நண்பர்களே,
வணக்கம். செமத்தியான ஜலதோஷமும், படுத்தி எடுத்த ஜுரமும் போன வாரயிறுதியில் மனுஷனைக் கிடத்திப் போட்டிருக்க, பதிவுக்கும் லீவு விட வேண்டிப் போயிருந்தது! இப்போது "லொக்.. லொக்..'' முழுமையாய் விடை தந்திருக்காவிட்டாலும், நிலவரம் கலவரமாகயில்லை என்பதால் பிழைப்பைப் பார்க்கத் திரும்பியாச்சு!
And yes ஜனவரிப் புத்தாண்டின் பிறப்பும், வூடு கட்டி அடிச்ச சென்னைப் புத்தகவிழாவும், பொங்கலின் நீ-ள-மா-ன விடுமுறைகளும் back in time புதைந்து போன நினைவுகளாகிக் கிடக்க, இதோவொரு ஞாயிறோடு கைகோர்த்திருக்கும் குடியரசுதின விடுமுறை மட்டுமே எஞ்சி நிற்கிறது - பிப்ரவரி புலர்வதற்கு முன்பாக ! ஆண்டின் ஆகச் சின்ன மாதத்தில் நாமுமே "நறுக்'கென மூன்றே இதழ்களோடு களம் காணவிருப்பதால், அவற்றுள் பணியாற்றுவது ஜாலிலோ..ஜிம்கானா பாணியில் செம சுளுவாகவுள்ளது! காத்திருக்கும் பிப்ரவரி - ஐயமின்றி ஒரு போனெலி மாதமே! "தல' ஒரு டபுள் ஆல்ப black & white சாகஸத்தில் பட்டையைக் கிளப்பிடுகிறார் என்றால் - ஜம்பிங் "தல' (நாமக்கல்லவரல்லீங்கோ..) டார்க்வுட்டில் சும்மா பின்னிப் பெடலெடுக்கிறார்! In fact இந்த மாதம் ஒரு சவாலே விடலாம் போலும் : வாசிப்பின் போது, த்ரில் மீட்டரில் உச்சபட்ச ஸ்பீடு பதிவாவது டெக்ஸ் சாகஸத்திலா? அல்லது ஸாகோர் சாகஸத்திலா? என்று!
மாமூலாய் உப்மா கதைகளுக்குமே பில்டப் தர நான் தவற முடியாது தான்; ஆனால், ஸாகோரின் இந்த ""சிரிக்கும் விசித்திரம்'' ஆக்ஷன் த்ரில்லர்களுக்கொரு புது உச்சத்தைக் கண்ணில் காட்டுகிறது என்பேன்! இத்தாலியின் ஒரு குறிப்பிட்ட சமயம்- டெக்ஸையே விற்பனையில் மிஞ்சி முதலிடத்தில் இருந்தவர் நம்ம கோடாரி மாயாத்மா என்று ஆங்காங்கே வாசித்திருந்தாலுமே- 'என்னத்த' கன்னையா போல சந்தேகக் கன்னையாவாகவே - "என்னத்த ஸாகோர் -டெக்ஸை முந்தப் போறாரு?'' என்றே நினைத்திடுவது வாடிக்கை! ஆனால், முதன்முறையாக இத்தாலிய ரசிகர்களின் ""ஸாகோர் காதல்'' கண்மூடித்தனமானதல்ல என்பதை இந்த வாரம் தான் புரிந்து கொண்டிருக்கிறேன்!
கலரில் ""பனிமலைப் பலிகள்'' வெளியான போது "அடடே..' போட்டேன்!
B&W-ல் ""வஞ்சத்திற்கொரு வரலாறு'' வெளியான தருணம் ""அடடடடடே'' என்றேன்..!
இதோ - இம்மாத "சிரிக்கும் விசித்திரம்'' பணிகளின் ஒரு பாதியினைக் கடக்கும் முன்னமே "WOW'' என்கிறேன்!
