நண்பர்களே,
வணக்கம். வியக்க வைக்கும்...வியர்க்கவும் வைக்கும்...!! பறக்க வைக்கும்...பரக்க பரக்க விழிக்கவும் வைக்கும்...!! மிரள வைக்கும் ..மிருதுவாய் அணைத்தும் வைக்கும்......!! மயங்க வைக்கும்....மயக்கம் வரவும் வைக்கும்...!! சிரிக்க வைக்கும்...சிரிப்பாய் சிரித்துப் போகவும் வைக்கும்..! சில்லிட வைக்கும்....மேனி சிலிர்க்கவும் வைக்கும் ! ரசிக்க வைக்கும்.....ரகளை பண்ணவும் வைக்கும் ! பரபரப்பாய் இருக்கும்....பாந்தமாகவும் இருக்கும் ! என்னடா கவிதை ஆறாய் ஓடுதே என்று பார்க்கிறீர்களா ? சிங்காரச் சென்னையே என்னை இந்த சனியிரவில் திடீர் புலவனாக்கிப் பார்க்கிறது !! And வாசிப்பை நேசிக்கும் ஒரு அசாத்திய ஜனத்தின் ஒட்டு மொத்த முகத்தையும் 2 நாட்களாய் சென்னைப் புத்தக விழாவினில் பார்க்கும் போது நம்மையும் அறியாது நெஞ்சம் குதூகலிக்கிறது ! GST சிக்கல்கள் ; பணப் புழக்கத்தின் தட்டுப்பாடு ; இன்னமும் சந்தாவில் எட்டிப் பிடிக்க வேண்டிய தூரம் ; கிட்டங்கியின்பாரம் ; ஊருக்குத் திரும்பிய நொடியே காத்திருக்கும் அந்த மாமூலான பணிகள் - என எதுவுமே புத்தக விழாவில் காலூன்றி நிற்கும் தருணங்களில் ஒரு பொருட்டாகவே தோன்ற மறுக்கும் மாயம் என்னவோ தெரிய மாட்டேன்கிறது !! ஒட்டு மொத்த அரங்குக்கே அழகாய் விற்பனை அரங்கேறும் அழகையும், வயது வேறுபாடுகளின்றி ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு ஸ்டாலிலும் அலைமோதுவதையும் பார்க்கும் போது வாசிப்புக்கு தொய்விருக்கலாம் ; ஆனால் அஸ்தமனம் நிச்சயம் இராது என்பதை மாடி மேலேறி நின்று உரக்கக் கூவணும் போல் தோன்றுகிறது !!
திட்டமிடல் ஏதுமின்றி, திடீரென அவசியமானதொரு பயணத்தின் பலனாய் புத்தக விழாவில் வெள்ளி மாலையையும், சனியின் முழுமையையும் செலவிட முடிந்தது ! வழக்கமான நண்பர்கள் கும்மியடி அரட்டை என்றில்லாது இம்முறை ரொம்பவே வித்தியாச அனுபவம் - அனைவருமே விற்பனைக்கு தத்தம் உதவிகளை செய்து காட்டும் முனைப்பில் இருந்ததால் !! So பல்லி போல ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டு, என்னை அடையாளம் தெரிந்து புன்னகைக்கும் நண்பர்களைத் தவிர்த்து வேறு யாரையும் தொந்தரவு செய்யாது வேடிக்கை பார்க்க முடிந்த போது நிறையவே விஷயங்களை observe செய்ய சாத்தியமானது !!
