Powered By Blogger

Sunday, March 31, 2013

கோடையின் கொடை !


நண்பர்களே,

வணக்கம். ஜெர்மனியின் மைனஸ் 7 டிகிரிக் குளிருக்கு அணிந்த ஸ்வெட்டரோடு லார்ட் லபக்தாசைப் போல் சென்னையில் வந்திறங்கிய போது பிடறியோடு அறைந்து வரவேற்றது நமது கோடை வெப்பம் ! எண்ணெய் வழிந்த முகமும்,  வியர்வையும் இனி சில, பல மாதங்களுக்கு இலவச இணைப்புகளே என்ற நினைப்பு தலைக்குள்ளே எட்டிப் பார்த்த கணமே - ஆண்டின் இந்த வேளையினை அத்தனை ஆவலாய் எதிர்பார்த்திட்ட 3 x 10 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களும் நினைவுக்கு வரத் தப்பிடவில்லை! 

ஏப்ரல், மே மாதங்கள் என்றாலே நமது லயனின் துவக்க காலம் முதல் ஒரு பரபரப்பு எங்களுக்குள் தொற்றிக் கொள்வது வழக்கம் . பள்ளியின் ஆண்டு விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் வழக்கத்தை விடக்  கூடுதலாய் விற்பனை ஆகுமென்ற கணிப்பில் வியாபாரிகள் நம்மிடமிருந்து மொத்தமாய் முந்தைய கையிருப்பு இதழ்களை வாங்கிடுவர். 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ரூ.5000-க்கு ரொக்க பில் போடுவதென்பது விவரிக்க இயலாததொரு த்ரில் அனுபவம் ! மலேசியாவிற்கும் நம் பிரதிகள் பயணமாகி வந்த சமயமது ; கடல் கடந்து சென்றிடும் பிரதிகளின் எண்ணிக்கையும் கூட கோடையினில் கணிசமாய் இருந்திடும். கையில் கொஞ்சமாய் காந்தி படமிட்ட நோட்டுக்கள் புழங்கத் துவங்கிட்டாலே , எனக்குள் உறங்கிடும் பாலே நடனக் கலைஞன் பரபரப்போடு துயில் எழுந்து  கால் கட்டை விரலைத் தேடத் துவங்கிடுவது வழக்கம் ! அவ்வேளையில் நிலவிய விற்பனை சூழல்களும் பிரமாதம் என்பதால், நமது முகவர்கள் அனைவருமே எனது "வாய்க்குள் விரல்" நடனத்தின் முன்சீட் ரசிகர்கள் ! தமிழ் பத்திரிகை உலகினில் ஒரு ரூபாய் ; இரண்டு ரூபாய் விலைகளைத் தாண்டி இதழ்கள் ஏதுமே கிடையாது என்ற நிலையில் - ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் "கோடை மலர்கள்" வெளியிடும் நம் அசட்டுத் துணிச்சல் ஏஜெண்ட்களுக்கு சுலபமாய் 25% கமிஷன் ஈட்டிடும் ஒரு வாய்ப்பாய் அமைந்தது. சொல்லி வைத்தாற்போல நீங்களும் அவற்றை பரபரப்பாய் வாங்கித் தள்ளியதால் கோடை வியாபாரம் துளி ரிஸ்க்கும் இல்லாது போய் விடுவது வழக்கம் ! 

1984 முதல் வித விதமாய் நாம் வெளியிட்ட கோடைமலர்களில் பல எனக்கு வெறும் அட்டைப்படங்களாக மாத்திரமே இன்று நினைவில் நின்றிட்டாலும், நான் ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய "கோ.ம" இதழ்களில் பிரதானமானவை என்று வரிசைப்படுத்தினால் - இது போன்றதொரு லிஸ்ட் உருவாகும் : (இது முழுக்க முழுக்க "கோ.ம." பட்டியல் மாத்திரமே)

1.லயன் கோடை மலர் - 1986
2.திகில் கோடை மலர் 1987
3.லயன் கோடை மலர் - 1987
4.மினி லயன் - சம்மர் ஸ்பெஷல் 1988
5.மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல் 1989

1986 லயன் கோடை மலர் பற்றி "சிங்கத்தின் சிறுவயதில்" பகுதியினில் வெகு சமீபமாய்த் தான் எழுதி உள்ளேன் என்பதால் அதனை மீண்டுமொருமுறை துயில் எழுப்பிட வேண்டாமே என்ற எண்ணத்தில், பட்டியலின் பாக்கி இதழ்களை நினைவுக்குக் கொணர முயற்சித்தேன்...!1987-ல் லயன் காமிக்ஸ் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வேளையினில், ஸ்பெஷல் வெளியீடுகள் அதனில் தலை காட்டியதில் பெரியதொரு வியப்பில்லை தான் ; ஆனால் தத்தித் தடுமாறிய நடையோடே காலம் தள்ளி வந்த திகில் காமிக்ஸில் ஒரு 5 ரூபாய் ஸ்பெஷல் என்பதெல்லாம் கொஞ்சம் 'டூ மச் 'என்ற நிலை அப்போது  ! பற்றாக்குறைக்கு நமது மினி லயன் & ஜூனியர் லயன் இதழ்களும் கூட அந்நேரங்களில் வெளி வந்து கொண்டிருந்தன  !


விற்பனை எண்ணிக்கை குறையும் போதெல்லாம் professional பத்திரிகைகள் ஏதேனும் புதுப் பாணிகளை ; இலவசங்களை ; விளம்பரங்களைக் கொணர்வது வழக்கம் ; ஆனால் எனக்கோ விற்பனை துவளும் சந்தர்ப்பங்களில் இன்னமும் கூடுதலாய் கதைகளை வழங்குவதைத் தாண்டி வேறேதும் செய்ய மண்டைக்குள் தோன்றிடவில்லை. 'அந்தக் கதை பிடிக்காது போனால், maybe இதாவது பிடிக்கும் தானே ..?' என்ற ரீதியில் மாற்றி மாற்றி எதையாவது வழங்கிட  வேண்டுமென்ற உத்வேகம் மட்டுமே அந்த வயதில் என்னுள் ஓடியதன் பலனே இந்தக் கோடை மலர் 1987! இரு அயல்நாட்டுப் பயணங்களின் பலனாய் கழுதைப் பொதியளவுக் கதைகள் கையில் இருந்திட்டதால் எனது பல்டிகள் அத்தனைக்கும் நிறையவே களங்கள் சாத்தியமாகி.அன்றைய நாட்களில் ! தமிழ் காமிக்ஸ் உலகினில் இரும்புக்கை மாயாவி முடிசூடா மன்னராய் கோலோச்சி வந்த அந்நாட்களில்  ; முத்து காமிக்ஸின் பொறுப்பும் என் கைக்கு முழுமையாய் வந்திருக்காத அச்சமயத்தில் - கையில் இரும்பு மாதிரி எதையேனும் வைத்திருக்கும் எந்தக் குடாக்குக்  கேரக்டர் சிக்கி இருந்தாலும் அவரையும் நமது காமிக்ஸ் உலகிற்க்குக் கொணர நான் தயாராக இருந்த சமயம் அது !அப்போது இங்கிலாந்தின் மற்றொரு காமிக்ஸ் ஜாம்பவான்களான D.C .Thomson  & கோ.வின் படைப்பான IRONFIST எனும் ஹீரோ நமது திகில் நாயகர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாய் இருந்திட்டதால் - முதலில் 'டிக்' ஆனவர் அவரே ! ஓவராய்க் காதில பூ சுற்றும் ரகமாக அல்லாது - ஒரு நார்மலான துப்பறியும் ஆக்க்ஷன் ஹீரோவாக அவரைப் பார்த்திடல் சாத்தியம் என்பதால் எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதும் ஒரு காரணம். இந்த இதழின் ஸ்டார் attraction என நான் கருதியது இந்த இரும்புக்கை நண்பரையும், தொடர்ந்திட்ட ஏஜெண்ட் ரோஜர் மூரையும் ! தெளிவான சித்திரங்கள் ; மிதமான ஆக்க்ஷன் என்று இரு நாயகர்களுமே நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்களோடு கூட்டணி சேர அடுத்து என் வசமிருந்தவர் இன்னொரு பிரிட்டிஷ் ஹீரோவே  ! கொஞ்சம் புராதன நெடியடித்தாலும், 1960s களில் வெளியான VALIANT வார இதழில் சுவாரஸ்யமான துப்பறியும் கதைகள் பலவற்றில் சாகசம் செய்த செக்ஸ்டன் ப்ளேக் தான் அந்த ஆசாமி.  (இன்றைய ஜெரோம் ; ரிப் கிர்பி போல் சற்றே பரபரப்புக் குறைச்சலான டிடெக்டிவ் இவர்!!)

