Powered By Blogger

Friday, August 15, 2025

ஆகஸ்டில் ஒரு திருவிழா !

நண்பர்களே,

வணக்கம்! "மாற்றம் ஒன்றே நிரந்தரமானது'' என்று எக்கச்சக்க தபாக்களுக்கு கேட்டிருப்போம் தான்! ஆனால், வாழ்க்கையின் சில தருணங்களுக்கு இது பொருந்தாது போலும்! அதற்கென்ன சிலபல உதாரணங்கள் சொல்லலாம்!

*பக்கத்து டேபிளுக்கு நல்லா "புஸ்'ஸென்று இளவரசரின் இடையைப் போல உப்பி, எண்ணெயே குடிக்காமல் வந்து சேரும் சன்னா படூராவைப் பார்த்து ஜொள்ளு விடும் நம்ம பழக்கம் ஒரு போதும் மாறாது!

*அதே நினைப்பில் நாமளும், அதே சன்னா படூராவை ஆர்டர் பண்ணினால், குற்றால குளியலுக்கென மாலிஷ் செய்த மொக்கைச்சாமியைப் போல - தொறுக்குத் தொறுக்கென்று எண்ணெயில் குளித்தபடியே, சப்பிப் போனதொரு வஸ்து 'பட்டூரா' என்ற பெயரில் நம்மைத் தேடி வந்து சேர்வதும் ஒரு போதும் மாறாது!

*ரைட்டு...நல்லதா லோயர் பெர்த் கிடைச்சிருக்கு.. நிம்மதியா கட்டையைச் சாய்க்கலாம்னு மனக்கோட்டையோடே ரயி­லில் ஏறினால் ட்ரில்­லிங் மிஷினைக் கொண்டு ப்ளாட்பாரத்தில் துளை போடும் அதே உக்கிரத்தோடு குறட்டை விடும் நீர்யானை மாமா நமக்கு நேர் மேலே மிடில் பெர்த்தில் சயனம் பண்ணுவதும் ஒருக்காலும் மாறாது!

*"நச்'னு செலெக்ஷன் பண்ணியிருக்கோம்! பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸா தூக்கி நீட்டினால், பாரியாள் அப்படியே உச்சி மோர்ந்திடுவாள் என்ற கனவோடு போனால் - டப்பியைத் திறந்து பார்த்த முதல் கணத்திலேயே அஷ்டகோணலாகிடும் வதனத்தோடு- "ஏன்யா அம்மாம் பெரிய கடையிலே வேற கலரே இல்லி­யா? இதை ஒரு புடவைன்னு செலக்ஷன் வேற பண்ணினீராக்கும்?'' என்று வீட்டம்மாக்கள் பாராட்டுப் பத்திரங்கள் வாசிப்பதிலுமே மாற்றமே நிகழாதே!!

இப்படியே அடுக்கிச் செல்லக் கூடிய "மாற்றங்கள் இல்லா நிகழ்வு"களோடு இன்னொன்றையுமே சேர்த்துக் கொள்ளலாம்! And அது தான் ஆகஸ்டில் ஈரோட்டில் நமக்கென நிகழ்ந்திடும் மேஜிக்! 2013 முதலாகவே ஒவ்வொரு ஆகஸ்டிலும்- புத்தகவிழா விற்பனைகள் ஒரு பக்கமெனில் உங்களைச் சந்தித்து நாங்கள் பெற்று வரும் உற்சாக மின்சாரங்கள் ஈரோட்டின் மறக்க இயலா உச்சங்கள் என்பேன்! நடப்பாண்டுமே அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல!

*சீனியர் எடிட்டர் நம்மோடில்லை..!

*ரொம்பச் சமீபமாகவே சேலத்தில் இரங்கல் கூட்டத்துக்கென சந்தித்துள்ளோம்!

*இரண்டே வாரங்களுக்கு முன்னே தான் க்ரிக்கெட் & செஸ் போட்டிகளுக்கென நண்பர்கள் ஒரு ஞாயிறை முழுசாய் செலவிட்டிருந்தனர்!

*And  நவம்பரில் சேலத்தில் "சாம்பலி­ன் சங்கீதம்'' ரிலீஸுக்கென மீண்டும் சந்திக்கும் திட்டமிடலும் உள்ளது!

இந்தப் பின்னணிகளில் நடப்பாண்டின் ஈரோட்டுப் புத்தக விழாவின் முதல் வாரயிறுதியில் சந்தித்திட உங்கள் மத்தியில் பெரியதொரு ஆர்வம் அலையடிக்கவில்லை தான்! So நானுமே சகோதரியின் இல்லத்து விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு, டிக்கியை சிவகாசியிலேயே பார்க் பண்ணுவதே நலமென்று தீர்மானித்திருந்தேன்! ஆனால்... ஆனால்.. "இந்த தபா சந்திப்பு இல்­லியா?'' என்ற வினாக்கள் சிறுகச் சிறுக பெருக ஆரம்பிக்க, எனக்குள் லைட்டாய் ஒரு நெருடல்! "இத்தனை வருஷத்துப் பழக்கம்... பொசுக்கென உதறிட்டோமோ?'' என்று பட்டது! சரி.. ரைட்டு.. முதல் வாரயிறுதி இல்லாங்காட்டி என்ன - மறு ஞாயிறுக்கு ஈரோட்டு விஜயத்தை வைத்துக் கொள்ளலாமென்ற நினைப்பு துளிர் விட, ஆரம்பித்தது! "ஈரோட்டுப் புத்தகவிழா  க்ரூப் என்று இயங்கி வரும் வாட்சப் க்ரூப்பில் இது குறித்து லேசாக வினவிப் பார்த்த போது கூட கொட்டாவிகள் கலந்த பதில்களே கிட்டின! "ஆஹா.. அவசரப்பட்டுட்டோமோ? ஆளில்லாத கடையிலே சாயா ஆத்த வான்டடா கையை உசத்திட்டோமோ?'  என்று மண்டையைச் சொறிந்தேன்!

ஒவ்வொரு முறையும் ஈரோட்டின் ஏற்பாடுகளுக்கு துவக்கம் தந்திடும் ஸ்டாலி­ன் சாரும் பேச ஆரம்பித்திருக்க, மொத்தம் பதினெட்டு பேர் தான் ஞாயிறு சந்திப்புக்குத் தேறுவார்களென்று ­லிஸ்ட் போட்டிருந்தோம்! இவர்கள் நீங்கலாக - செஸ் போட்டிக்கென டெம்போவை வச்சு ஏற்பாட்டாளர்கள் கடத்தி வரக் கூடிய நண்பர்களும் தேறுவார்கள்; so மிஞ்சி மிஞ்சிப் போனால், 25 தலக்கட்டுக்களைத் தாண்டாது என்பது யூகமாக இருந்தது! போன இரண்டு வருஷங்களும் OASIS ஆரங்கில் கிட்டத்தட்ட 225+ பேர் ஆஜரான நிலையி­லிருந்து இந்த இருபத்தி ஐந்து என்ற நம்பர் பொசுக்கென்று உறுத்தியது! சரி.. மொத்தமே இம்புட்டுப் பேர் தான் ஞாயிறுக்கு எனும் பட்சத்தில், ஸ்டாலி­ன் சார் ஆபீஸிலேயே சந்திப்பு; சாப்பாடு; செஸ் போட்டி- என சகலத்தையும் கோவிந்தா போட்டுவிடலாமேயென்று மகாசிந்தனை உதயமானது! ஆனால், செஸ் போட்டிகளுக்கென பவானிசாகர் டேமைத் தவிர்த்த பாக்கி இலக்குகளையெல்லாம் ஏற்பாட்டாளர்கள் காலை -மதியம் -இரவென பரிசீலி­த்து வந்த நிலையில் - சின்னதாக ஏதேனுமொரு ஹாலை புக் பண்ணிவிட்டால் நம்ம சந்திப்புக்கும் சுலபம்; சதுரங்கத்துக்கும் சௌகரியம் என்று தீர்மானித்தேன்! இதெல்லாமே நடந்தது வியாழன் இரவினில்!

"கடகடவென டீம் ஈரோடு களமிறங்கினர்; மளமளவென மினி அரங்குகளின் போட்டோக்களை அனுப்பி வைத்தனர்! ஒரு 40 பேர் அமரக் கூடியது போலானதொரு ஹாலே சல்லி­சாய் சாத்தியமாகிட "டக்'கென்று அங்கேயே துண்டை விரித்தோம் & அதையே அறிவிப்பாகவும் செய்து வைத்தேன்! Maximum 35 பேர் வந்தாலே பெரிய விஷயம்; அதற்கேற்ப சாப்பாட்டு ஏற்பாடுகளையும் செய்திடலாமென்று சொன்னேன்! 

