Saturday, November 17, 2018

மார்க் போடும் நேரமிது !

நண்பர்களே,

வணக்கம். தீபாவளியின் பட்டாசுச் சத்தங்கள் கேட்டது போன வாரம் தான் எனினும், கஜா புயல் ; சர்கார் புயல் என்று ஏதேதோ அரங்கேறி - தீபாவளி நினைவுகளை தூரத்துக்குத் தள்ளிச் சென்றுவிட்டது போல்படுகிறது ! தினமொரு தலைப்புச் செய்தி என்று நாட்கள் பரபரப்பாய் ஓடும் இத்தருணத்தில் , நவம்பரின் புத்தகங்களை நினைவில் இருத்திடுவது அத்தனை சுலபமா - என்ன ? ஜேம்ஸ் பாண்டின் மிரட்டலான அறிமுகமும்  சரி ; டைகர் ஜாக்கின் ஊழித்தாண்டவமும் சரி ; நீல பொடியர்களின் கலாட்டாக்களும் சரி - எப்போதோ ஒரு யுகத்தின் நிகழ்வுகளைப் போலொரு பிரமையை ஏற்படுத்துகின்றன ! மூன்றும், நான்குமாய் மாதந்தோறும் இதழ்கள் வெளியாகும் போதே இந்தப்பாடெனில், துவக்க நாட்களின், மாதத்துக்கு 'ஒண்ணே ஒண்ணு ; கண்ணே கண்ணு" தருணங்களை எவ்விதம் சமாளித்தோமென்ற கேள்விக்கு பதில் தேடுகிறேன் !!

2018-ஐத் திரும்பிப் பார்க்கும் படலத்தினில், எஞ்சி நிற்பன செப்டம்பர் முதலான மாதங்கள்b! “இரத்தப் படலம்” எனும் ராட்சஸக் கடலை தத்தா-புத்தாவென எப்படியோ தாண்டியான பிற்பாடு செப்டபரில் tough-ஆன இதழ்கள் ஏதும் இருந்திட வேண்டாமென்ற முன்ஜாக்கிரதையில் திட்டமிடலை அதற்கேற்றதாக அமைத்திருந்தேன்! So ட்ரெண்டின் ஆல்பம் # 2; மாடஸ்டி பிளைஸி + டெக்ஸின் “சைத்தான் சாம்ராஜ்யம்” மறுபதிப்பு என சற்றே soft ஆன பணிகளாய் காத்திருந்தன! 

“களவும் கற்று மற” – இந்தாண்டின் மறக்கவியலா இதழ்களுள் ஒன்றாக அமைந்தது தான் ஆச்சர்யங்களுள் உச்சம்! ட்ரெண்ட் ஒரு பேட்டைப் பிஸ்தாவோ; ஆக்ஷனில் பிரித்து மேய்ந்திடும் நாயகரோ அல்ல என்பதை அவரது அறிமுக சாகஸம் பதிவு செய்திருந்ததில், நம்மில் சிலருக்கு ஏமாற்றமே என்பதில் ஏது இரகசியம் ? ‘கமான்சே போயி இப்போ ட்ரெண்டா? ஹும்ம்ம்...!‘ என்ற பெருமூச்சுகள் தான் உரக்கவே கேட்டனவே ?! – அதனால் அவரது இரண்டாவது சாகஸத்திலாவது சித்தே பரவலாய் ஸ்கோர் செய்தால் தேவலாமே என்ற மெலிதான ஆதங்கம் எனக்குள்ளேயிருந்தது ! ஆனால் கதையைப் புரட்டிப் பார்க்கும் போது தான் புரிபட்டது – இதுவுமே ஒரு ஆக்ஷன் மேளாவே அல்லவென்று ! இன்னும் சொல்லப் போனால் – ஒரு சுள்ளானை விரட்டி, துரத்திப் போய், அவனை ஊர் மக்கள் தூக்கிலிடுவதை பராக்குப் பார்க்கும் பார்வையாளராய் மட்டும் மனுஷன் இம்முறை வலம் வருகிறார் என்பது புலனானது! எனது முதல் ரியாக்ஷன் ‘கிழிஞ்சதுடா சாமி!‘ என்பதே ! முதல் ஆல்பத்தை ஒரு மாதிரியாய் தூக்கி விட்ட நண்பர்கள் கூட இந்த முறை வறுத்தெடுக்கப் போகிறார்களோ ? என்ற பயம் கஜா புயலாய் தாக்கியது ! ஆனால் CINEBOOK தான் புண்ணியம் தேடிக் கொண்டது இந்த இக்கட்டில்! 2018-ன் கதைகளுக்கான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்புகளை ஓராண்டுக்கு முன்பே செய்து விட்டிருந்தோம் என்பதால் “களவும் கற்று மற” கூட அப்போதே மொழிமாற்றம் கண்டிருந்தது. ஆனால் CINEBOOK நிறுவனம் ட்ரெண்ட் தொடரை ஆங்கிலத்தில் சமீபமாய்த் துவங்கியிருக்க, அமேசானில் ரூ.650-க்கு ஆர்டர் போட்டு வாய்கியிருந்தேன்! So கதைக்கு French to English ஸ்கிரிப்டும், ஆங்கிலப் பதிப்புமே என் கைகளிலிருந்தன ! என்னதான் நமது மொழிபெயர்ப்பாளர் திறன்பட எழுதியிருப்பினும், ப்ரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டோரின் கைவண்ணம் வேறொரு உச்சத்தில் இருக்குமென்பது இம்முறையுமே ஊர்ஜிதமானது ! ரொம்பவே சுலபமாய்த் தோன்றினாலும் – இந்தக் கதையின் வழிநெடுகிலும் ஒரு மெலிதான சோகம் இழையோடுவதை Cinebook உபயத்தில் கிரகிக்க சாத்தியமானது ! ‘அட... பார்க்க செம நேர்கோட்டுக் கதை போலத் தோன்றினாலும் – இங்கொரு கி.நா. ஜாடை தெரிகிறதே!' என்று குஷியாகிப் போனேன் ! கிராபிக் நாவல்களென்றால் தெறித்து ஓடிய காலம் மாறி – அவற்றை பிரித்து மேயும் ஆர்வலர்களாய் நீங்கள் மாற்றம் கண்ட பின்னே, இத்தகைய கதைகள் ஸ்கோர் செய்யாது போகாது என்று என் உள்ளுணர்வு சொல்லியது. அந்த டீனேஜ் பிரெஞ்சுக் கவிஞரின் வரிகளை கதை நெடுக அந்தச் சுள்ளான் கௌபாய் பெனாத்தித் திரிய – இன்டர்நெட்டில் தேடித் துருவி ஒரு மாதிரியாய் தமிழாக்கங்களைச் செய்து வைத்தேன் ! So இந்தக் கதையினில் தென்பட்ட இனம்புரியா வசீகரம் உங்களையுமே ஸ்பரிசிக்கிறதாவென்ற ஆவலோடு காத்திருந்தேன்! சரியாக அதே சமயம் நண்பர் கார்த்திகைப் பாண்டியனும் அதே ஆர்தர் ரெம்போவின் கவிதைகளை தமிழாக்கம் செய்து விருதும் பெற்றிருக்க – இந்த இதழ் உங்களது ஆர்வங்களைத் தூண்டும் சமாச்சாரமாய் உருப்பெற்றது ! தொடர்ந்த நாட்களின் அலசல்கள்; அந்தச் சுள்ளான் கௌபாயின் கதாப்பாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் – இந்த இதழை வேறொரு லெவலுக்கு இட்டுச் சென்று விட்டிருந்தது ! ட்ரெண்ட் தொடருமே “களவும் கற்று மற”வின் பெயரைச் சொல்லி ஒரு உத்வேகம் பெற்றிருந்தது ! So ஜெய் கி.நா.என்று நினைத்துக் கொண்டேன் !!

செப்டம்பரில் இன்னொரு blockbuster இதழாகிப் போனது ‘தல‘யின் “சைத்தான் சாம்ராஜ்யம்”! ஏற்கனவே b&w-ல் அந்நாட்களில் கலக்கிய இந்த இதழை இம்முறை முழுவண்ணத்தில் ஆர்ட்பேப்பரில் பார்த்திடுவது செம ரம்யமான அனுபவமாயிருக்குமென்பதில் எனக்குத் துளி கூடச் சந்தேகம் இருக்கவில்லை ! தவிர, எனக்கு இக்ளியூண்டு வேலை கூட வைத்திடாது – autopilot-ல் இதழ் உருவாகிடல் சாத்தியம் என்பதால் நான் ஜாலியாகப் பராக்கு மாத்திரமே பார்த்து வந்தேன்! இந்தாண்டில் ஏஜெண்டுகள் ஆர்வமாய் வாங்கிய இதழ்களுள் இடம் # 3-ஐப் பிடித்தது “சை.சா.” தான்!

செப்டம்பரின் இதழ் # 3 பெரியதொரு ஹிட்டுமல்ல; சொதப்பலுமல்ல என்ற ரகம் ! மாடஸ்டி & கார்வினின் “விடுமுறை வில்லங்கம்” சமீபத்தைய மாடஸ்டியின் சறுக்கலுக்கொரு முற்றுப்புள்ளி வைத்த பெருமைக்குரியது என்ற மட்டிலும் எனக்கு சந்தோஷமே ! ஆனால் 100 கதைகள் கொண்ட இத்தொடரினில் நாம் ரசித்துள்ள “கழுகுமலைக் கோட்டை”; “பழிவாங்கும் புயல்” இத்யாதிகளெல்லாம் முற்றிலும் வேறொரு ரகம் என்பதுமே புரிந்தது ! So விடுமுறை வில்லங்கத்தில்  தலைதப்பியதே என்ற நிம்மதி எனக்கு !

செப்டம்பரில் – ரெகுலர் சந்தாவில் இல்லாது – ஜம்போவின் இதழ் # 2 ஆக வெளியான ஹெர்லக் ஷோம்ஸின் “குரங்கு சேட்டை”யுமே இடம் பிடித்திருந்தது ! 2 கதைகளடங்கிய இந்த முழுவண்ணக் கார்ட்டூன் ஆல்பம் பெரிய பாசாங்கெல்லாம் இல்லாத ஜாலியான, breezy read மாத்திரமே ! சொல்லப் போனால் – அந்த ‘அனஸ்தீஸியா‘ குரங்கு தலைகாட்டும் முதல் கதை ஓ.கே. என்றுபட்டது எனக்கு ! இரண்டாவது கதையில் அத்தனை வலுவில்லை என்றே நினைத்தேன் ! ஆனால் ரொம்பவே ஜாலியாய் நீங்கள் இந்த இதழை ஒட்டு மொத்தமாகவே ஏற்றுக் கொண்டதைப் பார்த்த போது ரொம்பவே ஹேப்பி ! ஜம்போவின் பயணத்தில் இதுவுமொரு சந்தோஷ எட்டாக அமைந்திட்டதில் டபுள் மகிழ்ச்சி ! 

