நண்பர்களே,
வணக்கம். ஞாயிறு அதிகாலை மூட்டைகளைக் கட்டிக் கொண்டு சின்னதானதொரு பயணம் செல்ல வேண்டியிருப்பதால் பதிவுக்கு ஒரு நாள் புரமோஷன் ! டிடெக்டிவ் நாயகர்களைப் பற்றி போன ஞாயிறு நாம் பார்க்கத் துவங்கியதும், இடைப்பட்ட தருணத்தில் மார்ச் இதழ்கள் வெளியானதும் சில நாட்களுக்கு முந்தைய நிகழ்வுகள் போலத் தோன்றவில்லை தலைக்குள் ! அடுத்தடுத்து எதற்குள்ளாவது தலைநுழைத்து வருவதால் சதா நேரமும் fast forward -ல் இருப்பது போலொரு உணர்வு !! Anyways, சென்ற வாரத்தின் தொடர்ச்சியை பார்ப்போமே ?!
பட்டியலைத் தொடங்கும் முன்னே சின்னதாய் ஒரு விஷயம் : இந்தப் பட்டியல் எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை என்பதால் நம் சீனியர் அறிமுகங்கள் -ஜூனியர் அறிமுகங்கள் என்ற பாகுபாடிராது ! ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவதை இங்கே பதிவிடுகிறேன் ! லயன் காமிக்ஸ் வெளியான துவக்க ஆண்டில் இதழ் # 6 (??) தலைக்காட்டியதொரு துப்பறியும் குழுவை இன்றைக்கு நம்முள் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ நானறியேன் - ஆனால் "மீட்போர் ஸ்தாபனம்" என்ற பெயரோடு "கபாலர் கழகம்" இதழில் அறிமுகமான துப்பறியும் டீமே இந்த வாரப் பட்டியலைத் துவக்கும் நபர்கள் ! THE SEEKERS என்ற பெயரோடு இங்கிலாந்தில் 1966 முதல் '71 வரை தினசரி ஸ்ட்ரிப்களாக இவர்களது 27 சாகசங்கள் வெளியாகியுள்ளன ! ஜேகப் ; சுசன் என்ற முக்கிய கதாப்பாத்திரங்களும், இந்தத் தொடரின் மையப் புள்ளிகள் ! லேசாக மாடஸ்டி பிளைசியின் ஜாடையிலிருக்கும் சித்திரங்களோடு 5 ஆண்டுகள் ஓடிய இந்தத் தொடர் அத்தனை பெரிய வெற்றியை ஈட்டவில்லை ; ஆனால் அவை 'மோசமில்லை' என்பதே எனது அபிப்பிராயம் !

பட்டியலில் அடுத்த இடமும் ஒரு இங்கிலாந்துப் படைப்புக்கே ! THE HUNTERS என்ற பெயரோடு Fleetway தங்களது BATTLE வார இதழில் வெளியிட்டு வந்தனர் ! பரபரப்பான அந்த ஜோடியே நமது லயனில் அறிமுகமான இரட்டை வேட்டையர் ! இங்கிலாந்தின் கதாசிரியரும், ஒரு ஸ்பானிஷ் ஓவியரும் கூட்டணி போட்டு உருவாக்கிய இந்தக் கதைகள் நம் இதழ்களில் சக்கைபோடு போட்டன ! அதிலும் "ஆப்பிரிக்க சதி" என்ற இதழ் மறக்க இயலா ஒரு ஹிட் இதழ் ! இங்கிலாந்தின் உளவுத் துறைக்காகப் பணியாற்றும் இந்த ஜோடி டிடெக்டிவ்கள் என்று சொல்வதை விட ஆக்ஷன் மன்னர்கள் என்று வர்ணிப்பதே பொருத்தமாக இருக்கும் !
Next on the list - இவரும் ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பே...! டென்னிஸ் ஆட்டக்காரராகவும், இரகசிய ஏஜெண்டாகவும் டபுள்-ஆக்ட் கொடுத்த ஜான் மாஸ்டர் ஒரு "அழகான ஹீரோ" என்பதில் சந்தேகமே இருக்க முடியாது ! மொத்தம் இரண்டே கதைகள் மட்டுமே உருவாக்கப்பட்டது தான் ஏனென்று புரியவில்லை ; ஆனால் அந்த இரண்டையுமே நாம் வெளியிட்டு புண்ணியம் சேர்த்துக் கொண்டோம் ! (சதி வலை & மாஸ்கோவில் மாஸ்டர்). அட்டகாசமான சித்திரங்கள், அதிரடி ஆக்ஷன் + தெளிவான storyline இந்த மினி தொடரின் அடையாளங்கள் !
