாரிசுக்கும் உண்டு ! ஆனால் நமக்கோ இவ்விரு நகரங்களுடனான பந்தமோ முற்றிலும் மாறுபட்ட ரகம் !ஐரோப்பியக் காமிக்ஸ்களின் 'வண்ணத் தலைநகர்'-  பாரிஸ் என்று சொன்னால் - அதன் 'black & white தலைநகர்' நிச்சயமாய் மிலான் தான் ! 

எனது இதர பணிகளின் நிமித்தம் பிரான்சுக்கு ஷண்டிங் அடிக்கும் வாய்ப்புகள் சற்றே அதிகம் என்பதால் அங்குள்ள நமது பதிப்பகங்களில்  நான் தலையைக் காட்டும் வாய்ப்புகளும் ஜாஸ்தி . ஆனால் நமது இத்தாலியப் படைப்பாளிகளை பெரும்பாலும் மின்னஞ்சல்கள் மார்க்கமாய் தான் தொடர்பு கொள்வது வாடிக்கை என்பதால் - அவர்களை நேரில் சந்தித்து நிறைய காலம் ஆகி இருந்தது ! தவிரவும், டெக்ஸ் வில்லர் கதைகளின் தாய் வீடான செர்ஜியோ போனெல்லி நிறுவனத்தினில் பெரியவர் செர்ஜியோ காலமாகி 2 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் அவர்தம் புதல்வர் டேவிட் பொறுப்பில் உள்ளார் ! 'புதிய தலைமுறையோடு ஒரு பரிச்சயத்தை உருவாக்கிக் கொண்டது போலவும் ஆச்சு ; நமது தீபாவளி மலரில் வரவுள்ள டெக்ஸ் வில்லரின் பின்னணிகள் குறித்ததொரு  நேர்காணலையும் நடத்தியது போலவும் ஆச்சு !' என்ற சிந்தனை என்னுள் இருந்தது ! ஆனால் -'பெரியவர் செர்ஜியோ பற்றியதொரு ஆவணப் படம் உருவாகும் தருணம் என்பதால் போனெல்லி நிறுவனத்தில் அனைவருமே இப்போது படு பிஸி ; உங்களுக்கு நேரம் வழங்குவது சந்தேகமே ! ' என்ற ரீதியிலான பதிலே கிட்டியிருந்தது ! 'சரி - கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பி, பதில் வாங்கி விட்டு - டேவிட்டின் ஒரு போட்டோவையும் போட்டு விட்டு  'நானும் ரவுடி ; நானும் ரவுடி ; புதுசாய் form ஆகி இருக்கேன் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டியது தான் போலும் ! ' என்ற நினைப்போடு சென்னை விமான நிலையத்தில் அமர்ந்து பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது எனது blackberry-ல் சந்தோஷ சேதி வந்தது ! 'புதன் காலையில் முதல் வேலையாக வந்திட முடிந்தால் கொஞ்ச அவகாசம் ஒதுக்கிட முடியும் ..அவசியம் வாருங்கள் !" என்று போனெல்லியின் மின்னஞ்சலை வாசித்த போது சந்தோஷம் + குழப்பம்  மண்டைக்குள் ! 'ஆஹா...! கேள்விகள் என்று எதையும் உருப்படியாய் தயார் செய்திடவில்லையே..!" என்ற குடைச்சல் ஒரு பக்கமெனில் வித்தியாசமான பிறாண்டல் சிரத்தின் இன்னொருபுறம் ! நமது இதர பணிகள் இயந்திர இறக்குமதி தொடர்பானவை என்பதால் நான் பயணிப்பது அவற்றை சோதித்திடவும் , அவற்றினை நாம் வாங்கும் பட்சத்தில் லோடிங் மேற்பார்வை செய்திடவுமே என்பதால் எனக்கு எப்போதுமே ரெண்டு பழைய ஜீன்சும் ; சட்டைகளும் போதுமானவையாக இருப்பது வழக்கம். லார்ட் லபக்தாஸ் ரேஞ்சில் கோட்-சூட் என்பதெல்லாம் இந்தப் பணிகளுக்கு ஒத்து வரா சங்கதிகள் என்பதால், இம்முறையும் எனது பையில் அவற்றிற்கு இடமோ / அவசியமோ இருந்திருக்கவில்லை ! ஆனால் திடு திடுப்பென போனெல்லியை சந்திக்கும் வாய்ப்பு என்ற போது பிரான்க்பார்ட் புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு பதிப்பகப் பெரும்தலையும் அணிந்து வரும் உயர்ரக சூட் வகைகள் என் மனத்திரையில் விறுவிறுப்பாய் ஓட, 'ஜீன்ஸில் போய் ஏளனத்தை சம்பாதிக்கப் போகிறாய் மகனே !' என்ற எச்சரிக்கைச்   சங்கை ஊதியது எனது மண்டை ! செல்லும் இடத்தில் ஒரு சூட் வாங்கிக் கொள்ளலாம் தான் ; ஆனால் ஒரு கால் மணி நேரக் கூத்திற்காக கால் லட்சத்தை சூறை போட்டு விட்டு, வீடு திரும்பிய பின்னே பாச்சான் உருண்டைகளோடு தோஸ்த்தாக்கி விடுவதைத் தாண்டி அந்தக் கோட்டுக்கு உருப்படியாய் வேறு உபயோகம் எதையும் ஒதுக்கிட இயலாதே !என்ற உறுத்தல் உள்ளுக்குள் ! 'சரக்கு..முறுக்கு...செட்டியார்..'என்றெல்லாம் ஏதேதோ தலைக்குள் ஓடினாலும் ; 'சரி, ஆக வேண்டியதைக் கவனி !' என்ற கட்டளையையும் ஒலிக்கச் செய்தது சிரம் ! 

டயரியை எடுத்துக் கொண்டு டெக்ஸ் தொடர்பாய் நாம் கேட்கக்கூடிய கேள்விகளை கொஞ்சம் கொஞ்சமாய் உருவகப்படுத்திடத் தொடங்கினேன் ! முன்அறிமுகம் இல்லா இளைஞர் என்ற விதத்தில் - டேவிட்டிடம்  'தொண தொண'வென கேள்விகளைக் கேட்டு வைத்து கடுப்படித்து விடக் கூடாதென்பது முக்கியமாய்த் தோன்றியது ! தவிரவும், டேவிட் சமீபத்தைய வரவு எனும் போது அவருக்கு டெக்சின் சரித்திரம் ; பின்னணி எத்தனை தூரத்திற்குத் தெரிந்திருக்குமோ என்ற சின்ன சலனமும் என்னுள் இல்லாதில்லை ! So - துவக்க நாட்கள் பற்றிய கேள்விகளைக் கேட்டு வைத்து அவரை நெளியச் செய்ய வேண்டாமே என்றும் தோன்றியது ! இங்கு நண்பர்கள் பலரும் எழுப்பி இருந்த கேள்விகளையும் கொஞ்சம் இணைத்துக் கொண்டு ஒரு வழியாய் 18 questions கொண்டதொரு பேப்பரைத் தயார் செய்திருந்தேன் !

செவ்வாய் பகலில் எனது மற்ற பணிகளை நிறைவு செய்து விட்டு, புதன் காலையில் வெகு சீக்கிரமே போனெல்லியின் அலுவலகத்தை எட்டிப் பிடித்து விட்டேன் - வெள்ளாவியில் வைத்தெடுத்ததொரு ஜீன்ஸில் ! முதல் மாடியில் விசாலமான அலுவலகம்....சின்ன தயக்கத்தோடு காலிங் பெல்லை அழுத்தினேன் - இன்னொரு கையில் நம் விசிடிங் கார்டோடு ! 'படக்' கெனக் கதவைத் திறந்த ஆசாமி ஒரு கையில் குட்டியான espresso காபி சகிதம் சகஜமாய் என்னை உள்ளே வரவேற்றார்- 'Hi ...I am David !" என்று சொல்லியவாறே ! "இத்தனை சீக்கிரமாய் வருவீர்களென எதிர்பார்க்கவில்லை !" என்று சொன்ன அந்த ஆஜானுபாகுவான உருவமும் ஒரு ப்ளூ ஜீன்ஸில் casual ஆக இருந்ததைப் பார்த்த போது எனக்கு கொஞ்சமாய் மூச்சுத் திரும்பியது ! ஆறடிக்குக் கொஞ்சம் கூடுதலான உயரம் ; ரொம்பவே நேசமான கண்கள் ; கையில் ஒரு tattoo அடையாளம் என துளி பந்தாவுமின்றி என் முன்னே நின்ற அந்த நபர் தான் இத்தாலிய காமிக்ஸ் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியா சக்கரவர்த்தி என்பதை மெதுவாய் ஜீரணம் செய்தது எனது மூளை !
Tex # 636 !!
கொஞ்சமும் தயக்கமின்றிப்  பாலங்கள் அமைப்பது இன்றைய தலைமுறைக்கு எத்தனை சுலபம் என்பதை சகஜமான தனது பேச்சில் எனக்குப் புரியச் செய்தவர் அவர்களது மீட்டிங் அறைக்கு என்னை இட்டுச் சென்ற அதே கணத்தில், அவர்களது தலைமை நிர்வாகியான ஒரு பெண்மணியும் மிடுக்காய் அங்கே வந்து சேர்ந்தார் ! முகத்தில் புன்சிரிப்பு என்பதைத் தாண்டி அந்தக் கண்களும் புன்னகைப்பதை இருவரிடமும் என்னால் உணர்ந்திட முடிந்தது ! அவரது தந்தை செர்ஜியோவின் இரண்டாம் நினைவு நாள் சரியாக மறு தினம் என்பதால் - அவரது நினைவாய் அவருக்கு ரொம்பவே பிடித்தமான jukebox -கள் (காசு போட்டு பாட்டைத் தேர்ந்தெடுத்தால் பாடச் செய்யும் மிஷின்) வரவேற்பறையிலும், உள்ளறைகளிலும் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பதை டேவிட் எனக்குச் சுட்டிக் காட்டினார் ! இந்தியாவில் நீங்கள் இருப்பது எங்கே ? என்று அவர் வினவிய போது நான் ஒரு பேனாவை எடுத்து சின்னதாய் தென்னிந்தியாவை படம் வரைந்து - 'இது சென்னை..இது பெங்களுரு' என பாகங்கள் குறிக்கும் போது -"மதுரைக்கு நீங்கள் எத்தனை அருகாமை ? " எனக் குறுக்கிட்டார்  மனுஷன் ! அப்புறம் தான் தெரிந்தது இந்தியா அவருக்கும்,அவரது தந்தைக்கும் ஒரு பிடித்தமான விடுமுறைக்களம் என்றும் ; 2003-ல் வருகை புரிந்திருந்த போது - சென்னை ; மாமல்லபுரம் ; பாண்டிச்சேரி ; மதுரை ; கொடைக்கானல் ; திருச்சி  என செம ரவுண்ட் அடித்திருந்த விஷயம் ! 'ஹி..ஹி.' என அசடு வழிந்து கொண்டே நான் தலையை ஆட்டி வைக்க, உடனிருந்த அந்தப் பெண்மணி இந்தியாவுக்கு தான் வந்ததில்லை என்ற போதிலும், பிரபல யோகா மாஸ்டரான B.K. அய்யங்காரின் எண்ணற்ற சிஷ்யைகளுள் தானும் ஒருவர் என்று சொன்ன போது பெருமையாக இருந்தது ! ஊசிப்   போன மசால்வடையைப் பார்வையிடும் தோரணையோடு  'இந்தியாவா ?" என 1985 / 86-ல் பல பெரும் பதிப்பகங்கள் புருவத்தை உயர்த்திய காலங்கள் மலையேறி விட்டன ;  நம் தேசம் உலக அரங்கில் இன்று ஒரு தவிர்க்க இயலா அங்கம் என்ற அங்கீகாரத்தோடு உலவுகிறோம் என்ற உணர்தல் ஒரு வித போதையாய் இருந்தது !