அக்டோபரில் சந்தேகமின்றி highlight ஆகிடவிருந்தது நமது ‘தல‘யின் 70-வது பிறந்த நாள் மலரான “The டைனமைட் ஸ்பெஷல்” தான் ! 777+ பக்கங்கள் ; 500+ பக்க நீளத்துக்கு ஒரே Tex சாகஸம் என்ற ஈர்ப்புகள் காத்திருக்க – இந்த இதழ் ஆரவாரமாய் களமிறங்கியது! And இந்த நொடி வரையிலுமே விற்பனையில் இந்தாண்டின் # 1 இதழாகப் பட்டையைக் கிளப்பி வருகிறது !  Oh yes – “இரத்தப் படலம்” வண்ணத் தொகுப்பு சூறாவளியாய் தாக்கியது தான் ; ஆனால் ஏஜெண்ட்களின் ஒருசாரார் அதனை வாங்கி ரிஸ்க் எடுக்கப் பிரியம் கொள்ளவில்லை ! நாம் அச்சிட்டதே சொற்பம் ; அதனில் முன்பதிவுகள் நீங்கலாய் ஈரோட்டில் புத்தக விழாவில் ஒரு decent எண்ணிக்கை காலியானது ! So முகவர்களுள் ஒரு அணி கைகொடுத்ததைக் கொண்டே கரைசேர்ந்து விட்டிருந்தோம் ! ஆனால் “டைனமைட் ஸ்பெஷல்” சமாச்சாரமோ முற்றிலும் வேறொரு ரகம் ! சின்ன ஊர் – பெரிய ஊர் என்ற பாகுபாடின்றி அத்தனை ஏஜெண்ட்களும் அடித்துப் பிடித்து வாங்கியது மட்டுமல்லாது ; ஆன்லைனிலும் இதற்கிருந்து வரும் வரவேற்பு முற்றிலும் வேறொரு league–ல் உள்ளது ! எனக்கு நினைவு தெரிய – ஆன்லைனில் ஜாஸ்தியான விற்பனை கண்டுள்ள இதழ்களின் Top 3 பட்டியலுக்குள் டைனமைட் ஸ்பெஷலுக்கு இடமிருக்குமென்பது உறுதி ! அதே சமயம் – ‘தல‘ சிறையில் கல்லுடைத்த அந்த 500+ பக்க சாகஸத்தில் அனல் பற்றாதென்ற புகார் குரல்களும் கேட்கவே செய்தன ! வில்லனை நாலு காட்டு – காட்டவாவது பக்கங்களைக் கூடுதலாய் ஒதுக்கியிருந்தால் நிறைவாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தென்பட்டது புரிந்தது ! “டெக்ஸின் பொற்காலம்” எனப்படும் அந்த 1-200 கதைகளை பெரியவர் போனெல்லி ஏகப்பட்ட ரகங்களில் சிருஷ்டித்திருந்தார் ! அதனில் இதுவுமொரு பாணி ; மற்றபடிக்கு சீரான அந்தக் கதையோட்டத்தில் முழுநிறைவே என்ற குரல்கள் தான் மெஜாரிட்டி ! எது எப்படியோ – அந்த ஆல்பத்தின் கதை # 2 விட்ட குறை, தொட்ட குறை சகலத்தையும் நிவர்த்தி செய்யும் விதத்தில் அதிரடியாய் அமைந்திருப்பதில் எல்லோருமே ஹேப்பியோ ஹேப்பி !

அக்டோபரின் வண்ண இதழ்களில் ரிப்போர்ட்டர் ஜானியின் “மரணம் சொல்ல வந்தேன்” கூட குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றது! ஆனால் நிஜத்தைச் சொல்வதானால் வழக்கமான ஜானி கதைகளில் மண்டையை ‘மங்கு‘ மங்கென்று பிறாண்டினாலாவது ஏதாவது புரிபடுவதுண்டு! இம்முறையோ ரொம்பவே ‘மங்கு‘ மங்கென்றது தான் மிச்சம் ; புரிதல் குறைவே என்பேன் ! ஒரு 42 பக்க இடியாப்பத்தை இரண்டே பக்கங்களில் குருமா செய்து சுவைக்கும் பாணிக்கு, ஜானியின் புது அவதாரில்  விடுதலை தந்துள்ளார்கள் என்றமட்டில் ரொம்பவே நிம்மதி எனக்கு ! ஒரு துப்பறியும் சாகஸத்தை நார்மலான பாணியில் ரசித்த திருப்தி அங்கு உறுதி என்று சொல்வேன் !

மற்றொரு வண்ண இதழான கர்னல் க்ளிப்டனின் “யார் அந்த மிஸ்டர் X ?” நமது கேரட் மீசைக்காரருக்கு ஒரு lifeline தந்து புண்ணியம் தேடிக் கொண்ட இதழென்பேன் ! இந்த ஆல்பத்துக்கு மட்டும் உங்களது வரவேற்பு மிதமாக மாத்திரமே அமைந்திருப்பின் – மனுஷன் 2019-ல் தலைகாட்டிட வாய்ப்பில்லாது போயிருப்பார் ! Just miss !

அக்டோபரின் black & white ராபின் சாகஸமுமே கிட்டத்தட்ட அதே lifesaver தான்! ரொம்ப காலத்திற்குப் பின்னே ஒரு நேர்த்தியான ராபின் ஆல்பத்தை வாசித்த திருப்தியை “தெய்வம் நின்று கொல்லும்” தந்திருந்தது! Of course – கதையின் மையத்தை யூகிப்பதில் பெரிதாய் சிரமங்கள் இல்லையென்பது மைனஸ் பாய்ண்டே! ஆனால் (துப்பறியும்) ஆலைகளிலா ஊர்களில் நாம் ரொம்பவே கறார் காட்டினால், இந்த டிடெக்டிவ் பார்ட்டிகள் அழிந்து போகுமொரு இனமாகிப் போய்விடுவர் – நம்மட்டிலுமாவது ! Robin stays on !! 

நவம்பரில் தீபாவளி மலராய் 340+ பக்க சாகஸத்தோடு பலம் காட்டிய “காதலும் கடந்து போகும்” நடப்பாண்டின் “Best டெக்ஸ்” என்பதில் பெரிய மாற்றுக் கருத்துகள் இராதென்பேன் ! டைகர் ஜாக்கின் விஸ்வரூபம் இந்த இதழை ஒரு cult classic ரகத்திலானதாய் டெக்ஸ் பிரியர்களுக்கு மாற்றித் தந்திருப்பதை உங்கள் அனைவரின் எண்ணப் பதிவுகளும் பறைசாற்றின ! டெக்ஸ் சாகஸங்களில் இத்தகைய அதிரடி ஹிட்களை அன்னப்பட்சி போல பிரித்தெடுக்கும் ஆற்றலை மட்டும் ஏதேனுமொரு சூப்பர் மார்கெட்டில் வாங்கிட இயன்றால் – அடடா… வாழ்க்கை தான் எத்தனை பிரகாசமாகிடும் என்று தோன்றியது ! இந்த இதழுமே ஆன்லைனில் செமத்தியான விற்று வருமொரு இதழ் என்பது icing on the cake !!  

ஸ்மர்ஃப்களின் swansong ஆக வெளியான “காசு… பணம்… துட்டு” அந்த நீலப் பொடியர்களின் ரசிகர்களைக் குஷிப்படுத்திய இதழ் என்பதில் ஐயமில்லை ! எப்போதும் போலவே ஒரு நயமான கருவை எடுத்துக் கொண்டு செம ரசனையோடு அதனைக் கையாண்டிருந்தனர் படைப்பாளிகள் ! ஆனால் – “ச்சை… எனக்கு உஜ்ஜாலாவிலேயே கூட நீலமே புடிக்காது !” என்று நம்மில் முக்கால்வாசிப் பேர் முறைப்புக் காட்டும் போது இந்த விரலளவு மனிதர்கள் தான் என்ன செய்வார்கள்? ஹ்ம்ம்ம்ம்ம்… புத்தக விழா விற்பனைகளே இனி இந்த இதழைக் கரைசேர்த்திட வேண்டும் தெய்வமே ! அப்புறம் இந்த இதழ் சார்ந்ததொரு கொசுறுச் சேதியும் கூட! இதன் மொழிபெயர்ப்பை தமிழில் செய்தது ஒரு ஆர்டின் ரசிகரே ! இவர் அவ்வப்போது குழலும் ஊதுவார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

நவம்பரின் இன்னொரு பட்டாசாய் படபடத்தவர் நமது ஜேம்ஸ் பாண்ட் 007 தான்! “மினிமம் டயலாக், மேக்சிமம் ஆக்ஷன்” என்ற குறிப்போடு களமிறங்கியுள்ளனர் கதாசிரியர் – ஓவியர் ஜோடி ! அந்த மிரட்டலான இரவு சேஸிங் சீனோடு ஆரம்பிக்கும் பாண்டின் பயணம், முழுக்கவே டாப் கியரில் சீறிப் பாய்ந்தது தான் highlight ! ஜம்போ காமிக்ஸின் ஹாட்ரிக் இதழிது என்று சொல்லும் விதத்தில் வெற்றியை ஈட்டித் தந்துள்ள “பனியில் ஒரு பிரளயம்” லார்கோவின் வெற்றிடத்தை இட்டு நிரப்பினால் இனியெல்லாம் சுகமே என்பேன் !

So – டிசம்பரின் 3 இதழ்கள் நீங்கலாக இதுவரைக்குமான 2018 பயணம் சார்ந்த எனது தனிப்பட்ட கருத்துக்களே இவை ! அவரவருக்கு – அவரவரது பணிகள் சிறப்பானதாகவே தோன்றுவது வாடிக்கை தானென்றாலும் – இந்த மதிப்பீடுகள் செய்திடும் சமயம் – ‘எடிட்டர்‘ என்ற குல்லாவைத் துண்டாகக் கழற்றி தூர வைத்து விடவே நான் விழைந்துள்ளேன் ! இயன்றமட்டிலும் நேர்மையான அலசல்களை, சில behind the scenes கொசுறுச் சேதிகளோடு வழங்கிட முற்பட்டுள்ளேன் ! எனது பார்வையில் Jan to Nov வரைக்குமான இதழ்களின் தர breakup இவ்விதம் :

a) சூப்பரப்பு !! ரகம் … 14
b) அக்காங்.... குட் நைனா ! ரகம்… 13
c) ம்ம்ம்… அது வந்து… இன்னா சொல்ல வர்றேன்னா ? ரகம்... 9
d) ஆணியே பிடுங்க வாணாம் ! ரகம்… 2

Of course – நானே பீப்பீ ஊதி – நானே டான்ஸும் ஆடிவிட்டு – நானே ‘இது தில்லானா மோகனாம்பாள் ரகம்‘ என்று சொல்லிக் கொள்வது போலத் தோன்றிடலாம் தான்! அதனால் இந்த 38 இதழ்கள் (ரெகுலர் சந்தா 35 + ஜம்போ 3) மீதான உங்களது மதிப்பீடுகளையும் நீங்களும் ஒருவாட்டி செய்திடக் கோருகிறேன் guys! இதே பாணியில் a) – b) – c) – d) – என்று குறித்திடுங்களேன் – ப்ளீஸ் ! அதுமட்டுமன்றி, இந்தாண்டின் இதுவரையிலான பயணம் எவ்விதமிருந்துள்ளது என்பதையும் சொல்லிடலாமே folks ? 

இதற்கு மேலும் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருப்பின் கழுத்து பிடித்துக் கொள்ளும் என்பதால் – முன்னே பார்க்கத் தொடங்குவோமா ? இதோ, டிசம்பரின் கார்ட்டூன் சீஸன் தொடர்கிறது – மதியிலா மந்திரியாரின் உபயத்தில்! “கனவெல்லாம் கலீபா” மந்திரியாரின் ஆல்பங்களுள் ஒரு ஜாலியான addition ஆக இருந்திடுமென்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை ! வழக்கம் போலவே 6 பக்க / 8 பக்கத் தொகுப்புகளாய் கதைகள் அமைந்திருக்க, ஒவ்வொன்றுமே ஒரு பட்டாசு! As always, வார்த்தை விளையாட்டுக்கள் இங்கே நிரம்ப இடம்பிடித்திருக்க – அவற்றைத் தமிழுக்குக் கொணர நிறையவே குட்டிக்கரணம் அடித்துள்ளேன் ! ஆனால் மொழி சார்ந்த சில சூட்சமங்களை எத்தனை வேக வேகமாய் பல்டியடித்தாலுமே அடுத்த மொழிக்குக் கொண்டு செல்வது சாத்தியமாகாது தானே ? So ஒரிஜினல் இங்கிலீஷ் இதழைக் கையில் வைத்துக் கொண்டே ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வலர்கள் சித்தே கனிவோடு அணுகிடக் கோருகிறேன் ! இதோ – இந்த இதழுக்கான நமது அட்டைப்படம் & உட்பக்கங்களின் preview! 
அட்டைப்படம் நமது ஓவியர் மாலையப்பனின் கைவண்ணம்! 2019-ன் நமது பயணத்தில் மந்திரியார் நம்மோடு இருந்திடப் போவதில்லை என்பதொரு சோகமென்றாலும் – இந்த இதழுக்கு நீங்கள் தந்திடக் கூடிய reviews பாசிட்டிவ்வாகயிருப்பின் – நிச்சயமாயொரு மறுவருகைக்கு may be 2020-ல் வாய்ப்புகள் புலரக் கூடுமென்ற நம்பிக்கை ஒரு ஓரமாயுள்ளது ! Fingers crossed !
அப்புறம் டிசம்பரில் ஜம்போவும் உண்டு – ‘The Action Special” ரூபத்தில் ! Fleetway-ன் க்ளாசிக்குகளை மறுக்கா பார்க்கும் அனுபவம் ரொம்பவே வித்தியாசமாக உள்ளது! காத்திருக்கும் ஞாயிறில் அதன் எடிட்டிங்கில் தான் எனது பொழுது ஓடவுள்ளது !

