Powered By Blogger

Saturday, February 24, 2024

ஜாவாவின் ஜலபுல ஜங்ஸ்..!

 ம்ம்ம்க்ஹ்ஹ்ஹ ,

ர்ர்ஹ்ஹ்ஸ்க்க் ! க்ஹ்ஹ்ர் ...? ப்ஹ்ர் !

என்ன கண்றாவிலே இது - என்கிறீர்களா ? அட, ஒண்ணும் இல்லே மக்கா, ஒரு வாரமா மார்ட்டின் கூட சுற்றித் திரிஞ்சேனா - அவரோட அசிஸ்டண்ட் ஜாவாவின் பாஷை நம்மளையும் தொத்திக்கிச்சு ! So அந்த குகை மனுஷனின் பாணியிலே..."அல்லாரையும் கும்புடறேன் ! நல்லா கீறீங்களா ?"ன்னு தான் கேட்டிருந்தேன் - மேலேயுள்ள பத்தியில் ! 

ஹீரோ மார்ட்டின் மேல பாசம் பீச்சிடலாம் - ஓ.கே. ; ஆனா அதென்ன சைடு பார்ட்டி ஜாவா மேலே திடீர் பாசம் என்கிறீர்களா ? காரணம் இருக்கே ! காத்திருக்கும் மார்ச் வெளியீடான "ஆர்டிக் அசுரன்" இதழில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜாவாவுக்கு முக்கியத்துவம் இருக்கே ! முக்கியத்துவம் மட்டுமில்லே ; முன்னெப்போதும் இல்லாத மாதிரி அவருக்கொரு லவ்ஸ் இருக்கே ! லவ்ஸ் மட்டுமில்லே...அத்தோட சேர்த்து ஒரு 'கபி..கபி'யும் இருக்குதே ! முன்னர் கார்சனுக்கொரு 'கபி கபி' தந்திட படைப்பாளிகள் மனம் இறங்கியது போல் பாவப்பட்ட ஜாவாவுக்கும் ஒரு ஜாலிலோவை இந்த ஆல்பத்தில் தந்துள்ளார்கள் ! பாருங்களேன் folks : 


ஆர்டிக் அசுரன் !

2 ஆண்டுகளுக்கு முன்னமே வெளிவந்திருக்க வேண்டியதொரு சாகசம் ! இதனையும், "வரலாற்றுக்கொரு வாடிவாசல்" ஆல்பத்தினையும் ஒருசேர வாங்கியிருந்தோம் ! And அந்த ஆண்டின் திட்டமிடலில் அசுரனே முதல் இடம் பிடித்திருக்க, கருணையானந்தம் அவர்களிடம் மொழிபெயர்ப்புக்குப் போயிருந்தது ! அவரோ, 'ஒண்ணுமே புரிலேப்பா !' என்று திருப்பி அனுப்பியிருந்தார் ! அந்நேரமோ, எனது மூத்த சகோதரியின் மகனது திருமண வேளை என்பது நினைவில் உள்ளது ! So 'அசுரனை அப்புறமா பார்த்துக்கலாம் மைதீன் ; 'வரலாற்றின் வாடிவாசல்' கதை பாதி எழுதினமட்டுக்கு இருக்கு ....மிச்சத்தை பூர்த்தி செஞ்சு தாரேன் !" என்றபடிக்கே, அந்தக் கப்பலில் ஏறி அந்த ஆண்டின் சவாரியைப் பூர்த்தி செய்திருந்தோம் ! மிகச் சரியாக, 2 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, எனது இளைய சகோதரியின் மகனது திருமணத் தருணத்தினுள், அசுரனை கரைசேர்க்கும் நேரமும் புலர்ந்திருந்தது செம தற்செயல் ! அதே போல மார்டினின் பிதாமகர் - திரு காஸ்டெல்லினி அவர்கள் இயற்கை எய்திய பொழுதோடு ஒத்துச் செல்லும் விதமாய் இந்த இதழது timing அமைந்ததுமே செம தற்செயல் ! 

ஸ்டீலின் பதிவுகளை / கவிதைகளை  வாசிச்சுக்கிட்டே, இடியாப்பத்தையும், நூடுல்ஸையும் ஒருசேரச் சாப்பிடும் உணர்வினை மார்டினின் கதைகள் விதிவிலக்கின்றித் தரவல்லவை என்பதில் no secrets ! ஆக எப்போது மார்ட்டின் கதைகளைக் கையில் எடுத்தாலுமே லைட்டாய் உதறுவது வாடிக்கை ; and இது "சுத்தமாப் புரிலேப்பா !" என்ற கமெண்ட் சகிதம் திரும்பி வந்த சாகசமெனும் போது உதறல் ஒரு மிடறு ஜாஸ்தியாகவே இருந்தது ! And இங்கு இன்னொரு பொதுவான விஷயமுமே ! இன்டர்நெட்டுக்கு முந்தைய காலகட்டங்களில், இது போன்ற நேர்கோடல்லாத கதைகள் புரியுதோ-புரியலியோ, மேம்போக்காய் பூசி மெழுகியிருந்திருப்போம் தான் ! ஆனால் இணையத்தில் தேடல்கள் சாத்தியமென்றான பிற்பாடு ஒவ்வொரு non-linear சாகசத்தினுள்ளும் வண்டி வண்டியாய் பின்னணித் தகவல்களைத் திரட்டிடல் அவசியமென்றாகி விட்டுள்ளது ! XIII தொடரில் ; டெட்வுட் டிக்கில் ; தாத்தாக்கள் கதைகளில் ; மார்ட்டின் ஆல்பங்களில் ; அட, டைகர் ஆல்பங்களில் கூட கூகுளாண்டவர் நமக்கு அருளியுள்ள விபரங்கள் ஒரு வண்டி !! And "ஆர்டிக் அசுரன்" அதற்கொரு பிரதம உதாரணம் ! கதைக்களமோ நடுக்கும் வட துருவம் ; கதைக்காலமோ 1850 ! கதைமாந்தர்களோ இன்யுவெட் எனப்படும் ஆர்டிக் வாழ் மக்களும், பிரிட்டிஷ் மாலுமிகளும், அப்புறம்...அப்புறம் சில பல அசுர ஜென்மங்களுமே ! So எங்கோ ஒரு தமிழக மூலையில் குந்திக் கிடக்கும் நமக்கு, 175 ஆண்டுகளுக்கு முன்பான இந்த  அந்நிய களம் பற்றிய பரிச்சயம் பூஜ்யமாகத் தானே இருக்கக்கூடும் ?! அந்தப் பூஜ்யத்தினில் துவக்கினேன் பேனா பிடிக்கும் படலத்தினை ! துவக்கம் என்னவோ சமகால நியூயார்க்கில் ரொம்பவே அழகான சித்திரபாணியில் இருந்திட, உற்சாகமாய் வண்டி ஸ்டார்ட் ஆனது ! ஆனால் கண்ணிமைக்கும் நொடிக்குள் கதாசிரியர் ஒரு யு-டர்ன் போட்டு நேரா ஒரு ஆர்டிக் புளியமரமாய்ப் பார்த்து வண்டியை அதன் மேலேற்றி....அதன் பின்னே மரத்துக்கு மரம் கப்பலில் டிராவல் என்று சொல்லாத குறையாய் ஏதேதோ அதிரடிகளை இறக்க ஆரம்பிக்க, அப்போது ஓபன் பண்ணினேன் கூகுள் டியூஷனை ! கழுத, பல்போகும் வயசிலே இன்றைக்குச் செய்திடும் ஆய்வுகளையும், எழுதிடும் டன் டன்னான பக்கங்களையும் நான் படிக்கிற வயசிலேயே செஞ்சிருந்தால், நிச்சயமா ஏதாச்சும் மெடல்-கிடலாச்சும் வாங்கியிருக்கலாம் போல - அம்புட்டுத் தேடல்கள் இப்போதெல்லாம் அவசியமாகின்றன ! நிஜ சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும், துளியூண்டு அமானுஷ்யம் கலந்து கட்டி கதாசிரியர் பரிமாறியிருக்கும் இந்த விருந்தில் கூகுள் துணையின்றிப் புகுந்திருந்த கருணையானந்தம் அங்கிள்  திகைத்துப் போயிருந்ததில் வியப்பே இல்லை தான் என்பது புரிந்தது ! எங்கே நிஜம் முடிகிறது ? எங்கே கற்பனை சிறகு விரிக்கிறது ? வாய்க்குள் நுழையவே செய்யாத பெயர்களின் உச்சரிப்பென்ன ? பழம் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் திகிலான ஜென்மங்களின் பின்னணி தான் என்ன ? என்று தேடித்தேடி எழுத வேண்டிப் போனது ! And கதை நிகழ்ந்திடும் 175 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்திலேயே ஒரு side track-ல் வைக்கிங்குகளின் வருகை ; அவர்களோடு ஒரு மினி பயணம் ; பச்சக்கென்று 'கட்' பண்ணி நிகழ்கால வடதுருவம் ; சச்சக்கென்று இன்னொரு 'கட்' பண்ணி சமகால நியூயார்க் ; இவற்றினூடே கதாசிரியரின் சில தார்மீக உணர்வுடனான கேள்விகள் - என்று தெறிக்கத் தெறிக்க  டிராவல் செய்கிறது இந்த 80 பக்க ஆல்பம் !  இதன் மத்தியில் நம்ம ஜாவாவின் ஜலபுல ஜங்ஸ் வேறு ! Phew ....!! டெக்ஸ் வில்லரின் கதைகள் 220 பக்கங்கள் கொண்டவை ; ஆனால் டிக்கியை இருத்தி எழுத ஆரம்பித்தால் கைவிரல்கள் நோவுமே தவிர்த்து, மண்டையைப் பிய்க்க அவசியமாகிடாது ! ஆனால் அதில் மூன்றிலொரு பங்குப் பக்கங்களே கொண்டிருந்தாலும், மார்டினை கரைசேர்ப்பதற்குள் தலைக்கு ரெண்டுவாட்டி டை அடிக்க வேண்டிப்போகும் போலும் !! சகலத்தையும் முடித்து இன்று மார்ட்டின் பிரிண்ட் ஆகியிருப்பதைப் பார்த்த போது மனசுக்குள் ஒரு இனம்புரியா சந்தோஷம் நிலவியதை மறுக்க மாட்டேன் ! 

ஆர்டிக் அசுரன் - ஒரு மறக்கவியலா டெரர் பயணம் !! பாருங்களேன் - இந்த இன்னொரு பக்க ப்ரீவியூவையும் :

மார்ச்சின் வாசிப்பில் இது முதலிடம் பிடித்தால் நான் வியப்படையவே மாட்டேன் தான் ! 

Moving on, இதோ - மார்ச்சின் நமது தலைமகன் !! நிஜத்தைச் சொல்வதானால் இந்த 2024 புலர்ந்தது முதலாய் முதல் 2 மாதங்களிலுமே நம்மவர் முதலிடத்தில் நிற்கவில்லை என்பதே நிஜம் ! ஜனவரியை டின்டினின் அதகள அறிமுகமும், லார்கோவின் பரபர மீள்வருகையும் ஆக்கிரமத்திருந்தன ! பிப்ரவரியின் ஒளிவட்டத்தை டெட்வுட் டிக்கும் ; இளவரசியும் பகிர்ந்திருந்தனர் ! So இந்த மார்ச் மாதத்திலும் தல ஒரு tough போட்டி சந்திக்கவிருக்கிறார் - சக இத்தாலிய ; சக போனெல்லி நாயகர்களின் ரூபத்தில் ! பார்க்கலாமே - இம்முறை நிலவரம் என்னவென்று ! இதோ - ஒரிஜினல் ராப்பருடன் டெக்ஸ் & கார்சனின் "புயலுக்குப் பின்னே பிரளயம்" சார்ந்த preview : 

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னே வெளியான "ஒரு மௌன நகரம்" கதையினை நினைவூட்டும் template இங்கும் ! ஆனால் கதை பயணிப்பதோ வேறொரு ரூட்டில் ! இந்த ஆல்பம் 2 மாதங்களுக்கு முன்னே வெளியாகியிருந்தால், வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நம்மூர்களின் நிலையினைப் பிரதிபலித்தது போலிருந்திருக்கும் - becos கதை ஆரம்பிக்கும் போதே நமது ரேஞ்சர்கள் அறிமுகமாவது குதிரைகளின் மீதமர்ந்தல்ல !! மாறாக - 'ஏலேலோ ஐலசா..' என்று துடுப்புப் போட்டபடியே ஊருக்குள் நுழைகிறார்கள் ! And வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு இளம் பெண்ணின் சடலம் அவர்களை வழிமறிக்கிறது ! யாரந்த மங்கை ? அவளைக் கொலை செய்த கொடூரன் யார் ? கொலைக்கான முகாந்திரமென்ன ? என்று தேடலை ஆரம்பிக்கிறார்கள் டெக்ஸ் & கார்சன் ! Yet another வித்தியாசமான ஓவிய பாணியில் - சிம்பிளாய், அழகாய் நமது ஆதர்ஷ நாயகர்கள் பவனி வருகிறார்கள் ! பாருங்களேன் ! 

இந்த மார்ச்சில் காத்துள்ள 3 இதழ்களுமே black & white தான் ; மூன்றுமே போனெல்லியின் நாயகர்கள் தான் (டெக்ஸ் ; மார்ட்டின் & மிஸ்டர் நோ) & மூன்றுமே செம crisp வாசிப்புகளே ! So பரணில் சாத்திப் போடும் படலங்களுக்கு இம்முறையுமே அவசியமிராதென்று தோன்றுகிறது ! Fingers crossed ! 

இந்த நொடியில் எனது கேள்வி இது தான் : இந்த மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?

And கேள்வி # 2 : பிப்ரவரியின் மூன்று இதழ்களுக்கான உங்களின் ரேங்க் எவ்விதம் இருக்கும் ? (மாடஸ்டி ; டெட்வுட் டிக் & டெக்ஸ்) 

கலர் மேளா ஏப்ரல் முதலாய் தோரணம் கட்டத் தயாராகி வருகிறது ! And அதற்கொரு முன்னோடியாய் பெளன்சர் மறுக்கா ஆஜராகிறார் ஏப்ரலில் ! தெறிக்கும் கோடை மலர் guys ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now ...have a lovely weekend all ! 