டெக்ஸ் பொம்மைகள் ; போஸ்டர்கள் ; ஓவியங்கள் ; ஆல்பம்கள் !
அங்கும் இங்குமாய்ப் பயணித்த பேச்சு - நமது டாப் கௌபாய் டெக்சை எட்டிப் பிடிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை ! 'நித்தமும் நாங்கள் டெக்சுக்கு ஒரு மானசீக சலாம் போட்டு வைக்கத் தவறுவதே இல்லை ! 'என டேவிட் சொன்ன போது அது ஒரு பேச்சுக்காகச் சொல்லப்பட்ட மிகைப்படுத்தலாகத் தோன்றவே இல்லை ! டெக்ஸ் வில்லரைத் தாண்டி போனெல்லியின் பண்ணையில் உருவாகும் பாத்திரங்கள் ஏராளம் என்ற போதிலும், அவர்களது அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பிடரியில் அறைவது டெக்சின் எண்ணற்ற சித்திரங்கள் ; உருவ பொம்மைகள் ; போஸ்டர்கள் இத்யாதிகளே ! அவர்களது அண்டம் சுழல்வது டெக்ஸ் வில்லர் எனும் இரவுக் கழுகைச் சுற்றியே என்பதை துளி சந்தேகமும் இன்றிப் புரிந்திட முடிகிறது ! எங்கிருந்தோ நமது "சிகப்பாய் ஒரு சொப்பனம் & நிலவொளியில் ஒரு நரபலி " இதழ்களை எடுத்து வந்த Ms .ஆர்நெல்லா - நமது புதிய சைஸ்கள் ; அமைப்புகளைச் சிலாகித்துப் பேசிய போது டேவிடும் ஆர்வமாய் தலையாட்டிட - எனக்குக் கொஞ்சமாய் நெளியத் தோன்றியது ! Hardcover editions ; அட்டகாசமான மெகா சைஸ் ஆல்பம்கள் என போட்டுத் தாக்கும் அவர்களின் படைப்புகளின் முன்னே நாம் நோஞ்சான் கோழியாய் தோன்றினாலும், அவர்களது பரிவு நமது இதழ்களையும் 'தேவலை' என்ற ரகத்திற்குத் தூக்கி நிறுத்துவதை உணர்ந்திட முடிந்தது ! நம் ரசிகர்களின் அசாத்திய டெக்ஸ் காதல் அவர்களுக்கு துல்லியமாய்த் தெரிந்திருப்பது நிறையவே ஆச்சர்யத்தைத் தந்தது எனக்கு ! சின்ன விற்பனை எண்ணிக்கை என்பதையும் தாண்டி நாம் காட்டும் இந்தக் காமிக்ஸ் நேசம் அவர்களை எக்கச்சக்கமாய் குதூகலம் கொள்ளச் செய்வதைப் புரிந்திட முடிந்தது ! Pat yourself on the backs amigos!


ஆசியாவில் டெக்ஸ் வில்லரை வெளியிடும் ஒரே பதிப்பகம் நாமே ! என்று அவர்கள் சொன்ன போது ஆந்தை விழிகள் - பெட்ரோமாக்ஸ் லைட்களாய்  மாறுவதைத் தவிர்க்க இயலவில்லை ! அது மட்டும் இல்லாது - இத்தாலியில் Naples நகரில் 2010ல் நடைபெற்ற COMIC CON திருவிழாவின் போது - போனெல்லி குழுமத்தின் வளர்ச்சி ; நாயகர்கள் அணிவகுப்பு இத்யாதிகளைப் பற்றி பிரத்யேகமாய் L"AUDACE BONELLI என ஒரு 246 பக்க இதழ் வெளியாகியுள்ளது என்றும்; அந்த புக்கில் நமது லயன் காமிக்ஸ் பற்றிய குறிப்பும் உள்ளது என்று சொன்ன போது பெட்ரோமாக்ஸ் லைட்கள் - பிலிப்ஸ் ட்யூப்லைட்களாக மாறிப் போயின ! "பவளச் சிலை மர்மம்" அட்டைப் படத்தோடு காட்சி தரும் அந்தப் பக்கத்தைப் பாருங்களேன் !


நாங்கள் அமர்ந்திருந்த அறையின் சுவற்றிலொரு பெரிய போர்ட் ஒன்றில் தொடரும் மாதங்களது வெளியீட்டு அட்டவணைகளைக் குறித்து வைத்திருந்தனர் ! தலை சுற்றச் செய்யும் எண்ணிக்கையிலான இதழ்கள் ; துல்லியமான திட்டமிடல்கள் ; அசாத்திய விற்பனை வழிமுறைகள் ; அனைத்துக்கும் மேலாய் இத்தாலிய மக்களின் காமிக்ஸ் காதல் என்று அந்தப் பலகையில் எனக்குப் புலப்பட்ட விஷயங்கள் ஏராளம் !

ஒரு சாம்ராஜ்யத்தினை நிர்மாணிப்பதும் ; அதனை நிர்வகிப்பதும் அதிக வேற்றுமை கொண்டவைகள் அல்லவென்பது புரிந்தது ! இரண்டுமே அசாத்திய உழைப்பும், ஆற்றலும் கொண்டோர்க்கு மாத்திரமே சாத்தியமாகும் என்பதை போனெல்லி உருவாக்கி விட்டுச் சென்றுள்ள இந்த ராஜ்ஜியம் எனக்குக் கண் முன்னே காட்டியது ! கடைசி பத்து ஆண்டுகளாய் அங்கேயே வாழ்ந்து ; அங்கேயே பணியும் செய்து வந்த அந்த முதியவரின் அறையைப் பார்வயிட முடிந்த போது பிரமிக்கச் செய்தது அவரது வேற்று மொழி கௌபாய் காமிக்ஸ்களின் சேகரிப்பு ! சாகசப் பிரியரான செர்ஜியோவின் பயணங்கள் அவரை பூமியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் இட்டுச் சென்றுள்ளதை  அங்குள்ள souvenirs  பறைசாற்றின !
Mr.Sergio Bonelli's room !
அலுவலகத்தின் ஒவ்வொரு பாகத்தையும் சுற்றிக் காட்டினார்கள் ; மர்ம மனிதன் மார்டின் கதைகளின் எடிட்டர் தனது அறையில் என்னை சந்தித்த மறு கணம் "லயன் காமிக்ஸ் ? மார்டின் கதைகள் தமிழில் வெளியிட்டு உள்ளீர்கள் அல்லவா ? " என்று நெற்றியடி அடித்தார் ! சாணித் தாளில் ; சுமாராய் குப்பை கொட்டிய நம்மையே நினைவு வைத்திருக்கும் அவரை ஆர்வமாய் நலம் விசாரித்து விட்டு அடுத்த அறைக்குள் நுழைந்த போது ஆர்டிஸ்ட் ஒருவர் JULIA என்ற கதை வரிசையின் பக்கமொன்றுக்கு சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தார் ! பெரும்பான்மையான ஓவியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி பக்கங்களை அனுப்பிடுவார்களாம் ; அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் வெகு சொற்பமே என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன் ! மணியைப் பார்த்த போது பக்கென்று இருந்தது - கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடி விட்டு இருந்தது ! 'அவர்களது இதர வேலைகள் கெட்டு விடக் கூடாதே !' என்ற உறுத்தல் என்னுள் இருந்த போதும் அவர்கள் இருவருமே மிகுந்த ஈடுபாட்டோடு என்னோடு நேரம் செலவிட்டது மிகுந்த நிறைவாய் இருந்தது !  நான் கேட்க வேண்டிய கேள்விகளை பேச்சின் இடையே கேட்டுக் கேட்டு பதில்களைக் கறந்திருந்தேன் என்பதால் ஒரு போட்டோ எடுத்து விட்டு புறப்படலாம் என்று தீர்மானித்தேன் ! சுவர் எங்கிலும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பின்னணியில் டேவிட்டும் நானும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் !

புறப்படும் முன்னர் அவர்களது புதிய முயற்சிகளின் மாதிரிகள் ; விளம்பரங்கள் என நிறையக் காட்டினார்கள் ! Sci -fi ரகக் கதைகளுள் கால் பதிக்கும் முயற்சி - வண்ணத்தில், அட்டகாசமான ஓவியங்களோடு இருந்தது ! பிரமிப்பு அகலாமல் அவர்களிடம் விடை பெற்று விட்டுப்  புறப்பட்ட போது வாசலிலும் புன்னகைத்தார் டெக்ஸ் - பெரியதொரு போஸ்டரில் ! இதழ் # 636 -ஐ எட்டிப் பிடித்திருக்கும் இந்தக் கௌபாயும் ; இவரது சாம்ராஜ்யமும் 65 ஆண்டுகள் முதிர்ந்தவை எனினும் - இன்றைய புது வரவுகளுக்கு சளைக்காது சவால் தந்திடும் அந்த ரகசியம் தான் என்னவோ ? என்ற சிந்தை தான் தலைக்குள் ஓடியது ! உங்களுக்காவது பதில் தெரியுமா guys ?

