Powered By Blogger

Sunday, January 31, 2016

ஒரு ஜாலியான அவஸ்தை !

நண்பர்களே,

வணக்கம். பொன் கிடைத்தாலும் கிடைக்கா புதனில் பிப்ரவரி மாதத்து இதழ்கள் இங்கிருந்து கூரியரில் புறப்படவிருக்கின்றன! இம்முறை டெக்ஸின் உட்பக்கங்களது தயாரிப்பினில் கொஞ்சம் தாமதமாகிப் போய் விட்டது; இத்தாலிய மொழிபெயர்ப்பினில் எனக்கெழுந்த சில சந்தேகங்களின் பொருட்டு! என்னதான் கூகுள் translator-ல் மொழிமாற்றங்கள் சாத்தியமாகினும் – சில உள்ளூர் சொற்றொடர்களை கணினிகள் உருமாற்றித் தரும் போது தூர்தர்ஷனில் சீரியல்களைப் பார்த்தது போலவே தோன்றுகிறது! So எடிட்டிங்கின் போது எனக்குக் கூடுதல் தெளிவு அவசியமான பக்கங்களை கடைசி நிமிடத்தில் இத்தாலிக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து நான் எதிர்பார்த்த விதத்தில் வரிகள் கிட்டிடுவதில் கிட்டத்தட்ட ஒரு வாரம் விரயமாகிப் போய் விட்டது! அதனால் இம்முறை கொஞ்சம் தாமதம் guys! ஆனால் ஒருமொத்தமாய் ‘தி..டெக்ஸ்‘ படிக்கும் போது இந்தத் தாமதம் ஒரு விஷயமேயல்ல என்று தோன்றப் போவது நிச்சயம்!

And – இதோ பிப்ரவரி இதழ்களுள் நீங்கள் இது வரைப் பார்த்திரா “மஞ்சள் பூ மர்மம்” மறுபதிப்பின் அட்டைப்பட முதல் பார்வை! இம்முறை முன்னட்டை நமது ஓவியரின் கைவண்ணமே – 100%! லாரன்ஸும், டேவிட்டும், கோட்-சூட்-தொப்பியென கலக்கலாகப் புன்னகைப்பது போல எனக்குப்பட்டது; So- கதையின் உட்பக்கங்களிலிருந்து சேகரித்த சித்திரங்களை நம்மவர் அட்டைப்பட டிசைனாகத் தயாரித்துத் தந்த போது சந்தோஷமாகயிருந்தது! இந்த இதழின் (தமிழ்) முதல் பதிப்பு வெளியான சமயம் கூட – உட்பக்க சித்திரங்களின் collage தான் ஒரு மஞ்சளான பின்னணியில் அட்டைப்படமாக்கப்பட்டிருந்தது எனக்கு நினைவில் உள்ளது! அதனை இன்னமும் பத்திரமாய் வைத்திருப்போர் உங்களுள் இருக்கும்பட்சத்தில் அந்த ராப்பரை ஸ்கேன் செய்து அனுப்பிடுங்களேன் – நமது FB பக்கத்தில் போட்டு விடலாம்!

Moving on – மார்ச் மாதத்திற்கென காத்திருக்கும் 4 இதழ்களிலுமே பணிகள் ஜரூராய் நடந்து வருகின்றன! And மீண்டுமொரு முறை அதகள அதிரடியை தனதாக்கப் போவது நமது இரவுக்கழுகாரே! “விதி போட்ட விடுகதை“ நிச்சயமாய் இன்னுமொரு blockbuster என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை! ஒரு விபத்தில் ஜுனியர் டெக்ஸ் நினைவை இழந்திட, சந்தர்ப்ப சூழல்கள் அவரது தந்தையையே எதிரியாக்கி அவர் முன்னே நிறுத்திட – பக்கத்துக்குப் பக்கம் பட்டாசு வெடிக்காத குறை தான்! திகில் நகரில் டெக்ஸ்” நம்மவரை ஒரு டிடெக்டிவ்வாக சித்தரிக்கிறதெனில் – “வி.போ.வி.” வினில் ஒரு பாசமான தந்தையாய் கதை நெடுகிலும் அவர் வலம் வரவிருப்பதை ரசித்திடலாம்! And இந்த இதழுக்கென நமது டிசைனர் தயாரித்துள்ள அட்டைப்படம் உங்களை நிச்சயம் ‘மெர்சலாக்கும்‘!! ஒரிஜினல் போனெல்லி சித்திரம் – ஆனால் பின்னணியில் ஒரு மெகா மாற்றம் என்ற இந்த டிசைன் மார்ச்சின் showstpper ஆக  இருந்திடப் போகிறது – without a doubt! இதோ மார்ச் அட்டைப்படத்திற்கென நாம் முயற்சித்த டிசைன் ஒன்றின் preview !! ஆனால் தேர்வாகியுள்ளது இதுவல்ல !! வரக் காத்திருக்கும் டிசைனை இன்னொரு நாளையப் பதிவில் கண்ணில் காட்டுகின்றேனே !! இது ஒரு சாம்பிளுக்கு மட்டுமே என்று வைத்துக் கொள்ளுங்களேன்.. !
This is NOT the cover we will be using though...!
மாதந்தோறும் டெக்ஸ்‘ என்ற விதமாய் அட்டவணையை அமைத்த போது – ‘சாமி... அணுகுண்டென நினைத்துப் பற்ற வைக்கிறோம்; ஆனால் ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘யென புஸ்வாணமாகிடக் கூடாதே!‘ என்ற சிறு பயம் எனக்குள் ஒரு ஓரமாய் குடியிருந்தது நிஜமே! என்ன தான் டெக்ஸின் மாஸ் அப்பீல், வாசக ஆதரவு என்ற சங்கதிகள் துணைநிற்கும் உறுதியிருந்த போதிலும் – ஓவர்டோஸாகிடக் கூடாதேயென்ற சிந்தனையும் அவ்வப்போது டாலடித்துச் சென்று கொண்டுதானிருந்தது என்  மனதில்  ! கதைகளின் தேர்வில் இயன்ற வேறுபாடுகளைக் கொணர நிறையப் பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் – ஒரு கதைக்குள் முழுமையாய் இறங்கிப் பணியாற்றும் சமயம் கிட்டிடும் firsthand knowledge – இன்டர்நெட் ஆராய்ச்சிகளிலும், அபிப்பிராயக் கோரல்களிலும்; மேலோட்டமான கதைச் சுருக்க வாசிப்பினிலும் கிடைப்பதில்லை தானே? So- தைரியமாய் நிறைய பில்டப்களை முன்வைத்த போதிலும் – கதைகள் ஹிட்டடித்தால் தவிர எனது உதார்கள் எல்லாமே வெற்று வரிகளாகிப் போய்விடுமென்றுப் புரிந்தேயிருந்தேன்! ஒரு வழியாய் 2016-ம் புலர்ந்தது! மாதம்தோறும் ஒரு கதைக்குள் குதிக்கும் வாய்ப்புக் கிட்டிய போது – ‘டெக்ஸின் மேஜிக்‘ துளிப் பிசிறின்றி நம்மைக் கரைசேர்க்குமென்பது புரியத் தொடங்கியது! ஏப்ரலில் காத்திருக்கும் பெரிய சைஸிலான ”தலையில்லா போராளி”யினை முழுமையாய் நான் படிக்க நேரம் கிட்டவில்லை; ஆனால் அதன் சித்திரங்களைப் பற்றிக் காலத்துக்கும் நாம் சிலாகிக்கப் போகிறோமென்பது பக்கப் புரட்டல்களின் போது அப்பட்டமாய்த் தெரிகிறது! ஓவியர் சிவிடெல்லி படைத்துள்ள இந்தச் சித்திர விருந்தை தினமும் சில நிமிடங்களாவது புரட்டி கொண்டேயிருக்கிறேன்! So- டெக்ஸின் முதல் 4 மாதங்களது செயல்பாட்டை தொடரும் காலங்களுக்கானதொரு குறியீடாய் நாம் பார்ப்பதெனி்ல் we are on a winning track for sure!

