Powered By Blogger

Saturday, July 25, 2020

ஒரு ஜூலையின் பின்னே....!

நண்பர்களே,

வணக்கம்.  நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை ! ஆனால் காலெண்டரைப் பார்க்கும் போது வருஷத்தின் ஏழாவது மாதமும் வரலாற்றுக்குள் ஐக்கியமாகிட அதிகத் தொலைவில்லை என்பது புரியும் போது maybe எனது பிரமை நிஜம் தானோ ? என்று தோன்றுகிறது ! ஒற்றை ஞாயிறின் ஊரடங்கும், பால்கனிகளிலிருந்து அடித்த கொட்டுக்களும் மெய்யாலுமே வேறொரு யுகத்து சமாச்சாரங்களாய்த் தென்பட்டிட, நடப்பாண்டின் இதழ்களுமே தூரத்து நினைவுகளாய் உள்ளுக்குள் நீச்சலடிப்பதில் (என்மட்டிற்கு) வியப்பில்லையோ ? And ஜுலையின் புது இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது ; உங்கள் அலசல்களை ஆராய்ந்தது ; அக்கடாவென ஒரு சில நாட்களைக் கடத்தியதுமே பத்து நாட்களுக்கு முன்பான சமாச்சாரங்களாகியிருக்க – அடுத்த கத்தை இதழ்களின் பணிகள் எங்கள் பொழுதுகளை மும்முரமாக்கி வருகின்றன ! But அத்தனை சீக்கிரமாய் நடப்பு இதழ்களிலிருந்து பார்வைகளை அகற்றிட இயலாதென்பதால் ஆகஸ்ட் previews will have to wait !

As always – இம்மாதத்து இதழ்களின் making பின்னணிகள் பற்றிய மொக்கைகளே இவ்வாரத்தின் பதிவு ! துவக்கப் புள்ளியாய் நமது லக்கி’s லயன் ஆண்டு மலர் அமைவதில் ஆச்சர்யங்களிராது தான் ! கடந்த சில வருஷங்களாகவே ஆண்டுமலருக்கு நமது பென்சில் ஒல்லி நாயகரையே முதல் தேர்வாக்கிடுவதைக் கவனித்திருப்பீர்கள் ! If I am not mistaken – இது மூன்றாவது லக்கி ஆண்டுமலர் ! எல்லோருக்குமே பிடித்தமான இந்த ஜாலி ஹீரோவை நமது ஆண்டுமலர் நாயகராக இருத்திக் கொள்ள நேர்ந்ததற்கு ஒரு அம்மணிக்கு நன்றிகள் சொல்ல வேண்டுமென்பேன் ! 2016-ன் ஆண்டுமலருக்கென XIII Spin-off தொடரின் பெட்டி பார்னோவ்ஸ்கி & கேப்டன் ப்ரின்ஸின் துவக்க நாட்களின் துக்கடா நீள சாகஸங்களையும் ஒருங்கிணைத்திருந்தது நினைவிருக்கலாம் ! மெய்யாலுமே இந்தக் கூட்டணியை அட்டவணைக்குள் பதித்த சமயம் எனக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் இருந்தன – இந்த இதழ் ரகளையான வரவேற்பு பெற்றிடுமென்று ! ஆனால் அந்த மே இறுதியில் இந்த 2 ஆல்பங்களுமே எடிட்டிங்கிற்கு என் மேஜையை எட்டிய போதே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கி விட்டது ! பாதி கட்டிங்கில் சலூனிலிருந்து ஓட்டமெடுத்தவர் போல கேப்டன் ப்ரின்ஸ் அந்தத் துவக்க நாட்களது சாகஸங்களில் தோற்றம் தருவதில் எனக்கு ஆச்சர்யங்கள் இருக்கவில்லை தான் ; துவக்க நாட்களின் அந்த ஓவிய பாணியை ஏற்கனவே நிதானமாய் பார்த்திருந்தேன் தான் ! அதே போல கதைகள் எல்லாமுமே ஜோ டால்டனின் சைசுக்கே இருப்பதும் நானறிந்ததே ! So no surprises there either....ஆனால் நமது சாகஸ நாயகர் இன்டர்போலில் பணியாற்றிய நாட்களைச் சித்தரிக்கும் கதைகளானவை நிச்சயமாய் ‘வெயிட்‘டாக இருக்குமென்று எண்ணியிருந்தேன் ! ஆனால்... ஆனால்... பின்நாட்களின் பிரின்ஸ் கதைகளுக்கு ஏணி வைத்தாலும் எட்டாத ரகத்தில் அவை இருந்து வைக்க, பயங்கர ஏமாற்றம் எனக்கு ! சரி, சித்தப்பூ தான் காலை வாரிப்புட்டாரென்று பெட்டி அத்தாச்சி பக்கமாய்த் திருப்பினால் அவரோ கண்ணீரே வரச் செய்து விட்டார் ! இந்த இதழ் வெளியான நாட்களில் எனது அந்த ஏமாற்றங்கள் பொதுவுடைமை ஆகிப் போயின ! ஜெய் ப்ரின்ஸ்.... ஜெய் ஜெய் பொ.பா ! என்று புறப்பட்ட நிறைய நண்பர்களோ – ‘பே... பே...பே‘ என்று விழி பிதுங்கி நின்ற அந்த நாட்களில் எனக்கு உள்ளுக்குள் வண்டி வண்டியாய் நெருடல்கள் ! 200 ரூபாய்க்கான இதழை மிதமான கதைகள் ஊசலாடச் செய்து விட்டது ஒரு பக்கமெனில், ‘ஆண்டுமலர்‘ எனும் landmark இதழில் இந்தப் பிழை நேர்ந்து போனது குறித்து சங்கடம் இரட்டிப்பானது ! So அன்றைக்குத் தீர்மானித்தேன் - ஆண்டு மலர்களில் இனிமேல் நோ விஷப்பரீட்சைஸ் என்று ! டெக்ஸ் வில்லர் ; கேப்டன் டைகர் ; ட்யுராங்கோ & லக்கி லூக் தான் நமது 2017-ன் அணிவகுப்பினில் சந்தேகத்துக்கு இ்டமின்றிச் சாதிக்கும் கில்லிகள் என்றிருக்க – தொடரும் ஆண்டுமலர்களில் இவர்களுள் யாரையேனும் சுழற்சி முறையில் களமிறக்குவது என்று தீர்மானித்தேன் ! ஆனால்.....

- ட்யுராங்கோ முத்து காமிக்ஸ் நாயகராக வலம் வந்திட..

- கேப்டன் டைகரின் தொடரிலுமே வறட்சி நிலவிட...

-டெக்ஸ் வில்லர் தெறிக்க விடும் பட்டாசுகள் தீபாவளி மலருக்கென ரொம்பவே பொருத்தமாயிருக்க...

எஞ்சியிருந்த லக்கி தான் என் விசாலமான கண்களுக்கு ஆபத்வாந்தவனாய்த் தென்பட்டார் ! சந்தேகமேயின்றி ஹிட்கள் தரவல்ல நாயகர் என்பதோடு ; யாரது விமர்சனங்களுக்குமே ஆளாகிடா மிஸ்டர் க்ளீன் என்ற சமாச்சாரமும் பளிச்சென்று உரைத்தது ! டெக்ஸுக்கு அண்டாக்கள் ; டைகருக்கு குண்டாக்கள் என்பதே நடைமுறையெனும் போது – லக்கி லூக் & ஜாலி ஜம்பரை நினைத்துப் பாருங்களேன் : 1987 முதல் இன்று வரையும் 33 ஆண்டுகளாய் எப்போதும் பச்சையாய், அது தான் evergeen ஆக  வலம் வருகிறார்கள் ! So ஆண்டுமலர்களை அலங்கரிக்க who better ? என்று என்னை நானே கேட்டுக் கொண்ட நாளில் பிறந்தது தான் 'ஆண்டுமலர்கள் with அன்பான லக்கி‘ என்ற template ! Thanks a ton Betty !!

ஒவ்வொரு ஆண்டிலும் அட்டவணையினுள் லக்கி லூக் கதைகளை நுழைக்கும் தீர்மானமெடுத்திடும் தருணமானது  எனக்கு ரொம்பவே ஜாலியானது ! இவற்றை இங்கிலீஷிலேயே படித்து ரசித்திட முடியுமென்பது செம ப்ளஸ் பாய்ண்ட் எனும் போது என்னிடம் எப்போதுமே ஒரு அரை டஜன் கதைகளாவது short list–ல் இருந்திடுவதுண்டு ! So ஒவ்வொரு வருஷமும், கதைத் தேர்வுக்கான நேரத்தினில் வீட்டில் கிடக்கும் அந்த Cinebook லக்கி ஆல்பங்களை வேக வேகமாய் மேய்வது வாடிக்கை ! மற்ற நாட்களில் வாசிப்பது சும்மாக்காச்சும் எனும் போது – ‘படித்தோம் – சிரித்தோம் – மறுக்கா உள்ளே அடுக்கினோம்‘ என்றிருக்கும் ! ஆனால் கதைத் தேர்வு எனும் கண்ணோட்டம் தொற்றிக் கொள்ளும் போது – ரொம்பவே நுண்ணிய சல்லடையை கையிலெடுத்துக் கொள்ள வேண்டிப் போகும் ! சில கதைகளைப் படிக்கும் போது ‘ஓ.கே. ரகம்‘ என்று மட்டுமே தோன்றும் ! ஆனால் தமிழ்ப்படுத்தும் angle–ல் பார்க்கும் போது வேறு மாதிரித் தெரியும் ! ‘இங்கே – இங்கெல்லாம் கொஞ்சம் நகாசு வேலை செய்தாக்கா இந்தக் கதை நம்மாட்களுக்கு பிடிக்காமல் போகாது!‘ என்று தோன்ற ஆரம்பிக்கும் ! சமீபத்தைய ‘மார்செல் டால்டன்‘ ; ‘உத்தம புத்திரன்‘; ‘திசைக்கொரு திருடன்‘ எல்லாமே எனது original short list-ல் இருந்திடாமல்; மறுவாசிப்பின் / மறுபரிசீலனையின் பலனாய் ‘டிக்‘ பெற்ற ஆல்பங்கள். Of course – என்னளவில் லக்கியின் ஒவ்வொரு படைப்பும் ஒரு masterpiece தான்! கட்டாயங்கள் கழுத்தில் குந்தியிருக்காத பட்சத்தில், 'இன்க்கி-பின்க்கி-பான்க்கி' போட்டுப் பார்த்து சிக்கிய சகலத்தையும் வெளியிட்டு விடுவேன் தான் ! ஆனால் அடகுக்கடை முதலாளியை விடவும் பக்குவமாய் ஒவ்வொரு ஆல்பத்தையும் உரசிப் பார்க்க நம்மிடையே ஏகப்பட்ட நண்பர்கள் இருப்பதனால் – ஒவ்வொரு கதைத் தேர்வின் போதும்,  ‘சூப்பர் சர்க்கஸ்‘களும்; ‘புரட்சித் தீக்களும்‘; 'அதிரடிப் பொடியன்'களும் என் கண்முன்னே வந்து போவதுண்டு ! So ஒவ்வொரு பக்கத்திலும் உங்களை சிரிக்கச் செய்யும் வாய்ப்புகளுடனான சாகஸங்களாய்த் தேட முனையும் மனசு ! 

