Powered By Blogger

Saturday, November 14, 2020

ஒரு தல + ஒரு தானைத் தலீவர் !!

 நண்பர்களே,

வணக்கம். தீபாவளியின் ஒளி வெள்ளம் இல்லங்களிலெங்கும் பரவட்டும் ; நலமும், வளமும், மகிழ்வும் இனித் தொடரும் நாட்களில் நமதாகிட வேண்டிக் கொள்வோமே folks !! 

இம்மாதத்துப் புஷ்டியான கூரியர் டப்பிகள் ஒரு மாதிரியாய் அனைவருக்கும் கிடைத்து விட்டது போலத் தெரிவதால், இந்தப் பண்டிகை தினத்துக்கு நமது உழைப்பின் பலன்கள் உங்கள் இல்லங்களை அலங்கரிக்க வேண்டுமென்ற எங்கள் அவா பூர்த்தி கண்டுள்ளதென்பேன் ! மாதத்தின் முதல் நாளே புக்ஸை அனுப்பியிருப்பின், பண்டிகை நேரத்துக்கு அது ஆறிப் போன ராயர் கடை தோசை போலாகியிருக்கும் ! இப்போதோ அந்தச் சிக்கலில்லை ; L&T சிமெண்டுக்குப் போட்டி தரவல்ல உறுதியான சீடைகளையும், முறுக்குகளையும் தட்டில் போட்டுத்தரும் இல்லத்தரசிகளிடம் "ஏ..ஜுப்பரு !!"  என்று வழிவதை  - இப்டிக்கா அமாயாவோடோ ; யுலாவோடோ தொடரவும் செய்யலாம் ! 'மொடேர் ..மொடேர்...' என பக்கத்துப் புதுவீட்டுக்காரன் வெடிக்கும் வெடிகளின் முன்னே நம்ம போடும் வெங்காய வெடிகள் 'புஸ்க்..புஸ்க்.." என பூனைக்குட்டியாட்டம் முனகுவதை மறக்க நினைத்தால் Tex & டீமோடு களமிறங்கினால் போதும் - ஒரு தோட்டாக் கச்சேரியே அரங்கேறிடும் மனசுக்குள் ! பண்டிகை நாளுக்கு டி-வியில் போடும் படம் மொக்கை போட்டால் - no worries ; பருந்து சர்ப்பத்தில் ஏறி ஜிலோன்னு ஆஜராகும் நம்ம ஸ்நேகிபாபு  கூட  பொழுதைக் கழிக்கலாம் ! So இந்த மாதத்துக் கூட்டணி உங்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகிடுவதில் நாங்க ஹேப்பி !!

பால்ய நினைவுகளைக் கிளறும் ஒரு சூப்பர் ஹீரோ ; ஒரு sci-fi ரக ஒன் ஷாட் ; ஒரு புயட்சிக்கார அம்மிணி + ஒரு towering சூப்பர் ஸ்டார் என்பதே இம்மாதத்து இதழ்களின் தொகுப்பு எனும் போது - இங்கே ஒளிவட்டம் முதலாமவர் + இறுதியானவர் மீதே பாயும் என்பதில் ஐயங்களில்லை ! நம் பால்யங்களது சூப்பர் ஸ்டாரும், இன்றைய சூப்பர் ஸ்டாரும் இதற்கு முன்பாய் ஒரே மாதத்தில் இதுபோல் கரம் கோர்த்து வந்துள்ளனரா ? என்று யோசிக்க முயற்சிக்கிறேன்.....NO என்றே எனக்குத் தோன்றுகிறது ! So முதன்முறையாக இரு மாஸ் நாயகர்கள் ஒருசேர கெத்து காட்டும் மாதமிது என்பதும் ஒரு சன்னமான highlight தானே ? 

எது எப்படியோ - இந்த வாரத்தின் இதுவரையிலுமான 5 நாட்களுமே நம் அலுவலகத்தினில் தீபாவளி தான் !! இந்த கொரோனா தாண்டவங்களும் ; லாக்டௌன் கூத்துக்களும் துவங்கிய காலம் முதலாகவே நான் ஆபீசுக்குச் செல்வது என்பது - கார்சன் புலம்பாமல் இருப்பதற்குச் சமமான அரிய நிகழ்வாகி விட்டுள்ளது ! அதற்கு மீறிப் போனாலுமே மதியமாய்ப் போய் விட்டு, மாலைக்குள் திரும்பி, வீட்டுக்குள் அடைந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த டெஸ்பாட்ச் தினத்  திங்களன்று காலையே ஆபீசுக்கு வந்து விட்டிருந்தேன் - சிலபல ஸ்பாஞ்கேக் டப்பிகளைப் பார்வையிடவும், உங்களின் பார்சல்கள் ஏக் தம்மில் புறப்படத் தயாராகிடும் மும்முரத்தை ரசித்திடவும் ! பேக்கிங்  நடந்து கொண்டிருக்கும் போதே ஆரம்பித்த செல்போன் ரணகளங்களை நானே நேரில் பார்த்திராவிடின் நம்பியிருக்க மாட்டேன் !! இரண்டு செல் போன் நம்பர்கள் + 1 லேண்ட்லைன் நம்பர் - என மூன்றுமே ஏக காலத்தில் போட்ட கூப்பாடுகளை நம்மாட்கள் ஆளுக்கொன்றாய் காதுகளுக்குள் செருகியபடி கவனித்துக் கொண்டே - மறுபக்கம் டப்பாக்களை பிரிக்கவும், ஒட்டவுமாய் இருந்தனர் ! நான் ரூமுக்குள்ளாற குந்திக் கிடக்க முயற்சித்தாலும் முன்னே கேட்டு வந்த களேபரங்களை ஒட்டுக்கேட்கும் ஆர்வத்தை அடக்கில்லா !! கிட்டத்தட்ட அத்தனை அழைப்புகளுமே - "இப்போவே பணம் போட்டு விட்டுடுறேன் ; இன்னிக்கே தீபாவளி மலர் புக்கை அனுப்பிடலாமா ?" என்றோ ; "சந்தாவிலே ஏற்கனவே  இருக்கேன் ; 90 ரூபாய் இப்போ போட்டு விடறேன், ஸ்பைடர் புக்கையும் சேர்த்துப்புடலாமா ? " என்ற ரீதியினில் தான் !! And நம்மவர்களையும் சும்மா சொல்லக்கூடாது சாமியோவ்  ; பிரவாகமெடுத்து ஓடும் தக்காளிச்சட்னிக்களை துடைத்துக் கொண்டே முகத்தில் புன்சிரிப்புகள் மாறாது பதில் சொல்லிக் கொண்டே இருந்தனர் ! போனை வைத்த கணத்தில் நோட்டில் அந்த விபரத்தைக் குறித்துக் கொண்டே, மறுக்கா பேக்கிங்கில் மும்முரமாகிட முனைவதற்குள் "அலோ...பிரபா ஒயின்சா ?" என்று அடுத்த அழைப்பு துவங்கியிருக்கும் ! 

இதனிடையே நமது ஏஜெண்ட்களோ - "தீவாளி மலராச்சும் இன்னிக்கே பண்டல் போட்டிருவியளா அண்ணாச்சி ?" என்று பிரித்து மேய்வதும் அரங்கேறியது ! இந்த லாக்டௌன் இடர்கள் துவங்கிய பிற்பாடு நமது விற்பனைகளில் சுணக்கம் ; வசூல்களில் தேக்கம் ; ஆன்லைன் விற்பனையினில் மந்தம் என்று ஏகப்பட்ட "ம்ம்ம்ம்ம்"கள் ஆக்கிரமித்திருந்தது பற்றிப் புலம்பியிருக்கிறேன் தான் !   அக்டோபர் துவக்கத்தினில் நமது ஆன்லைன் புத்தக விழாவின் போது முதல் முறையாய் ஒரு வெளிச்சக் கீற்று லேசாய் கண்ணில்பட்டது ! And இதோ - இந்த நவம்பரின் ஒரு திங்கட்கிழமையன்று பிடரியில் சாத்தி ஊர்ஜிதம் செய்துள்ளீர்கள் நம் காமிக்ஸ் நேசத்தினில் all is well என்று ! நிறையவே தொழில்கள் நசிந்து நிற்கின்றன தான் ; நிறையவே பணிகள் காற்றோடு கரைந்துள்ள தான் ; நிறையவே பதில்களை விடவும், நிறையவே கேள்விகளே நம் முன்னே நிற்கும் தருணமிது தான் ; ஆனால் இந்த இடர்களுக்கு மத்தியிலும் உங்களின் பொம்மை புக் காதல்களோ ; நம் மீதான அக்கறைகளோ - கிஞ்சித்தும் சேதம் கொண்டிருக்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்து விட்டுள்ளீர்கள் folks - நானூற்றி நாற்பத்தி ஏழாம் தபாவாக ! 

And சகலத்துக்கும் க்ரியாஊக்கியாய் நின்று, எவ்விதச் சூழலிலும் நம்முள்ளே உற்சாகத்தைக் கொப்பளிக்கச் செய்து வரும்  ஒற்றை உருவம் - TEX என்ற பெயருக்குப் பதில் சொல்லும் ஜாம்பவான் என்று சொன்னால் அது சத்தியமாய் hype கிடையாது ! கடைசியாய் ஆபீசில் இது மாதிரியான பரபரப்பை நான் பார்த்தது "டைனமைட் ஸ்பெஷல்" வெளியான தருணத்தினில் தானென்பேன் ! இதில் மெகா கூத்து என்ன தெரியுமோ ? வளர்ந்த பெரும் புள்ளிகளான நாமெல்லாமே திடு திடுப்பென பாலக அவதார்களெடுப்பதன் காரணங்கள் நம் அலுவலகத்தினில் உள்ள எவருக்குமே புரிந்திடாது என்பதே !! Simply becos இக்கட யாருமே அடைமழைக்கு கூட காமிக்ஸ் எனும் குடையின் கீழே ஒதுங்கிடும் பழக்கம் கொண்டோரில்லை ! "நானும் இது வரைக்கும் ஏதாச்சும் ஒரு புக்கையாவது படிக்கணும்னு பாக்குறேன் சார் ; ஆனா 4 பக்கத்தைத் தாண்டுறதுக்குள்ளாற தூக்கம், தூக்கமா வருது !" என்பதே அவர்களின் ஏகோபித்த பதில்கள் ! So "நாலே பக்கங்களில் சயனத்தை சாமரம் வீசி வரவேற்கும் சமாச்சாரங்களுக்கோசரம் அமெரிக்காலேர்ந்து கூப்பிடுறாங்க ; ஆஸ்திரேலியாவிலிருந்து கூப்பிடுறாங்க ; லட்ச ரூபாயைத் தூக்கி அனுப்புறாங்க ; விடிய விடிய பின்னிப் பெடல் எடுக்கிறாங்களே ..?!! என்று பெண்பிள்ளைகளின் மைண்ட்வாய்ஸ்கள் ஓடாது இருந்தால் தான் வியப்பே ! திங்கள் மாலையில் நம்மாட்கள் வீடு திரும்பிய போது அத்தினி பேருமே 'மிருதன்' படத்தில் வந்த zombies போலவே இருந்தனர் என்பதனில் வியப்பே இருக்கவில்லை எனக்கு ! 

செவ்வாயும் வந்தது - இன்னமுமே வீரியமாய் அலறும் தொலைபேசிகளோடு !! "எனக்கு கூரியர் இன்னும் வரலே !! டிராக்கிங் நம்பர் இருக்கா ? அங்கேயே டப்பா கிடக்கான்னு பாருங்களேன் !! " என்ற பெரும்குரல்கள் நாள் முழுக்கவே தொடர்ந்தன ! இன்னொரு பக்கமோ "கேட்லாக் தனியா விலைக்குத் தருவீங்களா ? வின்டர் ஸ்பெஷல் இன்னொரு புக் தருவீங்களா ?" என்ற ரீதியில் புதிரான கேள்விகளும் !! குடு குடுவென ஆள்மாற்றி ஆள் என் அறைக்கு ஓடி வருவர் - ஒவ்வொன்றுக்கும் என்ன பதில் சொல்வதென்ற வினவல்களோடு ! And செவ்வாயன்று இன்னொரு சந்தோஷ அத்தியாயத்தையும் பார்க்க முடிந்தது !! இந்த இன்னல்மிகு நாட்களில் கரைந்து போயிருந்த முகவர்கள் பலரும் - ஒருவர் பின் ஒருவராய் போனில் அழைத்து - "ஏதோ தீவாளி மலர் பொஸ்தவம் வந்திருக்கலாம்லே மக்கா ? யே...அது என்ன வெல ? பழைய பாக்கிலே பாதியே இன்னிக்கு போட்டுவிடுறேன் ...அந்த புது பொஸ்தவத்தைப் போட்டு விட முடியுமா ?" என்ற கோரிக்கைகள் ! சத்தியமாய் டெக்ஸ் என்ற அந்த அசாத்தியனைத் தாண்டி வேறு யாருக்கும் இத்தகைய ஜாலங்களைச் செய்திடும் ஆற்றல்கள் இருக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை ! Oh yes - துக்கனூண்டு சட்டிக்குள் தம்மாத்துண்டு குதிரையையே ஒட்டுகிறோம் நாம் ; so ஏழரைக்கோடி ஜனத்தின் சார்பில் ஏதோ நிஜமான 'தல'க்குரிய பில்டப்களை தருவது போல் நான் எழுதுவது போங்காகத் தென்படலாம் தான் ; காமிக்ஸ் வாசனையறியா வட்டத்தினிடம் "டக்ஸ் வில்லரோ...டெக்ஸ் வல்லரோ' வீசம்படிப் பரிச்சயம் கூட இல்லாப் பெயராகவே தொடர்ந்திடும் தான் ; ஆனால் இந்தக் குட்டி வட்டத்தைப் பொறுத்தவரையிலும் யார் சாம்ராட் ? என்பதில் கிஞ்சித்தேனும்  சந்தேகங்கள் இருந்திருப்பின், இத்தீபாவளி வேளையானது அதனைப் பூரணமாய் நிவிர்த்தித்து விட்டது !

புதனன்றோ ஆன்லைன் ஆர்டர்கள் ஒரு சமீப உச்சத்தைத் தொட்ட நாள் ! Of course - கோவிடுக்கு முந்தைய நாட்களின் விற்பனைகளை இன்னமும் பெருமூச்சுகளோடே தான் பார்த்து வருகிறோம்  ; ஆனால் புதன்கிழமையின் அதகளம் பழைய நாட்களுக்கு  ரொம்பத் தொலைவினில் இருந்திடவில்லை ! கை கடுக்க செய்த பேக்கிங் முடிந்து மாலை கூரியருக்குச் சென்ற டப்பிக்கள் ஒரு குட்டியான LIC உசரம் இருந்தன ! And அவற்றுள் முக்கால்வாசி டப்பிக்கள் 'தல' + தானைத் தலீவர் கூட்டணிகளே !!

வியாழனுமே பழைய நினைவுகளை ; ரொம்பவே பழைய நினைவுகளைக் கிளறிய நாளாக அமைந்தது - முகவர்களின் புண்ணியத்தில் ! நமது ஆரம்ப நாட்களில் ஸ்பைடர் புக்ஸ் கடைக்குப் போன இரண்டாம் நாளே - அரக்கப் பரக்க போன் வந்திடும் - "யே..இன்னொரு அம்பது புக்கை போட்டு விடு...நூறு புக்கை அனுப்பு !" என்ற ரீதிகளில் ! மறந்தே போயிருந்த அந்த நடைமுறையை வியாழனன்று பார்க்க முடிந்தது - 'தல' தீபாவளி மலருக்கு கிட்டிய அதிரடி repeat ஆர்டர்கள் மார்க்கமாய் ! "தெய்வமே...லாரி ஷெட் எல்லாமே பூட்டியாச்சு ; இனிமே  திங்கள்வரைக்கும்    பண்டல் வாங்க மாட்டாங்க !!" என்று அண்ணாச்சி விளக்க முற்பட்டாலும் - "எப்பிடியாச்சும் அனுப்புங்க ப்ளீஸ் !!" என்ற ஆதங்கக் கோரிக்கைகள் ! முடிந்த கரணங்களை அடித்துக் கொண்டிருக்கும் அந்த மாலையே ஓசையின்றியொரு கனக்குப் பார்க்கச் செய்தேன் - "தீபாவளி with டெக்ஸ்" இதழின் விற்பனை & கையிருப்பு குறித்து !! இந்த மே முதலாகவே கழுதையின் அளவிலான நமது பிரிண்ட்ரன்னை கட்டெறும்பாக்கியுள்ளோம் தான் ; இந்த ஒற்றை ஆண்டினில் பெருசாய் costing ; கத்திரிக்காயெல்லாம் பார்த்திட வேண்டாம் ; குடவுனை நிரப்பாது இருந்தாலே உத்தமம் ! என்று தீர்மானித்திருந்தேன் தான் ! அந்த பாலிசிபடியே இம்மாத புக்ஸ் நான்குமே குறைந்த பிரிண்ட்ரன்னேகொண்டிருந்தன தான் ; ஆனால் surprise ..surprise ...."தீபாவளி மலர்" நடப்பாண்டின் இறுதியைத் தாண்டியும் கையிருப்பில் இருப்பின், நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் என்பதே நிலவரம் !! ரொம்ப ரொம்ப நாளாகிவிட்டது இதுபோலொரு நிகழ்வைப் பார்த்து  - எனும் போது வியாழன் மாலை மழையில் நனைந்தபடிக்கே வீடு திரும்பும் போது - இளையராஜாவின் மெட்டுக்கள் பேக்கிரவுண்டில் ஒலிப்பது போலிருந்தது ! 

வெள்ளிக்கிழமை புலர்ந்ததோ நம்மாட்களுக்கு தீபாவளி போனஸ் என்ற சந்தோஷங்களோடு ! சமீப மாதங்களில் இரண்டாம் முறையிது - நண்டு பிடிக்க அவசியங்களின்றி, சம்பளங்களை ; இன்ன பிற பட்டுவாடாக்களை செய்திட சாத்தியப்பட்டது !  And நண்பர் PFB அனுப்பியிருந்த தொகையினையும்  ஆளுக்கொரு பங்காய்ப் பிரித்துத் தந்த போது ஒவ்வொருத்தரின் முகங்களிலும் வெகுகாலத்துக்குப் பின்பாய் சன்னமான வெளிச்சங்கள் ! அக்டோபர் முதல் தேதியிலிருந்தே நம்மவர்களை தினமும் பணிக்கு வரச் செய்யும் நடைமுறை சாத்தியமாகியிருந்தது - ஆன்லைன் புத்தக விழாவின் எதிர்பாரா வெற்றியின் உபயத்தில் & முறையாய் போனஸ் போடவும் இப்போது சாத்தியப்பட்டிருக்க - 'தல' வசிக்கும் இத்தாலியை நோக்கியொரு வணக்கம் போட்டால் தப்பே இல்லையென்று பட்டது ! 'ரைட்டு..மதியம் 2 மணிக்கு எல்லாரும் கிளம்புங்க ; கூட்டத்துக்குள்ளே கடைவீதிகளில் திரியாதீங்க ; மாஸ்க் போடுங்க !" என்றபடிக்கே ரூமைப் பூட்டிவிட்டு நான் கிளம்ப எத்தனித்த கணத்தில் ஒரு முரட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தான் AMAZON கூரியர் பையன் ! "இது என்னாது ???" என்றபடிக்கே பார்சலை உடைத்தால் - phewwwwwwww !!! 15 காட்பரி சாக்லெட் gift boxes !!! சென்னை சூளைமேட்டிலிருந்து நண்பர் சத்ய சாய்நாத்தின் அன்புடன் !! (சத்யாவுக்கு  கால்வினும் பிடிக்கும் ; காமிக்ஸ்சும் புடிக்கும்). மிரண்டே போய் விட்டோம் இந்த அன்பின் பிரவாகத்தினில் !! 

ஆளுக்கொரு டப்பாவை ஒப்படைத்த போது உள்ளுக்குள் இனம்புரியா உணர்வுகள் - இத்தனை அன்புக்கும், நேசத்துக்கும் நாம் அருகதையானவர்கள் தானா ? என்று ! வீட்டுக்குப் புறப்பட்ட நம்மவர்களின் கைகளில் பளபளக்கும் சாக்லெட் டப்பாக்கள் இடம்பிடிப்பதை இமைதட்டாது பார்த்துக் கொண்டே நின்றவனுக்கு வீடு திரும்ப நேரமாகியது !! "Thanks a ton " என்று மட்டும் சொல்லி இந்தாண்டினில் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதேதோ ரூபங்களில் நம்மை நனைத்துவரும் அன்பிற்கு நியாயம் செய்திடவே இயலாது என்பது சர்வ நிச்சயம் ! பணமோ ; பொருளோ ; ஆதரவான வார்த்தைகளோ ; நம் நிலைகளின் புரிதல்களோ ; இதழ்கள் சார்ந்த சிலாகிப்புகளோ ; சந்தக்களோ ; முன்பதிவுகளோ - ஒரு பேரிடரின் மத்தியில்  இவை சகலமுமே  தங்கத்துக்கு நிகரானவை !! And இந்த அன்பின் பரிமாற்றங்களுக்கு பட்டிருக்கும் கடன்களை வெறும் வாய் வார்த்தைகளின் ஜாலங்களை தாண்டி எவ்விதம்  சமன் செய்யப்போகிறேனோ - புனித மனிடோவுக்கே வெளிச்சம் !!   

'அட..போங்கப்பா,,,,இந்தக் கூட்டத்துக்குள்ளாற போயி எந்தப் புதுத் துணிய வாங்க ? இந்த வருஷம் புதுசில்லாமலே பண்டிகையைக் கடப்பதில் தப்பில்லை !" என்று இருந்தவனுக்கு சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியே தமன்னாவோடு ஒரு செம டான்சைப் போட்டபடிக்கு வீட்டு வாசலுக்கே கடையைக் கொணர்ந்துவிட்டது போலொரு சந்தோஷம் இந்த நொடியினில் அலையடிக்கிறது ! ஒரு கோடி ரூபாய் ஈடாகாது guys உங்கள் அன்பு கொணரும் இந்த மன நிறைவுக்கு ! நம் சார்பிலும், நம்மவர்கள் சார்பிலும் , 'தல' சார்பிலும் ; தானைத் தலீவர் சார்பிலும் - சந்தோஷ தீபாவளி நல்வாழ்த்துக்கள் folks !! ஆண்டவன் அருளட்டும் இந்த நேசம் நாளும் தொடர்ந்திட !! Have a Safe & Fun filled Diwali all !! See you around ! Bye for now !!



