Powered By Blogger

Thursday, August 29, 2019

ஆகஸ்டில் அடுத்த மாசம் !

நண்பர்களே,

வணக்கம். கைவசம் தற்காலிகமாய் லேப்டாப் நஹி ; போனில் டைப்படித்து பெருசாய் பதிவொன்றைப் போடும் திறனும் நஹி ; பொறுமையும் நஹி ; சனி வரையிலும் ஊரிலும் நஹி ! இத்தனை நஹிகளுக்கு மத்தியில் செப்டெம்பரின் இதழ்கள் மட்டும் 'ஹேய்' என்பதால் இந்தக் குட்டியூண்டுப் பதிவு ! என் பணிகளை போன ஞாயிறே நிறைவு செய்திட்டபடியால் - 4 இதழ்கள் கொண்ட டப்பி   இன்றைக்கு கூரியரில் கிளம்பியாச்சு ! 

வெள்ளியன்று அனுப்பினால் பாதிப் பேருக்கு புக்குகளும், மீதிப் பேருக்கு கடுப்புமே கிட்டுவது வாடிக்கை என்பதால் பைண்டிங்கில் 'குடல் உருவும் படலத்தை' கொஞ்சம் அழுத்திப் போட்டதன் பலன் - விசாலக்கிழமை டெஸ்பாட்ச் ! புத்தகங்களின் அன்லைன் லிஸ்டிங்கும் ரெடி ! So 'ஆகஸ்டிலேயே செப்டெம்பர்' என்ற மொக்கை வரியோடு மீ இப்போ ஜாத்தா ஹை ; கூரியர் டுமாரோ ஆத்தா ஹை ; புக்ஸ் பற்றி அலசல் இந்த வாரயிறுதிக்கு ஸ்டார்ட்டா ஹை ! ஞான் இப்போ டாட்டா ஹை ! Happy reading folks !

Sunday, August 25, 2019

சலசலக்கும் செப்டெம்பர் !

நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் வாசிப்புகள், ரசனைகள் என்று சகலமுமே ஏதேனுமொரு குறிப்பிட்ட திக்கில் நிலைகொண்டு நிற்பது வழக்கம். ஆரம்ப நாட்களில் இஷ்பைடர்; சட்டித்தலையன் ஆர்ச்சி; இரட்டை வேட்டையர்; மாடஸ்டி என்று ஜனரஞ்சக, ஆக்ஷன் கதைகளுள் முழுமையாய் ஆழ்ந்திருக்கிறோம் ! அப்புறமாய் புலர்ந்ததொரு phase-ல் டெக்ஸ் வில்லர்; கேப்டன் டைகர் என்று கௌபாய் மேனியாவில் மும்முரமாகிட – நமது சாலைகள் சகலமும் வன்மேற்குப் பக்கமாகவே பரந்து விரிந்தன ! அப்பாலிக்கா லார்கோ ; XIII ; ஷெல்டன் என்று சமகாலக் கதைகள் ; அதற்கும் அப்பாலிக்கா கிராபிக் நாவல்கள் என்று ரவுண்ட் அடித்து வருகிறோம் ! இதோ latest ஆகக் கூட “பி.பி.வி” எனும் அந்தக் 'கௌ-பாய் கிராபிக் நாவலுக்குள்' மெய்மறந்து ஆகஸ்டை ஓட்டி வருவது தானே நடந்து வருகிறது ? ஆழ்ந்த கதைக்கருக்கள் ; நிறைய சமூக messages ; வித்தியாசமான நான்-லீனியர் கதைப் பாணிகள் என்று ஓட்டமெடுத்து வரும் இன்றைய பொழுதினில் எனக்குள் லேசாயொரு நமைச்சல் ! 'அட... இந்தப் புதுமாதிரி கதைகளெல்லாம் ஓ.கே. தான்... ஆனாக்கா நாலு மொத்து ; நாற்பது குத்து; நானூறு பன்ச் டயலாக் என்று ஒரு சிம்பிளான நேர்கோட்டு ஆக்ஷன் மேளாவுக்குள் நீச்சலடித்து நிறையவே நாட்களாகி விட்டதே??!!' என்பதே மேற்படி நமைச்சலின் பின்னணி ! சமீபத்தைய அண்டர்டேக்கரோ ஒரு dark த்ரில்லர் ; ஜனரஞ்சக ட்யுராங்கோவோ ஒரு அமர்த்தலான அமைதியான அதிரடி ஆசாமி; தி Lone ரேஞ்சரோ – வேறு மாதிரியான நாயகர் ; பராகுடாவோ முற்றிலும் மாறுபட்ட களம் எனும் போது – சிம்பிளான, ஜாலியான, அதிரடியான, அதகளமான, ஆஸமான, அழகான, அட்டகாசமான ஒரு பட்டாசான கதைக்கோசரம் மனம் ஏங்கியது!

மேற்படி வர்ணனைகள் சகலத்துக்கும் நியாயம் செய்யக் கூடிய நாயகர் ஒருவர் சித்தே நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க – செப்டம்பரின் அட்டவணையும் அவரை என் மேஜைக்கே இட்டாந்திட – குதூகலமாய் நிமிர்ந்து பார்த்தால் நிற்கிறார் நமது மஞ்சள் சட்டை மாவீரர்!! “ஒரு ரௌத்திர ரேஞ்சர்!” என்ற தலைப்போடு 224 பக்க நீளத்திற்குப் பயணிக்கும் இந்த TEX சாகஸத்தினுள் நான் பணியாற்றியது ஏகப்பட்ட மாதங்களுக்கு முன்னே என்பதால் கிட்டத்தட்ட கதையின் outline நீ்ங்கலாக பாக்கி சகலமும் மறந்தே போயிருந்தது! So எடிட்டிங்குக்கென தூக்கிக் கொண்டு அமர்ந்த போது புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே ஒரு fresh feel! And அந்த 220 பக்க அதிரடியினைப் பாதி எடிட் செய்துள்ள தருவாயில் இதை எழுதுகிறேன் guys; செப்டம்பரில் - ட்ரெண்ட்; ப்ளூகோட்ஸ்; லக்கி கிராபிக் நாவல் என அத்தினி பேரும் அப்டிக்கா ஓரமாய்ப் போய் விளையாடிட வேண்டியது தான் ! ஷப்பாாா!!! ஏகப்பட்ட நாட்களாகி விட்டன இத்தனை வித்தியாசமானதொரு களமும், எதிராளியும் TEX-க்கு அமைந்து! சும்மா ஒவ்வொரு பக்கத்திலும் மின்சாரம் பாயாத குறை தான்! கதையின் துவக்கத்திலேயே டாப் கியரில் எகிறும் நம்மவர் சுபம் போடும் வரையிலும் அதே ரணகள mode-ல் தொடர்ந்திடுகிறார்! And இம்முறை அவரோடு பொருதுவதோ – அடிக்கு அடி; உதைக்கு உதை; குத்துக்குக் குத்து; தோட்டாவுக்குத் தோட்டாவென ஈடுதரவல்லதொரு சக ரேஞ்சரே!! 

700+ ஆல்பங்கள் கொண்டதொரு தொடரில் – இன்னமும் புதுசாய்த் தோண்டியெடுக்கக் கூடிய கதைக்கருக்கள் என்ன தானிருக்க முடியுமோ? என்ற நினைப்பு என்னுள் அவ்வப்போது தோன்றிடுவதுண்டு! நாலைந்து வருடங்களுக்கு முன்பாய் TEX-ன் டாப் கதாசிரியரான திரு.மௌரோ போசெல்லியைச் சந்தித்த போது கூட இதே கேள்வியைத் தான் கேட்டு வைத்தேன் ! சன்னமான புன்னகையே பதிலாகக் கிடைத்தது எனக்கு ! TEX Room என்று அவர்கள் அழைக்கும் பெரியதொரு ரூமுக்குள் அப்புறமாய் அவரது உதவியாளர் அழைத்துச் சென்ற போது எக்கச்சக்கமாய் Wild West சார்ந்த புக்குகள் ; வரைபடங்கள் ; ஸ்டேஜ் கோச் ; ரைபிள் ; பிஸ்டல் ; குதிரைகளின் தத்ரூபமான பொம்மைகள் என்று நிறைந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது ! வன்மேற்கின் வரலாற்றை அக்கு வேறு – ஆணி வேறாய்ப் படிக்கிறார்கள் ; நிஜ நிகழ்வுகளை நுணுக்கமாய் அலசுகிறார்கள்; இக்ளியூண்டு spark கிட்டினாலும் போதும், அதனையே அப்புறமாய் விஸ்தீரணம் செய்து, ஒரு முழுநீளக் கதையாக உருமாற்றுகிறார்கள் என்பது புரிந்தது!

And காத்திருக்கும் இந்த TEX அதிரடி கூட இத்தகையதொரு சன்னமான வரலாற்றுப் புள்ளியிலிருந்து புறப்பட்டிருக்குமோ என்னமோ – கதையின் முழுமையிலும் ஒருவித யதார்த்தமும், நம்பகத்தன்மையும் இழையோடுகிறது! பொதுவாய் 220 பக்க எடிட்டிங் வேலையெனும் போது – அது டெக்ஸ் கதையாகவே இருப்பினும் லேலெல்லாம் வலிக்கத் தான் செய்யும் – simply becos of the volume of the work! ஆனால் சமீபத்தைய கிராபிக் நாவல் mode-ல் கிடந்தவனுக்கு TEX கத்தையை இந்தவாட்டி பார்த்திடும் போது குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் பார்த்த குழந்தைப் புள்ளை போல குஷியாகிப் போனது! மார்ச் மாதம் வெளியான “பாலைவனத்திலொரு கப்பல்” மாத்திரமே இந்தாண்டின் TEX முத்திரை கொண்ட சாகஸமாய் அமைந்துள்ளதை நமது அட்டவணை சொல்கிறது! அந்தக் குறையை நிவர்த்திக்க “ஒ.ரௌ.ரே” காத்துள்ளார் ! Electrifying TEX folks!! அதிலும் க்ளைமேக்சில் பறக்கும் அனல் + இழையோடும் மனித உணர்வுகள் நெடுநாள் மனதில் நிற்கப் போவது நிச்சயம்! பொதுவாய் நான் பில்டப் தருவதெல்லாம் சற்றே சவலைப்பிள்ளைகளான நாயக / நாயகியருக்கு தானிருந்திடுவதுண்டு! ரொம்ப காலம் கழித்து, நெல்லை ஊருக்கே இருட்டுக்கடை அல்வாவின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசும் உணர்வே மேலோங்குகிறது! ஆனால் 115 பக்கங்களைக் கடந்துள்ள நிலையிலேயே சேர் மேலே ஏறி நின்று கொண்டு ‘விஷ்க்... விஷ்க்...‘ என்று விசிலடிக்கத் தோன்றுவதாலாயே இந்த ஒட்டைவாய் அவதார்!

And இதோ – இந்த இதழுக்கான அட்டைப்பட முதல் பார்வை – முழுக்கவே ஒரிஜினல் டிசைன்களுடன்! போனெல்லியின் 2 தனித்தனி இதழ்களில் – தொடர்களாய்த் தடதடத்த இந்த சாகஸத்திற்கு அவர்கள் போட்டிருந்த 2 அட்டைப்பட டிசைன்களுமே பட்டையைக் கிளப்ப – எதை முன்னட்டைக்கு ? எதைப் பின்னட்டைக்கு ? என்று நிர்ணயிக்க மட்டுமே ஒரு கணம் திணறினேன்! அப்புறம் ஓவியர் Garcia Seijas-ன் கைவண்ணத்தில் உட்பக்கங்களில் அரங்கேறும் சித்திர மேளா அதகளம் செய்கிறது! டெக்ஸின் கம்பீரம்; கார்சனின் வசீகரம்; எதிராளியின் வீரியம் என்று அத்தனையுமே ‘நச்‘ ரகம்! நிறைய முறைகள் கதைகளின் outline-களை வாசித்து ‘அடடே...!!!‘ என்றபடிக்கே அந்த ஆல்பத்தை வரவழைத்து ஆர்வமாய் புரட்டினால் – ‘புசுக்‘கென்று பலூனில் காற்று போனது போலாகிடும், சித்திர பாணிகளைப் பார்த்திடும் போது! திரையில் நடிகர் திலகம் பிரசன்னமாகும் போது – நாம் எதிர்பார்ப்பது அவரது சிம்மக்குரலைத் தானே? மாறாக – நடிகர் திலகத்துக்கு சுருளிராஜனின் voiceover அமைந்தால் வெறுத்துப் போய்விடுமன்றோ ? அதே feel தான் டெக்ஸின் ஒருசில புது ஓவியர்களின் படைப்புகளைப் பார்த்திடும் போது ஏற்படுவதுண்டு ! இத்தாலிய வாசகர்களுக்கெல்லாம் இது அத்தனை பெரிய சமாச்சாரமாய்த் தென்படுவதில்லை போலும் - கதையை; நாயகரை ரசிப்பதிலேயே திருப்திப்பட்டு விடுகின்றனர்! ஆனால் நமக்கோ பந்தியில் பரிமாறப்படும் ஸ்வீட்டிலிருந்து, ஊறுகாய் வரையிலும் சகலமுமே சுவையாய் அமைந்திடல் ஒரு அத்தியாவசியம் எனும் போது – கதைத் தேர்வுகளோடு, சித்திரச் சுந்தரங்களுக்கும் பெரும் பங்கு இருந்து வருகிறது! இம்முறை இரண்டுமே ஒற்றைப் புள்ளியில் சந்திக்க / சங்கமிக்க – a treat for all the senses in place!! 

கடைவாயோரம் வழிந்து வரும் குற்றாலத்தைத் துடைத்தபடிக்கே அடுத்த subject-க்குத் தாவும் முன்பாய் உள்ளுக்குள் இன்னொரு நினைப்புமே ஓடாதில்லை! “ஆத்தாடியோவ்... முரட்டுத்தனமான பில்டப் தந்திருக்கோம்; இப்பவே பெங்களூரின் ஒரு மூலையில்... கோபியின் இன்னொரு கோடியில் பெருசாய் பல்பு தர முஸ்தீபுகள் அரங்கேறிக் கொண்டிருக்குமோ?" என்ற பீதி தான் அது! ஆனாலும் நாம் பார்க்காத முட்டுச் சந்துகளா? வாங்காத LED பல்புகளா? எனும் போது  "பில்டப் படலத்தில் போவோமே....போய்த் தான் பாப்போமே !!" என்றபடிக்கு jump to the next topic!!

லக்கி லூக் !! சமீப மாதங்களது நமது ‘ஹிட்‘ படலத்துக்கு நிறையவே பெட்ரோலாய் அமைந்த புண்ணியவாளர் இவரே! மிஸிஸிபி நதியின் படகுப் போட்டி சாகஸத்தில் ஆரம்பித்து; உருளைக்கிழங்கை உரிக்கச் செய்யும் கர்னல் பிக்ஜீரோ; சுதந்திர தேவி சிலையைத் தூக்கித் திரியும் ரகளை என்று இவரது ஜாலி அதிரடிகள் இந்தாண்டின் கார்ட்டூன் வாசிப்புகளுக்கு ஒரு மெருகூட்டியுள்ளது! And காத்திருக்கும் செப்டம்பரிலும் இவரது பெயரை உச்சரிக்கவுள்ளோம் – இந்தவாட்டி செம வித்தியாசமானதொரு களத்தினில் ! (ஆரம்பிச்சாச்சா ? என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்குது !!) மாதாமாதம் யாருக்காகவும் பில்டப் பலூனில் காற்று ஏற்றும் போதெல்லாம் – “செம வித்தியாசமான கதைக்களம்” என்ற பதத்தை நையப் புடைத்திடுவத எனது வாடிக்கை ! ஜானதன் கார்ட்லேண்டுக்குமே இதே போல லாலி பாடியிருப்பேன் என்பதால் எனது பில்டப்களைப் பொதுவாய் ஒரு சிட்டிகை உப்போடே அணுகுவீர்களென்பது புரிகிறது guys ! ஆனால் நம்பினால் நம்புங்கள் – இந்த முறை சந்திக்கவுள்ள லக்கி லூக் – 'ஆயுளில் ஒருவாட்டியே !' என்ற ஸ்டைலில் காத்திருக்கிறார்! சிரிப்பூட்டும் கார்ட்டூன் நாயகராக இன்றி – ஒருவித நிஜத்தன்மை கொண்ட கௌ-பாய் ; ஒரு அழகான களத்தில் ; ஜாலியான சித்திர பாணியில் கலக்குகிறார்! “லக்கி லூக்கைச் சுட்டது யார்?!” நம்மவரின் 70-வது பிறந்த நாளுக்கோரம் விசேஷமாய் 2017-ல் வெளியான ஆல்பம்! அப்போதே இதனை தமிழில் வெளியிடும் ஆசையிருந்த போதிலும் ஸ்லாட்ஸ் பற்றாக்குறையால் RAC-ல் காத்திருக்கச் செய்ய வேண்டிப் போனது ! லேட்டாயினும், லேட்டஸ்டாய் வந்தே தீருவேன் என்று மனுஷன் அடம்பிடிக்க, இதோ ஜம்போவின் சீஸன் 2 அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது! முதல் எடிஷன் வெளியான பத்தே நாட்களில் முழுசும் விற்றுத் தீர்ந்திட – இரண்டாவது வாரமே மறுபதிப்புக்கு அவசியம் நேர்ந்ததாம் பிரெஞ்சு மொழியில்! நமக்குமே லக்கி லூக் collection-ல் இந்த ஆல்பத்துக்கென ஒரு உச்ச ஸ்தானம் கிட்டப் போவது நிச்சயமென்று ஜாலி ஜம்பர் சொல்கிறது! ரொம்பவே சமீபத்தை படைப்பு என்பதால் கலரிங் பாணி சும்மா பட்டையைக் கிளப்புகிறது ! நேற்று காலை துவங்கிய அச்சின் முதல் படிவத்தைப் பார்த்த போதே என் கண்களெல்லாம் பிரகாசமாகிப் போயின! Brilliant கலரிங்!