இந்தாண்டில் இடம்பிடித்த 2 ஆல்பங்களுமே எனது ஒரிஜினல் shortlist–ல் இருந்தவைகளல்ல ! ஜுனியர் எடிட்டர் மொழிபெயர்த்திருந்த அந்தக் “கௌபாய் கலைஞன்” கதையைப் போடாமலேயே டபாய்த்து வந்தவன் – சென்றாண்டின் ‘பாரிஸில் ஒரு கௌபாய்‘ இதழினை வெளியிட்ட பிற்பாடு மனசு மாறியது பற்றி போன பதிவின் பின்னூட்டங்களில் பகிர்ந்திருந்தேன் ! So ஒரு நிஜ வாழ்வின் மனுஷனைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதைக்கு 'டிக்' அடித்த போதே, அதனுடன் களமிறங்கும் இரண்டாவது கதையுமே இது போன்ற real life பின்னணியுடன் இருந்தால் தேவலாமே என்று நினைத்தேன் ! அந்த மாதிரியான தேடலோடு துளாவிய சமயம் கண்ணில்பட்டது தான் “பொன் தேடிய பயணம்”! ஒன்றுக்கு இரண்டாய், நிஜ வன்மேற்கு மாந்தர்கள் & க்ளோன்டைக் என்ற நமக்குப் புதிதான (காமிக்ஸ்) பிராந்தியம் என்று பார்த்த போது சுவாரஸ்யமாகிப் போனேன் ! பற்றாக்குறைக்கு நமக்கு ஏற்கனவே பரிச்சயமான வால்டோவும், ஜேஸ்பரும் இதனில் தலைகாட்ட, டங்கென்று ‘டிக்‘கடித்தேன் ! Of course – கதைக்களம் திடமாய் இருந்திராவிட்டால் இதர காரணிகளால் கால் காசுக்குப்  பிரயோஜனமிருந்திராது தான் ! இங்கே கதாசிரியர் யான் லெடூர்ஜி ஒரு கதையை நிறுவி விட்டு, அதனைச் சுற்றியே நகைச்சுவையைத் தெளிக்க முனைந்திருந்ததால், நிச்சயமாய் சோடை போகாதென்று பட்டது ! And உங்களின் reactions அதனை ஊர்ஜிதம் செய்துள்ளதில் ஹேப்பி அண்ணாச்சி ! 

இம்மாதத்தின் ‘இளம் தல‘ ஒற்றை இதழானதன் பின்னணி by now நம் எல்லோருக்குமே தெரியும் தான் ! ஆனால் தெரியாத சின்னதொரு கொசுறு – இளவரசி தேஷாவின் பங்கேற்புடனான முழுவண்ண டெக்ஸ் ஆல்பம் நடப்பாண்டின் ஈரோட்டு surprise ஆக வெளிவந்திருக்க வேண்டிய சமாச்சாரம் ! எனது ஒரிஜினல் திட்டமிடலின்படி இளம் டெக்ஸ் – 4 தனித்தனி 64 பக்க இதழ்களாய் சந்தா: D-ல் வெளிவந்திருக்க வேண்டும் ! அது இல்லையென்று ஆன பிற்பாடு – ஒரே குண்டு புக்காய்த் திரட்டி, “எதிரிகள் ஓராயிரம்” இதழை ஆகஸ்டில் வெளியிடுவது தான் திட்டம் ! அதே ஆகஸ்டில் Surprise இதழாய் - டெக்ஸ் # 700 ஆக வெளியான (ஓவியர் சிவிடெலியின்) Pawnee’s Gold ஆல்பத்தையும் கலரில் போட்டுத் தாக்கவே எண்ணியிருந்தேன் ! ஆனால் இது போன்ற முக்கிய தருணங்களில் இரவுக் கழுகாரையே விடாப்பிடியாய் முன்நிறுத்தி வருவதில் இதர கதைரகப் பிரியர்களுக்கு நெருடல்கள் இருப்பதால் – "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" ... & "கென்யா" என்று திட்டங்கள் மாற்றம் கண்டன ! ஆனால் இறைவனின் screenplay முற்றிலுமாய் வேறு விதமாயிருக்க – நமது திட்டமிடல்கள் சகலமும் சேவாக்கிடம் சிக்கிய full toss ஆகிப் போய்விட்டன  So தேஷாவைக் கலரில் காண 2021 வரை காத்திருக்க வேண்டி வரும் !

அப்புறம் இம்மாதத்தின் இந்த ஒற்றை இளம் டெக்ஸ் தொகுப்பு ஓ.கே. தானா ? அல்லது ஒரிஜினலான போனெலி பாணியில் 64 பக்க மாதாந்திரத் தொடர்களாய் வரும் ஆண்டுகளில் முயற்சிக்கலாமா ? உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ ? இதோ – இந்த லின்க்கில் போய் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிடுங்களேன், ப்ளீஸ் : https://strawpoll.com/b1he7fa8x

இம்மாத இதழ் # 3 – more for nostalgia lovers than current readers ! 'லாரன்ஸ் டேவிட் கதைகள் – அந்த 128 பக்க, துவக்கநாள் முத்து காமிக்ஸ் பாணிகளோடு நிறைவுற்று விட்டன ; மொத்தமே அதனில் 13 ஆல்பங்கள் தான் & சகலத்தையும் முத்துவில் போட்டுத் தள்ளியிருந்தார்கள்' – என்பதே 1985 வரைக்குமே எனது புரிதலாக இருந்தது ! ஆனால் 1985-ல் வீட்டில் கிடந்த Fleetway வாராந்திர LION இதழ்களைத் துளாவிக் கொண்டிருந்த சமயத்தில் கண்ணில்பட்ட இந்தக் கிங் கோப்ரா – சாகஸம் 1 என்னை க்வாட்டர் அடித்த குப்பனாய் ஆனந்தத் தாண்டவமாடச் செய்தது ! மின்சாரத்தைக் கண்டுபிடித்த நொடியிலோ ; அமெரிக்க நிலப்பரப்பைக் கண்ணில் பார்த்த நொடியிலோ – அந்த அசாத்தியர்கள் போட்டிருக்கக்கூடிய குத்தாட்டத்தை விட “Codename Barracuda” என்ற பெயரைத் தாங்கி நின்ற 2 பக்கங்களைப் பார்த்த வேளையில் நான் அடித்த லூட்டிகள் ஜாஸ்தி ! “காணாமால் போன கடல்” 1985 ஜுனில் வெளிவந்த வேளையில் எனக்குக் கொஞ்சமும் சளைக்காத ஆட்டத்தை "அந்நாட்களது நீங்கள்" போட்டதுமே நினைவுள்ளது ! (அன்னிக்கே இதனைப் படித்தோர் யாருங்கண்ணா இங்கே ? And யாரிடம் அந்த இதழ் இன்னமும் உள்ளதோ ?) ஆனால் 35 ஆண்டுகள் கழிந்த பின்னே லா.டே. ஜோடியின் அத்தியாயம் 2 வெளியாகும் போது வரவேற்பு நிச்சயமாய் வேறு மாதிரி இருக்குமென்பதில் எனக்குச் சந்தேகங்களே இருக்கவில்லை ! இம்மாதத்து இதழ்கள் 1&2 ஹிட்டாவது எத்தனை உறுதியோ – அத்தனை உறுதியே இதழ் # 3-ன் பொருட்டு என் தாவாங்கட்டையில் பல பீச்சாங்கைகள் பதிக்கப்படுமென்பதும் ஸ்பஷ்டமாய் (ஹிஹி!!) தெரிந்திருந்தது ! ஆனால் நமது பால்யங்களை மட்டுமன்றி, ஓரிரு தலைமுறைகளின் இளவயது நாட்களையே கலர்புல்லாக்கிய இந்த சாகஸ ஜோடியை one ast time ஒரு சின்ன விலையிலான புக்கில் தரிசிப்பதில்,பெரிதாய்க் குடிகள் எங்கும் மூழ்கிடாதென்று நினைத்தேன் ! Oh yes – இன்னமுமே சிலபல புதுக்கதைகள் லா.டே சாகஸங்களைத் தாங்கி நிற்கின்றன தான் ! But இப்போதைக்கு ; அடுத்த சில ஆண்டுகளுக்காவது இவர்களுக்கு இடங்களை மனதில் மட்டுமே தந்திட நினைத்துள்ளேன் ! 

So இம்மாத முக்கூட்டணியின் background இதுவே ! இதைக் தெரிந்து கொண்டதால் ஆக்ஸ்போர்டில் அரங்கேறி வரும் கொரோனோதை் தடுப்பூசி ஆய்வுகளில் பங்கேற்கும் ஞானங்களோ, லடாக்கின் ஊடுருவலின் பின்னணி அரசியல்களை கிரகித்துக் கொண்ட திருப்தியோ சத்தியமாய்க் கிட்டப் போவதில்லை தான் ! ஆனால் உங்கள் வாரயிறுதியின் அரை மணி நேரத்தினை நமது தயாரிப்புகள் சார்ந்த trivia உடன் செலவிட்ட சன்னமான குஷி உங்களதாகலாம் !

