நண்பர்களே,
மீண்டுமொரு ஞாயிறு வணக்கம் ! பொழுது விடியும் போதே "தொடரும்" போடப்பட்டு அந்தரத்தில் தொங்கும் "கேள்வி-பதில்" தொகுப்பின் மிச்சப் பாதியை இன்று கவனித்தாக வேண்டுமென்ற அலாரம் தலைக்குள் ஒலித்தது ! ALL NEW SPECIAL -ன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்தேறும் tight ஆன நேரமிது என்றாலும், இங்கு வருகை பதிவிடுவதும் முக்கியமே என்பதால் "உள்ளேன் அய்யா !".
இதோ ஈரோடு விஜயின் கேள்விகள் தொகுப்பின் இறுதிப் பாகமும் ; அவற்றிற்கான எனது பதில்களும் :
========================================================================
* கிட்-லக்கியின் வரவேற்பைப் பொறுத்து சிறுவர்களுக்கான சிறப்பு இதழ் தொடங்கப்படுமா?
நல்ல கேள்வி தான் ; இங்கு நம் நண்பர்களும் ஆங்காங்கே, அவ்வப்போது இதே பாணியிலான வினாக்களை எழுப்பி உள்ளதும் கூட நினைவில் நிற்கிறது !
காமிக்ஸ் எனும் அறிமுக சுவையை இன்றைய தலைமுறை தானாய் தேடி, நாடிச் சென்று அடைந்திடும் சாத்தியங்கள் சொற்பமே ! For starters ,நமது இன்றைய பாணி / விலையிலான இதழ்கள் தெரு முனையில் உள்ள பெட்டிக் கடைகளில் கிட்டப் போவதில்லை. ஊருக்கு ஒன்றோ, இரண்டோ சற்றே பெரிய புத்தகக் கடைகளில் மாத்திரம் நம் இதழ்கள் கிடைத்தாலே அது பெரிய சமாச்சாரம் என்ற சூழ்நிலையில், நமது பால்ய காலத்து "அம்மாவிடம் பாக்கெட் money - பெட்டிக்கடையில் காமிக்ஸ் " என்ற பார்முலா இன்றைக்கு வொர்க் அவுட் ஆகாது ! வீட்டின் பெரியவர்கள் initiative எடுத்து சந்தா செலுத்தினாலோ ; வெளியே செல்லும் போது வாங்கிக் கொணர்ந்தாலோ தவிர, சிறுவர்களை நாம் எட்டிப் பிடித்திட வாய்ப்பேது ? இன்று நம் இதழ்களை ஆர்வமாய்ப் படித்து வரும் நண்பர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுமே நாமொரு சிறார் பத்திரிகை வெளியிடும் பட்சத்தில் துணை நிற்பர் என்பதில் சந்தேகமில்லை ; ஆனால் அந்த எண்ணிக்கை நமது தற்போதைய சந்தா பலத்தைத் தாண்டாது தானே ? மீண்டுமொரு இதழ் இதே சின்ன circulation சகிதம் வலம் வருவதில் வளமான எதிர்காலம் இருத்தல் மிகச் சிரமமே !
சந்தாக்களைப் பன்மடங்கு கூட்டுவது அல்லது மீண்டுமொருமுறை விற்பனையாளர்களைத் தேடிச் சென்று (கடன் தந்தாவது) விற்பனைக்கு முயல்வது என்பதே அச்சமயம் நமக்கிருக்கும் வழிமுறைகளாக இருக்கும். இந்தியாவின் ஒரு தலைசிறந்த குழுமம் நடத்திடும் புத்தக விற்பனை முனைக்கு நமது இதழ்களை supply செய்து விட்டு ; தூரத்தில்...ரொம்ப தூரத்திலாவது ...அதற்கான பணம் கிட்டிடும் வாய்ப்பு உள்ளதா ? என்று தன் கடந்த காலத்தைத் தேடிக் கொண்டிருக்கும் XIII -ஐப் போல நானும் "பே" என்ற முழியோடு நின்று வருகிறேன், கடந்த 4 மாதங்களாய் ! விற்பனையாளர்களைப் பொறுத்த வரை குமுதம், ஆனந்த விகடன் போன்ற பெரும் குழுமங்களைத் தாண்டிய சிறு பதிப்பகங்களுக்கு "விற்றால் காசு" என்பதே பரவலான நடைமுறை ! காமிக்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம் ! நாம் கடன் தரத் தயாரே ஆனால் கூட unsold copies வாபஸ் எடுப்பதென்பது நடைமுறை சாத்தியமாகாதே ! நமது தற்போதைய ஆர்ட் பேப்பர் காமிக்ஸ் இதழ்களில் ஒரு பொட்டு தண்ணீர் பட்டால் கூட கோவிந்தா தான் - புத்தகம் மொத்தமாய் ஒட்டிக் கொள்ளும் ! So - இந்த 'விற்காத பிரதிகளை வாபஸ் வாங்கிக் கொள்ளுகிறோம் ' பார்முலா நமக்கானது அல்ல எனும் போது - வெகுஜன புழக்கத்திற்கு ஒத்து வரும் விற்பனை முனைகளும் நமக்கானவையல்ல என்றே ஆகிடுகிறது !