So இதோ – ஒரு மைல்கல் தருணத்துக்கொருத் தயாரான இதழின் ஒரிஜினல் ராப்பர் – துளியும் டிங்கரிங் இன்றி அப்படியே! அந்த எழுத்துருக்கள் மாத்திரம் நமது ஓவியர் சிகாமணியின் அதகளம்! மூப்புக்கும், திறன்களுக்கும் துளி கூடச் சம்மந்தம் நஹி போலும்... இன்னமுமே கலக்குகிறார் மனுஷன்!

Before I sign out - சில updates :

1.தஞ்சாவூரில் திங்களன்று ( நாளை) புத்தக விழா நிறைவுறுகிறது ! பெரு நகரமல்ல எனும் போது நமது எதிர்பார்ப்புகளும் பெருசாய் இருந்திடவில்லை; So ஓரளவுக்கான decent விற்பனையின் பொருட்டு மகிழ்ச்சியே! வாரயிறுதியில் இன்னும் வேகமெடுத்தால் சூப்பர்! புத்தக விழா கேரவனின் அடுத்த நிறுத்தம் – மதுரை ! BAPASI நடத்திடும் இந்த விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 195 ! இந்த book fair சீஸனை மதுரையில் சந்தோஷமாய் நிறைவு செய்திடலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் ! ! Fingers crossed ! 

2.அப்புறம் நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமாருக்கு வரும் புதனன்று அறுவை சிகிச்சைக்குத் திட்டமிட்டுள்ளனராம் !! நமது பிரார்த்தனைகளும், சிறிதும், பெரிதுமான நமது பொருளாதார உதவிகளும், அவர் பூரண நலம் பெற நிரம்பவே உதவும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! While on this topic - குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும் கொஞ்சம் பேசுவோமா guys ?  இது போன்ற தருணங்களிலேயே அதன் அவசியம் நமக்கு ஸ்பஷ்டமாய் புரிகிறது ! நானே கூட 3 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இதற்கென மெனக்கெடாது எருமை போலவே சுற்றித் திரிந்தேன் தான் ! ஆனால் எனக்கு நேர் மாறான எனது தம்பி - இத்தகைய விஷயங்களில் செம முன்ஜாக்கிரதை முத்தண்ணா தான் ! அவனது நச்சரிப்பின் பேரில் medical பாலிசி ஒன்றினை எடுத்து வைத்தேன் !! 'காசுக்குப் பிடித்த கேடு' என்ற நினைப்பு என் தலைக்குள் ஒரு ஓரத்தில் குடிகொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை ! ஆனால் 4 மாதங்களுக்கு முன்னே சிறுநீரகக்கல் சிகிச்சைக்காக சென்னையில் போய் படுத்துக் கிடந்த வேளையில் தான் இந்த பாலிசியின் அருமை புரிந்தது ! 'சின்ன procedure தான் ; முந்தின நாள் அட்மிட் ஆனாக்கா மறு நாள் சாயந்திரம் வீட்டுக்குப் போயிடலாம் ; ஒண்ணுமே கிடையாது !!' என்று டாக்டர் சொல்லியிருந்ததைக் கொண்டு - ஏதோ ஒரு முப்பதாயிரம் - முப்பத்தைந்தாயிரம் ரேஞ்சுக்கு பில் போடுவார்களென்ற நினைப்பில் மல்லாந்து கிடந்தேன் ! ஆனால் அட்மிட் ஆகும் போதே " insurance இருக்கா ?" என்று கேட்ட கையோடு ஒரு எஸ்டிமேட்டும் போட்டு நீட்டினார்கள் ! வாங்கிப் பார்த்தால் எனது எதிர்பார்ப்பு + 1 ; அதாவது 1 லட்சம் + முப்பத்தைந்தாயிரம் என்றிருந்தது ! காப்பீட்டின் குஷன் மாத்திரம் இல்லாது போயின் - 'பூமிதிக்க' வந்து தீமிதிக்க வேண்டிப் போன கவுண்டரைப் போல் அன்றைக்கு நானும் "ஐயோ..நெருப்புடோய் !! ஐயோ...பில்லில் ஆறு இலக்கம்டோய் !!" என்று மிரண்டு போயிருப்பேன்  !! வெறும் 3000 ரூபாய் நீங்கலாய், பாக்கித் தொகை முழுசையும் இன்சூரன்ஸ் கம்பெனி நேரடியாய் மருத்துவமனைக்கே செலுத்தி விட - பெருமூச்சொன்றை விட்டபடிக்கே நடையைக் கட்டினேன் ! And இப்போதெல்லாம் காப்பீட்டுப் புதுப்பிப்புக்கு தலைகாட்டும் முகவர்களைப் பார்த்தால் மூக்கில் குத்தத் தோன்றுவதில்லை ; மாறாக 'காபி சாப்பிடறீங்களாண்ணா ? டிபன் சாப்பிடறீங்களாண்ணா ?' என்று குசலம் விசாரிக்கத் தான் தோன்றுகிறது ! 

கதையின் கருத்து : ஏதேதோ ஓட்டங்களில் நில்லாது ஈடுபடுவதே நமக்கு இன்றைக்கு வாழ்க்கை என்றாகிப் போய்விட்டது !! அந்த ஓட்ட மும்மரத்தில் சில அத்தியாவசியங்களின் அவசியங்களை நாம் மறக்க நேரிடுகிறது ! ஆனால் இன்றைக்கு நண்பர் JSK-க்கு புலர்ந்துள்ள சுகவீனத்தையும், இக்கட்டையும் பார்த்திடும் போது தான் பகீரென்று ஒரு நினைவூட்டலாய் அமைகிறது ! Please guys : இயன்ற தொகைக்கொரு குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தை எத்தனை சீக்கிரமாய் எடுத்திட முடியுமோ - அத்தனை சீக்கிரமாய் எடுத்திடுங்களேன் ? நித்தமும் செலவுகளுக்குப் பஞ்சமே இருக்கப் போவதில்லை தான் ;  இந்தக் காப்பீட்டுப் பிரீமியம் செலுத்தினாலும் சக்கரம் ஏதோவொரு விதத்தில் சுத்தத் தான் போகிறது ; செலுத்தாது போனாலும் வண்டி ஒடத் தான் போகிறது ! சிரமத்தோடு, சிரமமாய் இந்த அத்தியாவசியத்துக்கும் ஒரு வழி செய்து விடுவோமே ?

Bye folks....Have a great Sunday !! 

Friday, August 23, 2019

கரம் கொடுப்போமா guys ?

நண்பர்களே,

வணக்கம். மனித விதி எத்தனை மூர்க்கமானதொரு சக்தி  என்பதை அவ்வப்போது நமக்குப் புரிந்திடச் செய்வதற்காகவோ - என்னவோ, எதிர்பாரா இன்னல்களையும், இக்கட்டுக்களையும் வாழ்க்கை நம் முன்னே கொணர்ந்து திடு திடுப்பென நிறுத்துகிறது போலும் ! இதோ அதன் லேட்டஸ்ட் பரிமாணம் - நமது காமிக்ஸ் குடும்பத்தைச் சார்ந்த நண்பர் ஜேடர்பாளையம் சரவண குமாருக்கு நேர்ந்திருக்கும் திடீர் உடல்நலக்குறைவு !! திடீர் தலைசுற்றல் ; தொடர் வாந்தி ; ஒரு காது கேளாமை என்ற சிக்கல்கள் ஒரு நாள் காலையில் தலைதூக்கிட, ஸ்கேன் செய்து பார்க்கும் போது மூளையில் கட்டி என்று report சொல்லியுள்ளது ! சீக்கிரமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்றும்  ; செலவு இரண்டு லட்சம் வரை ஆகும் என்றும் ஈரோடு KMCH மருத்துவமனையில் சொல்லியிருக்கிறார்களாம். மேற்படி ரிப்போர்ட்டை நம் வாசகக் குடும்பத்து மருத்துவர்களும் பார்த்துள்ளனர் & அறுவை சிகிச்சை உடனே அவசியமென்று அவர்களுமே பரிந்துரை செய்துள்ளனர் ! திடீரென இத்தனை பெரிய தொகையைப் புரட்ட வேண்டிய நெருக்கடியில் நண்பர் இருக்க, பிரியமான நமது இன்னொரு நண்பரும்,  அவரது தம்பியுமான கரூர் குணா - பணத்துக்காக இங்கும் அங்கும்  ஓடிக்கொண்டிருக்கிறார் ! 

இக்கட்டில் தத்தளிக்கும் குடும்பத்துக்கு இயன்ற பொருளாதார உதவிகளை இந்தத் தருணத்தில் செய்திட நமக்கு சாத்தியப்பட்டால் - நாமிங்கு பகிர்ந்து வரும் அன்புக்கும், நேசத்துக்கும் yet another அழகான அத்தியாயமாக விளங்கிடும் என்றுபட்டது எனக்கு ! பொதுவாய் வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியாதிருப்பதே நாகரீகம் என்றெல்லாம் சொல்லித் தந்திருப்பார்கள் நமக்கு - ஆனால் அந்த இங்கிதங்களுக்கெல்லாம் சில நெருக்கடி நேரங்களில் விதிவிலக்களித்து விடலாம் என்பேன் ! இதோ இங்குள்ள நண்பர் குணாவின் வங்கிக் கணக்கிற்கு இயன்ற உதவியினைச் செய்த கையோடு நமக்கொரு மின்னஞ்சலையும் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ? 

M.Gunasekaran
A/c Number: 1152155000135404
Karur vysya bank
IFSC :KVBL0001152
Karur west(LNS)
68,erode road
LNS post
KARUR
Tamil nadu-639002 

சிறிதோ,பெரிதோ - உதவிடும் நண்பர்கள் அனைவருக்குமே தொகையைக் குறிப்பிடாது - இங்கு சின்னதாயொரு பட்டியலில் நன்றி சொல்லிடுவோம் !! நம் பங்குக்கு, இன்றைய வங்கி விடுமுறை முடிந்த பிற்பாடு ஒரு தொகையினைNEFT அனுப்பிடுவோம் !  

தோள் கொடுப்போமே நம் நண்பருக்கு ? Please do chip in folks !!

Saturday, August 17, 2019

36000 அடியில் சொர்க்கம்..!

நண்பர்களே,

வணக்கம். உஷார்....நிறைய பயணப் புராணம் + கொஞ்சமாய் காமிக்ஸ் கலந்த பதிவிது !! So "ச்சை....புராணங்களே நேக்குப் பிடிக்காது!" என்ற ரகமாக நீங்களிருப்பின், best to skip the top half of this post என்பேன் !!

சுதந்திர தினம் புலரும் வேளையில் நீங்கள் எவ்விதம் ஜாலியாய் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தீர்களோ - தெரியாது ; ஆனால் நானோ ஒரு திடீர் நெடும் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன் - ஒரு பள பளா விமான நிலையத்தில் ! பொதுவாய் விடுமுறை தினங்களை இது போல் வேலை நிமித்தம் செலவிடுவது எனக்கு செம கடுப்பேத்தும் விவகாரம் என்பதால் கடுவன் பூனை போலவே உலாற்றித் திரிந்தேன் - விமானம் கிளம்பத் தயாராகிட வேண்டிய பின்னிரவு இரண்டு மணி வரையிலும் !! தூக்கம் ஒரு பக்கம் ; எரிச்சல் ஒரு பக்கம் என்று அப்பி நின்றாலும் - இத்தினி ஜனம் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு உலக வரைபடத்தின் ஒவ்வொரு மூலைக்கும் கடல் கடந்து பயணிக்கும் விந்தையை எண்ணி அதிசயிக்காது இருக்க இயலவில்லை !! கொஞ்சமே கொஞ்சமாய் அந்த முட்டைக்கண்களை உருட்டி கொஞ்சமே கொஞ்சமாய் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பாணியில் யார் யார் என்ன மாதிரியான பயணத்தில் ஈடுபடக் காத்திருக்கிறார்களென்று யூகிக்க முயற்சிக்கத் தோன்றியது !  

டைலன் டாக் போல ஒருவித சூன்யப் பார்வைகளோடு தனித்து இருக்கும் ஆண்கள் விடுமுறை முடிந்து வேலைக்குத்  திரும்பும் பார்ட்டிகளோ ? என்று தோன்றியது ! புத்தம் புது ஜெர்கினை இறுகப் பற்றியபடிக்கே வாயில் பபுள் கம்மை மொச்சக் மொச்சக்கென்று மென்று கொண்டே, காதில் செவிட்டு மிஷின் போல எதையெதையோ மாட்டிக் கொண்டு யார் யாரிடமோ மிஷன் கன் வேகங்களில் பேசிடும்  இளசுகள் அமெரிக்காவில் யூனிவர்சிட்டி அட்மிஷன் கிடைத்து படிக்கப் புறப்படும் freshers ஆக இருப்பார்களோ ? தட தடவென குறுக்கும் நெடுக்கும் ஓடும் பொடுசுகளின் பின்னேயே மூச்சிரைக்க ஓடிடும் முக்கால் டிராயர் போட்ட தொப்பைப் பார்ட்டிகளெல்லாம் விடுமுறைக்கு பிள்ளைகளோடு சொந்த ஊர் வந்து விட்டு இன்றைக்கு தத்தம் கூடுகளை நோக்கிப் பயணிக்கும் அயல்தேசத்தில் செட்டில் ஆகியுள்ள தேசிக்களோ ? என்னைப் போலவே கொடூரமாய் முறைத்துக் கொண்டு குந்தியிருக்கும் ஒற்றை கழுகுகள் சகலமும் தவிர்க்க இயலா பயணத்திற்கென கூடியிருப்போரோ ? சத்தமாய்...உறங்கும் நண்பர்களையும் எழுப்பி, விடாப்பிடியாய் மொக்கை போடும் விடலைப் பசங்கள் அத்தினி பேருமே நேத்து வரைக்கும் சென்னையின் OMR ரோட்டின் ஹாஸ்டல்களில் குடித்தனம் பண்ணிவிட்டு, இன்றைக்கு ஆன்-சைட் வாய்ப்புப் பெற்று புது NIKE ஷூவோடு கெத்தாய் கிளம்பும் IT வல்லுனர்களோ ? கொட்டாவி விட்டம் வரை விரியும் வேளை வரைக்கும் எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன் ! 

ஒரு வழியாய் விமானமும் புறப்படத் தயாரென்று அறிவிக்க - நம்மாட்கள் உசேன் போல்ட்டுக்கே தண்ணீர் காட்டும் வேகத்தில் லைனில் முண்டியடிக்கத் துவங்க, ஒரு மாதிரியாய் எனது வாய்ப்பும் வந்தது !  கண்ணெல்லாம் தூக்கம் மண்டிக்கிடந்தாலும் அந்நாட்களது சரோஜா தேவியைப் போல புல்-மேக்கப்பில் நிற்க அவசியமாகியிருந்த யுவதியிடம் போர்டிங் பாஸை நான் நீட்ட ; அதைச் சரி பார்க்க வேண்டிய மிஷினின் முன்னே அவரும் நீட்ட - 'புளியாம்-புளியாமென்று சிகப்பு லைட் எரிந்தது ! 'இது என்ன புதுசா ஏழரை ?' என்ற எரிச்சலோடு நிமிரும் நேரம் "you have been upgraded to business class sir " என்றபடிக்கே புதுசாய் ஒரு போர்டிங் பாஸை pirint செய்து கையில் ஒப்படைத்தார் ! நேற்றைய ஓவியாவும், இன்றைய லொஸ்லியாவும் லாலி பாட, சிட் ஸ்ரீராமின் குரல் பின்னணியில் ஒலிக்க - ஒற்றை நொடியில் சுற்றுச் சூழலே செம ரம்யமாய் மாறி விட்டது போல் தோன்றியது ! 16 மணி நேர நெடும் பயணங்கள் செய்துள்ள நண்பர்களுக்குத் தெரியும் - விமானத்தின் economy சீட்கள் பிட்டங்களை என்னமாய்ப் பதம் பார்த்திட வல்லவை என்று ! அதுவும் பிசாசாய் உறக்கம் கண்ணைச் சுழற்றும் நேரங்களில் கூட  டிக்கிலோனாக்கள் அனுப்பும் 'என்னைக் காப்பாற்று' என்ற அபயக் குரல்களை   உதாசீனம் செய்திட இயலாது, எழுந்து, கொஞ்ச நேரம் தட்டுத் தடுமாறியாச்சும் நடக்க வேண்டி வரும் !! 'வேறு வழி நஹி ; இது தான் விதி' என்றிருந்தவனுக்கு திடீர் அதிர்ஷ்டமாய் business class-ல் ஜாகை என்ற போது தூக்கமெல்லாம் போயே போச்சு !!  

விமானத்தின் பின்வாயில் வழியாய் உட்புகுந்து கொண்டிருந்த ஜனத்தை விட்டு விலகி - முன்வாட்டில் இருந்த வாயிலை நோக்கி நடந்த போது ஒரு டஜன் கடுப்ஸ் ஆப் இந்தியா பார்வைகள் என் முதுகைத் துளைப்பது தெரிந்தது !! பந்தாவாய் business class பகுதியினுள் கால்வைத்தால் என்னவொரு ஆச்சர்யம் - மூப்பிலும், க்டு கடு பார்வையிலும்  எனக்குப் போட்டி தரவல்ல முதிர்கன்னி ஏர்ஹோஸ்டஸ் யாரையும் காணோம் ; அத்தனையுமே  சிரித்த முகங்களுடனான இளம் பெண்கள் !! 'அடேய் பாவிகளா....இதிலுமா அல்வா கிண்டுவீங்க economy பயணிகளிடம் ?' என்றபடிக்கே எனது சீட்டுக்குப் போனால் ஒரு சின்ன தேர் அளவுக்கு சீட் ஜம்மென்று காத்திருந்தது !! 

