Powered By Blogger

Saturday, June 29, 2019

ஒரு சனியிரவின் சிந்தனைகள்...!

நண்பர்களே,

வணக்கம். நாளைய பொழுது நம் உலகக்கோப்பை எக்ஸ்பிரஸின் அதிமுக்கியப் பயண நாளெனும் போது - டி.வி.பொட்டிகளைத் தாண்டி வேறெங்கும் கவனம் தர நேரமோ, முனைப்போ யாருக்கும் இராதென்பது உறுதி ! So இன்றைய பதிவை இயன்றமட்டிற்கு short 'n crisp ஆக்கிட முனைவேன் !!

First things first.... ஜூலை இதழ்கள் சகலமும் திங்களன்று கூரியரில் கிளம்பிடுகின்றன ! இம்முறை ஹார்ட்கவர் இதழின் பைண்டிங்கிற்கு நிறையவே நேரம் எடுத்துக் கொண்டது ஒரு பக்கமெனில், "நீரில்லை..நிலமில்லை.." இதழின் எடிட்டிங் பணிகளிலும் நேரம் ரொம்பவே விரயமாகிப் போனது இன்னொரு பக்கத்து சங்கடம்  ! ஒரு மாதிரியாய் எனக்குத் தெரிந்த மாற்றங்களை / திருத்தங்களை கதை நெடுகச் செய்து முடித்து - இதழினை அச்சுக்கு அனுப்புவதில் நேர்ந்த தாமதம் - அதன் பைண்டிங்கிலும் பிரதிபலித்தது ! அடர்வர்ண உட்பக்கங்கள் சகலத்திலும் ஏகமாய் குடிகொண்டிருந்த இங்க் காய்ந்திடவே 2 நாட்கள் காத்திருக்க வேண்டிப் போனது ! So இன்றைக்கு செய்திட எண்ணியிருந்த டெஸ்பாட்ச்சை திங்களுக்கு தள்ளிப் போட்டுள்ளோம்  ! Sorry guys !!

வாரநாளில் இதழ்கள் கைக்குக் கிட்டும் போது நம்மில் பலருக்கும், அவற்றை வாஞ்சையாய்ப் புரட்டிப் படம் பார்க்கவே நேரம் பற்றாது என்பதில் இரகசியங்கள் நஹி ! So "வார நாள் பிசி - காமிக்ஸ் வாசிப்புக்கு நேரத்தைத் தேடும் படலம்" என்ற தவிர்க்க இயலாச் சுழலினுள் இம்மாதம் கால்பதித்திருக்க - அதையே இவ்வாரத்து அலசலின் தலைப்பாக்கினால் என்னவென்று நினைத்தேன் ! 

Light Reading !! சில வாரங்களுக்கு முந்தைய பதிவினில் இது பற்றி மேலோட்டமாய் உச்சரித்திருந்தேன் ! And நீங்களுமே அதற்கு வித விதமாய் ரியாக்ட் செய்திருந்தீர்கள் ! ஒரு சாவகாச நாளில் சற்றே விரிவாகப் பேசிக்கொள்ளலாமே என்ற நினைப்பில் உங்களின் பின்னூட்ட அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்க நான் முனைந்திருக்கவில்லை ! Maybe அந்த சாவகாச நாள் இன்று தானோ ? 

தமிழின் மூத்த அறிஞர் செந்தில் சொன்னது போல "பூவைப் பூன்னும் சொல்லலாம் ; புய்ப்பம்னும் சொல்லலாம் தான் !" So "இலகுரக வாசிப்பு" என்றும் light reading-க்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் ; "பருமன் குறைவான இதழ்கள்" என்ற சராசரிப் பொருள் தந்தும் பார்த்துக் கொள்ளலாம்  ; "நிறைய ஈடுபாட்டோடு படிக்க அவசியப்படா சுலபக் கதைக்களங்கள் கொண்ட புக்ஸ்" என்றும் எடுத்துக் கொள்ளலாம் ! நீங்கள் எம்மாதிரியாக அர்த்தப்படுத்திக் கொண்டாலும் - அவற்றினூடே இழையோடும் ஒற்றை ஒற்றுமை : "ரிலாக்ஸ்டாகப் படிக்கவல்ல கதைகள்" என்பதாகவே நான் பார்த்திடுகிறேன் ! I might be right...might  be wrong too !! But just my two cents !!

"குண்டூ புக்ஸ் வேண்டும்....கலந்து கட்டிய ஸ்பெஷல்ஸ் வேண்டும்" என்ற குரல்கள் அவ்வப்போது கேட்டு வருவது நாமறிந்ததே ! ஆனால் மெய்யாகவே கனமான இதழ்கள் வெளியாகும் சமயங்களில், அவற்றினுள் ஏக் தம்மில் மூழ்கிடும் முனைப்பும், அவகாசமும் நம்மில் எத்தனை பேருக்கு இப்போதெல்லாம் உள்ளதென்பதே எனது வினா ! மே மாதம் இதற்கொரு classic example !! பராகுடா ; ட்யுராங்கோ ; தனியொருவன் - என 3 மெகா ஹெவிவெயிட்ஸ் ஒரே மாதத்தில் தற்செயலாய் கூட்டணி போட்டுக் களமிறங்க - கூரியர் டப்பியின் கனமே மிரட்டியது ! முன்னொரு காலத்தில் நீங்களெல்லாம் Annual விடுமுறையில் இருக்கும் பாலகர்களாய் இருக்கும் நாட்களில், இத்தகையதொரு முரட்டு விருந்து பரிமாறப்பட்டிருப்பின் - சும்மா வூடு கட்டி அடித்திருக்க மாட்டீர்களா - என்ன ?! ஆனால் இன்று பள்ளி போகும் பிள்ளைகளைப் பராமரிக்கும் பெற்றோர்களாய் நம்மில் பெரும்பான்மை புரமோஷன் கண்டிருக்க - இதழ்களைத் தடவி, உச்சி மோர்ந்திடத் தானே நேரம் கிட்டியது மே மாதத்தினில் ? Of course காலவோட்டம் நம் கைகளில் திணித்திடும் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்திட வேண்டியது தலையாயம் என்பதில் மாற்றுக் கருத்துக்களே இருக்க முடியாது ! எனது கேள்வியெல்லாம் இது தான் : 

*மாயாவியை ரசித்தவர்கள் டெக்ஸுக்குத் தாவினோம் !
*ஜனரஞ்சகத்தை ரசித்தவர்கள் லார்கோவின் பண சாம்ராஜ்யத்தை ரசிக்கும் ஆற்றலைப் பெற்றோம் !
*நேர்கோட்டுக் கதைகளே மார்க்கம் என்றிருந்தவர்கள் XIII-ஐ ஆராதிக்கும் பக்குவம் பெற்றோம்!
*"கி.நா" என்றால் "கிராதக நாவல்" என்று பொருள் சொல்லி நகைத்த நாமே இன்றைக்கு அவற்றிற்கொரு தனித் தடத்தைத் தந்து கொண்டாடுகிறோம் !!

இவை எல்லாமே அகவைகளின் முன்னேற்றத்தோடு கை கோர்க்கும் ரசனைகளின் முன்னேற்றமென்று புரிந்து கொள்கிறோம் ! அதே ரீதியில் பார்த்தால்,வயதுகளின் முன்னேற்றங்களோடு பொறுப்புகள் கூடிப் போகும் தருணங்களில், அதற்கேற்ப கொஞ்சம் light reading-க்கு வகை செய்வதும் அவசியமாகிடாதா என்பதே எனது சந்தேகம் ! "கிழிஞ்சது போ....புக் எண்ணிக்கைக்கு இனிமேல் கத்திரியா ? " ; "கிராபிக் நாவல்களுக்கு இனி பீப்பீபீ தானா ?" "குண்டு புக்ஸ் இனி கோவிந்தா - கோவிந்தா தானா ?" என்ற ரீதியிலான சந்தேகங்களுக்கு இங்கே அவசியமில்லை people ....ஏனெனில் நான் கேட்க முனைவதெல்லாமே - உங்கள் வாசிப்பில் சமீப நாட்களில் எறியுள்ள கனத்தை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமா ? என்ற கேள்வியினை மட்டுமே !! 

பராகுடா மாதிரியானதொரு இதழையே இங்கொரு case study ஆக்கிக் கொள்வோமே ?  ரொம்பவே intense ஆன ஆல்பம் அது என்பதில் no doubts at all !! நாக்கார் தொங்க  ஆபிசிலிருந்து வீடு திரும்பும் மாலையினில்  பராகுடாவைப் பார்த்த கணத்தில் WoW என்று தோன்றிடலாம் ; ஆனால்..ஆனால்... எடுத்துப் புரட்டி அதனுள் ஆரவாரமாய்ப் புகுந்திடும் 'தம்' நம்மில் எத்தனை பேருக்கு இன்றைக்கு சாத்தியப்படுகிறது ? பிள்ளைகளுக்கு ஹோம்ஒர்க் போட ஒத்தாசை செய்திடும் சமயம், புக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு சத்தமின்றி கீன்-பிலேமையும் ; ராபியின் காதலியையும் 'கலைக்கண்ணோடு' ரசிப்பதைத் தாண்டி வேறென்ன செய்ய முடிகிறது இந்த ஓட்டமோ-ஓட்ட நாட்களில் ? சரி, ஒரு சாவகாச ராவில் படிக்கலாமென்று தலைமாட்டில் புக்கைப்  பதுக்கி வைத்தால் - ஏழாம் பக்கத்தைத் தொடும் முன்பாய் எட்டுக் கொட்டாவிகள் விட்டம் வரை விரியும் போது, வென்றிடக் கூடியது பராகுடாவா ?  தூக்க தேவதையா ? என்ற பட்டிமன்றம் எழுகிறது ! அட.. பயணங்களின் போது படிக்கலாமே என்று பத்திரமாய் பெட்டிக்குள் புக்கைப் பேக் செய்த கையோடு பஸ்ஸிலோ / ரயிலிலோ ஏறினால், காதில் மாட்டிய earphones வழியே குவிந்து தள்ளும் Youtube வீடியோக்களும், troll-களும் - வேறெதெற்கும் நேரம் தரா கிங்கரர்களாய் கோலோச்சுகின்றன !!  இத்தனைக்கும் மத்தியில் நேரம் ஒதுக்கி நமது இதழ்களை  படிப்பது மாத்திரமன்றி, அலசவும்  இயல்கிறதெனில் அது நிச்சயமாய்  உங்களின் காமிக்ஸ் நேசத்துக்கொரு அட்டகாச testimony என்பதைத் தாண்டி வேறென்ன ?!! Take a bow all you busybees !! 

அதே நேரம் மேஜையில் கிடக்கும் இதழ் ஒரு crisp டெக்ஸ் வில்லர் கதையாய் இருந்தாலோ ; ஒரு கலர்புல் லக்கி லூக்காய் இருந்தாலோ ; ஒரு ஜாலியான டாக்புல் கூத்தாய் இருந்தாலோ - "சித்த நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேனே !!" - என்றபடிக்கு புக்கைப் பர பரவென வாசிக்கும் வாய்ப்புகள் ஜாஸ்தி தானே ? So மாதந்தோறும் உங்கள் வாசிப்பினில் இருக்கும் கனரக இதழ்களின் கோட்டாவை மட்டுப்படுத்தி விட்டு, இலகுரக தேர்வுகளை அதிகப்படுத்துவது ஒரு practical தீர்வாய் இருக்குமா ? என்பதே எனது கேள்வி !! மாதந்தோறும் மூன்றோ / நான்கோ  இதழ்கள் எனும் பட்சத்தில் - ஒன்றே ஒன்று மட்டும் அழுத்தமான வாசிப்புக்கென இருந்துவிட்டு, பாக்கி அனைத்தும் ஜாலி reads என்றிருப்பின் உங்கள் பாடுகள் சற்றே லேசாகிடுமோ ? 