அடுத்த மாதம் துவக்கம் வேறு பத்திரிகைகளில் தொடர்ச்சியாய் விளம்பரம் செய்து இன்னும் நமது இரண்டாம் வருகையை அறிந்திரா காமிக்ஸ் பிரியர்களை சுவாரஸ்யப்படுத்திட முடிகிறதா என்று பார்த்திட உத்தேசம் ! அதன் புண்ணியத்தில் நமது தற்போதைய சந்தா base அதிகமானால் நமது தற்போதைய பயணப் பாதை கொஞ்சம் சுலபமாகும். யதார்த்தம் இப்படியிருக்க இன்னொரு புது முயற்சியில் 'தொபுக்'கென குதிப்பது விவேகமாகாதே !
கொசுறாய் ஒரு சேதியும் கூட : கொஞ்ச காலம் முன்னே ஒரு சர்வதேச காமிக்ஸ் ஜாம்பவானின் ஆசியப் பிரதிநிதிகள் நம்மைத் தொடர்பு கொண்டார்கள் - அவர்களது படைப்புகளை நாம் தமிழில் வெளியிட ஆர்வமாய் இருப்போமா என்ற கேள்வியுடன் ! தொடர்பு கொண்ட நிறுவனத்தின் ஆற்றலும், ஆளுமையும் ; படைப்புகளும் அசாத்தியமானவை என்பதால் - பிரத்யேகமாய் ஒரு மாதாந்திரக் கார்ட்டூன் இதழ் ; ரூ.30 விலையில் என்ற பார்முலாவோடு அவர்களை 15 நாட்கள் இடைவெளிக்குப் பின்னதாக சந்தித்தேன் ! தரம், விலை, பாணி, எல்லாமே ஒ.கே. ஆகி விட்டது ; ஆனால் 'மாத இதழ்' என்பதிலும், எதிர்பார்க்கப்படும் விற்பனை எண்ணிக்கை : 10,000 பிரதிகள் என்பதிலும் அவர்களது முகத்திலிருந்த பிரகாசம் குறைந்து போனது ! 'மாதம் குறைந்த பட்சம் மூன்றோ, நான்கோ இதழ்கள் வெளியிடுங்களேன்' என்றும் ; "வெறும்" 10,000 பிரதிகள் தானா ? என்ற புருவ உயர்த்தலும் தலை காட்டிய போதே 'இது தேறாது' என்று என் மண்டைக்குள் ஒலித்தது. நாசூக்காய்ப் பேசி விட்டு விடை பெற்று வந்தேன் ! நம் மார்கெட்டுக்கென உள்ள பல limitations களை உணர்ந்து, புரிந்து பரிவு காட்டும் படைபாளிகளாய் இருந்தால் தவிர,நமது தற்சமய விற்பனை எண்ணிக்கையோடு குடும்பம் நடத்துவது இயலாக் காரியமே என்பது நான் கற்ற பாடம் !
========================================================================
* கேப்டன் டைகரின் 'Arizona love' அடுத்தவருடமாவது வெளியாகுமா?
