Powered By Blogger

Friday, January 25, 2013

அசுரர்களின் தேசத்தில்..!


நண்பர்களே,

வணக்கம். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளையாய் பனிப் போர்வை ; ஆளாளுக்கு ரெண்டு ஸ்வெட்டர் ; மூன்று ஜாக்கெட் என்று மாட்டிக் கொண்டு திரியும் ஐரோப்பிய நகர வீதிகள் ; 'மைனஸ் 8' ; 'மைனஸ் 9' என்று ஏதோ புது ஹாலிவுட் படப் பெயர்கள் பாணியில் வானிலை அறிக்கைகள் !ஆஹா, நம் மண்ணின் அருமை எப்போதையும் விட இது போன்ற தருணங்களில் தான்  நன்றாகவே மண்டைக்கு உறைக்கின்றது ! குளிருக்கும், என் பயணங்களுக்கும் இடைப்பட்டதொரு நாள் மாலையில் பாரிஸ் நகரில் வசிக்கும் நம் நண்பர் ராட்ஜாவை சந்திக்க இயன்றது சந்தோஷமானதொரு தருணம் ! நம்மையும் நண்பரையும் பிரிப்பது 5000 மைல்கள் என்ற போதிலும்  காமிக்ஸ் காதலிலோ ,இங்கே நம் வலைப்பதிவினில் அரங்கேறி வரும் சந்தோஷ அரட்டைக் கச்சேரியினில் லயித்திடுவதிலோ நமக்கு சிறிதும் சளைத்தவரல்லவே என்பது அவரோடு செலவிட்ட ஒரு மணி நேரம் எனக்கு நன்றாகவே உணர்த்திட்டது ! Thanks for the dinner Radja ! பயண புராணங்களை விட ; பனியின் பரிமாணங்களை விட ; சென்றிட்ட  பணியில் கிட்டிய சங்கதிகளே உங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டிடும் என்பதை அறிவேன் ; so let's get on to business ! 

பதிப்பாளர்களைச் சந்தித்திட நான் பயணமாவது இது முதன் முறையல்ல என்ற போதிலும், இம்முறை கிட்டிய அனுபவம் முன்னெப்போதும் கிட்டியிரா ரகம் !  நம் பயணத்தில் NBS ஒரு massive மைல்கல் என்பதை நாமறிவோம் ; ஆனால் அது எங்களுக்குத் தந்துள்ள இறகுகளின் வலிமையினையோ ; சுதந்திரத்தின் ஆற்றலையோ வார்த்தைகளில் கொணர்வது சுலபமல்ல ! இது நாள் வரை நான் சந்திக்கும் ஒவ்வொரு பதிப்பகத்திலும்- "துப்பறியும் பாணியிலான கதைகளில் புது வரவெது ? ".. "கௌபாய் தொடர்களில் புது முயற்சிகள் ஏதும் உண்டா ?"... "ரொம்ப கைப்பிள்ளைத்தனமாய் இல்லாத கார்டூன் தொடர்கள் இருந்தால் சொல்லுங்களேன் ?"  என்ற பாணியில் தான் தொணத் தொணப்பேன் ! ஆனால் நம் ரசனைகளின் பரிணாம வளர்ச்சி   தந்துள்ள உத்வேகம் ; NBS -ன் வெற்றி தந்துள்ள வேட்கை -  ஐரோப்பியப் படைப்புகளின் முழுப் பரிமாணத்தையும் அகன்ற விழிகளோடு (?!!) பரிசீலிக்கும் தைரியத்தைத் தந்துள்ளது - முதன்முறையாக ! 

பிரான்கோ - பெல்ஜியப் படைப்பாளிகளையும் சரி ; அவர்கள் வழங்கிடும் படைப்புகளை நேசமாய் ரசிக்கும் வாசகர்களையும் சரி - ஒற்றை வார்த்தையில் வர்ணிப்பதென்றால்  - "அசுரர்கள்" என்று சொல்லிடலாம் ! நம் மாமூலான தேடலை மாத்திரமே மையப்படுத்திக் கொண்டிராமல்    ; அந்த பட்டை பூட்டிய குதிரைப் பார்வைக்கு சின்னதாய் ஒரு விடுப்புக் கொடுத்து விட்டு நம் பார்வையை அகலச் செலுத்தும் போது தான் - அந்த காமிக்ஸ் அசுரர்கள் உருவாக்கியுள்ள புதையல்களின் முழுத் தாக்கம் லேசாகப் புலனாகிறது ! எத்தனை எத்தனை கதைக் களங்கள் ; எத்தனை எத்தனை ஸ்டைல்கள் ; கற்பனைகளின் எல்லைகள் இத்தனை அசாத்தியமானவைகளா என்று வாய் பிளக்கச் செய்யும் ஒரு display !  

வண்ணம் எனும் முக்கிய அம்சம் நம்மிடம் அப்போதெல்லாம் கிடையாதென்பதால் முதல் பார்வையிலேயே "இது சரிப்படாது " என்று நான் ஓரம் கட்டிய கதைகளை - புதிய பார்வையோடு இன்று  தரிசிக்கும் போது சுரீர் என்று நிஜங்கள் சுடுகின்றன ! "நம் மாமூலான ரசனைக்கு அப்பாற்பட்டது " என்று முன்பு ஒதுக்கிய தொடர்களை - இப்போது நம் புதிய ரசனைகள் அரவணைத்துக் கொள்ளுமோ ? என்ற கேள்வியினை எனக்குள்ளே எழுப்பிடும் போது கிட்டிடும் பதில்கள் வித்தியாசமானவை ! "அழகான நாயகர்களோ ; லட்சணமான மாந்தர்களோ இந்தப் பாணியிலான ஓவியங்களில் இல்லையே " என்று காரணம் சொல்லி மறந்திட்ட பல தொடர்கள் அங்கே சில லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிடுவதைப் பார்க்கும் போது ; நமது எல்லைகளும் விரிந்திருப்பது நினைவுக்கு வருகின்றது ! 

எத்தனை வித விதமான உலகங்களைப் படைக்க முயற்சிகள் செய்துள்ளனர் என்பதைப் பார்க்கும் போதே மூச்சிரைக்கின்றது !  உலக யுத்தத்தின் ரத்தம் தோய்ந்த பின்னணிகள் ; 1920 ல் அமெரிக்காவில் நிலவிய மாபியா குற்றக் கும்பல்களின் பின்னணிகள் ; எங்கோ பிழைப்புத் தேடிச் செல்லும் மாந்தர்களின் இழப்புகளைப் பட்டியிலிடும் கதைகள் ; வரலாற்றையே ; மத நம்பிக்கைகளையே புரட்டிப் போட எத்தனிக்கும் அசாத்தியக் கற்பனைகள் ; முதுமையை ; உறவுகளுக்குள் அது கொணரும் மாற்றங்களை சித்தரிக்கும் கதைகள் ; Concept series என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நம்பரில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கதைகள் ; ஆனால் இறுதியினில் அத்தனை கதைகளுக்குமொரு ஒற்றுமையான மையப் புள்ளி இருந்திடுவது ;இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம் அவர்களது கற்பனைகளில் பூத்த புதையல்களின் பட்டியலை !  

அதற்காக அவர்களது அத்தனை படைப்புகளும் அட்டகாசம் என்றும் சொல்லிட மாட்டேன் ; அபத்தமாய்த் தோன்றியதொரு பூதம் - ராட்சச மிருகங்கள் - பாணியில் ஒரு கதைத் தொடரைப் பார்த்து பேந்தப் பேந்த முழித்தேன் ! 'இது எங்களது bestsellers பட்டியலில் உள்ள தொடராக்கும்; இது வரை மொத்தம் 30 லட்சம் ஆல்பங்கள் இந்தத் தொடரில் விற்பனை ஆகியுள்ளது' என்று அவர்கள் சொல்லிய போது - 'ஹி..ஹி' ..தான் பதிலாக்கிட இயன்றது எனக்கு ! இது போன்ற கண்மூடித்தனமான காமிக்ஸ் நேசம் எதற்கு பயனாகிறதோ இல்லையோ ; அங்குள்ள பதிப்பகங்களை புதுப் புது பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள துணிந்திடச் செய்கிறது! ஒரு தொடரின் கருவே - "WHAT IF ..?" என்பதே ! 
  • நிலவில் முதலில் கால் பதித்தது அமெரிக்கர்களாக இல்லாது ரஷ்யர்களாய் இருந்திருந்தால்  - வரலாற்றின் போக்கு எப்படி மாறி இருக்கும்  ?

  • அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னெடி கொலை செய்யப்படாது போய் இருந்தால்..? 
இது போன்ற "what if  ?" கேள்வியோடு ஒரு 7/8 ஆல்பங்கள் அத்தொடரில் !  இந்தப் பரீட்சார்த்தமான தொடர்களின் வெற்றிகள் ஒரு நாளும் உத்திரவாதமானதல்ல ! "வம்பெதற்கு ?" என்று ரிஸ்கில்லாமல் லக்கி லூக்களையும், லார்கொ வின்ச்களையும் போட்டு கல்லா கட்டி விட்டுப் போக ஒரு சுலப மார்க்கமும் உண்டெனும் போது , இது போன்ற விஷப் பரீட்சைகளை மேற்கொள்ளும் அவர்களது guts அசாத்தியமானது என்று தான் சொல்லிடத் தோன்றுகிறது ! வாய் பிளந்து அவர்களது காமிக்ஸ் அணிவகுப்பை பார்த்திட்ட போது எனக்குள் பல வித சிந்தனைகள்...! 'ரசனைகளில் நாம் ஒரு படி முதிர்ச்சியடைந்து விட்டோமென மார் தட்டும் வேளையில் - அவர்கள் நமக்கு கண்ணுக்கே எட்டாத தொலைவிற்குப் போய் நிற்கிறார்களே என்ற ஆற்றமாட்டாமையா ?  இவற்றை நாமும் ரசிக்க முயற்சிக்கும் நாள் அத்தனை தொலைவினில் இல்லை என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், நாம் ஒரு அடி பாய்வதற்குள் அவர்கள் 16 அடி பாய்ந்திருப்பார்களோ என்ற பதட்டமா ? அல்லது ...புதுப் பாணியிலான கதைகளை ரசிக்கிறேன் பேர்வழி என்ற போர்வையினில் நமது வழக்கமான அதிரடிக் கதைகளை உதறிடாது - இரண்டுக்கும் ஒரு நடுப் பாதையினை உருவாக்குவது சாத்தியப்படுமா என்ற குழப்பமா ? இவற்றில் எது என்னுள் ஓடிடும் சிந்தனைகளின் நிஜமான பிரதிபலிப்பு ? - விடை தெரியாது தலையைச் சொறிகிறேன் ! நாம் இது நாள் வரை தரிசித்து வந்திருப்பது காமிக்ஸ் எனும் பனிக்கட்டியின் ஒரு நுனிப் பகுதியினை மாத்திரமே ; இன்னமும் காத்திருப்பது ஒரு இமாலய மலையளவு என்ற உணர்வு உள்ளே இறங்கிடும் போது - விவரிக்க இயலா சிலிர்ப்பு ! 



அதே சமயம் கடவுளின் வரம் பெற்றதொரு தேசம் ஒரு தலைமுறையாய் உருவாக்கியதை - ஒரே நாளில் நான் தமிழுக்குக் கொணரப் போகிறேன் பேர்வழி என்று மார் தட்டினால் அது காமடி ஆகி விடும் என்பதையும் புரியாதில்லை  ! வாங்கி வந்திருக்கும் புது தொடர்களை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துப் பரிசீலனை செய்து பார்க்கும் பணியினை துவக்குவதை முதல் காரியமாக வைத்துக் கொண்டு, சிறுகச் சிறுக நம் களத்தை விரிவாக்க  முயற்சிகள் தொடங்கிடுவோம் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன் ! ஒ.கே. ஆகிடும் புதிய தொடர்களை பற்றி அவ்வப்போது தெரியப்படுத்துகிறேன் !


அதற்கு முன்பு ரொம்பவே அவசியப்படும் சில நிர்வாக முன்னேற்றங்களை நடைமுறைபடுத்துவது priority  # 1 ! உதாரணமாய் புதிய டெக்ஸ் இதழினை சந்தாவிற்கு அனுப்பிடுவதில் அலுவலகத்தில் தனி ஆளாக 10 நாட்களாய் செயல்பட்டு வரும் ஸ்டெல்லாவிற்கு  நேர்ந்த சிரமங்களைச் சொல்லிடுவேன். ராதாக்ருஷ்ணன் சென்னை புத்தகத் திருவிழாவில் உள்ளபடியால், புதிய சந்தாதாரர்களையும் ; 2012-ன் மீத பண வரவு உள்ள சந்தாதாரர்களையும் ஒருங்கிணைத்து புதிய பட்டியல் தயார் செய்வதில் சிரமப்பட்டதால் தாமதம் நேர்ந்துள்ளது. செவ்வாய் இரவு நான் சற்றே login செய்த போது தான் சந்தா பிரதிகள் இன்னமும் அனுப்பப்படாது இருப்பது தெரிய வந்தது ! பதறிப் போய் ஸ்டெல்லாவிடம் பேசி, பயந்த சுபாவம் கொண்ட அந்த சின்னப் பெண்ணிற்கு தைரியமூட்டி , வேலை வாங்கிட அவசியமாகிப் போனது. இது போன்ற சிக்கல்களைக் களைய ; வரும் நாட்களில் சந்தாக் கணக்குகளை கணினி மூலம் நிர்வகிக்க ப்ரோக்ராம் ஒன்று உருவாக்கச் சொல்லிட எண்ணியுள்ளேன் ! I .T . -ல் செயல்பட்டு வரும் நண்பர்கள் இது தொடர்பாய் ஏதேனும் technical inputs தருவதாக இருப்பின் நமக்கு மின்னஞ்சல் அனுப்பிடலாம் !

அப்புறம் அந்த "Kaun Banega Translator" சங்கதிக்கு நிறையவே ஜீவனுள்ளது ! வரும் திங்கட்கிழமை நான் சிவகாசி திரும்பிய பின்னே கூரியரில் மொழி பெயர்க்கப்பட வேண்டிய பக்கங்கள் அனுப்பப்படும் ! முகவரியும் சேர்த்து அனுப்பியுள்ள நண்பர்களுக்கு மாத்திரமே இது வந்து சேரும். கடல் கடந்து வசிக்கும் நண்பர்களுக்கு மாத்திரமே pdf file !

இறுதியாய் - இந்தாண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவினைப் பற்றி...! ஒற்றை வரியில் சொல்வதென்றால்...' அற்புதமான விற்பனை !! ...சென்றாண்டின் விற்பனைத் தொகையினை விட இம்முறை 2 மடங்கு கூடுதல் ! இத்தனைக்கும் இம்முறை நம்மிடம் கையில் இருந்த back  issues எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே ; விழா நடந்திட்ட நாட்களும் குறைச்சலே ! நம் பயணத்திற்கு உற்சாகம் மாத்திரமே பெட்ரோல் ஆகிடாது ; புன்னகைக்கும் தேசப் பிதாவின் படத்தினை சுமந்து வரும் கரென்சியும் அத்தியாவசியம் என்பதால் - தேங்கிக் கிடந்த பிரதிகள் பணமாகிட்டது எங்களுக்கு பெரும் உதவியாகி விட்டது ! Thanks a ton everybody !!

வசூலான பணத்தை ராயல்டி வகைக்காக வங்கி மூலம் சுடச் சுட அனுப்பி வைத்து 2013 -ன் முதல் 5 மாதக் கதைகளை கையோடு வாங்கி வந்து விட்டேன். என்னோடு பயணம் செய்தவர்கள் லார்கோவும் ; ஷெல்டனும் ; டைகரும்; மதியில்லா மந்திரியாரும் ; சிக் பில்லும் ! மார்ச் மாதம் வரவிருக்கும் லார்கோவின் 2 பாக த்ரில்லருக்கு ஒரு பெயர் சூட்டுப் போட்டியினை வைக்கும் நேரமும் வந்து விட்டது. விளம்பரத்தில் "action ஸ்பெஷல்" என்று பெயரிட்டிருந்தேன் ; ஆனால் அதை விட 'பளிச்' ரகத்தில் பெயர் கிட்டினால் மாற்றிடுவோமே ! So, start music !