எனது பார்வையில் (I repeat - எனது பார்வையில் மட்டும்) light reading-க்கு qualify ஆகிடக்கூடிய கதைகள் / தொடர்கள் கீழ்க்கண்டவாறு :
  • டெக்ஸ் வில்லர்
  • கேப்டன் டைகர் (மார்ஷல் அல்ல !!)
  • லக்கி லூக்
  • சிக் பில்
  • மாயாவி & மும்மூர்த்தியர்
  • ஹெர்லாக் ஷோம்ஸ்
  • மேக் & ஜாக்
  • ட்யுராங்கோ 
  • ரின்டின் கேன்
  • ஜில் ஜோர்டான்

கொஞ்சமாய்  மெனக்கெடல் அவசியமாகிடும் medium reading பட்டியல் :
  • லார்கோ வின்ச் 
  • வேய்ன் ஷெல்டன் 
  • ப்ளூ கோட் பட்டாளம்
  • ட்ரெண்ட்
  • மாடஸ்டி 
  • CID ராபின் 
  • டைலன் டாக் 
  • ஜேம்ஸ் பாண்ட் 007 
  • கர்னல் கிளிப்டன் 
  • லேடி S 
  • தோர்கல்

நிறைய நேரம் & ஈடுபாட்டோடு கரைசேர்ந்திட வேண்டிய கதைகள் / தொடர்கள் :
  • Most கிராபிக் நாவல்கள்
  • மர்ம மனிதன் மார்ட்டின்
  • Criminologist ஜூலியா
  • ரிப்போர்ட்டர் ஜானி 
  • XIII & spin-offs
  • கமான்சே 
  • Lone ரேஞ்சர் 

Point to Ponder # 1 ****இந்தப் பட்டியலின் சாராம்சம் ஓரளவுக்கேனும் ஓ.கே. என்றிருப்பின், ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட heavyweights category இதழ்கள் இடம்பிடித்திடக் கூடாதென்று இனி அட்டவணைத் திட்டமிடலின் போது கவனமாயிருந்திட வேண்டுமோ ?! 

Point to Ponder # 2 ****அதே போல - "variety" என்ற ஒற்றைக் காரணத்தின் பொருட்டு மித நாயகர்களை மாதா மாதம் கண்ணில் காட்டுவதற்குப் பதிலாய் -  படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நாயகர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட slots கொடுத்தாலும் தப்பில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாமோ ? Maybe அட்டவணையில் கலர் கலராய் ; கலக்கலாய் ; ஏகமாய் நாயகர்கள் தென்படாது போகலாம் ; ஆனால் மாதம்தோறும் கூரியரைப் பிரிக்கும் போது உருவாகிடக்கூடிய உற்சாகம் அதற்கு ஈடு செய்துவிடுமோ ?

Point to Ponder # 3 ****Last but not the least - கலர் டெக்ஸ் இதழ்கள் வெளியாகும் ஒவ்வொரு மாதமும் அவை ஈட்டிடும் வெற்றியின் பின்னே ஒரு சேதி ஒளிந்துள்ளதோ ? வாசிக்கப்படுவதில் முதலிடம் ; சிலாகிக்கப்படுவதிலும் முதலிடம் என்பதன் பின்னணியில் - TEX எனும் ஜாம்பவானின் நிழலைத் தாண்டி அந்தக் கதைகளின் நீளத்துக்கும் ஒரு பங்கிருக்கக் கூடுமோ ? Maybe in the days to come - ஒரு கலர் டெக்ஸ் ; அல்லது அத்தகைய crisp வாசிப்புக்கான மினி புக்ஸ் மாதாமாதம் தலைகாட்டல் அவசியமோ ? 200+ பக்கங்கள் எனும் போது - "இதை படிக்க உருப்படியாய் நேரம் கிடைச்சால் தான் ஆச்சு !" என்ற மெல்லிய தடை மனசில் அனிச்சையாய் உருவாகிடுவது புரிந்து கொள்ளக்கூடியதே ! அதே சமயம் மெகா சீரியல் போலின்றி, 'சிக்'கென்று மினி வெப் சீரிஸ் போலான இதழ்கள் மாதந்தோறும் தலைகாட்டின் - நம் சுலப வாசிப்புக்கு உதவிடக்கூடுமோ ? 
இவை சகலமும் எனக்கு ஒற்றை மாதத்து நிகழ்வுகளின் தொடர்ச்சியாய்த் தோன்றிய எண்ணங்களல்ல ! மாறாக - over a period of time உங்களோடு செய்திடும் பயணத்தில் எனக்குப் புலப்பட்ட  சமாச்சாரங்கள் என்று சொல்லலாம் ! பதிவின் துவக்கத்தில் சொன்னது போல - I may be right on this...I might be wrong too !! ஆகையால் இவை சகலமும் ஒரு உரத்த சிந்தனையின் சாராம்சமே தவிர்த்து - நாளையே நடைமுறை காணவிருக்கும் தீர்மானங்களின் முதற்புள்ளியாய்க் கருதிட துளியும் தேவையில்லை ! There will be no knee jerk reactions guys ; அதனால் நீங்களும் "நல்லாத் தானே போய்க்கிட்டிருந்தது....? நோண்ட அவசியமென்ன வந்துச்சு ?" என்ற ரீதிகளில் பொங்கிட அவசியமே நஹி ! நிதானமாய்ப் படித்த பின்னே எங்கே என் அபிப்பிராயங்களோடு ஒத்துப் போகிறீர்கள் ?  ; எங்கே எனது பார்வைகளோடு மாறுபட்டு நிற்கிறீர்கள் என்று சொல்லிட முனைந்தால் மகிழ்வேன் ! நாயக / நாயகியரை நான் அடைத்துள்ள பட்டியல்கள் சரி தானா ? என்றும் சொல்லலாம் ! புதுசாயொரு ஆண்டுக்கான திட்டமிடலில் fine-tuning செய்திட உங்கள் அலசல்கள் இக்ளியூண்டுக்கு உதவினாலும் ; முன்செல்லும் பாதைக்கு எது உதவிடக்கூடும் என்ற புரிதல் இம்மியூண்டு விசாலப்பட்டாலுமே, அது நமக்கெல்லாம் பலன் தரும் தானே ? So just thinking aloud on a Saturday night !! 

Bye folks....have a lovely weekend ! See you around !!
ஈரோடு எக்ஸ்பிரஸ்  - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" previews !! 

Saturday, June 22, 2019

இடியாப்பம் 2.0..!

நண்பர்களே,

வணக்கம். அனுபவம் மகத்தான ஆசான் என்பார்கள் !! அனுபவம் கற்பிக்கும் பாடங்கள் ஆயுசுக்கும் நிலைக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் ! ஆனால் அந்த ஆசான் குடியிருக்கும் தெருப் பக்கமோ ;  அவரது பாடங்கள் அரங்கேறும் பள்ளிக்கூடம் பக்கமோ நான் தலைவைத்துக் கூடப் படுத்ததில்லை என்பதை அவ்வப்போது எனக்கு நானே ஊர்ஜிதம் செய்து கொள்வதுண்டு ! அதன் லேட்டஸ்ட் episode கடந்த 10 நாட்களின் பெரும்பான்மையை விழுங்கியதே மகா கொடுமை ! அதுவும், ஆகஸ்டில் ஈரோட்டுக்கென ஒரு அம்பாரம் இதழ்களைத் தயார் செய்திட வேண்டிய நெருக்கடிக்கு மத்தியினில் கடந்த 10 நாட்களின் கூத்துக்கள் ஓவரோ ஓவர் என்பேன் !! என்ன விஷயம் என்கிறீர்களா ?

ஒவ்வொரு ஆண்டிலும் அட்டவணைத் தேர்வுப்படலம் நடந்தேறும் சமயம் முந்தைய ஆண்டுகளின் பணி சார்ந்த அனுபவங்களை ஓசையின்றி நடைமுறைக்கு கொணர விழைவதுண்டு ! "எல்லாமே smooth sailing தான் ; சும்மா எல்லாத்தையும் போட்டுத் தாக்கி விட்டேன்" என வெளியே தெனாவெட்டாய் பீலா விட முனைந்தாலும், அந்தந்த ஆண்டுகளின் ஓட்டத்தின் போது, சிலபல அல்பங்களின் பணிகளில் நாக்கைக் கொண்டு தெருவைக் கூட்டிய அனுபவங்களெல்லாம் அடிமனதில் 'பளிச்' என்றே குந்திக் கிடக்கும் ! மர்ம மனிதன் மார்டினின் "கனவின் குழந்தைகள்" ; "இனியெல்லாம் மரணமே" ; "வானமே எங்கள் வீதி" ; ஒரு சிப்பாயின் சுவடுகள்" ; அண்டர்டேக்கர் ;  "நிஜங்களின் நிசப்தம்" ; போன்ற கதைகளெல்லாம் குப்புறப் போட்டு ரோடு ரோலரை மேலேற்றிப் பிதுக்கி எடுத்த taskmasters !! So குறிப்பிட்ட நாயகரின் கதைகள் / குறிப்பிட்ட ஜானர்கள் / குறிப்பிட்ட தொடர்கள் - சிரத்துக்கும்,சிரத்தின் மீதுள்ள சொற்பத்துக்கும் செம ஆபத்தானவை என்பதைச் சன்னமாய்த் தலைக்குள் ஒரு நோட் போட்டு வைத்திருப்பேன் ! மறு ஆண்டில் கதைகள் தேர்வு செய்திட முனையும் போது - இயன்றமட்டிலும் கொஞ்சம்  சுலபக்களங்களை நாடிட மனசு பறக்கும் ! அதாவது - முருங்கை மரத்தில் ஏறும் முன்பான மனசு !! 

ஆனால் ஏதேனும் ஒரு புது கேட்லாக்கைப்  பார்த்தாலோ ; புதியதொரு ஆல்பத்தின் டிரெய்லரைப் பார்த்தாலோ ; புதிதாய் நெட்டில் ஏதேனும் அலசல்களை ரசித்தாலோ - "சலோ முருங்கை மரம் !!" தான் ! அதுவரையிலும் பட்ட சூடுகளை மறந்து ; அதுவரைக்கும் எழுத்திலும், எடிட்டிங்கிலும் போட்ட மொக்கைகளை மறந்து விட்டு - "வாடி செல்லக்குட்டி !!" என்று புதுக் கதையை அரவணைத்து விடுவதே வாடிக்கை ! அப்புறமாய் அந்தக் கதையோடு மல்லுக்கட்டும் போது - 'குத்துதே...குடையுதே !!" என்ற நெளிதல் படலமுமே வாடிக்கை !! அதன் latest அனுபவம் - காத்திருக்கும் "நீரில்லை...நிலமில்லை !

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாய் நமது படைப்பாளிகளிடமிருந்து, "சமீபத்து இதழ்களது  ரிலீஸ்கள் சார்ந்த previews" என்று ஒரு வண்டி தொடர்கள் பற்றிய pdf files மின்னஞ்சலில் வந்திருந்தன ! அத்தனையையும் சாவகாசமாய்ப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் என் கவனத்தை ஈர்த்த சிலபல one shots அதனுள் இருந்தன ! அவற்றை ஒரு பட்டியலிட்டுக் கொண்டு, நெட்டில் அலசிய போது - சில 'பவர் ஸ்டார்' கதைகளும் எனது லிஸ்டில் இருப்பது புரிந்தது ! பிரெஞ்சு ரசிகர்களே அவற்றை surf excel போட்டு துவைத்தெடுத்திருந்தனர் ! So பட்டியலிலிருந்து அதையெல்லாம்  அடித்த பிற்பாடு தேறி நின்றவை இரண்டே கதைகளே ! ஒன்று "நீரில்லை..நிலமில்லை" என்ற பெயரில்  ஜூலையில் நாம் சந்திக்கவுள்ள இதழும், SYKES என்ற ஜம்போ சீசன் 2-வின் ஒரு தேர்வுமே !! பின்னது ஒரு கௌபாய்க் களமென்பதால் அது சார்ந்த தீர்மானம் செய்வது பெரியதொரு கம்பு சுத்தும் கஷ்டமாக இருக்கவில்லை ; சீக்கிரமே டிக் அடித்து வைத்தேன் ! ஆனால் "நீரில்லை..நிலமில்லை" கதையோ கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கக் கண்டேன் ! நவீன ரகத்திலான கதை ; கொஞ்சம் கண்ணுக்குக் குளிர்ச்சியான artwork (!) என்று தென்பட, நெட்டில் அது பற்றிய விமர்சனங்கள் அவ்வளவாய்த் தட்டுப்படவில்லை ! So படைப்பாளிகளிடமே வினவி வைத்தேன் - என்ன மாதிரியான கதை ? பிரெஞ்சில் என்ன மாதிரியான வரவேற்புக் கிட்டியது ? என்ற ரீதியில் ! இங்கொரு சிறு இடைச்செருகலுமே :