Tuesday, February 20, 2024

பல்லடத்துப் படலம் !

நண்பர்களே,

வணக்கம். காமிக் கான் ஞாயிறு ....!! எழுந்த போதே கொட்டாவியோடு ஒரு சன்னமான பரபரப்பும் தொற்றிக்கொண்டிருந்தது ! 'இன்னிக்கி தானே டின்டின் கூப்பன்களின் லக்கி டிரா ; நேபாளம் செல்லவிருக்கும் அதிர்ஷ்டசாலியைத் (!!) தேடிப் பிடிக்கவிருக்கும் நாள் !!' என்ற எண்ணம் உள்ளுக்குள் வேகம் எடுத்துக் கொண்டிருந்தது ! ஆனால் இன்னொரு பக்கமோ லைட்டாய் ஒரு கலக்கமும் ! ஒரு பேமிலி தோசையை மடக்காமல் அப்படியே வைக்கக்கூட சிரமப்படும் அளவிலானதொரு புறாக்கூடு ஸ்டால் ; எதிர்த்தாப்லே பாதையில் நின்னால் குச்சைக் கொண்டு குத்தும் தன்னார்வலர் குழு ; பற்றாக்குறைக்கு இந்த தொள்ளாயிரம் ரூபாய் நுழைவுக்கட்டணம் மிரட்டுவதில் ரொம்பச் சொற்பமாகவே நமது ரெகுலர் வாசகர்கள் வருகை தந்திடும் நிலவரம் !! இவற்றினூடே குலுக்கலை நடத்துவது எவ்விதம் ? சிவனேன்னு ஊருக்குப் போய் சீனியர் எடிட்டரை சீட்டெடுக்கச் சொல்லிப்புட்டு அதை லைவில் காட்டிடலாமா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது ! ஆனால் "அம்புட்டு சீட்டிலேயும் ஒரே பெயரை எழுதிப்புட்டானுங்க ! எந்த சுவிட்சை அமுக்கினாலும் மேற்படிக் கட்சிக்குத் தான் ஓட்டு விழுகுதுடோய் !" என்ற ரீதியில் நம்மை மு.ச.க்குள் பிதுக்க ரெடியாகி விடும் காட்சி மனக்கண்ணில் ஓட, அந்த எண்ணத்தை சடுதியில் டிராப் செய்து விட்டேன் ! ஒண்ணும் இல்லாங்காட்டி - ஸ்பைடர்மேனாய், அனிமே கதாப்பாத்திரங்களாய் டிரெஸ் பண்ணிக்கொண்டு போற வார குட்டீஸ்களில் யாரையாச்சும் ஸ்டாலுக்குள் கூட்டியாந்து டப்பிக்குள் கைவிட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்ல வேண்டியது தானென்று தீர்மானித்திருந்தேன் !

காமிக் கானில் என்ன எதிர்பார்ப்பதென்று முதல் தினத்தின் உபயத்தில் நன்றாகவே புரிந்திருக்க, அது சார்ந்த குறுகுறுப்பு என்னுள் இல்லை ! முதல் நாளின் விற்பனையில் மாயாவி ஹெவியாய் ஸ்கோர் செய்திருந்தார் ; இத்தனைக்கும் நாம் லேட்டஸ்ட்டாய் மறுபதிப்பிட்ட இரண்டே title-களைத் தான் கொண்டு போயிருந்தோம் ! And டெக்சிலுமே லேட்டஸ்ட்டாக வெளிவந்திருந்த மூன்றே டைட்டில்களைத் தான் சென்னைக்குப் பயணமாகியிருந்தது ! So அவசரம் அவசரமாய் மாயாவியில் மேற்கொண்டு புக்ஸ் ; டெக்சில் இன்னும் சில டைட்டில்ஸ் என்று சிவகாசியிலிருந்து போட்டு விடச் சொல்லியிருக்க, அவற்றை நமது staff சரவண கணேஷ் எடுத்தும் கொணர்ந்து ஸ்டாலில் சேர்த்த சற்றைக்கெல்லாம் நானுமே அங்கே ஆஜராகியிருந்தேன் ! 

மணி 11 ஆன நொடியே முதல் நாளைப் போலவே விசிட்டர்ஸ் சுனாமியாய் உட்புகுந்தனர் !! சனிக்கிழமையைப் போலவே ஓட்டமாய்ப் போய் பொம்மை கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த நீள நீளமான சாமுராய் கத்திகளையும், டி-ஷர்ட்களையும் ரவுண்டு கட்டத் துவங்கினர் ! நான் கூட அந்தக் கத்தி ஒரு நானூறு, ஐநூறு இருக்குமென்று நினைத்திருந்தேன் - அது விற்பனையாகும் துரிதத்தைப் பார்த்து ! ஆனால் சாமுராய் வாளும் கையுமாய்,  தனது ஜூனியரோடு ஸ்டாலுக்கு வந்திருந்த ரெகுலர் வாசக நண்பரிடம் கேட்ட போது - "விலை 2500 சார்" என்றார் !! "சர்தான் - இவுகளுக்குலாம் மூ.ச.கிடையாது போல...நல்லா வருவீங்கடா டேய் கடைக்காரனுங்களா !!" என்று நினைத்துக் கொண்டேன் ! டி-ஷர்ட்களிலும் இதே கூத்தே நடந்து கொண்டிருந்தது ! ஈரோட்டுச் சந்தையிலோ ; திருப்பூரின் எக்ஸ்போட் மீதங்களிலோ, அம்பது ரூபாய்க்கு அள்ளிக்கினு, இன்னொரு முப்பது-நாப்பது ரூபாய்க்கு அவற்றின் மீது பிரிண்ட் போட்டுக்கினு - அவற்றை "ONLY 599 ; ரெண்டா வாங்குனா ரூ.999 " என்று ஓட்டிக்கொண்டிருந்தார்கள் ! இதையெல்லாம் பார்த்து விட்டு நம்மாட்களும் - "சார்...நாமளும் பொம்மை போடுவோம் ; டி-ஷர்ட் போடுவோம் ; போஸ்டர் போடுவோம் !" என்று பொங்காதில்லை ! ஆனால் இந்தக் கடைக்காரர்களுக்கு போணியாகும் சரக்குக்கும், நாம் இதனில் மெனெக்கெட்டால் ரெடி செய்திடக்கூடிய சரக்குக்கும் பெரும் வித்தியாசம் இல்லாது போகாதென்பதை பொறுமையாய்ப் புரிய வைத்தேன் ! இந்த காமிக் கான்  தலைமுறை தேடித் தேடி ; ஓடி ஓடி சேகரிப்பவை சகலமும் ஜப்பானிய மங்கா, அனிமே தொடர்களின் நாயக உருவங்கள் & இத்யாதிகளே ! அந்தப் பரிச்சயமற்ற நமக்கோ - "யார்டா இந்தப் பூச்சாண்டிகள் ?" என்று தான் கேட்கத் தோன்றும் ! "லக்கி லூக் டி-ஷர்ட்கள்" என தயாரித்தோமென்று வைத்துக் கொள்ளுங்களேன் - இந்த 2k கிட்ஸுக்கு பெருசாய் ஈர்ப்பெல்லாம் இருக்குமா ? என்பதில் பலத்த சந்தேகமுண்டு எனக்கு ! ரைட்டு, நம்ம ரெகுலர் வாசகர்கள் மத்தியில் அவற்றை விற்றிடலாமென்றால் - ஆன்லைன் மட்டுமே அதற்கான வாய்ப்பாக இருந்திடக்கூடும் - simply becos புக்ஸ் அல்லாத எதையுமே  காமிக் கான் தவிர்த்த ரெகுலர் புத்தக விழாக்களில் விற்பனை செய்திட அனுமதிக்க மாட்டார்கள் ! And ஆன்லைனில் இங்கிலீஷ் காமிக்ஸ் விற்கும் ஆமை வேகத்தில் இவையும் நகர்ந்திடும் பட்சத்தில் - காசை முடக்கியதே மிச்சமாகும் ! தவிர இதற்கெனவென்று ஊர் ஊராய் நடக்கும் காமிக் கான்களிலெல்லாம் நாம் பங்கேற்பதும் நடைமுறை சாத்தியமற்ற சமாச்சாரம் ! So கண்ணெதிரே யூத் பட்டாளம் அடிக்கும் ரகளைகளை ரசிப்பதோடு போய்க்கினே இருப்பதே இப்போதைக்காவது நலமென்று எனக்குத் தோன்றியதை நண்பர்களிடம் விளக்கினேன் ! But still - பார்க்கலாமே.......மாறும் நாட்களில் இந்த merchandise தடத்தினுள் நியாயமான விலைகளோடு, நாமும் புகுந்திட வாய்ப்பேதாச்சும் அமையுமாவென்று ! அப்டிக்கிப்பிடி நாமுமே பெரூசாய் கத்தியெல்லாம் போட்டோமென்றால். நம்ம சேலத்து டாக்டர் சுந்தர்லாம் - "மர்மக்கத்தி சார் " என்றபடிக்கே ஒரு ஆடறுக்கும் சைசிலான சாமுராய் பொம்மைக்கத்தியோடு போஸ் கொடுப்பாரோ - என்னவோ ?!  

இங்கிலீஷ் கிராபிக் நாவல்களைக் குவித்துக் கொணர்ந்திருந்த ஓரிரு புத்தகக்கடைகளுக்குள் கூட்டம் பொங்குவதற்கு முன்பாய் புகுந்தால் கொஞ்சம் பார்க்கலாமே ? என்று தோன்றியதும், விறுவிறுவென்று அங்கே நடந்தேன் !  ஜிலு-ஜிலுவென்று காட்சி தந்த அமெரிக்கப் படைப்புகள் ; அவ்வளவும் ஹார்ட் கவர்களில் & அவ்வளவும் 1600 ; 2000 என்ற ரேஞ்சிலான விலைகளில் ! இன்னும் ஆறாயிரம் ; எட்டாயிரம் விலைகளுக்குமே box sets ; தொகுப்புகள் என்றிருந்தன ! சுற்றிச் சுற்றி வந்து விலைகளை பார்த்தபடிக்கே 'ஆவென்று' வாய்பிளந்து கொண்டிருந்த ஜனம் மத்தியில் - "இப்போ தெரியுதுடா லயன்-முத்து காமிக்ஸ் விலைகளோட அருமை !" என்றொரு குரல் ஒலித்ததும் காதில் விழுந்தது ! சின்னதொரு புன்னகையோடு, நான் தேர்வு செய்திருந்த சில புக்ஸுக்கு ஏழாயிரத்து சொச்சம் காசைக் கட்டிவிட்டு நம்ம ஸ்டாலுக்குத் திரும்பினேன் ! 

அதற்குள் நமது ரெகுலர் நண்பர்கள் ஒவ்வொருவராக எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தனர் ! முன்னாள் அய்யம்பாளையத்தாரும், இந்நாள் சென்னைப்பட்டினத்தாருமான வெங்கடேஸ்வரன் சார் தனது மகளுடன் ஆஜராகியிருந்தார் - "இது என்ன சார் கூத்தா இருக்கு - காமிக்ஸ் கான்னு பேர போட்டுப்புட்டு புக்ஸ் தவிர பாக்கி எல்லாத்தையும் விக்குறாங்களே ?" என்ற கேள்வியுடன் ! "ப்ரீயா விடுங்க சார் ; இதுவொரு யூத் உலகம் !" என்றபோதே தலைக்குள் தீர்மானித்திருந்தேன் - நண்பரின் மகளைத் தான் லக்கி டிரா சீட்டை எடுக்கச் சொல்லணுமென்று ! சற்றைக்கெல்லாம் பல்லடம் சரவண குமார் சார் ; நம்ம செந்தில் சத்யா ; சேலத்திலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்தும் சேலம் குமார் சார் with ஜூனியர் ; நண்பர் ஸ்ரீராம் ; சுரேஷ் தனபால் சார் ; ஆத்தூர் மாதேஸ்வரன் சார் ; நண்பர் ரபீக் ராஜா என்று கூடியதும், "ரைட்டு...குலுக்கிப்புடுவோமா ?" என்றபடிக்கே டின்டின் டப்பியினை வெளியே எடுத்தேன். மொத்தம் 312 நண்பர்கள் அனுப்பியிருந்த கூப்பன்கள் உள்ளே இருந்தன ! 'நம்ம இந்த பொட்டியின் பக்கத்திலே கூட போகப்படாதுடா சாமி !' என்றபடிக்கே லைவ் வீடியோ எடுக்கும் பொறுப்பை பல்லடத்தாரிடம் ஒப்படைத்திருந்தேன் & அவரும் முன்னாடி நின்றபடிக்கே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் ! 

