நண்பர்களே,
வணக்கம். தமிழ் சினிமா பார்த்திடும் யாருமே நமது தானைத்தலைவர் கவுண்டரின் ரவுசுகளுக்கோ ; லவ்ஸ்களுக்கோ அடிமையாகிடாது இருக்க வாய்ப்பேயில்லை என்பது இந்த சிஷ்யப்புள்ளையின் கருத்து ! And கடந்த ஒரு வாரமுமே எனக்கு நிகழ்ந்தவை தலைவரின் ‘I am very happy!’ சமாச்சாரங்களே ! என்னவென்று கேட்கிறீர்களா ? எல்லாமே ஒரு கதையின் கதை தான் !! சகலமும் ஆரம்பித்தது “அலைகடலில் அசுரர்கள்” எனும் தொடக்கப் புள்ளியிலிருந்து ! நேர்கோட்டுக் கதைக்களமாகயிருக்கும் ; பெரிதாய்ப் பணிகள் பெண்டு கழற்றாது என்ற நம்பிக்கையோடு அதற்குள் புகுந்தால் – நிலவரம் நேர்மாறாயிருந்தது ! கதையும் சரி, வசனங்களின் ஆழமும் சரி, பராகுடா பயணிக்கும் சமுத்திரத்தின் ஆழத்திற்குச் சிறிதும் சளைக்காதிருக்க, அந்த 168 பக்கங்களைக் கரை சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்தே போனது !
And இவை எல்லாமே போன வாரத்து நிகழ்வுகள் ! “ரைட்டு… ஒரு மாதிரியா கஷ்டமான பணிக்கு சுபம் போட்டாச்சு ; இனி இந்த மாசம் காத்திருப்பது தோர்கலும் ; ‘தல‘ டெக்ஸ் வில்லரும் தான்…! ரெண்டுமே intense ஆன களங்களே - ஆனால் சமாளிச்சுக்கலாம் !” என்றபடிக்கு ஜாலியாகி விட்டேன் ! பொதுவாய் கிருஸ்துமஸ் & ஆண்டின் இறுதி வேளைகளில் நமது மிஷினரி இறக்குமதி சார்ந்த பணிகளில் பெரியதொரு தொய்வு ஏற்பட்டு விடுவது வாடிக்கை ! மேலை நாடுகள் சகலமும் சகட்டுமேனிக்கு விடுமுறையில் சென்றிருக்க – நாம் செய்வதற்கு ஏதுமிராது ! இந்தாண்டும் அதே நிலை தொடர – பராகுடாவைத் தேற்றி முடித்த கையோடு நான் ஒரு வித விடுமுறை மூடுக்குப் போயிருந்தேன் !
நாட்கள் ஓட்டமெடுக்க, மற்ற இதழ்களை அச்சிட வேண்டிய நேரமும் நெருங்கிய போது – “குஞ்சாய்ன்… பூ மிதிக்க சித்தே வரணுமே !” என்று மைதீன் தலைகாட்டினான் ! நானோ – ”ஹஹஹஹ…. எட்டாம் தேதி சேலத்திலே மாநாடு…. பத்தாம் தேதி டில்லியிலே இருக்கேன்… ஆங்… ஒன்பதாம் தேதி வந்திடறேன்” என்ற ரேஞ்சில் ஹாயாகத் தேதி கொடுத்து விட்டு, அன்றிரவு ஹாயாக தோர்கலின் மொத்தத்தையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! இம்முறையோ 3 one-shot ஆல்பங்களின் தொகுப்பாகவே இந்த இதழ் களம் காண்கிறது ; So எந்தக் கதைக்கும் – அதன் தொடரும் பாகத்தோடு தொடர்பே கிடையாது ! “அட… வேலை இன்னும் லேசுடோய்!” என்றபடிக்கு கூடுதலாய் குதூகலமானேன் ! கதை # 1 – ஆரிசியாவின் இளவயது சாகஸங்களைச் சார்ந்ததென்பதால் பெரிதாய் எந்த மொக்கையும் போட அவசியப்படவில்லை ! “காந்தக் கண்ணழகி… ஆ ரைட்லே பூசு…ஆ....பேக்ல பூசு…!” என்று சந்தோஷமாய் சந்தனப் பூச்சை ரசித்துக் கொண்டே, பக்கங்களைத் தள்ளிக் கொண்டே போனேன் ! Of course – வான் ஹாமின் ஜாலங்கள் எப்போதுமே சராசரிகளுக்கு ஒரு லெவல் மேலிருப்பது இயல்பே என்பதால் இந்தச் சுலபக் கதையிலுமே ஆங்காங்கே twist-கள் இருக்கத் தான் செய்தன! ஆனால் அவற்றையெல்லாம் சமாளித்து விட்டு, "I am very happy!" என்றபடிக்கே கதை # 2 ஆன “சிகரங்களின் சாம்ராட்டை" எட்டிப் பிடித்தேன் ! சிறுகச் சிறுக அதனோடு ஐக்கியமாகத் துவங்கும் போது தான் ”ஆ… நெருப்புடோய் !!” என்றபடிக்கே நமது தலைவர் துள்ளிக் குதித்து ஓட முயற்சிக்கும் காட்சி என் மனத்திரையில் விரிந்தது! "பூ மிதிக்க" வந்தவனுக்கு ஒரு அக்னிக்குண்டமே காத்துள்ளதே என்றபடிக்கு மலங்க மலங்க முழிக்க ஆரம்பித்தேன் !