எனக்கோ ஞாயிறன்று கிடா விருந்தென்றால் மக்கள் குஷியாகிடுவர் என்ற எண்ணம்; பச்சே நம்ம ஏற்பாட்டாளர் சைவப் - பார்ட்டி என்பதால் கிடாவுக்குத் தடா போட்டோம்! And அடியேன் அந்த சைவ மெனுவை முன்மொழியும் படலமும் இனிதே நிறைவுற்றது!

இந்த முறை வைத்தியர் ஒண்டியாளாய் தான் லேகிய டப்பியோடு ஈரோடுக்குப் பயணமாகிட வேண்டியதொரு சூழல்! ஜுனியர் எடிட்டருக்கு வேறு பெர்சனல் வேலைகள் & அப்பா இல்லாத மினி மீட்டிங்குக்கு கருணையானந்தம் அங்கிளை இழுத்தடிக்கவும் தோன்றவில்லை! So முதன்முறையாக சனி மாலையில் தனித்து ரயிலில் ஏறிய போது- கொஞ்சமாய் "பக்கோ'வென்றிருந்தது! சரி ரைட்டு- சின்ன ஹால்.. சின்ன gathering.... so பெருசாய் ஆத்த உரைக்குத் தேவையெல்லாம் இராதென்று மனசைத் தேற்றிக் கொண்டே நள்ளிரவில் ஈரோட்டில் இறங்கினேன்! VOC பார்கில் புத்தகவிழா நடந்த அந்த நாட்கள் மனசெல்லாம் ஓட்டமெடுக்க, பெருமூச்சோடு ரூமில் செட்டில் ஆனேன்! 2025 ஈரோட்டு விழாவின் விற்பனைகளோ decent ஆக இருந்தன தான்; அதே சமயம் கூரையிலேறி கூப்பாடு போடும் அளவிலுமே அதுவரை இருக்கவும் இல்லை தான் ! சரி.. இந்த முறை எல்லாமே சற்றே lowkey தான் என்று மனசைத் தேற்றியபடியே வாட்சப்பைப் பார்த்தால் - "ஞாயிறு காலை வருகை தரவுள்ளோர் ­லிஸ்ட் 45-ஐ தொட்டுவிட்டது " என்ற தகவல்! "ஹை.. பரால்லி­யே?! சாப்பாட்டைக் கூட்டி விடலாம்!' என்றபடிக்கே பதில் போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்து போனேன்!

காலையும் புலர்ந்தது & ஒவ்வொரு ஈரோட்டு விழாவின் போதும் ஸ்டாலி­ன் சாரின் இல்லத்தில் அரங்கேறிடும் ஒரு breakfast மீட்டிங் இம்முறையும் அதே போல துவக்கம் கண்டது! சுடச் சுட கேசரி & வடையில் ஆரம்பித்து ஆளாளுக்கு வயிற்றை ரொப்பி முடித்த சற்றைக்கெல்லாமே "மெபிஸ்டோ வருவாரா - வர மாட்டாரா?'; "Science fiction போடுவீரா ? நஹியா?'' என்ற ரேஞ்சில் கேள்விக் கணைகளோடு நண்பர்கள் "கச்சேரியைத் ' துவக்கி வைத்தனர்! பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் ஓடியதே யாருக்கும் தெரியலை and காலை பத்து மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாண்டுக்கு நேர் எதிரே அமைந்திருந்த அந்த ஹோட்டல் ஹா­லில் வெளியூர் நண்பர்கள் குழுமத் துவங்க, அங்கே புறப்பட்டு விடலாமெனத் தீர்மானித்தோம்!

புது ஹோட்டல்.. புது ஹால்... புதியதொரு சூழல்,.. ஆனால், நண்பர்களிடையே இழையோடிய மகிழ்வும்.., உற்சாகமும் மட்டும் துளி கூட மாற்றமின்றி தெறிக்க விட்டுக் கொண்டிருந்தது! ரொம்ப வருஷங்களுக்கு முன்னே VOC பார்க் வாச­­லிலிருந்த Le Jardin ஹோட்டலி­ன் நாலாவது மாடியில் ஒரு சிறு அரங்கில் சந்தித்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தன! ஆனால், இந்த ஹாலோ அதைவிடப் பாந்தமாய் இருக்க, நண்பர்கள் கையைக் காலை நீட்டியபடியே கச்சேரியைத் துவங்கினர்! வழக்கமாய் புத்தக விழா அரங்கின் பின்னுள்ள மரத்தடியில், மாலைப் பொழுதுகளை இதுபோன்ற கேள்வி - பதில் sessions-களோடு ரகளையாக்கிடுவது வாடிக்கை! இம்முறையோ இடமும், நேரமும் தான் மாறுபட்டனவே தவிர, அந்த மின்சார மகிழ்வுகள் அல்ல!

இது போலான sessions என்றைக்குமே எனக்கு எக்கச்சக்க ரூட்களில் உங்கள் ஒவ்வொருவரின் ரசனைகளுக்குள்ளும், சிந்தனைகளுக்குள்ளும் எட்டிப் பார்க்கும் வாய்ப்புகளைத் தந்திடுவது வழக்கம்! And மனம் திறந்து நீங்கள் பேசும் போதெல்லாமே இந்த பொம்ம புக் துறைக்கு ஆரோக்கியமான ஆயுள் காத்திருப்பது புரிந்திடும்! Was no different this time too!

தங்கக் கல்லறை ஹார்ட்கவர் இதழை நம்ம புனித சாத்தான்ஜியிடம் ஒப்படைக்கும் படலத்தின் போது, துளிர்விட்ட சிரிப்பலைகளும், மகிழ்வின் பிரவாகங்களும் மதியம் இரண்டு மணி சுமாருக்கு வயிற்றுப்பாட்டைக் கவனிக்கும் பொருட்டு எழுந்திட்ட நொடி வரை இம்மி கூட மட்டுப்படவில்லை! சிலர் மதியமாய் ஊர் திரும்ப வேண்டி இருந்ததாலும், செஸ் போட்டிகளைத் துவக்கிட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாலும் கேள்வி-பதில் ரகளைகளுக்கு "சுபம்'' போட வேண்டிப் போனது! அங்கே கேட்கப்பட்டட வினாக்களை பற்றி, பதிவின் இறுதியில் பதிவிடுகிறேன்!

சுவையான லஞ்ச்.. ஐஸ்க்ரீம்.. பீடா என்று வயிறுகளையும் குளிர்வித்த பிற்பாடு, செஸ் போட்டிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு த் துவக்கி வைத்த கையோடு, நான் ரூமுக்குத் திரும்பிய போது மணி மதியம் மூன்று! அப்படி என்ன தான் பேசியிருந்தோம் - அலசியிருந்தோம் என்பது அந்த நொடியில் உள்ளுக்குள் register ஆகியிருக்கவில்லை - ஆனால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களை காமிக்ஸின் தேடல்களில் செலவிட்டுப் புளகாங்கிதம் அடைந்திருந்தோம் என்பது மட்டும் புரிந்தது! ரெகுலராய் மீட்டிங்குகளுக்கு வந்திடும் நண்பர்களின் முகங்களில் ரோஸ் பவுடர் கலந்த புன்னகைகள் என்றால், புதுசாய் ஜோதியில் ஐக்கியமாகியிருந்தோருக்கோ தலைகால் புரியாத உற்சாகம்! துவக்கத்தில் காலை நீட்டி அமர்ந்திருந்த நண்பர்கள், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒருத்தர் மடியில் இன்னொருத்தர் உட்காராத குறையாய், நெருக்கிப் பிடித்துக் குந்திட வேண்டிப் போயிருந்தது- becos அன்றைய வரவு எண்ணிக்கை 65....!! 25-ல் ஆரம்பித்த நம்பரானது தடாலடியாய் 65-ஐ தொட்டிருக்க, ஏதேதோ பல்டிகள் அடித்து டீம் ஈரோடு சமாளித்து விட்டிருந்தனர்!