Arizona Love நிச்சயம் வெளியாகும் ; ஆனால் 2014-ல் அல்ல ! இந்த பாகத்தில் சித்திரங்கள் சென்சாரைத் தூண்டும் வகையில் உள்ளன என்பது நிஜம் தான் - but அதனை handle பண்ணிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை உள்ளது !
========================================================================
*சென்ற வருடத்தைக் காட்டிலும் வாசகர் வட்டம் விரிவடைந்திருக்கிறதா? தோராயமாக எவ்வளவு சதவீதம்?
நிச்சயமாய் கூடியுள்ளது - 15% வரை ! ஆனால் துவக்க எண்ணிக்கையே பெரிதல்ல எனும் போது அதில் 15% என்பது ஒரு giant leap ஆகாது தானே ? But - முன்பணம் கொடுத்து பிரதிகளை வாங்கிடும் விற்பனையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக - ஆனால் உறுதியாக முன்னேறி வருவது ஒரு ஆறுதலான அம்சம் !
========================================================================
* வாசகர்வட்டத்தையும், விற்பனையையும் அதிகரிக்கச் செய்ய ஏதேனும் புதிய முயற்சிகள் யோசிக்கப்பட்டிருக்கிறதா?
பள்ளிகளுக்கு சந்தாக்கள் விற்பனை செய்ய நண்பரொருவர் உதவ முன்வந்துள்ளார் ; ஆங்காங்கே நடைபெறும் குட்டியான புத்தகத் திருவிழாக்களிலும் பங்கேற்க உத்தேசித்துள்ளோம் ! உங்கள் நகரில் ஓரளவேனும் ஒ.கே. ரகத்திலான புத்தகக் கண்காட்சிகள் நடந்தேறும் பட்சத்தில் அவை பற்றித் தகவல்கள் சொல்லுங்களேன் - ப்ளீஸ் ? ஈரோடு விழாவிற்கு இயன்ற முயற்சிகளை நம் நண்பர்கள் செய்து வருகிறார்கள் ! நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் :-)
========================================================================
*நம்முடன் வியாபாரத் தொடர்பிலிருக்கும் பதிப்பகத்தார் யாராவது 3Dயில் காமிக்ஸ் வெளியிட்டிருக்கிறார்களா? பதில் 'ஆமாம்' எனில் நாமும் களமிறங்கிடும் வாய்ப்புள்ளதா? ('ரத்தத்தடம்' ஏற்படுத்திய எண்ணங்கள்... )
3 D -க்கான தொழில் நுட்பமே வேறு ! பைசா கூடுதல் செலவின்றி அதனை உங்களுக்கும், எனக்கும் சாத்தியமாக்கிக் காட்டி இருக்கும் நம் பணியாளர்கள் அவ்விதத்தில் பாராட்டுக்குரியவர்களே :-)
========================================================================
* நமது ஜூனியர் எடிட்டர் ஃப்ரெஞ்சு மொழி கற்றுக்கொண்டாரெனில் எதிர்கால மொழிபெயர்ப்புக்கு உதவுமே?
தற்சமயக் கல்லூரிக் கல்வியின் மத்தியினில் இதற்கென நேரமும், ஆர்வமும் கண்டு பிடித்தல் ஜூ. எ-க்கு சாத்தியமாகுமா என்பதற்கு விடை சொல்லத் தெரியவில்லை எனக்கு ! தவிரவும், ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதோடு அதில் புலமை வந்திடாது என்பதில் ரகசியம் ஏதும் இல்லையே ! தொடர்ச்சியாய் அதனில் உரையாடுவது ;அம்மொழியினில் நிறையப் படிப்பது என்பன அத்தியாவசியமன்றோ ?
அது மட்டுமல்லாது - எழுதுவது என்பதொரு intense task ! அயர்ச்சி ஆட்கொள்ள அனுமதிக்காமல் தொடர்ச்சியாய் பேனா பிடிப்பதும் எத்தனை சிரமம் என்பதை எங்களது மொழியாக்க ஸ்கிரிப்ட்களைப் பார்த்தால் புலனாகும் ! 'காமிக்ஸ் பரிச்சயமே இல்லாத இல்லத்தரசி' என்ற அடையாளத்தோடு நமக்காகப் பணியாற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் அனுப்பிடும் ஒவ்வொரு மாதக் கூரியரிலும் பரீட்சைப் பேப்பர் சைசில் 50-60 பக்க text இருக்கும் ! பணமெனும் ஒரு உந்துதலுக்கு அப்பாற்பட்ட அர்ப்பணிப்பு அவசியம் இப்பணிகளுக்கு ! So குருவி தலையில் இந்தப் பனங்காயை ஏற்றுவது இப்போதைக்கு சரியாகாது !
