Powered By Blogger

Friday, August 01, 2014

இது கடவுளின் ஸ்க்ரிப்ட் !

நண்பர்களே,

வணக்கம். கபாலத்தை காற்றோட்டமாக்கிடுவேன் !" ;"அடிவயிற்றின் ஆரோக்யத்தை அலசிப் பார்க்கவா ?" என்ற ரீதியில் நான் இங்கே அமர்ந்து எதைஎதையோ ஸ்கிரிப்ட் என்று நினைத்து எழுதித் தள்ளிக் கொண்டிருக்க - மேலேயுள்ள Supreme Editor நமக்கென எழுதிடும் ஸ்க்ரிப்டோ முற்றிலும் மாறுபட்டதொரு ரகம் ! LMS எனும் மைல்கல்லை நிலைநாட்டும் வேளை  ; ஈரோடில் நண்பர்கள் சந்திப்பு - என்ற ஒரு சந்தோஷத் தருணத்தோடு  நமது வலைப்பதிவின் மில்லியன் ஹிட்ஸ் நிகழ்வும் ஒத்துப் போகும் விதமாய் ஒரு சூழலைக் கற்பனை செய்ய நம்மால் முடியலாம் ; ஆனால் அதனை நிஜமாக்கிக் காட்டும் வல்லமை அவருக்குத் தானே உண்டு ?!! இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக என் பிள்ளையின் நச்சரிப்புக்கு பலனாகப் பிறந்த நம் வலைபூ - இன்றைய நமது காமிக்ஸ் பயணத்திற்கொரு திசைகாட்டியாய் உருப்பெற்றுள்ளது எனில் அந்தப் பெருமையின் ஒரு பங்கு கடவுளுக்கும் ; பாக்கிப் பங்கு கம்பியூட்டரின் கீ-போர்டுகளைத் தொடர்ச்சியாய்த் துவம்சம் செய்து வரும் உங்களின் விரல்களுக்குமே சாரும் ! பொதுவாய் வலையுலகிற்கும், சமூக வலைத்தளங்களுக்கும் அடியேன் அண்மையானவன் அல்ல என்பதால் "மில்லியன்" எனும்  இந்த மந்திர எண் ஒப்பீட்டில் எத்தனை பெரியது என்றோ ; சிறியது என்றோ எனக்கு கணிக்கத் தெரியவில்லை ! ஆனால் காமிக்ஸ் எனும் ஒரு நோஞ்சான் மழலையை மாத்திரமே மடியில் தூக்கிச் சீராட்டும் நமது சிறியதொரு உலகிற்கு இது ஒரு memorable milestone என்றே நினைக்கத் தோன்றுகிறது ! சென்றாண்டின் ஏதோ ஒரு சமயத்தில் ஸ்பெஷல் வெளியீடுகள் பற்றிய நண்பர்களின் வினவல்களின் போது - "ஒரு மில்லியன் அடிக்கட்டும் பார்ப்போம் !" என்று வாயை நான் விட்ட போது கூட நமது பயண வேகத்தை சரிவரப் புரிந்திருக்கவில்லை ! ஆனால் 2014-ன் அட்டவணையை கையில் எடுக்கும் சமயம் ; ஆண்டின் ஸ்பெஷல் இதழ்களை தீர்மானிக்கும் தருணம் - நமது ஹிட்ஸ் வேகத்தை மெல்லியதொரு கணக்குப் போட்டுப் பார்த்த போது தெள்ளத் தெளிவாய்ப் புலனானது செப்டெம்பர் வாக்கில் நாம் அந்த 7 இலக்க எண்ணை எட்டி இருப்போமென்று ! ஆனால் சூப்பர்  நண்பர்களின் ஆற்றல்களைக் கணக்கில் எடுக்கவில்லை என்பதால் ஜூலையின் இறுதிகளிலேயே மில்லியனை மடக்கிப் போட்டு விட்டோமே !! ஓரிரு மணிநேரங்களுக்கு முன்பாகக் கூட நான் இராதாகிருஷ்ணனின் அறுவை சிகிச்சை நல்ல விதமாய் நடந்தேறிய சேதியைப் பதிவிட தலைகாட்டிய தருணம் சுமார் 200 ஹிட்ஸ் குறைவாக நின்றது ஒரு மில்லியனுக்கு ! ஆனால் நிறைய கீபோர்டுகளின் Refresh பட்டன்கள் இன்று செம பிசியாக இருந்துள்ளதை இப்போது கவனித்த மறு கணம் - விழுந்தடித்து ஓடி வந்தேன் பதிவிட !! 

பத்து லட்சம் பார்வைகள்' என்ற உடனே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் வாசஸ்தலமாய் நமது பதிவு உருப்பெற்று விட்டது என்ற ரீதியிலான கற்பனைகளில் நாம் யாருமே திளைத்துத் திரியவில்லை என்பதால் பெரியதொரு சொற்பொழிவு ஆற்றும் இக்கட்டு எனக்கு இல்லை ! சிறியதொரு வட்டம் ; அடர்த்தியான வட்டம் ; காமிக்ஸை மூச்சாய் நேசிக்கும் ஒரு வட்டம் - என்பது மாத்திரமே நமது வெளிப்படையான அடையாளங்கள் என்பதால் - நம் கூட்டு முயற்சியின் ஒரு சந்தோஷ பலனாய் இதனைக் கொண்டாடுவோமே ! வண்டி வண்டியாய் ; பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ; பதிவு பதிவாய் நமது இதழ்களைப் பற்றி ; நாயகர்களைப் பற்றி ; காமிக்ஸ் ரசனைகளைப் பற்றி ; சென்சார் பற்றி ; கிராபிக் நாவல்கள் பற்றி ; புதுப் பாதைகள் பற்றி ; மறுபதிப்புகள் பற்றி ; விற்பனை யுக்திகளைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக இங்கே அலசி ஆராய்ந்துள்ளோம் தான் ! இத்தாலியில் உச்சரிக்கப்படுவதை விடவும் அதிக முறைகள் மஞ்சள் சட்டை மாவீரரைப் பற்றி இங்கு நாம் பேசி இருப்போம் ; பெல்ஜியத்தின் பிடித்தமான பிள்ளை ப்ளூபெரியைப் பற்றி அவர்களை விடவும் நாம் அதிகமாய் தெரிந்து வைத்திருப்போம் ; இங்கிலாந்து மொத்தமும் ரசித்ததை விட, அவர்களது ஸ்பைடரையும், ஆர்சியையும் ஜாஸ்தி ரசித்த தலைமுறை நாம் ! நமது ஒட்டு மொத்தக் காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ள இது போல ஓராயிரம் காரணங்கள் என்னால் சிந்திக்க முடியுமென்ற போதிலும் - இந்த வலைப்பூவின் மூலமாய் சங்கமிக்கும் நாம் ஈட்டியுள்ள precious  புதையலாய் நான் கருதுவது ஒரேயொரு விஷயத்தையே !நம்மிடையே அபிப்ராய பேதங்கள் ஏராளம் உண்டு  ; ஒரு விஷயத்தை / ஒரு வினவலை / ஒரு கோரிக்கையை நான் சரியாக அணுகிடாது போன தருணங்கள் எத்தனை எத்தனயோ உண்டு ; நண்பர்களிடையே சலனங்கள் எழுந்த நாட்களும் பல உண்டு ; பால்யங்களைத் தேடிய நமது பயணத்தின்  சில வேளைகளில் நாம் பாலகர்களாகவே உருமாறிய தினங்களும் இல்லாதில்லை ! குதூகலம் ; கொண்டாட்டம் ; சங்கடம் ; ஏளனம் ; நையாண்டி ; ரௌத்திரம் ; மௌனம் ; வெறுமை ; கட்டுக்கடங்கா சிரிப்பின் ரீங்காரம் என இங்கே வியாபித்துள்ள உணர்வுகளைப் பட்டியலிட இரு கைகளின் விரல்கள் பற்றாது ! ஆனால் அத்தனையின் இறுதியிலும் கண்ணுக்குப் புலப்படா ஒரு camaraderie சகிதம் காமிக்ஸ்  மீதான ஈர்ப்பை நாம் விடாப்பிடியாய்த் தொடர்வது தானே நிஜமான சாதனை ? ஆறு பூஜ்யங்கள் கொண்டதொரு எண்ணைக் கொண்டாடும் இத்தருணத்தில் அதனை சாத்தியமாக்கியுள்ள அந்த நேசத்துக்கும் ஒரு சல்யூட் செய்வோமே ?! 