"சிகப்பாய் ஒரு சொப்பனம் " - டெக்ஸ் இதழுக்கான உங்களது reviews + வாசகர் கடிதம் பகுதியினில் டாக்டர் பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதியிருந்தது பற்றிய உங்களின் எண்ணவோட்டங்களையும் இங்கேயே பதிவிடலாமே - கடந்த பதிவு 370+ பின்னூட்டங்களோடு ரொம்பவே நீண்டு விட்டது ! சின்னதாய் ஒரு தகவலும் கூட - டெக்சின் அட்டைபடம் இத்தாலிய ஒரிஜினலை inspiration ஆக வைத்துக் கொண்டு நம் ஓவியர் உருவாக்கியது ! இத்தாலிய  அட்டைப்படங்கள் வெறும் லைன் டிராயிங்கில் வண்ண சேர்க்கை செய்திடும் முறையில் உருவாக்கப்படுபவை  ; இதனில் முகங்களில் , உடல்களில் ஒரே flat ஆன கலரிங் மாத்திரமே சாத்தியப்படும். நாம் பெயிண்டிங் போடும் போது - லைட் & டார்க் effects கொணர்ந்திட இயலும். இது முழுக்க முழுக்க நம் ஓவியரின் கைவண்ணமே !  

P.S : "கிராபிக் நாவல் ; புதுப் பாணி விஷப் பரீட்சை கதைகள் என்று இறங்கி விட்டால், நம் வழக்கமான நாயகர்கள் அம்பேல் தானா ?" என்ற சந்தேகமே வேண்டாம் ! மாற்றம் ; முன்னேற்றம் என்ற காரணத்தைச் சொல்லி வெற்றி பெற்ற தொடர்களை மூட்டை கட்டி விடும் எண்ணமெல்லாம் நிச்சயம் இல்லை. புதுப் பாணிகளில் மிகச் சிறப்பாய் உள்ளவற்றை மட்டும் முயற்சிக்க முனைவோம் ; சிறுகச் சிறுக ! 

Saturday, January 19, 2013

ஒரு கழுகின் வருகை !


நண்பர்களே,

வணக்கம். தூக்கம் பிடிக்கத் தாமதமானதொரு சமீபத்திய இரவில் என் மண்டைக்குள் உதித்த கேள்வி இது....! 

  • துப்பறியும் ரகக் கதைகளை ரசிக்கிறோம் ..சரி ; 
  • கார்ட்டூன் கலாட்டாக்களை ரசித்து வாய் விட்டுச் சிரிக்கிறோம் ..சரி..; 
  • அமானுஷ்யக் கதைகளை சில வேளைகளில் ரசித்து, அந்த இருண்ட உலகிற்குள் நம் சிந்தனைக் குதிரைகளை உலவ விடுகிறோம் ...சரி ; 
  • யுத்தப் பின்னணிகளைப் படித்து ரசிக்கிறோம்....சரி ; 

ஆனால் நாம் கண்ணில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லாததொரு கரடு முரடான கௌபாய் உலகை ; நமக்குத் துளியும் தொடர்பற்றதொரு வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் இந்த கௌபாய் ரகக் கதைகளை நாம் இத்தனை ஈடுபாட்டோடு ரசிக்கக் காரணம் தான் என்னவாக இருக்கும் ?  வின்செஸ்டர்களும், பிஸ்டல்களும், நமக்கு குச்சி மிட்டாய் ; குருவி ரொட்டி ரேஞ்சுக்குப் பிடித்துப் போனது ஏனோ ? டெக்சாஸ் மாகாணத்தின் நகரங்களும்  ; அரிசோனாவின் பாலைப்பரப்புகளும், கணவாய்களும் -உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டையும், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனையும் போல் பரிச்சயமாகிப் போனதற்கு பின்னணிக் காரணம் தான் என்னவாக இருந்திட முடியும்?  

இந்த "கௌபாய் காதலுக்கு " முதல் வித்திட்ட பெருமை நம் டாப் ஸ்டார் டெக்ஸ் வில்லருக்கே என்பதில் துளியும் கருத்து வேறுபாடு இருந்திட சாத்தியமில்லை என்று சொல்வேன் ! 1985-ல் டெக்ஸ் தன் அதிரடிகளைத் துவக்கிட்டதற்கு முன்பு சிஸ்கோ கிட் கொஞ்சமாகவும் ; எப்போதாவது வந்திட்ட  "சூதாடும் சீமாட்டி " ரகக் கதைகள் அதையும் விடக் கொஞ்சமாகவும் முத்து காமிக்ஸில் தடம் பதித்திருந்தன ! ராணி காமிக்ஸிலும் "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்.." ரக one -shot கதைகளைத் தாண்டிப் பெரிதாய் ஏதும் கௌபாய் தொடர்கள் பரீட்சிக்கப் பட்டதாய் எனக்கு நினைவில்லை ! "தலைவாங்கிக் குரங்கு " நிறைய வகைகளில் நம் ரசனைக்குப் புதியதொரு கதவைத் திறந்து விட்டதொரு landmark இதழ் ! தொடர்ந்த காலங்களில்  சிரிப்பு ; வீரம் ; விவேகம் ; சோகம் என்று பலவித பாணிகளிலான  ஏராளமான கௌபாய்களை சந்தித்து விட்டோம் ! ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தக் காதலின் வீரியம் துளியும் குறைந்த பாடைக் காணோம் எனும் போது - இந்த கௌபாய்களுக்கும் நமக்குமான chemistry இத்தனை வலுவாய் அமைந்திட்டதற்கு ஏதேனும் logical காரணம் இருந்திட வேண்டுமே என்ற சிந்தனை மேலோங்கியது ?!   

சில ஆண்டுகள் ஓய்வுக்குப் பின்னே மீண்டு ; அற்புத ஆற்றலோடு மீண்டும் உலா வரும் நம் அபிமான டெக்ஸ் வில்லர் & கோ.வின் அறிமுக வேளையில் இந்த சிந்தனை ரொம்பவே பொருத்தமென்று எனக்குப் பட்டது ! "சிகப்பாய் ஒரு சொப்பனம் " வரும் திங்கட்கிழமை முதல் சந்தாக்களுக்கு அனுப்பிடப்படும் ! இது வரை சந்தாவினைப் புதிப்பிக்காது இருப்பின், இதோ ஒரு அழகான காரணம் அதனை ஜல்தியாய் செய்து முடித்திட ! 

நமது லயனில் இது டெக்ஸ் வில்லரின் சாகசம் # 49 !
இரவுக் கழுகார் உங்கள் இல்லம் வந்து சேர்ந்திடக் காத்திருக்கும் சமயத்தில் - உங்களது சிந்தனைத் தொப்பிகளை மாட்டிக் கொண்டு இந்தக் கௌபாய் காதலுக்கு பின்னணி என்னவென்ற உங்களின் அனுமானங்களை இங்கே பகிர்ந்திட்டால் என்ன ? 

அப்புறம், நிறையப் பேசி ; ஏராளமாய் எழுதி முடித்திருந்த போதிலும், NBS இன்னமும் நமக்கு அலுக்கவில்லை என்றே தோன்றுகிறது ! அதற்காக டி.வி. சானல்களைப் போல் காதில் ரத்தம் கசியும் வரை ஒரு வெற்றி பெற்ற நிகழ்ச்சியினை துவைத்துத் தொங்கப் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை ! எனினும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள NBS தொடர்பான குட்டியான behind the scenes trivia ! இவற்றிற்கு நான் விளக்க உரை எழுதிடலும் தேவையா என்ன ? மௌனமே மொழியானதொரு திறமைசாலியின் ஆற்றலை ரசிக்க மௌனத்தை விடச் சிறந்த கருவி இருக்க முடியாது தானே ?! 