பொதுவாய் நான் குடலை உருவும் ரேஞ்சுக்கு இதர மொழியினில் கதைகளை வெளியிடும் பெரும் பதிப்பகங்களெல்லாம் கேள்வி கேட்பார்களா ? என்பது எனக்குத் தெரியாது ! ஆனால்  "இந்தியா" எனும் அசாத்திய தேசத்தின் ஒரு துக்கனூண்டுப் பிரதிநிதியாய்  மண்டையைக் காட்டி வரும் எனது 'தொண தொண' கேள்விகளை பொறுமையோடே அணுகுவார்கள் !! நமக்குத் தான் "இந்த வண்டி எவ்ளோ லிட்டர் குடுக்கும் ?" ; "இந்தப் படம் எவ்ளோ வசூல் பண்ணுச்சு ?" ; "அந்த அஜலகுஜாலாம்பாள் நடிகை எவ்ளோ சம்பளம் வாங்குச்சு ? என்ற ரீதியிலான உலகைப் புரட்டிப் போடவல்ல புள்ளிவிபரங்கள் மீது ஓயாத காதலாச்சே ? So படைப்பாளிகளிடம் நான் முன்வைக்கும் பிரதான கேள்வியே - "இது எவ்ளோ ஆல்பம் அச்சிட்டீங்க ? எவ்ளோ விற்பனையாச்சு ?" என்று இருப்பது வாடிக்கை ! நாம் மூக்குப்பொடி மட்டை அளவிலான சர்குலேஷனோடு வண்டியோட்டுவது அவர்கட்கு நன்றாகவே தெரியும் தான் ; 'அட...இந்த இலட்சணத்தில் உன் புழைப்பைப் பாக்குறே வழியை விட்டுப்புட்டு எங்க விற்பனையைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆணி பிடுங்கப் போறே ?" என்று கேட்டார்களெனில் அதனில் பரிபூரண லாஜிக்கும் இருக்கும் தான் ! ஆனால் புன்னகையோடே எனது அறிவுப்பசிக்கு (!!!) தீனி போடுவார்கள் ! "இரத்தப் படலம்" பல லட்சங்களில் ; லக்கி லூக் - again லட்சங்களில் ; லார்கோ : லட்சத்தினில்...என்று சொல்லும் போது  பூசணிக்காயே நுழையும் அளவுக்கு அலிபாபா குகையாய் என் வாய் விரிந்து கிடக்கும் ! "ஆக எல்லாமே லட்சத்தில் போலும் !!" என்று நினைத்துக் கிடந்தவனுக்கு , சற்றே low profile கதை நாயகர்களின் விற்பனை பற்றிய நிலவரம் தெரிந்த போது ரொம்பவே ஷாக் !! நம்மிடையே கொஞ்ச ஆண்டுகள் முன்பாய் செம ஹிட்டடித்ததொரு கலர் கி.நா ஒன்றின் ஒரிஜினல் பிரெஞ்சு சேல்ஸ் - "TEN THOUSAND !!" என்று அவர்கள் சொல்லக்கேட்ட போது காதைக் குத்தி விட்டுக் கொள்ளவே தோன்றியது ! மெய்யாலுமே சின்ன சேல்ஸ் கொண்ட நாமெல்லாம் தனித்து இல்லை போலும்  - என்பது மேலும் புரிய வந்தது - நாம் இதுவரையிலும் வியாபாரம் செய்திரா இன்னொரு பிரெஞ்சுப் பதிப்பகம் தாங்கள் பொதுவாய் அச்சிடுவதே 5000 பிரதிகள் தான் என்பதை Frankfurt-ல் அவர்கள் வாயாலேயே சொல்லக் கேட்ட சமயத்தில் !!

So வழக்கம் போல ஓட்டை ரெகார்டுக் கேள்வியை நான் முன்வைக்க- "Decent சேல்ஸ் ; முதல் பதிப்பு 15,000 பிரதிகள் விற்றுள்ளது ! அப்புறம் இதுவொரு 2 பாக மிஸ்டரி த்ரில்லராக்கும் ; இரண்டாம் பாகம் 2018-ல் வெளியாகும் !" என்று பதில் வந்தது !  'அட...டபுள் ஆல்பம் ; ஒரு மர்ம த்ரில்லர் !" என்றால் நமக்கு ஆர்வத்தைக் கிளப்பிடக் கூடியதே - என்ற ஆர்வத்தில் 2018-ல் இதன் இறுதி பாகத்தை மறவாது வாங்கிய கையோடு - நமது மொழிபெயர்ப்பாளரைப் படித்துப் பார்க்கவும் கோரினேன் ! "Seems ok !" என்று அவரும் சொல்ல - 'விடாதே..பிடி...!" என்று உரிமைகளை வாங்கிய கையோடு அட்டவணைக்குள் ஒரு இடமும் கொடுத்து விட்டேன் ! "புது one shot ; கதை நேர்கோடா ? இடியாப்பமா ? என்றெல்லாம் தெரியாதே ; இதை மெயின் சந்தாவுக்குள் அவசரமாய் நுழைக்கத் தான் வேணுமா ? சிம்பிளான ஏதோவொரு ஆக்ஷன் ஆல்பத்தோடு வண்டியை ரிஸ்கின்றி ஒட்டிடலாமே ?" என்று உள்ளிருந்த முன்ஜாக்கிரதை முன்சாமி குரல் கொடுத்தார் ! ஆனால் கட்டைவிரலை கலைநயத்தோடு சூப்பிடும் கடமை கந்தசாமியோ - "ஆங்..அதெல்லாம் பாத்துக்கலாம் !! ; கதை சும்மா மெர்சலூட்டும் வேகத்தில் ஓடுது !!" என்று அன்றைக்குத் தீர்ப்பளித்து விட்டு பஞ்சாயத்தைக் கலைத்துவிட்டார் ! 

நாட்களும் ஓடின ; ஆண்டின் மைய்யமான பகுதியில் இதற்கு slot ஒதுக்கப்பட்டிருக்க - இதர வேலைகளில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது ! So இதை பற்றி மறந்தேயும் போயிருந்தேன் ! ஏப்ரல் / மே மாத ரேஞ்சில் இதற்கான பணியினைக் கையிலெடுக்க வேண்டிய தருணம் நெருங்கிய சமயம் நானோ லோன் ரேஞ்சர் ; பராகுடா ; கிராபிக் நாவல் போன்ற கொஞ்சம் குண்டூ பணிகளுக்கும் புதைந்து கிடந்தது மாத்திரமன்றி, சுகவீனத்தால் ஓய்விலும் இருந்தேன் ! So இதனை மொழிபெயர்க்கும் பணியினை திரு.கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மறுக்கா மறந்தே போயும் விட்டேன் ! அவரும் எழுதி அனுப்பிட, நம்மவர்களும் சூட்டோடு சூடாய் DTP செய்து ஒன்றரை மாதங்கள் முன்பாகவே என்னிடம் ஒப்படைத்திருக்க - வீட்டிலுள்ள எனது மேஜையில் அதுபாட்டுக்கு குறட்டை விட்டுக் கிடந்தது ! 'அட...மர்ம த்ரில்லர் தானே ? நேர்கோட்டுக் கதையாய்த் தானிருக்கும் ; கொஞ்சமாய் மெனெக்கெட்டால் வேலையாகிடும் !!' என்ற தெனாவட்டில் 10 நாட்களுக்கு முன்வரைக்கும் அதைக் கையில் தொடவே இல்லை !! Finally ஒரு சாவகாச சுபயோக சுப தினத்தில், 108 பக்கங்கள் கொண்ட இந்த டபுள் ஆல்பத்தைப் புரட்டத் துவங்கிய போது மெது மெதுவாய் இருக்கையில் நெளிய ஆரம்பித்தவன் - சற்றைக்கெல்லாம் வியர்த்து விறு விறுக்க பேய் முழியோடு காட்சி தர ஆரம்பித்தேன் ! ஒரு ரிப்போர்ட்டர் ஜானி பாணியிலான மர்ம த்ரில்லர் - ஆனால் டபுள் இடியாப்பங்களோடு என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! "தெய்வமே....இந்தாண்டு ஜானி 2.0 என்று ஒரிஜினல் ரிப்போர்ட்டர்  ஜானியைச் சேதமின்றிக் கரையேற்றிய கையோடு - இப்படியொரு புது ஐட்டமா ? " என்று தலையைச் சொறிய ஆரம்பித்தேன் ! 

For starters - நவநாகரீக youth 6 பேர் தான் இந்தக் கதையின் முக்கிய மாந்தர்களெனும் போது அவர்களுக்கான வசனங்களில் பிரயோகத்திலிருந்த கருணையானந்தம் அவர்களின் கிளாசிக் தமிழ் நெருடோ நெருடென்று நெருடியது !! சமகால யூத் - இலக்கியத் தமிழில் பேசினால், கதையின் டெம்போவுக்கு நிச்சயம் உதவிடாது என்பது பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புரிந்திட, எனது பதட்டம் அதிகமானது !  ஆகஸ்ட் சார்ந்த பணிப்பளு மண்டையில் பிரதானமாய் வீற்றிருக்க - மேஜராய் வசனங்களை மாற்றி எழுத அவகாசமில்லையே என்ற பயம் பக்கத்துக்குப் பக்கம் அதிகமாகிக் கொண்டே சென்றது ! பதட்டமும், குழப்பமும் கைகோர்க்கும் போது மண்டை எங்கே வேலை பார்க்கப் போகிறது ? "இன்னிக்கு ரா முழுக்க கண்முழிக்கறோம் ; தம் கட்டி வேலை பாக்கிறோம் ; ரெண்டே நாளிலே முடிக்கிறோம் !!" என்றபடிக்கு பணிக்குள் புகுந்தால் - "அண்ணாத்தே...அந்த வயசெல்லாம் நீங்க தாண்டி ஏக காலமாச்சு !!" என்று உடம்பு சொல்லத் துவங்கியது ! பற்றாக்குறைக்கு நமது இதர தொழில்முயற்சிகளுக்கும் அந்த வாரம் பிசியாகிட - நாளொன்றுக்கு ஏழோ-எட்டோ பக்கங்களுக்கு மேலே முடிக்கச் சாத்தியப்படவேயில்லை !! இயன்ற இடங்களில் வசனங்களைத் தக்க வைத்துக் கொண்டு ; அவசியமெனப்பட்ட இடங்களிலெல்லாம் முழுசாய் மாற்றும் வேலை துவங்கியது ! இதில் கொடுமை என்னவெனில் - பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பிலேயே ஏகமாய் dark areas இருந்தன !! 10 நாட்களாய் அதனோடு மல்லுக்கட்டியும் அதனை நான் முழுமையாய்ப் புரிந்து கொண்டதாய்ச் சொல்ல மாட்டேன் ; so யானையின் வாலா ? தும்பிக்கையா ? என்ற புரிதல் முழுமையாய் இன்றியே கதையினுள் புகுந்து பணியாற்றிய அனுபவம் கடந்த 10 நாட்களில் !!

சனிக்கிழமை காலையில் ஒரு மாதிரியாய் இந்தப் பணிகளுக்கு மங்களம் போட முடிந்த போது நான் விட்ட பெருமூச்சை ஒரு பலூனுக்குள் அடைத்திருப்பின் அது ராட்சச சைசில் இருந்திருக்கும் ! Anyways - ஒரு மறக்க இயலா எடிட்டிங் படலத்தின் இறுதியில் உங்களை சந்திக்கவிருக்கும் "நீரில்லை...நிலமில்லை" இதழினில் ஏகமாய்க் கேள்விகள் தொங்கி நிற்குமென்பதும் ; இந்தக் கதையினை இடியாப்ப ஜானியின் template உடன் ஒப்பிடுவது நிச்சயம் நிகழுமென்பதும் ; நிறைய காதுகளில் நிறைய தக்காளிச் சட்னிப் பிரவாகம் இருக்குமென்பதும் தீர்க்கதரிசி திருநா அவதார் எடுக்காமலே என்னால் ஆரூடமாய்ச் சொல்ல முடிகிறது !! இதோ இந்த இதழின் அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க previews !   


முன் & பின் அட்டைகள் ஒரிஜினல்களே ! And உட்பக்க சித்திரங்கள் + கலரிங் செம modern !! திங்களன்று அச்சுக்கு செல்லும் இதுவொரு visual treat ஆக இருக்குமென்ற நம்பிக்கை நிறையவே உள்ளது எனக்கு ! அந்த உட்பக்க previews ஒவ்வொன்றிலும் கேமரா கோணங்களைப் பாருங்களேன் !!!!! 