அட்டகாசமானதொரு கதைக்களம்; மிரட்டலான சித்திரங்கள்; தெறிக்கவிடும் வில்லன் - என்றதொரு முக்கூட்டணி அமைந்துவிட்டால், நம்ம சிகப்புச் சட்டையார் பிரித்து மேயாமல் விடுவாரா? நம்ம ஜம்பிங் பேரவைத் தலைவரும், அதன் லட்சோப லட்சத் தொண்டர்களும் (!!!) ஹெவியான உறக்கத்தை மட்டும் ஓரம்கட்டி வைத்து விட்டு தாரை, தப்பட்டைகளைக் கிழியச் செய்தால் - நடப்பாண்டின் ஹிட்களுக்குள் முதன்மையான சீட்டைப் பிடிக்க ஸாகோருக்கு சாத்தியமாகிடலாம்! பார்க்கணும்.. புக் வெளியாகும் சமயம் நம்ம பேரவையினருக்கு ஏதாச்சும் சதுர பன்னோ, செவ்வக பன்னோ, வெங்காய வடையோ சேர்த்தனுப்பி உற்சாக மீட்டர்களை எகிறச் செய்ய முடிகிறதா என்று ! And கதை நெடுக தொந்தியைத் தள்ளிக் கொண்டே மீசைக்கார மெக்ஸிகன் சீகோவும் உடன் பயணிக்க, கதையின் இறுக்கத்தின் நடுவாக்கிலுமே புன்னகைக்க முகாந்திரங்கள் விரவிக் கிடக்கின்றன! இங்கே சின்னதொரு sidetrack -ம் கூட!
"காமெடி வஜனங்கள்லாம் சீரியஸ் கதைக்குத் தேவையா ? ஈரோவை இந்திரன்-சந்திரன்னு மிகைப்படுத்துறதுலாம் தேவை தானா ? இந்த பன்ச் டயலாக்லாம் அவசியம் தானா?'' என்ற ரீதியில் நடுவாக்கில் எங்கோவொரு அலசல் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது! வேதாளர் கதைகளில் வரும் "கானகப் பழமொழிகள்'' சார்ந்த சர்ச்சையாக அது இருந்தது! "அந்தக் காலத்திலேல்லாம் இப்படி இருக்காது.....லாவகமாய் மொழிநடையைக் கையாண்டிருப்பார்கள்" என்றெல்லாம் அங்கு கருத்து பதிவிடப்பட்டிருந்ததை படித்த போது, புன்னகைக்கவே தோன்றியது! கிட்டத்தட்ட 1975 முதலாகவே முத்து காமிக்ஸின் பணிகள் சகலத்தினையும் பராக்குப் பார்த்தவன் என்ற வகையில் அந்தப் புன்னகைக்கொரு பின்னணியும் இருக்கவே செய்தது! Truth to tell, இன்றைக்குப் போல அந்நாட்களிலெல்லாம் முத்து காமிக்ஸின் வெளியீடுகளுக்கு "எடிட்டிங்" என்ற பணிகள் பெயரளவிற்குக் கூட இருந்ததில்லை! கதைத் தேர்வுகள்; கதைக் கொள்முதல்கள்; அட்டைப்படத்துக்கு ஏதேனுமொரு ஏரோபிளேன் படத்தேர்வு என்பதோடு சீனியர் எடிட்டர் நாக்குத் தள்ளச் செய்யும் தனது பிரிண்டிங் பிரஸ் பணிகளுக்குள் ஐக்கியமாகிடுவார். And இன்றும் நமக்குப் பேனா பிடித்து வரும் கருணையானந்தம் அங்கிள் தான் அந்நாட்களது மொழிபெயர்ப்பாளரும்! So அப்பா வாங்கித் தரும் கதைகளை, கருணையானந்தம் அங்கிள் மொழிபெயர்க்க ; அச்சுக்கோர்ப்பு அரங்கேறிடும் and then ஆர்டிஸ்ட்களின் கைவண்ணங்களுக்குப் பின்பாக முத்து காமிக்சில் மேனேஜராய்ப் பணியாற்றிய திரு.பாலசுப்பிரமணியன் அவர்களின் Proof reading-க்குப் பிற்பாடு பிரிண்ட் ஆகிட செல்வதே routine. அவகாசம் கிடைக்கும் சிற்சில தருணங்களில் அப்பாவும், Proof Reading செய்வதுண்டு ! இது மாத்திரமே அந்நாட்களின் எடிட்டோரியல் பிராசஸ் ! So மொழிபெயர்ப்பாளரின் நடைகளே உங்களைச் சென்றடையும் இதழ்கள் வரையிலும் நீடிக்கும்!