நமது இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்கிய தருணத்தில் என்ன எதிர்பார்ப்பதென்று எனக்குள் எவ்விதத் தெளிவும் இருந்திருக்கவில்லை ! வண்ண இதழ்கள் தொடர்ந்து ரூ.100 விலைகளில் என்ற தீர்மானம் சரியா ? தவறா ? ; ரசனைகளின் ஏணியில் நமது தற்போதைய நிலை என்ன ? நீண்டதொரு இடைவெளியில் நமது காமிக்ஸ் நேசம் மரித்துப் போகாது தொடர்கிறதா ? முகவர்களின் சகாயம் துளியும் இல்லாத நிலையில், நேரடி விற்பனைகளை மட்டுமே நம்பி நாம் காலூன்ற சாத்தியப்படுமா ? இம்முறை சொதப்பினால் it's a point of no return தானே ?  என்றெல்லாம் கேள்விகளுக்குப் பஞ்சமே கிடையாது 2012-ன் அந்தப் பொழுதுகளில் ! நேரில் நம்மை சந்திக்க வரும் சொற்ப வாசகர்களின் குரல்களும் ; 2012 சென்னை விழாவினில் சந்தித்த நண்பர்களின் குரல்களும் மிகச் சிறியதொரு input ஆக இருந்திட - எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் காலூன்றவும், உங்களின் நாடிகளை கற்றறியவும் ஒரு அற்புதக் கருவியாய் செயலாற்றத் தொடங்கியது நமது வலைப்பதிவு ! அதற்காக உங்களை பூரணமாய்க் கரைத்துக் குடித்து விட்டேன் என்றோ ; 'இனி எல்லாம் சுகமே' என்று பாட்டை எடுத்து விட்டுக் கொண்டே லக்கி லூக்கைப் போல sunset -க்குள் சவாரி செய்து செல்கிறேன் என்றோ நான் பசப்பப் போவதில்லை !  இடர்கள் ; பொறுமையின் பரீட்சைகள் ; சங்கடமான தருணங்கள் என  பல வாழைப்பழத் தோல்களை நாம் வழியில் சந்தித்தது நிஜமே ! ஆனால் கரம் பற்றிக் கொள்ளவும், நாம் அந்தர்பல்டி அடித்திடக் கூடாதே என்ற கரிசனமும் கொண்ட நண்பர்கள் இங்கு நிறைந்திருப்பதால் கோச் வண்டி கட கட வென்று பயணித்த்துச் செல்கிறது ! Thanks ever so much all...I owe you so much !! இங்கு நான் உலவும் நேரங்களை விடப் பன்மடங்கு அதிக அவகாசம் செலவிடும் நண்பர்களுக்கும் ; ஒவ்வொரு நாளையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவிடும் நண்பர்களுக்கும் ; ஆழமான பல சிந்தனைகளைப் பகிர்ந்திடும் தோழர்களுக்கும், அமைதியாய் படித்து விட்டு ரசித்துச் (?!) செல்லும் நெஞ்சங்களுக்கும் ; தொலைவில் இருப்பினும் ஒவ்வொரு வரியையும் படித்து விட்டு அவ்வப்போது மின்னஞ்சல்களிலும், தொலைபேசிகளிலும் வாழ்த்துச் சொல்லும் அன்பர்களுக்கும், ; அபிப்ராய வேற்றுமைகள் இருப்பினும், நம் மீதும் , காமிக்ஸ் எனும் ரசனையின் மீதும் கொண்ட நேசத்தால் நமக்குத் துணை நிற்கும் நெஞ்சங்களுக்கும் ; நம் நாட்களை தத்தம் பாணிகளிலான நகைச்சுவைகளால் களைகட்டச் செய்யும் ஆற்றலாலர்களுக்கும், இதனை ஒரு extended family ஆகக் கருதிடும் நேச நெஞ்சங்களுக்கும் நாம் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம் ! 

'சரி...அந்தக் கடனை கொஞ்சமாகவேனும் அடைக்கத் தான் மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் இருக்கே ? - அதைப் பற்றி வாயைத் திறக்கலாமே ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எப்போதும் போல் எனக்கு டெலிபதியாகிறது ! "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல ! சரி..ஓகே.....ஆனால் இந்த மில்லியன் ஹிட்சில் கூடவா ரகசியம் ?? என்று கேட்கிறீர்களா ? நியாயம் தான் ! ஆனால் அந்த 'தேவ இரகசியத் தேடலே' நமது மில்லியன் ஹிட்ஸ் தேடலும் கூட எனும் போது இது வரை அடக்கி வாசித்தது அதன் பொருட்டே ! THE FORBIDDEN MANUSCRIPT என்ற பொருள்படும் பிரெஞ்சு அதிரடி saga தான் நமது மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் ஆக முழுவண்ணத்தில் அற்புதம் செய்யக் காத்துள்ளது ! 54 + 54 + 54 பக்கங்கள் கொண்ட மூன்று பாகங்களில் அசுர வேகத்தில் ஓடும் இந்த ஆக்ஷன் கதையினை எனக்கு அடையாளம் காட்டியது நமது ஜூனியர் எடிட்டரே ! 'சித்திரங்கள் நமது வழக்கமான பாணியில் இல்லை ; பரவாயில்லையா ?' என்ற கேள்வியோடு அவன் சென்றாண்டு என்னிடம் வந்த போது கதையை மேலோட்டமாய் மட்டுமே நோட்டமிட்டேன் ! சித்திரங்களும் சரி ; வர்ண சேர்க்கையும் சரி ஒரு அசாத்திய லெவெலில் இருப்பதைத் தான் முதல் பார்வையிலேயே கவனிக்க முடிந்தது ! ஒவ்வொரு frame-ம் ; ஒவ்வொரு பக்கமும், ஒரு ஓவியம் போல் இருக்கும் விதமாய் வண்ணங்கள் சேர்த்திருக்கும் இந்த பாணி நமக்குப் புதிதே எனினும், இதனை நம்மால் நிச்சயமாய் ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது ! ஒரே இதழாய் - வித்தியாசமானதொரு தருணத்தில் இந்தக் கதையை வெளியிட்டே தீர வேண்டுமென சென்றாண்டே தீர்மானித்த போது எனக்கு நினைவுக்கு வந்து நின்றது நமது மில்லியன் ஹிட்ஸ் தான் ! இதோ பாருங்களேன் அதன் பக்கங்களின் சில அற்புதங்களை :   


Awesome artwork by : Paolo Grella !!
பவலோ கிரெல்லா எனும் இத்தாலிய ஓவியர் அதகளம் செய்திருக்கும் இந்த சித்திர விருந்தின் கதையோ 'THE DA VINCI CODE' பாணியிலானதொரு தேடல் ! திபெத்தில் துவங்கி ; ஐரோப்பா சென்று ; அமெரிக்காவுக்குப்   பயணித்து, இடையே காஷ்மீருக்குள்ளும் நுழைந்து செல்லும் இந்தக் கதையினை நமது offbeat தேடல்களின் வெளிப்பாடாய் பார்த்து ; 'கிராபிக் நாவல்' என்று எண்ணி நண்பர்கள் ஒதுக்கிடும் பட்சத்தில் ஒரு அற்புத வாசிப்பு அனுபவத்தைத் தவற விடும் ஆபத்து உள்ளது !  Yes - இதுவொரு கிராபிக் நாவலே ; ஆனால் இதனை அனைத்துத் தரப்பினரும் ரசிக்க முடியுமென்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ! So - "சிப்பாயின் சுவடுகளில்" தந்த சூடே போதுமடா சாமி ! - எனப் பதுங்கி இருக்கும் கிராபிக் நாவல் "டர்ராளர்கள்" தைரியமாய் பதுங்கு தளங்களில் இருந்து வெளியே தலைகாட்டலாம் !! "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல !" - கதையிலும், சித்திரங்களிலும், வர்ணங்களிலும் ஒரு மறக்க இயலா அனுபவமாய் இருக்கப் போவது நிச்சயம் ! செப்டெம்பர் இறுதியில் வரக் காத்திருக்கும் இதழ் இது ! Please don't miss it ! 

சரி...சூப்பர் 6 ரகசியங்களில் ஒன்றை முடிச்சவிழ்த்து விட்டாச்சு.... ! எஞ்சி நிற்பதோ "தீபாவளி மலர்" !! "இரவே..இருளே..கொல்லாதே ! " என்று மட்டும் சொல்லி விட்டுப் புறப்படுகிறேனே !! ஏன் ? - எதற்கு ? என்றெல்லாம் இன்னொரு நாள் அலசுவோமே ?! 

ஈரோட்டில் சந்திப்போம் ; அங்கு வர இயலா நண்பர்களை சனிக்கிழமை காலையிலொரு பதிவில் சந்திப்போம் ! Catch you on Saturday folks !! And..thanks a million for the million !! God be with us all ! Good night ! 