விறு விறுவென்று ஸ்டாலுக்குள் நுழைந்த நொடியே "டெக்ஸ் வில்லர் ??" என்று கேட்ட சகோதரிக்கு என் வயதில் பாதி தானிருக்கும் ! வண்ணத்தில் இருந்த "டிராகன் நகரம்" புக்கைப் புரட்டிய நொடியில் அவரது முகத்தில் துளிர்விட்ட புன்னகைக்கு சத்தியமாய் வள்ளுவர் கோட்டத்தைப் பட்டா போட்டிருப்பேன் - மாநகராட்சிக்காரர்கள் புட்டாணியைக் கழற்றிவிடுவார்களே என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால் !! 15 நிமிடத் தேடலுக்குப் பின்னே அவரது கைகளில் இருந்த 7 புக்குகளுமே நமது டெக்ஸாஸ் ரேஞ்சரது தான் !! போதாக்குறைக்கு பின்னாடியே வந்த ஒரு 12 வயதுக்கு மிகா சிறுவன் - தன தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டே !! அவரோ லக்கி லூக்கையும், மதியில்லா முந்திரியையும் புரட்டிக் கொண்டே -"இதை வாங்கிக்கோ தம்பி" என்று கெஞ்சிப் பார்க்க - "நோ டாடி..டெக்ஸ் வில்லர் தான் சூப்பரா இருக்கும் !" என்று ஒரே போடாகப் போட "கணவாய் யுத்தம்" போணியானது ! சுருங்கச் சொல்வதாயின், இந்தப் புத்தக விழாவின் (நம்) கதையே இரவுக் கழுகாரைச் சுற்றியான கதை தான் ! விற்பனை வேகங்களுக்கு நம்மவர் அந்நியரல்ல தான் ; இதுவரையிலான புத்தக விழாக்களின் புள்ளி விபரங்களை மேலோட்டமாய்ப் பார்த்தாலே டெக்ஸ் & கோ.வின் வீச்சு எத்தகையது என்பது புரியும் ! ஆனால் இம்முறையோ விற்பனையில் ஒரு பாதி டெக்ஸாஸ் பிரஜைகளின் உபயம் ; பாக்கிப் பாதிக்குள் மிச்சம் மீதியிருக்கும் அத்தனை நாயக / நாயகியரும் சேர்ந்து கும்மியடித்துள்ளனர் ! அந்த மீதிக் கும்மியில் ஒரு இருபது சதவிகிதமாவது மும்மூர்த்திகள் & இஸ்பய்டர் சார் இடம்பிடித்துள்ளனர் எனும் பொழுது இவர்கள் முன்னே துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்பது புரிகிறது ! So இன்று முதல் CID லாரென்சர் ; டேவிடர் ; ஜானி நீரர் ; மாயாவியார் ; இஸுபைடர் சார் என்று மரியாதையோடு இவர்களை விளிக்கப் பழகிக் கொள்வதாகவுள்ளேன் !
பெண்களும் எத்தனை ஆர்வமான காமிக்ஸ் வாசகர்கள் என்பதை இம்முறை அழுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது ! Not that it was a secret - ஆனால் இம்முறை பெண்கள் துளியும் தயக்கமின்றி நமது இதழ்களை புரட்டவும், பரிசீலித்து வாங்கவும் முன்வந்த அழகை பார்க்கும் போது நிறைவாக இருந்தது ! சந்தா கூப்பனைக் கையில் வைத்துக் கொண்டு தமக்குள் ஆலோசித்துக் கொண்டிருந்த நடுவயதுத் தம்பதியருக்கு உதவுவோமே என்றபடிக்கு - A for Apple ; B for பிளாக் & ஒயிட் கதைகள் ; C for கார்ட்டூன்ஸ் என்று விளக்கியபடிக்கே - "வீட்டில் யார் படிக்க என்று சொல்லுங்க சார் ; எந்த சந்தா combination சுகப்படுமென்று சொல்கிறேன் !" என்ற நொடியில் அந்த இல்லத்தரசி என்னைப் பார்த்து முறைத்தார் !! "படிக்கப் போறது நான்தான் !!" என்று அவர் சொன்ன நொடியில் கை நிறைய ; பை நிறைய பல்ப் வாங்கினது போலொரு பீலிங்கு எனக்கு ! வழக்கமாய் கணவர்கள் நெளிந்து கொண்டே சந்தா கட்ட மனைவியரிடம் பெர்மிஷன் வாங்குவதை பார்த்துப் பழகியவனுக்கு - இம்முறை roles உல்டாவாகியிருப்பதை பார்த்த போது திகைப்பாய் இருந்தது ! நமது சின்ன வட்டத்தில் மகளிரணிக்கு ஒரு முக்கிய பங்குள்ளது guys ; தொடரும் காலங்களில் இந்த அணியின் ரசனைகளை அறிந்திடவும், அவற்றிற்கு நியாயம் செய்திடவும் நமக்கொரு கடமை காத்துள்ளது !! So அவர்களது கோணங்களிலும் இனி சிந்திக்க நாம் பழகிட வேண்டும் போலும் !! "30 நாட்களில் பெண்களின் வாசிப்பு ரசனைகளைத் தெரிந்து கொள்வது எப்படி ?" என்று எங்கேனும் புக் பார்த்தால் - one copy for me ப்ளீஸ் !