வேறு வேலை, ஜோலி, எதுவுமில்லாத் தீவட்டித் தடியனாய் நான் உட்புகுந்த பிற்பாடே மொழிபெயர்ப்புக்கு சின்னச் சின்ன எக்ஸ்ட்ரா நம்பர்களைச் சேர்க்கும் பழக்கம் உதயமானது! And நமது முதல் இன்னிங்ஸில் கூட இந்தக் கூட்டல்- குறைத்தல் சொற்பமான அளவோடே நின்று கொண்டிருந்தது; Simply becos - குறைச்சலான அனுபவத்துடன் இருந்த நான், இத்துறையில் பழம் தின்று, கொட்டை போட்டிருந்த கருணையானந்தம் அங்கிளின் ஸ்க்ரிப்டில் கைவைப்பது அபச்சாரம் என்று கருதி வந்ததே! But இதற்கொரு திருப்புமுனை அமைந்தது- நமது இரண்டாவது இன்னிங்ஸில் கலர் கிராபிக் நாவலாய் வெளியான ""சிப்பாயின் சுவடுகளில்'' இதழிலிருந்து தான்!
கருணையானந்தம் அங்கிளே இதற்கும் பேனா பிடித்திருக்க, நான் வழக்கம் போல குறைந்தபட்ச எடிட்டிங் மாத்திரமே செய்திருந்தேன்! புக்கும் வந்தாச்சு; நிறைய சிலாகிப்புகளும் பெற்றாச்சு! பச்சே - ஒற்றைக் குரல் ஒலித்தது உரக்கவே - "கதையின் இறுதியில் பிழையுள்ளது'' என்று ! அதெல்லாம் நமது blog தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த செம பிஸியான காலகட்டம் & அந்தக் குரலை உசத்தியிருந்தது நம்ம கார்த்திக் சோமலிங்கா தான்! ""இறுதிப் பக்கத்தில்.., கடைசிப் படத்துக்கு முந்தைய ஃப்ரேமில் இருக்கும் டயலாக் தப்பிதமாய்த் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது ; so இறுதிக் கோர்வையும் பிழையாகிறது''என்று விளக்கியிருந்தார்! நான் கருணையானந்தம் அங்கிளின் ஸ்க்ரிப்டை எடுத்துச் சரி பார்த்தேன்- ஊகூம்.. புக்கில் என்ன வந்திருந்ததோ; அதுவே தான் அந்தக் கையெழுத்துப் பிரதியிலும் இருந்தது! "நோ.. முடியாது.. முடியாது.. ஒத்துக்க முடியாது! எங்க ஸ்க்ரிப்டிலேயாச்சும் பிழையாவது - இருப்பதாவது?? அபச்சாரம்.. அபச்சாரம்!'' என்று பூசி மெழுகியிருந்தேன்! கார்த்திக்கோ அந்தப் பக்கத்தின் ப்ரெஞ்சு மூலத்தை சமீபத்தில் காலம் சென்ற நண்பர் கனவுகளின் காதலரிடமிருந்து வாங்கி, அதைத் தமிழாக்கம் செய்து காட்டியிருந்தார் - பிழை எங்கிருக்கின்றதென்று ! அந்நாட்களிலோ நெதத்துக்கும் ஒரு குடுமிப்பிடி; பொழுதுக்கும் ஒரு மூத்திரச் சந்து என்று உற்சாகமாய் (!?) நாட்கள் ஓடிக் கொண்டிருந்ததால் - இது அப்படியே அமுங்கிப் போனது!
ஆனால், அன்றைக்குத் தான் எனக்கு உரைத்தது - நமது தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் மாத்திரமன்றி; ப்ரெஞ்சோ - இத்தாலிய மொழியிலிருந்தோ மாற்றம் செய்து தரும் எழுத்தாளர்களுமே சொதப்பல்களுக்கு விதிவிலக்குகள் ஆகிட மாட்டார்களென்று! So அன்றைக்கு ஆரம்பித்தது என் மேஜையை நிரப்பும் படலமானது!!
