நண்பர்களே,
வணக்கம்! 'இந்த நொடியில் இதெல்லாம் தேவை தானா?' என்று தோன்றலாம்! ஆனால், நமது blog வேகமெடுக்கத் துவங்கிய நாள் முதலாய் ஒவ்வொரு பதிவுக்கும் மானசீகமாய் "me the first'' என்று போட்டு வந்தது அப்பா தான் என்பது எனக்குத் தெரியும்! எத்தனையோ சனியிரவுகளில் நான் எங்கே இருக்கிறேன் என்பது கூடத் தெரிந்திராத நிலைகளில் "பதிவு எப்போ?'' என்று மெஸேஜ் அனுப்பியதும் உண்டு! So yet another சனிக்கிழமை ஆகிவிட்டதெனும் போது, நான் எழுதும் நாலோ, நாற்பதோ வரிகளை எங்கிருந்தாலும் வாசிக்க அப்பா தவற மாட்டார்களென்ற நம்பிக்கையில் பேனாவைக் கையிலெடுத்திருக்கிறேன்! And இங்கே சங்கமிக்கும் உங்கள் ஒவ்வொருவரது சந்தோஷங்களுமே அவரது ஆயுளுக்கு ஒவ்வொரு தினத்தைக் கூடுதலாக்கி, இத்தனை காலம் வாழச் செய்துள்ளது என்பதில் ஐயமே கிடையாதென்பதால் அந்த நன்றிக்கடனுக்குமே இந்தப் பதிவு!!
எங்கே ஆரம்பிப்பதென்று சத்தியமாகத் தெரியவில்லை - ஏனெனில் ஒரு 83 வருட வாழ்க்கையினைப் பதிவு செய்வதென்பது சித்திரகுப்தருக்கு மட்டுமே சாத்தியமாகிடும்! But இந்த நொடியில் சிந்தனைகளுக்குத் திரை போட கண்ணீரை அனுமதிக்காது போனால் மேலோங்குவது "அன்பு'' எனும் ஒற்றை வார்த்தை மட்டுமே! ரொம்ப ரொம்ப அரிதானது- ஒரு மனிதன் தனது ஆயுட்காலத்தில் சந்தித்து interact செய்திடும் சகலரிடமுமே அன்பு பாராட்டுவதென்பது! அப்பா அந்த அரிதான ரகம்!
*வீட்டில் அத்தனை பேருக்கும் அவர் அன்பே உருவான அப்பா!
*பணியிடத்தில் எவரையும் கஷ்டப்படுத்தியதாகச் சரித்திரமே கிடையாது!
*உறவினர்களுக்கு குறிப்பறிந்து உதவிடும் பண்பு கொண்டவர்! படிக்கும் காலத்தில் சிரமத்திலிருந்த ஒரு நெருங்கிய சுற்றத்தின் மகனுக்குக் கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கான கட்டணங்களை அப்பா தான் செலுத்தி வந்திருக்கிறார் என்பது அந்தப் பையன் அயல்நாட்டு வேலைக்குப் புறப்படும் நாள் வரை எனக்கே தெரியாது!
*நண்பர்கள் அனைவருக்குமே ரொம்ப ரொம்ப வாஞ்சையான "சௌந்தர்".
*வாசகர்கள் சகலரையும் உயிராய் நேசித்தவர்!
*அட.. சட்டையைப் பிடித்து கடன் தொகைகளைத் திரும்பக் கேட்ட ஈட்டிக்காரர்களிடம் கூட ஒருபோதும் முகம் கோணியவருமல்ல!
ஆக, ஒரு ஆயுட்காலத்தை அன்பெனும் அரும் வரத்தோடு கடந்துள்ள அப்பாவுக்குக் கடந்த இரண்டு தினங்களாய் கொட்டிக் குவிந்து வரும் அன்பு அஞ்சலிகள் நெகிழச் செய்கின்றன! நமது தற்போதைய சிறு வட்டத்தையும் தாண்டி, காமிக்ஸ் வாசிப்புகளுக்கு எப்போதோ விடை தந்துவிட்டிருந்தோரும் கூட அப்பாவை நேசமாய், மதிப்போடு நினைவுகூர்ந்திருந்தது நிச்சயமாய் அவரது ஆன்மாவை புளகாங்கிதம் கொள்ளச் செய்திருக்கும்! உள்ளன்போடு, மெய்யான பிரிவுத் துயரோடு சிந்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்குமே மாய முத்துக்களாகி அப்பாவின் இனியான பயணப் பாதைகளுக்கு ஒளியூட்டும் திறனிருக்கும் என்பது உறுதி! So நேரில் வந்து அப்பாவை இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாது போனது குறித்த வருத்தங்களின்றி, உங்களது இன்றைய பிரார்த்தனைகளில் அப்பாவை ஒற்றை நிமிடத்துக்கு இருத்தினாலே - அது ஓராயிரம் நினைவஞ்சலிகளுக்குச் சமானம் என்பேன்! அது மாத்திரமன்றி அப்பாவை நீங்கள் பார்த்தது - புன்னகை பூத்த அந்த முகத்துடனாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே?!
