Powered By Blogger

Saturday, May 30, 2020

நகரும் நாட்கள்...!

நண்பர்களே,

வணக்கம். உலகை உலுக்கிப் போடக்கூடியதொரு உண்மையை கடந்த சில வாரங்களில் ; அதுவும் குறிப்பாய், இந்த ஒற்றை வாரத்தில் கண்டு பிடித்து வருகிறேன் என்று தான் சொல்லணும் !! அதாகப்பட்டது - சுறுசுறுப்பானதொரு மாடு கூட படு சோம்பேறி மாடனாவது செம சுளுவானதொரு பிராஸஸாக்கும் !!  மாங்கு மாங்கென்று வேலை செய்த நாட்களை ; ராவோ, பகலோ ; உள்ளூரோ ; அசலூரோ - எங்கிருந்தாலுமே எதையெதையோ இழுத்துப் போட்டுக்கொண்டு பணியாற்றிய தருணங்களை மறப்பதென்பதெல்லாம் சுலபமோ - சுலபமாக்கும் ! சொல்லிக் கொள்ள சாக்கு என்று ஏதேனும் சிக்கினால் போதும் - மல்லாக்கப் படுத்துக் கொண்டே ; வெட்டிப் பொழுதில் ஆயுளில் பாதியைக் கரைக்க மனசு டபுள் ஓ.கே. சொல்லி விடுகிறது ! கடந்த 2 மாதங்களின் கடைமூடிய வேளைகளில், மேற்படி மஹாகண்டுபிடிப்பு  ஜனித்ததெனில் ; இந்தக் கடைசி ஒற்றை வாரத்து அனுபவமானது அதனை இன்னொரு உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது ! ஆமாங்கோ....ஐநூறு, அறுநூறு பதிவுகளை எங்கெங்கேயோ அமர்ந்து டைப்பிய விரல்களே தான் ; வாரம் தவறாது ; நேரம் தவறாது, சொந்தக்கதை, சோகக்கதை ; சோன்பப்டி சாப்பிட்ட கதை என்று எதையெதையோ சொல்லிப் பழகிய பள பளா கபாலமே தான் !! ஆனால் 'லேப்டாப் ரிப்பேர்' என்ற காரணத்தினால், ஒரே ஒரு வாரத்துப் பதிவை மட்டும் ஒரு வீடியோ காணொலியாய் அமைத்துப் பழகிய பிற்பாடு back to the laptop எனும் போது விரல்களும், கபாலமும், ஒருசேர சண்டித்தனம் செய்கின்றன !!  'சும்மா ஜாலியா கால் மேலே கால் போட்டபடிக்கு, மனசில் தோணும் சமாச்சாரங்களை அரை அவரில் ஒப்பித்தால் முடிந்திடும் வேலையை - குறைந்தது நாலைந்து மணி நேரங்களுக்கு நாங்கள் மெனெக்கெட்டு செய்யத்தான் வேணுமா  ?' என்று அவை முன்வைக்கும் கேள்விகளில் "அக்மார்க் சோம்பேறி மாடன் " என்ற முத்திரை பிரதானமாய் மிளிர்கிறது ! "சரி...சரி...மாதத்தில் ஒரேயொரு வாரம் உங்களுக்கு இனி லீவு ; அந்தப் பதிவினை மட்டும்  வீடியோப் பதிவாக்கிடலாம் !' என்று அவற்றைச் சமாதானம் செய்து விட்டு, டைப்படிக்கும் மாமூலுக்குள் புகுந்தால்,  மாறிப் போயுள்ள யதார்த்தங்களை நினைத்து மலைக்காது இருக்க இயலவில்லை ! அட்டவணை எத்தனை கனமாய் அமைந்து போனாலும், "bring them on !!" என்று 'தம்' கட்டிப் பணி செய்ததெல்லாம் ஏதோவொரு கி.மு. - கி.பி. காலத்துப் புராதனம் போல தோன்றிட -  இந்த லாக்டவுன் நாட்களின் பிரதான சேதாரமாய் என்னளவிற்குத் தெரிவது - இத்தனை நாட்களாய் அரும்பாடுபட்டு வளர்த்திருந்த சுறுசுறுப்பே !சத்தியமாய்ப் பின்னணியினில் நீங்களும், உங்களின்செம energetic ஊக்குவிப்புகளும் மட்டும் இல்லாது போயின் - இந்த newfound சோம்பேறி சுப்பாண்டி அவதாரைப் பின்னுக்குத் தள்ளிட ரொம்பவே திணறிப் போயிருப்பேன் ! இதோவொரு சின்ன உதாரணம் - காத்திருக்கும் அடுத்த செட் இதழ்களைக் கொண்டு !! பர்ஸ்களுக்குப் பாதிப்பின்றி ; வாசிப்பிலும் இலகுத்தன்மை தொற்றிக் கொள்ளும் பொருட்டு திட்டமிட்டுள்ள இந்தப் பட்டியலைப் பாருங்களேன் :
  1. SODA - திசை மாறிய தேவதை
  2. 'அதிகாரி' - கைதியாய் டெக்ஸ்
  3. ப்ளூ கோட் பட்டாளம் - போர்முனையில் ஒரு பாலகன்
  4. ஜேம்ஸ் பாண்ட் Black & white - விண்ணில் ஒரு வேதாளம் 
In the normal routine - மேற்படி அட்டவணையின் பணிகளெல்லாம்  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தித்திப்புகளை தொந்திக்குள் தள்ளும் லாவகத்தில் ஜிலோவென்று அரங்கேறியிருக்கும் ! 2 x 48 பக்க வண்ண புக்குகள் & அவற்றுள் ஒன்று கார்ட்டூன் எனும் போது - 4 நெய் மைசூர்பாகுகளை விழுங்கும் வேகத்தில் பணிகளை முடித்திருப்போம் ! அந்த 110 பக்க அதிகாரியின் black & white சாகசத்தை - ரெண்டு அதிரசத்தைப் பிய்ச்சு வாய்க்குள் போடும் நேரத்திற்குள் அரங்கேற்றியிருப்போம் ! ஜேம்ஸின் 36 பக்க black & white classic சாகசமோ  - ஒரு பாதாம்கீர் உள்ளுக்குள் என்ட்ரி ஆகிடும் நேர்த்தியில் நிறைவு கண்டிருக்கும் ! ஆனால் இந்தக் கொடுங்கோல கொரோனா வழங்கியுள்ள enforced விடுமுறைகளின் பலனாய் - வண்டி அந்நாட்களது லாம்பிரெட்டா ஸ்கூட்டரைப் போல தத்தித் தத்தி ஓடி வருவதால் - இதோ ஜூன் முதல் தேதிக்குத் தான் 2 வண்ண இதழ்களுமே அச்சுக்குத் தயாராகிடும் நிலையில் உள்ளன !! And தொடரும் நாட்களில் மீதமிருக்கும் 2 black & white இதழ்களும் முழுமை கண்டுவிட்டால் - ஜூன் 10 வாக்கில் அடுத்த செட் இதழ்களை அனுப்பிடத் தயாராகியிருப்போம் ! இம்முறை தமிழகத்தைப் பொறுத்த மட்டிலுமாவது DTDC என்ற திசைக்கு ஒரு பெரும் கும்பிடைப் போட்டுவிட்டு ST மூலமே அனுப்பிடத் திட்டம் !!  திட்டங்கள் நனவாகிட, நமக்கோசரம் நீங்களும் பெரும்தேவன் மனிடோவிடம் ஒரு பிரார்த்தனையைப் போட்டு வையுங்களேன் - ப்ளீஸ் !

SODA !! காத்திருக்கும் புது நாயகரின் அறிமுகம் இது தான் : "My name is SODA, but my real name is Solomon.....David Solomon." மம்மிக்கு மட்டும் என்னைப் பற்றிய நிஜம் தெரிந்திருக்குமேயானால் "என் புள்ளையாண்டான் ஒரு காவல்துறை அதிகாரி !" என்று கெத்தாகச் சொல்லவே பிரியப்பட்டிருப்பார் ! அவரது சுபாவம் அப்படி ; புள்ளை மீதான அபிமானமும் அப்படி ! ஆனால் நியூயார்க்கில் ஏது "கெத்தான அதிகாரிகள்" எல்லாம் ? இங்கே அத்தினி பேரும் "போலீஸ்காரர்கள்" மட்டும் தானே ? அட....எனது NYPD (NewYork Police Department) புராணமெல்லாம்  எதுக்கு இப்போ ? மம்மிக்கு நிஜம் தெரியாது ; நான் ஒரு சர்ச்சில் பாதிரியாக இருந்து வருகிறேன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார் ! தெரியாத நிஜம் மம்மியை ஒருபோதும் நோகச் செய்யப் போவதில்லை என்பதால் அவரது நம்பிக்கையோடு வாழட்டும் என்று விட்டுவிட்டேன் ! போலீஸ் உத்தியோகத்தில் இருந்த டாடி செத்த பிற்பாடு போன வருஷம் தான் ஊரிலிருந்து நியூயார்க்கிற்கு வந்தார் - என்னோடு காலத்தைத் தள்ளிட ! So மம்மியின் திருப்திக்கு pastor ஆகவும், நிஜத்தில் ஒரு NYPD போலீஸ்காரனாகவும் குப்பை கொட்டி வருகிறேன் நான் !!"

1986-ல் துவங்கிய இந்த SODA தொடரானது உலகின் தலைநகராய் விளங்கும் நியூயார்க்கின் இருண்ட பக்கங்களை செம ஜாலியாய்ச் சொல்ல முனையும் ஒரு படைப்பு ! க்ரீன் மேனர் பாணியில், இங்குமே இறுக்கமான கதைக்களத்திற்கு லைட்டான ஓவியங்கள் ; சுலபமான treatment என்று ஒரு வித்தியாசமான டெம்பிளேட் செட் பண்ணியுள்ளார் "TOME" என்ற புனைப்பெயருடன் உலவிய Philippe Vandevelde ; வெகு சமீபமாய் (அக்டொபர் 2019) மரித்துப் போனதொரு திறமைசாலி ! மொத்தம் 13 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரை அதன் ரொம்பவே வித்தியாசமான கதை சொல்லும் பாணிக்காகவே நான் தேர்வு செய்தேன் ! Dark humor ; நியூயார்க்கின் பரபரப்பு ; NYPD-ன் ஓய்வில்லா அதிரடிகள் ; மிரட்டும் ஆக்ஷன் என்பதன் மத்தியில் - ஒரு முதிய மம்மியின் மனதைக் குளிர்விக்க நினைக்கும் பொறுப்பான புள்ளையாகவிருக்கவும் முயற்சி செய்திடும் SODA நாம் பரிச்சயப்பட்டுள்ள typical ஹீரோவெல்லாம் கிடையாது ! மணிரத்னம் சார் பட நாயகர்களின் பாணியில் கொஞ்சமாய்ப் பேசுவார் ; நக்கலாய்ப் பேசுவார் ; கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் சாத்து சாத்தென்று சாத்திவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார் ! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் பாணி ஹீரோவல்ல இவர் ! So எவ்வித முன்மாதிரிகளையும் மனதில் இருத்திக் கொள்ளாது, ஒரு புது அனுபவத்துக்குத் தயாராகிக் கொண்டே இந்த ஆல்பத்தினுள் புகுந்திடுங்களேன் - you will not be disappointed !! இதோ - அதன் அட்டைப்பட முதல் பார்வை :

லக்கி லூக்கையும், அண்டர்டேக்கரையும் சேர்த்த கலவை போலான இந்த ஒடிசலான நாயகரை 2 வாரங்களுக்குள் உங்களிடம் ஒப்படைத்த கையோடு ஆர்வமாய்க் காத்திருப்போம் -நீங்கள் இந்த மனுஷனை பாஸ் பண்ணி விட்டு அடுத்த வகுப்பிற்கு அனுப்பப் போகிறீர்களா ?  இல்லாங்காட்டி 'ரிஜிட்' என்று முத்திரை குத்தப் போகிறீர்களா என்று !! Fingers crossed !!
Philippe Vandevelde (aka) TOME
அதிகாரியின் அட்டைப்படத்தைத் தான் ஏற்கனவே கண்ணில் காட்டி விட்டேன் என்பதால் - எஞ்சியிருக்கும் 2 இதழ்களின் previews தான் தொடரும் ஞாயிறுப் பதிவுக்கான மேட்டர் ! So அவற்றின் preview இப்போதைக்கு நஹி !

Moving on, கொஞ்சம் ஜாலியான சேதிகள் !!  வெளியே சுனா.பானா.போல கெத்தாய்க் காட்டிக் கொண்டு திரிந்திருந்தாலுமே - இந்த கொரோனாவின் தாக்கம் நமது காமிக்ஸ் வாசிப்பின் மீதும்  ; விற்பனைகளின் மீதும் எவ்விதம் reflect ஆகிடுமோ ? என்ற 'டர்' உள்ளுக்குள் நிரம்பவே புரட்டி எடுத்துக் கொண்டேயிருந்தது !! பற்றாக்குறைக்கு வெளியாகியுள்ள 5 சமீப இதழ்களிலும் நம்ம 'தல' நீங்கலாய்ப் பெரிதாய் star power கொண்ட நாயக இதழ்கள் எவையும் கிடையாது என்ற நிலையில் - விற்பனை எந்தமட்டிற்கு இருக்குமோ ? என்ற நெருடல் கணிசமாகவே இருந்தது ! ஆனால் ஆண்டவனும், நீங்களும், உங்கள் காமிக்ஸ் காதல்களைப் பறைசாற்றிட  வாகான தருணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆர்வலர்கள் என்பதை yet again நிரூபித்துள்ளீர்கள் ! Of course - இது கூரையிலேறிக் கூச்சலிடுவதற்கு ரொம்பவே சீக்கிரமான தருணமே  ; இன்னமும் விற்பனையாள நண்பர்களிடம் நிலவரங்கள் குறித்து நிறைய பேச வேண்டியுள்ளது தான் ! And தொடர்ந்திடவுள்ள நாட்களில் நம் தமிழகத்தில் இந்த வைரஸ் அரக்கனின் தாண்டவம் என்ன மாதிரியெல்லாம் வேதனையான வடுக்களை விட்டுச் செல்லவுள்ளதோ - கணிக்கவே இயலவில்லை தான் !   ஆனால் ஒற்றை விஷயம் மட்டும் ஊர்ஜிதம் கண்டுள்ளது - 'எது எப்படியிருப்பினும் வாசிப்புக்கு ஆயுள் ரொம்பவே கெட்டி & நம் காமிக்ஸ் நேசத்துக்குமே !! என்பதை அடிக்கோடிட்டு பதிவு செய்துள்ளீர்கள் !! Thanks a million folks ! ஊடகத் துறையின் அசாத்திய ஜாம்பவான்கள் கூட ஆட்டம் கண்டு நிற்கும் இந்தச் சிரம நாட்களில் நம் போன்ற துக்கடாக்களெல்லாம் - 'டுக்கடே ; டுக்கடே' ஆகிப் போவது நொடிப் பொழுது நிகழ்வாகவே இருந்திருக்கக்கூடும் - அரணாய் உங்களின் அன்பும், காமிக்ஸ் தேடலும் இல்லாது போயிருக்கும் பட்சத்தில் !  இண்டுக்குள்ளும், இடுக்குக்குள்ளும் புகுந்து வெளியேறிடும்  திறன் கொண்ட flexible பூனைகளாய் இருப்பதன் சவுகரியங்களை எண்ணி இந்த நொடியில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் !!  இன்றைக்கு வெகுஜன ஊடகங்களின் ஆக்சிஜன் சப்ளையை "விளம்பரமின்மை" என்ற சிக்கல் கோரமாய் நெரித்து வருகிறது ! ஆனால் நமக்கோ அவை என்றைக்குமே அரையணாவைக் கூட ஈட்டியிருக்கா சமாச்சாரம் தானே ? அப்புறம் லட்சம் ; பல்லாயிரம் என்ற பெரும் எண்ணிக்கையினை எட்டிப் பிடிக்க முனையும் ஊடகங்களுக்கு  ஆட்பலமும் பன்மடங்கில் அவசியம் ; தொடர் விற்பனை ; நில்லா வசூல் என்பனவும் அவசியமோ அவசியம் ! ஆனால் இக்கடவோ மாவாட்டுவதும் நாமே ; டீ மாஸ்டரும் நாமே ; பரோட்டா மாஸ்டரும் நாமே ; சப்லையரும் நாமே ; இலை எடுப்பவரும் நாமே - எனும் போது, ஒரேயொரு பெரிய ஈரத்துணி போதும் தாற்காலிகமான சிரம நாட்களைச் சிக்கனத்தோடு தாண்டிப் போக ! And yes - அந்த சிக்கனத்தின் இன்னொரு பரிமாணமாய் நமது பணியாட்களை சுழற்சி முறையிலேயே மாதத்தின் பிற்பகுதிகளில் வரச் சொல்லிடுகிறோம் ! நிலவரத்தை உணர்ந்தவர்களாக அவர்களும் முழுமனசோடு ஒத்துழைத்து வருவதால், தட்டுத் தடுமாறியேனும் வண்டி ஓடி வருகிறது ! ஆன்லைன் ஆர்டர்கள் மட்டும் மாமூலான எண்ணிக்கையினைத் தொட்டிடும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் மூச்சு வீட்டுக் கொள்வோம் ! And yes - புது இதழ்களுக்கான கூரியர் கட்டணங்கள் இம்முறை நம் ஆன்லைன் தளத்தில் தலை தெறிக்கும் விதமாய் உள்ளன ' என்ற புகார் நண்பர் பிரஷாந்த் கார்த்திக்கின் புண்ணியத்தில் கவனத்துக்கு வந்திருந்தது ! இம்மாத இதழ்களின் எடை தவறாய் input செய்யப்பட்டிருந்தால் 1 கிலோவுக்கு மேற்பட்ட slab கட்டணங்களை கணக்கிட்டு தளம் சொல்லியுள்ளது என்பதைக் கண்டறிந்து சரி செய்து விட்டோம் ! Thanks for bringing it to our notice Prashanth !!

தொடரும் நாட்களில் 500 ரூபாய்களுக்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.50 விலையிலான any book of their choice அன்பளிப்பாகவும் ; ரூ.1000-க்கு மேலான ஆர்டர்களுக்கு ரூ.100 விலையிலான ஏதேனுமொரு புக் அன்பளிப்பாகவும் (and so on for higher order values) தந்திட எண்ணியுள்ளோம் ! ஆர்டர் செய்திடும் போதே  - அதனில் உள்ள Remarks பகுதியினில் உங்களுக்கு அன்பளிப்பாய் அனுப்பிட வேண்டிய புக்கிங் பெயரைக் குறிப்பிட்டால் மதி ! Or ஒரு மின்னஞ்சல் ! ஜூன் 1 முதலாய் இது நடைமுறை கண்டிடுகிறது ! 

அப்புறம் இன்னொரு யோசனையும் கூட எழுந்தது -  "ம.ப.வி.பா".நாட்களின் உபயத்தில் !! "இரத்தப் படலம்" வண்ண தொகுப்புக்கு நாம் வழங்கிய அந்த கெட்டியான slip case நினைவிருக்கும் தானே ? அதைப் போலான ரெடிமேட் கேஸ்களை அமெரிக்க ; ஐரோப்பிய பதிப்பகங்கள் காமிக்ஸ் ஆர்வலர்களின் பொருட்டு தயாரித்து விற்பனை செய்து வருவதை சமீபத்தில் பார்க்க நேரிட்டது ! உதாரணத்திற்கு - ஒரு எட்டுப் பத்து லக்கி லூக் ; சிக் பில் ; ரின்டின் கேன் போன்ற கார்ட்டூன் இதழ்களை உள்ளுக்குள் நுழைத்து வைக்கக்கூடிய விதத்திலான ஒரு கேஸை - THE CARTOON COLLECTION " என்ற பெயரோடு அழகாய் டிசைன் செய்து, முழுவண்ணத்தில் அச்சிட்டு, ரெடிமேட் கேசாய் நாம் விற்பனைக்குக் கொணர்ந்தால் - அது உங்களுக்கு பிரயோஜனப்படுமா guys ? Action Collection ; James Bond collection ; Graphic Novel Collection - என்ற ரீதியில் நமது திட்டமிடல்கள் படிப்படியாய் இருந்திடலாம் !  Of course - டப்பி ஒன்றுக்கு இன்றைய விலைவாசிகளில் சுமார் 75 ரூபாய் ஆகிடலாம்  ; and அதன் பிற்பாடு அவற்றைப் பத்திரமாய் பேக் செய்து கூரியரில் அனுப்பிடும்  செலவுகளும் உண்டு தான் ! So இந்த நொடியில் இதெல்லாம் தேவை தானா ? என்ற கேள்வி எழக்கூடும்  என்பதில் ஐயமில்லை ! ஆனால் வெகு சமீபத்தில் கண்ணில்பட்ட சமாச்சாரத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளாவிடின் மண்டைக்குடைச்சல் அடங்காதே ?! இதோ இப்போது இறக்கி வைத்து விட்டேன் ; இப்போதோ ; கொஞ்சம் பின்னேவோ, இது சார்ந்த முடிவினை எவ்விதம் எடுத்தாலும் எனக்கு ஓகே தான் !