வேற்று மொழியின் ஒரிஜினல் pages ;
அந்த மொழி to இங்கிலீஷிலான translation ஸ்க்ரிப்ட்
இங்கிலீஷ் to தமிழ் ஸ்க்ரிப்ட்
&
டைப் செய்யப்பட்டு எனக்குத் தரப்படும் பக்கங்கள்
என்று இந்த மொத்த மந்தையும் இல்லாமல் 2014 முதலாய் ஒற்றை இதழுக்குள் நான் புகுந்திடுவதில்லை ! முன்னெல்லாம் வெறுமனே டைப்செட் செய்த பக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அரங்கேறிய சரிபார்ப்புப் படலமானது, கடந்த 10+ ஆண்டுகளாய் ஒரு சின்ன மண்டகப்படி வேலையாக உருமாறியுள்ளது ! நானே நேரடியாய் மொழிபெயர்த்திடும் பட்சங்களில் இத்தனை கூத்துக்கள் அவசியப்படுவதில்லை ; ஆனால், எழுதும் தருணத்தில், ஒரிஜினல் ஸ்க்ரிப்டில் எங்கேயாச்சும் பிசிறடிக்கிறதா? என்ற ஓணான் பார்வையோடே தொடருவேன்! இத்தனை மெனக்கெடல்களைத் துவக்கிய பிற்பாடு தான் புலப்படுகிறது- இரத்தப்படலம் முதல் மின்னும் மரணம் வரை ஆங்காங்கே எண்ணற்ற பிழைகளும், பிசிறுகளும் இத்தனை காலத்தில் ஒட்டியபடியே பயணிப்பது!
And இந்த எடிட்டிங் அவதாரானது முறையான அங்கீகாரம் பெற்றதன் நீட்சியே - கதைகளில் அழுத்தக் குறைவுகளோ ; ஹ்யுமர் குறைபாடுகளோ ; ஈரோ துதிகளோ அவசியமாகிடும் தருணங்களில் நான் உட்புகும் சமாச்சாரம் ! சரியாகக் கவனித்தீர்களெனில் "சிவப்பாய் ஒரு சொப்பனம்" டெக்ஸ் ஆல்பத்துக்கு முன்னே / பின்னே என 2 ஸ்டைல்கள் டெக்ஸ் கதைகளில் நிலவுவதைப் பார்த்திட இயலும் ! சி.ஓ.சொ. - நமது மீள்வருகைக்குப் பின்பான டெக்ஸ் வெளியீடு & கருணை அங்கிளே மொழிபெயர்த்திருந்தார் ! ஆனால் ஒரிஜினல் இத்தாலிய டயலாக்களில் டெக்ஸ் & கார்சனுக்கு இடையே நிலவிடும் ஜாலி கலாய்ஸ் totally missing என்பது புரிந்தது ! அந்த நொடியில் தீர்மானித்தேன் - "ஊஹூம்....இத்தனை காலமாய் வண்டி எவ்விதம் ஓடியிருந்தாலும் சரி - இனி வரும் நாட்களில் 'தல' ஒரு குறிப்பிட்ட இமேஜ் சகிதமே பயணித்தாவார் ; வெள்ளிமுடியார் இந்த ஸ்டைலில் தான் பேசுவார், செயல்படுவார் ; டைகர் ஜாக் இவ்விதம் தான் இனி விழிப்பார்" என்று ! பேனா பிடிப்பது யாராக இருந்தாலும், ஸ்கிரிப்ட் கோரும் பட்சத்தில் தயங்காது உட்புகுந்து எழுதுவது ; rewrite செய்வதென்று தீர்மானித்தேன் ! அது டெக்சில் மட்டுமே என்றில்லாது, லார்கோவுக்கு ; சிக் பில்லுக்கு ; லக்கி லூக்குக்கு என்று தொடர்ந்தது ! And latest to the pack - எனது பால்ய முதல் நாயகரான வேதாளருக்கு ! அவருக்கு பில்டப் இல்லா தட்டையான வரிகள் இருப்பதை ரசிக்கவே இயலவில்லை and hence எனது எக்ஸ்டரா நம்பர் படலம்ஸ் !