அப்பாவுடனான எனது நினைவுகளுக்குப் பல பரிமாணங்கள் உண்டு! என்றேனும் ஒரு நாளில் அவரது நினைவுகளை அசை போட நாம் சந்திக்கச் சாத்தியமாகிடும் பொழுதுகளில் அதைப் பற்றி விசாலமாய் பேச விழைந்திடுவேன்! ஆனால், எங்களுக்கு மத்தியிலான பந்தத்தில் மேலோங்கி நின்றதாய் நான் கருதுவது- நான் வளர்ந்திட அவர் தந்த இடத்தினைத் தான்! ரொம்ப ரொம்பச் சீக்கிரமே பொறுப்புகள் என் கைகளுக்கு வர நேரிட்ட போதும் அது குறித்துத் துளியும் விசனங்களின்றி - குடும்பத்துக்கோ, தொழிலுக்கோ நான் எடுக்கும் தீர்மானங்கள் சரியாகவே இருக்குமென்ற நம்பிக்கை கொண்டிருந்தார்! "தலை இருக்கு- வால் ஆடலாமா?'' என்று எனக்கு ப்ரேக் போட என்றென்றும் அப்பா எண்ணியதே கிடையாது! அந்த நம்பிக்கைக்கும், அன்புக்கும் நான் ஆயுட்காலக் கடனாளி! நிறைய சண்டைகள் போட்டிருக்கிறேன் - தொழில் நிமித்தம்! ஆனால், ஒவ்வொரு முறையுமே விட்டுத் தந்திருந்தது அப்பா தான்! அந்த ஈகோ இல்லாத அப்பா தான் என் பிள்ளையை வழிநடத்த எனக்கு உதவிய inspiration என்பது இன்று புரிகிறது!
நமது இரண்டாவது இன்னிங்ஸும், நண்பர்களின் உற்சாகங்களும் அப்பாவுக்குமே ஒரு இரண்டாவது இன்னிங்ஸை வாழ்க்கையில் தந்திருந்தது என்பது கண்கூடு! முத்து காமிக்ஸ் துவங்கிய காலகட்டத்தில் அப்பாவுக்கு அதிலிருந்த ஆர்வமும், ஈடுபாடும்- கூட்டுத் தொழின் அல்லல்களுக்கு மத்தியில் மட்டுப்பட்டுப் போயிருந்தன தான்! And அந்நாட்களில் வாசக நேசங்களையோ, உத்வேகங்களையோ மறுபக்கம் கடத்த மார்க்கங்கள் ஏதும் கிடையாதென்ற போது, பெரியதொரு பாராட்டோ, அங்கீகாரமோ அவர்களை எட்டியிருக்க வாய்ப்புமில்லை! ஆனால், இந்தப் புதுயுகத்தில் எல்லாமே சாத்தியம் என்றான போது, அப்பாவின் கண்கள் பண்டிகை நாட்களின் பட்சணங்களைப் பார்க்கும் பாலகனைப் போல பூரிப்பில் அகல விரிந்ததை நிரம்பவே உணர முடிந்தது!
கடந்த 12 ஆண்டுகளின் நமது ஆறுநூற்றிச் சொச்சம் இதழ்களில் அப்பா படிக்காதவையென்றால் அவை இந்த மார்ச் & ஏப்ரலின் புக்ஸ் மாத்திரமே! ரொம்பவே தளர்ந்திருந்த கண்பார்வையுடனுமே அத்தனை இதழ்களையும் எப்பாடுபட்டேனும் அந்தந்த மாதங்களே படித்து விடுவாரென்பதை நம்மாட்கள் அனைவருமே அறிவர்!
*என்னிக்கு டெஸ்பாட்ச்? என்று front ஆபீஸில் கேட்டு வைப்பார்!
*எத்தனை புக் இந்த மாசம்? இது மைதீனுக்கான கேள்வி!
*புத்தகவிழாக்களில் அன்றன்றைய விற்பனை எவ்வளவு? இது ஜோதியிடம்!
*"ஈரோடு புத்தகவிழா வருது கருணையானந்தம்! உங்களை எப்போ வந்து கூப்பிட்டுக்கலாம்?!'' இது கருணையானந்தம் அங்கிளிடம்!
பொதுவாகவே நான் கல்லுளிமங்கனாக இருப்பேன் என்பதால் டின்டினின் வருகை கூட அப்பாவுக்கு இந்த வலைப்பூ வழியாகவே தான் தெரியும்! And "திபெத்தில் டின்டின்'' முதல் பிரதியை வாங்கிய தினத்தினில் அப்பா ரா முழுக்கத் தூங்கவில்லை; இதழை விடிய விடிய ரசித்தான பின்னே எனக்கு அனுப்பிய வாட்சப் மெஸேஜ் எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்றாகவே தொடர்ந்திடும்!
