நண்பர்களே,
வணக்கம். சிவகாசியில் இரு பெரிய அம்மன் கோவில்கள் இருப்பதால், ஒவ்வொரு கோடையிலும், ஒன்றுக்கு இரண்டாகத் திருவிழாக்கள் நடந்தேறுவது வழக்கம். பள்ளி ஆண்டு விடுமுறைகளை ஒட்டிய ஏப்ரலில் ஒன்றும், மே மாதம் இன்னொன்றும் என எங்களது சிறு வயதுக் குதூகலங்கள் இந்தத் திருவிழாக்களின் வருகையைச் சுற்றியே இருந்திடுவது வழக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அந்த அப்பட்டமான சந்தோஷத்தை ; கலப்படமில்லாக் குதூகலத்தை ; கடந்த சனி & ஞாயிற்றுக் கிழமைகள் உணர்ந்திடும் ஒரு ஆச்சர்ய அனுபவம் நமது பெங்களுரு COMIC CON திருவிழாவின் புண்ணியத்தில் கிட்டியது !
பெரிதானதொரு எதிர்பார்ப்பையோ ..ஏராளமான பிரதிகளையோ சுமந்து செல்லாமல், ரம்யமான பெங்களுருவில் சனி காலையில் நானும், எனது புதல்வன் விக்ரமும், நமது காமிக்ஸின் "பிரபல முகமும், குரலுமான" எங்களது விற்பனை மேலாளர் ராதாகிருஷ்ணன் சகிதம் இறங்கிய போதே நமது வாசக நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் துவங்கிட்டன! ராதாகிருஷ்ணனின் கைபேசி எண் நிறைய நண்பர்களுக்குப் பரிச்சயம் என்பதால், ஆர்வமான வினவல்கள் ; விசாரிப்புகள் என்று காலை 9 மணிக்கு முன்னதாகவே களை கட்டத் துவங்கியது ! நிகழ்ச்சி நடந்திடும் கோரமங்களா ஸ்டேடியத்திற்கு வழி கண்டு பிடித்து ஒன்பது மணிக்கு அங்கே ஆஜராகிய போது, பெரிய , பெரிய டெம்போக்களிலும் வேன்களிலும், இதர பங்கேற்பாளர்களின் சரக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திட முடிந்தது ! காலை பத்து மணிக்கு மேல் திருவிழா துவங்கிடவிருக்க , தத்தம் ஸ்டால்களைத் தயார்படுத்திட ஒன்பது மணிக்கு அனுமதி தந்திட்டார்கள். மெள்ள அரங்கினுள் நுழைந்தால், அங்கே பரிச்சயப்பட்டதொரு முகம் நம்மை வரவேற்றிட நின்றது ! அதிகாலையே பெங்களுரு வந்துவிட்டதாகவும், இங்கே அரங்கு வாயிலில் எட்டு மணிக்கெல்லாம் வந்து 'தேவுடு ' காத்திருப்பதாகவும் நமது வாசக நண்பர் சொல்லிய போது அவர்தம் முகத்தில் அயற்சியினைப் பார்த்திட முடியவில்லை ; மாறாக கொப்பளிக்கும் உற்சாகமே தெரிந்தது ! நமக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டால் எண் B17 சிறிதென்ற போதிலும் நல்லதொரு இடத்தில அமைந்திருந்தது ! 'விறு விறு' வென்று எங்கள் பணியாளர்கள் நாங்கள் கொண்டு வந்திருந்த போஸ்டர்கள் ; பெரிய banner ஆகியவற்றை ஸ்டாலில் ஒட்டிடத் தயார் ஆக, வரிந்து கட்டிக் கொண்டு நம் நண்பரும் செயலில் இறங்கினார் !