டப்பிக்குள் கையை விட்டு செமையாகக் கிளறிவிட்டு ஒரேயொரு சீட்டை எடுக்கும்படி ஹரிணியிடம் சொன்னேன் & அவரும் அதை அழகாய்ச் செய்தபடிக்கே ஒரு சீட்டை நீட்டினார் ! நீயே பிரிச்சு காட்டும்மா" என்றவுடன் அதனை ஓபன் பண்ணி என்னிடம் காட்டிய நொடியில் தூக்கிவாரிப் போட்டது எனக்கு !! "சரவணகுமார் பல்லடம்" என்றிருந்தது அந்தச் சீட்டில் !!!! வெற்றி பெற்று நேபாளம் செல்லவிருப்பவரின் பெயரை நண்பர்களுக்குக் காட்டிய நொடியில் அதே இடமே ஒரு சந்தோஷக்களேபர பூமியானது ! முன்னே மஞ்சள்சட்டை மாவீரராய் நின்றபடிக்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரின் முகத்திலோ ஓராயிரம் குழப்ப ரேகைகள் ! ஒரு மாதிரியாய், ஜெயம் கண்டு, நேபாளம் செல்லவிருப்பது நீங்களே தான் சார் - என்று அவருக்கு உணர்த்திய போது அவரது முகத்தில் நவரசங்களும் நாட்டியமாடின ! வெற்றி பெற்ற வியப்பு ஒரு பக்கம் ; மகிழ்வு இன்னொரு பக்கம்....அப்புறம்  'என்ன மட்டும் வீட்டிலே தனியா போக உடமாட்டாங்களே சார் - நீங்க ஒரு டிக்கெட் போட்ருவீங்க ; நானோ வீட்டார் 3 பேருக்கு மேற்கொண்டு போட்டாக வேண்டி வருமே !!' என்ற கவலை இன்னொரு பக்கமென்று புலம்ப ஆரம்பித்திருந்தார் ! அதற்குள் க்ரூப்களில் ; FB-ல் என தகவலை நண்பர்கள் பதிவிட்டிருக்க, நெடுக வாழ்த்துக்கள் மழை ! 'இந்த நொடியினை வயிற்றுக்குப் பெட்ரோல் போட்டபடிக்கே கொண்டாடுவோம் !'  என்றபடிக்கே அனைவரோடும் Food Court பக்கமாக நடையைப் போட்ட சமயத்தில் - பார்த்திபனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போடக் கிளம்பிய பலிகடா ஆடைப் போலவே சரவணகுமார் சார் தோற்றமளித்தது எனக்கு மட்டும் தானென்றில்லை ! 

சந்தோஷ உரையாடல்களோடே அங்கே பீட்சாக்களை வாங்கி, தரையிலேயே அமர்ந்து, பசியாறிய பின்னே, நண்பர்களில் சிலர் அங்கிருந்த Gaming சென்டரில் பொழுதைக் கழிக்கக் கிளம்பினர் & மீதப் பேர் ஸ்டாலுக்குத் திரும்பினோம் ! ஸ்டாலில் விற்பனை ஜரூராய் ஓடிக்கொண்டிருப்பது ஒரு சன்னமான மனநிறைவினைத் தந்து கொண்டிருந்தது ! ஆரம்பத்தில் நம்மை ஏதோ டைனோசார்களைப் போல் பார்த்து வந்த பாங்கு மாறியிருந்தது & காமிக் கானில் பொஸ்தவங்களும் வாங்கலாம் போலுமென்ற புரிதலுடன் மக்கள் ஆர்வமாய் புக்ஸ் வாங்கினர் ! எத்தனை மிரட்டலான களம் நம்மைச் சுற்றி இருந்தாலுமே,  வாஞ்சைகளிலும், விற்பனைகளிலும் நமக்கென ஒரு ஸ்பெஷலான இடத்தினை நீங்கள் ஒதுக்கித் தருவதை yet again தரிசிக்க இயன்றது ! காமிக் கானில் மட்டும் தானென்றில்லை ; கோவையில் துவங்கி, ஈரோடு, மதுரை, விருதுநகர்,  சேலம், சென்னை, திருப்பூர், நெல்லை என சமீபத்தைய எல்லா விழாக்களிலுமே நம் முத்திரையினை அழுந்தப் பதிவிட நீங்கள் ஒவ்வொருவருமே ஏகமாய் பங்களித்துள்ளீர்கள் guys ! 'விக்கவே இல்ல...கூட்டமே வரலே...மந்தம்...டல்..!' என இதர விற்பனையாளர்களும், பதிப்பகங்களும் புலம்பிடும் ஸ்தலங்களில் கூட நம்மை கம்பீரமாய் புன்னகைக்க அனுமதித்துள்ளீர்கள் ! Of course இந்த அன்பு ஒற்றை நாளிலோ, ஆண்டிலோ கிட்டியிருக்கவில்லை தான் ; அந்த ஒட்டுமொத்த 52 ஆண்டுக் காலத்தின் எத்தெத்தனையோ பேர்களின் உழைப்புகளுக்கு இன்று சிறுகச் சிறுகவொரு அங்கீகாரம் கிட்டி வருவதாகவே பார்க்கத் தோன்றுகிறது ! Oh yes - பார்க்கும் அம்புட்டுப் பேரும் நம்மை வாரியணைத்துக் கொள்கிறார்களென்றெல்லாம் அள்ளி விட மாட்டேன் ; நவநாகரீகம் என்ற கனாவில் - 'ஓ..டாமில்லே காமிக்ஸ் தானா ? You don't have anything in English ?" என்று கேட்டுப் போகும் டாம்பீக அம்மணியருக்கு இன்னமும் பஞ்சமே கிடையாது தான் & "இதுலாம் நான் சின்னப் பிள்ளையிலே படிச்சது" என்றபடிக்கு நடந்து போய்க்கினே இருக்கும் பெரிய பிள்ளைகளுக்கும் குறைவே கிடையாது தான் ! ஆனால் "தமிழில் காமிக்ஸ்" என்பது தீண்டத்தகா ஒரு சமாச்சாரமே அல்லவென்று உணர்ந்திருப்போரின் மத்தியில், நமது தரங்களுக்கும், variety-களுக்கும் சந்தோஷமான வரவேற்பு சின்னச் சின்ன அளவுகளில் பெருகி வருவது pretty much obvious ! In fact - நமது ஸ்டாலுக்கு வருகை தந்தவொரு ஹிந்தி பதிப்பகத்தவர் மிரண்டே போனார் நமது களங்களைக் கண்டு !! அதன் நீட்சியாய் காமிக் கானின் விற்பனையும், இங்கு நமக்குக் கிட்டிய விளம்பரங்களையும் பார்த்திட முடிந்தது ! 

"குறுக்கு கழன்றே போச்சு சார் ; நாங்க கிளம்புறோம்' என நண்பர்கள் கிளம்பிட, நானுமே புறப்படத் தயாரான போது, முக்கியமான இரு நபர்களோடு கொஞ்சம் பேசிட வாய்ப்பொன்று அமைந்தது ! அவற்றிற்கு பலனேதும் இருக்குமா ? என்பதை வரும் நாட்களில் புரிந்திட சாத்தியமானால் மேற்கொண்டு சொல்கிறேன் அவை பற்றி ! 

கிளம்பும் முன்பாக இந்த மங்கா ; மாங்கா என்று ஆளாளுக்கு அடிச்சுக்குறாங்களே இளசுகள் மத்தியில், அது எப்படித்தான் இருக்குடா சாமீ ? என்ற குறுகுறுப்பில் ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் போய்ப் பார்த்தேன் ! பொறுமையாய்ப் புரட்டி, புக்கை  பின்னேயிருந்து முன்னே என்று கொஞ்சமாய் வாசிக்க முயன்றேன் ! இதுநாள்வரை நாம் காமிக்ஸ் வாசிப்பில் செய்துள்ள சகலத்தையுமே உல்டாவாய் செய்திட வேண்டியிருந்தது & ரெண்டு நிமிஷத்துக்குள்ளேயே பாயைப் பிறாண்டலாம் போலிருந்தது எனக்கு. தவிர கதைக்களங்களுமே இன்னிக்கு ஆரம்பித்தால் நமது கொள்ளுப்பேரப் பிள்ளைகள் காலத்தில் நிறைவுறும் என்பது போல் தென்பட்டன ! கதைபாணிகளுமே ஒருதினுசாய் எனக்குத் தோன்றியது ! ஆனால் ஜூனியர் எடிட்டரிடம் கேட்டால் ஒவ்வொரு தொடர் பற்றியும் ஒரு விளக்கம் தந்தான் ! ஊஹூம்....மாங்கா தின்னாலே பல்லெல்லாம் கூசும் நம்ம வயசுக்கு இந்த மங்கா புடிபடாது என்று தீர்மானித்தேன் ! ஆனால் இளைய தலைமுறைக்கு இது ரசிக்குமெனில், ஜூனியரின் பொறுப்பில் இக்கட தனித்தட சவாரி செய்து பார்க்கலாம் ! எனது கேள்வியெல்லாம் இது தான் : 

இது முழுக்கவே ஒரு புதிய வாசக வட்டத்தை நோக்கியான பயணம் ; தற்போதைய நமது வட்டத்திடம் இதனைத் தந்தால் தொண்ணூறு சதவிகிதத்தினர் மலங்க மலங்கத் தான் முழிப்பர் என்பதில் எனக்கு ஐயங்களில்லை ! அந்தப் புதுசாக, யூத்தான வாசக வட்டமானது மங்கா, அனிமே என்பதையெல்லாம் தமிழில் படிக்கவும், ரசிக்கவும் செய்யுமா ? நெட்பிலிக்சிலோ, வேறெதிலோ டப்பிங் செய்த தமிழில் கேட்டுப் பழகியிருக்கும் இளைஞர் அணி கூட தமிழ் வாசிப்பினை அங்கீகரிக்குமா ? என்பதே எனது ஐயம் ! அதைச் சரிவரத் தீர்த்து வாய்க்கு உதவிடுங்கள் புலவர்களே !! 

இப்போதைக்கு பல்லடத்தாருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவரை நேபாளத்திலிருந்து blog எழுத்தாக கோருவோமா ? "பல்லடத்துப் படலம் !" ரெடியா all ?  Bye guys...see you around ! நாளை தங்கை மகனுக்குத் திருமணம் ; so தாய்மாமா கடமைகளில் நேற்றிலிருந்தே கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் ! அதனால் தான் பதிவினை நேற்றைக்கே முடிக்க இயலவில்லை ! Sorry !

Have a great week ahead !!

Sunday, February 18, 2024

சென்னையில் ஒரு வாரயிறுதி !

 நண்பர்களே,

வணக்கம். நான் நிறைய முறை சொல்லியுள்ள சமாச்சாரம் தான் - ஆனால் மறுக்கா ஒரு தபா ஒப்பிப்பதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது ! அது வேறொன்றுமில்லை folks - நமக்கான ஸ்கிரிப்டை எழுதுவது மேலே இருப்பவர் தான் என்பதே நான் சொல்ல விழைந்தது !  நாமே திட்டமிட்டாலும் உருப்படியாய் ஸ்லாட்டில் விழ சண்டித்தனம் பண்ணிடும்   சமாச்சாரங்கள்,  தாமாகவே ஆகச் சரியான தருணத்தில் அரங்கேறிடுவதை ஒன்றல்ல, இரண்டல்ல, எக்கச்சக்க முறைகள் பார்த்தாச்சு ! And இந்த வாரயிறுதியுமே அதற்கு yet another உவமை என்பேன் ! 

நிஜத்தைச் சொல்வதானால் "COMIC CON சென்னை" என்ற அறிவிப்பு வந்த சமயம் நான் ரொம்பவெல்லாம் துள்ளிக்குதிக்கவில்லை ! இந்த முயற்சி துவங்கிய பத்துப்பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னே, இதனை காமிக்ஸ் வெளியிடுவோருக்கொரு தனித்துவமான தளமாகப் பார்க்கத் தோன்றியது ! ஆனால் இன்றைய இளம் தலைமுறையினை என்ன செய்தால் கவர்ந்திட இயலும் ? என்பதை இந்த காமிக் கான் நிறுவனமானது காலவோட்டத்தோடு கச்சிதமாய்க் கற்றுத் தெரிந்திருக்க, இப்போதெல்லாம் இதுவொரு 2 நாள் இளமைத் திருவிழாவாக மாற்றம் கண்டுள்ளது என்பதே யதார்த்தம். தில்லியிலும், மும்பையிலும், பெங்களூருவிலும் இவர்கள் தெறிக்கச் செய்து வருவதை நெட்டில் வருஷங்களாய்ப் பார்த்து வந்ததன் புண்ணியத்தில் - இக்கட நம் போன்ற மாமூலான பதிப்பகங்களுக்கு அவ்வளவாய் பொருத்தமான இடமிராது என்றே தீர்மானித்திருந்தேன் ! தவிர இந்த இருநாள் மேளாவுக்கான ஸ்டால் வாடகையில் ஒரு ஆறோ-ஏழோ சிறுநகர ரெகுலர் புத்தக விழாக்களில் பத்துப் பத்து நாட்களுக்காச்சும் கடை போட்டிருக்க முடியும் ! So தலைகீழாய் நின்று தண்ணீரல்ல ; சரக்கே அடிச்சாலும், இங்குள்ள கட்டணம் - விற்பனை என்ற சமன்பாடு நமக்கு சாதகமாகவே சுகப்படாதென்பது தெளிவாய்ப் புரிந்தது ! 

ஆனால் இந்தத் தலைமுறையின் பிள்ளையாச்சே - ஜூனியர் எடிட்டர் தான் வலுக்கட்டாயமாய் நம்மை இந்த காமிக் கான் சாகரத்துக்குள் இறக்கி விடக் காரணமானவர் ! 'அம்பது வருஷமா இருக்கோம்....எம்பது வருஷமா இருக்கோம்னு கெத்தா சொல்லிப்புட்டு, அம்பத்தூர் வரைக்கும் கூட தூரைத் தூக்கிக்கினு கிளம்பாட்டி எப்புடி ?' என்று கேள்வியைப் போட்ட போது - 'ஆமால்லே...துட்டு சமாச்சாரத்தைக் காட்டிலும் நமக்குள்ள பொறுப்பினை தட்டிக்கழிக்காது நடந்து கொள்வது முக்கியம்' என்பது உறைத்தது ! அதைத் தொடர்ந்து, மூஞ்சியை சிரிச்சா மெரி வைச்சுக்கிட்டே காமிக் கான் பங்கேற்புக்கான கட்டணத்தினை கட்ட முனைந்தேன் ! 

