Tuesday, January 15, 2019

ஒரு ஜம்போ பொங்கல் !

நண்பர்களே,

வணக்கம். பொங்கலோ பொங்கல்…! இல்லம்தோறும் ; உள்ளம்தோறும் – நலமும், வளமும், மகிழ்வும் பொங்கலாய்ப் பொங்கட்டும் ! வரிசைகட்டி அமைந்திருக்கும் விடுமுறைகளைக் குடும்பத்தோடு ஆங்காங்கே கொண்டாடிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்குக் கூடுதலாய் ஒரு “ஓ” போட்டுக் கொண்ட கையோடு பதிவுக்குள் பாய்கிறேன் !

“ஷப்பாாா” என்ற பெருமூச்சு என்னுள்ளே ஓங்கி ஒலித்து வருகிறது ஞாயிறு முதலாய் ! ‘சிகரங்களின் சாம்ராட்‘ என்ற நூடுலாப்பத்தை மெல்லவும் வழி தெரியாது ; விழுங்கவும் தம்மில்லாது சுற்றித் திரிந்தவனுக்கு 13-ம் தேதீய பதிவைப் போட்ட பிற்பாடு ஒரு பெரும் பாரம் குறைந்தது மாதிரியான உணர்வு ! முடிச்சுகளை அவிழ்த்து விட்ட திருப்தியோ ; சகலத்தையும் புரிந்து கொண்டு, உங்களுக்கும் விளக்கி விட்டேனென்ற திருப்தியோ அந்தப் பெருமூச்சுக்குக் காரணமல்ல ! மாறாக - கிட்டத்தட்ட 2½ வாரங்களை விழுங்கிக்கொண்டதொரு கதையிலிருந்து ஒரு மாதிரியாய் வெளியேறி அடுத்த பணிக்குள் புகுந்திட சாத்தியப்பட்டுள்ளதே என்ற நிம்மதி என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! இதன் மொழிபெயர்ப்பிலும், எடிட்டிங்கிலும் தீவிரமாய் மூழ்கிக் கிடந்த நாட்களில் கதையின் புதிர்களுக்கு ஓரளவுக்கு விடை கண்டிருந்தது போல் தோன்றியது ; but ஆளாளுக்கொரு தியரியோடு வலம் வரத்துவங்கிய பிற்பாடு - சங்கிலி முருகன் பஞ்சாயத்துப் பண்ணின கதை தான் எனக்கு !! "நான் சரியாத் தானே பேசிட்டிருக்கேன் ? சரியாத் தானே பேசிட்டிருக்கேன் ?" என்று சுற்றி நிற்பவர்களிடம் கேட்காத குறை தான் ! எது எப்படியோ - இதற்கும் மேலே சாம்ராட்டோடு நான் WWF நடத்தி நின்றால் - பிப்ரவரி இதழ்கள் 'கொக்கரொக்கோ' ஆகிப் போயிடும் என்பதால் நகன்றிட அவசியமாகிறது ! For sure – ‘காலப் பயணம்‘ என்பதெல்லாமே ஒரு முரட்டு concept & அதனைப் புரிந்து கொள்வதென்பது அசாத்திய பொறுமையினையும், கவனத்தையும், நேரத்தையும் அவசியப்படுத்தும் சமாச்சாரம் என்பதை நாம் கடந்த ஒரு வாரமாகவே பார்த்தும் வாசித்தும் வருகிறோம் ! நாம் தான் என்றில்லை – பிரெஞ்சில் கூட இந்த கதைக்கோசரம் வாசகர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டு திரிவதை ஜாலியாய்ப் பார்த்திட முடிந்தது – சில forum-களில் ! இதோவுள்ள லிங்க்கில் சென்று google translate-ன் சகாயத்தோடு அங்கே அரங்கேறியுள்ள அலசல்களைப் புரிந்திடத் தான் பாருங்களேன் : ஏர்வாடியைத் தேடித் திரிபவர்கள் நாம் மாத்திரமல்ல என்பது ‘பளிச்‘சென்று புரியும் ! இதில் விசேஷம் என்னவெனில் – தொடரின் ஆல்பம் # 21-ல் இந்த “காலப்பயணம்” concept மறுக்கா தலைகாட்டுகிறது – இதனிலோ குட்டி ஜோலனின் எதிர்கால மல்லுக்கட்டோடு ! தற்சமயம் நாம் குந்திக் கிடப்பது ஆல்பம் # 15-ல்! So எப்படியாச்சும் அடுத்த 5 ஆல்பங்களை ஓராண்டுக்குள் தடதடக்க வைத்த கையோடு – yet another வான் ஹாம் ஸ்பெஷலோடு உங்களைச் சந்திக்கும் ஆவல் இப்போதே அலையடிக்கிறது ! 

அதிலும் எனக்கொரு கூடுதல் ஆசையுமே ! ஆங்கிலக் கவிதைகள் ; இலக்கியத் தொகுப்புகள் வெளியாகும் போது – எங்கேனும் ஒரு புக் ஷாப்பில் ‘Book Reading with the Author’ என்ற நிகழ்வுகளை நடத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் ! கதாசிரியர் புக்கை வாசித்துக் கொண்டே போக, வாசகர்கள் ஆளுக்கொரு புக்கோடு அமர்ந்திருந்து வாசிப்பைப் பின்தொடர்வர் ! நடுநடுவே அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் பற்றிய அலசல்கள் live ஆக அரங்கேறிடும் ! எப்போவாச்சும் ஒரு தபா அது போலலொரு நிகழ்வை நாமும் ஏற்பாடு செய்து, ஒரே ரூமுக்குள் அமர்ந்து, அடுத்த தோர்கல் time travel ஆல்பத்தை வாசித்து, விவாதித்துப் பார்க்க வேண்டுமென்பதே அந்தக் கூடுதல் ஆசை ! தலீவர் வாசிக்க – செயலர் சுவாசிக்க – பொருளாளர் சிலாகிக்க - மெய்மறந்து விட்டத்தைப் பார்த்திருக்க – அடடா…. நினைக்கும் போதே புல்… செடி… கொடி… எல்லாமே அரிக்கிறது ! Of course – அந்த அறையின் கதவிற்கொரு முரட்டுப் பூட்டும் போட்டிருக்கும் ! 

சரி, Enough of தோர்கல் for awhile ! ஜனவரியின் இன்னொரு  3 பாக ஆல்பம் பக்கமாயும் ஒளிவட்டத்தைச் சித்தே திருப்புவோமே ப்ளீஸ் ?! நிஜத்தைச் சொல்வதானால் பராகுடா தான் ஜனவரியின் ஒட்டுமொத்த கவனக் கடத்தல்காரனாய் அமைந்திடுவானென்று நான் கணக்குப் போட்டு வைத்திருந்தேன் ! ஆனால் ‘சிகரங்களின் சாம்ராட்‘ எனும் சாலைத்தடை ஒரு பகுதியாகவும் ; பராகுடாவின் மீத 3 ஆல்பங்களும் வெளியான பிற்பாடு ஒட்டுமொத்தமாய்ப் படித்துக் கொள்ளலாமே என்ற பரவலான அபிப்பிராயம், மீதப் பகுதியாகவும் அமைந்து போக, எனது யூகம் சொதப்பி விட்டது ! Maybe இந்த மாதத்தில் தோர்கல் தலைகாட்டியிராது ஒரு மாற்றுக் குறைச்சலான ஆல்பம் ஏதேனும் வந்திடும்படியாக நான் திட்டமிட்டிருக்க வேண்டுமோ, என்னவோ – தெரியலை ! Anyways – மாதத்தின் பாதி இன்னமுமே காத்துள்ளது எனும் போது ‘அலைகடலின் அசுரர்கள்‘ மீதும் கவனத்தைக் காட்டிட நிறையவே நேரம் உள்ளது தானே ? Why not give it a try guys ?
“பராகுடா” ஆல்பங்களின் உரிமைகளை நாம் வாங்கிடும் முயற்சி துளிர்விட்டது 2½ ஆண்டுகளுக்கு முன்னே ! 2016-ன் நடுவினில் பாரிஸில் படைப்பாளிகளைச் சந்திக்க நான் சென்றிருந்த சமயம் – இந்தத் தொடரின் ஓவியர் ஜெரெமியும் அங்கே வந்திருந்திருக்கிறார் போலும் ! அப்போது எனக்கு இந்தத் தொடர் பற்றி லேசாய்த் தெரியும் தான் என்றாலும் – ‘இதையெல்லாம் நாம என்னிக்குப் போடப் போறோம் ?‘ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது! So நான் பாட்டுக்குப் போன வேலையைப் பார்த்தபடிக்கே திரும்பி விட்டேன் ! ஆனால் ஓவியரின் வருகையை ஒட்டி பராகுடாவின் ஒற்றை black & white பக்கத்தை மெகா சைஸில் ஆர்ட் பேப்பரில் பிரிண்ட் போட்டு ஒட்டி வைத்திருந்தார்கள் ! அது என்னவோ தெரியலை – black & white-ல் ஒரு காமிக்ஸ் artwork பக்கத்தைப் பார்க்கும் போது எழும் தாக்கம் – வண்ணப் பக்கங்களில் (எனக்கு) எழுவதில்லை ! So அதைப் பராக்குப் பார்த்தது மட்டும் நினைவில் நின்றது – ஊருக்குத் திரும்பிய பிற்பாடும் ! But கடல்கொள்ளையர் கதைகளென்ற பக்கமாய் என்றைக்கேனும் நாம் சலாம் போடுவதாயிருந்தால் – அது ஓவியர் வில்லியம் வான்சின் “ப்ரூஸ் ஹாக்கர்” தொடரின் பக்கமாகத் தான் இருந்திட வேண்டுமென்று ரொம்பவே தீர்க்கமான தீர்மானம் எனக்குள் நிலவி வந்தது ! ஏதேதோ வேலைகளில் அப்புறமாய் மூழ்கிட ‘பராகுடா‘ சுத்தமாய் நினைவை விட்டு அகன்றிருந்தது ! 2017-ன் திட்டமிடல்கள் துவங்கியிருக்க – முதன் முறையாக கிராபிக் நாவல்களுக்கான தனித்தடம் அமைத்திடும் தீர்மானமும் அமலாகியிருந்தது என்னுள் ! So 2017-ல் சந்தா E அறிமுகமாகி, சிறுகச் சிறுக உங்கள் அபிமானங்களை அதிரடியாய் ஈட்டத் துவங்கிய போதே, என்னுள்ளிருந்த மந்தி ‘ஜிங்கு-ஜிங்கென்று‘ குதிக்கத் துவங்கி விட்டது ! தொடரவுள்ள 2018-க்கு கிராபிக் நாவல்கள் என எதைத் தேர்வு செய்யலாமென்ற பட்டியல் போட்ட சமயம் தான் ‘ப்ரூஸ் ஹாக்கர்’ & ‘பராகுடா‘ பற்றிய ஞாபகம் எழுந்தது ! If I remember right – இது பற்றிக் கூட இங்கே நமது பதிவினில் ஏதோ எழுதியிருந்தேன் ! இறுதியில் எனக்கு ஆபத்பாந்தவனாய் அமைந்து போனது CINEBOOK-ன் ஆங்கில பராகுடா பதிப்பே ! அதனை வரவழைத்து pdf-ல் வாசித்த போதே மிரளச் செய்தன சித்திரங்களும், கலரிங்கும், கதையின் தெறிக்கும் போக்கும் ! ஆக அடுத்த கிராபிக் நாவல் சுற்றில் இதனை வெளியிட்டே தீர வேண்டுமென ஞானம் பிறந்த போதே கதைகளையும் வாங்கி விட்டோம் ! And here we are – ஓராண்டுக்குப் பின்னேயாவது  அதனைத் தமிழில் கரைஒதுங்கச் செய்த குஷியோடு ! ஒரே வருத்தம் என்னவென்றால் - அன்றைக்கே எனக்கிந்தத் தொடர் பற்றித் தெளிவாய்த் தெரிந்திருந்தால் – எருமை போல ரிசப்ஷனில் காத்துக் கிடந்த நேரத்துக்கு, ஓவியர் ஜெரெமியைச் சந்தித்து ஒரு ஃபோட்டோவாவது எடுத்திருப்பேன் ! வட போச்சே !!

SMURF படைப்பாளிகளின் அலுவலகத்துக்குப் போயிருந்த போதுமே இதே போலத் தான் கோட்டை விட்டிருந்தேன் ! அவர்களது ஆபீஸின் ரம்யத்தை விவரிக்க வார்த்தைகள் பற்றாது ! மெய்யாகவே ஒரு கனவுலக ஸ்மர்ஃப்வில்லா அது ! அங்கேயே பேஸ்மெண்டிலிருந்த அவர்களது ஓவியர்களின் பணியறைக்கு என்னை இட்டுச் சென்ற போது – திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றிப் பார்க்கும் வெள்ளைக்காரர்களைப் போல blank ஆக சகலத்தையும் பராக்கு மட்டும் பார்த்து வந்தேன் ! அங்கே live ஆக ஸ்மர்ஃப் புது ஆல்பத்திற்கான பணிகள் ஓடிக் கொண்டிருந்த போதிலும் – என்னோடு சிரித்துப் பேசியவர் தான் தலைமை ஓவியர் ஜெரோயென் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை ! அப்புறமாய் ரூமுக்குத் திரும்பிய பிற்பாடு நெட்டை உருட்டிய சமயம், மனுஷனின் போட்டோ கண்ணில்பட்ட போதுதான் விஷயமே புரிந்தது ! “அட கோமாளிப் பயலே….அத்தனை நட்பாய்ப் பேசிய மனுஷனோடு ஒரு போட்டோ தட்டியிருக்கலாமே !! போச்சே வாய்ப்பு !!” என்று நொந்து கொண்டது தான் மிச்சம்!