இந்த பிப்ரவரியில் சுகவீனத்தில் விழும் முன்பு வரையிலும் ஒரு டயரியில் எழுதிக் கொண்டே இருப்பார்! ஹாஸ்பிடலில் அவர் இருந்த நாட்களின் போது, அதில் அப்படி என்ன தான் எழுதியிருப்பாரென்று புரட்டிப் பார்த்தால் பல நூறு ஃபோன் நம்பர்கள்! தமிழகத்திலுள்ள புக் ஷாப்ஸ்; சூப்பர் மார்கெட்ஸ்; அங்காடிகள் என எங்கிருந்தோ அவ்வளவையும் சேகரித்து அத்தனை பேரிடமும் நமது காமிக்ஸ் பற்றிப் பேசிட முனைந்திருக்கிறார் என்பது அப்புறமாய்த் தான் புரிந்தது! பற்றாக்குறைக்கு அடிலெய்ட் தமிழ் சங்கம் .. அட்லாண்டா தமிழ் சங்கம்.... நைரோபி தமிழ் சங்கம் என்று ஏதேதோ கடல் கடந்த நம்பர்களும்!!
இறுதிக்கட்டங்களின் போது இந்தக் காமிக்ஸ் உலகே அவரது சிந்தைகளில் முக்கால்வாசியை ஆக்கிரமித்திருந்ததென்று சொன்னால் மிகையில்லை! ஒவ்வொரு ஆண்டின் ஈரோட்டு வாசக சந்திப்பும் அவருக்குள் ஓராயிரம் சந்தோஷ மின்னல்களைப் பிரவாகமெடுக்கச் செய்த அதிசயங்கள்! இன்று நம்மோடு இல்லாவிடினும் சர்வநிச்சயமாய் நம்மையும், நமது "பொம்ம புக்கு''களையும், நண்பர்களையும், இந்த வலைப்பக்கத்தையும் வாஞ்சையோடு அவதானித்திடத் தவறவே மாட்டாரென்பது மட்டும் உறுதி! So நெருடல்களின்றி வாசிப்புகளைத் தொடர முயற்சியுங்கள் நண்பர்களே!
மகிழ்வித்து மகிழ்விக்கும் துறையிலிருக்கிறோம் எனும் போது, இந்தச் சிரமத் தருணத்திலும் உங்களது புன்னகைகளே இருளினூடே தென்படும் எங்களுக்கான ஒளிக்கீற்றுகளாகிடும்! So சங்கடங்களிலிருந்து வெளிப்பட எனக்குக் கொஞ்சம் நேரம் எடுக்குமென்றாலும் வாசிப்புகளுக்கு நேரம் தர நீங்கள் முயற்சிப்பதில் தவறில்லை என்பேன்! நேற்றே புறப்பட்டு விட்ட ஏப்ரல் இதழ்கள் இன்று உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியிருக்கும் என்பது உறுதி! இந்தத் தருணத்தில் அவற்றை வழக்கம் போல ரசிக்கும் பட்சத்தில், யார் - எப்படி எடுத்துக் கொள்வார்களோ? என்ற குழப்பங்கள் தேவையே இல்லை! Please follow your heart : அது வாசிக்கச் சொன்னால் அதைச் செய்யுங்கள் ; கொஞ்ச நாட்களுக்காவது மனதின் பாரங்கள் மட்டுப்பட அவகாசம் அவசியமென்று எண்ணிடும் பட்சத்தில் அதற்கு செவி சாயுங்கள்!
இந்த மாதம் முதற்கொண்டு செலவாகிடுவதில் ஒற்றைப் பிரதியும், பதிவுப் பக்கத்தின் மீது ஒற்றைப் பார்வை குறைவாகிப் போவதும் இயற்கையின் சித்தம் என்றாகிப் போய்விட்டதால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள சிறுகச் சிறுக முயற்சிப்போம்! கலீல் ஜிப்ராஹ்ன் சொன்னதை இங்கே நினைவு கூர்ந்திடத் தோன்றுகிறது : நதியும், கடலும் ஒன்றன் பின் ஒன்றானவை என்பது போலவே ஜனனமும்... மரணமும்!
இதுவும் கடந்து போகும்- ஆனால், எதுவும் மறந்து போகாது அப்பா! துளி எதிர்பார்ப்புமின்றி, மெய்யான உள்ளன்புடன் இந்தச் சிறுவட்டம் உங்கள் பாதையில் விரித்திருக்கும் சிகப்புக் கம்பளத்தில் நோவுகளின்றி நீங்கள் நடைபோட புனித மனிடோ நிச்சயம் அருள் புரிவார்!
Bye all... See you around and Enjoy the books please!!