'பிசாசு வனம்' என்ற ஒரு மிதமான மர்மக் கதையில் அவருக்கு வாய்ப்புக் கிட்டியது. இந்த இதழின் பாக்கிப் பக்கங்களை ஆக்ரமித்தவர்களும் கூட அத்தனை பெரிய பெயர்கள் அல்ல தான் ! ஜான் ராம்போ என்ற இன்னொரு DC THOMSON-ன் ஹீரோவின் ஒரு சாகசம் ; கறுப்புக் கிழவியின் 2 கதைகள் (கிழவியின் காதலர் நண்பர் ஜான் சைமன்- இந்த இதழைப் படித்தாகியாச்சா ?)  ; கேப்டன் பிரின்சின் ஒரு துக்கடாக் கதை என்று படிக்க நிறையவே பக்கங்கள்.


இவர்கள் தவிர 2 சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹீரோக்களும் இதழில் இடம் பிடித்திருந்தனர். முதலாமவர் நமது அப்போதைய டாப் ஸ்டார் ஸ்பைடர் - "விண்வெளிப் பிசாசு 'எனும் விட்டலாசார்யா பாணி தொடர்கதையில் ; இரண்டாமவர் BATMAN - சின்னதானதொரு அறிமுகத்தோடு ! தொடர்ந்திட்ட மாதங்களில் BATMAN முழு நீள சாகசங்கள் பலவற்றில் தூள் கிளப்பிய போது - கோடை மலரிலே அவருக்கு இன்னமும் கொஞ்சம் பெரிய பங்களிப்பைத் தந்திருக்கலாமோ என்ற எண்ணம் தலை தூக்காதில்லை ! ஆஸ்தான பாக்கெட் சைசில் ; ஐந்து ரூபாய்க்கு வந்திட்ட இந்த இதழோடு - எனக்குத் தெரிந்தே ஒரே விற்பனை யுக்தியாய் ஒரு தாய விளையாட்டையும் இலவசமாய் வழங்கியது நினைவுள்ளது. (அது என்னவென்று நினைவில்லை என்பது வேறு விஷயம்!!) சமீபமாய் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னை சந்தித்த நண்பரொருவர் "NBS -க்குக் கூட ஒரு தாய விளையாட்டை தந்திருக்கலாமே ?" என்று கேட்ட போது அவர் ஹேஷ்யமாய் கேள்வியினைப் போட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு. ஆனால் - அந்தத் தாய விளையாட்டுக்கள் ஒரு காலத்தில் எத்தனை சந்தோஷத்தைத் தந்தவை என்பதையும், இத்தனை காலம் கழிந்த பின்னும் கூட அந்த நாட்களின் உற்சாகத்தை மறக்க இயலவில்லை என்று ரொம்பவே உணர்வுபூர்வமாய் அவர் சொன்ன போது - நினைவுகளுக்கு வயதாவதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமானது.


மாங்கு மாங்கென்று திகில் இதழுக்காக நிறைய யோசித்து (!!) ஒரு இதழை  உருவாக்கிடுவது அவசியமான அதே வேளையினில் - 'சூ ..மந்திர காளி!' என்றதும் ஒரு லயன் ஸ்பெஷல் இதழைத் திட்டமிடுவது சாத்தியம் என்ற சுலப நிலை நிலவியது !! ஒரு ஸ்பைடர் + ஒரு ஆர்ச்சி + ஒரு டெக்ஸ் வில்லர் + கைக்குச் சிக்கிய சில கதைகளின் கூட்டணி = 1 லயன் ஸ்பெஷல் இதழ் என்பது தான் அன்றைய recipe ! அதே 1987-ல் ; அதே கோடையினில் இந்த லயன் மலரும் தயாராகிய போதிலும் (Lion KM- April ; Thihil K.M.-May) - எங்களிடம் அப்போதெல்லாம் பணியாற்றிய ஆர்டிஸ்ட் பட்டாளம், அதகளம் செய்திடும் ஆற்றலைக் கொண்டிருந்ததால் - துளி டென்ஷனும் இன்றி இரு இதழ்களையும் வடிவமைக்க இயன்றது. மாடஸ்டியின் ஒரு முழு நீள சாகசம் (கார்வினின் யாத்திரைகள்) ; லாரன்ஸ் டேவிட் ஜோடியின் ஒரு குட்டி சாகசம் ; அன்றைய ஆக்க்ஷன் மன்னர்களான "இரட்டை வேட்டையரின்" ஒரு சாகசம் பிளஸ் மாமூலான விச்சு, கிச்சு என்று இதுவும் ஒரு பாக்கெட் சைஸ் அதிரடியே ! திகில் கோ.ம.க்கு தாய ஆட்டம் இலவசம் என்பதால் இதற்கொரு டைம் டேபிள் ப்ரீ! பாக்கெட் சைசுக்கு டெக்ஸ் கதையினை மாற்றி அமைப்பதைத் தவிர்த்து இந்த இதழில் வேறெங்குமே சிரமம் நேர்ந்திடவில்லை ! ஸ்பைடர் சின்னதாய் ஒரு cameo கதையினில் மாத்திரமே தலையைக் காட்டி இருப்பினும், எங்களது சூப்பர் ஸ்டார் அவரே என்பதால், அட்டைப்படத்தில் முக்காலே மூன்று வீசம் அவருக்கும், பாக்கி இருந்த இடம் சட்டித் தலையன் ஆர்ச்சிக்குமென்று ஒதுக்கப்பட்டது. நம் ஓவியர் மாலையப்பன் இந்த இதழுக்கு வரைந்திட்ட அசத்தலான அட்டைபடம்  இன்றும் நம் கிட்டங்கியில் பளீரென்ற வண்ணங்களோடு கால் நூற்றாண்டுக்கு முந்தையதொரு சந்தோஷக் கோடையை நினைவூட்டும் சின்னமாய் கிடக்கின்றது !