தவிரவும், அவன் பாதை எதுவென்பதை அவனே தீர்மானிக்கட்டுமே ? 'இதைச் செய் - அதைச் செய் ' என ஒரு போதும் என் தந்தை என்னை நிர்பந்தித்ததில்லை ! அந்நாட்களிலேயே எனக்கே சாத்தியமான சுதந்திரம் இன்றைய தலைமுறைக்கு சுவாசத்தைப் போல் அத்தியாவசியமாகும் அல்லவா ?
========================================================================
*நாற்பதாண்டு பாரம்பரிய கொள்கையைத் தகர்த்தெறிந்துவிட்டு 'குறித்தநேரத்தில் காமிக்ஸ் வெளியிடும்' வரலாறு காணாத நமது இந்த புதிய பாணி உங்களுக்கு எதை உணர்த்தியிருப்பதாக நினைக்கிறீர்கள்?
40 ஆண்டுகளாய் வாழைப்பழச் சோம்பேறிகளாய் இருந்து வந்துள்ளோம் என்பதையும் ; இத்தனை காலமாய் அத்தனையையும் சகித்து வந்துள்ள நண்பர்களுக்கு பதில் மரியாதை செய்திட இதைத் தாண்டியதொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதையும் உணர்த்தியுள்ளது ! பல முறை சொல்லியுள்ளேன் - ஆனால் திரும்பவும் சொல்லிடும் அவசியங்கள் குன்றிடவில்லை என்பதால் - மீண்டுமொருமுறை சொல்கிறேன் : thanks a ton guys !
========================================================================
* வண்ணப்புத்தகங்களின் அணிவகுப்பால் உள்ளே வர இடம்கிடைக்காமல் தவிக்கும் மாடஸ்டியின் மார்கெட் பணால் ஆகிவிடும்போல் தெரிகிறதே?
எனக்கும் அதில் வருத்தமே ! ஆனால் மாடஸ்டி கதைகளுக்கு அத்தனை சீக்கிரம் மங்களம் பாடிடுவதாக நானில்லை ! உரிய நேரத்தில் மேற்கொண்டு பேசுவோம் (நம் ) இளவரசியைப் பற்றி !
========================================================================
*இனிவரவிருக்கும் (NBS போன்ற) சிறப்புவெளியீடுகளில் 'அந்தரத்தில் ஊசலாடும் கதைகளைச் சேர்க்கவேண்டாம்' என்ற நண்பர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
டைகரின் கதை இம்முறை NBS -ல் ஊசலாடக் காரணமென்ன என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் ! So - அது போன்ற தவறுகள் தொடராது !இன்னும் சில நண்பர்கள், லார்கோ ; ஷெல்டன் போன்ற prime series களின் அங்கங்களை தனித் தனி வெளியீடுகளாக மாத்திரமே வெளியிடுங்கள் ; இது போன்ற combo இதழ்களில் இடம் பெறச் செய்ய வேண்டாமென கோரியிருந்தனர் ! ஒரு மெகா இதழைத் திட்டமிடும் போது அவசியமாகும் முதல் காரியமே அதன் நட்சத்திர அங்கத்தினர்களைத் தேர்வு செய்வதே ! பிரதான நாயகர்களை ஒதுக்கி விட்டால், அந்த ஸ்பெஷல் உப்பு சப்பு இல்லாத உணர்வைத் தோற்றுவிக்கும் !
=======================================================================
* ஜில்ஜோர்டான் 2014 ல் தலைகாட்டுவாரா?