So ஒரு சுவாரஸ்ய ஜூலை காத்துள்ளதென்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடிகிறது எனக்கு ! அது முதுகில் மத்தளம் கொட்டி விறுவிறுப்பை ஏற்றிடுவதில் எழக்கூடிய சுவாரஸ்யமா ? அல்லது வாசிப்பினில் எழுந்திடவுள்ள சுவாரஸ்யமா ? என்பதை அடுத்த 2 வாரங்களில் தெரிந்திட ஆவலாய்க் காத்திருப்பேன் !!

So இப்போதைக்கு விடைபெறுகிறேன் guys - ஆகஸ்டில் காத்திருக்கும் கத்தையின் சவாலைச் சமாளிக்க வழி தேடிடும் முயற்சியினில் !! Have a blissful weekend !! Bye for now !! 

Saturday, June 15, 2019

வானவில்லின் இரு முனைகள்....!!

நண்பர்களே,

வணக்கம். வருண பகவான் மனசு வைத்தால் நாளைய பொழுது ஆசியத் துணைக்கண்டத்தின் முக்கால்வாசிக்கொரு (கிரிக்கெட்) திருவிழாவாகிடும் வாய்ப்புகள் எக்கச்சக்கம் என்பதால் நமது கச்சேரியினை இன்றே வைத்துக் கொள்ளல் நலமென்று நினைத்தேன் ! So here I am !! 

மாதத்தின் ஒரு பாதி நகன்றிருக்க, எதிர்நோக்கியுள்ள ஜூலை பக்கமாய் பார்வையினை ஓட விடுவதில் தப்பில்லை என்று பட்டது ! So நமது ஆண்டுமலர் மாதத்தினை வரவேற்கக் காத்துள்ள இதழ்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சலாமா folks ? ஜூலை என்ற உடனேயே பிறந்தநாள் கேக்கின் முன்னே குந்தியிருக்கும் சிங்கமும், அது கொணரும் நினைவுகளுமே மனதில் அலையடிப்பது வாடிக்கை ! முழுசாய் 35 ஆண்டுகளுக்கு முன்பாய்த் துவங்கிய பயணம் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாய் 35 மெழுகுவர்த்திகள் செருகக்கூடிய கேக்கெல்லாம் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்பதால் 35 என்ற நம்பரைப் பெருசாய்ப் போட மட்டுமே முனைந்துள்ளோம் - பொன்னனின் கைவண்ணத்திலான "லக்கி ஆண்டுமலர்" அட்டைப்படத்தினில் !! 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய இதே வேளையில்  - "வருகிறது : லயன் காமிக்ஸ் - "கத்தி முனையில் மாடஸ்டி ! விற்பனையாளர்கள் தேவை !!" என்ற அரைப் பக்க விளம்பரத்தை "கல்கண்டு" வாரயிதழினில் வெளியிடும் பொருட்டு மதுரையில் கடுவன் பூனை போல சுற்றி வந்தது இன்னமும் நினைவிலிருந்து அகலவில்லை ! விளம்பரக் கட்டணமாய் ஒரு ஏஜென்சி ரூ.2000 கேட்க, எனக்கோ 'பக்கோ' என்றிருந்தது !!  நாலு கடை ஏறி இறங்கினாக்கா ஏதாச்சும் சலுகை கிட்டுமோ ? என்ற ஆதங்கம் தலைதூக்கியது !! இறுதியாய் ரூ.1800 -க்கு "சந்திரா பப்லிசிட்டிஸ் " என்ற நிறுவனம் சம்மதிக்க, அவர்களிடம் விளம்பர டிசைனின் நெகட்டிவ்வை ஒப்படைத்து விட்டு ஊர் திரும்பினேன் - பெருசாய் எதையோ சாதித்து விட்ட திருப்தியோடு ! அந்நாட்களில் "கல்கண்டு "சுமார் ஒன்றரை இலட்சம் சர்குலேஷன் கொண்ட இதழ் என்பதால் - கணிசமான enquiries கிட்டுமென்ற நம்பிக்கை எனக்குள் ! அந்நாட்களில் நமக்கென ஒரு புறாக்கூட்டு அலுவலகம் கூடக் கிடையாது ; தந்தையும், அவரது சகோதரர்களும் இயங்கி வந்த ஆபீஸின் ஒரு மூலையில், ஒரேயொரு மேஜை தான் லயன் காமிக்சின் ஆபீஸ் ; பணிக்கூடம் - எல்லாமே ! So விண்ணப்பிக்க விரும்பும் முகவர்களின் தொடர்புக்கெனத் தந்திட்டதும் 04562 - 132 என்ற அந்நாட்களது அவர்களது லேண்ட்லைன் போன் நம்பரையே !! 1984 -ல் அந்தக் கறுப்பு போன் 'ட்ரிங்..ட்ரிங்' என்றாலே ஆபீஸிலிருக்கும்  அத்தனை பேரும் தெறித்து ஓட்டமெடுப்பது வாடிக்கை - simply becos உச்சத்திலிருந்த கடன் தொல்லைகள் காரணமாய், நித்தமும் நயமான அர்ச்சனைகள் செவிகளை சிவப்பாக்கிடுவதுண்டு ! எனக்கோ - 'அடிக்கிற ஒவ்வொரு போனுமே ஏதோவொரு ஊரின் முகவராக இருக்குமோ ?' என்ற பதைபதைப்பு ! So விளம்பரம் வெளியான வெள்ளிக்கிழமையிலிருந்து போனை முதல் ரிங்கிலேயே எடுக்க முனைந்து, காது நிறைய தக்காளிச் சட்னியை வாங்கிக்கட்டிக் கொண்ட படலமே தொடர்ந்தது ! ஹிந்தியிலும், சிங்காரச் சென்னையின் நறுமணம் கமழும் தமிழிலும் அந்த ஒரு வாரத்துக்கு  நான் கேட்டுக் கொண்ட வரிகளைக் கொண்டு ஒரு 'கலாமிட்டி ஜேன்' முழுநீளக் கதைக்கே @#*### **$@*) ஸ்கிரிப்ட் தயார் பண்ணியிருக்கலாம் ! 

ஷப்பா....!!! சனிக்கிழமை வந்த முதல் முகவரின் போன் தான் காதில் கசிந்த குருதிக்கு   மருந்திட்டது ! திண்டுக்கல் நகரைச் சார்ந்த அந்நாட்களது முத்து காமிக்ஸ் முகவர் - தனது துணைவியார் பெயரில் ஏஜென்சி எடுக்க நேரில் வரலாமா ? என்று கேட்க - எனக்கு செம த்ரில் ! அவரை வரச் சொன்னபிற்பாடு தான் உறைத்தது -  கைவசம் ரசீது புக் கூட இல்லையே என்று ! 'விடாதே-பிடி' என்று அவசரம் அவசரமாய் முத்து காமிக்சின் ரசீதையே மாதிரியாய்க் கொண்டு, அங்கேயே இருந்து அச்சுக் கோர்ப்புப் பிரிவினரிடம்  வேலையை ஒப்படைத்து, ஒரே மணி நேரத்தில் ரசீதை அச்சடித்து வாங்கிவிட முடிந்தது ! ஆனால் மேல்தாளையும், அடித்தாளையும் பைண்டிங் செய்து வாங்கிட அவகாசமில்லை ! So நடுங்கும் கையோடு முதல் ரசீதைப் போட்ட போது loose sheets  தான் !! "200 புக்குகள் திண்டுக்கல் நகருக்கு ; பிரதி ஒன்றுக்கு ரூ.3 வீதம் மொத்தம் ரூ.600 டெபாசிட்" என்று சொல்லியவர் சிரித்த முகத்தோடு, என் கையில் 6 நூறு ரூபாய் நோட்டுக்களைத் திணித்த போது உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளின் நர்த்தனத்தை உணர முடிந்தது ! வாழ்க்கையில் முதன்முறையாக நான் கையில் வாங்கிய பணத்தை எந்தப் பெயரில் வரவு செய்வது ? என்று கேட்டேன் ! "சரஸ்வதி" என்ற பெயரில் போடுங்க தம்பி ! என்றார் !! Could just have been a simple coincidence - ஆனால் 35 ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும் இந்தப் பயணம், நிச்சயமாய்  ஆண்டவனின் ஆசீர்வாதங்களுடனானது என்ற எனது நம்பிக்கையின் துவக்கப் புள்ளி அந்த ரசீதில் உள்ளது ! 

தொடர்ந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாய் தபாலில் ஏஜென்சி கோரிடும் விண்ணப்பங்களும் வரத்துவங்கிட, அந்த நொடியே அவர்கட்கு படிவங்களை அனுப்புவதில் பிசியானேன் ! முதல் மாதம் மாத்திரம் மதுரையின் அந்நாட்களது தினமணி ஏஜென்ட் நமக்கு முகவராய்ச் செயல்பட்டதால் - அவர் மூலமாக தினமணி நாளிதழிலும் விளம்பரம் செய்தோம் ஒரேவாட்டி மட்டும் ! சக்கரம் மெது மெதுவாய்ச் சுழலத் துவங்க -   ஜூலை பிறப்பதற்குள் சுமார் 140 ஏஜெண்ட்கள் தேறியிருந்தனர் மொத்தமாய் ! அதனில் கிட்டத்தட்ட 135 பேர் முன்பணம் + டெபாசிட் செலுத்தியிருக்க - 'லயன் காமிக்சின் ' வங்கிக் கையிருப்பு 5 இலக்கங்களில் கெத்து காட்டியது !! சென்னைக்கு 5000 பிரதிகள் ; மதுரை / கோவை தலா 3000 ; சேலம் / திருச்சி தலா 2000 என்று ஆர்டர் இருந்த அந்த நாட்களை ஒவ்வொரு ஜூனின் இறுதியிலும் நினைத்துப் பார்த்துக் கொண்டு ரயில் எஞ்சின் போல பெருமூச்சு விட்டுக் கொள்வேன் ! இந்தாண்டும் அதற்கொரு விதிவிலக்காகுமா - என்ன ? 

Back to terra firma - இதோ ஆண்டு # 35-ன் அடையாளமாய் வரவுள்ள டபுள் ஆல்பம் !! முன் & பின் அட்டைகள் இரண்டுமே ஒரிஜினல் டிசைன்களே ;  மெருகூட்டல் மாத்திரமே நம் பங்களிப்பு இங்கே ! 

"பாரிசில் ஒரு கௌபாய்" - லக்கி தொடரின் லேட்டஸ்ட் ஆல்பம் ! 2018 நவம்பரில் ஒரிஜினல் பிரெஞ்சு ஆல்பமானது ரிலீஸ் ஆகியது ! படைப்பாளிகளுக்கு,  தம் ஆதர்ஷ ஒல்லிப்பிச்சானை வன்மேற்கிலிருந்து ஒருவாட்டியாவது சொந்த ஊருக்கு இட்டுப் போக ஆசை போலும் ; பெரும் பிரயாசைப்பட்டு கடல் கடக்கச் செய்துள்ளார்கள் ! ஒரிஜினல் மோரிஸ் தரத்திலான படைப்பல்ல என்ற போதிலும், ஜாலியான read என்பதில் சந்தேகமில்லை ! 
And இதன் கதை # 2 ஒரு க்ளாஸிக் மோரிஸ் ஆக்கம் !! அந்த நாட்களது தரமே ஒரு தனி உச்சம் எனும் போது - 1971-ல் உருவாகிய "உத்தம புத்திரன்" ஆல்பத்தை ரசிப்பது ஒரு அலாதி சுகமே !! So சென்றாண்டைப் போலவே இம்முறையும் ஆண்டுமலரை சிறப்பிக்கப் போவது நமது பிரியமான கார்ட்டூன் நாயகரே !! ஏற்கனவே ஏப்ரலில் ஒரு சிங்கிள் ஆல்பத்தோடு ரகளை செய்திருக்க, இப்போதோ டபுள் ஆல்பம் எனும் போது - L.L காட்டில் அடைமழையே - நம் மத்தியிலாவது !! 