‘Just miss” அனுபவங்களின் உச்சமோ – போனெல்லி அலுவலகத்தில் TEX-ன் சூப்பர் ஸ்டார் எடிட்டர் மௌரோ போசெல்லியுடன் கைகுலுக்கி விட்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளாது சொதப்பியதே ! பொதுவாய் போனெல்லி அலுவலகத்தினில் அசலூர் பதிப்பாளர்கள் யாரும் தலைகாட்டுவதில்லை – simply becos அவர்களது கதைகளுக்கான உரிமைகளைச் சந்தைப்படுத்த மோடெனா என்ற நகரில் பனினி எனும் நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளனர் ! உலகெங்கும் நடைபெறும் பிரதான புத்தக விழாக்களுக்குக் கூட போனெல்லி வருகை புரிவதில்லை ! “எதுவானாலும் ஏஜெண்ட்களிடம் பேசிக்கோங்கப்பா” என்று அவர்கள் ஒதுங்கிடுவது துவக்கம் முதலான பாலிஸி ! So எனது பலகாலக் கனவு நிறைவேறுமா ? என்பதிலேயே எனக்கு நிறையவே சந்தேகமிருந்தது ! “இத்தாலியில் வேலை உள்ளது… போனெல்லி பக்கமாய் அரை மணி நேரம் மட்டும் தலைகாட்ட ஆசை… அனுமதிப்பார்களா?” என்று பனினி நிறுவனத்தில் கேட்ட போது – “அவசியம் போகணுமா? அவர்கள் எப்போதுமே படு பரபரப்பாய் இயங்கிடுபவர்களாச்சே?” என்று பதில் போட்டார்கள் ! “நிச்சயமாய் உபத்திரவம் செய்திட மாட்டேன் ; சும்மா ஒரு ஆர்வக் கோளாறு மாத்திரமே ; 15 நிமிடங்கள் கூடப் போதும் !” என்று மறுக்கா மெயில் அனுப்பினேன் ! “சரி… கேட்டுச் சொல்கிறேன்” என்றவர் – அன்று மாலையே “ஓ.கே…. காலையில் 11.30-க்கு அங்கே ஆஜாகிடவும் ; brief meeting மட்டுமே !” என்று பதில் அனுப்பியிருந்தார் ! So அவர்களது இசைவு கிட்டியதே பெரும்பாடு ; இதில் வழக்கமான நம் பிளேடைப் போட்டு, அவர்களது வேலைக்கு இடைஞ்சலாகிடப்படாது !” என்ற ஒருவிதப் பரபரப்பு எனக்குள்ளே மின்சாரமாய் ஓடிக் கொண்டேயிருந்தது ! அவர்கள் ரொம்பவே அன்பாய், ஜாலியாய் எனக்கு அலுவலகத்தைச் சுற்றிக் காட்டி ரிலாக்ஸ்டாகப் பேசிக் கொண்டிருந்த போதிலும், எனக்குள்ளே – “"அஞ்சரைக்குள்ளே வண்டி ...கிளம்பிடு..அஞ்சரைக்குள்ளே வண்டி..கிளம்பிடு.."” என்ற அலார மணி தான் ஒலித்துக் கொண்டேயிருந்தது ! முதல் மாடியில் சுற்றிக் காட்டியவர்கள், தரைத் தளத்தையும் காட்டிட அழைத்துப் போய் – "இது தான் ‘TEX டிபார்ட்மெண்ட்‘!" என்ற போது, எனக்குள்ளேயோ – “சரி… நாசூக்காய் கீழே கூட்டிட்டு வந்திருக்கிறது வழியனுப்பத் தான்!” என்பது போலொரு குரளிச் சத்தம்! So – “இவர் தான் எங்க எடிட்டர் மௌரோ போசெல்லி” என்று அவரை அறிமுகப்படுத்திய போது கூட, பேமானி போலொரு சம்பிரதாய இளிப்போடு கையை மாத்திரம் நீட்டினேன். அவர் கூட அந்நேரம் வெளியே கிளம்பிடத் தயாராகிக் கொண்டிருக்க – நானும், "சரி சார்… சரி சார்… கிளம்புங்கள்!” என்று டாட்டா காட்டி வைத்தேன் ! 

ஒரு வழியாய் நானுமே விடைபெற்று அவர்களது அலுவலகத்தினருகே உள்ள மெட்ரோ ஸ்டேஷனுக்குள் புகுந்த போது தான் உரைத்தது – நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்னே சந்தித்தது "THE MAN HIMSELF" என்று !! “அடங்கொன்னியா… ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக்காமப் போனியே!” என்று என்னை நானே மூக்கில் குத்திக் கொள்ளாத குறை தான்! அலுவலகத்தில் போனெல்லியின் இளவலைச் சந்தித்து சாவகாசமாய்ப் பேச முடிந்திருந்தாலும் - ஒரு டாப் படைப்பாளியோடு கொஞ்சமாவது பேசிப் பழகிட வாய்ப்புக் கிட்டியும், கிட்டாது போனதே செம disappointment ! “நாமெல்லாம் கண்டு மிரளும் பல classic டெக்ஸ் கதைகளை உருவாக்கும் பிதாமகர், பாசாங்குகள் ஏதுமிலா சாந்தமான இந்த மனுஷர் தானா?” என்ற கேள்வி அன்று முழுவதுமே என்னை உலுக்கியது! “இத்தனை பெரிய படைப்பாளியே அமைதியாய் உலவும் போது – யாரோ சுடும் தோசைகளுக்கு சட்னிகளும், தொக்குகளும் மாத்திரமே தயார் பண்ணும் நாமெல்லாம் காலமெல்லாம் வாயில் ப்ளாஸ்திரியை மட்டுமே ஒட்டியே திரிய வேணும் போலிருக்குடா சாமி!” என்று அன்றைக்குத் தீர்மானித்தேன் ! அதே போல மர்ம மனிதன் மார்ட்டினின் கதாசிரியரான ஆல்ப்ரெடோ காஸ்டெலினியும் காட்டிய அன்பும், சகஜத்தனமும் நிஜமாய் வாய்பிளக்கச் செய்த ரகம் ! அந்தத் தொடருக்கென அவர் செய்திடும் வாசிப்புகளை நாமெல்லாம் ஒட்டுமொத்தமாய் சேர்ந்தால் கூட நமது ஆயுட்காலங்களில் பூர்த்தி செய்திட முடியாது ! அவரது லைப்ரரியும் சரி, நோட்ஸ்களும் சரி – ஒரு பல்கலைக்கழகத்தின் நிகர் ! ஆனால் அவருமே யதார்த்தமாய்ப் பேசியதைப் பார்த்த போது தான் புரிந்தது – அந்தத் தலைகள் ஏற்கனவே சரக்கால் கனமாயிருப்பதால், ‘ஈகோ‘ எனும் கனத்தைத் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை என்று ! Simply magnificient people!

And I met more lovely people on the 5th' Jan – சென்னைப் புத்தக விழாவில் நமது ஸ்டாலுக்கு சித்த நேரம் விசிட் அடித்த போது ! ராஜஸ்தான் பயணம் 3 நாட்களை எடுத்துக் கொள்ள, என்னால் ஸ்டாலில் சொற்ப நேரமே இருக்க முடிந்தது ! And நண்பர்களில் சிலரை மட்டும் சந்திக்க முடிந்தது என்றாலும் அந்த 2 மணி நேரங்களுமே உற்சாகமாய்க் கரைந்தன ! 

இந்தாண்டு இதுவரையிலான விற்பனைகள் decent ரகம் என்றாலும், தினமுமே ஒருவித pattern-ஐ பார்த்திட முடிகிறது ! வாரயிறுதிகளில் & விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே புத்தக விழா துவங்கிடுவதால், பகல்களில் விற்பனை பரபரப்பாகவே உள்ளது. அப்புறம் சாப்பாட்டு வேளையில் லேசாய் டல்லடிக்க, மறுபடியும் 4 மணி முதலாய் வேகமெடுக்கிறது ! ஆனால் ஆச்சர்யமூட்டும் விதமாய் இரவு 7½ மணிக்கு மேலே அந்த வேகம் மட்டுப்பட்டு விடுகிறது ! பொதுவாய் அந்நேரம் தான் விற்பனை களைகட்டும்  ! என் ஃபோனில் உள்ள Point of Sale செயலியில் ஒவ்வொரு க்ரெடிட் கார்ட் விற்பனை விபரமும், மறுகணமே பிரதிபலித்து விடும் என்பதால் நேரவரிசைப்படியே விற்பனை pattern-ஐக் கண்காணிக்க சாத்தியமாகிறது ! மாலைகளில் குளிர் சற்றே தூக்கலாய் இருப்பது காரணமா – என்னவென்று தெரியலை ; ஆனால் இப்போது வரையிலுமாவது வாடிக்கையாளர்கள் பகற்கழுகுகளாகவே இருந்து வருகின்றனர் ! Anyways, பகல் கழுகுகளோ ; மதியானக் கழுகுகளோ ; சாயந்திரக் கழுகுகளோ - ஏதேனுமொரு அவதாரில் வாசகர்கள் நம்மை விசிட் செய்தாலே சந்தோஷமே !! 








ராஜஸ்தானிலிருந்து திரும்பிய பிற்பாடு அலுவலகத்தில் இதரப் பணிகள் ; அப்புறம் 13-ம் தேதியின் முரட்டுப் பதிவு என்பனவற்றை மங்களம் பாடிய கையோடு பிப்ரவரி இதழ்களுக்குள் புகுந்திருக்கிறேன் ! மலை போல 3 பாக ஜெரெமயா ; 1 ஜானி 2.0 ஆல்பம் ; 1 (கார்ட்டூன்) மேக் & ஜாக் + 1 டெக்ஸ் மறுபதிப்பு என்று குவிந்து கிடக்க, இணைப் பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது லேசான பணிகள் காலியாக உள்ளனவா ? என்று பார்க்கத் தான் தோன்றுகிறது! Truth to tell – 12 & 13 தேதிகளில் புத்தக விழாவுக்குச் சென்றிட டிக்கெட் போட்டிருந்தேன் தான் ! ஆனால் இங்கே குவிந்து கிடக்கும் பணிகளின் பருமனைப் பார்த்த போது வியர்க்கத் துவங்கி விட்டது ! So டிக்கெட்டைக் கேன்சல் செய்த கையோடு பணிகளுக்குள் குதித்து விட்டேன் ! பிப்ரவரியின் முதற் பயணமே “பயணங்கள் முடிவதில்லை” என்று சொல்கிறது ! அட ஆமாங்கோ – ஜெரெமயா Integral # 2-ல் தான் தற்போது எனது பொழுதுகள் கரைந்து வருகின்றன ! பாதித் தூரத்தைக் கடந்தாச்சு – but அதற்குள்ளாகவே ஒரு கிலோ வெயிட் குறைந்து விட்டது போலொரு பீலிங்கு ! அநேகமாய் 19 & 20 தேதிகளில் பணிகளின் சகலத்தையும் நிறைவு செய்த கையோடு சென்னை செல்லும் எனது திட்டத்திற்கு ஜெயம் கிட்டிடும் பட்சத்தில், லக்கி லூக்குக்குப் போட்டியாய் இருப்பேனென்று தோன்றுகிறது ! பார்ககலாமே !!

2019-ன் சந்தா நிலவரம் பற்றிய update செய்வதாயின் – ஓடும் வண்டியில் பரபரப்பாய் இணைந்து கொள்ளும் நண்பர்களின் பட்டியல் நீண்டு வருகிறது எனலாம் ! இன்னமும் 20% நண்பர்கள் புதுப்பித்தல்களைச் செய்திடுவதாய் promise செய்திருக்க – அவர்களையும் இணைத்துக் கொள்ள ஆர்வமாயுள்ளோம் ! ஜனவரி 31-க்குள் 2018-ன் சந்தா எண்ணிக்கையைத் தொட்டுவிட சாத்தியமாகின் தலை தப்பித்து விடும் ! So இன்னமுமே சந்தா எக்ஸ்பிரஸில் தாவியிரா நண்பர்கள் 2 தவணைகளின் சலுகையினைப் பயன்படுத்திடவும் செய்யலாம்! Please do hop in folks – we would love to have you back for 2019 too!

Looking ahead – 2019-ன் முழு அட்டவணையும் உங்கள் கைகளில் இருக்க, அறிவிப்புக்குக் காத்திருக்கும் களங்கள் இரண்டு மாத்திரமே ! அவை :

- ஜம்போ காமிக்ஸ் – சீஸன் 2 - (6 இதழ்கள்)

- ஈரோடு 2019 ஸ்பெஷல் ! (2 / 3 இதழ்கள் ?)