இதழோரத்து ‘டெக்ஸ் ஜலப்பிரவாகம்‘ இதற்கு மேல் வேண்டாமென்பதால்  – இன்னொரு பக்கம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நமது உடைந்த மூக்காரின் ஸ்பெஷலின் பணிகள் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேனே...? சமீப வாரங்களி்ல் – நமது ஆன்லைன் ஆர்டர்களுள் ஒரு பெரும் பகுதி “என் பெயர் டைகர் (வண்ண) இதழின் முன்பதிவுகளாகவே இருந்து வருகின்றன! இடையிடையே b&w பதிப்பிற்கும் ஆர்டர்கள் வராதில்லை தான்! நாம் நிர்ணயித்திருந்த முன்பதிவு இலக்கினைத் தொட்டு விட அதிக தூரமில்லை என்பதால் இதழின் வேலைகளைச் சுறுசுறுப்பாய்த் தொடங்கி விட்டோம்! இதுவரையில் நீங்கள் பார்த்திராத புதுவித (டைகர்) சித்திர பாணியோடு நகர்ந்து செல்லும் ”என் பெயர் டைகர்” வசன மழைக்கு மத்தியில் மிதந்திடும் ஒரு சாகஸம்! ஏராளமான வரிகள்; பக்கத்திற்கு – சுமார் 40 பலூன்கள் என்றெல்லாம் ஆங்காங்கே சரளமாய்ப் பார்த்திட முடிகின்றது! சென்றாண்டு இதே வேளையில் “மின்னும் மரணம்” இதழின் பொருட்டு நமது ஒட்டுமொத்த DTP பணியாளர்களையும் பிசியாக்கியதைப் போலவே இம்முறையும் பணிகளைப் பகிர்ந்து தந்து  அனைவரையும் பெண்டு நிமிர்த்தத் தொடங்கி விட்டேன்! ஓரிரு வாரங்களுள் ஒட்டுமொத்தமாய் 5 பாகங்களையும் அவர்கள் என் மேஜையினில் அடுக்கி விட்டுச் சென்றான பின்பு – இன்று நான் செய்திடும் நிமிர்த்தல்; கழற்றல் பணிகள் என் பின்பக்கத்தைத் தேடிடத் தொடங்குவது நிச்சயம்! And அட்டைப்பட டிசைனுக்கென நமது தேடல்களையும் தொடங்கி விட்டோம்! இந்த தொடரின் ஆல்பம் # 1 அட்டகாசமான ஒரிஜினல் டிசைன் கொண்டதே என்பதால் அதனையே கொஞ்சம் வித்தியாசமான பாணியில் பயன்படுத்திடவும் முயற்சிக்கப் போகிறோம்! எது எப்படியோ – சித்திரையில் முத்திரை பதிக்க நமது சிகுவாகுவா சில்க்கின் காதலர் தயாராகிடுவார்!

ஏப்ரலில் ‘தல & தளபதி‘ மட்டும் தானென்றில்லாமல் இன்னும் சில heavy weight நாயகர்களைக் களமிறக்குவதாக உள்ளேன்! BAPASI நடத்திட எண்ணியிருக்கும் (ஏப்ரல்) சென்னைப் புத்தக விழா வழக்கமான பிரம்மாண்டத்துடன் அரங்கேறிடும் பட்சத்தில்; நமக்கங்கு ஸ்டாலும் கிடைத்திடும் பட்சத்தில் நிச்சயமாய் வாணவேடிக்கைகளுக்குப் பஞ்சமிராதென்று பட்சி சொல்கிறது! நம்பிக்கையோடு காத்திருப்போம்!

And தற்போது திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழாவில் மிதமான வரவேற்போடு வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது! 100+ ஸ்டால்கள் மாத்திரமே என்பது மட்டுமன்றி, விடுமுறைகள் சகலமும் முடிந்து விட்ட தருணமிது என்பதால் ‘ஆஹா... ஓஹோ...‘ விற்பனைகளை எதிர்பார்த்திடுவது நடைமுறை சாத்தியமாகாது என்பது புரிகிறது! வரும் கூட்டத்தில் ஒரு கணிசமான பங்கு நம் ஸ்டாலை ஆர்வத்தோடு பார்வையிடுவதும், ‘அட... இன்னுமா இதெல்லாம் வருகிறது?என்ற கேள்விகளையும் முன்வைக்கும் போது – இது நிச்சயமாய் ‘விளம்பரம்‘ என்ற ரீதியிலும் நமக்கொரு முதலீடாகவே பார்த்திடத் தோன்றுகிறது! கடைசி நிமிட ஸ்டால் ஒதுக்கீடு; திடீர் திட்டமிடல்கள் என்பது ஒரு பக்கமிருக்க – பிப்ரவரி மாதத்து இதழ்களின் தாமதங்களை ஈடு செய்திடும் பொருட்டு நாங்கள் ஞாயிறன்றும் (இன்று) வேலை செய்திடவுள்ளதால் என்னால் திருப்பூர் டிரிப் அடித்திட இயலவில்லை! நமது நண்பர் பட்டாளம் திருப்பூரைத் தாக்கவிருப்பதாய் சேதிகள் கிட்டிய போதிலும், அவர்களைச் சந்திக்க இயலாது போவதில் எனக்கு நிஜமான வருத்தம்! ஏப்ரலில் சென்னையில் இதனை ஈடு செய்திடலாமென்ற எண்ணம் தான் ஆறுதல் தருகிறது!