செஸ் போட்டிகள் ஒரு பக்கம் ""கன்னித்தீவு' தொடரைப் போல நீண்டு செல்ல முக்கால்வாசிப் பேர் புத்தகவிழாவினை ரசித்திடப் புறப்பட்டிருந்தோம்! நாலே முக்கால் சுமாருக்கு நான் அரங்குக்குள் நுழைந்த போதே அட்டகாசமான கூட்டம் நெடுகிலும் தென்பட்டது! நாமிருந்தது முதல் வரிசையிலேயே என்பதால் - வந்திருந்த பெரும் ஜனத்திரளில் கணிசமானோர் நமது ஸ்டாலுக்குள் நுழையாது நகரவே இல்லை! இப்போதெல்லாம் ஒரு செம healthy trend-ஐ காண முடிகிறது! "காமிக்ஸா? தமிழ் காமிக்ஸா?' என்று ஊசிப் போன கருவாடைப் பார்த்தது போல் மக்கள் முகத்தைச் சுளித்த நாட்களெல்லாம் இப்போது போயே போச்சு! உள்ளே புகுந்தால் நிதானமாய் புக்ஸை ரசித்து, பிடித்த எதையேனும் வாங்கிப் போகத் தவறுவதே இல்லை! சிறுகச் சிறுக நமது tagline மெய்யாகி வருவதை உணர முடிகிறது - 7 முதல் 77 வரை அனைவருக்குமே நம்மிடம் ஏதாச்சும் இல்லாது போவதில்லை என்பதால்!

**க்ளாஸிக்ஸ் பிரியர்களுக்கு மாயாவி மாமா, ஜானி நீரோ சித்தப்ஸ் மட்டுமென்றில்லாது வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, காரிகன், சார்லி et al என்று இருப்பதால் செம ஹேப்பி!

**கமர்ஷியல் பிரியர்களுக்கு அள்ளி மாளாத நம்பரில் நாயக/நாயகியரும், இதழ்களும் நம் வசம் இருப்பதால், அவர்களும் ஹேப்பி அண்ணாச்சி!

**காமிக்ஸ்களுக்குப் புதியவர்களுக்கு டின்டின்.. லக்கி லூக் என்று கலர்புல் cocktail

**வீட்டு சுட்டீஸ்களுக்கென கபிஷ், கதை சொல்லும் காமிக்ஸ், ரின்டின் கேன், எலியப்பா என ஒரு அழகான வரிசை!

**கிராபிக் நாவல்களைத் தேடுவோருக்கோ, கென்யா.. ஒற்றை நொடி- ஒன்பது தோட்டா.. பிஸ்டலுக்குப் பிரியாவிடை etc..etc.. என்று லோடு லோடாய் ஆல்பங்கள்!

**கையில் கொஞ்சமாய் காசு வைத்திருக்கும் மாணாக்கருக்கோ ரூ.30/- விலைகளில் அட்டகாசமான கலர் இதழ்கள்!

என்று நமது collection-களில் "எல்லாமே இருக்கு- நல்லாவும் இருக்கு'' என்பதால் - ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் பாணியில் குடும்பம் குடும்பமாய் வருகை தருகின்றனர் இப்போதெல்லாம் ! மாலை ஏழு மணி சுமாருக்கு நான் ஊர் திரும்ப ரயிலைப் பிடிப்பதற்காக புத்தகவிழாவி­லிருந்து கிளம்பிய வேளையில் கூட நெரிசல் இம்மியும் குறைந்திருக்கவில்லை! And அந்த ஞாயிறின் sales ஈரோட்டின் ஒற்றை தின விற்பனைக்கொரு புது உச்சமும் கூட!!

ரயில் நிலையத்தில் என்னை இறக்கி விட நண்பர்கள் வந்திட- அங்கேயும் கொஞ்ச நேரத்திற்கு அரட்டை தொடர்ந்தது! ரயி­ல் ஏறி மேல் பெர்த்துக்கு சர்க்கஸ் பண்ணித் தொற்றியமர்ந்த நொடியில் மனசெல்லாம் உற்சாக மத்தளம் கொட்டிக் கொண்டிருந்தது போலி­ருந்தது! ரீல்ஸ்.. ஷார்ட்ஸ்.. OTT.... தளங்களின் அசுர வளர்ச்சி.. யூடியூப்பின் வீச்சு என்பதன் மத்தியில் இந்த பொம்ம புக் வாசிப்பானது எத்தனை காலத்துக்கு ஜீவித்திட இயலுமோ? என்ற வினாக்கள் எப்போதாவது தலைக்குள் தாண்டவமாடுவதுண்டு! அந்த நெகடிவ் சிந்தனைகளை புறம்தள்ள நிரம்பவே பிரயத்தனப்பட வேண்டி வரும் தான்! ஆனால், ஈரோட்டில் செலவிட்ட அந்தப் பன்னிரெண்டு மணி நேரங்களானவை சுத்தமாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவராட்டம் மனதை இலகுவாக்கியிருந்தது! இந்த அன்பும், நேசமும், காமிக்ஸ் காதலும் மனிதர் உணர்ந்து கொள்ளும் ரகமே அல்ல- அதையும் தாண்டி சாத்வீகமானது என்று மண்டைக்குள், குணா கம­லின் மாடுலேஷனில் ஒ­லித்துக் கொண்டிருந்தது! 

ஊர் திரும்பி, மறுநாள் வேலைக்குத் திரும்பி, வாட்சப் க்ரூப்களில் கரைபுரண்டோடிக் கொண்டிருந்த மகிழ்வுகளை தரிசித்த போது ஒற்றை தினத்துக்கு நான் மாத்திரமன்றி அனைவருமே பால்யங்களுக்குத் திரும்பியிருந்தது புரிந்தது! ஏதேதோ ஓட்டங்கள்- பொறுப்புகள்- பாடுகளுக்குள் ஜீவித்து வரும் நமக்கெல்லாம் இந்த காமிக்ஸ் எனும் சோலை எத்தனை precious என்பதும் அந்த நொடியில் ஸ்பஷ்டமாய் புரிந்தது! இதோ- அடுத்த சந்திப்பு எப்போதென்று இப்போதே மனசு அலைபாயத் துவங்கிவிட்டது!! விண்ணில் இருந்தபடிக்கே அப்பா ஈரோட்டின் இந்த லேட்டஸ்ட் அத்தியாயத்தையும் ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்ற திட நம்பிக்கையோடு லேசாக அடைத்திருந்த தொண்டையை செருமிக் கொண்டேன்!

இல்லி­யே - எங்களுக்கெல்லாம் கண்கள் வியர்க்காதே ..! நாங்கள்லாம் ஸ்டீல்பாடி சித்தப்புக்கள் ஆச்சே!!

And இதோ - அன்று அலசிய சில topics :

1.டெக்ஸ் தொடரில் மெபிஸ்டோ கதைகளுக்கும் இடம் கொடுக்கலாமே? என்ற கோரிக்கை! 

இது புதிதே அல்ல தான் & இது குறித்த எனது நெருடல்களிலும் இரகசியங்களே கிடையாது தான். Yet - உங்களது சிந்தனைகள் ப்ளீஸ்?

2.Science-fiction காமிக்ஸ்... இவற்றிற்கு நம் மத்தியில் என்றேனும் இடம் கிட்டுமா? 

Again இதுவொரு sensitive கேள்வி...! Maybe நாம் இவற்றை முயற்சிக்க வேண்டிய காலகட்டம் வேகமாய் நெருங்குகின்றதோ என்ற எண்ணம் உள்ளுக்குள்!! AI அசுர கதியில் மாற்றங்களை நிகழ்வித்து வரும் நாட்களிவை..... கொஞ்சமேனும் நாமும் அந்த மாற்றங்களுக்கு இசைவு சொல்லணுமோ - காமிக்ஸ் வாசிப்பில்? Your thoughts folks?

3.பராகுடா பாணியில் கடலில் அரங்கேறும் கதைகளுக்கு வாய்ப்புண்டா?

நிச்சயம் உண்டு... But சிக்கலே அவ்விதக் கதைகளின் நீளங்கள் தான்! குறைந்த பட்சமாய் ₹.450 விலைகளை அவற்றிற்கு நிர்ணயிக்க வேண்டி வரும் என்ற ஒரே காரணம் தான் தடை போட்டு வருகிறது! ஏற்கனவே பல முறை சொன்னது போல, சந்தா தொகைகள் நாம் பரிச்சயம் கொண்டுள்ள தொகைகளுக்கு அதிகமாகிட அனுமதிக்கலாகாதே என்ற வரையறை தான் காலை கட்டிப் போடுகிறது! But still - கடல் கொள்ளையர் சார்ந்த கதைகள் will stay on top of our priority list!

4.கென்யா  பாணியில் அடுத்த நமீபியா தொடர் என்னாச்சு ?