பதிவை நிறைவு செய்து விட்டு மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சின்னதாய் ஒரு ஐரோப்பியப் பயணம் செல்கிறேன் அதிகாலையினில்  ! இதர பணிகளுக்கு இடையே புதிதாய் சில கதைத் தொடர்களுக்காக, பதிப்பகத்தினர் சிலரையும் சந்திக்கவிருக்கிறேன் ! Will keep you posted ! இப்போதைக்கு adios amigos !

Sunday, January 13, 2013

ஒரு சந்தோஷ அத்தியாயம் !


நண்பர்களே,

நேற்றைய தினமும் இன்னொரு மறக்க இயலா பொழுதே - பல்வேறு காரணங்களுக்காக !

வார இறுதிகளில் காலை 11 முதல் விற்பனைகள் துவங்கிடும் என்பதால் நமது பணியாட்கள் சீக்கிரமே ஸ்டாலில் ஆஜராகிட...நான் மதியம் 2 மணி சுமாருக்கு 'உள்ளேன் அய்யா' போட்டேன். முதல் நாள் வந்தது போல் ஒரு மொத்தமாய்  ; ஒரே சமயத்தில்  நண்பர்கள் குழுக்களின் வருகை அமைந்திடவில்லை என்பது மாத்திரமே வேறுபாடு...மற்றபடிக்கு தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராக வந்த நம் ஆர்வலர்களின் அணிவகுப்பு இரவு 8-30 வரை ஓயவில்லை ! முகமெல்லாம் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசமும், கண்களில் அந்த ஆர்வத் தீயின் வெளிப்பாடும் வருகையாளர்கள் ஒவ்வொருவரிடமும்  இருந்ததைக் காண இயன்றது !இணையத்தில் நம் நண்பர்கள் பலரும் இது தொடர்பான தத்தம் பார்வைகளையும், புகைப்படங்களையும் நிறைய வலையேற்றம் செய்துள்ளதால், இடைச்செருகலான சங்கதிகளை மாத்திரம் மையமாக   இங்கே எழுதிட்டால் சுவாரஸ்யமாக இருக்குமென்று நினைக்கிறேன்...

நேற்றைய காமிக்ஸ் ஆர்வலர்களில் ஒரு striking feature என்று நான் குறிப்பிட்டிட நினைப்பது - நமது பெண் வாசகர்களின் உத்வேகத்தினை ! காலம் காலமாய் காமிக்ஸின் பெரும்பான்மை வாசக வட்டம் ஆண்களாலானதே என்பது தான் பரவலான எண்ணம். ஆனால் இனி  அந்த சிந்தனையினை பரணுக்கு அனுப்பிடலாமே என்ற புரிதல் எனக்குள் நேற்று முதல் வியாபிக்கின்றது ! சொல்லி வைத்தது போல , இரு இளம் அம்மாக்கள் - தங்களது டீனேஜ்     பெண்கள் சகிதம் - பத்து நிமிட இடைவெளிக்குள் வந்திருந்தனர் - முகமெல்லாம் ஒரு பரபரப்போடு ! இருவரின் தேடல்களும் ஒன்றே ! 'என் மகளுக்கு மாடஸ்டியை அறிமுகம் செய்திட வேண்டுமே ; வண்ணத்தில், பெரிய சைசில் ஏதும் இல்லையா ? ' என்றும் ; 'கழுகு மலைக்கோட்டை ஒரு புக் எப்படியாச்சும் வேண்டுமே ' என்றும் அவர்கள் கோரிய போது - நிறைய விஷயங்கள் மண்டைக்குள் உறைத்தது !   

சங்கதி # 1 : பெண்களும் இத்தனை தீவிரமாய் ; ஆர்வமாய் காமிக்ஸ்களை ரசிப்பவர்களே !

சங்கதி # 2 : தெரிந்தோ, தெரியாமலோ - இந்த பெரிய சைஸ் ; வண்ணம் ; நல்ல காகிதம் என்றதொரு அமைப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொண்டது நிச்சயம் காலத்தின் கட்டாயம் ! இந்தத் தரமின்றின் போயிருக்கும் பட்சத்தில் - இன்றைய இளம் தலைமுறைக்கு அருகாமையில் கூட நாம் போகிடுவது சாத்தியப்பட்டிடாது !  மாடஸ்டியின் black & white - குறைவு விலையிலான நமது முந்தைய இதழ்களைப் புரட்டக் கூட அந்த யுவதிகள் தயங்குவது கண்கூடாய் பார்த்திட முடிந்தது ! 

சங்கதி # 3 : ஒரு குடும்பத்தில் பெண்களுக்கும் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இருந்திடும் பட்சத்தில், அடுத்த தலைமுறையும் காமிக்ஸ் காதலைத் தொடருவது கிட்டத்தட்ட உறுதி போலும் !

சங்கதி # 4 : மாடஸ்டிக்கும் ஒரு dedicated following உண்டென்பதும் புரிந்தது !!

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல - ஒரு நண்பரும் அவரது துணைவியாரும் வெகு ஆர்வமாய், நிறைய நேரம் நம் ஸ்டாலில் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர் ! காமிக்ஸ் ரசனைக்கு துணைவியாரும் ஒரு சமீபத்திய வரவு என்பதால், என்னிடம் அவரும் வெகு ஆர்வமாய் உரையாடினார் ! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னே புறப்படும் சமயம், நண்பர் ஒரு சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழைத் திறந்து என் முன்னே நீட்டி - அதனில் என்னை கையெழுத்திடக் கோரினார் ! 'என் முதிய தாயார் நம் காமிக்ஸ்களின் அதி தீவிர ரசிகை ; நீங்கள் இங்கே இருப்பது தெரிந்திருந்தால் நிச்சயம் வர ஆசைப்பட்டிருப்பார் ! At least உங்களிடம் ஒரு கையெழுத்து வாங்கிய பிரதியை அவருக்குக் கொடுத்திட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார் ' என்று நண்பர் சொன்ன போது அத்தனை நேரம் சரளமாய் செயல்பட்டு வந்திட்ட என் தொண்டை திடீரென வறண்டு போனது ! "சந்திரா அம்மாவுக்கு அன்பான வணக்கங்கள் " என்று எழுதி கையெழுத்துப் போட்ட போது எனக்கு நிஜமாய் கை நடுங்கியது !  அம்மா..உங்களின் அன்பிற்கு தலை வணங்குகிறோம் ! நீங்கள் நலமாய் இன்னும் ஆண்டாண்டு காலங்கள் நம் காமிக்ஸ் இதழ்களைப் படித்திடவும், ரசித்திடவும் வேண்டும் ! 

சற்றைக்கெல்லாம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுவினர் அங்கே வந்திட்டனர் - காமிக்ஸின் மறு பிறவி குறித்து சின்னதாய் ஒரு பேட்டி எடுக்க ! அவர்கள் நிலையத்தில் பணி புரியும் தொழில்நுட்பக் கலைஞர்களில் நம் காமிக்ஸ் ரசிகர்கள் எக்கச்சக்கம் உண்டு என்றும் ;NBS வெளியிட்ட முதல் தினத்து மாலை அவர்களில் பெரும்பான்மையினர் நம் ஸ்டாலில் ஆஜராகி இருந்தனர் என்றும் தெரிந்து கொண்டேன் ! நன்றி நண்பர்களே !! அவர்கள் புறப்பட்ட சற்றைக்கெல்லாம் பாலிமர் தொலைக்காட்சியிலிருந்தும் வருகை தந்து - அவர்களும் பேட்டி கண்டனர் !  'மீடியாவின் வெளிச்சம் நம் மீது விழுந்தால் தேவலை' என்று நண்பர்கள் பின்னூட்டங்களில் இங்கே குறிப்பிட்டிருந்த அதே தினத்தில் அவை நிஜமாகிப் போனது ஒரு சந்தோஷமான coincidence ! அது மட்டுமில்லாது, இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா தினசரியின் இரண்டாம் பக்கத்தில் நமது NBS ரிலீஸ் பற்றியும், தமிழ் காமிக்ஸ் உலகின் எழுச்சியைப் பற்றியும் மிக அழகாக எழுதி இருந்தது ஒரு எதிர்பாரா போனஸ் நமக்கு ! நமது நெஞ்சார்ந்த நன்றிகள் - டைம்ஸ் பதிப்பகத்திற்கும் ; புதிய தலைமுறை + பாலிமர் டி.வி. நிறுவனங்களுக்கும்  !  