Monday, November 09, 2020

தீபாவளி வந்தாச்சூ !!

 நண்பர்களே,

வணக்கம். "தீபாவளி வாரமிதுடோய்" என்பதை அழுத்தம் திருத்தமாய் உணர்த்தும் விதமாய் தெறிக்கத் துவங்கிவிட்டுள்ளது சிவகாசி பஜார் ! And நம் பங்குக்கு குண்டு குண்டான கூரியர் டப்பிக்கள் சகலத்தையும் இன்றைய பகலில் அனுப்பிய கையோடு - அவற்றை இன்றைய லோடிலேயே ஏற்றுவதை உறுதி செய்ய அக்கடவே காவல் நின்று வருகிறோம் ! Maybe புதன்கிழமை வரையிலும் கூரியர் புக்கிங்குகள் வாங்குவார்களென்று தோன்றுகிறது ; அதன் பின்பான பார்சல்கள் எல்லாமே தீபாவளிக்குப் பின்னே தான் இங்கிருந்து புறப்படும் போலும் ! So ஆன்லைனில் ஆர்டர் செய்திட எண்ணும் நண்பர்கள் இந்த ஒருமுறை மட்டும் தாமதிக்க வேணாமே - ப்ளீஸ் ! 

ஸ்பைடரும் சேர்ந்த 4 புக்ஸ் கூட்டணியானது - DIWALI '20 Pack என்ற பெயரில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது : 

https://lioncomics.in/product/2020-diwali-pack/

https://lion-muthucomics.com/latest-releases/649-2020-diwali-pack-.html

"ஸ்பைடர் வேணாம்" என்போருக்கும் ; ஏற்கனவே அதற்குப் pre-booking செய்துவிட்டோருக்கும், ஸ்பைடர் இல்லாத 3 இதழ்கள் "NOVEMBER '20 Pack" என்ற பெயரினில் இருந்திடும் : 

https://lioncomics.in/product/2020-november-pack/

https://lion-muthucomics.com/latest-releases/650--2020-november-pack.html


So ஒரு வழியாய் எங்களின் அந்தப் 17 நாள் மெகா குட்டிக்கரணங்களின் பலன்களை  உங்களிடம் ஒப்படைத்தாச்சூ !! நாளையோ, மிஞ்சிப் போனால் அதன் மறு நாளோ உங்களை அவை எட்டிப்பிடித்திட வேண்டும் ! சூட்டோடு சூடாய் புக்ஸைப்  படிக்க  நேரம் ஒதுக்குவது சிரமமே என்பது புரிகிறது ; maybe புரட்டிப் பார்க்க ; தடவிப் பார்க்க ; மேலோட்டமாய் ஒரு வாசிப்பு விட முனைந்திட்டால் தொடரும் நாட்கள் இங்கு சுவாரஸ்யமாகிடும் ! 

அப்புறம் போன மாதத்து early birds-களுக்கு வாக்குத் தந்தபடியே ஸ்பாஞ் கேக்குகளும் ; ப்ளம் கேக்குகளும், இன்றைக்கு புறப்பட்டாச்சு ! இம்முறை - இந்தப் பண்டிகை மாதத்து மெகா டெக்சினுள் முந்திக்கொண்டு மண்டையை நுழைப்போர்க்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகைப் போட்டுத் தாக்கிடலாமா ?  Sweet Reading folks !!

Saturday, November 07, 2020

938 !!

 நண்பர்களே,

உஷார் : நெம்ப பொறுமையுடையோருக்கு மாத்திரமே இது !! பாக்கிப்பேர் அட்டைப்படங்களையும், preview-க்களையும் பார்த்த கையோடு அமெரிக்க எலெக்ஷன் காமெடிகளை ரசிக்கக் கிளம்பிடலாம் ! Don't tell me that I didn't tell you !!

வணக்கம். மிக்ஸி… க்ரைண்டர்ளோடு மட்டுமே பரிச்சயம் கொண்ட புதிய தலைமுறையினராக நீங்கள் இருந்திடும் பட்சத்தில், அந்தக் காலங்களது ஆட்டுஉரல்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைச்சல் தான் ! Ditto with அம்மிக்கல் ! ஒரு காலத்தில் இவையின்றி சமையலறைகளே இயங்கிடாது ! ரைட்டு… "அது எதுக்குடா அம்பி இப்போ ?” என்ற கேள்வியா ? சின்ன வயதுகளில் தாத்தா-பாட்டி-அப்பச்சி வீடுகளிலோ ; ஏதேனும் படங்களிலோ ; வாசிப்புகளிலோ இந்தக் கனமோ கனமான வஸ்துக்களை நீங்கள் சந்தித்திருந்தால் அந்த நினைவுகளைச் சேகரித்துக் கொள்ளுங்கள் ! அது தான் Step # 1 ! பிடாரியாய்க் கனக்கும் அந்த ஆட்டு உரலை தலைச் சுமையாய் ஏற்றிக் கொள்வது Step # 2. வலது தோளில் அம்மிக்கல்லைக் கட்டித் தொங்கச் செய்வது Step # 3 ! இடது புஜத்தோடு அம்மிக் குழவியைக் கோர்த்து விடுவது Step # 4. "அட… முதுகுப் பக்கம் காலியாத் தானே கீது…? உரலுக்கான உலக்கையைக் கட்டிப்புடலாம் !" என்பது Step # 5. இவை ஐந்தையும் செய்த கையோடு – “டேய் தம்பி… பார்த்துப் பத்திரமா 3 வாரத்திலே இதையெல்லாத்தையும் கொண்டு போய் புள்ளீங்க வூட்டிலே சேர்த்துப்புடணும் ! தீவாளிக்குப் பலாரம் சுடணுமாம் !” என்று ஒரு சுமாரான உடம்புக்காரனை வழியனுப்புவதை visualize செய்து கொள்ளுங்களேன் - Step # 6 பூர்த்தியாகிவிடும் !  And கடந்த 3 வாரங்களாய் இவ்விடம் நான் / நாங்கள் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி லேசாய் ஒரு ஐடியா கிடைத்திட மேற்படி 6 ஸ்டெப்கள் ரெம்போவே உதவிடும் என்பேன் ! 

ஆரம்பிச்சுட்டான்டா… பீற்றல் படலம் # 774’ என்று தோன்றுகிறதா folks ? On the contrary இது பீற்றல் புராணமேயல்ல… கழன்று போனதொரு புஜம் சார்ந்த புலம்பல் புராணம் ; and ஒரு  ஓமக்குச்சி நரசிம்மன் சைசிலான டீம் விஸ்வரூபமெடுத்து சுமோ மல்யுத்த வீர்களின் சாகசங்களை செய்திட்ட பெருமிதக்  கதை  ! இதன் துவக்கம் மே மாதத்தினில் ஒரு சுபமுகூர்த்த லாக்டௌன் தினத்தில் நமது DTP அணியின் முக்கியச் சக்கரமான கோகிலா திருமணமாகிக் கிளம்பிச் சென்று விட்டதில் இருந்து எனலாம் ! தவிர்க்க இயலா சந்தோஷ வாழ்க்கை முன்னேற்றமது என்பது புரிந்தது ; ஆனால் நமது பணிகளில் ஒற்றை நாளில் விழுந்த சுணக்கங்களின் பரிமாணங்கள் தொடரும் நாட்களில் தெரிந்தனவோ – இல்லையோ - இதோ இந்த தீபாவளியின் நவம்பரின் போது அசுரத்தனமாய், விஸ்வரூபமெடுத்துத் தெரியத் துவங்கி விட்டன ! To her lasting – credit – நமது DTP அணியின் இன்னொரு அங்கமான இவாஞ்சலின், post lockdown பணிகள் மறுதுவக்கம் கண்ட ஜுன் முதலாய் – ஒற்றையாளாய் இத்தனை மாதங்களது பணிகளையும் சமாளித்து வந்திருக்கிறார் ! கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்களாக அத்தனை ஞாயிறுகளிலும்  நமது அலுவலகத்தில் DTP பணிகள் ஓடிவந்துள்ளன…! வாரத்தின் ஏழு நாட்களும் பணிகளே ; மாதத்தின் முப்பது நாட்களும் பிசியே ! 

And then approached நவம்பர் !!!!

ஒவ்வொரு மாதமுமே ‘இழுத்துக்கோ-பறிச்சுக்கோ‘ என்ற கதையாய் வேலைகள் நிறைவுற்று வந்த நிலையில் – என் அடிமனசில் நவம்பர் சார்ந்த பீதி ஏகமாய்க் குடி கொண்டிருந்தது ! 672 பக்கங்கள் ‘டெக்ஸ் தீபாவளி மலரில்‘ மட்டுமே எனும் போது, இங்கே செமத்தியாய் மாட்டுவோம் என்பதை ஷெரீப் டாக்புல் கூட யூகித்திருக்க முடியும் தான் ! 'ஏன்டா  பேமானி - அது தான் தெரியுதுலே ? வேலைக்கு இன்னொரு ஆளை போட்டா என்னவாம் ?" என்ற மைண்ட்வாய்சா ? சிக்கலே வேலைக்குப் புதிதாய் பணியாட்களைத் தயார் செய்வதில் தான் இருந்து வருதுங்கண்ணா ! படித்து முடித்த கையோடு “டிசைனிங் தெரியும் சார்… Photoshop தெரியும் சார்!” என்று ஆர்வமாய் விண்ணப்பிப்போர்க்குப் பஞ்சமேயில்லை தான் ; ஆனால் தமிழில் டைப்பிங் ; வண்டி வண்டியாய் – லோடு லோடாய் டைப்பிங் என்பதைப் பார்த்த கணத்தில் தெறித்து ஓடுபவர்களை உசேன் போல்ட்டால் கூடத் துரத்திப் பிடிக்க இயலாது என்பேன் ! அதற்கு மீறி இரண்டோ – மூன்றோ நாட்களுக்குப் பணி செய்ய வருவோர் – மூணாம் நாளே ‘கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது சார்‘ என்றபடிக்கு ஜகா வாங்கிடுகின்றனர் ! “டமில்” “டமில்” என்று எத்தனை மேடைகள் போட்டு ; ஸ்பீக்கர் கட்டிப் பேசினாலும் – நம் புதிய தலைமுறைக்கு அதன் மீதுள்ள பாசம், பரீட்சைகளில் பாஸாவதைத் தாண்டி பரவலாய் இருப்பதில்லை என்பதே என் மட்டிலான observation ! So மேற்கொண்டு ஆள் கிட்டும் வரையிலும் ஒத்தாசை செய்யும்படி கோவையில் செட்டிலான கோகிலாவிடம் குடலை உருவும் படலத்தைப் போன மாதமே துவக்கியிருந்தோம் !

 ஆட்டு உரலின் கதை :

தீபாவளி with டெக்ஸ் ! 2 மாக்ஸி நீளத்து டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பங்கள் – so மொத்தமாய் 640 + பக்கங்கள் !! சரியாக மூன்றரை  வாரங்களுக்கு முன்னே இதனைக் கையில் எடுத்த போதே நான் தீர்மானித்திருந்தேன் – புக்ஸ் டெஸ்பாட்ச் இம்முறை நவம்பர் 10-க்கு முன்பாகவே இருந்தி்ட வேண்டுமென்று ! And இது ஹார்ட்கவர் பைண்டிங் எனும் போது, சுத்தமாய் ஒரு வாரம் பைண்டிங்கிற்கே அவசியமாகிடும் ! So நிதரிசனமாய்ப் பார்த்தால் பதினேழு நாட்களிலிருந்தன – நவம்பரின் 906 பக்கங்களையும் டைப்செட் செய்து ; எடிட்டிங் செய்து ; அச்சிட்டு ; பைண்டிங் முடித்து ; மாமூலான மறந்து போன சமாச்சாரங்களுக்கோசரம் ஸ்டிக்கர்களும் ஒட்டி ; டப்பிக்குள் அடைத்து அவற்றை டெஸ்பாட்ச் செய்தி்ட !! And இந்த மொத்தக் கூத்தையும் அரங்கேற்ற நம் வசமிருந்ததோ - 75 அகவைகளைக் கடந்ததொரு மொழிபெயர்ப்பாளர் ; ஒற்றை DTP பணியாளர் ; ஒற்றை ஆல்-இன்-ஆல் அழகுராஜா & ஒற்றை முழியாங்கண்ண எடிட்டர் plus நமது front office !! குட்டிக்கரணங்கள் நமக்குப் புதிதேயல்ல தான் ; ‘மூன்றாம் பிறை‘ கமலஹாசன் பிச்சையெடுக்குமளவுக்கு ரக ரகமாய் ; விதவிதமாய் ; வீதி வீதியாய்க் கரணங்கள் போட்டிருக்கிறோம் தான் ! ஆனால் இம்முறையோ முற்றிலுமே வேறொரு லெவல் !

இங்கே எல்லாமே நேர்கோடுகளே; பெருசாய் மண்டையைப் பிய்க்க முகாந்திரங்கள் இராது ; உள்ளாற புகுந்திடறோம் ; வூடு கட்டி டெக்ஸ் & கோ அடிக்கிறதை ரசிக்கிறோம் ; அப்டியே அச்சுக்குக் கொண்டு போறோம் !” என்பதே எனது நம்பிக்கையாக இருந்தது - டெக்ஸோடு பணி துவக்கிய தருணத்தினில் ! ஐயகோ.. ஐயகோ... பெரும் தேவன் மனிடோ காமிக்ஸ் காதலர் மட்டுமல்ல ; காமெடிகளின் காதலருமே என்பதைப் புரிந்து கொள்ள பரபரவென சந்தர்ப்பம் வாய்த்தது – எனது எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாய் பொய்த்த நொடிகளில் ! மேலிருந்து ஆட்டுவிப்பவர் சத்தியமாய் சத்தமாய்ச் சிரித்திருப்பார் – எனது முட்டைக்கண்கள் ஆனை முட்டை சைஸுக்கு விரிந்ததைப் பார்த்து !

யுத்த பூமியில் டெக்ஸ்” – அமெரிக்க உள்நாட்டு யுத்தம் சார்ந்த கதையாக இருக்குமென்பதை யூகித்திருந்தேன் தான் ! இரண்டு பிடிவாதக்கார மீசைமாமா கர்னல்களைச் சாத்துவார் ‘தல‘ ; நாலு எதிரி முகாமில் குண்டு வைத்துத் தெறிக்க விடுவார் என்ற ரீதியில் கதையிருக்குமென்றும் யூகித்திருந்தேன் ! ஆனால்... ஆனால்... அங்கு தான் டெக்ஸின் பிதாமகர் G.L. போனெலியின் கதை சொல்லும் ஆற்றல் விஸ்வரூபமெடுப்பதை உணர முடிந்தது ! நடந்த யுத்தத்தின் வரலாற்றுத் தகவல்களை ; பின்னணிகளைப் பிசகின்றித் தக்க வைத்துக் கொண்டு – நிஜத்தையே பின்புலமாக்கி ; நிஜ மனிதர்களையும் கதைக்குள் பிசிறின்றிப் புகுத்தி ; அவர்களோடு அற்புதமாய் டெக்ஸை sync ஆகச் செய்து களமாடச் செய்துள்ளார் எனும் போது, “ஐயா... தெய்வமே... கூகுள் ஆண்டவா!” என்றபடிக்கே இம்மாதமும் இன்டர்நெட் தேடலுக்குள் ஐக்கியமானேன் - 2 பதிவுகளுக்கு முன்னமே விவரித்திருந்தபடி ! அமெரிக்க யுத்த வரலாறு ; வடக்கு vs. தெற்கு மோதலின் பின்னனி ; யுத்தத்தின் உச்சம் என்று வரிசையாகத் தோண்டித் துருவ வேண்டிப் போனது ! நான் பாட்டுக்கு எதையேனும் புரிதலின்றி எழுதி வைத்துத் தாண்டி விட்டால், அவை factual errors ஆகிடுமென்ற பயம் ! So மின்சார வேகத்தில் பாய்ந்தோடும் கதையோடு ஈடு கொடுத்த படிக்கே ; சைடில் கூகுளின் துணையோடே இந்த 320 பக்க சாகஸத்தோடு நான் உருண்ட உருளை ‘முதல்வன்‘ படத்து சேற்றுக்குள் சண்டை sequence–ல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூட உருண்டிருக்க மாட்டார் ! புரட்டப் புரட்டப் பக்கங்கள்... பார்க்கப் பார்க்க எழுத்துப் பிழைகள் ; தோண்டத் தோண்ட நிஜம் சார்ந்த தரவுகள் என்று நாட்களை சகட்டுமேனிக்கு விழுங்கிய “யுத்த பூமியில் டெக்ஸ்” சாமான்யத்துக்கு எனக்கு மறவாது !

அச்சா ஹை... சிக்கல் தீர்ந்துச்சு ; இனி காத்திருப்பது நம்பள் கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பிலான “பனிவனப் படலம்” ! இதிலே கூகுளும் தேவைப்படாது ; கும்மிடிப்பூண்டிக்குப் போகவும் தேவைப்படாது !” என்று பரபரவென பணிகளுக்குள் புகுந்தேன் – எடிட்டிங் செய்திட! ஐயகோ... ஐயகோ... இம்முறையும் விண்ணிலிருந்து ஒரு எக்காளச் சிரிப்பு காதில் விழுந்தது ! டெக்ஸ் கதைகளுக்கு அங்கிள் பேனா பிடித்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் இருக்கும் ! அவரது க்ளாஸிக் எழுத்துக்கள் டெக்ஸின் ஜனரஞ்சக / கமர்ஷியல் பாணிக்கு சற்றே அந்நியமாய்ப்படுவதாகத் தோன்றியதால் – டெக்ஸைத் தக்க வைத்துக் கொண்டு ; அவரது நடைக்கு suit ஆகிடும் கதைகளை மட்டுமே அவரிடம் ஒப்படைப்பது என்ற policy decision பரஸ்பரப் புரிதலின் பேரில் கொஞ்ச காலத்துக்கு முன்னமே எடுத்திருந்தோம் ! இதுவோ சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி முடிக்கப்பட்ட ஆல்பம் எனும் போது திருதிருவென முழிக்கத் தோன்றியது simply becos ஒரே ஆல்பத்தின் முதல் முன்னூறு பக்கங்களுக்கு சகஜமாகவும் ; தொடரும் முன்னூறு பக்கங்களுக்கு இலக்கிய நடையிலும் ஒரே நாயகர் வாயசைத்தால் ரொம்பவே இடருமே என்ற ஞானோதயம் புலர்ந்தது ! And ரொம்ப காலம் கழித்து இந்த ஆல்பத்தில் கார்சனுக்கு துவக்கம் முதலே வேலைகள் இருப்பதும், மனுஷன் செமத்தியாய் score செய்திட ஏகப்பட்ட டயலாக் வாய்ப்புகள் இருப்பதும் கண்களில்பட்டன ! நடையில் பெரிதாய் நெருடல்கள் தெரியலாகாது ; அதே சமயம் கார்சனின் வரிகளில் நகைச்சுவை + வீரியம் ஏற்றிடல் அவசியம் என்ற 2 point agenda பிடாரியாய் முன்நிற்க – ஏற்கனவே தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த நாக்கைச் சுருட்டி வாய்க்குள் திணித்த கையோடு - கோட்டை மொத்தமாய் அழிச்சுப்புட்டு இன்னொரு 320 பக்க பரோட்டாவை விழுங்கத் தயாரானேன் ! 

அங்கே யுத்த பூமி...அரிசோனா..கென்டக்கி...டெக்ஸாஸ் என அமெரிக்க மத்திய மண்டலங்களெனில் - இக்கடவோ அலாஸ்கா ; கனடா ; வட துருவம் - என மெர்சலூட்டும் குளிர்ப்பின்னணி ! அங்கேயோ - 'பீப்ப்பீ " என்றபடிக்கே குழல் ஊதிக்கொண்டு, குதிரைப் பண்ணைகளையே கண்ணில் காட்டியபடிப் பாயும் சிப்பாய்களெனில் - இங்கேயோ மருந்துக்குக்கூடக் குதிரைகள் கிடையாது ! முழுக்கவே ஸ்லெட்ஜ் இழுக்கும் நாய்களின் ராஜ்ஜியமே ! ஆளுக்காள் முரட்டு-முரட்டுப் பனி அங்கிகளோடு - காலில் டென்னிஸ் மட்டைகள் போலான பனிக்காலணிகளோடு வலம் வந்துகொண்டிருந்தனர் !  அங்கே பூம்-பூம் டிக் என்றதொரு மொட்டை பாஸ் தான் டெக்சின் தோழனெனில், இங்கே நமது ஆதர்ஷ வெள்ளிமுடித் தாத்தா ! So முதல் கதைக்கும், தொடர்ந்திட்ட இரண்டாம் கதைக்கும் மத்தியில் தம்மாத்துண்டு ஒற்றுமை கூட லேது ! 