Moving on - இம்மாதத்து இதழ் # 2 செம வெயிட்டான களம் ! "நித்திரை மறந்த நியூயார்க்" black & white-ல் ஒரு visual bonanza என்பேன் ! இந்த கிராபிக் நாவல் தனித்தடம் அறிமுகம் கண்ட நாள் முதலாய் - கறுப்பு, வெள்ளையில் ஆஜராகிடும் dark கதைகளை ரசிப்பது நமக்கு செம சுவாரஸ்யமான பொழுதுபோக்காகியிருப்பது கண்கூடு ! "நிஜங்களின் நிசப்தம்" அதனில் ஒரு செம extreme என்பதை ஏற்றுக்கொண்டு - பாக்கி இதழ்களைப் பார்வையிடும் பட்சத்தில், ஒவ்வொன்றுமே நமக்குத் தந்துள்ள வாசிப்பு அனுபவங்கள் மிரட்டலான ரகங்களே !! ஒரு மனநல விடுதியினுள் சிக்கிடும் திருடர்கள் ; யுத்த காலத்து பெர்லினின் சதிராட்டங்கள் ; வேல்ஸ் மண்ணில் கனவுகளின் வலிமைகள் ; நூற்றாண்டுக்கு முந்தைய பிரான்சின் சிறுகிராமத்தில் வாழ்க்கை - என நாம் பயணித்துள்ள பாதையின் காட்சிப் பொருட்கள் சராசரியான ஆக்ஷன் தொடர்களிலோ ; மாமூலான கவ்பாய் கதைகளிலோ பார்த்திடத் துளியும் வாய்ப்பிலா  சமாச்சாரங்கள் என்பேன் !   நியூயார்க் நகரத்தைப் பின்னணியாய்க் கொண்டு வெளிவந்திடக் காத்துள்ள இந்த ஆல்பம் இதற்கு முந்தைய ஆல்பங்களை போலவே செம unique in its own way !! 

நியூயார்க் நகரினை முதன்முறையாய்ப் பார்த்திடும் எவருமே அதனைக் கண்டு பிரமிக்காது ; மிரளாது ; வாயைப் பிளக்காது இருத்தல் வெகு சிரமம் !! அமெரிக்காவே ஒரு பிரமிப்பூட்டும் தேசம் தான் என்றாலும், NY நகருக்கென ஒரு செம பிரத்யேக feel உண்டு !! அங்கே கால்பதித்தோர் எவரும் அதனை உணராது போயிருக்க இயலாதென்பேன் ! நீங்கள் அங்கு பயணித்திருந்தாலும் சரி, படங்களிலும், கதைகளிலும் மட்டுமே பார்த்திருப்போராய் இருந்தாலும் சரி - இம்மாத கிராபிக் நாவலைப் படித்தான பிற்பாடு Big Apple எனப்படும் அந்த உலகின் தலைநகரில் கொஞ்ச காலத்திற்கு வாழ்ந்தது போலான feeling-ஐத் தவிர்க்கவே முடியாது ! 1930 களின் நியூயார்க் தான் இந்த ஆல்பத்தின் background !! அது சரி, 1930-ல் மையம் கொள்ள என்ன அவசியமோ ? என்று நமக்கிங்கு தோன்றிடலாம் ! ஆனால் 1930-களுக்கும், நியூயார்க் நகருக்கும் ஒரு பெரும் சம்பந்தம் இருப்பதை வரலாறு அறியும் ! இந்த ஆல்பம் வெளியான பிற்பாடு நம்மவர்கள் கூகுளில் இது பற்றி அலசி ஆராய்ந்து பெடலெடுக்கப் போவதையும் இப்போதே என்னால் யூகிக்க முடிகிறது ! So இந்த ஆல்பத்தினை 1930-ல் அமைத்திட வேண்டிய அவசியம் பற்றி மேலோட்டமாய்ச் சொன்ன கையோடு நான் கழன்று கொள்கிறேன் - மீதத்தை ஆராய இப்போதே 'தம்' கட்டிக்கொள்ளுங்கள் புலவர்களே ! என்ற அறிவுறுத்தலோடு !! 

"The Great Depression " - என்ற பெயர் - 1930 களை ஆட்டிப்படைத்த பொருளாதாரப் பீடைகளுக்கு !! 1920 களில் பெரும் செழிப்பில் அமெரிக்காவே திளைத்திருந்தது ! உற்பத்தி சக்கை போடு போடுவது ஒருபக்கமெனில் சினிமா ; வணிகம் ; பங்குச் சந்தை வர்த்தகம் என்று இதர துறைகளுமே கொடிகட்டிப் பறந்தன ! So much so that 1920 களுக்கு The Roaring Twenties என்றே பெயரிட்டனர் ! ஆனால் சோப்பு நுரை குமிழ்  'டுப்'பென்று வெடிப்பது போல 1929 -ன் செப்டெம்பரிலும், அக்டோபரிலும் Wall street எனப்படும் அமெரிக்கப் பங்குச் சந்தை பூதாகாரமாய்ச் சரிந்தது ! முறையற்ற பங்குப் பரிவர்த்தனைகள் ; ஆதாய நோக்கில் வாங்கவும் - விற்கவும் முதலீட்டாளர்கள் காட்டிய பேராசை ; கொப்பளிக்கும் செல்வதை முறைப்படுத்த சரியான கட்டுப்பாடுகள் இல்லா நிலைமை - என பல காரணங்கள் ஒன்று சேர்ந்த போது, அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு விழுந்த சம்மட்டி அடி அசாத்தியமானது ! And அதன் முக்காலே மூன்று வீசத்து ரணத்தை வாங்கி கொண்டது நியூயார்க் நகரே !! 1900 முதல் 1930 வரைக்குள்ளான முப்பதே ஆண்டுகளில் NY -ன் ஜனத்தொகை இரட்டிப்பாகியது ! பிழைப்புத் தேடி இங்கே குவிந்தோருக்கு நிறங்களிலோ ; மதங்களிலோ ; திறன்களிலோ எவ்வித ஒற்றுமையும் இருக்கவில்லை ! "ஏதாச்சும் செஞ்சு புழைச்சுக்கலாம் !" என்று திமு திமுவென குவிந்த ஜனம் அது ! பங்குச் சந்தை ராட்சஸச் சரிவைக் கண்ட பிற்பாடு நியூயார்க் ஸ்தம்பித்துப் போனது ! 1932 வாக்கில், நியூயார்க்கின் உற்பத்தி ஆலைகளில் பாதி மூடிக்கிடந்தன! மூன்றில் ஒரு நியூயார்க்கருக்கு வேலையில்லை  ;  கிட்டத்தட்ட 16 லட்சம் மக்கள் அரசின் நிவாரணங்கள் பெயரைச் சொல்லியே வயிற்றைக் கழுவி வந்தனர் ! இத்தகையதொரு  நெருக்கடியை சமாளிக்க துளியும் ஆயுத்தமிலா நிலையில் தத்தளித்த NY நகரின் இருண்ட நாட்களே நமது இம்மாதத்து கி.நா.க்கு பின்புலம் !! (ஷப்பா...இந்த மொக்கையைப் படிக்கிறே நேரத்துக்கு நான் நிஜங்களின் நிசப்தத்தே இன்னொருவாட்டி படிச்சிட்டுப் போயிடுவேனே !!" என்று புலம்பும் சத்தம் கேட்குதோ ? Sorry guys - இந்த ஆல்பத்தின் பின்னணியினைக்   கொஞ்சமாய் உள்வாங்கிக்கொண்டால் கதையினை ரசிக்க இலகுவாய் இருக்குமே என்ற  ஒரு ஆர்வக்கோளாறில் தான் எக்கச்சக்க எக்ஸ்டரா நம்பர்களை போட்டுப்புட்டேன் !!)
இதோ ஆல்பத்தின் அட்டைப்படம் - ஒரிஜினலில் இருந்து சன்னமாய்  மாற்றத்துடன் !! ஜன்னலுக்கு வெளியே விரியும் காட்சியானது மினுமினுக்கும் நியூயார்க் இரவினைப் பிரதிபலிக்க - அறையினுள்ளோ அந்நாட்களது black & white போட்டோ பாணியில் சகலமும் இருப்பதைக் காண்கிறீர்கள் ! ஒருவிதத்தில் கதையின் பாணிக்குமே இதுவொரு subtle indicator !! And தொடரும் preview பக்கங்களில் உட்பக்க சித்திர ஜாலங்களை பாருங்களேன் !!  



Black & white-ல் கதையின் மூடுக்கேற்ப ஓவியர் இங்கு உருவாக்கியுள்ள சித்திரங்கள் முற்றிலுமாய் வேறொரு லெவலில் உள்ளன ! இந்த ஆல்பத்தில் பணியாற்றிய ஒவ்வொரு இரவும் எனக்கு அந்நாட்களது  NY சோகத்தை உணர முடிந்ததென்பது ஓவியரின் பணிநேர்த்தியின் பிரதிபலிப்பு என்பேன் !! இந்தக் கதைக்கென ஓவியர் எத்தனை research செய்திருப்பார் என்பதை ஒரு யூகமாய் சிந்தித்துப் பார்க்கவே மிரட்சியாக உள்ளது !!  And கதையைப் பொறுத்தவரை ............... ??!!! Phew .........ஜாக்கிரதை folks !! கி.நாவுக்கே ஒரு கி.நா அனுபவமிங்கே waiting !! கொத்து கொத்தாய் பிய்த்தெடுத்த கேசக்கற்றைகள் இன்னமும் கையிலிருக்க  சீக்கிரமே துணைக்கு நிறையப்பேர் கிட்டப் போகிறீர்கள் என்ற குஷியில் I am also waiting !! 

நடையைக் கட்டும் முன்பாய் - இதோ நமது ஈரோட்டு எக்ஸ்பிரஸுக்கான இதுவரையிலான முன்பதிவுப் பட்டியல் ! விடுதல்கள் இருப்பின் (and there would be for sure ...) தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ! இங்கே பின்னூட்டங்களில் அதனைக் குறிப்பிடுவது உதவிடாது - ப்ளீஸ் !! 
And இன்னமும் வண்டியில் எக்கச்சக்க சீட்கள் காலியிருப்பதால் - அவற்றை நிரப்பிட உங்களை எதிர்நோக்கிக் காத்துள்ளோம் guys !! Before I sign off - here you go !!
 Have a sparkling weekend all !! See you around !!

P.S : 1930 களின்  நியூயார்க் !!! சில போட்டோக்கள் !!
Central Park - அன்றைக்கு !! 

இலவச உணவுக்கு நெடும் கூட்டம் !! 

ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கட்டி முடிக்கப்பட்ட Empire State Building !! 
சத்தியமா இதுவும் நியூயார்க் தானுங்கோ !! Brooklyn !! 



அடாது மழை பெய்தாலும், விடாது பணியாற்றும் கட்டிடத் தொழிலாளர்கள் !! Rockfeller Center கட்டுமானத்தில் !! 
Phew !!! இது Manhattan !! அன்றைக்கு !! 

Sunday, June 09, 2019

தி லுங்கி டான்ஸ் !

நண்பர்களே,

வணக்கம். காண்டிராக்டர் நேசமணி பெயரைச் சொல்லி ஒரு வாரம் ஓட்டமெடுத்திருக்க, இதோ உலகக் கோப்பைக் காய்ச்சலோடு தடதடக்கத் துவங்கிவிட்டது புதியதொரு வாரம் ! And புது இதழ்களின் அலசலில் இன்னமும் முழுமூச்சில் நீங்கள் இறங்கியிருக்கா நிலையில் - ஒளிவட்டத்தை வேறெங்கும் பாய்ச்ச மனம் ஒப்பவில்லை ! இப்பொதெல்லாமே மெயின் பிக்சரை பார்க்க நேரம் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருக்க, டிரெய்லர்களைப் பார்த்து, விசிலடித்து விட்டுப் போவதே லேசு என்பது போல்படுகிறது - மாதம்தோறும் இதழ்களுக்குள் புகுந்திட நம்மில் பெரும்பான்மை சிரமம் கொள்வதைப் பார்க்கும் போது ! In some ways - இந்தக் குறியீடுகளை அலசிட எனக்கு அவகாசம் கிட்டியிருப்பதுமே ஒரு வரமென்றே சொல்லத் தோன்றுகிறது ; வரும் காலங்களில், மாதம்தோறும் களமோ ; கனமோ - அதீதமான ஒரு புக்கும் ; களமும், கனமும் இலகுவாய் 2 புக்குகளும் இருத்தலே சரியான திட்டமிடலாயிருக்கும்  என்று புரிகிறது ! So அட்டவணையின் இறுதிப்படுத்தல் பணிகளில் இதன் பொருட்டு நிறையவே கவனம் தர முனைவேன் !