Around the world, விட்டதைப் பிடிக்கும் உத்வேகத்தில் ஐரோப்பிய ; அமெரிக்க காமிக்ஸ் பதிப்பகங்கள் அதிரடி காட்டி வருவதை வாரமிருமுறை வந்து தாக்கிடும் மின்னஞ்சல்கள் பறைசாற்றுகின்றன ! And சில நாட்களுக்கு முன்பாய் Fleetway புராதனங்களுக்குப் புனர்ஜென்மம் தந்து அசாத்தியம் செய்து வரும் பிரிட்டிஷ் ஜாம்பவான்களிடமிருந்து வெகு சமீபத்தைய படைப்புகளான புது ஸ்பைடர் (சிறு) கதை வண்ணத்திலும் ; இரும்புக்கை மாயாவி (சிறு)கதை black & white -லும் மிரட்டலாய் வந்திருந்தது ! நிறைய வண்ணமும், கொஞ்சம் கருப்பு-வெள்ளையாய் இந்த SMASH Annual தக தகக்கிறது ! கொஞ்சமாய் சூழல் சரியான பின்னே இது குறித்து யோசிப்போமா ?

அது போதாதென்று - 2021 பிப்ரவரியில் "இரும்புக்கை மாயாவி ஸ்பெஷல்" 128 பக்கங்களிலும், நம்ம தானைத் தலீவர் ஸ்பைடரின் ஸ்பெஷல் ஒன்றும் - classic கதைகளுடன் அரங்கேறிடவுள்ளதாய் விளம்பரமும் !! பாருங்களேன் - நம் பால்யங்களின் கனவு நாயகர்களின் மறுவருகையின் வீரியத்தை !!


இரு  ஸ்பெஷல் இதழ்களுக்கும் 'ஜெ' போட்ட கையோடு அவற்றை வெளியிடும் நமது ஆர்வங்களையும் சொல்லிடலாமா guys ? மாயாவிகாரு எப்படியேனும் விற்பனையில் தூள் கிளப்பிடுவார் எனும் போது - அதனில் குழப்பங்களில்லை ! எஞ்சியிருப்பது நம்ம ஸ்பைடர் சாரின் ஸ்பெஷல் மட்டுமே !  What say folks ?

அப்புறம் இன்னொரு "வரவுள்ளது" சேதியுமே - இம்முறை ஞாபகமறதிக்காரரின் மூன்றாம் சுற்றின் இரண்டாம் ஆல்பம் குறித்து ! XIII -ன் புது ஆல்பமான  "2132 மீட்டர்" ஆகஸ்டில் நாம் வெளியிடவுள்ளோம் ; இந்நிலையில் அதன் தொடர்ச்சி நடப்பாண்டின் இறுதிக்குள் பிரெஞ்சில் தயாராகிடும் போலுள்ளது ! Mayflower எனும் அந்த இரண்டாம் சுற்றின் நீட்சியாகவே இந்தப் புது ஆல்பங்கள் அமைந்திடும் என்றாலும் - கதையின் ஒட்டுமொத்தத் திட்டமிடல் தன்னுள் பக்காவாக உள்ளதாய் கதாசிரியர் சொல்லியிருக்கிறார் ! So நாமுமே 'தகிரியமாய்' வண்டியைச் செலுத்தலாமா folks ?

"வரவுள்ளது" சேதிகளுக்குப் பின்னே - "வந்துள்ளது" சேதி ஒன்றுமே !! இத்தாலியில் டயபாலிக்கிற்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்த தகவலே ! படைப்பாளிகளின் அதிகாரப்பூர்வமான Facebook பக்கத்தில் நமது "அலைகடலில் அதகளம்" இதழ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளதை பாருங்களேன் !! கிட்டத்தட்ட 56000 பேர் உள்ளனர் இந்த FB பக்கத்துக்கு subscribe செய்தவர்களாய் !! அதனைத் தொடர்ந்து இதுவரையிலும் 65 பிரதிகளுக்கு நம்மிடம் முன்பதிவு செய்துள்ளனர் !! (இத்தாலியிலுள்ள 'தல' ரசிகர்வாள் கவனிச்சிட்டு இருக்கீங்களா ??) துரதிர்ஷ்டவசமாக தற்சமயத்துக்கு 'No Airmail Bookings for now !' என்று நம் அரசாங்கம் அறிவித்துள்ளதால் ஏதும் செய்ய இயலா நிலை !

இங்கே எனது கேள்வி ஒன்றேயொன்று தான் !! இந்த முகமூடிக்காரரின் அசாத்திய கீர்த்திக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடுமோ ? சரக்கின்றி ஒரு தொடர் 58 ஆண்டுகளாய் ; பல நூறு ஆல்பங்களோடு சக்கை போடு போட இயலாதே ? இவரது இரகசியம் எந்த பூஸ்ட்டோ ?

Bye all ; இப்போதைக்கு கிளம்புகிறேன் - ஜேம்ஸ் பாண்டின் பணிகளில் புகுந்திட !!

And நடையைக் கட்டும் முன்பாய் ஒரு வேண்டுகோள் !! இதோவுள்ள இந்த image-ஐ உங்களது வாட்சப் DP ஆக ; Facebook DP ஆக ஓரிரு நாட்களுக்கேனும் வைத்திருக்க முடியுமா - ப்ளீஸ் ? குழந்தைப்புள்ளைத்தனமான யோசனையாகத் தோன்றிடலாம் தான் - ஆனால் இந்தக் கடின நாட்களில் காமிக்ஸ் வாசிப்பின் ரம்யத்தை ஒன்றிரண்டு பேருக்கேனும் தெரிவிக்க இது உதவிடின் சந்தோஷம் தானே ?  Think about it folks !! And Please keep reading !!
Have a wonderful week-end all !! And Stay Safe please !!

Saturday, May 23, 2020

கனமான காமிக்ஸ் ; ஜாலியான அலசல் !

நண்பர்களே,

வணக்கம். லேப்டாப் புட்டுக்கிட - டைப்படிக்க இயலா ஒரு சூழல் ! So ஒரு 35 நிமிடங்கள் + 1 headphone + கொஞ்சம் datapack உங்கள் வசமிருப்பின் - கீழ்க்கண்ட YouTube லிங்கை க்ளிக் செய்து தான் பாருங்களேன் - ப்ளீஸ் !

https://youtu.be/mAQnfpIwyc0

And once you are done there ; YouTube பார்த்த பிற்பாடு - உங்கள் பின்னூட்டங்களை இட இக்கட வாபஸ் வந்திடலாம்  ! See you around !! Bye for now !!

Wednesday, May 20, 2020

கதை vs நாயகர் !


நண்பர்களே,

வணக்கம். ஒரு மாதிரியாய் கூரியர் பஞ்சாயத்து ஓய்ந்திருப்பதில் பெரியதொரு நிம்மதிப் பெருமூச்சு !! நாலு பேருக்கு புக் கிடைத்து அவர்கள் அதனை ரசித்துச் சுவைப்பதை, நாற்பது பேர் வாய் மட்டுமே பார்க்க முடிந்த புண்ணியத்தை DTDC பெயரைச் சொல்லி ஈட்டிவிட்டோம் !! Apologies !! தொடரும் மாதங்களில் சிறுகச் சிறுக சகஜ நிலை திரும்பிடும் ; இது போன்ற குளறுபடிக் கூத்துக்கள் இராதென்ற நம்பிக்கையில் இனி வண்டியை ஓட்டுவோம் !

Anyways - இம்மாத இதழ்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் முத்திரை பதித்து வருவதைப் பார்த்திடும் போது - 'தெய்வமே...(இரும்பு நஹி ; நார்மல் தான் )...தலை தப்பிச்சது !' என்று உள்ளுக்குள் இருந்த சிறு பதட்டத்தைத் தணித்துக் கொள்ள முடிந்தது ! பெரியதொரு இடைவெளி ஏற்படுத்திய அயர்வு ; திரும்பும் திக்கெல்லாம் திணறடிக்கும் தகவல்களுடனான இறுக்கமான சூழல் ; யாரையாச்சும் நடு மூக்கில் ஓங்கிக் குத்த வேண்டுமென்ற நமைச்சல் - என்று இந்த லாக்டவுன் புண்ணியத்தில் ஓடிக்கொண்டிருந்த பொதுவான மூடிற்கு மத்தியினில், இம்முறை உருப்படியில்லாத புக்குகளாய்  வழங்கியிருப்பின், என் நிலமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன் ? So சிரம் காத்த புது இதழ்களுக்கொரு 'ஜே' என் சார்பில் !

இந்த மாதத்தில் 'கண்ணான கண்ணே' ஒரு விதமாகவும், சிகப்புச் சட்டைக்காரர் டிரெண்ட் இன்னொரு விதமாகவும் ; ஜம்போவின் 'பிரிவோம்..சந்திப்போம்' yet another விதமாகவும் செய்து வரும் அதிரடிகளின் மத்தியில் நம்ம 'தல' லைட்டாய்  ஓரங்கட்டப்பட்டிருப்பது போல் தெரிவது எனக்குத் தானா ? என்று தெரியலை !! இத்தாலிய முகமூடிக்காரரைக் கூட அட்டைப்படத்தையும், புது சைஸையும் சிலாகிக்கும் தருணங்களில் mention செய்துள்ள நண்பர்கள்  இதுவரைக்கும் இரவுக்கழுகாரைப் பெரிதாய் mention செய்திடக் காணோம் என்பதை - இம்மாதத்து கலர் இதழ்களின் வெற்றியாகப் பார்த்திடுகிறேன் ! Of course - தொடரும் நாட்களில் 'தல' நம் அலசல்களில் இடம் பெறாது போக மாட்டாரென்பது திண்ணமே ; ஆங்காங்கே பாயாசங்கள் தயாராகி வரும் வாசனையும் நாசியை எட்டுகிறது ! ஆனால் for a change - நாயகர்களை விடவும், கதைகள் ஒளிவட்டத்தைக் கைப்பற்றும் இந்தப் பாங்கு செம encouraging !! 
முன்னெப்போதையும் விட இன்றைய சூழலில் உங்களின் அலசல்களுக்கு வெயிட் ஜாஸ்தி என்பதால் - பாராட்டுக்களோ ; குமட்டில் குத்துக்களோ - அவற்றைப் பகிர்ந்திட கொஞ்சமாய் மெனக்கெடக் கோருகிறேன் folks !! ஆன்லைன் ஆர்டர்கள் மீண்டும் விறு விறுப்படைந்தால் தான் இன்றைய நெருக்கடிகளை சமாளிக்க நமக்கு ஆற்றல் பிறக்கும் என்பதில் ரகசியமேது ?  மதில் மேல் பூனைகளாக நின்றபடிக்கு - எதை வாங்குவது ? எதைத் தவிர்ப்பது ?  என்ற சிந்தனையுடனான pick & choose வாசகர்களை influence செய்திடக்கூடியது உங்களின் அலசல்களாகவே இருக்க முடியும் எனும் போது - நீங்கள் ஒவ்வொருவருமே இன்றைக்கு அலசல் தொப்பிகளைத் தலையில் சுறுசுறுப்பாய் மாட்டிக் கொண்டால் - இந்த எடிட்டர் குல்லாவை நான் கொஞ்சம் தெம்பாய் மாட்டிக் கொள்வேன் ! ஏறிக்கொண்டே போகும் முன்மண்டையையும் மறைத்தா மேரி இருக்குமில்லையா ? 

Bye guys ; keep those reviews going !! See you around !!
கும்பிட்ட்கிறேனுங்கோ : குறுக்கால இன்னொரு புது சேதி கிட்டியதாலே அதையும் இந்த உ.ப.விலே சேத்துக்கிறேனுங்கோ !

புத்தம் புது கதாசிரியர் சார்லீ ஹிக்ஸ்ன் (இவரொரு காமெடி நடிகர் + நாவல் எழுத்தாளர்) and ஓவியர் சார்லீ அட்லர்ட் கூட்டணியில் நமது இரும்புக்கையார் ஒரு புது மினி சாகஸத்தில் வரும் மே 27 தேதிக்கு golden oldies காமிக்ஸ் நேசிக்கும் இங்கிலாந்து மக்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார் ! 5 பக்கக் குட்டி சாகசமே என்றாலும், முற்றிலும் புதுப் பாணியிலான artwork & கதையமைப்பு சுவாரஸ்யத்தைக் கிளறுகிறது ! பற்றாக்குறைக்கு நம்ம ஸ்பைடர் சார்வாளுமே ஒரு 5 பக்க புதிய மினி சாகஸத்தில் ரெடியாகி வருகிறார் ! நமது அந்நாட்களது ஜாம்பவான்களின் இந்நாட்களது புதுப் படைப்புகளை நாமும் சுவைத்துப் பார்க்கலாமா ? What say folks ?

Saturday, May 16, 2020

ஒரு பார்வர்ட் கியர் !

நண்பர்களே,

வணக்கம். என்ன எழுதுவதென்று தெரியாது மண்டையைச் சொரிந்து வருகிறேன் ! ஒழுங்காய் இந்நேரத்துக்குக் கூரியர்கள் பட்டுவாடா ஆகியிருப்பின் - "ஒன்றுக்கு ஐந்தாய் புக்குகளை ஒப்படைத்தாச்சு ; இந்த ஞாயிறை உங்கள் அலசல்களில் ஓட்டலாம் folks !" என்று சொல்லி கம்பி நீட்டியிருப்பேன் ! அல்லது - 'the making of the books' என்று இம்மாத இதழ்களை பற்றி ஏதாச்சும் எழுதியிருப்பேன் ! ஆனால் DTDC புண்ணியத்தில் பெரும்பாலும் பிம்பிலாக்கி பிலாப்பிப் படலங்கள் தான் எனும் போது, அந்தப் பக்கமாய் வண்டியை விட்டால் பூரிக்கட்டைகளே பறக்கும் என்பது புரிகிறது ! சரி, லாக்டவுனின் மத்தியில் இருந்த நாட்களைப் போல வேலையே இன்றி விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்திருப்பின், நான் பூனைக்கு லங்கோடு வாங்கித் தந்த கதையையும், யானைக்கு மூக்குப்பொடி போட்டு விட்ட கதையையும் சொல்லி பொழுதைக் கடத்தியிருப்பேன் ! ஆனால் இவையோ அந்தளவிற்கு லாத்தலான நாட்களல்ல என்பதால் அதற்கும் வழி லேது ! வழக்கமாய் இதுபோன்ற தருணங்களில் ரிவர்ஸ் கியரைப் 'பச்சக்'க்கெனப் போட்டு, கோடை மலர் 1986 ; தீபாவளி மலர் 1984 என்று எங்கேனும் பயணம் போக முனைவதே வாடிக்கை ! ஆனால் for a change - டாப் கியரைப் போட்டு இந்நூற்றாண்டே பார்த்திரா ஒரு இக்கட்டில் பூமியே விழி பிதுங்கி நிற்கும் இந்த வேளையில், எதிர்வரும் நாட்கள் நமக்கு என்ன வழங்கக் காத்துள்ளனவோ என்று கணிக்க முயற்சிப்போமா ?

For starters, அடுத்த மாதத்து இதழ்களை எப்போது / எவ்விதம் தயார் செய்வதென்றே கேள்வி உடனடி பதில் கோரி நிற்கும் நம் முன்னே ! 'தோர்கல்' மெகா இதழை ஆண்டின் பிற்பகுதிக்கு நகற்றிடத் தீர்மானித்துள்ளதால் இப்போதைக்கு அடுத்த batch இதழ்களாய் நான் மனதுக்குள் உருவகப்படுத்தியிருப்பது இவற்றையே :

  • சந்தா A :  SODA - "திசை மாறிய தேவதை"
  • சந்தா B : TEX - "கைதியாய் டெக்ஸ் வில்லர்"
  • சந்தா C : ப்ளூ கோட் பட்டாளம் - "போர்முனையில் ஒரு பாலகன்"
  • சந்தா D : ஜேம்ஸ் பாண்ட் : "விண்ணில் ஒரு வேதாளம் "
மொத்தமாய் 4 இதழ்களைச் சேர்த்தாலே ரூ.265 தான் கிரயம் வருமென்பதால் ஓரளவுக்கு ஏஜெண்ட்கள் நம்மைக் கரை சேர்த்து விடுவர் என்ற நம்பிக்கை உள்ளது ! But அதற்கு முன்பாய் இம்மாதம் பிரதிகளை வாங்கியிருக்கும் முகவர்கட்கு கையைப் பிடிக்காது வியாபாரம் நடந்தாகிட வேண்டும் என்பது நிரம்பவே அவசியம் ! So சந்தாவில் இணைந்திராது - கடைகளில் வாங்கிடும் நண்பர்கள் உங்களது உள்ளூர் முகவருக்கொரு போன் அடித்து "புக் வந்திட்டா அண்ணாச்சி ? வந்து வாங்கிக்கிறேன் " என்று சொல்லி வைத்தால் அவர்களும் சற்றே நிம்மதியாய்ப் பெருமூச்சு விட்டுக்கொள்வர் ! And maybe இது வரையிலும் புக்குகளுக்கு ஆர்டர் செய்திருக்கா ஏஜெண்ட்கள் கூட உங்களின் விசாரிப்புகளைத் தொடர்ந்து நம்மைத் தொடர்பு கொள்ளத் தீர்மானிக்கக்கூடும் அல்லவா ? சிரமமான இந்நாட்களில் உங்களின் சப்போர்ட் அவர்களுக்கும் ; அவர்கள் மூலமாய் எங்களுக்கும் ரொம்பவே அத்தியாவசியம் folks ! Please !!

அடுத்து மண்டைக்குள் ஓடுவது புத்தக விழா சார்ந்த சிந்தனைகளும் ; the new normal உலகினில் அவற்றிற்கு நேர்ந்திடக்கூடிய மாற்றங்களும் தான் ! ஏழு கழுதையோ ; எழுகழுதையோ - அத்தினி வயதான பிற்பாடுமே நாமெல்லாம் ஏகப்பட்ட புது வார்த்தைகளைக் கடந்த 2 மாதங்களில் இந்த வைரஸின் புண்ணியத்தில் கற்றிடவொரு வாய்ப்புக் கிட்டியுள்ளது அல்லவா ? அவற்றுள் ரொம்பவே பிரதானமானதும் ; இனி வரும் காலங்களில் நம் வாழ்வுகளின் ஒரு இன்றியமையா  அங்கமாகவும் மாறிடவுள்ள வார்த்தை : 'சமூக இடைவெளி' என்பது தானே ?! கூட்டங்களுக்கும் இந்த 'ச.இ.' சமாச்சாரத்துக்கும் ஏழாம் பொருத்தம் எனும் போது - இனி வரக்கூடிய புத்தக விழாக்களை சற்றே கற்பனை செய்து பாருங்களேன் !! ஒரு ஸ்டாலுக்கும், அடுத்ததுக்கும் மத்தியில் கணிசமான gap ; அப்பாலிக்கா ஒவ்வொரு ஸ்டாலினுள்ளும் ஒரு நேரத்தில் இத்தினி பேர் தான் நிற்கக்கூடும் என்ற கட்டாயங்கள் ; வாசலிலேயே கிருமிநாசினியுடன் அண்ணாச்சி நிற்க, 'ஜரிகண்டி...ஜரிகண்டி' என்று வாடிக்கையாளர்களை ஜல்தியாய் பர்ச்சேஸ் முடித்துக்   கிளம்பிட நிர்ப்பந்திக்க இன்னொரு ஆசாமி ; வரையப்பட்டிருக்கும் கட்டங்களுக்குள் நின்று பில் போட்டு வாங்கிடவொரு வரிசை  - என்று புதுப் புதுக் காட்சிகள் கண்முன்னே ஓடுகின்றனவா ? வாடிக்கையான நமது மரத்தடி மீட்டிங்குகளை அடுத்ததாய் மனசுக்குள் ஓட்டிப் பாருங்களேன் - இன்னமும் ரகளையாய் இருக்கக்கூடும் ! நேக்கு வெண்கலத்தொண்டை என்பதால் சிக்கலில்லை ; நரம்பு புடைக்க குரல் கொடுத்தால் மரத்தடியிலிருந்து வாசல் வரைக்குமான தூரத்தில் சீரான இடைவெளிகளில் நிற்கக்கூடிய நண்பர்களுக்கும் கேட்டு விடும் ! ஆனால் நம்ம தலீவரோ ; நம்ம அறிவரசு ரவி சாரோ படக்கூடிய பாடுகளை சித்தே யோசித்துப் பாருங்களேன் ! 'புஸ்ஸு...புஸ்ஸு..' என்று அவர்கள் தரும் குரல்களை ஒலிபரப்ப மெகா போன்கள் தேவைப்படலாம் ! So ஊரிலிருந்து கிளம்பும் போதே பொட்டிகளுக்குள் ஆளுக்கொரு மெகா போனை முதல் ஐட்டமாய்ப் பேக் செய்ய வேண்டி வரலாம் ! என்ன ஒரே சிக்கல், ஒரு க்ரூப் போட்டோ எடுக்க வேண்டுமாயின் ஒரு எட்டுப்பத்து க்ளிக்குகளைப் பண்ணி, அவற்றை அப்புறமாய் ஒட்டுப் போட்டாக வேண்டும் ! தற்போதைய அந்த பனோரமா - மனோரமாவெல்லாம் பத்துப் பைசாவுக்கு உதவிடாது ! So ஊருக்குத் திரும்பிய பிற்பாடு வெளியே நின்றபடிக்கே, 'அண்டா காக்கஸூம் ; குண்டா காக்கஸூம் ; இந்த க்ரூப் போட்டோவைப் பாரடிப் பெண்ணே !!" என்று மந்திரத்தைப் போட்ட பிற்பாடே வாசல் கதவுகள் திறக்குமென்ற சூழலிலிருக்கும் நண்பர்கள், எதெற்கும் அக்குளுக்குள் ஒரு பாயையும், தலைகாணியையும் சுருட்டிக்கொண்டு தயார்நிலையில் இருத்தல் நலமென்பேன் ! 'இல்லியே...அந்த வலது கோடிலே நாலாவதுக்குப் பின்னாடி முறைச்சிட்டு நிக்கிறது நீங்க மெரி தெரிலியே ! யாருகிட்ட சத்தாய்கிறீங்க ? என்ற கிடுக்கிப்பிடிகள் போடப்பட்டால் கம்பெனி பொறுப்பாக முடியாதல்லவா ?