Cut to the present "டெக்ஸ் வில்லரையோ; வேதாளரையோ - அத்தனை பெரிய ஆளுமையாய் பில்டப் செய்வதெல்லாம் இன்னமும் தேவை தானா?'' என்ற கேள்வி கேட்பதில் merit இருப்பதாக நண்பர்களில் சிலர் கருதிடுவது அப்பட்டம்! "Maybe அந்தக் காலத்திலே ரசிச்சது; இன்னிக்குக் கடுப்படிக்குது !'' என்பது அவர்களது வாதம்! Simple is the answer! அகவைகள் ஏறுவது நமக்கு மட்டுமே தானன்றி - வேதாளர் போன்றதொரு சிரஞ்சீவிக்கு அல்ல! டெக்ஸ் போன்ற current தொடர்களிலாவது சமகாலத்து எடிட்டர்கள்; கதாசிரியர்கள் எவ்விதம் நாயகரைக் கட்டமைக்கிறார்களோ - அவர்களது வாலைப் பிடித்தபடியே நாமும் சவாரி பண்ணிடலாம்! இதோ - இப்போதெல்லாம் இளம் டெக்ஸை ஒரு போக்கிரியாய் சித்தரிக்க எடிட்டர் போசெல்லி தயங்குவதே இல்லை ! ஆனால், வேதாளர் போலான இன்று தொடர்ந்திடா நாயகர்களின் விஷயத்தில் - துவக்க நாட்களது Lee Falk ஃபார்முலாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டபடியே டிராவல் பண்ணுவது ஒரு எடிட்டரின் தார்மீகக் கடமை! எனக்கு இன்னமுமே இந்திரஜாலில் வரும் ""கானகப் பழமொழிகள்'' நினைவில் ஸ்பஷ்டமாய் நின்று வருகின்றன! So அந்த நாயகரின் கதைகளை நாம் வெளியிடுவதெல்லாம் இந்த லேட்டஸ்ட் OTT காலங்களில், என்ற ஒரே காரணத்துக்காக - அவரை "அடக்கி வாசிக்கும் ஐயாச்சாமி'' ஆக உருமாற்றிடுவதில் எனக்கு உடன்பாடே கிடையாது! And மொழிபெயர்ப்பாளர்களின் வரிகளில் அழுத்தமோ; வீரியமோ, நையாண்டியோ குறைவாகத் தென்பட்டால், அங்கே மூக்கை நுழைப்பதற்கோ இம்மி கூடத் தயங்கவும் போவதில்லை ! So "கீழ்த்திசை சூன்யம் '' வெளியான 46 ஆண்டுகளுக்கு முன்பான அதே ஈயை இத்தனை காலம் கழித்தும் நான் அட்சரம் பிசகாது அடிக்கணுமென்ற எதிர்பார்ப்பில் சாரம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை!!
Of course - இன்னமும் "தங்கக் கல்லறை'' ஒரிஜினல் மொழிபெயர்ப்போடு வேணும்'' என்ற கோரிக்கை அதன் ஒரிஜினல் மொழிபெயர்ப்பாளரிடமே வைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம் தான்! அதன் 2 வார்ப்புகளுமே கருணை அங்கிளின் பேனாக்களிலிருந்து உதயமானவைகளே !! என்னைக் கேட்டால் அந்த மாதிரியான கோரிக்கைகளை சற்றே எடிட் செய்து- "பிசிறில்லாத மொழிபெயர்ப்போடு வேணும்!'' என்று கேட்டால் சிறப்பு என்பேன்! பேனா பிடிப்போருக்குமே ஒரிஜினல்களோடு பயணிக்கிறோமா? இல்லையா? என்ற சரிபார்க்கும் அக்கறை கூடிடும்! இதோ- இந்த நொடியில் என் கையிருக்கும் "சிரிக்கும் விசித்திரம்'' பணியே அதற்கொரு classic உதாரணம்! தமிழாக்கம் செய்திருந்த நம்ம மேச்சேரியார் ரவிக்கண்ணனின் ஸ்கிரிப்டை வாசிக்கும் போது செம decent ஆகவே தென்பட்டது ! ஆனால் கண்களில் விளக்கெண்ணெய் விட்டபடிக்கே ஒவ்வொன்றையும் நீங்கள் அலசிடும் நாட்களிவை என்பதால் முட்டைக்கண்களை கூடுதலாய் விரித்தபடிக்கே எடிட்டிங்கில் நான் ஈடுபட, கதையின் நடுவாக்கிலிருந்து லைட்டாக உதறுவது போல் எனக்குப்படத் துவங்கியது ! 