Sunday, March 17, 2019

எட்டும் தொலைவில் ஏப்ரல் !!

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் ஒரோபோரோ மோதிரமெல்லாம் தேவைப்படுவதில்லை காலப்பயணம் போக  ; நாட்கள் தாமாகவே பிசாசு வேகத்தில் ஓட்டமெடுக்கின்றன !! At least என்னளவிற்காவது ! காதுக்கு மப்ளர் மாட்டிய குளிர் காலைகள் போனயிடம்  தெரியலை ; மாறாகக் காதிலே புகை வரும் அனல் நாட்கள் ஆரம்பித்து விட்டன ! So சகலமும் வேக வேகமாய் ஓட்டமெடுத்து வர, நாமும் அந்த வேகத்துக்கு ஈடுதந்தாக வேண்டுமல்லவா ? இதோ மார்ச்சின் இதழ்களுக்கு இனி மனதில் இடம் என்றபடிக்கு ஏப்ரலை நோக்கிப் பார்வைகளை ஓட்டலாமா ? ஏப்ரலின் முதல் வாரம் எங்களது நகரின் முதல் திருவிழா வேளை என்பதால் எப்போதுமே ஒருவிதப் பரபரப்பு தொற்றிக் கொள்வதுண்டு !! பற்றாக்குறைக்கு "கோடை மலர்" ; சம்மர் ஸ்பெஷல் " "வெயில் ஸ்பெஷல் " ; "காத்தாடி ஸ்பெஷல்" என்றெல்லாம் எதையேனும் கிளப்பிவிட்டு உங்களது அந்நாட்களின் பள்ளி விடுமுறைகளை ஜாலியாக்கிடும் பொருட்டு கூத்தடிப்பதும் வாடிக்கை என்பதால் ஏப்ரல் எப்போதுமே நமக்கொரு ஆதர்ஷ மாதமாக இருந்துவந்துள்ளது ! And இம்முறையும் அதனில் மாற்றமிராதென்றே நினைக்கிறேன் - simply becos இந்த ஏப்ரலில் இரு அழகான தருணங்கள் இணைந்திடவுள்ளன !! முதலாவது நமது லயனின் இதழ் # 350 !!

349-க்கும் ; 351-க்கும் மத்தியிலான நம்பர் தான் ; ஏதேனும் ஒருவிதத்தில் மாதா மாதம் ஏதேனுமொரு மெகா இதழைக் கண்ணில் பார்த்து வரும் பொழுதுகளே இவை ! இருந்தாலும் அந்த "350" என்ற நம்பரோடு மெலிதாயொரு வசீகரம் மிளிர்வதாய் எனக்கொரு நினைப்பு !! நியாயப்படிப் பார்த்தால் - "அகவை 35" என்றான சிங்கத்துக்கு இந்நேரம்  வெளியீடு எண் 420 ஓடிக்கொண்டிருக்க வேண்டும் தான் ! கிட்டத்தட்ட 70 இதழ்கள் இன்னமும் பின்தங்கி நிற்கிறோமெனும் போது இங்கே பீற்றிக் கொள்ள முகாந்திரங்கள் அதிகமிருக்கக்கூடாது தான் ! ஆனால் ஆமையாய்த் தவழ்ந்து திரிந்த நமக்கு இந்த நம்பரே ஆண்டவனும், நீங்களும் இணைந்து சாத்தியமாக்கியுள்ள வரங்கள் எனும் போது அதனை சிலாகிக்காது போவானேன் ? Enter - புது நாயகர் ஜானதன் கார்ட்லேண்ட் - ஒரு டபுள் ஆல்பத்தோடு - இந்த ஸ்பெஷல் பொழுதுக்கு வர்ணமூட்டிட !!

இந்த மீசைக்காரர் உருவானது 1974-ல் ! குதிரையில் ஏறி லொங்கு லொங்கென்று பாலைவனமும், பள்ளத்தாக்குமாய்ச் சுற்றித் திரியும்  பரிச்சயமான கௌபாய் அல்ல இவர் ! மாறாக - காட்டினில் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடும் trapper ! வெள்ளைக்காரர்கள் எப்போதுமே நல்லவர்கள் ; "வோ..வோ.." என்றபடிக்கே வலம் வந்த கையோடு காக்கை, குருவி போல சுடப்பட்டு வீழ்ந்திடும் செவ்விந்தியரெல்லாம் மோசமானவர்கள் என்ற ஒருவித காமிக்ஸ் template-க்கு ஜானதனை ஒரு விதிவிலக்காகவே உருவாக்கினார் கதாசிரியை லாரன்ஸ் ஹார்லே ! இயற்கையோடு ஒன்றிச் செல்லும் இந்தத் தொடரினில்  வன்மேற்கின் செவ்விந்திய மக்களை பரிவோடு பார்த்திடும் பாணியை ரசித்திடலாம் ! 56 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகிப் போன இந்தக் பெண் எழுத்தாளர் - ஆண்களே கோலோச்சி வரும் காமிக்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு வித்தியாசமான அடையாளத்தை ஜானதன் கார்ட்லேண்ட் தொடரின் மார்க்கமாய் விட்டுச் சென்றுள்ளார் ! மொத்தமே 10 ஆல்பங்கள் கொண்ட இந்த series, இன்றைக்கும் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினில் பேசப்படும் விஷயமாய் இருப்பது லாரன்ஸ் ஹார்லேயின் கற்பனைத் திறனுக்கொரு சான்று ! இதோ தமிழ் பேசவிருக்கும் ஜானதனின் முதல் ஆல்பத்தின் முதல் பார்வை - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் ! And இங்கொரு நினைவூட்டல் folks : இது compact size-ல் வரவுள்ள இதழ் ! So கூரியரைத் திறக்கும் நொடியில் no shocks or அர்ச்சனைஸ்  ப்ளீஸ் !
ஒவ்வொரு பக்கத்திலும் பேனல்களின் எண்ணிக்கை குறைச்சலே & சித்திரங்களும் bold ஆக இருப்பதால் இவற்றை compact சைசில் ரசிப்பதில் சிரமமிராது என்ற நம்பிக்கை உள்ளது எனக்கு ! பாருங்களேன் உட்பக்க preview ஒன்றினை !!
And here are the creators :
கதாசிரியை 
Artist Michel Blanc-Dumont

ஏப்ரலை ஜாலியாய் எதிர்நோக்க "லயன் # 350" ஒரு காரணமெனில் - அந்த இதழினில் உங்களது அடையாளமாய் ஏதேனும் ஒரு சிறு விஷயமாவது இருத்தல் அவசியமன்றோ ? So இதுவரைக்குமான இந்த 349 இதழ்களுள் உங்களது TOP 3 இதழ்களை பட்டியலிட நேரம் எடுத்துக் கொள்ள முடியுமா guys ? ஆரம்ப நாட்களது ஸ்பைடராக இருந்தாலும் சரி ; சமீபத்தைய சமாச்சாரங்களாக இருந்தாலும் சரி, உங்களது இன்றைய கண்ணோட்டத்தில் லயனின் TOP மூன்று இதழ்களாக எவற்றைப் பார்த்திடுவீர்களென்று மட்டும் குறிப்பிட்டு எழுத நேரம் உள்ளோர்க்கு எனது முன்கூட்டிய நன்றிகள் - நேரமும், பொறுமையும் இலாதோர் சிரமம் மேற்கொண்டிட வேணாமே என்ற வேண்டுகோளுடன் !

ஏப்ரலில் reason to celebrate # 2 : ஜம்போ காமிக்சின் சீசன் # 2-ன் துவக்கமே என்பேன் !! Action Special மிதம் ; ஜெரெமியா 50 - 50 என்பதைத் தாண்டி, பாக்கி 4 இதழ்களுமே hits என்ற பின்னே, சீசன் 2 மீது எனக்கே ஒருவித லயிப்பு எழத்துவங்கியது !! இயன்றால் 6/6 வாங்கிட வேண்டுமென்ற ஆசை ஆட்டிப்படைக்க - இயன்ற மட்டிற்கு ரகளையான கதைகளாய்த் தேர்வு செய்திட முயற்சித்துள்ளேன் ! இளம் டெக்ஸ் ; Lone Ranger & ஜேம்ஸ் பாண்ட் 007 சொல்லி வைத்து அடிக்கும் கில்லிகள் என்பதால் அவர்கள் மூவருமே முழுசாய் புள்ளிகளை ஈட்டி விடுவார்களென்ற நம்பிக்கை உள்ளது ! எஞ்சிருக்கும் 3 ஸ்லாட்களில் ரகத்துக்கொரு கதையாய் புகுத்த முயற்சித்ததின் பலனாய் "கால வேட்டையர்" இதோ இந்த ஏப்ரலைத் தெறிக்கச் செய்யத்  தயாராகி வருகிறார்கள் !! இந்த இதழைப் பொறுத்தவரை third time lucky என்பேன் !! ஏனெனில் இதை நாம் வெளியிட எண்ணியிருந்தது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாய் ! In fact விளம்பரமும் செய்திருந்தோம் என்று ஞாபகம் ! ஆனால் குஞ்சு பொரிக்கும் முன்னமே ரோஸ்டுக்கு மசால் தடவத் தயாராவது எத்தனை பெரிய மடமை என்பது அன்றைக்கே புரிய நேர்ந்தது - படைப்பாளிகள் கோரிய ராயல்டி தொகையினைப் புரட்ட இயலாது தட்டுத் தடுமாறிய போது ! கழுத்தின் மீது கத்தியாய், வேறு செலவினங்கள் அலையலையாய் போட்டுத் தாக்கிய அன்றைய சூழலில், "இதோ அடுத்த வாரம் ; இன்னும் பத்தே நாட்களில்.." என்று பணமே அனுப்பாது ஜவ்வு மிட்டாயாய் இழுக்க - அவர்களோ  நமது கோரிக்கையையே மறந்தே போய் விட்டார்கள் ! நானுமே மௌனமாய் இருந்துவிட்டேன் அன்றைக்கு ! 2014-ல் நமது மறுவருகை சூடு பிடித்து ஓடத்துவங்கிய தருணத்தில் இந்த ஆல்பம் மீண்டும் நினைவுக்கு வந்திட, மறுக்கா தொடர்பு  கொண்டேன் - உரிமைகளுக்கோசரம்  !! "அட..போடா டேய்...உன்னோட ஓப்பனிங் நல்லா தானிருக்கும் ; ஆனால் பினிஷிங் தேறாது !" என்று படைப்பாளிகள் நினைத்தார்களோ - என்னவோ பதிலே போடவில்லை ! எனக்கும் லஜ்ஜை பிடுங்கித் தின்ன, மீண்டும் நினைவூட்ட திராணியின்றி மௌனியாகிவிட்டேன் ! ஆனால் ஜெரெமியா & ஹெர்லாக் ஷோம்ஸ் கதைகளின் பொருட்டு அவர்கள் கதவுகளை மறுபடியும் தட்டும் அவசியம் எழுந்த போது - ராயல்டியினில் முன்னாட்களது மொக்கை போடும் படலம் இராது என்று சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணாத குறையாய் கூத்தாடிட - ஒரு மாதிரியாய் அவர்களும் ஓ.கே. சொன்னார்கள் ! ஜெரெமியா - மொத்தம் 6 கதைகள் ; ஹெர்லாக் ஷோம்ஸ் 5 கதைகள் என ஏக் தம்மில் ஆர்டர் போட்ட போது உள்ளுக்குள் நிறையவே உதறல் தான் ! மிகக் குறுகிய காலத்துக்குள் மொத்தமாய் தொகையினை அனுப்ப வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்த போது தான் அந்த வருடத்து ஈரோட்டுப் புத்தக விழா பிரமாதமாய்க் கைகொடுத்தது !! அந்த விற்பனைத் தொகைகளை அலுங்காது, குலுங்காது ராயல்டிக்கென சேதாரமின்றி அனுப்பிட முடிந்த போது ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு உள்ளுக்குள் ! 'சரி...இவன் முன்போல் சட்டி நிறைய அல்வா கிண்டவில்லை  என்பதை அவர்கள் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து - "காலவேட்டையர் புளீஸ் !" என்று துண்டை விரிக்கத் தயாரானேன், வெகு சமீபமாய் ! ஒற்றைக் கதையோடு நில்லாது, ஹெர்மனின் வேறு சில one-shots களையுமே  சேர்த்து வாங்கிடவும் ஏற்பாடு செய்துவிட - நீண்ட நெடுநாளாய் விளம்பரமாய் மாத்திரமே ரவுண்டடித்துக் கொண்டிருந்த இந்த ஆக்ஷன் த்ரில்லர்  இதோ ஜம்போவின் இரண்டாவது சீசனுக்கு சுவாகதம் சொல்லத் தயாராகி வருகிறது ! And இதோ - அதன் அட்டைப்படத்துக்கென shortlist செய்துவைத்துள்ள சில டிசைன்களின் previews ! Of course இன்னமும் நிறைய மாற்றங்களுக்கு இங்கே வாய்ப்புண்டு தான் - so கூரியர் கவரில் இருக்கப்போகும் இதழின் ராப்பர் மாறுபாட்டிடவும் கூடும் !
ஜம்போவின் சீசன் 2-ல் ஒரு சுவாரஸ்யச் செய்தியுமுள்ளது !! பழம் தின்று கோட்டை போட்டு நிற்கும் சிங்கத்தையும் ; முத்துவையும்  - ஒற்றை வயதே ஆகிடும் ஆனை தூக்கிச் சாப்பிட்டு விட்டது - சந்தாக்களின் எண்ணிக்கையினில் !! Yes folks - நடப்பாண்டினில் லயனுக்கும், முத்துவுக்கும் உள்ள சந்தாதாரர்களை விட, Season 2 ஜம்போ காமிக்ஸுக்கு enrol செய்துள்ள நண்பர்கள் அதிகம் ! எனக்கே இதன் பின்னுள்ள லாஜிக் புரியவில்லை தான் ; ஆனால் வாழ்க்கையில் நமக்குப் புரியாமலே போய்விடும் எக்கச்சக்க விஷயங்களின் பட்டியலோடு இதுவும் இணைந்துவிட்டுப் போகட்டுமென்றிருக்கிறேன் !! எது எப்படியோ - ஜம்போ சீசன் 2 is ready to rock & roll !! Join in the fun all !!

அப்புறம் "ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள்" பற்றிய இறுதி முடிவெடுக்கும் நேரத்தை நெருங்கி நிற்கிறோம் ! ஏப்ரலில் சகல விபரங்களும் உங்கள் வசமிருக்கும் for sure !!

அப்புறம் கொஞ்சமாய் updates - நமது ஆதர்ஷ நாயகர் பற்றி :

குல்லாக்காரர் மோரிஸ்கோ தலைகாட்டினால் ஏதேனும்  வில்லங்க வில்லன் தோன்றாது போவானா - என்ன ? இம்முறை ஒரு அமானுஷ்ய வில்லி !! டெக்சின் இதழ் # 701-ல் !!

இது அடுத்த வாரம் ஹார்டகவரில், வண்ணத்தில் வரவுள்ள 256 பக்க போக்கிரி  TEX அதிரடியின் preview !! Ufffffff !!! 