Nopes - கதை படு மொக்கை என்பதால் அந்த எண்ணம் dropped !

5.அந்த 1000 பக்க டெக்ஸ் ஆல்பம் ??

இது முழுக்க முழுக்கவே round figure-கள் மீதான நமது காதல் உருவாக்கும் தேடலே அன்றி, வேறில்லை ! கிளாசிக், சூப்பர்-ஹிட் மறுபதிப்புகளை 350 பக்க ஆல்பங்களாய் லயன் லைப்ரரியில், கலரில் வெளியிடுவதை தொடர்ந்தால் சிரமங்களின்றி 3 புக்சில் அந்த ஆயிரம் பக்க எண்ணிக்கையினை எட்டிப் பிடித்து விடலாம் & படிக்கவும், பத்திரப்படுத்தவும் அந்த 3 புக்ஸ் சுலபமாக அமைந்திடும். மாறாக ஏக் தம்மில் ஆயிரம் எனில் பயில்வான் ஜாடைக்கு அமைந்திடும் புக்கை கையாள்வது உங்களுக்குத் தான் சிரமமாக இருக்கக்கூடும் ! So பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா ? அல்லங்காட்டி LED பல்புகள் வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமுங்களா ? சொல்லுங்க மக்களே !

6.ஆயிரம் பக்கங்களில் இளம் டெக்ஸ் ??

Uff....இது போலான மெகா முயற்சிகளின் பெரும் பகுதி மறுபதிப்புகளாய் இருந்தால் மட்டுமே தலை தப்பிக்கும் ! முழுசுமே புதுக்கதைகள் எனில் மொழிபெயர்ப்பிலும், எடிட்டிங்கிலும் நாக்கு மாத்திரமன்றி, சகல அவயங்களும் தொங்கிப் போய் விடும் என்பது உறுதி !! So இளம் டெக்ஸ் இப்போது போலவே 3 / 4 / 5 கதைகள் கொண்ட தொகுப்புகளாகவே தொடர்ந்திடும் ! 2026 -ல் காத்திருப்பது 3 அத்தியாய சாகசம் !

7.ஜான் மாஸ்டர் ? ரெட்டை வேட்டையர் ? விஷம் ? மேகி கேரிசன் Part 3 - இவையெல்லாம் எப்போது ?

2026 for sure !!

8.இளம் டைகர் தொடரில் இன்னமும் கலரில் மறுபதிப்பு கண்டிருக்கா "இளமையில் கொல் - Part 2 & 3 " பற்றி ??

Again 2026 !! பாகம் 1 ; 2 & 3 இணைந்த ஒரே ஆல்பமாக்கிடலாமுங்களா ?

இவை தவிர, இம்மாதத்து KINGS ஸ்பெஷல் - நிரம்பவே சிலாகிப்புகளுக்கு ஆளாகியதை அன்று கவனிக்க முடிந்தது ! இந்த கதம்ப format கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்திருப்பதால் அடுத்தாண்டிலுமே இதனை கொஞ்சமாய் தொடரச் செய்யலாமா ? What say folks ?

அதே சமயம் க்ளாஸிக் காதலர்கள் கொஞ்சமே கொஞ்சமாய் உணர்ச்சிவசப்பட்டு - "இதை இப்புடி போட்டு, அதை இன்னும் அப்புடிப் போட்டுத் தாக்கலாமே ? என்ற வேகத்தில் பாய்ச்சல் காட்டியதையும் பார்க்க முடிந்தது தான் ! அவர்களது பார்வைகளில் ஆதியும், அந்தமுமாய் தென்படும் க்ளாஸிக் நாயகர்கள் - புது யுக வாசகர்களிடமும் அதே போலான தாக்கத்தினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் சொற்பமென்று புரிய வைக்க tongue தொங்கிய போயிண்டே !! அவர்களை சற்றே ஆசுவாசப்படுத்தி, தரைக்குக் கொணர கொஞ்சம் திணறித்தான் போச்சு !! Nostalgia !!!!!!!!!

But ஒரு அதிரிபுதிரி முன்மொழிவு அரங்கை திகைக்கச் செய்தது !! அது  வேறொன்றுமில்லை - "மாதமொரு மாடஸ்டி !!" என்ற கோஷமே !! யோசிச்சுத் தான் பாருங்களேன் மக்களே - மாதமொரு பாயச குண்டாவும் ரெடியாகக் கொண்டே இருக்கும் !! ஆத்தீஈஈ !!

Bye all.....சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! Enjoy the long weekend !! See you around !

















111 comments:

  1. Replies
    1. வாழ்த்துகள் சகோ

      சூப்பர்

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. வணக்கம் 🙏🏻 நன்றி சார்

    ReplyDelete
  4. 1.டெக்ஸ் தொடரில் மெபிஸ்டோ கதைகளுக்கும் இடம் கொடுக்கலாமே? என்ற கோரிக்கை!

    கொடுக்கலாம்... கொடுக்கணும்.. கொடுத்தே ஆகணும்.


    .பராகுடா பாணியில் கடலில் அரங்கேறும் கதைகளுக்கு வாய்ப்புண்டா?

    அப்போது ஓட்டெடுப்பில் இரண்டாம் இடம் பிடிச்ச கதையை போடலாம் சார்.!

    அப்படி இல்லேன்னா One piece ஐ ஒரே தொகுப்பா போட்டிடலாம்.. (என்னஒண்ணு.. அங்கியே அது முடியலையாம்)

    .அந்த 1000 பக்க டெக்ஸ் ஆல்பம் ??

    வந்தே ஆகணும்னு சொல்லலை.. வந்தா ரெக்கார்ட் ப்ரேக் சேல்ஸ்னுதான் சொல்றோம்.

    இந்த கதம்ப format கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்திருப்பதால் அடுத்தாண்டிலுமே இதனை கொஞ்சமாய் தொடரச் செய்யலாமா ? What say folks ?

    300%

    இளம் டைகர் தொடரில் இன்னமும் கலரில் மறுபதிப்பு கண்டிருக்கா "இளமையில் கொல் - Part 2 & 3 " பற்றி ??

    தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை..

    அது வேறொன்றுமில்லை - "மாதமொரு மாடஸ்டி !!" என்ற கோஷமே !! யோசிச்சுத் தான் பாருங்களேன் மக்களே..

    ஒரு சில்லறை வேலையா ஜெனிவா வரைக்கும் போகவேண்டி இருக்கு.. வரட்டுமுங்களா.!

    ReplyDelete
    Replies
    1. ஜெனிவாவிற்கு செல்லுவது, மாடஸ்டிவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்திடவா, ஜமீனய்யா

      Delete
    2. //அப்படி இல்லேன்னா One piece ஐ ஒரே தொகுப்பா போட்டிடலாம்.. (என்னஒண்ணு.. அங்கியே அது முடியலையாம்)//


      தனி தனி ஆர்க்காக இருக்கும் பாகங்களை இறக்கிடலாம்
      அப்படி போட்டால் நன்றாக இருக்கும்

      Delete
  5. // இந்த கதம்ப format கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்திருப்பதால் அடுத்தாண்டிலுமே இதனை கொஞ்சமாய் தொடரச் செய்யலாமா ? What say folks ? //

    வேண்டாம் எனக்கு. வேதாளர் வர வர பிடிக்கவில்லை. காரிகன் முடியவில்லை. இவரின் கிளாசிக் தொகுப்பை இன்னும் படிக்கவில்லை, காரணம் கதைகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டவில்லை. தூக்கம் வருகிறது. நன்றி

    ReplyDelete
  6. 😘😘🥰🥰💐Me in Sir 💐🙏

    Happy சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Sir🇮🇳😘💐🙏

    ReplyDelete
  7. வணக்கங்கள்

    தி பதிவு 🥳🥳🥳

    ReplyDelete
  8. 1. டெக்ஸ் பல்பு வாங்கறதை பாக்க ஜாலியா இருக்கும். மெபிஸ்டோவை இழுத்து போடலாமே

    2. வரணும். ட்ரை பண்ணினாத்தானே தெரியும்.

    5 இப்ப இல்லேன்னா எப்ப தான் பாக்கறது. ஆயிரம் பக்க டெக்ஸ் வேணும். அவ்வளோ தான்.
    8. கண்டிப்பா வோணும்

    ReplyDelete
  9. இளமையில் கொல் - ஏற்கனவே மறுபதிப்பாக வண்ணத்தில் வந்த பாகங்களை விடுத்து, மறுபதிப்பு காணாத பாகங்களை வெளியிடவும்.