சனிக்கிழமை புலர்ந்த போதே நமது ஸ்டாலில் கணேஷ் kv சாரும் ; மாயாவிகாரு + இத்தாலிகாருவும் ஆஜராகியிருந்தனர் - விற்பனைகளுக்குள் லயித்தபடிக்கே ! இன்று கணேஷ் சாருக்கு DAY 4 - நமது ஸ்டாலில் & ஒவ்வொரு நாளும் மனுஷன் விற்பனைக்கு எடுக்கும் மெனக்கெடல்களை பார்த்தாலொழிய முழுமையாய்ப் புரிந்திட இயலாது ! இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நினைத்து வருபவர்களை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கச் செய்யும் அசாத்தியக் கலையைக் கரைத்துக் குடித்துள்ளதால் - ஸ்டாலுக்கு வந்த வாசகர்களும் பலர் புஜங்கள் கனக்கும் சுமைகளோடே வெளியேறியதை பார்க்க முடிந்தது ! நமது சேலத்து சூப்பர்மேன் & ஈரோட்டின் எமகாதகரோ தத்தம் பங்குக்கு வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலும், அவர்களது தேடல்களுக்குப் பிரதிகளுமாய் வழங்கி அசத்திக் கொண்டிருந்தனர் ! ஒற்றை ஸ்டாலின் குறுகலான இடத்தினிலும் லாவகமாய்ப் புகுந்து எல்லோருக்கும் அவசியமான ஒத்தாசைகளை இந்த trio இன்றைக்கு செய்ததன் பலனை இரவின் விற்பனையினில் பார்த்திட முடிந்தது ! இந்தப் புத்தக விழாவினில் இதுவரையிலான top விற்பனை தினம் இன்றைய பொழுதே என்பது நிச்சயம் ஒரு தற்செயலான நிகழ்வல்ல !! காமிக்ஸ் அறிந்த நண்பர்கள் விற்பனைக்கு உதவிட இருக்கும் பட்சத்தில் என்ன மாயங்கள் நிகழ்கின்றன என்பதை நாள் முழுக்கப் பார்த்த நிறைவோடு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் - நாளைய பொழுதையும் இந்த அணி சூறாவளியாக்கிடுமென்ற உறுதியோடு !!
Of course - இடைப்பட்ட வேளைகளில் - "இது எப்போ ? அது வருமா ?..இது எப்படி விற்றது ?" என்ற கேள்விகளை தொடுக்கத் தான் செய்தனர் ! நானும் எப்போதும் போல் ஒரு மொக்கைச் சிரிப்பை உதிர்த்து விட்டு மழுப்பும் வேலையை கனகச்சிதமாய் செய்து வைத்தேன் ! இடையிடையே நண்பர்கள் நிறைய பேர் தலைகாட்ட, அவர்களோடும் லேசான அரட்டை ; போட்டோக்கள் என்று பொழுது ஓடியது ! ஸ்டாலுக்கு முன்னே நாம் இடைஞ்சலாய் நின்றிடக் கூடாது ; மற்ற கடைகளின் முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிடக்கூடாது என்ற முன்ஜாக்கிரதை நண்பர்கள் அனைவருக்குமே இருந்தபடியால், கிடைத்த ஓரம் சாரங்களில் நின்றபடியே பொழுதை ஒட்டிட முடிந்தது ! 2016 & 2017-ல் வந்த புக்குகள் ஒட்டு மொத்தமாய் வேண்டும் என்று குடும்பத்தோடு வருகை தந்திருந்த நண்பர் கோர, பத்தே நிமிடங்களில் குவித்து விட்டார்கள் நமது sales மும்மூர்த்திகள் !! இவர்களின்றி, நமது பணியாளர்கள் மாத்திரமே ஸ்டாலில் இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் பெப்பே பெப்பே தான் பதிலாகியிருக்கும் & அவர்களைக் கடிந்து கொள்வதிலும் அர்த்தம் இருந்திராது ! "முத்து காமிக்ஸ் & லயன் காமிக்ஸ் தான் எனது ஓவிய வாழ்க்கைக்கே அஸ்திவாரம்" என்று காதில் சொல்லிச் சென்ற பிரபல தினசரியின் கார்ட்டூனிஸ்ட் ; "க்ரீன் மேனர் ஏன் இரண்டுக்கு மேலே போடலை ?? Alan Moore கதைகள் வருமா - வராதா ? கிராபிக் நாவல்களில் அடுத்து என்ன ?" என்று மிஷின் கன் போல தாக்கிச் சென்ற இருபதே வயதான அடுத்த தலைமுறையின் பிரதிநிதி ; "ஆர்ச்சி வருமா - வராதா ?" என்ற blog நண்பர் ; "இங்கிலீஷ் புக்ஸ் ஏன் ஸ்டாலில் இல்லை ?" என்று மெல்லிய குரலில் கேட்ட ஆர்வலர் ; IT துறையில் கலக்கும் மகனுடன் வந்திருந்து அவர் காமிக்ஸ்களைத் தேர்வு செய்யும் ஆர்வத்தை ரசித்த தாய் ; "ஏம்மா..உனக்கு இன்னும் காமிக்ஸ் படிக்கிற வயசா -என்ன ?" என்று தாயாரைக் கேள்வி கேட்ட இன்றைய யுவதி ; "இப்போ திருப்தியா ?" என்று கணவனிடம் பொறுமையாய்க் காத்திருந்தபடிக்கே கேட்கும் மனைவி - என்று நான் இன்று சந்தித்தது வாழ்க்கையின் வானவில்லின் பல பரிமாணங்களை !!