And போக்கிரி டெக்ஸ் தான் தற்போதைக்கு இத்தாலியைக் கலக்கி வரும் ஹீரோ என்பதை நிரூபிக்க - இதோவொரு 64 பக்க ஆல்பம் !!

பற்றாக்குறைக்கு ஏப்ரலில் காத்துள்ளதோ ஒரு MAXI TEX !!
படைப்புலகின் இந்த அசுரர்களை எண்ணி பிரமிக்காதிருக்க முடியவில்லை !! ஒவ்வொரு மாதமும் அவர்கள் உருவாக்கும் பக்கங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடுமெனும் போது, அவர்களது பின்னணி டீமின் பலத்தை கற்பனையில் கூட உருவாக்கப்படுத்திட இயலவில்லை !! Breathtaking !!!

மீண்டும் சந்திப்போம் guys ; பெருமூச்சோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் !! See you around !! Have a fun Sunday !!

Saturday, March 09, 2019

புத்தகங்கள் பதினொன்று...!

நண்பர்களே,

வணக்கம். நிறைய நேரங்களில் 'பில்டப்' கச்சேரிகளை நாம் யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை !! நூற்றுப் பதினேழாவது தபாவாய் "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று கூவும் அறிவிப்பாளரையும் ; "இந்த படத்திலே எனக்கு ரொம்ப வித்தியாசமான ரோல் !" என்றபடிக்கே மரத்தைச் சுற்றி நர்த்தனமாடும் நாயகர்களையும் நாம் கொட்டாவிகளோடு பார்ப்பது தானே மாமூல் ? அதே போலத் தான் "7 முதல் 77 வரையிலும்  - வீட்டிலுள்ள அனைவருக்கும் !!" என்ற நமது tagline-ம் கூட என்று நினைக்கிறேன் !! "அட - கேட்க நல்லாயிருக்கே ?" என்பதைத் தாண்டி அந்தத் திக்கில் அதிகமாய் சிந்தையைச் செலவிட்டிருக்க மாட்டோம் தான் !!  நிஜத்தைச் சொல்வதானால் இந்த வரியினை நாம் சுட்டது நமது படைப்பாளிகளிடமிருந்தே !! பெல்ஜியத்திலுள்ள லோம்பா குழுமத்தின் இதழ்களை முன்னர் அலங்கரித்த வரிகளால் கவரப்பட்டு, அதனை இரவல் வாங்கிக் கொண்டோம் !! இதோவொரு சாவகாச சனி மாலையில் அதனை அசை போட்டிடும் போது தான் அந்த வரிகளுக்கு நியாயம் செய்திட வேண்டுமெனில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் எத்தனை ? என்பது புரிகிறது !! ஆனால் இந்தாண்டின் முதல் 3 மாதங்கள் ஓரளவுக்கு நமக்கு நிறைவாய் நிறைவுற்றிருக்கும் நிலையில் -  "7 to 77" என்ற அந்தப் பிராமிசினை கொஞ்சமே கொஞ்சமாய் நிறைவேற்றியுள்ளோமோ - இந்தப் 12 வாரங்களில்  ? என்று சிந்திக்கத் தோன்றுகிறது !! So தொடரும் இந்தப் பதிவு - இந்தாண்டின் முதல் மூன்று மாதங்கள் பற்றிய மினி அலசல் மாத்திரமன்றி ; உங்களில் எத்தனை பேர் இந்த 11 இதழ்களையுமே வாசித்துள்ளீர்கள் என்று நான் தெரிந்து கொள்வதற்குமே !! அதனால் இதுவொரு முதுகு சொரிந்துவிடும் படலமாய்ப் பார்த்திடல் வேண்டாமே - ப்ளீஸ் ? Nothing more than a simple performance rating !! Moreover அடுத்த மூன்றே மாதங்களில் "2020" என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு - வீட்டிலும், ஆபீஸிலும் உள்ள அத்தனை மோட்டுவளையங்களையும் டிசைன் டிசைனாய்ப் பார்க்கத் துவங்கிவிடும் நேரம் புலர்ந்திருக்கும் என்பதால் - உங்களது சிற்சிறு inputs கூட எனது தீர்மானங்களுக்குப் பெரிதும் உதவிடும் guys !! So படித்ததில் பிடித்ததும், பிடிக்காததும் என்னவென்பதைச் சொல்லிடலாம் இங்கே !! 

Doubtless, ஜனவரியின் ஓட்டப்பந்தயத்தில் துவக்கக் கோட்டில் நின்றது மூவரென்றாலுமே, கோப்பைக்கென ஓடியது இருவரே என்பதில் சந்தேகம் லேது !! முதன்முறையாக 'தல' தஸ்ஸு-புஸ்சென்று மூச்சு வாங்கியபடிக்கே தூரத்து மூன்றாவதாய் ஓடி வர, "பராகுடா "& தோர்கல்" சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தது தான் ஜனவரியின் highlight !! சின்னதொரு வித்தியாசத்தில் கோட்டை முதலில் எட்டிப்பிடித்தது "சிகரங்களின் சாம்ராட்" என்பது எனது அபிப்பிராயம் ! அதிலும் அந்தக் காலப்பயணம் சார்ந்த கதை நம்மிடையே ஏற்படுத்திய தர்க்கங்கள் ; தாக்கங்கள் ரொம்ப ரொம்ப நாட்களுக்கு நினைவை விட்டு நீங்கிடா விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது அல்லவா guys ?! இங்கே சில கேள்விகள் கேட்க ஆசை எனக்கு :

தோர்கல் இன்றைக்கொரு டாப் நாயகராய் நம்மிடையே எழுந்து நிற்பது - அவரது இதழ்களின் விற்பனையிலும் பிரதிபலிக்கின்றது ! ஜானி 2.0 ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; இளம் டெக்ஸ் என்றெல்லாம் traditional நாயகர்களைக் கூட புது யுக அவதார்களில் இன்று ரசித்திடும் நாம் - இந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ ? டெக்ஸ் வில்லரையே "அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ !!" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் ?

Question # 2 : ஒரு டெக்சின் வெற்றி - ஒரு டைகரைக் கொணர்ந்தது ! ஒரு டைகரின் வெற்றி ஒரு பௌன்சரை ; ஒரு கமான்சேவை ; ஒரு டிரெண்ட்டை ; ஒரு ஜானதன் கார்ட்லெண்டை துளிர்க்கச் செய்தது - நம்மிடையே ! So ஒரு குறிப்பிட்ட நாயகரின் வெற்றி, அவர் சார்ந்த ஜானரில் இன்ன பிற கதைகளும், தொடர்களும் தொடர்ந்திடுவதற்கான ஆரம்பப் புள்ளியாகிடுகிறது ! அதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா ? தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை ? அல்லது "பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா !!" என்பீர்களா ?

Moving on - பராகுடா மீதும் கிட்டத்தட்ட identical கேள்விகள் எனக்கு !! ஒரு தமிழ் சினிமாவின் திரைக்கதைக்குச் சவால் விடும் திருப்பங்களும், சென்டிமென்ட்களும் நிறைந்த "அலைகடலின் அசுரர்கள்"  - காமிக்ஸ் வாசிப்பனுபவத்திற்கு முற்றிலும் புதுசு என்பதால் நமக்கு ரசிக்க இயன்றதா ? அல்லது சித்திரங்களின் ஜாலங்களில் மற்ற எல்லாமே பின்னணிக்குப் போய் விட்டதால் திறந்த வாய் மூடாது போயிற்றா நமக்கு ?

Plus a repeat on Question # 2 : இந்தக் கடற்கொள்ளையர் ஜானரில் இன்னமும் நிறையவே கதைகள் உள்ளன தான் ! "அலைகடலின் அசுரர்கள்" - க்ளைமாக்ஸ் பாகம் தொடரும் மாதங்களில்  வெளிவந்தானபின்னே - சந்தோஷ நினைவாய் அதனை இருத்திக் கொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா ? அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு  "ஜே" போடுவீர்களா folks ? நான்பாட்டுக்கு ஒரு ஆவேசத்தில் முட்டைக்கண்ணில் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு கிளம்பிடக்கூடாதில்லயா ?

மித வலுவிலான கதைகளோடு ஆண்டவனே பயணித்தாலும் நமது குக்கரில் அந்தப் பருப்பு வேகாது என்பதை எண்ணற்ற தடவைகள் நிரூபித்துக் காட்டிவிட்டீர்களெனும் போது - இரவுக்கழுகாரெல்லாம் விதிவிலக்காகிட இயலுமா - என்ன ? "சாத்தானின் சீடர்கள்" விஷயத்தில் எனது அனுமானத்திற்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய : பெரியவர் போனெல்லியின் கதையிது ! "GOLDEN TEX"  என்று இன்றைக்கும் சிலாகிக்கப்படும் அந்த முதல் 300 கதைகளுள் இடம்பிடித்த சாகசம் என்றவிதத்தில் இதன் மீது எனக்கு நிரம்பவே அபிமானம் தோன்றியது ! Plus கதையின் (இத்தாலிய) வாசக அலசல்களிலும்  நிறையவே positive ரேட்டிங் செய்யப்பட்டிருக்க - பக்கங்களைப் புரட்டிய போது சுவாரஸ்ய விஷயங்கள் வரிசையாக கண்ணில்பட்டன !  சாத்தான் பூஜை ; நரபலி ; முகமூடியணிந்த கும்பல் ; நிறைய ஆக்ஷன் என்றெல்லாம் கதை ஓடுவதைப் பார்த்த போது கதை தேறிடுமென்றுபட்டது ! Sadly அது நிகழாது போக - வசனங்களில் சடுகுடு ஆடி, குறைகள் ரொம்பவே glaring -ஆகத் தெரியாதிருக்கச் செய்வதிலியே நாக்குத் தொங்கிப் போய்விட்டது !  So "சாத்தானின் சீடர்கள்" என்னளவில் 5 /10 தான் !!

பிப்ரவரியை நான் சற்றே 'தேமே' என்று திட்டமிட்டுவிட்டதாய் அந்நேரம் எனக்குள் லேசாயொரு ஜெர்க் இருந்தது நிஜமே ! ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் எப்போதுமே மதில் மேல் பூனை ரகங்கள் தான் என்னைப் பொறுத்தமட்டிலும் ! Extraordinary !! என்றெல்லாம் சிலாகிக்க இடமிராது ; ஆனால் நிச்சயமாய் சராசரிக்கும் மேலிருக்கும் என்பதே எனது அனுவபவம் + அபிப்பிராயம் ! இந்த அழகில் புது ஜானியை எவ்விதம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள - ஜானி 2 .0 ஆல்பத்தினுள் பணியாற்றத் துவங்கும் வரைக்கும் இந்த இதழை நிறையவே அவநம்பிக்கையோடு தான் பார்த்துக்கொண்டிருந்தேன் ! ஆனால் மொழியாக்கத்தை மாற்றி எழுதத் துவங்கும் சமயமே - கதையின் ஒருவித இலகுத்தன்மையை கண்டு லேசாய் நிம்மதி கொண்டேன் ! 42 பக்கங்களுக்கு சட்டிக்குள் உப்பு, மிளகு.காரம்,புளிப்பு,இனிப்பு.தித்திப்பு,உவர்ப்பு என்று சகல "ப்புக்களையும் " போட்டு கிண்டோ கிண்டென்றுகிண்டிய கையோடு - கடைசி இரண்டே பக்கங்களில் கூட்டு ; குழம்பு ; பொரியல் என்று சமைத்துப் பரிமாறும் நோவுகள் இங்கிருக்காது என்று புரிந்த போதே - இதனை நிச்சயம் நீங்கள் புறம்தள்ள மாட்டீர்களென்ற நம்பிக்கை பிறந்தது !! ஜானி 2 .0 ஒரு ஹிட் என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்துவிட தருணத்தில் - இங்கே ஒரேயொரு கேள்வியே என்னிடம் :

இந்தத் தொடரின் ஆல்பம் # 3 வெளியாகிவிட்டது ! And இதனை நாம் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தும் விட்டோம் ! ஒருவித காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் என்று இதனைச் சொல்லலாம் ! My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா ? என்பதே !! Yes என்றால் 2020 -ன் அட்டவணையில் இது இடம் பிடித்திடும் ! "வேண்டாமே...ஒரு சீரியஸ் நாயகர் சிரிக்க வைக்க முனைவது - முனியாண்டி விலாசின் மெனுவில்   மைசூர்பாகைத் தேடுவதற்குச் சமானம் !!" என்பீர்களெனில் - "புது ஜானியின்" கதை # 1 இடம்பிடித்திடும் தொடரும் ஆண்டுக்கு !!

பிப்ரவரியில் எனக்கு ரிசல்ட் பற்றிய "டர்" இல்லாத 2 இதழ்களும் இடம்பிடித்திருந்தன ! முதலாவது "வைக்கிங் தீவு மர்மம்" !! தல சாத்வீக அவதாரிலும் ரசிக்கும் விதமே மிளிர்வதை நீங்களாகவே தான் மறுபதிப்பினில் கூறியிருந்தீர்கள் எனும் போது அங்கே எனக்கேது டென்க்ஷன் ? ஜாலியான வண்ண ஆல்பம் ; நீங்களும் ஹேப்பி ; ஞானும் ஹேப்பி ! இங்கொரு குட்டி ஹேப்பி சேதியும் : வண்ண மறுபதிப்பு டெக்ஸ் ஆல்பங்கள் சகலமும் ஒரிஜினல் கல்கத்தா ரசகுல்லாக்களைப் போல சரேல் சரேலென்று காணாது போகின்றன ஸ்டாக்கிலிருந்து !! கார்சனின் கடந்த காலத்தில் துவங்கி, டிராகன் நகரம் ; பவளச் சிலை மர்மம் ; சைத்தான் சாம்ராஜ்யம் முதல், சமீபத்தைய TEX Color சிறுகதைகளின் மறுபதிப்பு # 1 முதற்கொண்டு almost காலி ! 2013-ன் இதழ்களில் ஏகம் இன்னமும் கையிருப்பில் மொய்யென்று இருக்க, recent reprints பறக்கின்றன !! ஒண்ணுமே புரிலீங்கோ !! Tex Color reprints எனும் போதே இந்த சமாச்சாரத்தையும் சொல்லிவிடுகிறேன் ! சென்றாண்டின் அந்த மினி டெக்ஸ் கலர் சாகசங்கள் தொகுப்பு # 2 ஏற்கனவே அச்சாகி ரெடியாகி விட்டது !! மார்ச்சில் புது இதழ்களின் பரபரப்பில் அதை அறிவிக்க போன வாரம் மறந்தும் போச்சு ! இதோ அதன் அட்டைப்பட preview : அடுத்த சில நாட்களில் இது ஆன்லைனில் லிஸ்டிங் ஆகிடும் என்பதால் தேவைப்படுவோர் அங்கே வாங்கிக்கொள்ளலாம் ! Better still - ஏப்ரல் இதழ்களோடு சேர்த்து வாங்கி கொண்டால் கூரியர் விரயம் மிச்சமாகிடலாம் !
பிப்ரவரியில் ஜாலியாய் என்னை எதிர்நோக்கச் செய்த இன்னொரு இதழ் "நடனமாடும் கொரில்லாக்கள்" ! அந்தச் சிரிப்பு மேளா - சிறப்பாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையினை நீங்களும் மெய்ப்படுத்திட - இங்கேயும் ஒற்றைக் கேள்வியே எனக்கு : "மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா ? அல்லது "ஒன்றே நன்று !" என்பீர்களா ?