மௌரோ போசெல்லியின் இந்த த்ரில்லருக்குள் மெது மெதுவாய்ப் புகுந்தபடிக்கே,  ரொம்பவே உயர்நடையிலான சொற்களை   மாற்றிக் கொண்டே ; டெக்ஸ் & கார்சனுக்கு வரிகளில் வேகத்தையும், கொஞ்சமாய் காமெடியையும்  நெடுக நுழைத்துக் கொண்டே போக, பக்கங்கள் முளைத்துக் கொண்டே ; முளைத்துக் கொண்டே வந்தது போலவே தோன்றியது ! எப்போதுமே டெக்சில் பணிகள் சுலபத்தன்மையோடு இருந்திடும் தான் ; ஆனால்  அந்த 200 + பக்க நீளங்களோ பணியாற்றும் போது புரட்டியெடுத்திடும் ! இம்முறையோ 320 பக்க ட்ரிபிள் ஆல்பங்கள் எனும் போது - திறக்கத்திறக்கக் குவியும் ஜோ பைடெனுக்கான தபால் ஓட்டுகள் போல - முடிவின்றி நீண்டு சென்றன பணிகள் ! கதை மட்டும் அசுர வேகத்தில் இல்லாது போயின், சத்தியமாய் ஏதாச்சுமொரு கரடி விட்டுப்புட்டு நடுவாக்கில் கம்பிநீட்டிடலாமா ? என்ற சபலம் தலைதூக்கியிருக்கும் ! 320 பக்கங்களுக்குள்ளும் திருத்தங்கள் ; வசன மாற்றங்களை போட்டு விட்டு, 'அக்கடா' என ஓய்ந்திருக்கவும் மார்க்கங்களில்லை - becos உங்கள் கண்களில் தட்டுப்படும் எழுத்துப் பிழைகளின் பெரும்பான்மையே நான் பார்த்துத் தரும் பிழைத்திருத்தங்களினில் விடுதல்கள் + நான் மாற்றி எழுதுவதனை டைப்செட் செய்திடும் சமயங்களில்  நிகழும் புதுப் பிழைகளே ! இங்கேயோ ஏகமாய் மாற்றி எழுதும் படலம் அரங்கேறியிருப்பதால் - இந்த வம்பே வேணாமென மறுக்கா 320 பக்கங்களையும் இரண்டாவதுவாட்டியும் வரவழைத்து மூக்குக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு வாசிக்கும் படலங்கள் அரங்கேறின ! நான் பிழைத்திருத்தம் செய்து முடிக்கும் பக்கங்களை அப்பாலிக்கா ஆபீசில் proof reader சங்கவி பார்த்த பிற்பாடு அச்சுக்கு எடுத்துக் போக ஏற்பாடு ! So கடந்த ஒரு வாரமாய் 'தல' கூடவே முழுக்க முழுக்கக் குப்பைகொட்டியதில் நம் அலுவலகக் கம்பியூட்டர்களுக்கும் சரி ; நமக்கும் சரி - காது, மூக்கு, என நவதுவாரங்களிலும் மஞ்சளாய்ப் புகை வராத குறை தான் !! And தொடர்கதையாய்த் திருத்தங்கள் போட்ட எனக்கே நாக்குத் தொங்கியதெனில் - அவை சகலத்தையும் நடைமுறை செய்த இவாஞ்செலினின் பாடை நினைத்தாலே கிறுகிறுக்கிறது ! இது அத்தனைக்குப் பிறகுமே எழுத்துப் பிழைகள் தலைதூக்கும் போது தான் யாரையாச்சும் 'தல' பாணியில் நடுமூக்கிலேயே குத்தணும் போல் பரபரத்திடும் ! 

டாஸ்மாக் வாசலில் பரதநாட்டியம் பயிலும் பொறுப்பான குடிமகனைப் போல ஒரு மாதிரியாய் 640 பக்கங்களையும் முடித்து விட்டு ஒரு ஓரமாய்க் கட்டையைக் கிடத்தத் தயாரான போது மைதீனின் நிழல் தெரிந்தது ! 'கிழிஞ்சது போ..! இன்னும் என்ன  குண்டைப் போடப்போறானோ ?'  என்ற பதட்டத்தோடு நிமிர்ந்தால் - "அந்த 32 பக்க கலர் டெக்ஸ் கதையை எழுதித் தரேன்னு சொன்னீங்களே அண்ணாச்சி !!" என்றபடிக்கே ஒரு கத்தையை நீட்டினான் ! இதுவோ - கலரிலான ஆக்கம் எனும் போது பிராசஸிங் ; அச்சு என சகலத்துக்குமே கொஞ்சமாச்சும் டயம் அவசியப்படும் ! பேஸ்தடித்துப் போய் நான் நின்ற போது இரவு மணி ஒன்பதரை ! 'விடாதே..பிடி..!!' என அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நம்ம 'தல' தெறிக்க விடும் அந்த 32 பக்கங்களையும் எழுதி இவாஞ்செலினின் வீட்டுக்கு ராவோடு ராவாய் அனுப்பி டைப்செட்டிங் செய்து வாங்கி, அதிகாலையில் திருத்தங்கள் போட்டு - அச்சகம் திறக்கும் நேரத்துக்கு ரெடி செய்திருந்தான் மைதீன் !! 320 + 320 + 32 = 672 பக்கங்கள் கொண்ட ஆட்டு உரலை நாங்கள் சுமந்த கதை இது தான் !! 

அம்மிக் கல்லின் கதை ! 

ஆட்டு உரலைச் சுமந்தது நானும், நம்மவர்களுமெனில், அம்மிக்கல்லை ஒப்படைத்தது நமது கருணையானந்தம் அவர்களிடமே !! போன மாதமே வந்திருக்க வேண்டிய நம்ம கூர்மண்டை சாரின் "சர்ப்பங்கள் சாபம்" சத்தியமாய் ஸ்பைடர் ரசிகர்களுக்கொரு தலப்பாக்கட்டி விருந்து என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு ! நண்பர் JSK-ன் tribute ஆக வெளிவந்திடவுள்ள இந்தக் கதை மட்டும் 30 வருஷங்களுக்கு முன்பாய், ஸ்பைடர் மேனியா உச்சத்தினில் இருக்கும் நாட்களில் வெளியாகியிருப்பின்- கூரையைப் பிய்த்துக் கொண்டு போயிருக்கும் சேல்ஸ் ! ஸ்பைடரின் ரகளையான template-ல் ரவுசு விடும் இந்தக் கதையினை நான் ஆங்கிலத்தில் படித்த போதே தீர்மானித்து விட்டேன் - இதற்குப் பேனா பிடிப்பது ஒரு டஜன் கி.நா.க்களை விடவும் சிரமமென்று ! 72 பக்க நீளம் ; and பக்கத்துக்குப் பக்கம் டிரம்ப்பை விடவும் ஜாஸ்தி வசனம் பேசும் கதை மாந்தர்கள் என்பதைக் கவனித்த போதே - 'ஆத்தாடி.... கடைசி நிமிடம் வரைக்கும் ஜவ்விழுக்கும் நமக்கெல்லாம் இது சுட்டுப்போட்டாலும் ஒத்து வராது ! எழுதுவதனில் ஒரு அசாத்திய discipline கொண்ட அங்கிளால் மட்டுமே இதைச் சமாளிக்க முடியும் !" என்பது புரிந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் அவருக்கே தண்ணி காட்டிப்புட்டான் நம்ம 'எத்தனுக்கு எத்தன்' ! ஒரு முரட்டுக் கத்தைப் பக்கங்களோடு ஸ்பைடரின் தமிழாக்கம் நம்ம ஆபீசுக்கு வந்த சேர்ந்த தருணத்திலோ - இக்கட TEX மேளா செமத்தியாய் ஓடிக்கொண்டிருந்தது ! நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமில்லை என்ற நிலையில் -வேலையினை outsource செய்திட எண்ணிய நேரத்தில் - சில ஆண்டுகளுக்கு முன்பாய் நமக்கு பணியாற்றியதொரு அம்மணி, " வேலை ஏதாச்சும் உள்ளதா ? வீட்டில் வைத்துப் பணிசெய்து தரலாமா ?" என்று கேட்டிட - எக்குத்தப்பான நிம்மதிப் பெருமூச்சு  எனக்கு ! ரைட்டு - ஒரு நோவு தானாய்த் தீர்ந்தது என்று நான் துள்ளிக்குதித்து என்னவோ நிஜம் தான் ! ஆனால் நமது மனிடோ பெரும் தேவனின் திருவிளையாடல்களை அந்த நொடியில் நான் அறிந்திருக்கவில்லை ! முழுசாய் 2 வாரங்களுக்குப் பணியினைக் கையில் வைத்திருந்துவிட்டு - இது இப்போதைக்கு எனக்கு முடியாது போலிருக்கு ! என்று கையை விரித்தே விட்டார் - வெறும் 15 பக்கங்களை மட்டும் முடித்திருந்த நிலையில் ! இவ்ளோ தமிழா ?? என்ற கேள்வி வேறு இந்த அழகில் !! வெறுத்தே போச்சு எனக்கு ! "இந்த மாசமும் இந்த புக்குக்கு பீப்பீ தானா ?  அசிங்கமாகிடுமே !!" என்று உள்ளுக்குள் பதறத் துவங்கியது ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்தபடிக்கே , நமக்கு அவ்வப்போது கொஞ்சம் உதவிடும் குருமூர்த்தியின் கதவுகளைத் தட்டினோம் ! சமீபமாய் ஆர்ச்சி கலரிங் + டைப்செட்டிங் இவரது கைவண்ணமே ! மனுஷன் பிசியாக இருந்த போதிலும் மறுக்காது பணியை ஏற்றுக்கொண்டார் ! So உள்ளே டெக்ஸ் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே தருணங்களில் வெளியே ஸ்பைடரும் ஓடிக்கொண்டிருக்க - உள்ளுக்குள் எனக்கோ - "தேதிகள் ஓட்டமாய் ஓடியவண்ணமுள்ளன ; வேலைகள் இழுத்துக் கொண்டே செல்கின்றனவே" என்ற டென்க்ஷன் ! கூர்மண்டையருக்குப் பிழைத்திருத்தங்கள் போடவும் இக்கட நேரமில்லை எனும் போது - அந்தப் பொறுப்பையும் பேனா பிடித்திருந்த கருணையானந்தம் அங்கிளிடம் மறுக்கா ஒப்படைத்தேன் ! அவரும் இயன்ற மட்டிலும் பார்த்துத் தந்த பக்கங்களுக்கு - 'டமால்..பணால்' என்ற அறிவுபூர்வமான ஓசைகளை இணைத்தது மட்டுமே எனது பொறுப்பாகியது ! வியாழன் மாலை சகலமும் முடிந்து, வெள்ளி காளைக்கு அச்சில் ஏறிட - 2 down ; 2 more to go என்று மண்டைக்குள் ஒலித்தது ! Maybe இந்த இதழினில் பிழைகள் கொஞ்சம் கூடுதலாய்க் கண்ணில்பட்டால் - மன்னிச்சூ ப்ளீஸ் !! And இதோ - நமது பிரிட்டிஷ் ஜித்தரின் அட்டைப்பட முதல்பார்வை : 


இந்த அட்டைப்படத்தின்பின்னுள்ள கதையைக் கேட்டால் தெறித்தடித்து ஓடி விடுவீர்கள் என்பதால் I'll make it simple !! துவக்கத்தினில் நாம் தயார் செய்திருந்த டிசைன் இதுவல்ல ; புதிதாய் நமக்கு ஒத்தாசை செய்திடும் சென்னையின் டிஜிட்டல் ஓவியருக்கு நான் வேறொரு ஸ்பைடர் டிசைனைத் தந்திருக்க, அவருமே அதனை நீட்டாக முடித்துத் தந்திருந்தார் ! நானும் குஷியாய் அதனை படைப்பாளிகளின் பார்வைக்கு அனுப்பிவிட்டு, "இது ஜுபரா கீதாங்க சார் ?" என்று கேட்டிருந்தேன் ! ரைட்டு - proceed என்ற பதில் வருமென்று காத்திருந்தால் - வந்ததோ -"ஐயகோ...ஸ்பைடர் ஏதோ பாங்க்ரா டான்ஸ் ஆடுற மாதிரியிருக்கே ; இதையா அட்டைப்படமாக்கப் போறீங்க ? என்ற பதில் ! "இல்லீங்க சார் ; இதுவும் ஸ்பைடரின் ஒரிஜினல் டிசைன் தான் ; பாருங்க - இதோ இருக்கு நாங்க பயன்படுத்திய reference !" என்று நான் அந்த ஒரிஜினலை அனுப்பியிருப்பினும் அவர்களுக்குத் திருப்தியே இல்லை என்பது புரிந்தது ! "ஸ்பைடர் போன்றதொரு ஆக்ஷன் நாயகருக்கு அட்டைப்படத்தில் தெறிக்கும் வீரியம் தென்படணுமே !" என்பது அவர்களது உணர்வாக இருந்தது ! Moreover - இதே சாகசத்தை அவர்கள் வெகு சீக்கிரமே இங்கிலாந்தில் வெளியிட உள்ள நிலையில், நாம் ஏதேனும் சுமாரான ராப்பரோடு களமிறங்கிடக்கூடாதே  என்ற பதைபதைப்பும் அவர்களுக்கு ! நொடியும் யோசிக்காது - நமது புது ஓவியரை மறுக்கா தொடர்பு கொண்டோம் சர்ப்பங்களோடு மல்யுத்தம் செய்திடும் இந்த டிசைனோடு ! அவருமே நமது அவசரம் புரிந்து சடுதியில் பணியாற்றித் தர - எனக்கோ அதன் பின்னணி வர்ணத்தில் திருப்தியில்லை ! 'ஓடு...ஓடு...கோகிலாவைப் பிடி !' என்று டிசைனை அவரிடம் ஒப்படைத்து, பின்னணியை மட்டும் இன்னும் glitzy ஆக்கி வாங்கிய கையோடு லண்டனுக்கு மறுக்கா மெயில் அனுப்பினோம் ! இம்முறையோ - "சூப்பர் !!" என்று பதில் கிட்டிட, அடித்துப் பிடித்து அட்டைப்படத்தினை அச்சிட விரைந்தோம்  ! இதோ உள்ளது - முதலில் போட்ட பாங்க்ரா டான்ஸ் போஸ் & the others !!



So ரகம் ரகமாய் பல்பு வாங்கிய கதை இதுவே - நமது இஸ்பைடராரோடு !! இதோ - உட்பக்க preview : 


அம்மிக் குழவியின் கதை :

புக் # 3 ஆக வந்திருக்க வேண்டியதோ - கார்டூனான "ஹெர்லக் ஷோம்ஸ்" & இதற்குப் பேனா பிடித்திருக்க வேண்டியவன் நானே ! ஆனால் தீபாவளி மலரின் களேபரங்கள் நிறைவுற்ற நொடியில் கன்னித்தீவு சிந்துபாத்துக்கு நாலு வரிகள் எழுதிடும் 'தம்' கூட என்னிடம் எஞ்சியிருக்கவில்லை ! Herlock மறுக்கா எழுத ஆரம்பித்து & டைப்செட்டிங் மண்டகப்படிகளை மறுக்கா அரங்கேற்ற சத்தியமாய் நேரமும் இல்லை என்ற போதே டிசம்பருக்கென நான் திட்டமிட்டிருந்த ஜம்போவின் இதழ் # 5 தயாராகயிருப்பது நினைவுக்கு வந்தது !! And இது நமக்கு ஏற்கனவே பரிச்சயமானதொரு இதழே !! And இதனை நாம் பின்சீட்டிலிருந்து முன்னுக்குக் கொணரத் துணிந்ததற்கு நமது ஜாகஜ வீரர் ரோஜரும் ஒரு காரணமென்பேன் ! Simply becos - ரோஜரின் "நேற்றைய நகரம்" இதழினை நீங்கள் மத்தளம் கொட்டித்தள்ளி விடுவீர்கள் என்ற பயத்திலேயே அதனை ஒரிஜினலாக அறிவித்த தருணத்தில் வெளியிடவில்லை நான் ! இப்போது ஆன்லைன் புத்தக விழாவிற்கு அதனை வெளியிட்ட போதுமே 'மடக்..மடக்;க்கென எச்சிலை கணிசமாய் விழுங்கத்தான் செய்திருந்தேன் ! ஆனால் Surprise ...surprise ....'கதை சூப்பர் ; சித்திரங்களும் சூப்பர் ; கலரில் இதை வெளியிடாமல் சொதப்பிப்புட்டியே !!" என்ற கண்டனங்கள் !! ரொம்பவே பெரியதொரு pleasant surprise என்றே சொல்லுவேன் உங்களின் அந்த ரியாக்ஷன்ஸ் ! நிச்சயிக்கப்பட்ட சப்பல்ஸ் சாத்துக்களின்றித் தலைதப்பியது மட்டுமன்றி, பண நெருக்கடிகளின் மையத்தில் நிற்கும் வேளையில், கொஞ்சமே கொஞ்சமாய் ராயல்டி மீட்பும் சாத்தியமாயிற்றே என்று ஓசையின்றி சந்தோஷப்பட்டுக் கொண்டேன் ! 

அந்த நொடியில் தீர்மானித்தது தான் "கால வேட்டையர்" இதழினை இனியும் பதுக்கிப் போட வேண்டாமென்பது ! கதையும் வாங்கி ; அச்சைத் தவிர்த்து தயாரிப்புப் பணிகளின் சகலத்தையும் செய்து முடித்து ; பற்றாக்குறைக்கு அட்டைப்படத்தையும் அச்சிட்டு வைத்திருக்கும் நிலையினில் - அதனில் லாக் ஆகிக் கிடக்கும் கணிசமான தொகையானது மனசுக்குள் நெருடலாகவே தொடர்ந்தது ! ரோஜரே தலைதப்பி விட்டார் எனும் போது இந்த மிரட்டும் ஆக்ஷன் த்ரில்லர் நிச்சயமாய் நான் பயந்தது போல் சோடை போகாதென்ற நம்பிக்கை பிறந்தது ! தவிர, ஜம்போ சீசன் 3-ன் சந்தாத் தொகையான ரூ.900-க்கு நாம் வழங்கிட வேண்டியது இன்னமும் ஒரேயொரு அறுபது ரூபாய் புக் மட்டுமே என்பது நினைவில் நின்றது ! (இதுவரை வந்துள்ளவை : பிரிவோம் சந்திப்போம் - ரூ.120 + ஜேம்ஸ் பாண்ட் ரூ.200 + மா துஜே ஸலாம் - ரூ.180 + தனித்திரு..தனித்திரு - ரூ.90 + (காத்துள்ள) Lone ரேஞ்சர் - ரூ.250)  அந்த அறுபது ரூபாய் புக்கின் இடத்தினில் ரூ.120 விலையிலான "கால வேட்டையர்" புக்கை வழங்கிடும் பட்சத்தில் - உங்களுக்கு அந்தக்கதை ரசிக்காமலே போய் விட்டாலும் no big deal என்று தோன்றியது ! டைப்செட்டிங் செய்து ; ராப்பரும் ரெடியாக உள்ளதெனும் போது - ஒரேயொரு நாள் எடிட்டிங்கினில் மெனெக்கெட்டால் ஒரு முழு புக் தேறிவிடும் என்று பட்டது ! கண்முழி பிதுங்கிய நிலையில் deadlines உடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவனுக்கு இந்த டீலை மறுக்க திராணியில்லை ! So அவசரம் அவசரமாய் எடிட்டிங் ; அச்சு & அதே கையோடு அட்டைப்படத்தின் முகப்பில் ஸ்டிக்கர் ; உட்பக்கத்தில் ஸ்டிக்கர் ; கடைசி உட்பக்கத்தினிலும் ஸ்டிக்கர் என்று நம்மாட்கள் புஜங்களையும் இன்றைக்குப் பதம் பார்த்தாயிற்று !! இதோ - பொன்னனின் கைவண்ணத்தில் ஓராண்டுக்கு முன்னமே ரெடியாகிக் காத்திருக்கும் அட்டைப்பட முதல்பார்வை - with the Season 3 sticker : 

 
And இதோ - அசாத்தியச் சித்திரங்களுடனான அதன் உட்பக்க preview !மேற்கொண்டு டைப்படிக்க சத்தில்லை என்பதால் கதை பற்றிய விளக்கங்களை இன்னொரு மழை நாளுக்கென ஒத்திப் போடுகிறேன் guys ! So உங்களின் கூரியர் டப்பிக்கு கனம் சேர்க்கக் காத்திருப்பது இந்த black & white த்ரில்லரே ! 

உலக்கையின் கதை !!

எஞ்சியிருந்த ஒற்றை இதழ் - ஹி..ஹி..!!!! ."இரவின் மழை" என்ற பொருள்படும் பெயரோடு மச்சான்ஸைச் சந்திக்கக் காத்திருந்த அமாயா தோன்றும் - "வானமும் வசப்படும் !" "புரட்சிப்பெண் ஷீலா" என்று ராணி காமிக்சில் இவர் ஏற்கனவே ஒரு ரவுண்டு வந்துவிட்டார் என்பதை நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன் ! ரைட்டு...தீபாவளி ஜோரில் கூட்டத்தோடு அம்மணியை இறங்கிவிட்டால், எப்படியாச்சும் கரை சேர்ந்திடுவார் என்ற நம்பிக்கையோடு - டைப்செட் செய்யப்பட்டு தயாராக இருந்த 30 பக்கங்களைக் கையில் எடுத்த போது - மூச்சிரைத்தது ! அம்மணி எதனில் புரட்சி செய்கிறாரோ இல்லியோ - கதை நெடுக சிக்கன உடுப்புகளோடு 'சிக்'கென்று வலம் வருவதைக் கச்சிதமாய்ச் செய்து கொண்டிருந்தார் ! பற்றாக்குறைக்கு வசன வரிகள் அனைத்துமே ஒரிஜினலின் அதே அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தினில் இருந்திட, அவையும் ஏகமாய் விரசத்தில் நெருடின ! So கோகிலாவைக் கொண்டு அமாயாவுக்கு ஆடைதானங்கள் நடத்திய அதே நேரத்தில் - பெருமூச்சோடு மறுக்கா எழுதும் பேடைத் தூக்கி வைத்துக் கொண்டே விரச ஜாடை தொனித்த வரிகள் சகலத்துக்கும் வீரிய வார்னிஷ் பூச ஆரம்பித்தேன் ! படிக்கும் போது பெரிதாய் நெருடாது ; இன்னும் சொல்லப்போனால் சற்றே feminist ஜாடையிலும் டயலாக்குகளை நான் அமைத்து முடித்தது நேற்றிரவினில் ! (வெள்ளியிரவினில்) And சனி பகலில் அச்சாகி, பைண்டிங்குக்கும் புறப்பட்டு விட்டன !! இதோ - அம்மணியின் அட்டைப்பட முதல்பார்வை - நமது சென்னை ஓவியரின் கலரிங்கில் : 


இந்தக் கூத்துக்கள் அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரங்களில் - அந்நியன் ரெமோ ஜாடையில் எனக்கு இன்னொரு பணி ராப்பொழுதுகளில் காத்திருந்தது !! And அது தான் நமது புது அட்டவணைக்கான பாம்பன் பாலத்து நீளத்திலான பதிவைத் தயார் செய்து டைப்பிடிக்கும் ராக்கூத்துக்கள் ! அத்தனை பேருமே  ஏதேதோ பணிகளில் நம் சார்பில் பிசியே எனும் போது யாரையும் டைப்பிடித்துத் தரச்சொல்ல இயலவில்லை ! And அட்டவணையை ஒத்திப் போடுவோமா ? என்றால் - உங்களை disappoint செய்தது போலாகிடுமே என்று அதற்கும் மனசு ஒப்பவில்லை ! பின்னென்ன - பகலெல்லாம் தயாரிப்பினில் மூழ்கியிருந்தது விட்டு, ராவினில் பதிவுக்குள் உலா வந்தேன் ! அதனில் ஒரு இரவில் எதிர்வீட்டு வாசலில் ராத்திரி 2 மணிக்கு குடுகுடுப்பைக்காரன் நின்று ஜக்கம்மாவை அழைத்துக் கொண்டிருக்க, சத்தமின்றி லைட்டை அணைத்துவிட்டு இருட்டுக்குள் டைப்படித்த கூத்துக்களும் அடக்கம் !  And உங்களின் பின்னூட்டங்களுக்கு இயன்றமட்டிலும் பதில் ; மீதமிருக்கும் நேரத்தில் எடிட்டிங் என இந்தக் கடைசி ஒரு வாரம் கரணங்களின் உச்சமென்பேன் ! And இதோ - இன்று மாலை டெக்சின் தீபாவளி மலர் + கலர் டெக்ஸ் + ஸ்பைடர் + காலவேட்டையர் என 4 புக்குகள் பைண்டிங்கிலிருந்து வந்திறங்கிய நொடியில் - கடந்த 3 வாரங்களது நோவுகள் எல்லாமே போனயிடம் தெரியவில்லை ! பாக்கியுள்ள அமாயா + 2021 கேட்லாக் இரண்டுமே திங்கள் காலை பைண்டாகி வந்து விடுமென்ற நம்பிக்கையில் திங்களன்று despatch செய்திட we are all set !! 