தவிர, இங்கே மேஜையில் குவியத் தொடங்கியிருக்கும் கதைகளின் எண்ணிக்கைகளைப் பைசல் பண்ணுவதற்கும் ஞாயிறுகள் எனக்கொரு முக்கிய நாளாகிப் போய் வருவதால் – அன்றைய நாளின் பணிகள் தட்டிப் போய் விட்டால் ரொம்பவே அல்லாட வேண்டியுள்ளது! கர்னல் க்ளிப்டனின் கூத்துக்கள் பிரதானமாய் என் கவனங்களைக் கோரி வருகின்றன தற்சமயமாய்! 'அட... கார்ட்டூன் கதைகள் தானே...? ஊதித் தள்ளி விடலாமென்ற' அசட்டு நம்பிக்கைகளை குள்ளவாத்து மீசைக்காரர் போன மாதம் சேதப்படுத்தியிருந்தாரெனில்; கேரட் மீசைக்காரர் இப்போது ஆசை தீர மூக்கில் குத்து மழையைப் பொழிந்து வருகிறார்! பிரிட்டிஷ்காரா்களின் dry humour இழையோடும் வசன நடையினைக் கையாள்வதும் சரி; காமெடிக்குத் தந்திட வேண்டிய முக்கியத்துவத்தைச் சமாளிப்பதும் சரி- துவைத்துத் தொங்கப் போட்டு வருகிறது என்னை! இன்னொரு பக்கமோ நமது ஊதாக் குட்டி மனுஷர்களின் அடுத்த கதையின் வேலைகளும் நடந்து வருகின்றன! பக்கத்திற்கு சுமார் 15 கட்டங்களெனும் போது அங்கேயும் no cakewalk! சந்தா C-ன் கார்ட்டூன் மேளாவின் பெரும்பகுதிக் கதைகளை ‘எனக்கே எனக்காய்‘ நான் கவ்விக் கொண்டிருப்பதால் – ரின் டின் கேன்; சுட்டி பயில்வான் பென்னி; டாக்புல் & கோ – என வரிசையாக சிரிப்புப் பார்ட்டிகள் லைன் கட்டி நிற்கிறார்கள்! ‘ஜாலியான அவஸ்தை‘ என்ற சொல்லுக்கு யாரேனும், என்றைக்காவது அகராதியினில் அர்த்தம் பதிக்க விரும்பிடும் பட்சத்தில் அவர்கள் என்னிடம் பேசினால் சரிவருமென்று தோன்றுகிறது! கலப்படமிலா சந்தோஷம் தரும் அனுபவம்; அதே சமயம் கத்தி மேல் நடப்பதற்கு ஈடான ரிஸ்க் கொண்டது; எழுத எழுதக் குறையவே குறையாது நீண்டு கொண்டே செல்லும் பட்டியல் என்ற combo-வை வர்ணிக்க ‘அழகிய அவஸ்தை‘ என்ற சொற்கள் பொருத்தமானவை தானே? டெக்ஸின் கதைகளையோ; ஷெல்டன்; கமான்சேக்களையோ அடித்தம் திருத்தமின்றி கடகடவென்று எழுதிப் போவது எனக்கும் சரி, நமது கருணையானந்தம் அவர்களுக்கும் சரி- பழகிய பணியாகி விட்டது! ஆனால் ‘பெளன்சர்‘ போன்ற வில்லங்கப் பார்ட்டிகளையோ; கார்ட்டூன் உலகின் கிச்சுக் கிச்சு மாந்தர்களையோ கையாளும் போது – இரவின் எழுத்துக்கள் பகலில் பல்லைக் காட்டுவது போலப் படுவதும், பகலில் எழுதுவது இரவில் பேத்தலாகத் தெரிவதும் சகஜமாகவே இருந்து வருகின்றன ! ஏராளமான அடித்தங்கள் – திருத்தங்கள் என ரணகளமாய் பக்கங்கள் காட்சி தருவதை நமது DTP பெண்கள் எப்படியோ சமாளித்து வருகின்றனர்! அவர்களுக்கு இங்கொரு நன்றி சொல்லியாக வேண்டும்!

ஒரு சில updates :

1.CINEBOOK ஆங்கில இதழ்களுள் BLAKE & MORTIMER கதைகளின்  விற்பனை திடீர் சூடு பிடித்துள்ளது !(http://comics4all.in/2853-blake-mortimerAnd சென்னையில் THREE ELEPHANTS புத்தகக் கடையினிலும் இனி நமது CINEBOOK ஸ்டாக் கிடைத்திடும் !
2.நாம் மாதமொரு டெக்ஸ் வெளியிடுவது இத்தாலியில் உள்ள காமிக்ஸ் சேகரிப்பாளர்களுக்கு தெரிந்துள்ளது !! இப்போதெல்லாம் ரெகுலராய் பீட்சா தேசத்துக்குப் பார்சல்கள் பறந்து வருகின்றன !! அவர்கள் மறக்காது கேட்கும் கேள்வி - "NO DD s  ?" என்பதே !! முதலாவது DD - DYLAN DOG & இரண்டாம் DD - DANGER DIABOLIK !! 

3.அட்டைப்பட டிசைனிங்கில் முன்பு போல் வாசகர்கள் தங்கள் திறமைகளைக் காட்டிட விரும்பிடும் பட்சத்தில்  - we are game for it! ஆர்வமுள்ள நண்பர்கள் கை தூக்குங்களேன் - ப்ளீஸ் ? 


4.KING SPECIAL கிட்டத்தட்ட ஸ்டாக் காலி !! And surprise...surprise....! சமீப நாட்களின் கணிசமான ஆன்லைன் ஆர்டர்கள் "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" & "இரவே..இருளே..கொல்லாதே.." இதழ்களுக்கும் இருந்து வருகிறது !! 


5.சிங்காரச் சென்னையை உருப்படிக் கணக்கில் கூட COMIC CON INDIA ஏற்றுக் கொள்வதாகத் தெரியக் காணோம் ! பிபரவரியில் புனே நகரில் புதிதாகக் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளனர் - ஆனால் "நீ அதுக்கு சரிப்பட மாட்டே...!!" என்றே சென்னைக்கு இன்னமும் முத்திரை தொடர்கிறது !! 


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் guys! அது வரை – have fun! Bye for now!

Tuesday, January 26, 2016

ஒரு விடுமுறை நாள் பதிவு...!

நண்பர்களே,

குடியரசு தின வாழ்த்துக்களும், வணக்கங்களும் ! 

சென்னைப் பொங்கல் புத்தக விழாவினில் இன்று மதியம் நமது ஸ்டாலுக்கு தி.மு.க.வின் பெருமதிப்பிற்குரிய தளபதி திரு.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களும், சென்னையின் முன்னாள் மேயர் திரு.சுப்ரமணியன் அவர்களும்,தொண்டர்கள் சகிதம் வருகை தந்திருந்தனர் ! சுமார் 5 நிமிடங்களுக்கு நமது இதழ்கள் சகலத்தையும் ரசித்துப் பார்த்துவிட்டு - மின்னும் மரணம் பிரதியினை வாங்கிச் சென்றுள்ளனர் - தலைவரிடமும் காட்டுவதாகச் சொல்லி !! தலைவணங்கி நன்றி சொல்கின்றோம் அவர்களது வாழ்த்துக்களுக்கு !!
நண்பரொருவர் அனுப்பிய லின்க்கைப் பின்பற்றிச் சென்ற பொழுது, சென்றாண்டின் ஒரு சமயத்தில் நமது "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" இதழின் சுவாரஸ்யமான review கண்ணில் பட்டது ! முன்னமே இதனை வாசித்திருக்கக் கூடிய நண்பர்களுக்கு இது கி.மு. காலத்து செய்தியாகப்படலாம் தான் ; but எனக்கிந்த லிங்க் கிட்டியது நேற்றைக்கே என்பதால்  - "சுடச்  சுட " (!!) உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன் :