வரிசைக்கு இரண்டே சீட்கள் ; மொத்தமாய் 16 பயணிகள் மட்டுமே ; ஆனால் அவர்கட்கு 4 பணிப்பெண்கள் என்றிருப்பதைக் கவனித்தேன் ! என்னருகே அமர்ந்திருந்தார் ஒரு 60 வயது மதிக்கத்தக்க மனுஷர் - "சீமான் வீட்டுத் தாத்தா" என்ற அடையாளம் மேனியெங்கும் மினுமினுக்க ! கண்ணாடி பிரேமிலிருந்து ; மணிக்கட்டில் மிளிர்ந்த Longines வாட்ச் வரை அத்தனையிலும் செழிப்பின் சின்னங்கள் ! கண்ணுக்குக் குளிர்ச்சியாய் யாரேனும் பயணத்துணையாய் அமைந்திடக்கூடுமென்ற எதிர்பார்ப்பில் இருந்தாரோ என்னவோ - ஒரு காலரிலா முழுக்கை டிஷர்ட்டில் வந்து அமர்ந்த வழுக்கைத் தலையனைப்  பார்த்தவுடன் மனுஷனுக்கு முகத்தில் பியூஸ் போய்விட்டது ! 'இன்னிக்கு உம்ம ராசி அம்புட்டுத்தேன் ஓய்' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே எனது இடத்தில அமர்ந்தால் - சீட்டின் கைப்பிடிகளில் மேலே ஏற்ற / இறக்க / சாய்ந்து கொள்ள / மல்லாக்க நீட்டிக் கொள்ள ; கால்களுக்கு தாக்கான்  கொடுக்க என்று ஏகப்பட்ட controls ! இதற்கு முன்பும் இதே போல ஒரு இரண்டோ / மூன்றோ  தடவைகள் business class-களுக்கு மாற்றம் கிட்டியுள்ளது தான் என்றாலும், ஒவ்வொரு விமான சர்வீஸிலும் இந்த உயர் வகுப்பு சீட் அமைப்புகள் ஒவ்வொரு விதத்தில் இருப்பதுண்டு ! தவிர, அந்த அனுபவங்கள் எல்லாமே ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே எனும் போது - ரோடியோ போட்டியில் குதிரைகளைச் சமாளிப்பது போல் இந்த hi-tech சீட்களைக் கையாண்டதெல்லாம் மறந்தும் போயிருந்தது !  ஒரு பொத்தானை அமுக்கினால் சலூனில் சேர் மல்லாக்கச் சாய்வது போல் சாய்ந்தது ; 'கிழிஞ்சது போ ' என்றபடிக்கே வேறொரு பொத்தானை அமுக்க - காலுக்கு கீழே இருந்த தாக்கான் மேலெழும்பி போடேரென்று பின்னங்காலில் சாத்தியது ! வம்பே வேணாம், மல்லாந்திடலாமென்று அந்தக் குறியீடிருந்த பட்டனைத் தட்டினால் - 'அம்மாங்கோ' என்று வடிவேல் மல்லாந்து கிடக்கும் பொசிஷனுக்கு ஒரே நொடியில் கொண்டு போனது ! நானடிக்கும் லூட்டிகளை 'அய்யே' என்பது போலானதொரு பார்வையோடு ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் - "சீ.வீ.தா."!

ஒரு மாதிரியாய் விமானமும் புறப்படத் தயாராகிட - கையில் இரண்டு தட்டுக்களோடு பணிப்பெண் ஒருத்தர் வந்து - "பனீர்  டிக்கா வேணுமா சார் ? அல்லது ப்ரோக்கோலி சாலட் சாப்பிடறீங்களா ?" என்று அன்பாய் வினவினார் ! அடடே....உபசாரம் இப்டிலாம் உண்டா ? என்றபடிக்கு "ரெண்டையும் கொஞ்சம் கொஞ்சம் வையுங்க அம்மணி !" என்றேன் !! பக்கத்து சீட் "சீ.வீ.தா.வோ "ஊம்ப்ப்ப்..இதெல்லாம் பெரிய மனுஷன் சாப்பிடுவானா ?" என்ற தோரணையில் மண்டையை மறுப்பாய் ஆட்டி வைத்தார் ! பின்னாடியே இன்னொரு யுவதி - "சிக்கன் 65 சார் ?" என்றபடிக்கே நெருங்கிட - கொலைப்பசியில் இருந்த எனக்கு செம குஷி !! அதே சமயம் - 'தின்னாத் தின்னு...இல்லாங்காட்டி போ...இது தான் இன்னிக்கு உங்களுக்கான பூவா !' என்று சொல்லாத குறையாய் economy வகுப்பில் வழங்கப்படும் சாப்பாடும் கண்முன்னே ஒரு நொடிக்கு அணிவகுத்து மறைந்து போனது !! 'அட...ஊர் திரும்பும் வேளையில் அது தானே நமக்கும் விதி ; இப்போதைக்கு மனிடோ தேவன் தந்துள்ள இந்த வசதிகளை அனுபவிச்சுக்கோடா முட்டைக் கண்ணா !!' என்று உள்ளுக்குள் ஒலிக்க "வையுங்கோ...வையுங்கோ.." என்றேன் !  "சீ.வீ.தா."வுக்கும் கோழியைப் பார்த்தவுடன் கொள்கை மறந்து போச்சோ என்னவோ - வேண்டாவெறுப்பாக தட்டில் வைக்குமாறு சைகை செய்தார் ! வைத்த மறு கணம் முட்கரண்டியும், கத்தியும் கொண்டு சிக்கன் 65 உடன் மல்லுக்கட்டத் துவங்கி கெத்தாய் ஒரு வாய் வைத்திருப்பார் ; இங்கே நானோ 'சிவனே' என்று கையால் எடுத்து ரெண்டே கடியில் விழுங்கியிருந்தேன் !! சீமான் சாரோ கெத்தை விட்டுக் கொடுப்பதாயில்லை ! முன்னெல்லாம் இது போன்ற சூழல்களில் கிட்டக்க இருக்கும் ஆட்கள் என்ன நினைப்பார்களோ என்ற லஜ்ஜையில் நானுமே இந்தப் பாசாங்கில் இறங்கியிருப்பேன் ; அல்லது வம்பே வாணாம் என்று அந்த ஐட்டத்தையே நிராகரித்திருப்பேன் ! ஆனால் ஏழு கழுதை வயசான பிற்பாடு அந்த கூச்சங்களெல்லாம் போயே போச்சு ! "சீ.வீ.தா." நிச்சயமாய் எனக்குப் பெண் கொடுக்கப் போவதில்லை ; அப்படியே கொடுக்க மனுஷன் முன்வந்தாலும் ஆத்திலே காத்திருக்கும் அம்மணி விறகுக்கட்டையால் இந்த சொட்டை நடுமண்டையில் போட்டிடும் வாய்ப்புகள் பிரகாசம் எனும் போது - தாத்தாவிடம் பந்தா காட்டி சாதிக்க ஏதும் இருப்பதாய்த் தோன்றிடவில்லை ! So நான்பாட்டுக்கு ஜாலியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்க - கோழியுடன் யுத்தம் நடத்தித் தோற்றும் போன "சீ.வி.தா' இறுதியில் என் பாணிக்கே மாறிவிட்டார் !! 'அடடே...வாங்க சாரே...நம்ம கட்சியில் ஐக்கியம் ஆயாச்சாக்கும் ?"என்ற பாணியில் லைட்டாய் ஒரு நக்கல் சிரிப்பைப் போட்டு வைக்க எனக்கொரு வாய்ப்புக் கிட்டிய போது  மனசு ஜில்லென்றிருந்தது !!

விளக்குகளை ரொம்பவே டிம்மாக்கிட்ட - ஒரு டிராலியில் புதுசாய் எதையோ உருட்டிக் கொண்டு வந்தனர் - 2 இளசுகள் !! "ஏலேய்...இதுக்கு மேல snacks தின்ன முடியாதுங்கடா !" என்று மனசில் தோன்றிய நினைப்போடு எட்டிப் பார்த்தால் - கண்ணாடிக் கவர்களில் உடுப்புகள் செட் செட்டாய்த் தென்பட்டன !! "யாருக்காச்சும் நைட் டிரஸ் மாத்திக்கணுமா ?" என்றபடிக்கே அந்த ஹோஸ்டஸ் பெண்கள் கேட்க - எனக்கு காண்ட்ஸ் ஆப் இந்தியா ! 'இதெல்லாம் டூ..டூ..மச்....எண்ணி பத்தே அடி பின்னே குந்தியிருக்கும் பயணிகளுக்கு ஒரு கர்சீப் குடுக்கக் கூட மாட்டீங்க ; இக்கட ஆளுக்கொரு நைட் ட்ரெஸ்ஸா பாவிகளா ?!!" என்று மனசு கூக்குரலிட்டது ! But அதுக்குள்ளாற பக்கத்து சீட் சார்வாள் நைட் டிரஸ் வாங்கி, பாத்ரூம் போய்ப் போட்டும் வந்துவிட்டார் ஹாயாக !! 'சரி...கட்டையைக் கிடைத்தும் முன்பாய் மூச்சா போய் வரலாமென்றால் அங்கேயும் சொகுசின் அடையாளங்கள் !! பின்னேயோ சுமார் 90 பயணிகளுக்கு இரண்டே டாய்லெட் என்ற நிலையில் ஆளாளுக்கு அந்த நடைபாதைகளில் பாம்பு டான்ஸ் ஆடாத குறையாய் நெளிந்து க்ண்டிருப்பதைப் பார்த்திட இயலும் ! இங்கேயோ 16 பேருக்கு 4 மூச்சா ரூம்கள் ; ஒவ்வொன்றும் பளீர் சுத்தத்தோடு !! "காசே தான் கடவுளடா....அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா" என்று அந்தக்காலத்துப் பாட்டு தான் எனக்குள் அந்த நொடியில் ஓடியது ! அங்கலாய்த்து முடித்த கையோடு சீட்டுக்குப் போய் மல்லாந்தால் - நமது வைகைப் புயலின் பொன்மொழியின் நிஜமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது !! "மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கிறதிலே தான் என்னவொரு சுகம் ?!!" நல்ல கனத்த ரஸாய் போலொரு கம்பிளியை 2 இலவம்பஞ்சுத் தலையணைகளோடு யுவதிகள் விநியோகம் செய்திட - தலைக்கு ஒண்ணு...காலுக்கு இன்னொண்ணு என்று செருகிக் கொண்டே கண்களையும் செருகினேன் !! Economy வகுப்பில் - லாஸ்லியாவோடே குத்தாட்டம் போடும் ஜிலோ கனவில் நாம் செம பிசியாக இருந்தாலும் கூட தோளைப் பிடித்து உலுக்கி - சோத்தை முன்னே நீட்டுவர் முறைக்கும் ஏர்-இந்தியா economy class முதிர்கன்னிகள்  ! ஆனால் இங்கேயோ மட்டையாகி விட்டால் துளியும் தொந்தரவு செய்திடாது - நாம் கண்முழிக்கும் தருணமாய் சாப்பாடை சுடச் சுடக் கொணர்கின்றனர் ! அதுவும் மங்குத் தட்டுக்களில் ; அழகான கோப்பைகளில் !! தொடர்ந்த 16 மணி நேரங்களுள் 15-ஐ மட்டை + பூவா ; பூவா + மட்டை என்ற routine-ல் செம நேர்த்தியாய்ச் செலவிட்டேன் ! இதுவே சொர்க்கம் என்ற நினைப்பிலிருந்தால் எங்களுக்கும் முன்னே ஒரு சிறு கேபினில் நான்கே சீட்கள் மட்டுமிருக்க - அது இன்னமும் பெரும் அப்பாடக்கர் சீமான்கள் பயணிக்கும் First Class என்பது புரிந்தது !! அவர்களுக்கெல்லாம் வீட்டிலிருந்தே கட்டில், மெத்தையெல்லாம் கொண்டு வந்து விரித்து ; அப்பாலிக்கா குளிக்க சூடு தண்ணீரெல்லாம் போட்டுத் தருவார்களோ ? என்று கூட நினைக்கத் தோன்றியது எனக்கு ! யப்பா....சொர்க்கம் உசக்கே தான் என்பது தெரியும் தான் ; ஆனால் விலை தர சத்திருந்தால், மண்டையைப் போடும் முன்பாகவே அதனை 36,000 அடி உயரத்திலேயே அனுபவித்திடலாமென்பதை அன்றைக்குத் தான் உணர்ந்தேன் ! இங்கே வாசலில் நோட்டோடு / ஐ-பேடோடு  பாவ/புண்ணிய கணக்குப் பார்த்து உரிய பிரிவுக்கு மக்களை வகை பிரித்து அனுப்பிட  சித்திரகுப்தர் நிற்பதெல்லாம் கிடையாது ; ரோஸ் நிறத்து காந்தித் தாத்தா நோட்டுக்களை விசிறியடிக்க  சக்தியுள்ளதா - இல்லியா ? என்று மட்டுமே சரி பார்க்கிறார்கள் ! இருந்தால் மல்லாக்கப் படுத்து சொகுசாய் விட்டம் ; இல்லாங்காட்டி பாடாய்ப் படப் போவது பிட்டம் !! Simple as that !!

சிகாகோவில் தரையிறங்கிய போது சும்மா அத்தனை பேட்டரிகளும் அடுத்த ஆறு மாசத்துக்கான சார்ஜ் ஏறியது போலானதொரு உற்சாகத்தோடு கீழிறங்க முடிந்தது ! தள்ளாட்டங்களோடு, சரியாய்த் தூங்கியிரா சிவந்த விழிகளோடு பின்தொடர்ந்த economy பயணிகளை பார்த்த போது லைட்டாக உள்ளுக்குள் ஜெர்க் !! இன்னும் இரண்டே நாட்களில் நம்மளும் அக்கட தானே ஐக்கியமாகிக் கிடக்கணுமென்ற நினைப்பே பகீரென்றது ! சொகுசுகள் என்னவென்று தெரியா நாட்கள் வரையிலும் - இருப்பதில் சமாளிக்கும் ஆற்றல் தானாய் பழகியிருந்தது ! ஆனால் இனி அது சித்தே சிரமம் என்பதைப் பெருமூச்சோடு புரிந்து கொண்ட கையோடு கான்சஸ் நகருக்கான அடுத்த பிளைட்டை பிடிக்க ஓட்டமெடுத்தேன் !!

கான்சஸ்...நமக்கெல்லாம் நிரம்பப் பரிச்சயமான ஊர் தானே ? நமது கௌபாய்களின் புண்ணியத்தில், டெக்ஸாஸ் ; கான்சஸ் ; அரிசோனா ; நியூ மெக்சிகோவெல்லாமே உசிலம்பட்டிகளையும் ; கொட்டாம்பட்டிகளையும் விட நமக்கு ஒரு மிடறு நெருக்கமானவை என்று சொன்னால் அது மிகையாயிராது தானே ? அதுவும் சமீபத்து "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஆல்பத்துக்குப் பிற்பாடு அந்த அமெரிக்க மண்ணே - "சென்னைக்கு மிக மிக அருகில்" இருப்பது போலவே தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியலை - but in many ways நமது கௌபாய் காதல்களுக்கு  ஒரு புதுப் பரிமாணம் இனி வரும் நாட்களில் இருந்தால் வியந்திட மாட்டேன் !  ஈரோட்டுக்கு கிளம்பும் போது எனக்குள் ஒரு சின்ன பயம் இருக்கவே செய்தது - சஸ்பென்ஸ் இதழ் எதுவோ ? என்ற உங்களின் தேடல்களில் 'பி.பி.வி' மீதும், 'நித்தமொரு யுத்தம் ' நியாயமாய்ப் பாடிய வேண்டிய ஒளிவட்டம் சிதறிடக்கூடுமோ ? என்று ! அன்றைக்கு புக் ரிலீஸ் செய்திட்ட வேளையில் அந்த பயங்கள் ஊர்ஜிதமும் கண்டன - because சஸ்பென்ஸ் இதழ்கள் என்னவென்பதைப் பார்த்தான பின்னே - அரட்டைகளுள், அலசல்களுள் இறங்கிடும் முனைப்பே அனைவரிடமும் தென்பட்டது ! பி.பி.வி. & நி.ஓ.யு. முன்பதிவு இதழ்களை பதறாமல் வாங்கிக் கொள்கிறோமென்று நீங்கள்  சொன்னாலும் - எனக்குள் பதறியது !! ஆனால் - ஆனால் - சந்திப்பின் அலப்பரைகள் தணிந்த முதல் தருணத்தில் - பி.பி.வி. ஆல்பத்தின் வாசிப்பினுள் நீங்கள் மூழ்கத் துவங்கிய நொடியில் எனது பயங்கள் சிறுகச் சிறுகக் கரையத் துவங்கின - Content will always be King !! என்பது நிரூபணமாகிய நொடிகளில் !! பொதுவாய் இது போன்ற சற்றே offbeat கதைகள் சற்றே mixed response ஈட்டினால் அதனில் ஆச்சர்யமோ, வருத்தமோ கொள்ள முகாந்திரமிருந்திராது ! ஆனால் இம்முறையோ - கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு என்ற மதிப்பெண்ணை ஈட்டியுள்ள விதம் ரொம்பவே மனநிறைவைத் தருகிறது ! பொதுவாய்ப் 'பீற்றல் பீட்டர் ராமசாமி' அவதார் எனக்குப் பிடிப்பதில்லை ; ஆனால் இந்த ஒற்றை தருணத்தில் அந்த மனுஷனுக்கு 'ஜெ' போடுவதில் தப்பில்லை என்று படுகிறது !! எனது பெருமிதத்துக்குக் காரணம் - கதைத் தேர்வில் நான் செய்த அசகாய சூரத்தனம் என்றோ ; கையாண்ட விதத்தில் மேதாவித்தனம் என்ற காரணங்களினாலோ அல்லவே அல்ல !! மாறாய் - இத்தகையதொரு கதை பாணியை இத்தனை ரம்யமாய் ரசிக்கவல்லதொரு வாசக வட்டம் இந்தியாவிலேயே வேறெந்த மொழியிலும் இருக்க சாத்தியமே அல்ல என்ற மார் தட்டும் உறுதியினில் !! எங்கோ ஒரு தொலைதூர தேசத்தில் ; நாம் கண்ணிலேயே பார்த்திரா ஒரு கலாச்சாரத்தில் ; எப்போதோ ஒரு யுகத்தில் நடந்திருக்கக்கூடிய நிகழ்வுகளை ; நமக்குத் துளி கூடத் தொடர்பிரா ஒரு அரசியல் சாசனத்தின் மீதான அலசலை பண்ருட்டியிலும், பட்டுக்கோட்டையிலும் அமர்ந்திருக்கும் நம்மால் உணர்வுபூர்வமாய் ரசிக்க இயல்கிறதெனில் WOW என்பதைத் தாண்டி வேறென்ன சொல்வதோ நான் ?  Take a bow guys - நீங்கள் ரசனைகளின் மீட்டர்களில் தொட்டு வரும் உச்சங்கள் மெய்யாக மெய்சிலிர்க்கச் செய்யும் சமாச்சாரங்கள் !! 