Further down the line - 'பொம்மை புக்குகளுக்கென' இனி நாம் திட்டமிடக்கூடிய யதார்த்த பட்ஜெட் பற்றிய சிந்தனைகள் ! கொடுமை என்னவெனில் 2021 -க்கான அட்டவணை மார்ச் மாதமே ரெடி ! லயனின் இதழ் # 400 ; முத்துவின் இதழ் # 450 என இரு மைல்கல்களுமே ஜனவரி 2021 க்கு அமைந்திட வாய்ப்புகள் ஜெக ஜோதியாய்த் தென்பட்டதால் அவற்றின் பொருட்டு ரகளை ; இன்னும் கொஞ்சப் புது வரவுகள் ; ரொம்பவே வித்தியாசமான black & white கதைத் தொடர்கள் ; தற்போதைய அழுகாச்சிகளுக்கு நேர் opposite ரகத்தில் சில ஜாலி கி.நா.க்கள் என்று வளைகாப்பு வீட்டுச் சாப்பாடைப் போல வெரைட்டியாய் ஒரு ப்ளூ பிரிண்ட் உள்ளுக்குள் தயாராகியிருந்தது ! ஆனால் கண்ணுக்குப் புலப்படா இந்த நுண்கிருமி, பொடதியில் போட்டிருக்கும் போட்டில் - காதெல்லாம் 'கொய்ங்க்க்க்' என்ற சத்தம் மட்டுமே கேட்கிறது ; ஜெயசித்ராவிடம் ஒரு அப்பு வாங்கி பட்டாபட்டி டிராயரோடு பம்மிக் கொண்டு அமர்ந்திருக்கும் கவுண்டரைப் போல ஒரு ஓரமாய் குந்தவே தோன்றுகிறது ! Yes of course - ஒரு வெளிச்ச உலகினில் இந்த வைரசுக்கொரு தடுப்பூசி நடப்பு ஆண்டின் இறுதிக்குளாகவே  தயாராகி, அத்தனை பேருமே அதைப் போட்டுக் கொண்ட தகிரியத்தில், 'இப்போ இன்னான்றே ?' என்று கொரோனாவைப் பார்த்துப் பழிப்புக் காட்டலாம் தான் ! ஆனால் சற்றே மந்தமான வெளிச்சம் விரவிடுமொரு உலகாய் இருப்பின் - சலூனுக்குப் போகக்கூடப் பயந்தபடிக்கே, நானெல்லாமே பங்க் ஸ்டைலில் கேசத்தை வளர்த்துத் திரிந்தால் அந்தக்கொடுமையை என்னென்பது ? அத்தகையதொரு உலகில், அட்டவணையினை அதிகாரிக்குப் போடும் பாயச அண்டா சைசுக்கு அமைப்பதா ? அல்லது கபசுரக்குடிநீர் காய்ச்சும் குடுவை சைசுக்கு அமைப்பதா ? Thinking !!

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் & கிட்டத்தட்ட 300 + இதழ்கள் - என்ற அனுபவங்களெல்லாமே பல்குத்தக் கூட இனி பிரயோஜனப்படாது ; பிள்ளையார் சுழியிலிருந்து தான் ஆரம்பித்தாக வேண்டுமென்ற சூழல் உருவாகினும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை ; மலைப்பதற்கில்லை என்ற புரிதல் இந்த 50 நாள் லாக்டவுனுக்கு மத்தியில் புலர்ந்துள்ளது ! நியாயப்படிப் பார்த்தால் - இதையெல்லாம் நினைத்து (வழக்கத்தை விடவும் ஜாஸ்தி) பேய்முழி முழித்தாக வேண்டும் தான் ! ஆனால் மேலிருப்பவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர் என்பதாலோ - என்னவோ, மனம் தளராது பார்த்துக் கொள்கிறார் ! 3 ஆண்டுகளுக்கு முன்னே நிறையவே முயற்சித்தும் பல்பே பலனாகிப் போனதொரு கௌபாய் கதைத்தொடரின் உரிமைகளை இன்றைக்கு அவர்களாகவே வழங்கிட முன்வருவதோ ;  கொசுறாய் இன்னொரு செம ஆக்ஷன் தொடரையும் சேர்த்தே தர சம்மதிப்பதோ ; இன்றைக்குக் கண்ணில்படும் புதுத் தொடர்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் பட்டாசாய்த் தோன்றுவதோ, சிறு விலையிலான இந்த சந்தா D புக்குகளை நடப்பாண்டினில் போடும் ஞானோதயம் புலர்ந்ததோ - நிச்சயமாய் தற்செயல் நிகழ்வுகளல்ல என்றே தோன்றுகிறது ! தவிர, இடியே விழுந்தாலும் தோள் தர நாங்களிருக்கிறோமென்று திடமாய்ச் சூழ்ந்து நிற்கும் உங்களின் அன்பும், உற்சாகங்களும் இந்த 50 நாட்களில் அபரிமிதமான வெளிப்பாடு கண்டிருக்கும் நிலையில், எதையும் கடந்திடலாமென்ற நம்பிக்கை அலையடிக்கிறது உள்ளுக்குள் !

And இன்று மாலை நிகழ்ந்ததொரு அழகான விஷயம் அந்த நம்பிக்கைக்கு செட்டிநாடு சிமெண்ட் ; L&T சிமெண்ட் ; சங்கர் சிமெண்ட் என சகலத்தையும் கலந்தடித்துள்ளது என்பேன் ! கோவையில் வசிக்கும்  மூன்று தலைமுறைகளைக்  கொண்டதொரு அன்பான வாசக குடும்பத்தினர் நம்மோடு காலமாய்ப் பயணித்து வருபவர்கள் ! In fact - எழுபதுகளின் மத்தியினில் "மஞ்சள் பூ மர்மம்" இதழின் தமிழ் மொழியாக்கத்தைச் செய்தவரும் அக்குடும்பத்தின் தலைவரே ! பல வருஷ இடைவெளிக்குப் பின்பாய் இன்று பேசக்கிடைத்த அவகாசத்தினில்,  அவர்கள் ஒவ்வொருவரும் நம் மீதும், நமது இதழ்கள் மீதும் பொழிந்த ஆதர்ஷத்தை விவரிக்க முயற்சிப்பது just an impossibility !! கிராபிக் நாவல்களில் துவங்கி, டெக்ஸ் சாகசங்கள் ; பிஸ்டலுக்குப் பிரியாவிடை ; கார்ட்டூன்ஸ் ; "கண்ணான கண்ணே" etc etc என நமது சமீபத்து இதழ்கள் அனைத்தையும் ஆள் மாற்றி ஆள் சிலாகித்ததைக் கேட்ட பின்னரும் உள்ளுக்குள் எதிர்மறை சிந்தைகள் குடியிருக்கவாவது முடியுமா ? And the icing on the cake - என்று சொல்வதெனில் - அகவை 90 -ஐத் தொட்டு நிற்கும் போதிலும், மாதா மாதம் நமது கூரியர்களைக் கண்ட மாத்திரத்தில் பேத்தியுடன் போட்டியிட்டு இதழ்களை அள்ளிச் சென்று படிக்கும் அந்தத் தீவிர வாசகர் நமக்கு வழங்கிய பாராட்டுக்களும், ஆசிகளே !! சிரம் தாழ்ந்த நன்றிகள் சார் !!

And guess what ..? தாத்தாவுக்கும், அம்மாவுக்கும், பேத்திக்கும் எல்லா படைப்புகளுமே  பிடிக்கும் தான் ; ஆனால் ஒரேயொருத்தர் மட்டும் மூவருக்குமே ஸ்பெஷலோ ஸ்பெஷல் !! No prizes for guessing who that is.........!!

'தல TEX' - தலைமுறைகளை வென்றவர் நீர் என்பதை இன்று மறுபடியும் நிரூபித்து விட்டீர் !! போடுங்க பாயசத்தை - ரசித்துக் குடிக்க !

Bye folks...see you around ! உங்கள் அலசல்களோடு பயணிப்போமே - தொடரவுள்ள வார  நாட்களில் !

My questions to you :

1.பெரிய சைசில் டயபாலிக் எப்படித் தெரிகிறார் ? அநேகமாய் உலகின் முதல் முயற்சி இது - டயபாலிக்குக்கு இந்த format -ல் !

2.இம்மாதம் எந்த இதழிலிருந்து உங்கள் வாசிப்பைத் துவங்க நினைத்துள்ளீர்களோ ?


3.ஜம்போ சீசன் 3 : முதல் பார்வைக்கு உங்கள் ratings ப்ளீஸ் ? 


Thursday, May 14, 2020

கண்ணான கண்ணே..!

நண்பர்களே,

வணக்கம்.  கூரியர் பார்சல்கள் இன்றும், அடுத்த சில நாட்களிலுமாவது உங்களை எட்டிடும் என்ற நம்பிக்கையில் வண்டி ஓடுகிறது ! சூழல்கள் தினம்தினம் மாறிடுவதால் சற்றே பொறுமை காத்திட வேண்டி வரலாம் ! So சற்றே பொறுமை ப்ளீஸ் !

எதிர்பார்த்திருந்த அதிகாரியின் அதிரடி ; முகமூடிக்காரரின் மினி-வெடி ; ஜம்போவின் யானை வெடி ; டிரெண்டின் குயில் வெடி என்பனவோடு ஒரு குட்டிப் பாப்பாவை அட்டைப்படத்தில் தாங்கி  நிற்குமொரு பொம்மை புக்கும் இம்மாதத்தில் அறிவிப்பின்றி இடம் பிடித்திருப்பதைக் காணவிருக்கிறீர்கள் ! அட்டவணையில் அறிவிக்கப்பட இந்த இதழ் ஒரு கி.நா. என்பதை நம்பச் சிரமமாக இருக்கலாம் தான் ; ஆனால் நிஜம் அதுவே ! 'பனியில் ஒரு குருதிப்புனல்' ஆல்பத்தின் பணிகளில் பிஸியாய் இருந்ததொரு மதியப்பொழுதில் அகஸ்மாத்தாய்க் கண்ணில்பட்ட ஆல்பம் தான் இன்றைக்கு திடு திப்பென வரிசைக்குள் முண்டியடித்துப் புகுந்துள்ளது ! இது என்ன மாதிரியான கதையென்பதையோ ; இது கதை தானா ? என்பதையோ பற்றி முன்கூட்டியே சொல்லி வைத்து, வாசிப்பின் மெருகினைக் குறைத்திட மனசு வரவில்லை ! அதனால் தான் பின்னட்டையைக் கூட கண்ணில் காட்டாது, கல்லுளி மங்கனாய் வாயே திறக்க முனையவில்லை ! இந்த புக்கை அதன் சித்திரங்களைக் கொண்டோ / சித்திர பாணிகளைக் கொண்டோ எடை போடாது, ஒரு நிசப்த வேளையினில், சரியாய் 5 நிமிடங்களை மட்டும் செலவிட்டுப் படித்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ?! அந்த 5 நிமிடங்களுக்குப் பிற்பாடு உங்களின் ரியாக்ஷன்ஸ் கீழ்க்கண்ட ஏதேனுமொரு ரகத்தில் இருந்தாலும் புரிந்து கொள்வேன் நான் !! 
இன்னும் கன்னத்தில் மரு ஓட்றது மட்டும் தான் பாக்கி ! அப்பாலிக்கா I going ஜார்க்கண்ட் !!
முழியங்கண்ணனை ஓங்கி ஒரு குத்து குத்தணும் போலிருக்கே..பஸ் வேற ஓடலே ..?
ஐயோ ..அக்னி நட்சத்திரம் சிவகாசிலே சித்தே உக்கிரம் போலும் ! 
இஸ்பைடர் சார் புக்கெல்லாமே இனி தவறாம படிப்பேன் ! இது ஆர்ச்சி மேல் ஆணை ! மிடிலே !
5 நிமிஷ புக்குன்னு சொன்னியே - நாலரை நிமிஷத்திலேயே முடிஞ்சுடுத்தே !!!
இதை படிச்ச கையோட எடிக்கொரு கடுதாசி போட்டே தீரணுமே !! ஜெய் தாரைத் தலீவர் !!
இன்னா சொல்ல வர்றாங்க..? இன்னொருவாட்டி படிச்சிட்டு வர்றேன் - கச்சேரிக்கு !
யே ..சூப்பரப்பு..சூப்பரப்பு..!


No Comments....


துடைப்பக்கட்டை  சாத்துக்களும் இந்த இதழுக்கு சாத்தியமே ; இதனைத் தேர்வு செய்தமைக்கு  என் ரசனைகளை சர்ப் எக்ஸெல் போட்டுக் கும்மியெடுக்கவும் வாய்ப்புகளுண்டு தான் என்பதெல்லாம்  சந்தேகமின்றிப் புரிகிறது ! இருந்துமே இதனை  வெளியிட வேண்டுமென்றதொரு உந்துதலைத் தவிர்க்கத் தோன்றவில்லை ! Maybe..just maybe இது ஒட்டு மொத்தமாய் யாருக்குமே பிடிக்காதே போயினும் no big deal என்பேன் ; அறிவித்தபடியே இன்னொரு கி.நா.வை வெளியிட்டு இந்த இதழை எனது புத்திக்கொள்முதல் கணக்கில் எழுதிட்டால் போச்சு !

And இன்று காலை சீனியர் எடிட்டர் எனக்கு அனுப்பிய இந்த வாட்சப் சேதியை இக்கட பதிவிட்ட கையோடு நடையைக் கட்டுகிறேனே :
----------------------------------------------------------------------------------------------------------
ஓரு தவிர்க்க இயலாத இடைவெளிக்குப்பின் காமிக்ஸ் இதழ்களை எதிர்பார்த்து காத்திருக்கும் வாசகர்களே : நேற்று பிற்பகல்  வழக்கம்போல் இம்மாதப்  பிரதிகள் வந்தன. 

நான்கு புத்தகங்களை படித்து முடித்தபின் கடைசியாக "கண்ணான கண்ணே" இதழ் வாண்டுகளுக்கான  ஒன்று என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன். இங்கே இதழின் விமர்சனத்தை இப்போது உங்களிடம் நான் பகிர்ந்திடப்போவதில்லை !

இதுவரை  படித்த பல   காமிக்ஸ் இதழ்களில் நான் முற்றிலும் சந்தித்திராத ஓரு கதைக்களம் !

வாசகர்களுக்கு ஓரு வேண்டுகோள் :

ஓரு அமைதியான சூழலில் இந்த இதழை படித்து விட்டு எல்லோருக்கும் இதழ்கள் கிடைக்க அவகாசம் கொடுத்து உங்கள் உணர்வுகளை பதிவிட வேண்டுகிறேன். 

M. சௌந்திரபாண்டியன்
------------------------------------------------------------------------------------------------------------

Bye folks...See you around !!

P.S : இதுவொரு 'க.க.' மாதம் போலும்  ! ஒன்றுக்கு இரண்டாய் "க.க." தலைப்புகள் !! கவனித்தீர்களா ? 

Wednesday, May 13, 2020

படப் பொட்டி ரெடி !

நண்பர்களே,

வணக்கம். பீடிகைகளின்றி சொல்ல வந்த விஷயத்துக்குள் நேராய்ப் புகுந்திடுகிறேனே - for once !! ஆண்டவன் புண்ணியத்தில், சிவகாசி நகரினில்  இதுவரைக்குமாவது பெரிதாய் கொரோனா தாக்கமில்லை என்பதால் மெது மெதுவாய் புது இதழ்களைத் தயார் செய்து விட்டோம் ! 5 புக்குகள் அடங்கிய டப்பிக்கள் இன்றைக்கு கூரியருக்குக் கிளம்பத் தயாராகி வருகின்றன ! இங்கே சின்னதொரு 'இக்கன்னா' இருப்பதால், அவசரமாய் இந்தப் பதிவு ! 

ST கூரியரில் பணியாட்களின் தட்டுப்பாடு இருப்பதால் அவர்களால் உங்கள் இல்லங்களைத் தேடிப் பிடித்து டெலிவரி செய்திட இந்த மாதத்துக்கு சாத்தியமாகாதாம் ; அவர்களது கிளைகளில் நீங்கள் தான் போய் வாங்கிட வேண்டி வருமாம் ! தவிர இங்கிருந்து நாங்கள் புக்கிங் செய்திடும் டப்பிகளையுமே கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் அனுப்பிட அவர்களுக்கு வசதிப்படுமாம் ! ஆனால் DTDC எவ்வித இடர்களுமின்றிப் பணி செய்யத் துவங்கிவிட்டுள்ளனர் ! பார்சல்களை எப்போதும் போலவே இல்லங்களில் பட்டுவாடா செய்திடல் அவர்களுக்கு ஓ.கே. !

So இந்த ஒற்றை மாதத்துக்கு மட்டும் DTDC கூரியரையே பயன்படுத்திடுவோமே - ப்ளீஸ் ? Of course - அவர்களுக்கு கிளைகள் இல்லாத ஊர்களுக்கு மட்டும் ST என்று வைத்துக் கொள்வோமே ?

உங்கள் புரிதல்களை முன்கூட்டிய நன்றிகள் ! Bye for now ! 
      ONLINE LISTING : http://lioncomics.in/monthly-packs/702-may-2020-pack-.html

P.S : யாருக்கேனும் DTDC கிளையினில் வாய்க்கால்-வரப்புத் தகராறு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் மட்டும், உடனே 98423 19755 என்ற நமது அலுவலக நம்பருக்கு அழைத்துச் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ் ! 

Saturday, May 09, 2020

கா to கா !!