And before I sign out – இன்னொரு விஷயமும் கூட ! சில தினங்களுக்கு முன்பாய் நமது காமிக்ஸ் குடும்பத்தின் ஒரு அழகான அங்கம் ஆண்டவனிடம் ஐக்கியமாகி விட்டிருந்த தகவலை நாமறிவோம் ! நண்பர் ஜேடர்பாளையம் சரவணக்குமாரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்துக்கு நமது பிரார்த்தனைகளை மட்டுமே இத்தருணத்தில் நம்மால் முன்வைக்க முடியும் ! “இழப்புகள் இறைவனின் சித்தமே” என்று தத்துவம் பேசுவது சுலபம் தான் ; ஆனால் அதனை upclose பார்த்திட நேரும் போது அதன் தாக்கம் விலக ரொம்பவே நேரமாகிடும் என்பது தெரியாதவர்களல்லவே நாம் ! எனக்கு நண்பர் JSK உடன் மிகப்பெரிய நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை தான் ; ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது அதிர்ந்து பேசத் தெரியாத JSK-ஐ அவரது சகோதரர் குணாவுடன் பார்த்துப் பேசியது நினைவில் உள்ளது ! ஆனால் மெய்யான காமிக்ஸ் நேசத்தில் கட்டுண்ட குடும்பத்தின் ஒரு உறுப்பினர் இன்றைக்கு நம்மோடு இல்லை என்ற நிஜம் கடந்த சில நாட்களாகவே நெருடி வருகிறது ! அதுவும் மாமூலாய் காலன் கூட்டிப் போகும் வயதுமல்ல எனும் போது – இறுதி நாட்களில் நோயோடு போராடிய அந்த நண்பரின் மனவலிகளை ; ரணங்களை ; சூன்யமாய்த் தெரிந்திருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த சிந்தனைகளை  கற்பனை செய்து பார்க்கவே தடுமாறுகிறது ! அவரை அறிந்த நட்புக்கள் அவருக்குச் செலுத்தி வரும் மரியாதைகளைப் பார்க்கும் போது இந்த இழப்பின் நிஜப் பரிமாணம் புரிகிறது! And பல நண்பர்களும், JSK-ன் "ஸ்பைடர் காதல்" பற்றி எழுதியிருந்ததைப் படித்த போது மனதைப் பிசைந்தது ! கடைசி நாட்களில் காமிக்ஸ்களை ரசிக்கக்கூடிய மனநிலையோ / உடல்நிலையோ JSK-க்கு இருந்திருக்குமா ? என்பது கேள்விக்குறி தான் ; ஆனால் பூமியில் அவருக்கு எஞ்சியிருந்த நாட்கள் சொற்பமே என்பதை யூகித்திருக்க வழியிருந்திருப்பின் ; அவரைத் துளியூண்டேனும், ஒற்றைக் கணத்துக்கேனும் மகிழ்வித்திருக்கும் என்று தெரிந்திருப்பின்,  நிச்சயமாய் ஸ்பைடரின் புது சாகசம் ஏதோவொன்றை வெளியிட்டிருப்பேன் ! Anyways – better late than never !!

JSK இங்கிருந்த போது பார்க்க முடியாது போனதை – அவர் விண்ணிலிருந்து பார்க்கும் போதாவது வெளியிடுவோமே என்று மனதில் பட்டதால் – குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் மறுவருகை செய்கிறார் – ஒரு புத்தம் புதிய சாகஸத்துடன்!

“சர்ப்பத்தின் சவால் !!”

Black & White-ல்; ஒரு vintage ஸ்பைடர் சாகஸத்துடன் ; பெரிய சைஸில் ரூ.90/- விலையில் ஒரு மினி collector’s இதழாய் – நண்பர் JSK-க்கொரு சன்னமான tribute ஆக வெளிவந்திடும் ! நமது விற்பனையாளர்களுள் ஆர்வப்படுவோர் மட்டுமே இதனை வாங்கிடுவர் ; மற்றபடிக்கு நமது ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அந்நேரம் நண்பர்கள் ஆர்டர் செய்து கொள்ள வேண்டி வரும் ! சந்தாக்களின் அங்கமாகிடாது இந்த திடீர் இதழ் !

JSK – இது உங்களுக்காக !
Bye all... See you around ! Have a great weekend ! 

Tuesday, July 21, 2020

ஒரு அலசலுக்கு வாரீகளா ?

நண்பர்களே,

வணக்கம்.  ஒரு இளம் தல + ஒரு கௌபாய் தல இடம்பிடிக்கும்  மூன்று புக் மாதத்தில், பாக்கியுள்ள ஒற்றை இடத்திலிருப்போர் யாராயினும் பாவமே ! And இம்முறை நெரிசலில் சிக்கியுள்ளோர் நமது சாகஸ ஜோடி லாரன்ஸ் & டேவிட் ! வாராந்திரத்  தொடராய் எழுபதுகளில் வெளியான கதை எனும் போது, அந்நாட்களது ஆல் இந்தியா ரேடியோவின் புராதனத்தோடு இந்த "மீண்டும் கிங் கோப்ரா" இதழ் பயணிப்பது தவிர்க்க இயலா நிகழ்வாகிடுகிறது ! பற்றாக்குறைக்கு அப்போதைய அவர்களின் target audience சிறார்களாகவே இருந்திருப்பர் என்பதால் லாஜிக்கை ஜன்னல் வழியே கடாசிவிட்டு ஜாலியாய் ரவுண்டு கட்டியடித்துள்ளார் கதாசிரியர் ! இதே நாயகர்களுக்கு ஒரு 120 பக்க ஆடுகளத்தையும், a complete album என்ற அந்தஸ்த்தையும் தந்த போது "மஞ்சள் பூ மர்மங்களும்" ; "பார்முலா X 13-களும்" மலர்ந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் ! Of course அப்போதுமே லாஜிக்குகளில் மிதமான துவாரங்கள் இருக்கவே செய்தன தான் ; ஆனால் அந்நாட்களில் அவற்றைக் கண்டுகொள்ளாது நம் வண்டிகள் ஓடிய வண்ணமிருந்தன ! இன்றைக்கோ எல்லாமே ஒளிவட்டத்துக்கு உட்படுவதால், விமர்சனங்கள் தவிர்க்க இயலா அங்கமாகிடுகின்றன ! Winds of changes....!

எனது கேள்வி இதுவே guys

யதார்த்தங்களை சொல்லிடும் கி.நா மாதிரியான படைப்புகள் நீங்கலான பாக்கி எல்லா நாயக / நாயகியரின் தொடர்களுமே, லாஜிக் எனும் நூல்கோட்டைப் பெரிதாய் மதிப்பன அல்ல தான் ! And to top it, பெரிதாய் லாஜிக் மீறல் இல்லாத யதார்த்த "கமான்சே' ; ஜூலியா தொடர்கள் நம் மத்தியில் பெரிதாய்ப் பேசப்படவில்லை ! So நாம் லாஜிக் மீறல்களைக் கண்டயிடமெலாம் பொங்கிடும் பஞ்சாபகேசன்கள் அல்ல என்பதில் no secrets ! ஆனால் நம் பால்யங்களின் பரிச்சயங்கள் (ஸ்பைடர் ; ஆர்ச்சி ; லாரன்ஸ் & டேவிட் et al) என்று வரும் போது மட்டும் பொங்கப்பானைகளையும், பாயச அண்டாக்களையும் உருட்டுவது தவிர்க்க இயலா நிகழ்வாகிப் போவது ஏனோ ? Why do we see a selective discrimination ? ஒருக்கால் மாறிவிட்டிருக்கும் ரசனைகளின் அளவுகோல்களை, நமது இளமைகளின் நாயகர்களுக்கு மட்டும் தீவிரமாய்ப் பொருத்திப் பார்த்து நம்மை நாமே பரிகசித்துக் கொள்கிறோமோ ?  So இதற்கான விடை தேடும் முயற்சியின் ஒரு படியாக "மீண்டும் கிங் கோப்ரா"வை எடுக்கிறோம்....இந்த உ.ப.விலே அலசுறோம் ! ரெடியா ? (அந்தக் கதவைப் பூட்டியாச்சு தானே ?)
அப்புறம் : "இ.ப" முன்பதிவு நிலவரம் இதோ :

பாலமுருகன், திருச்சி - 1 புக்  - # 84 
இக்னேஷியஸ் லோரன், கோர்பா  - 1  புக் - # 85 
குமார், காஞ்சிபுரம் - 1  புக் - # 86 
திருச்செல்வம் பிரபாநாத், பிரான்ஸ் - 1 புக் - # 87 

மெது மெதுவாய் ஓடிவரும் வண்டி "100" எனும்  ஒரு முக்கிய மைல்கல்லைப் பார்த்திடும் நேரம் not too far என்பது புரிகிறது ! மூன்றில் ஒரு பங்கு தொலைவு !!   

Bye all...see you around !

P.S : கடந்த 2 மாதங்களின் ஒப்பீட்டில் இம்மாதத்து ஆன்லைன் sales செம ஆறுதல் அளிக்கும் ரகம் ! And மூன்று புக்குகளையுமே அநேகமாய் அனைவரும் வாங்கியிருப்பது ரொம்பவே மகிழ்வூட்டுகிறது ! Thanks a ton guys !!

அப்புறம் ரூ.500-க்கு மேலான ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.50 விலையிலான இதழ்கள் (Smurfs ; கமான்சே etc) நம் அன்புடன் இணைப்பாய் அனுப்பிடும் நடைமுறையும் கடந்த ஒரு மாதமாய்த் தொடர்கிறது ! 

Sunday, July 19, 2020

2030 !

நண்பர்களே, 

வணக்கம். புது இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விட்டாச்சு & அவை பெற்று வரும் முதல்நிலை விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவ் ரகம் எனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் சாய்ந்து அமர சபலம் தலைதூக்குகிறது தான் ! ஆனால் போன ஆண்டின் இந்நேரத்துக்கு, புது அட்டவணை மாத்திரமன்றி, கதைகளுக்கான ஏற்பாடுகளின் பெரும் பகுதியும் நிறைவுற்றிருந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது - வயிற்றுக்குள் பயப்பட்டாம்பூச்சிகள் பட படக்கின்றன ! லாக்டௌன் அறிமுகம் செய்து வைத்துள்ள இந்தச் சோம்பலை ஒரு தொடர்கதையாகிட அனுமதிப்பின் அது கொரோனாவுக்குப் போட்டியான வைரசாகிடுமென்ற எண்ணம் தலைதூக்குவதால், its back to work right away !  ஆகஸ்டின் ஜேம்ஸ் பாண்டிற்கு பேனா பிடிக்கும் பணி கொஞ்ச நேரம் ; 2021 ஏப்ரல் to டிசம்பர் அட்டவணைக்கான இறுதி வடிவங்களுக்கென நிறைய நேரம் என நாட்கள் கரைந்து வருகின்றன ! அதன் மத்தியில் வழக்கமான ஞாயிறுப் பதிவுக்கென லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு அமரும் போது தான் 36 என்ற நம்பர் மனதினில் நிழலாடுவதை உணர முடிகிறது ! Oh yes, சிங்கத்துடனான இந்தப் பயணத்தினை நாம் துவக்கி 36 ஆண்டுகள் ஓட்டமெடுத்து விட்டுள்ளன என்பதை நினைத்துப் பார்க்கும் போது ஏதேதோ சிந்தைகள் கலவையாய் தலைக்குள் ஓட்டமெடுக்கின்றன ! ஏகப்பட்ட ஆயுட்களுக்குப் போதுமான flashbacks-களை அவ்வப்போது போட்டுத் தாக்கியுள்ளேன் எனும் போது, மறுக்கா இன்னொரு வாடகை சைக்கிளை மிதிக்கப் போவதில்லை நான் ! On the contrary, ஆண்டவன் அருளும், ஆயுட்தேவனின் கருணையும் நம்மனைவருக்கும் பரிபூரணமாய் இருக்குமென்ற நம்பிக்கையில் இந்தப் பயணத்தினில் இன்னொரு 10 ஆண்டுகள் முன்னோக்கின் - நிலவரம் எவ்விதமிருக்குமென்று ஜாலியாக யூகிக்க முயற்சிப்பதே இந்தப் பதிவு ! 