To cut a long story short – தோர்கல் தொடரின் கதை # 14 ஆன – “சிகரங்களின் சாம்ராட்” நாமெல்லாம் இதுவரைக்கும் பார்த்தேயிரா ஒரு புது உச்சத்தைத் தொட்டு நிற்கும் படைப்பு ! “காலப் பயணம்” என்பதே இந்தக் கதையின் கரு! ஆனால் வான் ஹாம் எனும் ஒரு அசுரரின் கையில் இந்தக் கரு சிக்கிடும் போது என்ன மாதிரியான அதகளங்கள் விளைவாகிடும் என்பதை இதன் 46 பக்கங்கள் – எனக்கு உணர்த்தியுள்ளன ! ”ஆங்… சைதாப்பேட்டை போலாம்பா” என்பது போல இறந்த காலத்திற்குள்ளும் ; “கூடுவாஞ்சேரிக்கு 2” என்பது போல எதிர்காலத்திற்குள்ளும் கதை நெடுக டவுண்பஸ் ஷண்டிங் அடிக்கிறார் தோர்கல் ! இந்த ஆல்பங்கள் எல்லாமே கிட்டத்தட்ட எட்டுப்-பத்து மாதங்களுக்கு முன்பாகவே ஓர் ஓய்வான சமயத்தில் நமது கருணையானந்தம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டவை ! அவரது classical நடைக்கு இந்தப் புராதன காலகட்டத்துக்கதைகள் நெருடலின்றி ஒத்துப் போகுமென்ற நம்பிக்கையில் மூன்று பாகங்களையுமே அவரிடம் ஒப்படைத்திருந்தேன் ! அவருமே அழகாய் எழுதியனுப்பியிருக்க – சமீபமாய் DTP பணிகள் முடிந்த பின்பே அவை என்வசம் வந்து சேர்ந்தன !
துவக்க சாகஸமான “ஒரு தேவதையின் கதை”க்கு வழக்கம் போல திருத்தங்கள் ; சிற்சில மாற்றங்கள்; நகாசு வேலைகள் என்று செய்து பணி முடித்து விட்டிருந்தேன் ! ஆனால் “சிகரங்களின் சாம்ராட்” கதையோ மிரளச் செய்யும் ஒரு புதிரான கதைக்களம் என்பதைப் “பூ மிதிக்க” வேண்டிய தருணத்தில் தான் உணர்ந்தேன் ! நிச்சயமாய் இந்த ஆல்பத்தினில் தென்பட்ட மொழியாக்க நெருடல்களின் பொருட்டு, நமது கருணையானந்தம் அவர்களைக் குறைசொல்வது நியாயமல்ல என்பதையுமே அப்போது உணர்ந்தேன் ! சொல்லி மாளா complex முடிச்சுகள் ; பேஸ்தடிக்கச் செய்யும் சம்பவக் கோர்வைகள் ; சராசரிக் கற்பனைகளுக்கெல்லாம் எட்டவே சாத்தியமாகா ஒரு க்ளைமேக்ஸ் – என்று வான் ஹாம் இங்கே தீட்டி வைத்திருப்பது ஒரு மோனலிசா சித்திரத்தை ! இப்டிக்கா நின்று பார்த்தாக்கா ஒரு அர்த்தமும் – அப்டிக்கா குந்திக்கிட்டுப் பார்த்தாக்கா வேறொரு அர்த்தமும் தொனிக்கும் பாணி - கதை நெடுகே ! ஒற்றை வார்த்தையை இடம் மாற்றிப் போட்டால் கூட கதையின் போக்கே அந்தர்பல்டி அடித்து விடக்கூடுமென்பதை உணர்ந்த போதே எனக்கு வயிற்றைப் பிசையத் துவங்கி விட்டது! தேதியோ 16ஐத் தொட்டிருக்க – அவகாசமும் அதிகமில்லை ; ஆனால் இந்தக் கதையில் காத்திருக்கும் பணியோ இமாலய அளவிலானது எனும் போது பேய் முழி முழிக்கத் துவங்கினேன் !