'ஆத்தீ' என்றபடிக்கே புதைந்து கிடந்த ஆங்கில ஸ்க்ரிப்டை தூசி தட்டி எடுத்து ஒப்பிட்டபடியே நகர ஆரம்பித்தேன்! அப்புறம் தான் சிற்சிறு details ஆங்காங்கே விடுபட்டிருப்பதும் ; சிற்சிறு தகவல்கள் தவறாகப் புரிபட்டிருப்பதும் புலனானது! சூட்டோடு சூடாய் அவற்றைச் செப்பனிட முடிந்ததால், கதையின் பரபரப்புக்கு இம்மியும் இடரின்றி ஈடு தந்து ஓட முடிந்துள்ளது ! இவை எதுவுமே சாத்தியமாகியிராது - எடிட்டரின் மூக்கு புடைப்பாக இருக்கத் துவங்கி இருக்காவிட்டால் !!
ஸாகோரின் ஆல்பங்களிலும் லேசாக இறுக்கத்தைத் தளர்த்திட அந்த மீசைக்காரத் தொப்பையன் சீகோவைப் படைப்பாளிகள் உட்புகுத்தியுள்ளனர்! அவனைச் சுற்றி வரும் வரிகளில் நல்ல ஜோக்கோ- மொக்கை ஜோக்கோ; எதுவோ ஒரு refresher-ஐ இணைத்திடல் தேவையாகிடும்! And இங்கு அதையும் செய்துள்ளேன் தான் - இதுவரைக்குமான அதே பாணியில் ! So "வேதாளருக்கு பில்டப் தேவையா? ஆட்டுத்தாடி கார்சனுக்குக் காமெடி தேவையா?'' என்ற பட்டியலோடு "ஸாகோர் கதைகளில் கெக்கே பிக்கே முயற்சிகள் தேவையா?'' என்ற வினாவினையும் இணைத்திட வேணாமே ப்ளீஸ்? ஒரிஜினல்களில் இல்லாதோரை நாமாய் உட்புகுத்தவுமில்லை ; சீரியஸாய் உருவாக்கப்பட்டதொரு கேரக்டரை நாம் சிரிப்புப் பார்ட்டிகளாக்கிடவும் கிடையாது! So "இன்று எனது அகவை கூடி விட்டது; எனது ரசனை மாறிவிட்டது!'' என்பதற்காக வருஷமாய் பின்பற்றி வரும் ஒரு அவசியமான template-ஐ கைவிடக் கோரிட வேணாமே - ப்ளீஸ் !
**அடர் ஆப்பிரிக்க கானகத்தில் ஒரு நீதிக்காவலர் வாழ்கிறார் என்பதையும்......
**அவரது ஜாகை ஒரு கபாலக் குகை போல் இருந்திடும் என்பதையும்........
**நாள் முழுக்க அந்த முகமூடியையும், உடுப்பையும்.. போட்டபடியே கிட்டத்தட்ட 20+ தலைமுறைகளாய் வேதாளப் பரம்பரை வாழ்ந்து வரும் என்பதையும்.......
**ஒவ்வொரு தலைமுறை வாரிசும் அதே கட்டுப்பாடோடும், ஆற்றலோடும், ரௌத்திரத்தோடும் நீதியை நிலைநாட்டியிருப்பர் என்பதையும்........
நம்புவதில் நமக்குச் சிரமமில்லாத போது, அந்த பில்டப் வசனங்களை ஜீரணிப்பது மட்டுமே சிரமம் என்பதெல்லாம் விழுங்க இயலா பெரிய மாத்திரையே அல்ல என்பேன் !! Maybe கொஞ்சம் salt & pepper சேர்த்து அடித்தால், குபுக்கென்று உள்ளே ஓடி விடாதா - என்ன ?