2030 !!

சிலபல பேருக்கு சிரத்தின் சிகரத்தில் போற்றிப் பாதுகாத்து வரும் சமாச்சாரங்கள் சுத்தமாய்க் காணாது போயிருக்கும் ! தம் கட்டி பெல்ட்டுக்குள் திணிக்கும் நடுப்பகுதிகளின் விஸ்தீரணம் சிலபல சுற்றுக்கள் கூடியிருக்கும் ! 'அங்கிள் கிட்டே உட்காரும்மா...' என்று கேட்டு வந்த குரல்கள்...'தாத்தா கிட்டே உட்காருமா !' என்று மாறியிருக்கும் ! ஜூனியர் குப்பண்ணாக்களிலும், அஞ்சப்பர்களிலும் அஞ்சாத சிங்கங்களாய் லெக் பீஸ்களைக் கவ்வியோர், ரவுண்ட் பன்களை தோய்த்து விழுங்கவே ஒரு சாயாவையோ, காப்பியையோ தேடிட அவசியமாகிடலாம் !  

ஆனால்

ஒரு மஞ்சள்சட்டைக்காரர் தனது 82-வது வயதிலும் வன்மேற்கில் செய்து வரும் அதகளங்களை திறந்த வாய் மூடாது ரசித்துக் கொண்டிருப்போம் ! பயண வேகங்கள் மாறியிருப்பினும், வாசிப்பின் ரசனைகளில் மாற்றங்கள் குடிவந்திருப்பினும் - டெக்ஸ் வில்லர் எனும்  (காமிக்ஸ்) யுகபுருஷரை பச்சைக் குழந்தைகளாய் ரசிக்கும் நம் பாணியில் சத்தியமாய் மாற்றம் இருந்திராது ! 'இளம் டெக்ஸ்' என்ற தடத்தில் இப்போதே மாதந்தோறும் காட்டு காட்டென்று காட்டி வரும்  'சின்னவர்' அன்றைக்கு ஒரு நூற்றுச் சொச்சம் சாகசங்களோடு இன்னமும் செமத்தியாய் மிரட்டிக் கொண்டிருப்பார் ! எடிட்டர் மௌரோ போசெல்லி அவர்கள் இளம் டெக்ஸுக்கென உருவகப்படுத்தியிருக்கும் கதை பாணி செம solid என்பதால், வரும் பொழுதுகளில் / ஆண்டுகளில் I can only visualise  Young Tex growing from strength to strength ! ஆண்டுக்குப் 12 இளம் டெக்ஸ் ஆல்பங்களை, இத்தாலியில் வெளியாகும் அதே பாணியில் நாமும் அந்நேரத்துக்கெல்லாம் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்போம் எனும் போது - சில சம்முவங்கள் அவசரம் அவசரமாய்க் காசியப்பன் பாத்திரக் கடைகளைத் தேடி ஓட வேண்டி வரும் - 2 தனித்தனிப் பாயசச் சட்டிகள் வாங்கிடும் பொருட்டு ! And 10 years from now - நாம் 250 + டெக்ஸ் ஆல்பங்களை வெளியிட்டிருப்பினும், போனெல்லி ஆயிரத்துச் சொச்சத்தில் பயணிப்பதைக் கண்டு பெருமூச்சே விட்டுக் கொண்டிருப்போம் ! அப்போதுமே மாவீரனாரும், யுவக்கண்ணர்களும் - "மெபிஷ்டாய மெபிஷ்டாய !!' என்று கோஷமிட்டுக் கொண்டேயிருப்பர் & STV - "1997-லே நாலாவது மாசத்திலே, மூணாவது வாரத்திலே வந்த டெக்சின் 16 -வது பக்கத்திலே என்ன நடந்துச்சு தெரிமா--தெரிமா ?" என்று ரமணா பாணியில் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்பார் ! காலங்கள் மாறிடலாம் ; காட்சிகள் மாறிடலாம் ; கூன் விழுந்திடலாம் ; நரை பிடித்திடலாம் ; முகமூடிகள் வியாபித்து நிற்கும் இன்றைய வதனங்களில் சுருக்கங்களும், கண்ணாடிகளும் ஆக்ரமித்து நிற்கலாம் - ஆனால் ஆட்டுத்தாடி ஆத்ம நண்பனை நம்மவர் வாரும் போதெல்லாம் முகத்தில் விரிந்திடும் புன்னகைகளிலும், ஆக்ரோஷ எதிரியை இரவுக்கழுகார் பந்தாடும் போது நம் இரத்தங்கள் சூடேறுவதிலும், நிச்சயமாய் மாற்றங்கள் இராதென்பேன் ! பத்தாண்டுகளுக்குப் பின்னேயும், நமது அட்டவணையினைப் போடும் இடத்தில / திடத்தில் நானிருப்பின் - பிள்ளையார் சுழிக்குப் பின்பாய் நான் எழுதும் முதல் பெயர் "TEX WILLER" என்றே இருந்திடும் !  
இத்தாலியின் ஆதர்ஷ நாயகன் ஒரு அசாத்திய விதிவிலக்காய் தக தகக்க - நமது வாசிப்பு பாணிகளில் சிறுகச் சிறுக ஒரு பெரும் மாற்றம் குடி கொண்டிருந்திருக்கும் ! இன்றைக்கோ ஆக்ஷன் நாயகர்கள் / அவர்களின் தொடர்கள் என்றே நம் வாசிப்புகள் பிரதானமாய்ப் பயணித்து வருகின்றன ! ஆனால் 2030 -ல் நிலவரத்தில் மாற்றம் நிச்சயம் இருந்திடும் என்பேன் - simply becos அன்றைக்கு இந்த ஆக்ஷன் ஆதர்ஷ நாயகர்களின் தொடர்களில் புதுக் கதைகள் ஏதும் எஞ்சியிராது ! அட, பத்தாண்டுகளுக்குப் பிந்தைய பொழுது வரைப் போவானேன் ? ;  அடுத்த சில ஆண்டுகளிலேயே - No லார்கோ ; No ஷெல்டன் ; No தோர்கல் ; No டிரெண்ட் ; No SODA ; No ட்யுராங்கோ ; No கேப்டன் டைகர் என்பதே நிலவரம் எனும் போது -120 months from now - நிச்சயமாய் நம் வாசிப்பினில் ஒரு தவிர்க்க இயலா மாற்றம் நிகழ்ந்திருக்கும் ! Maybe ஜெரெமியா தொடரினை அன்றைக்கு நாம் அரவணைத்திருக்கலாம் ; அல்லது வருஷங்களாக கோரிக்கை வைத்து வரும்  டாக்டர் AKK ராஜாவின் ஆதர்ஷ Valerian எதிர்காலத் தொடரை நாமும் பரிசீலித்து அந்த spaceway-ல் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கலாம் ! Incals ; Metabaron ; போன்ற எதிர்கால மெகா தொடர்கள் நம்மிடையே மெகா ஹிட்களாய் உலா வரலாம் ! ஆனால் இந்த "லாம்..லாம்" என்ற ஹேஷ்யங்களின்றி ஒற்றை விஷயத்தை என்னால் அடித்துச் சொல்ல முடியும் ! அது -   'கதையே நாயகன்' ; 'கட்டுப்பாடுகளிலா கதைத் தேடல்" என்ற template சகிதம் பயணித்து வரும் ஜம்போ காமிக்ஸ் அன்றைக்கொரு இன்றியமையா ஆட்டக்காரராகி இருக்கும் என்பதே !! நடப்பாண்டினில் (சீசன் # 3) ஜேம்ஸ் பேண்ட் ; தி Lone ரேஞ்சர் போன்ற கமர்ஷியல்ஸ் நீங்கலாய் நீங்கள் இன்னமும் வாசிக்கவுள்ள சில கதைகள் எனது "கதையே நாயகன்" கோஷத்துக்கு வலு சேர்த்திடக்கூடும் ! So 2030-ல் அட்டவணையில்  நாயக ஆதிக்கம் குறைந்திருக்கும் ; ஏகப்பட்ட one-shots இருந்திடும் ; and ரகம் ரகமான ஜானர்களிலான கதைகளை திகட்டல்களின்றி தலீவர் முதல் தொண்டர் வரையிலும் ரசிப்பதை பார்த்திடுவோம் ! 
காலத்தின் கட்டாயமாய் ரசனைகளில் நிகழக்கூடிய மாற்றங்கள் நாம் தேர்வு செய்திடும் கதைகளிலும் பிரதிபலிக்காது போகாது ! Manga என்றால் இன்றைக்கு ஊறுகாய் போடும் காய் மட்டுமே நமக்கு நினைவுக்கு வந்தாலும், maybe 10 years down the line - ஜப்பானின் இந்தப் பிரியமான படைப்புகளைப் பரிசீலிப்பதிலும் நாம் முனைப்பு காட்டுவோமோ - என்னவோ ! Manga இன்றைக்கு கால்பதித்திரா காமிக்ஸ் தேசமே கிடையாது என்ற நிலையில், காத்திருக்கும் காலங்களில் அவற்றின் முக்கியத்துவங்களை ignore செய்வது நமது நஷ்டமாகவே அமைத்திடலாம் ! பிரான்சில் ஏகப்பட்ட ஆசிய ஓவியர்களை குடியமர்த்தி, அவர்களைக் கொண்டு Manga உருவாக்குவதெல்லாமே இன்றைக்கே சர்வ சாதாரணமான நிகழ்வுகளெனும் போது - பிரான்க்கோ-பெல்ஜிய மங்கா உரிமைகளை பெற்று வெளியிடுவதென்பது 2030-ல் ஒரு நடைமுறையாகி இருக்கக்கூடும் ! So "குண்டூ" புக் இல்லையே என்ற ஏக்கக்குரல்களே அன்றைக்கு கேட்டிடாது - ஆளாளுக்கு ஆயிரம், இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட புக்குகளை எந்த பீரோவுக்குள் போட்டு வைப்பது ? என்ற குழப்பத்தில் தவித்திடும் போது ! 
புக்குகளோ  டிஜிட்டல் பரிணாம வளர்ச்சிகளின் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கும் -  நகலெடுக்க இயலா கோப்புகளோடு ! And இன்றைக்கே நடைமுறை கண்டுவிட்ட Augumented Reality மேலும் பல படிகள் முன்னேறியிருக்க - அந்த டமால், டுமீல், பணால் ; இச் ; பச்சக் effects எல்லாமே பக்கங்களை புரட்டும் போதே நோகாது நம் கண்முன்னே விரிந்திடும் ! அன்றைய பொழுதினில் சிலபல டாக்டர்களும், தொழிலதிபர்களும் மட்டுமே அன்றி, மாடஸ்டி ; AXA ; Lady S போன்றோரின் ஜாகஜங்களுக்கு கோஷமிட நம்மிடையே ஒரு போட்டியே நடந்திடக்கூடும் ! அட்டைப்படங்களிலோ 3D எபெக்ட் என்பதெல்லாம் குழந்தைப்புள்ளை விஷயமாகியிருக்கும் எனும் போது ஒரு ஹாலிவுட் திரைப்பட அனுபவத்தின் சிறு பகுதியினை நம்ம பொம்மை புக்குகளே தரும் ஆற்றல் பெற்றிருக்கும் ! And 'டவுன்ஹால் முனையிலிருந்து பாத்துப்புட்டேன் மக்கா ; காந்திபுரத்திலேர்ந்தும் பார்த்துப்புட்டேன்லே ; ஆயுசிலே டாப்பான ராப்பர் இதுவே தான் !' என்று ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் இரும்புக்குயில்கள் கூவும் நடைமுறைகளும் தொடர்ந்திடும் !