அவுக கட்டண விபரங்களை வாங்கிப் பார்த்த நொடியில்,  நிலநடுக்கத்தை அடிக்கடி அனுபவிக்கும் ஜப்பான் ஜனம் எப்படி உணர்வார்களென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! லட்சங்களில் ஆரம்பித்த ஸ்டால் வாடகைகள்,  பல்லாயிரங்கள் வரைப் பயணித்து பச்சக்கென்று முடிந்து விட்டன !  உள்ளாற பொங்கிக்கொண்டிருந்த டென்ஷனை மறைக்க முயற்சித்தபடிக்கே  - "Pdf லே இன்னொரு பக்கம், கிக்கம் இருக்க போகுது....பாத்து முழுசா பிரிண்டை போடுங்கம்மா !" என்றேன் ! கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு நம்மாட்கள் - "ஒரே ஒரு பக்கம் தான் இருக்கு சார் !' என்றார்கள் ! 2 மீட்டருக்கு 2 மீட்டர் புறாக்கூடு தான் ஆகக் குறைந்த கட்டணம் கொண்ட ஸ்டால் & அதற்கான கட்டணத்தைக் கட்டவே ஒரு தனிச்சந்தா போடணும் போலிருந்தது ! 'இதை விடவும் சிறுசா ; ஏதாச்சும் ஓரம் சாரமா ; புட்போர்ட் அடிக்கிறா மாதிரி இடம் இருந்தாலும் பரால்ல - சமாளிச்சுக்குவோம் ! ஏதும் வாய்ப்பிருக்குமா ?' என்று கேட்டுப்பார்த்தேன் ! "வாய்ப்பில்ல ராஜா'ன்னு பளிச்சென்று பதில் வந்தது ! "நாங்க சொப்பு சாமான் ; டி-ஷர்ட் ; பொம்மலாம் விக்குறவங்க இல்லீங்கோ - அக்மார்க், ஒரிஜினல்,சுத்தமான பப்ளீஷர்ஸ் மட்டும் தானுங்கோ - அந்த ரூட்டிலே ஏதாச்சும் சலுகை சாத்தியாமாகுமா ?" என்று அடுத்த கேள்வியையும் மின்னஞ்சலில் கேட்டு வைத்தேன் ! மறுக்காவும் 'வாய்ப்பில்லே ராஜா'ன்னு பதில் வர, எந்தப் பக்கமா போனாலும் கேட் போடறாங்களே !! என்ற ஆதங்கத்தில் ஆழ்ந்தேன் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் அதற்கான புக்கிங்கை செய்த கையோடு - டின்டினின் நேபாளப் பயண lucky draw குலுக்கல் அன்றைக்குத்தான் என்றும் பகுமானமாய் அறிவித்து விட்டேன் ! அதைப் பார்த்த ஜூனியர் உள்ளுக்குள் ஒரு சிரிப்புச் சிரிச்சிருப்பது நிச்சயம் என்பேன் - அப்பனை சம்மதிக்கச்செய்ய என்ன பாடு பட வேண்டியிருந்ததென்பது அவனுக்குத் தானே தெரியும் ! 

இடைப்பட்ட ஜனவரி நாட்களில் சென்னையின் பபாசி புத்தக விழாவானது சும்மா பட்டாசாய்ப் பொரிந்து தள்ளிக்கொண்டிருக்க, காமிக் கான் சார்ந்த நினைவுகள் கூடுதல் வேகத்தில் பின்னுக்குச் சென்று விட்டன ! ரூ.899 நுழைவுக்கட்டணம் ; ஊரின் தென்கோடியிலிருக்கும் அரங்கில் விழா எனும் போது, உள்ளூரில் இருக்கக்கூடிய நண்பர்களுக்கே இது சிரமம் என்பது புரிந்தது ! So வெளியூர் நண்பர்களை இதற்கென வரச்சொல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்சாக இருக்கும் என்றுபட்டதாலும் பெருசாய் காமிக் கான் சார்ந்த எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளவில்லை !  தவிர, நமக்கான ஸ்டாலும் மைசூர் மஹாராஜா அரண்மனையோடு போட்டியெல்லாம் போடப்போகும் சைசில் இராதென்பதால், சன்னமான டைட்டில்களில் தமிழ் புக்ஸையும், கைவசமிருக்கும் இங்கிலீஷ் புக்சில் கணிசத்தையும் எடுத்துக் போகச் சொன்னேன் ! டெக்ஸ் ; லக்கி லூக் ; மாயாவி ப்ளஸ் கடந்த 2 மாத புக்ஸ் - என சிக்கனமாய் பேக் செய்து விட்டு, Asterix ; BlueCoats ; Damocles ; Barracudda போன்ற இங்கிலீஷ் டைட்டில்களோடு நம்மாட்களும் புறப்பட்டனர் ! செல்லும் நம்மாட்கள் இருவருக்குமே இங்கிலீஷ் அல்லது தற்போதைய இன்றியமையா மொழியாய் மாறிக்கொண்டிருக்கும் ஹிந்தியும் தெரியாதென்பதால் நானும் முதல்நாள் மதியமே சென்னையில் ஆஜராக வேண்டியிருந்தது ! 

உள்ளே நுழைந்த நொடியே தெரிந்தது - 'ஆத்தீ...இது ஏதோவொரு செம சம்பவம் பண்ணக் காத்திருக்கு - நம்ம சென்னைக்கு !' என்று புரிந்தது ! எதிர்பார்த்தபடிக்கே செக்யூரிட்டியில் துவங்கி, அமைப்பாளர்களில் இருந்து, நம்ம ஸ்டாலில்  ஆசாரி வேலை செய்ய வந்த ஆட்களும் சரி, மின்னிணைப்பு தர வந்தோரும் சரி - நாங்க இங்கிலீஷ் அல்லது ஹிந்தி மட்டும் தான் மாட்லாடுவோம் என்று செப்ப, நான் தான் சமாளிக்க வேண்டிப்போனது ! சுற்றுமுற்றும் பார்த்தால் - அத்தனை கடைக்காரர்களும் இந்த காமிக் கான் circuit-க்கு ரெகுலர்கள்கள் என்ற முறையில் பர பரவென ஸ்டாலை ரெடி செய்து கொண்டிருந்தனர் ! அம்புட்டு கடைகளிலும் ஆளை வகுந்தெடுக்கும் சைசில் சாமுராய்க் கத்திகள் ; இன்னாரென்றே அடையாளம் தெரியாத ஜப்பானிய மங்கா காமிக்ஸ் கதாப்பாத்திரங்களின் பொம்மைகள் ; போஸ்டர்கள் ; டி-ஷர்ட்கள் - என்று அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ! இன்னொரு ஓரத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிறுவனமும், பென்குவின் நிறுவனமும் கிராபிக் நாவல்களை டன் டன்னாக இறக்கி அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ! நமது ஸ்டாலுக்கு முன்னே மையமாய் நின்னு, மையமாய் முழித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு யுவதி...'ஹல்லோ சார்...புதுசா தெரியுறீங்களே காமிக் கானுக்கு - என்ன விக்குறீங்க ?' என்று வினவினார் ! "காமிக்ஸ் விக்குறோம்" என்றேன் அமைதியாய் ! நாமளும் ஹிக்கின்பாதம்ஸ் போல புக்ஸ் வாங்கி விற்க கடை போட்டிருக்கிறோம் போலும் என்றெண்ணியவர் - நமது ஸ்டாலில் இருந்த டின்டின் போஸ்டரை பார்த்து விட்டு - "நீங்களே சொந்தமா பப்லிஷ் பண்றீங்களா ?" என்று கேட்டார் ! "52 வருஷங்களா !" என்றேன் ! 'பச்சக்' என்று அவர் பார்வையும், குரலும் மாறிப் போயின ! ரொம்பவே ஆர்வமாய், நம்மைப் பற்றி, நமது முயற்சிகளைப் பற்றி அதன் பின்னே கேட்டார் ! சொல்லச் சொல்ல விரிந்த விழிகளோடு கவனித்தவர், "எங்க டீமிடம் உங்களை பற்றிச் சொல்லுறேன் சார்" என்றபடிக்கே விடைபெற்றார் ! ரைட்டு....சனி காலையில் என்ன தான் கூத்து அரங்கேறுது என்று பார்த்துக்கலாம் என்றபடிக்கே கிளம்பினேன் !

சனியும் புலர்ந்தது...நம்மாட்கள் முன்னே போயிருக்க, நான் பத்தரைவாக்குக்கு உள்ளே புகுந்தேன் ! நமது ஸ்டால் தயாராய் இருந்தது ; நமக்கு அடுத்த ஸ்டாலிலோ ஒண்ணோ - ரெண்டோ இங்கிலீஷ் காமிக்ஸ் மட்டும் வைத்துக் கொண்டு, ஓரத்தில் ஏதோ பாக்கெட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர் ! 'பாவத்த....நம்ம கட்டணத்தையே கட்டிப்புட்டு இதை வித்து கரை சேர நினைக்குதுகளே - யார் பெத்த பிள்ளைகளோ - பாவம் !' என்று நினைத்துக் கொண்டேன் ! மணி பதினொண்ணு அடிச்சது தான் தெரியும் - அதன் பின்னே நிகழ்ந்ததெல்லாமே ஒரு தோராய நினைவுகளாய் மாத்திரமே உள்ளன !! "ராயப்பா...நான் நான்தானா ? நீ நீதானா ?....இது நம்ம சென்னை தானா ?" என்று கவுண்டரின் வியப்பு கலந்த மாடுலேஷனில் என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது - simply becos சென்னையின் 2k  கிட்ஸ் மாத்திரமன்றி, 1.5k ; 1k புராதனங்கள் என்று அத்தனை பேரும் ஒரு சுனாமியின் வேகத்தோடும், எழுச்சியோடும் படையெடுத்திருந்தனர் !! மணி 11-30 ஆன போதெல்லாம் நடைபாதையில் நிற்கக் கூட வழியில்லை ; ஜனத்திரள் நம்மை அப்படியே வாரிச் சுருட்டி விடுவர் போலிருந்தது ! பற்றாக்குறைக்கு ப்ளூ சட்டையணிந்திருந்த தன்னார்வலர் குழு - 'ஜருகண்டி...ஜருகண்டி..' என்று துரத்தி விட்டுக் கொண்டிருந்தனர் ! அதிலும் நமது ஸ்டால் முன்னே கூடும் கூட்டத்தினையும், அவ்வப்போது வருகை தந்த நண்பர்கள் நின்று அரட்டையடித்தபடிக்கே போட்டோக்களை க்ளிக் செய்து வருவதையும் கவனித்த ஒரு சின்னப் பெண் - 'ஒரு வளர்ந்த முழியாங்கண்ணன் அங்கே தடைபண்ணின பஞ்சுமிட்டாய் வித்துட்டு இருக்கானோ, என்னவோ தெரிலே......ஆனா கூட்டம் சேர்த்திட்டு இருக்கான்....! கவனம் பாய்ஸ் & கேர்ள்ஸ் !' என்று தனது டீமை உஷார்படுத்தியிருப்பாள் போலும் ! மூணு நிமிஷத்துக்கு ஒரு ஆள் வீதம் வந்து வந்து பத்தி விட்டுக்கொண்டே இருந்தார்கள் ! தலையில் கலர்கலராய் காரக்குழம்புகளை ஊற்றிக் கொண்டு வந்த பசங்கள் ; பிள்ளைகள் ; டிசைன் டிசைனாய் Cosplay என்ற காமிக்ஸ் கதாப்பாத்திர வேடமணியும் போட்டிகளுக்கென வருகை தந்த யூத் ; கொடுத்திருக்க தொள்ளாயிரம் காசுக்கோசரமாவது நாள் முழுக்க இங்கேயே தான் டேரா ! என்ற வைராக்கியத்தோடு வந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுத் தாக்கித் தள்ளிக் கொண்டிருந்த திரள் என்பதோடு மங்கா புக்ஸ் வாங்கிட வந்திருந்த காமிக்ஸ் புதுத் தலைமுறையையும் தரிசிக்க முடிந்தது ! "ஹேய்ய்...இங்கே பாருயா...டாமில்லே காமிக்ஸ் ஸ்டால் ...!" என்ற வியப்பு கலந்த குரல்கள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டேயிருந்தது ! இதன் மத்தியில் தீவிர (தமிழ்) காமிக்ஸ் ரசிகர்களும் ஆஜராகத் தவறவில்லை - ஒரு மிதமான எண்ணிக்கையில் ! 

நண்பர் கார்த்திக் சோமலிங்கா ; ரபீக் பெங்களூரிலிருந்து பைக்கிலேயே வந்திருக்க, சென்னை நண்பர்களும் ஒவ்வொருவராய் இடையிடையே எட்டிப் பார்க்க - அத்தனை பேருக்குமே சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த சென்னையின் தாண்டவம் - தாங்கொணா வியப்பையே தந்து கொண்டிருந்தது ! இன்னொரு கோடியில் ஒரு புக் ரிலீஸூக்கென டைரக்டர் லோகேஷ் வந்திருக்க, அங்கும் அதிர்வலைகள் ! அவர்பாட்டுக்கு 'நான் படிச்ச மொத கி.நா.இரும்புக்கை மாயாவி....ராணி காமிக்சிலே போட்டாங்க !!' என்று அள்ளிவிட்டுச் செல்ல, நம்மாட்கள் என்னைக் கலாய்த்துத் தள்ளி விட்டனர் - 'இம்புட்டு நாளா நீங்க பீலா விட்டுட்டு இருந்திருக்கீங்க போல !' என்று ! மதியத்துக்கு மேல் குறுக்கை கழற்றுவது போல் நோவிட, வேறு வழியின்றி அனைவருமே கிளம்பிவிட்டோம் ! இரவில் அன்றைய விற்பனை தொகையை நம்மாட்கள் அனுப்பிய போது முட்டைக்கண்கள் இன்னும் அகல விரிந்தன - கூத்துக்களுக்கு மத்தியிலும் நமக்கும் விற்பனை நிகழ்ந்திருந்தது !! 'Wow' என்றபடிக்கே  உறங்கிப் போனேன் !! 

ஞாயிறு....!   

To be continued.....(ரயிலைப் பிடிக்க ஓடுகிறேன் ; ரயிலில் டைப்பிடிக்க முயன்றால் நைட்டே நிறைவு செய்வேன் ! )


Sunday, February 11, 2024

பிப்ரவரிக்குள் பெரும் பயணம் !