நண்பர்களே,

வணக்கம். மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்ப்பதே முக்கிய ஜோலியாகிப் போனாலுமே, கடந்திடும் ஒவ்வொரு நாளையுமே  ஒரு சாதனை தினமாய்ப் பார்க்கத் தோன்றும் இன்றைய காலகட்டத்தில் சற்றே சந்தோஷச் செய்திகளாய்ச் சொல்லட்டுமா   ?  ஒரு மாதிரியாய் மே 6 முதலாய் அச்சகம் + அலுவலகம் இயங்கிட மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்திட, ஒரு வண்டி ஓட்டரையையும், தூசுப்படலங்களையும் தாண்டி ஆபீசுக்குள் கால் பதித்திட சாத்தியமாகியது ! மார்ச் 24 தேதியிலேயே 'தேமே' என  நிற்கும் டெய்லி காலெண்டர் ; கோமாவில் படுத்துறங்கிய பேஷண்டைப் போல மார்ச்சில் காட்சி தரும் மன்த்லி காலெண்டர் ; பூட்டிக் கிடக்கும் கேபினுக்குள்ளும் அத்துமீறிப் படர்ந்திருந்த தூசு-துப்பட்டை - என நிசப்தமாய்க் காட்சி தந்த சமாச்சாரங்களைக் க்ளியர் செய்த பிற்பாடு, சீட்டில் அமர்ந்த கொஞ்ச நேரத்துக்கு நம்ம XIII பாணியில் திரு திருவென முழித்துக் கொண்டுதானிருக்கத் தோன்றியது ! பணிகள் சீராய் ஓடிக்கொண்டிருந்த பொழுதுகளில், மாதத்தின் முதல் தேதி மைய இலக்காய் எந்நேரமும் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்க , ஆபீசே அதற்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும் ! மாதத்தின் முன்பாதியில் இருக்கிறோமா ? ; லாஸ்டிலே குந்திக்கினு இருக்கோமா ? என்பதைப் பொறுத்து என்னுள்ளே இருக்கும் சோம்பேறிமாடனும், சுறுசுறுப்பானந்தாவும் மாறி மாறி  தலைகாட்டிக் கொண்டிருப்பர் !  ஆனால் இப்போதோ 45 நாட்களை 'ஏவ்வ்' என்று ஏப்பம் விட்ட பிற்பாடு, சுறுசுறுப்பானந்தா கைலாஸாவில் கிளை ஆரம்பிக்கப் புறப்பட்டுத் தொலைத்து விட்டாரோ - என்ற பயம் லைட்டாகத் தலை தூக்கியது ! ஒரு மாதிரியாய் சோம்பேறிமாடனின் நடு மண்டையில் நாலு குட்டு வைத்த கையோடு, டயபாலிக் & பாக்கி நிற்கும் அந்த '5 நிமிட் பொம்மை புக்கின்' அச்சு வேலைகளை ஜல்தியாய்க் கவனிக்க ஆரம்பித்தோம் !  எந்தச் சாமிப் புண்ணியமோ - ஆகஸ்ட் வரைக்குமான பேப்பரை, ஊரடங்கு துவங்கிடுவதற்கு 2 தினங்களுக்கு முன்பாகவே வாங்கிப் போட முடிந்ததால் இன்று பேப்பரைத் தேடித்திரியும் குரங்கு வேலைகளுக்கு அவசியங்களின்றித் தலை தப்பித்துள்ளது ! அந்த அதிர்ஷ்டம் நிறைய வெகுஜனப் பத்திரிகைகளுக்குக் கூட  வாய்க்கவில்லை என்பதை - நியூஸ்பிரிண்ட்டில் ; சிக்கின சிக்கின காகிதங்களில் அவர்கள் இப்போதெல்லாம் பிரிண்ட் செய்து வருவதைப் பார்க்கும் போது புரிகிறது !! Phew !!! 
அப்புறம் மாலை 5 வரை பணி செய்யலாமென அனுமதி இருப்பினும், மதியத்தோடே ஊர் அடங்கிப் போய் விடுவதால், நாமுமே 2 மணிக்கெல்லாம் மூட்டையைக் கட்டி விடுகிறோம் ! So மெது மெதுவாய் பிரின்டிங் வேலைகளை முடித்த கையோடு பைண்டிங்குக்கு சனி காலையில் மொத்தத்தையும் அனுப்பிவிட்டு - திங்கள் முதலாய் - 'ஹல்லோ...பிரபா ஒயின்சா ? புக்க எப்போ அனுப்புவீங்க ?' என்று குடலை உருவத் தயாராகி விட்டோம் !   வரும் புதன் முதலாய்  5 புக்ஸ் அடங்கிய டப்பிக்களின் டெஸ்பாட்ச் சாத்தியமே என்பது தற்போதைய நிலவரம் !  முகமூடிக் கொள்ளையர் ரேஞ்சில் எட்ட நின்றே காட்சி தரும் நம்மாட்களின் குரல்களைக் கொண்டே இது மைதீனா ? இது அண்ணாச்சியா ? என்று கண்டு பிடிக்க வேண்டி வருகிறது ! திங்கள் முதலாய் அவர்களும் பிசியாகிடுவர் என்பதால் இப்போதைக்கு உங்கள் சகாயமே அவசியமாகிடுகிறது ! 'Please folks - 'யாருக்கேனும் கூரியரை இப்போது அனுப்ப வேண்டாம் !' என்ற வேண்டுகோள் இருந்தாலோ ; 'சொந்த ஊரில் இருக்கிறேன் ; அதனால் இப்போதைக்கு இந்தப் புது முகவரிக்கு அனுப்புங்கள் !' என்ற வேண்டுகோள்கள் இருந்தால் - தயைகூர்ந்தொரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் ? அல்லது 98423 19755 என்ற ஆபீஸ் செல் நம்பருக்கொரு வாட்சப் ப்ளீஸ் ! And please note : இங்கே பதிவில் இது குறித்த உங்களின் பின்னூட்டங்கள் வேண்டாமே ; இங்கே பதிவிடும் சமாச்சாரங்கள் நம் front desk-ன் கவனங்களுக்குச் செல்வதில்லை ! So இங்கே பின்னூட்டத்தில் போட்டு விட்டு, அப்புறமாய் நம்மவர்களோடு போனில் WWF நடத்திட வேண்டாமே ? வழக்கம் போல பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ள நண்பர்களோ எதுவும் செய்யத் தேவையில்லை - புக்குகளைப் படிக்கும் முஸ்தீபுகளைச் செய்வதைத் தவிர்த்து ! 

அப்புறம் - இம்மாத இதழ்களின் அட்டைப்படப் previews தாண்டி, உட்பக்கங்களைக் கண்ணில் காட்டியிரா இதழ்களிலிருந்து சில பக்கங்கள் இதோ : We start with ட்ரெண்ட் !
தொடர்வதோ - அதிகாரியின் அமர்க்களம் : 

பார்த்த மாத்திரத்திலேயே சில அதிகாரி நேசர்களுக்கு - 'அண்ணாத்தே மாடு பத்துறாருடோய்' என்று பாயசம் போடப் பர பரக்குமென்பது புரிகிறது தான் ! ஆனால் அழகான இந்த artwork-ஐப் பார்க்கும் போது அவருக்கும் கடைவாயோரமாய் வழிந்திடக்கூடிய குற்றாலத்தின் புண்ணியத்தில், எண்ணங்கள் திசைமாறிடக் கூடும் என்பேன் ! Simply stunning artwork !! 

ரைட்டு - புது இதழ்களென்ற தேர் மெதுவாய் நகரத் துவங்கிவிட்டது ! And இதனுள் எனது பணிகள் நிறைவுற்றும் விட்டன என்பதால் - What next ? என்ற கேள்வியே இப்போது உள்ளுக்குள் பிரதானப்பட்டு நிற்கிறது ! வழக்கமாய் ஒரு batch இதழ்கள் தயாராகும் போதே அடுத்த மாதத்துப் பணிகளில் எத்தனை சதவிகிதம் இன்னமும் pending என்றே சிந்தனை ஓடிடும் ! ஆனால் இப்போதோ வேறு மாதிரிக்கு குழப்பங்கள் :

1."மாதந்தோறும் முதல் தேதி" எனும் அந்தப் பத்திரமான அட்டவணையை நாம் மறுக்கா மீட்பது எவ்விதமோ ? இந்த ஏப்ரல் batch புக்ஸ் கடைகளை எட்டிப்பிடிக்கக் கூடியதே மே 15 -க்கு மேலே தான் ; அதுவுமே லாரி சர்வீஸ் முழுமையாய் ஓடிடத் துவங்கும் பட்சத்திலும் ; முகவர்கள் மறுபடியும் கடை திறந்து வியாபாரம் பார்த்திடும் தெம்புடன் இருக்கும் பட்சத்திலும் தான் ! 'திபு திபு'வென 5 இதழ்களை இப்போது அவர்களிடம் ஒப்படைத்த கையோடு - எண்ணி பதினைந்தே நாட்களில், ஜூன் முதல் தேதிக்கே அடுத்த செட் இதழ்களை அவர்களிடம் கொண்டு செல்ல பயமாகவுள்ளது ! And அடுத்த செட் இதழ்களுள் - தோர்கல் எனும் பெரிய பட்ஜெட்க்காரர் காத்துள்ளார் எனும் போது எனது பயங்கள் இன்னமும் கூடுகின்றன !

2.Maybe ; just maybe - தோர்கல் biggie-ஐ சித்தே பின்நகற்றிடல் தேவலாமோ ? எல்லாமே முடங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தில் -  ஒற்றை இதழுக்கென 450 ரூபாய்களைக் கோருவதை நினைத்தாலே கொஞ்சம் மலைப்பாக உள்ளது ! Of course - முன்கூட்டியே சந்தா செலுத்தியுள்ள நண்பர்களுக்கு இதனில் உடன்பாடிராது தான் ; ஆனால் கடைகளின் விற்பனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டி வரும்போது, சின்னதாய் இந்த juggling செய்தலில் சாதகங்கள் இல்லாது போகுமா ? 

3.அப்புறம் ஒவ்வொரு மாதமும் "ஆன்லைன் ஆர்டர்கள்" என்பது ஒரு ஓசை எழுப்பா பிஸ்டலைப் போல வீரியமான துணைவன் ! தற்சமயம் நன்பர்களுள் கணிசமானோர்க்கு WFH தான் எனும் போது ஆன்லைனில் ஆர்டர் செய்து புக்குகளை வரவழைத்துப் படிப்பது சுலபமே ! ஆனால் கூரியர் சர்வீஸின் சேவைகள் நார்மலுக்குத் திரும்பிட வேண்டுமே என்ற நெருடல் உள்ளுக்குள் ! Maybe இந்த மாதத்துக்கு மட்டுமேனும் Speed Post பற்றி நாம் யோசிக்கத் தேவைப்படுமோ ? இன்றைக்கு எதையுமே அறுதியிட்டுச் சொல்ல இயலா சூழல் எனும் போது முயற்சித்துப் பார்த்த பின்பே சாதக-பாதகங்கள் புலனாகிடும் ! அவ்விதம் முயற்சிக்கும் சமயத்தில் ஏதேனும் சொதப்பிடும் பட்சம், அதைச் சரி செய்திடும் அவகாசங்களை முகம் சுளிக்காது நீங்கள் தந்திட தயாரெனில் we can give it a shot ! 

So கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 300 புக்குகளைப் போட்ட அனுபவஸ்தனாயன்றி, புதுசாய் நடக்கப் படிக்கும் பச்சைப் புள்ளையைப் போலவே, நிறைய விஷயங்களை முற்றிலும் புதிதாய்க் கற்றுணர வேண்டிய சந்தர்ப்பமாகவே இது தென்படுகிறது ! ஒன்றேயொன்று மட்டும் நிச்சயம் folks : நம் காமிக்ஸ் நேசத்தை முன்னெப்போதையும்விட செம இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டாக வேண்டிய தருணமிது !! தொடரவிருக்கும் ஒவ்வொரு நாளும் இந்த 'பொம்மை புக்' சமாச்சாரங்கள் ; இந்தப் 'படக்கதை பயணங்கள் ' நமக்கு எத்தனை ஆத்மார்த்தமான அவசியங்களென்பதை நிரூபிக்கக் காத்துள்ள பொழுதுகள் !! Fingers crossed that we sail through these times safely !!

இந்த இடைப்பட்டுள்ள நாட்களில் ஆங்காங்கே FB -ல் ; வாட்சப் குழுக்களில் - காமிக்ஸ் வாசிப்பு ; காமிக்ஸ் கும்மியடிகள் ; காமிக்ஸ் போட்டிகள் என்று களை கட்டி வந்துள்ளதைக் குறிப்பிட்டு நிறைய நண்பர்கள் மின்னஞ்சலில் தகவல் சொல்லியிருந்தனர் !! இங்குமே நாம் ஏதேதோ சொந்தக் கதைகள் -சோகக்கதைகள் - ஊர் சுற்றிய கதைகள் ; போட்டிகள் என நாட்களை ஜாலியாய் நகற்றிட முனைந்ததால் மாமூலான கலகலப்பு இந்த வைரஸ் நாட்களில் கூட மங்கிடவில்லை ! இந்தச் சிரமங்களையெல்லாம் பத்திரமாய்த் தாண்டியதொரு தூரத்து நாளில் இதை நினைவுகூர்ந்திடும் போது, 'அன்றைய ரணகளத்திலும் தாத்தா அடிச்ச கூத்து பத்திச் சொல்லட்டுமாடா பேராண்டி ?' என்று அசை போடுவோமோ ? அவ்விதமான அசை போடும் பொழுதுகளில் இந்த காமிக்ஸ் நினைவுகள் சார்ந்த போட்டிகள் நிச்சயம் ஒரு முன்னணி இடம் பிடிக்கும் என்பது நிச்சயம் ! And சமீபமாய் நண்பர்களின் குழுக்களுக்குள் நிகழ்ந்துள்ள அந்தக் 'கடுதாசி எழுதும் போட்டி ' நிரம்பவே பேசப்படுவது உறுதி !   "நம்ம ஹீரோக்களோடு நீங்க போனில் பேசினாக்கா என்ன பேசுவீர்கள் ?" என்ற கொக்கியை 2 வாரங்களுக்கு முன்னே நான் பதிவில் போட்ட சமயம், எனக்கு முதலில் தோன்றிய எண்ணமே - "'தல' டெக்ஸுக்கு ஒரு லெட்டர் போடுவதாயின் என்ன எழுதுவீர்களோ ?" என்ற ரீதியில் உங்களை எழுதச் சொல்லிடத் தான் ! ஆனால் அப்புறமாய் கேள்வியை கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொண்டேன் ! ஆனால் என் மண்டையில் உதித்த concept-ல் இன்னும் ஒரு படி மேலே போய் - "from  ஹீரோ to ஹீரோ " என்று அமைத்திருந்தது  செம அகுடியா !! And வெற்றி பெற்றிருந்த அந்தக் கடுதாசி smply sparkling !!

இந்த நொடியில் - அரசவையின் official கடுதாசிக்காரர்" என்ற பதவிக்கு நண்பர்களின் அகுடியாவை சித்தே இரவல் வாங்கிட்டால் தப்பில்லை என்று நினைத்தேன் !! ஏற்கனவே தாரை தாரையாய்க் கண்ணீரை வரவழைக்கும் ஒரு கடுதாசிக்காரர் எனக்குப் பரிச்சயம் என்றாலும், இம்முறை அவருக்கு கடும் போட்டி தர இங்கே நிறையவே ஆற்றலாளர்கள் இருப்பது நிச்சயம் என்று தோன்றுகிறது ! நீங்க செய்ய வேண்டியது இதுவே :

கார்சன் !! பின்னணியில் இருந்தே அதிகாரிக்கு அசுர பலம் சேர்க்கும் ரவுசு பார்ட்டி !

கார்வின் ! பின்னணியில் இருந்தே தொழிலதிபர்களின் தோழிக்கு அசுர பலம் சேர்க்கும் லவுசு பார்ட்டி !

அந்தக் 'கா' இந்தக் 'கா'வுக்கொரு கடுதாசி எழுதினாலோ ; அல்லது இந்தக் 'கா' அந்தக் 'கா'வுக்கொரு லெட்டர் போட்டாலோ  - எவ்விதமிருக்கும் ? கற்பனையில் ஒரு கடுதாசி அல்லது 2 கடுதாசிகள் வரைந்திடலே இந்தப் போட்டி ! 

வெற்றி பெறும் கடுதாசிக்காரருக்கு ஜம்போ சீசன் 3 சந்தா நம் அன்புடன் !

Before I sign out - இன்னொரு ஜாலியான quiz கூட !! போரடித்துக் கிடப்பது நாம் மட்டுமல்ல - இத்தாலிய டெக்ஸ் ரசிகர்களும் தான் என்பதைச் சுட்டிக்காட்டி, நமது இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் ஒரு போட்டியினைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் போட்டிருந்தார் ! அங்கே கேட்கப்பட்டிருந்த கேள்விகளை நாமுமே பகிர்ந்திடுவோமா ?

'தல' டெக்ஸுக்கு நிஜத்தில் வயது 72 என்றாலும், கதைகளில் அவர் மார்க்கண்டேயரே என்பதில் no secrets ! இங்கு கேள்வியே அவரது வயது சார்ந்ததே :

*கதைகளில் சுழன்றடிக்கும் டெக்ஸுக்கு என்ன வயதென்று அனுமானிப்பீர்களோ ? தமிழில் ஒரு "டெக்ஸ் சினிமா" எடுத்தால் மஞ்சள்சட்டை அணிவிக்க யாரைத் தேர்வு செய்வீர்களோ ?

*வறுத்த கறிப் புகழ் கார்சனுக்கு age ? ஆட்டுத்தாடி பொருத்திட யாரையோ ? 

*'வோ' புகழ் டைகர் ஜாக்குக்கு ? Again age & roleplay ?

*கதை கேட்டே காலத்தை ஓட்டும் கிட் வில்லருக்கு ? என்ன வயதென்பீர்கள் ? யாரைப் போடலாம் அவர் வேஷம் கட்ட ? 

Bye guys - see you around !! Have a safe sunday !!

UPDATE :

நண்பர் அப்பு சிவாவின் கைவண்ணத்தில் !!!



டெக்ஸுக்கு ஆர்யா அவ்வளவாய் செட் ஆகலை ; but பாக்கி மூவரும் simply superb !! 

Sunday, May 03, 2020

ஓவரோ ஓவர் - 2

நண்பர்களே,

வணக்கம். நாளைய பொழுது back to work என்பதால் அதற்கான முஸ்தீபுகளில் பிசியாக இருப்பீர்களென்று நினைக்கிறேன் ! அச்சகங்களை  முழுமையாய் இயக்கவுமே அரசு அனுமதி தந்திருப்பதால் - தொடரும் நாட்களில் எஞ்சியிருக்கும் இதழ்களை ஜல்தியாய் அச்சிட வேண்டியது தான் ! ரைட்டு....நேற்றைக்குத் துவக்கிய மாஸ்கோ மொக்கையின் இறுதிப் படலத்தை இயன்றமட்டுக்கு நீட்டி முளக்காமல் இனி விவரித்திட முயற்சிக்கிறேன் ! 'மதியமே ஆஜராகிறேன்' என்று வாக்குத் தந்திருந்தாலும் back to back தினங்களில் back to back ஆஞ்சநேய வால் நீளத் பதிவுகளை டைப்படிக்க ரொம்பவே சிரமப்பட்டது !! தவிர, நாளை முதல் வேலைகள் ஆரம்பம் எனும் போது மண்டையின் ஒரு பகுதி அதனில் லயித்துக் கிடந்தது ! So ரொம்பவே லேட் !!  Sorry people !

மாஸ்கோ ஏர்போர்ட்டின் வெளியே எட்டிப் பார்த்த போது என்னை வரவேற்ற கட்சி பகீரென்று வயிற்றைக் கலக்கியது ! பொதுவாய் ஒரு தலைநகரின் பன்னாட்டு விமான நிலையத்துடன் நாம் தொடர்பு படுத்திடக்கூடிய பரபரப்பான  சமாச்சாரங்கள் எவையுமே கண்ணில்படவில்லை !  நகருக்குள் செல்ல பஸ் வசதி இருப்பதாகவோ, புதுசாய் வருபவர்களுக்கு ஒத்தாசை செய்திடக்கூடிய டூரிஸ்ட் ஆபீஸ்களோ மருந்துக்கும் காணோம் ! மாறாக WWF மல்யுத்தப் போட்டிக்குத் தயாராய் இருக்கும் லகட பாண்டியர்களைப் போல ஒரு கும்பலாய் டாக்சி டிரைவர்கள் முறைப்பாய் நின்று கொண்டிருந்ததைத் தான் பார்க்க முடிந்தது ! வரவேற்க யாருமின்றி,  'ஊருக்குப் புதுசு ' என்ற அடையாளத்தோடு வந்து சேரும் பயணிகளை சுற்றி வளைத்துக் கொண்டு தத்தம் வண்டிகளில் ஏறிடச் சொல்லி மிரட்டாத குறையாய் அங்கே ஒரு கூத்து அரங்கேறிக்கொண்டிருந்தது ! ஏற்கனவே இது பற்றி நெட்டில் கொஞ்சம் வாசித்திருந்தேன் என்பதால், இவர்களிடம் சிக்கி மேற்கொண்டும் சட்னியாகிடக்கூடாதே என்ற பயம் உள்ளுக்குள் ! ஆனால் எந்த நொடியும் தூங்கப் போய்விடுவேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த நோஞ்சான் ரஷ்யக் கதிரவன் எனக்கு நிறைய options தந்திடவில்லை ! நின்று கொண்டு கூவிக்கொண்டிருந்த லகடுகளை லேசாய்ப் பார்வையிட்டேன் ; அத்தினி பேருமே அரை டஜன் பிரியாணிகளை at a time சாத்தக்கூடியோர் போலவே தென்பட, ஒரேயொரு மனுஷன்  மட்டும் கொஞ்சம் குட்டியாய்க் கண்ணில் பட்டார் ! வயசும் கொஞ்சம் கூடுதல் போலவே தோன்றியது ! ரைட்டு... வழியில் ஏதேனும் சிக்கல் ஆனால் கூட இந்த மனுஷனை நாம் சாத்தி விட முடியும் என்று தோன்றியதால்  விறு விறுவென்று அவரது வண்டியை நோக்கி நடந்தேன் - இடைமறித்த கிங் காங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் !  எக்மோரிலும், சென்ட்ரலிலும் வெளிப்படும் போதெல்லாம்  சூழ்ந்திடும் ஆட்டோ டிரைவர்களை எண்ணற்ற தடவைகள் சமாளித்த அனுபவம் என்றால் சும்மாவா ? ஒரு மாதிரியாய் அவர்களைக் கடந்து சென்று அவரது டாக்சியைப் பார்த்த போது, சத்தியமாய் நம்ப முடியவில்லை - இன்னமுமே இது போன்ற புராதனங்களை எல்லாம் இத்தனை பெரியதொரு தேசத்தின் சாலைகளில் ஓட அனுமதிக்கின்றனரா என்று !! பெட்டியை டிக்கியில் போட சைகை காட்டினேன் ; அவரும் மொக்கை போட்டு டிக்கியைத் திறந்தார் ! சரியென்று உள்ளே ஏற எத்தனித்தால் கதவின்  கைப்பிடி  சண்டித்தனம் செய்தது ! உள்ளுக்குள் அமர்ந்தால் சிகரெட் நாற்றம் குடலைப் பிடுங்கியது & சீட்களில் ஏழேழு ஜென்மங்களது தூசும், அழுக்கும், கறையும் அப்பிக்கிடந்தது ! ஏழெட்டு ஆண்டுகளுக்கு   முன்பாய் கிழக்கு பெர்லினிலும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரங்களிலும் தான் இத்தனை ஹைதர் அலி டேக்சிக்களைப் பார்த்திருந்தேன் ; ஆனால் 2005 -ல் கூட இவை சாத்தியமே என்பதை நம்பச் சிரமமாக இருந்தது ! நான் போக வேண்டிய ஹோட்டலின் விலாசத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்தேன் ; அதைக் காட்டிய பின்னே மனுஷன் லேசாய் மண்டையை ஆட்டியபடிக்கே வண்டியைக் கிளப்பினார் !