    எத்தனை முறை ஓரே கதையை திரும்ப திரும்ப வாங்குவது. இது கலரில் வெளிவராத மற்ற பாகங்களை வாங்குவோரிடம் வலுக்கட்டாயமாக திணிப்பது போல் ஆகிவிடும்

    ஆகையால் வண்ணத்தில் வெளிவராத பாகங்கள் முதலில் வரட்டும். இதில் ஏற்கனவே வந்த பாகத்தை சேர்த்து எங்களை சிரமத்தில் விட வேண்டாம் சார்

    ReplyDelete
    Replies
    1. சார் திணிப்பதற்க்காக கேட்கவில்லைங்க, சகோ

      அங்கு மீட்டிங் ஹாலில் கேட்டப்போது, வாசகர்கள் சேர்த்தே போடலாம் என்று சொன்னார்கள், அப்போதும் சார் இல்லை முதல் பாகம் எங்கிட்ட ஏன் இதையும் தரீங்க கேட்பாங்க என்றார். பெரும்பாலான வாசகர்கள் முதல் பாகம் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதனால் முதல் பாகத்தை விட்டுவிட்டு மீதி இரண்டையும் தனியாக போட வேண்டாம் என்றனர்
      புதிதாக இணைந்த வாசகர்களிடம் இந்த புத்தகம் இருந்திட வாய்ப்பில்லை

      ஆகையால் தான் மீட்டிங்கில நடந்த முடிவை வைத்து புத்தகத்தை போடாமல் இங்கும் கேள்வி கேட்கிறார், சகோ

      பெரும்பாலான வாசகர்களின் விருப்பம் எப்படி வேண்டிடுமோ, அதனை தெரிந்து கொள்ள விழைகிறார்

      Delete
    2. புதிதாக எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் ரம்யா. வெகு சொற்பமே. ரெகுலராக புத்தகம் வாங்கும் நமது வாசகர்கள் அனைவரிடமும் இந்த வண்ண மறுபதிப்பு இருக்கும்.

      ஆகையால் இவை சேர்ந்து வந்தால் வீண் சுமையே. தனியாக வெளியிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை

      இப்படியே திரும்ப திரும்ப ஓரே கதையை படித்து கொண்டும், புத்தகங்களை வாங்கி கொண்டும் எத்தனை காலம் தான் ஓட்டுவது

      Delete
    3. // புதிதாக எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் ரம்யா. வெகு சொற்பமே. ரெகுலராக புத்தகம் வாங்கும் நமது வாசகர்கள் அனைவரிடமும் இந்த வண்ண மறுபதிப்பு இருக்கும்.

      ஆகையால் இவை சேர்ந்து வந்தால் வீண் சுமையே. தனியாக வெளியிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை

      இப்படியே திரும்ப திரும்ப ஓரே கதையை படித்து கொண்டும், புத்தகங்களை வாங்கி கொண்டும் எத்தனை காலம் தான் ஓட்டுவது
      //

      உண்மை. எனது கருத்தும் இதுவே.

      Delete
  10. / இந்த கதம்ப format கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்திருப்பதால் அடுத்தாண்டிலுமே இதனை கொஞ்சமாய் தொடரச் செய்யலாமா ? What say folks ? //

    நீங்கள் எப்படி கொடுத்தாலும் உள்ளே இருப்பது மாறப்போவதில்லை. அதே உப்புமா கதைகள் தான். ஆகையால் வருடத்திற்கு ஒன்று OK.

    மீதி தொகையை அந்த கடல் சார்ந்த கதைகளுக்கு ஒதுக்கினால் நலம்

    ReplyDelete
  11. /)டெக்ஸ் தொடரில் மெபிஸ்டோ கதைகளுக்கும் இடம் கொடுக்கலாமே?//

    மெபிஸ்டோ பரணில் இருப்பதே சாலச்சிறந்தது

    ReplyDelete
  12. ஒரு இளவரசரின் யெளவனத்தை எதிர்பார்க்கா ஏங்கிளில் ஏடாகூடமாகக் காட்டி எள்ளி நகையாடுவதையே எப்போதும் செய்துவரும் எடிட்டர் சமூகம் இங்கே இரவுபகலாய் இயங்கிக் கொண்டிருப்பதை எடுத்த எடுப்பிலேயே எல்லோருக்கும் எடுத்துரைத்த யதார்த்தமான பதிவு இது!😏

    ReplyDelete
  13. 1. நீங்கள் சொன்ன விளக்கங்கள் ஏற்புடையதாக இருந்தது சார். வேண்டாம் என்பதே என் கருத்தும். இதுக்கு மேல புதுசா எந்த டெக்ஸ் கதையும் வரலேன்னா ட்ரை பண்ணலாம் சார்.
    2. பரீட்சார்த்த முயற்சியா ஒன்னு இறக்கி விட்டு பாருங்க சார். உங்க கதை தேர்வுப்படி 
    3. ஸ்பெஷல் வெளியீடாக ஒன்னு விட்டுப் பாருங்க சார். 
    5. வேண்டுமானால் MMS மாதிரி மூன்று புத்தகமா போட்டு ஒரு கெட்டி அட்டை இல்லாத ஸ்லிப் கேஸ் போட்டு கொடுத்துடுங்க சார்.
    8. 1,2,3 ஒரே ஆல்பமாக போட்டுடலாம் சார்.. 

    ReplyDelete
  14. //1000 பக்க டெக்ஸ் கதை//

    தாராளமாக புதிய கதைகள் வரட்டும். பொறுமையாக நேரம் கிடைக்கும் போது பணியாற்றி மெதுவாகவே கொடுக்கலாம் சார். அவசரம் ஏதும் இல்லை.

    பார்க்காத டெக்ஸ் கதைகள் வண்டி வண்டியாய் இருக்க, மறுபதிப்பில் ஏன் இத்தனை காசை முடக்க வேண்டும்




    ReplyDelete
  15. இளவரசரின் இடை... 😁😁😁😁😁💐💐

    ReplyDelete
  16. 1000 பக்க க்ளாசிக்ஸ் டெக்ஸ்.. கண்டிப்பாய் வேண்டும்.. அந்த சைசில் கற்பனை செய்து பார்க்கவே மனம் பரவசப்படுகிறது.. 💥💥💥💥💥

    ReplyDelete
  17. மதியில்லா மந்திரியை பக்க நிரப்பிகளாகவாவது கொண்டு வாருங்கள் சார்... ஈரோட்டில் நான் கேட்க மறந்த கேள்வி இது.. 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார்
      மதியில்லா மந்திர ஒரு கதையாவது

      Delete
    2. விச்சு-கிச்சுவுக்கே இப்போ தனி புக் போடுறோம் சார் - filler pages க்கு மந்திரியாரெல்லாம் வர வாய்ப்பே நஹி !

      Delete
  18. மெபிஸ்டோ கதைகளும் கண்டிப்பாய் வேண்டும் சார்..
    அதை ஏன் விட்டலாச்சார்யா பாணியில் பார்க்க வேண்டும்..??
    அமானுஷ்யம், திகில், த்ரில் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கலாமே...

    ReplyDelete
  19. 1. மெபிஸ்டோ வில்லனாக ஒரு புத்தகம் வேண்டுங்க

    2. சயின்ஸ் பிக்ஷன் கண்டிப்பாக வேண்டுங்க

    3. பாராகுடா போன்ற கடல் அட்வென்சர் கதை வேண்டுங்க, சார்

    ReplyDelete
    Replies
    1. 8. இளம் டைகர் முதல் பாகம் வந்து சில வருடங்கள் ஆகஅ விட்டது
      கதை முன்சுருக்கத்தை விட
      1,2&3 இணைத்து போட்டு விடலாங்க, சார்

      Delete
    2. யெஸ்.. 1,2,3 இணைத்து ஒரே ஹார்ட் பவுண்ட் இதழாக... 💥💥😘😘

      Delete
    3. கடல் நீங்க சொன்ன எல்லா விஷயங்களும்+1000

      Delete
    4. நன்றிகள் குமார் சகோ

      Delete
    5. கடல்யாழ்915 August 2025 at 09:37:00 GMT+5:30
      // இளம் டைகர் முதல் பாகம் வந்து சில வருடங்கள் ஆகஅ விட்டது
      கதை முன்சுருக்கத்தை விட
      1,2&3 இணைத்து போட்டு விடலாங்க, சார் //
      O K. ஒன்றாய் படிக்க வசதியாய் இருக்கும் தான்!