கட்சி மாநாட்டுக் கூட்டம் அளவிற்கு என்றில்லாவிடினும், ஒரு தெருமுனைப் பிரச்சாரக்கூட்டம் அளவிற்காவது இள ரத்தம் அன்றைய நமது வாசக வட்டத்தினுள் குடியேறியிருக்கும் ! So 'ஞிய்ய..முய்ய..புய்யா..' என்ற லெமூரிய பாஷையின் பாணியிலான மொழிபெயர்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாய் ஏறக்கட்டி விட்டு - சுலபமான ; பேச்சு வழக்கிலான, சுலபப் புரிதலுக்கான எழுத்துக்களை உட்புகுத்தியிருப்போம் ! Of course - அன்றைக்குமே "நீயா புரிஞ்சு உருப்படியா எழுத வாய்ப்பே இல்லே ராஜா !!' என்ற MB பகடிகளுக்குப் பஞ்சமேயிராது தான் !  அதென்ன MB என்கிறீர்களா ? மாற்றங்கள் சகலத்திலும் இருந்திடும் எனும் போது, இன்னும் ஒரு லெவல் முன்னேறி, Facebook - Mindbook ஆகியிருக்கக்கூடும் அல்லவா - மனதில் நினைப்பதே பதிவுகளாய் அலையடிக்கும் விதமாய் !  என்ன ஒரே சிக்கல் - சும்மானாச்சும் லைக்ஸ் போடவும் அதனில் வழியிராது ; "மெய்யாலுமே நல்லாத்தான் பண்ணியிருக்கானுங்கோ" என்று உள்ளுக்குள் grudging ஆகத் தோன்றினாலுமே  - "புச்ச்' என்று விமர்சனத்தின் அடையாளமாய் உதடுகளைப் பிதுக்குவதும் சாத்தியப்படாது ! 

Oh yes, பயண வேகங்கள் பன்மடங்கு கூடியிருக்கும் எனும் போது 100 கி.மீ. தொலைவிலிருக்கும் ஊர்களுக்கு கூட மூணு நாள்  கழித்துப் பட்டுவாடா செய்திடும் கூரியர்கள் வழக்கொழிந்தே போயிருக்கும் ! Amazon Fulfilled போலொரு மையமான கேந்திரத்துக்கு புக் அனுப்பிட, அன்றைக்கே பெற்றுக்கொள்ளும் drone சர்வீஸ் அமலுக்கு வந்திருக்கும் ! So ஆத்தாவுக்குக் கூழ் ஊத்தும் அல்வாக்களுமே காணாது போயிருக்க, மொட்டை மாடியிலே நின்றபடிக்கே சொட்டைத் தலைகளில் டப்பிக்கள் மொத்தென்று land ஆகின்றனவா ? என்பதில் போட்டியே அரங்கேறும் ! Of course, பக்கத்து வீட்டு மொட்டை மாடிகளில் சாட்டலைட் போன்களில் கதைக்க ஆஜராகியிருக்கக்கூடிய சில பல யுவதிகள் நம் "இயைஞர்களுக்கு" ஒரு கூடுதல் motivation ஆக இருக்கக்கூடும் தான் ! 
பத்தாண்டுகளுக்குப் பின்னே அவரவரது பெயர்களைக் கேட்டாலே - "ஆங்...' என்று மண்டையைச் சொறியும் நிலையிலும் - ஞாபக மறதிக்கார XIII-ன் பதிமூணாவது மறுபதிப்பு வெளியாகாவிட்டால் அன்னம், தண்ணீர் உள்ளாற இறங்காதென்ற கொடியோடு ஆங்காங்கே ஆர்வலர்கள் கூட்டம், கூட்டமாய்க் கிளம்பிடும் கேளிக்கைகளுக்கும் பஞ்சமிராது ! "இரத்தப் படலம் - The Collector's Thirteen" என்ற பெயரில் முன்பதிவுகள் நிச்சயம் தட தடத்திடும்  - 13 பிரதிகளே கொண்டதொரு மறுபதிப்புத் திட்டமிடலோடு ! அன்றைக்கெல்லாம் print on demand என்பது சுலப சாத்தியமாகியிருக்க, நாலு ஆமைவடையும், ஒரு டீயும் உள்ளே தள்ளி விட்டு வரும் நேரத்துக்குள், ஆபீசில் புக்கை பிரிண்ட் போட்டு கையில் ஒப்படைத்திருக்கும் வசதிகள் பிறந்திருக்கும் ! 

அன்றைய புத்தக விழா சந்திப்புகள்  ரொம்பவே சூதானமாய்த் திட்டமிடப்பட்ட வேண்டிவரும் ! ஊரிலிருந்து கிளம்பும் நொடிகளிலேயே தலைக்குச் சாயமும், தொப்பைக்கு டி-ஷர்ட்டும், வதனங்களில் யூத் கெட்டப்பும் தொற்றிக் கொண்டாலும், இல்லத்தரசிகள் செலபோன்களில் இணைத்து அனுப்பிடும் டிராக்கர்கள் ஈரோட்டில் கால்பதித்த மறு நொடியே செயல்படத் துவங்கிவிடும் எனும் போது -  "அங்கே என்ன ஆட்டம் வேண்டிக்கிடக்கு ?" என்ற எச்சரிக்கை ஒலிகள் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கக்கூடும் ! மூணாவது பரோட்டாவை சால்னாவில் குளிப்பாட்டும் போதே - "யோவ்வ்வ்வ்வ்வ் ; கண்ட்ரோல்லல் " என்ற எதிரொலிகளுக்கு வாய்ப்புகள் பிரகாசம் ! ஜூனியர் குப்பண்ணா மெனுவில் பால் சாதத்தை தேட நேரிடலாம் அந்த bifocals-களை மாட்டிக் கொண்டே ! 
எது எப்படியிருப்பினும் வாரயிறுதிகளில் இங்கே அடிக்கும் கும்மிகள் குறையா உற்சாகங்களோடே தொடர்ந்திடும் ! இன்னொரு 120 மாதங்களது பரிச்சயமானது, நட்பின் சங்கிலிகளை சங்கர் சிமெண்டால் மேலும் பிணைத்திருக்க - அன்றைக்கு எல்லாமே  high tech digital blog ஆகியிருக்கும் நிலையினில் - அத்தினி பேருமே வீடியோ conference-ல் இங்கே லைவாகப் பார்த்துக் கொண்டே, பதிவிட்டபடிக்கே லூட்டியடிக்க இயலும் ! என்ன ஒரே கஷ்டம் - வாரா வாரம் மேக்கப்களுக்கு ஆகிடும் செலவுகள் புக் வாங்கும் காசுக்கு இணையானதாக இருந்திடக்கூடும் ! அது மட்டுமன்றி, தலீவர் பாட்டுக்கு பதுங்கு குழிக்குள்ளாற இருந்தபடிக்கே பட்டாப்பட்டியோடு ஆஜராவதெல்லாம் அப்போது வேலைக்கு ஆகாது ! ஆனால் ஒற்றை விஷயத்துக்கு நாமெல்லாம் அன்றைக்கு தயாராகிக் கொண்டே தீர வேண்டும் ; அது புயலை விட வீரியமானதாய் இருந்திடும் ; சுனாமியை விட ஆரவாரமாய் இருந்திடும் ; எதிர்ப்படும் சகலரையும் சுருட்டி வாரிக் கொண்டு போயிட்டே இருக்கும் ; அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றல் அன்றைக்கொரு கட்டாயமாகியிருக்கும் ! அப்படிப்பட்டதொரு திகிலூட்டும் சமாச்சாரம் என்னவென்கிறீர்களா ? லைவாக ; வீடியோவில் நம்ம ஸ்டீலின்  கவிதைகளைக் கேட்டு ; உணர்ந்து ; ரசித்து ; பாராட்டிச் ; சீராட்டும் அனுபவங்களை கொஞ்சமாய் யோசித்துப் பாருங்களேன் - எனது முந்தைய வரியின் பொருள் புரியும் !! 

அந்த சிந்தனையில் நீங்கள் லயித்திருக்கும் தருணத்தில் நான் விடை பெறுகிறேன் guys - காலையில் 2021-ன் அட்டவணையின் final touches பணிகளுக்குள் புகுந்திட ! நீங்கள் புது இதழ்களின் அலசல்களைத் தொடர்ந்திட்டால் இந்த ஞாயிறு ஓட்டமெடுக்கும் சுவாரஸ்யமாய் ! Bye all...see you around !!