"நமக்குப் பார்ப்பதற்கு நிலையாகத் தெரியும் தீபத்தில் பற்றியெரியும் சுடரானது பற்றவைத்த வினாடி முதல், ஒவ்வொரு கணமும் மறைவதும் புதியதாய் உருப்பெருவதுமாய் செயல்படுகிறது. தீபச்சுடர் நிலையான ஒருசுடர் அல்ல, மாறாக ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறையும் கோடிக்கணக்கான சுடர்கள். இந்தக் கணப்பொழுதில் தோன்றும் சுடர் அடுத்த கணத்தில் தோன்றப்போகும் சுடரை தோற்றுவித்து மறைகிறது. அடுத்தகணம் தோன்றப்போகும் சுடர், அதனையடுத்த சுடரைத் தோற்றுவித்து மறையும். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருட்களும் இந்தத் தொடர் மாறுதலுக்குட்பட்டே இங்கே வாசம் செய்கின்றன."
-புத்தர்-

காமிக்ஸ் என்றால் நம்மில் பலருக்கு சட்டென்று மனதினுள் தோன்றுவது ஆங்கிலத்தில் உலகப்புகழ் பெற்ற டின்டின் (TINTIN), ஆஸ்டெரிக்ஸ் (ASTERIX) மற்றும் டிஸ்னி (DISNEY). காமிக்ஸ் என்பது சிறு பிள்ளைகள் சமாசாரம் என்பதையும் தாண்டி இதில் பல்வேறு அழுத்தமான சங்கதிகள் அடங்கியுள்ளன என்பதை அறிந்தவர்கள் சிலரே. ஒரு கிராபிக் நாவலாக வடிவம் எடுக்கும் ஒரு காமிக்ஸ் இதழின் வீரியம் ஒரு ஹாலிவூட் படத்தையும் விஞ்சும் என்பது உண்மை. சமீபத்தில் “லயன் காமிக்ஸ்” எனும் காமிக்ஸ் மாத இதழில் வெளியிடப்பட்ட “தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல” எனும் கதை இதற்கான சரியான சான்று.

வெற்றி பெறும் ஒவ்வொரு கதைக்கும் எப்போதும் தொடக்கம் நம்மைக் கட்டிப்போடுவதாக அமைய வேண்டும். மெல்லிய தென்றல் வருடிச்செல்லும் ரம்மியமான இரவு தொடங்கும் வேளையில் வியர்க்க விருவிருக்க ஒரு புத்தத் துறவி கதையின் தொடக்கத்தில் ஓடி வரும்போது, நீரைக் கண்ட தாகம் போல நமது முழு கவனத்தையும் தனதாக்கிக்கொள்கிறது புத்தகம்.

திபெத்தை ஆக்கிரமித்து, அதன் மத அடையாளங்களை முற்றிலும் அழிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்த சீனராணுவப்படைப்பிரிவு கம்யுனிச பழமைவாத கேப்டன் டோங்யு தலைமையில் புத்த மடாலயத்தை சூழ்ந்து, கண்ணில்படுவோரைக் கொன்று குவித்து, அனைத்தையும் தீயிட்டு அழிக்கும் அறிமுகக் காட்சிகளுடன் கதை தொடங்குகிறது. புராதன ரகசியங்களை ஆராய்வதற்காக மடாலயம் வந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஈகோன் பாயெர் இங்கே நமக்கு அறிமுகமாகிறார்.

நடுங்கவைக்கும் உயரத்தில் படபடப்பான மனநிலையில் இருக்கும் வாசகர்களை ஒரு பஞ்சி (bungee) கயிற்றை காலில் கட்டி உயரத்தில் இருந்து திடீரென தள்ளிவிட்டதைப் போல, சட்டென்று காட்சிகள் மாறி, பரபரப்பான காட்சிகள் அரங்கேறும், உலகின் கனவுத் தொழிற்சாலையான ஹாலிவுடின் ஸ்டுடியோவுக்குள் நம்மை கொண்டு சேர்க்கிறது அடுத்த காட்சி. இங்கே ஸ்டண்ட்மேன் டெட் கானெர்ட்டன், மற்றும் இயக்குனர் பாயெர் (ஈகோன் பாயெரின் தம்பி) நமக்கு அறிமுகமாகிறார்கள். டெட்டுக்கும் பாயெரின்அண்ணன் மகள் ஹெலனுக்கும் இடையே இருந்துவந்த நீண்டகால நட்பு காதலாக மாறும் தருணம். இங்கிருந்து மீண்டும் திபெத்துக்குத் தாவும் கதை, புத்த மடாலயத்தில் பேராசிரியரின் ஆராய்ச்சி முடிவுகளைக் கைப்பற்ற, சீன அரசாங்கம் அனுப்பும் இளம் பெண் ஏஜென்ட் ஜாங் ஜியி. தனியார் துப்பறிவாளர் மாக்ப்ரைட்டையும், அவரது யாருக்கும்-அஞ்சாத “TAKE IT EASY ” குணத்தையும், ஒரு சுவாரஷ்யமான சூழ்நிலையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கதாசிரியர்.

முக்கிய பாத்திரங்களின் அறிமுகத்தை அடுத்து கதை அபரிமிதமான வேகத்தில் பயணிக்கிறது. தந்தையைக் கண்டுபிடிக்க திபெத் பயணம் மேற்கொள்ள, தனது சித்தப்பாவின் அனுமதியை பெற்றுவிடுகிறாள் ஹெலன். ஹெலனின் நண்பன் டெட் அன்-அமெரிக்கன் ஆக்டிவிடீஸ் கமிட்டியின் மேல் தனக்குள்ள பற்றுதலால், ஹெலனின் பயணத்தை தடுக்க முயல, அவனயும் அவன் காதலையும் தூக்கியெறிகிறாள் ஹெலன். துப்பறிவாளர் மாக்ப்ரைடை, சித்தப்பா பாயெர் ஹெலனுடன் பாதுகாப்புக்காக அனுப்புகிறார். திபெத்தில் அவர்கள் பெண் ஏஜென்ட் ஜாங் ஜியியுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சிலுவையில் அறையப்பட்ட ஏசு, அதில் இருந்து உயிர் பிழைத்து தனது ரகசிய ஆதரவாளர்களுடன் திபெத் வழியாக காஸ்மீர் வந்தடைந்தார் மற்றும் அங்கே தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார் எனும் குறிப்புகளை பண்டைய ஆவணங்கள் மூலம் அறிந்துகொண்ட பேராசிரியர் ஈகோன் பாயெர், சீன ராணுவத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து, சில புத்தத் துறவிகளின் உதவியுடன் வேறொரு மடாலயத்தை அடைகிறார். ஸ்ரீநகரில் உள்ள “யூஸ் ஆசாபின்” கல்லறை உண்மையில் ஏசு கிறிஸ்துவின் கல்லறை என்பதையும் திபெத்திய தேடலில் கண்டுபிடிக்கிறார். இந்த புத்தகத்தின் கதைக்கு இது முதுகெலும்பாக அமைகிறது.