What made this album so very unique ? I have a theory on that guys !! ஒரு வலுவான கதைக்களத்தைக் கையில் எடுக்கும் ஒவ்வொரு வேளையிலுமே ஒரு ஹிட் உத்திரவாதம் என்றெல்லாம் கட்டியம் கட்டிச் சொல்லல் இயலாது ! சும்மா ஒரு பேச்சுக்கு பின்தொடருமிந்த scenario-க்களை மனதில் உருவகப்படுத்தி மட்டும் பாருங்களேன் folks :

இதே கருவை சீரியஸ் ரகச் சித்திரங்களோடு - ட்யுரங்கோ மாதிரியானதொரு அதிரடி ஹீரோவிடம் ஒப்படைத்திருந்தால் ? பைரனின் ரோலில் ட்யுராங்கோ உலவியிருந்தால் பொறி பரந்திருக்கும் கதை நெடுகிலும் !! கதைக்கு வேறொரு அதிரடிப் பரிமாணத்தைத் தந்திருக்கவும் கூடும் தான் ; ஒரு ஆக்ஷன் ஹிட்டாக அது அமைந்திருக்கவும் கூடும் தான் ! ஆனால் - நாயகரைப் பிரதானப்படுத்தும் முஸ்தீப்பில் பி.பி.வி.தொட்டுச் செல்லும் ஆழ்ந்த கருத்துக்களை ; வருத்தங்களை ; பழங்குடியினரின் இழப்பின் வலிகளைச் சொல்ல அங்கே சாத்தியப்பட்டிருக்குமா ? ட்யுராங்கோ டுமீல்-டுமீல் என்றால் நாம் குஷியாவோம் ; மாறாய் அவர் தத்துவம் பேசினால் கண்சிவப்போம் என்பது தானே நிஜம் ? So ஒரு வலுவான ஹீரோவாக கதையை முன்னெடுத்துப் போகும் பைரனை - ஒரு சாமான்யனாக ; பயங்கள், பேராசைகள்,கோபங்கள், தாபங்கள் கொண்டதொரு சராசரி ஆசாமியாய் சித்தரிக்கக் கதாசிரியர் தீர்மானித்தது ஒரு masterstroke என்பேன் !

பைரனை ஒரு முனையில் நிறுத்திய கையோடு மறுபக்கம் மார்கோ எனும் அழகிய அசுரியை (!!) நமது பொருளாளர் வெகு அழகாய்ச் சுட்டிக் காட்டியது போல - அசிங்கமான புழுமுட்டை நிலையிலிருந்து, அற்புதமான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் காணுமொரு கதாப்பாத்திரமாய் சிருஷ்டிக்க கதாசிரியருக்குத் தோன்றியது masterstroke # 2 என்பேன் ! இங்குமொரு கற்பனை செய்து பாருங்களேன் guys : மார்கோவை வில்லியாகவே ; ஒரு சிகுவாகுவா சில்க் போலான கதாப்பாத்திரமாய் மட்டுமே கையாண்டிருந்தாலும் இந்தக் கதை வெற்றி கண்டிருக்கக் கூடும் தான் ; ஆனால் இன்றைய இந்தத் தாக்கம் கிட்டியிருப்பது சந்தேகமே !! அந்த அழகியின்புற வனப்பு - அகத்தின் வனப்பாயும் translate ஆவது தானே நம் நெஞ்சங்களை வருடிய சமாச்சாரம் ? (Of course அந்தப் புற அழகும் நம்மவர்களை வருடியிருக்கும் தான் !!!)

Masterstroke # 3 and probably the best of them all - இந்தக் கதையினை கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் ; ஆங்காங்கே humor சகிதம் நகற்றிச் செல்ல / சொல்ல முனைந்ததே என்பேன் !! சீரியஸான சித்திரங்களோடு இதே கதையை நம்மால் இதே ஈடுபாட்டோடு படிக்க சாத்தியப்பட்டிருக்குமா என்பதொரு million dollar இல்லாங்காட்டியும் நூறு டாலர் கேள்வியாகவாச்சும் இருந்திருக்கும் ! கொஞ்ச நேரத்திலேயே - 'அய்யே...இன்னா இவன் வள வளன்னு பேசிக்கினே போறான் ?;என்று நமக்கு எரிச்சல்  தோன்றியிருக்கக்கூடும் ! ஆனால் கார்ட்டூன் பாணி + கதையோடு பயணிக்கும் humor அந்தச் சிக்கலின்றி காப்பாற்றிவிட்டதல்லவா ?

So ஒரு நிறைவான ஆல்பத்தை நம் பயணத்தின் மைல்கல்லாக்கிய சந்தோஷத்தோடு செப்டெம்பர் நோக்கிப் பயணிக்கிறோம் !! ஞாயிறு ராவுக்கு ஊர் திரும்பிடுவதாய்த் திட்டம் ; so திங்கள் முதல் jet lag புண்ணாக்கென்ற சால்ஜாப்பெலாமின்றி பணிகளுக்குள் குதித்தாக வேண்டும் !! செம ஜாலியான கதைகள் waiting  என்பதால் அந்தமட்டுக்கு easy !! இதோ ஊர் திரும்பும் வேளையில், பிட்டங்களோடு போராடிக் கொண்டே டிரெண்டின் மொழிபெயர்ப்புக் குறைப்படியைச் செய்திடவும் முயற்சிக்கணும் !! Another day ...another month ...and we start from scratch all over !! நேற்றைய இதழ்கள் எத்தகையதாயிருப்பினும், புதுசாய் அடுத்த பணி துவங்கும் போது பூஜ்யத்திலிருந்து தானே துவங்கியாகணும் ? அடுத்த பரீட்சைக்குத் தயாராகிறோம் guys !! இதோ - காத்திருக்கும் செப்டெம்பர் இதழ்களின் முதல் preview - ஒரிஜினல் அட்டைப்படத்தோடே !!

அப்புறம் தஞ்சாவூரில் 17 ஆகஸ்ட் முதல் துவங்கிடவுள்ள புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 67 !! மண்ணின் மைந்தர்கள் வருகை புரிந்தால் மகிழ்வோம்!! Welcome all !!

Have a cool weekend !! Bye for now !!

Sunday, August 11, 2019

ஆகஸ்டின் ஒரு அலசல் !

நண்பர்களே,

வணக்கம். பண்டிகையும் வந்தாச்சு… புதுத் துணியும் பள பளன்னு போட்டாச்சு… பட்சணங்களையும் பாரபட்சமேயில்லாமல் பதம் பார்த்தாச்சு… பட்டாசை வெடிச்சாச்சு… புதுப்படத்துக்கும் போயாச்சு… பெருசாய் ஒரு புளிச்ச ஏப்பமும் எடுத்தாச்சு… சித்தே ஜெலுசிலையும் வாய்க்குள் ஊத்தியாச்சு! அடுத்து என்னவோ? வேறென்ன – மாமூலான தினசரி வாழ்க்கை தான்! நான் குறிப்பிடும் ‘பண்டிகை‘ நமது ஈரோட்டு வாசகர் சந்திப்புத் தான் என்பதையோ - புதுத்துணிகளும்; பட்சணங்களுமாய் உணர்த்துவது புது இதழ்களையே என்பதையோ; பட்டாசும், புதுப்படமுமாய் சொல்ல முற்படுவது அன்றைய தினத்தின் நமது ரவுசுகளையே என்பதையோ புரிந்திட மங்குனி ஸ்மர்ஃப்புக்குக் கூடச் சிரமமிராது அல்லவா? So here we are – back to the routine!

ஆனால் இந்த routine குண்டுச்சட்டிக் குருதையோட்டத்தின் மத்தியில் ஒரு not so routine இதழைப் பற்றிப் பேசாது போனால் அது வரலாற்றுப் பிழையாகிப் போகுமில்லையா? So இந்த ஞாயிறின் அலசல் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” பற்றியே!!

பொதுவாய் கதைத் தேர்வுகளின் போது ஜானர்கள் வெவ்வேறாய் இருப்பினும் – கதைகளை நான் classify செய்திட 3 ரகங்கள் இருப்பதுண்டு! பார்த்த மாத்திரத்திலோ; லேசாய் முன்னோட்டங்களைப் படிக்க முடிகின்ற போதிலோ – WOW!! என்று டாப் கியரைப் போடச் செய்யும் கதைகள் சில இருப்பதுண்டு!

- புரட்சித் தீ... பொடியன் பில்லி... சூப்பர் சர்க்கஸ் போன்ற லக்கி கதைகள்!

- நில்... கவனி... சுடு... தலைவாங்கிக் குரங்கு; பாலைவனத்தில் ஒரு கப்பல் – போன்ற TEX கதைகள்!

- தங்கக் கல்லறை; இரத்தப் படலம் (ஒரிஜினல் சுற்று); லார்கோ போன்ற ஆல்பங்கள்!

இவற்றையெல்லாம் ‘டிக்‘ அடிக்கும் போதே – தேர்தலில் கெலித்த வேட்பாளர்கள் டி.வி.களுக்குப் பேட்டி கொடுக்கக் கையோடு ரெடி பண்ணிக் கொண்டு வந்திருக்கும் நன்றியுரைகளைப் போல ஒன்றை மனசுக்குள்ளேயே நான் ஓட்டிப் பார்த்துக் கொள்ள முடியும்! நிச்சயிக்கப்பட்ட ஹிட்ஸ்!

ரகம் # 2 – ஓ.கே. ரகங்கள்! புரட்டிப் பார்க்கும் போது; நெட்டில் அலசிப் பார்க்கும் போது; சின்னதொரு முன்னோட்டத்தை மட்டும் கோரிப் பெற்றுப் பார்க்கும் போது – ‘இவை தேறிடும்‘ என்ற நம்பிக்கையை உள்ளுக்குள் விதைக்கும் கதைகள் இவை! Of course நடைமுறை சாத்தியம் காணும் சமயங்களில் results வேறு மாதிரியும் அமைந்திடுவதுண்டு தான்! ஆனால் முதற்கட்ட அலசல்களின் போது பெரியதொரு நெருடலை ஏற்படுத்தாக் கதைகளை இந்த இரண்டாவது கேட்டகரியில் அடைத்துப் பார்ப்பேன்!

ரகம் # 3 தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமானது! ‘என்னமோ இருக்குது... ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்டாக்கா ரகளையான அனுபவத்தைத் தரவல்லது‘ என்ற நம்பிக்கையை விதைக்கும் புதிரான கதை ரகங்கள் இவை!

- க்ரீன் மேனர்

- பராகுடா

- நிஜங்களின் நிசப்தம்

- ஜேஸன் பிரைஸ்

போன்ற கதைகளை இந்த mysterious பட்டியலில் அடைத்திட்டுப் பார்ப்பேன்! சொதப்பினால் முகரை முழுக்க கொள கொளவென பதம் தப்பிய அல்வா அபிஷேகம் நிச்சயம் என்று தெரிந்தாலுமே – ‘எப்படியாச்சும் இதை முயற்சித்துப் பார்டா கைப்பிள்ளே!‘ என்று உள்ளுக்குள் ஒரு கட்டதுரையின் கூட்டாளி கூவிக் கொண்டேயிருப்பது இந்த ரகக் கதைகளின் ஸ்பெஷாலிட்டி! பணியாற்றுவதிலுமே maximum சவால்களும் ; உற்சாகங்களும் தொற்றிடுவது இந்த ரகம் # 3 கதைகளிலேயே ! சாத்து வாங்கினால் – ‘முட்டுச் சந்து # 118‘ என்று டயரியில் குறித்துக் கொண்டே – சுனா-பானா ஸ்டைலில் மண் ஒட்டிய மீசையைத் தடவிக்கினு ‘in 1985 when I went to frankfurt’ என்று வண்டியை ரிவர்ஸ் கியர் போட்டுத் தப்பிக் கொள்ளலாம் ! அதே நேரம் எடுத்த ரிஸ்க் ஒரு பிரமாத வெற்றியாகிடும் பட்சத்தில் - ‘யெஸ்... யெஸ்... யெஸ்... எனக்கு இதெல்லாம் முன்னமே தெரியும் !‘ என்று காலரைப் பெருமையாய்த் தூக்கி விட்டுக் கொண்டு அடுத்த மூன்று வாரங்களுக்கு ‘நாட்டாமை‘ சரத்குமார் பாணியில் கெத்தாக இப்டிக்கா – அப்டிக்கா வலம் வரலாம்! “பிஸ்டலுக்குப் பிரியாவிடை" without a doubt – இந்த ரகம் # 3-ன் பிரதிநிதியே!

இந்தக் கதையை நான் கண்ணில் கண்டது பற்றி முன்னமே எழுதியது ஞாபகமுள்ளது! So அதே புராணத்துக்கு மறு ஒலிபரப்பு தேவையில்லையே?! 5 ஆண்டு சுமாருக்கு முன்னமே இந்தத் தொடரின் முதல் ஆல்பத்தைப் பார்த்த போது – “The Gentleman who did not like Guns!” என்ற தலைப்பு எனது ஆர்வத்தைக் கிளறியிருந்தது! சும்மா கெத்தாய் பாலைவனத்தின் மத்தியில் அசல் லார்ட் லபக்தாஸ் போலவே தோரணையாய்க் குந்தியபடிக்கு டீ குடித்துக் கொண்டிருந்த கனவானின் அட்டைப்படம் – இது நிச்சயமாய் ஏதோவொரு விதப் parody என்று மனதில் படச் செய்தது! பக்கங்களைப் புரட்டிய போது நிறையவே adults only சித்திரங்கள் ஆங்காங்கே கண்ணில் பட, ‘ஆத்தாடியோவ்!‘ என்றபடிக்கே ஜகா வாங்கி விட்டேன்! தொடர்ந்த ஆண்டுகளில் ஆல்பம் # 2 ; 3 & 4 வரிசையாய் ஏர்-மெயிலில் மெகா சைஸ்களில் வந்திறங்க – பீரோவுக்குள் பகுமானமாய் அவற்றை அமுக்கி விட்டு இந்த ‘முதிர்ரசனை‘ சமாச்சாரம் ஒத்து வராது சாமி என்று நானாய் தீர்ப்புச் சொல்லிக் கொண்டேன்! ஆனால் அவ்வப்போது சபலம் தட்டத்தான் செய்யும் – “maybe இன்னொரு க்ரீன்மேனரை உதாசீனம் செய்கிறோமோ?” என்ற ரீதியில்! நடப்பாண்டின் ஈரோட்டு ஸ்பெஷல்கள் என்று எதைப் போடலாமென்ற கேள்வி எழுந்த போது – மாமூலான heavy weight நாயகர்களை சுற்றிச் சுற்றியே மனம் கும்மியடித்தது! ஒரு ஜாலியான தருணத்துக்கு ஒரு மாஸான நாயகரைக் களமிறக்கி விட்டால் ரிஸ்க்கே லேது! என்று லாஜிக் லிங்கப்பன் எனக்குள் படமெடுக்கத் துவங்கினார்! நிஜத்தைச் சொல்வதானால் டெக்ஸின் ஒரு MAXI (330 பக்க) சாகஸத்தை அதற்கென தயாரும் செய்து விட்டேன்! ஆனால் TEX போலொரு கமர்ஷியல் நாயகரை “முன்பதிவுக்கு மட்டும்“ என்ற ரகத்தில் அடைப்பது செம மொக்கையான தீர்மானமாய்த் தோன்றியது! தவிர, நமது பதிவுப் பக்கங்களையோ; இதழ்களில் நான் எழுதும் ஹாட் லைன்; வெது வெது லைனையெல்லாம் படிக்க நேரமிரா நண்பர்கள் – ஒரு புது டெக்ஸ் வெளியீட்டைப் பார்த்தால் – “இதை ஏன் சந்தாவில் எனக்கு அனுப்பலை?” என்று கண்சிவக்கக் கூடுமென்றும் பட்டது! So ரெகுலர் தடங்களின் நாயகர்களை இந்த ஈரோட்டு exclusives பக்கமாய்த் தலைவைக்க அனுமதிப்பதில்லை என்று லாஜிக் லிங்கப்பனை துணியைப் போட்டு மூடினேன்!