டிசம்பருக்கு எங்கள் பணிகள் 75%-க்கும் மேலாய் பூர்த்தியாகியிருக்க – நம்மவர்கள் ஜனவரியின் நடுவே பரபரப்பாய் ஓடிக்கொண்டுள்ளனர் ! ஒரு பயணம் (2018) முடிந்தது போலத் தோன்றினாலும் – அடுத்தது தம் கட்டிக் காத்திருப்பது தெரிவதால் – காலாட்டிக் கொண்டு ஓய்வு எடுத்தது போதுமடா சாமி என்று நானுமே mode மாறியாச்சு ! ஒரு பக்கம் ஜனவரியின் அட்டைப்படங்களின் தேர்வுகள் ; 3 மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல் சார்ந்த ரோசனைகள் ; புதுக் கதைகளுக்கு அனுப்ப வேண்டிய ராயல்டி தொகைகளை புரட்டிட அடிக்கும் குட்டிக்கரணங்கள் ; ஜம்போ - சீசன் 2 சார்ந்த கதைத் தேடல்கள் ; "ஈரோடு ஸ்பெஷல்"க்கு என்ன ஸ்பெஷல் ? என்று ஏதேதோ யோசனைகளோடும், முயற்சிகளோடும் எனது நாட்களும் பிஸியாகத் துவங்கி விட்டன !  சந்தாக்களைப் புதுப்பிக்கும் mode-க்கு நீங்களுமே மாறிட்டால் நம் பயண வேகம் இன்னும் சூடு பிடிக்குமன்றோ ? Please do chip in folks !! Bye for now ! See you around !

P.S. : Before I sign out : இன்னமுமொரு கோரிக்கை !! இதுவும் பணம் சார்ந்த வேண்டுகோளே ; ஆனால் இம்முறை நமக்கோசரமல்ல ! நமது நண்பர் (சென்னை) செந்தில் சத்யாவின் இல்லத்தரசிக்கு கடந்த சில மாதங்களாகவே இக்கட்டான உடல்நிலை !! ஈரோடு புத்தக விழாவினில் சத்யா ஆஜரான போதுமே மனைவியை ஆஸ்பத்திரியில் விட்டு விட்டுத் தான் ஓட்டமாய் ஓடிவந்திருந்தார் ! அப்போது முதலாகவே மருத்துவமனை வாசமே அவரது மனைவிக்கு ! ஆண்டவன் கருணையோடு, நிறைய சிகிச்சைகளுக்குப் பின்பாய் அவர் இப்போது நலமாகி, வீடு திரும்பிடும் நாளும் நெருங்கியுள்ளது !! ஆனால் இத்தனை நெடிய மருத்துவப் போராட்டத்தின் செலவுகளைத் தாக்குப் பிடித்திடுவதில் சத்யா ரொம்பவே திண்டாடிப் போயுள்ளார் ! தொடரும் வாரம் மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றிட மருத்துவமனைக்கொரு பெரிய தொகையினை அடைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார் ! அவரது சக்திக்குட்பட்ட தொகையினைப் புரட்டியிருப்பினும், இன்னமும் கொஞ்சம் குறைபாடு உள்ளது ! நம்மால் இத்தருணத்தில் ஏதேனும் ஒத்தாசை செய்திட முடிந்தால், நண்பரின் சிரமம் ஓரளவுக்கு மட்டுப்பட்டிட வாய்ப்புள்ளது !! நண்பர்களுள் யாரேனும் ஒருவர் இதன் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன் !! கரம் கோர்ப்போமா all? 






இவ்வாரத்தினில் அமெரிக்க மார்வல் காமிக்ஸ் குழுமத்தின் ஜாம்பவான் படைப்பாளியான திரு ஸ்டான் லீ அவர்கள் இயற்கை எய்தியுள்ளதொரு வருத்தமான சேதி ! எண்ணற்ற சூப்பர் ஹீரோ கதைகளுக்கும், எண்ணற்ற புதுமைகளுக்கும் இவரே முழு முதற் பிதாமகர் !! Rest in peace Sir !!!

நமது YOUTUBE சேனலில் புதியதொரு வீடியோ guys https://youtu.be/d5WyDCK_I04

Sunday, November 11, 2018

க்வாட்டரோடு மீண்டும் !!

நண்பர்களே,

வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “க்வாட்டரும் கடந்து போகும்” என்றதொரு அறிவுபூர்வமான தலைப்பின் கீழ் ! தொடரும் பொழுதினில் இந்தாண்டின் அடுத்த சில மாதங்களை நோக்கி zoom செய்திடுவதாய் திட்டமிட்டிருந்தேன்; ஆனால் 2019-ன் அட்டவணை அறிவிப்பு; ஜேம்ஸ் பாண்ட்; நவம்பர் இதழ்களது அலசல்கள் என்று இடையினில் heavyweight topics தலைநுழைக்க, திட்டம் பணாலாகிப் போனது! Anyways – டிசம்பர் இதழ்கள் மீதான எனது பணிகள் முடிந்து ஏக காலமாகியிருக்க – கிடைத்திருக்கும் குட்டியூண்டு அவகாசத்தினில், விடுபட்டுப் போன பணிகளையெல்லாம் செய்து வருகிறேன்! இதுவே waiting list-ல் உள்ள பணி தான் எனும் போது – இந்த ஞாயிறை அதற்கென ஒதுக்கினால் தேவலாமென்று பட்டது ! So here goes!

ஜுன்’18 பெரியதொரு ஆரவாரமிலா ; ஸ்பெஷல் இதழ்கள் ஏதுமிலா மாதமாய் அமைந்திருப்பினும் – அந்த மாதம் களம் கண்ட 3 நாயகர்களுமே தத்தம் பிரிவுகளில் ஜாம்பவான்களே!

- லார்கோ வின்ச்     - டெக்ஸ் வில்லர்    - மாயாவி

என்ற பெயர்களை ஒருசேரப் பார்க்கும் கணம் – “அட்றா சக்கை... ஒரு செம விருந்து காத்துள்ளது!” என்ற எண்ணம் தலைதூக்கியிருப்பின் நிச்சயம் அதனில் தவறு இருந்திராது தான்! ஆனால் ஜாம்பவான்களும் சில வேளைகளில் ஜாங்கிரியென்று பிலிம் காட்டி விட்டு – ஜுர மருந்தை வாயில் ஊற்றிட வல்லவர்களே என்பதை ஜுன்’18 நிரூபித்துக் காட்டியது! இதில் கொடுமை என்னவென்றால் – காத்திருப்பதொரு ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘ அனுபவமே என்பது எனக்குத் தெள்ளத் தெளிவாய், ரொம்ப முன்னமே தெரியும் ! லார்கோ தொடரில் – “வான் ஹாம் பணியாற்றிய இறுதி ஆல்பம்!” என்ற பில்டப்போடு ஆல்பங்கள் 19 & 20 தயாரான சமயமே நமக்கு இந்த ஆக்கங்களின் preview பிரெஞ்சில் கிட்டியிருந்தன ! படம் பார்க்கையில் வழக்கம் போல லார்கோவின் மெர்சலாக்கும் ஆக்ஷன்; ஒரு புதிரான அழகி; லண்டனின் ரம்யமான பின்னணிகள் என்று வசீகரமானதொரு சாகஸமாகவே தென்பட்டது! ஆனால் Cinebook வெகு சீக்கிரமே இவற்றை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்க – அவற்றைத் தருவித்திருந்தேன் முதல் வேலையாக ! அதைப் படிக்கத் துவங்கிய போதே மெதுமெதுவாய் ஜெர்க் அடிக்கத் துவங்கியது ! முதல் பாகத்தைப் படித்து முடிந்த சமயமே எனக்கு வியர்க்கத் துவங்கியிருந்தது – இதனை தமிழில் எவ்விதம் கையாள்வதென்ற யோசனையில் ! And பாகம் இரண்டையும் முடித்த சமயம் சந்தேகமேயின்றித் தெரிந்தது – இந்த ஆல்பம் நாம் பார்த்துப்,  பழகி, ரசித்து வந்த லார்கோவைக் கண்ணில் காட்டிடும் ரகமல்லவென்று ! ஆனால் ஒரு prime நாயகரின் ஆல்பம் ; அதுவும் வான் ஹாம் போன்ற அசுரரின் கைவண்ணத்திலானது எனும் போது – அதனை ஓரம்கட்டுவது சுலபமல்ல என்பதும் புரிந்தது ! So மொத்துக்கள் நிச்சயம் ; சில தீவிர லார்கோ அபிமானிகளுக்கு ஏமாற்றமும் நிச்சயமென்ற புரிதலோடே தான் “பிரியமுடன் பிரளயம்” இதழினுள் பணியாற்றப் புகுந்தேன் ! கதைநெடுக பாட்டையாக்களும்; பாட்டிமார்களும் அடிக்கும் லூட்டிகள் ஒரு பக்கமெனில்; சொகுசுக் கார் ட்ரைவர் ; கப்பலின் கேப்டன் ; ஜெட் விமானத்தின் பைலட் – என எதிர்ப்படும் சகலருமே ஜல்சாவோ-ஜல்சா மூடில் சிக்கித் திரிய, எனக்கோ மொழிபெயர்ப்பதற்குள் முழி பிதுங்கி விட்டது ! சில இதழ்கள் ”நிச்சயிக்கப்பட்ட ஹிட்கள்” என்றிருப்பதைப் போல – சொற்பமான சிலவோ “நிச்சயிக்கப்பட்ட சொதப்பல்கள்” என்பதை நெற்றியிலேயே பச்சை குத்தித் திரிவதுண்டு ! இரண்டு சூழ்நிலைகளிலுமே நான் செய்யக் கூடியது பெரிதாய் ஏதுமிராது – இயன்றமட்டிலும் டயலாக்குகளை உயிர்ப்போடு அமைக்க முனைவதைத் தாண்டி! “பிரியமுடன் பிரளயத்திலோ” – நான் முயற்சித்தது விரசங்களை இயன்றமட்டிலும் கட்டுக்குள் வைத்திட மாத்திரமே ! ஆங்கில ஒரிஜினலையும், நமது தமிழ்ப் பதிப்பையும் ஒருசேரப் படித்துப் பார்த்தோருக்கு என் பாடின் பரிமாணம் நிச்சயம் புரிந்திருக்கும்! So அழகானதொரு அட்டைப்படம், powerful ஆனதொரு நாயகர்; கலக்கலான கலரிங் என்றிருந்தாலும் “பிரியமுடன் பிரளயம்” – 2018-ன் “பப்படம் of the Year” என்ற பட்டத்துக்குப் போட்டி போட்டதே ஜுனின் சோகம் !

ஆனால் லார்கோவின் சறுக்கலை ஈடு செய்வது போலொரு செம வீரியமான ஆக்ஷன் மேளாவை டெக்ஸ் வில்லர் நடத்திக் காட்டியதால் மாதம் # 6-ல் நம் தலைதப்பியது ! “நடமாடும் நரகம்” அந்த classic பாணிச் சித்திரங்கள் + பட்டாசாய்ப் பொரியும் கதைக்களத்தோடு 200+ பக்கங்களுக்குத் தடதடக்க – எனக்குள் பெரியதொரு நிம்மதிப் பெருமூச்சு ! மிதமான நாயக / நாயகியர் கோட்டை விட்டால் கூட அத்தனை பெரிய ரணம் தெரிய மாடேன்கிறது ; ஆனால் மெகா ஸ்டார்கள் தடுமாறிட்டால் ரணகளமாகிறதல்லவா ? புனித தேவர் மணிடோவின் புண்ணியத்தில் ஜுனின் சேதாரங்கள் massive ஆக இருந்திடவில்லை ! And மாயாவியின் “நடுநிசிக் கள்வன்” அம்மாதத்து இறுதி இதழ் என்ற போது, வண்டி சகஜமாய் ஓடிவிட்டது ! என்னைப் போலவே நீங்களுமே லார்கோவின் பொருட்டு கொண்ட கவலை ஜுனின் அலசல்களில் தெறிப்பதை நிரம்பவே பார்க்க முடிந்தது ! And அடுத்த லார்கோ ஆல்பம் இரண்டு மடங்கு வீரியமாய் அமைந்திட வேண்டி வரும் என்ற எண்ணத்தை அடக்கவும் முடியவில்லை ! Fingers crossed !