ஏசுவின் வாழ்கையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை பல்வேறு கிராமிய, நகரப் புராணக்கதைகளில் பல நுற்றாண்டுகளாக வாழ்ந்துவருகின்றது. ஸ்ரீநகரில் முஸ்லிம் மத துறவிகளின் கட்டுப்பாட்டில் உள்ள “யூஸ் ஆசாப்” எனும் துறவியின் ரோசா பால் கல்லறை அஹம்மத்திய முஸ்லிம்களால் ஏசுவின் கல்லறை என்று இன்றும் நம்பப்படுகிறது. மேலும் ஏசுவின் பணிரெண்டாம் வயது முதல் முப்பது வயதுவரை என்ன செய்துகொண்டிருந்தார் எனும் பதில் கிடைக்காத கேள்விக்கு, அவர் இந்தியாவிலும் திபெத்திலும் தங்கியிருந்து புத்த மத கோட்பாடுகளை கற்று ஞானம் பெற்றார் எனவும் இப்புராணக் கதைகள் பதில் சொல்வதுண்டு. இந்த புராணக்கதைகளின் நம்பிக்கைகளை அற்புதமாக தனது கதைக்கு பயன்படுத்தி அதனைசுற்றி நிகழ்வுகளை சுவாரஸ்யமாக கோர்க்கிறார் கதாசிரியர்.
புத்தகத்தின் கதாசிரியர் ராபெர்டோ டெல் ப்ரோ (Roberto Dal Pra’) , ஓவியர் பாவ்லோ க்ரெல்லா (Paolo Grella). பிரெஞ்சில் “Le Manuscript Interdit” எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட இந்தக் கதை மூன்று பாகங்களாக வெளிவந்தது. பின்னர் ஆங்கிலத்தில் “The Forbidden Manuscript” எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு, இப்போது லயன் காமிக்ஸ் சார்பாக அதன் எடிட்டர் திரு.விஜயன் அவர்களால், ஒரே பாகமாக “தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல” எனும் பெயரில் அழகுற தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .

+ + +
  • கதாசிரியரின் அற்புதமான எடிட்டிங் திறனை புத்தகத்தின் பல கட்டங்களில் காணமுடியும். எந்தவொரு ஜெர்க்கும் இல்லாமல் காட்சிகளும் சூழல்களும் மாறுகின்றன. இந்த மாறுதல்களுக்கிடையே வாசகர்களின் கவனத்தைத் தொடர்ந்து புத்தகம் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்கிறது.
  • டா-வின்சி-கோட் சாயலில் சுவாரஸ்யமான கதைக்களம். பல வரலாற்றுக்குறிப்புகளும் அவை நிகழும் இடங்களும், நிஜத்தினை அல்லது நம்பிகையினை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.
  • கதை புத்தகத்தின் ஒரு கண் என்றால், அசாத்தியமான சித்திரங்கள் புத்தகத்தின் மறு கண்ணாக அமைகின்றன. மென்மையான /கடினமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்களாகட்டும், இயற்கை அன்னையின் மடியில் தவழும் மலை முகடுகளாகட்டும், அல்லது வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த லாஸ் ஏஞ்செல்ஸ் வீதிகளாகட்டும், ஓவியர் பாவ்லோ க்ரெல்லா அசரடிக்கும் திறமையுடன் ஒரு ஓவிய விருந்து படைத்திருக்கிறார். 
  • அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்பு.
  • ஏஜென்ட் ஜாங் ஜியுவும், மாக்ப்ரைட்டும் கதையின் இறுதியில் மங்கலான ஒளியில் உணவு விடுதியில் அமர்ந்திருக்கும் போது “ஏசு கிறிஸ்துவுக்கு துரோகமிழைத்த போது ஜூடாஸ் தந்த முத்தத்தின் மீது எனது சிந்தனை லயித்திருந்தது” என மாக்ப்ரைட் சொல்ல, ஒரு ரொமாண்டிக் மூடுக்கு வரும் ஜாங் ஜியுவிற்கு, சட்டென்று அதன் அர்த்தம் புரியும்போது, அங்கே ஏற்படும் ட்விஸ்ட் ஒரு சினிமாவில் இடம்பெற்றிருந்தால் நிறைய கைதட்டலை பெற்றிருக்கும்.

--------
  • கதையை இன்னமும் கொஞ்சம் தத்துவார்த்தமாக நகர்த்தியிருக்கலாம். அதற்கான வாயப்புகள் ஏராளமாக இருந்தும் கதாசிரியர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. புத்தகத்தில் சினிமாக்களுக்கே உரிய ஒரு கமர்சியல் நெடி அடிக்கிறது.
காமிக்ஸ் அறிமுகமில்லாத புத்தக ஆர்வலர்களுக்கு, இந்தப் புத்தகம் அந்த அற்புத மாயா உலகத்தின் திறவுகோலாக அமைந்து அவர்களின் எண்ணங்களை வண்ணமயமாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை. நினைவுகளிலிருந்து நீங்க மறுக்கும் நிறைவான புத்தகம்.  !
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த இதழ் வெளியான வேளையின் நமது பதிவினை வாசிக்கhttp://lion-muthucomics.blogspot.in/2014/08/blog-post_31.html
இந்த இதழினை இப்போது வாங்க விரும்பும் பட்சத்தில் : http://lioncomics.in/graphic-novels/2891-deva-ragasiyam-thedalukalla.html

Enjoy the day folks ! 

Sunday, January 24, 2016

எட்டும் தூரத்தில் பிப்ரவரி !


நண்பர்களே,

வணக்கம். அது என்னவோ தெரியவில்லை...முன்பெல்லாம் மாதமொரு முறை இதழ்களை வெளியிட்டு வந்த சமயங்களில் முப்பது நாள் இடைவெளியானது ரொம்ப ரொம்பக் குறைச்சலாகத் தெரிந்து வந்தது! ஆனால் இப்போது அதே முப்பது நாட்களுக்கு மத்தியினில் 4 இதழ்கள் வெளிவந்தாலும் – மாதத்தின் முதலிரண்டு வாரங்கள் கழிந்தான பின்னே தொடரும் பொழுதுகளை ஜவ்வாக இழுத்துச் செல்வது போலொரு பிரமை! ஜனவரியின் 4 இதழ்களும் வெளியானது ஏதோ ஒரு யுகத்தில் என்பது போலத் தோன்றிட – இதோ கூப்பிடு தொலைவில் காத்து நிற்கின்றது பிப்ரவரி! And பிப்ரவரியின் கறுப்பு-வெள்ளை ஆதிக்கத்தை ஆரம்பித்து வைப்பது நமது இளவரசியார் எனும் போது – அவரது preview சகிதம் இந்தப் பதிவை ஆரம்பிப்போமே?!