"ஜெரெமியா - தொகுப்பு 2" தான் பிப்ரவரின் X factor !! "தேறுமா ? தேறாதா ? ; ஓடுமா ? ஓடாதா ?" என்று துளியும் கணிக்க இயலா சூழலில் களம் கண்ட இதழிது !! And உங்களின் அபிப்பிராயங்களும், இரு வெவ்வேறு துருவங்களில் நிலைகொண்டிருக்க, இங்கே இனி கேள்விகளுக்கு அவசியம் நஹி என்று தீர்மானித்துள்ளேன் ! விற்பனையின் துரிதமோ ; துரிதமின்மையோ தான் இனி இங்கொரு வழிகாட்டுதல் தந்திட வேண்டும் !! 
நடப்பு மாதத்தில் கணிசமான கேள்விகள் இருந்தன தான் என்னுள் !!

**ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ! ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ? என்ற கேள்வி !!

**அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி !! முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று !!

**Last but not the least : "முடிவிலா மூடுபனி" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே !!

மூன்றுக்குமே நீங்கள் இதுவரைக்கும் தந்துள்ள பதில்கள் emphatic enough என்பதால், மண்டைக்குடைச்சலின்றி அடுத்த மாதத்துப் பணிகளில் பிசியாகிக் கிடக்கிறேன் ! இங்கே உங்கள் அலசல்களைத் தொடர்ந்திட்டாலே போதுமென்பேன் - புதிதாய்க் கேள்விகளை எழுப்பிடும் அவசியங்களின்றி !!

So...

டெக்ஸ் கதைகள் ஜனரஞ்சகத்துக்கும்....

தோர்கல் கதைகள் கற்பனைகளின் பரிமாண அலசல்களுக்கும்...

ஜேம்ஸ் பாண்ட் கதை புதுயுகப் பிரஜைகளுக்கும்....

கார்ட்டூன்கள் மனதை இலகுவாக்கிடவும்....

பராகுடா - நாம் பார்த்திராவொரு யுகத்தின் கதைகளை கலர்புல்லாகச் சொல்லிடவும்...

கிராபிக் நாவல் - தனிமையும், முதுமையும் எவ்வித சத்ருக்களென்று யதார்த்தமாய்ச் சொல்லிடவும்...

உதவிடின் - 7 to 77 வரை ஆளுக்கொரு சமாச்சாரம் இங்கிருக்க வாய்ப்புகள் உண்டு தானோ ? மகளிர் அதிகமாய் வினையாற்றும்  களமாய் காமிக்ஸ் இருப்பதில்லை என்பது இங்கொரு பொதுவிதி !! Of course - ரெகுலராய் காமிக்ஸ் படிக்கும் சகோதரிகள் நிரம்பவே உண்டென்பதை அறிவேன் தான் ; ஆனால் 80 % - 20 % என்பதே காமிக்ஸ் வாசக வட்டத்தின் ஆண்-பெண் break-up ஆக இருந்திடக்கூடும் ! இன்னுமிங்கே என்ன மிஸ்ஸிங் ? என்பதை அந்தச் சிறுபான்மை மகளிர் அணி மட்டும் சொல்லிட மெனெக்கெட்டால் நமது பார்வை இன்னும் முழுமையடையக்கூடும் !!

Before I  sign out - சில updates :

1."ஈரோடு ஸ்பெஷல்" பற்றிய அறிவிப்பு ஏப்ரலில் என்று அட்டவணையில் அச்சிட்டிருந்தது நினைவிருக்கலாம் !! நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன்  !! அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது !! So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் !! அதற்கு முன்பாய் -  அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks ? Go ahead & try giving it a guess ?

2.க்ரீன்மேனர் கதையினைப் போலொரு  கார்ட்டூன் பாணி artwork !! ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் !! இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் ! வாகான வாய்ப்புக்கு வெயிட்டிங் !!

3.அரசியல்...வரலாறு...குற்றம்...புலனாய்வு....இரத்தக்களரி...ஒரு தூரத்து தேசம்....!! இவையே வெகு சமீபமாய் நான் வாசிக்க நேர்ந்ததொரு b & w கிராபிக் நாவலின் களம் !! சற்றே கனமானதென்பதில் no doubts !! ஆனால் முயற்சிக்க நீங்கள் ரெடியென்றால் - நிச்சயமாய் நாமும் ரெடி !! I repeat - கனமான களமே !!

4.ஆண்டின் ஒரு quarter நிறைவுற்றிருக்க - இதுவரைக்கும் சந்தாவினில் ஏதோவொரு காரணத்தினால் இணைந்திடாது போன நண்பர்கள் - ஏப்ரல் to டிசம்பர்'19 சந்தாவினில் இணைந்திடலாம் !! ஆபீசுக்கு ஒரு மின்னஞ்சலோ ; போனோ அடித்தால் விபரங்கள் சொல்வார்கள் !!

Bye all...have a sparkling week-end !! See you around !!


Sunday, March 03, 2019

Marching with March !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு சுட்டெரிக்கும் வெயில் நாளில் திடுமெனவொரு இதமான காற்று வீச ; கருமேகங்கள் எங்கிருந்தோ ஆஜரான மறு நொடி  - அதுவரை மண்டை காயச் செய்த வெப்பம்  காணாது போவதுண்டு தானே ? அதே போலத் தான் - என் நிலவரமும்   !! போன வாரம் இதே நேரத்தில், தேங்கிக் கிடந்த அத்தனை பணிகளையும் ஒப்பேற்ற 'லோ லோ'வென்று மொக்கை போட்டபடிக்கே சுற்றித் திரிந்தவன் - இப்போது ஜாலியாய் டி-வி-முன்னே அமர்ந்து ஒரு மெய்யான வீரரை தேசமே கொண்டாடுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன் !! யுத்தக் கதைகள் ; விமானச் சண்டை சாகசங்கள் என்று ஏகமாய் சின்ன வயதில் படித்த சமாச்சாரங்கள் இன்றைக்கு நிஜமாய் கண்முன்னே அரங்கேறுவதைப் பார்க்கும் போதுமிரட்டலாய்த் தெரிகிறது !! Hail Bravehearts !!!

நாலு இதழ்களை உங்கள் கைகளில் ஒப்படைத்த பிற்பாடுக்கும் ; முற்பாடுக்கும் (??!!) மத்தியில் தான் எத்தனை வேறுபாடு ? இம்முறை நிச்சயமாய் லேட்டாகிடப் போகிறதென்ற டென்க்ஷனில் உச்சா போகாத உராங்குட்டான் போல  27-ம் தேதி வரை சுற்றித் திரிந்தவனுக்கு, நமது பைண்டிங் நண்பர் கடைசி நிமிடத்தில் (வழக்கம் போல்) கைதூக்கி விட்டு விடுவாரென்பது புரிபட்ட  நொடியில் பல்லெல்லாம் வாயாகிப் போனது ! But இனிமேல் தான் பரீட்சைப் பேப்பர்களைத் திருத்தும் பணிகளுக்குள் நீங்கள் புகுந்திடவுள்ளீர்களெனும் போது - அந்தப் "புன்னகை மன்னன் புருஷோத்தமன்" அவதாரைத் தற்காலிகமாய் பின்னணியிலேயே தொடரச் செய்தல் க்ஷேமம் என்பது புரிகிறது !! "எல்லாம் ஓ.கே. !!" என்று உங்கள் பக்கமிருந்தொரு பரவலான thumbsup கிட்டின் - "பு.ம.பு"-ஐ மறுக்கா கூப்பிட்டுக் கொள்ளலாம் தானே ?! இம்மாதத்து 4 இதழ்களுள் 3 புத்தம்புது ஆக்கங்கள் எனும் போது, அவற்றினை மேலோட்டமாயொரு புரட்டு புரட்ட மட்டுமே பெரும்பான்மைக்கு இதுவரையிலும் சாத்தியப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் ! So அவை சகலத்தையும் நீங்கள் படித்து, அலசி முடிக்கும் வரைக்கும் பொறுமையாய் காத்திருப்பேன் !!

மார்ச்சின் இதழ்களுள் எனது favorite எதுவாக இருக்குமென்று யூகிப்பதில் சிரமமேதும்  இராதென்றே நினைக்கிறேன் ! Oh yes - ஜேம்ஸ் பாண்ட் 007 கதையினை எழுதும் போதே நிரம்ப ரசித்தேன் தான் ! தெறிக்கும் ஆக்ஷன் ; the enemy within என்ற கதையாய், எதிரிகள் வெகு நெருக்கத்தில் இருப்பது ; சினிமா பாணியில் அரங்கேறிய chasing சீன்கள் என்று நெடுக பராக்குப் பார்த்துக் கொண்டே தான் பணியாற்றினேன் ! ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்தப் புதுயுக ஜேம்ஸ் பாண்ட் கதைகளில், ஒரு மொழிபெயர்ப்பாளனை முழிபிதுங்கச் செய்யும் தரத்தில் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் இருந்தது தான் நினைவில் தொடர்ந்திடும் விஷயம் !   நல்ல நாளைக்கே crisp ஆக எழுதப் பிடிக்காது & தெரியாது எனக்கு ! ஆனால் இங்கோ நாலு வரிகளில் மாமூலாய் அடக்கிட வேண்டிய மேட்டர்களை ஒரே வீரிய வரியில் போட்டுத் தாக்கியிருக்க - அவற்றைத் தமிழாக்கும் பொருட்டு அடிக்க அவசியப்பட்ட கரணங்கள் நிரம்ப நாட்களுக்கு நினைவில் தங்கி நிற்கும் ! And இங்கொரு சின்ன விளக்கமுமே ! போன ஜேம்ஸ் பாண்ட் இதழில் ஆக்ஷன் பக்கங்களின் "டமால்..டுமீல்" சமாச்சாரங்களை முற்றிலுமாய் அடக்கி வாசித்த பிற்பாடு -  'பழைய குருடி..கதவைத் திறடி..!' என்று இப்போது DTS சவுண்ட் எபக்ட்களை நாடியது ஏனோ ? என்ற கேள்வி எழுந்திடலாம் ! சொல்லப் போனால் முதல் படிவத்தில் எடிட்டிங் செய்து முடித்திருந்த வேளையிலும், மௌன மொழியிலேயே தான் பாண்டை சாகசம் செய்திட விட்டிருந்தோம். பொதுவாய் நான் எடிட்டிங் செய்திடும் வார்ப்புகள் எல்லாமே black & white -ல் தான் இருந்திடுவதுண்டு ! So நிறைய நேரங்களில் கதையின் முழுமையையும் நானே வண்ணத்தில் பார்க்க நேரிடுவது அச்சின் போது தான் !  அதே பழக்கம் இங்கேயும் தொடந்தாலும், நிறைய தரைக்கடியிலான சண்டைக் காட்சிகள் காரிருளில் நடைபெறுவதாயிருப்பதைக் கண்ட போது, ஒரிஜினல் டிஜிட்டல் கோப்புகளை ஒருவாட்டி பார்க்கத் தோன்றியது ! கணினியின் திரைக்குள் உற்றுப் பார்த்தால் - லாந்தர் விளக்கு வெளிச்சம் கூட அந்தப் பக்கங்களில் மிஸ்ஸிங் என்பது தெரிந்தது !! 'இங்கே சுடுகிறார்களா ? சடுகுடு ஆடுகிறார்களா ?' என்பதே சந்தேகமாகிப் போகும் விதத்தில் அத்தனையும் இருட்டு sequences-ல் இருக்க, முழுக்கதையையும் கலரில் ஒருவாட்டி பிரிண்ட் போட்டுப் பார்த்தேன் ! நிறையவே இருள் ; நிறையவே ஆக்ஷன் ; நிறையவே மௌனம் என்ற கூட்டணி கொஞ்சமே கொஞ்சமாய் எனக்கு நெருடுவதாய்த் தோன்ற, வேறு வழியின்றி "ஜெய் ஒனுமாட்டூபீயுஹ் !!" (onomatopoeia) என்று தீர்மானித்தேன் ! ஒரு செயலை விளக்கும் விதத்திலும், அந்தச் செயலின் ஓசையையுமே பிரதிபலிக்கக் கூடிய "டுமீல்.....ணங்க்..கும்....".ரக வார்த்தைகளை இந்த "ஓணானை வேஷ்டியிலே போட்டுக்கிட்டியா ?" என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள் ! அதற்கு முன்பாய் 2 ஸ்டிக்கர் ஷீட்களில் ஆசை தீர "பூம் ; டுமீல் ; கிராக் ! க்ராஷ் " சமாச்சாரங்களை அச்சிட்டு புக்கோடு தந்திடுவதெனத் தீர்மானித்திருந்தேன் ! மௌனமே ஓ.கே. என்போருக்கு no worries ; "ஆனால் எனக்கு ஸ்பீக்கரைப் போட்ட்டே தீரணும் !!" எனக்கூடிய நண்பர்கள், ஸ்டிக்கர்களை உரித்து ஒட்டிக்கொள்ளலாமென்பதே பிளான் ! ஆனால்  அந்தந்த ஆக்ஷன் sequences அரங்கேறும் வளைவு, நெளிவு கோணங்களுக்கேற்ப ஸ்டிக்கர்களை வடிவமைப்பதும் சரி, அந்தந்த shape-களில் ஒவ்வொரு ஸ்டிக்கரையும் உரித்திடும் விதமாய் தயாரிப்பதும் செம கஷ்ட காரியமென்பது தலைக்குள் உஷ்ணம் குறைந்தபோது புரிந்தது !  So வேறு வழி தெரியாது "தொபுக்கடீர்" என்று மாமூல் பாணிக்குத் திரும்பினோம் !

ஜேம்ஸ் பாண்டின் பணிகளுக்குத் துளியும் குறையா சுவாரஸ்யத்தோடே இம்மாத டெக்ஸ் கதைக்குள்ளும் உலாற்ற முடிந்தது ! ஒரு மெகா ஆல்பம் என்றாலே நம்மை அறியாது அங்கே வண்டி வேகம் எடுத்து விடுவதை,  260 பக்கங்கள் கொண்ட பருமனான புக்கைக் கையில் ஏந்தும் நொடியே புரிந்து விடுமென நினைக்கிறேன் ! அந்த பருமன் + clean சித்திரங்கள் என்றாலே பாதிக் கிணற்றை நாம் தாண்டிவிட முடிகிறதோ ? எது எப்படியோ - ஒரு மாமூலாகா கதைக்களமும் இம்முறை வாய்த்திருக்க - ஜாலியாக ரேஞ்சர்களுடனான பாலைவனப் பயணம் அரங்கேறியது ! எனக்கு இங்கொரு கேள்வி  guys !! இதுவரைக்கும் நம்மவர்கள் பாலைவனங்களில் சுற்றித் திரிந்திருக்கும் கதைகள் எல்லாமே decent ஆக ஸ்கோர் செய்துள்ளதாக எனக்குள் லேசாய் ஒரு எண்ணம் ! Am I right on it ? அல்லது பாலைவனங்களில் உப்மா கிண்டியுள்ள கதைகள் ஏதேனும் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றனவா ?  And இம்முறை கார்சனை சற்றே தூக்கிப் பிடிக்கும் விதமாய் கதாசிரியர் வடிவமைத்துள்ளதுமே ஒரு முதன்முறையா ? அல்லது இதற்கு முன்பான சாகசங்கள் எதிலாவது இதே பாணியை நாம் பார்த்திருக்கிறோமா ? ஞாபகப்படுத்திப் பாருங்களேன் ?