பத்தே நிமிடங்களில் நமது ஸ்டால் 'பளிச்' என்று காட்சியளித்தது ! வரவிருக்கும் "தங்கக் கல்லறை " அட்டைப்படத்தின் blowup ; மையமாய் சூ.சூ.Spl -ன் (முழுவதும் பூர்த்தி செய்யப் படாத ) முன்பக்க டிசைன் ; நமது நாயகர்களின் ஒரு குட்டி அறிமுகம் கொண்ட நான்கு பக்க போஸ்டர் - ஆங்கிலத்தில் ; இரத்தப் படல முழுத் தொகுப்பின் அட்டைப்பட blow up ; WILD WEST ஸ்பெஷலின் blowup என்று நமது ஸ்டாலின் சுவர்கள் சுவாரஸ்யமாகவே தெரிந்ததாக எனக்குப் பட்டது !
பக்கத்தில் கடை போடத் துவங்கிக் கொண்டிருந்த இதர பங்கேற்பாளர்களை பராக்குப் பார்க்க அரங்கத்தை ஒரு ரவுண்ட் அடித்தேன் ! காமிக்ஸ் பதிப்பகங்கள் ; விற்பனையாளர்கள் மட்டுமென்று இல்லாது, t -ஷர்ட் விற்பனை மையங்கள் ; காமிக்ஸ் தொடர்புடைய பொம்மைகள், விளையாட்டுப் பொருட் விற்பனை நிலையங்கள் ; அரிய காமிக்ஸ் சித்திரங்களின் சேகரிப்பைக் கொண்டதொரு கடை ; காமிக்ஸ் ஓவியர்கள் பயன்படுத்திடும் பல்வேறு சித்திர சாதனங்களின் விற்பனைக் கூடம் ; சர்வதேச அளவில் காமிக்ஸ் ; அனிமேஷன் போன்ற கலைகளில் பயிற்சி தந்திடும் பள்ளிகளின் ஸ்டால்கள் என்று காமிக்ஸ் தொடர்புடைய சங்கதிகளாய் அரங்கமே நிறைந்திருந்தது நிறைவாக இருந்தது ! "நானொரு காமிக்ஸ் காதலன் " என்று சொன்னால், "ஆஹா..நேற்று வரை பயல் நல்லா தானே இருந்தான் ?" என்ற பாணியிலான பார்வைகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இங்கே நிச்சயமிருக்காது என்ற உணர்வு ; தொடர்ந்து இங்கே ஆஜராகப் போகும் ஒவ்வொருவரும் காமிக்ஸ் எனும் சுவையை நேசிக்கும், சுவாசிக்கும் அன்பர்களாகத் தான் இருப்பார்கள் என்ற realisation ஒரு இனம் சொல்ல இயலா இதத்தை தந்தது !
மணி பத்து அடிக்கும் போது வேக நடையாய் நம் வாசகர்கள் ஒருவர் பின் ஒருவராய் அங்கே பிரசன்னமாக (!) எனக்குள் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது ! நான் ஏற்கனவே எழுதி இருந்தது போல, அசாத்தியமான விற்பனையை எதிர்பார்த்தெல்லாம் நாங்கள் COMIC CON -க்குப் புறப்பட்டிருக்கவில்லை ! மாறாக, நமது இரண்டாவது வருகையின் தொடர்ச்சியாக ; இந்த வலைப்பதிவில் நாம் எண்ணப் பரிமாற்றங்கள் செய்திடத் துவங்கியதன் தொடர்ச்சியாக - வாசக நண்பர்களை சந்திக்கவும், அவர்தம் கருத்துக்களை அறிந்திடவும் இதுவொரு platform ஆக அமைந்திட வேண்டுமே என்ற அவா மட்டுமே என்னுள் மேலோங்கி நின்றது ! அரங்கம் முழுவதிலும் தமிழ் முகங்கள் நம்மது மாத்திரமே என்பதால், நம்மை சந்தித்திட வருகை தரும் நண்பர்களை சுலபமாய் அடையாளம் காண முடிந்த போது எனது எதிர்பார்ப்பு பொய்க்காது என்று புரிந்தது !