ஜுலைகள் நமது லயனின் ஆண்டுமலர் மாதங்கள் எனும் போது – எப்போதுமே எனக்குள்ளே ஒருவிதக் குஷி குடியேறி விடும் ! சில வருடங்களுக்கு முன்பாக கேப்டன் பிரின்ஸ் சிறுகதைகள் + பெட்டி பார்னோவ்ஸ்க்கியின் spin-off என்ற தலைநோவுக் கூட்டணி சொதப்பியதைத் தவிர்த்து – ஆண்டுமலர் இதழ்கள் பெரியதொரு மொக்கை போட்டதாய் எனக்கு நினைவே இல்லை ! இம்முறையோ – “லூட்டி with லக்கி” ஆண்டுமலராய் களமிறங்க – செம ஜாலியான அனுபவம் all the way! 2 புத்தம் புதிய கதைகள் ; அதிலும் லக்கியின் கார்ட்டூன்கள் என்ற போதே பேனா பிடிக்க என் விரல்களில் நமைச்சல் எடுத்தது ! அதிலும் “திசைக்கொரு திருடன்” சூப்பர்-டூப்பர் கதையென மனதுக்குப்பட – எழுதும் போதே இதனை நீங்கள் எவ்விதம் சிலாகிப்பீர்களென்ற ரேஞ்சிற்கு என் கற்பனைகள் சிறகுகள் விரித்தன! கிருஸ்துமஸ் புலரும் முன்பாக வான்கோழி பிரியாணியை எண்ணிச் சப்புக் கொட்டுவது முறையல்ல தான்; ஆனால் லக்கி லூக் + 4 டால்டன்கள் என்ற ரகளையான கூட்டணி பிரித்து மேயும் போது – வெற்றிக்கு 99% உத்தரவாதம் உண்டென்ற தைரியம் தான் என்னுள் ! அந்த ஆல்பத்தின் இரண்டாவது கதையான “ஸ்டேட் பாங்க் of டால்டனிலும்” டால்டன்களின் மொத்தப் பரிவாரமுமே கூத்துக்களைத் தொடர்ந்திட, ஆண்டுமலர் – ஆரவார மலரானதில் no surprises! And ஹார்ட்கவர் பைண்டிங்; சூப்பரான அட்டைப்படம் என்ற icings, கேக்கை மேலும் சுவையூட்ட – ஜுலை ‘ஓஹோ‘வென்று துவங்கியதில் வியப்பில்லை தான் ! 

புதுசாய் நம் பக்கம் கரை சேர்ந்த கனடாவின் காவல் வீரர் ட்ரெண்ட் ஜுலைக்கொரு X-factor-ஐத் தந்த புண்ணியவான்! நான் வழக்கம் போல “வீரன்... சூரன்...”! என்று கொடுத்திருந்த பில்டப்பை எத்தனை தூரம் சீரியஸாக எடுத்திருந்தீர்களோ - தெரியாது; ஆனாலும் இவர் மீதொரு எதிர்பார்ப்பு இருந்தது நிச்சயம் ! “பனிமண்டல வேட்டை” கலக்கலான கலரில்; அட்டகாசமான சித்திரங்களோடு, நீட்டாக வந்து இறங்க – எனக்குள் இதனை நீங்கள் வரவேற்கக் காத்திருக்கும் விதம் சார்ந்து பெரியதொரு குறுகுறுப்பு ! ‘ஏக் மார் – தோ துக்கடா; பக்கடா‘ என்றெல்லாம் இந்தப் புதுவரவு ஆக்ஷன் கதக்களி ஆடப் போவதில்லையென்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் – ouy & out ஆக்ஷன் ரசிகர்களுக்கு இவரொரு ‘ஙே‘ பார்ட்டியாகவே தென்படுவாரென்பது குறித்து எனக்குள் ஐயங்களில்லை ! ஆனால் நிச்சயமாய் ஒரு ஓரமாய் குந்திக் கொண்டு மிக்சர் சாப்பிட வேண்டிய பார்ட்டியுமல்ல இவர் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது ! எனது யூகங்கள் சரியே என்று சொல்லும் விதமாய் – இந்த இதழ் மீதான தீர்ப்பு split verdict ஆகவே இருந்தது ! But இந்திய கிரிக்கெட் அணியில் K.L. ராகுல் போன்ற சில வீரர்களை தொலைநோக்கோடு ஆதரிப்பதைப் போலவே – இந்தக் கனடா காவலரை ‘எடுத்தோம்-கவிழ்த்தோம்‘ என்ற ரீதியில் அணுகிடாது இவரைப் பொறுமையாகக் கையாள்வதென்று நான் முன்னமே தீர்மானித்திருந்தால் 50-50 தீர்ப்பு கூட எனக்கு ஓ.கே. என்றே பட்டது ! 

ஜுலையின் இதழ் # 3 வண்ணத்தில் “எரிமலைத் தீவில் பிரின்ஸ்” என்பதால் அங்கேயும் thumbs-up சுலபமாய்ச் சாத்தியப்பட்டது ! மறுபதிப்புகள் – அதுவும் உங்கள் தேர்வுகளின் அடிப்படையிலான மறுபதிப்புகள், என் பிழைப்பை எப்போதுமே எளிதாக்கிடுவதால் – நோகாமல் ஒரு ‘ஹிட்‘டைப் பதிவு செய்த திருப்தி!

ஜுலையின் highlight என்னைப் பொறுத்த வரையிலும் “ஜம்போ காமிக்ஸின்” debut தான் ! “லயன் + ஜுலை” என்ற அதே கெமிஸ்ட்ரி தொடரட்டுமே என்ற பகுத்தறிவு நிறைந்த சிந்தனை உரமேற்ற – இளம் TEX-ன் “காற்றுக்கேது வேலி?” அதிரடியாய் உங்களோடு கைகுலுக்கத் தயாரானது ! Truth to tell – இந்த இதழை பந்தாவாய் அறிவித்து விட்டேனே தவிர – நிறையவே starting troubles ! அட்டைப்படம் துவக்கத்தில் உருப்படியாய் ‘செட்‘ ஆகவில்லை ; கதையின் ஓட்டத்திலுமே மெலிதாயொரு கிலேசம் எனக்கு! நாம் இது நாள் வரை பார்த்துப் பழகியிருந்த டெக்ஸ் template-லிருந்து மாறுபட்டு ஓடும் இளம் டெக்ஸின் saga-வை எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ ? என்ற தயக்கமே அதன் பின்னணி ! அதே போல – “why ஜம்போ?” என்ற கேள்விகளுக்குப் பத்தி பத்தியாய் பதில் எழுதாது – செயலில் பதிலைப் பதிவிட வேண்டுமென்ற ஆசை இருக்கவே, இதழின் தயாரிப்பிலும் இயன்றமட்டிற்குக் குட்டிக்கரணம் அடிக்க முனைந்தோம்! கிட்டத்தட்ட மொத்த மொழிபெயர்ப்பையுமே இதன் பொருட்டு redo செய்தோம் ; அட்டைப் படத்தில் ; தயாரிப்பில் ; சாத்தியமான நகாசு வேலைகளைச் செய்தோம் ! So ஜம்போ #1 உங்கள் கைகளை எட்டிப்பிடித்த வேளையில் இங்கே நான் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தேன் – reactions எவ்விதம் இருக்கப் போகின்றனவோ என்ற டர்ரில் ! ஆரம்பமே ஈனஸ்வரமாகிப் போயின் – ஜம்போவின் ட்ரவுசர் கழன்றிடுமே என்ற பயம் தான் ! பற்றாக்குறைக்கு அந்த ஜம்போ லோகோவுக்கும் உங்களது take என்னவாக இருந்திடுமோவென்றும் யூகிக்கத் தெரியவில்லை ! ஆனால் ஆபத்பாந்தவரான போனெல்லியின் பிரியமான புதல்வர் – என் பயங்கள் சகலத்தையும் துவம்ஸம் செய்த கையோடு உங்கள் அனைவரின் ஏகோபித்த கரகோஷங்களையும் ஈட்டித் தந்து ஜுலையை ஒரு அட்டகாசப் பொழுதாக்கி விட்டார் ! துளியும் சந்தேகங்களின்றி இந்த இதழொரு smash hit என்பதை உணர்ந்த போது – “TEX” என்ற அந்த மந்திரச் சொல்லின் மகிமை ஆயிரத்துப் பதினெட்டாவது தடவையாக ஊர்ஜிதமானது ! எனது துவக்கத் திட்டமோ ஜம்போவின் முதல் இதழாக James Bond-ஐக் களமிறக்குவதே! ஆனால் அதனை மொழிபெயர்க்கும் பொருட்டு பொறுமையாய் அமர நேரம் கிடைக்காதே போனதால் – அதனிடத்தில் “காற்றுக்கேது வேலி” யை உட்புகுத்தினேன் – அதன் மொழிபெயர்ப்பை நமது கருணையானந்தம் அவர்கள் செய்து தந்து விடுவாரே என்ற எதிர்பார்ப்பில் ! ஆனால் அதை ஏகமாய் redo செய்கிறேன் பேர்வழியென்று – James Bond-க்குச் செலவிடக் கூடிய அவகாசத்தை விட இரட்டிப்பு நேரம் செலவிட்டதெல்லாம் கிளைக் கதை! So ஒரு சோம்பலின் பலனாய் ஜம்போ #1 அதிரடித் துவக்கம் கண்டது தான் நிஜம்!

ஆகஸ்ட் ‘18 பற்றிய பேச்செடுத்தாலே உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி ஓடிடுமென்பதில் சந்தேகம் லேது ! ஈரோடு வாசக சந்திப்பு பற்றியும் ; இரத்தப் படலம் வண்ணத் தொகுப்பு ரிலீஸ் பற்றியும், வண்டி வண்டியாய்; லோடு லோடாய் எழுதி விட்டாச்சு தானே ? So புதிதாய் அதன் வரலாறு ; பூகோளம் பற்றியெல்லாம் எழுதுவதைக் காட்டிலும் – அந்த நாட்களின் அனுபவங்களை ஒரு பறவையின் பார்வையில் பார்த்தலே நலமென்றுபடுகிறது! துளியும் சந்தேகமின்றி – நமது இத்தனை ஆண்டுக் கூத்துப் பட்டறைகளின் போக்கில், வெளியிடுவதற்கு முன்பாகவும், பின்பாகவும்,  இது போன்றதொரு ஆரவாரத்தைக் கிளப்பிய இதழை நாம் பார்த்ததில்லை என்பது மெய்யே ! அச்சிட்டது பிசாத்து 800 பிரதிகளே என்றாலும் அவற்றை விற்பனை செய்திட நிச்சயமாய் சில மாதங்களாவது செலவாகும் என்றே எண்ணியிருந்தேன்! ஆனால் இத்தனை துரிதத்தில் கிட்டங்கியைக் காலி செய்யச் சாத்தியமானதன் புண்ணியம் முழுக்க முழுக்கவே உங்களையே சாரும் ! இதழின் கதையில் புதுமைகள் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் – அதன் making-ல் நாம் காட்டிய மெனக்கெடலை நீங்கள் தலையில் தூக்கிக் கொண்டாடியதே – அசுவாரஸ்யமாய் இருந்த விளிம்புநிலை வாசகர்களையும் சுழலினுள் ஈர்த்த காரணி ! அது நாள் வரைக்கும்... “ம்ம்ம்... பாத்துக்கலாம்... பாத்துக்கலாம்... ம்ம்ம்... வாங்கிக்கலாம்... வாங்கிக்கலாம்” என்றிருந்தோரையும் கூட ஒற்றை நாளில் சூடேற்றிட உங்களது சிலாகிப்புகள் எனும் மாயாஜாலமே உதவியது ! So எண்ணி 25 நாட்களில் நாம் கையைத் தட்டி விட்டு, டெண்ட் கொட்டகையைப் பிரிக்கும் அதிசயம் நிகழ்ந்தது! அதே சமயம் – “தொலைநோக்குப் பார்வையோடு” இதனில் ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை வாங்கிப் போட்ட நண்பர்களையும் ஒரு காரணமாகச் சொல்லிடலாம் – இந்த இதழ் காலியானதற்கு ! 😄