காலங்கள் தான் எத்தனை மாறி விட்டன....நம் ரசனைகளில் தான் மாற்றங்கள் எத்தனை நேர்ந்து விட்டன என்ற சிந்தனைகள் எழும் போது - தேய்ந்து போன அந்த cliche தான் நினைவுக்கு வந்தது...'மாறாதது மாற்றம் மாத்திரமே !' கோடை கொணர்வது வெப்பத்தை மட்டுமல்ல...சில சுகமான சிந்தனைகளையும் கூடத் தான் என்ற புரிதலோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். பாக்கி 2 (மினி லயன்) கோடை மலர்கள் பற்றி இடைப்பட்டதொரு சந்தர்ப்பத்தில் எழுதிடுவேன் ! புது இதழ்கள் இரண்டும் (ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) ஏப்ரல் 7க்கு உங்களைத் தேடித் புறப்படும் ! அதே போல நாளைய தினம் "KAUN BANEGA TRANSLATOR -சீசன் 2" க்கான பக்கங்கள் கூரியரில் அனுப்பிடப்படும். Get cracking guys ! Adios for now ! 

Sunday, March 24, 2013

அறிமுகம் ஒரு சுட்டி ..பதிவோ ரொம்பக் குட்டி..!


நண்பர்களே,

வணக்கம். சின்னதாய் ஒரு பயணம் அவசியப்படுவதால் அதன் ஏற்பாடுகளில் கடந்த வாரத்தின் பின்பாதி செலவாகி விட்டது. இன்று இரவு கிளம்பிடத் தயாராகும் முன்னே இங்கே ஒரு attendance போட்டே ஆக வேண்டுமென்ற முனைப்பில் - "டைகர் ஸ்பெஷல் "க்கான பணிகளை முடித்த கையோடு இங்கே ஆஜராகியுள்ளேன். 

ஷெல்டன் & சிக் பில் கூட்டணியிலான Hot n 'Cool ஸ்பெஷல் தற்போது    அச்சில் உள்ளது.அடுத்த சில நாட்களில் அதன் அட்டைப்படம் அச்சாகியதும் பைண்டிங் பணிகள் துவங்கிடும். தொடரும்  மாதங்களுக்கான ராப்பர்களையும் 'ஏக் தம்மில்' அச்சிட்டால் பணமும், காலமும் மிச்சமாகுமென்பதால் - ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல் + இரத்தத் தடம் + லக்கி லூக் ஸ்பெஷல் என்று 4 ராப்பர்கள் ஏக நேரத்தில் அடுத்த சில நாட்களில் அச்சுக்குப் பயணமாகிடவுள்ளன. Promise செய்தபடியே ஏப்ரலின் முதல் வாரத்தில் இரு இதழ்களும் (H & C ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) உங்களைத் தேடி வந்திடும். இரு இதழ்களுமே அழகாய் அமைந்திருப்பதாய் மனதுக்குப் பட்டது fingers crossed !

டைகரின் "பரலோகப் பாதை" + "இரும்புக்கை எத்தன் " இதழ்களை மீண்டுமொருமுறை படித்திட வாய்ப்புக் கிடைத்த போது, டைகரின் அந்த கரடுமுரடான வசீகரத்திற்கு மயங்காது இருக்க இயலவில்லை. (நான் பணியாற்றிய நமது இதழ்களை ஒரு போதும் திரும்பப் படிக்கும் பழக்கம் கொண்டவனல்ல என்பதால் -இது போன்ற மறுபதிப்பு முயற்சிகள் ஜாலியாய்ப் பின்னோக்கிப் பயணம் செய்திட உதவிடுகின்றன!) சமீபத்திய "தங்கக் கல்லறை " ஒரு த்ரில்லர் ரகமென்றால் - தற்சமய "ப.பா & இ.எ " அட்டகாசமான action சூறாவளி என்பதை புரட்டும் ஒவ்வொரு பக்கமும் நினைவூட்டுகின்றது ! "இரத்தத் தடத்தில்" நிறைவு பெறும் இந்த அசாத்திய அத்தியாயம் நமது இந்த ஏப்ரல் & மே மாதங்களை நிரம்பவே lively ஆக வைத்திருக்கக் காத்துள்ளது ! மே முதல் தேதிக்கு "இரத்தத் தடம் " உங்கள் கைகளில் இருந்திடும் - உறுதியாக !

அப்புறம் - நமது Kaun Banega Translator - சீசன் 2 -க்கான மொழிபெயர்ப்புப் பக்கங்களை - நான் ஊருக்குத் திரும்பியவுடன் (வரும் வெள்ளியன்று) அனுப்பிடவுள்ளோம். Green Manor தொடருக்கான கான்டிராக்ட் நம் கைக்குக் கிடைத்த பின்னே இந்த வேலையைச் செய்திடலாமே என்று நான் நினைத்திட்டதால் அறிவித்தபடி மார்ச் 15-க்கு உங்களை செயலில் ஆழ்த்திட இயலாது போனது. கிடைத்திடும் பக்கங்களை -மொழிபெயர்ப்போடு ஏப்ரல் 14க்கு முன்னதாக நமக்குக் கிடைக்கும் விதத்தில் அனுப்பிடல் அவசியம் என்பதை underline செய்திடுகிறேன். அது மட்டுமல்லாது, போஸ்டல் அட்ரஸ் இன்றி வந்திடும் மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கு வாய்ப்பளிக்க இயலாதென்பதால், மறவாது முழு முகவரியோடு விண்ணப்பிக்க வேண்டுகிறேன் !


ஆண்டின் முதல் quarter நிறைவு பெற்றிடும் இவ்வேளையினில் - எங்களது திட்டமிடல்கள் கொஞ்சமாய் முன்னே இருப்பதால் - சில  காலம் முன்னே நான் அறிவித்திருந்த +6 முயற்சிகளுக்கான பிள்ளையார் சுழியினைப் போடும் நேரமும் நெருங்கி வந்துள்ளதாய் உணர்கிறேன். அறிமுகமாகவிருக்கும் தலைவர் "சுட்டி லக்கி" தான் அந்தப் புதிய பாதையில் ஜாலியாய் சவாரி செய்யக் காத்திருக்கும் முதல் நாயகர் (!!)  ரூ.50 விலையினில், வழக்கம் போல் முழு வண்ணத்தில் வந்திடும் சுட்டி லக்கி உங்களையும், உங்கள் வீட்டுச் சுட்டீசையும் கவர்ந்திட்டால் - +6 ன் அடுத்த படியாய் "OKLAHOMA JIM" (சுட்டி லக்கி # 2) வந்திடும். லக்கி லூக் மாத்திரமல்லாது டால்டன் சகோதரர்களும் குட்டிப் பயல்களாய்  அரை நிஜாரில் அட்டகாசம் செய்யும் சாகசமிது ! 



இவை தவிர +6 முயற்சியில் ஒரு சூப்பரான டெக்ஸ் சாகசமும் black & white -ல் உண்டென்பதை இப்போதைக்குச் சொல்லிடுகிறேன் ! பாக்கி 3 இதழ்கள் பற்றிய அறிவிப்பு - இவ்வாண்டின் பிற்பகுதியினில் வந்திடும். உங்கள் பர்ஸ்களுக்கு வெடி வைக்கும் வேலையினைச் செய்கிறோமோ என்ற குறுகுறுப்பு சின்னதாய் தலைக்குள் இல்லாதில்லை - but #1 & 2 இதழ்கள் மட்டுமாவது நம் அடுத்த தலைமுறை வாசகர்களின் பொருட்டு என்ற ஆறுதல் மனதுக்குள் ! 

விரைவில் சிந்திப்போம் ..அது வரை stay cool folks & ஈஸ்டர் வாழ்த்துக்கள் !


Monday, March 18, 2013

ரசனைகளின் பயணம்...!