மிகச் சின்ன அவகாசத்திற்குள் நம் ஸ்டால் செம பிஸியாகி விட்டது ! பெங்களுருவில் வசிக்கும் ; பணி புரியும் நண்பர்கள் ; தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரத்யேகமாக இதற்கெனவே ஒரு ட்ரிப் அடித்திருந்த அன்பர்கள் என்று ஒரு காமிக்ஸ் காதல் குழுமம் அங்கே சற்றைக்கெல்லாம் உருவாகி விட்டிருந்தது ! ஒவ்வொருவரின் முகத்தில் தாண்டவமாடிய சந்தோஷமும், கண்களில் தெரிந்த ஒளியும், எவ்வித சந்தேகமும் வைத்திடவில்லை - நம் இதழ்களின் மீது அவர்களுக்குள்ள நேசத்தினைப் பற்றி !!
ஒவ்வொருவரும் சரவெடியாய்க் கேள்விகளை
த் தொடுத்தனர் !!
- சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எப்போது ? நிச்சயம் வருகிறது தானே ?
- மறுபதிப்புகளில் மாயாவி உண்டா ?
- வண்ணத்தில் மறுபதிப்பு போடுவீர்களா ?
- "மின்னும் மரணம்" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே ?
- மினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் !
- டெக்ஸ் வில்லர் ஏன் ஆளைக் காணோம் ?
- மாண்ட்ரேக் கதைகள் ஏன் வருவதில்லை இப்போதெல்லாம் ?
- நமது சர்குலேஷன் இப்போது எவ்வளவு ?
- ஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் ?
- இரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா ?
- கிராபிக் நாவல் என்றால் என்ன ? இது அடிக்கடி வருமா ?
- ஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை ?
- "கார்சனின் கடந்த காலம் " reprintபோடாமல் விட்டுடாதீங்க !!
- கேப்டன் டைகர் கதைகளின் குறைபடிப் பாகங்களை எப்போது நிறைவு செய்வதாக திட்டம் ?
- இரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் ???
- புதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன ?
- இந்தப் புது பாணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது ?
- மறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் ?
- வேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது ?
- சூ.ஹீ .சூ .Spl வண்ணத்தில் போட முடியாதா ?
- திகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் ?
- கபிஷ் ; இன்ஸ்பெக்டர் கருடா போன்ற கதைகளை ஏன் போடுவதில்லை இப்போதெல்லாம் ?
- வாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன ?
- டைகர் digest ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன ?
- NEVER BEFORE ஸ்பெஷல் ஜனவரியில் நிச்சயமா ?
லக்கி லூக்கின் தோட்டாக்களின் வேகத்திற்கு வந்து விழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியது ஒரு நிஜமான சுவாரஸ்ய அனுபவம் ! நிறைய நண்பர்கள் நமது காமிக்ஸ்களைப் படிக்கத் துவங்கிய காலகட்டங்களைப் பற்றிச் சொல்லியவாறே சுகமாய் பின்னோக்கிப் பயணித்ததைப் பார்த்திட முடிந்தது ! அப்போது திடுமென இன்னொரு சென்னை நண்பர் அங்கே ஆஜராகினார் - கௌபாய் தொப்பியும், பெல்ட்டும் சகிதமாய்...முன்பக்கத்தில் டெக்ஸ் வில்லரின் படமும் , பின்னே கேப்டன் டைகரின் ப்ரிண்டும் போடப்பட்டதொரு T -ஷர்ட் அணிந்து !