      Delete
  20. பராகுடா போன்ற சமுத்திர சாம்ராஜ்யக் கதைகளை தாராளமாகப் போடலாம்.. நான்கைந்து பாகங்கள் என்றாலும் ஒரே இதழில் வாசிக்கும் போது அந்த அனுபவம் வேற லெவலில் இருக்கும் சார்.. ஹார்ட் பவுண்ட்டில், அதற்குத் தோதான விலையில் கண்டிப்பாக முயற்சிக்கலாம் சார்...

    ReplyDelete
  21. அறிவியல் புனைவுக் கதைகள்.. நோ ஐடியா சார்.. 🙏🙏

    ReplyDelete
  22. இனிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  23. இளம் டைகரின் மூன்று கதைகளையும் ஒரே இதழாக.. 💐💐💐💐💐👍👍👍🥰🥰🥰

    ReplyDelete
  24. மாதமொரு இளவரசி... 🥰🥰🥰🥰🥰🥰🥰

    குடுத்தாக்கா வேணாம்னா சொல்லப் போறோம்... 😁😁😁😘😘😘😘😘

    ReplyDelete
  25. //ஜான் மாஸ்டர் ? ரெட்டை வேட்டையர் ? விஷம் ? மேகி கேரிசன் Part 3 - இவையெல்லாம் எப்போது ?

    2026 for sure !!//

    மகிழ்ச்சிகள் சார், கூடவே தாத்தாஸ் கதையும் சேர்த்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  26. இளவரசர் செம க்யூட்

    ReplyDelete
    Replies
    1. இளவரசர் பாடற மாதிரி போட்டோ போட்டாங்க... அப்ப எதுவும் சொல்லலை!
      உரை நிகழத்தற மாதிரி போட்டோ போட்டாங்க.. அப்பவும் ஏதும் சொல்லலை! ஆனா தொப்பையை போட்டோ போட்டப்ப மட்டும் 'செம க்யூட் ' டாம்!! கிர்ர்ர் 😼😼

      Delete
    2. உங்கள் அழகினை குறைத்து மதிப்பிட யார் முயற்சித்தாலும், அது நடவாது இளவரசரே 💐💐💐

      Delete
  27. //So இளம் டெக்ஸ் இப்போது போலவே 3 / 4 / 5 கதைகள் கொண்ட தொகுப்புகளாகவே தொடர்ந்திடும் ! 2026 -ல் காத்திருப்பது 3 அத்தியாய சாகசம்//

    நன்று சார்

    ReplyDelete
  28. Last Sunday I attended the Erode meeting. It was a memorable day. I was surprised by the way it was organised so beautifully. My personal thanks to the editor and the orgnaisers for making it great. I also apologise for not confirming my visit early as it was planned only on Sunday morning.

    ReplyDelete
  29. //இந்த அன்பும், நேசமும், காமிக்ஸ் காதலும் மனிதர் உணர்ந்து கொள்ளும் ரகமே அல்ல- அதையும் தாண்டி சாத்வீகமானது என்று மண்டைக்குள், குணா கம­லின் மாடுலேஷனில் ஒ­லித்துக் கொண்டிருந்தது! //


    ❤💛💙💚💜❤💛💙💚💜❤💛💙💚💜❤💛💙💚💜❤💛💙💚💜❤💛💙💚💜

    ReplyDelete
  30. //புது ஹோட்டல்.. புது ஹால்... புதியதொரு சூழல்,.. ஆனால், நண்பர்களிடையே இழையோடிய மகிழ்வும்.., உற்சாகமும் மட்டும் துளி கூட மாற்றமின்றி தெறிக்க விட்டுக் கொண்டிருந்தது! ரொம்ப வருஷங்களுக்கு முன்னே VOC பார்க் வாச­­லிலிருந்த Le Jardin ஹோட்டலி­ன் நாலாவது மாடியில் ஒரு சிறு அரங்கில் சந்தித்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தன! ஆனால், இந்த ஹாலோ அதைவிடப் பாந்தமாய் இருக்க, நண்பர்கள் கையைக் காலை நீட்டியபடியே கச்சேரியைத் துவங்கினர்! வழக்கமாய் புத்தக விழா அரங்கின் பின்னுள்ள மரத்தடியில், மாலைப் பொழுதுகளை இதுபோன்ற கேள்வி - பதில் sessions-களோடு ரகளையாக்கிடுவது வாடிக்கை! இம்முறையோ இடமும், நேரமும் தான் மாறுபட்டனவே தவிர, அந்த மின்சார மகிழ்வுகள் அல்ல//


    மறக்கவியலா மற்றொரு காமிக்ஸ் திருவிழா
    சகோதரர்கள் காமிக்ஸ் உற்சாகம் செம
    மிக மகிழ்வான நாள் அன்று

    ReplyDelete
  31. குறுகிய நேரத்தில் ஈரோடு மீட்டை சிறப்பாக அரெஜ் பண்ணிய ஈரோடு டீம்மிற்கு நன்றிகள் 💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  32. குறுகிய காலத்தில் விழா ஏற்பாடு முயற்சியில் இறங்கி ,பிரமிக்க வைத்த ஈரோடு டீமிற்க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்

    ReplyDelete
  33. சார், வாழுற காலமும் கொஞ்சமா இருக்கு. வாசிக்கிற காலமும் கொஞ்சமா இருக்கு மறுபதிப்புகளுக்கு விடுமுறை அளித்து புது கதைகளை போடுங்க அன்பான வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. இதைவிடவும் நறுக்குன்னும் சுறுக்குன்னும் சொல்லிட முடியாதுங்க நண்பரே!!💐💐👏👏👍

      Delete
    2. நானுமே புதுசுகளுக்கு ஜே போடுற கட்சி தான் நண்பரே ; ஆனால் ஒவ்வொரு முறையும் மறுபதிப்புகள் விற்பனைகளில் சிக்ஸர் அடிக்கும் போது, தலையைச் சொரிந்தபடியே நகர்ந்திடத் தான் வேண்டிப் போகிறது !

      வணிகம் / ரசனை என்ற இரண்டையும் balance செய்திட வேண்டிப் போகும் போது - எதையும் முழுமையாய் தவிர்க்க இயலவில்லை சார் ! தவிர, இவற்றை உயிராய் நேசிக்கும் நண்பர்களின் அவாக்களுக்கும் மொட்டையாய் NO சொல்ல மனசு ஒப்ப மறுக்கிறது !

      Delete
    3. //இவற்றை உயிராய் நேசிக்கும் நண்பர்களின் அவாக்களுக்கும் மொட்டையாய் NO சொல்ல மனசு ஒப்ப மறுக்கிறது !//


      💐💐💐💐💐

      Delete
    4. மறு பதிப்புகள்தான்,
      'கதை சிறப்பானது என்பதால் மறுபதிப்பாகிறது' என்ற அர்த்தத்தை புதிய வாசகர்களுக்கு உணர்த்துகிறது. அதனால்தான், மறுபதிப்புகள் விற்பனையில் சிக்ஸர் அடிக்கின்றன.
      நல்ல கதைகள் மறுபதிப்பாவது புதிய வாசகர்களை ஏற்படுத்தும் அல்லவா?

      Delete
    5. மறுபதிப்புகள் வருவது ஓகேதான்
      ஆனால் பல புதிய அட்டகாசமான கதைகளங்கள் பல இருக்கின்றன். இல்லையென்றால் ஸ்டெர்ன், தாத்தாஸ், ஜாரோப், மேகி கேரிஸன் போன்ற கதைகளங்களை இழந்திருப்போம், இன்னும் நிறையா உள்ளன இவை போன்று.

      முற்றிலும் எதொ ஒன்று மட்டும் இருந்தால் போரடிக்கும், கொஞ்சம் மறுபதிப்புகளும், புதிய கதைகள் அதிகமாகவும்
      வந்திட்டால் நன்றாக இருக்கும்.

      Delete
    6. இங்கே நாமெல்லாமே புரிந்திட வேண்டியதொரு சமாச்சாரமும் உள்ளது folks !