பேட்டிகள் முடிந்த பாடில்லை என்பதை உணர முடிந்தது, நண்பரும், பதிவருமான ரபீக் ராஜா - ஏராளமான கேள்விக் கணைகளோடு என்னை சந்தித்த போது !  நம் காமிக்ஸ்களைப் பற்றி ; அவற்றின் நிறை-குறைகள் பற்றி ; NBS ; 2013-ன் திட்டங்கள் ; புதிய கதைத் தொடர்கள் - என்று பலவகையான விஷயங்கள் தொடர்பான கேள்விகளை முன்வைத்தார் - இணையத்தில் வலையேற்றம் செய்திடும் பொருட்டு வீடியோ எடுத்துக் கொண்டே ! கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ந்த இந்தப் பேட்டி எனக்கு நிஜமான சுவாரஸ்யம் தந்தது ; எனது பதில்களும் அதே சுவாரஸ்யத்தைக் கொணர்ந்திருந்தால் மகிழ்ச்சியே ! 

சீராய், உற்சாகமாய் அது வரை பயணித்திருந்த நமது "தனி ஸ்டால்  ; NBS ரிலீஸ் சந்தோஷ அனுபவங்கள்  "  ஒரு speed breaker -ஐ சந்திக்கும் தருணமும் நேற்று மாலை வந்திட்டது !கலப்படமற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தியவாறே திரளாய் நண்பர்கள் நம் ஸ்டாலில் கூடி இருப்பது நிறையவே உறுத்தல்களை ஏற்ப்படுத்தி இருப்பது புரிந்திட இயன்றது. அதன் உச்சமாக நேற்று புத்தகக் கண்காட்சியின் குழுவிலிருந்து வந்திருந்த மூத்த நிர்வாகி  - 'உங்கள்  ஸ்டாலின் வெளியே மட்டும் எந்நேரமும் கூட்டமாய் இருப்பது பற்றி complaints நிறைய வந்துள்ளன ;  'ஸ்டாலில் கூட்டம் கூடிடக் கூடாது ; புத்தக வெளியீடெல்லாம் இங்கே செய்திடக் கூடாது ; மீறினால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் ; அடுத்த ஆண்டு உங்களுக்கு ஸ்டாலும் தரப்பட மாட்டாது' என்று சீற்றமாய்ச் சொல்லி விட்டுச் சென்றார். அவர்களது பார்வையிலும் நியாயம் உள்ளதென்பதால் - மன்னிப்புக் கோரி , இது போல் இனி நிகழாதென்று உறுதி சொல்லிட்டேன் அவரிடம். அதற்குப் பின்னே வருகை தந்த நண்பர்கள் அனைவரையும் நடைபாதையில் நின்று பேசிட அனுமதிக்காது, ஸ்டாலின் உள்ளே வரச் செய்வதிலேயே  என் கவனம் மையப்பட்டு நின்றது ! முதல் நாளின் மாலை நம் நண்பர்களின்   அசாத்திய உற்சாகம் எத்தனை கவனத்தை ஈர்த்துள்ளது என்பதைப் புரிந்திட இயன்றது :-) இது போன்றதொரு மெகா இதழ் வெளியீட்டை இனி ஒரு முறை நாம் எத்தனிக்கும் பட்சம் - அது நிச்சயமாய் சிவகாசியினில் நம் அலுவலகத்தில் வைத்தோ ; அல்லது சென்னையினில் ஒரு நல்ல ஹோட்டலின் அரங்கில் தான் திட்டமிடல் வேண்டும் போலும் ! 



நேற்று சந்தித்த நண்பர்களின் பெரும்பான்மை - wayne shelton கதைகளை அசாத்தியமாய் ரசித்தோம் என்று சொன்னதைக் கேட்க முடிந்த போது மனசுக்குள் XIII -க்கு நன்றி சொல்லிக் கொண்டேன் ! அவர் காலி செய்த திண்ணையைத் தானே புது வரவான ஷெல்டன் ஆக்கிரமித்துள்ளார் ! இன்னொரு வலுவான கதைத் தொடர் நம் காமிக்ஸ் அணிவகுப்பிற்குக் கிட்டியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ! 'புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி அழகு பார்த்துக் கொண்டே இருக்கிறோம் ' என்று சொல்லிய நண்பர்களுக்கெல்லாம் - சீக்கிரமாய்ப் படிக்கத் துவங்குங்களேன் என்ற வேண்டுகோளை வைக்கத் தவறவில்லை ! இந்நேரத்திற்குள் நீங்களும் இதழை ஓரளவிற்காவது படித்திருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில் - கதைகளின் review - ஐ இங்கே துவக்கிடுவோமா ? வரிசையினில் முதலில் வந்துள்ள லார்கோவிலிருந்து துவக்கிட்டால் என்ன ? 



நெடியதொரு சென்னை வாசத்திற்குப் பின்னே சிவகாசிக்கும், 12 மணி நேர மின்வெட்டுக்கும் திரும்பிடுகிறேன் ! கடந்த நான்கு மாதம் எங்களின் வாழ்க்கைகளில் ஒரு தினசரி அங்கமாகிப் போன NBS - இனி அழகான நினைவுகளின் கர்த்தாவாக மாத்திரமே இருந்திடப் போகின்றதென்பதால் - மனதுக்குள் சின்னதாய் ஒரு வெற்றிடம் தோன்றுவது போலொரு உணர்வு ! டெக்ஸ் வில்லரைத் தயார் செய்த கையோடு ; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடும் தருணம் வந்து விட்டது எங்களுக்கு ! Thanks NBS....thank you Chennai.... thank you people....and most of all thanks to The Good Lord ! வாழ்க்கையின் ஒரு சந்தோஷமான அத்தியாயத்தை புரட்ட இயன்றதற்கு உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் என்றும் உண்டு ! See you soon !

Friday, January 11, 2013

கனவுகள் மெய்ப்படும் போது...!


நண்பர்களே,

வணக்கம். ஒரு 40 ஆண்டுப் பயணத்தில் ஒரு முக்கிய வழித்தடத்தை எட்டிடும் தருணம் இன்று புலர்கிறது !

சென்னையின் வீதிகளில் குதிரை வண்டிகளும், சிகப்பு நிற டவுன் பஸ்களும், திரை அரங்குகளில் கறுப்பு-வெள்ளைத் திரைப்படங்களும் ; வானளாவிய கட்டிடம் என்று சொல்லிக் கொள்ள ஒண்டிக் கட்டையாய் LIC பில்டிங்கும் மாத்திரமே இருந்திட்டதொரு புராதன யுகத்தில் (!!) ஒரு உலோகக் கர மனிதனின் தோள்களில் பத்தணா விலையில் துவங்கியதொரு சவாரி இது ! (ஒரு அணா எவ்வளவென்று இன்றைய நம் நண்பர்களில் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!)

தினத்தந்தியின் உட்பக்க சிந்துபாத்தைத் தாண்டியும் காமிக்ஸ் எனும் ஒரு மந்திர லோகம் உண்டென்பதை என் தந்தை உணர்ந்திட்ட அந்த inspired பொழுதுகளை  14,600 நாட்களுக்குப் பின்னே  கொண்டாடிடும் இந்தத் தருணம் நாம் அனைவருமே கடந்த சில மாதங்களாய் எதிர்பார்த்து நின்றதொரு நொடி தானே !மைக் பிடித்துப் பேசிடுவதை விடவும் சில சந்தர்ப்பங்களில் மௌனத்திற்கு வலிமை ஜாஸ்தி என்பதால் இந்தப் பதிவினில் 'வள வள' வென்று நான் எழுதிடல் அவசியமிராது என்று தோன்றியது...! தவிரவும், NBS -ன்  சந்திலும், பொந்திலும் நான் பக்கம் பக்கமாய் எழுதியிருப்பேன் என்பதை    நீங்கள் நிச்சயம் யூகம் செய்திருப்பீர்கள் ! So - இதற்கு மேலும் உங்களை போட்டுத் தாக்கிடாமல் ; காக்க வைத்திடாமல் - இதோ NBS -ன் அட்டைப்பட டிசைன்!