பேசிக்கொண்டே நமது புது இதழை (WILD WEST Spl ) நம் நண்பர்களுக்கு நான் வழங்கிட, செல்போன் காமராக்களும் ; டிஜிட்டல் காமராக்களும் ஆங்காங்கே பளிச்சிட்டன ! எனது கல்யாணத்தின் போது கூட யாரும் என்னை இத்தனை போட்டோக்கள் எடுத்ததாய் எனக்கு நினைவில்லை ! எப்போதுமே spotlight -ஐத் தவிர்ப்பதில் ஆர்வமாய் இருந்திடும் எனக்கோ , நண்பர்களின் உத்வேகத்தைப் பார்த்திட்ட போது 'நோ' சொல்லிட இயலவில்லை ! இந்த இரு நாள் திருவிழாவில் நான் மெய்யாக சந்தோஷப்பட்டது நண்பர்கள் பலரும் தம் குடும்பங்களோடு ஆஜராகி இருந்ததன் பொருட்டே !! கணவர்கள் மெய்மறந்து நம் ஸ்டாலில் புத்தக வேட்டை நடத்திக்கொண்டே என்னிடமும் பேசிக் கொண்டிருக்க, துணைவிகள் லேசான புன்முறுவலோடு அங்கே கூடி நின்ற அத்தனை காமிக்ஸ் ரசிகர்களையும் பார்த்திட்டது சுவாரஸ்யமான அனுபவம் ! "காமிக்ஸ் புக்-னா பைத்தியமா ஆகிடுவார் சார் ! புக் வந்த நாளைக்கு கேட்கவே வேண்டாம் " என்று ஒரு திருமதி என்னிடம் சொல்லிட..."இங்கே நிற்கும் நாங்கள் எல்லோருமே அதே ரகம் தான் !" என்று நான் பதில் சொன்ன போது அவருக்கு சிரிப்பு ! சில துணைவியர் தாங்களும் இப்போது காமிக்ஸ் படிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ; ஒரு சிலர் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வாசகிகள் என்று சொன்ன சந்தோஷத் தருணங்களும் இருந்தன ! அப்போது வேகமாய் ஒரு இளைஞர் வந்திட்டார் - ! "இங்கிலிஷில் இதை வெளியிட்டால் என்ன ? " என்ற கேள்வியுடன் ! தாய்மொழியில் படிக்கும், ரசிக்கும் அனுபவத்திற்கு அது ஈடாகாது ; அதே போல் ஆங்கிலத்தில் வரும் ஒரு காமிக்ஸை ஆங்கிலத்திலேயே மறுபதிப்பு செய்வதில் என்ன சவால் இருந்திட முடியுமென்று நான் கேட்டேன் ! தமிழில் படிப்பது நிச்சயம் ஒரு கௌரவக் குறைச்சல் அல்லவே என்பதை நான் சொல்லிய போதும் தமிழ தெரிந்த அந்த நண்பர், அவ்வளவாக convince ஆகவில்லை என்பது எனக்குப் புரிந்தது !
இடையே நமது பெங்களுரு நண்பர், தமது வலைப்பூவிற்காக என்னைக் குட்டியாகவொரு impromptu வீடியோ பேட்டி எடுத்திட்டார் ! கேள்விகள் என்று முன் ஏற்பாடாக எதனையும் கொண்டிடாமல் மனதிற்குத் தோன்றியதை அவர் கேட்டிட, பெரிதாய் எந்த ஒரு சிந்தனையுமின்றி நானும் பேசினேன் ! வாஞ்சையாய் சுற்றி நின்ற நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் அந்த நொடியின் சந்தோஷத்தில் பங்கேற்ற பரபரப்புத் தெரிந்தது ! நானும் எனது புதல்வனும் இதர ஸ்டால்களில் நடந்தேறிடும் சங்கதிகளை ரசித்திட ஒரு ரவுண்ட் கிளம்பினோம் ! அருகாமையில் இருந்த RANDOM HOUSE இந்தியா விற்பனை மையத்திலும் சரி, Westland ஸ்டாலிலும் சரி, ஆங்கில கிராபிக் நாவல்கள் செம சுறுசுறுப்பாய் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன ! விலைகள் 200 ; 300 என்று இருந்த போதிலும் காமிக்ஸ் ஆர்வம் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அங்கே மாங்கு மாங்கென்று பில் போட்டுக்கொண்டிருந்த காஷியர்களே சாட்சி ! இன்னொரு பக்கமோ மேடையில் பிரபல வட இந்திய காமிக்ஸ் ஓவியர்களோடு கலந்துரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது ! ஆங்காங்கே பிரபல காமிக்ஸ் நாயகர்கள் ; காமெடியன்கள் ; வில்லன்கள் போல் மேக்கப் போட்டுக்கொண்டு COMIC CON ஏற்பாடு செய்திருந்த ஆசாமிகள் உலவிட, வந்திருந்த பார்வையாளர்களில் பலர் அசத்தும் காமிக்ஸ் கெட்டப் களிலும் கலக்கிக் கொண்டிருந்தனர் ! இந்தியாவிற்கு இது போன்ற pioneering முயற்சி எத்தனை விலைமதிப்பற்றது என்பதை அப்போது உணர முடிந்தது ! பெரியதொரு கண்காட்சியல்ல என்பதால் இங்கும் அங்கும் ரெண்டு சுற்று சுற்றி விட்டு நமது ஸ்டாலுக்கே திரும்பினோம். பைன் ஆர்ட்ஸ் ஸ்கூலில் இருந்து வந்திருந்த ஓவிய மாணவர்கள் சிலர் ஆர்வமாய் பேசிச் சென்ற பின்னர் , வட இந்திய காமிக்ஸ் இணையதளத்தின் சார்பாய் ஒரு இளம் நிருபர் சின்னதாய்ப் பேட்டி எடுக்கும் பாணியில் கேள்விகள் கேட்டார் ! நமது காமிக்ஸின் வயது நாற்பது என்று சொன்ன போது அவர் கண்ணில் தெரிந்த ஆச்சர்யம் ஒரு நொடிப் பொழுதுப் பெருமிதத்தை விதைத்தது எனக்குள் !