விற்பனைப் புள்ளிவிபரங்கள் பற்றி தொடரும் நாட்களில் பேசலாம் guys ; ஆனால் இப்போதைக்கு இப்படி வைத்துக் கொள்ளுங்களேன் ரேங்க் பட்டியலை :
1 டெக்ஸ் வில்லர் & கோ.
2 மும்மூர்த்தீஸ் சார்கள்
3 லக்கி லூக்
4 சிக் பில்
5 தோர்கல்
And "பிம்பிலிக்கா பிலாக்கி" awards பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் guys !! அதனில் இடம்பிடிக்கவும் நிறைய ஆட்கள் ரெடி !!
நண்பர்களிடம் விடைபெற்றுக் கிளம்பிய போது, ஒரு நூறு அழகான நினைவுகளோடு கிளம்பும் நிறைவு என்னுள் ! இன்னமும் 365 நாட்கள் உள்ளன - சென்னையின் வாசிப்பின் பெருமுகத்தை மறுபடியும் தரிசிக்க என்ற எண்ணம் ஒரு ஏக்கப் பெருமூச்சைத் தரவும் செய்தது ! நடையைக் கட்டும் வேளையில் அன்றைய நாளின் நினைவுகள் மனதில் நிழலாடிக் கொண்டேயிருக்க, ஒற்றை விஷயம் சகலத்துக்கும் மேலோங்கி நிற்பது போல் பட்டது ! தெரிந்தவர்களோ ; முதன்முறையாக இன்றைக்குத் தான் பார்ப்பவர்களோ - அந்த வேறுபாடுகள் துளியுமின்றி என்னிடம் பேச முனைந்த ஒவ்வொரு வாசகருமே அன்போடு - "பையன் கல்யாணம்லாம் நல்ல நடந்துச்சா சார் ?" என்று வினவியது உள்ளுக்குள் உருக்கிய நிகழ்வுகள் ! எங்கோ ஒரு தூரத்து சிறுநகரில் இந்த பொம்மைப் புத்தகப் பணியில் சுற்றி வரும் எங்களை அவரவர் குடும்பத்தில் ஒரு சிறு அங்கமாக்கிப் பார்க்கும் அந்த அன்புகளுக்கு நான் எவ்விதம் நன்றி சொல்வதென்று சத்தியமாய்த் தெரியவில்லை, !! இதற்காகவேணும் ஆற்றலும், ஆயுளும் கோருகிறேன் ஆண்டவனிடம் !!
மீண்டும் சந்திப்போம் all !! Have a beautiful & blessed Sunday !!
AND A LAST DAY VISITOR !!
P.S : Following is a Tweet from Ms.Kasthuri's Page :
My FAVORITE - முத்து காமிக்ஸ் . இரும்புக்கை மாயாவியையும் லக்கி லூக்கையும் மீண்டும் கிடைக்கபெற்றதில் ரொம்ம்ம்ப மகிழ்ச்சி !
லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ்
http://www.lioncomics.in
Classic English comics as well- Lucky luke ! Iznogoud ! Modesty Blaise!
#MuthuComics





























