NBS இதழினை உருவகப்படுத்தத் துவங்கிய போது அட்டையினில் யாரைப் போடுவதென்பது முதலில் எழுந்திட்ட கேள்வி..! சமீப நாட்கள் வரை - அதாவது லார்கோவின் பரிச்சயம் நமக்குக் கிட்டிடும் வரை - டைகர் தான் நமது undisputed ஹீரோ என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திருக்க இயலாது. தவிர லார்கோவின் சாகசங்கள் நமது NBS-ன் டாப் கதைகளுள் தலையாயன என்பதால் லார்கோவை முன்னட்டையினில் போடும் சபலம் நிறையவே இருந்தது..! ஆனால் லார்கோவின் கதைகளின் ஒரிஜினல் பதிப்புகளிலும் சரி ; உலகளவில் வேற்று மொழிகளில் வந்துள்ள லார்கோ தொடர்களிலும் சரி - இது வரை ஒரு அசாத்தியமான அட்டைபடம் என்று வடிவமைக்கப்பட்டதே இல்லை ! 'தேமே' என்று நாற்காலியில் உட்கார்ந்திருப்பதும், அப்பப்போ கோட்டும், சூட்டும் போட்ட வண்ணம் விறைப்பாய்  நிற்பதைத் தாண்டி லார்கோ அதிகம் மெனக்கெடுவதில்லை ! So தரமாய் ஒரு reference கிட்டிடுவது சிரமமாய் இருந்தது. தவிரவும் அந்த ultra-modern முகத்தை ஓவியத்தில் தத்ரூபமாய்க் கொணர்வது மிகச் சிரமம் என்பது மண்டைக்கு உறைத்தது! குளிக்காமல் ,சவரம் செய்யாமல் சண்டியர்த்தனம் செய்யும் இந்த மேற்கத்தியக் கௌ-பாய்கள் இதற்கு நேர் மாறு ! விதம் விதமாய் போஸ் கொடுப்பது ; ஆக்சனில் அதகளம் செய்வது என்று இவர்கள் ஒரு ஓவியரின் கனவு நாயகர்களாகவே இருப்பது வழக்கம் ! So - சில நாட்களின் சிந்தனைக்குப் பின்னே முன்னட்டையினில் சோலோவாக டைகரை சித்தரிப்பது என்று தீர்மானித்தேன்.

'டைகர் ஒ.கே.....ஆனால் ஆசாமியை என்ன செய்ய வைப்பது அட்டையில் ? ' என்பது அடுத்து எழுந்த கேள்வி ! இதற்கு விடை காண நிறையவே நாட்களும், பொறுமையான தேடல்களும் அவசியமானது ! எங்களது reference library -ன் பக்கங்களை விரல் ரேகைகள் தேயப்  புரட்டோ புரட்டென்று புரட்டினேன். கண்ணில் படும் காமிக்ஸ் ஒவ்வொன்றின் அட்டைப்படத்தையும் NBS -க்கு கற்பனையில் ராப்பராக   உருவகப்படுத்திட முனைந்தேன். இறுதியில் 3 வெவ்வேறு வித டிசைன்களைத் தேர்வு செய்து - அம்மூன்றையுமே நம் ஓவியரைக் கொண்டு சித்திரம் தீட்டச் செய்தேன் ! கிட்டத்தட்ட ஒரு மாத தொணத் தொணப்பின் முடிவினில் 3 ஓவியங்கள் என் மேஜைக்கு வந்து சேர்ந்தன ! மூன்றும் தத்தம் பாணிகளில் அழகாகவே தோன்றியது அடுத்த சிக்கலை ஏற்படுத்தியது. அந்த மூன்றில் ஒன்றைத் தேர்வு செய்திட மேற்கொண்டு ஒரு வாரம் எடுத்துக் கொண்டேன் ! இறுதியாக சாட்டையைச் சுழற்றும் 'எங்க வீட்டுப் பிள்ளை MGR ' பாணியிலான இந்த டிசைன் எனது இறுதித் தேர்வாய் அமைந்தது. இது தான் ultimate டிசைன் என்றோ ; இதனைத் தொனிக்க இயலாதென்றோ நான் மார் தட்டிடப் போவதில்லை..but எனக்கு டைகரின் அந்த கம்பீரமான தோரணை ரொம்பவே impressive ஆகத் தோன்றியது ! தவிர இம்முறை பச்சை பான்ட் ; ஆரஞ்ச் சட்டை என்று ராமராஜன் பாணியிலான வண்ணங்களைத் தவிர்க்கவும் ; பெயர் - எழுத்துக்களின் placement -ல் ஒரு சுலபத்தன்மையும் மேலோங்கி நிற்க வேண்டுமென்று பிரியப்பட்டேன்..! கண்ணை அதிகம் உறுத்திடக் கூடாது   என்பதே பிரதான நோக்கமாய் !


பின்னட்டையில் இதர பிரதான நாயகர்களைக் கொணர்வதென்று தீர்மானித்திட அதிக சிந்தனை அவசியப்படவில்லை ! திடுமென நண்பர் XIII -க்கு கல்த்தா கொடுத்து விட்டு புது முகம் வேய்ன் ஷெல்டன் உள்ளே புகுவதற்கு முன்பு - பின்னட்டையில் லார்கோ ; XIII + மாயாவி ' என்றே தீர்மானித்திருந்தேன்.  லார்கோவிற்கு திருப்தியாய் ஒரு reference தேடித் தருவதற்குள் நாக்குத் தொங்காத குறை தான் எனக்கு ! ஒரு வழியாய் ஒரு டிசைன் தேற்றிக் கொடுத்து அதனை தனிப்பட்டதொரு பெயிண்டிங் போடச் செய்தேன். அதன் பின்னே மாயாவியும், XIII -ம் இணைந்திருப்பது போல் இன்னொரு பெயிண்டிங் !  லார்கோவின் டிசைன் பிரமாதமாய் அமைந்திட்டது ; ஆனால் மாயாவி & XIII - ல் எனக்கு சிறிதும் திருப்தி கிட்டிடவில்லை. அதற்குள் கதையினில் மாற்றம் என்றதால்,  வேய்ன் ஷெல்டன் தனியாய் நிற்கும் இன்னொரு பெயிண்டிங் தயார் ஆனது ! இறுதியில் லார்கோ + ஷெல்டன் + கிட் ஆர்ட்டின் என்றதொரு combo எனக்கு சரியென்று பட, பின்னட்டை தயாரானது ! So முன் + பின் = மொத்தம் ஆறு பெயிண்டிங்குகளின் end product தான் நமது NBS ராப்பர் ! இது தவிர அச்சிலும்,பின்னணியிலும்  சிற்சில நகாசு வேலைகள் செய்துள்ளோம்; இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் போது அவை புலப்படும் ! எங்களின் இந்த அந்தர் பல்டிகள் ; never before முயற்சிகள் உங்களுக்குப் பிடித்திருக்குமா என்பது தான் million dollar question ! Fingers crossed....!!

'இரும்புக்கை மாயாவியை அட்டையினில் போடலியா ?'  என்ற கேள்வியினை எழுப்பிடும் நண்பர்கள் நிச்சயம் இருப்பர் என்பது நான் அறியாதது அல்ல  ; ஆனால் யதார்த்தத்தை எத்தனை காலம் தான் பரண் ஏற்றிடல் சாத்தியமாகும் ? நம் நண்பர் ; பல காலத்து சாதனை வீரர் ; evergreen மாயாவி - ஒய்வு நாடும் வேளை வந்து விட்டதென்பதை நாம் உணர்ந்திடுவது சிரமமானதொரு காரியம் அல்லவே ?! சின்னதாய் ஒரு 16 பக்க சாகசத்தில் மாத்திரமே தலை காட்டும் நம் நண்பரை பின்னட்டையிலாவது நுழைத்திட முயற்சித்தேன்..ஆனால் அந்த டிசைன் சோபிக்கவே இல்லை !