 நண்பர்களே,

வணக்கம். லயனின் நாற்பதாவது ஆண்டும் அதுவுமாய், இன்னமும் வாடகைச் சைக்கிளில் ஏறி ரிவர்ஸ் கியரை அமுக்காமல் இருக்கோமே ? என்ற நினைப்பு நேத்திக்குத் தான் மனதில் நிழலாடியது ! ரைட்டு.....மார்ச் இதழ்களுக்கு இன்னமும் நேரமிருக்க, பிப்ரவரியின் quick read இதழ்கள் சார்ந்த அலசல்களினூடே, பிப்ரவரிக்குள்ளேயே ஒரு flashback ட்ரிப் போய் வந்துப்புடலாமே ? என்று தோன்றியது ! So here goes :

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பானதொரு பிப்ரவரி அது ! கிட்டத்தட்ட 10 மாதங்களாகி இருந்தன - நான் ப்ளஸ் டூவுக்கு மங்களம் பாடி !  நமக்கு மேற்கொண்டு கல்வி கற்க அஞ்சல்வழி மட்டுமே இனி சாத்தியம் என்ற கசப்பான யதார்த்தத்தை ஒரு மாதிரியாய் மெதுமெதுவாக விழுங்கப் பழகிக் கொண்டிருந்த நாட்களவை ! அப்பாவின் தொழிலோ ICU-வில் குற்றுயிரும், குலையுயிருமாக தொங்கி கொண்டிருக்க, அங்கு சென்று பொழுதைக் கழிக்கப் பெருசாய் வழிகள் இருக்கவில்லை ! நெதத்துக்கும் ஒரு கடன்காரச் சேட்டு தமிழைக் கொத்துக்கறி போட்டபடிக்கே, பணத்தைக் கேட்டுக் கூப்பாடு போடும் அந்த மாமூலை சகிக்க இயலாது ! முத்து காமிக்சின் ஆபீஸிலோ ஆளாளுக்கு 'ஜிலோ'வென்று காற்று வாங்கிக் கொண்டிருப்பார்கள் - ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து அந்த மாதத்து இதழ் அச்சிட பேப்பர் வாங்கித் தர மொதலாளிக்குத் தீருமா ? என்ற வினாவோடே ! So அங்கேயும் போய் பொழுதை ஓட்ட ரசிக்காது ! பற்றாக்குறைக்கு "முத்து காமிக்ஸ் வாரமலர்" எனும் மெகா பல்பை நான் வாங்கிய நாள் முதலாய் அங்கே போகும் ஆசையே எனக்கு அறவே இல்லாது போயிருந்தது ! So விடிஞ்சு முழிச்சு எழுந்து, குளித்துக் கிளம்பி, வள்ளுவர் கோட்டத்து நிழலில் கட்டையைச் சாய்க்கும் கவுண்டரைப் போலவே, தினத்துக்கும் பொழுதை கடத்த குட்டிக் கரணம் அடிக்க வேண்டியிருந்தது ! 

நம்ம எதிர்காலத் திட்டம் - ஒரு பூந்தளிர் போல ; ஒரு கோகுலம் போல - ஒரு சிறுவர் இதழை உருவாக்கி வெளியிடுவது ! And அந்த இதழுக்காக பெயரினை டெல்லியில் உள்ள செய்தித்தாட்கள் பதிவகத்தில் பதிந்து விட்டு வேலையை ஆரம்பிப்பது என்பதே திட்டம் ! அந்த அப்ளிகேஷனில் ஒன்றுக்கு மூன்றாய் பெயர்களை நாம் வரிசைப்படுத்தி எழுதி அனுப்பிடலாம் ; ஒன்று இல்லாங்காட்டி அடுத்ததை வாங்கிக் கொள்ள ஏதுவாக ! நான் முதல் சாய்ஸாக "டிங்-டாங்" ; இரண்டாவது பெயர்த் தேர்வாக "புதையல்" & மூன்றாம் தேர்வாக "பொக்கிஷம்"(not sure about # 3) என்று வரிசைப்படுத்தி நவம்பர் 1983-லேயே அனுப்பி விட்டு தினம்தோறும் தபால்காரரை வழி மேல் விழி வைத்தபடிக்கே எதிர்பார்த்திருப்பேன் ! ஊரில் இருக்கும் அம்புட்டுப் பசங்களின் கல்யாணப் பத்திரிகைகளும் தபாலில் வரும் ; அப்பாவின் பெயர் போட்டு "முஜே பைசா சாஹியே...பைசா...பைசா...!" என்று அன்பான நினைவூட்டல்கள் உச்சஸ்தாயியில் வரும் ; ஆனால் டில்லியிலிருந்து நான் எதிர்பார்த்துக் கிடந்த ஒப்புதல் கடுதாசி மாத்திரம் வந்த பாடே இல்லை ! அட - அந்தப் பதிவு இல்லாட்டி தபால் கட்டணங்களும், ரயில்வே கட்டணங்களும் மட்டுமே சலுகைகளின்றிப் போயிருக்கும் ; மற்றபடிக்கு வண்டியைக் கிளப்பியிருக்கலாம் தான் ! ஆனால் அன்றைய அந்த 16.5 வயது அறிவாளிக்கு எல்லாமே முறைப்படிச் செய்திட வேண்டுமென்ற எண்ணம் ; அவா ! அது மாத்திரமன்றி, எங்கே ஆரம்பிப்பது ? எப்படி திட்டமிடுவது ? பணத்துக்கு என்ன செய்வது ? என்ற கேள்விகள் உள்ளுக்குள் மிரட்டிக் கொண்டிருக்க, "இதோ - டில்லியிலிருந்து பதிவு  வருது.... வருது...." என்றபடிக்கே நாட்களைக் கடத்திப் போவது எனது இயலாமையை பூசி மெழுக உதவியதொரு திரையாகவும் செயல்பட்டது என்பதே நிஜம் ! ஆனால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாய்க் காத்திருந்து கண்கள் பூத்ததே மிச்சம் என்றான நிலையில், ஒரு செம காண்டான மதியத்தில் தான் -  "ச்சீ..சீ...அந்த சிறார் இதழ் சங்காத்தமே வாணாம் ; மரியாதையாய் முத்து காமிக்ஸைப் போல ஒரு முழுநீள இதழைத் திட்டமிடலாம் ! என்ற பெரும் சிந்தனை எழுந்தது ! So ஒரு சுபயோக சுபதின பிப்ரவரியில் மறுக்கா ஒரு விண்ணப்பம் பறந்தது டில்லிக்கு - சாய்ஸ் # 1 : லயன் காமிக்ஸ் ; சாய்ஸ் # 2 : டைகர் காமிக்ஸ் ; தேர்வு # 3 : ஏதோவொரு பெயர் - மறந்து போச்சு !! ஆனால் இம்முறை வேலைகளை ஆரம்பிச்சிடலாம் - பெயருக்கான அனுமதி வந்த பிற்பாடு ரெடியாய் இருக்கக்கூடிய மாவைக் கொண்டு சுடச் சுட வடை சுட்டுக்கொள்ளலாம் என்றும் தீர்மானித்தேன் ! 

So நமது இன்றைய பயணத்தின் ஒரு தம்மாத்துண்டு துவக்கப் புள்ளி இடப்பட்டது 40 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பிப்ரவரியினில் தான் ! சிறார் இதழினில் தொடராக வெளியிடுவதற்கென, அதற்கு முன்னமே வாங்கியிருந்த க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டின் முதல் ஆறு பக்கங்களை விடிய விடிய ரசித்துக் கொண்டே இருந்ததன் பலனுமே ஒரு முழுநீள காமிக்ஸ் இதழ் மீது எனக்கு மையல் எழுந்திருந்ததற்கு காரணம் என்பேன் ! எது எப்படியோ - அன்றைக்கு டில்லியில் சிறார் இதழ்களுக்கான எனது விண்ணப்பங்களை மடித்து காது குடைய ஏதோவொரு குமாஸ்தா மாமா முனைந்திருக்காட்டி - "லயன் காமிக்ஸ்" என்றதொரு சமாச்சாரம் ஜனித்திருக்கவே ஜனித்திருக்காதோ - தெரியாது !   

ஒற்றை ஆண்டினில் தான் எத்தனை-எத்தனை மாற்றங்கள் இறைவா ?! என்று தோன்றுகிறது - 1985 பிப்ரவரியினை அசைபோடும் பொழுதினில் ! ஜூலை 1984-ல் கத்திமுனையில் மாடஸ்டியும், நானும் களமிறங்கியிருக்க, நம்ம சிரசாசன SMS காரரான ஸ்பைடராரின் புண்ணியத்தில் கொஞ்ச காலத்திலேயே வண்டி டாப் கியரில் ஓடத் துவங்கியிருந்தது ! பகீரென்று பாக்கெட் சைசுக்கு பல்டி ; ஜஜாய்ங்கென்று மாக்சி சைசுக்கு ஜம்ப் ; இரும்பு மனுஷன் ; தீவாளி மலர் ; பொங்கல் மலர் என்ற ரகளைகள் தொடர்ந்திட, நமது அந்நாட்களின் வங்கிக்கணக்கில் இருபதாயிரத்துக்கும் மேலே பணம் கிடக்கும் எந்நேரமும் ! (அதைக் கொண்டு அமேசான் ஓனரிடம் அவரது கம்பெனியை விலை பேச  முடிஞ்சிருக்காட்டியும், பக்கத்திலேயே, எதிர்த்தாலேயோ இருக்கக்கூடிய ஒரு சஹாராவையோ ; ஒரு காங்கோவையோ  அந்நாட்களில் வாங்கியிருக்கக்கூடும் guys  !!) பேப்பர் ஸ்டார்க்காரர் பில் போட்ட ஈரம் காய்வதற்குள் நம்ம  முழியாங்கண்ண தொழிலதிபர் 'பச்சக்' என்று செக்கைக் கிழித்திருப்பார் ! கடன்ஸ் கேக்கமாட்டோம் ; அதே போல நாங்களும் கடன்ஸ் தர மாட்டோமுங்கோ - என்பதில் இந்தச் சொடலமுத்து படு ஸ்ட்ரிக்ட்டாக இருந்த நாட்களவை  ! யாராச்சும் ஏஜெண்ட்ஸ் டிராப்ட் அனுப்புவதற்குப் பதிலாய் செக் அனுப்பினால் போதும் - மறு நொடியே கண்சிவந்து ; காது வழியாய்ப் புகை கக்கியபடியே அதனைத் திருப்பி அனுப்பிடுவோம் ! அந்தப் பாவத்துக்கெல்லாம் சேர்த்தோ என்னவோ - உள்நாடு மாத்திரமன்றி, வெளிநாடு வரையிலும் நீண்டு செல்கிறது இன்றைய நமது நிலுவைச் சிட்டைகள் !  Phew !!

பிப்ரவரி 1985 எனது நினைவில் நிற்க ஒரு முக்கிய காரணம் உண்டு ! மாடஸ்டி...ஸ்பைடர்...ஆர்ச்சி....மீட்போர் ஸ்தாபனம் - என்று 4 நாயக / நாயகியர் நமது அணிவகுப்பில் இருந்தனர் ! ஆனால் நமக்குத் தான் புதுசாய்க் கதைகளைப் பார்த்தால் வாய் விட்டம் வரைக்கும் பிளக்குமே ? இன்டர்நெட்டெல்லாம் இல்லாத அந்நாட்களில் கைவசமிருக்கும் புக்ஸ் ; பழைய காமிக்ஸ் இதழ்களை உருட்டி உருட்டியே எதையேனும் தேடிப்பிடிக்க அவசியமாகிடுவது வழக்கம் ! அப்படியொரு தேடலின் போது கண்ணில் பட்டது தான் MASTERSPY என்றதொரு Fleetway கதை வரிசை ! "டைகர் காமிக்ஸ்" என்ற Fleetway வாராந்திர இதழில் தொடராய் வந்து கொண்டிருந்த C.I.D ஜான் மாஸ்டரின் சாகசம் அது ! ராணி காமிக்ஸ் செம ஜாம்பவான்களாய் தமிழ் காமிக்ஸ் உலகினில் அமர்ந்து, ஆக்ரமித்து வந்த நாட்களவை ! சிக்கல் என்னவெனில் நாமும் சரி, அவர்களும் சரி, அதே இந்திய முகவர் மூலமாகத் தான் கதைகளைக் கொள்முதல் செய்து கொண்டிருந்தோம் ! "ரெண்டாயிரம்" என்றால் நான் "ரெ-ண்-டா-யி-ர-மா-ஆஆ" என்று வாயைப் பிளப்பேன் ; ஆனால் ராணியிலோ 'சொய்ங்' என்று payment அனுப்பி விடுவார்கள் ! என் கையில் காசு இருந்தாலும், அரையணா..காலணா என்று கணக்குப் பார்த்துச் செலவிடும் எனது சுபாவம் இங்குள்ள முகவருக்கு அவ்வப்போது எரிச்சலை ஏற்படுத்துவதுண்டு ! So புதுசாய் அந்த MASTERSPY கதைவரிசையினைத் தோண்டிப் பிடித்து , இலண்டனிலிருந்து ஆர்டர் செய்து வரவழைக்குமாறு இந்திய ஏஜெண்டிடம் கோரிய சமயத்தில் லைட்டாக நெருடியது ! "ஆஹா....இந்தக் கதைகளை இவர்பாட்டுக்கு ராணி காமிக்ஸ் கண்ணில் காட்டிப்புட்டால், நொடியில் வாங்கிப்புடுவார்கள் ; நாம சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது போலாகிடுமே !!" என்று பயம் உலுக்கியது ! 