Of course ஜம்போ சீஸன் 2-ன் ஆரம்பம் இளம் TEX-ன் “சிங்கத்தின் சிறு வயதில்” என்பது அறிவிக்கப்பட்டுள்ள சமாச்சாரமே ! அதே போல – இன்னொரு slot ஜேம்ஸ் பாண்ட் 007-ன் அடுத்த சாகஸத்துக்கென ரிசர்வ் செய்து வைத்துள்ளேன் ! ஆக எஞ்சியிருக்கும் 4 ஜம்போ இதழ்களில் இடம்பிடிக்கவிருப்போர் யார் ? அல்லது எந்தக் கதைகள் ? என்பதே தற்போதைக்கு under wraps ! சில பல புதுத் தொடர்களுக்கும்; one-shot-களுக்கும் உரிமைகளை அவ்வப்போது வாங்கி வைத்துள்ளோம் என்ற போதிலும், மார்ச் வரையிலும், எதை, எங்கே நுழைப்பது ? என்ற எனது option-களைத் திறந்தே வைத்திருத்தல் நலமென்று நினைத்தேன் ! ஜம்போவில் ACTION SPECIAL லேசாய்ச் சறுக்கியது போல் தொடரும் ஆண்டினில் ஏதும் நிகழ்ந்திடப்படாதே என்பதே எனது தலையாய சிந்தனை ! கதைகளின் அறிவிப்பினைச் செய்திராத போதிலும் - நமது சந்தாதாரர்களில் பெரும்பான்மையினர் - ஜம்போ சீசன் 2-க்கும் சேர்த்தே பணம்கட்டியுள்ளதை நான் உங்களது நம்பிக்கைகளின் அடையாளமாய்ப் பார்த்திடுகிறேன் ! அந்த நம்பிக்கை வீண்போயிடக் கூடாதே என்ற ஆதங்கமும் ஆட்டிப் படைப்பதால் - ஜம்போ சார்ந்த எனது திட்டமிடல்களை இந்தப் பொங்கல் நன்னாளில் பகிர்ந்திட்டால் தேவலாம் என்று நினைத்தேன் ! 

Action Special நமது நினைவுகளில் பசுமையாய் நிற்கும் இந்த வேளையில், அது சார்ந்ததொரு கேள்வி என்னிடமுள்ளது guys !! அந்த “பதிமூன்றாவது தளம்” கதைத் தொகுப்புகள் மட்டுமே கொண்டதொரு பிரத்யேக ஆல்பத்தை இங்கிலாந்தில் Rebellion வெளியிட்டுள்ளனர் ! அந்தக் கதைகளை மட்டுமே ஜம்போ காமிக்ஸ் சீஸன் 2-வில் ஒரு பிரத்யேக இதழினில் கொணரலாமா ? ஒற்றைக்கண் ஜாக் & இயந்திரன் சற்றே அஜீரணத்தை ஏற்படுத்தியிருந்தாலும் - இந்தப் பதிமூன்றாம் மாடியார் ஒரு சுவாரஸ்ய வாசிப்புக்கு வாய்ப்புத் தந்தது போலவே எனக்குப் பட்டது ! தவிர, 13 என்ற நம்பர் நமக்கு ரொம்பப் பிடித்தமானது தானே ? Thoughts on that please? “The Mystic Special” என்ற பெயரில் maybe இதன் முழுநீளத் தொகுப்பு சுகப்படுமா ?! In black & white of course !
அதே போல இன்னொரு கேள்வியுமே உங்களுக்கு ! How much is too much when it comes to a genre? விளக்குகிறேனே: கௌபாய் கதைகளில் தற்சமயம் நம் பக்கமிருப்பன:

- டெக்ஸ் வில்லர்

- ட்ரெண்ட் (not really a cowboy in the true sense)

- ஜானதன் கார்ட்லேண்ட்

- ட்யுராங்கோ

- Bouncer

இந்த நிலையில் மேற்கொண்டும் சிலபல westerns-களுக்கான உரிமைகளை வாங்கி வைத்துள்ளோம் ; வாகான சந்தர்ப்பத்தில் புகுத்திக் கொண்டு விடலாமென்று ! அந்த ரகத்தில் அதிரடியானதொரு நாயகரின் தொடரொன்று காத்துள்ளது  – ஜம்போ சீஸன் 2 (or) ஈரோடு ஸ்பெஷல் (களில்) தலைகாட்டிடும் பொருட்டு ! அவரது வருகையினில் நிச்சயமாய் யாருக்குமே திகட்டலிராது என்ற நம்பிக்கை எனக்குள்ளது – simply becos அவர் Wild West-ஐத் தெறிக்கச் செய்து வருவது செம மிரட்டலான பாணியில் ! So he's gonna be an automatic entry !! அவர் யாரென்று கேட்கிறீர்களா? நேரம் வரும்போது சொல்கிறேனே ?!

கதைகள் மிகுதியாயுள்ள இது போன்ற தொடர்கள் ஒருபக்கமெனில், one-shot கௌபாய்க்  கதைகளிலும் சில பல நம் பீரோவில் தேவுடு காத்து வருகின்றன - ஒரு நுழைவுக்களத்தினை எதிர்பார்த்து ! டிடெக்டிவ் கதைகள் உருப்படியாய் அமையவில்லை ; கார்ட்டூன்களில் பல நமக்கு ஒத்துக்க கொள்ள மறுக்கின்றன ; லார்கோ / கேப்டன் பிரின்ஸ் / XIII போன்ற adventure சாகசங்களும்  அவ்வளவாய்க் கண்ணில் படமாட்டேன்கின்றன ; sci-fi-க்கு நாமின்னும் ரெடியில்லை எனும் போது - கௌபாய் ஜானரின் வண்டி இன்னும் சில பல ஆண்டுகளுக்காவது திடமாய் ஓடுமென்ற நம்பிக்கை உள்ளது ! So கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அவற்றை எங்கேனும் நுழைத்துக் கொள்ளலாமென்ற நம்பிக்கையில், "cowboy கதை ஷாப்பிங்" செய்வதை சத்தமின்றிச் செய்து வருவது வாடிக்கை ! அந்த சேகரிப்பினில் ஒரு 'பளிச்' ஆல்பம் ஜம்போவின் ஒரு ஸ்லாட்டுக்கு என்று திட்டமிட்டுள்ளேன் !  தமிழ் பேசவிருக்கும் இந்தப் புதுவரவின் பெயர் மார்ஷல் சைக்ஸ் ! 


செம யதார்த்த வன்மேற்கினைக் கண்முன்னே கொணர்ந்து காட்டும் பாங்கு ; ஒரு நரம்பும், சதையுமான, சராசரி மனித இயலாமைகளுக்கு ஆளாகிடக்கூடிய மார்ஷல் ; ரொம்பவே மாறுபட்ட சித்திர பாணி ; பர பரவென 75 பக்கங்களில் நிறைவுறும் ஆக்ஷன் மேளா என இந்த ஆல்பத்தினை வர்ணிக்கலாம் !  One-shot என்பதைவிடவும் two-shot என்று சொல்வது பொருத்தமென்பேன் - சிக்கனமாய்ப் பேசிடும் இந்தப் புது இறக்குமதியைப் பொறுத்தமட்டில்  ! தனித்தனியாய்ப் படிக்கக்கூடிய 2 கதைகளே இங்கு ; ஆனால் முதலாவதில் தலைகாட்டும் மாந்தர்களின் சிலர், தொடரும் இரண்டாம் ஆல்பத்திலும் இடம்பிடிப்பதால் - லேசாயொரு link உள்ளது இரண்டுக்குமிடையே ! ப்ரெஞ்சில் 2017-ல் SYKES & 2018-ல் TEXAS JACK என்றே தனித்தனியாய் வெளியிட்டுள்ளனர் ! So முதல் ஆல்பத்துக்கு சென்றாண்டின் நடுவாக்கிலேயே உரிமைகளை வாங்கிவிட்டிருக்க, 2019-ன் ரெகுலர் சந்தாவிலேயே இதனை வெளியிட எனக்கு ஆசை தான் ! In fact - “நீரில்லை… நிலமில்லை” one-shot ஆல்பத்த்தின் இடத்தினில் நான் திட்டமிட்டிருந்தது மார்ஷல் சைக்ஸைத் தான் ! ஆனால் “ஓவராய் கௌ-பாய் நெடி சந்தா முழுக்க வீசுதே !” என்ற புகார் எழக்கூடுமென்பதால் மனதை மாற்றிக் கொண்டேன் ! சரி, இருக்கவே இருக்குது ஜம்போ சீஸன் 2 ; இந்தப் புது நாயகர் அங்கே பொருந்திடுவாரென்று பட்டதால் அப்போதைக்கு அடுத்த வேலைக்குள் புகுந்து விட்டேன் ! இப்போது ஒரு மாதிரியாய் 2019-ன் பயணம் துவங்கி விட்டிருக்கும் நிலையில், ஜம்போ # 2-ன் திட்டமிடல்களை இறுதிப்படுத்துவதே எனது அடுத்த பணியாக நிற்கிறது ! And கதைகளின் அறிவிப்பே இல்லாமலே கூட ஏகப்பட்ட நண்பர்கள் ஜம்போவின் இரண்டாவது சீஸனுக்கும் சந்தா செலுத்தியிருப்பதால், கதைத் தேர்வுகளில் முன்னெப்போதையும் விடக் கூடுதல் கவனம் தேவையென்று புரிகிறது ! அதனால் தான் இந்தக் கேள்வி : How much is too much – when it comes to the Wild West ?
இன்னமுமே ஒரு கௌபாய் நாயகரின் ஒரு வித one-shot ஜம்போவின் சீஸன் #2-ல் இடம்பிடித்திட உள்ளது! ஆனால் இம்முறை யாரும் அவருக்குத் தடா போட முனைந்திட மாட்டார்களென்றே நினைக்கிறேன்! அவர் வேறு யாருமல்ல – நமது ஆதர்ஷ ஒல்லிப் பிச்சான் லக்கி லூக் தான்! ஆனால் இம்முறையோ அவரது மாமூலானதொரு கார்ட்டூன் ஆல்பத்தோடு உங்கள் கதவுகளைத் தட்டுவதாகயில்லை ! மாறாக லக்கி லூக்கின் 70-வது பிறந்த நாள் ஆண்டான 2017-ல் உருவானதொரு மாறுபட்ட லக்கி சாகஸம் தான் ஜம்போவில் ! “Who killed Lucky Luke?” என்ற பெயரில் வெளியாகி – முதல் 15 நாட்களுக்குள்ளாகவே ப்ரெஞ்சில் ஆறு இலக்கங்களின் விற்பனை கண்டுள்ள ஆல்பம் இது ! லக்கி லூக் ஒரு நிஜ மனுஷனாய் இருந்திருப்பின், அவரது நாட்கள் எவ்விதமிருந்திருக்கும் ? என்பதை ஒரு சீரியஸான பார்வை - இலகுவான சித்திரங்களோடு பார்த்திட முனைந்துள்ளார் கதாசிரியர் ! இந்த சூப்பர்ஹிட் ஆல்பமும் எனது 2019 ரெகுலர் சந்தாவினில் இடம் பிடிப்பதாகவே இருந்தது ! But கார்ட்டூன் சந்தாவில் ஏற்கனவே 3 LL கதைகள் இருப்பதால் - ஜம்போவுக்கென வண்டியைத் திரும்பிவிட்டேன் ! இதுவுமே நம்மிடம் 2017-ன் இறுதி முதலாய் துயின்று வரும் கான்டிராக்ட் ; so “ஜம்போவே தஞ்சம்” என்றாகிவிட்டது சில பல வித்தியாசமான ; அதே சமயம் ஜனரஞ்சகமான சாகஸங்களுக்கு ! 
So தற்போதைய உத்தேச ஜம்போ - சீஸன் 2-ன் பட்டியல் பின்வருமாறு!

1. Young TEX – சிங்கத்தின் சிறுவயதில்

2. ஜேம்ஸ் பாண்ட் 007 – கதை # 3

3. லக்கி லூக்கை போட்டுத் தள்ளியது யார்?

4. மார்ஷல் சைக்ஸ்

5. ....? (Maybe பராகுடா க்ளைமேக்ஸ் பாகம்?)

6. ....? (Maybe 13-வது தளம் Integral - The Mystic Special ?)

கோடிட்ட கடைசி 2 இடங்களை நிரப்ப உங்கள் ஒத்தாசை தேவை folks - simply becos நம்மிடம் இன்னமுமே 3 one-shot கௌபாய்க் கதைகள் RAC-ல் காத்துள்ளன ! How much is too much for Westerns ? என்ற கேள்விக்கு - "வானமே எல்லை" என்று நீங்கள் குரல் கொடுப்பின், slots 5 & 6-ன் ஏதோவொன்றிலாவது இன்னொரு கௌபாயும் பிரசன்னமாகிடுவார் ! உங்கள் குரல் கேட்டால் - திரையினை விலக்கி அவரையும் உங்கள் முன்னே களமிறக்கிடலாம் !! அல்லது - இப்போதைக்கு குதிரைப்பையன்கள் போதுமென்றீர்களெனில் - நேராய் 2020-க்கு அவர்களைக் கடத்திடலாம் ! What say all ?