சாலைகள் முழுவதுமே பனியை அங்கியாக்கி வெள்ளை வெளேரென்று நிசப்தமாய்க் காட்சி தர,  மேற்கொண்டும் பனி விழத் துவங்கியிருந்தது ! அவ்வப்போது சர் சர்ரென்று தாண்டிச் சென்ற சில நவீனரகக் கார்களையும், முரட்டு டிரக்குகளையும் தவிர்த்து ரோட்டில் யாரையும் பார்க்க முடியவில்லை ! டிரைவருக்கு சுட்டுப் போட்டாலும் இங்கிலீஷ் தெரியாது ; எனக்கோ இது மாஸ்கோ போகும் சாலை தானா ? அல்லது மனுஷன் எங்கேனும் என்னைக் கடத்திப் போகிறானா ? என்று தெரிந்து கொள்ள வழிகள் கூட லேது ; 'டொர டொர' வென்ற அந்த வண்டியின் ஓசை மட்டுமே கேட்க,  இஞ்சி தின்ற குரங்காட்டம் இருளினுள் பயணித்துக் கொண்டிருந்தேன் ! அரை மணி நேரம் ; ஊஹூம் - முக்கால் மணி நேரமாகியும் தலைநகரின் வெளிச்சங்களோ ; வீடு, பேக்டரி போன்ற சமாச்சாரங்களோ தென்படவே இல்லை என்ற போது இந்தப் பெருசு நமக்கு ஊரைச் சுத்திக் காட்டுதுடோய் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தேன் ! மீட்டர் மட்டும் உசைன் போல்ட் வேகத்தில் ஓட்டமெடுத்துக் கொண்டிருக்க, கொஞ்சம் கடுப்பு கலந்த குரலில் 'இன்னும் எத்தினி நேரம் போகணும் ?' என்று கேட்டேன் ! அந்தாளோ உறுமல் போல் ஏதோவொன்றை ரஷ்ய மொழியில் பதிலாகச் சொல்லி விட்டு, மாமியாரிடம் கோபித்துக்கொண்ட மருமகளை போல 'விசுக்'கென்று கழுத்தைத் திருப்பிக் கொண்டார் ! ஒரு மாதிரியாய் ஒரு மணி நேரத்தைத் தொட்டிருந்த பொழுதில் மாஸ்கோ நகரின் மினுமினுப்பு கண்ணில்பட ஆரம்பித்த பொழுது என்னுளிருந்த இறுக்கம் லேசாய்த் தளர்ந்தது ! சரி...சரி...கொஞ்சம் போல மீட்டர் ஜாஸ்தியானாலும், ரூமுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தால் சரி தானென்று சமாதானம் கண்டது மனசு ! ஆனால் வலிது வலிது - வழுக்கையரைப் பின்தொடரும் விதி வலிது என்பதை நீண்டு கொண்டே சென்ற அந்தப்பயணம் நிரூபித்தது !

விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ நகர் முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரமெனில், நான் தேடிப் பிடித்திருந்த ஹோட்டலோ ஊரின் மறு கோடியில் இருந்து தொலைத்திருக்கிறது ! So இம்முறை மாஸ்கோவின் வெளிச்ச வீதிகளில் ஊர்வலம் போனோம் அடுத்த 40 நிமிடங்களுக்கு ! லொடக் லொடக்கென்று மீட்டர் விழும் நாராச ஓசை மட்டும் சீரான இடைவெளிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்க, அந்தப் புது நகரத்தையோ, அதன் எழில்களையோ ரசிக்கும் நிலையில் நானில்லை !  'ஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஒரத்துக்கே ஓடினான்' என்ற  பராசக்தி பட வசனம் தான் நினைவுக்கு வந்தது அந்த நொடியில் ! கொஞ்ச நேரத்தில் நகரத்தின் பரபரத்த சாலைகள் மறையத் துவங்க, ஊருக்கு ஒதுக்குபுறமென்று நெற்றியில் எழுதிக்கொண்டிருந்த ஆளரவமற்ற பகுதியில் மறுக்கா 'டொர  டொர' பயணம் தொடர்ந்தது ! ஒரு மாதிரியாய் ஏழேகால் மணிக்கு ஹோட்டலுக்குள் வண்டி நுழைந்த போது  - கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் பிள்ளையின் நிம்மதியோடு வெளியே இறங்கி, மீட்டருக்கான காசை எண்ணித் தந்த நொடியில் என் தொந்தியின் மீது நாலு ரொமாலி ரொட்டிகளைச் சுட்டிருக்கலாம் - அத்தனை எரிந்து கொண்டிருந்தது உள்ளுக்குள் !

சூப்பராய் தென்பட்ட அந்த ஹோட்டலை ஏன் இப்படிப் பாடாவதியானதொரு ஊர்க்கோடியில் கட்டியிருக்கிறார்களோ  ? என்ற கேள்விக்கு கொஞ்ச நேரத்திலேயே விடை கிடைத்தது எனக்கு ! மாஸ்கோ நகரின் மிகப் பிரபலமான கண் ஆஸ்பத்திரி அந்தப் பிராந்தியம் தானாம் ; அங்கே சிகிச்சைக்கு வருவோர் தங்கிடும் பொருட்டு இந்த 4 நட்சத்திர ஹோட்டலை கட்டியது மட்டுமில்லாது, மொத்த பில்டிங்கையுமே  ஒரு   கண்ணின் அமைப்பில் உருவாக்கி , அதற்கு  HOTEL IRIS என்று பெயரிட்டிருப்பதை  ரூமிலிருந்த கேட்லாக் சொல்லியது ! ஆஸ்பத்திரிக்கு அருகாமை என்பதைத் தாண்டி, அதுவொரு அத்துவானமே என்பதை உணர்ந்த போது - இத்தனை சொகுசான ஹோட்டல் ஏன் இத்தனை சல்லிசாய் இருந்தது என்பது புரிந்தது ! 'சர்தான் ;எப்போதுமே ரேட் குறைவா ?' என்று மட்டுமே பார்க்கும் புத்திக்கு இப்படி குட்டு தேவை தான் என்று நினைத்துக் கொண்டே, ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போமென்று எனது செல்லிலிருந்து லாத்வியா நாட்டின் ஆசாமிக்கு போன் அடித்தேன் ! கோயில் மணி போல போன் அடித்துக் கொண்டேயிருக்க, யாரும் எடுக்கக்காணோம் ! சரி, இந்நேரத்துக்கு எங்கேயேனும் குடித்துவிட்டு மட்டையாகிக் கிடப்பான் என்றபடிக்கே, voicemail-ல் நான் மாஸ்கோ வந்துவிட்ட தகவலையும், ரூம் நம்பரையும் பதிவு செய்து விட்டு கீழேயிருந்த ஹோட்டலுக்குப் போனேன் பசியாற !

மருந்துக்குக் கூட ரஷ்யர்கள் அல்லாதோர் எவருமில்லை அங்கே ! இந்தக் கோழிமுட்டைக் கண்ணனுக்கு இங்கென்ன ஜோலியோ ? என்பது போல அங்கிருந்தோர் என்னைப் பார்க்க - நானோ  வயிற்றுக்குள் இறங்கக்கூடிய சமாச்சாரமாய் ஏதேனும் உள்ளதா ? என்று மெனுவை பார்த்தேன் ! வராட்டி போல எதையோ தின்று வைத்து விட்டு ரூமுக்குப் போன போது உறக்கம்  சுழற்றியடித்தது ! காலையில் எழுந்து மறுபடியும் கொஞ்சம் வராட்டியை உள்ளுக்குள் தள்ளிவிட்டு அறைக்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியே பார்த்தால், கண்ணுக்கு எட்டிய மட்டுக்கு பனியும், சூன்யமும் மட்டுமே தெரிந்தது ! சரி, நம்மாளுக்கு போன் பேசலாம் என்றபடியே அதே லாத்வியா செல் நம்பருக்கு போன் அடித்தால் - ஊஹூம் ; பதில் இல்லை ! பத்தாண்டுகளுக்கு முன்பான 'கொரிய மண்டைமழிப்பு நாட்கள்' லேசாக மனதில் இழையோட, படபடக்கத் துவங்கியது மனசு ! அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு அவனது வீட்டு லேண்ட்லைன் நம்பர் + செல் நம்பருக்கு 5 நிமிட இடைவெளிகளில் விரல் நோகும் வரைக்கும் போன் செய்து கொண்டேயிருக்க - கிணற்றில் கடாசிய கல் தான் ! எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை ! என்ன செய்வதென்றே தெரியலை ; ஊருக்கு போன் செய்து என் தம்பியிடம் பேசினால் அவனும் பதறுவானே என்பதால் மூச் காட்டவில்லை ! ஒற்றை செல் நம்பரையும், முகமறியா ஒரு ஆசாமி மீதான நம்பிக்கையையும் மட்டுமே ஆதாரமாய்க் கொண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதை நினைத்துப் பார்க்கும் போது, லோகத்திலேயே முதல் பேமானி நானாகத் தானிருக்க முடியுமென்று தோன்றியது !

மதியம் சாப்பிடவே தோணலை ! அவர்களது  சாப்பாடு ஒரு கொடூரமெனில், 'இப்போ கொட்டிக்கிட்டு என்னத்த கிழிக்கப் போறியாம் ?' என்று உள்ளுக்குள் உலுக்கிக் கொண்டிருந்த கேள்வியும் பசியின் மீது ஈரத்துணியைப் போர்த்தியிருந்தது ! மாலை புலர்ந்த போது - 'போச்சு ; மொத்தமாய்க் காசும் போச்சு ; இந்தக் குளிருக்குள்ளே அல்லாடறதுக்கும் அர்த்தம் இல்லாமல் போச்சு !' என்று தீர்மானித்திருந்தேன் ! இழப்பின் வலியை விடவும், பொய்த்த நம்பிக்கையின் வலியும், ஏமாந்து போவதன் வலியுமே பிய்த்துத் தின்று கொண்டிருந்தன ! மாலையும் புலர்ந்த போது - பொது பொதுவென்ற பனிப்பொழிவும் துவங்கியிருந்தது ! முழு நாளுமே பத்து பைசாவுக்குப் பிரயோஜனமின்றி வீண் போய்விட்டதே என்ற எரிச்சல் ஒரு பக்கம் ; உள்ளேயே அடைந்து கிடக்காமல், எங்கேனும் கடைவீதிகளில் சுற்றுவதற்கும் வழியில்லையே என்ற கடுப்பு இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தன உள்ளுக்குள்  ! இன்றைக்குப் போல கூப்பிட்ட குரலுக்கு தேடி வர ஓலா ; யூபெர் என்றெல்லாம்  அந்நாட்களில் டாக்சிக்களும் கிடையாது ; இருந்திருப்பினும் அவற்றின் மீது காசைச் செலவிட மனசும் வந்திராது எனக்கு ! இது போன்ற இக்கட்டுகளின் போது, தனிமை எத்தனை கண்றாவியான துணைவன் என்பதில் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் உண்டு !

இருந்தாலும்  ஒப்பாரி வைத்து ஆகப்போவது ஏதுமில்லை என்பதால் ஒரேயடியாய் நிலைகுலைந்து போகவில்லை ! செல்லில் ISD பேசினால் அத்துக்கொண்டு போய்விடும்  என்பது தெரியும் தான்  ; ஆனால் நிமிஷத்துக்கு முப்பது / நாற்பது  ரூபாய்க்கு மேலாகவா  கட்டணம் இருந்துவிடுமென்ற அசட்டு நம்பிக்கையில் - போன் போட்டு வீட்டுக்குப் பேசினேன் ; குட்டியாயிருந்த ஜூனியர் எடிட்டரிடம் கதைத்தேன் ; செல்லில் இருந்த கொத்தனார், ஆசாரி, எலெக்ட்ரீஷியன் நம்பர்களுக்குமே போன் போட்டு குசலம் விசாரித்து பொழுதை ஓட்டினேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! எனது டயரியை எடுத்து, எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் கட கடவென்று எழுதினேன் - இடையிடையே லாத்வியாவுக்கு போன் முயற்சித்தபடிக்கே ! சுகமோ, துக்கமோ - யாருக்கு என்ன நேர்ந்தாலும், சில பல இயற்கை நியதிகள் தான் மாற்றம் கண்டிடாதே ! So இரவும் புலர்ந்தது ; உறக்கமும் வந்தது ; அதனுள் ஆழ்ந்தும் போனேன் ! நள்ளிரவுக்கு கொஞ்சம் முன்னே எனது செல் கிணுகிணுக்க - பார்த்தால் லைனில் லாத்வியாக்காரன் !! அடித்துப் புரண்டு எழுந்து, நான் 'ஹல்லோவ் ' என்று போட்ட கூச்சல், போன் ஒயர்களின்றியே லாத்வியாவை எட்டியிருக்கும் ! 'என்னாச்சுப்பா சாமீ ? என்னை வரச்சொல்லிட்டு எங்கே தொலைஞ்சு போனியோ ?' என்று ஆதங்கத்தோடு கேட்க, அவனோ 'கொஞ்சம் பிஸியாகிட்டேன் ; நாளான்னிக்கு காலையிலே வாரேன் !' என்று காஷுவலாய்ச் சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணி விட்டான் ! கிணற்றில் விழுந்த கல் மேலெழும்பி வந்ததை நினைத்து குஷியாவதா ? அல்லது 'நாளான்னிக்கு வாரேன்' என்று சாவகாசமாய் சொல்லும் கோமாளியை நினைத்துக் கவலைப்படுவதா ? என்று புரியவில்லை !

போனை கட் பண்ணிய மறு நிமிடமே நான் முயற்சித்தால் - முதலில் போல அடித்துக் கொண்டேயிருக்க, தூங்கவும் முடியாமல் உருண்டு புரண்டு கொண்டேயிருந்தேன் ! 'சரி..அவனா தான் நாளான்னிக்கு வரேன்னு சொல்லியிருக்கான்லே ! பொறுமையா காத்திருக்கலாம் !' என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன் ! கிடைத்துள்ள நம்பிக்கையெனும் சிறு நூலிழையை ஓவராய் அலசி ஆராய்ந்து பிய்த்திடப் பயமாக இருந்ததால், காத்திருப்பே இனி மார்க்கம் என்ற தீர்மானத்தில் காலையில் ப்ரேக்பாஸ்ட சாப்பிட கிளம்பினேன் ! ஒவ்வொரு தினத்தின் குளிர் நிலவரத்தினையும், மறு தினத்துக்கான forecast சகிதம் லிப்ட்டில் ஒட்டியிருப்பார்கள் ! வந்தது முதலாய் வெளியே போகவேயில்லை என்பதால் பெருசாய் அது பற்றி நான் அலட்டிக்கொண்டிருக்கவில்லை ! ஆனால் மறு நாள் லாத்வியாக்காரனுடன் வெளியில் போக வேண்டியிருக்கும் என்பதால் காஷுவலாய் அந்த சீதோஷ்ண நிலவரத்தை வாசித்த போது குடல் வாய்க்கு வந்து விட்டது ! அன்றைய பொழுதின் டெம்பெரேச்சர் -18 டிக்ரீ என்றும் மறு நாளைய டெம்பெரேச்சர் -27 டிக்ரீயாக இருக்குமென்றும் எழுதி ஒட்டியிருந்தார்கள் !! விபரம் தெரிந்த பிற்பாடு - மெய்யாகவே உயிருக்கு பயந்த முதல் தருணம் அதுவே என்பேன் ! ஊசியால் சுருக் சுருக்கென்று குத்துவது போலான மைனஸ் 14 டிக்ரீ குளிரை சிகாகோவில் அதற்கு முன் அனுபவித்திருந்தேன் தான் ; ஆனால் மைனஸ் 27 என்பது எனது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது ! என்னிடம் இருந்ததோ நார்மலான winter jacket தான் ! அதையெல்லாம் மாட்டிக்கொண்டு இந்த குளிர் நரகத்தை சந்திப்பதென்பது எம தர்மருக்கு வரவேற்புரை வாசிப்பதற்கு சமானம் என்பது அந்தப் பீதியினில் உறைத்தது !! அந்தக் கொலைகாரக் குளிரைச் சமாளிக்கும் Polar fleece எனப்படும் செம தடிமனான கோட்டை வாங்கியே தீர வேண்டும் & அதற்க்கோசரமாவது இன்றைக்கு வெளியே போயே தீர வேண்டுமென்பதும் புரிந்தது ! பேஸ்தடித்த முகரையோடு, கையில் இருந்த சட்டை ; ஸ்வெட்டர் ; ஜெர்கின் என அத்தனையையும் ஒன்றன் மேல் ஒன்றாய் மாட்டிக் கொண்டு ஹோட்டலிலிருந்து 2 மணி நேரத்துக்கொருமுறை ஏதோவொரு சதுக்கம் வரைக் கொண்டு போய் டிராப் செய்திடும் shuttle bus -ல் தொற்றிக் கொண்டேன் ! அங்கிருந்து மறுக்கா ஒரு பஸ்ஸைப் பிடித்தால் மாஸ்கோவின் மையத்துக்குப் போய் விடலாம் என்று ரிசப்ஷனில் சொல்லியிருந்தார்கள் ! அந்தச் சதுக்கமும் வந்தது ; பஸ்ஸில் நானும், இன்னொரு 3 ரஷ்யர்களுமே இருந்தோம் ; மட மடவென இறங்கியவர்கள் நொடியில் ஏதோ ஒரு திக்கில் மாயமாகிவிட்டார்கள் ! தயங்கித்தயங்கி நானும் இறங்கிட , சிலீரென்று சாத்தும் குளிர் காற்றில் கண்ணிலிருந்து தண்ணி ஓடுது தாரை தாரையாய் ! கையில் gloves ; உள்ளாற thermal vest ;  தலையில் பனிக்குல்லா என்றெல்லாம் போட்டிருந்தேன் தான் ; ஆனால்  சுழற்றியடிக்கும் அந்தக் குளிரின் முன்னே அவை பத்து காசுக்குக் கூடப் பிரயோஜனப்படவில்லை ! வெயில் தகித்தால் கூட ஒரு மாதிரியாய் சமாளித்து விடுகிறோம் - ஆனால் குளிரில் முறையான பாதுகாப்பில்லாது போனால் என்ன மாதிரியான ரண அவஸ்தைகள் பலனாகிடுகின்றன என்பதை தொடர்ந்த 10 நிமிடங்களுக்கு அனுபவித்தேன் ! சுத்தமாய் மூளை மழுங்கிப் போகிறது ; முகமெங்கும் அப்பியிருக்கும் cold cream நொடியில் உள்வாங்கப்பட்டு, சருமம் முழுக்க உலர்ந்து போய் காந்த ஆரம்பிக்கிறது ; பேண்ட் பாக்கெட்டின் அதல பாதாளத்துக்குள் கையை நுழைத்துக் கொண்டாலும் எலும்பு வரை ஊடுருவும் குளிரானது  உள்ளூர் சாவுக்குத்திலிருந்து ; அசலூர் பிரேக் டான்ஸ் வரைக்கும் ஆடச் செய்கிறது ! அந்தப் 10 நிமிடங்கள் நரகத்திலொரு ஆயுட்காலமாய்த் தொடர்ந்திட, ஒரு மாதிரியாய் வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டேன் ! அது மாஸ்கோ நகரின் மையத்தினில் 25 நிமிடப்பயணத்தின் பின்னே கொண்டு போய் விட்ட போது பளீரென்று கதிரவன் வெளிப்பட்டிருந்தது கண்டு உள்ளுக்குள் தெம்பாகியிருந்தேன் ! ஆனால் திருவாளர் குளிராரும், பனியாரும் அவரவர் பணிகளைத் தொய்வின்றிச் செய்து கொண்டேயிருந்தனர் ; Mr Sun அவர்பாட்டுக்கு வெளிச்சத்தை மாத்திரமே உமிழ்ந்து கொண்டிருக்க, குளிர் கொடூரம் துளியும் மட்டுப்பட்ட பாடில்லை !! ஆனால் அந்தக் கூத்திலும் என் கண்முன்னே கொஞ்சம் தொலைவில் தென்பட்ட  காட்சியின் கம்பீரத்தை கண்டு எனக்கு மூச்சடைக்காத குறை தான் ! உலக வரலாற்றில் ஒரு அழியா இடம் பெற்ற செஞ்சதுக்கம் அந்தச் சூரிய ஒளியில் அசாத்திய கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது ! உலகின் சர்வ வல்லமை படைத்த அத்தனை தலைவர்களும் ஏதேனும் ஒரு தருணத்தில் கால்பதித்திருந்த அந்தச் சதுக்கத்தைப் பார்த்த மறுநொடியில் எனக்கு நினைவுக்கு வந்ததோ நமது CID லாரன்ஸ் & டேவிட் சாகசங்களுள் ஒன்றே !! (அது எதுவென்று guess செய்ய முடிகிறதா folks ?) ஓட்டமும், நடையாய் செஞ்சதுக்கத்தின் அருகினில் நீண்டு செல்லும் வீதிகளிலிருந்த கடைகளுக்குள் புகுந்தேன் ! நான் தேடிய அந்த polar jacket அங்கே குமித்துக் கிடந்ததைப் பார்த்த போது -  'ரைட்டு...இனி இந்த ஊரில் போனால் பணம் மட்டும் தான் போகும் ; உசிர் போகாது !' என்ற நிம்மதி பிறந்தது ! அங்கேயும் நம்ம கணக்குப் பார்க்கும் புத்தியானது  எட்டிப்பார்த்து, இதில் சல்லிசானது எதுவென்று பார்க்கும் சபலத்தை தலைகாட்டச் செய்தது ! ஆனால் 'மரண பயத்தைக் காட்டிப்புட்ட ' குளிர் பரமன் அந்தச் சபலத்தை நசுக்கி விட்டு, இருப்பதில் நல்ல கிடா மாடு மாதிரியான jacket ஐத் தேர்வு செய்யச் செய்தது ! சுத்தமாய் இரண்டரைக்கிலோ எடை இருக்கும் அந்த ஜாக்கெட் ! பில்லை போட்டு, பணத்தைக் கொடுத்த மறுகணமே அதை மாட்டிக் கொண்டு திரும்பவும் வீதியில் கால்வைத்தால் நம்பவே இயலா ஆச்சர்யமாய் - குளிரின் நடுக்கம் முற்றிலுமாய்க் காணாது போயிருந்தது ! Yes of course - மறைப்பு இல்லாத முகம் மட்டும் சென்குரங்காய்ச் சிவந்து வலித்துக் கொண்டிருந்தது ; ஆனால் உடல் முழுக்க வியாபித்துக் கிடந்த அந்த chills போயே போயிருந்தது ! 'அட...மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நிற்கிறேன் ; நாளைக்கு லாத்வியாக்காரன் வந்துட்டா, மிஷின்களை எல்லாம் பாத்துப்புடலாம் ; அப்புறம் ஊருக்கு 'ஜாலிலோ-ஜிம்கானா என்று பாடிக்கினே திரும்பிடலாம் ' என்ற நினைப்பு குளிர் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும்  வியாபிக்கத் தொடங்கிய கணமே குஞ்சாகோபன் நாயராகிப் போனேன் ! ஒற்றை நொடியில் singgggg in the rainnnnnn என்று பாடணும் போலிருக்க, செஞ்சதுக்கத்தை புதுசாய் நடக்கப் படிக்கும் குழந்தையின் உற்சாகத்தோடு ரவுண்ட் அடித்தேன் ! ஒரு சிறு கூட்டமாய் ஜனம் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, நம்மூர் மாதிரி இங்கே என்ன வித்தை கித்தை காட்டுறானுங்களோ ? என்றபடிக்கே எட்டிப் பார்த்தால் - ஒரு முரட்டு மலைப்பாம்பை ஒரு ரஷ்யன் வைத்துக் கொண்டிருந்தான் ! அதைத் தோளில் மாலை போல் போட்டாலும் அது பாட்டுக்கு க்வாட்டரடித்த கோவிந்தன் போல அமைதியாய் இருக்கிறது ; polaroid காமெராவில் படம்பிடித்துக் கையில் தந்து கொண்டிருந்தார்கள் ! என்னைப் பார்த்தவுடன் அந்த ஆளுக்கு குஷி கிளம்பி விட்டது ; 'India mister !! Take photo ! Take photo ' என்று கூவினான் ! நாமெல்லாம் பல்லியைப் பார்த்தாலே பட்டாளத்தைக் கூப்பிடும் சுத்தமான வீரர்கள் என்பதை அவனுக்கு எங்கே சொல்லிப் புரிய வைப்பது ? ஆளை விட்றா சாமி என்றபடிக்கே ஓட்டமெடுத்தேன் ! அந்தக் குளிரிலும் உள்ளூர் ஜனம் குட்டிப் பிள்ளைகளை stroller -ல் உருட்டிக் கொண்டே ஜாலியாய் ரொமான்ஸ் செய்து கொண்டே  காத்திருந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஷாப்பிங்கில் பிசியாக இருந்ததை பார்த்த போது உள்ளுக்குள் இனம்புரியா சந்தோஷம் குடிபுகுந்தது ! அடுத்த ஒரு மணி நேரத்தை அங்கே உற்சாகமாய்க் கழித்து விட்டு, ரூமுக்குத் திரும்ப பஸ்ஸைப் பிடித்த போது, என் முன்சீட்டில் ஹிட்லரே குந்தியிருந்தால் கூட  'சரி...சரி..இனிமே யுத்தம்லாம் பண்ணக்கூடாதென்று' சொல்லி,  முத்தம் கொடுத்து அனுப்பியிருப்பேன் - கன்னத்தில் !! ஹோட்டல் ரெஸ்டாரண்டில் தந்த வராட்டியாய் வாஞ்சையாய் விழுங்கிவிட்டு தூங்கிப் போனேன் நிம்மதியாய் !