வான் ஹாம்மே…! நாமெல்லாம் இட்லி சாப்பிடுகிறோம்… வடக்கே சப்பாத்தி… மேலை தேசங்களில் ரொட்டி… கீழை தேசங்களில் நூடுல்ஸ்…! ஆனால் இந்த மனுஷன் மாத்திரம் 3 வேளைக்குமே ஏதோ தேவர்களுக்கான மெனுவையே லவட்டி விடுகிறார் என்று சந்தேகம் எழுகிறது எனக்கு ! சராசரி மனிதர்களை விடவும் – படைப்பாளிகள் பன்மடங்கு கற்பனைத் திறனிலும் – ஆற்றலிலும் உச்சமானவர்களே என்பது தெரியும் ! ஆனால் இவரோ head & shoulders above every one of them ! அசாத்தியத் திறனும், நிகரில்லா தன்னம்பிக்கையும், இலக்கு மீதான கவனத்தை எந்தவொரு சூழலிலும் விட்டுத் தரா உறுதியும், அவரது சிறகடிக்கும் கற்பனைகளுக்கு மெருகூட்டும் அம்சங்கள் என்பதை இந்த ஒற்றை வாரத்தில் அழுத்தம் திருத்தமாய்ப் புரிந்துள்ளேன் !
நாளொன்றுக்கு 3 மணி நேரங்களை ஒவ்வொரு இரவும் செலவிட்டால் 10 பக்கங்களைப் பணி முடிக்கவே நாக்குத் தொங்கிப் போனது ! அதிலும் இந்தக் கதையின் முன்னணி – பின்னணி என சகலத்தையே தலைக்குள் ஒவ்வொரு தபாவும் reload செய்து கொண்டு அமர்ந்தால் தான் அன்றைய வேலை ஓடும் ! இல்லாது போனால் சொதப்பிடுவோமோ ? என்ற பயம் ! ‘ஒட்டுமொத்தமாய் 6 நாட்களை விழுங்கிய பிற்பாடு கதையினை மாற்றியெழுதி ; திருத்தங்களைச் செய்துவிட்டதான லேசான நம்பிக்கையோடு, இரத்தக்களரியான சிகப்பு மசிப்பக்கங்களை நமது DTP பெண்களிடம் ஒப்படைத்தேன் ! அவர்களையும் சும்மா சொல்லக்கூடாது ; யுத்த களம் போல் காட்சி தந்த திருத்தங்கள் நிறைந்த பக்கங்களைப் பொறுமையாய்க் கையாண்டு, பிரிண்டவுட் எடுத்துத் தந்த வண்ணமே இருந்தனர் ! ஆனால் எனக்கு தலைக்குள்ளோ குடைச்சல் தொடர்ந்து கொண்டேயிருந்தது ! So வெள்ளியிரவு மறுக்கா மொத்தப் பக்கங்களையும் ; CINEBOOK-ன் ஆங்கிலப் பிரதியையும் ; ஒரு கத்தை வெள்ளைத்தாள்களையும் எடுத்துக் கொண்டு கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்தேன்! ஆங்கிலத்தைப் படித்தபடிக்கே நமது தமிழாக்கத்தைக் கவனித்தால், பொடிப் பொடியான சில தகவல்கள் மிஸ் ஆவது புரிந்தது ! ‘நாசமாய்ப் போச்சு!‘ என்றபடிக்கே அவற்றை இணைத்து விட்டு – மேற்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன் ! வெள்ளைத்தாளிலோ – “ஆங்… தோர்கல் தோசை சாப்பிடறது சமகாலத்திலே ; பூரி சாப்பிடப் போறது எதிர்காலத்திலே ; இட்லி சாப்பிட்டது 37 ஆண்டுகளுக்கு முன்பாக !” என்று ஒவ்வொரு காலகட்டத்தையும் குறித்து வைக்கத் தொடங்கினேன் ! இந்த நிகழ்விற்கும் – அந்த நிகழ்விற்குமான கால வித்தியசம் இத்தினி வருஷம் என்று algebra பார்முலா போலவும் எழுதிடத் தொடங்கினேன். அப்புறமாய் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரோடும் சிற்சில சந்தேகங்கள் குறித்துப் பேசினேன். சில இடங்களது வரிகளுக்கு இரு மாதிரியான அர்த்தங்கள் சாத்தியம் என்பதை அவர் சொல்ல – அதையுமே குறிப்பெடுத்துக் கொண்டேன் ! இவை சகலத்தோடும் மறுக்கா கதையின் முழுமையையும் புரட்டத் துவங்க – நான்காவது தடவையாய்த் திருத்தங்கள் செய்யத் தேவைப்பட்டது புரிந்தது ! So சனி பகலில் இயன்றதைச் செய்துவிட்டு – “இதுக்கு மேலே தம் லேது சாமி !” என்ற கதையாக “சிகரங்களின் சாம்ராட்டை” அச்சுக்குத் தந்த கையோடு – பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறேன் – இன்னமுமே என்னால் 100% திருப்தியான விடைகளை வழங்கிட இயலா சில கேள்விகளை எண்ணி !