போனெல்லியின் பதில்கள் நம் தீபாவளி மலரில் என்றாலும் -   நான் கேட்ட கேள்விகளின் பட்டியல் மாத்திரம் இதோ :
  1. டெக்ஸ் வில்லர் ஒரு சகாப்தம் என்பதை அறிவோம் ! இத்தாலிய மக்கள் அவரை ஆராதிக்கும் விதம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்....! 
  2. குறைந்த பட்சம் 3 தலைமுறைகளைப் பார்த்திட்ட பெருமை டெக்ஸ் வில்லருக்கு உண்டு ! இன்றைய இளைய தலைமுறை இவரை ரசிக்கும் விதத்தில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா ?
  3. உலகெங்கும் காமிக்ஸ் களம் ஏராளமாய் மாறியுள்ளது ! மங்கா ; கிராபிக் நாவல் என்றெல்லாம் ரசனைகள் பயணிக்கும் இந்தப் புதிய மேடையில் டெக்ஸ் வில்லரின் கௌபாய் பாணிக்கு வெற்றி வாய்ப்புகள் எவ்விதம் என்று கணிக்கிறீர்கள் ?
  4. டெக்ஸ் கதைகளின் பின்னணியில் தற்சமயம் உள்ள creative டீம் பற்றிச் சொல்லலாமா ?
  5. 635 இதழ்கள் வெளியான பின்னரும் கூட , உங்களின் கதாசிரியர்களால் Wild West-க்குள் சலிப்பூட்டா புதுக் கதைக்கருக்களை கொணர இயல்வது எவ்விதம் ?
  6. ஒரு 114 பக்க டெக்ஸ் சாகசத்தை உருவாக்க அவசியமாகும் கால அவகாசம் எவ்வளவோ ? இந்த ஆக்கத்தின் வெவ்வேறு கட்டங்களைப் பற்றிக் கொஞ்சமாய்ச் சொல்லுங்களேன் ப்ளீஸ் ?
  7. ஒரு தொடர் லேசாய் பிரபலம் பெற்று விட்டாலே - அதன் சக பாத்திரங்களைக் கொண்டு தனிப்பட்டதொரு கதை வரிசையை வெளியிட நிறைய பதிப்பகங்கள் எத்தனிப்பது இன்று வாடிக்கை ! இது போன்ற spinoff முயற்சியில் போனெல்லி குழுமத்திற்கு ஏதேனும் ஆர்வம் உண்டா ?உதாரணத்திற்கு டெக்சின் மகன் கிட் or கார்சனைக் கொண்டே ஒரு தனி கதை வரிசை உருவாக்குவது சாத்தியம் தான் அல்லவா ?  
  8. இது டெக்ஸ் வில்லரின் ஆண்டு # 65 ! ஆசாமிக்கு ஏதேனும் ஒரு புதுவித லுக் வழங்கும் சிந்தனைகள் உண்டா ? 
  9. இத்தாலி தவிர உலகின் வேறு எந்த தேசங்களில் டெக்ஸ் பிரபலம் ? 
  10. ஒரு காமிக்ஸ் ஜாம்பவான் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது ? காமிக்ஸ் பொறுப்பேற்க வேண்டுமென்ற ஆர்வம் உங்களிடம் சிறு வயது முதலே இருந்ததா ?
  11. உங்களின் favorite காமிக்ஸ் ? 
  12. இத்தாலியில் உருவாகிய டெக்ஸ் வில்லருக்கு தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சின்னதாய் - ஆனால் அற்புத உத்வேகமானதொரு ரசிக அணி இருப்பது உங்களுக்குத் தெரியும் ! மொழி ; தேசம் என்ற தடைகளைத் தாண்டி டெக்ஸ் ஜெயிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள் ? 
  13. போனெல்லி குழுமத்தின் வளர்ச்சியினில் டெக்ஸ் வில்லரின் பங்கு எத்தனை சதவிகிதம் இருக்குமென்று சொல்வீர்கள் ?
  14. சமீபத்திய டெக்ஸ் விற்பனை எண்ணிக்கைகள் பற்றிச் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? 
  15. போனெல்லி குழுமத்தின் TOP 3 தொடர்கள் எவை ? விற்பனை /பிரபல்யம் என்ற கண்ணோட்டங்களில் சொல்லுங்களேன் ? 
  16. டெக்ஸ் வில்லருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசகியரும் உண்டா ?
  17. டெக்சின் இளமைக் கால சாகசங்களை வெளியிடும் திட்டங்கள் ஏதேனும் ?  
  18. ஆங்கிலத்தில் டெக்ஸ் தொடர வாய்ப்பு ஏதேனும் ?
இன்னும் சில சமீபத்திய updates உள்ளதால் - நாளைய பகலில் எழுதுவேன் ! தவிர சென்ற பதிவிலும் எனது பதில்கள் இடம் பெறச் செய்வேன் ! இப்போதைக்கு கனவுலகம் கூப்பிடுவதால் - adios amigos !

Updates :

கடந்த பதிவிலேயே செய்திருக்க வேண்டிய acknowledgement இது - ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் எப்படியோ விடுபட்டுப் போய் விட்டது ! கடந்த வார ஜூனியர் விகடனில் வந்திருந்த நமது விளம்பரத்தின் டிசைன் உபயம் - நண்பர் கார்த்திக் சோமலிங்கா ! இதோ அவர் அனுப்பி இருந்த ஒரிஜினல் !  As always, great job Karthik and thanks indeed !


நண்பர் ரமேஷ் குமாரின் அன்பு அதகளத்தைப் பாருங்களேன்....!




AWESOME Ramesh Kumar ! Thanks a ton !

போனெல்லியில் பேசிக் கொண்டிருக்கும் சமயம், அவர்களது இதர வெளியீடுகள் பற்றியும் பேச்சு எழுந்தது ! சமீப மாதங்களாய் அவர்களது சீனியர் ஓவியர்கள் / கதாசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாய் - ஒரு புது வரிசையினை அறிமுகம் செய்துள்ளனராம் ! ஒவ்வொரு கூட்டணிக்கும்  மாதம் ஒரு 114 பக்க black & white கதையினை தயாரிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது - எந்தவொரு குறிப்பிட்ட நாயகரையும் முன்னிலைப்படுத்தாமல் ! In fact இந்தக் கதைகளில் ஹீரோவென யாருமே கிடையாது ! கௌபாய் கதைகளாய் எழுதி / வரைந்து தள்ளும் ஒரு கூட்டணிக்கு ஒரு சமகாலத்துப் படைப்பை உருவாக்கும் ஆசை இருந்திடலாம் ; மர்ம மனிதன் மார்டினுக்குப் பணியாற்றும் கூட்டணிக்கு ஒரு வரலாற்று சம்பவத்தைப் பற்றிய கதையை உருவாக்கும் ஆசை இருந்திடலாம் ! So - இது போல் அவர்களது ஆர்வங்களை வெளிப்படுத்த இந்தப் புது வெளியீடுகளை போனெல்லி பயன்படுத்துகிறது ! சிப்பாய் கலகம் ; பிரெஞ்சுப் புரட்சி ; ஒரு தொடர் கொலையாளியின் வேட்டை - என வெவ்வேறு genre களில் உருவாகி இருக்கும் அந்தக் கதைகளைப் பார்த்தேன் - பளிச் சித்திரங்களுடன் ரொம்பவே வித்தியாசமாய் தெரிந்தது ! அவற்றின் ஒரு சிலகதைகளை மொழியாக்கம் செய்து படித்துப் பார்த்து விட்டு - ஓகே என்றானால் நமது இதழ்களில் அவ்வப்போது வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது !

மிலான் நகரில் இதர பணிகளையும் முடித்துக் கொண்டு இரவு பாரிஸ் சென்றடைந்த போது இரவு 11 ஆகி இருந்தது ! மறு நாள் மதியமே ஊருக்குத் திரும்பும் அவசரம் என்பதால் அரக்கப் பரக்க ஓடினேன் நமது பதிப்பகங்களைத் தேடி ! இது அவர்களது பிஸி சீசன் என்பதால் அலுவலகமே 'ஜிவ்' வென்று துரித கதியில் இயங்கிக் கொண்டிருக்கக் கண்டேன் ! அவர்களுடன் அதிக நேரம் செலவிடவில்லை என்றாலும், நிறைவாய் நிறைய விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள முடிந்தது ! அது பற்றி இன்னொரு பதிவில் ! (மெகா சீரியல்களின் பாதிப்பு ?!) திரும்பும் வழியில் தமிழர்கள் நிறைந்திருக்கும் பாரிசின் முக்கிய வீதியில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டினுள் நுழைந்த போது 'பளிச்' என பல்லைக் காட்டினார் திருவாளர் ஸ்பைடர் !! நண்பர் திருச்செல்வத்தின் முயற்சிகளால் பாரிசை எட்டிப் பிடித்துள்ள "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" + சுட்டி லக்கி இத்யாதிகளில் ஒவ்வொரு பிரதியினைப் பார்த்திட முடிந்த போது சந்தோஷமாய் இருந்தது :-)

வரும் மாதத்துக்கு குமுதம் ரிப்போர்டர் இதழினில் அரைப் பக்க விளம்பரம் செய்யவுள்ளோம் ! As always நண்பர்களது டிசைன் உதவிகள் வரவேற்கப்படும் !  Please do give it a shot guys ?

Monday, September 23, 2013

காதலர் தேசம் !