சிரமமான கேள்வியே ! ஒரு தொடரை ஒரே கதையின் மூலம் தீர்மானிப்பதென்பது - ஒரேயொரு மாட்சில் களம் இறக்கி விட்டு, 'நீ செஞ்சுரி அடித்தால் மாத்திரமே தப்பித்தாய் கண்ணா ' என்று சொல்வதைப் போலாகும் ! முதல் முயற்சியில் ஜில் ஜோர்டான் decent ஆனதொரு ஆட்டத்தைத் தான் நமக்குக் காட்டினார் என்ற போதிலும், கதையில் வியாபித்திருக்கும் புராதனம் சற்றே நெருடலாய் உள்ளது எனக்கு ! லியர்ஸ் ஜெட்டில் ஏறி சுவிட்சர்லாந்திலிருந்து இரவு உணவுக்கு நியூயார்க் திரும்பும் லார்கோவை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, ட்ரன்க் கால் போட்டுப் பேசி விட்டு, ரயில் டிக்கட் எடுத்து பாரிசுக்கு 4 மணி நேரம் 'லொடக் லொடக்' எனப் பயணிக்கும் ஜில் ஜோர்டானையும் அதே களத்தில் நிற்கச் செய்வது கொஞ்சம் கஷ்டமாகவே தோன்றுகிறது ! ஆனால் இது ஜோர்டானின் கதைகளைக் குறை சொல்லும் முயற்சியல்லவே ; அவற்றின் தரம் உலகறிந்ததே ! இங்கு நண்பர்களின் opinion எனக்கொரு தீர்மானமெடுக்க உதவும் ! What say guys ?
========================================================================
* சமீபத்தில் எல்லா வாசகர்களின் வயிறையும் பதம் பார்த்திட்ட கிட் ஆர்ட்டின்-ஷெரீப் ஜோடிக்கு அதிக வாய்ப்பளிக்கப்படுமா?
எதிர்பார்ப்புகளை மாத்திரமின்றி - ஒவ்வொரு முறையும் அதே சிரிப்புக் quotient சகிதம் ஒரு கதை அமைவதும், சரளமான வசன நடை அமைவதும் சாத்தியமாக வேண்டுமே என்ற கூடுதல் பொறுப்பையும் வுட் சிட்டி கோமாளிகள் இப்போது ஏற்படுத்தி விட்டனர் எனக்கு ! முயற்சிப்போமே ! நிச்சயம் 2014-ன் காலெண்டரில் இவர்களுக்கு ஒரு நல்ல இடமுண்டு !
========================================================================
*ஒரு மாற்றத்திற்காகவாவது திகில்/அமானுஷ்ய கதைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?
ஜூனியர் எடிட்டரின் சமீப காலக் கோரிக்கையும் கூட இதுவே ! பிரச்சனை என்னவெனில் - அமானுஷ்யக் கதை வரிசைகளில் இரு வெவ்வேறு பாணிகள் உள்ளன ! ஒன்று : நமது முந்தைய கறுப்புக் கிழவி ரக சிறுகதைகள் கொண்ட 4-6 பக்கத் தொகுப்புகள் ; மற்றொன்று - அமானுஷ்யக் கதை ரசிகர்களுக்கென உருவாக்கப்பட்ட hardcore த்ரில்லர்கள் ! இரத்தக் காட்டேரிகள் ; ட்ராகுலாக்கள் ; பிணம் தின்னிகள் ; zombies என்று கதை முழுக்க இவர்கள் (இவைகள் ??) உலவுவது இந்த வரிசையில் சகஜம் ! முதல் ரகம் இன்றைக்கு filler pages -க்குப் பிரயோஜனப்படுவதைத் தாண்டி அதிக பலனளிக்குமா தெரியவில்லை (நண்பர் ஜான் சைமன் மன்னிப்பாராக !) ; இரண்டாம் ரகம் நிச்சயமாய் ஒரு no - no ! நிஜமான த்ரில்லர் கதைகளுக்கு நானுமே வலை போட்டு வருகிறேன்...!
========================================================================
* மிக அவசியப்பட்டால்தவிர முத்தக்காட்சிகள் கூட வேண்டாமே என்ற வாசகர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கப்படுமா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தயக்கமின்றி நம் காமிக்ஸ்களை வாங்கிக்கொடுத்திட இந்த 'விரசமில்லா' நிலைப்பாடு நிச்சயம் உதவுமில்லையா?