சரி, இனியும் பிளேடு போட்டுக் கொண்டிருந்தால் அதிகாலையில் சுடச் சுடத் தயாராகும் பொங்கலை கார்பீல்டுக்குத் தான் போட வேண்டி வரும் என்பதால் புறப்படுகிறேன் ! பொங்கலை புக்ஸோடு கொண்டாடிட எண்ணினால், சென்னைப் புத்தக விழாவுக்கு விசிட் அடியுங்களேன் folks ! ஸ்டால் # 153-ல் ஆவலாய் நம்மவர்கள் காத்திருப்பார்கள்! Bye all… See you around ! Have an awesome time !!
இது நமது அபிமான சென்னை வாசகக் குடும்பத்து இளவரசி வெள்ளைத் துணியில் செய்துள்ள ஜாலம் ! கலக்குங்கள் ரூபா கண்ணன் !! 

Saturday, January 12, 2019

ஸலாம் சாம்ராட் !

நநண்பர்களே,

வணக்கம். ‘சொர்க்கமே என்றாலும் – அது நம்மூரைப் போல வருமா ?‘ என்ற பாட்டை மண்டைக்குள் ஓடவிட்டு மறுக்கா – மறுக்கா சிலாகிக்கத் தான் தோன்றியது வாரத்தின் முதல் பாதியினில் ! என்னதான் மார்கழி மாதப் பனியென்றாலும் – எங்கள்-கி சிவகாசியில் அது பெரிதாய் மனுஷனை இம்சிப்பதில்லை & வெயில் தலைகாட்டத் துவங்கிய சற்றைக்கெல்லாம் வழக்கமான உடுப்புகளோடு உலா கிளம்பிடலாம் ! ஆனால் பீரோவுக்குள் பதுங்கிக் கிடந்த சிலபல ஸ்வெட்டர்களையும், குரங்குக் குல்லாக்களையும் ஏற்றிக் கொண்டான பின்னேயும் பற்கள் தந்தியடிக்கும் கொடுமையினை வட இந்தியா அறிமுகப்படுத்தித் தந்தது போன ஞாயிறு முதலாய் ! 

பள்ளித் தோழனின் பையனுக்கு ராஜஸ்தானில் திருமணம் ; so ஒரு கும்பலாய்க் கிளம்பினோம் அந்தப் பாலைப் பிரதேசத்துக்கு ! ‘உதய்பூரில் க்ளைமேட் என்னவோ?‘ என்று கூகுளில் தேடிட – அது ஒற்றை இலக்கத்தில் 6 டிகிரி; 7 டிகிரி என்று பதில் தந்த நொடியே புரிந்து போச்சு – மொச்சைக்கொட்டை மூக்கையும், முழியையும் தவிர்த்து பாக்கி சகலத்தையும் உல்லன்களின் பின்னே பதுக்கிட வேண்டி வருமென்று ! ஒட்டகங்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி – விசேஷ நாட்களுக்கு மாத்திரமே குளிக்கும் அந்த ஊரில் கால் வைத்த போதே ஆளாளுக்கு ‘ப்ரேக்டான்ஸ்‘ ஆடத் துவங்கி விட்டது  – ஸ்வெட்டர்கள் இருந்த போதிலும் ! மொத்தமாய் பஸ்சில் ஏறி – மொத்தமாய் ஒரு சொகுசு விடுதியில் இறங்கி – மொத்தமாய் நெய்யிலும், சர்க்கரையிலும் மூழ்கிக் கிடந்த சாப்பாட்டு ஐட்டங்களை, மொத்தமாய் தொந்திக்குள் தள்ளி விட்டு, மொத்தமாய் குறட்டை விட்ட 3 நாட்களுமே ‘சல்‘லென்று காலத்தில் பின்நோக்கி இட்டுச் சென்று ஸ்கூல் டூர்களை நினைவுபடுத்தின ! 

திரும்பிய திசையெல்லாம் செக்கச் செவேலென்ற ஆடவர்களும், பெண்டிர்களும் ஒரு வட இந்தியத் திருமணத்தின் vibrant கோலாகலத்தைக் கண்முன் நிறுத்திட தத்தம் பாணிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர் ! வஞ்சமின்றி வளர்ந்து கிடந்த தொப்பைகளை இறுக்கிப் பிடித்து ஜீன்ஸ்களுக்குள் திணித்த கையோடு, பட்டம் விட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிள்கள் ஒரு பக்கமெனில், நமது ‘பச்சோலியை‘ நினைவுபடுத்திய சிலபல முரட்டு ஒட்டகங்கள் மீது சவாரி செய்தபடிக்கே செல்ஃபி எடுக்க முனைந்து கொண்டிருந்த ஆன்ட்டிகள் இன்னொரு பக்கம் ! நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது ! "யோவ்...எங்கயாச்சும் புடிச்சுக்கிட்டா இந்தக் குளிரில் அப்படியே நின்னுக்கும் ஒய் !!" என்று கத்த வேண்டும் போலிருந்தது !  ஒரு முனிசிபல் பார்க் அளவிலான விசால மைதானத்தின் மத்தியில் திருமணம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, தட்டும், கையுமாய் அவரவருக்கு இஷ்டப்பட்ட பதார்த்தங்களை, யதார்த்தமாய் உள்தள்ளும் வைபவமும் இன்னொரு பக்கம் அதுபாட்டுக்கு இனிதே அரங்கேற – எங்களுக்கோ லைட்டாக சந்தேகம்: “இத்தனையையும் சாப்பிட்ட கையோடு இவர்களுக்கெல்லாம் ஜீரணித்து விடுமா? அல்லது பனிக்கரடிகளைப் போல ஒரு சீஸன் முழுவதுக்கும் அந்த ஆகாரம் உள்ளாற தேங்கியே இருக்குமா?” என்று ! ‘உப்ப்ப்ப்…. அடுத்த ஒரு மாதத்துக்கு சோறும், ரசமும் மட்டுமே போதும்டா சாமி!‘ என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஸ்வீட்களும், பலகாரங்களும், சாப்பாட்டுச் சமாச்சாரங்களும் குவிந்து கிடக்க, ‘இது இனிக்குமா? புளிக்குமா? காரமாகயிருக்குமா?‘ என்ற ரோசனைகளோடே நாங்கள் சுற்றி வந்தோம் ! உடன் படித்த பள்ளித் தோழிகளுமே ஒரு சிறு அணியாகப் புறப்பட்டு வந்திருக்க, ‘96‘ படத்திலான School Reunion தான் நினைவுக்கு வந்தது ! என்ன ஒரே சிக்கல் – மகளிரணியினர் த்ரிஷாக்களைப் போல் காட்சி காட்சி தந்தார்களோ - இல்லையோ, நாங்களெல்லாமே விஜய சேதுபதியின் ஒன்றுவிட்ட பெரியப்பாக்களாய் தென்பட்டது தான் கொடுமை ! ஒரு மாதிரியாய் ராஜஸ்தானுக்கு விடை தந்து விட்டு புதனன்று ஊர் திரும்பிய போது, ‘சுள்‘ளென்று அடித்த வெயிலைப் பார்த்த கணத்தில் ‘ஷப்பா… நமக்கு நம்ம ‘பேட்ட‘ தான் சுகப்படும்டா சாமி !‘ என்றபடிக்கே வேலைகளுக்குள் மூழ்கத் தொடங்கினேன் !

பிப்ரவரியின் இதழ்கள் ரவுண்ட்கட்டி ரெடியாகி, என் மேஜையில் உசரமாய் வீற்றிருக்க கல்யாணவீட்டு புஃபே சாப்பாட்டு ஞாபகத்தில் ‘ஜெரெமயாவில் 6 பக்கம்; ஜானி 2.0-ல் 5 பக்கம்‘ என்று இங்குமங்குமாய் தாவித் திரிந்தாலும் – மண்டை முழுக்கவே 'சிகரத்தின் சாம்ராட்‘ மீதான சிந்தனைகளே ! தோர்கலின் இந்த latest ஆல்பத்தின் மீது இவ்வாரப் பதிவினில் பார்வைகளை ஓடச் செய்வதாகப் ப்ராமிஸ் செய்திருக்க – ‘எங்கே ஆரம்பிப்பது? எங்கே முடிப்பது?‘ என்ற பேய்முழி ! இந்த ஆல்பத்தோடு மல்லுக்கட்ட முனைந்திருப்போரின் reactions கீழ்க்கண்ட மூன்றில் ஏதோவொன்றாய்த் தான் இருந்திருக்க வேண்டும் :

  • ஙே…? ஙே….? ஙே….? இதைப் புரிஞ்சுக்க நமக்கு ஆகாதுப்பா!
  • ஆங்? ஆங்? ஆங்? இது இப்டிக்கா – போயி அப்டிக்கா ரிட்டன் ஆகுதா? இல்லாட்டி அப்டிக்கா போயி அப்டிக்காவே ரிட்டன் ஆகுதா? புரிஞ்ச மேரியுமிருக்கு ; பிரியாத மேரியுமிருக்கே வாத்யாரே !! 
  • போ! போ! போ! ‘தல‘ படத்தையோ, தலைவர் படத்தையோ பார்க்கவே மனுஷனுக்கு நேரமில்லை; இதிலே இந்த வான் ஹாம் மனுஷனோட கட்டி உருள எவனுக்கு தம் கீது? போலாம் ரைட்ஸ் !

நீங்கள் ‘ஙே‘ அணியாகவோ ; ‘போ… போ‘ அணியாகவோ இருக்கும் பட்சத்தில் – மேற்கொண்டு வாசிக்க மெனக்கெடாது, பதிவின் வால்ப்பகுதியிலுள்ள ஃபோட்டோக்களை பார்த்த கையோடு  விடைபெறல் உத்தமம் என்பேன் ! 

மத்தியிலுள்ள ‘ஆங்… ஆங்‘ அணியினரே – உங்களுக்குமே ஒரு caution ! தொடரவுள்ளது நிச்சயமாய் இந்தக் கதையின் அக்கு வேறு – ஆணி வேறான சாராம்ஸமல்ல ! வான் ஹாம் போட்டுள்ள முடிச்சு மேளாவினை அவரே வந்தாலன்றி முழுமையாய் அவிழ்த்தல் சாத்தியமாகாது என்பது எனது அபிப்பிராயம் ! So பதிவினில் நான் எழுதிடவுள்ளது இந்தக் கதையின் முக்கிய துப்புக்களைப் பற்றி; எங்கெங்கெலாம் கவனம் அவசியமென்பது பற்றி & எனது பார்வையினில் என்ன மாதிரியான விஷயங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது பற்றியுமே ! என்னுள்ளே பதிவாகியுள்ள புரிதல்களை உங்கள் மீது திணித்தது போலிருக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் ஆல்பத்தினிலேயே அதனை இணைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன் ! எனது உள்வாங்கல் பிழையாக இருப்பின், மொக்கையான பல்பு வாங்க நேரிடும் என்பது ஒருபக்கமிருக்க - வான் ஹாம் எனும் அசாத்தியரின் முடிச்சுகளை அவரவராய் அவிழ்க்க முனைவதின் த்ரில்லும் இங்கே அவசியமென்று ஜூனியர் எடிட்டர் சொன்னது valid point என்று பட்டது ! So ஒரு பொது விவாதத்தின் பின்னே நம்மிடையே ஒரு புரிதல் ஏற்படின் - சூப்பரென்ற எண்ணத்திலேயே இப்போதைக்கு புலவன் தருமியாய் கேள்விகளை மட்டும் ஆங்காங்கே தெளித்து விடுகிறேன் - of course சிலபல குறியீடுகளோடே !! 

தொடரும் வேளைகளில் அவரவரது பார்வைகளில் கதை பற்றி விவாதித்திடலாம் ! And hopefully there will be light at the end of the discussions ! இந்தக் கதைக்களமும் சரி ; அதன் பின்னணியிலுள்ள சிலபல (நிஜக்) குறிப்புகளும் சரி - கபாலத்தைக் குடையக்கூடியளவிற்கு ஆராய்ச்சியையும், தேடல்களையும் அவசியப்படுத்தக்கூடிய சமாச்சாரங்கள் ! So அவற்றை முழுமையாய் நான் படித்தும், புரிந்தும், பதிவிடுவதென்பது ஒரு அசுர பணி என்பதால், அவற்றை நம் நிஜாரிலாத் தலீவரிடமோ ; பொருளாளரிடமோ ; இன்ன பிற மெனக்கெடல் நிறைந்த நண்பர்களுக்கெனவோ ஒப்படைக்கிறேன் ! இயன்றமட்டுக்கு physics lecture போல் தோற்றம் தந்திடாது - சகஜமாய் எழுத முனைந்துள்ளேன் !! So மேற்கொண்டு நீங்களாய் wikipedia பக்கமாய் ஒதுங்கிடும் பட்சத்தில் - இன்னும் ஆழமாய்ப் புகுந்திடலாம் இந்த ஆல்பத்தினுள் ! 


இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டே உள்ளே புகுகிறேன் - இதன் இறுதியில் சொக்காயோடும், வேஷ்டியோடும் முழுசாய் வெளியேறிட வேண்டுமே !! என்ற வேண்டுதலோடு !! உங்கள் பங்குக்கு நீங்கள் ஒரு பேப்பர் ; ஒரு பென்சில் & ரப்பர் & தோர்கல் புக் - என்று எடுத்துக் கொண்டு ரிலாக்ஸ் செய்யுங்களேன் ? Here goes :

The Begining :

- காலப் பயணம்
- நிகழ் பிரபஞ்சம்
- இணை பிரபஞ்சம்

இவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் ! இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது ! So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ! Logic has to be at a premium in the fantasy world !

காலப் பயணமென்றால் என்ன ? : சதா நேரமும் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம் காலத்தில் ! ஆக இறந்த காலம் to நிகழ் காலம் to எதிர்காலம் என்பதே நமது  பயண திசை ! நாம் பயணிக்கும் வேகத்தைத் துரிதப்படுத்தினால் எதிர்காலத்தினுள் முன்னதாகவே  எட்டிப் பிடிப்போம் ; future-க்குள் போயிருப்போம் என்பதும் ; வேகத்தை மட்டுப்படுத்தினால் ரிவர்ஸில் இறந்த காலத்துக்குள் போயிட சாத்தியமாகும் என்பதுமே இந்தக் கோட்பாட்டின் one-liner என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! 
இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) அல்லது மாற்று நிஜம் (Alternate reality) என்பது  முழுக்க முழுக்கவே கற்பனையின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் சங்கதி  ! அதாவது நிகழ்ப்பிரபஞ்சத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒத்ததொரு இணைநிஜம் இன்னொரு பிரபஞ்சத்தில் உண்டென்பதே இதன் கோட்பாடு ! ஒரே கதையினை வெவ்வேறு விதங்களில் சொல்லலாம் தானே ? ஒரே ஊருக்கு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம் தானே ? So ஒரே மாதிரியான நிகழ்வுகள், வெவ்வேறு விதங்களில் இணையுலகுகளில் அரங்கேறிக் கொண்டேயிருக்கும் என்று நம்புவது இங்கே சகஜம். ஆக "காலப் பயணம்" எனும் அசாத்தியத்தைக் கையில் எடுத்திடும் போது - இத்தகைய இணையுலகினுள்ளும், நிகழ் (நிஜ) உலகினுள்ளும் மாற்றி மாற்றி பயணிக்கும் விதமாய் சம்பவங்களை  கதாசிரியர்கள் கையாள்வதுண்டு ! 

"Sideways in Time" என்றதொரு புராதன sci-fi நாவலில் சொல்லப்படும் கோட்பாடு இங்கே நமக்கு சுவாரஸ்யமூட்டக்கூடும் ! பூமியில் ஒரு இடத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட latitude (அட்ச ரேகை) & longtitude (தீர்க்க ரேகை) விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்தக் குறியீடுகள் காலத்துக்கும் பொருந்தும் என்று அந்த நாவலில் சொல்ல முனைகிறார் கதாசிரியர் ! அதாவது அட்ச ரேகையினோடே பயணம் செய்வதென்பது நேர்கோட்டில் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பயணம் செய்வது போலானதாம் ! அதே சமயம் நெட்டுவாக்கில் உள்ள தீர்க்க ரேகையினை ஓட்டிப் பயணிக்கும் போது, பிற கால மண்டலங்களை ; பிரபஞ்சங்களைத் தொட்டிட முடியும் என்கிறார் ! 

இந்த இணைப்பிரபஞ்சங்களின் முக்கிய அம்சம் - கால அளவுகள் சார்ந்தது ! So நாம் பழகியுள்ள அதே மாதிரியான  "24 மணி நேரங்களானால் ஒரு நாள் ; 12 மாதங்களொரு ஆண்டு" என்ற நிலைப்படுத்தப்பட்ட அளவுகள் இந்த மாற்று நிஜவுலகினில் நிலவிடும் அவசியங்கள் கிடையாது ! நிஜஉலகினில் ஓராண்டென்பது, அந்த இணையுலகினில் மிகச் சிறியதொரு அவகாசமாகவும் இருந்திடலாம் ! So கதை நெடுக 37 ஆண்டுகளை தோர்கல் & கோ. அசராது நிகழ்த்திடுவதன் சூட்சமம் இது தானோ ?

Point # 2 : கதைநெடுக ஏகப்பட்ட சிற்சிறுக் குறிப்புகள் – சித்திரங்களிலும், வசனங்களிலும், கதையின் ஓட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளன! அவற்றைத் துல்லியமாய்க் கணித்திட நேரம் எடுத்துக் கொள்ளாவிடின் ஆடிப் போவது உறுதி ! இந்த ஆல்பத்தை மட்டும் வண்ணத்தில் அல்லாது black & white-ல் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் திணறிப் போயிருப்போம் – அந்தச் சித்திரக் குறிப்புகளில் சிலவற்றைக் கவனத்திட! உதாரணம் சொல்கிறேன் பாருங்களேன் !

பக்கம் 93 – ப்ரேம் 2 – மோதிரம் பளீர் பச்சை நிறத்தில்! & ப்ரேம் 7 – அதே மோதிரம் பச்சையில்!
பக்கம் 96 – ப்ரேம் 7 – பச்சை மோதிரம் வல்னாவிடம்!

இவற்றையெல்லாம் வண்ணத்தில் அல்லாது கறுப்பில் மாத்திரமே அச்சிட்டிருந்தால் - மொத்தத்துக்குக் கறேலென்று தோன்றியிருக்கும் ; துல்லியமாய்க் கவனிக்கத் திணறிப்போயிருப்போம் ! 

அதே போல சேக்ஸகார்ட் யாராகயிருப்பினும், அடையாளம் சொல்வது அந்தப் ‘பிங்க்‘ நிற அங்கி தான்! So இங்கே வண்ணத்துக்குமே கதை சொல்லும் பொறுப்பு தரப்பட்டுள்ளது!

தவிர, வசனங்களில் வான் ஹாம் நுழைத்திருக்கும் details அசாத்தியமானவை ! வழக்கமாய் மொழிபெயர்ப்பின் போது ‘trivial” என்று தோன்றிடக்கூடிய சேதிகளை இணைத்துக் கொள்வதில் அவ்வளவாய் மெனக்கெடல் காட்டிடுவதில்லை ! ஆனால் இந்த ஆல்பத்தை முதன் முறையாகப் படித்துக் கிறுகிறுத்துப் போன நொடியிலேயே தீர்க்கமாய்ப் புரிந்தது – வான் ஹாம் அடித்துப் போட்டிருக்ககூடிய ஈயைக் கூட அட்சர சுத்தமாய் நாமும் அடித்திட வேண்டிவருமென்று ! So இந்தக் கதையை மறுபடியும் எழுத எடுத்துக்கொண்ட போது இயன்றமட்டிற்கும் ஒரிஜினலின் பிசகா வார்ப்பாய் அமைத்திட முயற்சித்தேன் – என் புரிதல்களுக்கு உட்பட்ட வரையிலுமாவது ! கதையை நீங்கள் வழக்கமான பாணியில் ‘சர சர‘வென்று வாசித்திருப்பின் நிச்சயமாய் சிலபல மையப் புள்ளிகளை நோக்கிய குறியீடுகளை நீங்கள் தவற விட்டிருக்கக் கூடுமென்பேன்! So ப்ளீஸ் – நிதானமான; கவனமான மறு வாசிப்பு?!

Point # 3: இந்தக் கதையின் மையம் அடங்கியிருப்பது பக்கம் 79-ன் frame # 3-ன் வரிகளில் ! அதனை மீண்டுமொரு தபா வாசித்துத் தான் பாருங்களேன் ! ஜனவரி, பிப்ரவரி, மார்ச் – இத்யாதி என்ற ரீதியில் நமக்குப் பரிச்சயமாகியுள்ள காலம் பற்றிய புரிதல், நேர்கோட்டில், முன்நோக்கியே பயணமாகிறது ! ஆனால் இந்த ‘பையோஸ் சித்தாந்தம்‘ மாறுபடுகிறது ! கால ஓட்டம் என்பது நேர்கோடல்ல; இணை வளையங்களிலானது என்கிறது ! So காலமெனும் ஒற்றை வளையத்திலிருந்து முன்னேவோ – பின்னேவோ தாவுவது சிரமமல்ல என்று வான் ஹாம் நமக்குச் சொல்ல விழைகிறார் ! அவ்விதம் தாவும் ஒரு பாதையானது தான் அந்தத் தீக்கிரையான குடில் ! அந்த ஆற்றல் பெற்ற இலக்கினில் மட்டுமே காலப்பயணம் சாத்தியம் என்பதால் இங்கே காலத்துக்கான வாயில் அந்தக் குடிசை தான் ! கதை நெடுக – ஒவ்வொரு பயணத்தின் போதும் தோர்கலோ; டோர்ரிக்கோ; வல்னாவோ land ஆவது அங்கு தான் எனும் போது அந்தக் குடிலின் முக்கியத்துவம் அசாத்தியமானது!

- உடைந்து போன உத்திரம் <---> உடையா உத்திரம்

- தீக்கிரைச் சுவடுகள் <---> தீக்கிரை அடையாளமிலாத் தோற்றம்

- தோர்கல் ஏற்படுத்தும் கீறல்  <---> கீறல் இல்லா சுவர்

மேற்படி 3 பாய்ண்ட்களுமே காட்டப்பட்டிருக்கும் விதங்களுக்கேற்ப கதை பயணிப்பது சமகாலப் பிரபஞ்சத்திலா ? மாற்றம் கண்ட பிரபஞ்சத்திலா? என்பதை நாம் புரிந்து கொள்வோமென்று வான் ஹாம் எதிர்பார்க்கிறார்! (ஆனாலும் மனுஷனுக்கு வாசகர்கள் மீது அசாத்திய நம்பிக்கை தான்!!!)

Point # 4: கதையில் காட்டப்பட்டிருக்கும் பருவகாலங்களுமே இங்கே நிறைய முக்கியத்துவம் உண்டென்று தோன்றுகிறது ! பனியில் ஆரம்பிக்கும் பயணம் – கோடை காலத்தினில் சென்று land ஆவதை பக்கம் 62-ல் பார்த்திடுகிறோம்! அது எவ்விதம் சாத்தியமென்ற முடிச்சுக்கு point # 1-ல் நான் எழுதியிருந்த கால அளவீடு சமாச்சாரமும், நண்பர் செனா. அனா முன்வைத்திருக்கும் விளக்கமும் பொருந்தும் ! நேர்கோட்டுக் காலப் பயணம் நடைமுறையிலுள்ள சமகாலப் பிரபஞ்சத்தில் – ஒரு நாளென்பது 24 மணி நேரங்கள் அடங்கியது ; 12 மாதங்களென்பது ஓராண்டின் நீளம் ! ஆனால் தடாக அலைகளைப் போல இணை வட்டங்களில் சுற்றிச் சுற்றி நெளியும் காலவோட்டம் நடைமுறையில் இருக்கக்கூடிய இணைப் பிரபஞ்சங்களிலுமே அதே 24 hours to the day ; 12 months to the year என்ற அளவீடுகளும் நிலவிட வேண்டுமென்ற கட்டாயங்களில்லை ! பனிக்காலத்தில் புறப்படுவோர் பச்சை பசேலென்ற கோடையினில் சென்று இறங்குவதும் சரி ; பக்கம் 65-ல் இளவயது வல்னாவுக்கும், தோர்கலுக்குமிடையே நடைபெறும் சம்பாஷணைகளில் தெறிக்கும் கால அளவீட்டு முரண்பாடுகளும் சரி ; நமக்கு ஏதேனும் உணர்த்திடும் பொருட்டு வான் ஹாம் அமைத்துள்ள சமாச்சாரங்களா? "பத்தாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்ததென்று" இளம் வல்நா குறிப்பிடும் நிகழ்வுகள் - தோர்கலின்  கால அளவீட்டின்படி 20 ஆண்டுச் சமாச்சாரமாய்த் தோன்றிடுவதன் பின்னணி என்னவாகியிருக்கும் ? உங்களது சிந்திக்கும் குல்லாக்களை அணிந்து கொண்டு பதில் தரலாமே folks? பனியில் புறப்பட்டு - வெயிலில் தரையிறங்குவதெனில் - அது முழுமையான 37 ஆண்டுகளின் பயணமாய் இருக்க முடியாதே ? Brilliant reasoning from our good doctor ! இதற்கு வேறு மாதிரியான விளக்கம் சாத்தியப்படின் - கேட்க ஆவலாய்க் காத்திருப்பேன் ! 