ஒரு ஓமக்குச்சி டீம் பாஹுபலி அவதாரமெடுத்திருக்கும் இந்த தீபாவளி வேளையினை சத்தியமாய் சீக்கிரத்துக்குள் மறக்க மாட்டேன் ! அடிக்கடி சொல்லியிருக்கிறேன் - எங்கள் அணியே என் பலமென்று ! அவர்களை எண்ணி நான் பெருமிதம் கொள்ள இதைவிடப் பெரியதொரு வாய்ப்பு சர்வ நிச்சயமாய் அமையாது என்பது உறுதி !! 938 !! இம்மாதத்து output !!! Phew !!! Absolutely remarkable my team !!


Tuesday, November 03, 2020

The Day after....!

 நண்பர்களே,

வணக்கம். The day after .....! எப்போதுமே பண்டிகைகளுக்கு மறுநாள் ; பரீட்சைகளின் ரிஸல்ட்கள் வந்த மறுநாள் ; எதிர்பார்த்துக் காத்திருந்த நெடும் விடுமுறைகள் நிறைவுற்ற மறுநாள் - ஒருவித இனம்புரியா மௌனம் குடிகொள்வது வாடிக்கை ! இனி இந்த எதிர்பார்ப்புப் படலம் ஒரு வருஷம் கழிந்த பின்னேயே என்ற புரிதல் ; சில நேரங்களில் தேட்டையை விடவும் தேடலே ரொம்ப சுவாரஸ்யமானது என்ற உணர்தல், இந்த மோன நிலைக்குக் காரணமாகிடலாம் ! 'பண்டிகையும் வந்தாச்சு ; புதுத்துணியையும் போட்டாச்சு ; பலகாரத்தையும் ருசிச்சாச்சு ; பட்டாசையும் வெடிச்சாச்சு' எனும் போது மறுதினம் அவரவர் மாமூலான வாழ்க்கைகளுக்குத் திரும்பிடத் தானே வேணும் ? ஒவ்வொரு ஆண்டின் அட்டவணை ரிலீசுக்குப் பின்பாய் எனக்கு இவ்விதம் தோன்றுவது மாமூல் ! அட்டவணையில் விட்டிருக்கும் உதார்களை இனி நிஜமாக்கிக் காட்டும் பொறுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் உறைக்கத் துவங்கிடும் ; "ஆஹா...இங்கே கொஞ்சம் ஓவராய் ஆவேசப்பட்டுப்புட்டோமோ ? இதைக் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ ?" என்றெல்லாம் தோன்றத் துவங்கும் ! 

ஆனால் for a change - இம்முறை the day after syndrome என்னுள் இல்லை ; அச்சோ...ரொம்ப ஓவராய் இழுத்துப் போட்டுக்கிட்டோமோ ? என்ற டர்ருமே இல்லை ! "இதுக்குப் பதிலா - அதை பண்ணியிருக்கலாமோ ? அதுக்குப் பதிலா இதை நுழைச்சிருக்கலாமோ ? என்ற குழப்பங்கள் பெரிதாய் இல்லை ! So கொஞ்சம் தொலைவில் நின்றபடிக்கே எனது தேர்வுகளை நானே விமர்சிக்க முயன்றால் ; எனது அட்டவணையினை நானே decode செய்திட முனைந்தால் பலன் இவ்விதமிருக்கும் : 

சந்தா A - 

கிட்டத்தட்ட மாற்றங்களுக்குத் துளியும் முகாந்திரங்களில்லா affair என்பேன் ! ஒன்பது புக்ஸ் கொண்ட சந்தாவினில் கிட்டத்தட்ட ஆறேழு நாயகர்களுமே தம்மைத் தாமே தேர்வு செய்துகொள்கிறார்கள் ! Maybe எடிட்டர்கள் & டாக்டர்கள் & தொழிலதிபர்களின் ஆதர்ஷ அம்மணிக்கு  007 உடனொரு இருக்கையைப் போட்டு வைத்ததை நீங்கள் யூகித்திருக்க மாட்டீர்கள் ! இதற்கொரு சுவாரஸ்யப் பின்னணி உண்டு ! 

சொல்லப்போனால் இது முட்டை ரெடியானதால் கோழியும் ரெடியாகிய  மாதிரியொரு சமாச்சாரம் ! நமது அமெரிக்க ஓவியை ஒவ்வொரு பணியையும் ஒரு வாரத்திலோ, மிஞ்சிப் போனால் பத்து நாட்களிலோ முடித்துத் தூக்கிப் போடுவது வழக்கம். "அடுத்து வேலை இருக்கா ?" என்ற கேள்வியும் இணைந்தே வரும். So இத்தனை சுறுசுறுப்பாய்ப் பணியாற்றுபவரின் வேகத்துக்கு நாமும் ஈடுதந்திட வேண்டுமே என முன்கூட்டியே அடுத்தடுத்த அட்டைப்படச் சித்திரங்களுக்கு references சேகரித்துத் தயாராக வைத்திருப்பேன் ! சில தருணங்களிலோ - "எப்போனாச்சும் பயன்படுமே !' என்ற ரீதியில் டெக்ஸ் கவர்களையோ ; ஜேம்ஸ் பாண்ட் கவர்களையோ தயார் செய்திடத் தீர்மானிப்பேன் ! அந்த ரீதியில் ஒருவாட்டி இளவரசியின் செம cool படம் கண்ணில் தட்டுப்பட்டது ! 'அட..இந்த அட்டைக்காககவாச்சும் அம்மணியை இட்டாந்தா தேவலையோ ? என்று நினைப்போடு அதை வரைந்தும் வாங்கினேன். அட்டவணையை இறுதி செய்யும் வேலை / வேளை புலர்ந்த போதோ கடுமையான இடநெருக்கடி & ஸ்லாட்டுக்குப் போட்டி நிலவுவதைக் கவனித்த போது - 'ரைட்டு...நமது முதல் ஈரோயினிக்கு மன்ஸ்லே தான் இடம் போலுமென்று பட்டது ! ஆனாலும் அந்த டிசைனை ஆறப்போட மனசு கேட்டில்லா ! அப்போது பிறந்த மகா சிந்தனை தான் - ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டையும் ; அந்நாட்களில் நம்மால் "லேடி ஜேம்ஸ் பாண்ட்" என்று பில்டப்பிக்கப்பட்ட  இளவரசியையும் ஒரே இதழுக்குள் அடைத்தால் அம்மணிக்கான ஸ்லாட் பிரச்னையும் தீர்ந்திடும் ; அட்டைப்படத்தையும்  கண்ணில் காட்டியது போலாகிடுமே என்பது ! ஏப்ரலின் லாக்டௌன் வேளையில் சிக்கிய சிக்கிய சகலத்தையும் வாசிக்க முடிந்த போது மாடஸ்டியின் ஒரு செம crisp சாகசம் கண்ணில்பட்டது ! சித்திரங்களும் ஷார்ப்பாக இருந்திட, பணத்துக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த மே மாதமே எப்படியோ கதையையும் வாங்கிவிட்டோம் ! So அந்த B & B ஸ்பெஷல் உருவான பின்னணி இதுவே ! And 

And அந்தப் புது வரவு மேகி உங்கள் ரேடார்களில் இருந்திருக்க வாய்ப்பிராது ! 2017 முதலே இந்த புஷ்டியான புலியை நான் வெயிட்லிஸ்டிலேயே வைத்து வந்ததால், நடப்பாண்டின் அறிமுக  இருக்கையை இவருக்குப் போட்டுத் தரத் தீர்மானித்தேன் ! நெட்டில் பார்த்த மட்டிற்கு reviews எல்லாமே பாசிட்டிவாக இருந்தது மட்டுமல்லாது - நமது பெல்ஜிய ஆலோசகரும் thumbs up தந்திட, சீட் உறுதியானது ! இக்கட LADY S-க்கு ஒரு வாய்ப்புத் தந்து பார்க்கும் சபலமும் இருந்ததை நான் சொல்லிட வேண்டும் ! ஒரு வான் ஹாம் தொடரை இப்படி அம்போவென abandon செய்துள்ளோம் என்பதை இன்னமுமே என்னால் நம்ப முடியவில்லை தான் ! என்னமோ போம்மா ஷானியா ! 

அது தவிர அங்கிருந்த ஒரே சர்ப்பரைஸ் - நமது தளபதி தீபாவளி மலர்  ! அது முழுக்க முழுக்கவே ஒரே routine-ல் தங்கிடுவது எனக்கு ரொம்பச் சீக்கிரமே போர் அடித்துப் போய் போவதன் பலனே ! வருஷமாய் தீபாவளிகளை ஒரே தடத்தில் கொண்டாடிப் பழகியான பின்னே ஏதாச்சும் மாற்றிப் பார்ப்போமே ? என்ற குடைச்சல் தலைக்குள் எழுந்ததன் பலனே அந்தத் தேர்வு ! And 2014 ஈரோடு ஸ்பெஷலாய் LMS வெளியான நாட்களுக்குப் பின்பாய், இந்த 'தல vs தளபதி ' ஜாலி மோதலுக்கு வாய்ப்பே அமைந்திருக்கவில்லை என்பதால் - 2021 -ல் அதனை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் ஆசையின் பலனே அந்த surprise தீபாவளி மலர் ! 

சந்தா B -ல் 'தல' தான் பிரதானமாய் இடம்பிடித்திடுவார் என்பது ஊருக்கே தெரிந்த ரகசியம் எனும் போது - அவருக்கு எத்தினி ஸ்லாட் என்பது மட்டுமே கேள்வியாக இருந்திருக்க முடியும் ! "இளம் டெக்ஸ்" ஒரு இன்றியமையா அங்கமாகிப் போயிருக்க "திக்கெட்டும் பகைவர்கள்" முதல் தேர்வாகியது ! அப்புறம் தொடர்ந்த இதர டபுள் ஆல்பங்கள் மூன்றுமே, அதனதன் மட்டில் ரவுசு கிளப்பும் கதைகள் என்பதால் no surprises again ! "கண்ணே..கொலைமானே" & Tex & Tesha ஸ்பெஷல் ஆகிய 2 கதைகளுமே நடப்பாண்டிலேயே ரெகுலர் தடத்திலும், ஈரோடு சர்ப்ரைசாகவும் வெளிவந்திருக்க வேண்டியவைகள் என்பதால் கைவசம் கோப்புகள் ரெடியாகவே இருந்தன ! அவற்றை வாகாய் நுழைக்க வேண்டியது அடுத்த ஆட்டோமேட்டிக் பொறுப்பானது ! முன்போல ராயல்டி செலுத்தித் துயில் பயிலும் பாணிகளை  இந்த இடர்நாட்களிலும் தொடர்வது இயலாக்காரியமாச்சே ! So ஏதேதோ காரணங்களின் பொருட்டு "அப்பாலிக்கா பாத்துப்போம்" என்று ஆறாமாய் விட்டு வைத்திருந்த படைப்புகள் இனி அவ்வப்போது களம்காண்பது தவிர்க்க இயலா நிகழ்வாகிடும் ! 


சந்தா B -ன் முதல் சர்ப்ரைஸ் நம்ம டைலன் + மார்ட்டின் கரம்கோர்க்கும் ஆல்பம் எனலாம் ! இங்கே குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதை தான் ; because நான் ஒரிஜினலாக டைலனின் சாகசம் ஒன்றையும் ; மார்டினின் சாகசம் ஒன்றையும் தேர்வு செய்தெல்லாம் முடித்திருந்தேன் - 2 தனித்தனி புக்குகளாய் வெளியிடும் எண்ணத்தில் ! CID ராபினுக்கு இம்முறை ஏதாச்சும் குருவி ரொட்டி தந்து கொள்ளலாம் - டைலனையும், மார்ட்டினையும் நுழைப்பதால் என்பதே planning ! ஆனால் படைப்பாளிகளின் இந்தப் புத்தம்புது கூட்டணி ஆல்பம்  2020 செப்டெம்பரில் வெளியானது என் முட்டைக்கண்களில் அகஸ்மாத்தாய் விழுந்து வைக்க - ராபினும் உண்டு ; மார்டினும் உண்டு ; டைலனும் உண்டு என்ற சமரசம் சாத்தியமானது ! என்னைப் பொறுத்தவரையிலும் சந்தா B -ன் highlight புதுவரவான "டபுள் D " தான் (Deadwood டிக்) ! போனெல்லியின் 'அடுத்த லெவல் படைப்புகள்' என்ற அடையாளத்தோடு 2018 -ல் மார்க்கெட்டுக்கு வந்த சில பல புதுப் படைப்புகளுள் இந்தக் கறுப்பினச் சிப்பாயும் ஒருவர் ! 20198-ல் சூட்டோடு சூடாய் இவரை தமிழ் பேச வைக்க விழைந்தேன் ; ஆனால் 'தல' Dynamite Special குறுக்கால பெரும் பட்ஜெட்டில் அன்று நின்றதால் - தள்ளிப்போனது DD திட்டமிடல் ! இந்தாண்டு குறும் அட்டவணையெனினும், சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமிருக்கலாகாது என்ற குடைச்சல் மண்டைக்குள் குடியிருந்தால் புதியவரை கையைப் பிடித்து இழுத்து வராத குறையே ! இங்கும் 'இளம் டெக்ஸ்' பாணியிலானதொரு சிறு குழப்பம் இருந்தது - becos 4 சிங்கிள் ஆல்பங்கள் சேர்ந்தே ஒற்றை முழு சாகஸமாகிடுகிறது ! இத்தாலியிலோ அவர்கள் மாதமொன்று என்று சிங்கிளாகவே வெளியிட்டிருந்தனர் - தனித்தனி அட்டைப்படங்களோடு ! இந்தவாட்டியும்   "இளம் டெக்ஸ்" விஷயத்தினில் நிகழ்ந்த குளறுபடியினை நாம் அனுமதிக்கப்படாதென்பதால் மருவாதையாய் ஒரே இதழாய் அறிவித்துள்ளேன் ! ஆனால் இந்த டீலிங்கில் 3 அட்டைப்படங்கள் மிஸ் ஆவது தான் நெருடலே ! 

கடைசிக்கு நான் விட்டு வைத்திருந்தது லயன் 400 -க்கான தேர்வினை ! ஒவ்வொரு ஆண்டிலும் கலர் டெக்ஸ் + ஹார்ட் கவர் என்ற கூட்டணி யாருக்கு ரசிக்கிறதோ இல்லையோ - நம் முகவர்களில் நிறையப்பேருக்கு இவை பஞ்சாமிர்தங்களாய்த் தித்திக்கின்றன ! அவரவர் கடைகளில் வைத்தே பத்தோ - இருபதோ புக்ஸ் விற்க முடியும் போது - அதனில் கிட்டும் கமிஷன்கள், நமது இதர பரீட்சார்த்த லொடுக்கு பாண்டி இதழ்களின் சுணக்கங்களை ஈடுசெய்வதாய் அவர்கள் உணர்கிறார்கள் ! ஆனால் பட்ஜெட் கருதி நாம் TEX Color biggies களை ஊறுகாய்களாகவே பயன்படுத்திடுகிறோம் - unless there is a true occasion like this !! துவக்கத்தில் "திக்கெட்டும் பகைவர்கள்" இத்தலையே இன்னொரு டெக்ஸ் சாகசத்தோடு combine செய்து லயன் 400 என ரூ.250 விலையில் வெளியிட உத்தேசித்திருந்தேன் ! ஆனால் மூத்த பிள்ளைக்கு பளபளக்கும் கலரில் Allen Solly சட்டையை பிறந்தநாளுக்குப் போட்டு விட்டு, இளசுக்கோ - உள்ளூர் குருசாமி டெய்லரிடம் துணியெடுத்துக் கொடுத்து தைத்து வாங்கித் தர மனசு கேட்கவில்லை ! ஆனால் பட்ஜெட் 4000 என்ற நம்பரைத் தாண்டுவது தவிர்க்க இயலாமலே இருந்து வந்தது ! ரைட்டு - 'கி.நா.' வூட்டிலே  கொஞ்சம் பியூஸ் பிடுங்கினாக்கா  - 'தல' வூட்டிலே சீரியல் செட் மாட்டிப்புடலாம் !' என்ற நினைப்பு மெது மதுவாய்க் குடிகொண்டது ! And அதுவே - கி.நா.வினில் 3 black & வைட் ஆல்பங்கள் காணாது போனதன் பின்னணி ! அவை மூன்றுமே சற்றே இறுக்கமான ; இருண்ட களங்கள் என்பதுமே எனக்குள் லேசான உறுத்தலாய் நின்றதால் - நிறைய யோசனைக்குப் பின்பாய் சந்தா E அரை டஜன் இதழ்களென்பது - கால் டஜனானது ! 

பாதையினில் இருந்த ஆக்கிரமிப்புகள் காலியான பின்னே 'தல' தாண்டவத்திற்கு ரூட் க்ளியர் என்றான பின்னே - சில காலமாகவே நான் துண்டை விரித்து வைத்திருந்த "புத்தம் புது பூமி வேண்டும்" மெகா சாகசத்தை அங்கே நிலைகொள்ளச் செய்து விட்டேன் ! 'ஓக்லஹோமா' ; 'பந்தம் தேடிய பயணம்' பாணிகளில்  இதுவுமே ஒரு  புது வாழ்க்கையைத் தேடி ; புது பூமிகளைத் தேடி கேரவன்களில் புறப்படும் குடும்பங்களின் கதை என்பதால் ஆக்ஷன் + செண்டிமெண்ட் + varied கதைப்பின்புலங்கள் இங்கு சாத்தியமாகிடும் என்பது புரிந்தது ! டக்கென்று டிக் அடித்தேன் ! And by the way - இந்த இதழின் விலைக்கு, புஷ்டி காணாது என்ற நண்பர்களின் சிறு நெருடல்களைக் கவனித்தேன் ! Rest assured guys - இதழுக்கு Complan ஊட்டிப்புடலாம், இன்னமும் ஆரோக்கியமாக்கிட ! 

கார்ட்டூன் சந்தாவினில், கதைகளின் தேர்வுகளைத் தாண்டி, நாயகத் தேர்வுகளில் எனக்குத் துளி கூட ஜோலிகள் இருக்கவில்லை ! இருக்கும் ஆறு பேருக்கு ஆளுக்கொரு ஸ்லாட் ; லக்கிக்கு அதனில் prime slot என்பதோடு கடையைச் சாத்தி விட்டேன் வெகு சுலபமாய் ! பணியாற்றும் வேளைகளில் மட்டுமன்றி, தேர்வுகளிலுமே நோவு தரா டார்லிங்ஸ் !! 2022-ல்  தான் இருக்குது வேடிக்கையே - ஹெர்லாக் ஷோம்ஸ் காலி & clifton out of the selection race எனும் போது !!

சந்தா E தேர்வுகள் தான் தினத்துக்கு ஒரு கிளையாய் பயணித்த எனது சிந்தனைகளால் ஏகப்பட்ட அடித்தம்  & திருத்தம் கண்டது ! One shot கிராபிக் நாவல்களுக்கு வானமே எல்லை எனும் போது இங்கே அலிபாபா குகைக்குள் புகுந்த புலவன் தருமியைப் போல - 'ஐயோ...இது ஜொலிக்குதே ; ஆத்தி...அது மினுமினுக்குதே ; அச்சச்சோ...அது கண்ணைக் கட்டுதே !!' என்று உருண்டு புரளாத குறை தான் ! இவற்றிற்கென நான் shortlist செய்த கதைகளைக் கொண்டே 2 ரெகுலர் ஆண்டுகளுக்கு முழுவீச்சிலான சந்தாக்களைத் தேற்றிட முடியும் தான் ! இறுதியில் மூணே slots தான்டா மாப்பு...என்றான பின்னே கலரில் இருந்த மூவரை மட்டும் டிக் அடித்தேன் ! அந்த "தாத்தாக்கள் பட்டாளம்" கதையானது at any cost உள்ளுக்குள் நுழைத்திருப்பேன்  - becos அந்தக் களத்தில் பணி செய்யவும், அதனை உங்களுக்கு அறிமுகம் செய்யவும் உள்ளுக்குள் ஓராண்டாய் ஆசை ! அதே போல அந்த இன்னொரு வெட்டியானுமே ! இப்போதெல்லாம் சித்திர பாணி breezy ஆக இருக்கும் கதைகளைப்  பார்த்தாலே ஒரு வாஞ்சை பிறந்து விடுகிறது ! இங்கு artwork-ம் அழகு ; வர்ணங்களும் அழகு ; நமக்குத் பிடித்த வன்மேற்கே பின்புலம் என்ற போது, சில காலமாகவே ஜம்போவுக்கென நான் அடையாளமிட்டு வைத்திருந்த இந்த ஆல்பம் இம்முறை உள்ளாற புகுந்தது ! And அந்த மூன்றாம் கலர் ஆல்பம் - ஒரு நிஜமான கி.நா. என்பேன் ! புக் வரட்டுமே - மேற்கொண்டு பில்டப்களின்றி !