"சரி....இந்த வாரம் என்ன எழுதுவது ?" என்ற கேள்வி இந்த நொடியில் என் முன்னே ஆட்டம் போட - முன்னே ஓடிக்கொண்டிருக்கும் டி-வியிலோ மப்பும், மந்தாரமுமாய்க் காட்சி தரும் ஒரு லண்டனின் மதியத்தில் நம்மவர்கள் net practice செய்வதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள் ! "அட...ஒரு வாடகைச் சைக்கிளை வாங்கிப்புட்டு லைட்டா மிதிச்சாக்கா - 34 ஆண்டுகளுக்கு ரிவர்ஸ் கியர் போட்டுப்புடலாமே ; இதே லண்டனில் லுங்கியோடு பேந்தப் பேந்த நின்ற கதையையும் சொன்னது போலிருக்குமே !!" என்று பட்டது !! Yup ..you guessed right guys - இது flashback time !! So சன்னமாய் சில பல எச்சரிக்கைகள் :

1 .காமிக்ஸ் தொடர்பான செய்திகள் தூவலாய் மாத்திரமே தொடர்ந்திடும் ; so "உன் மொக்கை யாருக்கு வேணும்டா சாமி ?" என்போர் நேராய் பதிவின் வாலுக்கு ஜூட் விடலாமே - ப்ளீஸ் !

2 சிக்கிய சந்தில் எல்லாம் புராணம் பாடுவது வாடிக்கை என்பதால்  - இது ஏற்கனவே "சிங்கத்தின் சிறு வயதில்" தொடரிலோ ; அல்லது இங்கே பதிவுப்பக்கங்களிலோ நான் எழுதியிருக்கவும் கூடும் தான் ! So மறு ஒலிபரப்பாயிருக்கும் வாய்ப்புகளும் பிரகாசம் ! So ஜாக்கிரதை ப்ளீஸ் !

3 "சரி...உன் அனுபவத்தைச் சொல்லி எந்த பெர்லின் சுவரை தகர்க்கப் போறே தம்பி ? எந்த லோகத்துக்கு விடுதலை வாங்கித் தரப் போறே ?" என்ற கேள்வி உதட்டோரம் குடி கொண்டிருப்போராய் நீங்கள் இருக்கும் பட்சத்திலும் - பதிவின் வாலுக்கு பயணம் புளீஸ் ? ஒரு ஞாயிறை சுவாரஸ்யமாய் ஓட்டுவதான நினைப்பில் எழுதிட முனையும் வரிகளே தொடர்கின்றன ; இது பூமிக்கு சுவிசேஷத்தைக் கொணர போகும் சேதியல்ல என்பதை ஒத்துக் கொள்ளும் முதல் ஆள் ஞானே !!

So மேற்படி எச்சரிக்கைகளுக்கு பிற்பாடும் படிக்க ஆஜராகும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு மானசீக ரவுண்டு பன் வழங்கிய கையோடு மொக்கைக்குள் புகுந்திடுகிறேனே ! 

அந்தக் காலங்களில் அயல்தேசப்   பயணங்கள் என்பதெல்லாம் பெரியாட்களும், முக்கியஸ்தர்களும் மட்டுமே நினைத்துப் பார்க்கக்கூடிய சமாச்சாரங்கள் ! "இதயம் பேசுகிறது" என்ற பெயரில் வெளியாகி வந்த வாரயிதழில் அதன் ஆசிரியர் மணியன் அவர்கள் ரெகுலராய்த் தனது பயணக்கட்டுரைகளை எழுதுவதுண்டு & அவற்றைப் படிப்பதற்காகவே அந்த இதழை வாங்குவோரும் கணிசம் என்பது இன்னமும் நினைவில் நிழலாடுகிறது ! So அட்லஸில் நாடுகளாய் ; தலைநகர்களாய் மட்டுமே பரிச்சயமான ஊர்களுக்கு நேரில் போகவொரு வாய்ப்பு 1985 -ல் கிட்டிய போது உள்ளுக்குள் நிறைய உதறல் + கொஞ்சம் ஆசை ! எது எப்படியோ - இலண்டனைப் பார்த்தே தீர வேண்டுமென்ற ஆசை மட்டும் வேரூன்றியிருந்தது ! அதற்கு சில காரணங்கள் இல்லாதில்லை : 

ஆறாப்பு ; ஏழாப்பு படிக்கும் நாட்களில் ஆங்கில எழுத்தாளர் திருமதி Enid Blyton அவர்களின் சிறார் நாவல்களைப் பேயாய்ப் படிப்பதுண்டு ! Famous Five ; Secret Seven ; Five Find outers என்றெல்லாம் பள்ளி மாணவர்களை நாயக / நாயகியராய்க் கொண்டு அவர் உருவாக்கியிருந்த அத்தனை நாவல்களிலும் இங்கிலாந்தே கதைக்களம் ! கதைகளின்  மத்தியில், இங்கிலாந்தின் கிராமீய அழகு பற்றி ; கடலோர பிராந்தியங்களின் ரம்யத்தைப் பற்றி ; இலண்டனின் பரபரப்பு பற்றி ; தேநீர் வேளையில் அவர்கள் அழகாய் சாப்பிடும் கேக் ; பன் இத்யாதிகளைப் பற்றி அவர் விவரிக்கும் அழகில் அந்த தேசத்தின் மீதே ஒரு காதல் உருவாகியிருந்தது ! பற்றாக்குறைக்கு என் தந்தை சிக்கும் சந்தடியில் எல்லாமே - "உன்னை லண்டனுக்கு அனுப்பி journalism படிக்க வைக்கப் போறேன் !" என்று அள்ளி விடுவதுண்டு அந்நாட்களில் ! Journalism (இதழியல்) என்றால் என்னவென்றே தெரியாத மாக்கானாய்  இருந்தபோதிலும் "வருங்காலத்தில் நீங்கல்லாம் என்ன படிக்க போறீங்க பசங்களா ?" என்று பள்ளிக்கூடத்தில் டீச்சர் கேட்கும் போது கெத்தாய் "இலண்டன் மேலே journalism படிக்கறான் !" என்று பதில் சொல்லியிருக்கிறேன் ! பற்றாக்குறைக்கு அந்த Big Ben கடிகாரம் ; இலண்டன் பார்லிமெண்ட் போன்ற landmark ஸ்தலங்களை நமது அந்நாட்களது காமிக்ஸ்களில் பார்த்துப் பரவசமடைந்து கொள்வதுண்டு !  "மஞ்சள்பூ மர்மம் " இதழில் தேம்ஸ் நதி மீதான பாலத்தில் அடிதடி நடக்கும் சீன்களெல்லாம் நம்மூரில் கூவத்தின் மீது நடக்கும் ரகளைகள் போலவே பரிச்சயமான பிரதேசங்களாய்த் தோன்றிடும் ! "பாதாள நகரம்" இதழில் மாயாவியை ரீஜெண்ட் பார்க்கிற்குச் செல்லுமாறு டிரம் அடிக்கும் ஆசாமி  சங்கேத பாஷையில் தகவல் சொல்லும்போது - 'அட..நம்ம காமராஜ் பூங்கா ' மாதிரியே இருக்கு பார்டா !' என்று சொல்லிக்கொள்வேன்   ! 

பற்பல சாமிகளின்  புண்ணியத்தில் 1985-ன் அக்டொபரில் இலண்டனில் முதன்முதலாய்க் கால் பதிக்க சந்தர்ப்பம் அமைந்த போது, சினிமாவில் வருவது போல் பூமியெல்லாம் காலுக்குள் அதிரவில்லை  ! அந்த மண்ணைத் தொட்டு நானும் திருநீராயும் பூசிக் கொள்ளவில்லை ! மாறாக டோவர் துறைமுகத்தில் விசா வழங்கும் படலத்தில் இலண்டனின் குடியேற்றத்துறை வைத்திருந்த ஆப்பு தொண்டைக்குழி வரைக்கும் ஏறியிருக்க - அந்தப் பின்னிரவு லண்டனைப் பார்க்கவே சகிக்கலை எனக்கு ! And அடுத்த 11 நாட்களுக்கு அந்த தேசமே நமக்கு ஜாகை என்ற நினைப்பிலேயே காய்ச்சல் வராத குறை தான் ! பயண ஏற்பாடெல்லாம் தந்தையின் கைவண்ணமாயிருக்க, எங்கே போனாலும் ஒரு வாரம் ; ஒரு மாதமென டேரா போடும் அவரது வாடிக்கையின்படியே எனக்கும் itinerary செட் பண்ணியிருந்தார்கள் !

எங்கேயாச்சும் போய் ஒரு பாட்டம் 'ஓவென்று' அழுதால் தேவலாம் என்றிருந்த நிலையில் தான் லண்டனுக்குள் நுழைந்திருந்தேன் ! இன்டர்நெட் ஏதுமிலா அந்நாட்களில் ; ஹோட்டல் புக்கிங் எதுவும் கிடையாது ! 14 ஆண்டுகளுக்கு முன்னே லண்டனுக்குப் பயணமாகியிருந்த சீனியர் எடிட்டர் அன்றைக்கு அங்கிருந்த இந்திய YMCA-வில் தங்கியிருந்திருக்க, என்னையும் அங்கே போய்த் தங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தார் ! ஒரு முரட்டு பை ப்ளஸ் ஒரு brief case சகிதம் இந்தியன் YMCA இருக்கும் ஏரியாவின் பெயரைச் சொல்லி டாக்சியில் சென்று இறங்கி விட்டேன் ! ஏதோ - சோத்தாங்கைப் பக்கம் போய், பீச்சாங்கைப் பக்கம் போனா இடம் வந்துவிடும் என்ற நினைப்பில் டாக்சியிலிருந்து இறங்கியவனின் கண்ணில் பட்டது உசரமாய் தொடுவானத்தில் நின்று கொண்டிருந்த லண்டனின் சுழலும் டவர் போஸ்ட் ஆபீஸ் கோபுரமே ! அதன் உச்சியில் ஒரு ரெஸ்டாரண்ட் இருப்பதுமே எனக்குத் தெரியும் - "இயந்திரத்தலை மனிதர்கள்" கிளைமாக்சின் புண்ணியத்தில் ! ஆனால் அந்தத் தனிமையான நொடியில் அதை ரசிக்கும் நிலையிலெல்லாம் நானில்லை ! "முன்சாமிய பாத்தீகளா ? முன்சாமிய பாத்தீகளா ? " என்று ஜப்பானில் அனற்றித் திரியும் கவுண்டரைப் போல "YMCA எங்கே இருக்குங்கண்ணா ? YMCA எங்கே இருக்குங்கண்ணா ?" என்ற கேள்வியோடே கண்ணில்பட்டவர்களையெல்லாம் தாக்கிக் கொண்டிருந்தேன் ! அதுவொரு வெள்ளியிரவு வேறு ; எதிர்ப்பட்ட நாலில் ரெண்டு பேர் புல் பூஸ்ட்டில் தான் மணந்து கொண்டிருந்தார்கள்  ; எவனாச்சும் மப்பில் மண்டையைப் பிளந்திடுவானோ ? என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது ! ஒரு மாதிரியாய் ஒரு வயோதிகத் தம்பதியின் புண்ணியத்தில் YMCA இருந்த சதுக்கத்தைத் தேடிப்பிடித்த போது என் நோவுகளெல்லாம் தீர்ந்து விட்டது போல் இருந்தது ! 