நண்பர்களே,

வணக்கம். சிந்தனை சுதந்திரத்தின் முழு வீச்சையும் பார்த்திட எண்ணுவோருக்கு நமது கடந்த பதிவும், அதனைத் தொடர்ந்திட்ட விவாதங்கள் ; தெரிவிக்கப்பட்ட அபிப்ராயங்கள் - நல்லதொரு உதாரணமாய் அமைந்திருக்கும் !இந்த சென்சார் சங்கதியினைப் பொருத்த வரை  வானவில்லின் பல வர்ணங்களைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான point of view இருப்பதனை இந்த எண்ணச் சிதறல்கள் ரம்யமாய் சித்தரித்ததை நான் மௌனியாய் கவனித்துக் கொண்டிருந்தேன் ! உணர்வுபூர்வமாய்த் தெரிவிக்கப்பட்ட அபிப்ராயங்களின் மீது நான் எவ்விதத்திலும் comment செய்வது பொருத்தமாய் இராது என்று மனதுக்குப் பட்டதால் , இந்த சென்சார் பதிவின்  விவாதங்களில் எனது பின்னூட்டங்களை இடைச்செருகல்களாய் இடாது ஒரு பார்வையாளனாகவே இருந்திடத் தேர்வு செய்தேன் ! 

இந்த விவாதம் துவங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே நான் செய்த முதல் காரியம்- நமது இவ்வாண்டுக்கான இதர இதழ்களின் அட்டவணையை புரட்டியதே  ! அடுத்தடுத்து வரவிருக்கும் இதழ்களின் பாணிகளை சின்னதானதொரு டிரைலராய் தலைக்குள் ஓட விட்டுப் பார்த்தேன் !   ஏப்ரலில் வரவிருக்கும் திருவாளர் ஷெல்டனின் ஆக்க்ஷன் த்ரில்லரில் சின்னச் சின்னதான சில நகாசு வேலைகளை மாத்திரம் செய்தாலே போதும் என்பது தான் கதையின் தன்மை ! அதே போல ஜூனில் வரவிருக்கும் டேஞ்சர் டயபாலிக் கதையினிலும் பெரிதாய் எந்தவொரு வன்முறை / ஆபாச combination கண்ணில் தென்படவில்லை ! ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் லார்கோவின் அடுத்த வருகை நவம்பரில் - அதுவும் ஒரு அதிரடி சாகசப் பின்னணியினில் ! இந்த இதழின் ஒரிஜினலை மீண்டுமொருமுறை புரட்டிய போது நமது வழக்கமான சென்சார் அளவுகோல்களே இங்கே போதுமானதாய் இருக்குமென்பதில் ஐயமேதும் எனக்கில்லை  ! நிஜமான பரீட்சை என்று எழுந்திடப் போவது அடுத்தாண்டு ஏப்ரலில்  லார்கோவின் "SEE VENICE " ; "AND DIE " பாகங்களைக் கையாளும் நேரம் வரும்  போதே என்று தான் தோன்றுகிறது.



கதைக் களமும் சரி ; சித்திரங்களும் சரி - நிஜமான உழைப்பை எங்களிடம் கோரவிருக்குமொரு சவாலாய் இருந்திடப் போவதை இப்போதே என்னால் உணர முடிகின்றது ! இப்போதெல்லாம் நம் வண்டியை உத்வேகத்தோடு இழுத்துச் செல்வதில் பெரும் பங்கு - நமது சமீபத்தியப் பாணி முன்நிறுத்தும் மாறுபட்ட சவால்களே எனும் போது - இது சவால் படலங்களின் லேட்டஸ்ட் அத்தியாயம் என்றே எடுத்துக் கொள்கிறேன் ! இப்போதே இந்தக் கதையினை அணுகிடும் விதம் பற்றிய சில சிந்தனைகள் தலைக்குள் ஓடத் துவங்கியும் விட்டன ! ஓரிரு மாதங்களைத் தாண்டிய திட்டமிடல் என்பதெல்லாம் நமக்குத் துளியும் பரிச்சயம் இல்லாத சங்கதிகள் என்றதொரு நிலை மாறி ; ஓராண்டுக்குப் பின்வரவிருக்கும் இதழ்களைக் கூட இன்று explore பண்ணிடும் ஒரு கொடுப்பினை நிச்சயம் ஆண்டவனின் அருள் என்றே எண்ணத் தோன்றுகிறது ! Touch wood !

Moving on to lighter things....ஏப்ரலின் Hot  n ' Cool ஸ்பெஷல் (ஏகோபித்த தேர்வு :-) ) பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன  ! . இவ்வார இறுதிக்குள் அச்சுப் பணிகள் பூர்த்தியாகி இருக்கும் - மின்னிலாக்காவின் இருள் போர்வை தொடர்ந்திடும் போதிலும்! டைகரின் க்ளாசிக்ஸ் வண்ண மறுபதிப்பு இதழின் பணிகளும் கூட simultaneous ஆக  நடந்தேறி வருகின்றன ; அவை அச்சை சந்திக்கும் வேளை - அடுத்த வாரம் ! இரு இதழ்களும் இணைந்து ஏப்ரல்  பத்துக்குள் உங்களைச் சந்திக்கக் கிளம்பிடும் ! ஒரு சமீபத்திய சந்தோஷம் - கடந்த 3 வாரங்களாய் நிறைந்து வரும் நமது க்ளாசிக்ஸ் சந்தா நோட்டின் பக்கங்கள் ! ஆறு மாதங்களாய் 72-ஐத் தாண்டிட மறுத்து சண்டித்தனம் செய்து வந்த இந்த நோட் இப்போது விறு விறுவென்று தடிமனாகி வருகிறது!Thanks guys !!!  

இப்போதைய எனது பார்வை ஓடிடுவது நமது ஜூலை வெளியீடும், லயனின் ஆண்டு மலருமான "ALL NEW ஸ்பெஷல்" மீதே !  "ஒரு வித்தியாசமான இதழ்" என்ற அந்த தேய்ந்து போன டயலாக்கை இம்முறை நிஜப்படுத்தும் ஒரு இதழாய்;இதற்கு முந்தைய நமது எந்தவொரு முயற்சியினையும் போலல்லாத,புதுமையான கதைகளை மாத்திரமே தாங்கிடும் ஒரு இதழாய்  இந்த இருநூறு ரூபாய் annual அமைந்திட வேண்டுமென்பது எனது பிரதான நோக்கம் ! NBS இதழோடு வந்திருந்த குட்டி ட்ரைலரில் 4 வெவ்வேறு (புது) கதைத் தொடர்களை விளம்பரப்படுத்தியிருந்தேன். ஆனால் அவை 2 வெவ்வேறு பிரெஞ்சுப் பதிப்பகங்களின் படைப்புகள் என்பதால், ஒரே இதழில் அவற்றை ஐக்கியப்படுத்திடுவதில் வெற்றி கிட்டிடவில்லை. 'எங்கள் வழிகள் தனித்தனியாகவே இருந்திடட்டுமே' என்று இருவருமே அபிப்ராயம் சொல்லியுள்ளதால், சின்னதாய் ஒரு ஏற்பாடு அவசியமாகிறது ! 200 ரூபாய்க்கு ஒரே இதழ் - என்பதற்குப் பதிலாக - ஸ்பெஷல் 1 ; ஸ்பெஷல் 2 என்று இரு இதழ்களாக ஜூலையினில் வரவிருக்கின்றன ! (ஒரு அட்டைப்படம் போனஸ் !)   