கார்ட்டூன்கள் எப்போதுமே எனக்கு செல்லப் பிள்ளைகள் எனும் போது - "விற்பனைக்கு ஒரு பேய்" மீது வாஞ்சையான பார்வையைப் பதிக்க இயன்றதில்  வியப்பிருக்கவில்லை தான் ! And இந்த மறுபதிப்புகள் இரண்டுமே சுமார் 25+ ஆண்டுகளுக்கு முன்பானவை எனும் போது, அந்த எலும்புக்கூடுகள் ராவில் துரத்தி ஓடும் sequence-ஐத் தாண்டி வேறெதுவும்  நினைவில் தங்கியிருக்கவில்லை ! So புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே இருந்தது எனக்கு ! பற்றாக்குறைக்கு இந்தக் கதைகள் சகலத்துக்கும் வர்ணமூட்டப்பட்டுள்ளது வெகு சமீபமாகவே என்பதால், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை பணிகளில் உட்புகுத்த அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது ! புக்கை ஒருவாட்டி புரட்டினாலே வண்ணங்களில் தென்படும் ஒருவித classiness அப்பட்டமாய்த் தெரிந்திடும் ! So  பெரிய சைசில், அழகு வர்ணங்களில் டாக்டர் வேஸ்ட்டையும், அவரது துப்பறியும் அண்ணாத்தையையும் நிரம்பவே ரசித்தேன் தான் ! இங்கொரு கேள்வி folks : இந்தத் தொடரினில் உள்ள மொத்தக் கதைகளே சொற்பம் தான் ; 11 in total ! அவற்றுள் நான்கை வண்ணத்தில் போட்டு விட்டோம். எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் ! தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா ? இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா ? உங்கள் thoughts ப்ளீஸ் ?

தத்தம் பாணிகளில் மார்ச்சின் முதல் 3 இதழ்களும் என்னை லயிக்கச் செய்திருந்த போதிலும், என்னளவில் பணிகளின் போது மனதைப் பறிகொடுத்தது சந்தேகமின்றி "முடிவிலா மூடுபனி" கிராபிக் நாவலிடம் தான் !! இதுபற்றி நண்பர்களின் அலசல்கள் ஜாஸ்தி துவங்கியிருக்கவே இல்லை எனும் போது - இங்கே நானாய் விடும் அலப்பறைகள்  "பீப்பீ smurf " ஊதிடும் குழலாகவே பார்க்கப்படும் என்பது புரிகிறது ! ஆனால் ஒரு எடிட்டர்  புடலங்காயாய் அல்லாது, ரெகுலரான வாசகனாய் மட்டுமே எனதுஅபிப்பிராயங்களை முன்வைப்பதாயின் - எனது வோட்டு இம்மாதம் without a doubt - "மு.மூ" க்குத் தான் ! இந்த ஆல்பத்தின் டிஜிட்டல் கோப்புகள் எனக்கு வந்து சேர்ந்தது 2016 -ன் மத்தியில் ! ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருவாட்டி  கதைத் தேர்வுகளுக்கென ஒரு மெகா பெட்டியில் அவர்களது சமீபத்து இதழ்களைக் கலவையாக்கி போனெல்லியிலிருந்து நமக்கு அனுப்பிடுவதுண்டு !  சகலத்தையும் பத்திரமாய் பீரோவில் அடுக்கிக் கொண்டு நேரம் கிட்டும் போது பரிசீலிப்பது வழக்கம் ! இந்த Le storie தொடரிலிருக்கும் கதைகள் என்னை ரொம்ப காலமாகவே உசுப்பி விட்டுக் கொண்டேயிருந்தன தான் ! வெள்ளையர் ஆட்சியின் போது - நம் மண்ணில் அரங்கேறிய சிப்பாய்க் கலகம் சார்ந்ததொரு கிராபிக் நாவல் உள்ளதென்று இங்கே பதிவில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பாகவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! அது தான் இந்த கருப்பு-வெள்ளை கிராபிக் நாவலின் தனித்த தடம் இத்தாலியில் துவங்கியிருந்த வேளையுமே ! So வித்தியாசமான இந்தக் கதைகளை முயற்சித்துப் பார்க்கும் உத்வேகத்துக்குப் பஞ்சமே இருக்கவில்லை என்னுள் ! ஆனால் நமது முதற்சுற்று கிராபிக் நாவல்களைக் கண்டு தெறித்து ஓடிய நண்பர்கள், "கி.நா" என்றாலே குளிர் ஜுரம் கண்ட கரடிகளாய் தத்தம் குகைகளுக்குள் பதுங்கிட்டதும் நம் வரலாறு (!!!) தானே ? So   கொஞ்ச காலத்துக்கு "கி.நா" என்பதே ஒரு 'கெட்ட வார்த்தை' போல் பாவிக்கப்பட்டதால் டிக்கியை மூடிக் கொண்டிருக்க அவசியப்பட்டது எனக்கு ! ஆனால் இடைப்பட்ட அந்த ஆண்டுகளில் போனெல்லியில் அந்த Le Storie தொடரானது பர பரவென வேகமெடுத்திருக்க, ஒரு நெடும் பட்டியல் அங்கே தயாராகியிருந்தது ! So 2017 -ல் இவற்றைத் தமிழுக்குக் கொணர்ந்தே தீருவதென்ற வேகம் எனக்குள்ளும் துளிர்விட்டு சமயம், இந்தக் கதைவரிசையின் சில நல்ல தேர்வுகளை மட்டும் அனுப்பிடக் கோரியிருந்தேன் ! அதன் பலனாய்க் கிட்டிய ஒரு கத்தையினுள் இதுவுமொன்று ! பொதுவாகவே வரலாற்றின் ஏதேனுமொரு period-ல் அரங்கேறும் விதமாய் அமைந்திருக்கும் கதைகள் எனக்குள் ஒரு fascination-ஐ ஏற்படுத்தத் தவறுவதில்லை ! இதுவுமொரு 100 ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்சில் அரங்கேறும் கதை என்பதை கவனித்த போதே முதல் சுற்றிலேயே கை நம நமத்தது இதனை டிக் அடித்திட ! ஆனால் 2017-ன் லயன் கிராபிக் நாவல் தடத்துக்கென வேறு 3 கதைகள் தேர்வானதால், "முடிவிலா மூடுபனி" - மூடாக்குப் போட்ட மூடுபனியாகவே தொடர்ந்திட்டது இப்போது வரையிலும்  !
நிஜத்திலான போய்ஸ்பொன்னார்ட் மாளிகை !

இந்த இத்தாலிய கிராபிக் நாவல்கள் சார்ந்த reviews ; அலசல்கள் நிறையவே நெட்டில் இருப்பதால், யானையின் தூரைத் தடவுகிறோமா ? தும்பிக்கையைத் தடவுகிறோமா ? என்ற சந்தேகமின்றி - எதிர்நோக்கியுள்ள கதைகளின் தன்மைகளை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள சாத்தியமாகுகிறது ! So இந்தக் கதையின் சுலபத்தன்மை + சோகத்தன்மை பற்றி ஒரு கோடி கண்டிட இயன்றது எனக்கு ! More than anything else - இதற்கென வரையப்பட்டிருந்த சித்திரங்களில் பெரும்  துல்லியமெல்லாம் இல்லாவிடினும், எனக்கென்னமோ அந்த ஒருவித rustic simplicity-ல் ஒரு வசீகரம் தென்பட்டது ! நடப்பாண்டில் கிராபிக் நாவல்கள் தொடர்கின்றன என்பது தீர்மானமான கணமே "முடிவிலா மூடுபனி" க்கு நேராக ஒரு டிக் போட்டு விட்டேன் ! And yes - இந்தக் கதையினில் நான் பணியாற்றியது மொத்தமாகவே 2 நாட்களுக்குத் தான் எனும் போது, நியாயப்படிப் பார்த்தால்  அதனுடன் ஒன்றிடும் வாய்ப்புகள் குறைச்சலாகத் தானிருந்திருக்க வேண்டும் ! ஆனால் முன்னும், பின்னுமாய் பயணிக்கும் கதையின் காலகட்டங்கள் ; தனிமையில் அந்த போலீஸ்காரர் நடத்த முனையும் தேடல்கள் ; புலனாய்வுகள் ; தனக்குத் தானே புலம்பிக் கொள்ளும் இடங்கள் என்று நிறையவே விஷயங்களிருந்தன என் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள ! Icing on the cake - அந்த anticlimax நிரம்பிய climax தான் என்பேன் !! கதாசிரியர் லேசாய் மெனக்கெட்டிருந்தால் கூட கதை மாந்தர்களில் யாரையேனும் இன்னும் கொஞ்சம் டெவெலப் செய்து - அவருக்கு கொலை செய்திடும் முகாந்திரத்தையும் வலுவாக்கி - கிளைமாக்சில் ஒரு twist தந்திருக்கலாம் தான் ! அட, எனக்கே கூட இந்தக் கதையை இன்னும் வேறொரு ரூட்டில் எடுத்துக் போயிருக்கவொரு வழி தென்பட்டதென்றால் - கதாசிரியர்க்கு அது புலப்படாது போயிருக்குமா - என்ன ? ஆனால் அந்த பரிச்சயமான பாணிகளே வேணாமே என்பவராய் - நிஜ வாழ்வில் நடந்திடக்கூடிய விதமாய் ஒரு சுலப க்ளைமாக்ஸை நிர்ணயிக்கத் துணிந்ததை ரொம்பவே ரசித்தேன் நான் !! முடிவிலா மூடுபனி - போய்ஸ்பொன்னார்ட்  கிராமத்துக்கு மாத்திரமானது மட்டுமல்ல - ஒரு முதியவரின் சிந்தைகளை விடாப்பிடியாய் போர்த்திக் கிடக்கும் இருளுக்குமே என்பதை கதாசிரியர் சொல்ல முனைந்ததை எனக்கு ரொம்பவே ரசிக்க முடிந்தது !

Maybe இதற்கு தனிப்பட்ட இன்னொரு காரணமும் இருக்கக்கூடுமென்று தோன்றுகிறது ! பொதுவாய் இந்த போய்ஸ்பொன்னார்ட் மாதிரியான குட்டியூண்டு கிராமங்களை கதைகளிலும், சினிமாக்களிலும் தான் நாம் பார்த்திருப்போம் ! நிறைய தடவைகள் - இது மாதிரியான குக்கிராமங்களில் வாழ்க்கை எவ்விதம் தானிருக்குமோ ? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு ! 2014-ல் இதனை நேரில் கண்டு உணர்ந்திடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது - அதுவும் இதே போலொரு பிரெஞ்சு கிராமத்தில் !! வழக்கமாய் நமது அச்சு இயந்திரக் கொள்முதல் சார்ந்த தொழிலின் நிமித்தம் நான் பையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாய் அலைவதெல்லாமே பெருநகரங்களில் ; அல்லது தொழில் நகரங்களில் என்று தானிருக்கும் ! ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பாய் மிஷின் ஒன்றை கொள்முதல் செய்திருந்தோம் பிரான்சின் உட்பகுதியிலிருந்த ஒரு மலையோர கிராமத்தில் ! அதனைப் பார்வையிட முதலில் போயிருந்த சமயம் பிரெஞ்சு விற்பனையாளர் என்னை காரில் இட்டுச் சென்றிருந்தார் ; so பேசிக்கொண்டே போன போது, லேசாய் மட்டுமே கண்ணில் பட்டது அந்தத் தூங்குமூஞ்சி கிராமம் ! ஒன்றரை மாதங்கள் கழித்து அந்த இயந்திரத்தை லோட் செய்ய வேண்டிய வேளை வந்த போது, பிரெஞ்சு டீலர் வேறொரு பணியில் தான் பிசியாக இருப்பதால் உடன் வர இயலாது ; நீயாகவே போய் பார்த்துக்கொள்ளேன் ! என்று சொல்லி விட்டார் ! அதற்கென உள்ள எஞ்சினியர்கள் பணிகளைக் கனகச்சிதமாய்ச் செய்திடுவர் ; அதனைப் பராக்குப் பார்ப்பதைத் தாண்டி, சாமான்கள் விட்டுப் போகாமல் சகலமும் லோட் ஆகிவிட்டனவா ? என்று சரி பார்ப்பது மாத்திரமே எனது பணியாக இருக்குமென்பதால், நானும் ஓ.கே. என்றபடிக்கு முகவரியை வாங்கி கொண்டு கிளம்பிவிட்டேன் பாரிஸிலிருந்து ! முதலில் Dijon என்ற இன்னொரு பெருநகருக்கு ரயில் ; அங்கிருந்து ஒரு குட்டி நகருக்கு இன்னொரு குட்டி ரயில் ; அப்பாலிக்கா அங்கிருந்து மூன்றாவதாயொரு பொம்மை ரயில் மாதிரியானதொன்றில் அந்த கிராமத்துக்குப் பயணம் என்று அன்றைய நாளின் காலை கடந்து போனது ! ஒரு மாதிரியாய் இரண்டே தண்டவாளங்கள் கொண்ட அந்த கிராமத்தின் ரயில்வே நிலையத்திலிருந்து (!!!!) வெளிப்பட்டால் ஈ-காக்கை கூடத் தென்படவில்லை அங்கே ! அந்த ஊரிலிருந்தே ஒரு சின்ன விடுதியில் தங்க புக்கிங் செய்திருந்தேன் என்பதால் - பொடி நடையாய் பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்த போது - காலத்தில் பின்னோக்கிச் திரும்பிவிட்டோமோ ? என்ற சந்தேகம் தான் !! அந்தக்காலத்து black & white ஆங்கிலப் படங்களில் வரும் தினுசில் வீடுகள் ; பண்ணைகள் ; கடைகள் என்று முற்றிலும் புதிதான காட்சிகள் ! அந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகையே 1800 தான் என்பதை ஏற்கனவே கூகுளில் படித்திருந்தாலும் - நேரில் பார்க்கும் போது ரொம்பவே வித்தியாசமாகயிருந்தது ! அந்தப் பகுதிகளுக்கு அசலூர்க்காரர்கள் வருகை தருவதெல்லாம் ஆடிக்கொரு தபா-அமாவாசைக்கொரு தபா என்பதும் புரிந்தது - ஆளாளுக்கு என்னை விநோதமாய்ப் பார்த்த பார்வைகளில் ! விடுதியில் பெட்டியைப் போட்டு விட்டு ஊரைச் சுற்றிப் பார்ப்போமே (!!!) என்று நடைபோட்டேன் ; இந்த கிராபிக் நாவலில் வரும் போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை போலவே, ஒரு சின்ன சதுக்கம், அங்கே சில கடைகள் ; சில pub-கள் ; சில ஹோட்டல்கள் என்றபடிக்கு  முடிந்துவிட்டது ! பாக்கி எல்லாமே அங்குள்ள குடியானவர்களின் பண்ணைகளும், வீடுகளும் தான் ! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி கார் ; அப்புறம்  என் திருட்டு முழியைப் பார்த்து 'வள் வள்'   என்று குரைத்து நிற்கும் நாய் என்பதே  மாமூலான template ஆக தென்பட்டது ! திராட்சை பயிரிடுவதும், அவற்றை ஒயின் செய்ய விற்பதுமே அங்கே பிழைப்பு என்பதை ஏற்கனவே வாசித்திருந்தேன் ! திரும்பின  பக்கமெல்லாம் தென்பட்ட அந்தத் தொங்கு தோட்டங்களைப் பராக்குப் பார்த்தபடிக்கே, கண்ணில் பட்டதொரு சின்ன சூப்பர்மார்கெட்டில் நுழைந்து சாப்பிட வாங்கிக் கொண்டு ரூமுக்குத்  திரும்பினேன் !  அன்றைய மாலைப்பொழுதையும்,அந்த நிசப்த இரவையும் ரூமிலிருந்தபடிக்கே ரொம்ப நேரம் அசை  போட்டுக் கொண்டிருந்தது இன்னமும் நினைவில் உள்ளது எனக்கு !  நான்கு மணி நேர பயணத் தொலைவினில், உலகின் ஒரு அசாத்திய நாகரீக நகரம் காத்திருக்க - இங்கோ இன்னமும் அதன் சுவடைக் கூடக் கொண்டிரா ஒரு வாழ்க்கை நிலவுகிறதே என்ற முரண் ரொம்பவே புதிராகப்பட்டது எனக்கு ! இந்த மக்களுக்குமே வாழ்க்கைச் சக்கரங்கள் பரபரப்பின்றி ஓடுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிந்த போது - ஒரு இனம்சொல்ல இயலா பீலிங் உள்ளுக்குள் !! So போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை கிராபிக் நாவலில் பார்க்க முடிந்த போது, அந்தக் குக்கிராம வாழ்க்கையோடு ஒன்றிப் போக கூடுதலாய் சாதியப்பட்டுள்ளது போலும் எனக்கு !! Whatever the reasons - மனித உணர்வுகளை முகமூடிகளின்றிச் சொல்ல முனைந்துள்ள கதாசிரியரை எனக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது !! அதிலும் இவர் டைலன் டாக் கதைகளுமே பேனா பிடிப்பவர் எனும் போது, அங்கே செம அசைவமாய் ; violent  ஆகக் கதைகளை புனைந்திருக்கக்கூடியவரின் இந்த இன்னொரு முகம் all the more interesting !!