And இதற்கு முந்தைய மெகா இதழ் சார்ந்த நமது அனுபவப் பாடமுமே “இரத்தப் படலம்” சமாச்சாரத்தில் உதவியது என்பதில் ஐயமில்லை ! விலை குறைய உதவுமே!” என்ற எண்ணத்தில் 1300? 1400? பிரதிகளை அச்சிட்டு விட்டு – மூன்றரை வருஷங்களாய் குட்டியைச் சுமந்து திரியும் குரங்கு போல “மின்னும் மரணம்” இதழ்களை சுமந்து வருவது தலைக்குள் சைரன் ஒலிக்கச் செய்ய – இரத்தப் படலத்தின் பிரிண்ட்ரன்னை மூன்றிலக்கத்திலேயே நிறுத்திக் கொள்வதென்ற முன்ஜாக்கிரதை குடிகொண்டது என்னுள் ! Of course – மிகக் குறைவான நம்பரே என்பதால் ஒரு சிலருக்கு இந்த இதழ் கிடைக்காது போய் விட்டது தான்! ஆனால் இப்போது சகலமும் டிஜிட்டல் கோப்புகளே எனும் போது சில பல ஆண்டுகளுக்குப் பின்பாய் – “ரொம்பவே அத்தியாவசியம்" எனும் பட்சத்தில் மறு-மறு பதிப்பு சுலபமே ! இங்கே தான் நண்பர்கள் சிலரின் ”ஆவணப்படுத்தும் வேட்கை” நெருடலாகி நிற்கிறது ! 

மாதா மாதம் வெளியாகும் இதழ்களைப் படிக்கவே நேரம் குறைச்சலாகிக் கிடக்கும் சூழலில் – எல்லா இதழ்களையும் சுடச்சுட ஸ்கேன் செய்து pdf பைல்களாக்கிச் சுற்றில் விடும் சிலரது ஆர்வங்களை எவ்விதம் பார்த்திடுவதென்று எனக்குச் சுத்தமாய்ப் புரியவில்லை ! ”ஆவணப்படுத்துதல்” அவசியமாவது – ஒரு சமாச்சாரம் காணாதோ – அழிந்தோ போய் விடக் கூடுமென்ற அபாயம் இருக்கும் பட்சங்களில் மட்டுமே என்று சொல்கிறது எனது சிற்றறிவு ! ஆனால் தடித் தாண்டவராயன்கள் போல அத்தனை ஒரிஜினல் டிஜிட்டல் கோப்புகளையும் பத்திரப்படுத்திக் கொண்டு நாங்கள் இங்கே குந்திக் கிடக்க – வெளியாகும் இதழ்களை சூட்டோடு சூடாய் ஸ்கேன் செய்து சாதிக்கப் போவது என்னவோ - புரியவில்லை !? Maybe இன்னொரு ஐந்து+ ஆண்டுகளில் புதுச் சுற்று வாசகர்களின் பொருட்டு,குறிப்பிட்ட சில out of print இதழ்களை மறு பதிப்பு செய்து வெளியிட நமக்குள்ள வாய்ப்புகளை, வீதிக்கு வீதி சுற்றி வரும் இந்த வாட்சப் க்ரூப் pdf-கள் சிதைத்து விடக்கூடுமென்பதைப் புரிந்திடல் அத்தனை பெரிய சிரமம் தானா ? “நான் விக்கலியே... சும்மா சேகரிப்புக்குத் தானே?” என்று லாஜிக்கான கேள்விகளை(!!!) ஆவணப்படுத்தும் நமது ஆர்வல நண்பர்கள் முன்வைக்கலாம் ! ஆனால் நாங்கள் இப்போதைக்காவது ஜார்கண்டுக்கோ ; பீகாருக்கோ ; டும்பக்குட்டூவுக்கோ குடிமாறிப் போகும் அபிப்பிராயத்திலில்லை எனும் போது இந்த முயற்சிகளுக்கு முகாந்திரங்கள் தான் என்னவென்று புரியமாட்டேன்கிறது ! ரெண்டு ரூபாய்க்கும் ; மூன்று ரூபாய்க்கும் சாணித் தாளில் அச்சிட்டு ; நாங்களுமே பழைய பிரதிகளாய் மட்டும் ஆவணங்களை வைத்திருக்கும் ஆதிகாலத்து இதழ்களைப் பத்திரப்படுத்த, ‘தம்‘ கட்டிய முன்னாளது ஸ்கேனிங் படலங்களைக்கூட ஏதோவொரு கோணத்தில் புரிந்து கொள்ள முடிகிறது ! ஆனால் இதோ இந்த ஜுலையில் வெளியான “பனிமண்டல வேட்டையை”க் கூட ஸ்கேன் செய்து இப்போதே சுற்றில் விடும் பாங்கை என்னவென்பதோ ? நம் கிட்டங்கியிலுள்ள ஸ்டாக் தீருவதற்குள் நான் போய்ச் சேர்ந்து ஒரு மகாமகம் ஆகியிருக்கும் என்பது தான் யதார்த்தம் எனும் போது – இது மாதிரியான அவசியமிலா வியர்வைச் சிந்தல்கள், என்றைக்கோ ஒரு தூரத்து நாளில் நம் நிறுவனம் ரெண்டு காசு பார்க்கக் கூடிய வாய்ப்புகளை சுத்தமாய் நசுக்கிடும் சமாச்சாரங்களாகிடாதா ? இதோ “மின்னும் மரணம்” இதழைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கும் போதே – அதனையும் ஸ்கேன் செய்து சுற்றில் விட்டுள்ள அன்பர்களின் திசையை நோக்கித் திரும்பி தலையைச் சொரியத் தான் தோன்றுகிறது ! இவற்றையெல்லாம் இலை மறை-காய் மறைச் செயல்களாய்ச் செய்து வந்த நாட்கள் மலையேறி – ‘இதெல்லாம் ஒரு மேட்டரா?‘ என்ற ஜாலியோடு தத்தம் தொழில்நுணுக்கப் பாண்டித்துவங்களின் வெளிப்பாடுகளாய் இப்போது செய்து வருவதற்கு காமிக்ஸ் காதலென்று பெயருமல்ல ; நிச்சயம் ஆரோக்கியமான போக்குமல்ல ! ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உங்களின் திறன்கள் பயனாகிடும் பட்சத்தில், பலன்கள் நம் அனைவருக்குமே ! அதை மாத்திரம் ஞாபகப்படுத்திய கையோடு கிளம்புகிறேன் – ஜனவரியின் கார்ட்டூன் மேளாவினுள் பணியாற்ற ! 

‘போதனை பண்ணிடும் ரேஞ்சுக்கு நீ புத்தனல்ல!‘ என்ற ஒரு சில இலக்குகளில் நெற்றி நரம்புகள் புடைக்கலாமென்பதும் ; சில பல வாட்சப் க்ரூப்களில் எனக்கு surf excel குளியல் தரும் முஸ்தீபுகள் சுறுசுறுப்படையக்கூடும் என்பதும் புரிகிறது தான் ! ஆனால் புத்தனோ – பித்தனோ – இது நிச்சயம் போதனையல்ல ; நட்பின் வட்டங்களே சில தருணங்களில் தெரிந்தும், தெரியாதும் ஏற்படுத்திடும் சேதங்கள் சார்ந்த ஆதங்கமே ! தவிர, தனிப்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு வடிகால்கள் தேடிட, இவற்றையோரு யுக்தியாய்க் கையில் எடுப்பதும் எந்தவூர் ராஜ தந்திரமோ - தெரியவில்லையே ! நிதானமாய் ; உஷ்ணங்கள் குன்றியதொரு வேளையில், மேலுள்ள பத்தியை மறுக்கா படித்துத் தான் பாருங்களேன் – யதார்த்தம் புரிந்திடக் கூடும் ! ஆகச் சின்ன வட்டத்தின் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் முயற்சி இது guys ! "அட..ஜாலிக்காண்டி தானே ?!" என்றபடிக்கு குதிரையையே வேக வைத்து சூப் போட்டுப் பார்க்க வேண்டாமே என்பது மாத்திரமே எனது வேண்டுகோள் ! எப்படியோ – இந்த ஞாயிறை சுறுசுறுப்பாக்கிடவும் ; சில “அர்சசனைத் திறமைகளை” பட்டை தீட்டிக் கொள்ளவும் அடியேனின் மேற்படி வேண்டுகோள் உதவியிருக்குமென்ற நம்பிக்கையோடு நடையைக் கட்டுகிறேன் ! 

Before I sign out - இதோ டிசம்பரில் இதழ்களின் preview சார்ந்ததொரு முதல் பார்வை !! நம் அபிமான ஒல்லிப்பிச்சான் கௌபாயின் LUCKY CLASSICS-2 தயாராகி வருகிறது - 2 crackerjack மறுபதிப்புகளோடு !! வெளியான காலத்தில் - "மேடையில் ஒரு மன்மதன்" இதழும் சரி ; "அதிரடிப் பொடியன்" சாகசமும் சரி - பட்டையைக் கிளப்பிய கதைகள் !! அவற்றை இப்போது மேம்படுத்தப்பட்ட தரத்தில் வாசிக்கும் அனுபவம் நிச்சயம் ரம்யமூட்டும் என்பது உறுதி ! இதோ அந்த இதழின் அட்டைப்படத்துக்கான முயற்சிகளிலிருந்து ஒரு சாம்பிள் ! இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று ஓ.கே.வெனில் - உங்கள் தேர்வு ஏதுவாக இருக்கும் folks ?


Bye guys! See you around! 

Tuesday, November 06, 2018

ஒரு தூரத்து தீபாவளியன்று...!!

நண்பர்களே,

வணக்கம். நமது ரேஞ்சர் குழுவினரிடம் இரவல் வாங்கிய வரிகளோடு பதிவுக்கொரு துவக்கம் தருவதே பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் !! "அனைவருக்கும் அதிரடியான..அதகளமான...ஆசமான...அற்புதமான...அட்டகாசமான...தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக !! இல்லமெங்கும் சந்தோஷமும், ஒளியும் பரவட்டும் - நிலைக்கட்டும் !!

ஒவ்வொரு தீபாவளிக்கும் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்குப் பின்னே திரும்பிப் பார்த்த வண்ணம் - 1984 தீபாவளி மலரிலிருந்து, தொடர்ந்திட்ட ஒவ்வொரு memorable ஸ்பெஷல் இதழ் பற்றியும் சிலாகிப்பது நமக்கொரு வாடிக்கை !! 'அந்த நாள் போல வருமா ? ; அந்தக் கதைகள் போல் வருமா ?' என்று சப்புக் கொட்டிக் கொள்வதுமே இந்நேரத்து template தானன்றோ ? ஆனால் இந்தவாட்டியும் அதே வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அதே சேரன் போல, அதே ரிவர்ஸ் கியரைப் போடாது -  ஒரு மாறுதலுக்கு, நமது சட்டித் தலையனின் கால இயந்திரமான "கோட்டை"யை இரவல் வாங்கிக் கொண்டு ஒரு பத்துப் பன்னிரண்டு  வருடங்கள் முன்னே போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்றியது !! Maybe அடுத்த decade-ல் நமது தீபாவளி மலர் திட்டமிடல் எவ்விதம் இருக்குமோ என்று தான் யோசித்துப் பார்ப்போமே ? 

