நண்பர்களே,
வணக்கம்! கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்களில் நாக்குத் தொங்க பௌலிங் போட்டு, எதிரணியின் top order ஆட்டக்காரர்களையெல்லாம் அவுட்டாக்கிய பின்னே, பொதுவாய் பவுலர்களுக்கு கொஞ்சமாய் ரிலாக்ஸ் பண்ணத் தோணுவது இயல்பு ! "உப்ப்ப்... கஷ்டமான வேலைல்லாம் முடிஞ்சது.. இனி கீழே வரப் போறது தடவல்ஸ்கி பேட்ஸ்மேன் மட்டுமே ! ஊதித் தள்ளிடலாம்!'' என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அன்னிக்கென்று பாருங்க - அடுத்து வரும் lower order பேட்ஸ்மேன் செமத்தியாய் கட்டை போடும் மூடில் வந்து சேர்ந்திடுவார்கள். சுலபமாய் சாய்த்து விடலாமென்று யாரையெல்லாம் எண்ணியிருந்தார்களோ.. அவர்களெல்லாம் பவுலிங் டீமை நாயாய், பேயாய் அலைக்கழிப்பர்!
மிகச் சரியாக இம்மாதம் நேக்கு நிகழ்ந்ததுமே அது தான். மூணே மூணு இதழ்கள்! "வதம் செய்வோம் வேங்கைகளே'' ஒரே மூச்சில் "ஜிலோ'வென்று முடிச்சாச்சு! அடுத்து "தீவிரவாதி சிக்பில்''! செம சுளுவாய் வாய்ஸ் ரெக்கார்டரில் போட்டே இதற்கான மொழிபெயர்ப்பையும் முடித்து விட்டாச்சு! So செப்டம்பரின் இறுதி இதழான "எட்டும் தூரத்தில் யுத்தம்'' (ஸாகோர் + இளம் டெக்ஸ்) மட்டுமே காத்திருந்தது ! ஆகஸ்டில் வேலைப்பளு ஜாஸ்தி; அக்டோபரிலும் தீபாவளி மலர்(ஸ்) பணிகள் நெட்டி வாங்கும் - so இடைப்பட்ட செப்டம்பரை மட்டும் இயன்றளவுக்கு இலகுவாக்கிக் கொண்டால் தேவலாம் என்ற மகாசிந்தனையில் "எட்டும் தூரத்தில் யுத்தம்'' ஆல்பத்தின் மொழிபெயர்ப்பை கருணையானந்தம் அங்கிளிடம் ஒப்படைத்திருந்தேன்! சில காலமாகவே டெக்ஸ் கதைகளுக்கு base version எழுதி வரும் சகோதரி, சமீபத்தில் கணவரோடு Gulf புறப்பட்டு விட்டதால் இதனை அங்கிளிடமே தந்து விட்டிருந்தேன்! And எழுதியும் வந்து, DTP-ம் முடிந்து ரெடியாக இருந்தது.
இது 128 பக்க சிங்கிள் ஆல்ப சாகஸம் தான் எனும் போது, டைப்செட்டிங்கின் எழுத்துப் பிழைகள்; ஒற்றுப் பிழைகளை மட்டும் நீங்களாகவே ஒப்பேற்றிவிட்டு, பிரிண்டிங்குக்கு எடுத்துப் போய்விடுங்கள் என்று சொல்லலாமா? என்ற சபலம் கூட சோம்பேறி ஸ்ரீகாந்த் அவதாருக்குத் தோன்றியது! சரி.. ரைட்டு, ஒரு பத்தோ- பதினைந்தோ பக்கங்களைப் பார்த்துப்புட்டு நம்மாட்களிடமே proof reading-க்கு ஒப்படைத்துவிடலாமென்று கதையை கையில் எடுத்தது மட்டுமே தான் ஒரு வாரத்துக்கு முன்பான எனது தெளிவான ஞாபகம்!