P.S : நமது lioncomics.in தளத்தில் கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு வசதிகள் இப்போது வழக்கம் போல் உள்ளன ! So அங்கே ஆர்டர் செய்து பழகியுள்ள நண்பர்கள் எப்போதும் போலவே ஆர்டர் செய்திடலாம் ! http://lioncomics.in/latest-releases/745-july-2020-pack.html

Thursday, July 16, 2020

ஜெய் ST !! ஜெய் ஜெய் DTDC !!

நண்பர்களே,

வணக்கம். பொட்டிகள் புறப்பட்டாச்சு ! கூரியர்களைக் காத்தருளும் தேவதை யாராகயிருப்பினும், அவரை வேண்டிக்கொள்வோம் - நாளையே பட்டுவாடாக்கள் நிகழ்ந்திட வேண்டுமென்று ! Of course - முழு லாக் டவுணில் உள்ள பெங்களூருக்கும், containment zone களில் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும் கூடுதலாய் நேரமெடுக்கும் தான் ! எது எப்படியோ - இங்கிருந்து டப்பிகளை ST & DTDC அனுப்பி விட்டார்கள் என்பதை உறுதி செய்துவிட்டோம் ! இனி மறுமுனையில் உள்ள புண்ணிய ஆத்மாக்களின் கையிலேயே சொற்பமான நம் சிண்டு ! 

And தற்செயலான நிகழ்வென்றெல்லாம் சொல்ல முடியாது  - நமது 2 டாப் ஸ்டார்கள் ஒரே மாதத்தில் இடம் பிடித்திருப்பதை ! கூடிய மட்டும் விற்பனையில் கில்லிகளையே களத்திலிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் நம் முன்னே இருப்பதால் லக்கியின் சன்னமான தோள்களில் தனது திடமான கரத்தை இளம் டெக்ஸ் போடும்படிப் பார்த்துக் கொண்டேன் ! சைக்கிள் கேப்பில் நமது Fleetway பார்டிகளும் பார்ட்டியில் கலந்து கொள்கின்றனர் ! So இம்மாதத்து இதழ்களைக் கடைகளிலோ, ஆன்லைனிலோ வாங்கிடும் நண்பர்கள் 'இது வேணும்-அது வேணாம்' என்று ஒதுக்கிடாது - மூன்றையுமே வாங்கிட இயன்றால் சூப்பர் என்பேன் !  

அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்குகளும் போட்டாயிற்று என்பதால் சந்தாக்களில் அல்லாத நண்பர்கள் ஆர்டர்களைத் தட்டி விடலாம் !

Happy Shopping & Happy Reading !!  Bye for now folks !! See you around !!

அப்புறம் இன்றைக்கு "இ.ப' 2 புக்கிங்குகள் என்பதால் எண்ணிக்கை 83 என்று நிற்கிறது ! Here's the updated list :

NO
NAME
PLACE
1
Mr.K.V.GANESH
CHENNAI
2
Mr.K.PARTHIBAN
TRICHY
3
Mr.V.HARIHARAN
COIMBATORE
4
Mr.S.SENTHIL KUMAR
TIRUPUR
5
Mr.KRISHNA MOORTHY
DHARAPURAM
6
Mr.ARUN KUMAR
NAMAKKAL
7
Mr.ARUN KUMAR
NAMAKKAL
8
Mr.M.BABU MOHAMED ALI
SALEM
9
Mr.T.SOUNDRA PANDIAN
RAJAPALAYAM
10
Mr.T.SOUNDRA PANDIAN
RAJAPALAYAM
11
Mr.R.ANBALAGAN
GOBICHETTIPALAYAM
12
Mr.R.ANBALAGAN
GOBICHETTIPALAYAM
13
Mr.R.GANESH
MADURAI
14
Mr.AUGUSTIN SAINTLYDOSS
HOSUR
15
Mr.A.D.BASKARAN
CHENNAI
16
Mr.SARAVANAN SUNDARAVEL
NOIDA
17
Mr.SARAVANAN VADIVEL
NAGAPATTINAM
18
Mr.MOHAMMED ARAFARTH
MAYILADUTHURAI
19
Mr.SURESH NATARAJAN
AUSTRALIA
20
Mr.SURESH NATARAJAN
AUSTRALIA
21
Mr.SURESH NATARAJAN
AUSTRALIA
22
Mr.SRINIVASARAGHAVAN RAMAN
CHENNAI
23
Mr.PRABHUDASS PALANI
CUDDALORE
24
Mr.MAHENDRAN PARAMASIVAM
COIMBATORE
25
Mr.A.SATHISH KUMAR
VELLORE
26
Mr.PRASANNA SRIDHAR
COIMBATORE
27
Mr.S.S.KARTHIK
BANGALORE
28
Mr.A.PALANIVEL
TRICHY
29
Mr.A.PALANIVEL
TRICHY
30
Mr.RAJ KUMAR SIVANANDI
MADURAI
31
Mr.SATHAYA BALAJI
BANGALORE
32
Mr.MA.SENTHIL
COIMBATORE
33
Mr.MA.SENTHIL
COIMBATORE
34
Mr.SANKAR CHELLAPPAN
CHENNAI
35
Mr.V.RAJEEV
COIMBATORE
36
Mr.SELVAM ANNAMALAI
ERODE
37
Mr.S.ANANTHA SANKAR
TIRUNELVELI
38
Mr.R.SARAVANAN
ERODE
39
Dr.PRASANNA
SRILANKA
40
Dr.PRASANNA
SRILANKA
41
Dr.PRASANNA
SRILANKA
42
Mr.A.PALANIVEL
TRICHY
43
Mr.M.RAMKUMAR
UNKNOWN
44
Mr.V.V.KRISHNA
CHENNAI
45
Mr.N.SHANMUGAM
TIRUCHENGODE
46
Mr.MOHAMED RAFIQ RAJA
BANGALORE
47
Mr.MANI.MB
CHENNAI
48
Mr.MANI.MB
CHENNAI
49
Mr.MANI.MB
CHENNAI
50
Mr.MANI.MB
CHENNAI
51
Mr.MANI.MB
CHENNAI
52
Mr.SUBRAMANIAN
CHIDAMBARAM
53
Dr.A.K.K.RAJA
KARUR
54
Dr.A.K.K.RAJA
KARUR
55
Dr.A.K.K.RAJA
KARUR
56
Mr.K.V.GANESH
CHENNAI
57
Mr.YOGI SIVAKUMARAN
SRILANKA
58
Mr.SELVAM ANNAMALAI
ERODE
59
Mr.SELVAM ANNAMALAI
ERODE
60
Mr.S.BALA SUBRAMANIYAN
BANGALORE
61
Mr.VIJAY
ERODE
62
Mr.V.R.SRINIVASA RAGHAVAN
CHENNAI
63
Mr.V.R.SRINIVASA RAGHAVAN
CHENNAI
64
Mr.SUNDARALINGAM MATHINATH
SRILANKA
65
Mr.R.S.SHARMA
SRILANKA
66
Mr.VIMALAKANDHAN THANUSHAN
SRILANKA
67
Mr.VIMALAKANDHAN THANUSHAN
SRILANKA
68
Mr.A.S.SOUNDERA RAJ
BANGALORE
69
Mr.MUTHUKUMARAN
TIRUPUR
70
Mr.RAM KUMAR GOPALA KRISHNAN
CHENNAI
71
Mr.JEBARATHINAM ALEXANDER
CHENNAI
72
Mr.D.V.KANNAN
CHENNAI
73
Mr.M.ANANDAPPAN
KARAIKAL
74
Mr.SANKAR CHELLAPPAN
CHENNAI
75
Mr.L.BOOPATHI
CHANDRAPUR
76
Mr.R.GANESH
MADURAI
77
Mr.KUMARESAN PALANIVEL
VIRUDHACHALAM
78
Mr.A.JEGAAN DHARMENRA
SRILANKA
79
Mr.YOGANATHAN
KODUMUDI
80
Mr.M.KARTHIKEYAN
PALAKKAD 

81          Mr.KUMAR                                                   SALEM

82 & 83 DR.RAJESH (2 bookings)                         BANGALORE


Saturday, July 11, 2020

ஒரு 60 நாளின் ஆராய்ச்சி !!

நண்பர்களே,

Disclaimer : ஏற்கனவே சிலபல முந்தைய பின்னூட்டங்களில் படித்த அதே சமாச்சாரத்தின் மறுஒலிபரப்பாய்  இப்பதிவு ஆங்காங்கே தென்படக்கூடும் தான் ! Over a regular period of time - நம் ரசனைகளை review செய்திடுவது நடைமுறை எனும் பொழுது, கிட்டிடும் விடைகள் ஒன்றாகவே இருப்பின், அவை சார்ந்த அலசல்களிலும் பெரிதாய் மாற்றங்கள்  இராது என்ற முன்கூட்டிய புரிதலுக்கு கம்பெனியின் முன்கூட்டிய நன்றிகள் !  

வணக்கம். எவ்போவேணும் இது போன்ற ‘பு.வெ.கொ.மு.‘ தருணங்களில் மாட்டும் போது தான், என்ன எழுதுவதென்ற குழப்பம் தலைதூக்கும்! ஓரிரு நாட்கள் முந்தியிருக்க முடிந்தால் – ‘பு.வெ.கொ.பி.‘ என்பதைக் காரணம் காட்டி, உங்கள் அலசல்களுக்காக வெயிட்டிங் என்று கம்பி நீட்டியிருக்க முடிந்திருக்கும் ! அதென்ன புது சைனீஸ் மெனுவின் ஐட்டமாகத் தென்படுகிறதே என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை !

- புக்ஸ் வெளியீட்டுக்குக் கொஞ்சம் முன்னே

- புக்ஸ் வெளியீட்டுக்குக் கொஞ்சம் பின்னே

தான் மேற்படி சங்கேத பாஷையின் பொருள் ! இதோ – பிரிண்டிங் நிறைவுற்ற நிலையில் புது இதழ்கள் மூன்றும் பைண்டிங்கில் உள்ள தருணம் எனும் போது – நானிருப்பது பு.வெ.கொ.மு. moment-ல்! 

And yes – எஞ்சியுள்ள ரெகுலர் சந்தா இதழ்கள் + ஜம்போ சீஸன் 3 உபயத்தில் மார்ச் 2021 வரையிலும் வண்டியை நீட்டித்து ஓட்டத் தீர்மானித்திருப்பதால் மாதாந்திர ரேஷன் அமலுக்கு வருகின்றது ! ஒரு மாதம் 3 புக்; மறு மாதம் 4 புக் என்ற ரீதியில் ஜானர்களுக்கேற்ப ; விலைகளுக்கேற்ப – தொடரவுள்ள 9 டெஸ்பாட்ச்களையும் திட்டமிட உள்ளோம் ! So இம்முறை இடம் பிடித்திடும் இதழ்களின் பட்டியல் + அவற்றிற்கான இடங்கள் குறித்த காரணங்கள் - as follows !