பட்டியலின் டிடெக்டிவ் # 15 தான் இம்மாதம் ஒளிவட்டத்தை ஏற்று நிற்கும்
ராபின் ! 1988-ல் இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த அலட்டல் இல்லா நாயகர் 2005 வரை அங்கே 200 சாகசங்களில் வலம் வந்துள்ளார் !
NICK RAIDER என்ற ஒரிஜினல் பெயர் கொண்ட இம்மனுஷனை உருவாக்கியவர் டெக்ஸ் வில்லர் கதைகளின் ஒரு முக்கிய கதாசிரியரான கிளாடியோ நிஸ்ஸி ! ராபினை படைத்திட ஒரு inspiration ஆக இருந்தது
ஹாலிவுட் நடிகரான ராபர்ட் மிட்சம் செய்த சில டிடெக்டிவ் ரோல்கள் தானாம் ! ராபினோடு அவ்வப்போது துணை வரும் மார்வின் என்ற உதவியாளருக்கும் கூட ஹாலிவுட்டின் பின்னணி உண்டு - நடிகர் எட்டி மர்பி ரூபத்தில் ! இத்தாலிய காமிக்ஸ் ஜாம்பவான்களான பொனெல்லியின் படைப்புகளுள் ஒரு out & out துப்பறியும் நாயகர் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர் ராபின் மாத்திரமே என்று கூட சொல்லலாம் ! இதர கதைவரிசைகள் சகலமும் ஹாரர் ; கௌபாய் ; எதிர்காலக் கதைகள் ; கிராபிக் நாவல்கள் ; வரலாற்றில் நிகழும் சாகசங்கள் என்ற பாணியில் இருந்திட்ட போது ராபின் மட்டும் ஒரு அக்மார்க் போலீஸ்காரராய் வந்து வெற்றி ஈட்டியது ஸ்பெஷல் !
 |
| Robert Mitchum |
நமது இதழ்களில் ராபின் தலைகாட்டத் துவங்கியது '90 களின் மத்தியில் என்றொரு ஞாபகம் ! ஒரே ஒரு இதழ் நீங்களாய் பாக்கி அனைத்துக் கதைகளுமே எவ்வித சிக்கல்களுமின்றி கரை சேர்ந்துள்ளன இது வரை ! ராபினின் இதழ் # 100 & 200 மட்டும் வண்ணத்தில் வெளியாகியுள்ளன ! LMS -ல் சாகசம் # 100 வெளியிட்டுள்ள நிலையில் - எஞ்சி நிற்கும் 200-வது இதழை கலரில் வெளியிடலாமா ? What say all ? (இந்த இதழின் வர்ணங்கள் அட்டகாசமாய் உள்ளன என்பது கொசுறுச் சேதி !)
பட்டியலுக்குள் தலைவிடும் அடுத்த ஆசாமியும் ஒரு கலப்படமில்லா டிடெக்டிவ் என்றே சொல்லலாம் ! ஒப்புக்குப் பத்திரிகை ரிபோர்டர் என்று மனுஷன் சொல்லிக் கொண்டாலும், பத்திரிகை ஆபீஸ் பக்கமாய் அவர் தலை வைத்துப் படுத்த நாட்கள் சொற்பமே என்று நினைக்கிறேன் ! Yes, நமது அபிமான 'இடியப்பப் புகழ்' ரிப்போர்டர் ஜானி தான் பட்டியலில் # 16 ! "இரத்தக் காட்டேரி மர்மம்" என்ற இதழோடு நமது திகில் காமிக்ஸில் 1986-ல் தலை காட்டிய இந்த பிரான்கோ-பெல்ஜிய வீரரின் ஒரிஜினல் பெயர் RIC HOCHET ! ஜெர்மனியில் ரிக் மாஸ்டர் என்றும், இத்தாலியில் ரிக் ரொலண்ட் என்றும், பின்லாந்தில் ரிக்கு ஒஸ்கா என்றும், ஹாலந்தில் ரிக் ரிங்கர்ஸ் என்றும், சுவீடனில் ரிக் ஹார்ட் என்றும் அறியப்படும் இந்த lovable hero உருவானது 1955-ல் ! இது வரையிலும் 78 ஆல்பம்கள் வெளியாகியுள்ளன பிரெஞ்சு மொழியில் ! (நாம் வெளியிட்டுள்ளது...??) வழக்கமான டிடெக்டிவ் கதைகளின் பாணியிலிருந்து கொஞ்சம் விலகி நிற்பதே ஜானியின் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லலாம் ! ஒரு சின்ன புள்ளியை மத்தியில் இட்டு விட்டு அதைச் சுற்றி வளைவும், நெளிவுமாய் கோலங்களை சகட்டு மேனிக்குப் போட்டு விட்டு அத்தனையையும் கடைசி இரு பக்கங்களில் சரி செய்வதே இந்தக் கதை பாணி ! பிரான்க்பர்ட் புத்தக விழாவின் போது இவரது ஆல்பத்தைப் படம் பார்த்து தேர்வு செய்து விட்டு, கதையையும் வாங்கியான பின்னே, பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கைக்கு வந்தான பிறகு நான் முழித்த முழி இன்னமும் நினைவில் உள்ளது ! ஆனால் இடியாப்பங்களை ரசிப்பதும் நமக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்பதால் ஜானியின் ராஜ்ஜியம் தொடர்கிறது !