ஜான் மாஸ்டரின் கதைகளை அவர் வரவழைத்திட்டார் தான் - ஒன்றுக்கு இரண்டாக & அந்த இரண்டாம் அத்தியாயம் செம நீளமானதும் கூட !! ஓலை ஒன்று வந்தது அஞ்சலில் : "இப்போல்லாம் ஏர்-மெயில் சார்ஜஸ் கூடிப் போச்சு ; இலண்டனிலேர்ந்து மொத்தமாய் வாங்கினா தான் கட்டுப்படி ஆகுது ! So நீ ஒரே நேரத்திலே மொத்தத்தையும் வாங்கிக்கிட்டா தேவலாம் !" என்று இருந்தது ! அந்த லெட்டரின் குறியீடு நன்றாகவே புரிந்தது எனக்கு - "மொத்தமா வாங்கிக்க பைசாவை புரட்ட முடிஞ்சா இது ஒனக்கு ; இல்லாங்காட்டி நஹி !" என்பதாக ! "தவிர,ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த Death of a Jester என்ற மாடஸ்டி கதையும் (மரணக் கோட்டை) ; ஸ்பைடரின் The Scarecrow's Revenge (பழி வாங்கும் பொம்மை)கதையும் ரெடியாக உள்ளன ; அவற்றையும்  சேர்த்தே வாங்கிக்க ஏற்பாடு செய்தால் நலம் !" என்று அந்த மடல் நிறைவுற்றது ! 39 ஆண்டுகளுக்கு முன்னேயான அப்போதைக்கே பல ஆயிரங்களில் மிரட்டியது மொத்த பில் ! எனக்கோ உள்ளுக்குள் ஜுரம் வராத குறை தான் ! அப்போதெல்லாம் லயன் காமிக்ஸ் மாதம் ஒரு முறை மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும் எனும் போது,  ஆண்டுக்கு 12 இதழ்கள் ; ஸ்பெஷல்ஸ் ஏதேனும் இருந்தால் ஒண்ணோ , ரெண்டோ சேர்த்து 13 or 14 இதழ்கள் தான் வெளியிட இயலும் ! So அவ்வப்போது பணம் அனுப்பி, அவ்வப்போதைக்கான கதைகளைக் கொள்முதல் செய்து கொண்டாலே மதி ! என்றிருப்பேன் ! தவிர வங்கிக்கணக்கில் பணம்  கிடப்பதை தினத்துக்கும் நினைத்து மகிழ்ந்து கொள்வதிலும் ஒரு குடாக்குத்தனமான திருப்தி அப்போது ! இந்தக் கடுதாசிக் கணையோ - நான் பொத்திப் பாதுகாத்து வந்த வாங்கி இருப்புக்கு வெடி வைத்து விடும் போலுமே என்ற பயம் உலுக்கத் துவங்கியது ! 

ஆனால் அதே சமயம், புதுக் கதையானது ராணிக்கு போக நேரிட்டால் நம்ம கதை கந்தலாகிப் போகுமே என்றும் உள்ளுக்குள் குடைந்தது ! அப்போதெல்லாம் பூர்வீக வீட்டின் ஒரு போர்ஷனில் இயங்கி வந்த நமது ஆபீசுக்கு என்னோடு ரெகுலராய் எனது தாய்வழித் தாத்தாவும் வருவார்கள் & என் கையிலிருந்த ஒவ்வொரு அணாவுமே அவர் தந்த முதலீட்டின் பலனே ! இந்தத் தொழில் சார்ந்த அனுபவம் அவருக்கு கிடையாதே தவிர, மனிதர்களை வாசிப்பதில் ; பொதுவான தொழில் அணுகுமுறைகளில் அவரொரு அசகாயர் ! பேரனின் மொகரை வழக்கத்தை விடவும் கர்ண கொடூரமாய் இருப்பதை சீக்கிரமே உணர்ந்தவர் - "என்னடா விஷயம் ?" என்று கேட்டார் ! நானும் லைட்டாக சமாளித்துப் பார்த்துத் தோற்றவனாய் நிலவரத்தை ஒப்பித்தேன் !  கஞ்சி போட்டு வெளுத்து வாங்கிய வெள்ளைக் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பாவே காலம் முழுக்க தாத்தாவின் டிரஸ் !  சும்மா சொட சொடவென காட்சி தரும் வேஷ்டியில் பணம் வைக்க முடியாதென்பதால், நம்ம தலீவரின் பட்டாப்பெட்டி ஸ்டைலிலான நீளமான உள்டிராயரில் தான் பணமிருக்கும் ! அந்த டிராயருக்குள் கைவிட்டு ஒரு நூறு ரூபாய் கட்டைத் தூக்கி மறு கணம் கையில் திணித்தவர் - "பேங்குக்குப் போயி ஒரு DD எடுத்து அனுப்பிட்டு, ஏஜெண்டுக்கு டெலிகிராம் அடி !" என்றார் ! குனிய வேண்டிய வேளையில் குனிவதும், நிமிர வேண்டிய தருணத்தில் நிமிர்வதும், பாய வேண்டிய சமயத்தில் பாய்வதும், பம்ம வேண்டிய கணத்தில் பம்முவதும், தொழிலின் பன்முகங்கள் என்பதை அன்றைக்கு அவர் எனக்கு செயலில் காட்டியிருந்தார் ! "ஒரு வேகத்தில் இழுத்து ஓடிக்கொண்டிருக்கும் தொழிலில் தொய்வு ஏற்பட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க  கூடாதுடா" என்று அன்றிரவு எனக்குச் சொன்னார் ! அதற்கு முன்பே டிராப்ட் எடுத்து ரிஜிஸ்டர் தபாலில் போட்டு விட்டு - தந்தி ஆபீசுக்குப் போய் "SENT DD - Rs .______. STOP . ARRANGE TO DESPATCH ALL STORIES URGENTLY. STOP. KIND REGARDS .LION COMICS " என்று சும்மா கெத்தாய் எக்ஸ்பிரஸ் டெலிகிராம் அனுப்பியிருந்தேன் ! (டெலெக்ராம் என்றால் இன்றைக்கு நீங்கள் பயன்படுத்தி வரும் செயலி அல்ல 2k kids !!) கதைகள் ஒரு கத்தையாக பார்சலில் வந்த தினத்தில் வாயெல்லாம் பல்லாய் நான் திரிந்ததையே தனக்கான வெகுமதியென தாத்தா நினைத்தார்களோ - என்னவோ, அந்தப் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் திரும்ப தா என்று சொல்லக்கூடயில்லை ! கதைகளை மொத்தமாய் வாங்கிடும் ஒரு சொகுசுக்கு, ஒரு வேட்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது அன்றைக்குத் தான் என்பேன் ! இரண்டரை மாதங்களுக்கு முன்பாக தாத்தாவோடே தலைநகருக்குச் சென்று , ஸ்பைடர் கதைகளை அள்ளியிருந்தேன் தான் ; but இந்தக் கொள்முதல் அதை விடவெல்லாம் நிரம்பவே ஜாஸ்தி !

மரணக் கோட்டை

சதி வலை

பழி வாங்கும் பொம்மை

மாஸ்கோவில் மாஸ்டர் 

தொடர்ந்த மாதங்களில் சூப்பர் ஹிட் அடித்த மேற்படி கதைகள் ஒவ்வொன்றிலும் தாத்தாவின் அரூப அடையாளம் உண்டு !

February 1987 !! மறக்க இயலா இன்னுமொரு பிப்ரவரி - 37 ஆண்டுகளுக்கு முன்பானதொன்று !! லயன் காமிக்ஸ் ; திகில் ; ஜூனியர் லயன் காமிக்ஸ் ; மினி லயன் - என நான்கு தனித்தடங்கள் தடதடக்கத் துவங்கிய இரண்டாவது மாதம் ! "புரட்சித்தலைவன் ஆர்ச்சி" என்ற பாக்கெட் சைஸ் black & white இதழே அந்த மாதத்தின் லயன் இதழாகத் திட்டமிடப்பட்டிருந்தது ! நமது ஆஸ்தான ஓவியர் மாலையப்பனின் முதன்முதல் டிராயிங் அந்த இதழுக்கென நாம் பயன்படுத்தியிருந்த கவர் தான் ! In fact 1984-லேயே அதை வரைந்திருந்தார் ! 1984 தீபாவளி மலருக்கென அதைக் கோரியிருந்தேன் ; but மனுஷன் சாவகாசமாய் போட்டுக் கொண்டு வர, அதற்குள்ளாகவே நான் சிவகாசியிலேயே இருந்த மூத்த ஓவியர் காளியப்பாவிடம் அதற்கான டிசைனைப் போட்டு வாங்கியிருந்தேன் ! So மாலையப்பன் சாவகாசமாய் கொண்டு வந்திருந்த அந்த ஆர்ச்சி டிசைன் 1987 வரை பரணிலேயே கிடந்தது போயிற்று ! இடைப்பட்ட நாட்களில் நமது ஒட்டுமொத்த கவர்களையும் வரையத் துவங்கி செம பிசியாக இருந்தார் மாலையப்பன் ! 

ஒன்றுக்கு நான்காய் புக்ஸ் வெளியிடத் துவங்கியிருக்க - ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித சர்குலேஷன் இருந்திடும். So ஒவ்வொரு மாதமுமே முந்தைய இதழின் சேல்ஸ் என்னவென்று கணக்குப் பார்க்க விழைவோம் ! அதன்படியே ஜனவரி 1987-க்கான இதழின் விற்பனைக் கணக்கினை எடுத்துப் பார்த்தோம் and guess what - அது நம்ம 'தல' டெக்சின் "பழி வாங்கும் பாவை !!" அசுரத்தன விற்பனை கண்டிருந்தது அந்த இதழ் & பொங்கல் முடிந்த சமயமே கையிருப்பும் தரை தட்டியிருந்தது - இன்றைக்கு டின்டின் ஸ்டாக் தரை தட்டுவதைப் போலவே ! So எனது ஞாபகம் பிழையாக இல்லையெனும் பட்சத்தில் "புரட்சித் தலைவன் ஆர்ச்சி" இதழுக்கு நாம் அச்சிடத் தீர்மானித்தது 31,000 பிரதிகளை ! Phewwwww !! முப்பத்தி ஒன்றாயிரம் !!! And அதுவும் அந்த மாசமே sold out !! கோவைக்கு 3000 பிரதிகள் ; ஈரோட்டுக்கு 3000 ; சென்னைக்கு 5000 ; சேலத்துக்கு 2000 என்று கிறுகிறுக்கச் செய்யும் அந்நாட்களில் விற்பனை நம்பர்கள் !! மார்ச் 1987-ல் வெளியான மினி-லயனின் "கறுப்புப் பாதிரி மர்மம்" ஒரு ரூபாய் விலையில் வெளியாகி 43,000 பிரதிகள் விற்பனை கண்டது ! இன்று வரை அந்த நம்பரே நமது highest ever ! அந்த நாற்பத்திமூவாயிரத்தில் நீங்களும் ஒருவரா guys - கரம் தூக்குங்களேன் பார்ப்போம் ?!! இன்றைக்கு நினைத்துப் பார்க்கையில் பெரும் பெரும் பெருமூச்சு தான் வெளிப்படுகிறது !! எக்கட போயி அத்தனை வாசகர்களும் ? இன்றைக்கு அவர்களில் பத்தில் ஒரு பங்கு மிஞ்சினாலுமே இன்னா சூப்பராய் இருக்கும் ?? 

பிப்ரவரி...மார்ச்..ஏப்ரல் என ஒவ்வொரு மாதங்களோடும் டிசைன் டிசைனான  நினைவுகளுக்குப் பஞ்சமே இராது தான் ; but இப்போது டைப்படிக்க நேரமில்லை என்பதால் - விடைபெற்றுக் கிளம்புகிறேன் folks ! மார்டினின் ஆர்டிக் அசுரனை காலையில் ஆரம்பிக்க வேண்டி வரும் ! ரைட்டு, before I sign out - பூமியைப் புரட்டிப் போடப்போகும் கேள்விகள் சில :

1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?

3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?

4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ? 

5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?

6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ?

CHENNAI COMIC CON-ல் சந்திக்க முயன்றால் சூப்பராக இருக்கும் ; please give it a shot people ! 

Bye for now...have a great Sunday !



Wednesday, February 07, 2024

மார்டினின் பிதாமகர் !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு sad news !! இத்தாலியின் போனெல்லி குழுமத்தின்  தலைசிறந்த கதாசிரியர்களுள் ஒருவரும், நமது அபிமான மர்ம மனிதன் மார்டினின் பிதாமகருமான திரு.அல்பிரேடோ காஸ்டெலி அவர்கள் இன்று காலை தனது 76 -வது வயதினில் இயற்கை எய்தியுள்ளார் ! 1971 முதலாய் போனெல்லியில் பணிதுவக்கியவர் கடந்த சில நாட்களுக்கு முன்வரையிலும் பிசியாக இருந்து வந்திருக்கிறார் ! எண்ணற்ற கதைகள் ; தொடர்கள் ; கட்டுரைகள் என்று எழுதிக் குவித்துள்ள ஜாம்பவான் ! 

And ஒரு ஆளுமை மிகுந்த பெயராய் மாத்திரமன்றி, இவரை ஓரளவுக்கு நேரிலும் எனக்குப் பரிச்சயம் என்பதால் இந்த இழப்பு கூடுதலாய் நெருடுகிறது ! நேரில் சந்தித்த சமயத்தில் தனது அலுவல் அறைக்கு இட்டுச் சென்று துளி கூட பந்தா இன்றி எனது கேள்விகள் சகலத்துக்கும் பதில் சொன்னார் ! ஒரு நூலகம் பிச்சை எடுக்கணும் - அவரிடம் உள்ள புத்தகத் தொகுப்பின் முன்னே !! திடீரென்று மெயில் போட்டிருந்தார் - "இத்தாலிக்கு மார்ட்டின் புக்ஸ் 5 (மெல்லத் திறந்தது கதவு) அனுப்ப எவ்வளவு ஆகும் ?" என்று வினவி ! நம்மாட்களும் மாமூலான சேகரிப்பாளர் போலும் என்று எண்ணி ஏர்மெயில் கட்டணமெல்லாம் சொல்லி வைக்க, அவர் பணத்தை அனுப்பும் வழிமுறைகளை கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய போதுதான் என் கண்ணில்பட்டது ! பதறிப் போய் பதிலனுப்பி, புக்ஸையும் அனுப்பியிருந்தோம் ! கடைசியாய் அவரிடமிருந்து வந்த மெயில் அதுவே ! 