அதைத் தொடர்ந்த ஆறு நாட்களும், சும்மா கும்மு கும்முவென்று சில்லுமூக்கிலேயே "தல'' பாணியிலான குத்துகள் வாங்கின பீலிங் தான்! சிக்கல் என்னவெனில் "எட்டும் தூரத்தில் யுத்தம்'' அழுத்தமானதொரு கதைக்களம்! And "கலவரபூமியில் கனவைத் தேடி'' சாகஸத்தின் அடுத்த அத்தியாயமும் கூட! கருணையானந்தம் அங்கிளோ கடந்த 10+ ஆண்டுகளில் டெக்ஸ் கதைகளுக்குப் பேனா பிடித்ததில்லை! And இந்த பத்தாண்டுகளில் "தல'' கதைகளுக்கென அழுத்தம்; நக்கல்; பன்ச் என்று நிரம்பவே மாற்றங்களை நாம் செய்திருக்கிறோம்! So இத்தனை நெடிய பிரேக்குக்குப் பிற்பாடு அந்த க்ளாஸிக் நடையில் டெக்ஸும், கார்ஸனும், ஸாகோரும், சீகோவும் கதைப்பதைப் பார்த்த போது, எனக்குக் கிறுகிறுக்காத குறை தான்! சாதாரண கிராமத்து கௌபாய்களும், குடியானவர்களும் கோனார் நோட்ஸ் தமிழில் பின்னியெடுப்பதைப் பக்கத்துக்குப் பக்கம் படிக்கப் படிக்க, எனது "டர்ர்ர்ர்'' அளவுகள் தெறிக்கத் துவங்கிவிட்டன! இந்த சாகசத்திலோ கணிசமான உரையாடல்களும் உண்டு! 'அடிடா.. குத்துடா... சுடுடா.. போடுடா'.. என்று ஆக்ஷன் மிகுந்திருந்தாலாவது அந்த sequence-களில் பக்கங்கள் கொத்துக் கொத்தாய் கடந்துவிடும்! ஆனால், இந்தக் கதையில் மாந்தர்கள் எக்கச்சக்கம் என்பதால் அவர்களுக்கென வழங்க அவசியமாகிடும் space-ம் மிக அதிகம்! So ஆளாளுக்கு மைக் மோகனாட்டம் உரையாட, "செத்தான்டா சேகரு'' என்று உள்ளுக்குள் ஒரு குரல் மட்டுமே ஒலித்தது!
To Cut a long story short - 128 பக்கங்களையுமே கிட்டத்தட்ட 75% மாற்றி எழுத வேண்டிப் போனது! அதிலும் இந்த மாசத்தில் கஷ்டமான வேலைகளே லேது என்ற ஒரு மிதப்பில் சுற்றித் திரிந்து கொண்டிருந்துவிட்டு, கடைசி வாரத்தில் ஒரு நூறு தண்டால்களைப் போடத் தேவைப்படுமென்பது திடுதிடுப்பெனப் புரிந்த போது, மண்டை சுத்தமான சண்டித்தனத்தில் இறங்கிவிட்டது! And ஏற்கனவே சொன்ன விஷயம் தான் - புதுசாய் மொழிபெயர்ப்பது கூட சுலபமே; ஆனால், ஏற்கனவே உள்ள வரிகளை ரிப்பேர் செய்து, உள்ளே புகுவதென்பது ரண வேலை! So போட்டேன் பாருங்க மொக்கையை அடுத்த ஐந்து நாட்களுக்கு!! பலன்? "ஆகஸ்டில் செப்டம்பர்'' என்ற கனவு பணால் ! வியாழன் இரவு தான் எனது பணிகள் முடிந்திட, கிட்டத்தட்ட முழுசாய் ஒரு புதுப் பணியில் ஈடுபடுவதைப் போல DTP-ல் நம்மாட்களும் செயல்பட, இதோ சனியான இன்று கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் ப்ரிண்டிங்கே சாத்தியப்பட்டுள்ளது!