நண்பர்களே,

வணக்கம். நிறைய உள்ளூர் பயணங்கள் ; ஒரு தந்தையாய் சில பொறுப்புக்கள் ; இம்மாத இதழ்களின் பணிகளென - எனது கடந்த வாரம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டதால் இங்கே attendance போட இயலவில்லை ! Sorry folks ! இடைப்பட்ட நாட்களுள் ஒன்று வெகுவே சுவாரஸ்யம் கொண்டதாய் அமைந்தது எனது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும் ! நமது அயல்நாட்டுப் பதிப்பகங்களில் பல ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி விட்டு தற்சமயம் ஓய்வில் இருக்கும் ஒரு முதிய நண்பர் விடுமுறைப் பயணமாய் இந்தியா வந்திருந்திருக்கிறார் ! ராஜஸ்தான் ; கோவா என டூர் அடித்து விட்டு, ஸ்ரீ லங்கா செல்லும் முன்னே சென்னையில் 2 நாட்கள் டேரா போட்ட மனுஷன் எப்படியோ எனது மொபைல் நம்பரைத் தேடிப் பிடித்து என்னோடு பேசிய போது எனக்கு சந்தோஷ ஆச்சர்யம் ! நானும் அன்றைய தினம் சென்னையில் இருந்ததால் மாலைப் பொழுதை அவரது ஹோட்டல் அறையில் சாவகாசமாய் அரட்டையடிப்பதில் அழகாய் செலவிட முடிந்தது ! நண்பர் வெவ்வேறு பிரெஞ்சு / பெல்ஜிய நிறுவனங்களில் விற்பனைப் பிரிவுகளிலும் ; வேற்று மொழி உரிமைகளைக் கையாளும் பொறுப்புகளிலும் ஆண்டாண்டு காலமாய்ப் பணியாற்றியவர் என்ற முறையில் பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் பின்னணியைக் கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம் ! கடைசியாய் அவர் பணியாற்றியது நமது ரசனைகளுக்கு ஏற்பில்லா  ரகக் கதைகளை வெளியிடும் ஒரு பதிப்பகத்தில் என்ற காரணத்தினால் 2010-க்குப் பின்னர் அவரோடு தொடர்பு இருந்திருக்கவில்லை ! நமது நியூஸ்பிரிண்ட் + black & white பாணிகளைப் பார்த்துப் பழகி இருந்த மனுஷனுக்கு நமது தற்சமய வண்ண இதழ்களின் முழு வரிசையையும் நான் காட்டிய போது நிஜமாய் திகைப்பு ! தர மேம்பாட்டை விட அவர் மிகவும் ஆச்சர்யப்பட்டது நமது நண்பர்களின் வாசிப்புகளின் variety-ஐ கண்டே !! 'சுட்டி லக்கியை ரசிக்கும் கையோடு - கிரீன் மேனரையும் ; 'பிரளயத்தின் பிள்ளைகளையும் ' ரசிக்கும் ஆற்றல் கொண்டவர்களா உங்கள் வாசகர்கள் ? வாவ் !' என ஆச்சர்யம் காட்டினார் ! அங்கே இங்கே எனப் பயணித்த அன்றைய காமிக்ஸ் அரட்டையினை கொஞ்சமாய் தொகுத்து இதோ ஒரு பதிவாக்குகிறேன் !  

'பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ்' என்பதே ஒரு விதத்தில் தவறான வார்த்தைக் கோர்வை என்று சொன்னார் நண்பர் ! அது ஏனோ என நான் வினவிய போது - ' அளவில் பிரான்சை விட பெல்ஜியம் சிறிதென்ற போதிலும், காமிக்ஸ் படைப்புகளில் ; உருவாக்கத்தில் பெல்ஜியம் தான் சீனியர் ! ஒரு கோடி ஜனத்தொகை கொண்ட தேசத்தில் கிட்டத்தட்ட 900 காமிக்ஸ் ஓவியர்கள் வெற்றிகரமாய்ப் பணியாற்றி வருவது பெல்ஜிய மண்ணில் தான் ! உலகளவில் இது ஒரு மிகப் பெரிய எண்ணிக்கை ! So - பெல்கோ-பிரான்ஸ் காமிக்ஸ் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்   " என்று சொன்னவரின் குரலில் ஒரு பெருமிதம் இழையோடியது ! ஆனால் மார்கெட் அளவில் பிரான்ஸ் பெல்ஜியத்தை விட மிகப் பெரிது என்பதை புள்ளி விபரங்களோடு சுட்டிக் காட்டினார் ! உலகின் மூன்றாம் பெரிய காமிக்ஸ் மார்கெட் (நமது தமிழகத்தின் அளவை ஒத்த) பிரான்ஸ் தானாம் ! ஆண்டொன்றுக்கு சுமார் நாலரைக் கோடி காமிக்ஸ் ஆல்பம்கள் இங்கு மட்டும் விற்பனையாகிறதாம் ! நண்பர் ஒய்வு நாடிய ஆண்டான 2011-ல் பிரான்சில் நடந்த காமிக்ஸ் விற்பனையின் கிரயம் சுமார் 350 மில்லியன் யூரோவாம் !! கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் அவர்களை அருகாமையிலிருந்து பார்த்து வரும் எனக்கே - இது இத்தனை தலை சுற்றச் செய்யும் ஒரு அசுரத் தொழில் என்பது தெரிந்திருக்கவில்லை !  நண்பர் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்லி இருப்பாரோ என்ற சிறு சந்தேகத்தில் வீட்டுக்கு வந்த பின்னே -இணையத்திலும் கொஞ்சமாய்த் தேடித் பார்த்த போது கிறுகிறுத்துப் போனேன் ! "ஒன்பதாம் கலை" என இப்போதெல்லாம் அறியப்படும் காமிக்ஸ் கலையானது - ஐரோப்பாவில்,  குறிப்பாய் பிரான்சில் ஒரு அதகளத் தாண்டவமே நடத்தி வருவது புரிந்தது ! 

ஆண்டொன்றுக்கு சராசரியாய் வெளியாகும் ஆல்பம்களின் எண்ணிக்கை சுமார் 4300 (3300 new releases + an average of 1000 reprints) என்று அவர் சொன்ன போது எனது தாடைகள் தொய்ந்து போயின ! 1960 முதல் - tintin கதைகள் போட்டுத் தந்த ஒரு சிறு விதையை 2 நாடுகளுமாய்ச் சேர்ந்து இன்று எத்தனை ராட்சச ஆலமரமாய் வளர்த்துள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பிரமிக்கச் செய்தது !  ஆந்தை விழிகள் இன்னும் விரிந்து எனது சுவாரஸ்யத்தை நண்பருக்கு வெளிக்காட்ட - அவரும் உற்சாகத்தில் பரபர வெனப் பேசிக் கொண்டே சென்றார் ! "ஒவ்வொரு ஆல்பத்திலும் சராசரியாய் எவ்வளவு விற்பனையாகும் ?" என நான் வினவிய போது அவர் நிறைய தொடர்களின் பட்டியலைச் சொன்னார் ! அவற்றில் முக்காலே மூன்று வீசம் நாம் கேள்வியே பட்டிரா தொடர்களாய் இருந்தன எனும் போது எனக்குள் சொல்ல இயலா சங்கடம் ! 'காமிக்ஸ் உலகையே கரைச்சுக் குடித்தது போல் தலைக்குள் சிந்தனைகள் இருந்தால் அவற்றை இன்றோடு மூட்டை கட்டி விடு தம்பி !!" என எனது mindvoice சொன்னது ! அவர் போட்ட லிஸ்டில் நமக்கு பரிச்சயம் ஆன கதைகளும் இல்லாதில்லை !
  • இரத்தப் படலம் XIII -ன் இறுதி இரு ஆல்பம்கள் (17 & 18) - தலா 550,000 பிரதிகள் !!
  • லார்கோ வின்ச் - 455,000 பிரதிகள் ! (ஒவ்வொரு ஆல்பமும்)
  • ப்ளூ கோட் பட்டாளம் - 170,000 பிரதிகள் (ஒவ்வொரு ஆல்பமும்)
  • ASTERIX & OBELIX - தலா 400,000 பிரதிகள் ! 
ஆண்டுக்கு 4300 ஆல்பம்கள் எனும் போது - இவற்றின் இலக்கு அனைத்துமே நிச்சயமாய் சிறார்களாய் இருப்பது சாத்தியமாகாது என்பதை உணர்ந்திட நாம் ஐன்ஸ்டீன்களாய் ; அப்துல் கலாம்களாய் இருத்தல் அவசியமில்லை என்பதால் அடுத்த கேள்வியைக் கேட்டு வைத்தேன் : " இந்த 4300-ன் உத்தேச breakup என்னவாக இருக்கும் ?" என்று...! இதற்கு அவர் சொன்ன பதில் நிஜமாய் என்னை கதிகலங்கச் செய்தது ; 'இத்தனை அறியாமையில் இத்தனை காலமாய் குப்பை கொட்டி வந்திருக்கிறோமே !' என்ற ஆதங்கம் அலையடித்தது ! ஆண்டுதோறும் பிரான்ஸ்  & பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டு விற்பனையாகும் காமிக்ஸ் ஆல்பம்களில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் - நமது ஆசியத் துணைக்கண்டத்திலிருந்து 

பயணமாகும் மங்கா ரகக் கதைகளின் மொழிபெயர்ப்புகள் தானாம் !! "மங்கா ; மன்ஹ்வாஸ் ; மன்ஹுஆ " என வெவ்வேறு காமிக்ஸ் கதை ரகங்கள் உண்டாம் !!!! இவற்றின் பெரும்பான்மை ஜப்பானிலும்  ; ஒரு சிறிய பங்கு ஹாங்காங்கில் ; கொரியாவில் ; சீனாவில் இருந்து உற்பத்தி ஆகின்றனவாம் ! இவற்றின் பிரெஞ்சு மொழி உரிமைகளைப் பெற்று - ஐரோப்பாவில் வெளியிடும் பதிப்பகங்கள் சக்கை போடு போடுகின்றனவாம் ! குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டாம் இந்த மங்கா ; மங்காத்தாக்களுக்கு !! 'உலகின் இரண்டாம் பெரிய காமிக்ஸ் மார்கெட் ஜப்பான் என்பதாவது தெரியுமா - இல்லையா ? ' என நண்பர் என்னைக் கேள்வி கேட்ட போது - ஆந்தையாரின் திரு திரு விழிப் படலம் தொடர்ந்தது ! 

பிரான்சில் விற்பனையாகும் மூன்றில் ஒரு காமிக்ஸ் இதழ் மங்கா தான் !' என நண்பர் சொன்ன போது - ஜப்பானின் மீதான எனது அபிமானம் எக்கச்சக்கமாய்க் கூடிப் போனது ! 1990 முதல் சிறுகச் சிறுக ஐரோப்பிய ரசிகர்களைக் கவர்ந்திடத் துவங்கிய இந்த 'மங்கா கலாச்சாரம்' இன்று கோடி கட்டிப் பறக்கிறது என்று சொன்னார் ! கிஷிமொடோ எனும் படைப்பாளியின் "நறுடோ" எனும் தொடர்- ஆண்டின் டாப் 20 ஆல்பம்களுள் - குறைந்தது 5 இடங்களை எப்போதுமே கைப்பற்றி இருக்குமாம் ! ('ஆஹா-ஓஹோ ' என நண்பர் புகழ்ந்த இந்தத் தொடரை சனியிரவு கொஞ்சமாய் பரிசீலனை செய்து விட்டு இன்னும் அந்தத் திரு திரு முழிக்கு விடை கொடுத்த பாடைக் காணோம் !  இவற்றில் உலகளாவிய மங்கா ரசிகர்கள் கண்டிடும் வசீகரம் என்னவாக இருக்குமென்று இன்னமும் மண்டையை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது கிளைக் கதை !)  