எனக்குத் தலையும் புரியாது, வாலும் புரியாது குழப்பிடும் "உலகத்தின் கடைசி நாள்" (டைலன் டாக் + மார்ட்டின் இணைந்த சாகசம்) கதை பற்றி அவரை நேரில் சந்திக்கும் போது விளக்கம் கோரிட எண்ணியிருந்தேன் ; ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றே அவரது கடைசி நாளாகிப் போய்விட்டது !

R.I.P காஸ்டெலி சார் ; காமிக்ஸ் இருக்கும் வரையிலும் உங்களின் கீர்த்தியும்  நிலைத்திடும் ! You will be greatly missed !!


Sunday, February 04, 2024

டிக் அடித்த டிக் !

 நண்பர்களே,

வணக்கம். ஜனவரி புலர்வதை ரசித்து, சென்னை விழாவின் விஸ்வரூபத்தை தரிசித்து ; , ஒரு ஜாம்பவான் நாற்கூட்டணியின் வெற்றியினையும் நுகர்ந்து - இதோ பிப்ரவரியில் நிற்கிறோம் ! ஆனால்....ஆனால்...."டின்டின்" என்ற மந்திரச்சொல்லின் பிரவாகம் இன்னமும் அடங்கிய பாடில்லை ! திருப்பூர் புத்தக விழாவின் must buy லிஸ்ட்டில் "திபெத்தில் டின்டின்" இடம் பிடித்துள்ளதென்றால், ஏஜெண்ட்களிடமும், நம்மிடம் ஆன்லைனில்  வாங்குவோரும் இன்னமுமே தெறிக்க விட்டுக்கொண்டுள்ளனர் ! Almost தினசரி ஏதேனும் ஒரு ஊரின் முகவர் மறுக்கா ஆர்டர் தந்து கொண்டிருக்கிறார் & ஒவ்வொரு மாலையிலும் புதுசு புதுசாய் இல்லங்களைத் தேடி டின்டின் பிரதிகள் கூரியரில் படையெடுத்துக் கொண்டும் உள்ளது ! இதில் icing on the cake - ஐரோப்பிய சேகரிப்பாளர்களின் ஆர்வப் பிராவகமுமே - பெல்ஜியத்துக்கு மட்டுமே 3 கணிசமான எண்ணிக்கையில் ஏர்-மெயில்கள் போயுள்ளன ! ஒரு உலகளாவிய ஜாம்பவானின் நிஜமான வீச்சு என்னவென்பதை இத்தனை தசாப்தங்களுக்குப் பின்பாய் தரிசிக்கும் வாய்ப்பாய் இதனை பார்த்திடுகிறோம் ! Oh yes - வெற்றி நாயகர்கள் நமக்குத் புதியவர்கள் அல்ல தான் - ஆனால் இதுவரையிலுமான நமது அணிவகுப்பின் சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லைகள் இருந்து வருகின்றன ! டின்டினைப் போல "வானமே எல்லை" என்றோர் வெகு சொற்பமே !

*மாயாவி - strictly a British star ! இன்னும் சொல்லப் போனால் இவருக்கு இங்கிலாந்தில் உள்ள பிரபல்யத்தினைக் காட்டிலும் தமிழில் உள்ளது பன்மடங்கு அதிகம் என்பதை படைப்பாளிகளே சொல்லியுள்ளனர் !

*டெக்ஸ் - இத்தாலியில் ஒரு அசாத்தியர் ; பிரேசிலில் ; போர்ச்சுகலில் ; க்ரோவேஷியாவில் ; துருக்கியில் ; தமிழில் ஒரு அசாத்திய சூப்பர் ஸ்டார் ! ஆனால் ஐரோப்பாவிலேயே பல முன்னிலை காமிக்ஸ் மார்க்கெட்களில் 'தல' யின் presence கிடையாது ! And உலகின் முதல் மார்க்கெட்டான அமெரிக்காவில் ரொம்ப சமீபமாய் தான் காலூன்ற முயற்சித்து வருகிறார் ! உலகின் மார்க்கெட் # 2 ஆன ஜப்பானில் nopes !

*லக்கி லூக் : ஏகப்பட்ட மொழிகளில் ஐரோப்பாவில் கோலோச்சி வரும் பிஸ்தா தான் ; but ஒரிஜினல் பிதாமகர்களான மோரிஸ் & கோஸினிக்குப் பின்பாய் தொடரின் பிற்பகுதியில் உள்ள சில மிதரகக் கதைகள், தொடரின் நியாயமான அங்கீகாரத்துக்கு லைட்டாய் ஸ்பீட்-பிரேக்கர் போடுகின்றன ! 

*XIII - ஐரோப்பிய அதிரடி வெற்றித் தொடர் ! அதைத் தாண்டிய வீச்சு வேறெங்கெல்லாம் என்று அலசிட வேண்டி வரும் !

*கேப்டன் டைகர் - Ditto !! ஐரோப்பிய கண்டத்தினுள் ஒரு உச்ச ஆளுமை ! அதன் பின்னே வீச்சின் அளவு அதே வேகத்தில் கிடையாது !

மெய்யான ஒரு உலகளாவிய reach கொண்டதொரு கதைவரிசையினை அடையாளம் காட்டிடுவதானால் SMURFS நீலப் பொடுசுகளை சுட்டிக்காட்டிடலாம் ! ஐரோப்பாவில் ; அமெரிக்காவில் ; சீனாவில் ; ஜப்பானில் என்று இவர்களின் வெற்றித்தடங்கள் பதியாத தேசங்கள் வெகு குறைச்சல் ! ஆனால்.....ஆனால்...நம் மத்தியில் இவர்களுக்கு உருப்படியானதொரு அங்கீகாரம் இல்லாது போனது தான் துரதிர்ஷ்டமே !!

And yes - வேதாளருக்கு ஒரு global reach உண்டு தான் ! James Bond-க்குமே தான் !

ஆனால் அகவை 95 ஆகியும் புராதனம் கிஞ்சித்தும் தொனிக்காது ; எல்லைகளே இல்லா வீச்சுடன், அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதொரு நாயகராய் மிளிரும் டின்டின் முற்றிலும் வேறொரு உசரத்தில் இருப்பது புரிகிறது ! Of course இவருக்கு சவால் விடக்கூடிய பிரபல்யம் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் தொடருக்கு இருக்கலாம் தான் - but அவர்களைத் தமிழ் பேச வைப்பதும், அதனை நீங்கள் ரசிக்கும் சாத்தியங்களும் சிரமங்களின் இமயம் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது ! இப்போதைக்கு அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்தினை ஆகஸ்டுக்கு ரெடி பண்ணிட இப்போதே கரணம் போட ஆரம்பிச்சாச்சு ! இந்தத் தொடரின் 24 ஆல்பங்களையும் நமது வரிசையில் அணிக்கோர்க்கச் செய்யும் தினத்தில், நமது கேட்லாக்கின் ரேஞ்சே வேறு மாதிரி இருக்கும் போலும் !! Phewwwww & Fingers Crossed big time - பயணிக்க ஏகமோ ஏக தூரம் இருப்பதால் !!! 

Moving on, இம்மாதத்து இதழ்கள் வெளியாகி ஓரிரு நாட்களே ஆகியுள்ளன தான் - ஆனால் early trends காட்டுவதெல்லாம் நமது புதுத் தாரக மந்திரத்தின் அவசியத்தினையே ! வழக்கமாய் ஆன்லைன் ஆர்டர்களில் டெக்ஸ் இதழ்களைத் தேர்வு செய்து விட்டு, மீத இதழ்களுக்குள் இங்கி-பிங்கி-பாங்கி போடும் படலமே நடைமுறையில் இருந்திடும். ஆனால் இம்முறையோ - முக்கால்வாசி ஆர்டர்கள் மூன்று இதழ்களுக்குமே & பாக்கி கால்வாசி டெட்வுட் டிக் இல்லாது ஆர்டர்கள் ! இதனைப் புரிந்து கொள்வதில் சிரமமே இல்லை தான் - நமது டிக் பையன் கடுங்காப்பி போலானவன் என்பதால் ! கடுங்காப்பி அத்தினி பேருக்குமே ரசிக்கும் என்று எதிர்பார்க்க இயலாது தானே ?! So 'தல'யும், இளவரசியும் இம்மாதத்தினை ஆங்காங்கே தெறிக்க விடுவர் என்பதை ஏற்றுக் கொள்வதில் நம்மளவில் சிரமங்களில்லை !

டெட்வுட் டிக் !! 

நேற்றே நம்ம பத்து சாருக்கான பின்னூட்ட பதிலில் இது குறித்து எழுதியிருந்தேன் ! இந்த நாயகனை ஒரு நார்மலான காமிக்ஸ் வட்டத்துக்கு அறிமுகம் செய்வதென்பது - கல்யாணப் பந்தியில், கோவக்காய் கூட்டு + பாவக்காய் பொரியல் என்பதை பரிமாறுவதற்குச் சமம் என்பேன் ! ஆனால் 'கோவக்காயோ, பாவக்காயோ, அதையும் ரசித்துத் தான் பார்ப்போமே ; நல்லா இருந்தா ஏற்றுக் கொள்ளவும் செய்வோமே ?!' என்ற பக்குவம் உங்களைத் தவிர்த்த இன்னொரு இந்திய மொழியின் காமிக்ஸ் வட்டத்துக்கு நஹி என்பதே bottomline ! ரிட்டையர் ஆகி, ஊட்டுல குந்திக் கிடக்கும் பல் போன நாட்களில் இந்தப் பயணத்தினை அசை போடும் தருணங்களில், நான் எண்ணி வியக்கவும், மலைக்கவும் போகும் சமாச்சாரங்களின் பட்டியலில் உசரே இருக்கப் போவன  - தாத்தாஸ் ; நவீன வெட்டியான் ஸ்டெர்ன் ; டெட்வுட் டிக் ; நிஜங்களின் நிசப்தம் போலான offbeat முயற்சிகளாகவே இருந்திடும் ! பத்தில் ஒன்பது காமிக்ஸ் எடிட்டர்கள் நிராகரிக்கக்கூடியவற்றை 'டிக்' அடிக்க மட்டுமன்றி, அவை காணும் வெற்றிகளை ரசிக்கும் வரமும் வாய்த்திருப்பது எனக்கன்றோ ?!  

And டெட்வுட் டிக்கின் வெற்றி ஒற்றை ஆல்பத்தின் flash in the pan அல்லவே ! மொத்தம் 7 அத்தியாயங்கள் கொண்ட 425 பக்கக் கதைவரிசை இது ! முதலிரண்டு பாகங்களைப் போட்டுவிட்டு, வரவேற்பைப் பார்த்துவிட்டு மீதத்தை வாங்கிக் கொள்ளும் option நமக்கு இருந்தது ! ஆனால், உங்களின் ரசனைகள் மீதான நம்பிக்கை + குரல்வளை வரைக்கும் கட்டைவிரலை தினித்துப் பார்க்கும் ஆனந்தம் - ஒன்றிணைந்து மொத்த 425 பக்கங்களையும் 'ஏக் தம்'மில் வாங்கிடப் பணித்தன ! And இதோ - 7 மினி ஆல்பங்களையும், மூன்று ரெகுலர் ஆல்பங்களில் பூர்த்தி செய்து நிற்கின்றோம் - டிக்குக்கு வாஞ்சையாய் டாட்டா சொன்னபடிக்கே ! நம்மைப் பொறுத்தவரை வெள்ளைக்கார துரைமார்-கருப்பு அடிமைகள் என்ற கோட்பாடெல்லாம் பரிச்சயம் கிடையாது - அமெரிக்காவினில் போல  ! நாமே ஒரு காலத்தில் தோல் கருத்த அடிமைகளாய் பார்க்கப்பட்டோர் தான் என்பதால் நமக்கு டிக்கின் வாழ்க்கையோடு ஒன்றிடுவது அத்தனை பெரிய சிரமமாக இருந்திடக்கூடாது தான் ! ஆனால் யதார்த்தம் அதுவல்ல என்பேன் - at least காமிக்ஸ் வாசிப்பினைப் பொறுத்த வரையிலும் ! இந்த 52 ஆண்டுகாலப் பயணத்தில் நாம் பார்த்துள்ள நாயக / நாயகியர் அனைவருமே வெளீர் தோல் கொண்ட அமெரிக்கர்களோ ; பிரிட்டிஷாரோ ; ஐரோப்பியர்களோ தான் ! In fact வெள்ளைத் தோல் கொண்டிரா ஒரே நாயக வட்டம் - நம்ம smurfs மாத்திரமே ! Oh yes - ஏஜென்ட் ராபினின் உதவியாளன் மார்வின் வெள்ளையன் அல்ல ; நமது XIII-ன் ஆதர்ஷத் தோழி ஜோன்ஸ் வெள்ளை அழகி கிடையாது ; டைகர் & டெக்சின் பல சாகசங்களில் கறுப்பினர்களுக்கு நல்லதொரு பங்களிப்பு சாத்தியப்பட்டுள்ளது தான் - ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரை ஒரு தொடரின் ஹீரோவாக நாம் பார்த்துள்ளதாக எனக்கு நினைவே இல்லை !  So நம்மையும் அறியாது - ஒரு காமிக்ஸ் வாசிப்பின் இலக்கணமாய் இந்த நிறபேதம் அமைந்திருப்பது ஒரு அரூப சமாச்சாரம் ! So இப்படியொரு ஹீரோவை ஏற்றுக் கொள்வது மாத்திரமன்றி, அவனது வாயிலிருந்து அருவியாய் கொட்டிடும் கலீஜ்களை உள்வாங்கிக்கொள்வதும் நமக்கே ஒரு மாறுபட்ட பரீட்சார்த்த முயற்சி தான் ! And நீங்கள் அந்தப் பரீட்சையில் அடி தூள் கிளப்பியுள்ளீர்கள் என்பது நமது பயணப் பெருமிதங்களுள் ஒன்று !  