முதல் இதழில் டிக் ஆகிடும் முதல் ஹீரோ - JASON BRICE ! 1920-ன் லண்டனில் அரங்கேறிடும் இந்தக் கதைக்களம் நமக்குப் புதுமையானதே ! ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் கொஞ்சமாய் இந்தக் காலகட்டத்தை showcase செய்துள்ளோம் என்ற போதிலும், அந்த சித்திரங்களில் ; கறுப்பு-வெள்ளை பாணியில் அது பெரிதாய் ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்க சாத்தியமில்லை தான். வண்ணத்தில் வரவிருக்கும் JASON BRICE  உலகின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இலண்டனின் மர்மங்களை நமக்குக் காட்டிடவிருக்கும் நாயகர்.  கதை நிகழும் arena மட்டுமல்லாது கதையின் பாணியே கூட வித்தியாசமானதென்று சொல்லலாம் ! ஆவிகளோடு பேசிட முயலும் மீடியம்கள் ; மர்மம் சூழ்ந்ததொரு plot என்று இந்த 1920's துப்பறிவாளரை ஒரு மாறுபட்ட முயற்சியில் சந்திக்கவிருக்கிறோம்.   

இவரோடு இன்னொரு புது நாயகரான ஜோனதன் கார்ட்லண்ட் அறிமுகம் செய்திட நினைத்துள்ள போதிலும், இவரை ஒரு கௌபாய் / வேட்டையர் ரகத்தில் தான் slot செய்திட இயலும் என்பது ஒரு உறுத்தல். இவரது இடத்தை பொருத்தமானதொரு புதுமுகத்தைக் கொண்டு ரொப்பிட முயற்சிகள் சில மேற்கொண்டு வருகிறேன். அவற்றில் வெற்றி கிட்டினால்"இரத்தப் படலம்" போலொரு powerful ஆன தொடர் நமக்குக் கிட்டியிருக்கும் என்பதை மாத்திரம் சொல்லிடலாம் ! Fingers crossed ! 


மூன்று பாகங்கள் கொண்ட எனது சமீபத்திய காதலான GREEN MANOR - தொடரின் முதல் பாகத்தைக் கூட "ALL  NEW ஸ்பெஷலில்" இணைத்திடலாம் ; தொடரும் ஆகஸ்டில் அதன் பாக்கி இரு பாகங்களை வெளியிடும் திட்டத்தோடு ! அடுத்த 15 நாட்களுக்குள் இது பற்றிய எனது தீர்மானங்களுக்கு ஒரு இறுதி வடிவம் கொடுத்த பின்னே - திட்டவட்டமான அறிவிப்பு வந்திடும். 

ALL NEW SPECIAL's புக் # 2 ஆக வரவிருப்பது - BATCHALO என்ற பெயரினில் உருவாக்கப்பட்டதொரு பிரெஞ்சு கிராபிக் நாவல் + ஸ்டீல் பாடி ஷெர்லக்கின் முழு நீளக் கார்டூன் ! இரண்டாம் உலக யுத்தத்தின் போது சொல்ல இயலா இன்னல்களைச் சந்தித்த நாடோடிக் கூட்டத்தின் அவஸ்தைகளை சித்தரிக்கும் BATCHALO - வித்தியாசமான வண்ணக் கலவைக்கும் நம்மை அறிமுகம் செய்திடவிருக்கிறது !    

நம் ரசனைகளின் பயணம் சீரியஸ் ஆக எங்கெங்கோ சென்றிடத் தயாராகிடும்   வேளையினில்,ஒரு ஜாலியான break கூடக் காத்துள்ளது !  உங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் ; அவர்கள் பெயரைச் சொல்லி நாமும் ரசித்து மகிழ - வரவிருக்கிறார் "சுட்டி லக்கி "! நிழலை விட வேகமாய்த் தோட்டா மழை பொழியும் முன்னர் - உண்டிவில்லைக் கொண்டு அதகளம் செய்த அவரது அரை டிராயர் பருவத்து சாகசம் இடைச் செருகலாய் விரைவில் வரவிருக்கிறது. எங்கே ?எப்போது? என்பது விரைவில்! உங்கள் வீடுகளிலிருக்கும் எங்களது வருங்கால சந்தாதாரர்களை -அறிமுகம் செய்திட இதுவொரு அழகான வாய்ப்பென்றே மனதுக்குப் படுகிறது ! போகோ முன்னேயும் ; சோட்டா பீம் முன்னேயும் லயித்துக் கிடக்கும் நாளைய மன்னர்களை காமிக்ஸ் எனும் நம் அற்புத உலகினுள் நுழைத்திட  தயார்படுத்தி வையுங்களேன் !
அவர்களும் இந்தப் பக்கத்தில் எழுதிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற சந்தோஷ நம்பிக்கையோடு தூக்கத்தைத் தேடிச் செல்கிறேன் இப்போதைக்கு !  Catch you soon folks ! Bye for now ! 

Sunday, March 10, 2013

சித்திரங்களும், சென்சார்களும்...!

நண்பர்களே, 

வணக்கம் ! சின்னதாய் ஒரு warning.... இம்மாதத்து இதழான லார்கோவின் "துரத்தும் தலைவிதி" இதழினை நீங்கள் இன்னமும் வாங்கி இருக்காத பட்சத்தில் ; நமது பதிவு என் : 82 ஐ படித்திருக்கா பட்சத்தில் - இப்புதுப்பதிவு உங்களுக்கு greek & latin ஆகத் தோன்றிடுவதைத் தவிர்த்தல் சிரமமே...! 

சென்சார் பற்றிய இதற்கு முந்தைய பின்னூட்டங்களுக்கு நான் பெரிதாய் பதிலளிக்காது போனதன் பிரதான காரணம் இந்த உறுத்தல் எனக்குள் இருந்திட்டதனாலேயே...! சித்திரங்களுக்கு கத்திரி போடுவதையும் தாண்டி லார்கோ & ஷெல்டன் கதை வரிசைகளின் சில episodes சற்றே mature audience -க்கானவை என்ற புரிதல் என் மண்டைக்குள் சின்னதொரு சஞ்சலத்தை எற்படுத்தாமலில்லை ! சொல்லப் போனால் WILD WEST ஸ்பெஷலின் சமயமே அந்த கிராபிக் நாவலின் சில வன்முறை சித்தரிப்புகள் ; இறுதியில் வெளிச்சத்துக்கு வரும் அந்த முறையற்ற நேசத்தின் வெளிப்பாடு - விமர்சனங்களை ஈர்க்குமென்று தான் எதிர்பார்த்தேன் ! 


லார்கோவைப் பொருத்த வரை, கதையோடு இணைந்து ஓடிடும் வன்முறை sequences ; பெண்களின் அங்க தரிசனங்கள் ; மேற்க்கத்திய கலாச்சாரங்களின் வாழ்க்கை முறைகள் இத்யாதிகளை முழுவதுமாய் மழுங்கச் செய்வது - கதையின் ஜீவனைக் குழி தோண்டியது போலாகி விடும் எனும் போது - ஒரு மிதமான compromise அவசியமாகியே தீர்கிறது என்பது வானவில்லின் மறு முனை ! 