ஒன்று மட்டும் நிச்சயம் guys – இதழ் வெளியான பிற்பாடு; இந்தக் கதையினை நீங்கள் (சு)வாசித்த பிற்பாடு – எக்கச்சக்கமான ரவுசுகள் இங்கே அரங்கேறவிருப்பது சர்வ நிச்சயம் ! Keep your best thinking caps fresh folks – அவற்றிற்கு ஜரூராய் வேலை காத்துள்ளது ! ‘யாம் பிறாண்டிய பாயைப் பிறாண்டட்டும் சகலரும் !‘ என்ற நல்லெண்ணம் மேலோங்கவே செய்தது தான் ; ஆனால் தலீவர் போன்ற சில சாத்வீக ஜீவன்களின் நலன் கருதி நான் எழுதிப் பார்த்த அந்தக் காலகட்ட அட்டவணைகளையும் இதழில் புகுத்தியுள்ளேன் – கதையின் இறுதிப் பக்கத்தில் ! ஏனோ – தெரியலை - சந்தனம் பூச வரும் காந்தக்கண்ணழிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே பின்வாசலை உடைத்துக் கொண்டாவது ஓடிப் போய்விடத் தோன்றுகிறது இப்போது ! கவுண்டரே – நீர் தேவுடு !
கதை # 3 – புண்பட்ட கபாலத்தை மயிலிறகால் வருடித் தந்ததென்று சொன்னால் மிகையாகாது! தெள்ளத் தெளிவாய் ஓட்டமெடுக்கும் கதை; அழகான சில குடும்பத் தருணங்கள்; சற்றே சினிமா ஜாடையிலான க்ளைமேக்ஸ் என்று “ஓநாய்க் குட்டி” ஜெட் வேகத்தில் ஓட்டமெடுத்தது! இந்தக் கதையுமே "சி.சா." ஜாடையில் இருந்திருப்பின் – இந்நேரம் நான் கும்பமேளாவில் கலந்து கெள்ளும் பொருட்டு உத்தர் பிரதேசத்தை நோக்கிய ரயிலைப் பிடித்திருப்பேன் என்பது உறுதி ! Anyways – all’s well that ends well என்ற கதையாக இதழின் முழுமையும் நாளை அச்சுக்குச் செல்லத் தயாராகி விட்டுள்ளது ... provided - இந்த ஞாயிறு இரவில் எனக்குப் புதிதாய் ஏதேனும் சந்தேகமோ; விளக்கமோ தோன்றிடாத பட்சத்தில் ! இதுவரையிலும் வேறு எந்த ஆல்பத்திற்கும் செய்திடாத அதிசயமாய் – இந்த 46 பக்கங்களை மொத்தம் 5 முறை பிரிண்ட் அவுட் எடுத்துள்ளோம் ! And 5 தடவைகளுமே ஏதேதோ திருத்தங்கள் அவசியமாகியுள்ளன ! In spite of all that – தொக்கி நிற்கும் சில கேள்விகள் என்னைச் சுற்றி இன்னமுமே ஜிங்கு-ஜிங்கென்று நர்த்தனம் ஆடித் திரிகின்றன ! சில குழப்பமான களங்கள் கடுப்பைக் கிளப்புவது வாடிக்கை... “போங்கையா... நீங்களும் உங்க இடியாப்பமும்” என்று நடையைக் கட்டத் தான் அவ்விதக் களங்களில் தோன்றும் ! ஆனால் இங்கேயோ மறுக்கா-மறுக்கா அதே பக்கங்களைப் புரட்டோ-புரட்டென்று புரட்டி, புரிய மறுக்கும் சமாச்சாரங்களுக்கு விடை கண்டிட மனசு அல்லாடுகிறது! இதோ – இந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட மண்டை அந்தப் பனிச்சிகரங்களிலேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது! ஆஹா... வாராதோ ஜனவரி? என்ற அவா இப்போதே அலையடிக்கிறது - உங்களிடமிருந்தாவது எனது கேள்விகளுக்கான விடைகள் கிட்டுமா ? என்றறிய !