இந்த ஞாயிறை இம்மாத இதழ்களுள் எதனைப் படித்து அலசிடவும் நீங்கள் நேரமெடுத்துக் கொண்டாலும் அடியேன் ஹேப்பி தான் ! வாசிப்பின் முன்னணியில் கிராபிக் நாவல் இருக்க நேரிட்டால் ஹேப்பியா-ஹேப்பி !! Bye guys ; கிளம்புகிறேன் இப்போதைக்கு ! Have a sunny Sunday !! See you around !!   

Thursday, February 28, 2019

சுடச் சுட ஒரு மார்ச் !!

நண்பர்களே,

வணக்கம்."சுடச் சுட"....."சூட்டோடு சூடாக.." என்றெல்லாம் பேசுவது ; எழுதுவது ஜகஜம் ! ஆனால் அதை நடைமுறையில் ; மெய்யாலுமே பார்க்க உங்களுக்கோர் வாய்ப்பு !! நேற்றைக்கு அச்சாகிய டெக்ஸ் வில்லரும், கிராபிக் நாவலும் - நாளை இதர புக்குகளோடு உங்களை எட்டிப்பிடிக்கும் வேளையினில் அவற்றை சற்றே ஜாக்கிரதையாய்த் திறந்து நுகர்ந்தீர்களெனில் ஆப்செட் மசியின் வெப்பமும், பெட்ரோல் நெடியும் ஜிவ்வென்று தூக்கியடிக்கத் தவறாது ! என்ன செய்தோம் - எப்படிச் செய்தோமென்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை ; ஆனால் 4 புக்குகளோடு உங்களது கொரியர்கள் சகலமும் இன்றைக்குக் கிளம்பிவிட்டன இங்கிருந்து !! 
http://www.lion-muthucomics.com/home/383-march-pack-2019.html
ஞாயிறு துவங்கிய எடிட்டிங் கூத்துக்கள் - திங்களும், செவ்வாயும் சர்க்கஸ் கூடாரமாய் மாற்றிவிட்டது நமது DTP அறையை !! டெக்ஸ் வில்லரை அரக்கப் பரக்க முடித்த போதே ஞாயிறு மாலையாகிப் போயிருந்தது !! அப்புறமாய் "முடிவிலா மூடுபனி" கிராபிக் நாவலைக் கையிலெடுத்தால் - 'கெக்கெபிக்கே' என்று சிரிக்கத் தான் தோன்றியது - சிலபல காரணங்களின் பொருட்டு !! இது 2 மாதங்களுக்கு முன்பாய் கருணையானந்தம் அவர்கள் எழுதிய கதை என்பதால் - இந்த ஞாயிறு மாலை வரையிலும் அதனுள் நான் நுழைந்திருக்கவேயில்லை !! பக்கங்களை புரட்டப் புரட்ட - அந்த black & white கி.நா.பாணி செமையாய் வசீகரிக்கச் செய்தது ! ஆனால் வரிகளில் இன்னும் வீரியம் கூடுதலாயிருந்தால் கதையின் அந்த melancholy மூடுக்கு பிரமாதமாய் ஒத்துப் போகுமே என்று தோன்றியது !! So ஸ்கிரிப்டில் ஏகமாய்  கைவைக்க வேண்டிவருமென்பது பிப்ரவரி 24-ன் ஞானோதயமாய் துளிர்க்கும் வரையிலும், ஏதேதோ காரணங்களின் பொருட்டு மாடு மேய்த்துத் திரிந்த எனது  மடமையை எண்ணிச் சிரிக்கத் தோன்றியது ! சிரிப்பின் காரணம் # 2 - "இந்தக் கதையின் பொருட்டும் இங்கொரு அலசல் காத்துள்ளது டோய்ய் !!" என்ற புரிதலின் பலன் !! "தோர்கலின்-சிகரங்களின் சாம்ராட்" ரேஞ்சுக்கு இல்லாவிடினும், வெகு சுலபமாய்த் தெரியும் அதே நொடியில் - செம complex ஆகக் கதாசிரியர் எதைச் சொல்ல வருகிறாரோ ? என்று நாம் நிச்சயமாய் அபிப்பிராயங்களை இந்தக்கதையின் பொருட்டு பரிமாறிக் கொள்ளப்போவது உறுதி !! சிரிப்பின் காரணம் # 3 - பெரும்புலவரின் குறள்வரிகள் !! காத்திருந்த 25 & 26 தேதிகளில் நமது இதர தொழில்களின் பொருட்டு வேறு பணிகளுமே சற்றே மிரட்டலாய்க் காத்திருக்க - இங்கேயோ ஒரு முழுநீள கிராபிக் நாவலை ஏகமாய் மாற்றியெழுதி ; அதனை மறுக்கா எடிட் செய்யும் பொறுப்பு தாட்டியமாய் நின்று கொண்டிருந்தது !! வேறென்ன செய்வது - இடுக்கண் வரும் சமயம் சிரிப்பதைத் தாண்டி ??! ஞாயிறு & திங்கள் சாமக்கூத்துக்களை வழக்கத்துக்கும் ஜாஸ்தியாக்கிய கையோடு - நமது DTP அணியின் பெண்களையும் ஆபீசில் லேட்டாய் அமரச் செய்து அடித்துப் பிடித்து புதனன்று அச்சிட்டோம் !! And வியாழன் காலையில் despatch !! 

As always - நமது டீம் 'வேலையென்று வந்துவிட்டால் விஸ்வரூபம்" எடுப்பதை இம்முறையும் பார்க்க முடிந்தாலும், இங்கே நிறைய credit இந்தக் கதைக்கே சாரும் என்பேன் !! டெக்ஸ் வில்லரின் எடிட்டிங் பொதுவாய் பெரிய குழப்படிகளில்லா பணியே ; ஆனால் அங்கேயே ஒருநேரத்துக்கு 20 பக்கங்களைத் தாண்டுவதற்குள் பிட்டம் பிதுங்கிப் போய்விடுவதுண்டு !! 260 பக்கங்களை சுமார் 10 நாட்களாய் நீட்டித்து வந்தேன் ! ஆனால் இங்கேயோ விரவிக்கிடக்கும் ஒருவித சோகமான வசீகரம் - அலுப்புத்தட்டாது பணியாற்ற அனுமதித்தது !! ஞாயிறு சாமத்தில் 50 பக்கங்களையும், திங்களின் இரவினில் பாக்கி 60 பக்கங்களையும் மாற்றியெழுதி முடிக்க முடிந்தது - என்னைப் பொறுத்தவரையிலும் nothing short of a medical miracle தான் - because எடிட்டிங் வேலைகள் என்று வரும் போது நானொரு மேல்வளையா கோவேறு கழுதையாகிடுவது வாடிக்கை ! அப்படியொரு மெதுவண்டியான எனக்கே இந்த வேகம் என்றால் - எல்லாப் புகழும் அந்தக் கதாசிரியருக்கே !! கதையின் தரம் பற்றிய அறைகூவலாகவோ  - அதற்கான பில்டப்பாகவோ இதனை நான் சொல்லவில்லை ; ஆனால் ஏதோவொரு காந்தமுள்ளதாய் எனக்குத் தோன்றியது "முடிவிலா மூடுபனி " இதழினில் !! And here is the first look of the (original ) cover :


ஒரிஜினல் அட்டைப்படம் - துளிகூட மாற்றங்களின்றி ; and அந்தத் தலைப்பு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணம் !! மாற்றியெழுதிடும் பணி தானென்றாலும், கடைசி நிமிடத்தில் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டே செய்ய வேண்டிய வேலையென்றாகிப் போனாலும் - ரொம்பவே ரசித்தேன் இங்கே பேனா பிடித்ததை !! மென்மையாய் ஓடிய கதை ; yet ஏதோவொரு இன்னும்சொல்ல இயலா air of mystery about it !! உங்களுக்கும் அவ்விதமே தோன்றினால் சூப்பர் ; மாறாக - "ச்சை...எனக்கு இந்த கி.நா.வே புடிக்காது !!" என்று முகம் சுளித்தாலும் புரிந்து கொள்வேன் !!

அப்புறம் "தொடர்ச்சியாய் இந்தாண்டின் மூன்று மாதங்களுமே கடைசி நிமிடம் வரை இழுத்துக்கோ-பறிச்சுக்கோ என்று கூத்தடித்து வருகிறோமே -  நம்மள்க்கு லைட்டா வயசாகிட்டு வருதோ ? ; அப்டிக்கா -இப்டிக்கா தெரியுறதுலாம் பித்த நரையில்லையோ ?  " என்ற கேள்வி எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! ஆனால் எது எப்படியோ - நூற்றி எழுபத்தி எட்டாவது தபாவாய் விஸ்வரூபமெடுத்துக் காட்டியிருக்கும் எனது டீமுக்கு ஒரு thumbsup என்றபடிக்குக் கிளம்புகிறேன் - ஏப்ரலின் லக்கி லூக் & ஜாலி ஜம்பர் டீமோடு மிஸிஸிப்பி நதியினில் சவாரி செய்திட !! Bye all ; see you around !!

பி.கு : "Onomatopoeia" பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்வோமா guys - தொடரும் நாட்களில் பயன்படக்கூடும் !! 

Online listing available now !!

Sunday, February 24, 2019

ஒரு தடதடக்கும் டெக்ஸ் எக்ஸ்பிரஸ் !!!

நண்பர்களே,

வணக்கம். 1582-ல் பதிமூன்றாம் போப் க்ரெகரி வடிவமைத்த ஆண்டுக் காலெண்டரைத் தான் லோகம் முழுக்க இன்றுவரைக்கும் நாமெல்லாம் பயன்படுத்தி வருகிறோம் ! கனகச்சிதமான இந்தக் கண்டுபிடிப்பில் என்னளவுக்கு ஒரேயொரு குறை தான் : பிப்ரவரிக்கு மட்டும் நாட்களை சுருக்கமாய் அமைத்து விட்டாரே என்று !! அதன் நோவுகளை இந்த வாரம் அழகாய்ப் படம்பிடித்துக் காட்டியுள்ளது எனக்கு ! சகோதரி இல்லத்துத் திருமணம் மாத்திரமன்றி தொடர்ந்த விருந்துகளிலும், அப்புறமாய் ரிஷப்ஷனிலும், பந்தியில் தொந்தியை நிரப்பிக் கொள்வதிலேயே வாரத்தின் 5 நாட்கள் செலவாகிப் போயிருக்க - காலண்டரில் நான்கே நாட்களே எஞ்சி நிற்கின்றன - மார்ச் உதித்திடும் முன்பாய் !! "ச்சை...எனக்கு இந்த 28 தேதி கொண்ட பிப்ரவரியே புடிக்காது !!" என்று பழிப்புக் காட்டியபடிக்கே எஞ்சி நிற்கும் black & white இதழ்களின் பணிகளுக்குள் அரக்கப் பரக்க மூழ்கிட இந்த ஞாயிறை முழுசாய்ச் செலவிட்டாலொழிய கதை கந்தலாகிப் போய் விடும் !! So பதிவிட்ட கையோடு, பாலைவனப் பயணத்தைக் தொடர்ந்திட வேண்டி வரும் - நமது ஆதர்ஷ ரேஞ்சர்களோடு !!

And இது கொஞ்சம் ரேஞ்சர் புராணமாய் அமைந்திடவுள்ள பதிவுமே என்பதால் - "ச்சை...எனக்கு இரவில் பறக்கும் கழுகுகளையே புடிக்காது !!" என்றிடக்கூடிய (சொற்ப) நண்பர்கள் பதிவின் பிற்பகுதிக்கு நேராய் வண்டியை விடல் நலமென்பேன் !!