124 comments:

  1. இரவுக்கழுகின் இரவு வணக்கம்

    ReplyDelete
  2. மேளதாளங்கள் முழங்கட்டும் வெற்றிக்கொடி பறக்கட்டும்

    ReplyDelete
  3. மில்லியன் ஹிட்ஸ்....!!ஹுர்ரேரேஏஏஏ!!!
    கிராபிக்ஸ் நாவலின் அட்டையிலிக்கும் அருமையான சித்திரங்கள் ஆவலை தூண்டுகின்றன விஜயன் சார்...அந்தஅற்புதமான படைப்புகளை காண இப்போதே மனம் ஏங்குகிறது..ஆனால், இந்த வினாடிகளில்...... LMS சை காணும் நாளுக்கான எதிர்பார்புடன் தலைமுடிகளை பிய்த்தபடி இப்போது நாங்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் தம்பி என்னடாவென்றால் .....வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒன்றின்மேலொன்று (தோராயமாக 750 பக்கங்களுக்கு சமமாக) வைத்து LMS இன் உயரம் இவ்வளவு இருக்கும் என மனக்கண்ணில் அதன் மாதிரியுருவை கற்பனை செய்கின்றான்..இந்த காமிக்ஸ் வெறியன் இனிவரும் நாட்களில் போஸ்ட் பாக்ஸே கதியென்று கிடக்கப் போகின்றதை எண்ணுகையில் அவனுக்காக கவலையும்...ஒரு காமிக்ஸ் ரசிகையாக பெருமையும் கொள்கின்றேன்..நம் காமிக்ஸின் வலிமை நமக்குள் எத்தனை தூரம் ஊடுருவி நம்மை ஆட்டி வைக்கின்றது !

      Delete
    2. Chinna Chinna Aasai....Chinnap Pillainga Aasai!!!

      Delete
  4. வெளிநாட்டில் இருப்பதாலேயே ஒன்றிரண்டு வாரங்கள் லேட்டாகத்தான் LMS சை கண்ணால் பார்க்க முடியும் என்பது ரொம்ப ரொம்ப கொடுமை சார்..ஊ...ஊ..ன்னு அழுவாச்சி..அழுவாச்சியா வர்றது..ப்ளீஸ் இதுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க சார்)
    (இதுல இவங்க வேற புக்கை படிச்சுட்டு அது அப்படி இருந்துச்சு ...இது இவ்ளோ நல்லா இருந்துச்சுன்னு சும்மாவே பத்தியெரியுற வீட்டுல ரெண்டு லாரி பெட்ரோலை வேற ஊத்துவாங்க)

    ReplyDelete
    Replies
    1. // பத்தியெரியுற வீட்டுல ரெண்டு லாரி பெட்ரோலை வேற ஊத்துவாங்க //
      LOL

      Delete
    2. ஆசிரியர் ஓரிரு வாரங்களுக்கு முன்னரே புத்தகங்களை தயாரித்து விடுவதால் ஒரு வாரம் முன்னரே அனுப்புமாறு களமிறங்கி போராடுங்கள் !

      Delete
    3. மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் !

      டியர் விஜயன் சார்,

      இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு அபிப்ராயத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன். இந்தப் பதிவில் நம் தமிழ் காமிக்ஸ் வாசகி suji jeya கூறியிருப்பதை தாங்கள் படித்திருக்கலாம். இதேக் கருத்தை வலியுறுத்தி பலமுறை அமெரிக்கா ; பிரான்ஸ் ; இலங்கை வாழ் வாசக நண்பர்கள் பலர் இங்கே வருத்ததுடன் பதிவிட்டுள்ளனர். அவர்கள் தாயகம் துறந்து வெளிநாட்டில் வசிப்பதால் தான் இந்த கொடும் துயரம் என்றும், இங்கு அனைவரும் காமிக்ஸை வாசித்து அலசி ஆராய்ந்தப் பின்பே தங்களுக்கு புத்தகம் கிடைப்பதாகவும், அதுவரை காத்திருக்க இயலாமல் மனம் துன்பத்தில் ஆழ்வதாகவும் பல பதிவுகளை நீங்களும் படித்திருக்கலாம்.

      ஆகவே, வரும் 2015ல் இருந்து ஒரு புதிய நடைமுறையை தங்களால் நடைமுறை படுத்த முடியுமா என்று அறிய ஆவலாக இருக்கிறேன் சார். தற்போதெல்லாம் தங்களின் வெளியீடுகள் ஒரு மாதம் முன்பாகவே தயாராகி விடுகின்றன. எனவே அயல்நாட்டுச் சந்தாதாரகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு முன்பாக (அமெரிக்கா ; பிரான்ஸ்) தபாலில் அனுப்பி வைத்தால் அனைவருக்கும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் புத்தகங்கள் கிடைக்க வழி ஏற்படுமே சார்..? இலங்கைக்கு ஒரு வாரம் என்றும் பயண நாட்களைப் பொருத்து உத்தேசமாக ஒரு திட்டத்தை ஆலோசிக்கலாமே சார்..?

      Delete
  5. வாவ்... சித்திரங்கள் அசரடிக்குது. Can't wait more... ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. //"தீபாவளி மலர்" !! "இரவே..இருளே..கொல்லாதே ! " என்று மட்டும் சொல்லி விட்டுப் புறப்படுகிறேனே !! ஏன் ? - எதற்கு ? என்றெல்லாம் இன்னொரு நாள் அலசுவோமே ?! //
    க்ரைம் நாவல் தலைப்பு போல் இருக்கிறது சார்.
    டெக்ஸ் வில்லர் சாகசம் சாகசம் சரியா சார்.?

    ReplyDelete
    Replies
    1. irave...irule...imsikkathe....intha titale nalla irukkume!

      Delete
  7. //Yes - இதுவொரு கிராபிக் நாவலே ; //
    ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. from tibet...to europe...then U.S. ....so it is not only a Graphic Novel....Geographical Novel too !!!..... :)

      Delete
  8. விஜயன் சார், "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல" வித்தியாசமான சித்திரம்கள் கான்வாஸ் பெயிண்ட்டிங் போல் உள்ளது! ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.

    மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் "பத்து லட்சம் பார்வைக்கு" வாழ்த்துக்கள்.

    Things are falling into our plate, What a way to start Erode book festival. Cheers

    ReplyDelete
  9. விஜயன் சார்,
    // 54 + 54 + 54 பக்கங்கள் கொண்ட மூன்று பாகங்களில் அசுர வேகத்தில் ஓடும் இந்த ஆக்ஷன் கதை //
    முன்று பாகம்களும் ஒரே புத்தகமாக வெளி வருகிறது என நம்புகிறேன்.

    ReplyDelete
  10. //ஆக்ஷன் கதை //
    முன்று பாகம்களும் ஒரே புத்தகமாக வெளி வருகிறது என நம்புகிறேன்.//
    +1

    ReplyDelete
  11. //ஒரே இதழாய் - வித்தியாசமானதொரு தருணத்தில் இந்தக் கதையை வெளியிட்டே தீர வேண்டுமென சென்றாண்டே தீர்மானித்த போது எனக்கு நினைவுக்கு வந்து நின்றது நமது மில்லியன் ஹிட்ஸ் தான் ! //
    பரணி சார் நம்முடைய கேள்விக்கான பதில்.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. எங்களையும் உங்களையும் இணைக்கும் ஒரு காமிக்ஸ் பாலமாக இந்த வலைப்பதிவு அமைந்துள்ளது என்றால் மிகையில்லை! நமது காமிக்ஸ் வெற்றியின் முதல் படிக்கட்டுகளாக அமைத்தது இதுதானே..? எங்கள் மனத்தில் ஊற்றடிக்கும் காமிக்ஸ் ஆசைகளையும், எண்ணங்களையும், விருப்பகளையும் உடனுக்கு உடன் வழங்கும் கருவியாக மட்டுமில்லாமல் ஒரு காமிக்ஸ் நண்பனின் தோழமையாகவே இதைக் கருதுகிறேன்..!

    படிக்கும் போது என் கண்களைக் கசக்காமல் வைத்திருக்கும் எந்தவொரு GN-க்கும் என் ஆதரவு என்றுமுண்டு!
    சூப்பர் 6-ன் இன்னொரு பாக்கி 'கிங் ஸ்பெஷல்' பற்றியும் ஒரு கோடுப் போட்டிருக்கலாம்?

    அதுசரி, இரவென்றாலே இருள்தானே....?

    ReplyDelete
    Replies
    1. iravu enbathu poluthai kurikkirathu...irul enbathu iruttai kurikkurathu....

      Delete
  14. விஜயன் சார். ஈரோடு உங்களை வரவேற்கிறது மில்லியன் ஹிட்ஸ் வாழ் த் துக்கள்.