இன்னுமொரு யுகமாயினும் நாம் அந்த மஞ்சள் சொக்காய் மனுஷன் மீதான மையலைத் தொலைத்திருக்க மாட்டோம் என்பதை யூகிக்க ரின்டின் கேனுக்கே சாத்தியப்படும் எனும் போது-  2030-ன் தீபாவளி மலருக்கான probables பட்டியலின் உச்சியில் TEX என்று கொட்டை எழுத்தில் இருக்குமென்பது  திண்ணம் ! நிச்சயமாய் அதற்குள்ளாக போனெல்லி இன்னொரு 400 இதழ்களையாவது டெக்ஸ் தொடரில் போட்டுத் தாக்கி,  அதகளம் செய்திருப்பார்கள் எனும் போது - TEX 1000 என்ற ராட்சச மைல்கல்லை தொட்டிருப்பார்கள் ! நாமும் 'தஸ்ஸு..புஸ்ஸு..' என்று மூச்சிரைக்கவாவது ஒரு 1500 பக்க  TEX மேக்சியோ-மேக்சி ஆல்பத்தின் முஸ்தீபில் இறங்கி, வழக்கம் போலவே விழி பிதுங்கி நின்று கொண்டிருப்போம் ! அந்நேரத்திற்குள் கதாசிரியர் மௌரோ போசெல்லி டெக்சின் இளம் பிராயத்து தேடல்களை இன்னமும் துல்லியமாய்ப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் எனும் போது - "சிங்கத்தின் சிறுவயதில்.." என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை !! நமது இத்தாலிய ஓவியர் தனது சுகவீனத்திலிருந்து எப்போதோ மீண்டு, நமக்கு நிறையவே சித்திரங்களை போட்டுக் கொண்டிருக்க - ஒரு ராப்பரை அவரும், பின்னட்டையை நமது வயோதிக மாலையப்பனும் போட்டிருப்பார்கள் ! நானோ மூக்கில் ஒரு கண்ணாடியை மாட்டிக் கொண்டு - காமிக் லவர் பரிந்துரைத்த "சாவுக்கு சங்கு" என்ற தலைப்பை ஞாபகம்  வைத்துக் கொண்டு, அதையே மெபிஸ்டோ சாகசத்துக்கான தலைப்பாக்கி விட்டு, " மரணதேவனுக்குப் பிரியமான பிரதிநிதி நானாக்கும் !! பரலோகத்தில் பிளாட் போட்டுத் தரும் நிபுணன் நான் !!" என்ற ரீதியில் அப்போதும் பன்ச் எழுதிக் கொண்டிருப்பேனோ என்னவோ ?! 'மனுஷன்  ரிட்டையர் ஆனாலும் - பேனாவுக்கு விடுதலை தர மாட்டாரோ ?" என்று அப்போதைய எடிட்டர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கக்கூடும் ! 

அந்நேரத்திற்கு black & white என்பதெல்லாம் முழுசுமாய்க் காலாவதியாகிப் போயிருக்காதா - என்ன ?  So முழுசாய் 1500 பக்கங்களும் வண்ணத்தில் தக தகத்திட வேண்டுமென்று திட்டமிட்டிருப்போம் ! டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும்  ! சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் ! And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் ! "வோ'...; ஆகட்டும் இரவுக் கழுகாரே..' என்ற ரீதியில் மட்டும் சிக்கனமாய்ப் பேசிக் சுற்றி வரும் டைகருக்குமே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு - பழங்குடி மக்களின் சில பல வரலாற்றுத் தகவல்களோடு பின்னிப் பிணைந்த சாகசங்களும் உருவாகிடக் கூடும் ! அப்புறம் அந்த "வன்மேற்கு மாத்திரமே " என்ற ஆடுகளம் ஏற்கனவே சிறுகச் சிறுக மாற்றம் கண்டு, கனடா..மெக்சிகோ ; க்யூபா ; ஆர்ஜென்டினா என்று விரிந்து நிற்பது - மேற்கொண்டும் சிறகு விரித்து - ஐரோப்பாவில் நம்மவர்கள் கால் பதிப்பது போலவும் உருமாற்றம் கண்டிடலாம் !! யார் கண்டது - இத்தாலியிலேயே அவர்களை சாகசம் செய்யச் செய்து (சு)வாசிக்கும் நாளொன்று புலர்ந்திடவும் கூடுமோ ? எது எப்படியோ - கீழேயுள்ள இந்தப் பகடியான உருவம் அன்றைக்குமே நம்மவருக்கு இருந்திடாது - அப்போதும் ஆணழகராகவே மிளிர்ந்திடுவார் என்று தைரியமாய் நம்பலாம் ! 

ஒருகட்டத்தில் TEX spin-offs என கார்சனுக்கு ; கிட் வில்லருக்கு ; டைகர் ஜாக்குக்கு - என்றும் தனித்தனியாய்த் தொடர்கள் உருவாகிடக் கூடுமோ ? அவ்விதமாகும் பட்சத்தில் ஒரு பாக்ஸ் செட்டில் - 4 ரேஞ்சர்களின் சாகசங்களடங்கிய ஆல்பங்களைத் திணித்து - THE ULTIMATE COLLECTION என்று பெயரிட்டிட மாட்டோமா - என்ன ? Of course - "டெக்ஸ் ஓவர்டோஸ்" என்று ஒலிக்கும் குரல்கள் அன்றைக்கும் இருக்கும் தான் ; ஆனால் இன்றைக்குப் போலவே, அன்றைய பொழுதிலும் - கூரியர் டப்பாவினை உடைத்த கையோடு முதல் புக்காக டெக்சின் சாகஸத்தைத் தான் அவர்கள் எடுத்துப் புரட்டுவார்கள் என்பதும் நிச்சயம் ! 

அப்போதெல்லாம் கூரியர்கள் ரொம்பவே personalize ஆகிப் போயிருக்க, GPS டிராக்கிங் சகிதம் தேடிடச் சாத்தியமானதாக ஆகியிருக்கக் கூடும் ! அப்போதும், அதே புல்லட் வண்டியை   உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி   கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - "என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் !" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் ! நமது பொருளாளர்ஜியோ - "சங்க இலக்கியமும், டெக்சின் மீதான மையலின் காரணமும்" என்றொரு நெடும் ஆராய்வை சமர்ப்பிக்க - அதன் மீதான அலசல்கள் சும்மா தெறித்து ஓடும் !!  அப்போதுமே - "இந்த 1500 பக்க புக்கைப் படிக்க உங்களுக்கு எத்தனை நேரமாகிறது ? சித்தே நேரத்தைக் குறித்துச் சொல்லுங்களேன் !" என்று நான் தலையை நுழைக்க - சோடாப்புட்டிக் கண்ணாடிகளோடே வலம் வரக் கூடிய  முக்கால்வாசி நண்பர்கள் - "8 மணி நேரம்...10 மணி நேரம்" என்று பதிலளிக்கக் கூடும் ! எத்தனை தம் பிடித்தாவது புக்கை முழுசுமாய்ப் பிடிக்காது தூங்க மாட்டோம் என்ற மட்டுக்கு உறுதியைச் சொல்லலாம் தானே ?! 

அந்நேரத்துக்குள் எதிர்காலம் சார்ந்த கதைகளுக்குமே  நாம் சிறுகச் சிறுகத் தயாராகியிருப்போம் என்றும் ஒரு பட்சி சொல்கிறது என் காதில் ! கரூர் டாக்டர் ராஜா மன்றாடிக் கோரி வரும் வலெரியன் தொடரானதோ ; The Incal தொடரோ அப்போது நம்மிடையே சூப்பர்ஹிட் தொடர்களாக வலம் வந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக் கூடும் !! So ஒரு வலெரியன் மெகா இதழும் ; Incal தொகுப்பும் கூட தீபாவளி மலராய் தட தடக்கும் வாய்ப்புகள் ஏகம் என்பேன் ! 'தலையிலாப் போராளி' சைசில், ஹார்டுகவரில்..முழு வண்ணத்தில்...ஒரு பாக்ஸ் செட்டோடு வெளியாகிடக் கூடிய இந்த ஆல்பம் "இரத்தப் படலம்" ஏற்படுத்திய சாதனைகளையும் முறியடிக்கக் கூடும் ! அதே சமயம் - "ச்சை...எனக்கு ராக்கெட் விடக் கூடப் புடிக்காது ; இந்த அழகிலே ராக்கெட்டிலே போற மனுஷாள் கதைலாம் நான் கேட்டேனா ?" என்று ஒரு கணிசமான அணியானது முகம் முழுக்க கடுப்பைச் சுமந்து நிற்கக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாயிருக்கக் கூடும் ! அந்நேரத்துக்கு FB ; வாட்சப் க்ரூப்கள் என்பனவெல்லாம் புராதனங்களாகிப் போயிருக்க, அடுத்த கட்டமாய்  face to face chat-களை பதிவு செய்து அவற்றை வலையில் உலாவிடச்  செய்யும்  app-கள் எக்கச்சக்கமாய் இருந்திடக்கூடும் ! So படித்த கையோடு ஆங்காங்கே குத்தாட்டம் போடும் அழகுகளையும் ; சும்மா "கிழி..கிழி..கிழி.."என்று தொங்கப் போடும் ரம்யங்களையும் நாம் ரசிக்க இயலும் ! 

அப்புறம் நம்மிடையே கிராபிக் நாவல் காதலானது கொஞ்சம் கொஞ்சமாய் வீரியமேறி - அப்போதைக்கு ஒரு அசைக்க இயலா ரசனையாய் மாறிப் போயிருப்பினும் வியப்பதற்கில்லை !! "எட்டுத் திக்கிலிருந்தும் உருவாகும், எவ்வித கி.நா.க்களும் இங்கே படித்து ; சுவைத்து ; ரசித்து ; ருசித்து ; அலசப்படும் !" என்று போர்டு வைக்காத குறையாக - கிராபிக் நாவல்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் !! JAYBIRD என்ற பெயரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் வெளியான ஒரு சித்திர மெகா விருந்தைக் கூட ருசி பார்க்கும் தில் அந்நாளில் நமக்கு வந்திருக்குமோ - என்னவோ ? மொத்தக் கதையிலும் பத்தே வரிகளுக்கு மிகுந்திடாது வசனங்கள் !! ஒரு பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டினுள் வசிக்கும் 2 சிறு குருவிகள் தான் இந்த நாவலின் பாத்திரங்களே ! சுகவீனமாயுள்ள தாய்க் குருவி, மிரண்டு போயிருக்கும் தனது பிள்ளையை வீட்டை விட்டு வெளியேறிட விடாது, வீட்டினுள்ளேயே வைத்திருக்கப் பிரியப்படுகிறது ! அவற்றின் நம்பிக்கைகள் ; பயங்கள் ; குழப்பங்கள் என்றொரு  இருண்ட வாழ்க்கையினை ஒரு  சித்திரப் பிரளயத்தில் சொல்ல முற்படும் ஆல்பமிது ! ஒன்றரை வருடங்களாய் இதனை எடுத்துப் புரட்டுவது ; பக்கங்களைப் பார்த்துக் கொண்டே யோசிப்பது ; அப்புறமாய் மீண்டும் பீரோவுக்குள் வைத்துப் பூட்டுவது என்றான வாடிக்கைக்கு அந்த தூரத்து ஆண்டினில் நிச்சயமாய் மாற்றமிருக்கும் என்று தோன்றுகிறது !! 
அந்நேரத்துக்கு "இரத்தப் படலம்" சுற்று # 5 துவங்கியிருக்க, "நண்பர் XIII-ன் பூர்வீகம் ஆஸ்திரேலியாவில்" என்றொரு knot-ல் கதை புதியதொரு திக்கில் தடதடத்துக் கொண்டிருக்கக் கூடும் ! அந்நேரத்துக்கு மேற்கொண்டும் ஒரு ஏழோ-எட்டோ பெயர்கள், நம்மவருக்குச் சூட்டப்பட்டிருப்பது நிச்சயம் ! And மெயின் கதைத் தொடரின் துரிதத்துக்கு ஈடு தரும் விதமாய் spin -offs களுமே துவம்சம் பண்ணிச் சென்றிட - "மறுக்கா XIII  - மொத்தமாய் ; முழுசாய் ; பெருசாய் !!" என்ற கோரிக்கை வலுப்பெற்றிடக் கூடும் ! So "இரத்தப் படலம் - ஒரு புதிய பார்வை !!" என்ற பெயரில் 2030-ன் தீபாவளி மலர் தயாராகிடும் சாத்தியங்களையும் ஒரேயடியாய் தள்ளுபடி செய்வதற்கில்லை !! 