சின்னதாய் சில வேண்டுகோள்கள் :


  1. சென்னையினில் இன்று (11-ஆம் தேதி) மாலை ஆறு மணி சுமாருக்கு தான் நமது NBS -ன் official release என்பதால், காலையிலேயே கூரியரில்  இதழ்கள் கிடைக்கப் பெற்றால் கூட, உங்களின் பொதுவான கருத்துக்களை மாத்திரம் வலையேற்றி விட்டு ; விரிவான பதிவுகளை ; ஆய்வுகளை (!!) ; பின்னூட்டங்களை மாலைக்கு மேல் வைத்துக் கொள்ளலாமே - ப்ளீஸ் ?
  2. அனைத்து முன்பதிவுகளுக்கும் அவரவர்தம் தேர்வுகளின்படி பதிவுத் தபாலில் ; STC கூரியரில் ; கூரியரில் 10-1-2013-ல் சிவகாசியிலிருந்து அனுப்பி உள்ளார்கள் ! ஒரு கத்தையாய் வந்து கிடக்கும் கூரியர் ரசீதுக் குவியலிலிருந்து உங்களது reference நம்பர்கள் தேடி எடுத்துச் சொல்லிட நம் அலுவலகத்தில் ஸ்டெல்லா மாத்திரமே உள்ளார்!சற்றே பொறுமை ப்ளீஸ்!
  3. பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டுள்ள பிரதிகளைத் துரிதப்படுத்திட வழிகள் ஏதும் கிடையாது ; so அவ்வகையினில் பிரதிகளைப் பெற்றிடும் நண்பர்கள் கூடுதல் பொறுமை காக்க வேண்டியது அவசியப்படலாம் !

மலையாய் வளர்ந்து நிற்கும் எதிர்பார்ப்புகள் ஒரு விதத்தில் சந்தோஷத்தையும்  ; மறுபுறம் வயிற்றினில் பட்டாம் பூச்சிகளைப் பறக்கச் செய்திடவும் காரணமாய் நிற்கின்றன ! காத்திருப்பது பாராட்டுக்களோ ; விமர்சனங்களோ  - அழகாய் ஒரு கனவு காண என்னை ஆசீர்வதித்ததற்காக  ஆண்டவனுக்கும் ; நான் கண்ட கனவை நனவாக்கப் பாடுபட்டதற்காக  நம் டீமுக்கும் நான் நன்றி சொல்லிடுவது தான் எவ்விதத்திலும் முறையாக இருக்கும் ! கடமையைச் செய்திட்டோம் ..எங்கள் சக்திக்குட்பட்ட விதத்தில் என்ற தலையாய சந்தோஷத்தோடு தூங்கச் செல்கிறேன் ! உங்களை சந்திக்கும் ஆவலோடு மாலை ஆறு மணிக்குக் காத்திருப்போம் நமது ஸ்டாலில் ! Please do drop in folks !




இதோ - NBS இதழோடு உங்களுக்கு வரக் காத்திருக்கும் புக் மார்க் + 2013-ன் முன்னோட்டங்கள் அடங்கிய 16 பக்க இதழின் முதல் பக்கம்!

Wednesday, January 02, 2013

ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை !


நண்பர்களே,

வணக்கம் ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! புலர்ந்திருக்கும் 2013 நம் அனைவருக்கும் நலமும், வளமும், அழகாய் நிறைய காமிக்ஸும் தந்திட வேண்டுவோமே ! கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கே தலைகாட்டிச் சென்ற நான் புத்தாண்டு வரை காணாது போய் விட்டதற்கு sincere apologies ! தவிர்க்கவே இயலா குடும்பப் பணிகள் எனது கவனத்தின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துக் கொண்டபடியால் - அவ்வப்போது உங்களின் பின்னூட்டங்களை எனது  செல்போனில் பார்த்திட்டதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிப் போனது ! இன்றிரவு ஒரு புதிய பதிவினை வலையேற்றிய பின்னர், நாளைய நடுஜாமத்தை முந்தைய பதிவின் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கப் பயன்படுத்திட எண்ணியுள்ளேன் ! So -  இங்கும் அங்குமாய் பயணிக்கும் சிரமத்தை இவ்வொருமுறை பொருட்படுத்திட வேண்டாமே - ப்ளீஸ் ?! 

First things first..! NBS பணிகள் 95% முழுமையடைந்திடும் நிலை என்பதால், இப்போதெல்லாம் எனது சிந்தனை அதைத் தாண்டிய மாதங்களை / இதழ்களைப் பற்றியே ! NBS வெளிவரும் ஜனவரி நீங்கலாய், பாக்கியுள்ள 11 மாதங்கள் என்பது மெய்யாகவே மிகக் குறைச்சலானதொரு அவகாசமாய்த் தோன்றுவது ஏனோ தெரியவில்லை ! லார்கோ ; டைகர் ; லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் ; டேன்ஜர் டயபாலிக் ; வேய்ன் ஷெல்டன் ; சிக் பில் ; XIII என்று prime நாயகர்களின் பட்டியல் பெரிதாய் இருக்கையில், ஆண்டொன்றுக்கு ஆளுக்கு ஒரே ஒரு வாய்ப்புத் தந்தால் கூட  - மாதங்கள் 6-7 ஓடிப் போய் விடும் ! எஞ்சி நிற்கும் மாதங்களில் புது வரவுகளான ஜில் ஜோர்டான் ; ஸ்டீல் பாடி ஷெர்லாக் ; (ஒன்றோ இரண்டோ) கிராபிக் நாவல்கள் என்று திட்டமிடும் போது, நமது காலெண்டர் கிட்டத்தட்ட நிரம்பி இருக்கும் ! புதிதாய் முயற்சிக்க பாணிகள் ; தொடர்கள் நிறையவே இருப்பது ஒரு பக்கமென்றால் ; existing நாயகர்களின் புதுக் கதைகள் ஏராளமும்   காத்துள்ளன என்பது வானவில்லின் மறுபக்கம் ! 1948 -ல் துவங்கிய டெக்ஸ் கதைகளின் எண்ணிக்கை, தலை சுற்றச் செய்யும் 625 + ! 1962 -ல் துவங்கிய டயபாலிக் தொடரில் சில நூறு கதைகள் காத்துள்ளன !  லக்கி லூக்கில் 72+ கதைகள் வெளி வந்துள்ளன ; லார்கோ கதைகள் இப்போதும் பயணிக்கும் ஒரு current தொடர் ! 