    ReplyDelete
  15. சென்ற முறை டெக்ஸ் தீபாவளி மலர் சக்கை போடு போட்ட பின்னர் இந்த முறையும் தீபாவளி மலர் 'கருப்பு வெள்ளை' டெக்ஸ் சாகசமாகவே இருக்கும் என்று குழந்தை கூட ஊகித்து விடுமே :) இதுக்கு எதுக்கு build up? :)

    ReplyDelete
    Replies
    1. சென்ற முறை மட்டுமல்ல நண்பரே பலமுறை தீபாவளி துப்பாக்கியே டெக்ஸ் வெடிப்பதால்தானே !

      Delete
  16. ,million hits special- தேவ ரகசியங்கள் தேடலுக்கு அல்ல ! AWESOME!

    ReplyDelete
  17. டியர் எடிட்டர்ஜீ!!!

    மில்லியன் ஹிட்ஸ் தேவ ரகசியத்தை அம்பலமாக்கியதற்க்கு நன்றி.மற்றொரு கிராபிக் நாவலா...? என்று தாரையார் "தாரை தாரையாக" கண்ணீர் வடிக்காமலிருந்தால் சரி ;-).இந்த பிரெஞ்சு காரங்களுக்கு இந்த மாதிரி கதையெல்லாம் எப்படிதான் தோணுதோ...ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ...?

    தீபாவளி மலரை விடுங்கள்.கார்சனின் கடந்த காலம் எப்போது...?இதுதான் இப்போது மில்லியன் (ஹிட்ஸ்) டாலர் கேள்வி...?

    ReplyDelete
    Replies
    1. .கார்சனின் கடந்த காலம்-DECEMBER, மின்னும் மரணம் - January 2015

      Delete
    2. செந்தில் செல்லாது செல்லாது .....அடுத்த மாதமே வேண்டும் !

      Delete
  18. To Editor,
    ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் 'மில்லியன் ஹிட்ஸ்'க்கு வாழ்த்துக்கள்!

    ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதுபோல இங்கு வரும் நண்பர்களது எண்ணிக்கை குறைவாகவே இருந்தபோதிலும், 'ஏலேலோ ஐலேசா...' என்று அனைவருமாக கீ போர்டுகளை அழவைத்து, இந்த சாதனையைப் புரிந்திருப்பது சாதாரண விடியமல்ல. இன்னும் 1000 என்று நண்பர் ஒருவர் கணித்துச் சொன்னபோது ரீப்ரெஷ் பண்ண ஆரம்பித்தோம், நிறுத்தியபோது மில்லியன் கடந்துவிட்டிருந்தது! இப்படிச் செய்தது கொஞ்சம் 'சின்னப்புள்ளத்தன' மாக இருந்தபோதிலும், ஆசிரியர் கடந்த பதிவில் குறிப்பிட்டதுபோல நாமெல்லாம் அரை டிராயர் போடாத குழந்தைகள்தானே? இந்த சாதனையை கொண்டாடும் முகமாக நண்பர்களுக்கு ஸ்வீட் வழங்க ஏற்பாடு செய்யலாம் என்று பார்த்தால், நாம் கடல் கடந்தல்லவா இருக்கிறோம்? அதனால், நாமே வாங்கி நாமே அமுக்கிவிடுகிறோம். நண்பர்கள் தமக்கு கிடைத்ததுபோல கற்பனை செய்துகொள்வார்களாக!

    'தேவ ரகசியம்' விளம்பரம் வெளியானபோதே அந்த இமேஜ்ஐ கூகிளாண்டவரிடம் கொடுத்து தேடச்செய்ததில் இந்தக் கதைத் தொடர் கிடைத்தது. உண்மையில் பிரமாதமான தொடர்தான். தமிழில் வரவேற்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  19. Thanks to steelclaw for the million hits...

    ReplyDelete
  20. இந்த வாரத்தில் மட்டும் முன்று பதிவுகள்
    வேகமான அலசல்கள் வேகமான முடிவுகள் வேகமான அறிவிப்புகள்
    என தூள் பறிக்கிறது
    ரசிகர்கள் அனவைரையும் சுண்டி இலுக்கும்
    பதிவுகள் !
    ஈரோடு புத்தக விழாவே இதற்கு முக்கிய காரணம் எனபது எனது
    எண்ணம். வாழ்க திருவிழா !!
    ஆகட்டும் டும் !!!

    ReplyDelete
  21. offbeat with caution good choice edit ! :)

    ReplyDelete
  22. சார் ...முதலில் அனைத்து காமிக்ஸ் நண்பர்களின் சார்பாக "மில்லியன் ஹிட்ஸ் " மிக விரைவில் நமது வலை பதிவு அடைந்ததில் மாபெரும் வாழ்த்துக்கள் ......

    உங்களாலும் ...நண்பர்களாலும் நம்ம " அண்ணாச்சியின் " ஆப்ரேஷன் நல்ல படியாக முடிந்தில் மாபெரும் சந்தோசங்கள் ....

    "தீபாவளி மலர் " என இனி வர போகும் இதழ் ....

    இரவில் ..இருளில் ..கொன்றாலும் சரி ....பகலில் ...வெளிச்சத்தில் கொன்றாலும் சரி ....போன முறை போல டெக்ஸ் சாகசமும் .....போன முறையை விட கொஞ்சமாவது அதிகமாக "குண்டு புத்தகமாகவும் " இருக்க வேண்டும் என்று எங்கள் போராட்ட குழு சார்பாக வேண்டி கொள்கிறோம் சார் ...

    மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் புத்தகம்

    "எஸ் ..இதுவொரு கிராபிக் நாவலே "

    என்ற தங்கள் வார்த்தை நண்பர் கண்ணன் ரவி சொன்னது போல " ஹி ..ஹி .." தான் என்பதும் ..,நண்பர் புனித சாத்தான் அவர்கள் "தாரையார் தாரை தாரையாக கண்ணீர் வடிக்காமல் இருந்தால் சரி .."என்ற கூற்றும் கிராபிக் பதுங்கு குழியாளர் அனைவர்க்கும் " பக் ..பக் " இதயத்துடன் தான் காத்திருக்க போகிறோம் என்றாலும் ......தங்களின் இன்னொரு வார்த்தையான

    "THE FORBIDDEN MANUSCRIPT என்ற பொருள்படும் பிரெஞ்சு அதிரடி saga தான் நமது மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் ஆக முழுவண்ணத்தில் அற்புதம் செய்யக் காத்துள்ளது ! 54 + 54 + 54 பக்கங்கள் கொண்ட மூன்று பாகங்களில் அசுர வேகத்தில் ஓடும் இந்த ஆக்ஷன் கதையினை எனக்கு அடையாளம் காட்டியது நமது ஜூனியர் எடிட்டரே ! ' #

    என்ற வார்த்தை கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் அளிக்கிறது.. :-)

    காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
  23. எடிட்டர் விஜயன் சார் மற்றும் அன்பிற்குரிய காமிக்ஸ் வாசக நெஞ்சங்களே! மில்லியன் ஹிட்ஸ் கண்டுள்ள நமது காமிக்ஸ் வலைபூவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
    விஜயன் சார், "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல" வித்தியாசமான சித்திரம்கள் கான்வாஸ் பெயிண்ட்டிங் போல் உள்ளது! ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.
    "தீபாவளி மலர்" !! "இரவே..இருளே..கொல்லாதே -டெக்ஸ் வில்லர் சாகசம் சாகசம் சரியா சார்.?
    எஸ்.ஜெயகாந்தன் , புன்செய் புளியம்பட்டி

    ReplyDelete
  24. டியர் விஜயன் சார்,

    MHS, LMS, EBF வாழ்த்துகள்! :)

    //54 + 54 + 54 பக்கங்கள் கொண்ட ... FORBIDDEN MANUSCRIPT//
    மீண்டும் ஒரு கதம்ப இதழை அறிவிக்காமல், கலெக்டர்'ஸ் இதழை அறிவித்ததில் மிக்க மகிழ்ச்சி! இந்த இதழில், வழக்கமான பக்க நிரப்பிகளைத் தவிர்த்து விட்டு, Collector's எடிஷன்களுக்கே உரித்தான அம்சங்களை மட்டும் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    //"பதுங்கி இருக்கும் கிராபிக் நாவல் "டர்ராளர்கள்" தைரியமாய் .. வெளியே தலைகாட்டலாம் !! "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல !"//
    அதாவது, 'கிராபிக் நாவல்கள் ஓடலுக்கல்ல' என்கிறீர்கள்?! :P

    //"இரவே..இருளே..கொல்லாதே ! "//
    தீ.ம. தலைப்பிலும் கி.நா. வாடை அடிக்குதே?! ;) பார்த்து சார், ஒரேடியாக ஓடி விடப் போகிறார்கள்! :D

    ReplyDelete
    Replies
    1. அடுத்த ஸ்பெஷல்களுக்கான ஐடியாக்கள் ;)

      FHMS - Lion Blog: Five Hundred Members Special (இப்போது 480)
      TLS - Lion Facebook Page: Thousand Likes Special (தற்போது 920)

      கடந்த ஆண்டு, நீங்கள் ஃபேஸ்புக் பக்கம் துவங்கிய போது, 'ஓரிரு வாரங்களில் 1000 லைக்குகளை அள்ளப் போகிறீர்கள்' என்று ஒருவர் தப்புத் தப்பாக கணித்திருந்தார். :P இருந்தாலும், வலைப்பூவில் உறுப்பினராக இணைவதை விட, போகிற போக்கில் லைக் போட்டு செல்வது எளிது என்பதையே இந்த எண்கள் காட்டுகின்றன! பெரியதாய் பதிவுகள் ஏதும் இன்றியே, ஒரே வருடத்திற்குள்ளாக 1000 பேரை அடைய முடிகிறது எனும் போது; சுவாரசியமான தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்தால், மேலும் பலரை எளிதில் சென்றடையலாம்.