Of course - ஆள் தான் கரடு முரடாய் இருக்கிறான் சரி, குறைந்த பட்சமாய் அவனை ஒழுங்காகப் பேசவாவது செய்திருக்கலாமே ? என்ற விசனம், கி.நா.மீது பெருசாய் அபிமானம் இல்லாத நண்பர்களுக்குத் தோன்றிடலாம் தான் ! ஆனால் ஒரு ஓவியர் எவ்விதம் கதாசிரியரின் கற்பனைக்கு உயிர் கொடுக்கிறாரோ - அதற்கு இணையான பங்கு ஸ்கிரிப்டுக்குமே உண்டு தானே ? So நான் கதாசிரியருக்கான தமிழக கூரியர் பாயாக வலம் வரும் போது பார்சலிலுள்ள முகவரிக்கே தானே பட்டுவாடாவைச் செய்திட வேணும் ? நான்பாட்டுக்கு எக்ஸ்டரா நம்பர்களைப் போட்டு வைத்தால், இந்தத் தொடரின் வீரியத்துக்கே ஆப்படிச்சாப்போல ஆகிடும் அல்லவா ? வார்த்தைகளில் நாசூக்கு பற்றியெல்லாம் பெருசாய் கவலை கொள்ளாது ; 'நம்ம மூத்திர சந்து தானே...நாலு சாத்து வாங்குனா வாங்கிட்டுப் போய்க்கினே இருப்போம் !' என்று நான் தீர்மானித்ததன் பின்னணி இதுவே ! இன்று கோர்வையாய் படித்துப் பார்க்கும் போது டிக்குக்கு ஜென்டிலான பேச்சு பாணியினைத் தந்திருந்தால் இந்தத் தொடர் விளக்குமாற்றுப் பூசை வாங்கியிருக்கும் என்பது புரிகிறது ! Pheww !!

இம்மாதத்தின் surprise packet என்னளவில் மாடஸ்டி தான் ! கோணாம்பட்டியிலேயே இன்றைக்கு IPhones புழக்கத்தில் இருக்க, கதை நெடுக மாடஸ்டி "அல்லோ...கோப்பால்...இங்கே உங்க மருமாள் நலம் !! கவலையை விடுங்க !" என்று ஆசுவாசப்படுத்தும் sequences கணிசம் ! ஆனால் இளவரசியின் கதாப்பாத்திரத்தின் வலிமையின் முன், சிலபல அயல்நாட்டு சக்திகளைத் தவிர்த்தோருக்கு வெறெந்தப் பிசிறும் தட்டியிருக்கவில்லை என்பது ஒரு சந்தோஷ ஆச்சர்யம் ! And கதை அரங்கேறும் நியூசிலாந்து ; அந்த மவ்ரீக்கள் ; நமது வாசிப்புகளுக்கு புதுசு என்பதுமே "ஒரு பண்டமாற்றுப் படலம்" இதழின் freshness க்கு ஒரு காரணியாக இருக்கலாம் ! Of course - மாடஸ்டி-கார்வின் நட்பின் அந்தப் பிரதிபலிப்பு நமக்கெல்லாம் செம பிடித்தமான விஷயம் என்பது yet again நிரூபணம் கண்டுள்ளது ! ஆஹா...இனி next stop இளவரசி டைஜஸ்ட் தான் !! என்று நம்ம கரூர் ராஜசேகர் சார் குதூகலிக்கக்கூடும் தான் - ஆனால் சுவீட்டை சாதம் ரேஞ்சுக்குப் பரிமாறினால் திகட்டிப் போய்விடும் என்பதே எனது அபிப்பிராயம் ! Maybe ஒன்றுக்கு இரண்டாய் சுவீட்களைப் பரிமாறிடலாம் ; அதற்கு மேலென்றால் பற்களுக்கும் பிரச்சனை ; ஜீரணத்துக்குமே !!

இம்மாதத்தின் டெக்ஸ் ஒரு வித்தியாச combo என்பேன் ! 'மொரிசுக்கோ தான் வராரு.....மர்மம் தரப் போறாரு...!!' என்ற சாங்கோடு கதை துவங்கினாலும், இது முழுக்கவே நம்ம தல டீமின் ஆவர்த்தனமே ! நம்மைப் போலவே மொரிஸ்கோவும் அகலப் பிளந்த வாயோடு அந்த "ஷுப்காப்ரா" சைத்தான்களை பராக்குப் பார்த்தபடியே பயணிக்கிறார் ! முழுக்க முழுக்க ஆக்ஷன் ; தோட்டாக்களின் தோரணம் ; with an element of the supernatural - என்று தடதடக்கும் இந்தக்கதைக்கு ஓவியங்கள் ஒரு ஜீவநாடி எனலாம் ! சும்மா ப்ரேமுக்கு ப்ரேம் ஓவியர் மிரட்டியிருப்பது மொரிஸ்க்கோவின் டீமை மட்டுமல்ல - நம்மையும் தான் ! அட்டைப்படமும் டெரராய் அமைந்திருக்க, டெக்சின் தொடரோட்டம் தொடர்கிறது !   

Looking ahead, இன்றைக்கு திருப்பூர் புத்தக விழா நிறைவுக்கு வருகிறது & நெல்லையில் நேற்று தான் விழா துவங்கியுள்ளது ! திருப்பூரின் அசுர வேகம் நெல்லைக்கு சாத்தியமாகிடுமா ? என்பதை தொடரும் தினங்களில் பார்த்திடும் அதே மூச்சில், பிப்ரவரி 17 & 18 தேதிகளில் சென்னையில் அரங்கேறிடவுள்ள COMIC CON பற்றிய சிந்தனைகளும் ஓட்டமெடுத்து வருகின்றன ! கிறுகிறுக்க வைக்கும் கட்டணங்கள் தான் ஸ்டாலுக்கு ; நுழைவுக் கட்டணமும் தொள்ளாயிரமோ என்னவோ தான் & இந்த 2 நாட்களில் காமிக்ஸ் விற்பனை என்பதெல்லாம் எம்புட்டு தூரத்துக்கு சாத்தியம் என்பது மர்மமே - yet இவர்கள் இந்தியாவுக்குள் கால்பதிக்கும் நகர்களிலெல்லாம் அதிர்வெடி வெற்றியினை ஈட்டி வருகின்றனர் ! இதோ - போன வாரம் ஹைதெராபாத்தில் நிறைவுற்றிருக்கும் HYDERABAD COMIC CON-ல் இரு தினங்களின் அட்டெண்டன்ஸ், வாய் பிளக்கச் செய்யும் 37000-மாம் !!! So நாம் பத்தாண்டுகளுக்கு முன்பாய்ப் பார்த்திருந்த விழாவுக்கும், இப்போதைக்கும் என்னென்னெ மாறியுள்ளன ; 2k இளசுகளின் ரசனைகள் என்னவென்பதை பராக்குப் பார்க்கவாச்சும் CHENNAI COMIC CON-க்கு வருகை தாருங்கள் guys என்பேன் ! ஒரு தக்கனூண்டு 2 x 2 மீட்டர் ஸ்டாலில் நமது இதழ்களில் selective ஆன தலைப்புகளோடு ; இங்கிலீஷ் காமிக்ஸ்சும் சேர்த்து display செய்திடவுள்ளோம் ! And yes - ஞாயிறு காலை கொஞ்சமாச்சும் நண்பர்கள் தேறும் பட்சத்தில் டின்டின் கூப்பனின் நேபாள குலுக்கலையும் போட்டுத் தாக்கி விடலாம் ! Hope to see you guys !!




Bye for now....have a great Sunday all ! See you around !

Thursday, February 01, 2024

ஒரு பரபர பிப்ரவரி !

 நண்பர்களே,

வணக்கம். விண்ணைத் தொடும் வியாழனில் பிப்ரவரியின் புக்ஸ் புறப்பட்டாச்சு - நாளைக்கு உங்களின் இல்லக்கதவுகளைத் தட்டிடும் பொருட்டு ! "ஜனவரியில் பிப்ரவரி"க்கு முயற்சித்தோம் தான் - ஆனால் இளவரசியின் மொழியாக்கத்தில் டீம் V கொஞ்சம் தடுமாறிப் போக, கடைசி நிமிடத்தில் நான் உட்புக வேண்டிப் போனது ! And நியூசிலாந்தில் அரங்கேறும் இந்த சாகஸத்தில், வாடிக்கையான டாக்டர்களோ, தொழிலதிபர்களோ லேது என்பதால் வசனங்கள் ஜாஸ்தியாகி விட்டன ! So செப்பனிடும் பணியும், மாற்றி எழுதும் பணியும் நேரத்தை விழுங்கி விட்டதால், ஒற்றை நாள் தாமதமாகிப் போச்சு ! இதோ - நீங்கள் பார்த்திராத V பிப்ரவரி இதழின் previews + டெக்சின் உட்பக்க preview-ம் !



அட்டைப்படம் - மாடஸ்டியின் fan + டிஜிட்டல் ஆர்டிஸ்ட்டுமான ஒரு சென்னை ஓவியையின் கைவண்ணம் ! ஒரிஜினல் black & white டிராயிங்கையே வர்ணமூட்டியுள்ளார் - background-ல் மட்டும் கடல்..கப்பல் என்ற additions சகிதம் ! இதனை ஜூனியர் என்னிடம் காட்டிய போது எனக்குத் தெரிஞ்ச டிராயிங் ஞானத்துடன், கண்ணு..மூக்கு...காது...கழுத்து என்று பார்த்து விட்டு, மண்டையை ஆட்டியிருந்தேன் ! நம் மத்தியினில் உள்ள விற்பன்னர்களின் தீர்ப்பு எவ்விதம் இருக்கப் போகுதோ - அறியில்லா !  ஏற்கனவே இதே கோணத்தினில் ஒரு மாடஸ்டியினை காலம் சென்ற நமது ஓவியர் மாலையப்பன் ஏழோ-எட்டோ ஆண்டுகளுக்கு முன்னே போட்டிருந்தார் என்ற ஞாபகம்.....அது வரையப்பட்ட இளவரசி ;  இது டிஜிட்டல் இளவரசி ! 

கதையைப் பொறுத்தவரை ரொம்பவே வித்தியாசமான பின்புலன் ; கதை மாந்தர்கள் என்று தடதடக்கிறது ! மருத்துவ ரசிகர்கள் மனமொடிந்து போகப்படாதே என்பதற்கோ, என்னவோ - ஒரேயொரு டாக்டர் மட்டும் கதையில் ஆஜராகிறார், சொக்காயே போடாமல் !! அது ஏன் ? என்றறிய படியுங்கள் இம்மாதத்து V காமிக்ஸ் !! செம crisp read !!  

And இதோ - போன வாரமே கண்ணில் காட்டுவதாய்ச் சொல்லியிருந்த டெக்ஸ் சாகச உட்பக்க preview :  


மொரிஸ்கோ வந்தாலே கோக்குமாக்காய் விலங்குகள் ; தாவரங்கள் ; ஜந்துக்கள் ; அமானுஷ்யங்கள் தலையெடுப்பது வாடிக்கை and இந்த ஆல்பமும் அதற்கொரு விதிவிலக்கல்ல !  கதையின் பெரும்பங்குக்கு ஒரு டெரரான காட்டேரி கும்பலாய் உலா வர, நம்மவர்கள் ஒரு ஈயச் சுரங்கத்தையே காலி செய்யும் அளவிற்கான தோட்டாக்களைப் பறக்க விடுகின்றனர் !! 224 பக்கங்களும் செம ஆக்ஷன் mode-ல் இருப்பதால் இந்த ஆல்பம், ஒரு மின்னல் வாசிப்புக்கு simply perfect என்பேன் !

இதோ - ஆன்லைன் லிஸ்டிங் : https://lion-muthucomics.com/latest-releases/1177-february-pack-2024.html

கிளம்பும் முன்பாய் திருப்பூரிலிருந்து updates !! 

சென்னை போட்டுத் தந்த பாதையினில், திருப்பூரும் இதுவரைக்குமான (அந்நகரத்திலான) விற்பனை ரெக்கார்டுகளை விளாசியுள்ளது ! நேற்றைக்கே பழைய நம்பரைத் தாண்டியாச்சு & இந்த ஞாயிறுக்குள்ளாக அங்குள்ள நமது நண்பர்களின் ஒத்தாசைகளுடன், ஒரு புது உசரத்தைக் கண்ணில் பார்த்திடுவோம் என்பது உறுதிபட தெரிகிறது ! Thanks a ton all !! அதிலும் நமது தோர்கல் முன்னேற்றக் கழகத்தின் பல்லடத்து கொள்கைபரப்புச் செயலாளர், திருப்பூரில் உள்ள வடநாட்டு ஆசாமிகளுக்கு கூட "तीस थिन में तमिल सीकना कैसे ?" என்ற தமிழ் படிக்கும் கைடோடு ஆளுக்கொரு தோர்கலை போணி பண்ணியிருப்பார் என்று உறுதிபட நம்பலாம் ! ஜெய் தோர்கல் !! ஜெய் ஜெய் திருப்பூர் !!   

And நாளை மறுநாள் முதல் (3rd.FEBRUARY) நெல்லை மாநகரத்தில் நமது கேரவன் நிலைகொண்டிருக்கும் ! அக்கட இருக்கக்கூடிய நமது நண்பர்கள் நெல்லையினையும் smash hit ஆக்கிட உதவுவார்கள் என்ற நம்பிக்கை நிரம்பவுள்ளது ! ஒரே நேரத்தில் நாமக்கல் ; சிவகங்கை ; திருவாரூர் ; மயிலாடுதுறை என்று புத்தக விழாக்கள் ரவுண்டு கட்டியடிக்க, அந்த வேகத்துக்கு ஈடு தர நமக்குத் தான் தடுமாறுகிறது ! ஒவ்வொரு விழாவிலுமே கலந்து கொள்ளும் ஆட்பலம் மட்டும் நம்மிடம் இருப்பின் - தெறிக்க விடலாம் தான் ! புனித மனிடோ அதற்குமொரு வழி காட்டுவாரென்று நம்புவோம் !


 Before I sign out - இதோ ஒரு குட்டியான ஜாலி நியூஸ் !! 

Bye all....see you around ! Happy Reading !!