மங்கா மொழிபெயர்ப்புகளுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது பிரான்கோ-பெல்ஜியப் படைப்புகளாம் ! மார்கெட்டின் 40 சதவிகித விற்பனைக்கு பொறுப்பேற்கும் இவை - சிறார்கள் ; teenagers ; முதிர்ந்தோர் என சகல வயதினருக்கும் ஏற்ற வெவ்வேறு ரகக் கதைகளை கொண்டவை ! இவற்றுள் நகைச்சுவைக்கு முதலிடமாம் (சுமார் 30%) ; fantasy ரகக் கதைகளுக்கு இடம் # 2 (சுமார் 25%) ; மூன்றாம் இடத்தில் Polar ரகமென்று அவர்கள் குறிப்பிடும் த்ரில்லெர் கதைகள் (இவற்றுள் டிடெக்டிவ் கதைகளும் சேர்த்தி !) ! இன்டர்நெட் ; கம்பியூட்டர் விளையாட்டுக்கள் ; திரைப்படங்கள் ; பிரபல டி.வி. தொடர்கள் - இவற்றைச் சார்ந்த பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட சிறார்களுக்கான படைப்புகளுக்கு இடம் நான்காம் ! 

கிராபிக் நாவல்கள் என்ற வரையறைக்குள் விழும் கதை வரிசைகள் எஞ்சி இருக்கும் இடத்தை - அமெரிக்கக் காமிக்ஸ் படைப்புகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளோடு பகிர்ந்து கொள்கிறதாம் ! ஆண்டுக்கு சுமார் 250 ஆல்பம்கள் BATMAN ; SANDMAN : இத்யாதி அமெரிக்க சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களைத் தாங்கி வருவதுண்டாம் ! 

பிரபலத் தொடர்களின் மறுபதிப்புகள் ; ஒரு தொடரின் மொத்தக் கதைகளையும் மூன்றல்லது நான்கு தொகுப்புகளுக்குள் அடக்கி INTEGRALES என்ற பெயரில் வெளியிடுவதும் அங்கே ஹிட்ஸ் என்றும் நண்பர் சொன்னார் ! இது ஏற்கனவே நாம் அறிந்த தகவல் என்பதால் வேக வேகமாய் மண்டையை ஆட்டி வைத்தேன் ! எப்போதுமே நம்பர்கள் மீது ; புள்ளி விபரங்கள் மீது நமக்கிருக்கும் காதல் விடாது தானே - so எனது அடுத்த கேள்வி - அங்குள்ள பதிப்பகங்களின் தோராய எண்ணிக்கை பற்றி இருந்தது ! சின்னதும் பெரிதுமாய் சுமார் 250 நிறுவனங்கள் உண்டாம் ! ஆசியக் கதைகளை இறக்குமதி செய்து மொழிபெயர்த்து வெளியிடுவது ஒரு புறமெனில் - ஆசிய ஓவியர்களையே பணிக்கு அமர்த்தி - பிரான்சில் வைத்தே புதுத் தொடர்களுக்கு சித்திரங்கள் தீட்டுவது இன்றைய பாணியாம் ! திறமைக்கு எல்லைகள் ஒரு பொருட்டாகாது என்பதை உணர்ந்திட இயன்றது ! 

ரொம்ப காலமாய் நம் அனைவருக்குமே மண்டைக்குள்ளே ஒலிக்கும் அடுத்த கேள்வியை கேட்ட போது நண்பரது முகம் லேசாக இருண்டு போனது ! "இத்தனை தரமான பிரான்கோ-பெல்ஜியக் காமிக்ஸால் அமெரிக்க எல்லைகளை ஊடுருவ இயலாது போவது எதனால் ? " என்பதே அந்தக் கேள்வி ! பெருமூச்சோடு பதில் சொன்னார் நண்பர் : " டின்டின் திரைப்படத்தைப் பார்த்தாயா நீ ? " என்று கேள்வி கேட்டார் என்னை ! "ஆம்...'பிரபல டைரெக்டர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வந்தது தானே ?" என்று பதில் சொன்னேன் ! ஆமாம் என்பதாகத் தலையாட்டியவர் - 'திரைப்படத்தில் பார்த்த டின்டினுக்கும் ; நாம் காலம் காலமாய் ஆராதித்து வரும் காமிக்ஸ் நாயகன் டிண்டினுக்கும் துளியாவது சம்பந்தம் கண்டிட முடிந்ததா உனக்கு ? " என்று கேட்டவரின் குரல் சற்றே உயர்ந்திருந்தது ! மௌனமாய் நான் அமர்ந்திருக்க - நண்பரே தொடர்ந்தார் - " காமிக்ஸ் என்பது எங்கள் மக்களின் கலாச்சாரத்தில் ; வாழ்க்கை முறைகளில் ஒரு அங்கமாய் ஊறிப் போன விஷயம் ! எங்களது தேசம் உற்பத்தி செய்யும் சாக்லேட்டும் சரி ; சித்திரக் கதைகளும் சரி - உலகளாவிய சந்தோஷத்தைத் தரும் சங்கதிகள் ! அவற்றை ரசிக்க ; உணர்ந்திட ; போற்றிட ஒரு பக்குவம் அவசியம் ! வெறும் பொழுதுபோக்குக் கலையாய் காமிக்ஸைப் பார்த்திடும் அமெரிக்கர்களுக்கு எங்களது காமிக்ஸ் பாரம்பர்யம் ஒரு விநோதமாய் தெரிவதில் வியப்பில்லை ! For us, comics is a way of life....for them it's no different from a hamburger or a soda or a pool game !" என்று அவர் சொன்ன போது எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்கவில்லை ! காமிக்ஸ் காதலர்கள் என்று பட்டம் இந்தப் புவியில் வேறு எவருக்கும் நிச்சயம் பொருந்தாது என்பது நிதர்சனமாய்த் தெரிந்தது !

பேச்சை கொஞ்சம் சீராக்க மீண்டும் மன்காக்களைப் பற்றி வினவத் துவங்கினேன்..! 'மங்கா..மன்ஹுஆ என்றெல்லாம் சொன்னீர்களே - அவற்றுள் என்ன வேறுபாடு ? ' என்று கேட்டேன் ! ஜப்பானியப் படைப்புகளுக்கு மங்கா என்று பெயராம் ! இந்தப் பாணிகளுக்கு முன்னோடிகளும், வழிகாட்டிகளும் அவர்களே ! கொரியாவில் உருவாகும் கதைகளுக்கு மன்ஹ்வா என்று பெயராம் ! இவை பிரெஞ்சில் சராசரியாய் இதழ் ஒன்றுக்கு 25,000 - 30,000 விற்பனை ஆகுமாம் ! சீனாவின் தயாரிப்புகளுக்கு மன்ஹுஆ எனப் பெயராம் - இவை கொஞ்சமாய் (5000-7000 வரை) விற்பனையாகுமாம் ! புதிய தலைமுறையினரிடம் பழம் பெரும் பிரான்கோ-பெல்ஜிய படைப்பாளிகளை விட இந்த மங்கா ஆசிரியர்களால் ஒரு வித சுலபப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிவதால் - இன்றைய தலைமுறை மங்கா வெறியர்களாய் இருபதைக் காண முடிகிறது என்று நண்பர் சொன்னார் ! 2010 -ல் நண்பர் பண்கேற்றதொரு வித COMIC CON திருவிழாவில் பிரத்யேகமாய் ஜப்பானியப் படைப்புகளும், பதிப்பகங்களும், படைப்பாளிகளும் பங்கேற்ற போது - 3 நாட்களில் சுமார் ஒரு லட்சம் காமிக்ஸ் காதலர்கள் அங்கே குழுமினார்களாம்  !
அமெரிக்கக் காமிக்ஸ்களுள் SPIDERMAN : XMEN மற்றும் BATMAN நிரம்பப் பிரசித்தமாம் ! இதழ் ஒன்றுக்கு சராசரியாய் 50,000 இதழ்கள் விற்பனை காண்பவையாம் இவை !  இவை தவிர கொஞ்சமாய் டெக்ஸ் வில்லர் ; மர்ம மனிதன் மார்டின் ; டயபாலிக் போன்ற இத்தாலியப் படைப்புகளும் ; மிகச் சிறிய அளவிலான ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் படைப்புகளும் பிரெஞ்சினில் மொழிபெயர்க்கப்படுகின்றனவாம் !   இன்னும் எத்தனை பேசினாலும் நம் ஆவல் அடங்காது என்ற எண்ணம் தலை தூக்காமல் இல்லை என்னுள் ! ஆனால் ஒரேடியாக மனுஷனைப் பேட்டி எடுக்கும் பாணியில் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டாமே என்று தோன்றியது ! மெரினா பீச்சைப் பார்த்திட அவர் ஆவலாய் இருந்ததை தொடர்ந்து அங்கே இட்டுச் சென்று ஜனத்திரளை ரசிக்கச் செய்தேன் ! "இந்தக் கடற்கரை மட்டும் எங்கள் நாட்டில் இத்தனை பிரம்மாண்டமாய் இருந்திருந்தால் - நிலவொளியில் ஒரு காமிக்ஸ் திருவிழாவே நடத்தி அசத்தி இருப்போமே !" - என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்ன போது - பெருமூச்சு தான் விட முடிந்தது எனக்கு !