      இந்த இரண்டு தளங்களிலும் இணையாமல் - வெறும் பார்வையாளராக மட்டுமோ அல்லது இணையம் பால் வராமலேயோ இருப்பவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடும் என்பது வேறு விஷயம்!

      Delete
  25. //இரவில் ..இருளில் ..கொன்றாலும் சரி ....பகலில் ...வெளிச்சத்தில் கொன்றாலும் சரி ....போன முறை போல டெக்ஸ் சாகசமும் .....போன முறையை விட கொஞ்சமாவது அதிகமாக "குண்டு புத்தகமாகவும் " இருக்க வேண்டும் என்று எங்கள் போராட்ட குழு சார்பாக வேண்டி கொள்கிறோம் சார் ...//
    போராட்ட குழு தலைவரின் கூற்றை நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. gunda irukkanuma?.....deepavali kku vedikkira "anu gunda" iruntha parava illiya?

      Delete
  26. எடிட்டர் சார்,

    நள்ளிரவு 2:27க்கு ஒரு பதிவா? எங்களுக்காக உங்களின் மெனக்கெடல் நெகிழ வைக்கிறது சார்!! இப்பதிவின் மூலமாக எங்களது எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கும் உங்களுடைய கடமை உணர்வுக்கு மில்லியன் நன்றிகள் சொல்லிடலாம்!

    "தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல" தலைப்பும், ஓவியங்களும் முதல் பார்வையிலேயே மூச்சை ஸ்தம்பிக்கச் செய்கிறது. ஒரு பெரிய்ய்ய்ய விருந்து எங்களுக்காகக் காத்துள்ளதை அப்பட்டமாக உணரமுடிகிறது. அட்வான்ஸ் மில்லியன் நன்றிகள்!!

    'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்' பற்றிய ரகசியத்தை வெளியிட்ட கையோடு, 'தீபாவளி மலர்' பற்றியும் சூசகமாக அறிவித்து சூடு கிளப்பிவிட்டீர்களே இது நியாயமா? நாளைய பொழுது உங்களுடன்தான் கழியவிருக்கிறது என்பதால், 'தீபாவளி மலர்' பற்றிய ரகசியத்தையும் உங்களிடமிருந்து கறந்துவிடும் என்ற நம்பிக்கை போராட்டக் குழுவுக்கு நிறையவே உள்ளது. :)

    எங்களைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு வருடமும் 'தல' தீபாவளி என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

    டெக்ஸ் வாழ்க! :)

    ReplyDelete
  27. congrats to everyone.
    million hits special, similar to da vinci code is a very good news

    ReplyDelete
  28. மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் !

    டியர் விஜயன் சார், முதலில் மில்லியன் ஹிட்ஸ்/க்கு வாழ்த்துகள். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது சார் !

    தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல ! - அற்புதமான தலைப்பு சார். மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலுக்கு அற்புதமான தேர்வும் கூட. மூன்று பாகங்களும் ஒரே புத்தகமாக ; முழு வண்ணத்திலானதொரு வெளியீடு ; கிராபிக் நாவல் போன்று ஒரே புத்தகம் ; காலகாலமாய் நினைவில் தங்கக் கூடிய அற்புதமான கதைக் கரு ; தேடலின் எல்லைகள் பரந்து விரிந்ததொரு கதைக்களம் (நம் ரசனையிலும் தான்) என்று அற்புதமான தேடல்.

    இதுபோன்ற இரகசியங்களை தேடும் கதைக்களம் எனக்கு மிகவும் பிடிக்கும் சார். ஆவலுடன் காத்திருக்கிறேன் !

    ReplyDelete
  29. மின்னும் மரணம் ! முத்து collector's ஸ்பெஷல்! (மீள்பதிவு - ஆசிரியரின் பார்வைக்கு மட்டும்)

    டியர் விஜயன் சார்,

    மின்னும் மரணம் ! முத்து collector's ஸ்பெஷல்! இப்படித்தான் title வரும் என்று நினைத்திருந்தேன்.. இப்படித்தான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் சார். உதாரணத்திற்கு தங்களின் முந்தைய வெளியீடான இரத்தப் படலம் புத்தக title ஐக் கூறலாம் ;

    இரத்தப் படலம்!
    லயன் collector's ஸ்பெஷல்!

    The Compllete Collection !
    இரத்தப் படலம் 1-18 The Complete Saga !

    ஒருவேளை இரத்தப் படலத்திற்கு The Blood Sport ஸ்பெஷல்! என்று பெயர் வைத்திருந்தால் எப்படி அந்த காமிக்ஸ் காவியம் தன்னுடைய ஒரிஜினல் தன்மையை இழந்திருக்குமோ அப்படித்தான் - வேறு ஒரு பெயர் வைத்தால் மின்னும் மரணமும் தன் ஒரிஜினல் தன்மையை இழந்து விடும் சார் !

    ReplyDelete
  30. சார் மீண்டுமொரு அற்புதமான பதிவு ! ஸ்பைடரை , ஆர்சியை நம்மளவுக்கு இங்கிலாந்தில் நேசித்திருப்பார்களா என்பது சந்தேகத்திற்கிடமான கேள்வி அல்ல ! உண்மையிலே அவர்கள் நேசிக்கவில்லை என்பது பரிதாபமே ! அதனால்தானே கதைகள் நின்று விட்டன ! நமது துரதிர்ஷ்டம் என்றே கொள்ள வேண்டும் ! பால்ய பருவங்களை சந்தோசத்தின் கரம் பிடித்து இணைத்திட அந்த இருவரும் இருகரங்களில் , இருபுறமும் இணைத்து கொணர்ந்ததை இங்கே உள்ள 35+ வயதுடைய நண்பர்களை தவிர யாரால் உணர முடியும் ! அவர்கள் இடையில் நம்மை விட்டு சென்றதும், இவர்கள் மூலமாய் காமிக்ஸை சுவைத்த நண்பர்கள் , பிற கதைகள் வேண்டாம் என்று போனதும் இங்கே பங்கு பெற்ற பல நண்பர்கள் செல்லமாய் கோபித்து வெளியேறியதும் அறிவோம் ! இப்போது கூட கொலை படை நான்கைந்து பக்கங்களை புரட்டும் போது இங்கே சில்லென எனை தழுவிய மழைகாற்று எனது மனதில் தீண்டி விட்டு சென்ற அந்த அற்புத உணர்வு ஸ்பைடர் ஒருவனுக்கே சொந்தமாகும் ! நல்லவேளை உங்கள் தந்தையார் சுவாரஸ்யம் காட்டவில்லை என ஸ்பைடரை தாங்கள் ஒதுக்கவில்லை ! நாங்கள் பெற்ற பெரும் பேறு வேறெதுவாய் இருக்கும் !
    அடுத்த தளத்திற்கு பயணமாக என்னை போன்றவர்களுக்கு டெக்ஸ் , பதிமூன்று போன்றவர்கள் உதவினாலும் மறக்க முடியவில்லை ஸ்பைடரை என்பதனை யாராலும் மறுக்க முடியாது !
    இப்போது விரிந்துள்ள களம் நம்மை தேவ ரகசியங்களை பார்க்க அனுமதித்துள்ளது ! அருமை மூன்று பாகங்களுக்காக காத்திருக்கிறேன் !
    அந்த கிங் ஸ்பெசல் முடிச்சு இன்னும் அவிலவில்லை !
    இரவே இருளே கொல்லாதே ! ஆஹா தலைப்பே காதலை சொல்கிறதே !

    அப்போது சிறுவயதில் காமிக்ஸ் படிக்காதவர்களை பார்க்கும் பொது இவர்கள் இழக்ககூடாத ஒன்றை இழக்கிறார்கள் என்ற எண்ணம் எப்போதுமே ஓங்கி இருக்கும் ! இப்போது தங்களின் பதிவை படித்ததும் அதன் உற்ச்சாகம் இன்னும் எகிறி விட்டது !