ஒரு க்ளாஸிக் சித்திர பாணி ; டாப் கதாசிரியரான கிளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் ஒரு 260 பக்க அதிரடி ; கதை நெடுக அடித்துக்கொண்டும் - பிடித்துக்கொண்டும் பயணிக்கும் இரவுக் கழுகார் + வெள்ளிமுடியார் கூட்டணி !! இந்த மூன்றும் கலவையானால் கிடைப்பது என்னவாக இருக்குமென்று நான் சொல்லித் தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா - என்ன ? ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்பாய் பட்டையைக் கிளப்புமொரு நீள சாகசத்தில் நம்மவர்களை பார்க்கும் போது ஒரு இனம்சொல்ல இயலா த்ரில் உள்ளுக்குள் !! வறண்ட பாலைவன சாகசம் என்றாலும், நெடுக ரவுசு விட்டுத் திரியும் கார்சனின் புண்ணியத்தில் கதையோட்டத்தினில் வறட்சி லேது !! ஒரு கட்டத்தில் வெள்ளிமுடியார் அதட்டி உருட்ட - இரவுக்கழுகாரே தன மனதை மாற்றிக் கொள்ளும் அதிசயமும் இங்கே அரங்கேறுகிறது ! தற்போதைய டெக்ஸ் எடிட்டராய் மௌரோ போசெல்லி அசைத்தது துவங்கிய வரைக்கும், கதாசிரியர் நிஸ்ஸியே டெக்சின் டாப் நவீனப் படைப்பாளியாக இருந்து வந்தார் ! அந்தக் காலகட்டத்தில் உருவான சாகசமிது என்பதால், செம சுதந்திரமாய்  வித்தியாசமான plot ஒன்றைக் கையில் எடுத்துள்ளார் !! So எதிர்பாராததை எதிர்பார்த்திடலாம் "பாலைவனத்தில் ஒரு கப்பல்" ஆல்பத்தில் ! இதோ அதன் அட்டைப்பட preview - ஒரிஜினல் ராப்பரின் தழுவலாய் : And உட்பக்க preview கூட தொடர்கிறது - மிரட்டலான கதைக்கும், சித்திர பாணிக்கும் டிரைலராய் அமைந்திடும் பொருட்டு !! 

இன்னும் சில நாட்களில் இந்த ஆல்பத்தை நாம் ரசிக்கலாம் தான் ! ஆனால் இத்தாலியில் தட தடத்து வரும் அந்த "டெக்ஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலின் தடத்தையாவது நாம் பின்பற்றிட நினைத்தால் - முகத்தில் அந்தக் கரி எஞ்சின் ஊதித் தள்ளிடும் புகையைக் கூட உணர முடியாது போலும் !! சும்மா "இருளில்ஒரு இரும்புக்குதிரை" சாகசத்தில் வருவதை போல, டெக்ஸ் எக்ஸ்பிரஸ் தெறிக்கும் வேகத்தில் பயணித்து வருகிறது ! சென்றாண்டு இரவுக்கழுகாரின் 70 -வது பிறந்தநாள் ஆண்டென்றால் - நடப்பாண்டு அவரது சாகசம் # 700 வெளியாகி அதகளம் செய்திடும் பொழுது !! மௌரோ போசெல்லியின் கதைக்கு அட்டகாச ஓவியர் சிவிடெல்லி சித்திரங்கள் தீட்ட "பாண்நீ  புதையல்" என்றதொரு  முழுவண்ண - முழுநீள சாகசம் இந்த மாதம் வெளியாகியுள்ளது !! பாருங்களேன் அதன் முன்னோட்டத்தை !!

மாமூலான மஞ்சள் சொக்காய்க்கு விடுப்புத் தந்து, இம்முறை சிகப்பில் ஜொலிக்கும் ரேஞ்சரைப் பார்த்து பெருமூச்சைப் பெருசாய் விட்டுக்கொள்கிறேன்!! மாட்டுவண்டியில் ஒரு ரயிலைத் துரத்திப் பிடிக்க ஏதேனும் வழியுண்டா என்று யாராச்சும் அகுடியா சொல்லுங்களேன் ப்ளீஸ் ? நாம் ஆண்டுக்கு 12 டெக்ஸ் என்று பந்தாவாய் அறிவித்தால், அவர்கள் ஆண்டுக்கு 50 ஆல்பங்களை போட்டுத் தாக்கிடுவார்கள் போலுள்ளதே !! Phewwwwww !!! 

எனது பெருமூச்சுகள் சற்றே மிகையென்று யாருக்கேனும் தோன்றினால் - nopes guys ! நிச்சயம் அதற்கொரு கூடுதல் காரணமும் உண்டென்பேன் !! மாதா மாதம் ரெகுலர்  டெக்ஸ் வெளியாவது ஒருபக்கமெனில், க்ளாஸிக்  டெக்ஸ் என்னும்தடத்தில் மறுபதிப்புகள் ஓடிவருகின்றன ! மூன்றாவதாயொரு தடத்திலோ கலர் டெக்ஸ் கதைகள் உருவாகி கலக்கியும் வருவது பற்றாதென வெகு சமீபத்திலிருந்து "போக்கிரி டெக்ஸ்" என்றதொரு பிரத்யேக பாதையைப் போட்டு அதகளம் செய்து வருகிறார்கள் ! டெக்சின் துவக்க நாட்களை சித்தரிக்கும் "இளம் டெக்ஸ்" கதைகளின் வெற்றியைத் தொடர்ந்து - அவரது "போக்கிரி நாட்களுக்கென" ஒரு exclusive வரிசையை உருவாக்கி பின்னிப் பெடலெடுக்கும் வெற்றிகளை சந்தித்து வருகின்றனர் !! பாருங்களேன் அந்த வரிசையில் இதுவரைக்கும் வெளியாகியுள்ள 3 ஆல்பங்களின் முன்னோட்டங்களை :
Album # 1
Album # 2
Album # 3

இவர்கள் மனுஷர்களா ? அல்லது வரம் வாங்கி வந்த தெய்வப் பிறவிகளா ? என்று மலைக்கச் செய்கிறது இவர்களின் படைப்புலக ஆற்றல்களைப் பார்க்கும் போது !! கதையொன்றை உருவாக்க மினிமம் 8 மாதங்கள் தேவைப்படுகிறது என்று என்னிடம் மௌரோ போசெல்லி அவர்கள் சொன்னதை இங்கே நினைவு கூர்ந்து பார்த்தால் - இன்றைக்கு நாம் கண்ணில் பார்த்திடும் சரக்குகளெல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்னே ஜனிக்கத் துவங்கியவை என்பது புரிகிறது !! "ஆஆ...எழுநூறா ?" என்று நாம் வாய் பிளந்து நிற்கும் இந்த நொடியில் அவர்கள் அநேகமாய் 725-ன் திட்டமிடலில் குந்தியிருக்கக்கூடும் !!! Amazingly awesome !!!! And extremely  inspiring !!! 

கவ்பாய் காமிக்ஸ் உலகினில் ஒவ்வொரு மைல்கல்லாய் முறியடித்து வரும் இந்த அசாத்திய நாயகரின் தனிப்பட்ட மைல்கல் தருணங்களின் அட்டைப்படங்களையும் பாருங்களேன் !! வரிசையாய் 100 ; 200 ; 300 என்று :


அந்த TEX 200 ராப்பரைப் பார்க்கும் போது நிறையவே flashbacks எனக்குள் !! நாம் நியூஸ்பிரிண்டில் புக் வெளியிடுவதே பெரும் சமாச்சாரமாய் இருந்து வந்த அந்த late '80s & early '90s காலகட்டத்தில் இத்தாலியின் ரோம் நகர ரயில்வே நிலையத்தில் இந்த வண்ண இதழை முதன்முறையாகப் பார்க்க முடிந்தது - ஒரு பழைய புத்தகக் கடையில் ! அதைக் கடையென்று சொல்வதைவிட - "பழைய புத்தக வண்டி" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் !! அந்நாட்களில் நம்மூர்களில் குச்சி ஐஸ்களை ஒரு சக்கரம் போட்ட மர தள்ளுவண்டியில் விற்றுக் கொண்டு வருவதை இங்குள்ள சில veterans (!!!) பார்த்திருக்கக்கூடும் ! அது மாதிரியொரு தள்ளுவண்டிக்குள் ஒரு வண்டி டெக்ஸ் இதழ்களை மட்டுமே குவித்து வைத்து ரோமின் ரயில்நிலையத்தில் விற்பனை செய்வார் புஷ்டியானதொரு ஆசாமி ! முதன்முறையாக நான் அவரிடம் டெக்ஸ் இதழ்களை அள்ளிய போது - நேக்கு இத்தாலிய பாஷை தெரியும் போலும் என்ற நினைப்பில் மனுஷன் கிக்ரி-பக்ரீ என்று ஏதோ சொல்ல முயன்றார் !! "இத்தாலியன் நோ-நோ...ஒன்லி இங்கிலீஷ் !!" என்று நான் பதில் சொல்ல - "பின்னே இதை எதுக்கு அள்ளிட்டு போறேலே ?" என்ற ரீதியில் மறுக்கா ஏதோ சொன்னார் !! ஆனால் காமிக்ஸ் வாசகர்களுக்கு "சேகரிப்பு" எனும் ஒரு சங்கதியும் உடன்பிறந்ததே என்பதைப் புரிந்தவராய் - அவருக்கு வந்த துக்கனூண்டு இங்கிலீஷில் பேச முயன்றார் !! நம்ம முழியையும், மூஞ்சியையும் பார்த்தவர் - "இந்தியா ? பாகிஸ்தான் ? பங்களாதேஷி ?" என்று கேட்க - "இந்தியா...இந்தியா !!" என்றவுடன் புரிந்தது போல் மண்டையை ஆட்டியபடிக்கே, வண்டியின் அடிப்பகுதியிலிருந்து மேலும் ஒரு கத்தை டெக்ஸ் இதழ்களைத் தூக்கி மேலே அடுக்கி வைக்க - அதனுள் டாலடித்தது டெக்ஸ் 200 வண்ண இதழ் !! அப்போதெல்லாம் "கலர்" என்றால் எங்கள் ஊர்த் திருவிழாக்களில் குடிக்கக்கூடிய பாட்டில்களில் வரும் திரவம் மட்டுமே ஞாபகம் வரக் கூடிய நாட்கள் !  அட...போனெல்லிக்கே வண்ணம் என்பதெல்லாம் ஒரு குறிஞ்சிப்பூ மாதிரியான மேட்டரே அந்நாட்களில் ! So 'ஆஆவென்று' வாயைப் பிளந்தபடிக்கே அந்த TEX 200-ன் வண்ணப் பக்கங்களை புரட்டியது இன்றைக்கும் நினைவுள்ளது ! சொல்லப்போனால் அந்த புக் இன்னமும் எனது பீரோவுக்குள் கிடக்கிறது என்றே நினைக்கிறேன்  ! காலம் இன்றைக்கு ஏகமாய் மாறியிருக்க,,,"நாங்களும் பரட்டை தானே !! எங்ககிட்டேயும் சீப்பு இருக்குல்லே !!" என்று இல்லாத கேசத்தை சிலிப்பிக் கொள்வதாய் மனதுக்குள் பிரமை !! எது எப்படியோ - ஒரு காமிக்ஸ் சகாப்தத்தின் பயணத்தில் ஒரு கடைக்கோடியில் தொங்கிக்கொண்டேனும் நாமும் இடம்பிடித்திருப்பதில் நிரம்பவே சந்தோஷம் !! And அதை சாத்தியமாக்கியுள்ள டெக்ஸ் ரசிகர்களுக்கும், ரசிக்காதது போலவே  ரசிக்கும் நண்பர்களுக்கும் எனது THANKS !!! 

Moving on, மார்ச்சில் கார்ட்டூன் கோட்டா சந்தா C  சார்பில் இல்லையெனினும், மறுபதிப்புச் சந்தா D-ன் புண்ணியத்தில் இலகு வாசிப்புக்கொரு இதழ் ஆஜர் !! இதோ துப்பறியும் மாமேதை ஹெர்லாக் ஷோம்சின் 2 மறுபதிப்பு சாகசங்கள் அடங்கிய வண்ண இதழின் அட்டைப்பட preview :

ஏற்கனவே மினி-லயனில் (?) வெளியான இந்தக் கதைகளை வண்ணத்தில், பெரிய சைசில், டாலடிக்கும் கலரில் பார்க்கும் போது சும்மா ஜில்லென்று உள்ளது !! புதிதாய்ப் படிப்போருக்கு சரி ; மறுக்கா வாசிக்கவுள்ளோரும் சரி - இந்த ரம்யத்தில் மயங்கிடாது போயின் ஆச்சர்யம் கொள்வேன் !! ஏதேதோ கட்சிகளெல்லாம் வோட்டு கேட்டு வரக்காத்துள்ள இவ்வேளையில் அடியேனின் கோரிக்கையோ - "கார்ட்டூன் சின்னத்துக்கும் சித்தே வோட்டு போடுங்களேன் புளீஸ்ஸ்ஸ்ஸ் !!" என்பதாகத் தானிருக்கும் !! அதுக்கோசரம் தந்திட நம்மளிடம் இரண்டாயிரம், மூன்றாயிரமெல்லாம் லேது ; மாதமொரு இக்கிளியூண்டு டெய்ரி மில்க் சாக்லேட் வேண்டுமானால் சாத்தியம் ! டீலா ? நோ டீலா ?

காத்துக் கிடைக்கும் பணிகளுக்குள் புகுந்திட இப்போது புறப்படுகிறேன் guys !! அதற்கு முன்பாய் இன்னொரு கேள்வியுமே !! "இந்த டெக்ஸ்...அந்த டெக்ஸ்...என்று நாவிலே ஜலம் ஊர ஜாலம்  செய்துவிட்டு நடையைக் கட்டாது - அதற்கென ஏதாச்சும் செய்திடத் தான் முனைவோமா ? போக்கிரி டெக்ஸ்..........!!!! தெறிக்க விடலாமா ? Bye all....see you around !! And have a lovely Sunday !!

P.S : போன வாரத்துப் பதிவினில் கேட்டிருந்த அந்த "அமெரிக்க போலீஸ் புலனாய்வு" கதைக்கு உங்களின் thumbsup கணிசமாய்க் கிடைத்திருக்க - அதன் உரிமைகளுக்கு கோரிக்கை அனுப்பிடவுள்ளோம் அடுத்த சில நாட்களில் !! And அதனை மொழிபெயர்க்கவொரு அமெரிக்க மாப்பிள்ளையும் ...சாரி..சாரி...அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும் ரெடி ! அவரிருப்பதே அமெரிக்காவில் தானெனும் போது who better to handle it ? அடிச்சுக் கேட்டாலும் அவர் பெயரை மட்டும் நான் சொல்லவே மாட்டேனாக்கும் !! 

Saturday, February 16, 2019

பில்டப்பே என் துணைவன் !!

நண்பர்களே,

வணக்கம். சகோதரியின் மைந்தனுக்குத் திருமணம் என்பதால் இந்தப் பதிவை நீங்கள் பார்க்கும் நேரத்திற்கு நான் ஏதேனுமொரு பந்தியில் இட்லி குண்டாக்களைத் தூக்கிக் கொண்டிருக்கக்கூடுமென்பேன் ! So சிலபல நாட்களுக்கு முன்பாகவே எழுதிய பதிவிது என்பதை யூகிக்க மதியூக மந்திரிகள் அவசியப்பட மாட்டார்கள் தான் ! And இந்தப் பதிவு அத்தனை நீளமானதாய் இராதென்றாலுமே, நாம் பயணிக்கவுள்ள பாதை சார்ந்தது என்ற விதத்தில் நிரம்பவே முக்கியமானதென்பேன் ! So இயன்றமட்டிலும் மௌனப் பார்வையாளர்களுமே தத்தம் two cents worth கருத்துக்களைப் பகிர்ந்திட்டால் நலம் – நமக்கெல்லாம் ! பீடிகையும், பில்டப்பும் போதுமென்பதால் – விஷயத்துக்குள் குதிக்கிறேனே…?!