காலையும் புலர்ந்தது ; ஐந்தரைக்கே எழுந்து குளித்துக் கிளம்பி, ஒன்பது மணிக்கெல்லாம் ரிசெப்ஷனில் கொட்டாங் கொட்டாங் எனக் காத்திருந்தேன் - எவனாச்சும் நம்ம முழியைப் பார்த்து கைகாட்டி விட்டு நெருங்கி வருகிறானா என்று ! ஊஹூம்..மணி பத்தும் ஆச்சு ; பதினொன்றும் ஆச்சு ; பன்னிரெண்டாம் ஆச்சு ! விரல் தேய போன் செய்தது தான் மிச்சம் ; ஒற்றை பதில் இல்லை ! 'ரைட்டு..குஞ்சாகோபன் நாயருக்கு கண்டம் விட்டு கண்டம் போனாலும் கூவம் தான் கதி போலும்' என்ற நினைத்துக் கொண்டேன் ! நம்பிக்கை சுத்தமாய்ச் செத்துப் போயிருந்ததொரு பிற்பகல் வேளையில், நல்ல உருளைக்கலையம் சைசுக்கு ஒரு ஆசாமி வாயெல்லாம் பல்லாய் நேராக என்னை நோக்கி வந்தான்! மாறி மாறி என்னை அம்பியாகவும், ரெமோவாகவும், அந்நியனாகவும் அவதாரெடுக்கச் செய்யும் பயபுள்ளை இது தானா ? என்றபடிக்கே கையைக் குலுக்க எழுந்தேன் ! மணி அப்போதே இரண்டரை ஆகியிருந்தது ! 'வா..வா..போகும் வழியிலேயே பேசிக்கொள்ளலாம் !' என்ற உடன் பரபரப்பாய் புறப்பட்டேன் ! பின்சீட்டில் ஒரு முனிசிபல் குப்பை லாரியில் அள்ளிடும் அளவுக்கான குப்பைகளையும், என்றைக்கோ விழுங்கியிருந்த பீட்சா டப்பாக்களையும், கோக் டின்களையும் குவித்து வைத்திருந்தான் மனுஷன் !  'நான் இன்னும் சாப்பிடலை ; போகும் வழியில் சாப்பிட்டுவிட்டுப் போவோம் !' என்றவன் நேராக ஒரு ஜப்பானிய ஹோட்டலுக்கு விட்டான் ! அதுவொரு Sushi ரெஸ்டாரண்ட் ; பச்சை மீன்கறியை ஏதேதோ வகைச் சாதங்களோடு சேர்த்து பால்கோவா போல ஜோடித்து வைத்திருப்பார்கள் ! இந்த ஆட்டத்துக்கே நான் வரலைடா சாமி ; என்றபடிக்கு ஒரு கோக்கை மட்டும் குடித்து வைக்க அவன் கட்டு கட்டென்று கட்டித் தள்ளினான் ! 'அவுக்..அவுக்..' என விழுங்கும் வாடிக்கைகளின் மத்தியில் நான் மிஷின்களைப் பற்றி பேச முனைந்தேன் ! எல்லாத்துக்குமே ஒரு மந்தகாசப் புன்னகையும், yes ..yes என்ற தலையாட்டலுமே பதிலாகிட எனக்கு ஓங்கி அறைந்து விடலாமா என்றிருந்தது ! கொஞ்சம் எரிச்சலோடு - நமக்கு வந்திட வேண்டிய மிஷின்கள் எங்குள்ளன ? அவற்றைப் போய்ப் பார்க்கலாமா ? என்று நான் குரலை உசத்திய போது தான் தீனியைக் குறைத்து விட்டுப் பேச ஆரம்பித்தான் ! அடுத்த 10 நிமிடங்களுக்கு அவன் பேசியதைக் கேட்ட போது நிஜமான நிலவரம் முழுசுமாய்ப் புரிந்தது !!

*நாம் அனுப்பியிருந்த முதல் மிஷினின் பணத்தை மட்டுமன்றி, இரண்டாவது மிஷினின் அட்வான்ஸ் தொகையையும் எதில் எதிலோ போட்டு முடக்கித் தொலைத்திருக்கிறான் ! So உடனடியாய் அவற்றை நமக்கு அனுப்பிட சாத்தியமில்லை !

*புதுசாய் நிறைய மிஷின்கள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளன ; அவற்றை வாங்குவதானால் போய்ப் பார்க்கலாம் !

எனக்கு இரத்தம் தலைக்கேறியிருந்தது ; அவனோ, இதெல்லாம் தினப்படிச் சமாச்சாரம் தானே - என்பது போல் ஜாலியாய்த் தின்று கொண்டேயிருந்தான் ! இவனிடம் குத்துப் பிடிப்பதில் ஆகப்போவது ஏதுமில்லை ; பணத்தை மீட்கவே வழி தேடணும் என்று தலைக்குள் ஒலிக்க, பொங்கி வந்த கோபத்தையும், அழுகையையும் அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தேன் ! 'பழசை முடிக்கும் வரைக்கும் புதுசாய் ஏதும் வாங்க கையில் தம்புடி கிடையாது ; அப்புறம் ஏற்கனவே கொடுத்த பணத்துக்கு ஈடாய் வேறு ஏதாச்சும் இல்லாங்காட்டி நான் தீர்ந்தேன் !' என்று கொட்டிதீர்த்தேன் ! அங்கிருந்தபடிக்கே அடுத்த 30 நிமிடங்களுக்கு எங்கெங்கோ போன் அடித்தான் ! மணி நாலரை ஆகியிருந்த போது ஒரு பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு என்னவோ எழுத ஆரம்பித்தான் ! அப்புறமாய் எனக்குப் புரிந்தது இதுவே : அங்கே இங்கே என விசாரித்து யாரிடமாவது நமக்கு ஆகக்கூடிய மாதிரி மிஷின்கள் ஏதேனும் சல்லிசாக உள்ளனவா ? என்று தேடியிருக்கிறான் ! இறுதியில் மோஸ்க்கோவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ரோஸ்தோவ் எனும் நகரில் அத்தகைய மிஷின்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்க, அவற்றைப் பார்க்க ரயிலைப் பிடித்துப் போகலாமா ? என்று கேட்டான் ! நானிருந்த நிலைமையில் அதை மறுக்கவா முடியும் ? ஓகே என்று தலையாட்ட, நேராக அங்கிருந்து மாஸ்கோ ரயில் நிலையத்துக்குப் போனோம் - டிக்கெட் வாங்கிட ! பிரம்மாண்டமானதொரு கட்டிடத்தில், கொஞ்சமாய் ஜனமும், கணிசமான இருளும் அப்பிக் கிடக்க, 'ரொம்பவே ஜாக்கிரதையாக இரு ; வெறும் பத்து டாலரோ, ஒரு சிகரெட் டப்பியோ கிடைத்தால் கூட கழுத்தை அறுக்கத் தயங்காத மொள்ளமாறிகள் புழங்கும் இடமிது' என்று என் காதில் சொல்லி விட்டு டிக்கெட் கவுண்டருக்குப் போன போது எனக்கு கவிதை தான் தோன்றியது உள்ளுக்குள் :

ஒரு மொள்ளமாறியே ......
மொள்ளமாறிகள் உஷார் .....என்கிறது ! 
அடடே..... !!

ஆனாலும் ஓவராய்த் தான் பீலா விடுறானோ ? என்று தான் முதலில் நினைத்திருந்தேன் ! ஆனால் தோளில் பையோடும், முகரையில் அசலூரான் என்ற அடையாளத்தோடும் நின்று கொண்டிருந்த என்னைச் சுற்றி திடீரென நாலைந்து ஆட்கள் சம்பந்தமேயின்றி வலம் வந்த போது பகீரென்றிருந்தது ! இன்றைய நிலவரம் என்னவென்று தெரியாது - ஆனால் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யாவில் crime rate செம அதிகம்  என்பது ஒரு நெருடலான வரலாறு ! பையை இறுக்கப்பற்றிக் கொண்டே போனில் பேசுவதாய் பாவ்லா பண்ணிக்கொண்டே ஓரிடத்தில் நில்லாது, இங்கும் அங்குமாய் நடை போட்டேன் ! அதற்குள் அங்கே டிக்கெட் கவுண்டரில் நின்ற சிங்கிள் மொள்ளமாறி என்னை நோக்கிக் கையசைக்க அந்தப் பக்கம் போனேன் ! ராத்திரி 11 மணிக்குப் போகுமொரு மிதவேக ரயில் மட்டுமே உள்ளதென்றும் ; அது எனக்கு ஓகே வா ? என்றும் கேட்டான் ! தேவைப்பட்டால் கழுதையில் ஏறிக் கூட பயணம் போக சம்மதம் சொல்லியிருப்பேன் நான் அன்றைக்கு ! டிக்கெட்டை எடுப்பா என்று சொன்னேன் !  கிருஸ்துமஸ், புது வருஷப்பிறப்பு போன்ற நல்ல நாட்களுக்கு மட்டுமே சுத்தம் செய்வதை அங்குள்ள ரயில்வேயினர் பின்பற்றுவர் போலும் ; பரிதாபமாய்க் கட்சி தந்த இரவு ரயிலில் கிளம்பினோம் ! காலையில் ரோஸ்தோவ் சென்றடைந்தது ; அது வரையிலும் பகாசுரனாய்த் தூங்கிக் கிடந்த லாத்வியாக்காரனை தட்டி எழுப்பி, அங்கே ஒரு தொழில்பேட்டை போலான இடத்தின் ஒரு மாட்டுக்காடி போலான கிட்டங்கியில் 'தேமே' என்று நின்று கிடந்த சில மிஷின்களைப் பார்வையிட்டது என எல்லாமே fast forward -ல் நடந்தேறியது ! ஐஸ்வர்யா ராயை மணப்பெண்ணாய் நினைத்து ஊரிலிருந்து கிளம்பியவனுக்கு - காந்திமதியே கதி என்ற நிலைமையை ஜீரணிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது ! ஆனால் முழுசாய் காசு கோவிந்தாவா  ; அல்லது ஒரு பாதியாச்சும் தேறினால் தேவலாமா ? என்ற கேள்வி எழுந்த போது அழகு அகத்தில் இருந்தாலே பொதுங்கண்ணா ; இளமை இன்னிக்கு இருக்கும், நாளைக்குப் போய்டுமே என்று மனசு சொல்லியது ! வேண்டா வெறுப்பாய் அங்கே பார்த்ததில் 2 மிஷின்களைத் தருவிக்கச் சம்மதித்தது ; மீண்டும் ரயிலைப் பிடித்து மாஸ்கோ திரும்பியது ; அப்புறமாய்ப் பையைத் தூக்கிக் கொண்டு ஊருக்குத் திரும்பியது ; முழுசுமாய் மூழ்கிடாது, நஷ்டத்தை குறைக்கவாவது வழி பிறந்ததே என்ற நிம்மதியில் குஞ்சாகோபன் நாயர் பேப்பரிலொரு படகைச் செய்து கொண்டு சவாரி செய்தது என்று எல்லாமே நடந்தேறின ! ஒரு மாதிரியாய் ஊர் திரும்பியவனுக்கு சமநிலை திரும்பிட நிறையவே நேரம் பிடித்தது ! Thus ends the moscow பல்ப் படலம் !

எல்லாம் சரி தான் - ஆனால் இத்தினி இன்னல்களைத் தந்த ஊருக்கு ; இத்தினி பணத்தைத் தொலைத்த தேசத்துக்கே மறுக்கா போக நினைப்பானேன் ? என்று கேட்கிறீர்களா ? இந்தப் பதிவின் நேற்றைய துவக்கப்பத்தியில் எழுதியதைக் கொஞ்சமாய் நினைவுபடுத்திப் பாருங்களேன் - கோலிவுட் நம்முள் எத்தனை cliche-களை பதித்துள்ளது என்பது பற்றி ? 'தொலைத்த இடத்தில தானே தேடணும் ?' என்று எத்தனை படங்களில் கேட்டிருப்போம் ? அந்தப் பொன்மொழியைப் பின்பற்றுவதாயின் நான் தென் கொரியாவுக்கு அல்லது ரஷ்யாவுக்குத் தான் போயிட விரும்பிடணும் ! ஆனால் ரஷ்யாவின் அந்த பிரம்மாண்டம் ; அதன் வரலாற்றுச் சிறப்புகள் ; அதன் கம்பீரம் என்பனவெல்லாமே என்றேனும் ஒரு நாள் நிதானமாய் ஆராய வேண்டுமென்ற அவாவை என்னுள் விட்டுச் சென்ற பூமி ! தவிர, அந்த நாட்டினைச் சூழ்ந்து எப்போதுமே நிலவிடும் ஒரு மர்மப்போர்வை ஏதோவொரு விதத்தில் என் ஆர்வத்தைத் தூண்டி வந்துள்ளது ரொம்ப காலமாகவே ! So மொக்கையே போட்ட மண்ணே ஆயினும், அங்கே மறுக்கா செல்ல உள்ளுக்குள் ஒரு ஆசை !! தவிர எனது செஸ் பைத்திய நாட்களிலிருந்தே இந்த தேசத்தின் மீதொரு அசாத்திய மோகமுண்டு எனக்கு ! அந்நாட்களில் ரஷ்ய நாய்க்குட்டிகள் கூட செஸ்ஸில் பின்னிப் பெடல் எடுக்காத குறை தான் எனும் போது, ஆண்டாண்டு காலமாய் உலக சாம்பியன்களாய் இருந்த ரஷ்ய வீரர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா - என்ன ? என்றேனும் ஒரு நாள் அங்குள்ள பிரசித்தி பெற்ற செஸ் அகாடெமியில் எட்டிப் பார்த்து அவர்களது பயிற்சி முறைகளை வாய் திறந்து ரசிக்க வேண்டுமென்பதும் அந்த நாட்டுக்குப் போகத்தூண்டும் இன்னொரு காரணி !

Thanks for reading through folks !! நாளை முதல் கொஞ்சமேனும் நார்மலுக்குத் திரும்பும் முயற்சிகளைத் துவக்கவுள்ள உங்கள் அனைவருக்கும் நமது wishes !! And do stay safe please !!

Saturday, May 02, 2020

கொஞ்சம் ஓவரே தான் !

நண்பர்களே,

வணக்கம். ச்சை...இப்போல்லாம் சிகப்பே எனக்குப் புடிக்க மாட்டேங்குது  !! அட்டைப்படங்களில் கண்ணைப் பறிக்கும் அந்த நிறமானது - வரைபடத்தில் அப்பி நிற்கும் போது அடிவயிற்றைக் கலக்குகிறது ! எங்கள் மாவட்டமோ அந்தப் பளீர் சிகப்பில் இப்போதைக்கு மினுமினுப்பதால்  - 33% ஆட்பலத்துடன் இயங்கும் அனுமதி மட்டுமே நமக்குத் பொருந்திடுகிறது - at least இந்தப் பதிவை டைப்பத் துவங்கியுள்ள சனிக்கிழமை சாயந்திரம் வரையிலும் !  So ஏரோபிளேனிலிருந்து இறங்கவுள்ள காதலியைக் காணக்காத்திருக்கும் கோலிவுட் ஹீரோவைப் போல, அலையடிக்கும் ஆர்வத்தோடு ஆபீஸையும், எனது கேபினையும், மேஜையையும் மறுக்கா தரிசிக்க crossed fingers சகிதம் காத்திருக்கிறேன் ! நடுவாக்கில் புதிதாய் ஏதேனும் ஆப்புகள் அறிமுகமாகாத வரைக்கும் ஷேமமே !! மூன்றில் ஒரு பங்கு ஆட்பலமே சாத்தியம் என்பதால், காத்திருக்கும் 2 புக்குகளின் அச்சுப் பணிகளையும் மெது மெதுவாய் முடித்த கையோடு, மெது மெதுவாய் பைண்டிங்கையும் முடித்திடும் பட்சத்தில் மே 15-க்குள் ஏப்ரல் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது போலிருக்கும் ! Once the books are ready - நம்மவர்கள் உங்களை அழைத்து 'புக்குகளை அனுப்பிடலாமா ?' என்று கேட்டறிந்து கொள்வார்கள் ! இசைவு சொல்லும் நண்பர்களுக்கு மட்டும் கூரியர்கள் / பதிவுத் தபால்கள் அனுப்பிட ஏற்பாடு செய்திடவுள்ளோம் ! கொஞ்சம் தாமதித்துப் பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு இந்த Lockdown 3.0 முழுமை பெற்ற பின்னேயோ / அல்லது அவர்கள் விரும்பும் வேளைதனிலோ,  டெஸ்பாட்ச் செய்திட உத்தேசித்திருக்கிறோம் !! புனித தேவன் மனிடோவே வழிகாட்டிட வேண்டும் - வரலாறு கண்டிரா இந்த இக்கட்டுகளிலிருந்து வெளிப்பட !! எது எப்படியோ - லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் போகும் போது, உம்மணாம்மூஞ்சி smurf ஆக இல்லாது, பீப்பீ ஊதும் smurf ஆக அவதார் எடுப்பேனென்று சத்தியமாய் நினைத்துக் கூடப் பார்த்ததில்லைடா சாமீ ! காத்திருக்கும் வாரம் முதலாய் இயல்புநிலைமை சிறுகச் சிறுகத் திரும்பிடும் பட்சத்தில், நமது தளத்துக்குமே back to the normal comics routine என்பதைக் கொணர்ந்தாக வேண்டும் ! So அதற்கு முன்பாய் last of the freewheeling stuff - இப்போதும் சில வாரங்களுக்கு முன்னே முன்வைக்கப்பட்டதொரு கேள்வியினைக் கையில் எடுத்துக் கொண்டு ! And முன்கூட்டிய எச்சரிக்கை ப்ளீஸ் - தொடர்வதில் காமிக்ஸ் சார்ந்த தகவல்களை எதிர்பார்த்திடுவோராய் நீங்கள் இருந்திடும் பட்சத்தில் - best to give this a skip  ! And ஆஞ்சநேய வால் ahead ! Caution advised !!