சந்தா C: லக்கி’s லயன் ஆண்டுமலர் – ரூ.200/-

சந்தா B: இளம் TEX: எதிரிகள் ஓராயிரம் – ரூ.150/-

சந்தா D: CID லாரன்ஸ் டேவிட் – மீண்டும் கிங் கோப்ரா 

Of course – இது ‘ஆண்டுமலர் மாதம்‘ என்பதால் லக்கி கதவை உடைத்துக் கொண்டு உட்புகுந்திடுகிறார்! போன வாரத்துப் பதிவினில் இந்த இதழ் பற்றியும், அதனுள் இடம்பிடித்திடவுள்ள 2 ஆல்பங்கள் பற்றியும் பார்த்திருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாய் அவை அச்சாகின! உப்ப்ப்ப்… வண்ணத்தின் ரம்யமே தனி; அதுவும் கார்ட்டூன்களின் வண்ண அழகு தனியோ தனி & சமீப டிஜிட்டல் ஆக்கங்களின் கலரிங் தரங்கள் கூரையிலேறிக் கூப்பாடு போட வேண்டிய தனியோ தனி ரகம் என்பதை yet again உணர முடிந்தது! லக்கி லூக் கதைகள் சகலமும் ஆதி முதலே கலருக்கென வரையப்பட்ட ஆல்பங்கள் எனும் போது அதனில் பணியாற்றும் எல்லாக் கலரிங் ஆர்ட்டிஸ்ட்களும் சிக்ஸர் அடிப்பது சுலபம்! And இம்முறையிலான “பொன் தேடிய பயணம்” + “ஒரு கௌபாய் கலைஞன்” டிஜிட்டல் யுகங்களின் பிள்ளைகள் எனும் போது பக்கத்துக்குப் பக்கம் பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே சாத்தித் தள்ளியுள்ளனர் கலரிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் ! பதிலே புரிந்திடாது, எனக்கொரு வாழ்நாள்ப் புதிராய்த் தொடர்ந்திடக் கூடியதொரு சமாச்சாரம் இருக்குமாயின் அது – கார்ட்டூன்களை ஒற்றை அணியாய் நெஞ்சோடு அரவணைத்துக் கொள்ள இயலாது போகும் நமது நெருடல்களாகத் தான் இருந்திடும் ! நாள் முழுக்க படங்களையும், அந்த நகைச்சுவை ஜாலங்களையும், வர்ணங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று நம் சகலருக்கும் மட்டும் தோன்றி விட்டால் – அடடடடடாாாா…. என் ஜென்மம் சாபல்யமடைந்து விடாதா? நிச்சயமாய் அந்த ஜெ.சா. விற்கொரு சிறு படியாய் இம்மாத ஆண்டுமலர் உதவிடும் என்ற மட்டிற்கு நிச்சயம்!!

இதழ் # 2ன் ஸ்லாட்டை ஒரே அமுக்காக அமுக்கியுள்ள இளம் டெக்ஸ் குறித்தும் பெரிய வியப்பிருக்க முடியாது தான்! Moreso during these difficult times! லாக்டவுணுக்கு அப்புறமான அடுத்த 60+ நாட்களின் (மே 4-க்குப் பின்பாக) ஆன்லைன் ஆர்டர்களை “வே.இ.பூ.பி.சி” கதையாக அலசிட முனைந்த போது எனக்குக் கிட்டிய தகவல்கள் பின்வருமாறு : (PUC தெரியும் ; BBC தெரியும், BCG தெரியும்...அது என்ன வே.இ.பூ.பி.சி ? என்கிறீர்களா ? எங்கள் பக்கத்துப் பேச்சு வழக்கின் சங்கேத பாணியினை நீங்களே யூகிக்கப் பாருங்களேன் ? )

- 25% டிஸ்கவுண்டில் நாம் லிஸ்டிங் செய்துள்ள இதழ்கள் கலவைகளாய் விற்றுள்ளன!

- அப்புறம் Feb Pack ; ஏப்ரல் Pack என்று விடுபட்டுப் போன இதழ்களைக் கொஞ்ச நண்பர்கள் ஆர்டர் செய்துள்ளனர்.

- பொதுவான இந்த ஆர்டர்களுக்கு அப்பாலிக்கா அங்கொரு லக்கி லூக் ; இங்கொரு சிக் பில் ; தோர்கல் என்பதைத் தாண்டி ஸ்கோர் செய்திருப்போர் கீழ்க்கண்ட மூவரே !!

     - TEX

     - கேப்டன் டைகர்

     - ஜேம்ஸ் பாண்ட் 007 (Version 2.0 & Black and white classics)

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆர்டரிலுமே TEX இடம் பிடித்திருக்க, ஜேம்ஸ் பாண்ட் 007 & surprisingly (to me at least) கேப்டன் டைகரும் அத்தனை பின்தங்கியிருக்கவில்லை ஓட்டப்பந்தயத்தில் !! இது 60+ நாட்களுக்கு மேலானதொரு பரவலான உருட்டலின் முடிவுகள் எனும் போது, இதன் தகவல்கள் நமக்கு நிறையவே பாடங்கள் கற்பிப்பதாய்த் தோன்றுகிறது!

* பாடம் # 1 :

மேற்காலே போங்கோ...… தெற்காலே போங்கோ...…! அண்டாவைக் கழுவிப் பாயாசம் போட்டாலும் சரி, பாயாசத்துக்குள்ளாறயே குண்டாவைப் போட்டாலும் சரி ; பகடி பண்ணினாலும் சரி, கபடி ஆடினாலும் சரி, “என் வழி – ஜனங்களின் வழி” என்று ஆணித்தரமாய்ச் சேதி சொல்கிறார் அதிகாரி ! என்ன தான் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தாலும் – ஒரு ரகளையான வாசிப்புக்குண்டான தேடல் எழும் போது பாக்கிப் பேர் அனைவரையும் – ‘அப்டிக்கா ஓரமாப் போயி வெளையாடுங்கடா தம்பிகளா!‘ என்று டெக்ஸ் வில்லர் சொல்வதாய்த் தோன்றியது இந்த 60+ நாட்களின் ஆய்வில் (!!)

* பாடம் # 2 :

- அன்றைக்கு மக்கள் திலகம் & நடிகர் திலகம்!

- அப்புறமாய் சூப்பர் ஸ்டார் & உலக நாயகன்!

- அப்பாலிக்கா ‘தல‘ & தளபதி!

தலைமுறைகளாய் larger than life நாயகர்களை ஆராதித்தே வளர்ந்து வந்திருக்கும் நமக்கு – வாசிப்பினில் ஒரு இலகுத்தன்மை அவசியமாகிடும் போதுமே சில பல டாப் நாயகர்களே நமது ஆதர்ஷத் தேர்வுகளாய் அமைந்திடுகிறார்கள்! அவ்வகையில் நமது தற்போதைய அணிவகுப்பினில் இரும்புக்கை மாயாவியை VRS பெற்றவராய்க் கருதிவிட்டு பாக்கி பெயர்களைப் பரிசீலித்தால் – மேலுள்ள பட்டியலின் 3 பேருமே ஜாம்பவான்களை கைதூக்கி நிற்பதில் வியப்பில்லை தான்! தேய்ந்து போன அந்தப் பழமொழியில் கொஞ்சம் நிஜம் உண்டு தான் போலும்! ‘When the going gets tough; the tough get going !! And they don’t make them any tougher than these 3… do they?!

* பாடம் # 3 :

‘கா…க்கா…காா….கார்ட்டூன்‘ என்று தொண்டை கிழியக் கத்தலாம் தான்…

கி..கி..கி-நா வென்று கூரையிலேறிக் கூவவும் செய்யலாம் தான் ! 

ஆனால் ரிலாக்ஸ்டான வாசிப்பை நாடுவோர்க்கு முதல் choice – ஆக்ஷன் ஜானராகவே இருந்து வருகிறது / இருந்தும் வரும் போலும்! நாலு குத்து; எட்டு சாத்து; பன்னிரெண்டு மொத்து; பதினாறு சிதறிய சில்லுமூக்குகள் என்று வண்டி ஓடும் போது உடம்பில் எகிறும் சார்ஜே அலாதி தானோ?

* பாடம் # 4:

வாசிப்பினில் diversity… பன்முகத்தன்மையைக் கொணர நிறையவே பல்டிக்கள் அடிப்பது முழுசுமாய் அர்த்தமின்றிப் போகவில்லை தான்! இந்த 60+ நாட்களின் ஆர்டர்களில் “பராகுடா”; “தோர்கல்” போன்ற மாறுபட்ட ஆல்பங்களுமே இடம்பிடித்துள்ளன தான்! ஆனால் எப்போதுமே கமர்ஷியல் first… கலைநயம் next என்பதே யதார்த்தத்தின் குரலாய் இருக்கும் போலும்! கமர்ஷியல் ரசனைகளை மட்டமென்று சொல்லும் விதமாய் இதை நான் பதிவிடவில்லை; மாறாகக் காத்திருக்கும் 2021ன் சிக்+சிக்கனச் சந்தாவினில் மட்டுமாவது முன்னூறு மைல்களுக்கு ஷேர் ஆட்டோவைப் பிடித்துப் போய் மூக்கைத் தொட முயற்சிக்கும் படைப்புகளை தவிர்த்தல் அவசியமோ? என்ற ஞானம் புலர்ந்த ஞானதேசிகனாய்ப் பதிவிடுகிறேன்! Maybe when things are back to the ‘real’ normal in 2022, நமது குரங்கன் அவதாரை மீட்டுக் கொள்ளலாமோ ?!

ஆக இத்தினி பாடங்களைக் கற்றவன் இம்மாதத்தின் அட்டவணையில் இளம் டெக்ஸை நுழைக்காதிருந்தால் தான் ஆச்சர்யமே! இதோ “எதிரிகள் ஓராயிரம்” இதழின் அட்டைப்பட முதற்பார்வை! போனெல்லியின் இந்தப் பிரத்தியேக ‘இளம் டெக்ஸ்‘ தடத்தின் முதல் இதழின் ஒரிஜினல் ராப்பர் அட்சர சுத்தமாய் இதுவே! பார்த்த மாத்திரத்திலேயே சட்டத்தால் தேடப்படும் “போக்கிரி டெக்ஸ்” தான் இந்த ஆல்பத்தின் பின்னணியே என்பது புரிந்திருக்கும்! And என்னைப் போன்ற வெண்டைக்காய் அவசியமாகிடும் சஞ்சய் ராமசாமிப் பார்ட்டிகள் ஜம்போ சீஸன் 1 & 2-ல் வெளியான

- காற்றுக்கென்ன வேலி?