'நேரா போறோம்...ஒரு ரூம் போடறோம்...ஒரு குளியலை போட்ட கையோடு, தூக்கத்தைப் போடறோம் !" என்ற திட்டமிடலோடு போனவன் தலையில் அங்கிருந்த வெள்ளைக்காரப் பெண்மணி சிம்பிளாக ஒரு கல்லைப் போட்டு வைத்தாள் ! "Do you have a reservation ?" என்று கேட்டவளிடம் - "No ...நோ...you see I am from India ...." என்று தம் கட்டி நான் விளக்கம் சொல்ல முற்பட - "சாரி...அடுத்த மூன்றரை மாதங்களுக்கு இங்கே எல்லா அறைகளும் full " என்றபடிக்கே படித்துக்கொண்டிருந்த நாவலுக்குள் தலை புதைத்துக் கொண்டாள் ! மையமாய் , மௌனமாய் , கம்பீரமாய் அங்கே வீற்றிருந்த நம் தேசப் பிதாவின் உருவத்தைப் பார்க்கப் பார்க்க அழுகாச்சி பீலிங்கு மேலோங்கியது ! பற்றாக்குறைக்கு அங்கிருந்த இந்திய மெஸ்ஸிலிருந்து வந்த நறுமணம், சோற்றுக்குச் செத்துக்   கிடந்த நாசிகளையும், வயிற்றையும் ஏகமாய் உசுப்பி விட - "இன்னிக்கு அத்தினி பேருக்கும் பேதி புடுங்கப் போது - பாரு !!" என்ற சாபத்தோடு நடையைக் கட்டினேன் ! திரும்பவும் மெயின் ரோட்டுக்கு நடந்து, இன்னொரு டாக்சி பிடித்து ரயில்நிலையத்துக்கு அருகாமையில் ஏதேனும் ஒரு ஹோட்டலில் கட்டையைக் கிடத்துவதே இனி மார்க்கம் என்ற எண்ணத்தோடு நடக்க ஆரம்பித்தேன் ! நிமிர்ந்து பார்த்தால் ஒரு  அழகான classical ஸ்டைலிலான ஹோட்டல் எதிர்ப்பட்டது ! "அடடே....இங்கேயே கேட்டுப் பார்ப்போமே !" என்றபடிக்கு ரிஸப்ஷனுக்குப் போய் "ரூம் இருக்கா ?" என்று கேட்க.."Yes sir !" என்றாள் அந்தச் சிக் பணிப்பெண் ! 'கடவுள் இருக்காருடா கொமாரு !" என்ற நிம்மதி எனக்குள் சரேலென்று பிரவாகமெடுக்க  "One room ...10 days !" என்றேன் பந்தாவாய் ! "Very good sir ...that will be -------- பவுண்ட்ஸ் !" என்று ஒரு நம்பரைச் சொன்னார் ! எனக்கோ வடிவேலுக்குப் பஞ்சாயத்து பண்ண முனையும் சங்கிலி முருகனைப் போல "எனக்கு சரியாத் தானே கேக்குது ? " என்று ஊர்ஜிதம் செய்திடும் ஆசையே மேலோங்கியது - simply becos அம்மணி சொல்லியிருந்த தொகையைக் கணக்குப் போட்டால் நாளொன்றுக்கு நம் காசில் ரூ.எட்டாயிரம் சுமாருக்கு வந்தது ! 

35 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களில் அதுவொரு அசகாயத் தொகை (இன்னமுமே தான் !!) என்பதால் - துண்டைக் காணோம் ; துணியைக் காணோமென்று ஓட்டம் பிடித்தேன் அங்கிருந்து ! என்ன தான் பிராங்பர்ட் ; பிரஸ்ஸல்ஸ் என்று 10 நாட்களை ஐரோப்பாவில் கடத்தியிருந்த அனுபவம் இருந்தாலும், எங்குமே நாளொன்றுக்கு 1500-க்கு ஜாஸ்தியான வாடகையில் நான் தங்கியிருக்கவில்லை ! So இந்த சொகுசெல்லாம் நமக்கு கட்டாது சாமி என்றபடிக்கே சாலையை எட்டிப் பிடித்து கண்ணில்பட்ட முதல் கருப்பு டாக்சிக்குள் தஞ்சம்  புகுந்தேன் ! லண்டனின் அந்தப் பாரம்பரிய டாக்சிகள் பார்க்க டெண்டு கொட்டகை போலத் தோன்றினாலும் செம சவுகர்யமானவைகள் ! விட்டால் இதுக்குள்ளேயே இன்றைய ராப்பொழுதைச் செலவிட்டு விடலாமே என்ற ரேஞ்சுக்கு அலுத்துப் போயிருந்தவன் - "விக்டோரியா ரயில் நிலையம்" என்று டிரைவரிடம் சொன்னேன் ! இலண்டனில் அரை டஜனுக்கும் மேற்பட்ட முக்கிய ரயில்நிலையங்கள் உண்டு என்பதெல்லாம் அப்போதைக்குத் தெரியாது ; எங்கேயோ காதில் வாங்கிய 'விக்டோரியா ஸ்டேஷன்' என்ற பெயர் மட்டுமே அப்போதைக்கு கை கொடுத்தது எனக்கு ! இரவு பத்தரை சுமாருக்கு அங்கே போயிறங்க, டாக்சிக்கு அழுக நேரிட்ட தண்டத்தை நினைத்து தொண்டையெல்லாம் அடைத்தது ! 

மறுக்கா பையை இழுத்துக் கொண்டே ரயில் நிலையத்தின் பக்கவாட்டுச் சாலைகளுக்குள் புகுந்து ஹோட்டல் தேட ஆரம்பித்தேன் ! B & B (Bed  & Breakfast ) என்ற போர்டுகளுடன் நிறையவே குருவிக்கூட்டு ஹோட்டல்கள் கண்ணில்பட்டன ! ஆனால் எனக்கோ அவையெல்லாமே வசந்த மாளிகைகளாய்த் தென்பட்டன ! ஏதோ ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து தயங்கித் தயங்கி வாடகை பற்றி விசாரித்து ; அங்கிருந்த ஆசாமி ஒரு சொற்பத் தொகையைச் சொன்ன போதே இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட முடிந்தது ! பொதுவாய் இலண்டனில் பழைய காலத்து வீடுகளையே ஹோட்டல்களாய் மாற்றம் செய்து புழங்குவது வாடிக்கை ! So ஒடுக்கமான மாடிப்படிகள் தானிருக்கும் ; lift ? என்று கேட்டால் நம்மை ஒரு தினுசாய்ப் பார்ப்பார்கள் ! தவிர முக்கால்வாசி அறைகளில் பாத்ரூம் இணைந்திராது ! ஒரு மாடிக்கு ஒரு குளியலறை & ஒரு கழிப்பறை என்று அந்தந்த நடைபாதைகளின்  இறுதியில் அமைத்திருப்பார்கள் ! ரூமோடு பாத்ரூமும் சேர்த்தே வேண்டுமெனில் கட்டணம் எகிறிடும் ! நானோ மேஜைக்கு அடியில்னாலும் கட்டையைக் கிடத்த ரெடி என்றிருந்த நிலையில், கூடுதல் வாடகையிலான ரூமைத் தேர்வு செய்வேனா - என்ன ? So நான்காவது மாடியில் ஒரு புறாக்கூடு போலான அறைக்கு பையைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் - முடிவே இலா படிக்கட்டுகளில் ! ஒரு மாதிரியாய் ரூமுக்குப் போன போது குறுக்கு காணாதே போய்விட்டது ! "ஒரு வாரம் தூங்கினால் தான் இந்த அலுப்பு ஓயும் !" என்று நினைத்துக் கொண்டே பையைத் திறந்து லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு கட்டிலில் மல்லாந்தேன் ! ரூமில் ஹீட்டர் வசதியெல்லாம் லேது என்பதால் போட்டிருந்த ஜெர்கினை கழற்றாமல் அப்படியே குறட்டை விட துவங்கினேன் ! அடித்துப் போட்டார் போல தூக்கம் வருமென்று நினைத்தே படுத்த போதிலும், "புது ஊர் ; புது ஆப்பு ; புது இடம் ; புது புறாக்கூடு" என்ற கூட்டணி ஒன்றுசேர்ந்து என் தூக்கத்துக்கு இயன்ற இடைஞ்சலைச் செய்தன ! 

காலையில் ஏழரை மணி சுமாருக்கு எழுந்த போது தான் வயிறு கலக்குவதும், பிறாண்டுவதும் ஒருங்கே  நிகழ்ந்தது ! "சாப்பிட்டு 16 மணி நேரங்களுக்கு மேலாச்சு !" என்று ஞாபகம் வர - கீழ்தளத்தில் Free breakfast என்பதால் போய் ஒரு கட்டு கட்டிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன் ! அதற்கு முன்பாய் முக்கிய வேலை காத்திருப்பதால் அதற்கு தீர்வு தேடிய நொடியில் தான் பாத்ரூம் நடைபாதையின் இறுதியில் உள்ளது நினைவுக்கு வந்தது ! கதவைத் திறந்து எட்டிப் பார்த்தால் ஊதைக் காற்று மட்டுமே தென்பட்டது ; வேறு ஆள் நடமாட்டமே இல்லை ! எல்லாருமே சனிக்கிழமை என்பதால் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சாப்பிடக் கீழே போயிருக்க வேண்டுமென்று தோன்றியது ! "சரி...நம்ம பாட்டைப் பார்ப்போம்" என்றபடிக்கு காலை ஷூவுக்குள் நுழைத்துக் கொண்டு ரூமிலிருந்து வெளியேறினேன் ! டம்மென்று கதவு சாத்தும் ஓசை எனக்குப் பின்னே கேட்ட நொடியில் தான் ரத்தம் தலைக்கேறி கிறுகிறுப்பது போல் உணர்ந்தேன் ! கதவைத் திறக்கும் சாவியானது உட்பக்கம் உள்ளது என்பதும், இந்தக் கதவுகள் automatic lock ரகத்திலானவை ; சும்மா சாத்தினாலே பூட்டிக் கொள்ளும் என்பதையும் ; சாவியைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து தொலைத்து விட்டேன் என்பதையும் உணர்ந்த நொடியில் எனக்குள் ஓடிய பீலிங்குகளை வர்ணிக்க சான்ஸே கிடையாது ! ஆனால் "உன் பஞ்சாயத்தை அப்பாலிக்கா வைச்சுக்கோ தம்பி ; இப்போ எனக்கொரு வழி சொல்லு " என்று வயிறு ரகளை செய்திட பாத்ரூமைத் தேடிப் போனேன் ! சகலமும் சுபமாய் முடிந்த நொடியில் என்னை நானே பாத்ரூம் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது ஒரு கோமாளிப்பயலே கண்ணாடியினில் பிம்பமாய்த் தெரிந்தான் ! ஒரு கட்டம் போட்ட லுங்கி...கடைவாயோரம் ராத்தூக்கத்து ஜொள்ளோட்டத் தாரைகளின் அடையாளங்கள் ; முற்றிலுமாய்க் கலைந்து கிடந்த பம்பை மண்டை ( மெய்யாலுமேங்கோ !!) ; குளிருக்கு கழற்றியிராத ஜெர்கின் ; அவசரத்தில் சாக்ஸ் போடாது ஷூ மட்டும் போட்டிருந்த ரம்யம் என்று ஒரு மார்க்கமாய்க் காட்சி தந்தேன் ! எனது ரூமுக்குள் நுழைய வேண்டுமெனில், இந்தக் கோலத்திலேயே  நாலு மாடிப்படிக்கட்டுகளில் கீழிறங்கிப் போய் ரிசப்ஷனில் மாற்றுச் சாவி வாங்கியார வேண்டும் என்பதைத் தாண்டி வேறு வழியே கிடையாது ! No roomboys ; so "தம்பி...கீழே போயி சாவி வாங்கிட்டு வாயேன் !" என்று பணிக்க வழி கிடையாது ! 

"துணிந்த பின் மனமே ; துயரம் கொள்ளாதே !" என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, முயன்றமட்டுக்கும்   ஒரு casual look-ஐ முகத்தில் வைத்துக் கொண்டு படியிறங்க ஆரம்பித்தேன் ! சாப்பிட்டுவிட்டு மேலே தத்தம் அறைகளுக்குத் திரும்பிடுவோர் எதிர்ப்படும் போது - பூமி அப்படியே திறந்து என்னை விழுங்கிக்கொள்ளாதா ? என்பது போலிருக்கும் ! கீழே ரிசப்ஷனுக்கு வந்தாலோ - எதிரே இருந்த breakfast அறையில் அத்தனை பேரும் வெள்ளையும், சொள்ளையுமாய் formals  உடையணிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, நான் சங்கு மார்க்  லுங்கிக்கு மாடல் போல போய் நின்று மண்டையைச் சொரிந்து கொண்டே என் பிரச்னையைச் சொன்னேன் ! நிமிர்ந்து பார்க்கக் கூட லஜ்ஜையாக இருக்க, "ஒரு spare சாவி கிடைக்குமா ?" என்றபடிக்கே லேசாய் நிமிர்ந்தால், ரிசப்ஷனில் இருந்ததோ ஒரு செம cute இளம் பெண் !! முந்தைய இரவில்  இருந்த அதே கடுவன் பூனை தாத்தா தான் இன்னமும் இருப்பார் என்ற நினைப்பில் இருந்தவனுக்கு  ஒரு ஜேம்ஸ் பாண்ட் அழகியை அங்கே பார்த்த நொடியில் சோகம் பன்மடங்காகிப் போனது ! சாவியை வாங்கியது, 4 மாடியின் படிகளை உசேன் போல்டின் சித்தப்பா வேகத்தில் ஏறியது ; கதவைத் திறந்து ரூமுக்குள் ஐக்கியமானது ; லுங்கியைக் கடாசிவிட்டு ஜீன்ஸை மாட்டிக் கொண்டு ; பை & பொட்டலங்களைக் கட்டி வைத்த கையோடு, ஜாக்கிரதையாய் சாவிகள் இரண்டையுமே பாக்கெட்டில் செருகிக் கொண்டே கீழே திரும்பவும் போனது - என எல்லாமே மின்னல் வேகத்து நிகழ்வுகளாகிப் போயின ! "ஓசியானாலும் இனி இந்த ஹோட்டலிலே குப்பை கொட்ட தயாரில்லை சாமி !" என்றபடிக்கே லண்டனின் வெயில் போர்த்த சாலைகளில் நடக்க ஆரம்பித்த  போது - "இந்த ஊரா இத்தனை காலத்துக் கனவு தேசமாய் இருந்துள்ளது ??" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் ! உச்சா  போகாத ஓராங்குட்டான் போல எங்கெங்கோ அலைந்து, இறுதியாய் Youth Hostel ஒன்றில் சல்லிசாய் இடம் பிடித்த குஷியில் ஹோட்டலுக்குத் திரும்பி  சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் ! போகும் போது அந்த ஜேம்ஸ் பாண்ட் அழகி நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்ததாய்த் தோன்றியது எனது கற்பனையா ? இல்லையா ? தெரியாது ; ஆனால் ஆயுசுக்கு இனி லுங்கி கட்ட மாட்டேண்டா சாமி !! என்ற சபதம் எடுத்தது நிஜம் என்பது மாத்திரம் நினைவுள்ளது !