கதைகள் இத்தனை காத்துள்ள போது 'தொபுக்'கென நம் இதழ்களின் எண்ணிக்கையைக் கூட்டிட மண்டைக்குள் நமைச்சல் எடுக்கத் தான் செய்கிறது என்றாலும்  ; கூடுதல் பழுவினைச் சுமக்க நமது infrastructure -ல் ஏற்பாடுகளைச் செய்திடாது, 1987-ல் செய்திட்ட அதே தவறைத் தொடர்ந்திட வேண்டாமே என்ற எச்சரிக்கை மணியும் தலைக்குள்ளே ஒலிக்காமலில்லை ! 1986-ல் லயன் காமிக்ஸின் வெற்றி - "திகில் " என்ற அடுத்த முயற்சிக்கான தைரியத்தைக் கொடுத்திட்டது ! திகில் லேசாய் தடுமாறிய போதிலும் மறு ஆண்டே "ஜூனியர் லயன் " ; "மினி லயன்" என்று சிங்கத்தின் குட்டிகளை வரவேற்க எத்தனித்ததற்கு எனது ஆர்வக் கோளாறே பிரதான காரணம் ! அன்றைய ஆர்வக் கோளாறு கற்றுத் தந்த பாடத்தை அசை போட ஆண்டுகள் 25 கிடைத்துள்ளன என்பது மட்டுமல்லாது, எங்களிடம் சின்னதாய் ஒரு மாற்றமும் இருப்பதாய் எனக்கு ஒரு நம்பிக்கையின் துளிர்!   நமது NBS வெளிவரும் தருணம், நாட்காட்டியின் ஒன்பது மெல்லிய காகிதங்களுக்குப் பின்னே கிடந்தாலும் இந்த ஒட்டு மொத்த முயற்சி எனக்கு significant ஆனதொரு விஷயத்தை ஏற்கனவே உணர்த்தியுள்ளது ! ஸ்தம்பிக்கச் செய்யும் மின்வெட்டின் இடையே கூட எங்களது குட்டியான டீமால் NBS போன்றதொரு மெகா பணியினை செய்து முடித்திட இயன்றுள்ளது எனும் போது, சரியாகத் திட்டமிட்டுச் செயலாற்றும் பாணியினை இத்தனை காலம் கழித்தாவது கற்றிட சரியான சாலையில் தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது ! விற்பனையாள நண்பர்களின் ஒத்துழைப்பு மட்டும் இன்னமும் கொஞ்சம் வேகமெடுக்கும் பட்சத்தில், நமது பயணத்தின் வேகமும், பரிமாணமும் நிச்சயம் உயரே செல்லும் என்றும் மனதுக்குப் பட்டது

கால் நூற்றாண்டுக்கு முன்னே செய்த அதே தவற்றினை ஒரு உற்சாக உந்துதலில், திரும்பவும் செய்திட வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதை நிதானத்தின் அவசியத்தை புகட்டி வருவது ஒரு பக்கம் !  இன்னொரு பக்கம், ரூ.10 ; ரூ.20 என்ற price tags  எல்லாமே பரணுக்குப் பார்சல் செய்யப்பட்ட சங்கதிகளாகி விட்ட நிலையில், ரூ.100 விலைகளில் வந்திடும் இதழ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - இளம் வாசகர்களின் வாங்கும் திறனை நிஜமாகவே சோதித்திடுமே என்ற பயமும்  ! இந்த சூழலில் எனக்குள் தோன்றியதொரு சிந்தனையின் உரத்த வெளிப்பாடு இது : 

நம்மிடம் தற்சமயம் உள்ள ஏற்பாடுகளை சற்றே ஸ்திரப்படுத்திக் கொண்டிட இயலும் பட்சத்தில், ஆண்டொன்றுக்கு ரூ.50 விலையிலான black & white இதழ்களில் இன்னும் கூடுதலாய் 6 issues தயாரிப்பது சுலபமாய் சாத்தியமே !( வண்ணத்தில் 400 பக்கங்களோடு NBS -ல் மல்லுக் கட்டிய பின்னர், டெக்ஸ் வில்லரின் b&w  கதைகளில் இன்றைக்குப் பணியாற்றுவது - மிகச் சுலபமாய்த் தோன்றுகிறது !!) பைண்டிங் பணிகளுக்கான ஏற்பாடுகளையும், இதழ்களை despatch செய்திடும் நம் அலுவலக ஏற்பாடுகளையும் செம்மைப்படுத்தி விட்டால், இந்த +6 கனவு சிக்கலின்றி அரங்கேறிடும் ! ஏற்கனவே 2013-க்கான நமது ரெகுலர் schedule -ல் ஐம்பது ரூபாய் விலையில் சில இதழ்களை திட்டமிட்டுள்ள நிலையில்,மேற்கொண்டு 6 இதழ்கள் ரூ.50 விலையினில் எனும் போது, இளம் வாசகர்களுக்கும் வாங்கிட சற்றே சிரமம் குறையும் என்று தோன்றியது.  இந்த  +6 கனவை நாம் நிஜமாக்கிட முனையும்  பட்சத்தில் டெக்ஸ் வில்லர் ; டயபாலிக் ; மர்ம மனிதன் மார்டின் ; CID ராபின் ; ஆகியோரது பெயர்கள் 'பளிச்' என்று மனதில் நிழலாடுகின்றன ! அல்லது அயல்நாடுகளில் செய்திடுவது போல - டெக்ஸ் போன்ற ஏதாவது ஒரே ஹீரோவின் கதைகளை exclusive-ஆக வெளியிடவும் செய்திடலாம் ! இவர்களைத் தவிர்த்து வேறு நாயகர்களை முயற்சிக்க விரும்பும் பட்சத்தில் உங்களின் தேர்வுகள் என்னவாக இருக்கும் என்றறிய ஆசை ! உங்களின் கனவில் உலா வரும் அந்த b&W ஹீரோ யாரென்று பகிர்ந்திட்டால், அவரை நம் அணிவகுப்பிற்குக் கொணர இயல்கிறதா என்று முயற்சிக்க முடியும் ! அதற்காக இந்த +6 கனவிற்கு மாயாவி ; ஸ்பைடர் ; மறுபதிப்புகள் என்ற ரீதியிலான suggestions-களோ ; நாம் தற்சமயம் வண்ணத்தில் வெளியிட்டு வரும் டைகர் போன்ற நாயகர்களின் கதைகளையோ ; Asterix; Tintin : Batman போன்ற வண்ணத்தில் அசத்தும் புதுத் தொடர்களையோ பரிந்துரை செய்திட வேண்டாமே - ப்ளீஸ் ?! இப்போதைக்கு இது ஒரு உரத்த சிந்தனை மாத்திரமே என்பதால்,இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நிறையவே அவகாசம் நமக்குத் தேவைப்படும் என்பதை ஒரு முறை நினைவூட்டிட விரும்புகிறேன் ! 


இப்போதெல்லாம் கண்களை மூடினாலே கலர் கலராய் கௌபாய்களும் ; வித விதமான விமானங்களில் பயணிக்கும் jet setting ஹீரோக்களுமே கனவினை குத்தகைக்கு எடுத்து வருகின்றனர் ! நண்பர்களோடு பேசும் போது கூட மொழிபெயர்ப்புப் பாணியில் பேசாதிருக்க பெருமுயற்சி எடுத்திட வேண்டியுள்ளது ! 'ஹாட்லைன் எழுதுகிறேன் பேர்வழி' ; 'வலைப்பதிவுக்கு விஷயம் தேவை ' என்று வீட்டுக்குள் ரூம் ரூமாய், பேனாவும் கையுமாய், முகத்தில் ஒரு அசட்டுப் பார்வையோடு சுற்றுவது மனைவியின் முறைப்புகளை சம்பாதித்துக் கொடுத்தாலும் - சமீப காலமாய் ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்காகிப் போய்விட்டது ! இந்த ஓராண்டு கால காமிக்ஸ் reading + blogging அனுபவங்கள் நம் அனைவரின் நாட்களுக்கும் சின்னதாய் ஒரு மெருகேற்றி இருப்பதால், ஆங்காங்கே நம் இல்லங்களில் ஓடிடக் கூடிய இந்த "காமிக்ஸ் பஞ்சாயத்துகளை" சந்தோஷமாய் சந்திக்க நமக்கு சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது !  

சந்தோஷங்களைப் பற்றிப் பேசிடும் போது, வரவிருக்கும் சென்னைப் புத்தகத் திருவிழாவினில் நமக்கெனப் பிரத்யேகமான ஸ்டால் கிட்டியுள்ளது என்பது இன்னொரு சந்தோஷச் சேதி !இதற்கென முயற்சித்த  நம் நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும், புத்தகத் திருவிழாவின் குழுவினருக்கும் நமது நன்றிகள் என்றும் உண்டு ! இதோ - ஸ்டால்களின் வரைபடம் ! நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஸ்டால் எண் : 343 ! 


ஜனவரி 11-ல் துவங்கிடும் இந்தத் திருவிழாவின் முதல் நாள் மாலையில் உங்களை சந்திக்கக் காத்திருப்போம்-எங்களது நெஞ்சார்ந்த வரவேற்புகளோடு ! Please do drop in guys !!