கேட்கப்பட்ட கேள்வி  :  //போக விரும்பும் நாடு  எதுவோ  ?//

வேறென்ன செய்துள்ளதோ, இல்லையோ - நமது சினிமாத்துறையானது நம் மண்டைகளில் நிறையவே cliche-க்களை ஆழமாய்ப் பதிவு செய்துள்ளது ! ஏனென்கிறீர்களா ? - இந்தப் பதிவின் இறுதியில் புரியும் பாருங்களேன் !

ரஷ்யா !! அந்நாட்களது அட்லஸ்களைத் திறந்து வைத்துப் பார்க்கும் போது, பச்சையும், பிரவுணும் கலந்த வர்ணத்தில் 'பப்பரக்கா' எனப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு தேசம் U.S.S.R என்ற பெயரில் கம்பீரமாய்த் தோற்றம் தருவது 60's & 70's & 80's kids-களுக்கு (!!!) மட்டுமே தெரிந்திருக்கும் ! இன்றைக்குப் போல நெட்டும் கிடையாது ; உலகமயமாக்குதலும் கிடையாதெனும் போது - எப்போதாவது கண்ணில்படும் புக்குகளே புது நாடுகளுக்கான திறவுகோல்களாக இருப்பது அன்றைய வாடிக்கை ! மறைந்த குஷ்வந்த் சிங் அவர்கள் எடிட்டராக இருந்த The Illustrated Weekly of India பத்திரிகையினிலும் சரி, Sputnik என்றதொரு சோவியத் ஏட்டிலும் சரி,  மிரட்டலான அந்த வல்லரசின் பெருநகரங்களை ; வாழ்க்கை முறைகளை ; இராணுவ அணிவகுப்புக்களை  அட்டகாசமான black & white போட்டோக்களில் ரசித்த தலைமுறையினில் நானும் ஒருவன் ! தொண்ணூறுகள் புலர்ந்த சமயம், பிறந்த நாள் கேக்கைப் பசியோடிருக்கும் பசங்கள் கைகளில் ஒப்படைத்தால் என்ன நடக்குமோ - அதுவே U.S.S.R எனும் அந்த மெகா தேசத்துக்கு நிகழ்ந்தது !  ஒவ்வொரு மாநிலமும், திக்குக்கு ஒன்றாய்ப், புதுப் புதுப் பெயர்களுடனான புதுப் புது தேசங்களாய்ப் பரிமாணம் கண்டு கழன்று கொள்ள, மையமாய் ரஷ்யா என்றொரு துண்டு மட்டுமே எஞ்சியிருந்தது ! நான் போக நினைக்கும் தேசமும் அதுவே !

இதில் கொடுமை என்னவெனில், அந்த மண் எனக்குப் புதிதே அல்ல ; 15 ஆண்டுகளுக்கு முன்னமே சில பல தடவைகள் அங்கே குப்பை கொட்டியும் உள்ளேன் தான் ! அன்று கொட்டிய குப்பையின் மீதங்களையேனும் தேடும் பொருட்டாவது அங்கே மறுக்கா சென்றிட விழைகிறது மனசு ! புதிர்களும் போதும், பீடிகைகளும் போதும் என்று படுவதால் போன ஊருக்கே மறுக்காவும் போகும் ஆர்வத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்கிறேனே ?

தொண்ணூறுகளின் துவக்கம் முதலாய் கேபிள் டி-வியின் வருகை    ; ஏராளமான தமிழ் சேனல்களின் துவக்கம், என்ற மின்னணு ஊடகத்தாக்கம் சுனாமியாய் துவங்கிய போது, நமது காமிக்ஸ் கண்ட தள்ளாட்டம் ரொம்பவே ஜாஸ்தி ! அச்சுத் தொழிலிலும் கைக்கும்-வாய்க்கும் சரியாக இருந்தாலே பெரும்பாடென்ற நிலையில் ஓடி வர , புதிதாய் ஏதேனும் தொழில் செய்தே  தீர வேண்டுமென்ற இக்கட்டு எனக்கு ! எதை எதையோ குடாக்குத்தனமாய் முயற்சித்தவன், இறுதியில் நாம் சார்ந்திருக்கும்  அச்சுத் தொழிலுக்குத் தேவையான secondhand மிஷினரி சமாச்சாரங்களை இறக்குமதி செய்து, இங்கு வைத்துச் சீர் செய்து, அப்புறமாய் விற்பனை செய்வதென்று தீர்மானித்து, கண்ணுக்குத் தெரிந்த திக்கில் எல்லாம் கற்களை வீச ஆரம்பித்தேன் ! 1995 முதலாகவே துவங்கிய இந்த முயற்சி ஒரு வருஷத்திற்குள் சூடு பிடிக்கத் துவங்கியது ! ஆரம்ப நாட்களில் தென் கொரியாவில் ஒரு விற்பனையாளரைப் பிடித்து அங்கிருந்து இறக்குமதி செய்யத் துவங்கினோம் ! நாளொன்றுக்கு மனுஷன் 20 வாட்டியாவது போன் போட்டு 'விற்பனைக்கு அது உள்ளது ; இது உள்ளதென்று; காதில் தக்காளிச் சட்னி வழியும் ரேஞ்சுக்கு ப்ளேடு போடுவார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் நானும் சியோல் நகரில் போய் இறங்கி, அவரைச் சந்தித்த பிற்பாடு, ரயில்வண்டி நகரத் துவங்கியது !  சும்மா 'சர் சர்ரென்று' அடிக்கடி கொரியாவுக்குப் பறக்க ; அங்கே மிஷின்களைப் பார்வையிட்டு, விலை பேசி வைத்த கையோடு ஊருக்குத் திரும்பி, அவற்றை உள்ளூர் பிரஸ்களுக்குப் பேசிவிட்டு, இடையில் ஒரு கமிஷனை வைத்து வியாபாரம் பார்ப்பது - என்று பணிகள் சூப்பராய் ஓடிய போது - சும்மா 'ஜிலு ஜிலு' தென்றல் வீசும் வேளையினில் ரம்யமானதொரு  நதியினில் படகுச் சவாரி போவது போலத் தென்பட்டது தான் ! ஆனால் அக்கட இருந்த வியாபாரியோ  - பசுத்தோல் போர்த்திய கரட்டாண்டி என்பதை அவன் என்னை ஓட்டாண்டியாகிய வேளையில் உணர்ந்திட்ட போது - இ குஞ்சுகோபன் நாயர் சவாரி செஞ்சுக்கினு இருந்தது கூவமெனும் வல்லிய 'கம கம' நதியினில் என்பது புரிந்தது ! மொத்தமாய் ஓராண்டுக்கு செய்திருந்த வியாபாரத்திலான நமது கமிஷனை திவ்யமாய் 'ஏவ்வ்' என்று ஏப்பம் விட்ட கையோடு கழன்று கொண்டிருந்தான் ! தவிர, நேரில் போயிருந்த சமயம் காட்டிய பொருள் ஒன்றாகவும், வந்து சேரும் பொருள் வேறாகவும் அமைந்து போக - இங்கே வாடிக்கையாளர்களிடம் கலர் கலராய் BATA சப்பல்ஸ் மாலைகள் ஏகமாய் வாங்கிட நேர்ந்தது ! இந்தக் கூத்துக்களுக்கு மத்தியில் காமிக்ஸ் வெளியிடும் அந்தர்பல்டிக்களுமே அரங்கேறின தான் என்றாலும், கபாலத்தினுள் குடியிருந்த ஓராயிரம் பிக்கல் பிடுங்கல்கள் முன்னுரிமை பெற்று வந்தன !

மொத்தத்தையும் சமாளித்து முடித்திருந்த போது - இது நல்லதொரு தொழில் தான் ; ஆனால் மறுபக்கம் இருக்கக்கூடிய நமது பார்ட்னர் யோக்கியனாய் இருத்தல் தான் ரொம்ப ரொம்ப முக்கியம் என்ற ஞானோதயம் புலர்ந்திருந்தது ! என்ன - அந்த போதி மரத்தைத் தேடிப் பிடிக்க நான் தந்த விலை தான் நிறைய !!  தொடர்ந்த நாட்களில் எனது  நிழலைக் கூட நம்பப் பயமாக இருந்த நிலையில், ஐரோப்பா & அமெரிக்கா பக்கமாய்க் கவனங்கள் திரும்பின - - 'வெள்ளையா இருக்கிறவன் ஆட்டையைப் போட மாட்டான் !' என்ற சீரிய சிந்தனையில் ! இன்டர்நெட்டின் வருகையினைத் தொடர்ந்து ஆங்காங்கே நிறையவே புது தொழில்த் தொடர்புகள் கிட்டிட, ஒரு மாதிரியாய் நாட்கள் ஓட்டமெடுத்தன - கொஞ்சம் வரவுகளோடும், நிறைய செலவுகளோடும் ! ஒரு கட்டத்தில் யாரையும் நம்புவதில்லை என்ற தீர்மானத்தில், சுண்டைக்காய் வாங்குவதாய் இருந்தாலுமே, சுமைகூலியைப் பற்றிய தயக்ககளின்றி, அயனாவரம் போய்வரும்  பாணியில்  ஐரோப்பாவுக்கு, ஷண்டிங் அடிக்க வேண்டிப் போனது ! ஐரோப்பாவின் இண்டு இடுக்குகளையெல்லாம் சுற்றிய அந்தக் காலகட்டத்தில், கொஞ்சமாய்ப் பணத்தையும், நிறைய நட்புக்களையும், கணிசமாய் அனுபவங்களையும் ஈட்டியிருந்தேன் ! தில்லாலங்கடிகளுக்கு தேசிய எல்லைகள் கிடையாது ; கையில் கத்தியோடும், கிண்ணத்தில் தண்ணியோடும் , மழிக்க வாகான மண்டைகளைத் தேடி, உலகெங்கும் வியாபித்துக் கிடக்கும் சீரிய தொழில் முனைவர்கள் அவர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன் ! சும்மாவே நம்ம மண்டை டாலடிக்கும் & ஏற்கனவே கொரியாவில் ஒருத்தன் ஒரு பாதியை செம சுத்தமாய் மழித்திருந்தான் ! இந்த அழகில் மிச்சம் மீதியையும் இந்த வெள்ளைக்கார புண்ணியவான்களிடம் இழந்து நிற்கக்கூடாதே என்ற பயத்தை பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் அடிவயிற்றில் கட்டிக்கொண்டே  சுற்றி வந்தேன் !

நாட்களும், வருடங்களும், நகன்றன !  'நெல் எது ? உமி எது ?' என்று  பகுத்தாய ஒரு மாதிரியாய்க் கண்டு கொண்டேன் என்ற நம்பிக்கையில் சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன ! 2004 வாக்கில் புதுசாயொரு வியாபாரத் தொடர்பு குதிர்ந்திருந்தது - முன்னாள் ரஷ்யக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றதொரு சின்ன தேசமான லாட்வியாவிலிருந்து ! அரண்டவன் கண்ணுக்குத் தான் ஒனிடா பூதம் கூட 'காஞ்சனா' பிசாசாய்த்  தென்படுமே ? வழமை போலவே புது ஆசாமியைப் பற்றி நிறைய விசாரித்தேன்  ; நிறைய பரீட்சைகளைப் பதுக்கி வைத்தேன் - எனது மின்னஞ்சல் கேள்விகளினுள்ளே ! சந்தேகம் எழும்விதமாய் அந்தப் புதுத் தொடர்பு நடந்து கொள்ளவில்லை ! போட்டோவுக்குப் போஸ் கொடுப்பவன் இழுத்துப் பிடித்த தொந்தியை மறுக்கா இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கும் விதமாய்  மூச்சை கொஞ்சம் தாராளமாய் விடுவானில்லையா ? அதே போல நானும் கொஞ்சம் சந்தேகங்களை உதறி விட்டு அவரிடம் விற்பனைக்கிருந்த மிஷினரி பற்றி விசாரிக்கத் துவங்கினேன் !  அந்நாட்களில் இந்தியாவில் முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட அச்சு மிஷின்களுக்கு நல்ல டிமாண்ட் உண்டு ! அவை தயாரிக்கப்பட்ட 1970 's & 1980 's களில் - பிரதானமாய் கம்யூனிச நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதால் - அந்த பிராண்டில் secondhand மிஷின்களைத் தேடிட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ; குறிப்பாய் ரஷ்யா ரொம்பவே வாகான இலக்கு என்பது தெரியும் எனக்கு ! ஆனால் ரஷ்யாவினுள் நுழைவதற்கான  அந்நாட்களது விசா நடைமுறைகள் ரொம்பவே தலைநோவை உண்டு பண்ணுபவை ! தவிர, ரஷ்ய மிஷினரி டீலர்கள் அவ்வளவாய் இன்டர்நெட்டில் புழங்குவதில்லை என்பதால் இரும்புத்திரைக்குப் பின்சென்று மிஷின் தேடுவது ஒரு சிரமக்காரியமாகவே இருந்து வந்தது ! இந்தப் புது வரவோ, ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாட்டவர் என்பதால், அங்கே சுலபமாய்ப் புகுந்து ; அவர்களது மொழி பேசி தொழில் செய்யக்கூடியவராய் இருக்க, சிறுகச் சிறுக எனது நம்பிக்கை கூடிப் போனது ! சரி, சின்னதாயொரு டிரையல் பார்ப்போமே என்று பணம் அனுப்பிய போது செம சுலபமாய் அந்த வியாபாரம் நடந்தேறியது ! சுளுவாய் மிஷினை அங்கிருந்து மனுஷன் ஏற்றி விட, அடுத்த முப்பதாவது நாளில் தூத்துக்குடி துறைமுகத்தில் மிஷினும் ஜோராய் வந்து நின்றது ! 'அட..சூப்பர் !' என்றபடிக்கே கொஞ்சம் கொஞ்சமாய் வியாபாரத்தைக் கூட்டினோம் ! வாரத்தில் இரண்டு முறைகளாவது ரஷ்யாவிலிருந்து போன் அடிக்கும் மனுஷன் அந்த ஊரின் மார்க்கெட்டை ஸ்பஷ்டமாய் அறிந்து வைத்திருப்பது புரிந்தது ! நாம் தேடிடக் கூடிய மிஷின்களையும் கர்ம சிரத்தையாய்த் தேடி, ரொம்ப நியாயமான விலைகளில் சொல்லச் சொல்ல - நமது ரெகுலர் சப்ளையர்கள் பட்டியலில் இடம் பிடிக்கத் துவங்கியிருந்தார் ! சன்னம் சன்னமாய் வியாபாரங்களின் கிரயங்கள் கூடின ! நாம் ஜவாப்த்தாரி என்பதால்  இருபது லட்சம் ; முப்பது லட்சம் என்ற தொகைகளை கூட நமது வாடிக்கையாளர்கள் நேரடியாய் அனுப்பும் அளவுக்கு முன்னேறியிருந்தோம் ! வியாபாரத்தின் நம் கமிஷன்களை அந்த முனையில் வைக்கும் போது தானே சிக்கலே எழுகிறது ; மருவாதையாய் இங்கேயே வாங்குவதென்று தீர்மானித்திருந்ததால் - திகட்டல்கள் துளியுமின்றி எல்லாமே பயணித்தது ! So  மறுக்கா குஞ்சாகோபன் ; மறுக்கா 'ஆலோலம்' பாடியபடிக்கே நதிப்பயண பீலிங்குகள் !

18 மாத சுமாருக்கு லயித்து ஓட்டமெடுத்த நாட்கள் ஒரு அசுபயோக மொக்கை தினத்தில் லைட்டாய்த் தரை தட்டத் துவங்கியிருந்தது ! இங்கிருந்து சீராய்ப்  பணம் அனுப்பிட - சீக்கிரமே அதற்கான பொருள் அங்கிருந்து புறப்பட  - என்ற வாடிக்கை முதல்முறையாக சொதப்பியிருந்தது ! கையில் பத்தாயிரம் டாலருக்கு ஈடான தொகையோடு ரஷ்யாவுக்குள் கொள்முதல் செய்யப் போன சமயம் ஏர்போர்ட் செக்கிங்கில் மாட்டிக் கொண்டதாகவும், பெரும் செலவும், பிரயத்தனமும் செய்த பின்னரே அதிலிருந்து மீள முடிந்ததாகவும் சொன்ன போது 'பக்'கென்றிருந்தது ! ஐரோப்பாவிலுமே கையில் அத்தனை பணத்தை எடுத்துப் போவது குற்றம் தான் என்பதால் மனுஷன் சொன்னதை சந்தேகிக்க நினைக்கவில்லை ! 'சீக்கிரமே பணம் ரெடி செய்து மிஷினை அனுப்பி விடுகிறேன் !' என்று சொன்னவர் அடுத்த 2 வாரங்களுக்கு தொடர்பில் இருக்கவே இல்லை ! நானாய் நினைவூட்டும் போதெல்லாம் - 'இந்தா அடுத்த வாரம் லோட் பண்ணிடுவேன் !' என்ற ரீதியிலேயே பதில் சொல்லி வர, எனக்கு லைட்டாய்ப் புளியைக் கரைக்க ஆரம்பித்தது !

பொதுவாய் இந்த secondhand மிஷினரி தொழிலில் ஆங்காங்கே ஈடுபட்டிருப்போர் எல்லோருமே 'நானே ராசா - நானே கூசா ' பாணியிலான நபர்களே ! ஒரு செல்போனும், ஒரு கம்பியூட்டரும் ; இந்தத் தொழில் சார்ந்த தொடர்புகளும் மட்டுமே அவர்களது மூலதனங்கள் ! நாம் அனுப்பும் பணத்திலேயே பொருளைக் கொள்முதல் செய்து கன்டைனரில் ஏற்றி அனுப்பிவிட்டு, லாபத்தை ஜோப்பியில் செருகிக் கொள்வது வாடிக்கை ! So நாம் வளர்த்துக் கொள்ளும் நட்புக்களும், நம்பிக்கைகளுமே இங்கே ஆகப் பிரதானம் ! இடைப்பட்ட 2 வாரங்களுக்கு மத்தியில் புதுசாய் இன்னொரு மிஷின் மார்க்கெட்டில் சுற்றிடுவதாய் மனுஷன் தகவல் அனுப்பிட, அதுவும் இங்கே போணியாகக்கூடிய சரக்காகவே இருந்தது ! விலையும் as usual சரியாக இருக்க, ஏகப்பட்ட  சபலம் உள்ளுக்குள் ! ஏற்கனவே தூண்களில் நிற்கும் மிஷினையும், இந்த இரண்டாவது மிஷினையும் ஏக நேரத்தில் அனுப்பிடலாமென்று உறுதி தந்த போது நம்பவும் தகிரியமில்லை ; நம்பாது போகவும் தம்மில்லை ! ஏனெனில்  - 'அந்த முதல் மிஷினை அனுப்புடாப்பா ; அப்பாலிக்கா அடுத்ததைப் பார்த்துக் கொள்ளலாம் !' என்றுநான் கறார் காட்டிடும் பட்சத்தில், அவன் கடுப்பாகி ஒதுங்கிட ஆரம்பித்தால், பணமும் கோவிந்தாவாகிப் போகும் ; இதுநாள்வரையிலும் அவனோடொரு வியாபாரப் பாலத்தை உருவாக்கிடப் பட்ட அல்லல்கள் சகலமும் வியர்த்தமாகியிருக்கும் ! இந்த மிஷினரி இறக்குமதித் தொழிலோ செம போட்டிகள் நிறைந்ததொரு துறை ; எவன் டிரவுசரை யார் உருவுவதென்ற பந்தயம் நடவாத குறை தான் இந்தியாவினில் ! So நாம் வேண்டாமென்று ஒரு அசல்நாட்டு வியாபாரியை ஒதுக்கினால், அவனை மடியில் ஏற்றிக் கொண்டு சீராட்டிப், பாராட்டித், தாலாட்டுப் பாடிட இங்கே ஒரு டஜன் போட்டியாளர்கள் காத்திருப்பர் - அவன் வண்டவாளங்கள் அம்பலமாகும் வரையிலுமாவது !! So காசு பணாலாகும் ஏழரை மட்டுமன்றி, கண்முன்னேயே நம் போட்டியாளர்களோடு பயபுள்ளை குலாவும் கொடுமைகளையும் சகிக்க வேண்டி வரும் ! So நிரம்ப யோஜனைகளுக்குப் பின்னே ஒரு மஹா சிந்தனை தோன்றியது ! இரண்டாவது மிஷினுக்கு ஒரு அட்வான்ஸை மட்டும் அனுப்பி விட்ட கையோடு ரஷ்யாவுக்குப் போகும் பட்சத்தில், பார்ட்டியை நேரில் பார்த்தது போலவும் இருக்கும் ; மிஷின்கள் இரண்டையுமே கண்ணில் பார்த்தது போலிருக்கும் ; தலைக்குள் அரிக்கத் துவங்கியிருந்த கரையான்களையும் களைந்து தள்ளியது போலிருக்குமென்று தீர்மானித்தேன் ! அதுநாள் வரையுமே நாங்கள் நேரில் பார்த்திருக்கவில்லை எனும் போது - எல்லாக் குளறுபடிகளும் தீர்ந்திட இதுவே மார்க்கம் என்று தீர்மானித்தேன் ! 