ஜம்போ காமிக்ஸ்” எனும் 6 சீட்டுக்களைக் கையில் வைத்திருந்து – அவற்றை ஒன்றொன்றாய் உங்கள் முன்னே இறக்குவது சுவாரஸ்யமானதொரு அனுபவமாகவே இருந்து வந்துள்ளது – சீஸன் 2-ன் துவக்கத்தின் விளிம்பில் நிற்கும் இந்த தருணத்தில் ! In hindsight – இதுவரையிலும் கதைத் தேர்வுகளில் நிகழ்ந்திருக்கக்கூடிய பிசிறுகளை அலசிட சாத்தியமாவதால் – அவை தொடர்ந்திட இடம் தரக்கூடாதென்ற வைராக்கியமும் முன் எப்போதையும் விட ஜாஸ்தி ! கதைகளின் அறிவிப்பை வெளியிடாமலே கூட உங்களுள் 75% சந்தாதாரர்கள் சீஸன்-2க்கும் thumbs-up தந்திருக்கும் போது – நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நியாயம் செய்திட வேண்டுமென்ற பரபரப்பு அனலாய்த் தகிக்கிறது உள்ளுக்குள் ! இதன் பொருட்டு எக்கச்சக்கமான தேடல்கள் ; லோடு லோடான கதைக் கோரல்கள் ; வண்டி வண்டியாய் பிரிண்ட்-அவுட்கள் ; தலையணைக்குப் பதிலாய் மொத்த மொத்தமாய் புதுக்கதைகள் என்று கடந்த மூன்று வாரங்களும் தடதடத்துள்ளன ! “மார்ச் ‘19-ல் ஜம்போ சீஸன் 2-ன் கதைகள் அறிவிக்கப்படும் !” என்று கெத்தாக விளம்பரத்தைப் போட்டு வைத்திருக்க – முதல் 4 ஸ்லாட்களுக்கு அதிகம் குளறுபடிகளின்றி கதைத் தேர்வுகள் தாமாய் அமைந்து போயின ! அவை ஒவ்வொன்றுக்குமே ஒரு அடையாளம் இருப்பதாய் எனக்குப்பட்டது!


இளம் டெக்ஸ் – காலத்தின் கட்டாயம் !

ஜேம்ஸ் பாண்ட் # 3 – நவீனத்தின் அடையாளம் !

லக்கி லூக் கிராபிக் நாவல் –கார்ட்டூன் படைப்புலகின் இன்னொரு முகம் !

மார்ஷல் சைக்ஸ் – வன்மேற்கின் yet another யதார்த்தப் பார்வை - இம்முறையோ ஒரு தடுமாறும் ஹீரோவுடன்!

ஆக எஞ்சி நின்ற 2 ஸ்லாட்களுள் புகுத்த – தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு முண்டியடிக்கும் குட்டிக் கட்சிகள் போல ஏகப்பட்ட one-shots / தொடர்கள் கைதூக்கி நிற்பது புரிந்தது ! ஒவ்வொரு ஆண்டுமே ஜுலைவாக்கில் தொடங்கும் கதை வேட்டையானது இம்முறை ஜம்போவின் பெயரைச் சொல்லி ரொம்ப முன்கூட்டியே துவங்கியிருக்க – மண்டையெல்லாம் காய்ந்து போய் விட்டது – ஒவ்வொரு மெகாப் பதிப்பகமும் இடைப்பட்டுள்ள இந்த ஏழெட்டு மாதங்களுக்குள் குவித்துத் தள்ளியிருக்கும் ஆல்பங்களின் variety-களைப் பார்த்த போது ! ஜம்போ தவிர்த்து – “ஈரோடு ஸ்பெஷல்” என்றதொரு வாய்ப்பும் காத்திருக்க, “இந்தக் கதையை இங்கே நுழைக்கவா?” அந்தத் தொடரை அங்கே புகுத்தவா?” என்ற குழப்பத்தில் சட்டையைக் கிழிக்காத குறைதான் ! இதில் வேடிக்கை என்னவெனில் காலியுள்ள shots மொத்தமே 4 தான் & கைவசமுள்ள பட்ஜெட்டுமே மிதரகம் தான் ! ஆனாக்கா – “ஐஃபெல் டவரை வாங்கிப்புடலாமா ? வெள்ளை மாளிகையை ஒத்திக்குக் கேட்கலாமா ?” என்றபடிக்கு பாயைப் பிறாண்டிக் கிடப்பதைப் பார்க்க எனக்கே சிப்பு-சிப்பாய்த் தான் வருது ! ஆனால் என்ன செய்ய ? திருவிழாவில் கலர் கலராய் பலூன்களையும், பானங்களையும், பொம்மைகளையும் பார்க்கும் போது அத்தனையையும் சொந்தமாக்கிட வேண்டுமென்ற ஆசை யாரைத் தான் விட்டது ?! இதில் இன்னொரு மெகாக் கொடுமை என்னவெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் அங்கும், இங்கும் வாங்கிப் போட்ட கதைகளுமே ஒரு கணிசமான கையிருப்பில் உள்ளன ! அவற்றைக் கொண்டே ஜம்போவின் மிஞ்சிய 2 ஸ்லாட்களையும் மட்டில்லாது ஈரோடு / பொள்ளாச்சி / உடுமலைப்பேட்டை ஸ்பெஷல்களையும் கூடத் தயார் செய்து விடலாம் தான் ! ஆனால் current ஆகக் குவிந்து வரும் கதைகள் என்னவென்று பார்த்திடும் ஆர்வம் ஆட்டிப் படைப்பதால் – ஆந்தைவிழிகளை பரபரக்க அனுமதித்து வருகிறேன்!

பொதுவாய் வேக வேகமாய் கதைகளை வரவழைத்து பிரிண்ட் போட்ட கையோடு அவற்றை கெத்தாய் ; கொத்தாய், கத்தையாய் வீட்டுக்குத் தூக்கிப் போன கையோடு படித்து, முடித்து, பரிசீலித்து விட வேண்டுமென்று எனக்கே சொல்லிக் கொள்வேன் தான் ! ஆனால் நடுராத்திரியில் 10 பக்கங்களைப் புரட்டுவதற்குள் – 20 கொட்டாவிகள் பிராணனை வாங்கிடுவதும் ; தலைமாட்டிலேயே பக்கங்களையும் கிடத்திய கையோடு குறட்டை லோகத்துக்கு டிராவல் பண்ணுவதுமே நடைமுறைகள் தான் ! பொதுவாய் கதைகளின் சுவாரஸ்யமோ – சுவாரஸ்யமின்மையோ இதற்கொரு காரணமாய் இருப்பதில்லை ; ஏழு கழுதை வயதின் தாக்கமே கொட்டாவிகளின் புண்ணியப் பின்னணி ! ஆனால் முதல் முறையாக ஒரு 132 பக்க ஆக்ஷன் த்ரில்லரை கையிலேந்திய 30 நிமிடங்களுக்குள் மெய்மறந்து படிக்க சாத்தியமாயிற்று நேற்றைக்கு ! அதைப் படித்து முடித்த கையோடு எனக்குள் ஓட்டமெடுத்த எண்ணங்களைச் சுடச் சுட பதிவாக்கவும் செய்கிறேன் – உங்களிடம் கேட்க அது சார்ந்த கேள்விகள் எனக்கிருப்பதால் !! பில்டப்புகளின் பெரியண்ணன் நான் என்பதில் ரகசியங்கள் லேது ! “துயிலெழுந்த பிசாசு” கதைக்கே ஆனை-பூனை என்ற intro தந்தவன் தானே ? So வழக்கம் போல இம்முறையும் சிலாகிப்புப் படலத்துக்குள் நான் வரிந்து கட்டிக் கொண்டு நுழையும் போது – நீங்கள் கொட்டாவி விடத் தொடங்கினால் நிச்சயம் ஆச்சர்யப்பட மாட்டேன் ! ஆனால் trust me when I say this guys – இது “புலி வருது” சமாச்சாரமல்ல ; புலியே தான்! (இதுவொரு உவமையே தவிர, புலியென்ற மறுநொடியே - "தங்கத் தலைவன் மறுக்கா வர்றாருடோய்!” என்று யூகித்திட வேண்டாமே – ப்ளீஸ்?!)

பொதுவாய் நாம் பார்த்தும், ரசித்தும் வரும் ஆக்ஷன் த்ரில்லர்களில் / டிடெக்டிவ் த்ரில்லர்களில் ஒரு மத்திய நாயகரோ – நாயகியோ இருப்பதுண்டு ! போலீஸ் இலாக்காவினில் அதிரடியாளராக வலம் வர, கெத்தாய் துப்பு துலக்கி – க்ளைமேக்ஸில் வில்லன் கோஷ்டியை முட்டியில் தட்டி – “சுபம்” போட உதவிடுவர் ! நான் படிக்க நேர்ந்த இந்தக் கதையிலுமே களம் கிட்டத்தட்ட அதே போலத் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அமெரிக்காவின் வாஷிங்டன் D.C. போலீஸ் இலாக்காவின் டீம் நடுநாயகமாய் இந்த ஆல்பம் முழுக்க பயணிக்கிறது ! Star TV ; HBO போன்ற இங்கலீஷ் சேனல்களில் அமெரிக்க குற்றப் புலனாய்வு சீரியல்களைப் பார்த்துப் பழகியிருப்போருக்குப் பரிச்சயமாகியிருக்கக் கூடிய பாணியில் இங்கே கதை நகர்த்தலுள்ளது ! மிகைப்படுத்தல்களின்றி ; போலீ்ஸ் டிடெக்டிவ்களை சூப்பர்-டூப்பர் ஹீரோக்களாகக் காட்டிடாது – அவர்கள் இலாக்காவினுள் சந்திக்கும் சவால்கள்; மேலதிகாரிகளோடு நேர்ந்திடும் உரசல்கள் ; ஒரு புலனாய்வை அதன் அத்தனை யதார்த்தப் பரிமாணங்களோடும் முன்எடுத்துச் செல்லும் பாங்கு – என்று இந்த ஆல்பம் ஒரு டி-வி சீரியலைப் போல தட தடக்கிறது !

எனது கேள்வி # 1: : ஒரு க்ரைம் த்ரில்லரின் யதார்த்த முகத்தையும் தரிசிக்க / ரசிக்க நாம் தயாரா ? என்பதே ! இது சத்தியமாய் நாம் இதுவரைக்கும் (நமது காமிக்ஸ்களில்) சந்தித்திரா ரகம் guys ! ஆனால் சந்திக்க வேண்டுமென்று நான் விரும்புமொரு ரகம் !! போலீஸ் பணிகளோடு இணைத்தடமாய் ஓடும் அரசியல் ; அதன் குறுக்கீடுகள் என்றும் படு இயல்பான இழைகளே கதைநெடுக எனும் போது, ஒரு மாமூலான “காமிக்ஸ் க்ரைம் த்ரில்லர்” சமாச்சாரங்களிலிருந்து இது மாறுபட்டுத் தெரியும் ! அதற்காக தூர்தர்ஷனின் டாக்குமென்ட்ரி படம் போல வறண்ட களமல்ல இது ! பக்கம் 1-ல் ஆரம்பிக்கும் ஓட்டமானது 132-ல் நிறைவுறும் போது நமக்கே மூச்சிரைக்கத் தான் செய்யும் ! So கதையில் இம்மி கூடத் தொய்வு நஹி ; ஆனால் கதை சொல்லியுள்ள பாணி நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசு ! So ஆண்டாண்டு காலமாய் நாம் பார்த்து வந்திருக்கும் "காமிக்ஸ் போலீஸ் டிடெக்டிவ்" கதைகளைத் தற்காலிகமாகவேணும் மறந்துவிட்டு - இந்த யதார்த்த உலகினுள் நுழைந்து பார்க்க ரெடியா guys ? 

எனது கேள்வி # 2 – ஒரு அதிரடி ஆல்பத்தை அட்டகாசமாய் ரசித்திட அதன் சித்திரங்களின் பங்கு எத்தனை சதவிகிதம் என்பீர்கள் ? என்பதே ! இங்கே ஓவியங்கள் – வில்லியம் வான்ஸின் தரத்திலோ ; பராகுடாவின் பிரம்மாண்டத்திலோ ; சிவிடெல்லியின் அழகிலோ நிச்சயமாய் இல்லை ! ஆனால் அதற்காக “மோசம்” என்றும் சொல்வதற்கில்லை ! இப்படி வைத்துக் கொள்வோமே : இதே ஆல்பத்துக்கு சித்திரங்களை இன்னும் சற்றே தேர்ந்ததொரு ஓவியர் போட்டிருந்தால் – அள்ளியிருக்கும் என்பதில் no மாற்றுக் கருத்துக்கள் ! தற்போதைய ஓவியர் ஒரு decent தரத்திலேயே பக்கங்களை நகர்த்தியுள்ளார் என்றாலும், சமீபமாய் நாம் பார்த்தும் பழகியும் வந்துள்ள ஓவிய அளவுகோல்களை இங்கே இட்டுப் பார்க்கும் பட்சத்தில் ஒரு மாற்று குறைச்சலாய் தென்படும் தான் ! அதனைப் பெரிதுபடுத்தாது இந்த ஆல்பத்தை வாங்க நாம் முயற்சிப்போமா folks ? அல்லது "மித சித்திரங்களெனில் மறுக்கா யோசிக்கலாம் !” என்பீர்களா?

கேள்வி # 3 : கதையோட்டமும், சொல்லப்பட்டிருக்கும் விதமும், களமும்  நிச்சயமாய் சற்றே புருவங்களை உயரச் செய்யும் தான் ! தெறிக்கும் வன்முறை ; யதார்த்த குற்றவுலகின் விகார முகம் என்று முகத்தில் அறைந்தாற் போல கதை சொல்லியுள்ளனர் எனும் போது “18+ வாசகர்களுக்கே உகந்தது” என்ற ஸ்டிக்கர் அவசியப்படலாம் ! இதனை எவ்விதம் பார்த்திடுவீர்களோ guys ? “ஜனரஞ்சகத்தை விட்டு சிறுகச் சிறுக விலகுகிறோம் ! இந்தப் போக்கு நம் பயணத்துக்கு சுகப்படாது!” என்பீர்களா? அல்லது – வாசக வட்டத்தின் தற்போதைய அகவைகளையும் ரசனைகளையும் மனதில் கொண்டு - "இத்தகைய முதிர்ந்த பாணிகளைத் தேடிப் போவது தப்பில்லை !" என்பீர்களா ? அதே போல தொட்டதுக்கெல்லாம் “முன்பதிவுக்கு மட்டுமே” என்ற அஸ்திரத்தைக் கையிலெடுக்க எனக்கு அத்தனை இஷ்டமில்லை என்பதில் இரகசியமில்லை folks ! ஆனால்  – இது மாதிரியான கதைகள் எந்தவொரு சந்தாப் பிரிவினுள்ளும் கட்டாயத் திணிப்பாய் இல்லாது – “பிடித்தால் வாங்கிக்கலாம்” என்று அமைவதே நல்லதென்பீர்களா? Enlighten me please…!

