நண்பர்களே,
கோடைகள் பல தாண்டிய பின்னரும், நினைவில் 'பளிச்' என்று நின்றிடும் இன்னுமொரு இதழை நினைவு கூர்ந்திடும் முயற்சியே இந்தப் புதுப் பதிவு !
26 ஆண்டுகளுக்கு முன் - இதே மே மாதம் - நமது திகில் காமிக்ஸில் வெளிவந்திட்ட "பனிமலை பூதம்" உங்களில் எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியவில்லை...! ஆனால் இன்றைக்கும் எனது "பிரியமான பிரதிகள்" பட்டியலில் ஒரு பிரதான இடத்தில அமர்ந்திருக்கும் இதழ் இது !
![]() |
| திகில் இதழ் நம்பர் 5 |
வித்தியாசமான முயற்சிகளாய் அமைந்திட வேண்டுமென்ற முனைப்புடன் முதல் 3 இதழ்களையும் வெகு சிரத்தையோடு..சின்னச்சின்ன திகில் சிறுகதைகள்...ஒரு முழு நீள ஹாரர் கதை ; துணுக்குச் செய்திகள் என்று உருவாக்கி இருந்தோம். ஆனால் அன்றைய சமயம், 'ஒரே ஒரு முழுநீளக் கதை' என்றதொரு ரசனையைத் தாண்டி நாம் பிரவேசித்திருக்கா தருணம் என்பதால் இந்தப் புதிய முயற்சிகள் அசகாயத் தோல்விகளை சந்தித்தன ! முதல் இதழ் ஒரு curiosity -ல் முழுவதும் விற்பனையாகி விட்டது ; ஆனால் இதழ் 2 & 3 வாங்கிய தர்மஅடி இன்றைக்கும் நினைவில் நிற்கும் சமாச்சாரம் ! இன்றும் நம் வாசகராய் இருந்திட்டு வரும் ஒரு நண்பர் - துண்டும் துக்கடாவுமாய் கதைகளை வெளியிடுவது "பிச்சைக்காரன் எடுத்த வாந்தி" போல் இருப்பதாகக் கூட அபிப்ராயப்பட்டிருந்தார் - அன்று வந்திட்டதொரு போஸ்ட் கார்டு விமர்சனத்தில்! விற்பனையாளர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்திட..எனக்கோ எங்கே ஓடி ஒளிந்திடவென்று தெரியாத இக்கட்டு ! 'இது தேறுமா..சொதப்புமா ?' என்ற சந்தேகம் துளியும் இல்லாது - surefire வெற்றி என்று நான் நினைத்திட்டதொரு ப்ராஜெக்ட் இத்தனை கேவலமாய் உதை வாங்கிடுவதைப் பார்க்கும் திராணி என்னுள் துளியும் இருந்திடவில்லை ! எல்லோரும் ஒருமுகமாய் சொன்ன சங்கதிகள் இவை தான் :
1 .பிட் பிட்டாய் உள்ள கதைகள் வேலைக்கு ஆகாது !
2.பெரிய சைஸ் வேண்டாம்!!(பாக்கெட் சைஸ் மோகம் நம்மை ஆட்டிப்படைத்த வேளை அது )!
3.விலை மூன்று ரூபாய் என்பது ரொம்ப ஜாஸ்தி !!
So "Operation அந்தர்பல்டி" துவங்கிட்டது - முழு மூச்சாய் ! இதழ் நம்பர் நான்கில் மேற்படிக் குறைகள் அனைத்தையுமே நிவர்த்தி செய்ய முனைந்திருந்தேன் ! ஒரே முழுநீளக் கதையாக :பிசாசுக் குரங்கு" வெளியானது ; பெரிய சைஸ்-க்கு கல்தா கொடுத்து விட்டு புதிதாய்..ஒரு ரெண்டும்கெட்டான் சைஸ் -க்கு இறங்கி வந்திருந்தோம் ; ரூபாய் 2 .25 விலையில் !! அந்த வரிசையில் வந்திட்ட மறு இதழே - இந்தப் பதிவின் நாயகம் !
"பனிமலை பூதம்" ஒரு சராசரி ஆக்க்ஷன் கதையே ."ஆஹா.ஒஹோ' வென்று சிலாகிக்கும் சங்கதிகள் அதில் அதிகம் கிடையாதென்ற போதிலும் - சுவாரஸ்யமான கதையே ! Fleetway நிறுவனத்தின் Action Library என்றதொரு தொடரிலிருந்து வந்திட்ட கதை இது ! இதோ அதன் முதல் பக்கத்தின் (சுமாரான) எனது ஸ்கேன் !
அழகாய் பாக்கெட் சைசில் வெளியிட்டிட வசதியான format -ல் இருந்திட்ட கதையை புதிய சைசுக்கு ஏற்றபடி அமைத்திட 'கச்சா முச்சா' வென எங்களது லைன் டிராயிங் ஆர்டிஸ்ட்கள் முயற்சித்திருந்தனர் !