So எனது அட்டவணையின் பின்னுள்ள ; சைடிலுள்ள ; உசக்கேயுள்ள மஹாசிந்தனைகள் இவையே ! பட்டியலை விளம்பரங்களாக்கி, கண்ணில் காட்டி முடிக்கும் போது - 'அடங்கொன்னியா ..இதுக்குப் போயி இந்த முக்கு முக்குனியாக்கும் ?" என்று எப்போதும் போலவே இம்முறையும் தோன்றுகிறது ! ஆனால் தேர்வு செய்திடும் போது தலைக்குள் வந்து செல்லும் ஓராயிரம் எண்ணங்கள் ; நிறைகள்-குறைகள் ; குழப்பங்கள்-தெளிவுகள் எல்லாமே என்ன மாதிரியான சித்து விளையாட்டுக்களை ஆடும் என்பது தனிக்கதை !  

இயன்ற வரையறைகளுக்குள், வாசக அபிலாஷைகள் ; விற்பனைக்கட்டாயங்கள் ; கதைக்கொள்முதலின் சாத்திய - அசாத்தியங்கள் ; பணியாற்றக்கூடிய ஆக்கங்கள் ; பளுநிறைந்த ஆக்கங்கள் - என நிறைய சங்கதிகளுக்கு weightage தந்திடும் போது  ஒரு குறுகிய கால அட்டவணை என்ற விதத்தில் இது ஓ.கே. என்று எனக்குப்பட்டது ! ஆனால் உள்ளுக்குள் குடியிருந்தபடிக்கே என்றைக்குமே நமக்கான உசரங்களை 'இன்னும் கொஞ்சம் மேலே..இன்னும் கொஞ்சம் மேலே..' என்று நகர்த்திட விழையும் ambitious ஆராவுமுதன் - "இன்னும் பெட்டராப் பண்ணியிருக்கலாமோடா அம்பி ?' என்ற கேள்வியினைக் கேட்கத் தவறுவதேயில்லை ! ஆண்டுதோறும் ; மாதம்தோறும் ; வாரம்தோறும் ; தினந்தோறும் இந்தக் கேள்வியினை repeat செய்திட இவர் மட்டும் இல்லையெனில், 'பெருசாய் கிழிச்சாச்சு !" என்ற லயிப்பில் நான் கொஞ்சம் லாத்தலாகிடக்கூடும் என்பதால் - ambitious அம்பி எப்போதுமே எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் !! "இருக்கவே இருக்கு 2022 அண்ணாச்சி ; இன்னும் பேஷாப் பண்ணிப்புடலாம் !' என்றபடிக்கு இப்போவே புதியதொரு நோட்டை வாங்க ஆள் அனுப்பிவிட்டேன் - மஹாசிந்தனைகளின் அத்தியாயம் நானூற்றி எழுபத்திஎட்டுக்கோசரம் ! 

Bye folks !! See you around !! A nd here's the online listing :

https://lioncomics.in/product/jumbo-falooda-subscription-2021-april-to-december-abce-tamilnadu-copy/








Saturday, October 31, 2020

தேர் இழுக்கும் திருவிழா - 2021 !!

 நண்பர்களே,

வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்திலை மறந்திருக்காது தானே ? (நாங்க மறந்திருந்தாலும் நாலு பதிவுக்கு ஒருவாட்டியாச்சும் நீ அதை ஞாபகப்படுத்தும் போது  மறக்க வாய்ப்பில்லையே ராஜா - என்கிறீர்களா ?!) 2012 முதலான கடந்த 8 வருஷங்களாய், ஜுன், ஜுலை முதலாகவே அந்த "சிந்தனை செந்தில்" கூத்தைத் தான் நானும் அடித்திடுவேன் ! (இதுவுமே தெரிஞ்சது தானே ராஜா என்கிறீர்களா ? 😎😎) புது அட்டவணைக்கான  combinations-களை நிர்ணயம் செய்கிறேன் பேர்வழி என்று குயர் குயராகப் பேப்பரைக் கபளீகரம் செய்து வருவது ரெகுலரான நிகழ்வு ! ஆனால் முதன் முறையாக – ஒற்றைப் பேப்பரில் ; ஒரே சிட்டிங்கில் அட்டவணையின் முக்கால்வாசி உருவான மாயம் இந்த ஆகஸ்டில் அரங்கேறியது ! “கால்களை அகலமாய் விரித்துக் கொண்டே போகாதேப்பா” என்ற சேதி,  ஒரு நுண்வைரஸின் உபயத்தில் கிட்டிட – “இந்த ரோட்டை வாங்கிப் போடவா? அந்தத் தெருவை வாங்கிப் போடவா? என்று அலைமோதும் கவுண்டர் சாரின் ஆர்வக் கோளாறுகள் இம்முறை என்னைப் பீடிக்காது பார்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டிப் போனது ! அலிபாபா குகையினுள் குவிந்து கிடக்கும் பொக்கிஷங்களைப் போல கதைகளின் குவியல்களைப் பார்த்திடும் போது - சங்கிலி போட்டுக் கட்டி வைத்தாலும் திமிறத்தான் தோன்றுகிறதென்பது தனிக்கதை !   அதே சமயம் சிக்கனத்திலும் (!!!) சாகஸம் செய்து பார்ப்பது ஒரு செம சுவாரஸ்ய அனுபவமாய் அமைந்து போயிட இதோ – ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2021-க்கான ஒன்பது மாதச் சந்தா அட்டவணை !

என் முன்னிருந்த முதலும், பிரதானமுமான கேள்வி இதுவே : 

What would be a good number for the 9 months ? 

இந்தச் சுருக்கமான சந்தாவுக்கு 30 புக்ஸ் ; 24 புக்ஸ் ; 32  புக்ஸ் என்று ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்த்தேன் ; பட்ஜெட் உதைத்தது / அல்லது ரொம்பவே குறைச்சலாய்த் தோன்றியது ! இறுதியாய் மாதம்தோறும் 3 - ஆக மொத்தம் 27 புக்ஸ் (ஜம்போ சேர்க்காது) என்று தீர்மானித்தேன் ! 

அடுத்து எழுந்த கேள்வி - 27 புக்ஸ் என்ற அப்பத்தை ஆக்ஷன் ; போனெல்லி ; கார்ட்டூன் ; கி.நா. என்ற புள்ளீங்க மத்தியினில் எவ்விதம் பிரித்துத் தருவதென்பதே ! இக்கட கூட்டிப்புட்டா - அக்கட குறையும் & vice versa ! ரைட்டு - ஒவ்வொரு ஜானரிலும் இன்றியமையா mass நாயகர்களைப் பட்டியலிட்ட பின்னே தொகுதி உடன்பாட்டைச் செய்து கொள்ளலாமென்று தீர்மானித்தேன் ! 

சந்தா A :

As always – ஆட்டம் துவங்குவது சந்தா A-விலிருந்தே ! ‘’ACTION APLENTY’’ என்று பறைசாற்றும் இந்தச் சந்தாப் பிரிவினில் ஆதி முதலே நமக்கெல்லாம் ஆதர்ஷங்களாகிப் போயிருக்கும் detective / அதிரடிக் கதைகள் இடம் பிடிக்கின்றன! மட மடவென பெயர்களை எழுதி விட்டு நிமிர்ந்தால் 8 பெயர்கள் காகிதத்தில் இருந்தன ! அவர்களை லைனாய் அணிவகுக்க வைத்து - ஒவ்வொருவரின் குறை + நிறை என்று மனசுக்குள் ஓடச் செய்ய முற்பட்டேன், நடப்பாண்டின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டபடிக்கே ! கிட்டத்தட்ட அத்தனை பேருமே - 'எங்களைத் தேர்வு பண்ணாட்டி நஷ்டம் உனக்குதான்ப்பா !' என்பது போல் முறைப்பதாய்த் தோன்றிட, வேகமாய் டிக் அடிக்கும் படலத்தினுள் புகுந்தேன் ! 

So நமது புது கேட்லாக்கின் முதற்பக்கம் துவங்குவதே மௌனப்புயல் ட்யுராங்கோவுடன் ! 5 ஆண்டுகளுக்கு முன்பாய் நம்மிடையே சத்தமின்றி யுத்தம் செய்யக் களம் கண்ட இந்த வன்மேற்கின் அதிரடிக்காரர் வருஷத்துக்கொரு 3 பாக ஹார்ட்கவர் தொகுப்போடு அதகளம் செய்து வந்துள்ளார் ! சாகசங்களில் மாத்திரமன்றி, விற்பனைகளிலுமே ஓசையின்றி காரியம் சாதிக்கும் இவரது பாணி புலனானது - கிட்டங்கியின் கையிருப்பைச் சரி பார்த்த கணத்தினில் !! நடப்பாண்டு + 2019-ல் வெளியான 2 ஆல்பங்கள் நீங்கலாய் பாக்கி எல்லாமே sold out என்று நம்மவர்கள் சொன்ன போது "தெய்வமே !!" என்றபடிக்கு இவருக்கு ஒரு பெரிய thumbs up தந்ததோடு - முத்து காமிக்சின் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வாய்ப்பினையுமே சேர்த்து வழங்கினேன் ! So 2021-ல் காத்திருக்கும் “முத்து காமிக்ஸ் இதழ் # 450” என்ற மைல்கல்லுக்கு உரமேற்றவிருப்பது ட்யுராங்கோவின் “ரௌத்திரம் கைவிடேல்”! ஏற்கனவே அறிவித்திருந்தது போல ட்யுராங்கோ தொடருக்கு விடைதரும் வேளையும் இதுவே ! இதற்குப் பின்பாய் ஒரேயொரு சிங்கிள் ஆல்பம், முற்றிலும் புது ஓவிய பாணியில் உள்ளது தான் ! ஆனால் அதன் தொடர்ச்சியை உருவாக்காதே தொடரினை மங்களம் பாடி விட்டுள்ளனர் - படைப்பாளிகள்  ! So கெத்தான ஒரு நாயகருக்கு முத்தான ஒரு வாய்ப்புத் தந்து thank you & goodbye சொல்லவிருக்கிறோம்! வழக்கம் போலவே ஹார்ட்கவர் & முழுவண்ணம் & கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு !

ஆக்ஷன் சந்தாவில் ‘டக்‘கென்று ‘டிக்‘ வாங்கிய அடுத்த நாயகர் – லிப்ட்டில் உடைமாற்றும் ஒரு NYPD டிடெக்டிவ் ! அம்மாவுக்கு அடங்கிப் போகும் ஒழுக்கமான பாஸ்டராக வீட்டிலும் ; ரகளையின்றி ரணகளங்களைச் சமாளிக்கும் போலீஸ்காரராய் நியூயார்க்கின் வீதிகளிலும், உலா வரும் SODA – நடப்பாண்டினில் அறிமுகமாகி, ஓவர்ரைட்டில் நம் பட்டியலில் ஒரு நிரந்தரராகி விட்டுள்ளதில் no secrets ! வித்தியாசமான கதை பாணி ; கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களிலும் ஈர்ப்பு & இதுவரையிலும் நாம் பார்த்தேயிராத கதாநாயக template இங்கே கோலோச்சுவதால் இவரது கதைக்குத் துண்டு விரிப்பதில் எனக்குத் துளி கூடத் தயக்கம் தோன்றிடவில்லை ! And இதுவொரு கொட்டாவி விடும் நீளத்துக்கான தொடரும் அல்ல எனும் போது டிரெண்ட் பாணியினில் ஆண்டுக்கு, ஒன்றோ-இரண்டோ போட்டுத் தாக்குவது சுலபம் என்பது புரிந்தது ! More than anything else - இதுமாதிரியான சற்றே மாறுபட்ட கதைப்பாணிகளே இப்போதெல்லாம் பணியாற்றும் போது எனக்கொரு பூஸ்ட்டை தருவதை உணர முடிகிறது ! மாமூலாய் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் மகானுபாவர்களை காணும் நொடியில் பேனா பேந்தப் பேந்த முழிப்பதே நிகழ்கிறது ! So ’’நித்தமும் உந்தன் நிழலில்” with SODA !

தயக்கமின்றித் தானே தேர்வாகிக் கொண்ட அடுத்த நபர் நமது சிகப்புச் சட்டைக்கார ட்ரெண்ட் ! அதிர்ந்து பேசா ; ஆக்ஷனைப் பெரிதாய் நம்பியிரா இந்த அழுத்தமான ஹீரோ சமீப ஆண்டுகளில் ஒவ்வொரு முறையுமே, கிடைக்கும் வாய்ப்புகளைக் கச்சிதமாய்ப் பயன்படுத்தி வருகிறார் ! தவிர, மொத்தமே 8 ஆல்பங்கள் தான் இவரது தொடரினில் எனும் போது, ஒரிஜினலின் வரிசைக்கிரமத்தில் போட்டுத் தாக்குவது சுலப வேலையாகி விடுகிறது ! ரம்யமான சித்திரங்கள் இதமான வர்ணங்கள், நேர்கோட்டுப் பயணம் ; நமக்குத் பிரியமான கௌபாய் பாணி ; yet மாறுபட்ட கனேடிய பின்புலம் - என்ற அந்த ரெகுலர் பாணியில் ட்ரெண்ட் தொடரின் ஆல்பம் # 6 – “பகலறியா பூமி !’’.

தேர்வு பண்றியா? இல்லாங்காட்டி கமிஷனர் போர்டன் கிட்டே போட்டுக் கொடுக்கவா ?' என்றபடிக்கு மிரட்டும் கேரட் மண்டை ரிப்போர்ட்டரே next in line ! மினிமம் கியாரண்டிக்கு என்றைக்குமே மோசமில்லை என்று தெம்பாய் வலம் வரும் ரிப்போர்ட்டர் ஜானி – நடப்பு மாதத்தின் டபுள் ஆல்பப் புரமோஷனுமே கண்டவர் எனும் போது, இவருக்கான ஸ்லாட்டைத் தட்டிப் பறிக்க யாருமிலர் ! இங்கே எனக்கிருந்த ஒரே கேள்வி - பழைய கேரட்காரரா - அல்லது புதியவரா ? என்பதே ! And இம்மாதத்து உங்களின் அலசல்கள் தெள்ளத்தெளிவாக விடை சொல்லி விட்டதால், என் பணி சுலபமாகிவிட்டது ! So க்ளாஸிக் ஜானியின் “காற்றில் கரைந்த கலைஞன்” 2021-ல்  ஆஜராக உள்ளார் ! பெர்சனலாய் எனக்கு ஜானி 2 .0 தேர்வாகிடாதா ? என்ற ஆதங்கமே மேலோங்கியிருந்தது ! ஆனால் 'பழசுக்கு ஜே' போடும் நமது பாணிகளில் no மாற்றம்ஸ் எனும் போது - "மை பெஸ்ட் கஸ்டமர்   ..but நோ  பீஸ் !" என்று புலம்பும் வடிவேலு பாணியில் நடையைக் கட்ட வேண்டியானது !! 

மோனப் பார்வையிலேயே கேள்வி கேட்கும் மறதிக்கார மன்னாரு அடுத்த automatic choice ஆகிட்டார் ! நடப்பு ஆண்டினில் 2132 மீட்டர் ஒரு அனல்பறக்கும் அத்தியாயமாய் அமைந்தது மட்டுமல்லாது, ஒரு செம த்ரில்லான தருணத்தில் “தொடரும்” என்ற போர்டை மாட்டிக் கொண்டதால் அதன் conclusion-ஐ ரசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே இருப்பது உறுதி ! 2020-ன் நவம்பரில் இரத்தப் படலத்தின் 27-ம் பாகம் பிரெஞ்சில் ரிலீஸாவதால் – சூட்டோடு சூடாய் 2021-ல் அதனை வெளியிடவுள்ளோம் – “நினைவோ ஒரு பறவை” வாயிலாக ! And தகவல் ரைட்டா – தப்பா ? என்று தெரியலை ; ஆனால் இரண்டாம் சுற்று இந்தப் புது ஆல்பத்தோடு நிறைவுறுவதாய்க் கேள்வி ! நிஜம் தானா என்றறியக் கேட்டுள்ளேன் - அடுத்த வாரத்தில் files வரும் போது விடையும் வந்திருக்கும் !

Who next ? என்று பார்த்த போது, முன்நெற்றியில் கேசம் சுருண்டு விழுந்திருக்கும் ஒரு ஸ்டைலானவர் கருப்பு கோட்டணிந்தபடிக்கே கரம் நீட்டி நிற்பது தெரிந்தது ! சில icon கள் யுகங்கள் எத்தனை ஆனாலும் நம் மனங்களிலிருந்து அதிக தொலைவு பயணிப்பதில்லை என்பதை க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 007 உணர்த்துவது புரிந்தது ! Yes indeed - ராணி காமிக்சில் வெளியான சாகசங்களே இவை ; கதைகளுள் அந்நாட்களது நெடி சற்றே தலைதூக்குவது வாஸ்தவமே - ஆனால் கறுப்பு வெள்ளையில் - அந்த பர பர ஆக்ஷன் கதைகள் என்றைக்குமே அளிப்பதில்லை என்று நினைத்தேன் ! நடப்பாண்டில் அட்டவணையில் போல நிறைய ஸ்லாட்ஸ் என்றெல்லாம் இல்லாது - இம்முறை ஒன்றே ஒன்று ; கண்ணே கண்ணு பாண்டுக்கு எனது தீர்மானித்தேன் ! அப்போது தான்  சிலபல டாக்டர்களின் மனங்களையும், தொழிலதிபர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் ஒரு ஜாலப் பெண்மணி அருகாமையில் நிற்பது தெரிந்தது ! அவரோ கையிலொரு   காங்கோவைச்  சுழற்றிக் கொண்டிருக்க, அவருக்கு ஒரு எட்டு பின்னே நிற்கும் செம்பட்டைமண்டைக்காரரோ கத்தியும் கையுமாய்க் காட்சி தர, லைட்டாய்க் காப்ரா ஆகிப்போனது எனக்கு ! இவர்களுக்கு இடம் உள்ளத்தினில் தானென்றால் இங்கு சிலபல உள்ளங்கள் சித்தரிடுமென்பதும் புரிந்தது ; அதே சமயம் இடப்பற்றாக்குறையுமே மிரட்டியது ! அப்போது எழுந்த மஹாசிந்தனை தான் - The B & B Special !! முதல் தபாவாக நமது க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டும், இளவரசி மாடஸ்டியும் "Bond & Blaise ஸ்பெஷல்” என்றதொரு black & white சாகஸத்தில் மிரட்டவுள்ளனர் ! இருவருமே ஒரே குழுமத்து பிரிட்டிஷ் தயாரிப்புகள் என்பதால் இந்தக் கூட்டணி நிச்சயமாய் க்ளாஸிக் கதை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருந்திடுமென்று சொல்வேன் ! அதிலும் இம்முறை தேர்வாகியுள்ள 2 கதைகளும் சரி ; அவற்றிற்கென நமது அமெரிக்க ஓவியை தயார் செய்திருக்கும் அட்டைப்படங்களும் சரி - பொறி பறக்கச் செய்யும் ரகம் !

அடுத்த automatic choice - நமது fantasy நாயகர் தோர்கல் ! துவக்கம் தடுமாற்றமாய் இருப்பினும், பின்னாட்களில் வேறொரு லெவல் என்று வீரியம் கூட்டிக்கொண்டுள்ள ஹீரோ இவர் ! And காத்திருக்கும் ஜனவரியில் இவரது 5 பாக ஆல்பமொன்று தெறிக்க விடவுள்ளதெனும் போது - தோர்களின் graph உசக்கே மட்டுமே பயணிக்க முடியும் ! ஆனால் இம்முறை எனக்கிருந்த சிக்கல் பட்ஜெட் சார்ந்தது என்பதால், ஆரிசியாவின் ஆம்படையானுக்கு ஒற்றை சிங்கிள் ஆல்பமே possible ! தவிர ஜனவரியில்  5 பாகத் தொகுப்பு + தொடரக்கூடியோ ஏப்ரலிலோ, மே மாதத்திலோ இன்னொரு மெகா தொகுப்பு எனில் overkill ஆகிடுமோ என்ற தயக்கமும் எழுந்தது ! இதுவரையிலும் நாம் தொட்டிருப்பது ஆல்பம் 16 - ஒரிஜினல் வரிசையினில் ! ஜனவரியில் காத்துள்ளதோ - numbers 17 to 21 ! So அடுத்த அட்டவணையினில் இடம்பிடித்திடுவது சிங்கிள் ஆல்பமான # 22 ! எல்லாம் நார்மலாகியிருக்கும் போது - மறுக்கா அந்த தொகுப்பு mode-க்கு தோர்கல் குதித்திடுவார் ! But  இன்னொரு டிடெக்டிவ் நாயகருக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் கிட்டி விட்டால் - இந்த தோர்கல் சிங்கிள் ஆல்பம் நிச்சயமாய்த் தள்ளிப் போகும் !