ஏகப்பட்ட புதுக்கதைகளைப் படிக்கத் தொடங்கும் போது ஆரம்பம் பிரமாதமாக இருந்திடுவதுண்டு ! "ஆஹா… இதைப் போடறோம் ; ஹிட் அடிக்கிறோம்; வாசகர்கள் பாராட்டும் போது அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ… எல்லாமே கதாசிரியரின் கைவண்ணம் !என்று ஜாலியாய்ப் பதிவிடுகிறோம்!” என்ற ரேஞ்சிற்குக் கற்பனையில் திளைத்திடுவதுண்டு ! ஆனால் பாதிக் கதையைத் தாண்டும் போதே – தம்மாத்துண்டு மாவை மட்டுமே கையிருப்பில் வைத்துக் கொண்டு படைப்பாளிகள் வடை சுட வந்திருப்பது புரியத் துவங்கிட்டால் “ஙே” என்ற முழியே மிஞ்சிடும் ! கதையை முடிக்கும் போது யாரையாச்சும் மூக்கில் குத்துவோமா ? என்பது மாதிரியானதொரு இனம் சொல்லத் தெரியா எரிச்சல் ஓட்டமெடுக்கும் ! So இம்முறையும் அதே பாணியில்,  இந்தக் கதையின் அட்டகாச ஆரம்பத்தைப் பார்த்த கணமே எனக்குள் சன்னமாய் ஒரு வேண்டுதல் துளிர் விட்டது! “தெய்வமே… இதுவுமொரு பப்படமாய் முடிந்திடக் கூடாதே!” என்று ! பக்கங்களைப் புரட்டப் புரட்ட கதையில் பரபரப்பு ஒரு பக்கமெனில் – அதைக் கடைசி வரைக்கும் தொய்வின்றிக் கொண்டு செல்லும் ஆற்றல் கதாசிரியருக்கு வாய்த்திருக்க வேண்டுமே என்ற எனது பதைபதைப்பு இன்னொரு பக்கம் ! “சுபம்” என்ற வேளையைத் தொட்டு நின்ற போது எனக்குள் 90% நிறைவு !! நூற்றுக்கு - நூறு ; சதம் ; என்றெல்லாம்  பீலா விட மாட்டேன்; ஆனால் 90% மார்க் போடத் தயங்கவும் மாட்டேன் !

இந்தக் கதையினை வாங்க நீங்கள் பச்சை விளக்கை ஆட்டிடும் பட்சத்தில் நிச்சயமாய் இன்னொரு ஒத்தாசையும் செய்ய வேண்டியிருக்கும் guys ! ஐரோப்பியப் படைப்பாளிகளின் கைவண்ணம் இதனில் இருப்பினும், இது முற்றிலும் அமெரிக்க மண்ணில் அரங்கேறும் அதகளமெனும் போது – கதைநெடுக பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடை true blue yankee ரகமே ! அதுவும் போலீஸ் புலனாய்வு சார்ந்த கதையெனும் போது – வசனங்கள் செம crisp ! நிச்சயமாய் அமெரிக்கப் பேச்சுவழக்கில் புரிதலும், பரிச்சயமும் கொண்டதொரு திறன் வாய்ந்த மொழிபெயர்ப்பாளராலே தான் இந்தக் கதைக்கு நியாயம் செய்திட முடியும் ! So உங்களுள் யார் அந்த அமெரிக்க மாப்பிள்ளை ? சாரி… சாரி… அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் ? என்பதே எனது கேள்வி ! அல்லது - இப்பணிக்கென தேர்ந்த எழுத்தாளர்களுள் யாரையேனும் பரிந்துரைப்பீர்களா ? சராசரிகளுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப மேலுள்ள மொழித்தரம் இங்கே அத்தியாவசியம் என்பதால், இந்த ஆல்பத்தை நாம் கையிலெடுக்கத் தீர்மானித்தால் அதற்கான ஏற்பாடுகளும் கையிலிருப்பது  கட்டாயமாகிடும் guys !

உப்ப்ப் ! “பில்டப் பரமானந்தா” அவதார் நீண்டு கொண்டே போகிறதென்று உறுத்தினாலும், இன்றைக்கு உங்களை விடுவதாகயில்லை ! மேலும் ஒரு கேள்வி waiting ! இதுவோ – இன்னொரு முற்றிலும் புதியதொரு ஆல்பம் சார்ந்தது !! So உங்களின் ஞாயிறு காலைத் தேநீர்க் கோப்பை காலியாகியிருக்கும் பட்சத்தில் – வீட்டில் இன்னுமொரு அரை கப் மட்டும் வாங்கி விட்டுப் படிக்கத் தொடருங்களேன்?

ஒரு நல்ல கார்ட்டூன்” என்று அடையாளப்படுத்திட உங்களது அகராதியில் என்னவெல்லாம் இடம்பிடித்திட வேண்டுமென்பீர்கள் folks ?

- பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகள் சிதற வேண்டும் !

- வேடிக்கையான சித்திர பாணி கட்டாயம் தேவை !

- ஜாலியான களம் இருக்கணும் !

மேற்படி 3 புள்ளிகளுமே தேவை தான் – இல்லையா ? 

சரி, ஓ.கே…. “ஒரு விறுவிறுப்பான கதை” என்று சொல்லிட என்னவெலாம் அத்தியாவசியப்படக் கூடும் folks?

- பஞ்சமிலா ஆக்ஷன் !

- சுறுசுறுப்பான கதை நகர்த்தல் !

- படித்து முடிக்கும் போது ‘அட‘ என்ற புருவ உயர்த்தல் சன்னமாகவேணும் நிகழ்ந்திட வேண்டும் !

ரைட்டு ! இப்போது முதல் மூன்றில் கொஞ்சமும், இரண்டாவது மூன்றில் கொஞ்சமுமாய்  சேர்ந்தொரு ஆல்பம் அமைந்தால் அதை என்னவென்பது? “ஒரு விறுவிறுப்பான கார்ட்டூன்” என்றா ? அல்லது “ஒரு ஜாலியான விறுவிறுப்பு” என்றா ? சரி – என்னமோவொரு பெயரை யோசித்துக் கொள்வோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் ! சரி- இந்த ஆராய்ச்சியெல்லாம் ஏனோ ? என்ற கேள்வியா உங்கள் வசம் ? Simple guys – சமீப வாசிப்புகளின் ஒரு அங்கமாய் புதியதொரு நெடும் one-shot கையில் சிக்கியது ! சிரிக்கவும் செய்து, சிந்திக்கவும் வைத்தது ! லக்கி லூக் பாணியிலோ ; மேக் & ஜாக் ஸ்டைலிலோ ரெண்டு பக்கத்துக்கொரு gag ; ஒரு வெடிச் சிரிப்பு என்றெல்லாம் இருக்கவில்லை – ஆனால் கதை நகர்த்தலுக்குத் தேவைப்படும் மாந்தர்களுள் சிலர் இயல்பாகவே காமெடி பீஸ்களாக அமைந்திருக்க, அவர்கள் தலைகாட்டும் தருணங்களில் சிரிப்புத் தோரணங்கள் களைகட்டுகின்றன ! அதே சமயம் சொல்ல வரும் கதையின் தன்மை செம வலுவானதெனும் போது, காமெடிகளின் ஒட்டுமொத்த இலகுத்தன்மை இங்கே இராது ! மாறாக – ரொம்பவே intense ஆனதொரு வாசிப்பை இது கோரிடும் ! My questions here are : 

- இப்படியொரு hybrid கதை பாணியை ரசிக்கலாமென்று தோன்றுகிறதா guys?

- “ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல்” என்ற இடத்தினில் இந்த “ஜாலியான விறுவிறுப்பு” இடம்பிடிக்க அனுமதிக்கலாமா?

- குழம்பு ருசியாக உள்ளவரைக்கும் சமையல் பாணி நம்மூர் ரகமா ? வடநாட்டு ரகமா? என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்பீர்களா ? அல்லது – நாம் ரசித்துப் பழகிய அதே சாம்பாரையும், ரசத்தையும் நோண்டுவானேன் ?  என்பீர்களா guys ?

- “ஓவர் விஷப்பரீட்சை உடம்புக்கு ஆகாது !” என்பதே எனக்கான உங்களது பரிந்துரையாக இருக்குமா ? அல்லது – “போவோமே… போய்த் தான் பார்ப்போமே!” என்பீர்களா guys?

சரி- இந்த பில்டப்பெல்லாம் எந்தெந்தக் கதைகளுக்கானவை என்று கேட்கிறீர்களா ? உங்கள் பதில்களுக்கேற்பவே நமது ஏற்பாடுகள் அமைந்திட வேண்டும் & அவற்றின் பின்னர் படைப்பாளிகள் மனது வைத்தாலே இவை நனவாகிடும் என்பதால் இப்போதைக்கு பில்டப் பரமானந்தாவுடன், பெவிகால் பெரியசாமியே கைகோர்த்துக் கொள்கிறான் ! ஆனால் நாமொரு மரியாதைப்பட்ட முன்மொழிவைப் படைப்பாளிகளிடம் ஒப்படைத்தால் கதைகளை வாங்கிடுவதில் சிரமங்கள் இராது என்றே தோன்றுவதால் தற்சமயம் வாசக சமூகங்களின் பிரியங்களே பிரதானம் என்ற சூழல் ! So ப்ளீஸ்… ஞாயிறின் தூக்கத்தைத் தொடரும் முன்பாய் உங்களின் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ! சிம்பிளாய் மட்டுமே பதில் சொல்ல நினைப்போர் - "குரங்கு சேட்டை இப்போ தேவை நஹி !!" என்றோ - "ஆட்ரா ராமா...தாண்ட்ரா ராமா !!" என்றோ சொன்னால் கூடப் போதும் - புரிந்து கொள்வேன் ! மற்றபடிக்கு விவரமாய் கருத்துக் சொல்ல விழையும் நண்பர்களும் - most welcome !! Am all ears here !!

அப்புறம் – ஓவியர் ஹெர்மனின் one-shot ஆல்பங்கள் ஏகமாய்த் ததும்பிக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது ! அவரது மகனான Yves கதையெழுத – தந்தை சித்திரம் தீட்ட – எக்கச்சக்கமான ஜானர்களில் இந்தக் கூட்டணி கலக்கி வருகிறது ! (Yves ஏற்கனவே நமக்குப் பரிச்சயமே; கேப்டன் பிரின்ஸின் ஆல்பமொன்றிலும், XIII – இரண்டாம் சுற்றிலும் கதாசிரியராய்ப் பணியாற்றிய வகையில்) So இந்த பிரான்கோ-பெல்ஜிய ஜாம்பவான்களின் கதைகளை விதவிதமாய் ரசிக்கத் தேவையான ரோடு போட ஜல்லி ; தார் ; சிமெண்ட் என சகலமும் ரெடி! ஜல்லியை விரித்து, தாரைத் குழைக்க வாகான வேளைக்கு மட்டுமே வெயிட்டிங் ! ஏற்கனவே சில கதைகள் கைவசமிருக்க, தற்போது இன்னும் சிலவற்றில் துண்டை விரித்து வைத்துள்ளோம் என்பதால் – தொடரும் சந்தர்ப்பங்களில் பலரகப்பட்ட ஹெர்மென் ஸ்பெஷல்கள் on the way ! ஜெரெமியா தொடரில் சற்றே ஜெர்க்கடித்துக் கிடக்கும்   நண்பர்களும் கூட இந்த one-shots களை ரசித்திடச் சிரமப்பட மாட்டார்களென்பது எனது கியாரண்டி ! 

 Before I sign out - மார்ச் இதழ்கள் & others பற்றிய updates :

1. ஜேம்ஸ் பாண்டின் ஜம்போ (Season 1) – முழுவண்ணத்தில் ரெடி ! இத்துடன் சீசன் 1 நிறைவுறுகிறது !! 

2. அப்புறம் மாறுவேஷச் சிங்கம் ; துப்பறியும் புலியுமே முழுவண்ண மறுபதிப்பில் ரெடி ! Herlock Sholmes !!

3. இரவுக் கழுகார் மிரட்டலாயொரு 260 பக்க சாகஸத்தோடு waiting – எடிட்டிங்கின் பொருட்டு !

4.        Ditto – “"முடிவிலா மூடுபனி"” கிராபிக் நாவலுக்கும் !

5.    அப்புறம் - இதோ ஜம்போ சீசன் 2-ன் இறுதிப் பட்டியல் ! தி லோன் ரேஞ்சரின் ஒரு முழுவண்ண-முழுநீள ஆல்பம் slot # 5-ஐக் கைப்பற்ற - கடைசி சீட்டைத் தனதாக்கிக் கொள்வதொரு அதிரடி ஆக்ஷன்  த்ரில்லர் ! மர்ம மனிதன் மார்ட்டின் பாணியில் இங்கே ஒரு மெர்செலாக்கும் கதைபாணி வெயிட்டிங் ! :"கால வேட்டையர்" - உங்கள் உள்ளங்களை வேட்டையாட - சீசன் 2-ன் முதல் இதழாக ஏப்ரலில் களமிறங்குகிறது !! So இன்னமும் ஜம்போ - சீசன் 2-ன் சந்தாவில் இணைந்திரா நண்பர்கள் இனியும் தாமதித்திட வேண்டாமே - ப்ளீஸ் ? 

அது சரி - ஜம்போவின் இடங்களை முழுசாய்ப் பூர்த்தி செய்தான பிற்பாடு மேலே பத்தி பத்தியாக கடைவிரித்துள்ள இதழ்கள் தேர்வாயின் அவற்றை எங்கே நுழைப்பதாம் ? என்ற கேள்வி ஓடுகிறதா உங்களுள் ? இருக்கிறதே slots - "ஈரோடு ஸ்பெஷலில் " !! 
6.   நாகர்கோவிலில் பிப்ரவரி 15 to 25 வரை நடைபெற்றிடும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 100 guys ! And  இங்கேயும் நமது CINEBOOK ஆங்கில காமிக்ஸ் இதழ்களும் விற்பனைக்கு (கொஞ்சமாய்) இருக்கும் ! அந்தப் பக்கத்து நண்பர்கள் ஒரு visit அடிக்கக் கோருகிறோம்  !! Please do drop in folks !!
திருமணத்து ஜாலிகள் நிறைவுற்ற பின்பாக 2 black & white இதழ்களையுமே பரபரவென பணிகளுக்கு உட்படுத்தினால் – பிப்ரவரி 28-க்கு டெஸ்பாட்ச் சாத்தியமே என்று தோன்றுகிறது ! Too early for now – அதனால் சாம்பார் வாளியைத் தேடிப் புறப்படுகிறேன் இப்போதைக்கு! See you around all ! Have a fun Sunday !