எல்லாவற்றையும் முடித்த பிற்பாடு கொஞ்ச நேரம் மோட்டு வளையையே முறைத்துக் கொண்டிருக்கத் தோன்றியது! "இதெல்லாம் தேவை தானாடா முக்கா மண்டையா? துவக்க நாட்கள்லே இந்த க்ளாஸிக் பாணியிலே தானே டெக்ஸ் & டீம், மாட்லாடி வந்தாங்க? So ஒற்றை இதழை அந்தப் பழைய பாணியிலே விட்டா எந்தக் குடி முழுகிப் போயிடுமாம்?'' என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிப் பிடித்து விளையாடியது! "நீதிடா.. நேர்மைடா.. நாயம்டா..'' என்று பொங்கும் நாட்டாமை விஜயகுமாரைப் போல, நமக்கும் உள்ளுக்குள் லைட்டாய் ஏதாச்சும் ஒரு வேதாளம் குடியேறியிருக்குமோ? என்ற ரீதியில் கூட மண்டை காய்ந்தது! "இயன்றவரைக்கும் மொழியாக்கத்தில் ஒரு சரளம் இழையோடிட வேணும்; எந்த பல்டியடிச்சாவது அதை தக்க வைக்க வேணும்!'' என்ற நமைச்சல் இப்போதெல்லாம் எனக்குள் ஒரு mania-வாகி விட்டதோ- என்னவோ?
நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதித் தந்துள்ள 452 பக்க "சாம்பலின் சங்கீதம்'' ஸ்க்ரிப்டில் கூட திருத்தங்கள் சொல்லி- "கொஞ்சம் மாற்றங்கள் ப்ளீஸ்'' என்ற கோரிக்கையை முன்வைக்கவும், அவர் திரும்பவும் பணியாற்றுவதுமே இந்த mania வின் புண்ணியம் தானோ ? மெய்யாலுமே இந்த நொடியில் பதில் தெரியலை எனக்கு! And end of the day- ஒரு தீரா வேட்கையாகவே உருமாறியுள்ள இந்த அழுத்தம் - ஒவ்வொரு இதழையும் காவியமாய் படைக்கின்றதா? என்றால், அதற்கான பதிலும் சொல்லத் தெரியலை எனக்கு! போன மாசம் வந்த புக்கை எடுத்து இந்த மாசம் புரட்டினால்- ''இது நொள்ளை; இது சூத்தை'' என்று என் எழுத்திலேயே பிழைகள் தான் தென்படுகின்றன ! என்னமோ போடா மாதவா- ஏர்வாடிக்கு பஸ் ஏறாமல் இருந்தா தேவலாம் போலும்னு தோணுது!
இங்கே தான் பஞ்சாயத்து, மற்ற புக்ஸ் இம்மாதம் smooth sailing என்ற நினைப்பில் இருந்தால், அதிலும் ஒரு லோடு Msand மண்ணை கொட்டியது போலோர் சிக்கல்! சிக் பில் எனது பணி தான் என்பதால், வசந்த் & கோ. வில் வாங்கிடும் A.C. க்கான தவணைப் பணத்தைப் போல, பிய்த்துப், பிய்த்துத் தான் முடித்துத் தந்திருந்தேன். So அப்போது கொஞ்சம், இப்போது கொஞ்சம் என Dtp பணியும் ஓடியிருந்தது! எடிட்டிங்கும் முடிந்து, வியாழன் மாலை அச்சுக்குச் சென்றது. வெள்ளி காலையில் அச்சான பக்கங்களை சாவகாசமாய் புரட்டிப் பார்த்த நொடியில் தூக்கி வாரிப் போட்டது! கதையின் முதல் 12 பக்கங்களில் வண்டி வண்டியாய் பிழைகளோடே அச்சாகி இருந்தன 🤕🤕... ஒவ்வொன்றையும் நான் திருத்திய நினைவு தெளிவாக இருக்க, ஆபீசையே உலுக்கி எடுத்தேன் - எவ்விதம் சொதப்பல் நிகழ்ந்ததென்று கண்டுபுடிக்க! பார்த்தால் முதல் 12 பக்கங்களில் மட்டும் செய்த திருத்தங்களை சரியாக save பண்ணாது கோட்டை விட்டிருப்பது தெரிய வந்தது. So அச்சுக்கு சென்ற கோப்புகளில் முதல் 12 pages திருத்தங்கள் save ஆகிடாதவை!! மண்டையெல்லாம் உஷ்ணம் ஆகிப் போச்சு - சரளமாய் கண்ணடித்த பிழைகளைக் கண்டு! வேற வழியே லேது, அந்தப் பக்கங்கள் வரும் form-களை மொத்தமாய் குப்பையில் கடாசி விட்டு, புதுசாய் தாள் வாங்கி, இன்னொருவாட்டி பிரிண்ட் பண்ணுவதே தீர்வு என்று புரிந்தது! So அதையும் நேற்றிரவு தான் செய்து முடிக்க முடிந்தது ! Phewwww!