P.S :
  1. சிவகாசிக்குச் சென்றே ஒரு வாரம் ஆகி விட்டதால் - "ஸ்பைடர்-மாயாவி கலாயப்ஸ்' போட்டியில் வெற்றி பெற்ற  நண்பர்களுக்கான பரிசுகளை இன்னும் அனுப்பிட இயலவில்லை ! இன்று திரும்பவும் வேறொரு திக்கில் பயணம் என்பதால் - வரும் சனிக்கிழமை அலுவலகம் திரும்பியான பின்னே அனுப்பிடுவேன் ! Apologies guys !
  2. அதே போல் KBT - 3 மொழிபெயர்ப்புப் போட்டியின் பக்கங்கள் வரும் திங்களன்று அனுப்பிடப்படும் ! so - இன்னமும் பெயர் கொடுக்காது இருந்து வரும் நண்பர்களுக்கும் அவகாசம் உள்ளதே !
  3. அக்டோபர் புதிய இதழ்கள் முதல் வாரத்தில் தான் தயாராகும் ! சற்றே பொறுமை ப்ளீஸ் ! 
  4. சிக் பில் ஸ்பெஷலில் - "விண்வெளியில் ஒரு எலி" கதையின் இடத்தில் "இரும்புக் கௌபாய்" இடம் பிடிக்கிறது ! (வி.ஒ.எ. ஒரிஜினலாய் வெளி வந்த மொழியாக்கம் தூய தமிழில் உள்ளதால் அதனை மாற்றி அமைக்க வேண்டி வருமென சுட்டிக் காட்டி இருந்த நண்பர் கிரிக்கு நன்றிகள் ! புதிதாய் மொழிபெயர்த்து fresh -ஆகத் தயாரிக்க அவகாசம் இல்லையென்பதால் கதைகளை switch செய்துள்ளேன் ! 
Take care people...catch you soon ! 

Saturday, September 14, 2013

இந்தப் பட்டாளம் போதுமா - இன்னும் கொஞ்சம் வேணுமா ?

நண்பர்களே,

வணக்கம். திரும்பிய திசையெல்லாம் திருமண அழைப்பிதழ்கள் அழகாய் புன்னகைக்க - பஜ்ஜிக்கும்  ; பாயாசத்துக்கும் இடையே இது குட்டியானதொரு 'updates பதிவு' என்று சொல்லலாம்...! 

புது கார்ட்டூன் நாயகர்(கள்) பற்றிய அறிவிப்பு ஒரு வழியாய் இதோ உங்கள் முன்னே ! நெடு நாட்களாய் நண்பர்கள் பலரும் கோரி வந்த 'நீலச் சட்டை நாயகர்கள் ' - அக்டோபரில் உங்களை சந்திக்க நமது +6 வரிசையில் வரவிருக்கின்றனர் ! BLUECOATS என்ற பெயரில் Cinebooks நிறுவனம் இத்தொடரை வெளியிடத் துவங்கிய நாள் முதலாகவே நம் நண்பர்கள் இதனையும் நாம் முயற்சித்தால் என்னவென்று அவ்வப்போது வினவிடுவதுண்டு ! ஆனால் கார்ட்டூன் இலாக்கா - லக்கி லூக் & சிக் பில் வசம் பத்திரமாய் இருப்பதால் - இப்போதைக்கு அதுவே போதுமே என்ற சிந்தனையில் நானிருந்தேன் ! வீட்டிலுள்ள குட்டீஸ்களுக்கு கார்டூன்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள சுலபத்தைப் பற்றி சமீப  சமயங்களாய் நண்பர்கள் பலரும் எழுதி வந்தது என்னை சிந்திக்கச் செய்தது ! So 'ப்ளூகோட் பட்டாளத்தை '  நடை போடச் செய்ய வாகான வேளையினை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் ! நமது லயன்-முத்து அட்டவணையில் இனியும் டின்கெரிங்க் செய்து உதை வாங்குவதற்குப் பதிலாய் - ஆபத்பாந்தவனாய் காட்சி தரும் +6 வரிசையை இதற்குப் பயன்படுத்திடத் தீர்மானித்தேன் ! ஆங்கிலத்தில் இந்தக் கதைகளைப் படித்திருக்கா நண்பர்களின் பொருட்டு மாத்திரமே ஒரு குட்டியான அறிமுகம் ! 

அமெரிக்காவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் வெடித்த உள்நாட்டுப் போரே இந்தக் கார்டூன் தொடரின் backdrop ! அமெரிக்க அரசை எதிர்த்துப் போர் கோடி உயர்த்தும் தெற்கத்திய ராணுவத்தோடு மல்லுக் கட்டும் குதிரைப் படையின் வீரர்களே (!!) நமது ஹீரோக்கள் (ஜீரோக்கள் ?!) இவர்களும் குதிரை வீரர்களாய்த் தோற்றம் தந்தாலும், கதைகளின் பாங்கு - மாமூலான கௌபாய் பாணியில் இராது ; ராணுவம் ; போர் ; அதில் நம் நாயகர்கள் அடிக்கும் லூட்டிகள் என்று ஜாலியாய் சுற்றி வரும் ! ஒரிஜினல் அட்டைப்படத்தோடு வரவிருக்கும் இந்த இதழ் - குட்டீஸ்  + not so குட்டீஸ் என சகலருக்கும் ரசிக்குமென்ற நம்பிக்கை உள்ளது ! 


2014-ல் நமது அட்டவணையில் இடம் பிடிக்கக் காத்துள்ள இன்னுமொரு கார்ட்டூன் ஹீரோவோடு 'ப்ளூகோட் பட்டாளமும் ' ரெகுலராய் தலை காட்டுவார்கள் என்பது கொசுறுச் சேதி ! 

எனது பணிகள் நிறைவுற்று - இரத்தப் படலம் இரு பாகங்களும் அட்டைப்படத்திற்காக பொன்னனிடம் waiting ! ஒரு குட்டியான முன்கதைச் சுருக்கத்தின் பொருட்டு XIII -ன் முந்தைய பாகங்களைப் புரட்டும் போது - ரங்க ராட்டினத்தில் திரும்பவும் ஏறி அமர்ந்ததொரு உணர்வு..! ஜேசன் பிளை ; ஸ்டீவ் ரொலண்ட் ; ஸ்டண்ட்மேன் ; கெல்லி ; ஜேசன் மக்லேன் என தசாவதாரம் கமல்ஹாசனை நினைவூட்டும் விதம் விதமான flashbacks கிறுகிறுக்கச் செய்தன ! இந்தப் புது வரவு அத்தியாயங்களில் ஆசாமி யாரென்ற தேடலைத் திரும்பவும் ஆரம்பிப்பதாக இல்லாமல் வேறொரு தடத்தில் கதையைக் கொண்டு செல்வதால் அந்த மட்டிற்கு நிம்மதி என்று தோன்றியது ! 

சென்ற வாரத்து Quickie மொழிபெயர்ப்புப் போட்டிக்கு மொத்தம் 8 நண்பர்கள் மாத்திரமே தங்கள் நேரத்தைச் செலவிடத் தயாராகி இருந்தனர் ! அவர்களுள் மின்னல் வீரராய் திகழ்ந்த நண்பர் ஆதி தாமிராவின் எழுத்துக்களை  வெற்றி பெறும் ஆக்கமாய்த் தேர்வு செய்வதில் அதிக சிரமம் இருக்கவில்லை ! தனது மொழிபெயர்ப்பை டைப்செட் செய்து பலூன்களுக்குள்ளேயும் நுழைத்து விட்டதால் - இதோ இங்கே உங்கள் பார்வைக்கு அதனை சுலபமாய்ப் படைத்திட இயன்றுள்ளது ! வாழ்த்துக்கள் நண்பரே ! நண்பர் சுஸ்கி-விஸ்கி ((கோவை மணம் தூக்கலோ தூக்கல்!)  ; நண்பர் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரின் முயற்சிகளும் வித்தியாசமாய் இருந்தன ! Good attempts folks !

மொழிபெயர்ப்பு : ஆதி தாமிரா ! 





நவம்பர் டெக்ஸ் டபுள் டமாக்காவின் ஒரு கதை கிட்டத்தட்ட பணிகள் நிறைவான நிலையில் உள்ளது ! கதை # 2 இன்னும் 10 நாட்களுக்குள் தயாராகிடும் ! "சிப்பாயின் சுவடுகள்" ஏற்கனவே ரெடி என்பதால் பாக்கி நிற்பது சிக் பில் ஸ்பெஷல் (மறுபதிப்பு) மாத்திரமே !  தீபாவளிக்கு முன்னதாக இதழ்கள் உங்களை வந்து சேர இப்போதே பணிகள் ஜரூர் ! As always, fingers crossed !

'ஸ்பைடர் - மாயாவி கலாய்ப்ஸ்' போட்டியில் நண்பர்கள் அனைவரும் பின்னிப் பெடல் எடுத்திருந்தனர் ! காலத்தின் மாற்றம் எவரையும் விட்டு வைக்காதென்பதை பிடரியில் அடித்தார் போல் பதிவு செய்துள்ளது புரிகிறது ! ஏராளமான சிரிப்பு வெடிகள் சிதறிக் கிடந்த போதிலும்,எனது சாய்ஸ் இந்த 2:

Muthukumaran
=========================================================
ஸ்பைடர்: மாயாவி.. இந்த அமெரிக்கன் ரிடர்ன் மாப்பிளை, ஹீரோவோட நண்பன், ஹீரோயின் னோட அப்பா.. இந்த ரோல் எல்லாம் வேண்டாமா..?

மாயாவி: ப்ச்..ப்ச்.. ப்ச்.. ஸ்ட்ரிட்டா 'ஹீரோ' தான்...

===========================================================
Dr. அல்கேட்ஸ் :
மாயாவி Vs ஸ்பைடர் 5

ஸ்பைடர்: என்னப்பா? அன்னிக்கி ஹோட்டல்ல தர்ம அடி வாங்கினியாமே. என்னாச்சு?

மாயாவி: வழக்கமா பில் வரும் போது கரண்ட்ல கைய உட்டு மறைஞ்சுடுவேன். அன்னிக்கி பவர் கட். நான் மறைஞ்சுட்டேன் நினைச்சு வெளிய வரப் பாத்தேன். வெளுத்துட்டானுங்க.

=============================================================
நண்பர்கள் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படுகிறது ! (ஆளுக்கொரு Fleetway புக் தனித்தனியாய் :-)) Guys - உங்களின் முகவரிகளை மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ் ? Congrats...great imagination !

அப்புறம் - நீண்ட நெடு நாட்களாய் நண்பர்கள் பலரும் சொல்லியிருந்ததொரு சங்கதியை செயலாற்றும் சமயம் இன்று தான் அமைந்தது ! நமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுக்கென ஒரு official FACEBOOK பக்கமொன்றை உருவாக்கியுள்ளோம் ! இது ஒரு தகவல் பலகை போலவே செயலாற்றும் -  நமது இதழ்களின் வருகைகள் ; விற்பனை முறைகள் ; முந்தைய கையிருப்புகள் இத்யாதிகளைக் கொண்ட information page ஆக.... !