எனது அடுத்த choice “கென்யா” நெடும் தொடரின் தொகுப்பாய்த் தானிருந்தது! அல்லது அந்த “அமெரிக்கா” தொடர்! இவை பற்றி ஏற்கனவே இங்கே எக்கச்சக்கமான அலசல் & வாக்குப்பதிவெல்லாம் நடந்திருக்க சரியான தேர்வுகளாயிருக்குமென்று மனசில் பட்டது! So ஆண்டின் ஆரம்பத்திலேயே அவற்றின் உரிமைகள் கோரி விண்ணப்பித்திருந்தேன்! ஆனால் ஐரோப்பிய வசந்த காலம் முழுக்கவே இங்கே-அங்கே என்று சர்வதேச புத்தக விழாக்கள் ரவுண்டு கட்டுவதால் அந்த நேரங்களில் ரொம்பவே பிஸியாக இருப்பார்கள்! So கிணற்றில் போட்ட கல்லாய் எனது விண்ணப்பம் தூங்கிக் கிடக்க – ‘What next?” என்ற கேள்வி எழுந்தது! மறுக்கா சில பல துயில் பயிலும் தொடர்கள் தூசி தட்டப்பட – ‘The Gentleman who did not like guns” அந்தக் குவியலில் இணைந்து கொண்டது! ஆனால் இந்தவாட்டி அதைப் பரிசீலனை செய்யும் போது – என் உருண்டை விழிகளுக்கு அந்த அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் வேறு மாதிரித் தெரியத் துவங்கியிருந்தன! பராகுடா எனும் ஒரு “திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில்” உலாற்றிய பிற்பாடு இதெல்லாமே எலிமண்டரி ஸ்கூல் சமாச்சாரமாய்த் தோன்றுவது புரிந்தது! அந்த ஒற்றை நெருடலைத் தாண்டி இந்தத் தொகுப்பினில் எனக்குத் தயக்கங்கள் வேறெதுவும் கிடையாதென்பதால் பரபரவென “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” என்று அறிவித்து வைத்தேன்! And என்ன மாதிரியான coincidence அதுவோ தெரியவில்லை - நான் அறிவித்த மறு தினம் "கென்யா" தொடருக்கான காண்டிராக்டும் மின்னஞ்சலில் வந்து சேர்ந்திருந்தது !! முன்வைத்த பிஸ்டலை இனி back அடிக்க வேண்டாமே - என்றபடிக்கே தொடர்ந்திடத் தீர்மானித்தேன் ! 

கதை தேர்வான பிற்பாடு அதனை மொழிபெயர்க்க ‘தம்‘ கட்டத் துவங்கிய போது மார்ச்சின் இறுதி புலர்ந்திருந்தது! சரியாக அதே வேளையின் எனது சுகவீனமும் துவக்கம் காண பராகுடா part 2 & தனியொருவன் கதைகளைப் பிசாசு போல உச்ச வேகத்தில் எழுதத் தொடங்கியிருந்தேன்! எந்த நேரத்தில் எந்த ஆஸ்பத்திரியில் படுக்கையில் ஜாகை காத்துள்ளதோ என்று தெரிந்திராத நிலையில் இந்த வேகம் தானாய்த் தொற்றிக் கொண்டது! ஆனால் பராகுடா – இரண்டாம் பாகத்தின் பணி ரொம்பவே intense ஆக அமைந்து போக, மேற்கொண்டொரு 4 பாக பிஸ்டலுக்கு பீப்பீ ஊதிட மனதிலும் உடம்பிலும் ‘தம்‘ இருப்பதாகத் தோன்றவில்லை! அப்போது தான் நமது அமெரிக்க நண்பர் மொழிபெயர்ப்புக்கொரு வாய்ப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தது! நினைவுக்கு வந்தது! “அட... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளவொரு பார்ட்டி சிக்கியாச்சு... கூடையைப் போட்டு அமுக்கிடுடா  முட்டைக் கண்ணா!” என்றபடிக்கே ஒரு சுபயோக சுபதினத்தில் தண்ணீர் தெளித்து மாலையும் போட்டு, பொட்டு வைத்து 4 பாகங்களை அவருக்கு pdf-ல் அனுப்பி வைத்தேன்! செம ஆர்வமாய் அவரும் பணிகளைத் தொடங்கச் சம்மதம் சொன்னது மார்ச் 27-ல்!

“ ‘தட தட‘வென்று பாய்ந்திட வேண்டாமே சார்... முதல் 5 பக்கங்களை எழுதியனுப்புங்கள்... பாணி; சொற்பிரயோகம் என எல்லாமே ஓ.கே.யாக இருந்தால் தொடரலாம்!” என்று ப்ரேக் போட்டேன்! தொடர்ந்த 15 நாட்களுக்கு 'சைனீஸ் சித்ரவதையென்றால்' என்னவென்றொரு செயல்முறை விளக்கம் கிடைத்திருக்கும் நண்பருக்கு! அவர் எழுதியனுப்பும் ஸ்கிரிப்டை பிரிண்ட் எடுக்க வேண்டியது; சிகப்பு மசியால் திருத்தங்களை மாங்கு மாங்கென்று போட வேண்டியது; அப்பாலிக்கா அதை ‘போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்ப வேண்டியது என்று செம பிசியாக என் குரங்கு வேலைகளைச் சிறப்பாக நடத்தினேன்! முதல் 13 பக்கங்களை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரு குட்டி யானை லோடு பேப்பரை நானும்; ஒரு நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவன் செலவிடக்கூடிய அவகாசத்தை நண்பரும் விழுங்கியிருப்போம்! ரொம்பவே நொட்டை சொல்கிறோமோ? என்று எனக்கே சமயத்துக்குத் தோன்றத் தான் செய்யும்... ஆனால் இந்தக் கதையின் funky ஸ்டைல் சித்திரங்களுக்கும்; கதாப்பாத்திரங்களுக்கும் பொருந்தும் ஒரு பாணியில் துல்லியமாய் விரல் வைக்கத் தவறினால் – கானா பாட்டுக்கு TMS குரல் கொடுத்தது போலாகிடுமே என்ற பயம் எனக்கு ! எப்படியும் இறுதியாய் நான் சகலத்தையும் திருத்தவும், எடிட் செய்யவும் போகிறேன் தான் என்றாலும் – எழுதும் போது இயன்றமட்டிலும் சரியான mould-க்கு நண்பரைத் தயார் செய்து விட்டால் அந்தமட்டுக்கு எனது நோவு குறையுமே என்ற சுயநலத்தில் குடலை உருவோ உருவென்று உருவினேன்! முதல் பாகத்தை ஒரு மாதிரியாய் முடித்து அனுப்பியது ஏப்ரல் 25க்கு என்று எனது inbox சொல்கிறது! தொடர்ந்த பாகங்களும் இதே பாணியில் மேற்கேயும் – கிழக்கேயுமாய் மின்னணு மார்க்கத்தில் பயணிக்க – 4 அத்தியாயங்களும் நிறைவு கண்டது ஜுன் 9-ல்!! பிஸ்டலுக்குப் பிரியாவிடையின் புண்ணியத்தில் – நண்பரின் தூக்கத்துக்கொரு அந்த 2 மாதங்களிலும் பிரியாவிடை தர நேரிட்டிருப்பது சர்வ நிச்சயம் ! Thanks for putting up with all my tortures sir !!

தொடர்ந்த எடிட்டிங் பணிகள் பற்றி ; அத்தனை ‘ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா‘ குட்டிக்கரணங்களுக்குப் பிற்பாடும், புதுசாய் எக்கச்சக்கப் பட்டி-டிங்கரிங் செய்து வண்டியோட்டிய அனுபவங்களை ஒரு பெருமூச்சுக்குப் பின்னே‘ பதிவினில் தம் கட்டிச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்! So ஒருவழியாய் ஈரோட்டுக்கு 2 வாரங்களுக்கு முன்னமே இதழைக் கையில் ஏந்திய நொடியில் ஒருவித நம்பிக்கை அலையடித்தது – இது நிச்சயமாய் உங்களை disappoint செய்திடாதென்று ! And இதோ – MAXI லயனின் அதிரடிப் பிரவேசத்துத் தருணங்களையும் தாண்டி 'பி.பி.வி.' சோலோவாக இன்றைக்கு ஒளிவட்டத்தைத் தனதாக்கி வருவதை பார்க்கும் போது பெருமையாகவுள்ளது – on two counts : ஒரு அழகான வாசிப்பனுபவத்தை நமது பயணத்தின் ஒரு அங்கமாக்கிட முடிந்தமையில் பெருமிதம் # 1. And இத்தகைய கதைக்களங்களையும் அட்டகாசமாய் வரவேற்கும் வாசக வட்டத்தோடு தோள் உரச முடிவதில் பெருமிதம் # 2!

Digging into the album – கதையின் பன்முகத்தன்மை என்னை ரொம்பவே மிரளச் செய்தது ! And கதைமாந்தர்கள் ஒருத்தர் பாக்கியின்றி நெடுக பட்டாசாய்ப் பொரிவதை ரொம்பவே ரசித்தேன் !!

- பைரனும், ஹோக்கார்டும் ; 'கட்டிளங்காளை' டிம்மும் துவக்கப் பக்கங்களில் கதையைத் துவக்கித் தரும் செம breezy பாணி...

- ‘மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரி அறிமுகமாகும் இடம் முதலாய் கதை அடுத்த கியருக்குள் பயணிப்பது...

- ‘டம்மி பீஸ்‘ என்பதாய் காட்சி தரும் அந்தக் கிழச் செவ்விந்தியக் கதாப்பாத்திரம் – எங்கோ. எப்படியோ படித்ததொரு சமாச்சாரத்தை நினைவூட்டியது! ஆன்டன் செகோவ் எனும் பிரபல ரஷ்ய எழுத்தாளர் - நாடக ஆசிரியர் சொன்னதாம் இது; “கதையின் ஓட்டத்துக்கு உதவிடா எந்தவொரு சமாச்சாரத்தையும் சகித்திடப்படாது! மேஜையிலொரு துப்பாக்கி கிடப்பதாய்ச் சொன்னால் – அந்த ஆயுதமானது இரண்டாவதோ – மூன்றாவதோ அத்தியாயத்தில் வெடித்தாக வேண்டும்! சும்மா கதை முழுவதும் எந்தவொரு பங்கும் எடுத்துக் கொள்ளாத டம்மியாய்த் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது!”

பி.பி.வி.யின் கதாசிரியருமே இந்தக் கோட்பாட்டின் ரசிகர் போலும்! அறிமுகமாகும் போது பானை செய்யும் மிக்சர் சாப்பிடற பார்ட்டியாய் தென்படும் பெருசை – பின்னே என்னமாய் மையமாக்குகிறார்?? அந்தப் பெருசு பேசும் வசனங்கள்... ப்ளாஷ்பேக்ஸ்... வாவ்!!

- ‘நாங்களும் பரட்டை தான்... எங்க கிட்டேயும் சீப்பு இருக்கில்லே... சீவிட்டு நாங்களும் கலைச்சுக்குவோம்லே என்ற பாணியில் அலப்பரை விடும் கொள்ளையர் தலைவன் மொனோவோ!! அழகியை ஆசைநாயகியாக்கி, பின்னே அல்வாவும் வாங்கிடும் sequence செம விறுவிறு!

- அலட்டிக் கொள்ளா இங்கிலீஷ் கனவானாய் அறிமுகமாகி, அதிரடித் திட்டங்கள் வகுக்கும் ஆக் ஷன் block களில் ரகளை பண்ணி; வக்கீலாய் மதியூகம் காட்டி; அழகான மனையாளின் அமைதியான ஆத்துக்காரராய் வலம் வந்து; உயிர் பயத்தில் நம்மையும் மிரளச் செய்து, இறுதியில் சாணக்கியத்தனங்கள் பல செய்திடும் – பைரன் எனும் அந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தான் எத்தனை-எத்தனை layers?

- பைரனோடு சுற்றி வரும் அந்த மலை மாடு!! ஷப்பாடியோவ்... அதுவும் என்னவொரு offbeat பாத்திரப்படைப்பு! கதையின் துவக்கத்தைப் போலவே இறுதியிலும் பைரன் + ஹோகார்ட் இணைந்தே இருப்பதான சம்பவ அமைப்புகளை சிலாகிக்காது போக முடியுமா?

- களம் கனமானாலும், கிச்சுக் கிச்சு மூட்டும் பொருட்டு நுழைக்கப்பட்டிருக்கும் கட்டிளங்காளை.... வன்மேற்கின் வேங்கை – குதிரை லத்தியைக் கொண்டு வேட்டையை நடத்தும் டிம்! செம ஜாலியான... பாசிட்டிவ்வான பாத்திரப்படைப்பல்லவா?

– And அந்தச் சிறுமி லூஸி !!!! அந்தக் குட்டிப் பெண் தான் கதை நெடுக எத்தனை தூரத்துக்குக் கதையை நகர்த்திச் செல்கிறாள்!! கதையின் திசையே மாறிடவும் என்னமாய் உதவிடுகிறாள் ; அறியா வயதிலும் எத்தனை ஆழமான எண்ணங்களை விதைக்க வல்ல வரிகளை உதித்திடுகிறாள் ? An awesome creation !!

- Last but not the least : கதையின் மையமான மார்கோ !! இத்தனை வீரியமானதொரு பெண் கதாப்பாத்திரத்தை நாம் கடைசியாய்ப் பார்த்தது மின்னும் மரணத்தில் தான் அல்லவா ? என்னா ஒரு அழுத்தமான படைப்பு ? Hats off to the author !!

Before I wind up - ஒரு ஜாலியான எண்ணம் தோன்றியது மனதில் !! நெடு நாட்களுக்கு மனதில் தங்கிடப் போகும் இந்தக் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் வெள்ளித்திரைக்குப் புரமோஷன் கண்டால் - எந்த நடிகர்கள் / நடிகைகள் இந்த role களுக்குப் பொருத்தமாயிருப்பார்களோ ? சும்மா யூகம் செய்து பாருங்களேன் ?

And இதோ - நடப்பு ஜம்போ சீசன் # 2 -ன் இறுதித் தேர்வு (கால வேட்டையாருக்குப் பதிலான இதழ் !!) இதுவும் ஒரு வேட்டைக்களமே - இம்முறையே முழுவண்ணத்தில் !!! முதல் பக்கத்தில் டாப் கியரைத் தொடும் ஆல்பமானது சும்மா தீயாய்ப் பாய்கிறது - அசாத்தியமான சித்திரங்களோடு !!! ZAROFF - அமேசான் கானகத்தில் ஒரு ஜீவ மரண வேட்டையில் !!

Bye folks ...ஆகஸ்டின் அலசல்கள் தொடரட்டுமே ? 
See you around !Have a Super Sunday !!

Thursday, August 08, 2019

ஜன்னலோரம் ஒரு ஆந்தை !

நண்பர்களே,

வணக்கம். மேஜையின் ஒரு பக்கம் அடுத்த ஜம்போவின்  பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன....இந்தாண்டை ட்ரெண்ட் கதை மொழிபெயர்ப்பில் முதல் பாதி நிறைவுற்ற நிலையில், பிற்பாதி அனாமத்தாய் கிடக்கிறது ; அப்பாலிக்காவோ டெக்சின் ஒரு 220 ரௌத்திர சாகசம் பேனா பிடிக்கக் கோரி காத்திருக்கிறது ! ஆனால் மையமாய் குந்தியிருக்கும் நானோ மோவாயைத் தடவிக் கொண்டே ஒருவித மோன நிலையில் மோட்டைப் பார்ப்பதும், மேஜை மீது கிடக்கும் பக்கங்களை வெறித்துப் பார்ப்பதுமாய்ப் பொழுதை ஒட்டிக் கொண்டிருக்கிறேன் !! "ஏலே மக்கா ...தேதி 10 ஆகப் போகுது....இன்னும் 10 நாளிலே செப்டெம்பர் பொஸ்தவம்லாம் பிரிண்டிங்குக்கு ரெடியாகணும்லே !!" என்றொரு குரல் உள்ளுக்குள் உரக்க ஒலித்தாலும், தமன்னாவைத் தரிசித்து வந்த தங்கக்கம்பியைப்  போலொரு மந்தகாசப் புன்னகையை மாத்திரமே உதிர்க்க இங்கே சாத்தியப்படுகிறது !! 'சரி....இது இன்னொரு ஈரோட்டுப் பயணத்தின் பின்விளைவு தான் ; தானா இறங்கிட்டா ஓ.கே. ...இல்லாங்காட்டி கருப்பசாமி கோவிலிலே போயி திருநீறு போட வேண்டியது தான் !' என்று பாரியாளும் தீர்மானிக்க - கோமாளிக் கூத்து தொடர்கிறது !!

இதோ இந்தப் பதிவை நான் டைப்புவது வியாழன் மதியம் .....! அப்படியே அந்தக்காலத்து சினிமாக்களில் வரும் ஒரு flashback மியூசிக்கை பின்னணியில் ஒலிக்கச் செய்யாமலே, வளையம் வளையமாய் விரியச் செய்யாமலேயும் மண்டை தானாய் பின்னோக்கி எங்கெங்கோ பயணிக்கிறது ! சரியாக 6 நாட்களுக்கு முன்பாய் இதே பொழுதில் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு ஈரோட்டுக்கு ரயில் ஏறிய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன !! அந்த ஈரோட்டு நினைவுகளோடே இன்னும் கொஞ்சம் சவாரி செய்தால், முதன்முதலாய் ஈரோட்டில் புத்தக விழாவினில் பங்கேற்கக் கிளம்பி வந்த பொழுதில் ஜூனியர் எடிட்டர் தேடித் தந்திருந்த "இரவே..இருளே..கொல்லாதே" கதையைப் படித்தபடிக்கே ஈரோட்டில் ரயில் நின்றுவிட்டதைக்கூட உணராது லயித்துக் கிடந்த அனுபவம் ; அந்த வருடம் இன்னொரு பதிப்பகத்துடன் ஸ்டாலில் நடத்திய ஒண்டுக்குடித்தனம் ; முதன்முதலாய் நண்பர்களுடன் நடத்திய மரத்தடி மீட்டிங்கு ; தொடர்ந்த வருடங்களின் LMS ; இரத்தக் கோட்டை : ஈரோட்டில் இத்தாலி வெளியீட்டு உற்சாகங்கள் ; மரத்தடியில் நண்பர் பிரபாகரின் பிறந்த நாளின் பொருட்டு கேக் வெட்டிய தருணம் ; எழுத்தாளர் சொக்கன் அவர்களை நம் சந்திப்புக்கு வரவேற்ற பொழுது ; உச்சக்கட்டமாக "இரத்தப் படல" வண்ணத் தொகுப்பின் ரிலீஸின் அதகளம்  என்று வரிசை கட்டுகின்றன கலர் கலரான நினைவுகள் ! Cut to the immediate past - போன வெள்ளி மாலையில் ரயிலில் ஜூனியருடன் ஏறி ஏதேதோ மொக்கை போட்டபடிக்கே மஞ்சளநகரைச் சென்றடைந்தது அப்படியே கண்முன் வருகிறது !