சரியாக 100 சாகஸங்கள் கொண்ட மாடஸ்டி பிளைஸி தொடரினில் நாம் இதுவரையிலும் எத்தனை வெளியிட்டிருப்போமென்ற கணக்கெல்லாம் என்னிடமில்லை – தோராயமாய் 25 கதைகள் என்பது அனுமானம்! ராணி காமிக்ஸில் நம்மை விட இன்னும் அதிகமான கதைகளை வெளியிட்டிருப்பார்கள் எனும் போது – இன்னமும் fresh ஆகக் காத்துள்ள மா.பி. சாகஸங்களை ஒரு விடுமுறை நாளில் பட்டியல் போட்டாக வேண்டும்! இதோ- இம்மாதம் காத்திருக்கும் “சட்டமும், சுருக்குக் கயிறும்” இதழின் அட்டைப்பட முதற்பார்வை மீண்டுமொருமுறை ஓவியர் + டிசைனர் கூட்டணியே பணி செய்துள்ளது இந்த அட்டைப்படத்தினில் ! Peter Romero-வின் ஒரிஜினல் black & white டிசைனை நமது ஓவியர் வண்ணத்தில் வரைந்திட – பின்னணி ; வர்ண மாற்றங்கள் என டிசைனரின் கைவண்ணம் தொடர்ந்துள்ளது ! ஒன்றுக்கு 4 வர்ணப் பின்னணிகளைப் போட்டு பொன்னன் நமக்குக் காட்டிட – இதோ அந்த நான்குமே ! அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்துள்ளோம்! அந்தத் தேர்வு எதுவாகயிருக்குமென்று யூகித்துப் பார்க்கலாமே?
பூர்த்தியடையா டிசைன்கள் இவை...!! மறந்து விட வேண்டாம் !!
இம்முறை இளவரசிக்கு டெய்லர் வேலை பார்த்திட வாய்ப்புகள் ரொம்பவே குறைந்து போய் விட்டன என்பதை நான் சொல்லியே தீர வேண்டும்! Simply becos – கதையின் ஓட்டத்திலேயே ‘காற்றோட்டமான உடுப்புகள்‘ அத்தியாவசியமாகிப் போகின்றனஅவற்றை நான் பர்தா போட்டு மூட எத்தனித்தால் துடைப்பங்கள் நிச்சயம் பார்சலில் தேடி வரும் எனும் போது, ‘நடப்பது நடக்கட்டுமே‘ என்று ஒதுங்குவதைத் தாண்டி வேறெதுவும் செய்திட இயலவில்லைகதையில் அனலும்உடையில் ஜிலீரும் கொண்ட இந்த இதழ் மடிப்பாக்கத்துக்காரரை மாத்திரமின்றி – நம்மில் பலரையும் ரசிகர் மன்ற உறுப்பினர் படிவங்களைக் கோரிடச் செய்யுமென்று நம்புகிறேன்பார்ப்போமே!

Black & White இதழ்களுள் ‘தல‘ டெக்ஸின் 224 பக்க சாகஸமும் இம்மாதம் உண்டென்பதை நாமறிவோம்! “திகில் நகரில் டெக்ஸ்” பற்றி இன்னமும் கொஞ்சம் பில்டப் தருவதில் தப்பில்லை என்று தோன்றுவதால் here goes! “டெக்ஸ் கதைகளில் என்றைக்குமே ஒரு பெரிய ட்விஸ்ட் இருந்ததில்லைவில்லன் யாரென்பதை குழந்தைப்புள்ள கூடக் கண்டுபிடித்து விடுமெனும் போது – பெரிதாய் சஸ்பென்ஸ் ஏதும் இருப்பதில்லை” என அவ்வப்போது சில குரல்கள் பதிவாவதை நாம் கவனித்து வருவது நிஜம் தானேஆனால் இந்த சாகஸம் அந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கச் செய்யப் போகிறதென்ற நம்பிக்கை எனக்குள்ளதுவழக்கம் போல சலனமற்றதொரு சிறு நகரம்உள்ளுர் தாதா கும்பல் என்ற ஓப்பனிங் இருப்பினும் – 215-ம் பக்கம் வரையிலும் ‘யார் வில்லன்?‘ என்ற கேள்விக்கு விடை சொல்லாமலே கதையைக் கொண்டு செல்கிறார் கதாசிரியர்! And க்ளைமேக்ஸில் அரங்கேறும் ஒரு சன்னமான ட்விஸ்ட் – நிச்சயமாய் இரவுக் கழுகின் நேர் கோட்டுக் கதை சொல்லும் பாணிகளுக்குப் புதுசேஒரு slam bang அதிரடி ஆசாமியாக வலம் வராது – அடக்கி வாசிக்கும் கைதேர்ந்த துப்பறிவாளராக நம்மவர் இதழ் முழுவதிலும சுற்றி வருவதும் சமீப காலங்களில் நாம் பார்த்திரா பாணிகுரூரமாய்க் கொலையுண்டு போகும் அழகுப் பெண்களின் எமன் யாரோஎன்பதை டெக்ஸோடு துப்பறிந்திடும் இந்த அனுபவத்தை எழுதும் போது ரொம்பவே  ரசித்தேன் !  டெக்ஸின் ஃபார்முலாவை ரொம்ப நோண்டி விடக் கூடாதே என்பதற்காக ஆங்காங்கே சில ணங் – கும் – சத் – டுமீல் – பூம் – பணால் எல்லாம் இருந்தாலும் – this is a very subtle Tex at work this time! ‘ஓக்லஹோமா‘ கதைக்கு சித்திரங்கள் போட்ட அதே ஓவியா் தான் இந்த சாகஸத்திலும் பணியாற்றியுள்ளார் என்பதால் –pleasant ஆன இரவுக் கழுகாரை ரசித்திடவும் முடிந்திடும்கதையும் அழகுஓவியங்களும் decent என்றால் – டெக்ஸின் presence அந்த சாகஸத்தை ஹிட்டடிக்கச் செய்து விடாதா – என்ன? So - மனதில் பதியப் போகும் ஒரு வித்தியாசமான டெக்ஸ் சாகஸத்திற்கு தயாராகுங்கள் folks!