தொடர்பவர் ஒரு புராதன ஆசாமி ; ஆனால் நாவல் உலகில் அதகள நாயகராய் வலம் வந்தவர் ! தொழில்முறை வழக்கறிஞர் என்ற போதிலும் இவரொரு முதல்தர டிடெக்டிவ் என்பதில் சந்தேகமே கிடையாது ! யெஸ்.. கொஞ்ச காலம் மட்டும் காமிக்ஸ் ஸ்ட்ரிப்களாகவும் சுற்றி வந்த பெர்ரி மேசன் தான் பட்டியலில் அடுத்தவர் ! 1950-களில் உருவாக்கப்பட்ட இவரது கதைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இராது ; இது வரை மூன்றோ-நான்கோ கதைகளை நாம் வெளியிட்டுள்ளது போல் நினைவு எனக்கு !
புராதனத்தின் தொடர்ச்சியாய் முதலைப்படை பட்டாளம் சகிதம் சுற்றி வந்த ப்ரூனோ பிரேசிலையும் இந்த லிஸ்டுக்குள் நுழைத்துக் கொள்ளலாம் ! உருவான நாட்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியை மனதில் கொண்டிருந்தார் கதாசிரியர் கிரெக் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! 1969-1995 வரை 11 ஆல்பங்களில் சாகசம் செய்த ப்ரூனோ இன்று நம் மனங்களில் மட்டுமே இடம் பிடிக்கும் நிலைமையில் உள்ளதே நிஜம் !
பட்டியலின் அடுத்த டிடெக்டிவ் துளி அறிமுகம் கூடத் தேவைபட்டிடா ஒரு அசாத்திய ஜாம்பவான் ! THE DARKNIGHT DETECTIVE - வழக்கமான துப்பறியும் பாணிக்கு அந்நியமானவர் எனினும், இவரின்றி இப்பட்டியல் முழுமையாகாதே ! உலகெங்கும் கொண்டாடப்படும் BATMAN -ஐ மீண்டும் நம் இதழ்களுக்குக் கொண்டு வர இயன்ற முயற்சிகளைச் செய்திடுகிறோம் ; fingers crossed !
"ரொம்பப் பிரபலம்" என்ற நிலையிலிருந்து -'relatively lesser known' என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்கள் அடுத்த இடங்களைப் பிடிக்கும் டிடெக்டிவ்கள் ! And moreover - மூவருமே பிரான்கோ-பெல்ஜியக் குழந்தைகள் !
PAUL FORAN என்ற துப்பறியும் ஹீரோ நமக்குப் "பிசாசுக் குரங்கு" வாயிலாக அறிமுகம் ! இவரது ஓவியங்களை வரைந்தவர் நமக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான (மாயாவி புகழ்) ஜீசஸ் ப்ளாஸ்கோ ! 1968-ல் துவங்கிய இவரது சாகசங்களில் நாம் மூன்று ஆல்பங்களை வெளியிட்டுள்ளோம் ! (அவற்றின் பெயர்கள் நினைவுள்ளதா guys ?)