அதே போல கதையினில் பணியாற்றிடும் சமயம் கண்ணில் தட்டுப்படும் விஷயங்களுக்கும், அதனை முழுமையாய் - எந்தவொரு சார்பு நிலையுமின்றி - முழு இதழாய் படித்திடுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு ! பணி செய்யும் போது மொழிபெயர்ப்பின் கோர்வை ; எழுத்துக்களின் நயம் ; பிழைகளில்லாமை ; அச்சின் தர அளவுகளில் கவனம் etc ..என்று பிரதானமாய் ஓடிடும் பார்வையும், அக்கறையும் - அதனைத் தாண்டிச் சென்றிடுவது முழு இதழைக் கையினில் கொண்டிடும் போது மாத்திரமே ! இந்த இதழில் கூட ஒரு சில இடங்களில் ஆடைகளின் அளவுகளில் கவனப்பிசகு நேர்ந்தது இதனாலேயே !(இது பற்றி நண்பர் கர்ணன் சுட்டிக் காட்டியிருந்த விஷயங்களில் எனது ஆட்சேபணை அவரது எழுத்துக்களின் தொனிக்கு மாத்திரமே தவிர - கருத்துக்களுக்கு அல்லவே.) நிறைய நேரங்களில் உள்ளங்கையினில் இருந்திடுமொரு சங்கதியினைச் சுட்டிக் காட்ட எட்ட நிற்கும் மாந்தர்களின் உதவி அவசியப்படுவதும் உண்டு தானே ?

இதனை எனது நிலைக்கு ஒரு சாக்காகச் சொல்லிடுவது நோக்கமல்ல; எப்போதும் போல எனது பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிஜமான முயற்சியே ! 

லார்கோ அவசியப்படுத்திடும் புதுச் சிந்தனைகளுக்கும் ; புதுப் பாணிகளுக்கும் +15 / +18 என்ற பரிந்துரை சுலபமான தீர்வே.......! ஆனால் எதனையும் பொதுவானதொரு குடையின் கீழே கூட்டாக்கிப் பார்க்கும் நம் மக்களது generalizing மனப்பாங்கிற்கு - இது போன்ற லேபில்கள் காமிக்ஸ் மீதே ஒரு தவறான அபிப்ராயத்தை எற்படுத்திடுமோ என்ற அச்சம் தான் குறுக்கே வந்திடும் பூனை ! ஏற்கனவே காமிக்ஸ் படிப்பதே வெட்டிப் பொழுதுபோக்கு தான் என்ற சிந்தை கொண்ட மக்களுக்கு இது போன்ற +15 / +18 tags - என்ன விதமான சேதியைச் சொல்லிடுமோ ?? 

முன் நாட்களைப் போல - கடைகளில் இதழ்களை வாங்கிடும் முறை அமலில் இருந்திடும் பட்சத்தில் - 'எதை வாங்கலாம் ?; எதை தவிர்க்கலாமென்ற சுதந்திரம் வாங்கிடும் முனையினில் இருந்திட்டது. ஆனால் தற்சமய சந்தா முறையில் அந்த சுதந்திரம் காணாது போவதால், எனது பொறுப்பும், சங்கடமும் அந்தளவிற்கு அதிகமே ! 

தற்சமயத்திற்கு இத்தகைய சிக்கலைக் கொணர்வது திருவாளர் லார்கோ மாத்திரமே என்பதால்,இனி வரும் நாட்களில் லார்கோவின் கதைகளில் நம்மால் இயன்றளவிற்கு எடிட்டிங் செய்த பின்னரும் - தவிர்க்க இயலா கனமும்; களமும் தொடர்ந்திடும் சந்தர்ப்பங்களில் "Recommended for +18 readers" என்ற tag ஒன்றினை selective ஆக இணைத்திட சிந்திப்போம்! 


மற்றபடிக்கு மினி லயனை மீட்டுக் கொணரும் முயற்சிகளை இன்னும் சில காலம் கழிந்த பின்னரே தூசி தட்டிப் பார்ப்பது தான் பொருத்தமாய் இருக்கும் ! தரத்தில் சிறிதும் compromise சாத்தியமல்ல என்றதொரு நிலையினில் - எனது கவனம் பிறிதெங்கும் செல்லல் வம்பை விலைக்கு வாங்கிடும் முயற்சி ! So - இன்னும் பலமாகக் கால்களை ஊன்றி நாம் நடக்கும் நாள் புலரட்டுமே ?!


அப்புறம் ஒரு சந்தோஷமான சேதியும் சொல்லிட மறந்து விட்டேன் !!

நமது டெக்ஸ் வில்லரின் "சிகப்பாய் இரு சொப்பனம்" நமக்குப் பிடித்ததில் வியப்பில்லை தான்....ஆனால் - அதன் படைப்பாளிகளே அதற்கொரு மிகப்பெரிய thumbs up கொடுத்துள்ளனர் !! இதழின் அமைப்பு ; நம் ஓவியரின் அட்டைபடம் ; overall தோற்றம் என்று எல்லாமே அவர்களுக்குப் பெரிதும் பிடித்து இருப்பதாகவும் ; இந்த இதழினை உலகெங்குமுள்ள டெக்ஸ் வில்லரின் இதர licensees -க்கு அனுப்பிடும் பொருட்டு - கூடுதலாய் 10 பிரதிகள் தேவை என்றும் கோரியுள்ளனர் !


அது மட்டுமல்லாது, இத்தாலியில் மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்திற்கும் நமது இந்த டெக்ஸ் இதழ் பயணமாகிறதாம் ! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழ் இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது தான் icing on the cake  ! Let's pat ourselves on the back guys :-)

P.S : சென்ற பதிவின் 300+ பின்னூட்டங்களுக்கிடையே இந்த சேதியைத் தேடிப் படிப்பது அனைவருக்கும் சுலபமல்ல என்பதாலும் ; இது ஒரு அவசியமான பகிர்வு என்பதாலும், இதனை ஒரு quickie பதிவாகவே மாற்றி விட்டேன் ! 

Thursday, March 07, 2013

கண்ணா..லட்டு தின்ன ஆசையா.....?


நண்பர்களே,

வணக்கம். இங்கும் அங்குமாய் பிரயாணம் அவசியப்பட்டதால் இந்தப் பதிவு சற்றே தாமதமாகி விட்டது ! 

நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரின் அதிரடிப் படலத்தின் மூன்றாவது அத்தியாயம் இப்போது தயார் ! லார்கோவின் Action ஸ்பெஷலும், நமது மார்ச் வெளியீடுமான :துரத்தும் தலைவிதி" நேற்றைய மதியமே உங்களைத் தேடி கூரியர்களில் / பதிவுத் தபால்களில் தன் பயணத்தைத் துவக்கி விட்டது ! ஒரு மொத்தமாய் அணைத்து நண்பர்களுக்கும் இதழ்களை அனுப்பியாகி விட்டதென்பதால் பரவலாக இன்று பட்டுவாடா ஆகிடுமென்பது எனது நம்பிக்கை !


லார்கோவோடு போட்டி போட்டு கதை முழுக்க தனி ஆவர்த்தனம் நடத்திடும் சைமனுக்கு promotion வழங்கிடும் ஒரு முயற்சியாக இந்த இதழின் அட்டையினில் நண்பர்கள் இருவருமே சம அளவில் காட்சி தருகின்றனர் ! பல மாதங்கள் கழிந்த பின்னர் வந்திடும் ஒரு horizontal அட்டைபடம் என்பதோடு, வழக்கமான நாடகத் திரை backdrop பாணியிலிருந்து விலகி ஒரு realistic பின்னணி இந்த ராப்பரின் பலமென்று எனக்குத் தோன்றியது ! உங்களுக்கும் அந்த feel தோன்றிடும் பட்சத்தில் அதற்கான கிரெடிட் கொஞ்சமாய் எனக்கும் ; ஏகமாய் நமது அட்டைப்படக் கம்ப்யூட்டர் டிசைனர் பொன்னனுக்கும் சாரும் !