பேசியதோடு டாட்டா காட்டிடாது அனேக வாசகர்கள் தங்களிடமில்லாத இதழ்களை வாங்கிக் கொண்டே நமது பில்லிங் பிரிவையும் பிசி ஆக்கினார்கள் ! WILD WEST ஸ்பெஷல் சுடச் சுட விற்பனை ! நண்பர்களுக்கு அனுப்பிட 10 பிரதிகள் வாங்கி, அந்த 5 கிலோ சுமையை சந்தோஷமாய்த் தூக்கிச் சென்ற நண்பரும் அதில் சேர்த்தி ! எங்கள் மேல் காட்டப்பட்டு வரும் இந்த நேசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும், துளியும் நிபந்தனை இல்லா சங்கதிகளே என்ற போதிலும் எங்களுக்குள்ள பொறுப்பின் ஆழத்தை உணர்த்திடும் நினைவூட்டிகளாகவே நான் அவற்றைப் பார்த்திட்டேன் ! நமது இந்தப் புது அவதாரின் ஆதாரத்தில் எத்தனை கனவுகள் ; எத்தனை எதிர்பார்ப்புகள் உங்களுள் உருவாகியுள்ளன என்பது நாங்கள் அறிந்தது தான் என்ற போதிலும் அதனை நேரடியாகக் கேட்டு..உணர்ந்திடும் போது அதன் தாக்கமே வேறாகிறது ! மதியத்திற்கு மேலே வாசகர்களின் வருகை சற்றே மட்டுப்பட்டது ! குடும்பத்தோடு வந்திருந்ததொரு நண்பர் என்னிடம் பேசிடத் தயங்கியவாறே தள்ளி நின்றே நம் ஸ்டாலைப் படம் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்க, அவரை அழைத்துப் பேசிய போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசப் பிரவாகம் மெய்யாக என்னை உலுக்கியது. "நீங்கள் 17 வயசிலேயே வெளிநாடெல்லாம் போய் காமிக்ஸ் கதை வாங்கி வந்தது பற்றியெல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பார் ' என்று அவரது துணைவியார் கூறிய போது விக்கித்துப் போனேன. முகமறியா தூரத்தில் ; வெறும் பெயராகவும் ; ஹாட்லைன் எனும் ஒரு பக்கத் தொடர்பு மாத்திரமே பாலமாக இருந்திட்ட போதிலும், காமிக்ஸ் எனும் நேசம் இத்தனை சக்தி வாய்ந்ததா என்பதை உணர்ந்திட இயன்ற போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு ! அவர்தம் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டேன் ..எனினும் அவர்களிடம் அதன் ஒரு பிரதியை அனுப்பிடச் சொல்ல இயலாது போயிற்று ! இந்த வலைப்பதிவைப் படித்திடும் நண்பராக அவர் இருந்திடும் பட்சத்தில், please - ஒரு மின்னஞ்சலில் அப்புகைபடத்தினை எனக்கு அனுப்பிடுங்களேன் ?!