- சிங்கத்தின் சிறுவயதில்…

இதழ்களைத் தேடிப்பிடித்து, மேலோட்டமாய் ஒரு புரட்டுப் புரட்டி விட்டு – “எதிரிகள் ஓராயிரம்” இதழுக்குள் புகுந்திட்டால் சிறப்பு! 

இந்த சிங்கிள் ஆல்பம் நமது ஒரிஜினல் திட்டமிடலின்படி – 4 தனித்தனி; ரூ.40/- விலையிலான இதழ்களாய் சந்தா : D-ல் வந்திருக்க வேண்டியவை என்பது நினைவிருக்கலாம்! ஆனால் இவற்றை வேலைக்கு எடுத்த போது தான் ஒற்றை முழுநீள சாகஸமே நான்கு பாகங்களாய்ச் சொல்லப்பட்டிருப்பது புரிந்தது! And நமக்கோ ‘தொடரும்‘ என்ற போர்ட் போட்டுத் தொங்கலில் நிற்கும் புக்குள் மீது கொலை ‘காண்டு‘ என்பதால் அவசரம் அவசமாய் – ஒருங்கிணைந்த தொகுப்பாய்த் திட்டமிடலை மாற்றிக் கொண்டோம்! அந்தப் பதட்டங்களின்றி, ‘தொடரும்‘ என்ற பதாகைகளோடே சந்தா:D-ல் இந்த ஆல்பத்தை 4 இதழ்களாய் – நான் வெளியிட தீர்மானித்திருந்து; நீங்களும் ‘அட… முயற்சித்துத் தான் பார்ப்போமே‘ என்று ஏற்றிருந்தாலும் – கொரோனாவின் புண்ணியத்தில் நாய் குதறியது போலாகியிருக்கும்! So இந்த “ஒன்றே நன்று” policy சரி தான் என்றுபடுகிறது! ஆனாலும், நிதானமாய், இந்த 4 பாக ஆல்பங்களினுள் பணியாற்றிடும் போது தான் ஒரு விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிபடத் துவங்கியது! ஒரே கதையின் 4 அத்தியாயங்களாக இவை இருந்தாலும், கதாசிரியர் மௌரோ போசெல்லி அற்புதமாய்த் திட்டமிட்டுள்ளார் – இவை தனித்தனியே வாசிக்கப்பட்டாலும் ஓவராய் நெருடிடாத வகையில்! So இந்தக் கொரோனா காலங்களெல்லாம் வரலாறாகிப் போகுமொரு தருணத்தில், இந்தச் சந்தா :D தடமும் தொடர்ந்திடும் பட்சத்தில் – இளம் டெக்ஸின் அடுத்த சுற்றுக் கதையை – போனெல்லியின் பாணியிலேயே தனித்தனி இதழ்களாய் வெளியிட்டுப் பார்க்கும் சபலம் எனக்குள்! May be இந்த “எதிரிகள் ஓராயிரம்” ஆல்பத்தைப் படித்து முடித்த பிற்பாடு, நான் குறிப்பிடும் இந்த கோணத்தில் அலசிட்டால் உங்களுக்குமே போசெல்லியின் genius மீது நம்பிக்கை பிறக்கலாம்!
கதையைப் பொறுத்தவரை – 4 x 62 பக்க ஆல்பங்கள் என்பதே போனெல்லியின் / போசெல்லியின் திட்டமிடலாய் இருந்திட்டதால் மெகா சீரியல் பாணியில் ஜவ்வு இழுக்காமல், Netflix தொடர்களின் ‘நறுக்‘ பாணியில் அசத்தியுள்ளார்! உலகை உலுக்கிப் போடப் போகும் கதைக்களமெல்லாம் கிடையாதென்ற போதிலும் சம்பவக் கோர்வைகளின் விறுவிறுப்பு just terrific ! ஆனால் மூன்று கவலைகள் தலைதூக்கியதைத் தவிர்க்க இயலவில்லை இங்கே:

1. வெள்ளி முடியார் கார்சனுக்கு entry கிட்டிடும் அத்தியாயங்கள் பின்னே தான் காத்துள்ளன எனும் போது தற்போதைக்கு ‘தல‘ on his own ! பெருசோ ; பெருசின் சிறு அவதாரோ உடனிருந்திருப்பின் இன்னும் கொஞ்சம் ஜாலியாய்க் கதை நகன்றிருக்கும் என்பேன்.

2. ஒரு ரேம்போவோ; அர்னால்டோ; எதிரிகளைப் பந்தாடும் போது ‘சிக்கிபுக்கி‘ என்று சிரிக்கத் தோன்றாது! ஆனால் அந்த காரியத்தை ஒரு 55 கிலோ ஒல்லிக்குச்சி நாயகர் செய்ய முயற்சித்தால் நமட்டுச் சிரிப்புகள் தவிர்க்க இயலாது போயிடும்! ‘தல‘ விஷயத்தில் பன்ச் டயலாக்குகள் கூட இந்த பணியில் தான் என்பதும் எ.க.! ஒரு திடமான, தாட்டியான, தடலாடியான டெக்ஸ் நாலு பேரை விசிறியடித்த கையோடு பேசக் கூடிய பன்ச்களை ஒரு விடலை டெக்ஸுக்குத் தந்திட மனது ஒப்பவில்லை‘ முன்னது நெருடிடாது; பின்னது நிச்சயமாய்ப் பொருந்திடாது என்பதால் – எங்குமே ஒரிஜினல் ஸ்க்ரிப்டின் வரம்புகளை மீறிட முயற்சிக்கவில்லை! So இங்கே கதையே பேசிடும்; கதை வரிகள் நாட்டாமை செய்திடாது!

3. அட்டைப்படங்கள்!!! இந்த 4 பாக ஒரிஜினல் ஆல்பங்களின் ஒவ்வொரு அட்டைப்படமும், அதகள அழகு! துரதிர்ஷ்டவசமாய் அவற்றுள் ஒன்றேயொன்றை மாத்திரமே பயன்படுத்திட முடிந்துள்ளது! தவிர்க்க இயலாச் சமாச்சாரம் என்றாலும், அந்த ஆதங்கப் பெருமூச்சுமே தவிர்க்க இயலாதே போகிறது!

So “போணியாகும் சூப்பரான சரக்கு” என்ற காரணத்திற்காக இம்மாதத்து இரண்டாம் ஸ்லாட்டைத் தனதாக்கிக் கொள்கிறார் டெக்ஸ் !
And “சொற்ப விலையில் சிம்பிளான கமர்ஷியல்கள்” என்ற template 2020-ல் முழுமைக்குமே என்பதால் CID லாரன்ஸ் & டேவிட்டும் இடம்பிடிக்கின்றனர்  ! ஆனால் இங்கே சின்னதொரு கொசுறுச் செய்தி ! இந்த இதழை தீவிர Fleetway ரசிகர்களும் ; துவக்க நாட்களது நம் feel good பாணிகளின் பிரியர்களும் தவிர்த்த மற்ற நண்பர்கள் ஆற அமரப் படித்திடுவது மதி என்பேன் !

On the subject of Fleetway - நமக்குத் பரிச்சயமான ஏஜெண்ட் ஜான் ஸ்டீல் கலரில் மறுபதிப்புக் காணவுள்ளார் இங்கிலாந்தில் !! பாருங்களேன் :
ஆக, இம்மாதத்திய மூன்றின் கதை இதுவே ! சகலமுமே அச்சு முடிந்து பைண்டிங்கில் உள்ள நிலையில் – வரும் புதனுக்கு despatch செய்திடுவோம் என்று எதிர்பார்க்கிறேன் ! மதியம் 3 மணி ஊரடங்கு, ஆங்காங்கே containment zones என்று அமலில் இருப்பதால், பணிகள் எல்லாமே தட்டுத் தடுமாறியே அரங்கேறி வருகின்றன எனும் போது சற்றே பொறுமை அவசியமாகிடுகிறது folks ! யாரையும் இத்தருணத்தில் கடிந்து கொள்வது நியாயமல்ல தானே ? So அடுத்த சில நாட்களில் ‘பொட்டிகள் புறப்பட்டாச்சு‘ என்ற தகவல் சொல்லக் காத்திருக்கிறேன் ! இடைப்பட்ட நேரத்தில் நான் “4 புக் ஆகஸ்டில்” பிஸி – ஜேம்ஸ் பாண்ட் 007-ன் ”நில்...கவனி...கொல்...” ஆல்பத்தோடு ! பட்டையைக் கிளப்பும் ஆக்ஷன் என்பதால் பேனா தொய்வின்றி ஓட்டமெடுக்கிறது !

Before I sign out – இன்னொரு தகவல் மட்டும் ! சிலபல உலக மார்கெட்களில் காமிக்ஸ் துறை சார்ந்த தகவல்கள்; புள்ளி விபரங்கள் என்றதொரு ஆய்வுக் கட்டுரையைக் கண்ணில் பார்க்க இயன்றது! திகைக்கச் செய்யும் பற்பல தகவல்களால் திறந்த வாய் இன்னமுமே மூடவில்லை தான்! ஏதேனும் ஒரு not so distant நாளில், இதைக் கொண்டு ஒரு பதிவைப் போட்டுத் தாக்கலாம் போலும் ! பார்ப்போமே !

அப்புறம் போன பதிவின் caption போட்டிக்கு நடுவரைத் தேடி பை-பாசில் போய் நின்று பார்த்தால் , ஒருத்தரையும் காணோம் ; அத்தினி பேரும் ஆறு வழிச் சாலையைப் பிடித்து ஆந்திராவுக்கு அப்பீட் ஆகிவிட்டதாய்த் தெரிந்தது ! அப்போது தான் நினைவுக்கு வந்தது  - தரைக்கடியில் ஒரு தங்கம் குடியிருப்பது ! So நமது தாராமங்கலத்தின் தங்கம் ; கடுதாசிச் சிங்கம் ; பதுங்கு குழித் தலீவரை இந்தப் போட்டிக்கு நடுவராக  தேர்வு செய்கிறேன் ! தலீவரே...பாத்து சூதானமா ஒரு தீர்ப்பை சொல்லுங்கோ ! 

Bye all... have a safe weekend & more! See you around!

P.S : இன்றைக்கு வடக்குப்பட்டியார் லீவு ! So "இ.ப' நேற்றைய புக்கிங் எண்ணிக்கையே தொடர்கிறது !