அதே பரபரப்பான ரயில் நிலையம் ; செங்கல்கட்டி சைசுக்கு ஆரஞ்சு நிறத்திலான அல்வா பாக்கெட்டுகளுடனான அதே ஸ்டால்கள் ; பிஸியான அதே பஸ் ஸ்டான்ட் & பஜார் ; VOC பார்க்கை நெருங்கிவிட்டதை உணர்த்தும் அதே புத்தக விழா வரவேற்ப்புப் பதாகைகள், வளையங்கள் ; நடப்பன / பறப்பன / நீந்துவன என சகலத்தையும் சமைத்துப் பசியாற்றும் அதே விடுதிகள் ; அந்தச் சாலையெங்கும் இறைந்து கிடக்கும் அதே புத்தக விழாவின் நோட்டீஸ்கள் ; நிசப்தமாய் உயர்ந்து நிற்கும் Le Jardin ஹோட்டல் என்று அத்தனையும் துளி மாற்றம் காணாது இருக்க - எங்கள் அறைக்குச் சென்று அடங்கிய போது மணி 11 ஆகியிருந்தது ! ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் நமக்கு ஏகமாய் சந்தோஷங்களைத் தந்துள்ள  புத்தக அரங்கு நிலவொளியில் குளித்துக் கிடக்கும் காட்சி நிசப்தமாய் விரிந்தது ! இதன் பெயரைச் சொல்லித் தான் நாம் எத்தனை எத்தனை தூரம் உற்சாகமாய்ப் பயணித்துள்ளோமென்ற புரிதலோடு கட்டையைக் கிடத்தினேன் ! இந்த சந்தோஷ நினைவுகளின் இன்னொரு அத்தியாயமாய், காத்திருக்கும் புதுப் பொழுதின் காலையுமே உருமாறிட்டால் பிரமாதமாக இருக்குமே என்றதொரு எண்ணத்தோடே தூக்கத்துக்குள் கரைந்தால் - கனவுகளெல்லாம்  கன்னாபின்னாவென்று நமது 'சஸ்பென்ஸ் இதழ்களை' சுற்றியே கும்மியடித்தன !! "மண்டையை மறைச்சாலும், கொண்டையை மறைக்கலியே ?" என்ற கதையாய் 'MAXI லயன்' பண்டலை நம்மாட்கள் பப்பரக்கா என்று திறந்து போட்டு வைத்திருப்பது போல் கனவில் வர, நாலரை மணி சுமாருக்கெலாம் விழித்து மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து வைத்தேன் !! தூக்கம் பிடிக்காது படுக்கையில் புரளும் போது  - ஒவ்வொரு ஆண்டுமே என்னை ஆட்கொள்ளும் வழக்கமான பீதிப் பிசாசுகள் அப்போதும் என்னோடு மல்லுக்கட்டத் துவங்கின ! "காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கும் சந்திப்பை 4 மணி நேரங்களுக்கு எவ்விதம் நீட்டிப்பதோ  ? பன்னிரண்டு மணிவாக்குக்கே பேச வேண்டிய மேட்டர் சகலமும் ஓவர் என்றால் மீந்திருக்கக்கூடிய  2 மணி நேரத்துக்கு என்ன செய்வது ?" என்ற டர்...ஒவ்வொரு ஆண்டுமே என்னை அலைக்கழிப்பதுண்டு ! அதே போல 150 பேர் அமரக்கூடிய அரங்கில் குறைவான turnout மாத்திரமே தேறி - ஹால் ஜிலோவென்று காற்று வாங்கினால் என்ன செய்வதென்றே பயமும் ரெகுலராய்த் தோன்றிடுவதுண்டு ! பற்றாக்குறைக்கு இம்முறை ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று நமது சந்திப்பை நாம்  திட்டமிட்டிருக்க - "இரத்தப் படலம்" போலானதொரு big name இதழின் ரிலீஸ் இலா நிலையில், வாசகர்கள்  சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் வருகை தருவார்களா ? மாட்டார்களா ? என்ற கலக்கமும் கைகோர்த்துக்கொண்டது !  "சஸ்பென்ஸ் இதழ்கள் " என்ற பில்டப்பை ரொம்பப் பெருசாய் செய்துவிட்டு அப்புறம் அதே சைசில் பல்பு வாங்கிடும் படலம் வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதையின் பொருட்டு - அது பற்றி நான் அவ்வளவாய் வாய் திறக்க முனைந்திருக்கவில்லை  என்றபோதிலும் - உள்ளுக்குள் அது சார்ந்த பயமும் குடியிருக்கவே செய்தது ! "அட..இம்புட்டுதானாக்கும் உன் சஸ்சுபென்சு ?" என்று அந்த 2 MAXI லயன் இதழ்களையும் வாரிடுவீர்களோ என்ற மெலிதான கலக்கமும் கலந்து கொள்ள, பொழுது விடியும் வரைக்கும் குட்டி போட்ட பூனையைப் போல அறைக்குள் உலாற்றிக்கொண்டே இருந்தேன் !! இந்தக் கூத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் ஜூனியரைப் பார்த்த போது - 'அட...காதுவரைக்கும் கிழியும் வாயும், தொண்டைக்குழி வரைக்கும் பயணமாகும் பாதமும் நமக்கு இல்லாங்காட்டி - இதே நிம்மதியான உறக்கம் நமக்கும் வாய்த்திருக்குமோ ?"என்ற எண்ணம் தோன்றாதில்லை !!

பொழுதும் புலர, முதல் ஆளாய் முக்கால் டிராயரில் கீழே போய் ஒன்னரை இட்லியை விழுங்கி விட்டு மாடிக்குத் திரும்ப முற்படும் போது ஒரு பரிச்சயமான உருவம் குளித்து, ரெடியாகி, பிரெஷாக ஹோட்டல் வாசலில் நிற்பதைப் பார்க்க முடிந்தது !! "ஆத்தாடியோவ் - பொருளாளர் ராவில் லேட்டாய் வந்திறங்கியும், காலையில் முதல் ஆளாய்த் தயாராகி நிற்கிறார் !!" என்றபடிக்கே ஓட்டமெடுத்தேன் குளியலைப் போட ! குளித்து முடித்த கையோடு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் மரத்தடியில் நண்பர்களின் குழுமம் சிறுகச் சிறுக வலுப்பெறுவது தெரிந்தது !!  கீழே அரங்கில் நமது பேனரைக் கட்டிய கையோடு "ஈரோடு எக்ஸ்பிரஸ்" முன்பதிவு புக் பாக்கெட்டுகளை எடுத்து அடுக்கச் சொல்லியிருந்தேன் நமது பணியாட்களிடம் ! "எல்லாம் ரெடி !" என்று சொன்னவர்களிடம் மறுக்கா உறுதி செய்து கொண்டேன் - சஸ்பென்ஸ் இதழ்களின் பண்டலை இன்னமும் உடைக்கலை தானென்று !! நான்பாட்டுக்கு லார்ட் லபக்தாஸ் போல போய் நிற்கும் நேரத்துக்கு ஆளாளுக்கு MAXI லயனைப் புரட்டிக் கொண்டிருந்தால் - அப்பாலிக்கா வழியக்கூடிய அசடைத் துடைக்க ஒரு ஈரோட்டு ஜமுக்காளமே அவசியப்பட்டிருக்குமே ?! பத்தேகால் மணிக்கு அரங்குக்கு நானும் ஜுனியரும் நுழைந்தது மட்டுமே ஞாபகமுள்ளது ! தொடர்ந்த 5 மணி நேரங்களுக்கு அங்கு அரங்கேறிய அத்தனையுமே ஒரு surreal உணர்வையே உண்டு பண்ணுகின்றன !!

நண்பர்களை மொத்த மொத்தமாய்ப் பார்த்த கணத்தில் அது வரையிலும் பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த பேஸ்மெண்ட் L & T சிமென்டின் ஸ்திரத்தன்மையைப் பெற்றது போல் நிலைகொண்டிட - சிறுகச் சிறுக அந்தக் காலையின் ரம்யம் களை கட்டத் துவங்கியது ! நம் சிறப்பு விருந்தினர்கள் - அறிவிக்கப்பட்ட 2 ஸ்பெஷல் இதழ்களையும் ரிலீஸ் செய்ய - அவற்றைக் கையில் ஏந்தும் ஆவலை விடவும், அடுத்த  2 சஸ்பென்ஸ் இதழ்கள் என்னவென்று தெரிந்து கொள்ளும் அவாவே அரங்கில் அலையடித்ததைப் பார்க்க முடிந்தது !! இரண்டரை மாதங்களாய் கோஷாப் பெண்ணைப் போல கண்ணில் காட்டாதே இவற்றைப் பொத்தி வைத்திருந்ததன் பலனை எதிர்பார்ப்புகளின் கனத்துடனான  அந்த நொடியில் தான் முழுசாய் உணர முடிந்தது !! இதில் பெரும்கூத்து என்னவென்றால் - MAXI லயனின் 2 இதழ்களையும் சீனியர் எடிட்டருக்கே அதுவரையிலும் காட்டியிருக்கவில்லை ! ஒரு மாதிரியாய் பார்சலுக்குள் பார்சலாய்ப் பதுங்கிக்கிடந்த MAXI லயனின் இதழ் # 1 & 2-ஐ நமது பொருளாளரின் செல்வங்கள் வெளியிட்ட நொடியில் ஏதோ சந்திராயனையே ஏவியது போலொரு திருப்தி எனக்கு - simply becos 'ஆபரேஷன் சாக்கைப் போட்டு அமுக்கு' முழுசாய் வெற்றி கண்டிருந்தது !! 2 ஆண்டுகளுக்கு முன்பாய் கர்னல் ஆமோஸ் இதழினை புக் fair ஸ்பெஷல் என ஓசையின்றி நான் திட்டமிட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே - அதனை நமது "கைவசமுள்ள ஸ்டாக்" லிஸ்டிலிருந்து கண்டு பிடித்து நீங்கள் எனக்குப் புளிப்பு முட்டாய்  கொடுத்தது நினைவுள்ளது !! So ரிலீஸ் வரைக்கும் இம்முறை ரகசியம் காக்க முடிந்ததில் ஒரு ஜாலியான த்ரில் எனக்கும், ஜுனியருக்கும் !!

ஒரு மாதிரியாய் ஆரவாரங்களுக்கு மத்தியில் அன்றைய பொழுதின் மையப்புள்ளி  unveil செய்யப்பட பிற்பாடு - பெவிக்காலை கழுவிய உத்வேகத்தில் பெரியசாமி பின்னணிக்குப் போக - உலகநாதன் செம வேகத்தோடு களமிறங்க - கடந்த 12 மாதங்களின் இதழ்கள் சார்ந்த அலசல் வேகமெடுத்தது ! இதனை நான் துவக்கத்தில் திட்டமிட்டிருந்தது - பொழுதைக் கடத்துமொரு யுக்தியாய் மாத்திரமே என்றாலும் - அதனை முறையாய்ப் பயன்படுத்திக்கொண்டால் 2020-ன் அட்டவணை திட்டமிடலுக்குப்  பெரிதும் உதவிடும் என்பது புரிபட்டது ! அதன் பலனே அன்றைய interactive session !! Trust me guys - உங்களது அன்றைய inputs காரணமாய், கிட்டத்தட்ட 99.5% நிறைவுற்றிருந்த அட்டவணையினில் சிற்சிறு பட்டி-டிங்கேரிங் அரங்கேறி வருகிறது !! காத்திருக்கும் ஆண்டின் திட்டமிடல் சிறப்பாய் அமையின் - அங்கு உங்களின் தடங்களும் நிச்சயமாய்ப் பதிந்திருக்கும் என்பது உறுதி !! Maybe..just maybe...காத்திருக்கும் காலங்களில் நமது புது அட்டவணையின் ரிலீஸ் தருணத்தினில் இது போலொரு வாசக சந்திப்பை எங்கேனும் நிகழ்த்திட இயன்றால் - எனது ஒவ்வொரு தேர்வின்  பின்னணியினையும் ; நிராகரிப்புகளின் காரணங்களையும்  அலசிட சாத்தியமாகிடக்கூடும் !! 

அப்புறமாய் சீனியர் எடிட்டர் ; கருணையானந்தம் அவர்கள் கொஞ்ச கொஞ்ச நேரங்கள் பேசிட - நண்பர்களில் சிலர் மைக் பிடிக்க - நேரம் ஓடிய சுவடே தெரியாது மதிய சாப்பாட்டு வேளையினை தொட்டு நின்றோம் ! 3 பந்திகளில் பசியாறிய பிற்பாடு - MAXI லயன் இதழ்களை வாங்கிய கையோடு ; கணக்கற்ற selfie-க்களைக் க்ளிக்கிய பின்னே விடைபெற்ற அத்தனை பேரிடமும் ஒருவித நிறைவு தென்பட்டதே எனது அன்றைய பொழுதின் highlight !! அரங்கினுள் AC மட்டும் சொதப்பாது இருப்பின் - அன்றைய சந்திப்பு இன்னமுமே செமத்தியாக இருந்திருக்குமென்ற ஆதங்கத்தை மட்டும் சுமந்து கொண்டே ரூமுக்குத் திரும்பிய போது - மாலை நாலாகியிருந்தது !! இன்னுமொரு 365 நாட்களுக்கு இந்த நினைவுகளின் உத்வேகத்தோடே பயணிக்கலாமென்ற நம்பிக்கையோடு ஜன்னலருகே நின்றபடிக்கே பிஸியாய்க் காட்சி தந்த அதே புத்தக விழா அரங்கினை இப்போது பார்த்த போது - மனம் முழுக்க இளையராஜாவின் மெலடி தான் ஒலித்தது போலிருந்தது !!

அன்றைய பொழுதின் கணக்கிலா சந்தோஷத் தருணங்களை chronicle செய்திட எனக்கு ஏகமாய் ஆசை தான் ; ஆனால் மறதியில் எதையேனும் / யாரையேனும் குறிப்பிட மறந்து போயின் அது பிழையாகிடும் என்பதால் - இதோவொரு ஆந்தை விழியினில் மேலோட்டப் பார்வை :