நான்கு மணிக்கு மேலே தாக்குப் புடிக்க முடியவில்லை ; வாசகர்களின் வருகையும் குறைவாக இருப்பது போல் தோன்றியதால், எங்கள் பணியாளர்களை மட்டும் ஸ்டாலில் விட்டு விட்டு நானும் என் பையனும் புறப்பட்டோம். நாங்கள் கொண்டு வந்திருந்த இதழ்களில் 75 % அதற்குள்ளாகவே விற்றுப் போய் இருந்ததால், ராதாக்ருஷ்ணன் என் கையில் ரூபாய் 18,000 ௦௦௦௦௦௦ திணித்த போது உன் புருவங்கள் உயர்ந்தன !! சென்னை புத்தக விழாவிற்குப் பின் இது போன்ற விற்பனை வேகத்தை சந்தித்திராத எங்களுக்கு - பெங்களுருவில் இந்த விறுவிறுப்பு ஜிவ்வென்று உற்சாகம் கூடிடச் செய்தது ! உடனடியாக சிவகாசிக்கு போன் செய்து மேற்கொண்டு பிரதிகளை மாலை பஸ் மூலம் அனுப்பிடச் சொல்லி வைத்தேன் ! அன்றிரவு தூங்கும் போது கேப்டன் டைகரும், ஒற்றைக்கை ஆசாமிகளும், நிறைந்த கல்லாப்பெட்டிகளுமாய் எனது சொப்பனங்கள் ஒரே சித்திரமயமாய் இருந்தன !
மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?
தொடர்ந்து முதல் நாளைப் போலவே சரமாரியான கேள்விகள், குழுமி நின்ற நண்பர்களிடமிருந்து ! WILD WEST இதழில் டெக்ஸ் வில்லரின் வருகை பற்றி ; டைகரின் பாக்கி இரு பாகங்கள் பற்றி விளம்பரங்கள் வந்திருந்ததால் ரொம்ப திருப்தியாக இருந்தனர் கௌபாய் கதை ரசிகர்கள் ! WILD WEST இதழின் இரு கதைகளுக்குமே அற்புதமான பாராட்டுக்கள் கிட்டிய போது,என் மனதில் அடுத்து வரவிருக்கும் சூ.ஹீ.சூ.SPL க்கு எவ்வித reactions வந்திடவிருக்கிறதோ என்று சிந்தனைகள் ஓடிய வண்ணம் இருந்தன !!
இரண்டாவது நாளும் விறுவிறுப்பான விற்பனை ! நாங்கள் கொண்டு வந்திருந்த Full Set புக்ஸ் முழுவதும் காலி ஆகி ஒன்றிரண்டு நண்பர்கள் ஏமாற்றத்தோடு திரும்பவும் நேர்ந்தது ! எல்லாவற்றையும் விட, "உசுப்பி விடும்" விதமாய் மேஜை மேல் நின்ற :இரத்தப் படலம்" மாதிரிப்ப்ரதி எக்கச்சக்க நண்பர்களின் கண்ணை உறுதிக் கொண்டே இருந்தது ! அது விற்பனைக்கு அல்ல...மாதிரி மாத்திரமே என்று எங்கள் பணியாளர்கள் அன்பாய்ச் சொல்லிட, தீராத ஏமாற்றம் சில நண்பர்களுக்கு ! ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் ஸ்டாக் இருந்த இதழுக்கு இப்போது தேடல் வேட்டை துவங்குகிறது ! சமயம் கிடைத்த போது மற்ற இந்திய காமிக்ஸ் பதிப்பகங்களின் ஸ்டாலுக்கு சின்னதாய் ஒரு விசிட் அடித்தேன். இங்கிலிஷில் வெளியிடப்படும் இந்த கிராபிக் நாவல்கள் இன்றைய இந்திய ஓவியர்களின் அசாத்தியப் பரிணாம வளர்ச்சியினை showcase செய்யும் விதத்தில் இருந்தது பிரமாதமாகத் தெரிந்தது. ஒரு சில பதிப்பகங்களின் கதைக் களங்கள் விநோதமாய் இருந்த போதிலும் ரோவோல்ட் ; Campfire போன்ற பதிப்பகங்களின் படைப்புகள் நிஜமாகவே அற்புதம் ! இவற்றில் தரமானவற்றை நாம் தமிழில் வெளியிட முயற்சித்தால் என்னவென்று நமது பெங்களுரு நண்பர் வினவிட, அந்தக் கோரிக்கையை என் தலைக்குள் ஒரு ஓரமாய் பத்திரப்படுத்தியுள்ளேன் ! அவர்களது இதழ்களில் பளிச் ரகத்தில் தெரிந்த சிலவற்றை வாங்கி வந்துள்ளேன் ; படித்துப் பார்த்து விட்டு மேற்கொண்டு சிந்திக்கலாமென்ற எண்ணம் !