இது பற்றி நாம் நிறையவே பேசி இருக்கிறோம் தானே ? எனினும், நம் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மீண்டுமொருமுறை நேரம் செலவிடுவதில் தவறில்லை தானே !
முத்தக் காட்சிகளோ ; இன்ன பிற வகை விரசங்களோ ஒரு ஆக்கத்தினுள் (காமிக்ஸ்களுக்கு மாத்திரமின்றிப் பொதுவாகவே) புகுத்தப்படுவதற்கு 2 மாறுபட்ட காரணங்கள் இருக்கலாம் ! ஒன்று - வாசகர்களிடையே சற்றே கிளர்ச்சியைக் கொணரும் வியாபர நோக்காய் இருத்தல் சாத்தியமே ! காரணம் # 2 : கதையின் போக்கிற்கு ; கதாப்பாத்திரங்களிடையே நிலவும் உறவின் தன்மைகளைச் சித்தரிப்பதற்கு ஒரு கருவியாய் அதனை படைப்பாளிகள் அமைத்திருக்கலாம் !
லார்கோ கதைகளில் பட்டாம் பூச்சிகளாய் வந்து போகும் அழகான யுவதிகள் - கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டுவதைத் தாண்டி லார்கோவின் playboy கேரக்டரை பதிவு செய்திடும் யுக்திகளாகவும் படைப்பாளிகள் பார்த்திடுகிறார்கள் ! ஷெல்டன் கதைகளில், உலகையே தரிசித்து முடித்து விட்டதொரு 50 வயதான ஆண்மகனின் பயணங்களையும், வழியில் அவன் சந்திக்கும் சிற்சில வசந்தங்களையும் வெளிச்சம் போடுவதே கதாசிரியரின் நோக்கம்.அது போன்ற சூழலில் நான் 'கத்திரி போடுகிறேன் பேர்வழி ' என்று இறங்குவது ஒரு ஆக்கத்தின் ஆத்மாவை ஆபரேஷன் செய்வதைப் போன்றது ! அங்கே நான் செய்திடக் கூடியது, ஆடைகளில் ; சம்பாஷணைகளில் கண்ணியம் தவறிடாமல் பார்த்துக் கொள்ளக் கூடியது மாத்திரமே ! இங்கு இன்னுமொரு குட்டி snippet :
நாம் முன்பு சாணித் தாளில், ஒரு கலரில்,சொற்ப விலைகளில் கதைகளை வெளியிட்டு வந்த வரையிலும் 'எக்கேடோ கெட்டொழி ' என்று படைப்பாளிகள் நம் பாணிக்குள் அதிகமாய் மூக்கை நுழைப்பதில்லை ! ஆனால் இன்றோ - வண்ணத்திலும், தரத்திலும் அவர்களது அளவுகோல்களுக்கு நெருங்கி நாம் நிற்கும் வேளையில், கதைகளை நாம் கையாளும் பாணிகளிலும் நமக்கு restricted சுதந்திரம் மாத்திரமே உண்டு ! So - நானே நினைத்தால் கூட கண்ட இடத்தில் கத்திரி போடுவதென்பது எனக்கும் சாத்தியமல்ல ! Cinebooks வெளியிடும் லார்கோ புக்குகளில் கூட முதல் பக்கத்தில் சின்னதாய் ஒரு வாசகம் இருக்கும் : "படைப்பாளிகளின் சம்மதத்தோடு, நமது மிதரசனை வாசகர்களின் பொருட்டு சித்திரங்களில் சின்ன அளவில் மாற்றம் செய்துள்ளோம் " என்று ! Cinebooks போன்றதொரு ஜாம்பவானுக்கே இந்தக் கட்டுப்பாடுகள் apply ஆகுமெனும் போது, சிவகாசியில் குந்தி இருக்கும் இந்த ஸ்பைடர் மண்டையனுக்கு மட்டும் விதிவிலக்கு கிட்டுமா என்ன ?