  • ஆளுக்கொரு name tag கொணர்ந்திருந்தேன் - 'தல' ; 'தளபதி' ; கிட் ஆர்டின் & லக்கி லூக் படங்களோடு - இஷ்டப்பட்ட நாயகரைத் தேர்வு செய்து கொள்ளட்டுமே என்று !! "சர்வமும் நானே" என்ற tag line சகிதமிருந்த TEX படத்துக்கே அடிபிடி !! 
  • மக்கன் பேடா என்ற ஸ்வீட்டோடு பெங்களூரு / திருப்பத்தூரிலிருந்து நண்பர் அஹ்மத் பாஷா ஆஜரானது செம sweet surprise !! 
  • பாண்டிச்சேரியிலிருந்து வருகை தந்திருந்த நமது guest of honor உடன் நண்பர் கலீல் மாத்திரமன்றி - 2 surprise visitors கூட !! அது "தமிழ் காமிக்சின் வரலாறு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கும் டாக்டர்.பிரபாவதியும் அவரது கணவரும் !! பிரபாவதி நம் வட்டத்துக்குப் புதியவர் அல்ல தான் ; ஆனால் அவரது கணவரும் ஒரு 'பொம்ம பொஸ்தவ' விழாவுக்கு வருகை தந்தது மாத்திரமன்றி, சுற்றி நடக்கும் களேபரங்களை சுவாரஸ்யத்தோடு கவனித்துக் கொண்டிருந்தது செம !! 
  • நமது செனா அனாஜியின் பிள்ளைகள்  - budding doctors தீபக் & அபிராமி சென்னையிலிருந்து கோவைக்குப் பயணித்து, அங்கிருந்து ஈரோட்டுக்கு பின்னிரவில் வந்து சேர்ந்திருந்த போதிலும், காலையில் செம உற்சாகமாய் தந்தையோடு ஆஜரானது இன்னொரு அட்டகாச surprise !! ஏற்கனவே இது குறித்து நண்பர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்த போதிலும், நான் அதை இங்கே போட்டுடைக்காது இன்னொரு ஸ்பூன் பெவிக்காலை வாயில் பூசிக் கொண்டிருந்தேன் ; கடைசி நிமிடத்தில் ஏதேனும் மாற்றங்களிருப்பின், பொருளாளர்ஜி அப்புறமாய் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிப் போகுமென்பதால் மௌனமே safe என்ற காரணத்தினால் ! பொதுவாய் இன்றைய   தலைமுறையின் பிள்ளைகளை  அவர்களது comfort zone-களிலிருந்து வெளியே நகர்த்திக் கூட்டி வருவது எத்தனை கஷ்டம் என்பதை  நாமறிவோம் !! அதுவும் இது அவர்கட்கு நேரடி ஈடுபாடிலா ; முழுக்கவே பெருசுகளாய் சங்கமிக்கும் ஒரு விழா எனும் போது அவர்களது interest levels எவ்விதமிருக்குமோ என்ற சிறு நெருடல் எனக்கிருந்தது !  Maybe அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் கலந்து கொண்டிருப்பின், சற்றைக்கெல்லாம் போரடித்துப் போய் இருக்க நேரிடின் தவறு அவர்களதாய் இருந்திராது !! ஆனால் surprise ...surprise ....ஹாலிலிருந்த அத்தனை பேரும் டீனேஜுக்கும் ; அதற்கும் கீழிருக்கும் ஏஜ்களுக்கும் ஒரேயடியாய்ப் பாய்ந்திட்ட medical miracle-ஐ முகம் நிறைந்த புன்சிரிப்புகளோடு ரசித்துக் கொண்டிருந்தனர் !! வீட்டுக்குப் போய் அப்பாவை எத்தனை கலாய்த்தனர் என்பதையும் ; தத்தம் நண்பர்களிடம் இங்கே நடந்த கூத்துக்களை எவ்விதம் பகிர்ந்து கொண்டனர் என்பதையெல்லாம் இன்னொரு நாளில் கண்டுபிடிக்க முயற்சித்திட வேண்டும் !! 
  • பத்தே வயதானதொரு ஈரோட்டுச் சுட்டிப் புயல் ஒன்று மேடையேறி, மைக் பிடித்து "Smurfs போடுங்க !!" என்று சொன்னது a wow moment !! 
  • அதே போல ஆசிரியர் ஒருவர் - கற்பித்தலுக்கும், காமிக்ஸுக்கும் உள்ள பாலத்தைப் பற்றி பேசியதும் ; ஆசிரியை ஒருவர் சிறு பிள்ளைகளின் வாசிப்புக்காகவேணும் நாம் செய்திடக்கூடிய மாற்றங்கள் பற்றிப் பேசியதும் lovely !! 
  • நண்பர் கரூர் ராஜசேகரன் பூரணமாய்க் குணமாகி, செம ஆர்வமாய் இம்முறை கலந்து கொண்டது - ஒரு மனம் குளிரச் செய்த moment ! ஓசையின்றி ஒரு துண்டுச் சீட்டில் - "வான் ஹாமின் one shot கதைகளை போடுவதாய்ச் சொல்லியிருந்தீர்களே ?" என்று நினைவூட்டியிருந்தது என்னை அசரச் செய்தது ! நல்ல கதைகளாய்க் கிடைத்தால் நிச்சயம் வெளியிடுவோம் சார் !! 
  • வழக்கம் போலவே போட்டோக்களையும், வீடியோக்களையும் சுட்டுத் தள்ளும் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டே - நமது அரட்டைகளிலும் பங்கேற்ற நண்பர் பெங்களூர் பரணி - as always a picture of efficiency !! 
  • சிவகாசி ரவுண்டு பன் சீக்கிரமே உலகப் பிரசித்தி பெற்று, ஒரு புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்க நேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை போலும் !! இம்முறையும் hit !! Maybe அடுத்தவாட்டி ஏதேனும் தீபாவளி ; ஆண்டுமலர் ; பொங்கல்  போன்ற விசேஷங்களின் போது மிட்டாய்களுக்குப் பதிலாய், கூரியர் டப்பிக்களில் சந்தா நண்பர்கள் அனைவருக்குமே இதையே அனுப்பலாமோ ?  
  • சீனியர் எடிட்டருக்கும், கருணையானந்தம் அவர்களுக்கும் இம்முறையும்  ரொம்பவே சந்தோஷம் - நண்பர்களின் உத்வேகத்தைக் கண்டு !! Maybe அடுத்த முறை நமது டீம் முழுசையுமே ஈரோட்டுக்கு வரவழைத்து அவர்கள் அனைவரையும் இந்த சந்தோஷங்களில் ஒரு சிறு பங்கெடுக்க முனைந்திடலாமோ ? 
  • "எங்க வீட்டில் டெக்சின் முதல் ரசிகை எங்க தாயார் தான் !!" ஈரோட்டில் மட்டுமே இந்த வாசகத்தை at least ஒரு அரை டஜன் தடவைகள் கேட்டிருப்பேன் !! Floored !!!!
  • ஜேம்ஸ் பாண்ட் ; ட்யுராங்கோ ; லார்கோ ; தோர்கல் என்று ஜாம்பவான்கள் இன்னும் எத்தனை பேர் களம் கண்டாலும் - 'தல' & 'தளபதி' எப்போதுமே வேறொரு லெவெலில் தான் இருப்பார்களென்பது அன்றைக்கு இன்னொருமுறை ஊர்ஜிதமானது !! சொல்லப் போனால் - இளம் டைகர் பற்றிய அலசலுக்குள் புகுந்த போது, எஞ்சியிருக்கும் 12 புதுக் கதைகளை வெளியிடுவது குறித்து  நான் சத்தியமாய் இத்தகைய வரவேற்பினை உங்களிடம் எதிர்பார்த்திருக்கவில்லை ! கிட்டத்தட்ட அத்தனை பேருமே இரண்டு கைகளையும் தூக்காத குறை தான் என்ற போது வாயடைத்துப்போனேன் நான் !! In fact அடுத்த ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்களாக கென்யா + அமெரிக்கா ஆல்பங்களையே மனதில் கொண்டிருந்தேன் ! ஆனால் நீங்கள் போட்ட அதிர்வேட்டு ஆர்ப்பரித்ததில் - ERODE 2020 : "இளம் டைகர் 12 ஆல்பங்கள்" என்று தீர்மானிக்கச் செய்தது !! Talk about people power !! இதனை எவ்விதம் திட்டமிடுவது ; எவ்விதம் வெளியிடுவது என்றெல்லாம் சாவகாசமாய் ஆண்டின் இறுதியில் ஒரு பொழுதினில் அலசிடுவோமே ? (ஹைய் !! ஒண்ணு ரென்று பதிவுகளுக்கு மேட்டர் ரெடி !!)
  • அதே போல டயபாலிக் மறுவருகைக்கு அன்றைக்குக் கிட்டிய ஆதரவு மெய்யாலுமே ஆச்சர்யம் கொள்ளச் செய்தது ! 'ஆயாவைப் பாயா செய்றானுங்கோ !' என்ற குரல்களை YESSS என்ற குரல்கள் வென்ற மாயத்தை எண்ணி புருவங்கள் உயர்ந்தன எனக்கு !! Maybe absence makes the heart grow fonder !!! 
  • அன்று மாலை அரங்கின் பின்பக்கமிருந்த கார் பார்க்கிங் பகுதியில் குழுமிய கையோடு ஓட்டமெடுத்த அரட்டையானது ரொம்பவே refreshing & ரொம்பவே different ! வழக்கம் போலான "கொரில்லா சாம்ராஜ்யம் எப்போ ?" ; "விண்வெளிப் பிசாசு எப்போ ?" என்ற கேள்விகள் சன்னமாய் எழுப்பப்பட்டாலும் - அவற்றிற்கு எனது பதில் என்னவாகயிருக்குமென்பதில் யாருக்கும் பெருசாய் ஆர்வம் இருக்கவில்லை !  புதுக் களங்கள் ; light reading ; கிராபிக் நாவல்கள் ; 2020 அட்டவணை ; கார்ட்டூன்களின் முக்கியத்துவம் ; ஜம்போ என்று படு current ஆன தலைப்புகளில் பர பரவென கேள்விகளை நண்பர்கள் கேட்கத் துவங்க - அவற்றிற்கு ஜாலியாய்ப் பதில் சொல்வதில் அந்த மாலைப் பொழுது சுவையாய்க் கரைந்தது !! மொய்யென்று ஒரு இடத்தில மட்டும் என்ன கும்பலென்று எட்டிப் பார்த்துப் போனவர்கள் ஒரு சொட்டைத் தலையனை மையத்தில் பார்த்துக் கடுப்பாகிப் போயிருப்பார்கள் என்பது கொசுறுச் சேதி !! 
  • வழக்கமான நண்பர்களோடு இம்முறை புதியவர்களும் நிறையவே ஈரோட்டில் ஆஜராகியிருக்க - வெறும் பெயர்களாய் மாத்திரமே இருந்த பரிச்சயங்கள் அடுத்த நிலையைத் தொட்டதைக் காண முடிந்தது !! "இந்த புக்...அந்த புக்...இந்த ஹீரோ...அந்த ஹீரோயின்" என்ற அலசல்களையெல்லாம் தாண்டி சாஸ்வதமாய் நிற்கும் ஆற்றல் இந்த நட்புக்களுக்கே உண்டெனும் போது இந்த சந்திப்புகளின் highlight சர்வ நிச்சயமாய் அதுவே என்பேன் !! 
சந்திப்பை நிறைவு செய்து நண்பர்களுக்கு விடை தந்துவிட்டு ரூமுக்குத் திரும்பிய போது வயிறு பேய்ப்பசியில் கூக்குரலிட்டது !! ஆனால் மனசோ ஒருவித ஏகாந்தத்தில் மிதந்து கொண்டிருந்தது ! Zomato-வில் டொமாட்டோ ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது குறுக்கெல்லாம் நோவினாலும் உறக்கம் பிடிக்க மறுத்தது !! ஜூனியரோ காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு ஏதோவொரு லோகத்தில் சஞ்சரித்துக் கிடக்க - வழக்கம் போலவே அந்த ஜன்னலோரம் தஞ்சமானேன் !! கண்ணாடி வழியாய் பார்வையை நீளச் செய்த போது மெதுமெதுவாய் அடங்கிடும் புத்தக விழாவின் அரங்கு நித்திரைக்குள் ஆழ்ந்திடத் துவங்குவது தெரிந்தது !! ஒற்றை நாள்....மூன்று முறைகள் அதே ஜன்னலோரம்....பார்வைகளிலும், உணர்வுகளிலும் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள் !!! இன்னுமொரு 364 நாட்களே பாக்கி - இதே ஜன்னலோரம் அதே தட தடுக்கும் இதயத்தோடு நிலைகொண்டிட என்ற எண்ணத்தோடே கட்டிலில் சாய்ந்தேன் !! 

பிஸ்டலுக்கு மாத்திரமல்ல..ஈரோட்டுக்குமே பிரியாவிடை சாத்தியமல்ல என்ற எண்ணத்தோடே இமைகள் சொருகின தூக்கத்தில் !! 

Thank you folks...for being the meaning of all that we strive for ! We are truly humbled !!




  1. MAXI லயன் 2 இதழ்களுக்குமான உங்களின் response - simply staggering !! இத்தகையதொரு பரபரப்பையும், ஆர்வத்தையும் நாங்கள் கடைசியாய்ப் பார்த்தது "இரத்தப் படலம்" வெளியீட்டின் போதே !! ஆன்லைனில் ஆர்டர் செய்திடும் நண்பர்களின் வேகத்துக்கு ஈடு தர இயன்ற மட்டிலும் முயற்சித்து வருகிறோம் !!
  2. உங்களின் வேகம் நம் முகவர்களையுமே தொற்றிக் கொள்ள - ஈரோடு ஸ்பெஷல் தெறிக்கச் செய்து வருகிறது !!
  3. பிஸ்டலுக்குப் பிரியாவிடை !!! இதனைப் பற்றி சும்மா ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போனால் - புனித தேவன் மனிடோ என் முட்டைக்கண்களைக் குத்தியே தீருவார் !! This deserves a post on its own !! 

Saturday, August 03, 2019

ஈரோடு Ahoy !!!

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சில பல படைப்பாளிகள் தத்தம் நகங்களைக் கடித்து, விரல் வரையிலும் ரணமாக்கிக் கொள்வதுண்டாம் நமது கோலிவுட்டில் - simply becos  இப்பொதெல்லாமே முக்கால்வாசிப் புதுப் படங்கள் ரிலீஸ் காண்பது வெள்ளியன்றே !! அந்த  முதல் நாள் - முதல் ஷோவின் ரசிக அபிப்பிராயங்களே அந்தப் படத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் எனும் போது, முதல்போட்டவரின் ஆதங்கங்களும் சரி ; படைப்பாளிகளின் நடுக்கங்களும் சரி - totally understandable !! கோலிவுட்டுக்கு வெள்ளிகளெனில், நமக்கோ மாதத்தின் முதல் வாரங்கள் - அந்த 'டிக்.டிக்.டிக்' பொழுதுகளை கொணரும் judgement days !! இந்த ஆகஸ்டிலோ ஒன்றல்ல, இரண்டல்ல - அரை டஜன் இதழ்களெனும் போது,உள்ளுக்குள் கொஞ்சம் கணிசமாகவே  'டர்ர்ர் factor ' உலா வருகிறது !! And இதோ இந்தப் பதிவை நீங்கள் சுடச் சுட வாசித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் - இதே நொடியில் ஈரோட்டில் ஒவ்வொன்றாய் ஸ்பெஷல் இதழ்கள் நான்கையும் unveil செய்து கொண்டிருப்போம் !! அங்கு கலந்து கொள்ளவியலாது போன நண்பர்களின் பொருட்டு இந்தப் previews !!

'தி ஈரோடு எக்ஸ்பிரஸ்' கோச் 1 & 2 பற்ற நிறையவே விளம்பரங்களைக் கண்ணில் காட்டியிருப்பதால் - அவற்றினில் என்ன எதிர்பார்ப்பதென்று கொஞ்சமேனும் நீங்கள் யூகித்திருக்க முடியும் ! அதே சமயம் - கோச் நம்பர் 3 & 4 - "TEX + கார்ட்டூன்" என்று மொட்டைக் கட்டையாய் மட்டுமே சொல்லி வைத்துவிட்டு, பிடிவாதமாய் வாய் நிறைய பெவிகாலைப் பூசித் திரிந்ததால் - அக்கட curiosity ஒரு மிடறு ஜாஸ்தி என்று சொல்லலாம் ! In fact - கடந்த 15 நாட்களில் நமது அலுவலகப் பணிப்பெண்களின் வாயைக் கிளறி - அந்த 2 "சஸ்பென்ஸ் இதழ்கள்" பற்றிய தகவல்களைக் கிரகிக்க நடந்த டெலிபோன் முயற்சிகள் நிச்சயமாய் 150 க்குக் குறையிராது !! 'அடிச்சும் கேட்பாக....எதையும் சொல்லிப்புடாதீங்க !!' என்று நான் அவர்களுக்குச் சொல்லி வைத்தது பற்றாதென்று மேற்படி 2 புக்குகளையுமே அவர்களின் கண்களிலேயே காட்டவில்லை !! பைண்டிங்கிலிருந்து மொத்தமாய் புக்குகளை ராவோடு ராவாய்த்  தூக்கியாந்து - மொத்தத்தையும் மாடியிலுள்ள குடோனுக்குள் அடுக்கி ஒரு மூடாக்கையும் போட்டு வைக்கச் செய்தேன்! So உள்ளபடிக்கே பணியாட்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை எனும் போது, நிறைய வாசக எரிச்சல்களை அவர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டதே மிச்சம் !! இந்த 'சஸ்பென்ஸ்' ; சுண்ணாம்பு எல்லாமே - ஈரோட்டிற்குப் பயணிக்க மெனக்கெடும் நண்பர்களின் புருவங்களை ஒற்றை நொடிக்கேனும் 'அட !' என உயரச் செய்யும் ஆர்வத்தின் பொருட்டே எனும் போது - இதர வாசகர்களிடம் ஒரு sorry சொல்லும் கடமை நமக்குண்டு !! ஏதாச்சுமொரு விதத்தில் உங்கள் ஆர்வங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் அவாவின் விளைவே இந்தக் குரங்குச் சேட்டைகள்  என்று புரிந்து கொண்டால் மகிழ்வேன் !! தவிர, இந்த 2 இதழ்களையுமே under wraps வைத்திருக்க நான் பிரயாசை மேற்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இல்லாதில்லை - ஆனால் அதைப் பற்றி லொட லொடக்கும் முன்பாய் இதழ்களைக் கண்ணில் காட்டி விடுகிறேனே ?

Without more ado - இதோ "அந்த" TEX இதழின் முதற்பார்வை !!  
ஒரு 360 டிகிரி all round வாசக அபிமானத்தைத் தனதாக்கியிருக்கும் மாஸ் நாயகரைக் கொண்டு "வேணும்னா வாங்கிக்கலாம் ; வெளியான அப்பாலிக்கா பாத்துக்கோங்க !" என்ற ரீதியில் நானொரு இதழைத் திட்டமிடும் நொடியே அதுவொரு மறுபதிப்பாய் மாத்திரமே இருக்க முடியும் என்று உங்களில் நிறையப் பேர் யூகித்திருக்கலாம் ! புது இதழாய் இருக்கும் பட்சத்தில் - TEX போன்ற அசுரர்கள் ரெகுலர் சந்தாவினில் மட்டும் தானே ஜாலியாய் உலா வருவார்கள் ? So இதுவொரு மறுபதிப்பாய்த் தானிருக்குமென்று நீங்கள் யூகித்திருப்பின், உங்களையே முதுகில் ஒருவாட்டி  தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்களேன் ?! 'அது சரி - மாமூலாய் வெளியாகும் ஒரு மறுபதிப்பில், எங்களை புதுசாய் சுவாரஸ்யப்படுத்தக்கூடிய மேட்டர் என்னவோ ?' என்று கொட்டாவியோடு கேட்கிறீர்களா ? புக்கை நேரில், கையில் ஏந்திப் பார்த்தால் மாத்திரமே அதற்கான பதில் புரிபடும் உங்களுக்கு ! 

Becos - இந்த இதழானது - "தலையில்லாப் போராளி " ; "ஒரு தலைவன் - ஒரு சகாப்தம்" வெளிவந்த அதே மெகா சைசில் வண்ணத்தில் வெளிவந்துள்ளது ! 'தலையிலாப் போராளி" இதழினில் - ரெகுலர் சித்திரங்களை அப்படியே பெரிதாக்கி வெளியிட்டிருந்தோம் ! "ஒரு தலைவன்...ஒரு சகாப்தம்" இதழினிலோ - ஓவியர் Serpieri மெகா சைசில், பிரான்கோ-பெல்ஜிய பாணியில் உருவாக்கியிருந்த பக்கங்களை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்திருந்தோம் ! ஆனால் இங்கோ - நமது ரெகுலர் சைசிலான TEX பக்கங்களில் ஏகமாய் பணியாற்றி, மெகா சைசுக்கு convert செய்துள்ளோம் ! ரெகுலர் சைசின் 2 பக்கங்கள் இங்கே 1 மெகா பக்கமாய் உருமாற்றம் கண்டுள்ளன - துளி கூட சித்திரச் சிதைவுகளின்றி !! டெக்சின் 70+ ஆண்டு கால சகாப்தத்தினில் - ஏதேதோ ரூபங்களில், பாணிகளில் அவரது ஆல்பங்கள் உலகெங்கும் வெளியாகியிருக்கும் தான் ; ஆனால் நாமிப்போது கையிலெடுத்திருக்கும் இந்த MAXI format இதுவரையிலும் யாரும் முயற்சித்திரா ஒரு பாணி என்று நினைக்கிறேன் !! இதற்கென போனெல்லியில் சம்மதம் கோரிப் பெற்று, பொறுமையாய் பணியாற்றி இதோ MAXI LION என்றதொரு வரிசையில் களமிறக்கியுள்ளோம் !! And இதோ - உட்பக்கங்களின் previews :

இனி இது சார்ந்த "கேள்வியும் நானே - பதிலும் நானே" கச்சேரி :

கேள்வி 1 .'சிவனே'ன்னு போய்க்கினு இருந்த மறுபதிப்புத் தடத்திலே இந்த புது வண்டியை ஓட்டுவானேன் ? நாங்க எக்ஸ்டரா நம்பர் போடச் சொல்லிக் கேட்டோமா ? "

"அப்புறம் இதை அறிவிப்பா வெளியிடாம அப்டி சஸ்பென்ஸா வைச்சிருக்க என்ன அவசியமாம் ?"