      ஆயிரம் ரூபாய்க்கு மறுபதிப்புகள் வருவதால் - ஆயிரம் ரூபாய்க்கான புது இதழ்களின் இடத்தினை அவை ஆக்கிரமித்துக் கொள்வதான அனுமானம் முற்றிலும் பிழையானதே ! ஆண்டொன்றுக்கு புதுசுகளைத் தயாரிப்பதற்கு நமக்கென சில limitations உள்ளன ! End of the day - மொழிபெயர்ப்பிலும், எடிட்டிங்கிலும் எனது இடத்தினை இட்டு நிரப்ப இன்னமுமே ஒரு மாற்று கிட்டியிருக்கவில்லை எனும் போது, எனது பணித்திறனுக்கு ஏற்பவே புதுசுகளைத் திட்டமிட இயல்கிறது ! இப்போதே நான் சக்திக்கு மீறி இழுத்துப் போட்டுக் கொண்டு ஒவ்வொரு முறையும் ஆட்றா ராமா = தாண்ட்ரா ராமா' என்று குட்டிக்கரணம் போட்டு வருவதில் no secrets ! இந்த சூழலில் இதற்கும் மேலாய் புதுப் பணிகளுக்குள் ஆழ்த்திக் கொள்ள வாய்ப்புகள் நஹி !

      So மறுபதிப்புகள் வந்திடா பட்சங்களில், அந்த ஸ்லாட்ஸ் பெரும்பாலும் காலியாகவே போயிருக்கும் ! மறுபதிப்புகள் யாரது இடத்தினையும் எடுத்துக் கொண்டு களம் காண்பதில்லை என்பதே bottom line !

      "அட, இவரு கிழிக்காட்டி, வேற யாருமே இதை கிழிக்க முடியாதாக்கும் ?" என்ற மைண்ட் வாய்ஸ் கூட எனக்குக் கேட்காதில்லை ! ஆனால் இன்றைக்கு நாமெல்லாமே பழகி விட்டுள்ளதொரு குறைந்தபட்ச எழுத்துத் தரத்தில் சமரசம் செய்து கொள்ள யாருக்கும் சம்மதம் லேது என்பது உறுதி ! So நமது மொழிபெயர்ப்பு அணியில் நாம் எதிர்பார்க்கும் லாவகம் கிட்டிடும் தினத்தில் இந்த எல்லைகளை மாற்றி அமைக்க ஜாலியாய் முனையலாம் !

      Delete
    7. 👍👍👍🤝🏽🤝🏽🤝🏽🤝🏽💐💐💐

      Delete
  34. ஜெனிவா ஐயா, ஸாரி ஜமீனையாவின் கோரிக்கைப்படி மாதமொரு இளவரசி வருவதைஆதரிக்கிறேன்.1000பக்க டெக்ஸ் நமது அடுத்த மைல் கல் நிச்சயம் வேண்டும். கடலில் அரங்கேறும் கதைகள் வேண்டும்.2026ல் இரட்டை வேட்டையர், ஜான் மாஸ்டர் நன்றிகள் சார்

    ReplyDelete
  35. இளவரசரின் பிரமாண்ட இடையழகை ஏதேனுமொரு சிறப்பிதழ் இல் அட்டைப் படமாக வெளியிடலாம் சார்

    ReplyDelete
    Replies
    1. தொப்பைக்கு திருஷ்டி சுத்திப் போடணும் போலிருக்கே.. ம்ம்ம்.. 🤔

      Delete
    2. மத்தியப் பிரதேசம்னா சும்மாவா ?

      Delete
  36. ஸ்பூன்&ஒயிட் ,ஸ்டெர்ன்,தாத்தாஸ் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அமுல் ஐஸ்க்ரீம் வாங்குனா ஒயிட் ஸ்பூன் தராங்க ராஜசேகரன் சார் !

      Delete
  37. இவர் இளவரசரா இருந்து 'வாட்ச்' மேன் ஆனவரா, இல்லேன்னா, இந்த 'வாட்ச் ' மேன் தான் புதுசா அந்தப்புரம் கட்டுன இளவரசரா? ஒண்ணும் புரியலியே?
    But...
    அந்த வாட்ச் அழகா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆக மொத்தம் இஷ்டைலான கொத்தனார்ன்னு சொல்றீங்களா பத்து சார் ?

      Delete
    2. நீங்களும் ஈரோடு வந்திருக்கலாமே பத்து சார்.. வாட்ச் கட்டின கொத்தனாரின் இடையழகை நேரில் கண்டு ரசித்திருக்கலாமே?!!😝

      Delete
    3. ஈரோட்டுக்கு வந்தாக்கா இயவரசருக்கு ஒட்டியானம் செஞ்சு போடணும்னு சொல்லி பயமுறுத்தி இருக்காங்க .....! அதான் அவர் வரல !!

      Delete
    4. சார்.. 😁😁😁😁😝😝

      Delete
  38. சூப்பர் சார்...அருமை....அட்டகாச மின்சார பதிவு மீண்டுமோர் முறை....


    1...2...இரண்டுக்கும் ஒரே பதில்...
    7... முதல் 77
    போல
    மாயம் முதல் சைன்ஸ் வரை
    3.. சார் தயவு செஞ்சு தாங்க...7 வயது ஆசை 77லி லாவது தீரட்டும்
    4.பரவால்ல
    5.6... நல்லாதான் இருக்கும்...தூக்கி படிக்கலாம்...பெட்ரோ மாக்சேதான்
    7.8..ஆகட்டும்...யாரந்த மினி ஸ்பைடர் மட்டும் இம்மாதமே...அல்லது இவ்வருட மே இருவண்ணமோ கலரோ
    கிங் ஸ்பெசல் அள்ளுது ..வேற லெவல் சார்...

    நாங்களும் கலந்தாச்

    ReplyDelete
  39. உதிரம் பொழியும் நிலவே
    அருமை, அட்டகாசம் , ஒரு தெறி ஆக்ஷன் + எமோஷனல் விருந்து

    விரைவில் விரிவான விமர்சனத்துடன்...

    ReplyDelete
  40. // 1.டெக்ஸ் தொடரில் மெபிஸ்டோ கதைகளுக்கும் இடம் கொடுக்கலாமே? என்ற கோரிக்கை! //
    வருடத்திற்கு ஒன்று தாராளமாக முயற்சிக்கலாம் சார்...

    ReplyDelete
  41. // 2.Science-fiction காமிக்ஸ்... இவற்றிற்கு நம் மத்தியில் என்றேனும் இடம் கிட்டுமா? //
    எப்படி இருக்கும்,என்ன ரிசல்ட்னு ஒன்றை வெளியிட்டு நாடி பிடித்து பார்ப்போம் சார்...

    ReplyDelete
    Replies
    1. வைத்தீஸ்வரன்கோவில் போகணுமோ சார் ?

      Delete
  42. // 3.பராகுடா பாணியில் கடலில் அரங்கேறும் கதைகளுக்கு வாய்ப்புண்டா? //
    சிறப்ப வெளியீடுகளுக்கான வாகானதொரு தருணத்தில் வெளியிட்டு விடுங்கள் சார்...

    ReplyDelete
  43. // 5.அந்த 1000 பக்க டெக்ஸ் ஆல்பம் ?? ,//
    LED பல்புகள் வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமுங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. LED vs பெட்ரோமேக்ஸ் .....ஒரு poll வைச்சிடலாமா ?

      Delete
    2. //LED vs பெட்ரோமேக்ஸ் .....ஒரு poll வைச்சிடலாமா ?//

      வைச்சிருலாங்க சார்

      Delete
  44. //6.ஆயிரம் பக்கங்களில் இளம் டெக்ஸ் ?? //
    2026 -ல் காத்திருப்பது 3 அத்தியாய சாகசம் !...ஓகே சார்...

    ReplyDelete
  45. // 8.இளம் டைகர் தொடரில் இன்னமும் கலரில் மறுபதிப்பு கண்டிருக்கா "இளமையில் கொல் - Part 2 & 3 " பற்றி ?? //
    part 2 & 3 மட்டும் ஓகேன்னு தோணுது சார்...

    ReplyDelete
    Replies
    1. புதுசாய் இதை வாங்கக்கூடியோர் என்ன செய்வார்கள் சார் ?

      Delete
  46. // பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா ? அல்லங்காட்டி LED பல்புகள் வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமுங்களா ? சொல்லுங்க மக்களே //

    பெட்ரோமாக்ஸ் லைட் ஐடியாவான 1000 பக்க இதழ் பற்றி சொன்னதே தாங்கள்தான்.
    இப்போது,

    // மாறாக ஏக் தம்மில் ஆயிரம் எனில் பயில்வான் ஜாடைக்கு அமைந்திடும் புக்கை கையாள்வது உங்களுக்குத் தான் சிரமமாக இருக்கக்கூடும் //
    என்று பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதும் தாங்கள்தான்.

    'பத்த வைக்கிறீங்களே பரட்டை!'
    இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்காம விடமாட்டீங்க போலிருக்குதே!