முதலாவது 'ஆல்-கலர்' ; ஆர்ட் பேப்பர் வெளியீடு என்ற முறையில் புதியதொரு பாணிக்கு பாதையமைக்க எத்தனிக்கும் முயற்சி இது. 112 வண்ணப் பக்கங்கள் மாத்திரமே என்பதால், முந்தைய இதழ்களோடு ஒப்பீடு பொருத்தமாய் இராது ; so 'மெலிந்து விட்டது...இளைத்து விட்டது ..'   என்ற பதிவுகள் வேண்டாமே - ப்ளீஸ் ?! தொடரும் நாட்களில் இந்த பார்முலா தொடர்ந்திடும் ; பிரதானக் கதையோடு ஓட்டாக வந்திடும் சிறுகதைகளில் மட்டும் மாற்றங்களோடு ! மதியில்லா மந்திரியார் ; லக்கி லூக்கின் குட்டி சாகசங்கள் ; ஸ்டீல் பாடி ஷெர்லாகின் கதைகள் என்று பின்சீட் பயணிகள் மாத்திரம் அவ்வப்போது மாறிடுவார்கள் !

லார்கோவின் இந்த அத்தியாயத்தின் ஒரிஜினல் அட்டைப்படங்கள் வழமை போல் சுமார் ரகங்களே என்பதால் அவற்றை அதிகமாய் பயன்படுத்திட நான் முனைந்திடவில்லை. ஒரிஜினலின் முதல் பாகத்து அட்டையின் சித்திரம் - ஒரிஜினல் வண்ணக் கலவையோடு நமது காமிக்ஸ் டைம் பகுதியின் பின்னணியாகவும் ; இரண்டாம் பாக அட்டையின் சித்திரம் நமது பின்னட்டைக்கும் பயனாகி இருப்பதால், உட்பக்கங்களில் அதே படங்களை மீண்டுமொருமுறை முழுப் பக்கங்களாக்கி 2 பக்கங்களை வீணடிக்க விரும்பிடவில்லை !

Original.....

கதையைப் பற்றிப் பெரிதாய் பீடிகை தேவையில்லை என்பது அறிந்த விஷயம் தானே ? ஒரு மாமூலான கதைக்கருவினையும்  கூட வான் ஹாம்மேவால் இத்தனைப் பிரத்யேகமாக்கிட இயல்கிறது எனும் போது, கோர்வையாய் கதை சொல்லும் அவரது ஆற்றலுக்கு இன்னுமொரு salute என்பதைத் தாண்டி நாம் சொல்லிட என்னவிருக்கிறது ? அதே போல இந்த இதழின் உட்பக்கங்களுக்கான வண்ணக் கலவைகளும் அட்டகாசமேன்றே சொல்லிட வேண்டும் ! ஆம்ஸ்டர்டாமின் வீதிகளில் சைமன் சுற்றிடும் sequences களில் செய்யப்பட்டுள்ள லைட்டிங் ; ராட்சச விமானங்கள் நீல வானில் பறந்திடும் போது அந்தப் 'பளீர்' பின்னணி ; ஏகாந்தமான கடற் பரப்புகளின் backdrop என்று அசரடிக்கும் நிறைய சங்கதிகள் இந்த இதழின் வண்ணஜாலங்கள் ! ஒரிஜினலின் வண்ணங்களுக்கு நியாயம் செய்திட வேண்டுமென்ற ஆர்வத்தில் இம்முறை அச்சுக்கு நாம் பயன்படுத்தியிருப்பது அத்தனையுமே உயர்ரக அயல்நாட்டு மை வகைகள் ! So - பெல்ஜியத்தில் உருவாகி ; சீனாவின் காகிதத்தோடு, ஜப்பானிய அச்சு இயந்திரத்தில், ஜெர்மானிய மைகள் கலந்து, இதுவொரு சர்வதேசச் சந்தையின் குழந்தையாய்க் காட்சி தரும் இதழ் என்று சொல்லிடலாம் !

கதையின் பெரும்பான்மைக்கு லார்கோ கண்ணாமூச்சி ஆடி விட்டு ஆகாயத்தில் நடத்திடும் கிளைமாக்ஸ் இந்த இதழின் highlight ! Happy Reading ! லார்கோவின் சீரியசான பாணிக்கு விடை கொடுத்து விட்டு பக்கங்களைப் புரட்டும் போது நமது மீசைக்கார மந்திரியார் தலைகாட்டிடுவார் - இன்னுமொரு வண்ண காமெடி விருந்தோடு ! சமீபத்திய நமது "Kaun  Banega Translator " மொழிபெயர்ப்புப் போட்டியின் களம் இக்கதையே என்பதால் இதனை அங்குலம் அங்குலமாய் அலசிட ஆர்வலர்கள் ஆவலாய் இருப்பர் என்பது நிச்சயம். அது மட்டுமல்லாது இந்த இதழோடு குட்டியான 8 பக்க black & white  இணைப்பினில் வெற்றி பெற்ற வாசக நண்பரின் மொழிபெயர்ப்போடு இதே கதை மீண்டுமொருமுறை எட்டிப் பார்க்கின்றது !

இது வரை சஸ்பென்சாக இருந்திட்ட அந்த நண்பரது விபரங்கள் இதோ :

காமிக்ஸ் ரசிகன் (எ ) புதுவை D .செந்தில் குமார் !

வாழ்த்துக்கள் செந்தில் ! பலூன்கள் வேறு வரைந்து மொழிபெயர்ப்பினை அழகாக lettering செய்திருந்ததும் சிறப்பாக இருந்தது !

சமீபமாய் மொழிபெயர்ச்சி பற்றி ஏராளமாய் ஒப்பீடுகளும், அபிப்ராயங்களும் மிகுந்து வரும் இத்தருணத்தில், ஒரே கதைக்கு இரு வேறு எழுத்து நடைகள் எனும் போது, பிரவாகமாய் எண்ணங்கள் எழுந்திடக் காத்துள்ளன என்பதை யூகிப்பதில் சிரமமில்லை ! முக்கியமாக - "செந்தில்குமாரின் மொழிபெயர்ப்பை விட உங்களது எவ்விதத்தில் உசத்தி ?" என்ற ரீதியிலான கேள்விகள் இங்கோ ; இணையத்தின் பிற பகுதிகளிலோ நண்பர்கள் தத்தம் பாணிகளில் எழுப்பிட்டு தூள் கிளப்பிடப் போவது உறுதி ! அட்வான்சாக ' start music' சொன்ன பெருமை எனக்கே :-)

இந்தப் போட்டியின் என் பார்வையிலான அடுத்த இடத்தை இணைந்து பிடித்திடும் நண்பர்கள் :

* Podiyan , ஸ்ரீலங்கா & கார்த்திக் சோமலிங்கா பெங்களுரு *

இருவரின் வேகங்களும் அசாத்தியம் என்பதை முதலில் குறிப்பிட்டாக   வேண்டும் ! கைக்குப் பக்கங்கள் கிட்டிய மறு நாளே இருவரது மொழிபெயர்ப்பு ஸ்கிரிப்ட்களும் என்னைத் தேடி மின்னஞ்சலில் வந்திருந்தன ! அந்த வேகம் எழுத்து நடைகளிலும் தெரிவதை நீங்களும் வெகு சீக்கிரமே ரசித்திடத் தான் போகிறீர்கள் ! இதழ் இன்னமும் கைக்குக் கிடைத்திடாத நிலையில், நண்பர்களது மொழிபெயர்ப்புகளை மாத்திரம் இங்கே வெளியிடுவது, இந்தக் கதையின் பரிச்சயமற்ற இதர வாசகர்களுக்கு உதவாது என்பதால், ஸ்கிரிப்ட் இரண்டினையும் நாளை upload செய்யவிருக்கிறேன் ! (எதாகினும் ஒரு வெளித் தளத்தில் அவற்றை load செய்து விட்டு, அதற்கான லிங்க் இங்கே கொடுப்பது சாத்தியமா ? 2 முழு ஸ்க்ரிப்ட்கள் எனும் போது பக்க நீளம் இங்கே அதிகமாகிடுமே என்ற சிந்தனை !) நண்பர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் !