And கதாசிரியர் வான் ஹாம் அப்போதும் அட்டகாசமாய் உட்புகுந்து - XIII தொடருக்கு அதிரடியாய்ப் பங்களிப்புகளைத் தொடர்ந்திடவே செய்வார் - தற்போது அறிவித்திருக்கும் "புலன்விசாரணை - II"-ன் பாணியினில் !! And அன்றைக்குமே நமக்கு மூச்சிரைக்கும் - J VAN HAMME என்ற அந்தப் பெயரினை ஒரு பிரெஞ்சு ஆல்பத்தின் முகப்பில் பார்த்திடும் போதெல்லாம் !! 
10 ஆண்டுகளின் தூரத்தில் - கார்ட்டூன்கள் பாகுபாடுகளின்றி ரசிக்கப்படக்கூடியதொரு ஜானராக புரொமோஷன் கண்டிருக்கும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை ! இதோ - தொடரவிருக்கும் ஒற்றை ஆண்டை - அரை டஜன் கார்டூன்களோடு மட்டுமே கரை கடக்கவிருக்கிறோம் எனும் போதே 'பளிச்'என்று தெரிந்து விடும் - நாம் எதை miss செய்கிறோமென்று !! So நிச்சயமாய் 2030-களின் தீபாவளி மலர் - ஒரு "ALL GENRE SPECIAL " என்று அமைந்திருந்து - ஒரே பாக்ஸ் செட்டினுள் - கார்ட்டூன் ஆல்பம்ஸ் ; TEX மெகா இதழ் ; கிராபிக் நாவல் என்றிருப்பினும் வியப்பு கொள்ள வேண்டியிராது என்று தோன்றுகிறது!

இன்றைய கனவுகளே, நாளைய நிஜங்கள் என்பதை எண்ணற்ற தடவைகள் பார்த்து விட்டோமெனும் போது - தகிரியமாய்க் கனவுகளில் திளைப்பதில் தப்பில்லை என்பேன் !! இதோ - இந்தப் பண்டிகை நாளில் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட பிற்பாடு - நீங்களும் உங்களின் (காமிக்ஸ்) கனவுகளை இங்கே களமிறக்கித் தான் பாருங்களேன் ? சும்மா-சும்மா பின்னே திரும்பிப் பார்த்துப் பெருமூச்சிடுவதற்குப் பதிலாய், இந்த looking ahead பாணியானது  நமக்கொரு  ஆரோக்கியமான மாற்றமாய் அமைந்திட்டால் - all will be well !! 

Have a safe Diwali all !!! Bye & see you around !!

P.S : இன்னுமொரு LMS புக் கைவசமுள்ளது - இதோ இந்தச் சித்திரத்துக்குப் பொருத்தமாய் கேப்ஷன் எழுதும் வெற்றியாளருக்கு !! Go for it guys !! 

Wednesday, October 31, 2018

இதழ்கள் 3 ....எதிர்பார்ப்புகள் 300 ..!

நண்பர்களே,

வணக்கம். இம்முறை ஆபீசில் மாமூலான அந்த டெஸ்பாட்ச் தின ரணகளமில்லை ; "DTDC க்கு ஆட்டோ போயிடுச்சா ? ST -லே எப்போ புக்கிங் பண்ணுவாங்களாம் ? Professional ரசீது வாங்கியாச்சா ? அச்சச்சோ....இது ரிஜிஸ்டர் பார்சலாக்கும் ; இதை யாரு கூரியர் கட்டில் வைத்தது ? பாரின் பார்சல் பேக்கிங் ஆச்சா ?" என்று அப்பப்போ வெட்டி ஆபீசராய் நான் சவுண்ட் கொடுக்க முகாந்திரம் இன்றைக்கு இம்மி கூட இருக்கவில்லை !! சில பல நாட்களுக்கு முன்னே தயாராகிக் காத்துக் கிடந்த இதழ்களை நமது அச்சகப் பணியாளர்கள் ஒரு நாள் முன்னதாகவே நீட்டாகப் பேக் செய்து தந்திருக்க, இன்று காலை வரிசையாய் சகலமும் கூரியர்களை நோக்கிப் புறப்பட்டு விட்டன ! So புலர்ந்திடவுள்ள நவம்பரை நம் இதழ்களோடே வரவேற்கத் தயாராகிக் கொள்ளுங்கள் guys !! ஆண்டின் இறுதி stretch-ன் அட்டவணை செம இலகுவாய் இருப்பதன் புண்ணியத்தில் - ஜாலியாய் கையை வீசிக் கொண்டிருக்கிறேன் !!

இம்முறை இதழ்கள் 3 மட்டுமே என்றாலும், என்னுள் இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்புகளைக்  கிளப்பியுள்ளன! 

தீபாவளி மலர் true to form - உங்களின் டெக்ஸ் காதலுக்குத் தீனி போடுமா ? டைகரின் flashback - நாம் தந்துள்ள பில்டப்புக்கு நியாயம் செய்திடுமா ? என்ற ரீதியில், TEX ட்ரிபிள் ஆல்பத்தில் என்னுள் கேள்விகள் ! 

நீலப் பொடியர்களின் சமாச்சாரத்திலோ - கேள்விகளின் பரிமாணமோ வேறொரு விதம் ! SMURFS களுக்கு maybe தற்காலிகமாய்  "சுப மங்களம்" பாடவிருக்கும் இந்த இதழ், திடு திடுப்பென ஏதேனும் மாயம் செய்திடுமா ? உங்களிடையே பரவலாய் ஏதேனும் அதிரடி மனமாற்றங்களைக் கொணர்ந்திடுமா ? என்ற ஏக்கங்கள் உள்ளுக்குள் !!

007-ன் சமாச்சாரத்திலோ முற்றிலும் வேறொரு வித எதிர்பார்ப்பு ! அட்டைப்படம் ; சித்திரங்கள் ; கலரிங் ; பிரின்டிங் என ஜம்போவின் இந்த இதழ் # 3 செம கச்சிதமாய் அமைந்திருப்பதாய் என் கண்களுக்குத் தெரிந்தாலும் -  செம ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களான உங்களிடம் அதனை ஒப்படைத்த கையோடு - உங்களின் reaction-களை கண்டறிந்திடும் ஆர்வத்தை அடக்க இயலவில்லை ! ஜேம்ஸ் பாண்டின் முற்றிலும் புதுமையான அவதாரை நீங்கள் ரேட் செய்திடல் தானே நமக்குப் பிரதானம் ? So காத்திருப்போம் - உங்களின் முதலாவது ;.இரண்டாவது, மூன்றாவது ரியாக்ஷன்களுக்கு !!

இம்முறை 2019-ன் அட்டவணையை சந்தாதாரர்கள் அத்தனை பேருக்கும் மட்டுமன்றி - ஆன்லைனில் ; உள்ளூர்க் கடைகளில் வாங்கிடக் கூடிய வாசகர்களுக்குமே கிடைக்கும் விதமாய்த் திட்டமிட்டுள்ளோம் ! So இம்மாத SMURFS இதழோடு அட்டவணை 2019-ம் இடம் பிடித்திருக்கும் ! Try not to miss it folks !! 

தீபாவளிக்கு ஒற்றை வாரம் கூடப் பாக்கியில்லை எனும் போது - எங்கள் நகரம் இந்நேரம் தூங்கா நகரமாய் உருமாறியிருக்க வேண்டும் தான் !! ஆனால் உச்ச நீதி மன்றத்தின் பட்டாசு சார்ந்த தீர்ப்புகள் - உற்சாகங்களை சற்றே மட்டுப்படுத்தியுள்ளது போலத் தெரிகிறது ! ஊருக்குள் ; கடை வீதிகளில் ; பஜாரில் இன்னமும் பண்டிகைக்கான அந்த உத்வேகத்தைப் பார்த்திட இயலவில்லை ! But surprise ....surprise ..ஊரைச் சுற்றிலுமுள்ள அத்தனைப் பட்டாசுக் கடைகளிலும் போன வாரயிறுதி முதலாகவே செம கூட்டம் ; செம விற்பனை !! காத்திருக்கும் வாரயிறுதியில், இன்னமும் அமர்க்களமாய் விற்பனையாகிடுமென்ற நம்பிக்கையில் வணிகர்கள் காத்துள்ளனர் !! Fingers crossed !!  

ஒரு புஸ்வானத்தையே ஏழடி தொலைவிலிருந்து கொளுத்த முற்படும் சூரப்புலியான எனக்கு, தனிப்பட்ட முறையில் பட்டாசுகள் மீது மையல் லேது ; ஆனால் இந்தப் பகுதிகளின்  பொருளாதாரமே, இந்தத் துறையைச் சார்ந்திருக்கும் போது - அவற்றின் வெற்றிகளிலும், தோல்விகளிலுமே நகரின் எதிர்காலமும் கலந்துள்ளது ! Crossroads of life for குட்டி ஜப்பான் ! ஆனால் கடந்த சனி & ஞாயிறின் விற்பனைகளை ஒரு வழிகாட்டியாய் எடுத்துக் கொள்வதாயின் - பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள் இம்முறையும் !! Bye guys ! See you around !
P.S : இதழ்கள் ஆன்லைனில் லிஸ்ட் ஆகி ரெடியாகக் காத்துள்ளன : http://lioncomics.in/monthly-packs/547-november-2018-pack.html

Sunday, October 28, 2018

ஒரு சோம்பலான ஞாயிறின் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். அட்டவணை 2019 ; 2020 என்று எங்கெங்கோ நாம் பயணம் போகியிருக்க - 'மக்கா...இங்கே நாங்க குத்துக்கல்லாட்டம் இருக்கிறதை மறந்துப்புடாதே !!" என்று நவம்பர் & டிசம்பர் இதழ்கள் உரக்கக் கூவுவது போலொரு பீலிங் எனக்கு ! And அதிலுமே "தீபாவளி மலர் " ; லக்கி கிளாஸிக்ஸ் 2 ; ஜேம்ஸ் பாண்ட் (ஜம்போ) ; Action Special என்று சில பல ஸ்பெஷல் இதழ்கள் இந்த 2 மாதங்களுக்கென காத்திருக்க - சுடப் போகும் அடைக்காக, சுட வேண்டிய தோசையை மறந்து விடப்படாது !! என்ற உறுத்தல் உள்ளுக்குள் !! So first up - நவம்பர் இதழ்களின் updates !

ரெகுலர் சந்தாவினில் இம்முறை இரண்டே இதழ்களே - சந்தா B சார்பாய் - டெக்சின் தீபாவளி மலர் +  சந்தா C-ன் சார்பாய் one last time (at least for now !!) - நமது நீலப் பொடியர்களின் "காசு...பணம்...துட்டு..!" நடப்பாண்டில் திட்டமிடல்களை சற்றே கூர்ந்து நோக்குபவராய்  நீங்களிருக்கும் பட்சத்தில் - "அட்டவணையில் இல்லாத இதழாச்சே ? இது எப்படி உள்ளே ? " என்று புருவத்தை உயர்த்துவது உறுதி ! 2019 எனும் தென்னையில் கொட்டிய தேளின் புண்ணியத்தில் நடப்பாண்டில் லேசாய் நெரி கட்டியுள்ளது - வேறென்ன ?!!  சுட்டிப் புயல் பென்னியின் இடத்தில smurfs களமிறங்குகிறார்கள் - தவிர்க்க இயலா காரணங்களினால் ! 