Point # 5: Point to Point பஸ் போல – 37 ஆண்டுகள் முன்னே ; பின்னே; அப்புறமாய் 37 ஆண்டுகள் + ஆறு மாதங்கள் பின்னே ; 37 ஆண்டுகள் + சில மணி நேரங்கள் முன்னே என்று, கதை மாந்தர்களை கால இயந்திரத்தினில் செம சுற்று சுற்ற விட்டிருக்கிறார் வான் ஹாம் ! அந்தப் பயணங்களின் ஒவ்வொன்றையும் தான் பார்ப்போமே ?
  • Journey # 1 – துவக்கப் புள்ளி – நிகழ்காலப் பிரபஞ்சம் : 

- குதிரையோடு பனிமலையில் தோர்கல் நடைபோடுகிறார்.

- அதே வேளையில் பனியில் சறுக்கி தப்ப முயற்சிக்கிறது ஒரு உருவம்.

- ஒரு பிங்க் அங்கியணிந்த சேக்ஸபார்ட் எக்காளத்தை ஊதி பனிச்சரிவை உருவாக்க – அதனில் சிக்கி மடிகிறான் அவன் ! அவனது கையில் மோதிரம் நஹி ! பார்க்க பக்கம் 59 ; frame # 7.

- யாரிடமும் இந்த phase–ல் மாய மோதிரமில்லை என்ற யூகத்தில் இது நிகழ் பிரபஞ்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? அல்லது இங்குமே ஒரு முடிச்சு உள்ளதா ?

- ஆக இங்கே எழும் கே்விகள் கீழ்க்கண்டவாறு :

1. இந்த பிங்க் அங்கி சேக்ஸபார்ட் யாரோ?
2. பனியில் புதைந்து போன ஆசாமி யாரோ?

- தொடர்ந்து நடைபோடும் தோர்கல் ஒரு குடிலினில் இளம் டோரிக் பதுங்கிக் கிடப்பதைக் காண்கிறார்.

- 5 நாட்களுக்கு முன்பாய் கொடூரன் சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வந்ததாய்ச் சொல்கிறான் ! அவன் நிஜத்தில் சேக்ஸகார்ட்டைப் பார்த்தது கூடக் கிடையாது ! 

- குடிலின் வெகு அருகே ஒரு அசுர பனிச்சரிவு நேர்ந்திருக்க, அது பற்றித் துளியும் தெரிந்திரா விதத்தில் இளம் டோர்ரிக் அந்தக் குடிசையினுள் பதுங்கிக் கிடப்பதற்கும் ஏதேனும் குறியீடு உண்டா? அல்லது காலப்பயணத்தின் வாயிலுக்குள் தோர்கல் கால்பதித்த நொடியே ஒரு  சின்னம்சிறு நிகர் பிரபஞ்சத்தினுள் பயணிக்க இட்டுச் சென்றுள்ளாரா வான் ஹாம் ? நிதானமாய் யோசியுங்களேன் guys !

இந்த phase–ல் கவனிக்க வேண்டியன :

- தீக்கிரையான தடங்களுடன் குடில் உள்ளது. (பார்க்க பக்கம் 56-ன் சித்திரங்கள்)
- உத்திரமும் பலப்படுத்தப்படாது உள்ளது !

Journey # 2 : ரிவர்ஸில் 37 ஆண்டுகள் – அதாவது இறந்த காலத்தினுள் : 

-மாய மோதிரம் தோர்கலின் பாக்கெட்டில் உள்ளது. குதிரை மிரண்டு போய் உதைய – பின்நோக்கிய பயணம் ஸ்டார்ட் !

-அதே மலைப் பிராந்தியம் ; ஆனால் இம்முறையோ கோடை காலம் ;  பச்சைப் போர்வையோடு !

- ஒரு கைக்குழந்தையாய் சொந்த மண்ணிலிருந்து தாத்தாவால் தூக்கி வரப்பட்டதாகவும் ; கடந்த 10 ஆண்டுகளாய் அந்தப் பிராந்தியத்தில் தாத்தா கட்டிய குடிலில் வசிப்பதாய் இளம் பெண் வல்னா சொல்கிறாள். அப்படியானால் அவளது வயது something around 11-12 என்று தானே இருந்திட வேண்டும் ? ஆனால் வல்நாவோ வாலைக்குமரியாய்க்   காட்சி தருவது எவ்விதமோ ?  

- கண்டவுடன் காதல் – கிட்டத்தட்ட அதே வயதான டோர்ரிக்குக்கு ! அவளோடே வாழ்ந்து விடும் ஆர்வம் அவனிடம் ததும்புகிறது !

- நடப்பது எதுவும் புரியாதவராய் தோர்கல் குடிலின் ஒரு மூலையில் அமர்ந்து தலையைப் பிய்க்கும் கணத்தில், இன்னொரு காலப் பயணம் துவங்கிடுகிறது! இந்தத் தருணத்தில் பக்கம் 66-ன் frames # 4; 7 & 8-ஐ சற்றே பாருங்களேன்?! சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சிலபல புதிரான சித்திரங்களுக்கு இங்கே அவசியம் ஏதேனும் இருக்குமோ ? Or am I just seeing pink elephants ? 👻👻

- இந்த phase–ல் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்கள் :

1. குடில் புதிதாய்க் காட்சி தருகிறது – தீச்சேத அடையாளங்களின்றி !
2. சுவர்கள் கீறல்களின்றிப் பத்திரமாக உள்ளன. தோர்கல் தான் ஒரு அடையாளத்தைப் போட்டு வைக்கிறார் !

- திடுமென தோர்கல் காலத்தில் மீண்டும் பயணமாகியிருக்க – டோர்ரிக்கோ பின்தங்கி விட்டிருக்கிறான் ! ஆக இறந்த காலத்தில் ஒரு மாற்றம் செய்விக்கப்படுகிறது ! எதிர்காலத்துப் பிரஜை டோர்ரிக் இறந்த காலத்திலேயே தங்கிவிடத் தீர்மானிப்பதால் சங்கிலிக் கோர்வையாய் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் தானே ? An altered past must trigger an altered future ! சரி தானா? அவ்விதம் மாற்றம் காணும் பிரபஞ்சமானது நிகழ்ப்பிரபஞ்சமாகாது ! அதுவும் ஓ.கே. தானா ? 

Journey # 3: முன்னோக்கி 37 ஆண்டுகள் + கொஞ்ச நேரம் :

- மறுக்கா அதே குடிலினில் தோர்கல் மட்டும் பிரசன்னமாகிறார் ! ஆனால் டோர்ரிக்கும் இல்லை ; அவரது கத்தியும், குதிரையுமில்லை ; உத்திரக்கட்டையும் உடையாது உள்ளது. ! So இது மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சம் என்றாகிறது !

ஆக பக்கம் 61-ல் நடந்த சமாச்சாரங்கள் எதுவும் இந்த மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்தில் அரங்கேறியிருக்கவில்லையோ?

- பனிக்கட்டைகளோடு தோர்கல் தடுமாறிக் கிளம்பும் போது வீரர்கள் அவரை மடக்கி, இட்டுச் செல்கின்றனர் - சேக்சகார்டிடம்.

- இங்கே மீண்டுமொரு தபா பனிச்சரிவின் சிக்கிப் புதையுண்டு போனவனின் கையைக் காட்ட வான் ஹாம் தீர்மானித்ததன் பின்னணி என்னைவாகயிருக்கும்? பார்க்க பக்கம் 69 - frame 6.

- அதே போல தோர்கலைச் சிறைபிடித்துச் செல்லும் சிப்பாய்கள் – புதையுண்டு கிடப்பது “ஆறு தினங்களுக்கு முன் தப்பிச் சென்ற” அடிமையின் உடலாகத் தானிருக்குமென்று" குறிப்பிடுவதை பக்கம் 70-ல் frame # 4-ல் கவனியுங்களேன் ?! Is there a reason for this detail to be here?

- Journey # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா ? 

- மீண்டும் அதே குடிலுக்கு தோர்கல் இட்டுச் செல்லப்பட அங்கே நிற்பதோ பிங்க் அங்கியில் கிங்கரனைப் போலான சேக்ஸகார்ட் ! தானே டோரிக்கின் வயோதிக அவதார் என்றும் ; வல்னாவை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இழந்த சோகத்தில் வெறியனாகியவன் – சேக்ஸகார்ட்டாகவே மாறிவிட்டிருப்பதைச் சொல்கிறான்!

- ஆக மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சத்தில் ஒரிஜினல் சேக்ஸகார்டின் இடத்தில் இருப்பது வெறியன் (கிழ) டோர்ரிக் தான்!

- ஆனால் வல்னா மீது அவனுக்குத் தணியா காதல் தொடர்கிறது ! குதிரைத் திருடர்களின் கையில் செத்துப் போனவளைச் சாக விடாது ; அந்தப் போக்கிரிகள் தாக்கும் தருணத்துக்கு முன்பாய் அங்கே ஆஜராகி அவளைத் தன்னோடு அழைத்து வரும்படி மிரட்டுகிறான் !

- நிகழ் பிரபஞ்சத்தில், தோர்கலின் மனைவியும், பிள்ளையும் காத்திருப்பது சேக்ஸகார்டுக்குத் தெரிந்துள்ளதால் – அந்தக் கிங்கரனே டோர்ரிக்கின் கிழட்டு அவதார்  என்பது ஊர்ஜிதமாகிறது! ஆக பக்கம் 73-ல் frame # 2-ன் வசனம் மெய்யாகிறது!

இந்த காலகட்டத்தில் கவனித்திட வேண்டியவை:

-யாருமே பார்த்திரா அந்த (ஒரிஜினல்) சேக்ஸகார்ட் இப்போது இல்லாமலே போய்விட்டான் !

- 37 ஆண்டுகளுக்கு முன்னே தோர்கல் அந்தக் குடிலின் சுவற்றில் போட்டு வைத்த கீறல் அப்படியே உள்ளது !

Journey # 4: இறந்த காலத்தினுள் 37 ½ ஆண்டுகள் பின்னே பயணம்!

- கிழ (டோர்ரிக்) சேக்ஸகார்டோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது மிரட்டலைக் கேட்டு தோர்கல் உணர்ச்சிவசப்படும் தருணத்தில், காலப்பயணம் trigger ஆகிறது ; வல்னாவைக் கொல்ல போக்கிரிகள் சூழ்ந்து நிற்கும் போது அங்கு கச்சிதமாய்ப் பிரசன்னமாகிறார் ! அதே குளிர்கால சங்கிராந்தியின் மூன்றாம் நாள் அது !

- அந்தத் திருட்டுக் கும்பலைத் தோர்கல் துரத்தியடிக்க வல்னா மடிந்திடவில்லை ; பத்திரமாக இருக்கிறாள் !

- தனது பயண நோக்கத்தை இளம் டோரிக் & வல்னா ஜோடியிடம் தோர்கல் விளக்குகிறார். பின்நாட்களில் சக்தி வாய்ந்த சேக்ஸகார்டாக டோர்ரிக் உருமாறவுள்ள விஷயத்தையும், வல்னாவைப் பத்திரமாய் எதிர்காலத்திற்குள் கடத்திக் கொண்டு செல்ல அவன் கட்டளையிட்டிருப்பதையும் விரிவாகச் சொல்கிறார்!

- பேராசை பீடிக்க, இளம் டோர்ரிக்குமே வல்னாவை 37 ஆண்டுகள் முன்நோக்கிக் கூட்டிச் சென்று சேக்ஸகார்ட் டோர்ரிக்கிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறான் ! ஆடு-மாடுகளை மேய்த்தபடிக்கே வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பதிலாக – சக்திவாய்ந்த சிகரங்களின் சாம்ராட்டாக எதிர்காலத்தில் தலையெடுப்பதே அவனது விருப்பமாக உள்ளது ! Of course - that will be an altered universe !

- மோதிரமோ இப்போது இருப்பது வல்னா வசம் ! தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்சிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது!

Journey # 5 : 37 ஆண்டுகள் முன்னே :

- தோர்கலோடு சேர்ந்து வல்னாவும் நிகழ்காலத்திற்குள் புகுந்து விட்டாள் !

- ஆக போக்கிரிகள் தாக்கவில்லை; குடிசையும் தீக்கிரையாகவில்லை; வல்னாவும் உயிரோடே உள்ளாள் !

- ஆனால் Journey # 4-ன் போது தோர்கல் விவரித்த விபரங்களை மனதில் இருத்திக் கொண்ட இளம் டோர்ரிக், வல்னாவின் சாவுக்குப் பழி தீர்க்கும் முகாந்திரம் இல்லாத போதிலுமே சேக்ஸகார்ட்டாகவே உருமாறிடுகிறான் ! தோர்கலும் இளம் வல்னாவும் பிரசன்னமாகும் தேதியினில் அவர்களுக்காகக் காத்திருக்கிறான் ! ஆனால் இவனொரு மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்த்தின் டோர்ரிக் சேக்ஸகார்ட் !!! அதாவது டோர்ரிக் சேக்ஸகார்ட் 2.0 !!!

- தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் ! விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் ! அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே !

Journey # 6 : (37 ஆண்டுகள் பின்னே) :

- கிழ சேக்ஸகார்ட் டோர்ரிக் 2.0 & வல்னா குடிலில் பிரசன்னமாகும் போது இள வயது டோர்ரிக் அவர்களை மிரட்சியோடு எதிர்கொள்கிறான் !