    ReplyDelete
    Replies
    1. //1000 பக்க இதழ் பற்றி சொன்னதே தாங்கள்தான்.//

      ஊஹூம்.... ஆயிரம் பக்க டெக்ஸ் ரோசனை உதித்தது டெக்ஸாஸின் ஆஸ்டின் நகரில் சார் !

      Delete
  47. 10.08.25.
    முத்து லயன் காமிக்ஸ் வாசகர் சந்திப்பு.
    இடம்: ஹோட்டல் வசந்தம் பேலஸ் இன்.
    நேரம்: 10am to 2pm.

    மேற்கண்ட அறிவிப்பைப் பார்த்து விட்டு இந்த முறையாவது போய்தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்து, புறப்பட்டு, சில காரணங்களால் சற்றே தாமதமாகி விட,
    சந்திப்பு ஹாலுக்குள் அவசரமாய் நுழைந்தேன்.
    50 பேர் அமரக்கூடிய ஹால்.
    ஹால் நிரம்பியிருந்தது.
    எடிட்டர் உற்சாகமாய் வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்.
    அதன் பிறகுதான் அறிமுகப் படலம் நடந்தது. எல்லோரும் அவரவர் பெயர், ஊரைச் சொன்னார்கள். நானும் சொல்லி விட்டு, 'எடிட்டரை முதல் முறையாய் பார்க்கிறேன்' என்றும் சொன்னேன். கை தட்டினார்கள். அப்போதுதான் இங்கு நான் மட்டும் புதுமுகம் என்பது புரிந்தது.
    கடைசியாய் எடிட்டர் மைக்கை வாங்கி 'என் பெயர் விஜயன் ' என்றார். அரங்கில் சிரிப்பலை தவழ்ந்தது. அடுத்து அவர், அவரது புனைப் பெயர்களையும் கூற, அந்த சிரிப்பலை சுனாமியாய் மாறி அரங்கமே அதிர்ந்தது.

    அதன் பின் எடிட்டரிடம் வாசகர்கள் ‌கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். அவரும் சளைக்காமல் பேசிக் கொண்டேயிருந்தார்.
    சிற்றுண்டியும், டீயும் வந்தன. எல்லோரும் பொறுமையாய் சாப்பிட்டு விட்டு, மாறி மாறி கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தனர். எடிட்டரின் முன் வைக்கப்பட்ட சிற்றுண்டி மட்டும் அப்படியே இருந்தது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசினார். கேப்டன் ஹேடாக் வாயில் பிரஷோடு டின்டின்னுடன் பேசியது ஞாபகம் வந்தது. (ஆனால், சார் தெளிவாய்த்தான் பேசினார்).
    கடைசியாய் என் பங்குக்கு நானும் ஓரிரு கேள்விகள் கேட்டபின், கையோடு கொண்டு சென்றிருந்த 'தங்கக்கல்லறை' புது பதிப்பை அவரிடம் நீட்டி, ஆட்டோகிராஃப் வாங்கினேன். என்னைப் பற்றிச் சொன்னேன்.
    'உங்கள் எழுத்துகளைப் படித்தேன் (காமிக்ஸ் விமர்சனங்கள்), நன்றாக இருந்தது, நன்றாக எழுதுகிறீர்கள்' என்றார். Thank you sir என்று கூறி விடை பெற்றேன்.
    புகைப்படப் படலங்கள் நடந்தன.

    மதிய உணவுக்கு அழைத்தார்கள். அருந்தினேன். அருமை. உணவு தயாரித்தவர்களுக்கும்,பரிமாறியவர்களுக்கும், அந்த முன்னேற்பாடுகளை செய்த நண்பர்களுக்கும், ஏற்பாடுகளுக்கான செலவை ஏற்றுக் கொண்ட எடிட்டர் அவர்களுக்கும் நன்றிகள் பல!🙏
    (பயணம் 105ம் பக்கம் ஞாபகம் வருகிறதா?)

    'அன்றைய தினம் அன்றாட நிகழ்ச்சிகளை மறந்து, எல்லோரும் பாலகர்கள் ஆனார்கள்' என்று எடிட்டர் புத்தக விழா groupல் எழுதியிருந்தார். உண்மைதான்!
    எல்லோரிடமும் உற்சாகம்!
    பரவாயில்லையே! வாசகர் சந்திப்புக்கு வந்தால் வருடம் ஒரு முறையாவது நாமும் பாலகனாகலாம் போலிருக்கிறதே என்று யோசித்தேன்‌. ஒவ்வொரு வாசகர் சந்திப்புக்கும் ஊர்ஊராய் சென்று பாலகனாய் திரும்பி வரும் வாசகர்களும் இருக்கிறார்கள் என அறிந்தேன்.
    அதைவிட எப்போதும் பாலகனாய் இருக்கும் எடிட்டரைப் பார்த்தேன்.
    வருடம் முழுவதும் காமிக்ஸ் படிப்பு, வருடம் முழுவதும் வாசகர் சந்திப்பு என்று மார்கண்டேயனாய்த் தெரிந்தார்!
    கொடுத்து வைத்தவரய்யா தாங்கள் என்று தோன்றியது!

    மதியம் செஸ் போட்டிகள் நடந்தன. நண்பர்கள் மிகத் தீவிரமாய் போட்டியில் பங்கெடுத்தார்கள்.

    ஒரு சில நண்பர்கள் உரையாடினார்கள்.
    அதன் பின் புத்தக விழாவுக்கு சென்று விட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.
    Block spotல் பார்க்கும் ஒரு சில நண்பர்கள் யாரென்று அறியாமலேயே வந்து விட்டோமே என்று யோசித்தேன். சரி, அடுத்த முறை பாலகர் சந்திப்பில் பார்த்துக் கொள்வோம் என்று எண்ணிக் கொண்டேன்.

    மொத்தத்தில் காமிக்ஸ் வாசகர் சந்திப்பு எனக்கு புது அனுபவமே! அனைவருக்கும் நன்றி.😊🙏

    C S.கண்ணன், சித்தோடு.

    ReplyDelete
    Replies
    1. உங்களைச் சந்தித்து உரையாடியது மகிச்சியளிக்கிறது கண்ணன் சார்!💐💐☺️

      Delete
    2. //பரவாயில்லையே! வாசகர் சந்திப்புக்கு வந்தால் வருடம் ஒரு முறையாவது நாமும் பாலகனாகலாம் போலிருக்கிறதே//

      சார் - நீங்க ஏற்கனவே பாலகர் தானே ?

      Delete
  48. 2021 இல் இருந்து தான் காமிக்ஸ் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். என்னடா இவரு மாயாவி, இரும்பு கை , ஸ்பைடர் எல்லாம் வேண்டாம், குண்டு புக் முடியாதென்று சொல்றாரு, மக்களுக்கு என்ன பிடிக்குது அத வேண்டியது தானே ,
    கிராபிக் நாவல் எல்லாம் ஏன் தர்ராரு
    நினைப்பேன்.

    இந்த குண்டு புக் எவ்வளவு சிரமம் என்று படிக்கிறப்ப தான் தெரிஞ்சது.

    டெக்ஸ் புக் சைஸ் , 128 to 230 பக்கம் தான் படிக்க சுலபமா எனக்கு இருக்கு

    இந்த பழைய ஹீரோக்கள் எல்லாம் போர் அடிச்ச பிறகு கிராபிக் நாவல் படிக்க ஆரம்பிச்சேன் இப்பதான் தெரியுது கிராபிக் நாவல எவ்வளவு நல்லா இருக்குன்னு. அதோடு டைடல் எல்லாம் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா!! இப்போதெல்லாம் நிறைய நண்பர்கள் கி. நா பக்கம் திரும்ப ஆரம்பித்திருப்பது சிறப்பு!!💐💐🫠🫠

      Delete
    2. சமீபமாய் எந்த கிராபிக் நாவல் படிச்சீங்க நண்பரே ?

      Delete

  49. காலனின் கால் தடத்தில்
    கதை சொல்லும் கானகம்
    தனியே தன்னந்தனியே
    ஒரு முடியா இரவு
    நித்திரை மறந்த நியூயார்க்.
    நேற்று போய் இன்று வா


    இதில் முதல் மூன்றும் ஓவியம், கதையும் நல்லா இருக்கும் .

    All new special, மற்றும் ஹாலோவீன் based kathai(deepavali malar) ஏற்கனவே படித்ததில் நல்லா இருக்கும்

    ReplyDelete
  50. பயணம் கார்டில் போட்டு வைத்தேன் ஆனால் காணவில்லை, stock out என்றார்கள்.

    ReplyDelete