ரைட்டு.. புதுசாய் ஒரு மூ.ச.வுக்கு பைபாஸ் அமர்க்களமாய் போட்டாச்சு ; சந்துக்குள் லைட்டு..பேன்லாம் போட்டாச்சு ; அநேகமாய் கப் ஐஸ் ; கோன் ஐஸ் கடையும், டெல்லி அப்பளக்கடையுமே இந்நேரத்துக்கு ரெடியாகி இருக்கும் ! So கொத்தாய் அள்ளிப் போய், கெத்தாய் சலவை செய்திட, கொள்ளைப்பேர் ஷிகார் தவனைப் போல தொடையைத் தட்டியபடிக்கே ரெடியாகி விடுவர் என்பது இயல்பு! சின்னதாய் ஒரு டிக்கெட் கவுன்டரை மட்டும் முன்னாடி போட்டு ஒரு கல்லாப் பெட்டியையும் தந்துவிட்டால், திங்கட்கிழமைக்குள் ஆபீசில் சம்பளம் போட காசு பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன் ! ஜெய் ""சந்துக்குள் சாகுபடி''!! புத்தம் புது ஈஸ்ட்மேன் கலர் பிரிண்ட்!
காத்திருக்கும் மஜாஜுக்கு ரெடியாகிட நான் புறப்படும் முன்பாய் இதோ- ஸாகோரின் அட்டைப்படம் & உட்பக்கப் பிரிவியூ folks !! கோடரி மாயாத்மாவின் ரேஞ் இந்த இதழுக்குப் பிற்பாடு 'சர்ர்'ரென்று உசக்கே உயர்ந்திடாவிட்டால் பெரிதும் வியப்பேன் !!
பிப்ரவரி டெக்ஸின் அட்டைப்படம் + உட்பக்க preview ஏற்கனவே வாட்சப் கம்யூனிட்டியில் போட்டுத் தாக்கியிருந்தாலும்- அங்கே பார்த்திராத நண்பர்களுக்கென ஒரு ஒன்ஸ்மோர்! அந்த ஒரிஜினல் ராப்பரின் அசாத்திய அழகே- ""தலைநகரில் தலைமகன்'' என்ற அந்த எழுத்துரு தான் என்பேன்! நீங்களுமே அவ்விதம் நினைக்கிறீர்கள் எனும் பட்சத்தில் நண்பர் ஜகத்துக்கு ஒரு ""ஓ'' போடலாமா? Thank again ஜகத்!
திருப்பூரில் புத்தகவிழா நடைபெற்று வருகிறது! பொதுவாகவே ஒரு பத்தாயிரம்வாலா வெடித்து, ஊரையே ஸ்தம்பிக்கச் செய்ததற்குப் பின்பாக- லட்சுமி வெடிகளும், குயில் வெடிகளும் அதே அளவு கவனங்களை ஈட்டுவதில்லை தான்! ""சென்னை'' என்ற பத்தாயிரம்வாலாவுக்குப் பிற்பாடு ""திருப்பூர்'' கிட்டத்தட்ட அதே ரேஞ்சில் இருக்கிறது! ஆனால், ஒப்பீடுகளின்றி தனிப்பட்ட முறையில் பார்த்தால் திருப்பூர் நேற்றும், இன்றும் has been doing very brisk sales! நண்பர்கள் நாளை மதியம் புத்தகவிழாவில் குழுமிய பிற்பாடு விற்பனை மேற்கொண்டும் வேகம் பிடிக்குமென்று நம்பலாம்! Have fun guys !!
And திருநெல்வேலி தான் நமது காமிக்ஸ் கேரவனின் அடுத்த ஸ்டாப்! அந்தப் பகுதியில் நம்ம மக்கள் யாரேனும் உண்டோ? Just curious!
ரைட்டு.. ஸாகோரோடு டார்க்வுட் பயணத்தைத் தொடரப் புறப்படுகிறேன்! Have a relaxed weekend all! முன்கூட்டிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! Bye for now ! See you around!
P.S : இன்னமும் சந்தா ரயிலில் டிக்கெட் போட்டிருக்கா நண்பர்கள் - பிப்ரவரி துவங்கியவுடன் 2 தவணைகளில் ரயிலேறிடலாமே ப்ளீஸ் ? We are missing you !!