அதெல்லாம் சரிதான் – ஆனால் இந்தக் கதையை இத்தனை காலமாய் பரணிலேயே உறங்க அனுமதித்தது ஏனோ?” என்ற உங்களின் mind voice எனக்குக் கேட்காமலில்லைநிஜத்தைச் சொல்வதானால் – ‘காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்‘ முயற்சியானது வாங்கிய தர்ம அடியில் சில பல காலத்திற்கு இந்தக் கதையைக் கையில் ஏந்திடவே தயக்கமாகயிருந்ததுஅந்த வீரத் தழும்புகளெல்லாம் மறைந்து மறந்து போன காலகட்டத்தில் இந்த இதழை நிறையத் தடவைகள் எடுத்துப் பரபரவென்று புரட்டியிருக்கிறேன் தான்ஆனால் கதையோட்டத்தில் தென்பட்ட சற்றே குறைச்சலான ஆக்ஷன் என் தலைக்குள் அபாய மணிகளை ஒலிக்கச் செய்ததுடிரேட்மார்க் ஆக்ஷன்அதிரடிகள் கம்மியாக இருப்பின் அது நமக்கு ஒத்துவராதென்ற எண்ணத்தில் இந்தக் கதையை ரொம்பத் தீவிரமாய் பரிசீலிக்க முனையவில்லைஅது மட்டுமின்றி – சென்றாண்டு ‘ஓக்லஹோமா‘ கதை வெளிவரும் வரையிலும் எனக்கு ஓவியர் லெட்டரீயின் பாணி மீது ஏனோ தெரியவில்லைஅத்தனை பெரிய மையல் ஏற்பட்டதில்லை! So “திகில் நகரில் டெக்ஸ்” பக்கங்களைப் புரட்டி விட்டு – அதைவிட ஒரு படி மிரட்டலான ஓவியங்களும்ஆக்ஷனும் கொண்ட இதர கதைகளுக்கு ‘ஜே‘ போட்டு விடுவதே என் வழக்கமாயிருந்ததுஆனால் 2016-ல் டெக்ஸின் slot கூடிப் போனதால் – எல்லாக் கதைகளுமே ஒரே டமால் – டுமீல் பாணியில் அமைந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கமும் எனக்குள் குடிபுகுந்ததுஅப்போது “தி..டெ” ஒரு welcome change ஆக இருக்குமென்று தோன்றியதால் – இதனை முழுமையாக மொழிபெயர்க்க இத்தாலிக்கு அனுப்பினோம்! And ஆங்கிலத்தில் திரும்பி வந்த ஸ்கிரிப்டை எடுத்துப் பணியாற்றத் தொடங்கிய போது – திருப்தியாக இருந்தது! So லேட்டாக வந்தாலும் – லேட்டஸ்டாக வரக் காத்திருக்கும் டெக்ஸ் நமக்கொரு புதுப் பரிமாணத்தைக் காட்டவிருக்கிறார் 

இம்மாதத்தின் இறுதி b & w இதழான “மஞ்சள்பூ மர்மம்” பற்றி நான் புதிதாகச் சொல்ல என்ன இருந்திடப் போகிறதுவெளியான தருணத்தில் அட்டகாச வெற்றி கண்ட இதழிது என்றமட்டிற்கு எனது பால்ய நினைவுகள் உள்ளனதேம்ஸ் நதி முழுவதிலும் படர்ந்து கிடக்கும் அந்த மஞ்சள் மலர்களை நான் ‘ஆ‘வென்று வாய் திறந்து புரட்டிப் புரட்டிப் பார்த்த ஞாபகம் இன்றளவிற்கும் உள்ளதுஅதே போன்ற nostalgic moments-களின் நினைவூட்டலாக இது பலருக்கும் அமைந்திடுமென்பது நிச்சயம்ஞாபக அலைகளைக் கிளறி விடும் இதழாக மட்டுமே இதனைப் பார்த்திடாது – ஒரு தெளிந்த நீரோடை போலான துப்பறியும் கதையாகவும் இதனை ரசித்திடலாம் என்று புது வாசகர்களுக்குத் தைரியமாக recommend செய்வேன்இந்த இதழை அந்நாட்களில் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்திட்டவர் கோவையைச் சேர்ந்தவொரு மூத்த வாசகரே ! நமது இதழ்களைத் தீவிரமாய் ரசித்து வரும் அந்த அன்பான குடும்பம் இன்றைக்கு இந்த மறுபதிப்பினை சற்றே கூடுதலாய் பத்திரப்படுத்துவர் என்பது நிச்சயம்! And அவ்வப்போது நமது வலைப்பதிவையும் அவர்கள் படிப்பதுண்டு எனும் போது – இதனை அவர்கள் படிக்க நேரிடும் பட்சத்தில் ஒரு ஆன்லைன் வணக்கத்தை சொல்லி விடுகிறேனே ! And இந்த இதழின் அட்டைப்படத்தை – கூரியர்கள் கிளம்பிடும் தினத்தன்றைய பதிவில் உங்களுக்குக் காட்டிட எண்ணியுள்ளேன்நமது ஓவியர் மாலையப்பனின் டிசைன் பிரமாதமாக அமைந்துள்ளது!

So - பிப்ரவரியுமே ஒரு அமர்க்கள வாசிப்பு அனுபவத்தைத் தரக் காத்துள்ளதென்பதில் எனக்கு ஐயமில்லைஆண்டின் 12 மாதங்களும் சீராய் – தரமாய் – classy ஆன கதைகளோடு அமைந்திடும் பட்சத்தில் – ஜென்மம் சாபல்யமடைந்திடாதாகனவுகளில் எனக்கு நடந்திடும் இந்த சமாச்சாரம் – நனவிலும் என்றேனும் நிஜமாகிடாதாஎன்ற தேடலில் எங்கள் ஓட்டம் தொடர்கிறது!

அப்புறம் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி‘யின் வெளியீட்டுக் கோரிக்கையோடு சென்ற பதிவில் நண்பர்கள் ஜாலியாகவொரு பிள்ளையார்சுழியைப் போட்டிருந்ததை நான் கவனிக்காதில்லைஏற்கனவே “என் பெயர் டைகர்” ஸ்பெஷல் இதழ் இன்னமும் வெளிச்சத்தைப் பார்த்திரா சூழலில் அடுத்த கட்டைவிரல் கதக்களிக்குத் தயாராவது நம் தில்லாலங்கடி அளவுகோல்களின்படி கூட ரொம்பவே ஓவர் என்பேன்தவிரஓராயிரம் பக்கங்களை நாங்கள் தயாரிக்கத் தயாராகவே இருக்கிறோமென்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் கூட – அத்தனை பக்கங்களை நிரப்புவது எதைக் கொண்டு என்ற கேள்விக்குத் திருப்தியான பதில் தேடிட வேண்டுமல்லவா பிரான்கோ-பெல்ஜிய ஆல்பங்களின் தனித்தனிப் படைப்பாளிகள் பதிப்பகங்கள் கூட்டாஞ்சோற்றுக்கு க்ரீன் சிக்னல் தரத் தயங்குகின்றனர் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் தவிர – அந்தக் கதைத் தொடர்களின் சகலமுமே வண்ணத்திலான ஒரிஜினல்கள் எனும் போது – அவற்றை நாம் b&w ல் வெளியிடுவதும் ரசிக்காது! So அந்தக் கதவைத் தட்டுவதில் பிரயோஜனமில்லை எனும் போது – பிறவியிலேயே b&w அவதாரம் கண்ட இத்தாலியக் கதைகளையோபிரிட்டிஷ் படைப்புகளையோ தான் நாடியாக வேண்டும்திரும்பிய திசையெல்லாம் டெக்ஸ் தான் என 2016-ன் அட்டவணை ஆன பிற்பாடு – இது போன்றதொரு தொகுப்பினுள் இன்னொரு ராட்சஸ டெக்ஸ் கதையைச் செருகிடும் பட்சத்தில் – திகட்டிப் போய் விடாதாஅது மட்டுமன்றி, 1000 பக்கங்களெனும் மைல்கல்லை சும்மாகாச்சும் தொட்டு விடும் ஆசையின் காரணத்தினால் மாத்திரமே இது போன்ற முயற்சிக்குள் குதிப்பது சற்றே செயற்கையாக இருக்குமல்லவாஒரு பொருத்தமான தருணம் நெருங்கிடும் சமயம்அதனை சிறப்பிக்கும் விதமாய் திட்டமிடுவது இயல்பாக இருப்பதோடு – பணியாற்றவும் ஒரு உத்வேகத்தைத் தந்திடும்! So- சற்றே பொறுமை ப்ளீஸ்அதற்காக கனவுகள் காண வேண்டாமென்றோ ; ஆசைகளை வெளிப்படுத்திட வேண்டாமென்றோ நான் சொல்லப் போவதில்லை! In fact ஒவ்வொரு லாத்தலான வேளையினிலும் - ஏதேனுமொரு மெகா இதழின் மகா சிந்தனை (!!!) என் தலைக்குள் ஓடிக்கொண்டே இருப்பது தான் வாடிக்கை ! சரியான சந்தர்ப்பம் அமையும் போது - அலாவுதீன் பூதம் போல அறிவிப்பும் உங்கள் முன்னே ஆஜராகி நிற்கும் !! 