பதில் 1 : "மாற்றம் ஒன்றே மாறாதது !" - at least ஒரு ஆகச் சிறு வட்டத்துக்குள் ஜட்கா வண்டி ஓட்ட முற்படும் நமக்கேனும் !! TEX இதழ்கள் சகலமுமே ஒரே பாணியில், ஒரே format-ல் தொடர்ச்சியாய்ப் பயணிப்பது - நெடும் ஓட்டத்துக்கு சுகப்படாதென்று, தலையின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பட்சியின் அரைகூவலாய்க் கேட்டு வந்தது !  சில பல மாதங்களுக்கு முன்பாய் ஒரு வியட்நாமிய விமான நிலையத்தில், நானும், ஜூனியர் எடிட்டரும் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்த போது, இந்தத் தலைப்பும் அலசலுக்கு உட்பட - "மெகா சைசில், கலரில், அழகாய் வெளியிட இயன்றால் - கடைகளில் விற்பனைக்கும் 'பளிச்' என்று கண்ணில்பட்ட மாதிரியிருக்குமே !!" என்ற ரீதியில் ஜுனியர் எடிட்டரின் அபிப்பிராயமிருந்தது !! சும்மாவே சாமியாடுபவனுக்கு, வேப்பிலையும் அடித்தால் கேட்கவா வேண்டும் ? ஈரோட்டுக்கான TEX இந்த மெகா சைசில் தான் என்று fix ஆனேன் !!  

ஆனால் இந்த புக்கைக் கையில் ஏந்தி, இந்தப் புது format-ல் நிஜத்தில் படித்துப் பார்க்கும் வரையிலும், இவை குறித்து ஒரு சரியான எண்ணவோட்டம் உங்கள் மத்தியில் உருப்பெறுவது சிரமம் என்று எனக்குள் ஒரு எச்சரிக்கை சிக்னலுமே  மினுமினுத்தது !! So விளம்பரங்களாய்  இந்த சமாச்சாரத்தை முன்கூட்டியே நான் அறிவித்திருந்தால் - "குரங்கு வேலை" ; "விஷப் பரீட்சை !" : "நிச்சயிக்கப்பட்ட சொதப்பல் ; "பூட்ட கேசு " என்று மழைச் சாரலாய் அன்பு பொழிந்திருக்கக்கூடுமென்று நினைத்தேன் !! ஆங்காங்கே வாட்சப் க்ரூப்களில், FB குழுக்களில், பரோட்டா மாவைப் பிசைவது போல என் வழுக்கை மண்டையைப் பிசைந்து தள்ளுவதொரு செம ஜாலியான பொழுதுபோக்காகி இருக்கக்கூடும் என்று தோன்றியதால் - உங்கள் கைகளில் புக்கை ஒப்படைக்கும் நொடி வரைக்கும் பெவிகாலே உத்தமம் என்று தீர்மானித்தேன் !

Of course - அதற்காக புக்கினைக் கையில் ஏந்திடும் இந்த நொடியில் இந்த முயற்சியினை அத்தனை பேரும் கைதட்டி, வரவேற்று ஏற்றுக் கொண்டு, சிகப்புக் கம்பளத்தை லாண்டரியிலிருந்து வரவழைத்து விரித்து விடுவீர்களென்றெல்லாம் நான் பகற்கனவு  காணப் போவதில்லை !! "இது பெருசா கீது ;படிக்க வசதியாவே இல்லை !" ; "விலை இவ்ளோவா ??" "ரெகுலர் சைஸ்லே அது பாட்டுக்கு வந்தது பொறுக்கலியா ?" ; "ஆட்டையைப் போட புது ரூட்டாக்கும் ?" என்றெல்லாம் `முதல் reactions வெகு பாசமாய் இருக்கக்கூடுமென்பது புரியாதுமில்லை !! ஆனால் திட்டிக் கொண்டேனும் இந்த ஒற்றை இதழை முழுசுமாய் வாசிக்க நேரமெடுத்துக் கொண்டால் - இந்தப் புது பாணி ஒரு whiff of fresh air போலிருப்பதை மறுக்கவும் மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !! விலையைப் பொறுத்தவரைக்கும் - cover price ரூ.150 என்றிருப்பினும், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் விலை காத்துள்ளது !! அது பற்றிய விபரம் சித்தே கழித்து...!!

And here you go - அந்த "சஸ்பென்ஸ்" கார்ட்டூன் இதழின் முதற்பார்வையும் இதோ : 


அதே மெகா சைசில், முழு வண்ணத்தில், மேம்படுத்தப்பட்ட மொழியாக்கத்தோடு லக்கி லூக்கின் all-time classic கதைகளுள் ஒன்றான "மனதில் உறுதி வேண்டும்" வெளியாகிறது - MAXI லயன் இதழ் # 2 ஆக !! இங்கே சித்திரங்களில் resetting பணிகள் ஏதும் இருக்கவில்லை நமக்கு - படைப்பாளிகள் வெளியிடும் அதே ஒரிஜினல் சைசில், அதே அட்டைப்படங்களோடு சிம்பிளாக வெளியிட்டுள்ளோம் - கதையின் பின்னணி பற்றிய 8 கூடுதல்ப் பக்கங்களோடு !! ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் இந்தக் கதைகள் வெளிவந்திடும் ஒரிஜினல் சைஸ் & பாணி இதுவே எனும் போது - ஆயுசில் முதல்வாட்டி - படைப்பாளிகளின் கால்தடங்களை அட்சர சுத்தமாய்ப் பின்பற்றும் வாய்ப்பு கிட்டியுள்ளது ! Moreso இது போன்ற க்ளாஸிக் மறுபதிப்புகளை இந்த மெகா சைசில் ரசிப்பதும், பத்திரப்படுத்துவதும் ஒரு ரம்யமான அனுபவமாக இருந்திடக்கூடுமென்று நினைத்தேன் !! Of course - உங்களது அபிப்பிராயங்கள் மாறுபட்டிடலாம் தான் ! So early days !! 

கேள்வி # 2 : ஏண்டாப்பா அம்பி...மறுபதிப்புகள் ரெண்டையுமே இந்த சைசில் போட்டிருக்கியே - ரெகுலர் மறுபதிப்புச் சந்தாலாம் இனிமே எப்டியோ ?

பதில் # 2 : ஐந்தாறு ஆன்டுகளுக்கு முன்பாய் - இதே ஈரோட்டுப் புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் மறுக்கப்பட்ட போது தலைவர் திருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சொன்ன valid காரணம் - "நம்மிடம் போதிய titles இல்லை ; வெறும் 50 இதழ்களோடு ஒரு அரங்கம் அமைப்பது, வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடுமென்பதே !!" So சடுதியில் நமது titles கையிருப்பை உசத்துவதே பிரதான குறிக்கோளாயிருந்தது - மறுபதிப்புகளை நாம் முழுமூச்சாய் அரவணைக்கத் தொடங்கிய போது ! அதன் பிற்பாடு ஒவ்வொரு ஆண்டும் REPRINTS ரகங்கள் ஒரு பிரேத்யேகத் தடத்தைத் தமதாக்கிக் கொண்டு வந்துள்ளன ! ஆனால் இன்றைக்கோ நமது titles கையிருப்பு ஆஞ்சநேயர் வாலின் விஸ்தீரணத்தில் காட்சி தரும் நிலையில் - time for a rethink on the reprints என்றுபட்டது !! தவிர, ஒரு மறுபதிப்புச் சந்தா என்று உருவாக்கிய கையோடு அதனை உங்கள் சிரங்களில் வருஷா வருஷம் விடாப்பிடியாய்க் கட்டி வருவது போலவும் தோன்றியது !! So காத்திருக்கும் 2020 முதலாய் இனிமேல் மறுபதிப்புகளுக்கோசரம் தனியாய் ஒரு சந்தாவென்றெல்லாம் இராது !! மாறாக - சென்னை ; கோவை ; ஈரோடு & மதுரை (or) திருப்பூர் என்ற நான்கு புத்தகவிழாக்களின் போது  - MAXI LION format-ல் மறுபதிப்புகள் வெளிவந்திடும் !  சென்னை & ஈரோட்டில் தலா 2 இதழ்கள் & இதர விழாக்களில் தலா 1 வீதம் ! நீங்கள் அவற்றை அந்தந்த book-fair களில் வாங்கிக் கொள்ளலாம் - அல்லது நம்மிடமிருந்து நேரடியாகவும் அதே புத்தக விழா டிஸ்கவுண்டுடன், வாங்கிக் கொள்ளலாம் ! புத்தக விழாக்களை நமக்கு சற்றே மெருகூட்டவும், நீங்களங்கு வருகை தந்திடவொரு சன்னமான முகாந்திரமாகவும்  இந்த முயற்சிகள் பயன்பட்டால் மகிழ்ச்சியே !! So it will be Exit : Reprint சந்தா & Enter : Buy as you please - MAXI லயன் !! 

கேள்வி # 3 : "விலையிலே இன்னா சலுகைப்பா ??"

பதில் # 3 : இந்த 2 இதழ்களையும் "தி ஈரோடு எக்ஸ்பிரஸ்" முன்பதிவிலேயே இணைத்திருப்பின் - 2 தடவைகளாய் வாங்கும் அவசியமும் இருந்திராது தான் & 2 கூரியர் செலவுகளையும் தவிர்த்திருக்கலாம் தான் ! ஆனால் புது பாணி ; புது விலை ; புது format ப்ளஸ் மறுபதிப்புகளே  எனும் போது - முழுசாய் தெரிந்து கொள்ளாது முன்பதிவு செய்துவிட்டு, அப்புறமாய் "முட்டைக்கண்ணன் ஏமாத்திபுட்டான்டா மாப்பிளை !!" என்று ஆங்காங்கே விசனப்படும் படலங்களைத் தவிர்க்க எண்ணினேன் ! So எனது  எக்ஸ்ட்ரா முன்ஜாக்கிரதையின் பலனான எக்ஸ்டரா கூரியர் செலவினை ஈடு செய்திடும் விதமாய் இந்த 2 இதழ்களையும் ரூ.125 + ரூ.125 = ரூ.250 என்று டிஸ்கவுண்டுடன் விற்பனை செய்திடவுள்ளோம் ! இந்த சலுகை ஈரோட்டுப் புத்தக விழாவிலும் இருக்கும் ; நமது ஆன்லைன் லிஸ்ட்டிங்கிலும் கிட்டிடும் !! So இரட்டிப்புக் கூரியர் கட்டணங்கள் உங்களை ரொம்பவும் பாதிக்காதென்று நம்புவோம் ! 

கேள்வி # 4 : இனி எல்லா மறுபதிப்புகளுமே இதே பாணி தானா ?

பதில் # 4 : ஒரு புது பிளேயரை டீமுக்குள் எடுக்கும் போது அவருக்கு ஒரு குறைந்த பட்ச அவகாசமாவது தந்திடல் அவசியம் தானே ? "தம்பி....முத மேட்சிலேயே செஞ்சுரி போடாட்டி நீ பூட்ட கேசுடி !!" என்று அவர் காதில் ஓதினால் மனுஷன் பதட்டத்திலேயே பணால் ஆகிப் போவது தானே இயல்பு ?! So இந்தப் புதுப் பாணிக்குமே ஒரு குறைந்த பட்ச அவகாசம் - அதாவது ஜனவரி 2020 சென்னைப் புத்தக விழா வரையிலும் தந்திடுவோமே - ப்ளீஸ் ? If all is well - புது சைசில் தொடர்வோம் ! இல்லையேல் அவசியப்படும் திருத்தங்கள் செய்யப்படும் - அவற்றிற்கான உருப்படியான முகாந்திரங்களிருக்கும் பட்சத்தினில் !! 

கேள்வி # 5 : "அது இன்னா...சூனியரு பேரு மாத்திரமே புக்கிலே கீது ?"

பதில் # 5 : முதிர்ந்த வயதிலுமே இளைஞர் அணிச் செயலாளர் பதவியோடு சுற்றி வரும் காலங்களெல்லாம் போயே போச்சென்பத்தைத் தான் இன்றைக்குப் பார்க்கிறோமே  ? So நாமும் சன்னமாய் அதிலிருந்தொரு பாடம் படித்த மாதிரி இருக்கட்டுமே ? இந்த MAXI லயன் வரிசையின் பொறுப்புகள் ஜூனியரிடமே இருந்திடும் ! மிஞ்சிப் போனால் நானிங்கு பேனா பிடிப்பேன் - மொழிபெயர்ப்பாளனாய் !! மற்றபடிக்கு  இவை சார்ந்த திட்டமிடல்கள் ; தயாரிப்புப் பணிகள் எல்லாமே எனது தலையீடின்றி இருந்திடும் ! So "செல்லக் கண்மணிகளே....வாசகச் செல்வங்களே !!" என்ற ரீதியிலான ஹாட்லைன்..கோல்ட்லைன்.. வெது வெது லைனெல்லாம் நிச்சயமிராது ! காது வரை நீளும் வாயானது  எனது பிரேத்யேகச் சொத்தென்பதால் - அந்த இம்சைகளின்றி MAXI லயன் தட தடக்கும் !! 

கேள்வி # 6 : "அடுத்த MAXI லயன் மதுரையிலேயா ?"

பதில் # 6 : Nopes ...மாதயிறுதியில் துவங்கும் மதுரை விழா too early for another reprint !! இனி அடுத்த MAXI லயன் ஜனவரி 2020-ல் தான் !! Maybe..just maybe அதற்கிடையே திருப்பூரில் புத்தக விழா இருப்பின் - அங்கொரு MAXI முயற்சிக்கலாம் !! 

கேள்வி # 7 : அடுத்த TEX reprint என்னவாம் ?

பதில் # 7 : திருப்பூரில் /  சென்னையில் சொல்றேனே ?

கேள்வி # 8 : MAXI லயனில் சகலமும் மறுபதிப்புமயம் தானா ?

பதில் # 8 : ஆரம்பத்தில் மறுபதிப்புகளில் மாத்திரமே MAXI லயன் கவனம் காட்டிடும் ! காத்திருக்கும் காலங்களில் MAXI நீளம் கொண்ட முன்பதிவிற்கான  (புது) ஆல்பங்களும் இதன் ரேடாரில் இடம்பிடித்திடும் வாய்ப்புகள் உண்டு !!

Uffff !! எத்தனை ஹெல்மெட்டுகளை இப்டிக்காவும், அப்டிக்காவும் நான் மாட்டிக்க முற்பட்டாலும், டாலடிக்கும் என் முன்மண்டையில் ஒரு போடு போட ஏதேனுமொரு பாதாள ஆங்கிளில் வழி தேடப்படுவது உறுதி என்பது தெரியாதில்லை ! So ஜாலியாய் அதற்காகக் காத்திருக்கும் கேப்பில் - ஈரோடு எக்ஸ்பிரஸின் கோச் # 1 & 2 பற்றிய அறிமுகங்களைச் செய்திடுகிறேனே ? 

இதோ - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இதழின் அட்டைப்பட முதல்பார்வை ! இம்முறை அட்டகாசமான ஒரிஜினல் சித்திரங்களே ஈரோட்டின் 4 ஸ்பெஷல் இதழ்களுக்குமே !! And "பி.பி.வி." ஹார்டகவர் இதழுக்கு ஏகப்பட்ட நகாசுகள் செய்துள்ளோம் ராப்பரில் !! 4 பாகங்கள் கொண்ட இந்த இந்த இதழே இம்மாதத்திய எனது செல்லப்பிள்ளை !! இதுவே உங்களின் ஆதர்ஷப் பிள்ளையாகவும் உருமாறிட்டால் - would be the icing on the erode cake !! 
And இதோ - புதியவர்களான DAMOCLES டீமின் தெறிக்கும் ஆக்ஷன் த்ரில்லரின் அட்டைப்படமுமே !! நிறைய ஆக்ஷன் ; கொஞ்சம் காதல் ; கொஞ்சம் செண்டிமெண்ட் என்று நகரும் இந்த ஆல்பமும் நிச்சயமாய் இந்த ஆகஸ்ட்டை அமர்க்களப்படுத்துமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !! All fingers crossed !!  
ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள இயலா இதர நண்பர்களின் புக்குகள், கூரியரில் இன்று  (சனிக்கிழமை) காலையில் சிவகாசியிலிருந்து கிளம்பிடும் ! திங்களன்று பெற்றுக் கொள்ளும்வரையிலும் பொறுமை ப்ளீஸ் !! 

And MAXI லயனின் TEX + லக்கி லூக் மறுபதிப்புகளின் ஆன்லைன் லிஸ்டிங் கூட இன்று ரெடியாகிடும் ! So புது பாணியினை கண்ணில் கண்டிட விரும்பும் நண்பர்கள் ஆன்லைனிலோ ; முகவர்கள் வாயிலாகவோ வாங்கிக் கொள்ளலாம் ! Happy shopping  & here's praying that you like them !!

இந்தப் பதிவை வியாழன் ராவினில் டைப்படிக்கிறேன் - வெள்ளியன்று நேரமிராது என்பதால் !! So ஈரோட்டுக்கு உங்களை மீண்டுமொருமுறை வரவேற்கிறேன் folks - காமிக்ஸ் நேசமெனும் ஒற்றைக் குடையினடியே இளைப்பாறி மகிழ்ந்திட !! பெரும் தேவன் மனிடோ நம்மைக் காப்பாராக !!! Adios for now folks !!!
ஈரோட்டில் துவங்கும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 4 !!
ஒரு காமிக்ஸ் குவியலோடு உங்களை வரவேற்கக் காத்திருப்போம் !! Please visit us !!