இதோ அதன் தள முகவரி : https://www.facebook.com/pages/Lion-Muthu-Comics/1388544204710093

எனக்கு இந்த facebook முயற்சியில் அதிகப் பரிச்சயம் கிடையாதென்பதால், இதனில் செய்திடக் கூடிய improvements ; மாற்றங்கள் பற்றி உங்களின் அபிப்ராயங்கள் பெரிதும் உதவும் ! Please do chip in folks ! 

Sunday, September 08, 2013

ஞாயிறும், ஞானோதயமும்... !

நண்பர்களே,

வணக்கம் ! புது பாணிகள் ; கிராபிக் நாவல்கள் என்றெல்லாம் ஏதேதோ சமீப சமயங்களில் குப்பை கொட்டியான பின்னே திருவாளர் XIII புதிதாய் அப்படி என்ன சவாலைத் தந்திடப் போகிறாரென்று ஒரு வித மிதப்போடு நம்பி அமர்ந்தேன் - XIII ன் எடிட்டிங் பணிகளுக்கு! 
ஞாயிறு அதிகாலைகள் எப்போதுமே கொண்டு வரும் ஒரு ரம்மியத்தோடு மப்பும்,மந்தாரமுமாய்க் காட்சி தந்த சென்னையின் வானமும் எழிலூட்ட விறு விறுவென பக்கங்களைப் புரட்டிக் கொண்டே சென்றேன் ! நல்ல நாளைக்கே XIII -ன் கதைச் சங்கிலியை நினைவில் இருத்திட எட்டு ஊருக்கு பல்டி அடிப்பது அவசியமாகும் ....இந்த அழகில் NBS -ன் பொருட்டு பாகம் 20 -ன் பணிகள் சென்றாண்டே நிறைவாகி இருந்தததால் முழுவதையும் மீண்டும் ஒரு முறை பொறுப்பாய்ப் படிக்க அவசியமானது ! துவக்கப் பக்கங்கள் நிறைய ஆக்ஷன் கொண்டவை என்பதால் பக்கத்து இல்லத்துப் பெரியவர் ஓரிரண்டு சுற்றுக்கள் நடை போட்டு முடிப்பதற்குள்ளாக நான் 30 பக்கங்களை எட்டிப் பிடித்திருந்தேன் ! 'ப்பூ....ரெண்டு பாகங்களையும் 10 மணிக்குள்ளாகவே முடித்திடலாம் போலத் தோணுதே !' என்று சீட்டியடித்துக் கொண்டே மேலே தொடர ....வசனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் 'மனோஹரா' திரைப்படத்தில் நடிகர் திலகம் பேசிடும் நீளங்களை எட்டிப் பிடிக்கத் தொடங்குவதை உணர முடிந்த போது லேசாக வியர்க்கத் தொடங்கியது ! அடிப்படை மொழியாக்கம் நமது கருணையானந்தம் அவர்களது ! கதையின் மையங்கள் நெருங்கிடும் வேளையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் உடன் வைத்துக் கொள்ளாவிடில் சிக்கலாகிப் போகுமென்பதால் ஒரு பக்கம் பிரெஞ்சு ஸ்கிரிப்ட் ; இன்னொரு பக்கம் கம்ப்யூட்டரில் கதையின் சித்திரங்கள் ; மறு பக்கம் கருனையானந்தம் அவர்தம் ஸ்கிரிப்ட் + நடுவில் கலர் printouts ; ஓரத்தில் எனது script + writing pad என்று சந்தையில் கடை பரப்பாத குறை தான் ! வினோதமான ஒற்றைப் பார்வைக்குப் பின்னே தன வேலைகளைக் கவனிக்க மனைவி நகன்று விட - ஒரு வழியாய் நிறைய மல்லுக்கட்டல்களுக்குப்  பின்னே  பாகம் 20-ஐ முடித்த திருப்தியில் நிமிர்ந்தால் 'முனியாண்டி விலாசில் பிரியாணிக்கு 'தம்' போட்டு முடித்திருக்கும் நேரமிது தம்பி' ! என்று கடிகாரம் தகவல் சொன்னது ! 'XIII -ஐ குறைச்சலாய் மதிப்பீடு செய்வோருக்கு பூவா கிட்டாது' என்பது தான் கதையின் கருத்து போலும் என்ற ஞாயிறு ஞானோதயத்தோடு இரண்டாம் பாகத்தைக் கையில் தூக்கும் முன்னே சோற்றுத் தட்டைத் தூக்கிட்டால் நலம் என்று தீர்மானித்தேன் ! இடையே XIII உடனான யாத்திரைகளைத் தொடரும் முன்னே இங்கொரு attendance + பதிவு எண் 111 -ஐ அரங்கேற்றினால் என்னவென்று தோன்றியது ! So, here I am !

XIII -ன் இந்த இரண்டாம் இன்னிங்சில் இப்போதைக்கு எனக்கு striking ஆகத் தென்பட்ட சங்கதிகளைப் பற்றி லேசாய் ஒரு outline மட்டும் :
  • சித்திரத் தரம் அசாத்தியம் !! வில்லியம் வான்சே பெருமைப் படக் கூடிய வகையில் உள்ளது overall ஓவியப் பாணி !  XIII ; கர்னல் ஜோன்ஸ் ; பென் காரிங்டன் என முந்தைய பாகங்களின் தொடர் பாத்திரங்களில் துளியும் வேற்றுமை பார்த்திட இயலவில்லை !  Simply superb ! 
  • ஏற்கனவே சொன்னது போல வண்ணக் கலவையும் இவ்விருகதைகளுக்குமே நேர்த்தியோ நேர்த்தி !! பொதுவாக இது போன்ற சீரியஸ் ரகக் கதைகளுக்கு பளிச் என வர்ணங்களை அனுமதிப்பதில்லை ! விதிவிலக்கு - COMANCHE தொடர் ! இனி அந்தப் பட்டியலில் XIII -ஐக் கூட இணைத்துக் கொள்ளலாம் ! கண்ணுக்கு ரொம்பவே குளிர்ச்சி தரும் அதே வேளையில் - 'தெய்வமே...அச்சில் இதற்கு நியாயம் செய்தாக வேண்டுமே !' என்ற பிரார்த்தனையும் ! 
  • கதைப் போக்கைப் பொருத்த வரை - ஏற்கனவே முடிச்சவிழ்க்கப் பட்டதொரு கருவை புதிதாய் ஒரு angle லிலிருந்து அணுக முயற்சித்துள்ளனர் ! சுவாரஸ்யம் தரும் துவக்கம் என்றே சொல்லுவேன் !   தொடருமாண்டுகளில் XIII எனும் இந்தப் பசு மாட்டை இன்னமும் எவ்வளவு பாகங்களுக்குக் கறக்க எண்ணி இருக்கிறார்களோ - நானறியேன் ! But -  இந்தப் புது ஆசிரியர் -ஓவியர் கூட்டணியில் பரபரப்புக்குப் பஞ்சமிராது என்பதை மட்டும் பட்சி சொல்லுகிறது ! பாருங்களேன்....!
  • இது போன்ற கதைகளை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கும் சமயங்கள் எத்தனை சிரமமானவை என்பதை மீண்டுமொருமுறை உணர முடிந்தது ! திரைமறைவிலிருக்கும் அவருக்கு ஒரு salute ! தமிழில் இறுதியாய்  எழுதி பெயர் தட்டிப் போகும் எங்களின் பின்னே ஓசையின்றி அரங்கேறும் இந்த உழைப்பின் பரிமாணம் அசாத்தியமானது !
November 2013 -ல் பிரான்சில் வெளியாக உள்ள பாகம் 22 !

இந்த ஞாயிறை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கொண்டதாய் ஆக்கிட - சமீபமாய் நண்பர் சுஸ்கி-விஸ்கி தெரிவித்த suggestion -ஐ நடைமுறைப்படுத்தினால் என்னவென்று தோன்றியது ! இதோ ஒரு 7 பக்க மினி திகில் கதை ! இதனை தமிழில் மொழிபெயர்த்து அடுத்த ஓரிரு நாட்களுக்குள் அனுப்புங்களேன் guys ! சமீபமாய் "கேப்டன் பிரின்ஸ்' இதழில் வெளியாகி இருந்த 5 பக்க திகில் த்ரில்லரை அச்சுக்குச் செல்லும் 3 மணி நேரங்களுக்கு முன்னே அவசரம் அவசரமாய் எழுதிய போதே இரு விஷயங்கள் மனதில் தோன்றின ! Filler pages -க்கென கார்டூன்களை மாத்திரமே மையப்படுத்திடாது, இது போன்ற திகில் கதைகளையும் பரீட்சை செய்து பார்த்தால் என்னவென்று தோன்றியது - சிந்தனை # 1 ! அதேபோல ஒரு quick gun மொழிபெயர்ப்பு முயற்சியையும் எத்தனிப்போமே என்று தோன்றியது thought # 2 !  So give it a rapid crack folks ?






போட்டிகள் இன்னும் முடிந்தபாடில்லை ! சமீபமாய் நண்பர் Podiyan புண்ணியத்தில் ஒரு மௌனப் பக்கத்திற்கு (XIII ) வெடிச் சிரிப்பு டயலாக் எழுதி ரசிக்கும் வாய்ப்பை தரிசித்த போதே - 'புதிய போட்டி 114 காத்துள்ளது !' என்று நான் சொல்லி இருந்தேன் ! இதோ - ஒரு முழுப் பக்கமல்ல - ஒரே ஒரு frame -க்கு அழகாய் வசனம் எழுதிட ஒரு போட்டி ! நமது நேற்றைய ஜாம்பவான்கள் ஸ்பைடரும் - இரும்புக்கை மாயாவியும் இப்படி சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் ?
 உங்கள் கற்பனைகளை கட்டவிழ்த்து விடுங்களேன் ? வெற்றி பெரும் சூப்பர் டயலாக் அடுத்த இதழில் வெளியாகும் என்பதோடு - அதன் author -க்கு ஒரு FLEETWAY ஒரிஜினல் காமிக்ஸ் புத்தகத்தையும் பரிசாய்ப் பெற்றுத் தரும் ! So get those rib ticklers out ! 