சென்னையில் 26 ஜனவரி வரையில் நடந்திடும் ‘பொங்கல் புத்தக விழாவினில்‘ வார நாட்களில் மிதமான விற்பனையும்வாரயிறுதிகளில் சுறுசுறுப்பான விற்பனைகளும் நடந்தேறி வருகின்றன நமது ஸ்டாலில் !தொடரும் நாட்களில் அழகான விற்பனை கிட்டின் –BAPAS! விழாவின் வசூலில் ஒரு பகுதியைத் தொட்டிருப்போம்பசித்துக் கிடந்தவனுககு தலப்பாகட்டி பிரியாணி கிடைக்காவிட்டாலும்சரவணபவன் வெரைட்டி ரைஸாவது கிடைத்ததே என்ற திருப்தியில் நடையைக் கட்டிடுவோம்! Fingers crossed! வழக்கமாய் 750 ஸ்டால்கள் கொண்ட BAPASI விழாவில் எங்கோ ஒரு மூலையில் நாம் கிடந்தால் கூடநம்மவர்களின் உற்சாகங்களும்ஆர்வங்களும் நிறையவே கவனிக்கப்படுவது வாடிக்கைஇம்முறையோ இது 200 ஸ்டால்களே கொண்ட விழா எனும் போது – நமக்குச் சேர்ந்திடும் ஜனத்திரள் கூடுதல் உன்னிப்போடு கவனிக்கப்பட்டு வருகிறதுஅதிலும் இரு பத்திரிகையுலக ஜாம்பவான்களின் டீம்கள் நமது இதழ்கள் சகலத்தையும் வாங்கிச் சென்றுள்ளனர் எனும் போது ரொம்பச் சீக்கிரமே ‘காமிக்ஸ்‘ என்ற வார்த்தை பலரது அகராதிகளுக்குள் ‘திடும்‘ பிரவேசம் செய்திடப் போவது உறுதி என்று நினைக்கத் தோன்றுகிறது நமது “மின்னும் மரணம்” & LMS இதழ்கள் பதிப்பக உலகினில் பல உயரும் புருவங்களுக்குக் காரணமாகியிருப்பதை ஏற்கனவே மார்க்கெட்டிலிருந்து கிட்டிய சேதிகள் வாயிலாக அறிய முடிந்திருந்தது இம்முறையோ அவற்றை இன்னமும் தீர்க்கமாய் பார்க்க முடிந்துள்ளது ! முன்பெல்லாம் புதுசாய்போட்டிக்குக் காமிக்ஸ் ஏதேனும் வருகிறதெனில் காது வழியாய் புகை படர்வது வாடிக்கைஆனால் இன்றைக்கோ – சன்னமானதொரு சட்டிக்குள் குதிரையோட்டிப் பழகிவிட்ட நிலையில் துணைக்கு யாரேனும் வந்தால் தேவலையே என்ற எண்ணம் இல்லாதில்லை. And- பெரிய நிறுவனங்கள் காமிக்ஸ் உலகினுள் கால்பதிக்கும் பட்சத்தில் மீடியாவின் பார்வைகளும் காமிக்ஸ் எனும் துறை மீது விழுவது நிச்சயம்நெல்லுக்குப் பாயும் நீர் – புல்லுக்கும் சற்றே பாய்ந்தாலும் சந்தோஷம் தானேகொஞ்சம் கொஞ்சமாக ‘பொம்மை புக்‘ என்ற stigma விலகிட புதுவரவுகள் உதவிட்டால் அதை விடச் சந்தோஷம் கொள்ளச் செய்யும் சேதிகள் வேறு இருக்க முடியுமாஎன்ன

விழாவின் ஒரு மாலைப் பொழுதினில், அமைப்பாளர்கள் நமது ஸ்டாலுக்கு ஆள் அனுப்பி - நடிகரும், டைரக்டருமான திரு.பொன்வண்ணன் அவர்கள் வரவுள்ளதாகச் சொல்லிச் சென்றிருந்தனர் ! திரு.பொன்வண்ணன் அவர்கள் நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் நம்மிடம் பணியிலிருந்த நாட்கள் முதலாகவே ரொம்பவே ஆர்வமான காமிக்ஸ் ரசிகர் ! ஸ்டாலுக்கு வந்தவர் போனில் ரொம்பவே சகஜமாய்ப் பேசிய கையோடு வாட்சப்பில் போட்டோக்களையும் அனுப்பி வைத்தார் !! பால்யம் முதலே காமிக்ஸ் ரசனைக்குள் ஐக்கியமானது பற்றியும்,  "பாம்புத் தீவு" இதழைப் பற்றியும், இரும்புக்கை மாயவியைப் பற்றியுமவர் சிலாகித்த பொழுது - நமது மின்சார மன்னன் கலக்காத திக்கே கிடையாது என்பது புரிந்தது ! நமது நன்றிகள் திரு.பொன்வண்ணன் அவர்களது  அன்புக்கு ! 

அப்புறம், தொடரக் காத்திருக்கும் திருப்பூர் புத்தக விழாவினில் குறைவான ஸ்டால்களே இடம்பெற இருப்பதால் நமக்கு "இடம் நஹி!" என்று கையை விரித்து  விட்டார்கள்  ! So கோவை & திருப்பூர் மண்டலங்களில் நாம் கடைபோடும் வாய்ப்பு இன்னமும் அமைந்த பாடைக் காணோம் ! காத்திருப்போம் பொறுமையாய் !! சரி, உறக்கம் ஆளை அசத்துவதால் bye சொல்லிவிட்டுப் புறப்படுகிறேன் ! See you around all ! Have an awesome weekend !