    ReplyDelete
    Replies
    1. மில்லியன் ஹிட்சில் இன்னுமொரு சிறந்த எமனின் திசை மேற்கு !

      Delete
    2. சர் அட்டை படங்களை பார்க்கும் பொது ஒரு கேள்வி .....hard bound அட்டைதானா !

      Delete
    3. ////பால்ய பருவங்களை சந்தோசத்தின் கரம் பிடித்து இணைத்திட அந்த இருவரும் இருகரங்களில் , இருபுறமும் இணைத்து கொணர்ந்ததை இங்கே உள்ள 35+ வயதுடைய நண்பர்களை தவிர யாரால் உணர முடியும் !///

      ////அடுத்த தளத்திற்கு பயணமாக என்னை போன்றவர்களுக்கு டெக்ஸ் , பதிமூன்று போன்றவர்கள் உதவினாலும் மறக்க முடியவில்லை ஸ்பைடரை என்பதனை யாராலும் மறுக்க முடியாது !////
      ++++++++++++++++++++++++++++++++++++++++++

      Delete
    4. //சர் அட்டை படங்களை பார்க்கும் பொது ஒரு கேள்வி .....hard bound அட்டைதானா !//


      same question!

      Delete

    5. //அப்போது சிறுவயதில் காமிக்ஸ் படிக்காதவர்களை பார்க்கும் பொது இவர்கள் இழக்ககூடாத ஒன்றை இழக்கிறார்கள் என்ற எண்ணம் எப்போதுமே ஓங்கி இருக்கும் ! //

      இப்போதும் !

      Delete
  31. //நள்ளிரவு 2:27க்கு ஒரு பதிவா? எங்களுக்காக உங்களின் மெனக்கெடல் நெகிழ வைக்கிறது சார்!! இப்பதிவின் மூலமாக எங்களது எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கும் உங்களுடைய கடமை உணர்வுக்கு மில்லியன் நன்றிகள் சொல்லிடலாம்!/
    மிக்க மகிழ்ச்சி...நன்றிகள் பல...

    ReplyDelete
  32. //என் தம்பி என்னடாவென்றால் .....வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒன்றின்மேலொன்று (தோராயமாக 750 பக்கங்களுக்கு சமமாக) வைத்து LMS இன் உயரம் இவ்வளவு இருக்கும் என மனக்கண்ணில் அதன் மாதிரியுருவை கற்பனை செய்கின்றான்...//

    என் தங்கையின் பல்வேறு மெடிகல் புக்ஸை எடுத்து, LMS எந்த அளவு குண்டாக இருக்கும் என்பதை நானும் அடிக்கடி ஆராய்ந்து பார்க்கிறேன்....Just 1 day to go to have LMS in hand...Waiting.....

    ReplyDelete
  33. மில்லியன் ஹிட்ஸ் க்கு வாழ்த்துக்கள் சார் ..

    ReplyDelete
  34. ///ரீப்ரெஷ் பண்ண ஆரம்பித்தோம், நிறுத்தியபோது மில்லியன் கடந்துவிட்டிருந்தது! இப்படிச் செய்தது கொஞ்சம் 'சின்னப்புள்ளத்தன' மாக இருந்தபோதிலும், ஆசிரியர் கடந்த பதிவில் குறிப்பிட்டதுபோல நாமெல்லாம் அரை டிராயர் போடாத குழந்தைகள்தானே?///
    +1111111111111111111111111111

    ReplyDelete
  35. ////ஈரோட்டில் சந்திப்போம் ; அங்கு வர இயலா நண்பர்களை சனிக்கிழமை காலையிலொரு பதிவில் சந்திப்போம் ! ////
    Thanks Sir....

    ReplyDelete
  36. மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் !

    டியர் விஜயன் சார்,

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு அபிப்ராயத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன். இந்தப் பதிவில் நம் தமிழ் காமிக்ஸ் வாசகி suji jeya கூறியிருப்பதை தாங்கள் படித்திருக்கலாம். இதேக் கருத்தை வலியுறுத்தி பலமுறை அமெரிக்கா ; பிரான்ஸ் ; இலங்கை வாழ் வாசக நண்பர்கள் பலர் இங்கே வருத்ததுடன் பதிவிட்டுள்ளனர். அவர்கள் தாயகம் துறந்து வெளிநாட்டில் வசிப்பதால் தான் இந்த கொடும் துயரம் என்றும், இங்கு அனைவரும் காமிக்ஸை வாசித்து அலசி ஆராய்ந்தப் பின்பே தங்களுக்கு புத்தகம் கிடைப்பதாகவும், அதுவரை காத்திருக்க இயலாமல் மனம் துன்பத்தில் ஆழ்வதாகவும் பல பதிவுகளை நீங்களும் படித்திருக்கலாம்.

    ஆகவே, வரும் 2015ல் இருந்து ஒரு புதிய நடைமுறையை தங்களால் நடைமுறை படுத்த முடியுமா என்று அறிய ஆவலாக இருக்கிறேன் சார். தற்போதெல்லாம் தங்களின் வெளியீடுகள் ஒரு மாதம் முன்பாகவே தயாராகி விடுகின்றன. எனவே அயல்நாட்டுச் சந்தாதாரகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு முன்பாக (அமெரிக்கா ; பிரான்ஸ்) தபாலில் அனுப்பி வைத்தால் அனைவருக்கும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் புத்தகங்கள் கிடைக்க வழி ஏற்படுமே சார்..? இலங்கைக்கு ஒரு வாரம் என்றும் பயண நாட்களைப் பொருத்து உத்தேசமாக ஒரு திட்டத்தை ஆலோசிக்கலாமே சார்..?

    ReplyDelete
  37. ////பத்து லட்சம் பார்வைகள்' என்ற உடனே பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் வாசஸ்தலமாய் நமது பதிவு உருப்பெற்று விட்டது என்ற ரீதியிலான கற்பனைகளில் நாம் யாருமே திளைத்துத் திரியவில்லை////
    ////சிறியதொரு வட்டம் ; அடர்த்தியான வட்டம் ; காமிக்ஸை மூச்சாய் நேசிக்கும் ஒரு வட்டம் - என்பது மாத்திரமே நமது வெளிப்படையான அடையாளங்கள் என்பதால் - நம் கூட்டு முயற்சியின் ஒரு சந்தோஷ பலனாய் இதனைக் கொண்டாடுவோமே !////
    ////ஆனால் கரம் பற்றிக் கொள்ளவும், நாம் அந்தர்பல்டி அடித்திடக் கூடாதே என்ற கரிசனமும் கொண்ட நண்பர்கள் இங்கு நிறைந்திருப்பதால் கோச் வண்டி கட கட வென்று பயணித்த்துச் செல்கிறது ! Thanks ever so much all...I owe you so much !!////
    இங்கு நான் உலவும் நேரங்களை விடப் பன்மடங்கு அதிக அவகாசம் செலவிடும் நண்பர்களுக்கும் ; ஒவ்வொரு நாளையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவிடும் நண்பர்களுக்கும் ; ஆழமான பல சிந்தனைகளைப் பகிர்ந்திடும் தோழர்களுக்கும், அமைதியாய் படித்து விட்டு ரசித்துச் (?!) செல்லும் நெஞ்சங்களுக்கும் ; தொலைவில் இருப்பினும் ஒவ்வொரு வரியையும் படித்து விட்டு அவ்வப்போது மின்னஞ்சல்களிலும், தொலைபேசிகளிலும் வாழ்த்துச் சொல்லும் அன்பர்களுக்கும், ; அபிப்ராய வேற்றுமைகள் இருப்பினும், நம் மீதும் , காமிக்ஸ் எனும் ரசனையின் மீதும் கொண்ட நேசத்தால் நமக்குத் துணை நிற்கும் நெஞ்சங்களுக்கும் ; நம் நாட்களை தத்தம் பாணிகளிலான நகைச்சுவைகளால் களைகட்டச் செய்யும் ஆற்றலாலர்களுக்கும்////
    ////இதனை ஒரு extended family ஆகக் கருதிடும் நேச நெஞ்சங்களுக்கும் நாம் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம் !////
    நெகிழ செய்யும் பதிவு....நன்றி விஜயன் sir

    ReplyDelete
  38. ////பால்ய பருவங்களை சந்தோசத்தின் கரம் பிடித்து இணைத்திட அந்த இருவரும் இருகரங்களில் , இருபுறமும் இணைத்து கொணர்ந்ததை இங்கே உள்ள 35+ வயதுடைய நண்பர்களை தவிர யாரால் உணர முடியும் !///

    ////அடுத்த தளத்திற்கு பயணமாக என்னை போன்றவர்களுக்கு டெக்ஸ் , பதிமூன்று போன்றவர்கள் உதவினாலும் மறக்க முடியவில்லை ஸ்பைடரை என்பதனை யாராலும் மறுக்க முடியாது !////
    ++++++++++++++++++++++++++++++++++++++++++

    ReplyDelete
  39. பத்து லக்க்ஷ வாழ்த்துக்கள் ...........