'ரைட்டு..புறப்பட்டு வா...ஒண்ணும் பிரச்சனையில்லை !' என்று மனுஷனும் ஒத்துக் கொள்ள - அட்வான்ஸைப் புரட்டி அனுப்பி விட்டு, இக்கட விசா எடுக்கும் முயற்சிகளில் பிசி ஆனேன் ! ஆசாமி இருப்பதோ லாத்வியாவில் ; ஆனால் நான் போக வேண்டியதோ மிஷின்கள் இருக்கும் ரஷ்யாவுக்கு ! ஒரு மாதிரியாய் விசாவுக்கான paperwork ; அங்கிருந்து போலீசிடம் முன்கூட்டிய அனுமதி என்று சகல தலைவலிகளையும் ஏற்றுக் கொள்ளும் டிராவல் ஏஜென்ஸியைத் தேடித் பிடித்தேன் மாஸ்கோவில் ! ஒரு கணிசமான கட்டணத்தை வாங்கிக்கொண்டு எட்டுப்பத்து நாட்களில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, கூரியரில் அத்தனை காகிதங்களை நேரடியாய் சென்னையிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்கு அனுப்பிட, 'லொஜக்' என எனக்கான விசா கிட்டியது ! அந்நேரத்துக்கு டிசம்பரின் மத்தியினை தொட்டிருந்தது தேதி ! கிருஸ்துமஸ் & புத்தாண்டின் விடுமுறைகள் கண்ணுக்கு எட்டும் தொலைவில் காத்திருப்பது பற்றாதென - ரஷ்யாவின் நடுங்கச் செய்யும் குளிர்காலம் பற்றிய நினைப்பும் அவ்வப்போது மனதில் நிழலாடியது ! ஆனால் சூட்டோடு சூடாய் வேலையைக் கவனிக்காது போனால், வம்பாகிப் போகுமே என்ற பயம் ஆட்கொள்ள - பாரத்தை ஆண்டவன் மீதும், டிக்கெட்டை எமிரேட்ஸ் விமான சர்வீஸிலும் போட்டேன் ! இந்தியாவிலிருந்து நேரடியாய் மாஸ்கோ சொல்வதாயின் டில்லி வழியாக ரஷ்ய விமான சர்வீஸான AEROFLOT-ல் பயணித்திருக்க வேண்டும் ! ஆனால் அவர்களது சர்வீசும் சரி, டில்லியின் அப்போதைய விமான நிலையமும் சரி - 'ஹி..ஹி..ஹி.' ரகங்களே எனும் போது   துபாய் வழியாக பயணிப்பதே சாலச் சிறந்தது என்று பட்டது !

'எப்போ வர்றே ? ; எங்கே தங்குறேன்னு ? தகவல் அனுப்பு !' என்று சொல்லிவிட்டு ஆசாமி வாரயிறுதிக்குக் காணாது போய் விட, நெட்டில் உருட்டி உருப்படியாய்த் தெரிந்ததொரு ஹோட்டலில் ரூம் புக் செய்து விட்டு, அந்தத் தாக்கீதை மின்னஞ்சலில் போட்ட கையோடு கிளம்பினேன் நானும் ! சொகுசாய் துபாயை எட்டிப் பிடித்து அங்கிருந்து மாஸ்கோ செல்லும் விமானத்துக்கு மாறிய போதே லைட்டாய் நெருடியது ! பொதுவாய் ஐரோப்பியத் தலைநகர்களுக்குச் செல்லும் விமானங்களில் கணிசமான வெள்ளைக்காரர்களைப் பார்த்திட இயலும் ! அதிலும் துபாய் மார்க்கமாய்ப் பயணிக்கும் போது, ஷாப்பிங்குக்கோ ; விடுமுறைகளுக்கோ வந்துவிட்டு ஊர் திரும்பும் ஐரோப்பியக் கூட்டம் நிரம்ப தென்படுவது வாடிக்கை ! ஆனால் மாஸ்கோ போகும்  பயணிகளில் பெரும்பான்மை இந்தியர்களாய் / ஆசியர்களாய்த் தான் தெரிந்தது ! 'ரைட்டு...நமக்கெதுக்கு இந்த ஆராய்ச்சி ?' என்றபடிக்கே  ஒரு வெயிலில் வாட்டும் காலைப் பொழுதினில் மாஸ்கோ பிளைட்டினுள் ஏறி அமர்ந்தேன் !  ஐந்தோ ஆறு மணி நேரப் பயணமே ; மதியம் 1 மணிவாக்கில் மாஸ்கோவின் பிரதான  விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஜன்னல் வழியாய்ப் பராக்குப் பார்த்தவனுக்கு பழைய காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் காட்டுவது போலானதொரு கான்க்ரீட் சதுக்கமே கண்ணில்பட்டது ! பற்றாக்குறைக்கு வானமும் ஒரு சோகமான க்ரே போர்வையைப் போர்த்திக் கிடந்தது போலிருந்தது ! புண்ணியத்துக்கு பனி விழக் காணோமே என்ற நினைப்போடு கீழே இறங்கியவன்,  பாஸ்போர்ட் சோதனைகளை சடுதியாய் முடித்த கையோடு பெட்டியை எடுத்துக் கொண்டு ஊருக்குள் போகும் வழியைப் பார்த்திடும் நினைப்பில் வெக்கு வெக்கென்று நடை போட்டேன் ! மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் போகும் transport மார்க்கங்கள் படு டப்ஸா என்பதையும், நம்மூர் சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலின் ஆட்டோக்களை உத்தம பிள்ளைகளாக்கிடக்கூடிய ரேஞ்சுக்கு பகல்கொள்ளையர்கள் என்றும் வாசித்திருந்தேன் ! So சட்டுப் புட்டென்று குடியுரிமை சம்பிரதாயங்களை முடித்து விட்டால், நிதானமாய் பஸ் எதையாச்சும் பிடித்து ஊருக்குள் போய் விடவேண்டுமென்ற உந்துதல் உள்ளுக்குள் !

எஸ்கலேட்டரில் மேல்தளத்துக்குப் போனால் முழுதுமாய் க்ரே வர்ணம் பூசப்பட்டதொரு முரட்டு ஹால் மட்டுமே கண்ணில் பட்டது ! ஒரேயொரு சைடில் விட்டம் வரை உசரமான கண்ணாடி மதில் நிற்க, பாக்கி மூன்று பக்கங்களிலும் முழுசுமாய் மறைப்பு & அந்த ஈனஸ்வர க்ரே பெயிண்ட் ! ஆறரையாடி பீம்பாய்களாய் நாலைந்து ரஷ்யர்கள் சீருடையில் நிற்க, கவுண்ட்டர் எதையும் காணோமே ? என்ற பரக்கப் பரக்க முழித்தேன் ! "Passport Control ?" என்று நிதானமான இங்கிலீஷில் கொஞ்சமே சின்னதாய்த் தெரிந்ததொரு அதிகாரியிடம் கேட்டேன் ! கையை மட்டும் நீட்டினார் மனுஷன் ! பாஸ்போர்ட்டை அவர் முன்னே நான் நீட்ட, பக்கென்று அதை வாங்கி வைத்துக் கொண்டு, உரத்த குரலில் "ALL PASSPORTS GIVE " என்று கூவினார் ! அந்நேரத்துக்கு அந்த ஹாலில் பாதியை நிறைத்திருந்த நம்மாட்கள் - கோணார் கடையில் கறிதோசை வாங்கும் வேகத்தில், அடியும் பிடியுமாய் முன்வந்து தத்தம் பாஸ்போர்ட்களையும், காகிதங்களையும் நீட்டினர் ! அப்போது தான் புரிந்தது - என்னோடு விமானத்தில் வந்தோரின் 90% ரஷ்யாவினருகே உள்ளதொரு எண்ணெய் எடுக்கும் தீவிலிருந்து ஆழ்கடல் குழாய் பதிக்க வந்திருந்த தொழிலாளிகள் என்று ! மொத்தமாய்  காண்டிராக்ட் பேசி, ஒரு அரேபிய நிறுவனம் அவர்களை இட்டு வந்திருப்பது புரிந்தது ! So அந்த ஜனதிரளுள் இங்கிலீஷ் தெரிந்தோரோ ; படிப்பறிவு இருந்தோரோ ரொம்பவே குறைவு என்பதை சீக்கிரமே புரிந்து கொள்ள முடிந்தது ! கத்தையாக பாஸ்போர்ட்களைக் கையில் வாங்கிக் கொண்ட அதிகாரிகள் அங்கிருந்ததொரு ஜன்னலே இல்லாததொரு  ரூமுக்குள் சென்று மடாரென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள் ! சரி, விசாவைச் சரி பார்த்த கையோடு, சீலைக் குத்தி கையில் ஒப்படைத்து விடுவார்கள் ; அதுவரைக்கும் கண்ணாடி மதில் கிட்டே போய் நிற்கலாம் என்று நினைத்துக் கொண்டேன் ! நாங்கள் வந்திறங்கிய அந்த எமிரேட்ஸ் விமானம் கண்ணாடிக்கு மறுபக்கம் நின்று கொண்டிருக்க, சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாயிருந்தனர் !

மணியைப் பார்த்தேன் ; ஒன்றே முக்கால் ஆகியிருந்தது ! 'ச்சை...இங்கே லேட் ஆகிப்போனால், அப்புறமாய்  வெளியே போய் பெட்டிகளை சேகரம் செய்து கொண்டு சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேருவதற்குள் இருட்டித் தொலைத்து விடுமே என்ற பயம் வயிற்றுக்குள் நெளிந்தது ! பனிக்காலங்களில் ஐரோப்பாவில் ரொம்பச் சீக்கிரமே இருட்டிவிடும் ; இதுவோ குளிர்காலத்து ரஷ்யா ;  நாலரை மணிக்குள் இருட்டு மண்டிவிடும் என்பது தெரியும் ! குட்டி போட்ட பூனை போல அந்த அறைக்கதவின் மீது ஒன்றுக்கு இரண்டாய், முட்டைக்கண்களை பதித்தபடிக்கே நடை பயில, அந்தக் கதவோ அலிபாபாவின் குகை வாயிலைப் போல இறுக மூடியே கிடந்தது ! மணி இரண்டாகியது ; இரண்டரையும் ஆகியது ; சாத்திய கதவு சாகடித்துக் கொண்டிருந்தது ! இந்நேரத்துக்குள் இங்கே உள்ளுக்குள் டிசைன் டிசைனாய் சிந்தனைகள் ஓட ஆரம்பித்திருந்தன ! " நீ  எங்க நாட்டிலே  பிடுங்க வந்த ஆணிகள் எல்லாமே வேஸ்ட் தான் ; ஊரைப் பார்த்துத் திரும்பிப்போ !" என்று துரத்தி விடுவார்களோ ? என்ற எண்ணம் தலைகாட்ட, பைக்குள்ளிருந்த பிஸ்கெட்டைப் போட்டு பீதியை ஆற்றினேன் !  'அண்டா காகசம்'  மந்திரத்தை யாரேனும் சொன்னார்களோ, என்னவோ - இரண்டே முக்கால்வாக்கில் கதவு திறந்தது !  சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கிட ஹெலிகாப்டரின் பின்னே ஓட்டமெடுக்கும் பசியெடுத்தோர்  பாணியில் அத்தனை பேரும் அங்கே திபு திபுவென்று ஒடிப்போனோம் ! வெளிப்பட்டவரின் கைகளில் தோராயமாக 30 பாஸ்போர்ட்கள் மட்டுமே தென்பட்டன எனும் போதே எனக்குக் கலக்கியது ! பள்ளிக்கூடத்தில் புராகிரஸ் கார்டை விநியோகிக்கும் மிஸ்ஸைப் போல அந்த 30 கடவுசீட்டுகளையும் கடாசிய கையோடு உள்ளே போனவர் மறுக்கா படாரென்று சாத்திக் கொண்டார் ! எனக்கோ காதலிக்க நேரமில்லை படத்தில் அமரர்கள் TS பாலையாவும், நாகேஷும் பேசிக் கொள்ளும் வசனம் தான் நினைவுக்கு வந்தது : 'படார்னு சாத்திட்டு தடார்னு போயிட்டாரே - அவர் தான் பெரிய மனுஷன் !!"

மணி மூன்று ஆகியது ; மூன்றரையும் ஆகியது ; இன்னொரு கதவு திறப்பு ; இன்னொரு காட்டெருமையோட்டம் ; இன்னொரு 30 + பாஸ்போர்ட்கள் விநியோகம் ; மறுக்காவொரு மடார் கதவு சாத்தல் அரங்கேறியது ! அந்த ஆபீசர் வெளிப்படும் போது குரலை உசத்தி பெயரைச் சொல்ல ஆளாளுக்கு முயற்சித்த போதெல்லாம் ஒரு பனிபடர்ந்த பார்வை மட்டுமே பதிலாகியது ! உள்ளுக்குள் அந்த ஹாலில் போன் சிக்னலும் இல்லை ; அந்நாட்களில் செங்கல்கட்டி மாதிரியான Nokia போன்களைத் தவிர்த்து Smartphones ஏதும் இல்லை  என்பதால் சுவரைப் பிறாண்டாத குறை தான் - பொழுதைக் கழிக்க ! மணி நான்காகிடவிருந்த வேளையில் வெளியே வெளிச்சம் பச்சக்கென்று குன்றியதை போலிருந்தது ! உற்றுப் பார்த்தால் பனி விழத் துவங்கியிருந்தது ! எனது ஜெர்கினெல்லாம் பெட்டியில் இருக்க, பெட்டியோ இந்தக் குடியுரிமைப் பகுதிக்கு வெளியே இருக்கக்கூடுமென்று நினைக்கும் போதே குளிர் நடுக்க ஆரம்பித்தது போலிருந்தது ! பற்றாக்குறைக்கு நாங்கள் வந்திருந்த எமிரேட்ஸ் விமானமானது தனது துபாய் நோக்கிய ரிட்டன் பயணத்துக்கு ஆயுத்தமாகியிருந்தது ! நாலேகாலுக்கு அவர்களும் பெரிய மனிதர்கள் என்பதை நிரூபித்தார்கள் - 'மடாரென்று ' கதவைச் சாத்தி படாரென்று take off-க்குப் புறப்பட்ட போது !

இந்நேரத்துக்கு எனக்குள் ஒரு மாதிரி உறுதியாகியிருந்தது - சத்தியமாய் நம்மை திருப்பி அனுப்பத்தான் போகிறார்கள் என்று ! விசா இருப்பதால் மட்டுமே ஒரு நாட்டுக்குள் நுழைந்திட அது உத்திரவாதமாகாது ; நுழைவுப் புள்ளியில் இருக்கும் immigration அதிகாரிகளுக்கு ஏதேனும் காரணத்தின் பொருட்டு திருப்தியில்லை எனில், கேள்வி கேட்பாடின்றி நம்மை காத்தைச் சேர்த்து அடித்துத் துரத்தி விட முடியும் என்பது தெரிந்த சமாச்சாரம் தானே ?! So 'வந்த வழியைப் பார்த்தபடிக்கே போப்பா !' என்று தான் சொல்லப்போகிறார்கள் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தவனுக்கு - எமிரேட்ஸ் வாபஸ் போய்விட்டதை பார்த்த போது பேதி உச்சத்தைத் தொட்டது ! "இனிமேல் திரும்பப் போவதாயினுமே நாளை இந்நேரம் வரை காத்திருக்கணுமே !!" என்ற குழப்பத்தில் மண்டை காய்ந்து போயிருந்தது ! பேச யாரும் கிடையாது ; விசாரிக்க நாதிகள் கிஞ்சித்தும் கிடையாது ; சாப்பிடவோ, குடிக்கவோ வாங்க அந்த ஹாலில் ஒரு புண்ணாக்கும் கிடையாதெனும் போது பையிலிருந்த பிஸ்கெட் - தங்க பிஸ்கெட்டுக்கு சமானமாய்த் தெரிந்தது ! மிஷின்களுக்குப் போட்ட அட்வான்சும் சேர்த்து கோவிந்தாவா ? பயணம் வந்த செலவும் போச்சா ? என்று உள்ளுக்குள்ளே குழப்பச் சைத்தான் தாண்டவமாடிக் கொண்டிருந்தது ! இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டே குந்தியிருந்த போது மீண்டும் திறந்த கதவு - வேறொரு அதிகாரியை வெளிக்காட்டியது ! 'சொன்றாபெண்டியான் வியயன்' என்று அவர் கூவிய போது - 'வாஸ்கொ டகாமா நிலப்பரப்பு கண்ணில்பட்ட சேதியைக் காதில் வாங்கிய வேளையில் என்னமாய் ஆர்ப்பரித்திருப்பாரென்று புரிந்து கொள்ள முடிந்தது !! ஒரே நிமிடத்தில் நிலவரம் உள்ளுக்குள் அந்தர்பல்டியடித்திருக்க - அந்த அதிகாரிக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்தாலும் தப்பில்லை என்று தோன்றியது ! வேக வேகமாய் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு, பத்திருபது பேர் ஹாலின் மறுபக்கமிருந்த கதவை நோக்கி நடந்தோம் ! அந்தக் கதவும் திறந்து கொள்ள - "மாஸ்கோ உங்களை வரவேற்கிறது" என்ற போர்டு முன்நின்றது ! 'போங்கய்யா சாமிகளா - இதுக்கு என் மாமனார் தலை தீபாவளிக்கு வரவேற்ற லட்சணமே தேவலாம் !' என்று நினைத்துக் கொண்டே என் பெட்டியைத் தேடினேன் ! ஒன்றரை மணிக்கு வந்திறங்கி,  5 மணிக்கு வெளிப்பட்டு பெட்டியைத் தேடினால் தாவு தீராது என்ன செய்யும் ? அனாமத்தாய் ஒரு மூலையில் கிடந்த குவியலினுள் எனது பெட்டியை உருவி எடுத்துக் கொண்டு வாசலுக்கு நடந்தால் அங்கே கண்ணில்பட்ட காட்சி - மிச்சம் சொச்சம் இருந்த 'தம்'மையும் உறிஞ்சிடும் விதமிருந்தது !!

அது பற்றி : பாகம் 2-ல் !! இயன்றமட்டுக்கும் காலையில் சீக்கிரம் டைப்படித்து, நாளைக்கு மதியத்துக்குள் கண்ணில் காட்டிடுவேன் !

Uffffff !!! மிடிலே சாமி - எதையாச்சும் சொல்லுறேன் பேர்வழி என்று நான் புறப்படும் போதெல்லாம் அது இராமாயண நீளத்துக்கு நீண்டு செல்லும் கூத்தை சமாளிக்க  !! 'அதுவும்  அடுத்த பதிவினில் சித்தே அடக்கி வாசிப்போம் என்று நினைக்கும் போது தானா இந்த ரஷ்ய புராணத்தை எழுதத் தோணனும் ? தெரியாம யாராச்சும் இனிமேல் என்னிடம் 'மணி என்ன ?' என்று கூடக் கேட்டு வைக்காதீங்க தர்மவான்களே ; "in 1987-ன்னு" கிளம்பிடப் போறேன் நான்பாட்டுக்கு !

Bye all ! See you again soon !! STAY SAFE please !!

பி.கு : இது காமிக்ஸ் சார்ந்த களம் தானென்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ள - இதோ ஏப்ரலின் பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டிய இதழின் அட்டைப்படப் preview !! பிரிண்டாகி ரெடியாக உள்ளது ; பைண்டிங் தான் பாக்கி !