XIII உடனான எனது ஞாயிறைத் தொடரச் செல்லும் முன்னே வழக்கம் போல் குட்டியாய் சில updates :
  • இம்மாதம் E -bay -ல் நமது புது இதழ்களுக்கான வரவேற்பு செம fast  ! அதில் highlight என்னவெனில் - லார்கோவை விட பிரின்ஸ் & கோ. பெற்றுள்ள வரவேற்பு அதிகம் !
  • ஈரோட்டுத் திருவிழாவைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் நமது இதழ்களுக்கு நிறையவே புது சந்தா வினவல்கள் + லக்கி லுக் முந்தைய இதழ் purchases !
  • அடுத்த பதிவில் அக்டோபெரின் புது கார்ட்டூன்  வரவை உங்களுக்கு நிச்சயம் அறிமுகம் செய்து வைப்பேன் ! +6 வரிசையில் இதழ் # 3 இது !
  • 2014-ன் புது இதழ்களின் அட்டவணை ஏறத்தாள முடிந்தது என்று சொல்லலாம் ! மறுபதிப்புப் பட்டியலை மாத்திரமே இப்போது அணுக வேண்டியுள்ளது ! "கார்சனின் கடந்த காலம்" பற்றிய உங்களின் உத்வேகம் நான் அறிந்ததே ! அது தவிர வண்ணத்தில் 2014-ல் நீங்கள் பார்த்திட விரும்பும் 'டாப் 5' கதைகளை மட்டும் பட்டியலிடுங்களேன் - ப்ளீஸ் ? 
  • நமது முந்தைய நாயகர்களைத் தாண்டியதொரு தமிழ் காமிக்ஸ் உலகையே அணுகிட விரும்பாது நின்ற நண்பர்களும் கூட, மெது மெதுவாய் புது யுக நாயகர்களை ரசிக்கத் துவங்கியுள்ளனர் ! நிஜமாக சந்தோஷமாக உள்ளது !! 
Take care guys...மீண்டும் சந்திப்போம் !

P.S : நண்பர்களுள் உறையும் திறமைகள் நித்தமும் மூச்சு வாங்கச் செய்கின்றன ! பாருங்களேன் இன்று கிடைக்கப் பெற்ற காஞ்சிபுரம் ரமேஷ் குமாரின் வர்ண சேர்க்கை முயற்சிகளை ! நமது லயன் டாப் 10 ஸ்பெஷலில் வாசகர் ஸ்பாட்லைட் பகுதியில் ஸ்பைடர் குட்டிக் கதையொன்றினை உருவாக்கியவர் இவரே என்பது உபரித் தகவல் !

Tuesday, September 03, 2013

மாற்றமே...நீ மாறாயோ ?

நண்பர்களே,

வணக்கம். வியட்நாமின் கானகங்களை எதிர்பார்த்திருக்கும் உங்களுக்கு பர்மாவின் திகைக்கச் செய்யும் வனம் காத்துள்ளது ! யெஸ், நவம்பரில் வரவிருந்த நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் - சின்னதாய் ஒரு ஜம்ப் செய்து இம்மாதமே உங்களைச் சந்திக்கத் தயாராகி விட்டார் ! ALL NEW SPECIAL ; தொடர்ந்த மாதத்தில் "மனதில் மிருகம் வேண்டும்" ; அடுத்ததாய் "ஒரு சிப்பாயின் சுவடுகள்" ; அக்டோபரில் "ரத்தப் படலம்" என அட்டவணை அமைந்திடும் பட்சத்தில்  - நமது அதிரடி ரகக் கதைகளின் ரசிகர்களிடையே கொஞ்சமாய் தொய்வு நேர்ந்திடுமே என்ற சலனம் என்னுள் சமீபமாய் எழுந்தது ! ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் போதும் நம் நண்பர்கள் பரவலாய் கிரீன் மேனர் & பிரளயத்தின் பிள்ளைகள் " கதைகளை சிலாகித்து வந்த போதிலும், மௌனமாய் நின்று, சந்தர்ப்பம் அமைந்த போது - 'நடு நடுவே ஆக்ஷன் கதைகளையும் போட மறந்துடாதீங்க சார் !' என சன்னமாய் வேண்டுகோள் விடுத்த அன்பர்களும் இல்லாதில்லை ! கிராபிக் நாவல்களின் வெற்றி நிச்சயம் நம்மை பாதை மாற்றிடப் போவதில்லை என்பதை வார்த்தைகளில் சொல்வதை விட - அழுத்தமாய் ஒரு அதகள சாகசத்தின் மூலம் சொல்வது வலிமையாய் இருக்குமென்று அன்றே மனதுக்குப் பட்டது ! So  ஊருக்குத் திரும்பியதும் செய்த முதற்பணி - லார்கோவின் மொழியாக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டதே ! எப்போதுமே பரபரப்புக்குக் குறை வைத்திடாத நமது LW - இந்தப் படலத்தில் எடுப்பதோ ஒரு விஸ்வரூபம் என்பதை - ஆங்கிலத்திலும், இதர மொழிகளிலும் இதனைப் படித்திருக்கக் கூடிய நண்பர்கள் அறிவர்..! புதியவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே - தலைப்புக்கு நூற்றுக்கு நூறு நியாயம் செய்திடும் சாகசம் இது ! 

அட்டைப்படத்தின் பொருட்டு நிறையவே மெனக்கெட்டொம் ! லார்கோவின் ஒரிஜினல் ராப்பர்கள் கதைகளின் அசாத்திய வேகத்தைத் துளியும் வெளிக்காட்டாத விதங்களில் 'தேமே' என்றிருப்பது வழக்கம் ! ஆனால் நமக்கு அந்த பாணி ஒத்து வராதே....! மாலையப்பனின் ஓவியத்தை நிறைய நகாசு வேலைகளோடு தயாரிக்க முனநிதோம் ! பாருங்களேன்...!
ஓவியரின் கைவண்ணம் + கணினியில் பொன்னனின் லாவகம் ! 


தொடரும் இரு டிசைன்களும் நாங்கள் முயற்சித்த அரை டஜனில் ஒரு சில !
செய்திட்ட சில முயற்சிகளின் மாதிரிகள்...!
மூச்சிறைக்கச் செய்யும் துரிதத்தோடு தட தடக்கும் இந்த சாகசத்தில் - லார்கோவின் பல பரிமாணங்களைப் பார்த்திடப் போகிறீர்கள் ! நண்பனுக்காக எதையும் இழக்கத் துணியும் உறுதி ; காதலில் உருகும் இதம் ; மரணத்தை எதிர்நோக்கும் போதும் இழந்திடா மதியூகம் என it's a largo show all the way ! பர்மா பஜாரை அடுத்த முறை நீங்கள் கடக்கும் போது கூட லார்கோவின் நினைப்பு உங்களை வியாபிக்காதிருப்பது சிரமமே என்று சொல்லும் அளவுக்கு புர்மவோடு நாம் ஐக்கியம் ஆகவிருக்கிறோம் ! இதழின் பின்னட்டையில் ஓவியர் + ஆசிரியர் கூட்டணியின் போட்டோக்களை பிரதானமாய் அமைக்க எண்ணியுள்ளேன் - தொடரும் மாதங்களில் ! லார்கோவோடு இம்முறை லக்கி லூக்கின் ஒரு குட்டி சாகசம் வருகின்றது ! "சூரப்புலி ஸோ-ஸோ " நமது ஜூனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்பு முயற்சிக்கு ஒரு சின்ன பிள்ளையார் சுழி என்பது கொசுறுச் சேதி ! சின்ன சின்ன திருத்தங்கள் ; சேர்க்கைகள் என எனது பேனாவின் ஊடுருவலும் இதனில் உள்ளது - but மையம் விக்ரமின் கைவண்ணம் ! திடுமென லார்கோவின் பணிகள் குறுக்கே புகுந்த காரணத்தினால், +6 வரிசையில் இம்மாதம் வரவிருந்த கார்ட்டூன் அறிமுகம் அக்டோபருக்கு transfer ! அதே போல, வியட்நாம் கிராபிக் நாவலான "ஒரு சிப்பாயின் சுவடுகள்" - நவம்பரில் வருகிறது ! So - நிகழ்ந்திருப்பது schedule-ல்  சின்னதொரு இடமாற்றம் மாத்திரமே !

இம்மாதத்து சக இதழான "CAPTAIN PRINCE ஸ்பெஷல் -1 " பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன் ! இதோ அதன் அட்டைப்படங்கள் + ஒரிஜினல்களின் மாதிரிகள் + சில டிசைனிங் முயற்சிகள் ! 
நமது ஓவியர் மாலையப்பன் in action - முன் + பின் அட்டைகளும் ! 

An attempted cover...
எழுத்துகளின் சேர்க்கையைத் தாண்டி இம்முறை கணினியின் பங்களிப்பு அதிகம் கிடையாது ! முழுவதுமே நம் ஓவியரின் தூரிகையின் ஜாலங்கள் ! நமது முந்தைய நாட்களை நினைவு படுத்தும் விதமாய் இவை அமைந்துள்ளது போல் எனக்குத் தோன்றியது ! 'ஒரிஜினலையே பயன்படுத்தி இருக்கலாமே ?' என்ற வினவல்களும் நண்பர்களிடையே நிச்சயம் இருந்திடும் என்பதை அறிவேன் ; ஆனால் நாம் செய்திருப்பது அவற்றை சற்றே மெருகூட்டுவது மாத்திரமே என்பதால் ஒரிஜினல்களின் அழகும் சிதைந்து போய் இராது என்ற நம்பிக்கை எனக்கு ! இதழை நாளைக் காலை பார்த்திடும் போது உங்களின் அபிப்ராயங்களைப் பகிர்ந்திடுங்களேன் ? சந்தாப் பிரதிகள் சகலமும் எப்போதும் போலவே ஒரு மொத்தமாய் இன்று புறப்பட்டு விட்டன  - வெவ்வேறு மார்க்கங்கள் மூலமாய் ! பதிவுத் தபால்கள் நீங்கலாய் பாக்கி அனைத்தும் நாளைய காலை உங்களைத் தேடி வந்திட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் ! பிரின்ஸ் ஸ்பெஷலில் filler pages ஆக ஒரு குட்டி (புது) திகில் த்ரில்லர் இடம் பிடித்துள்ளது ! ஆர்ட் பேப்பரில் , black & white -ல் வந்துள்ள இந்த மினி கதையை ரசிக்க முடிந்தது எனக்கு ! துவக்க நாட்களது திகில் காமிக்ஸை நினைவூட்டும் விதத்தில் இருந்தததாய் எனக்குத் தோன்றியது ! படித்துப் பார்த்து விட்டு - மறவாமல் உங்கள் அபிப்ராயங்கள் ப்ளீஸ் !

நாளைய தினம் கூரியர் டெலிவரி நண்பர்களுக்கும் சரி ; நமக்கும் சரி - ஒரு பிஸியான தினமாய் அமைந்திடவிருப்பது உறுதி ! As always, fingers crossed !