இதுவரையிலான பட்டியலில் 7 பேர் இடம்பிடித்திருக்க - who next ? என்றபடிக்கே நிமிர்ந்தேன் ! செலக்ஷன் பட்டியல்களை டார் டாராய்க் கிழித்த கையோடு – “எனக்கெல்லாம் ஒரு செலக்ஷன் கமிட்டி வைக்கும் அளவுக்குத் துளிர்த்துப் போச்சா ? எனக்கு இடம் இல்லாட்டிப் “பிச்சி…பிச்சி !“ என்று மிரட்டி நிற்கிறார் ட்சி-நா-பா எனும் தட்டைமூக்கார் எனும் கேப்டன் டைகர் ! டைகர் ஆக்டிவாக இருந்த நாட்களில், இம்மி கேள்வி கூட இல்லாது டீம் செலக்ஷனில், விராட் கோஹ்லியின் பெயரைப் போல முதல் பெயராய் இவர் ‘டிக்‘ ஆகியதே நடைமுறை ! ஆனால் இளம் டைகரின் பிற்பாதி மாத்திரமே இனி எஞ்சியிருக்க, தொடரின் ஹிட் கதைகள் சகலத்தையும் வெளியிட்டு முடித்த நிலையில் – உடைந்த மூக்கார் நமது ரேடாரிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார் ! பற்றாக்குறைக்கு "இளம் டைகர் ஸ்பெஷல்" அறிவித்த சற்றைக்கெல்லாமே இங்கே கொரோனா புண்ணியத்தில் சகலமும் உல்டாவாகிப் போக, அந்தத்திட்டமிடலைக் கைவிட வேண்டிய கட்டாயமும் எழுந்தது !  நிலவரம் இவ்விதமிருக்க, சென்றாண்டினில் கேப்டன் டைகரை முற்றிலும் புதுக் கதாசிரியர் – ஓவியர் டீமின் பராமரிப்பில் விட்டு – புதியதொரு 2 பாக சாகஸத்தை உருவாக்கியுள்ளனர் என்பது பற்றிப் பகிர்ந்திருந்தேன் ! And அதன் முதற்பாகம் 2019-ன் பிற்பகுதியில் வெளிவந்து விட்டுள்ளதை நாம் அறிவோம் ! க்ளைமேக்ஸ் பாகமானது 2021-ன் ஜுன் இறுதிக்குள் வெளிவந்திடுமென நமது படைப்பாளிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர் ! So ஒரு ரிஸ்க் எடுத்து, ரெடியாகி வரும் அந்த  இரண்டாம் பாகத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு 2021-ன் தீபாவளியை – தளபதி தீபாவளியாக்கினால் என்னவென்ற மகாசிந்தனை திடுமென தோன்றியது ! So படைப்பாளிகளின் தரப்பில் மட்டும் தாமதம் நிகழாது போயின் – 2021-ன் தீபாவளி “வேங்கைகள் வீழ்வதில்லை”யுடன் !! முதல் பாகத்தை ஏற்கனவே மொழிபெயர்ப்புக்கென நமது பிரெஞ்சு எழுத்தாளருக்கு அனுப்பியிருக்க – அதைப் படித்த கையோடு, “இது ரொம்பவே சுவாரஸ்யமாத் தெரியுது!” என்று அவரும் கமென்ட் செய்திருந்தார் ! சித்திர பாணி மட்டும் டைகர் ரசிகர்களுக்கு லைட்டாக வயிற்றைக் கலக்கிடக் கூடும் தான் ; ஆனால் கதை அதனை ஈடு செய்கிறது ! So ஒரு வேங்கைத் தீபாவளி புலருமா ? என்ற எதிர்பார்ப்போடு அடுத்த நாயகரிடம் தாவுகிறேன் ! "இப்போ கொள்ளை போகுதா - என்ன ? புக் அக்கட ரிலீஸ் ஆகும் முன்னமே திட்டமிடல் ஏனோ ?" என்ற கேள்விகளும் இதன் தொடர்ச்சியாய் எழுமென்பது புரிகிறது தான் ! ஆனால் 2021 நவம்பருக்குள் அங்கிருந்து பாகம் # 2 கிளம்பியிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாலேயே அட்டவணைக்குள் நுழைகிறார் தட்டைமூக்கார் ! நாலைஞ்சு வருஷமா TEX தீபாவளி கொண்டாடி வர்றோமே ; அதுக்கு கல்தாவா ? " என்ற வினவலுமே தொடரக்கூடும் அல்லவா ? So அதற்குமே பதில் சொல்லிப்புட்டால் உங்களில் பலருக்கும் டைப்படிக்கும் நோவு மிச்சமாகுமல்லவா ? "தளபதி தீபாவளி" உண்டென்பதற்காக - "தல தீபாவளி" இல்லையென்று போகணுமா - என்ன ? So மஞ்சள் ஒளிவெள்ளங்கள் ஒவ்வொரு தீபத் திருநாளுக்கும்  நிச்சயமிருக்கும் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன் ! Read on folks...!

To complete the ஆக்ஷன் சந்தா – யாரைப் பட்டியலிடுவது ? அல்லது "8" என்ற நம்பரோடு முற்றுப்புள்ளி வைப்பதா ? என்று யோசிக்கத் துவங்கிய சமயத்தினில், "அடடே..இந்த அட்டவணைக்குள் இன்னமும் புதுசாய் யாரையும் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லையே !" என்ற நெருடல் லேசாய் ஓடிக் கொண்டிருந்தது ! என்ன தான் வீரதீரர்களும், பயில்வான்களும் நம் அட்டவணைகளில் இடம் பிடித்திருந்தாலும் – புதியவர்களை வரவேற்கும் உற்சாகமே தனி தானே ? பின்நாட்களில் அவர்கள் உப்மா கிண்டவோ ; ஹக்கா நூடுல்ஸ் போடவோ தயாராகிடும் ஜெரெமியாக்களாகவோ ; லேடி S-களாகவோ; கமான்சேக்களாகவோ ; ஜடாமுடித் தாத்தா சார்களாகவோ உருமாறிடும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை ; ஆனால் புதியவர்கள் கொணரும் ஒரு தேஜஸ் எப்போதுமே ஜாலி ரகம் அல்லவா ? அப்போது தான் நமது பெல்ஜியம் காமிக்ஸின் ஆலோசகரும் சரி, 2016 பிராங்க்பர்ட் புத்தகவிழாவின் போது படைப்பாளிகளின் பிரதிநிதிகளும் சரி – பரிந்துரைத்ததொரு மினி தொடரின் நாயகி நினைவுக்கு வந்தார் ! அம்மணியின் பெயர் டாப் ராமெனோ ; மேகியோ என்று லேசாய் ஞாபகத்திலிருக்க, எனது டயரியை உருட்டினேன் ! அப்போது கைதூக்கி நின்றவர் தான் மேகி கேரிஸன் ! அம்மணி ஒரு டிடெக்டிவ்… அதாவது டிடெக்டிவாக முயற்சிக்கும் லேடி ! மயக்கும் சொப்பன சுந்தரியெல்லாம் கிடையாது ! சொல்லப் போனால் XIII தொடரில் வரும் மார்த்தாவைப் போலயிருப்பார் ஒரு சாயலில் ! So லேடி S போல அண்ட்ராயரோடு கிழக்கு ஐரோப்பியக் கூரைகளில் நடுச்சாமத்தில் ஓட்டமெல்லாம் இவர் எடுத்திட மாட்டார் ! மாறாக, லண்டனின் வீதிகளில் ஜாலியாய்ச் சுற்றியபடிக்கே தனது புலனாய்வுகளைச் செய்திடுவார் ! மொத்தம் மூன்றே ஆல்பங்கள் கொண்ட இந்த மினித்தொடருக்கு ஏகப்பட்ட சிலாகிப்புகள் நெட்டில் தென்பட்டது & கணிசமான விருதுகளும் ஈட்டியுள்ளது ! So டிசம்பர் 2021-ல் முதல் ஆல்பம் ; அதன் மறு வருஷத்துத் துவக்க மாதங்களில் மற்ற 2 ஆல்பங்களும் என அடுத்தடுத்து வெளியிட உத்தேசம் (ஜேஸன் ப்ரைஸ் பாணியில்). So – ‘செய்வன தில்லாய்ச் செய்‘ என்று கெத்தாகக் களமிறங்குகிறார் புதியவர் !

ஆக 9 ஆக்ஷன் இதழ்கள் கொண்ட சந்தா A -வின் அங்கத்தினர் மேற்படி நபர்களே ! Of course – இந்த நொடியில் உங்களுக்குள் ஓடக் கூடிய கேள்வி என்னவாகயிருக்குமென்று யூகிப்பதில் சிரமமில்லை ! "இருக்கு சரி ; இல்லாதது எங்கே ?" என்று யோசித்தபடிக்கே - "ரோஜர் கிடையாதா ? ப்ருனோ பிரேசில் கிடையாதா ? லார்கோ கிடையாதா ?" என்ற கேள்விகள் தடதடக்கக்கூடும் தான் ! லார்கோ தொடரினில் வெளியாகியுள்ள 2  பாக புது ஆல்பத்தினில் கதாசிரியர் வான் ஹாமின் absence ரொம்பவே உறுத்தும் விதமாய் அமைந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ! புதுக் கதாசிரியர் முன்வைத்திருக்கும் செம complicated கதைக்கு மொழியாக்கம் செய்திட ஒரு பிசினஸ் டிக்ரீ  தேவைப்படுமென்பது எனது எண்ணம் ! அதனைக் கொண்டவரைத் தேடிப் பிடித்தே விட்டாலுமே - வாசிக்கக்கூடிய நமக்கெல்லாம் ஒரு மினி டிக்ரீயாச்சும் தேவைப்படலாம் ! So அடுத்த லார்கோ ஆல்பம் வரட்டும் என்று நினைத்தேன் ! ரோஜர் & ப்ரூனோ பற்றி நிறையவே பேசி விட்டோம் என்பதால்  ஜாலியாய் சந்தா B பக்கமாய் நடையைக் கட்டலாமா ? 






 சந்தா B :

As always – சந்தா B – போனெலியின் ஆடுகளமே ! And இங்குமே 9 இதழ்களே என்று தீர்மானித்தேன் - விற்பனையில் நமக்குத் பிராண வாயுவினை வழங்கிடும் டெக்ஸ் & டீமுக்கு போதிய இடமளிக்கும் விதமாய் ! And வழக்கம் போல ‘தல‘ முக்கால்வாசி இருக்கைகளைத் தனதாக்கிக் கொள்ள, பாக்கி இடங்களில் முண்டியடித்து இடம்பிடிக்கின்றனர் C.I.D ராபின் ; மர்ம மனிதன் மார்டின் & டைலன் டாக் !  “தெரிந்த சமாச்சாரம் தானே…? மஞ்சள் சட்டைக்காரர் தானே சதா நேரமும் limelight- ன் சொந்தக்காரர் ? என்று விசனம் கொள்ளும் ஒரு சிறு அணிக்குக் கூட .இந்த முறை சுவாரஸ்யமூட்ட 2 சமாச்சாரங்கள் கைவசமுள்ளன! 

சமாச்சாரம்  # 1 : ஒரு அதிரிபுதிரிக் கூட்டணி ! இத்தனை காலமாய் ஒரே புக்கில் நாலைந்து நாயகர்களின் சாகஸக் கூட்டணிகள் அமைந்திருப்பதைப் பார்த்திருப்போம் தான் ! அட… ஒரு டஜன் நாயக / நாயகியரும் ஒற்றை இதழில் இடம் பிடித்திருப்பதைக் கூடப் பார்த்திருப்போம் ! ஆனால் முதல் தபாவாக, ஒரே சாகஸத்தில் இருவர் இணைவதை 2021-ல் பார்த்திடவுள்ளீர்கள் ! மர்மங்களின் துப்பறிவாளர் அண்ணன் மார்ட்டினும், அமானுஷயங்களின் துப்பறிவாளர் டைலன் டாக்கும் ஒரே கரம் கோர்க்கவுள்ளனர் “உலகத்தின் கடைசி நாள்” சாகஸத்தின் உபயத்தில்! நல்ல நாளைக்கே இரு நாயகர்களும் சிண்டைப் பிய்த்துக் கொள்ளச் செய்வதில் நிபுணர்கள் ! இந்த அழகில் இவர்கள் இருவரும் "அண்ணா..தம்பி" என்று ஜோடி போட்டால் பூமி தாங்குமா ?" என்ற கேள்வி எழக்கூடும் என்பதாலோ, என்னவோ - தலைப்பு அவ்விதமாய் வைத்துள்ளேன் ! நமக்கு ரொம்பவே பரிச்சயமான இருவர் இப்படியொரு  ”வாசக நலக்கூட்டணி” அமைத்துள்ளார்களெனும் போது, அதனை ரசிக்கும் ஆர்வத்தை என்னால் அடக்கிட முடியவில்லை ! பிய்க்கவுள்ள சிண்டை ஒரேவாட்டி ; ஒரே இதழில் பிய்த்து விட்டால் வேலை சுலபமல்லவா ? And இதன் சித்திரத் தரமும் அசாத்தியம் என்ற போது மறுபேச்சின்றி ‘டிக்‘ அடித்தேன்! 

‘டிக்‘ என்றவுடன் தான் இன்னொரு ‘டிக்‘கும் நினைவுக்கு வருகிறார் ! நான் குறிப்பிட்ட முதல் டிக் – tick என்றால் ; இரண்டாவது டிக்கோ – Dick ! இது என்ன புதுக் கதை ? என்கிறீர்களா ? போனெலி 2018-ல் ஒரு புத்தம்புதுக் கதைவரிசையினை ; புத்தம்புதுத் தடத்தில் களமிறக்கினர் ! அப்போது உருவான ”Deadwood Dick“ எனும் புத்தம் புதிய வன்மேற்கு நாயகர் 2021-ல் தமிழ் பேசிடக் காத்திருக்கிறார் ! இவருமொரு வன்மேற்கு நாயகரே – ஆனால் with a difference ! அட… ஒவ்வொரு ஹீரோவுக்கும் தரும் பில்டப் தானே இது – என்ன புடலங்காய் difference ? என்று கேட்க நினைப்போர் நிச்சயம் இருப்பர் நம் மத்தியில் ! For starters – இவரொரு கறுப்பின இராணுவ வீரர் ! மாமூலாய் கௌபாய் கதைகளில் பட்லர் வேஷங்களையோ; ஆஜானுபாகுவான அடிமை வேஷங்களையோ போட்டுக் கொண்டு, பாவமாய்ச் சுற்றி வரும் தலைவிதி கறுப்பின நாயகருக்கு, இந்தத் தொடரினில் இராது ! தனிப்பட்ட சில சிக்கல்களிலிருந்து தப்பித்திடும் பொருட்டு இராணுவத்தில் சேரும் மனுஷன் அங்கே சந்தித்திடும் சவால்கள் ; யுத்தங்கள் ; வன்மேற்கின் அதகளங்களே “நரகத்திற்கு நடுவழியில்…" எனும் 4 பாக 200 பக்கத் தொகுப்பு ! இதன் செம highlight என்னவென்றால் மெய்யாலுமே அந்நாட்களில் “டெட்வுட் டிக்” வாழ்ந்திருக்கிறார் ! Nat Love என்ற ஒரிஜினல் பெயருடன் இருந்த கறுப்பினர், பின்நாட்களில் இராணுவத்தில் சேர்ந்து செம அதிரடிகளைச் செய்து “டெட்வுட் டிக்‘ என்ற பட்டப்பெயரை ஈட்டியிருக்கிறார் ! அவரது நிஜ வாழ்க்கையை பல நாவல்களில் சிலாகித்துள்ளனர் ! And நமது டெக்ஸ் எடிட்டரான மௌரோ போசெலியிடம் அது சிக்கிட, மொத்தம் 7 பாகங்கள் கொண்டதொரு மினி தொடரை உருவாக்கியுள்ளார் ! துவக்கத்து 4 பாகங்கள் ஒரு சுற்றாகவும்; பிந்தைய 3 இரண்டாம் சுற்றாகவும் அமைந்திட – 2021-ல் நாம் முதல் நான்கை ரசித்திடவுள்ளோம் ! So நான் குறிப்பிட்ட item # 2 இதுவே !

As always – போனெலி சந்தாவில் அதகளம் செய்திடவுள்ள நமது ‘தல‘ பற்றி இனி...!

- நேர்கோட்டுக் கதைகள் தான்…

- அடிக்கடி ஒரே பாணியிலான templates தான்…

- நிறையப் பில்டப்… நிறைய பன்ச் டயலாக்குள் உண்டு தான் !

- ஓங்கியடிச்சா ஒண்ணரை டன்னே தான் !

ஆனால்…ஆனால்…ஆண்களை மாத்திரமன்றி பெண்களையும் ; பெரியவர்களை மாத்திரமன்றி சிறியவர்களையும் மெய்மறக்கச் செய்யும் ஏதோவொரு மாயம் இந்த மனுஷனிடம் குடியிருப்பதை ஒவ்வொரு முறையும் பார்க்கத் தானே செய்கிறோம் ! ஞானப்பழத்தை வெற்றி கொள்ள லோகமெல்லாம் மயிலேறிப் பயணித்த ஆறுமுகத்தானைப் போல நமது இதர காமிக்ஸ் ஜானர்கள் குட்டிக்கரணம் ஒன்றைப் பாக்கி வைக்காது அடித்து விட்டு நிற்க, அம்மையப்பரை சிம்பிளாய் வலம் வந்து பழத்தைப் பெற்ற விநாயகரின் பாணியில் டெக்சோ நேர்கோட்டில் பயணித்து ஹிட்டடிக்கிறார் ! 2012-ல் நமது மறுவருகைக்குப் பின்பாய் ஏதேதோ சைஸ்களில் ; பக்க நீளங்களில்; விலைகளில் இதுவரையிலும் மொத்தம் 53 கதைகள் வெளிவந்துள்ளன டெக்ஸ் தொடரிலிருந்து ! And இன்று நம்மிடம் ஸ்டாக்கில் உள்ளதோ சுமார் 25 இதழ்கள் மட்டுமே ! ஒவ்வொரு புத்தக விழாவிலும் ஸ்கோர் செய்வதும் இவரே ; ஒவ்வொரு முகவரின் செல்லப் பிள்ளையும் இவரே எனும் போது - நாம் வாஞ்சையோடு இவரை இம்முறையும் அட்டவணையினுள் புகுத்திடுவதில் வியப்பு தான் ஏது ? வழக்கமான டபுள் ஆல்பங்களாய் கீழ்க்கண்ட 3 வரவுள்ளன :

- நெஞ்சே எழு…!

- கண்ணே கொலைமானே…!

- ஒரு பிரளயப் பயணம் !

And –‘தல‘ தனது இளம் பிராயத்தில் செய்த அதிரடிகள் 2021-ல் தொடர்கின்றன – 5 பாகங்களை ஒருங்கிணைத்து “திக்கெட்டும் பகைவர்கள்” வாயிலாக !  இளம் டெக்ஸின் தனித்தடம் இத்தாலியில் ரகளை செய்து வர, நாமும் அந்த ரயில்வண்டியில் ஒரு ஓரத்தில் தொற்றிக் கொள்ள முனைகிறோம் ! நடப்பாண்டினில் one of the most well received டெக்ஸ் கதையாய் "எதிரிகள் ஓராயிரம்" அமைந்திருப்பதால், இளையவரை நம் அட்டவணைகளில் இனி ரெகுலராக்கிடுவது காலத்தின் கட்டாயம் என்பேன் ! Young Tex - "எ.ஓ" ஆல்பம் வாயிலாக நாம் கவர் செய்தது சிங்கிள் ஆல்பம்ஸ் 1 to 4 . And இப்போதோ ஆல்பம்ஸ் 5 -9 என்ற அடுத்த ஐந்து ! இதன் ஆல்பம் # 10 மெபிஸ்டோவின் கதையோடு என்பதால் மாவீரரும், யுவாவும் 2022 வரைக் காத்திருக்க வேண்டிவரும் ! Sorry நண்பர்களே & better luck for sure next time ! 

அப்புறம் கறுப்பு-வெள்ளையிலேயே கலக்குபவருக்கு கலரைத் துணையாக்கினால், சும்மா எம்.ஜி.ஆர்.போல தகதகக்க மாட்டாரா - என்ன ? So தொடர்வது முழுவண்ணத்தில் The T & T ஸ்பெஷல் !! கலக்கலான டெக்ஸும் ; உடன்பிறவா டேஷாவும் - ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் பொக்கிஷம் தேடியொரு பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர் ! ரெகுலர் டெக்ஸ் சைஸிலேயே இந்த இதழ் கலரில் வெளிவருமென்பதால் கொத்துக்கறிலாம் வாங்க ஆள் அனுப்ப அவசியமிராதுங்கோ ! So இன்னொருக்கா அது குறித்து "Be careful"-ன்னு நேக்கு வார்ன் பண்ணிட டைப்படிக்கும் வேலை மிச்சமுங்ண்ணா உங்களுக்கு ! And வண்ணத்தில் ஜொலிக்கவுள்ள இந்த இதழும் 2021 தீபாவளிக்கு என்பதால், தல + தளபதி தீபாவளிக்கு வாய்ப்புகள் பிரகாசமோ-பிரகாசம் என்பேன் !!

‘தல‘ புராணம் இன்னமும் முடிந்தபாடில்லை – simply becos க்ளைமேக்ஸே இனித்தான் காத்துள்ளது ! God Willing, காத்திருக்கும் 2021 நமது முத்து காமிக்ஸிற்கும் சரி, லயனுக்கும் சரி, இரு massive மைல்கற்களைச் சுமந்து காத்துள்ளதொரு ஆண்டு  ! முத்துவின் # 450 மற்றும் லயனின் # 400 என்ற இந்த டவுள் தமாக்காவை ஒரிஜினலாய் ஜனவரி 2021-ன் சென்னைப் புத்தகவிழாவின் போது வூடு கட்டி அடிக்கத் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் கொரோனா தாண்டவத்தின் உபயத்தால் சகலமும் went for a toss ! தாமதமானாலும் மைல்கல்லைத் தொட்டுப் பிடிக்காது போக மாட்டோம் எனும் போது – அவற்றிற்கென ஸ்பெஷல் இதழ்களைத் திட்டமிட வேண்டுமல்லவா ? நமது காமிக்ஸ் உலக க்ளிண்ட் ஈஸ்ட்வுட் முத்துவின் இதழ் # 450-ஐ அலங்கரிக்க உள்ளார் எனில், ‘தல‘ டெக்ஸ் & முழு டீமும் லயனின் இதழ் # 400-ஐ கலக்கவுள்ளனர் – “புத்தம் புது பூமி வேண்டும் !” எனும் 384 பக்க முழுநீள – முழுவண்ண மெகா த்ரில்லர் வழியே ! And ஆகஸ்ட் 2021-ல் இந்த இதழ் வந்திட வேண்டும் – ஆண்டவன் மாற்றியமைக்கத் தீர்மானிக்காத பட்சத்தில் ! And maybe அதற்குள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த நுண்கிருமியை மனிதன் வென்றிடும் பட்சத்தில் – வாழ்க்கைகள் பழைய சகஜங்களுக்குத் திரும்பிடும் பட்சங்களில், ஈரோட்டின் V.O.C பார்க் சாலையை நாம் மறுக்கா தேய்த்தெடுத்து விடலாமோ ? Fingers massively crossed !