    ReplyDelete
  40. // சிறுவயதில் காமிக்ஸ் படிக்காதவர்களை பார்க்கும் பொது இவர்கள் இழக்ககூடாத ஒன்றை இழக்கிறார்கள் என்ற எண்ணம் எப்போதுமே ஓங்கி இருக்கும் ! //
    உண்மை ஸ்டீல் அவர்களே.!
    இடையில் நானும் சில வருடங்கள் இந்த அற்புத உலகை விட்டு விலகியிருந்துவிட்டேன்.
    ஏதோ ஒன்றை இழந்துவிட்டதை இப்போது உணர்கிறேன்.!

    ReplyDelete
  41. Erode VIJAY: //நள்ளிரவு 2:27க்கு ஒரு பதிவா? எங்களுக்காக உங்களின் மெனக்கெடல் நெகிழ வைக்கிறது சார்!! இப்பதிவின் மூலமாக எங்களது எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கும் உங்களுடைய கடமை உணர்வுக்கு மில்லியன் நன்றிகள் சொல்லிடலாம்!//
    +1

    we know you breath comics edit, but save your health 2:27 am is perfect to call Oooover time :) !

    ReplyDelete
  42. டியர் எடிட்டர்

    Ten
    Hundred
    Thousand

    Million

    இவைகளை வெற்றிகரமாக கடந்து வந்ததற்கும்.......

    விரைவில்

    Billion......

    Trillion......

    இந்த ஜுஜிபி உயரங்களை கடக்கபோவதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

    ReplyDelete
  43. Hello sir, ippodhu nan sollappovathu kandippaka anaithu vasakarkalin kanavaka irukkum. Minilion, juniorlion, anaithu ithalkalum irandu digest , dhikil veliyedukal anaithum inaindhu 3 digest kandippaka vendum.

    ReplyDelete
  44. Conratulations to all of us!

    சரி சரி வாங்க 2 மில்லியன் hits நோக்கி பயனிப்போம்!

    ReplyDelete
  45. இரண்டரை வருடத்தில் ஒரு மில்லியன் பார்வைகள் எனபது நமது தளத்துக்கு கிடைத்த ஒரு அற்புத அங்கீகாரம்/ ஒரு முதல் நிலை வெற்றி .இதை சாத்தியமாகியது காமிக்ஸ் போர் வீரர்களான வாசகர்கள் எனினும் இந்த
    வீரர்களை வெற்றிக்களத்துக்கு வழிநடத்திச்சென்ற தளபதியாக திகழும் ஆசிரியரின் தலைமைப்பண்பு awesome guys!

    நன் பலமுறை நினைப்பதுண்டு, நமது ஆசிரியர் காமிக்ஸ் எனும் சிறிய களத்தை விட்டு, காமிக்ஸ் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் நமது லார்கோவை போல, அல்லது எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு ரத்தன் டாட்டாவை போல ஒரு பன்முக MNC நிறுவனத்தை தலைமை ஏற்றிருந்தால், இவரின் புகழ் பலதரப்பு மக்களால் பேசப்பட்டிருக்கும் என்று.நமது ஆசிரியரின் பலம் எதுவோ அதுவே அவரின் வேறுவிதத்தில் பலவீனமும் ஆகிவிட்டது எனபது IRONY! இது இன்றைய சூழ்நிலை மட்டுமே.

    பெரும் புகழ் அடைந்தவர்கள் அனைவரும் சிறிய இடத்தில இருந்துதான் தமது பயணத்தை தொடங்குகிறார்கள். நாளை நமது நிறுவனமும் மக்கள் மத்தியில் பெரும் அங்கீகாரம்/வெற்றி பெரும் என்று எனக்கு அசைக்கமுடியாத
    நம்பிக்கை உள்ளது. செல்லும் பாதையில் சவால்கள் இருந்தால் தானே பெற்ற வெற்றியில் சுவை இருக்கும். நமது ரத்தத்தில் சவால்களை எதிர்கொள்ளும் காமிக்ஸ் ஹீரோக்களின் உணர்வுகள் கலந்துள்ள போது, அவர்களை முழுவதுமாக புரிந்துகொண்டு, அவர்களின் ஒவ்வொரு சிறு அசைவையும் உணர்வுகளையும் உள்வாங்கி வெளிப்படுத்தும் ஆசிரியர்,ஒரு வேங்கை ஜாதியாக இருந்தால் தானே முடியும். பெரிதாக முன்னறிய ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்பதை விட, சிறிய நிறுவனத்தை பெரும் சவால்களை எதிர்கொண்டு நாளை, நமது தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ஒரு பெரும் நிறுவனமாக மற்றும் அனைத்து குணநலன்களும் நமது ஆசிரியரிடம் உள்ளபோது, இதுவே அவரது அடித்து விளையாடக்கூடிய சிறந்த களம் என்பதில் ஐயமில்லை. அந்த வெற்றி நாளை எதிர்நோக்கி நாம் காத்திருப்போம்.


    நமது தளத்தில் சிறிய நீர்ப்பரப்பு சலசலப்புக்கள், ஒரு சில வேலைகளில் சுனாமியாக மாறியபோதெல்லாம் ஒரு GENERAL YARD STICK கொண்டு ஒரு அவசர தீர்மானத்துக்கு வந்த தருணங்கள் சில உண்டு. அந்த பொழுதுகளில்,பிற தளங்களை போல நமது தளமும் SPAMகளால் நிறைந்துவிடும், கட்டுப்பாடற்ற வார்த்தைகளால் முகம் சுளிக்க வைத்துவிடும் என அச்சப்பட்ட பொழுதுகளை மறக்க முடியாது.

    மேஜிக் வின்ட்டை கண்டுபிடிக்க அந்த செவிந்திய மாந்த்ரீகர், தனது உள்ள INTUITION னால் தூண்டப்பட்டு ஒரு பாதையில் பயணிக்கும்போது கடவுள் எவ்வாறு அவரை அவரது DESTINY க்கு வழிநடதுகிராறோ, அதுபோல இந்த களத்தில், நமது மாந்த்ரீக ஆசிரியரையும், நம்மையும் கடவுள் எனும் ஒரு சக்தி வழிநடத்துகிறது என்பதை தவிர , நாம் பெற்ற இந்த மில்லியன் ஹிட்ஸ் வெற்றிக்கு வேறு காரணம் கூற முடியாது. இது ஒரு மேஜிக் நண்பர்கள. இந்த தருணம் ஒரு பரவசமான மேஜிக்!

    ReplyDelete
  46. நண்பர்களே நள்ளிரவு வேட்டை என்பது டெக்ஸ் கதையாக இருக்கும் பொது ......இரவே இருளே கொல்லாதே என்பதில் இரவு எனும் வார்த்தை உள்ளதை வைத்து பார்க்கும் போதும் டெக்ஸ்தான் ...

    ReplyDelete
  47. Replies
    1. Came to know that all parcels sent except for coimbatore!......;)

      Delete
    2. rendu moonu nalaga nightla ungalukku thookkame illainu sollunga...appadiye koncha neram thoonginalum kanavila vitha vithama LMS book vandu kaatchi tharutha?

      Delete
    3. lms மேல் ஆவல் இருந்தாலும் , நண்பரே கார்சனின் கடந்த காலம்தான் கண்ணில் வந்து செல்கிறது !
      நாளைகாலையே எழவேண்டுமே என்பதுதான் கொஞ்சம்......

      Delete
    4. ஸ்டீல், இக்கரைக்கு அக்கரை பச்சை! திருந்த மாட்டிங்க :-)

      Delete
  48. VERY VERY HAPPY.....WHAT AN AN OCCASION .....JUBILIATION MOOD WELL FELT.......HURRAY.....

    ReplyDelete
  49. Vijayan sir....Was much glad by seeing your today's blog!...soon became sad!!.....because i have thought you have put wrapper of LMS!!!

    ReplyDelete
  50. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. //லயன் கிங் ஸ்பெசல் யாரோ !//

    லக்கி லூக் (Collection)//

    கிங்ஙைஷ்பெசலின் விலை ₹100எனவே லக்கி லூக்கிற்க்கு வாய்ப்புகள் குறைவு.

    தீபாவளி மலரின் விலை ₹150 எனவே டெக்ஸுக்கு வாய்ப்பு சற்றே.(சற்று மட்டுமே.)குறைவு.

    சஸ்பென்ஸ்.?

    ReplyDelete
  52. Dear Editor & Comic Fans,

    Congratulations! for the million hits...

    Forbidden Manuscript is very opt for Million hit special.