3 ஆண்டுகளுக்கு முன்பாய் smurfs கதைகளை வெளியிடத் தீர்மானித்து உரிமைகளைப் பெற்ற போது மொத்தம் நாம் வாங்கியது 8 கதைகள் ! அவற்றைத் தொடரும் ஆண்டுகளில் வெளியிடுவது & 2018 -ல் அடுத்த batch கதைகளை கொள்முதல் செய்வது என்றும் ஏற்பாடு ! அவர்களிடம் பேசி விட்டு புறப்பட்டவனுக்கு, சுட்டிப் புயல் பென்னியையுமே கொசுறாய் சேர்த்து வாங்கி வெளியிடுவோமே என்ற ஆசை தலைதூக்கிட - பிடித்த பிடியில் பென்னியின் தொடரின் முதலிரண்டு கதைகளையும் காண்டிராக்டினுள் நுழைத்து - 8 smurfs + 2 பென்னி = ஆக மொத்தம் 10 கதைகள் என்று திருத்தி அமைக்கச் செய்தேன் ! ஊருக்கும் திரும்பி ; பொடியர்களும் களம் கண்டு ; அப்புறமாய் பென்னியும் அறிமுகமாகிட - 2016 ; 2017 & நடப்பாண்டினில் இதுவரையிலும் 7 smurfs + 2 பென்னி கதைகளை வெளியிட்டு விட்டோம் ! 'சரி...எப்படியும் 2018 -ல் அடுத்த set கதைகளைக் கொள்முதல் பண்ணுவோம்லே...அதிலே இருந்து பென்னியின் ஆல்பம் # 3 -ஐ எடுத்து நடப்பாண்டு டிசம்பரில் வெளியிட்டுக் கொள்ளலாம் !" என்ற நினைப்பில் பென்னியை 2018-ன் அட்டவணையில் கோர்த்திருந்தேன் ! ஆனால் smurfs & பென்னி பக்கமாய் ஆதரவுக் காற்று மிதமாகவே வீசிடுமென்றோ  - சித்தே அவர்களுக்கொரு பிரேக் தரும் நிலை எழுமென்றோ  நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை ! So புதுக் கதைகளை வாங்காத நிலையில் கைவசமிருந்த smurfs ஆல்பம் # 8-ஐ வெளியிடுவதைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை ! So நீலக் குட்டி மனுஷாளை இன்னொருவாட்டி சந்திக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நாமும் ; நம்மோடு கரம் குலுக்கக் கிட்டியிருக்கும் வாய்ப்பினை அவர்களும் உருப்படியாய்ப் பயன்படுத்திக் கொண்டிட முடிந்தால் ஷேமமே என்று தோன்றுகிறது ! எப்போதும் போலவே -  ஒரிஜினலையே அட்டைப்படமாக்கியுள்ளோம் - நமது எழுத்துருக்களின் சேர்க்கையோடு மட்டுமே ! 

கதையைப் பொறுத்தவரையிலும் புதிதாய் என்னவிருக்கப் போகிறது - நான் சொல்லிட ? As always - மனிதனின் வாழ்வியல் முறைகளின் முரண்களை அட்டகாசமாய்ப் பகடி செய்யும் பாணி இம்முறையும் தொடர்கிறது !! இதற்கெனப் பயன்படுத்தப்படும் நாயகர்கள், சுட்டு விரல் சைசிலான ஆசாமிகள் என்பதாலோ- என்னவோ ; நம்மில் நிறைய பேருக்கு இவர்கள் கதைகளில் பெருசாய் சாரம் இருக்காதென்றே ஒருவித நம்பிக்கை ஏற்கனவே குடி கொண்டுள்ளது ! So கதையோடு ஒன்றிட இயலாது தடுமாறுகின்றனர் ! "காசு...பணம்..துட்டு.." அந்த நம்பிக்கையைத் தகர்க்க முற்படும் ஒரு கடைசி அஸ்திரமென்று வைத்துக் கொள்வோமே ?!! ஏதேனுமொரு அதிசயம் நிகழ்ந்து, ஒற்றை ராவினில் smurfs காதல் நம்மிடையே பிரவாகமெடுப்பின் - பெல்ஜியத்துக்கான அடுத்த பிளைட்டில் ஷ்டாண்டிங்கிலாவது ஒரு டிக்கெட்டைப் போட்டுக் கிளம்பி விடுவேன் !!  And நிறைய நண்பர்களுக்கு அந்தப் பொடி பாஷை பெரும் நெருடலை தந்திடுவதால் - இம்முறை அதை 90% ஓரம் கட்டி விட்டோம் ! இயன்றமட்டிலும் சகஜ நடையிலேயே கதை பயணிக்க முயற்சித்துள்ளோம் ! So இனி தீர்ப்பு - ஜூரிவாள் கைகளில் !! பார்த்துப் பண்ணுங்கோ sirs !! "பண்ணிடாதீங்கோ !!"
And இம்முறை பிரிண்டிங்கும் தீயாய் அமைந்துள்ளது - நீல லோகத்தின் ரம்யத்தை நம் கண்களுக்கொரு விருந்தாக்கிட ! அது மாத்திரமின்றி - 2019-ன் கலர் அட்டவணையின் ஒரு பிரதியும் இந்த இதழோடு உண்டு - கடைகளில் வாங்கிடக் கூடிய வாசகர்களுக்கும் சேர்த்தே ! So இந்த இதழை வாங்கச் செய்திட இதற்கு மேலும் தடிப் போடுவதாயின் - சிபாரிசுக்கு விராட் கோலியைத் தான் கூட்டி வர வேண்டியிருக்கும் !! Give it a try folks - an unbiased try !! Please !!

நவம்பரின் பார்ட்டி # 2 - இது போல் கெஞ்சிடக் கூடிய ஆசாமியே கிடையாது ! :"இப்போ இன்னான்றே ?" என்றபடிக்கே ஆகிருதியாய் முன்னே நின்றாலே, maybe ஒரு பெங்களூர்வாழ் நண்பர் தவிர்த்து, பாக்கி அத்தனைப் பேருமே அந்த மஞ்சள் சட்டைக்காரரின் கட்சிக்கு பச்சக் பச்சக் என்று வோட்டு போட்டு விடுவோமென்பதில் ஏது சந்தேகம் ? "காதலும் கடந்து போகும்" ஒரு அக்மார்க் டெக்ஸ் சாகசம் ! இதோ அதன் அட்டைப்படத்தின் முதல் பார்வை ! 
முன் + பின் அட்டைகள் ஒரிஜினல்களின் வார்ப்புக்களே - மெலிதான வர்ண மாற்றங்களோடு மட்டும் ! And இதுவொரு MAXI Tex குண்டு சாகசமெனும் போது 341 பக்க புஷ்டியான ஆக்ஷன் மேளா waiting !! இது உட்பக்கங்களில் ஒன்றிரண்டு :

கூரியரில் இதழ் # 3 ஆக இடம்பிடிக்கவிருப்பது ஜம்போவின் JAMES BOND !! மீண்டுமொருமுறை சொல்லி விடுகிறேன் guys - "பனியில் ஒரு பிரளயம்" - ஜம்போ காமிக்சின் வெளியீடு மாத்திரமே ! So இதையும் ரெகுலர் சாந்தாவின் ஒரு அங்கமாய் கருதி - "புக்கைக் காணோம்"  என்று நம்மவர்களை கட்டி வைத்து உரித்திட வேண்டாமே - ப்ளீஸ் ? அதே போல - "நான் ரெகுலர் சந்தாவில் உள்ளேன் ; ஜம்போவிற்கு  சந்தா கட்டவில்லை ! ஆனால் இப்போது ரூ.200 அனுப்பியிருக்கிறேன் ; ஜேம்ஸ் பாண்டை என் கூரியரில் இணைத்திடுங்கள் !" என்ற கோரிக்கைகளும் நடைமுறை சாத்தியமற்றவை guys !! தனியாய் அதற்கெனவொரு ஆர்டர் செய்திடத் தான் தேவைப்படும் ! ஸ்டெல்லாவும் தாய்மையின் காரணமாய் பணியிலிருந்து விலகியிருக்க - நமது தற்போதைய front office முழுக்கவே new look கொண்டது ! So இந்த திடீர் திடீர் request-களை பூர்த்தி செய்திடல் இப்போதைக்கு அவர்களுக்கு சிரமமே !!

அதே போல இன்னுமொரு தகவல் + கோரிக்கையும் folks :

உள்நாட்டுச் சந்தாவாயினும் சரி ; அயல்நாட்டுச் சந்தாவாயினும் சரி - உங்களது தேர்வுகளுக்கேற்ப சரியான தொகைகளை மட்டுமே இனி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ! உருட்டுப் பொதியாய் ஒரு தொகையை அனுப்பி விட்டு, ஒவ்வொரு மாதமும் கணக்கு வைத்துக் கொள்ளும் பாணிகளில் சிக்கல்கள் நாக்குத் தள்ளச் செய்கின்றன ! So இனி அந்த roundsome தொகைகள் சார்ந்த பாணிகளைத் தொடர்ந்திட மாட்டோம் என்பதால், உங்கள் புரிதல்களைக் கோருகிறோம் - ப்ளீஸ் !! 

அப்புறம் நவம்பரின் இதழ்கள் எல்லாமே ரெடியாய் உள்ளன !! வரும் புதனன்று (31 அக்டோபர்) அவை இங்கிருந்து கிளம்பிடும் - நவம்பரின் முதல் தேதியில் உங்களை எட்டிப் பிடித்திட !! So தீபாவளிக்கு வெகு முன்பாகவே போனெல்லியின் அதிர்வேட்டுக்கள் உங்கள் கைவசமிருக்கும் guys !! And இந்த ரகப் பட்டாசுகள் மாசுக் கட்டுப்பாட்டின் கண்காணிப்பில் வராதென்பதால் ; உச்ச நீதிமன்றமும் கண்டு கொள்ளாது !! So நீங்கள் இஷ்டப்படும் போதெல்லாம் இந்த வாண வேடிக்கைகளை அரங்கேற்றலாம் !! 

Before I sign off - ரொம்ப நாள் கழித்தொரு  caption contest ! இதோவுள்ள படத்துக்கேற்ப செமையாய் டயலாக் எழுதும் நண்பருக்கு ஒரு LMS புக் நம் அன்பளிப்பு !! And வெற்றி பெரும் டயலாக்கை இங்கேயே, உங்களுள் ஒருவர் தீர்மானம் செய்திடட்டுமே ? Maybe காமிக் லவர் ? அல்லது பொருளாளர் ?  Bye all....see you around ! Have a cool Sunday !
P.S : ஒரு கோரிக்கையும் ; ஒரு கேள்வியுமே : 

1 .கேள்வி : நடப்பாண்டில் "கொலைகாரக் கானகம்" - TEX சாகசம் பெண்டிங்கில் உள்ளது ! கதையில் அழுத்தம் குறைவு என்பதால் அட்டைப்படமெல்லாம் அச்சாகி, கதையும் 90% மொழிபெயர்க்கப்பட்டு, டைப்செட் செய்யப்பட்டுள்ள நிலையில் - தொங்கலில் உள்ளது ! அதற்குப் பதிலாய் வேறொரு கதையை தயார் செய்து 2019-க்கு கொண்டு சென்று விடுவோமா ? அல்லது - 'சிங்கிள் ஆல்பம் தானே - அஜீஸ் பண்ணிக்கலாம் ; இந்த வருஷக் கோட்டாவை இந்த வருஷமே தீர்த்துப்புடுவோம் !' என்று தீர்மானிப்போமா ? 

2 . கோரிக்கை : "பழிக்கு பழி" டெக்ஸ் இதழ் யாரிடமேனும் இருப்பின், நமக்கொரு ஜெராக்ஸ் மட்டும் அனுப்பிட இயலுமா guys ? 

3. கோரிக்கை # 2 : சந்தா 2019-க்கு உங்களின் ஆதரவு !! தீபாவளி ஷாப்பிங் முடிந்திருப்பின், இதற்குமொரு பட்ஜெட் போட்டிட முயற்சியுங்களேன் folks ?!! 

4. கோரிக்கை # 3 : நமது புது இத்தாலிய ஓவியரிடமிருந்து நேற்றைக்கு வந்த மின்னஞ்சல் ரொம்பவே வருந்தச் செய்தது !அவருக்குப் புற்று நோய் இருப்பதாய் மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றதால், தீவிர பரிசோதனைகளின் பொருட்டு தொடரும் மாதம் முழுக்க பிஸியாகிட உள்ளாராம் ! "எனது எதிர்காலம் இருட்டாய் தென்படும் நேரமிது" என்று அவர் எழுதியிருந்ததைப் படிக்கும் போது உள்ளுக்குள் பிசைந்தது ! ஏகமாய்க் கனவுகளையும், லட்சியங்களையும் தாங்கி நிற்கும் திறமைசாலி ! அவர் நலம் பெற்றிட அவரை நம் பிரார்த்தனைகளில் நினைவு கூர்ந்திடுவோமென்று ஆறுதலாயொரு பதில் போட்டுள்ளேன் ! அதனை நிஜத்திலும் செயல்படுத்திடுவோமா folks ? பிரார்தனைகளின் பலன்களைத் தான் பிரபஞ்சமே அறியும் ?!