இதழ் # 9 ஆக அமைந்து இந்த சந்தா B-க்கு சுபம் போடக்காத்துள்ளவர் நமது CID ராபின் ! நம்மிடமுள்ள ஒரே அக்மார்க் டிடெக்டிவ்வை ஆண்டுக்கொருவாட்டி சந்திக்க இம்முறையும் வாய்ப்பு வழங்கிட எண்ணினேன் ! இங்கே போட்டியாய் நின்றோர் அக்கா ஜூலியா & அண்ணாத்தே டயபாலிக் தான் ! எனது பெர்சனல் சாய்ஸ் அக்கா தான் என்றாலும், கல்லாவுக்கும், அக்காக்கும் ஏழாம் பொருத்தமாய் இருப்பது தான் உறுத்தியது ! So ராபினோடு நிறைவுறுகிறது சந்தா B !! 

வழமை போல் - "இத்தினி மஞ்சசட்டைக்கார தாண்டவமா ?" என்ற வினவல்கள் இல்லாது போகாதென்பது புரிகிறது ! ஆனால் இன்றைய நிலவரத்தில் அவரது இடத்தினை ஆக்கிரமிக்க இன்னொரு தெறிக்கும் மாஸ் நாயகரைக் கண்ணில் கண்டாலொழிய விசில் போடுவது சந்தோஷமான காலத்தின் கட்டளை ! On an aside - அடுத்த பதிவினில் காத்துள்ள TEX தீபாவளி மலர் 2020 பற்றி எழுதிடவுள்ளேன் ! கடந்த 15 நாட்களை போனெல்லியின் ஆதர்ஷப் புத்திரனோடே செலவிட்டவன் என்ற வகையில் சொல்கிறேன் - இந்த மனுஷன் அத்தனை சீக்கிரத்தில் தனது சூப்பர் ஸ்டார் மகுடத்தைத் துறக்கப் போவதில்லை ! நீங்க பாயசம் கிண்டுங்கோ ; அல்வா கிண்டுங்கோ - ஆனால் அவற்றை உங்களுக்கே புகட்டிய கையோடு உங்களையுமே புன்னகைக்கச் செய்திடுவார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்களே லேது ! 'தல' - நேற்றும், இன்றும், நாளையும் உனதே !







 சந்தா C :

Moving ahead - எப்போதும் போலவே சந்தா C - கார்ட்டூன்களுக்கோசரம் ! And இரண்டு நிமிடங்களுக்கு மேல் எனக்கு எடுக்கவில்லை - அதன் அங்கத்தினரை லிஸ்ட் செய்திட ! லக்கியான லக்கி லூக் முதல்பெயராகிட, அடுத்து உட்ஸிட்டி  கோஷ்டி இடம் பிடித்திட, ப்ளூ கோட் பட்டாளம் ஸ்லாட் # 3 ஐ தங்களதாக்கிக் கொண்டனர் ! மேக் & ஜாக் பர பரவென ஸ்லாட் 4 -ல் குந்திக்க,  மீசைக்காரர் க்ளிப்டன் ஐந்தாவதாய்த் தேர்வாகிக் கொண்டார் ! மாறுவேஷ மன்னன் ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஷ்டிசன் (!!) இறுதி இடத்தை எடுத்துக் கொள்ள - "வேலை முடிஞ்சது...வாங்கப்பா..பொர்ட்டா சாப்பிடலாம் !" என்றபடிக்கே நடையைக் கட்டத்தான் தோன்றியது ! லக்கிக்கு இம்முறையும் ஆண்டுமலர்ப் பொறுப்புகள் என்பதைத் தீர்மானித்திருக்க - இயன்ற சிறு வித்தியாசத்தைக் கொணர முயன்றேன், லக்கியோடு  ரின் டின் கேன் ஞானசூன்யமும் இடம் பிடித்திடும் ஒரு சாகசத்தின் புண்ணியத்தில் ! (தேங்க்ஸ் அனு !!) ஜெயிலில் கிடைக்குமொரு கோடீஸ்வரன் மண்டையைப் போடும்முன் தனது சொத்து பத்துக்களையெல்லாம் நம்ம ரின் டின்னுக்கு எழுதி வைத்து விட, ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிப் போகிறது ரின்னி ! அன்னாருக்கு டால்டன்கள் வலை வீச, நமது ஒல்லியார் பாதுகாவலுக்குப் போக - இது போதாதா படைப்பாளிகள் ரவுண்டு கட்டியடித்திட ? லயன் ஜாலி ஆண்டு மலரில் ரின் டின் தான் ஹைலைட். (PFB சார் !! பசங்ககிட்டே இப்போவே சொல்லி வச்சிடுங்க !!) 

அப்புறம் சிக்  பில் & கோ.வின் சாகஸமானது இம்முறை 20 பக்கங்கள் கூடுதலானது ! So அவர்களுடன் ஒரு நெடும் பயணம் வெயிட்டிங் ! 

ப்ளூகோட்ஸ் & மேக் & ஜாக் தாமுண்டு, தம் வேலைகளுண்டு என்று கிட்டும் எல்லா வாய்ப்புகளிலும் பவுண்டரிகளைச் சாத்திடும் ஆட்டக்காரர்கள் என்பதால் எனக்கங்கு கதைத் தேர்வு +  தலைப்பிடல் மட்டுமே வேலையானது ! 

கேரட் மீசைக்கார Clifton நிலவரத்தில் அத்தனை சுளுவல்ல எனது பணி ! தொடரின் பிற்பகுதிக் கதைகள் ரொம்பவே மொக்கை என நமது பெல்ஜிய  அட்வைசர் சொல்லியுள்ளதால் - ஆரம்பத்துக் கதைகளுக்குள்ளேயே உருட்ட வேண்டிப்போகிறது !  நகைச்சுவை சற்றே தலைகாட்டும் ஆல்பங்கள் அங்கும் கொஞ்சமே எஞ்சியிருப்பதால் - தொடரும் ஆண்டுகளில் இந்த தாத்தாவை பார்க்கும் வாய்ப்புகள் அத்தனை பிரகாசமில்லை என்பேன் ! 

Ditto for ஹெர்லக் ஷோம்ஸ் ! ஒரேயொரு கதையோ என்னவோ மட்டுமே, இத்தொடரில் இன்னும் எஞ்சியிருப்பதால் - this  could very well be goodbye time !

So நடப்பாண்டைப் போலவே 6 கார்ட்டூன் இதழ்களோடு கடை சாத்தும் நிலவரம் தொடர்கிறது ! கார்ட்டூன் பிரியர்களுக்கு இது தொடர் ஏமாற்றமாய் இருந்திடுமென்பது புரிகிறது - moreso இம்முறை MAXI லயனில் லுக்கி லூக் மறுபதிப்புகள் வெளிவரும் வாய்ப்புகளும் பட்ஜெட்டின் காரணமாய்த் தள்ளிப் போவதால் ! ஆனால் ஆக்ஷனே சகலமும் எனக்கருதிடும் பெரும்பான்மைக்கு மத்தியில் நாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் கொஞ்சம் சவுண்டு மட்டுமே விட்டுக் கொள்ளலாம் எனும் போது - நீலப் பொடியர்கள் ; பென்னி ; மதியில்லா மந்திரி ; லியனார்டோ ; ரின்டின் கேன் போன்றோரெல்லாம்  வெளியில் நின்றபடிக்கே கையை ஆட்ட மட்டுமே செய்திடுவர் ! 2022-ல் நிலவரம் இன்னமும் கலவரமாகிடக்கூடும் என்பதே எனது தற்போதையக் கவலை ! உருப்படியாய் க்ளிப்டன் இருக்க மாட்டார் ; ஹெர்லக் ஷோம்ஸ் காலியாகியிருப்பார் எனும் போது - நான்கே சிரிப்புப் பார்ட்டிகளோடு குடித்தனம் செய்யும் நிலைமை  எழுந்து நிற்கும் ! Of course - 'புதுசாய் தேடுடா அம்பி !' என்று பரிந்துரைக்கலாம் தான் ; ஆனால் நிஜத்தைச் சொல்வதாயின்- கார்ட்டூன்களின்  இந்தத் தோற்கும் யுத்தத்தில் விடாப்பிடியாய்த் தலையை விட்டு, பின்னே விடாப்பிடியாய்ச் சாத்து வாங்குவது அலுத்து விட்டது ! So நாலே நாயகர்கள் எஞ்சியிருப்பினும் அவர்களோடு நிம்மதியாய் வண்டியை ஓட்டிடுவதே சாலச் சிறந்தது என்று படுகிறது ! புண்ணியத்துக்கு அந்த நால்வரின் தொடர்களிலும் கதைகளுக்குப் பஞ்சமே லேது ! So இந்த ஹ்யூமர் வறட்சி சார்ந்ததொரு   நெருடல் இம்முறையும் நெஞ்சில் நெருடிக் கொண்டிருக்க - வேறு வழியின்றி அடுத்த பிரிவிற்கு நகர்கிறேன் ! "பலத்த ஏமாற்றம் ; இதை நாங்க எதிர்பார்க்கலை !" என்ற ரீதியிலான சாத்துக்களை டைப்பிடிக்க விரல்கள் நமநமப்பின் - put them on hold too folks ! இந்த விஷயத்தில் நொந்தே போயிருக்கும் முதல் ஆசாமி  நான் தான்  ! 



  
சந்தா E :

C முடிந்து நேராய் E பக்கமாய் குதிக்கிறேன் folks - நடப்பாண்டின் இந்த (வெகுஜன) சந்தா D தொடர்ந்திடாது - என்ற அறிவிப்போடு ! நம் நேரமோ, என்னவோ ஆண்டின் மூன்றாவது நாற்பது ரூபாய் இதழோடு கடைகளுக்குச் சென்ற சற்றைக்கெல்லாம் கொரோனாவின் பெயரைச் சொல்லி, லாக்டௌன்; சேல்ஸ்டௌன் ; வசூல்டௌன் என்று ஏதேதோ நிகழ்ந்து போயின ! தவிர இளம் டெக்ஸ் கதைகளை சந்தா D-யில்   வெளியிட வகையின்றிப் போக, அதனிடத்தினில் எட்டிப் பார்த்த golden oldies நிறைய பேரைப் பேஸ்தடிக்கச் செய்ததே மிச்சம் ! இன்னமும் ஜனவரியில் போட்ட இந்த சந்தா D புக்ஸுக்கு வசூல் தொக்கி நிற்கும் சூழலில், காத்திருக்கும் 2021-ல் இந்தப் பரீட்சார்த்தம் தொடர்ந்திடாது ! ஒரு தூரத்துப் பொழுதில், சகலமும் நலமான பின்னே, இன்னும் வீரியமான கதைகளைத் தேடிப்பிடித்த கையோடு இது குறித்து திரும்பவும் யோசிப்போம் ! So இப்போதைக்கு ஒரு எழுத்தை விழுங்கிவிட்டு நகர்வோம் ஒரு (brief ) சந்தா E திக்கினில் ! 

Truth to tell - இங்கேயும் 6 இதழ்களையே நான் திட்டமிட்டிருந்தேன் & கதைகளையும் shortlist செய்திருந்தேன் ! ஆனால் பட்ஜெட் ஏறிக் கொண்டே செல்வது நெருடியது ! தவிர, இம்முறை மட்டுமேயாவது இருண்ட களங்கள் வேண்டாமே ; இயன்றமட்டிற்கு சற்றே நார்மலான வாசிப்புகளுக்கு முன்னுரிமை தருவோமே என்று பட்டது ! So நான் தேர்வு செய்திருந்த 3 கலர் ஆல்பங்கள் + 3 black & white ஆல்பங்களில் வண்ணங்களை மட்டுமே முன்னுரிமை தந்து பாக்கியினை வேறொரு வேளைக்கெனப் பின்தள்ளிடத் தீர்மானித்தேன் ! So இம்முறை கி.நா.சந்தா நம்ம தலீவரின் புஷ்டியோடு மட்டுமே இருந்திடும் ! 

துவக்கம் தரவிருப்பது கூட தலீவரின் ஒடிசலும், எனது முன்மண்டையும் கலந்த ஜாடையில் இருக்குமொரு புதுவரவே ! And இவரும் ஒரு வெட்டியான் தான் ! ஏற்கனவே நமக்குத் பரிச்சயமான UNDERTAKER தாட்டியமான சீரியஸ் நாயகரெனில், இப்போது நாம் சந்திக்கவுள்ள STERN ஒரு studious டைப் ! செய்வது வெட்டியான் வேலையெனினும், மனுஷனுக்கு புத்தக வாசிப்பு மீது ஆர்வம் ஜாஸ்தி ; உலக ஞானம் உண்டு ; துப்பறிதலில் ஈர்ப்பு உண்டு ! And கதை நிகழ்வதும், நமக்கு உசிலம்பட்டி-வாடிப்பட்டி ரேஞ்சுக்குப் பரிச்சயமாகி நிற்கும் வன்மேற்கில் எனும்போது இந்தப் புது நாயகரை நம் அணிவகுப்பினுள் புகுத்துவதில் எனக்குத் தயக்கங்கள் இருக்கவில்லை ! இன்னும் சொல்லப்போனால் 2020-ன் அட்டவணையிலேயே இடம்பிடித்திருக்க வேண்டியவர் இவர் ; கடைசி நேரத்தில் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு வெயிட்டிங் லிஸ்டுக்கு நகர்த்தியிருந்தேன் ! இந்தத் தொடரில் இதுவரைக்கும் நான்கே ஆல்பங்கள் தான் உள்ளன என்றாலும், தொடர் பெற்றிருக்கும் அழகான வரவேற்பில் காரணமாய் இது நீந்திடும் என்றே தோன்றுகிறது ! எனக்கோ இந்தக் கதையின் template மட்டுமன்றி, இதன் செம breezy சித்திர பாணியும் ரொம்பவே பிடித்திருந்தது ! So let's say hello to :  "வழியனுப்ப வந்தவன்" - ஒரு  டிடெக்டிவ் வெட்டியான் / வெட்டியான் டிடெக்டிவ் ! முழுவண்ணத்தில் !

 கி.நா.# 2 ரொம்பவே வித்தியாசமான ஆக்கம் ! இதைப் பற்றி ரொம்பவே பில்டப் தரப்போவதில்லை நான் - simply becos "இதுவா இருக்குமோ ? அதுவா இருக்குமோ ? இப்டி இருக்குமோ ?" என்ற உங்கள் அலசல்களுக்கும் கொஞ்சம் space தேவைப்படலாமில்லையா ? "நிலவொளியில் நரபலி" வந்த அதே compact சைசில், முழுவண்ணத்தில், செம வித்தியாசமான கதையோட்டத்தோடும், சித்திர பாணியோடும் வெளிவரவுள்ள இந்த ஆல்பம் நிச்சயமாய் ரொம்ப different கி.நா. என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன் ! 

And # 3 தான் புது அட்டவணையிலேயே நான் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ஆல்பம் ! இதுவரைக்கும் நாம் ஏகப்பட்ட ஹீரோக்களை சந்தித்திருப்போம் ! மிடுக்கான ஜேம்ஸ் பாண்ட் ; ஆணழகன் லார்கோ ; மீசைக்கார ஷெல்டன் ; கம்பீரமான டெக்ஸ் ; ஸ்டைலான ரிப்போர்ட்டர் ஜானி ; rugged கேப்டன் டைகர் ; mysterious XIII என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் தானே ? ஆனால் இதுவரையிலும் இப்படியொரு ஹீரோ கூட்டணியை நாம் கற்பனையிலும் உருவகப்படுத்தியிருக்க மாட்டோம் என்பேன் ! Because "பெருசுகள் பட்டாளம்" என்ற அடையாளத்தோடு கைத்தாங்கலாய்க் களமிறங்கும் இந்த மூவரணி - 'இன்னிக்கு செத்தால் இப்போவே பால்' என்ற அகவைகளில் உள்ளோர் ! வாழ்க்கையின் அந்திப் பொழுதைத் தொட்டு நிற்கும் இந்த தாத்தாஸ் அத்தினி பேருக்கும் பல் போயிருந்தாலும், குசும்போ ; லந்தோ ; லூட்டிகளோ விடைதந்திருக்கவில்லை ! இவர்கள் தாத்தாஸ் அல்ல ; ஜாலிலோ ஜிம்கானா தாதாஸ் ! இவர்களை பற்றிப் போனவருஷத்தின் ஏதோவொரு தருணத்தில் இங்கே எழுதியிருந்தேன் என்பது லேசாக நினைவுள்ளது ! இம்முறை அவர்களைக் கண்ணில் காட்டியே தீர வேணுமென்றே முனைப்பில் "அந்தியும் அழகே" ஆல்பத்தினைத் திட்டமிட்டுள்ளேன் - முழு வண்ணத்தில் ! இவர்களது தொடரினில் ஓரளவுக்கு கதைகள் உள்ளன என்பதால் தாதாக்களை நீங்கள் வாஞ்சையோடு ஏற்றுக்கொள்ளும் பட்சங்களில் - லூட்டிகள் தொடர்கதையாகிடும் ! So ஏதோ பாத்துப் பண்ணுங்க யூத்ஸ் ! 

Thus ends the brief சந்தா E & effectively our regular சந்தா பிரிவுகள் !


 AND THEN - JUMBO>>>>

ஜம்போவின் அடுத்த சீசனைப் பற்றி இப்போவே விளம்பரம் செய்வதா ? அல்லது பிப்ரவரி / மார்ச்சில் பார்த்துக் கொள்வதா ? என்ற கேள்வியோடு நிறையவே மல்லுக்கட்டினேன் ! விளம்பரத்தை மட்டும் இப்போதே செய்திடலாம் - உங்கள் தொகைகளை இப்போதோ ; அப்போதோ அனுப்பிக்கொள்ளும் வசதிகளோடு - என்று இறுதியில் தீர்மானித்தேன் - for 3 reasons : 

Reason # 1 : நம்மில் இன்னமும் பாதிக்கு மேலான நண்பர்கள் இந்த வலைப்பக்கங்களை எல்லாம் கண்டுக்குவதில்லை என்பதே யதார்த்தம் ! வந்துச்சா புக்கு ? - படிச்சோமா ? - போய்க்கிட்டே இருந்தோமா ? என்றிருக்கும் அந்த அணியினரின் பார்வைகளில் நாம் நடுவாக்கில் செய்திடும் திட்டமிடல்கள் ; அறிவிக்கும் இதழ்களெல்லாம் போய்ச் சேர்வதில்லை ! 'நான் தான் எல்லாச் சந்தாக்களையும் கட்டிப்புட்டேன்லே ; எனக்கு "பிரிவோம்-சந்திப்போம்' ஏன் வரலை ? Zaroff ஏன் வரலை ? என்று கண்சிவப்போர் ஏராளம் ! அவர்களிடம் "இது ஜம்போ புக்ஸ் சீசன் 2 ..3 ..இதுக்கு நீங்க இன்னமும் சந்தா கட்டலீங்கோ !" என்பதை புரிய வைப்பதற்குள் நம்மவர்கள் வாங்கிடும் ஏய்ச்சுக்கள் ஒருவண்டி ! So அட்டவணையிலேயே ஜம்போவையும் highlight செய்துவிட்டால் எங்கள் மட்டிற்கு நோவுகள் கொஞ்சம் குறைச்சல் என்று நினைத்தேன் ! 

Reason # 2 : நடப்பாண்டினில் ஒரு ஓசையில்லா அதிசயம் நிகழ்ந்துள்ளது - ரெகுலர் சந்தாக்களை ஜம்போ ஓவர்டேக் செய்திடும் பாணிகளில் ! நவம்பரில் ஜம்போ சீசன் # 3 -ன் ஐந்தாவது இதழ் வெளிவரவுள்ளது & இதழ் # 6 ஆன Lone ரேஞ்சர் டிசம்பரில் களம் காண்கிறார் ! So ஜம்போவின் சீசன் 3 இம்முறை சர சரவென பூர்த்தி கண்டிடவுள்ளதால் - அடுத்த சீஸனின் அறிவிப்பினில் எனக்கு நெருடவில்லை ! 

Reason # 3 : இது எடிட்டர் குல்லாயோடு இல்லாது, ஒரு வாசகத் தலைப்பாகையோடு எடுக்கப்பட்ட தீர்மானம் ! என்ன தான் இது 9 மாதத்துக்கான அட்டவணையே என்பது தெரிந்தாலும் ; என்ன தான் கொரோனாவின் காரணமாய் ஓவர் அலம்பல் சாத்தியமல்ல என்று தெரிந்தாலுமே - மொத்தம் 27 புக்ஸ் மாத்திரமே கொண்ட அட்டவணை சற்றே 'பொசுக்' பீலிங்கை தரக்கூடும் என்று தோன்றியது ! ஒரு அட்டவணை தான் காத்திருக்கும் புதுப் பொழுதுகளின் நுழைவாயில் எனும் போது இங்கே உங்களுக்குக் கிட்டிட வேண்டிய மனநிறைவு ஏதேனுமொரு காரணத்தினால் குன்றிடும் பட்சத்தில் - அது நெருடிடக்கூடும் என்பது எனது எண்ணம். So மூன்று மாதங்களுக்கு அப்பாலிக்கா செய்திட வேண்டிய அறிவிப்புகளையும் இப்போதே இணைத்திடும் பட்சத்தினில் - செயலரின் புஷ்டி இக்கட சாத்தியமாகிடுமென்று பட்டது ! 

And before we get into the books - let me make it very clear folks : 

ஜம்போ சீசன் 4-ன் சந்தாத் தொகைகளை நீங்கள் பிப்ரவரி / மார்ச்சில் கூட அனுப்பிடலாம். அதனையும் இந்த நொடியே உங்களிடம் வசூலிக்கும் முனைப்பு சத்தியமாய் கிடையாது எங்களுக்கு ! இந்த விளம்பரங்கள் அடுத்த சீசனைப் பற்றியதொரு தகவல் பலகையைப் போன்றதே ! So "லோன் போட Lone  ரேஞ்சர் கிட்டே கேட்கலாமா ? இல்லாங்காட்டி சொத்தை அடமானம் வைக்கலாமா பங்காளி ?" என்ற ஆழ்சிந்தனைப் பரிமாற்றங்கள் ஆங்காங்கே அவசியமாகிடாது ! 