- “37 ஆண்டுகளுக்குப் பின்னே – இப்படித் தான் ஆக வேண்டுமா உனக்கு?” என்று வல்னா கேட்க – பதட்டத்தில் இள டோர்ரிக் – கிழ டோர்ரிக்கை சுட்டு வீழ்த்துகிறான்! ஆக இறந்த காலத்தின் கையில் – மாற்றம் கண்டுள்ள எதிர்காலம் மரணிக்கிறது ! பாம்பு தனது சொந்த வாலையே விழுங்கப் பார்க்கிறது !!

- இதற்கு மத்தியில் Journey # 5-ல் கைதியாகக் கிடக்கும் தோர்கல் தப்பியோடுகிறார். குடிலின் வரம்பைத் தாண்டிப் போய் விடுபவரை சிப்பாய்கள் துரத்தி வந்து பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப் போகிறார்கள்! தோர்கல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பனியில் தப்பி நடந்து செல்கிறார்!

- Back to பயணம் # 6 – செய்வதறியாது திகைத்து நிற்கும் இள டோரிக் வல்னாவிடமிருந்து மாய மோதிரத்தைப் பிடுங்கிக் கொண்டு – பின்நோக்கிச் செல்லத் தீர்மானிக்கிறான்.

- சகலத்துக்கும் காரணமான தோர்கலை இறந்த காலத்திலேயே தீர்த்துக் கட்டி விட்டால் எல்லாப் பிரச்சனைகளுக்குமே முற்றுப்புள்ளி வைத்து விடலாமென்ற திட்டத்தோடு 37 ஆண்டுகளும் சில மணி நேரங்களும் முந்தை காலத்திற்குப் பயணிக்கிறான்!

Journey # 7 – 37 years & a bit into the past :

- எல்லாம் துவக்கம் கண்ட பனிமலையில் இளம் டோர்ரிக் மோதிரத்தோடு பிரசன்னமாகி்ட – தோர்கல் தன் குதிரையோடு அங்கே ஆஜராகிடுவதற்கு முன்பாய் அவரை வீழ்த்திடும் நோக்கோடு தயாராகிறான்.

- இப்போது குடிசை தீக்கிரையான வடுக்களோடே உள்ளது ; தோர்கல் போட்டு வைத்த கீறலும் இல்லை !

- மீண்டுமே ஒரு பிங்க் அங்கி உருவ சேக்ஸகார்ட் எக்காளத்தை ஊத – அது ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்தி – தப்பியோட யத்தனிக்கும் டோர்ரிக்கைப் புதைத்து விடுகிறது! இம்முறையோ புதையுண்ட சடலத்தின் விரலில் அந்தப் பச்சை மோதிரம் உள்ளது ! பார்க்க பக்கம் 93; frame # 7.

- இம்முறை சேக்ஸகார்ட் அவதாரை எடுத்திருப்பதோ வல்னா ! 37 ஆண்டுகளை சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து – சரியான தருணத்தில் டோர்ரிக்கைப் பழிவாங்குகிறாள்!

Cut to Journey # 5 : கைகள் கட்டப்பட்ட நிலையில் கைதியாய் ஒரு நிகர் பிரபஞ்சத்தில் நடந்து போகும் தோர்கல் – ஒரு கூரான பாறையில் தனது கட்டுக்களை உரசி அறுத்து விடுகிறார். பார்க்க பக்கம் 94 – frame 1 & 3.

- யோசித்தபடிக்கே தோர்கல் நடைபோடும் போது – அந்தக் குடில் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார் !

- குதிரைத் திருடர்கள் வல்னாவை தீர்த்துக்கட்டியதொரு பிரபஞ்சத்தில் குடிசைக்கு தீயிட்டது அவன்களே. ஆனால் மாற்றம் கண்டிருக்கும் இந்த இணைப் பிரபஞ்சத்தில் குடிசை எரிகிறது தான் ; ஆனால் அதற்குத் தீயிடுவதோ சேக்ஸகார்ட் வல்னாவின் ஆட்கள் ! ஆக எக்காளம் ஊதப்படுவதோ; பனிச்சரிவு நிகழ்வதோ ; குடிசை தீக்கிரையாவதோ மாற்றங்களின்றி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடைபெற்றே தீருகின்றன! ஆனால் அவற்றின் சூத்ரதாரிகளும், பலிகடாக்களும் காலவட்டத்துக்கு ஏற்ப மாறிடுகின்றனர் !

- சடலமாய்க் கிடக்கும் இளம் டோர்ரிக்கை சிப்பாய்கள் இழுத்துச் செல்கின்றனா ! கவனமாகப் பாருங்கள் – இந்த நிகழ்வின் சமயம் மாய மோதிரம் டோர்ரிக்கின் வசமில்லை ! சேக்ஸகார்ட்டாகத் தலையெடுத்திருக்கும் (முதிர்) வல்னாவின் விரல்களையே அலங்கரிக்கிறது. பார்க்க பக்கம் 96 – frame 7 !!

- ஆக தோர்கலைக் காப்பாற்றும் பொருட்டு – மோதிரம் தன்னிடமிருந்த காலகட்டத்திலிருந்து 37 வருடங்கள் சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து டோரிக்கைப் பழிவாங்கும் பொருட்டு அந்த மலை முகட்டில் காத்திருந்து எக்காளத்தை முழங்கினாளென்று யூகித்திட வேண்டுமா ?

- வரலாற்றில் செய்விக்கப்படும் மாற்றங்கள் எதிர்கால சம்பவங்களினில் எதிரொலித்தே தீரும் ! அதே போல – எதிர்காலத்தினுள் புகுந்து விளைவிக்கும் மாற்றங்கள் இறந்த காலத்திலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று சொல்ல முனைவது தானா கதாசிரியரின் நோக்கம்? 

க்ளைமேக்ஸ்:

-இணையுலகில் குதிரையோ, வில்லோ, அம்போ இல்லாத தோர்கலுக்கு அவற்றையெல்லாம் வல்னாவே அனுப்பிடுகிறாள் ! எல்லாவற்றிற்கும் மூல காரணமான அந்தக் குடிலையும் எரிக்கச் செய்து விடுகிறாள்!

-இனி இணையுலகமும், நிஜ உலகமும் ஒன்றிடுமென்ற நம்பிக்கையோடு தோர்கலுக்கு மௌனமாய் விடை தருகிறாள் ! ஆக கதை துவங்கும் போது நடந்தேறும் நிகழ்வுகளும்; க்ளைமேக்ஸின் நிகழ்வுகளும் ஒரே மாதிரியானவைகளே ! கதையின் துவக்கமே க்ளைமேக்ஸ்…. க்ளைமேக்ஸே துவக்கமும் ! "ஒரோபோரோஸ்" என்பது எகிப்திய புராணங்களினொரு நம்பிக்கை ! "தன் வாலையே விழுங்க எண்ணுமொரு சர்ப்பம் ;அல்லது டிராகன் " என்பது இதன் அர்த்தம் ! முதன்முதலாய் இதனை உலகம் கண்டது 14-ம் நூற்றாண்டினில் எகிப்திய மன்னர் டுடங்காமுன்னின் சவப்பெட்டியினில் ! வாலையே வாய் தின்னுவதென்பது இயற்கையின் முழுச் சுற்றைக் குறிக்கும் குறியீடு ! ஆரம்பமே முடிவே ; முடிவே ஆரம்பம் என்பது போல !! 
By no means – இது சரியான புரிதல் என்றோ ; விடைகளைக் கண்டு விட்டேன் என்றோ நான் கோரிடப் போவதே கிடையாது ! ஆங்காங்கே சிதறிக் கிடக்கக்கூடிய கேள்விகளை உங்கள் சார்பில் தொகுத்து, சில பல குறியீடுகளின் பக்கமாய்க் கவனங்களை highlight செய்திடவும் மாத்திரமே முனைந்துள்ளேன் ! ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் open ends-களை அவரவர் புரிதலுக்கேற்ப நிரப்பிப் கொள்ளலாமெனும் போது நிச்சயமாய், ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு விளக்கமும் சாத்தியமாகிடலாம் ! முதற்புள்ளியில் எக்காளத்தை ஊதுவதே வல்நாவாக ஏனிருக்கக் கூடாதென்ற கோணத்திலும் யோசிக்கத் தான் செய்வோமா ? அட...கிழியாத சட்டைகள் ஏது சிண்டைப் பிய்க்கும் வேளைகளில் ?

Parallel Universes சாத்தியமாகிடும் போது - parallel சிந்தனைகளுமே ; parallel கதைசொல்லலுமே சாத்தியமாகாதா ? இந்த வரியினை மறுக்கா வாசித்த கையோடு மீண்டுமொருமுறை இந்த சிகரத்தினில் ஏறிடத் தான் முனைந்து பாருங்களேன் folks ? 

எது எப்படியோ – காலமென்பது கடவுளர்களின் கரங்களில் தங்கியிருப்பதே உத்தமம் என்பதை நானும் பலமாய் அங்கீகரித்து விட்டுக் கிளம்புகிறேன் - அடுத்த தலைப்பினுள் !!

CHENNAI BOOKFAIR PHOTOS & OTHER UPDATES LATER TONIGHT ! மிடிலே இப்போதைக்கு !! 

Bye now all ! See you around !! 

Sunday, January 06, 2019

ஒரு விடுமுறை விண்ணப்பம் !

நண்பர்களே,

வணக்கம். நேற்றைக்கு ஓரிடம் ; இன்றைக்கு இன்னொன்று ; இடைப்பட்ட அவகாசத்தில் 2 மணி நேரத்துக்கு சென்னைப் புத்தக விழாவில் தலை காட்டியது என்று எனது பொழுதுகள் காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டே பயணித்து வருகின்றன ! இந்த அழகில் நண்பனொருவனின் பையனுக்குத் திருமணமென்பதால் ஞாயிறு காலை வடக்கே பயணமும் காத்துள்ளது !! So இந்தக் கூத்துக்களுக்கு மத்தியினில் வழக்கமான ஞாயிறு காலைப் பதிவென்பது இந்தமுறை சாத்தியமாகாதென்று தூக்கத்தில் செருகும் இமைகள் கதறலோடு சொல்கின்றன ! So இன்றைய பதிவில்லாத குறையினை ஜனவரியின் இதழ்களின் அலசல்களோடு கொண்டு செல்லப் பார்ப்போமா guys ? தோர்கல் எழுப்பியுள்ள கேள்விகளுள் பராகுடா பக்கமாய் இன்னமும் போதிய கவனம் திரும்பியதாய்த் தோன்றவில்லை ! What say we focus on "அலைக்கடலின் அசுரர்கள்" ?
இயன்ற முதல் தருணத்தில் பதிவோடு ஆஜராகிடுவேன் என்ற வாக்குறுதியோடு விடை பெறுகிறேன் ! Bye all ! இப்போதைக்கு கார்பீல்டு உங்களுக்குத் துணைக்கு !! 

P.S : கடைசியாய் எண்ணிய வரைக்கும் TEX vs LUCKY LUKE என்பது தான் நாயகர்களின் போட்டியாகத் தென்பட்டது !! அதனில் டெக்ஸ் லீடிங் என்றாலுமே, லக்கி லூக்கின் வாக்கு வங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !  இன்னமும் வோட்டுப் போட்டிருக்கா நண்பர்கள் இம்முறையேனும் கையில் மாய் தடவிடலாமே ? 

Wednesday, January 02, 2019

முதல் கூட்டணி !

நண்பர்களே,

வணக்கம். ஜனவரியின் இதழ்கள் நேற்றைக்கே இங்கிருந்து சந்தா நண்பர்களைத் தேடித் புறப்பட்டு விட்டன ! And இன்று - ஆன்லைன் விற்பனைக்கும் ரெடியாகி விட்டன ! இதோ - நமது வலைத்தளத்தில் உள்ள லிஸ்டிங்கின் லிங்க் : http://www.lion-muthucomics.com/home/369-january-pack-2019.html

ஆன்லைன் விற்பனைகளை ஏற்கனவேவுள்ள நமது ஸ்டோரான lioncomics.in-லிருந்து சிறுகச் சிறுக, நமது வலைப்பக்கத்திலேயே இதற்கென உள்ள பகுதிக்கு மாற்றம் செய்திட விழைகிறோம் ! So ஆன்லைனில் வாங்கி வரும் நண்பர்கள் தயை கூர்ந்து சிரமம் பாராது, இங்கே பதிவு செய்து கொள்ள நேரமெடுத்துக் கொண்டு, வரும் நாட்களில் இங்கேயே வாங்கிடக் கோருகிறோம் !

Happy shopping & Happier reading !!

இனி இதழ்களின் first look பற்றி எழுதிடவும் ; கதைகளைப் படித்தான  பின்னே, அலசல்களை அரங்கேற்றிடவும் நீங்கள் நேரமெடுத்துக் கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி ! Bye all & See you around !!

P.S : நாயகர் யார் ? தேர்தலுக்கு இந்த பூத்திலும் ஓட்டுக்கள் போடலாம் !! 

Tuesday, January 01, 2019

இங்கேயுமொரு இடைத்தேர்தல் !!