    ReplyDelete
  53. //"தீபாவளி மலர்" !! "இரவே..இருளே..கொல்லாதே -//

    ஒருவேளை அந்த 150 பக்க எஸ்டீடியை மாற்றும் கிராபிக் நாவலா இருக்குமோ.?

    ஆண்டவனுக்கும் இப்போதைக்கு எடிட்டருக்கும் மட்டுமே வெளிச்சம்.

    ReplyDelete
  54. அனைவருக்கும் மில்லியன் வாழ்த்துக்கள் நண்பர்களே. இரவே இருளே கொல்லாதே, நிச்சயமாக தலைதான் சந்தேகம் இல்லை. கிங். ஸ்பெஷல் என்ன என்ற கேள்விக்கு நாளை பதில் வாங்கி விடலாம். அடுத்த வேட்டை இரத்த படலம் வண்ண முழுதொகுப்பா .......

    ReplyDelete
  55. டியர் எடிட்,

    மில்லியன் ஹிட்டுக்கு வாழ்த்துகள். எப்போதும் அறிவிப்பது போல ஒரு மிக்ஸ் மசாலா ஸ்பெஷல் வெளியிடாமல், ஒரு கிராபிக் நாவல் தொகுப்பை தேர்ந்தெடுத்திருப்பது, ஸ்பெஷல் இதழ்கள் மீதான உங்கள் பார்வை இப்போது புதிய கோணத்தில் பயணிக்கிறது என்று அறிந்து கொள்ள முடிந்தது சந்தோஷமே.

    இத்தளம், உங்களுக்கும் ரசிகர்களுக்குமான இணைப்பு பாலம், அதுவும் இன்ஸ்டன்ட் Feedback வாங்க மற்றும் நாடி பார்க்க சரியான எந்திரமாகவும் செயல்படுவது, இந்த ஹிட்ஸின் சூட்சுமம்.

    மேக்னம் ஸ்பெஷலுக்காக அட்டைக்கு இத்தனை சஸ்பென்ஸ் அதிகம் தானோ.... வெளியீடுக்கு முன்பாகவே இங்கே அட்டையை இன்று கண்ணில் காட்டுவீர்கள் என்று நினைத்தேன்... இனி நாளைதானா ?

    ReplyDelete
  56. மகிழ்ச்சியான தருணம். நெகிழ்வான பகிர்வு. அதே நிலைதான் எமக்கும்!

    தமிழில் ஏற்கனவே சில தனி நபர் வலைப்பூக்களே கூட பத்து லட்சத்தை தொட்டிருக்கின்றன எனினும் அவை எண்ணிக்கையில் மிகக்குறைவே. அதுவும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் 500க்கும் அதிகமான பதிவுகளுக்குப் பின்னரே அது சாத்தியமாகியிருக்கிறது. (6 ஆண்டுகள் 600+ பதிவுகளுக்குப் பின்பும் எனது வலைப்பூ சுமார் 8 லட்சம் ஹிட்ஸுகளோடு சண்டித்தனம் செய்துகொண்டிருக்கிறது. ஹிஹி!)

    ஜஸ்ட் இரண்டே ஆண்டுகளில், 160+ பதிவுகளில் நம் தளம் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஒரு பதிவுக்கு சராசரியாய் சுமார் 6000 பார்வைகள்! இது நிச்சயம் சாதனைதான்.

    மச்சி ட்ட்ட்ரீட்!!

    காக்க வைக்காமல் ட்ரீட்டை உடனே அறிவித்து, அதுவும் ஒரு ப்யூட்டிஃபுல் கிராஃபிக் நாவலை அளித்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறீர்கள். நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. போராட்ட குணம் மிக்க ஆதி அவர்கள் நாளை ஈரோடு வந்தால் அங்கே கையிலேயே இரத்த படலம் வண்ண தொகுப்பை வாங்கிடலாமே !

      Delete
  57. அனைவருக்கும் மில்லியன் வாழ்த்துக்கள் ...


    இதை அடைந்ததில் நண்பர்களின் அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது ...


    நாளை ஈரோட்டில் சந்திப்போம் :)

    ReplyDelete
  58. விஜய் நாளை அந்த ஸ்பைடரின் எஞ்சிய கதையை கேட்டு கிங் ஸ்பசலை அலங்கரிக்குமாறு போராட்ட குழுவில் முதல் முக்கிய போராட்டமாக அறிவிக்கா விடில் ஈரோட்டு விழாவை புற கணிப்பேன் ! !சென்னை போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வாழ்வேன்

    ReplyDelete
    Replies
    1. // கிங் ஸ்பசலை அலங்கரிக்குமாறு போராட்ட குழுவில் முதல் முக்கிய போராட்டமாக அறிவிக்கா விடில் ஈரோட்டு விழாவை புற கணிப்பேன் ! //

      ஐ ஜாலி! ஸ்டீல் நாளை வரமாட்டார் :-)

      Delete
  59. ஈரோடு நிகழ்வுகளை படம் பிடித்து உடனுக்குடன் அப்லோட் செய்யபோகும்

    நண்பர்களுக்கு அட்வான்ஸ் நன்றீகள்

    ReplyDelete
  60. How many and what books are yet to be published this year apart from Super 6 (LMS, Deepavali Special, Book Fair Special, Million Hit Special, The king Special)

    ReplyDelete
  61. நண்பர்களே,

    சிறு திருத்தம்:
    ஈரோடு புத்தகத் திருவிழா எல்லா நாட்களிலுமே காலை 11 மணியலிருந்து இரவு 9:30 வரை செயல்படும். (சென்ற பதிவில் நண்பர் ஒருவருக்கு, சனி/ஞாயிறுகளில் காலை 9 மணியிலிருந்து இரவு 9 வரை என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தேன். )

    இன்னும் ஓரிரவு கழிந்த பின்னே உங்கள் அனைவரையும் சந்தித்திடும் ஆவலுடன்...

    ReplyDelete
  62. மை டியர் மானிடர்களே !!!

    இன்று இரவு 7 மணிக்கு ஈரோடு கிளம்புகிறேன்.கடந்த சில நாட்களாக தாங்கமுடியாத கழுத்துவலி என்பதாலே இந்த தாமதம்.காக்கா மசால் வடையை பார்க்கும் தினுசிலே அனைத்தையும் பார்க்கவேண்டிய அனுபவம் சற்றே வித்தியாசமானதுதான்;-)

    புத்தக கண்காட்சியில் எடுக்கும் புகைப்படங்களை இன்றிரவு அடியேனின் (உலகப்புகழ்பெற்ற) வலைப்பூவில் பதிவிடுகிறேன். ஹிஹி!!!

    ReplyDelete
  63. Dear vijayan sir I am happy for 10,00 ,000 looks for our blog. We meet sat at erode. I'm waiting.....

    ReplyDelete
  64. Congratulations to Editor and comic lovers for million hits.
    Eagerly waiting for LMS. another 12 hours to go.

    ReplyDelete
  65. வண்ணக் கனவுகளுடன் உறங்குவோம்.அனைவரின் கனவிலும் நம் நாயகர்கள் வரிசையாக அணி வகுத்து வருவார்கள்.

    ReplyDelete
  66. பணி சுமை காரணமாக ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள இயலவில்லை! ஆகவே மின்னும் மரணம் bookingக்கு இன்றே Rs.1000/- transfer செய்து விட்டேன் !

    ReplyDelete
  67. Dear எடிட்டர்,

    சனிக் கிழமை விடிய இன்னும் 12 வினாடிகளே உள்ளன.. எங்கே LMS அட்டை? :)

    ReplyDelete
    Replies
    1. அட்டை எல்லாம் அப்புறமா பாக்கலாம். மொதல்ல முதுகைக் காட்டுங்க :)

      Delete
  68. ஈரோடு புத்தக கண்காட்சி முதல் நாள் புகைப்படங்கள் இங்கே...!

    இந்த புகைப்படங்களை எடுத்தவர்கள் உலக பிரசித்தி பெற்ற கேமரா கலைஞர்களான ஈரோடு விஜயும்,நல்ல பிசாசும் ;-)

    ReplyDelete
    Replies
    1. பாத்துட்டேன் !பாத்துட்டேன்!(கௌண்டமணி styleல் படிக்கவும்)

      Delete
  69. வாழ்த்துக்கள் .இது ஒ௫ இமாலய சாதனை.

    ReplyDelete
  70. ஈரோடு புத்தகக் கண்காட்சியின் நேற்றைய நிகழ்வுகளுக்கு புனித சாத்தானின் மேற்கூறிய வலைத்தளத்தோடு, ஈரோடு ஸ்டாலினின் வலைப்பூவையும் பாருங்கள்...

    http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2014/08/blog-post_2.html

    ReplyDelete
  71. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :):):)

    ReplyDelete