ஜம்போவில் வழக்கம் போலவே 6 இதழ்கள் தான் ! And வழக்கம் போலவே அவற்றுள் 4 இதழ்களின் அறிவிப்பு இப்போதே இருந்திடும் & பாக்கி 2 உரிய வேளையினில் ! கொஞ்சமாய் அந்த வெற்றிடம் இருக்கும் பட்சத்தில் - எனக்குக் கடைசி நிமிடச் சேர்த்தல்கள் / கல்தாக்கள் சாத்தியப்படும் என்பதால் அந்த பாணியைத் தொடர்ந்திடவுள்ளேன் !  

We start with : "ஒரு தலைவனின் கதை !

ஆல்பம் #  1 : வன்மேற்கினில் குடியிருக்காத குறையாக மாதா மாதம் யாரேனும் ஒரு நாயகரோடு அந்தப் பக்கமாய் உலாற்றித் திரியும் நமக்கு - எப்போதேனும் ஒருவாட்டி - அதே வன்மேற்கின் சாயம்பூசப்படா நிஜங்களின் அறிமுகம் இருத்தல் நலமென்று தோன்றியது ! ஜெரோனிமோ என்ற செவ்விந்தியப் பெருந்தலை சார்ந்ததொரு படைப்பு (நமக்குப்) புதியதொரு பிரெஞ்சுப் பதிப்பகம் வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது ! 2016-ல் பிராங்கபர்ட் புத்தக விழாவினில் அவர்களை சந்தித்திருக்க, அப்போது வாங்கிய பல்பை தூர வீசி விட்டு, மறுக்கா முயற்சித்தோம் ! அவர்களுமே நமது ஆர்வங்களுக்கு இம்முறை அன்புடன் செவி சாய்த்திட -  தமிழ் பேச வருகிறார் ஜெரோனிமோ ! மூச்சிரைக்கச் செய்யும் சித்திரங்களும் வண்ணச்சேர்க்கையும் இந்த ஆல்பத்தை கண்களுக்கொரு விருந்தாக்கிடவுள்ளது highlight என்பேன் ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST  !!

ஆல்பம் # 2 நமக்கு ஏற்கனவே பழக்கமான திடகாத்திர தாடிவாலாவே ! And ஒரிஜினல் வெட்டியானும் இவரே ! Yes - அண்டர்டேக்கரின் புது ஆல்பங்கள் 5 +6 கொண்ட தொகுப்பானது ஜம்போவினில் வரவுள்ளன ! சொல்லப்போனால்  ஆல்பம் # 6 தற்சமயம் பிரெஞ்சினில் இன்னும் வெளியாகவில்லை தான் ! ஆனால் காத்திருக்கும் நவம்பர் 27 -ல் பாகம் 6 உறுதியாய் வெளியாகிடவுள்ளதால் நமக்கு இதன் பொருட்டு no problems ! இம்முறையும் அண்டர்டேக்கர் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவதால் "ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்" ஜம்போவின் ஹிட்லிஸ்டுக்கு உரம் சேர்க்குமென்று நம்பிடலாம் ! Fingers crossed !  

ஆல்பம் #3 - வழக்கம் போலவே ஒரு மாறுபட்ட one-shot ! இம்முறையோ அதுவொரு க்ரைம் த்ரில்லர் & yet another album  from French ! இப்போதைக்கு இந்த அறிமுகமே போதுமென்பதால் - "சித்திரமும் கொலைப்பழக்கம்" வெளிவந்திடும் நேரத்தினில் மீதத்தைத் தெரிந்து கொள்ளலாம் ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST  !!

ஆல்பம் # 4 : மீண்டுமொரு க்ரைம் த்ரில்லர் & மீண்டுமொரு one -shot & மீண்டுமொரு பிரெஞ்சு ஆக்கம் ! ஆனால் இம்முறை அது black & white + grey shades -ல் உருவாக்கப்பட்டதொரு படைப்பு என்பதால் பக்கத்துக்குப் பக்கம் ஓவியரின் ஜாலங்கள் கண்ணைக் கட்டுகிறது ! கதையோ மிரட்டலானதொரு கொலையாளியைத் தேடிடும் whodunit ! "வைகறைக் கொலைகள்" எதுமாதிரியும் இருக்காப் புது மாதிரி ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST !!

ஆல்பம் # 5 & 6 : என்னளவிற்கு தேர்வுகள் நிறைவுற்று, கதைகளும் ரெடியே ! ஆனால் திடுதிடுப்பென ஏதாச்சும் புதுசாய்க் கண்ணில்படும் பட்சத்தில் அதனை உட்புகுத்த இந்த அறிவித்திடா slots உதவிடும் என்பதால் இப்போதைக்கு 5 & 6 will stay under wraps !!



ஆக ஆண்டவன் அருளோடு காத்திருக்கும் 2021-ல்  நாம் குப்பை கொட்டவுள்ளது இந்த 27 + 6 இதழ்களோடு தான் ! நிச்சயமாய் இவற்றின் தேர்வுகளில் இம்முறை பெரிதாய் சர்ச்சைகள் இராதென்பதே எனது நம்பிக்கை - becos இருக்கும் முக்கிய நாயக / நாயகியர் சகலரையும் ஏதோ ஒரு இண்டிலோ, இடுக்கிலோ இணைக்க முற்பட்டுள்ளேன் ! அதே போல அரைத்த மாவை, அரைத்த அதே ஆசாமிகளோடு அரைத்திடாது, கொஞ்சமே கொஞ்சமாய்ப் புது வரவுகளை கண்ணில்க்காட்டவுமே முயற்சித்துள்ளேன் ! So இருக்கும் நமது வரையறைகளுக்குள் இயன்றதை, எனக்குத் தெரிந்த மட்டிற்கு நிறைவேற்றிடச் செய்திருக்கும் honest முயற்சி இது ! இனி இவற்றை அலசுவதும், ஆராய்வதும், சிலாகிப்பதும், சாத்துவதும் உங்களின் பொறுப்புங்க மக்களே ! 

கிளம்பும் முன்பாய் கொஞ்சமே கொஞ்சமாய் கேள்வி-பதில்களையும் சம்பிரதாயப்படியே செய்து முடித்துவிட்டால் ஆங்காங்கே கீ-பேட்கள் நசுங்கிடும் அவசியங்கள் இராதல்லவா ? So here goes :

  1. "சிக்கனம்...சுக்கா ரொட்டி " என்ற கோஷங்கள் காதிலே விழுந்துச்சே ; அப்பாலிக்காவும் மூவாயிரத்து எண்ணூருக்குச் சந்தாவாப்பா தம்பி ?

    Much as I wanted to keep the final number low - லயனின் இதழ் # 400 & முத்துவின் இதழ் # 450 எனும் மைல்கற்களை ஏனோ-தானோவெனத் தாண்டிச் செல்ல எனக்கு மனதில்லை ! So இந்த 2 இதழ்களுக்குமெனத் திட்டமிட்டிருக்கும் இதழ்கள் மட்டுமே பட்ஜெட்டில் ரூ.800-ஐ கோரிவிட்டுள்ளன ! இவற்றின் இடங்களில் ரெகுலர் இதழ்களே இடம் பிடித்திருப்பின் - நிச்சயமாய் மொத்தத் தொகை மூவாயிரத்தின் அருகிலேயே தான் இருந்திருக்கும் ! Again - விற்பனைகளின் கோணத்திலிருந்து பார்ப்பதாயின் - நமது ட்யுராங்கோ கையிருப்பு வெறும் இரண்டு இதழ்களே & டெக்சின் வண்ண இதழ் கையிருப்புமே இரண்டே தான் ! So கெலிக்கும் குதிரைகளை லாயத்திலேயே அடைத்து வைக்க வேண்டாமே என்ற அவாவில் எனது சந்தா வரையறையை அதிகமாக்கிட வேண்டிப் போய் விட்டது ! டெக்சின் ஐநூறு ரூபாய் இதழினை "முன்பதிவுகளுக்கு மட்டும்" என்று திட்டமிடும் எண்ணமும் லேசாய்த் தலைதூக்கியது தான் - ஆனால் ஒரு மாஸ் நாயகருடனான மைல்கல் இதழினை எல்லோருக்கும் சென்றடையும் விதமாய்த் திட்டமிடுவதே உத்தமம் என்று நினைத்தேன் ! 
  2. இரண்டே சந்தாப் பிரிவுகள் என்று சொன்னியே ; இப்போ 4 இருக்கே ?

    இங்கேயும் எனது வைராக்கியம், பிரசவகாலத்து வைராக்கியம் போலவே அமைந்துவிட்டது ! 'என்ன குட்டிக்கரணம் போட்டாலும் கார்ட்டூன்ஸ் ருசிக்காது / ரசிக்காது' என்போரும், 'என்ன ஜாலங்கள் செய்தாலும் கி.நா.க்கள் அறவே ஆகாது' என்போரும் நம்மிடையே இருக்கையில் நான் இரண்டே சந்தாக்களை மட்டுமே அறிவிப்பதாயின் - நாமே அவர்களை சந்தாவினில் தொடர்வதைச் சிக்கலாக்கியது போலிருக்கும் என்றுபட்டது ! So இம்முறை மூன்றே சந்தா ரகங்கள் இருக்கும் :

    சந்தா Falooda - A + B + C + E என நாலு பிரிவுகளும் !!
    சந்தா Vanila - கி.நா.க்கள் இல்லாத சந்தாக்கள் - A + B + C
    சந்தா Chocolate - கார்ட்டூன்ஸ் இல்லாத சந்தாக்கள் - A + B + E


    மேற்படி மூன்றுக்குமான அந்த லோகோக்களின் டிசைன் ஜூனியர் எடிட்டரின் உபயம் !! பார்த்தாலே நாவிலே ஜலம் ஊரும்  ஏதேனுமொன்றைத் தேர்வு செய்திடும் பொறுப்பு உங்களிடம் folks !! இந்த ஐஸ் க்ரீம்களில் எதுவுமே ஜல்ப்புப் பிடிக்கச் செய்திடாது என்பதால் தகிரியமாய் போட்டுத் தாக்கலாம் !



  3. இரத்தப் படலம் மறுக்கா மறுக்கா மறுக்கா பதிப்பு பற்றி ?

    முன்பதிவுகளின் எண்ணிக்கை இந்தப் பதிவினை நான் டைப் செய்திடும் வெள்ளி மாலை வரையிலும் 141-ல் நின்றது ! இன்றைக்கு மதியத்துக்குள்ளோ அவசரம் அவசரமாய் இன்னொரு 9 முன்பதிவுகள் - so தற்போதைய டோட்டல் 150-ல் கச்சிதமாய் நிற்கிறது ! நாம் அறிவித்திருந்த அக்டோபர் 31 காலக்கெடு இன்றோடு நிறைவுறுவதால் கிட்டத்தட்ட நாலரை மாதங்களின் அவகாசத்தினில் சாத்தியமாகியுள்ள நம்பர் இதுவே என்றாகிறது ! இன்னமும் இதே அளவுத் தொலைவினை மேற்கொண்டும் கடந்தாலொழிய இந்த project கரைசேர்வது துர்லபம் ! துவக்கத்தில் சஞ்சு சேம்சனின் வேகம் பிடித்து ; அப்புறமாய் கேதார்  ஜாதவின் மந்தம் கண்ட இந்த முன்பதிவுகள், கடைசி நாள் நெருங்க நெருங்க, மறுக்கா ஜோஸ் பட்லரின் ஆட்ட பாணிக்கு மாறியுள்ளது நிஜம் தான் ! So இன்று புதுச் சந்தா சார்ந்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நமது முழு focus இதன் மீதே இருந்திடும் / இருந்திட வேண்டும் ! So முதற்காரியமாய் இரத்தப் படலம் ஆன்லைன் லிஸ்டிங்கள் அனைத்தையும் (தாற்காலிகமாகவாவது) தூக்கிடச் சொல்லியுள்ளேன் ! ஏப்ரல் 2021-ல் நமது ரெகுலர் சந்தாக்களின் இன்னிங்ஸ் துவக்கம் கண்டான பின்பாய் சரியாக 60 நாட்கள் அவகாசம் மாத்திரமே தந்து மே 31 வரையிலும் மேற்கொண்டு முன்பதிவுகளுக்கு அவகாசம் தந்திடவுள்ளோம் - as promised already ! And முன்பதிவு நம்பர் 250-ஐத் தொடும் கணமே நாங்கள் அச்சுப் பணிகளைத் துவங்கிடுவோம் ! So 'இது ஹேஷ்யமான project அல்ல ; மெய்யாலுமே வெளிவந்திடும்' என்ற ஊர்ஜிதம் கிட்டிடும் சமயத்தில், விளிம்பில் நின்று சிந்திக்கும் நண்பர்கள் ஆர்வம் காட்டுவார்களென்ற நம்பிக்கையுள்ளது !   Maybe 250 பக்கமாய் முன்பதிவுகள் பயணிக்கவேயில்லை  ; இலக்கு எட்டாக்கனியாகவே தொடர்கிறதெனில், மொத்தத் திட்டமிடலுக்குமே டாட்டா காட்டுவதே நமக்கிருக்கும் வழியாகிடும் !

    In the meantime - இதுவரையிலும் முன்பதிவு செய்துள்ளோரில் யாருக்கேனும் வாபஸ் வாங்கி கொள்ளும் ஆர்வமிருப்பின், ஒரேயொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் போதும் - உங்களின் முன்பதிவுத் தொகைகள் உங்களிடம் மறு நாளே இருந்திடும் ! தம்படிக் காசைக் கூட அதனிலிருந்து செலவிடவில்லை என்பதால் refunds are possible now ! (ப்ராஜெக்ட் துவக்கம் கண்டான பின்னே refund கோரினீர்களெனில்  , அதற்கு வாய்ப்பிராதுங்கோ !)

    லாக்டௌனின் உச்சத்தினில், பதட்டத்தில், நானாய் வலியப் போய் தேடி அமர்ந்து கொண்ட இந்த ஆப்பிலிருந்து வெளியேற எனக்கு வேறு வழிகள் தெரியில்லா ! Maybe if someone has a better option - கேட்டுக்கொள்ளத் தயாராகயிருப்பேன் !  But இப்போது நான் அறிவித்துள்ளதே இந்த நொடியின் எனது நிலைப்பாடு !
  4. இந்தாப்பா - இரத்தப் படல spin-off கிடையாதுன்னா பூமி குப்பறடிக்கா சுழலுமே - பரால்லியா ?

    Spin-off இல்லாத spinning world-ல் எதையாச்சும் பிடிச்சுக், கிடிச்சு சமாளிச்சுப்பேன் ! இத்தொடரினில் - ஆங்கிலத்தில் நானே படித்துப் புரிந்துகொள்ளும்படியாய் தெளிவான ஆல்பங்கள் என்றைக்கு வெளியாகின்றனவோ அன்றைக்கே நான் படித்து, ஒரு தீர்மானத்துக்கு வந்த பிற்பாடு மேற்கொண்டு யோசிக்கலாம் என்று உத்தேசித்துள்ளேன் ! So அதுவரையிலும் offspin ; legspin என்பதோடு வண்டியை ஒட்டிட நினைக்கிறேன் ! 
  5. MAXI லயன் ; வாண்டு ஸ்பெஷல் ??

    ஏற்கனவே இவை குறித்துப் பேசி விட்டோம் என்பதால் no more reruns ! கொரோனா இல்லா உலகம் சாத்தியமாகி, நார்மலான நாட்கள் புலர்ந்திடின், நமது ஆன்லைன் புத்தக விழாக்களோ ; வழக்கமான புத்தக விழாக்களோ மறுதுவக்கம் கண்டிட்டால் - MAXI ஆஜராகிடும் !
  6. ஈரோட்டுக்கு ????

    மறப்போமா ? பதிலுக்குப் பத்தி பத்தியாய் டைப்படிப்பதற்குப் பதிலாய் - இதோ பதில் !! 

  7. விலைலாம் கூடியிருக்கே..இன்னா மேட்டரு ?

    நிலவரம் என்னவென்பதும், விற்பனைகளின் சுணக்கங்களின் பரிமாணம் என்னவென்பதும் ஊருக்கே தெரியும் எனும் போது, இதுவொரு தவிர்க்க இயலாத தீர்மானமாகிறது ! மொத்தச் சந்தாவினில் நாம் செய்திருக்கும் விலையேற்றம் பிரதிபலிப்பது ரூ.160 என்ற மட்டிற்கே ! So இதை நியாயப்படுத்துகிறேன் பேர்வழி என நான் ஒரு பாட்டம் பாட்டுப் படிப்பதும், அதனையும் பொதுவெளியில் போட்டு துவைத்துத் தொங்கப்போடுவதும்,  நிச்சயமாய் யாருக்கும் பயன் தரப் போவதில்லை ! வியாபாரம் சார்ந்த முடிவுகள் இனி என்னோடே துவங்கி, என்னோடே முடிந்தும் விடும் சமாச்சாரங்களாகவே இருந்துவிட்டுப் போக அனுமதி கோருகிறேன் guys ! 
    ##############################################################################
    Phew !!!!! நிறைவாகவோ, சுமாராகவோ - ஆண்டின் எனது பிரதானப் பணிகளுள் ஒன்றை நிறைவு செய்திட்ட திருப்தியுடன் கிளம்பிட முனைகிறேன் guys ! இது தான் தற்போதைய best என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ள மாட்டேன் - simply becos ரசனைகளெனும் வானவில்லனில் யார் - எங்கே நிலைகொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்தே இது ரசிக்கவோ - கடிக்கவோ செய்திடும் என்பதில் ஏது ரகசியங்கள் ? So எனக்குச் சாத்தியப்பட்ட பெஸ்ட்டை ; உங்களின் அண்மைகளோடு களமிறக்கிட ஆண்டவன் yet another வாய்ப்பினை நல்கிடுவார் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து இப்போதைக்கு விடைபெற்றிடுகிறேன் !

    Uh oh....இன்னொரு விஷயம் ; ரெம்போ முக்கிய விஷயம் பாக்கியுள்ளதே !! அதனைச் சொல்லிடாது எங்கே நான் கிளம்புவது ?

    நமது சிறுவட்டத்தினுள் பெரும்சிந்தனை கொண்டோருக்குப் பஞ்சமே கிடையாதென்பது நமக்குத் தெரிந்ததே  ! நட்புக்களுக்குக் கரம்நீட்டுவது ; அவசியங்களுக்கு உதவிடுவது ; நமது இக்கட்டுகளில் தோள் கொடுக்க முனைவது ; சந்தா செலுத்தச் சிரமம் காணும் நண்பர்களுக்கு இயன்றமட்டிலும் ஒத்தாசை செய்வதென அந்தப் பரோபகாரப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது ! அதன் yet another அத்தியாயம் போன வாரம் நான் குறிப்பிட்டதொரு மின்னஞ்சல் மார்க்கமாய் :

    "நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம்  அனுப்பிட விழைகிறேன் !  அதனை சந்தாவினில்  ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !"

    மேற்படியே அந்த மின்னஞ்சலின் சாராம்சம் !

    குத்துமதிப்பாய் சுமார் 500 சந்தா நண்பர்கள் 2021-க்குக் கிட்டிடும் பட்சத்தில், அவர்கட்கு தலா ரூ.200 discount எடுத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கும் ! அல்லது ரூ.200 பெறுமானமுள்ள ஏதேனும் அழகான புக்கை நண்பரின் அன்புடன் நாம் தயாரித்து வழங்கிடும் வாய்ப்புமிருக்கும் ! Honestly ஸ்தம்பிக்கச் செய்துள்ளது நண்பரின் இந்த மின்னஞ்சல் & கடந்த ஒரு வாரத்தில் தீபாவளி மலர் சார்ந்த பணிகள் கழற்றிய பெண்டின் மத்தியினில் இது குறித்து சிந்திக்க நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ள இயலவில்லை ! But வெள்ளியிரவு இது பற்றி யோசிக்க முயற்சித்த போது - இரண்டு option களையுமே நடைமுறைப்படுத்தினால் தப்பில்லை என்றே பட்டது !

    So சந்தா Falooda-வுக்கு 'ஜே' போடும் நண்பர்களுக்கு ரூ.200 திருப்பி வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு இருந்திடும். You'll have to send us the full amounts & we will send Rs.200 back to you - once enrolment is completed & we are sure of the actual numbers ! (அவ்விதம் செய்யாவிடின் சந்தா ஆன்லைன் லிஸ்டிங்கில் ஒரு நூறு குழப்பங்கள் நேர்ந்து விடும் !! )

    Discount வேண்டாமென எண்ணிடும் சந்தா நண்பர்கள் , கீழ்க்கண்டஇதழினை  விலையின்றி April 2021-ல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இருந்திடும் ! Again just for Falooda சந்தா  !!

    TEX - கழுகு வேட்டை  - முழு வண்ணத்தில் - ரெகுலர் சைசில் -  ஹார்ட்கவர் !!
  8. And சந்தாவில் இல்லாத நண்பர்கள் இந்த கிளாசிக் மறுபதிப்பினை , அதன் அசல் cover price ரூ.250-க்கு 2021-ன் முதல் புத்தக விழாவின் வேளையில் (கோவை ? ஈரோடு ? மதுரை ?) வாங்கிடும் வாய்ப்பிருக்கும் !

    So சந்தா எக்ஸ்பிரஸின் கோச் விபரங்களும் உங்கள் முன்னே ; டிக்கெட் கட்டணங்களையும் அறிவித்தாச்சு &  இதோ வழியில் கொறிக்க பரோபகார நண்பரின் snacks கூட ரெடி ! பயண முஸ்தீபுகளில் நாங்கள் வருஷம் முழுக்க கச்சை கட்டிக்கொண்டே தயாராய் இருப்பதால் - நீங்கள் கரம் கோர்க்க வேண்டியது மட்டுமே பாக்கி folks ! As always இந்தப் பயணம் உங்கள் அனைவரின் துணையின்றி முழுமையடையாது என்பதால் - ஆர்வமாய்க் காத்திருப்போம் ! ஆண்டவன் அருளோடு ஒரு சந்தோஷப்பயணம் வாய்த்திட வேண்டியபடிக்கே இப்போதே நடையைக் கட்டுகிறேன் !

    Thank you for reading this & thank you for being the wonderful people you are !! Bye for now ! மீண்டும் சந்திப்போம் !

    And  ஆன்லைன் listings தயார் : https://lioncomics.in/product/falooda-subscription-2021-april-to-december-abce-other-state/