நண்பர்களே,

புத்தாண்டு வாழ்த்துக்கள் !! துளிர் விட்டிருக்கும் 2019 நம் அனைவருக்கும் நலமும், வளமும், அழகான காமிக்ஸ்களையும் ஒருசேர அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாய் அமைந்திட ஆண்டவனை வேண்டிக்கொள்வோம் !! ஊரெல்லாம் உற்சாகமும், கொண்டாட்டமும் களை கட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் - டிவி-யில் மூழ்கிப் போக ஆர்வம் தோன்றவில்லை & வெட வெடக்கச் செய்யும் இந்த மார்கழிக் குளிர் இரவினில் வெளியே தலைகாட்டவும் தம் இல்லை !! So நமக்குப் பரிச்சயமான ஒரே ஆடுகளத்தினில் ஒரு மினிப்பதிவோடு லைட்டாக ஒரு குத்தைப் போட்டு விட்டுப் புறப்பட்டால் - புத்தாண்டுக்கு செம start ஆக இருக்குமென்று தோன்றியது !! And here I am !!

சமீபமாய் நமது முந்தைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது - கண்ணில் பட்டதொரு போட்டி - "நூற்றாண்டின் நாயகன் யார் ?" என்பதே !! 2000 என்ற millenium ஆண்டு புலர்ந்த தருணத்தில் ஒரு பதிமூன்று நாயகர்களின் பெயர்களை பட்டியலிட்டு - அவர்களுள் THE TOP MAN யாரென்றே கேள்வியைக் கேட்டிருந்தேன் ! Of course - ரெகுலராய் நமது இதழ்களைப் படித்து வந்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு போட்டியும் சரி ; கெலித்த நாயகர் யாரென்பதும் சரி, நிச்சயம் நினைவிருக்கும் !! And இந்த ரீதியிலான கேள்விகளை அவ்வப்போது நான் கேட்டு வருவதும் உண்டு தான் ; simply becos ரசனைகள் எனும் காட்டாறு ஓரிடத்தில் தேங்கி நிற்பதில்லையே ? ஒரு ஸ்பைடர் அறிமுகமான போது மாயாவி மீதான மையல் பின்னே சென்றது ! ஒரு டெக்ஸ் வில்லர் ஆட்டத்தைத் துவக்கிய போது - அதே ஸ்பைடர் one step பின்னே சென்றதும் நிகழ்ந்தது !! XIII களமிறங்க - ஒளிவட்டம் அவரது வசமானது ; அப்புறம் உடைந்த மூக்கர் மீதான நேசம் துளிர் விட்டது ; இத்யாதி...இத்யாதி...!! So நமது ரசனைகள், அகவைகளின் பயணங்களோடு - நமது ஆதர்ஷர்களும் மாறிடுவது இயல்பே என்பதால் தான் அவ்வப்போது உங்களது ஓட்டுக்கள் யாருக்கென்று இடைத்தேர்தலை நடத்தத் தோன்றுகிறது !! இது தம்படி 'சம்திங்' கூட வெட்ட வலுவில்லாத கட்சி என்பதால் - கவர்களை எதிர்பாராது ஓட்டுக்களை பதிவிடுங்களேன் guys - இந்த வருஷப்பிறப்பை சுவாரஸ்யமாக்கிடும் பொருட்டு   !!

இம்முறை நமது லேட்டஸ்ட் நாயகர்களும் தேர்தலில் நிற்கவிருப்பதால் - சமீப வாசகர்களும் தங்கள் தேர்வுகளைப் பதிவிடலாமே ?

As always - இவ்விதப் போட்டிகளின் முதல்பெயர் - "இரும்புக்கை மாயாவி" என்றிருப்பது தவிர்க்க இயலா காலத்தின் கட்டாயம் தான் !! காமிக்ஸ் என்றாலே இன்றைக்கும் "மாயாவியா ?" என்று முகம் மலருவோர் ஓராயிரம் உண்டு என்பதால் - லிஸ்டின் முதல் பெயர் மாயாவியே !!

பட்டியலில் இரண்டாமிடத்தை தனதாக்கிடுவது நமது சிரசாசனப் புகழ் கூர்மண்டை ஸ்பைடர் தான் !! நமது லயன் காமிக்சின் take-off நிகழ்ந்ததே இந்த ஹெலிகார்க்காரரின் புண்ணியத்தில் தான் எனும் போது, இவரை மறத்தல் தெய்வ குற்றத்துக்கு சமானமாகிடக் கூடும் ! At his peak - இவருக்கு நம்மிடையே நிலவிய mania வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ரகம் !!

லிஸ்டில் மூன்றாமிடத்தை நான் தர நினைப்பது நமது evergreen ரேஞ்சுருக்கே !! இரவுக்கு என்றைக்கும் ஒய்வு லேது ; இரவுக்கழுகாருக்கும் தளர்வு லேது ! 1985 -ல் நம்மிடையே அறிமுகமானவர் இத்தனை காலம் கழித்தும் going awesomely strong எனும் போது - Tex Willer இந்தப் பட்டியலில் இடம்பிடித்து நிற்பதில் யாருக்கும் வியப்பிராது !!

# 4 on the list ??? வேறு யாரு ? ஒரு நம்பரைப் பெயரின் பகுதியாய்க்  கொண்டு தமிழ் சினிமாஉலகை ஒரு நாயகி ஆட்சி செய்கிறாரெனில் - ஒரு நம்பரை மாத்திரமே தனது அடையாளமாய்க் கொண்டபடிக்கே காமிக்ஸ் உலகை வசப்படுத்தி நிற்கும் மனுஷன் தான் !! நமது "இரத்தப் படல" நாயகரான XIII கிட்டத்தட்ட டெக்சின் அதே வயதினன் - நம்மிடையிலான அறிமுகத்தைப் பொறுத்தவரையிலும் !! ரேஞ்சர் அக்டோபர் 1985 எனில் - ஞாபகமறதிக்காரர் ஜூன் 1986 !! ஆனால் இன்னமும் வாசகர்களை வசீகரிக்கும் ஒரு இனம்புரியா   ஆற்றலை அவர் தக்க வைத்திருப்பது - அவரது ஆற்றலுக்கொரு பறைசாற்று !!

அட...தாட்டியமான கௌபாய்கள் தானென்றில்லை ;ஒல்லிப் பிச்சான்களுமே உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வித்தையறிந்தவர்களே என்பதை 1987 முதல் இன்று வரை அசாத்தியமாய் நிரூபித்துக் காட்டி வரும் லக்கி லூக் - நமது லிஸ்டில் # 5 !! சிரிப்பிலும் சுவையுண்டு ; கார்டூனிலும் கதையாழம் உண்டு என்று சாதித்துக் காட்டும் இந்த மஞ்சள் சொக்காய் காமெடி நாயகரை தமிழ் காமிக்ஸ் மறக்கத் தான் முடியுமா- என்ன ?

பட்டியலில் 6 - ஒரு உடைந்தமூக்கர் !! வந்தார்....அதகளம் செய்தார்...நம்மை ஒட்டுமொத்தமாய் வென்றார் !! Who else but - the inimitable கேப்டன் டைகர் ?!! "thangak கல்லறையில் " தனது வருகையை அதிரடியாய் அறிவித்தவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தந்தது சகலமும் ஹிட்ஸ் !! கதைகளின் ஆழம் ; சுவாரஸ்யம் ; மனிதனிடமிருந்ததொரு வசீகரம்  நம்மை மெய்ம்மறக்கச் செய்ததை யார்தான் மறக்கவோ / மறுக்கவோ முடியும் ?

லிஸ்டில் # 7 - ஒரு புதுயுக நாயகருக்கு !! கையில் துப்பாக்கி கிடையாது ; சவாரி செய்யக் குதிரையும் கிடையாது ; வார்த்தைகளில் பஞ்ச் டயலாக் தெறிக்கும் அவசியங்கள் நஹி ; டுமீல்/டுமீல் என்ற ஓசைகளுக்கு முகாந்திரங்களும் நஹி ! ஆனால் அந்த செம்பட்டைத் தலை ப்ளூ ஜீன்ஸ் கோடீஸ்வரருக்கு கடந்த 5 ஆண்டுகளும் சொந்தமென்று தைரியமாய்ச் சொல்லலாம் !! Enter லார்கோ வின்ச் ! எதை போலவும் இலா, புதுக் கதைகளோடு நம்மை மயக்கிய ஜாலவித்தைக்காரர் !!

லிஸ்டில் # 8 : மர்ம மனிதன் மார்ட்டின் !! இந்த் தேர்வு பலரது புருவ உயர்த்தல்களை கொணரலாம் தான் ! மொத்தமே 20 கதைகளில் கூடத் தலைகாட்டியிரா ஒரு குழப்ப நாயகரை இந்த all -time பட்டியலில் இணைப்பது நியாயமா ரே ? என்று கேட்கத் தோன்றலாம் தான் !! ஆனால் கதைகள் ஒவ்வொன்றிலும் மார்ட்டின் காட்டும் வேறுபாடுகள் - வேறு எந்தவொரு ஹீரோவுக்கும் சாத்தியமே ஆகிடா சமாச்சாரமன்றோ ? குழப்பமே ஆனாலும், அதனை நாம் ரசிப்பது வாய் பிளந்தன்றோ ? So மார்டினும் உண்டு இந்தப் பட்டியலில் !!

நட்சத்திரங்களின் புதல்வன் ; பிரபஞ்சப் பயணி ; ஆரிசியாவின் ஆத்துக்காரர் ; விண்வெளியின் பிள்ளை - நமது fantasy கதைவரிசைகளின் ஒரே பிரதிநிதி ; மூச்சிரைக்கச் செய்யும் வேகத்தில் நம்மையெல்லாம் கொள்ளை கொண்டு விட்டுள்ள மனுஷன் ...aka தோர்கல் !! மிகக் குறுகியதொரு அவகாசத்தினில் ஒரு மெகா ஸ்டாராகிப் போயிருக்கும் இவரும் இந்தப் போட்டியில் சேர்ந்து  கொள்வது  நியாயம் என்று பட்டது !! So ஒன்பதாம் எண்ணில் தோர்கல் !!

Last in the list - இவரும் ஒரு பரட்டை நாயகரே ! இவருக்கும் வானமே எல்லை !! ஆனால் இவர் சவாரி செய்வது குருதையில் அல்ல ; 'கழுகு' என்ற பெயர் கொண்டதொரு படகினில் ! சமுத்திரங்களே சாம்ராஜ்யமாய்க் கொண்டு - கதைக்கு கதை புதுப் புதுக் களங்களில் சாகசம் செய்து - உலகைச் சுற்றி வரும் கேப்டன் பிரின்ஸ் இந்த சாகச நாயகர்களின் டாப் பட்டியலில் இடம்பிடிக்க எல்லாத் தகுதிகளும் கொண்டவரே என்பது எனது அபிப்பிராயம் !

So மேற்படி 10 நாயகர்களில் உங்களின் ஒற்றை வோட்டு யாருக்கு ? என்பதே இப்போதைய தேடல் !ஆங்...இவரும்...இவரும்..அவரும்... என்ற ரீதியிலான ஓட்டுக்கள் செல்லாது !! ஒரே வோட்டு ; ஒரே தேர்வு !! அது யாரு ? சொல்லுங்கண்ணே - சொல்லுங்க !!

Bye all !! See you around !! Have an Awesome Year ahead !!

P .S : அப்புறம் இந்த லிஸ்டில் "வேதாளன்  ஏன் இல்லை ? " ரிப் கிர்பி ஏன் இல்லை ?" என்ற ரீதியில் சாத்துவதாகயிருப்பின், அதனை இன்னொரு நாளைக்கு ; இன்னொரு வேளைக்கு வைத்துக் கொள்வோமே ? 

அவசரமாய் உங்களில் சிலரிடமிருந்து தகவல் தேவைப்படுகிறது !!

கீழ்க்கண்ட பட்டியலின்படி, நமது வங்கிக் கணக்கினில் தொகைகள் வரவாகியுள்ளன ; ஆனால் அவை குறித்து உடைமையஸ்தர்கள் மின்னஞ்சல்களோ ; தகவல்களோ அனுப்பிடவில்லை ! So அந்தத் தொகைகள் suspense account -ல் தொடர்கின்றன !! உரிய விபரங்களோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் மட்டுமே, தொகைகளை உரிய சந்தா கணக்குகளில் வரவு செய்து புக்குகள் அனுப்ப முடியும் !! So அவசரம் ப்ளீஸ் !!

5/12/2018 – Rs.4250 (D.Pradeep)
6/12/2018 – Rs.1958
6/12/2018 – Rs.4200 (Arumugam)
11/12/18 – Rs.7130
11/12/2018 – Rs.3000
12/12/2018 – Rs.5999
12/12/2018 – Rs.5000
14/12/2018 – Rs.5000
15/12/2018 – Rs.6000
17/12/2018 – Rs.4500
17/12/2018 – Rs.6000
18/12/2018 – Rs.5000
20/12/2018 – Rs.2000
22/12/2018 – Rs.5000
24/12/2018 – Rs.3000
26/12/2018 – Rs.5000
27/12/2018 – Rs.1000
28/12/2018 – Rs.5000