மீண்டும் நிறைய நண்பர்கள் ; எக்கச்சக்கமான சிரித்த முகங்கள் ; ஏராளமான கை குலுக்கல்கள் ; அங்கே இங்கேவென காமெராக்களின் கிளிக்குகள் என்று பொழுது ஓடியதே தெரியவில்லை ! நான் அன்று பிற்பகல் ரயிலில் சென்னை புறப்பட வேண்டி இருந்ததால் மதியத்திற்கு மேல் ஸ்டாலில் இருந்து புறப்பட்டுவிட்டேன் ! அது வரை நம்மோடு ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்த அன்பான நண்பர்களுக்கு விடை கொடுப்பது நிஜமாகவே கஷ்டமான காரியமாய் இருந்தது ! மீண்டும் சென்னையில் சந்திக்கலாமென்ற போது அனைவரது முகங்களிலும் உற்சாகம் ! அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 40,000 -ஐ தொட்டு இருந்தது ! பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம் ஒரு understatement !
ரயிலில் பயணிக்கும் போது என் சிந்தைகள் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்தன ! 2 நாட்களில் நான் பார்த்திட்ட முகங்கள் ; அந்தக் கண்களில் பளீரிட்ட உவகை ;நான் அனுபவித்திட்ட அந்த நேசத்தின் விலைமதிப்பற்ற பரிமாணம் என்று ஒவ்வொன்றாய் எனக்குள்ளே மெள்ள மெள்ள பதிவாகிக் கொண்டே இருந்தது ! " More things are wrought by prayer than this world dreams of" என்று பிரபல ஆங்கிலக் கவிஞர் சொல்லி இருந்தது நமக்கு நிரம்பவே பொருந்தும் என்பதையும் உணர்ந்திட முடிந்தது ! நமக்காக ; நமது வெற்றிக்காகப் பிரார்த்திக்கும் உள்ளங்கள் இத்தனை இருந்திடும் போது ; நமது ஒவ்வொரு வெற்றியையும் தத்தம் வீட்டுக் குழந்தையின் சாதனை போலப் பாவித்திடும் இத்தனை நேச நெஞ்சங்கள் இருக்கும் போது புயலோ ; இடியோ ; மழையோ நம்மைத் தளரச் செய்ய சாத்தியமே இல்லை ! Thanks folks ! Thanks for every little thing!
குட்டியாய் சில பின் குறிப்புகள் !!
இரு நாட்களும் நம்மை சந்திக்க வந்த நண்பர்கள் அனைவரையும் இங்கே குறிப்பிடுவது இயலாத காரியமென்பதால் நான் எவர் பெயர்களையும் இங்கே எழுதிடவில்லை ! எவ்வித இருட்டடிப்பும் இதன் நோக்கமல்ல ; நண்பர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விடின் அது சங்கடத்தைத் தரும் என்ற ஒரே காரணமே இதன் பின்னணியில் !
COMIC CON 2012 அதிரடி வெற்றியினைத் தொடர்ந்து இதனை அடுத்த ஆண்டும் பெங்களுருவிலேயே 3 நாள் விழாவாகக் கொண்டாடிட அதன் அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் !! சென்னைக்கும் COMIC CON வருகை புரியும் நாள் தொலைவில் இராதென்று நம்புவோமாக ! Take care people !