'காலங்கள் மாறி வருகின்றன ; உலகையே நம் வீட்டுக் கூடத்திற்குக் கொணரும் ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது ; ஆகையால் இவ்விஷயங்களில் நமது சகிப்புத்தன்மைகளும் மாறிடல் அவசியம் என்றெல்லாம் நான் போதிக்கப் போவதில்லை ! ரசனை சார்ந்த விஷயங்களில் ஒவ்வொருவரின் நிலைப்பாடும் அவரது பிரத்யேகம் என்பதையும் ; தம் குழந்தைக்கு எதை ஊட்டுவது ; எதை ஒதுக்குவது என்பதும் ஒவ்வொருவரது தனிப்பட்ட தேர்வுகளே என்பதிலும் எனக்கு முழு உடன்பாடே ! ஆனால் நான் சொல்ல விழைவது ஒன்றே : நம் இதழ்களில் இந்த சங்கதிகள் தலைகாட்டுகின்றன எனில் - அது நான் முதலில் குறிப்பிட்ட காரணம் # 2 -ன் பொருட்டு மாத்திரமே ! கிளர்ச்சியூட்டித் தான் வியாபாரம் செய்ய வேண்டுமென்றொரு அவசியம் தாங்கிய நாள் புலருமெனின், புளிய மரத்தடியில் வடை போட்டு விற்பேனே தவிர, விரசத்தை வியாபாரம் ஆக்க உடன்பட மாட்டேன் !
ALL NEW ஸ்பெஷலில் வரவிருக்கும் "பிரளயத்தின் பிள்ளைகள்" ஓரிரு இடங்களில் நிர்வாணக் காட்சிகளைக் கொண்டதொரு கதையே ! ஆனால் உலக யுத்தப் பேரழிவின் போது அரங்கேறிய அவலங்களை சித்தரிக்குமொரு ஆக்கத்தில் அந்தக் காட்சிகள் இடம் பெறுவது விரசத்தையோ; கிளர்ச்சியையோ உண்டு செய்யவல்ல ! அதனை உணராது, 'கத்திரி எடுத்தவன் கில்லாடி எடிட்டர்' என நான் செயல்படும் பட்சத்தில், ஆர்டினுக்குத் துணைக்குத் தான் நான் லாயக்காக இருக்க முடியும் !
நம் கதைகளை முதலில் கையாள்வது ஒரு இல்லத்தரசியே ! அதற்கு டைப்செட் செய்வதும் ஒரு மணமாகா பெண்மணியே ; இதழ்களை அனுப்பிடும் பணியில் ஈடுபட்டிருப்பதும் 2 பெண்களே ! So முகம் சுளிக்கச் செய்யும் பாங்கு எங்கேனும் எட்டிப் பார்த்திடவே கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு சதா காலமும் நம்மில் குடி கொண்டிருக்கும் ! Rest assured !
========================================================================
* முன்கூட்டியே பணம் செலுத்திப் புத்தகம் வாங்கிடும் முகவர்கள்/விற்பனையாளர்களின் எண்ணிக்கையிலும் ஏற்றம் கண்டிருக்கிறோமா?
Yes :-)
========================================================================
ஒரு வழியாய் எனக்குத் தெரிந்த பதில்களைப் பதிவு செய்து விட்ட திருப்தியில் கிளம்புகிறேன் !எங்கேனும் 'கருத்து கந்தசாமி' ரேஞ்சில் ஏதேனும் சொல்லப்பட்டிருந்தால், அது முழுக்க முழுக்க எனது சொந்த அபிப்ராயங்களே என்ற disclaimer இங்கு நிச்சயம் அவசியம் ! உலகுக்கு சேதி சொல்ல நானோ ; இந்தத் தளமோ ஒரு நாளும் முயற்சித்ததில்லை ; முயற்சிக்கப் போவதுமில்லை - என்பதை சமீபமாய் ஒன்றிரண்டாய் இங்கு ஒலித்துள்ள சலிப்புக் குரல் நண்பர்களுக்கு நினைவூட்டும் கடமை எனக்குள்ளது ! 'இந்திரன்-சந்திரன்- அசகாய மொழிபெயர்ப்பாளன் ' என்ற பட்டயங்களை யாரும் இங்கிருந்து சுமந்து செல்லப் போவதில்லை என்பதை நன்றாகவே அறிவேன் ; 'காமிக்ஸ் நேசன் ; சகஜமானதொரு சக மனிதன் ' என்ற அடையாளம் கிட்டினாலே பாக்கியசாலி ஆக மாட்டேனா ? ! Enjoy the sunday folks !