அடுத்தவர் சைக்கிளில் சாவகாசமாய் சுற்றி வரும் கோட் போட்ட கண்ணாடிக்காரர் ! இது வரை இரண்டே இதழ்களில் நம்மிடம் இவர் தலைகாட்டியிருப்பினும், தொடரும் காலங்களில் இவருக்கு கூடுதலாய் வாய்ப்புகள் தருவதில் தவறிராது என்றே சொல்லத் தோன்றுகிறது ! Yes - டிடெக்டிவ் ஜெரோம் தான் நான் குறிப்பிடும் ஆசாமி ! இது வரை 24 ஆல்பங்கள் வெளியாகியுள்ள இத்தொடருக்கு பிரான்சில் நல்ல வரவேற்புள்ளது ! இவருக்கொரு இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் தந்து பார்ப்போமா folks ?
தொடர்பவர் புராதன டிடெக்டிவ் ; ஆனால் நிறையவே ரசிகர்களை ஈட்டியுள்ள ஆசாமி ! நம்மைப் பொறுத்த வரை இவர் இன்னமும் முழுமையாய் பாஸ் மார்க் வாங்கியிருக்கா ஒரு man on trial ! 1956-ல் பெல்ஜியத்தில் உருவாக்கப்பட்ட ஜில் ஜோர்டான் - ஒரு பாரிஸ் நகரத்து டிடெக்டிவ். எந்தவொரு சிக்கலும் இவருக்குக் கஷ்டமானதல்ல ! லொட லோடவென பேசிக் கொண்டே திரியும் உதவியாளனோடு இவர் செய்யும் சாகசங்கள் ஐரோப்பிய காமிக்ஸ் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ! ஆண்டுக்கொரு ஆல்பம் என இவரது கதைகளை சற்றே நிதானமாய் கையாண்டு வரும் நாம் - அவருக்குக் கூடுதலாய் வாய்ப்புகள் தரலாமென்று நினைக்கிறீர்களா ?

இந்த வாரத்து டஜனைப் பூர்த்தி செய்பவர் இந்தப் பட்டியலுக்குள் ஒரு surprise inclusion என்றே சொல்லலாம் ! ரேஞ்சர் பிரிவில் முக்கிய அதிகாரிகள் என்ற முறையில், நம் இரவுக்கழுகாரையும், கார்சனையும் இங்கே இணைப்பதில் தவறில்லை என்று நினைத்தேன் ! மர்மங்களை துப்புத் துலக்கும் நேரங்களை விட, பலரது பல்செட்களை மாற்றி அமைப்பதே இவர்களது பணியும், பாணியும் என்றாலும் கூட - 'தலைவாங்கிக் குரங்கு' ; 'மரணத்தின் நிறம் பச்சை' போன்ற மர்ம த்ரில்லர்களை முன்னின்று தீர்த்து வாய்த்த பெருமை இவர்களைச் சாரும் அன்றோ ? So இன்றைய ஒரு டஜன் டிடெக்டிவ்களின் பட்டியலை முழுமைப்படுத்துகிறார் 'தல' !
மாடஸ்டி ; சார்லி போன்ற நாயக / நாயகியரும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பட்டியலுக்குள் நுழையத் தகுதி வாய்ந்தவர்களா ? - இல்லையா ? என்ற விவாதங்களை உங்களிடம் ஒப்படைத்து விட்டு, இப்போதைக்கு நான் ஊருக்குக் கிளம்பும் ஏற்பாடுகளைச் செய்யக் கிளம்புகிறேன் ! இந்தப் பட்டியலில் உள்ள நாயகர்கள் தவிர, one shot டிடெக்டிவ்கள் நிறையவே உண்டு நம் அணிவகுப்பில் ; but அவர்களை இங்கே நுழைக்க நான் முயற்சிக்கவில்லை என்பதும் postscript ! So this is just a small list !
See you around soon ! Adios for now !
P.S : சென்ற பதிவில் கேட்டிருந்த ரிப் கிர்பி கதைகளின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு முதலில் (சரியான) விடை அனுப்பியுள்ள நண்பர் R கெளதம் நிதிஷ் - குட்டிப் பரிசான அந்த ரிப் கிர்பி வண்ண இதழைப் பெற்றிடுவார் - நான் ஊருக்குத் திரும்பியான பின்னே ! உங்கள் முகவரியை அனுப்பிடுங்களேன் நிதிஷ் !