18 பக்கங்களில் நிறைவுறும் இந்தக்கதையின் கீழே சின்னதொரு பெட்டிக்குள் பிரசுரமாகி இருந்த அன்றைய "வாசகர் கடிதங்களை" பாருங்களேன்!போஸ்ட் கார்ட்களில் வந்திடும் அன்றைய விமர்சனங்கள் ஆழமாய் இருந்திடாத போதிலும் அழகாய் இருப்பது வழக்கம் ! நம் போஸ்ட்கார்ட் விமர்சகர்களில் எவரேனும் இங்கே இருக்கிறீர்களா என்று தெரிந்திட ஆவல் எனக்கு - கையைக் கொஞ்சம் தூக்குங்களேன் சார்(s) !
சராசரியாய் ஒவ்வொரு இதழுக்கும் குறைந்த பட்சம் 50 கடிதங்கள் வந்திடும் ; அவற்றில் எதை வெளியிடுவது என்று தேர்ந்தெடுப்பது ஒரு சுவாரஸ்யமான பணியாக இருக்கும் ! "இவர் பெயர் ஏற்கனவே போன மாசம் வந்திருச்சு...திரும்பவும் வேண்டாம் " என்று அச்சுக் கோர்க்கும் எங்களது கம்பாசிடர் சொல்லிட்டால் அந்த விமர்சனம் reject ! So தபால் போட்டுவிட்டு ஆவலாய் இதழைப் பார்த்து தம் பெயரைக் காணாது அன்று வருந்திய நண்பர்கள் இங்கே இருப்பின் - அதற்கான பழி முழுவதும் என்மேல் மாத்திரம் கிடையாது என்பதை சொல்லி வைக்கிறேன் !
![]() |
| நமது ஓவியரின் தயாரிப்பு இது... |
![]() |
| அசல் |
அதைத் தொடர்ந்தது "விசித்திர உலகம் இது" என்றதொரு நிஜ சம்பவ மர்மங்கள் பற்றியதொரு தொடர்......!
"மெல்லிசையா.மரணத்தின் இசையா?" என்றதொரு கட்டுரையுடன் ! இதனை எழுதி இருந்த "டாக்டர் லோகநாத்" வேறு யாருமல்ல-எனது தந்தையே ! கிறிஸ்துமஸ் அன்று பிறந்த அவருக்கு எங்கள் பாட்டி "லோகநாதன்" என்று ஒரு பெயரும் வைத்திருந்தாராம் ! அந்தப் பெயரில் (கொஞ்ச காலமே வந்திட்ட) இந்தத் தொடரை எழுதியது என் தந்தையே !
இதழின் கடைசிக் கதையாக வந்திருந்ததும் கூட..இன்னுமொரு Fleetway தயாரிப்பே ! ஏஜெண்ட் ஜான் ஸ்டீல் துப்பறியும் "நாளை உனது நாள்" என்ற முழு நீளத் த்ரில்லர் - 1960 களின் ஒரு தயாரிப்பு.எனக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோக்களில் ஜான் ஸ்டீலும் ஒருவர் ; and இந்தக் கதையின் யதார்த்தம் நான் மிகவும் ரசித்த விஷயம் ! 21 பக்கங்களில்...பாரிஸ் நகரில் நடந்தேறும் இந்தத் த்ரில்லரும் கூட பாக்கெட் சைஸ்-க்கு ஏற்ற வடிவத்தில் இருந்தது. பிரயத்தனப்பட்டு பெரிய சைசுக்கு மாற்றி இருந்தோம்.
இந்த இதழில் எனக்குப் பிடிக்காது போன சங்கதி...உள் அட்டைகளில் எதுவுமே அச்சிடாமல் வெள்ளையாக விட்டுவிட்டது ! அன்றைய சமயம் இதழின் விலையினை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மலிவான...ஆனால் வார்னிஷ் போட்டிடும் போது நன்றாகத் தோன்றிடும் Glazed Newsprint எனும் காகிதத்தைப் பயன்படுத்தி வந்தோம். மெலிதாய் இருந்திடும் இந்தப் பேப்பரில் அச்சிடுவது என்பது மண்டை காயும் சமாச்சாரம்! So முன்பக்கம் அச்சிடுவதற்குள் பிராணனின் பாதி போயே போய் இருக்கும் ! இந்த அழகில் மறு பக்கம் வேறு அச்சிடவா ? என்ற கடுப்பின் பிரதிபலிப்பே இந்த வெள்ளைப் பக்கங்கள் !
இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது...எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ! இந்த இதழ் வெளி வந்த போது பூமியினில் காலடியே வைத்திருக்காத நண்பர்களும் இங்கே இருக்கத் தான் வேண்டும் !! அவர்களுக்கும் இந்த (புராதன) இதழ் பற்றிய பதிவு உற்சாகத்தைத் தந்திட்டா ல் எனக்கு சந்தோஷமே !
அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு (புதிய) பதிவோடு சந்திக்கிறேன் ! Adios till then guys.....!