தட்டில் ஒரு லட்டு என்றானது இரண்டாகி ; அதுவே நான்காக உருமாற்றம் பெற்றிடும் போது அபிப்ராயங்களுக்கும் ; ஒப்பீடுகளுக்கும் மடை திறந்து விட்டது போல் அமைந்திடும் என்பதில் சந்தேகமேது ? "இது தான் பெஸ்ட் ; அதை விட இது தேவலாம்..!" ரக தீர்ப்புகள் ; தீர்மானங்கள் ஆங்காங்கே நிறைவேற்றப்படலாம் எனும் போதிலும், நான் சொல்ல எண்ணுவது ஒன்றே : இவை எனது கண்ணோட்டத்தின் தேர்வுகளே தவிர, judgement அல்லவே ! கணக்கில் 100/100 போடுவது போல், மொழிபெயர்ப்புகளுக்கு  எவ்வித அளவுகோல்களும் கிடையாதென்ற நிலையில் இந்தத் தேர்வுகள் எனது point of view மாத்திரமே ! Plain & simple !

'இணையத்தில் பந்தாட்டம் ' துவங்கிட அழகான புதிய களம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன் என்ற புரிதலும் ; அடுத்த 30 நாட்களுக்காவது நிறைய கீ-போர்டுகள் மும்முரமாய் நம் பெயரைச் சொல்லி குத்துக்கள் வாங்கிடக் காத்துள்ளன என்ற யூகமும் என்னுள் :-) ஓராண்டுக்கு முந்தைய 'இணைய உலகப் புது வரவான விஜயனுக்கும்  - இன்று உலவிடும் 'ஒரு நூறு உதைகள் வாங்கிய விஜயனுக்கும் ' வேறுபாடென்று நான் நினைத்திடுவது இந்த internet bashing கலாச்சாரம் தற்கால ஆட்டத்தின் ஒரு பிரிக்க இயலா அங்கமே என்ற உணர்தல் எழுந்துள்ளது மாத்திரமே ! அதனைத் தவிர்த்து எனது எண்ணங்களிலும், செயல்களிலும் காமிக்ஸ் எனும் காதலை, வாழ்கையின் சின்னதொரு சந்தோஷமாய்ப் பார்த்திடும் பாணியில் எந்தவொரு மாற்றமும் இருந்திடாது ! இங்கே சின்னதாய் ஒரு கோரிக்கையும் கூட:

சில நேரங்களில் இங்கும், மின்னஞ்சல் மூலமும் கருத்துத் தெரிவிக்கும் நண்பர்களும் , அதன் மீது நான் ஒப்புதல் தெரிவித்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு இருந்திடுவதும், அதில் எனக்கு உடன்பாடின்றிப் போனாலோ ;நான் மெளனமாக இருந்திட்டாலோ வருத்தப்படுவது  சமீபமாய் கவனித்திடும் சங்கதி ! நிறைய நேரங்களில் நான் சொல்லிடக் கூடிய நியாயமான விளக்கங்கள் கூட 'சப்பைக் கட்டு ' என்ற சாப்பா முத்திரை பெற வல்லதென்பதாலேயே நான் மௌனத்தை நாடிடுகிறேன். அதே போல ஒரு ஆக்கத்தின் மீது அபிப்ராயங்களைத் தெரிவிப்பது உங்களது கருத்து சுதந்திரமென்பதை நான் மதிப்பது எத்தனை தூரம் அவசியமோ, அதே அளவிற்கு அபிப்ராயங்களில் எவற்றை உள்வாங்கிடுவது ; எவற்றை என் சிற்றறிவிற்கு எட்டிய ஆற்றலிடம் ஒப்படைப்பது என்ற எனது முடிவுகளையும் - எனக்கிருக்கும் சிந்தனை சுதந்திரமாய் கருதிடலும் நியாயமான எதிர்பார்ப்புத் தானே ? (ஷ் ஷ் ஷ்ப்பா ....எத்தனை நீள வாக்கியம் !!)

Moving on to lighter things...அடுத்த மாதத்து "கதைகள் ஸ்பெஷலுக்கு" (ஒரு ஒப்பந்தத்தின் கதை + ஒரு கழுதையின் கதை") பெயர் ஒன்று சூட்டிடுவோமே ? ஒரு போராளியும் ஜென்டில்மேனும் - ஒரு கௌண்டமணி-செந்தில் கும்பலோடு இணையும் இந்த வித்தியாசமான combo விற்கு பொருத்தமாய் பெயரேதும் எனக்குத் தோன்றிடவில்லை ! உங்களின் suggestions ப்ளீஸ் ?

அப்புறம், ஏப்ரலில் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் முயற்சியின் முதல் படலமும் (TIGER SPECIAL)அரங்கேறுகிறது தெரிந்த சங்கதி தானே ?! ஏப்ரல் 15-ல் இரு இதழ்களும் இணைந்து வந்திடும் உங்களை சந்திக்க ! அப்புறம் இன்னொரு கோரிக்கையும் கூட ! இங்கே பதிவாகும் நம் கதைகளுக்கான பாராட்டுக்கள் ; விமர்சனங்களை இனி வரும் இதழ்களில்  "வாசகர் கடிதம்" பகுதியினில் வெளியிட எண்ணியுள்ளேன் ! 300 ; 400 என்ற பின்னூட்டக் குவியலின் மத்தியினில் உங்களின் எண்ணச் சிதறல்களைத் தேடித் பிடிப்பது சிரமமாகிறது என்பதால், சிரமம் பார்த்திடாமல்,இங்கு பதிவு செய்யும் வேளையில், comicscomments@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு மெயில் தட்டி விட்டால் என் பணி இலகுவாகிடும் ! (கதைகள் பற்றிய எண்ணங்களை மாத்திரமே!)

இந்தப் பதிவினை நிறைவு செய்திடும் முன்னே சின்னதாய் ஒரு trivia ! லார்கோவின் முதல் இதழின் அட்டைப்படத்திற்காக உருவாக்கப்பட்டு ; வெளிச்சத்தைப் பார்க்காது போன சில முயற்சிகளில் ஒன்று இதோ !


நம் front office -ல் ஸ்டெல்லாவிற்கு உதவியாக Mrs .தேவி கடந்த இரு வாரங்களாய் பணியில் உள்ளார். உங்கள் தொலைபேசி அழைப்புகளை அவரும் கவனித்திடுவார். புதியவர் என்பதால், சற்றே பரிச்சயம் கிட்டிடும் வரை உங்களின் அனுசரணை உதவிடும் ! Thanks in advance ! See you soon guys ! Take care !