ரைட்டு, மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த அம்புட்டையும் இறக்கி வைத்தாயிற்று என்பதால் கொஞ்சம் இலகுவாய் உணர முடிகிறது! செம ஜாலியாய் 2026-ன் அட்டவணையின் இறுதி stretch பணிகளுக்குள் பிஸியாகி வருகிறேன்!
இங்கே இம்முறை உதைப்பது நம்ம பட்ஜெட் மட்டுமே!
பேக்கிங் டப்பிகள்; கூரியர் கட்டணங்கள் சுத்தமாய் ஒரு ஆண்டுச் சந்தாவினில் ரூ.725/-ஐ ஆக்கிரமித்துக் கொள்கின்றன இப்போதெல்லாம்! So மீதமிருப்பது தோராயமாய் ரூ.5200/- தான் - அதாவது ஆண்டுச் சந்தாக்கள் ரூ.6000/- எனும் நம்பரை தொட அனுமதிக்கலாகாது; அதற்குக் கீழாகவே இருந்திட வேணுமென்ற அரூபக் கட்டாயத்தால்!
இந்தப் பணத்துக்குள் "தல'' கிட்டத்தட்ட ஆண்டின் 90% சதவிகித மாதங்களில் நம்மை மகிழ்விப்பதெற்கென ரூ.2200/- (just a rough number) அவசியம். அது சமரசம் செய்ய இயலா சங்கதி!
ஆக, மீதமிருக்கும் ரூ,3000/-ல் தான் ஐயர்; சமையல்; நாதஸ்வரம்; பந்தல்; போட்டோகிராபர்; ஜானவாசம்; மேடை டெக்கரேஷன்; பெண் அலங்காரம்- என சகலத்தையும் செய்து முடிக்க வேண்டியுள்ளது!
நாயகப் பெருமக்களின் எண்ணிக்கைகள் கூடியிருப்பதற்கு ஏற்ப சந்தாவின் மொத்தத் தொகையையும் சற்றே உசத்தினால் கூட - "லயனுக்கு சந்தா கட்ட பேங்க்கிலே லோன் போடணும், லாட்டரி டிக்கெட் வாங்கணும்!'' என்ற ரேஞ்சில் பொங்கலோ, பொங்கலுக்கு சில பல வித்துவான்கள் தயாராகயிருப்பார்கள்!
மறுபக்கமோ அவர்களே ஒரு மரு ஒட்டிய முகத்தோடு ''ரெம்ப சீப்ங்கணா... "ஆனை கல்லறை" ரண்டே ஆயிரம் தான்ங்ணா..! "பூனை பள்ளத்தாக்கு" மூணே ஆயிரம் தான்'' என்று நமது முந்தைய வெளியீடுகளை பிரிண்ட் போட்டு கனஜோராய் போணி பண்ணிக் கொண்டிருப்பார்கள் என்பது வேறு விஷயம்!
So "பையிலிருக்கும் பணத்துக்குள் ஒரு முழுமையான விருந்தை சுவைப்பது எப்படி?'' என்று Rapidex கைடுகளில் தேடிக் கொண்டிருக்கிறேன் இந்த நொடியில் !
உங்களுக்கான questions for the week :
1.சந்தாத் தொகைளுக்கு இரண்டு தவணைகள் எப்போதும் போலவே உண்டு! So இம்முறையும் அந்த ரூ.5900/-ரேஞ்ச் ஓ.கே.வா? அல்லது கொஞ்சம் குறைத்தால் நலமா?
2.சந்தாக்களை ஊக்குவிக்க ஏதேனும் ரோசனைகள் ப்ளீஸ்?
3. நடப்புச் சந்தாவில் உள்ள யாரேனும் ஒரு ஹீரோ/ ஹீரோயினை "வேணவே வேணாம்'' என்ற category-ல் சேர்ப்பீர்களா? Spoon & White நீங்கலாய்?
ரைட்டு,சந்தா பல்ட்டிகளை முடித்து விட்டு தீபாவளி மலர்ஸ் பணிகளுக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன் folks! Bye all.. see you around... Have a lovely Sunday!
And டெஸ்பாட்ச் செவ்வாய் காலை தான்! சாரி guys!