தொடர்ந்த 10 நாட்களில் லண்டனின் நீள அகலங்களை அளந்ததும் ; ஏதேதோ பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததும் தொடர்ந்தன ! வெறுப்பேற்றிய அதே நகரம் வாஞ்சையோடு என்னை ஏற்றுக் கொண்ட அதிசயங்களும் நிகழ்ந்தன ! ஏகப்பட்ட பணிகளிலும் அந்த மண்ணில் வெற்றி கிட்டியது ; ஏகமாய் அனுபவங்களும் கிட்டின அங்கேயே ! Maybe உலகை உவகைப்படுத்தப்போகும் இன்னொரு  பதிவெழுதும் மூட் தலை தூக்கும் போது இந்த london diary படலம் தொடருமோ என்னவோ ! எது எப்படியோ -  "லண்டன்" என்ற நொடியே அந்த "லுங்கி டான்ஸ்" நாள் தான் என் தலைக்குள் தோன்றி மறையும் !! Maybe நம்மவர்கள் கோப்பையைத் தூக்கி தேசத்தையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திடும் பட்சத்தில், "லண்டன்" என்றவுடன் சந்தோஷ ஞாபகங்கள் எனக்குள்ளும் இடம் பிடித்திடலாம் ! காத்திருப்பேன் அந்நாளுக்காக !

Before I sign off - இதோ "ஈரோடு எக்ஸ்பிரஸ்" புக் # 1-ன் குட்டி டிரெய்லர் ! அட்டகாசமான கதைக்களம் ; செம வித்தியாசமான கதை சொல்லும் பாணி என்று "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" பின்னிப் பெடல் எடுக்கிறது ! Dont ever miss it folks !!

Sunday, June 02, 2019

நேசமணியின் ஞாயிறு !

நண்பர்களே,

வணக்கம். மசி கூடக் காய்ந்திரா பக்கங்களுடன் ஒன்றுக்கு நான்காய் புக்குகள் (கொஞ்சப் பேருக்காவது) கைகளில் இருக்க - இந்த ஞாயிறை அவற்றோடு செலவிட்டால் நலமென்று நினைத்ததால் பதிவுக்கு ஜூட் விட நினைத்தேன் ! தவிர மாவீரன் நேசமணி ஆசுபத்திரியில் படுத்துக் கிடக்கும் வேளைதனில் நாம் நமது கேளிக்கைகளை அடக்கி வாசித்தல் காலத்தின் கட்டாயமல்லவா ? அப்புறம் இரண்டே மாதத்துத் தொலைவினில் ஒரு அம்பாரம் நிறையச் சுமக்கக்கூடிய இதழ்களைத் தயார் செய்திட வேண்டியிருப்பதால் இப்போதிலிருந்தே ஞாயிறுகளை அந்த 'தம் கட்டல்' படலங்களுக்குச் செலவிட நினைத்தேன் !! இதோ - "நித்தமொரு யுத்தம்" ஒடத் துவங்கிவிட்டது எனது மேஜையில் ! ("எங்களுக்கலாம் அது அனுதினமும் ஓடுதுங்கோ ஊட்டிலே  !!" என்றொரு மைண்ட்வாய்ஸ் கேக்குதே எனக்கு ??)

So இந்த ஞாயிறை ரெம்போ நாள் கழித்து மீண்டிடும் caption போட்டிகளோடும் ; சில பல கேள்விகளோடும் பயணிக்கச் செய்யலாமா ? இம்முறை ஒன்றுக்கு இரண்டல்ல - மூன்றாய் captions உண்டு ! And அவற்றிற்கெல்லாம் அழகாய் captions எழுதுவோர்க்கு கன்னடத்துப் பைங்கிளி பயன்படுத்திய சோப்பு டப்பியோ ; தலைவர் கழுத்தில் கட்டிய கர்சீப்போ பரிசாக இருந்திடப்போவதில்லை ! மாறாக அந்த நண்பர் நமது ஈரோட்டுப் புத்தக விழாவுக்குப் பயணம் செய்திடும் ஏற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்வதாக உள்ளோம் ! வெள்ளியிரவு கிளம்பி, சனி காலை ஈரோடு வந்திறங்கி, தங்கி, வாசக சந்திப்பில் பங்கேற்று, விலாவைச் சிறப்பித்து அன்றிரவு ஊர் திரும்பிட all arrangements will be done ! 

முக்கிய...மிக முக்கிய..மிக மிக முக்கியமோ முக்கியமான குறிப்பு : இது ஈரோட்டிலிருந்து 500 மைல் தொலைவுக்குள்ளாற வசிக்கும் வாசகர்கட்கு மாத்திரமே பொருந்தும்ங்கோ ; நீங்க பாட்டுக்கு அமேரிக்கா ; ஆப்ரிக்காவிலேர்ந்து பிட்டைப் போட்டுப்புட்டா கம்பெனிக்கு பொங்கலோ பொங்கலாகிப் போகும் !! So அசல் தேசத்துக்காரவுக தங்கள் செலவிலேயே பிளைட்டிலேயோ ; கப்பலிலேயோ ; தோணியிலேயோ ; மாட்டு வண்டியிலேயோ -  ஷ்டாண்டிங்கிலேயோ ; வித் அவுட்டிலேயோ சென்னை வரை வந்துப்புட்டாகா - அப்பாலிக்கா அங்கேயிருந்து இட்டாந்திடுவது நமது பொறுப்பாகயிருக்கும் ! ஈரோட்டில் நமது GUEST OF HONOR என்ற வகையில் வலம் வந்திடுவர் ! And ஈரோட்டில் ஏதேனுமொரு இதழை ரிலீஸ் செய்திடும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படும் ! So முடிஞ்ச மட்டுக்கு எல்லோருமே கல்லைத் தூக்கிப் போட்டுப் பார்க்கலாமே guys ?(என் தலையில் அல்ல !!

Here you go :
Caption # 1 

Caption 2 : 

Caption 3

அப்புறமேட்டுக்கு - "இது எல்லாமே டுபுக்கு ; போங்கு ஆட்டம் சார்....முழியான்கண்ணன் தனக்கு வேண்டப்பட்டவருக்கே வெற்றின்னு அறிவிப்பான்...இது மேரி எத்தினி உல்ட்டா-புல்டா பாத்திருப்போம் நாங்க !!" என்று கடைவாயோரம் புன்சிரிப்பை ஓடவிடுவோருக்கு அந்தச் சிரமத்தை வைப்பானேன் என்று நினைத்தேன் ! So இதன் winner யாரென்று தீர்மானிக்க, நண்பர்கள் காமிக் லவர் & ரஃபிக் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டுமே என்பது எனது வேண்டுகோள் ! அவர்களே captions எழுந்திடும் பட்சத்தில் கூட அவர்களே ஜட்ஜ்களாய்த் தொடர்ந்திடலாம் !  "ஏன் - எங்களையெல்லாம் பார்த்தாக்கா ஒரு ஜட்ஜ் பீலிங்கு வரலியாக்கும் அப்பு ?: என்ற புதுப் பஞ்சாயத்து நடைபெற்றிடும் வாய்ப்புகளும் ஏகப்பிரகாசம் என்பது புரிகிறது ! அது எந்த ஆலமரத்தடியில் என்று Geo Location Tag எனக்கு அனுப்பிட்டால் அங்கே ஆஜராகிவிடுவேனுங்கோ ! 

Done with the captions...சில கேள்விகள் தொடரவுள்ள ஆண்டின் அட்டவணையின் பொருட்டு :

1 லக்கி லூக்

புதுசும் சரி ; மறுபதிப்பும் சரி - சம வேகத்தில் விற்பனை கண்டிடும் இந்த நாயகரின் கதைகளுள் அடுத்த 3 மறுபதிப்புகளுக்கு எவற்றைப் பரிந்துரைப்பீர்கள் ?

2 ALL TIME BEST என்று லக்கியின் கதையொன்றைத் தேர்வு செய்வதாயின் - அது எதுவாக இருக்கோம் ? I repeat - just ONE !!!

3 TEX :

கேள்வி # 1 அப்படியே ரிபீட்டு !! Next 3 மறுபதிப்புகளெனில் - டெக்சில் நிங்கள் தேர்வுகள் ப்ளீஸ் சேட்டா ?

4 "ஆண்டுக்கொன்று" என்ற முறையில் ஒரேயொரு SCIENCE FICTION முயற்சித்துப் பார்ப்பது குறித்த உங்கள் ஐடியா என்னவோ ? நிச்சயமாய் இதனை கிராபிக் நாவல் தடத்தில் கொண்டு பதுக்க எனக்கு விருப்பமில்லை ! வெளியிடுவதாயின் mainstream-ல் கலந்திட அனுமதித்து நம் அனைவருக்குமே அந்த அனுபவத்தின் ஒரு சிறு taste கிட்டிட்டால் மகிழ்ச்சி ! இல்லாங்காட்டி பொறுமை காப்போம் - வேளை புலரும் வரைக்கும் !

5 மாதந்தோறும் இதழ்கள் வரும் வரைக்கும் வீடு கட்டிக் காட்டி, கம்பு சுழற்றும் நமது பயில்வான்களில் பெரும்பான்மை - வெயிட்டாய் கூரியர் டப்பி கிடைத்த பிற்பாடு தொடர்பு எல்லைக்கு அப்பாலிக்காவோ அப்பாலிக்கா போய் விடுவது நடைமுறை தான் ! வீட்டுப் பணிகள் ; ஆபீஸ் பொறுப்புகள் என்று நிமிரும் பெண்டுகளின் நோவு புரிஞ்சூ !! எனது கேள்வி : Maybe தொடரும் காலங்களில் சற்றே light reading என்ற focus தான் முக்கியத் தேவையா நமக்கு ? Light reading - கார்ட்டூன்கள் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல  ; பக்கம் குறைவான இதழ்கள் ; கனம் குறைச்சலான களங்கள் ; வாசிப்பில் இலகுத்தன்மை....என்ற ரீதியில்...! ஒரு வேளை...ஒரு வேளை.....அல்லாருக்கும் வயசு ஆகுதோ.....?? ரயில்களிலும், பஸ்களிலும்  "அந்த அண்ணன் கிட்டக்க போயி உட்கார் பாப்பா" என்று சொல்லி வந்த தாய்மார்கள் இப்போ "அண்ணனை" - அங்கிளாகவும்" ; அங்கிளை -"தாத்தாவாகவும்"  மாற்றி உச்சரிப்பதில் மெய்யாகவே விஷயம் உள்ளதோ ? (எங்களுக்குலாம் "அந்த பாட்டையா மடியிலே உட்கார்ந்துக்கோ பாப்பா"  தான் !! 😂😂)

Your thoughts please guys ?

இப்போதைக்கு கிளம்புகிறேன் ....நேசமணிக்கோசரம் பிரார்த்திக்க ! See you around folks ...have a breezy Sunday !! bye for now !!