உப்ப்ப்ப் ! ஒற்றைக் கதைக்கோசரம் இதுவரையிலும் இத்தனை ப்ளேடு போட்டதாய் சமீபத்தில் நினைவில்லை ! So ஓவர் புலம்பலாகவோ - அலம்பலாகவோ தென்படின் – my apologies!! கதையைப் படிக்கும் வரையும் எனது பெனாத்தல்களுக்கு முழுமையான பொருள் புரிவது சிரமமே !
And இதோ இந்த இதழின் அட்டைப்பட முதல்பார்வை + உட்பக்க previews - முறையே கதை # 1 ; 2 & 3 -லிருந்து !! அட்டைப்படம் கொஞ்சம் முன்பாகவே அச்சிட்டதென்பதால் - "முத்து காமிக்ஸ் 47 -வது ஆண்டுமலர்" என்று குறிப்பிட விடுபட்டுப் போய் விட்டது ! நிச்சயமாய் இதுவொரு முட்டாள்தனமே !! பிழையைச் சரி செய்ய அழகாயொரு ஸ்டிக்கர் தயாராகி வருகிறது !! முன் அட்டை + பின்னட்டை - என இரண்டுமே ஒரிஜினல் சித்திரங்களே ! And கதையின் பெயர் எழுத்துரு நம் ஓவியர் சிகாமணியின் கைவண்ணம் !!
இனி காத்திருப்பது நம்மவரின் “சாத்தானின் சீடர்கள்” b&w இதழ் மாத்திரமே ! இதோ – இன்றைய பொழுதே அதன் மீதான எடிட்டிங்கை நெருக்கி முடித்து விடலாமென்ற நம்பிக்கையுள்ளது ! நேர்கோட்டுக் கதைகள் வாழ்க !! டெக்ஸ் வில்லர் வாழ்க !! அவரது குழப்பமிலாக் கதைகளை உருவாக்கும் போனெல்லி வாழ்க ; அவற்றை ரசித்து என் பணியைச் சுலபமாக்கிடும் நீங்கள் வாழ்க !! கார்சன் வாழ்க !!
அப்புறம் பராகுடாவின் அச்சுப் பணிகள் சகலமும் முடிந்து பைண்டிங்கில் உள்ளது! ஒட்டுமொத்தமாய் அச்சாகிக் கிடக்கும் அந்தக் கலர்ப் பக்கங்களைப் பார்த்தால் எனது ஆந்தை விழிகள் இன்னும் அகலமாவதைத் தவிர்க்க முடியவில்லை! இதுவரையிலும் நிறைய அட்டகாசமான கலர் இதழ்களைப் பார்த்துள்ளோம் தான் ; ஆனால் இந்த இதழின் கலரிங் பாணி அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமிட்டுவிடுமென்று படுகிறது ! ஓ.... யெஸ்....! இது கணினிகளின் காலம் தான்; ஏதேதோ பணிகளை இயந்திரங்கள் அற்புதமாய்ச் செய்து தருகின்றன தான் ! ஆனால் அதன் சகலத்தின் பின்னேயும் உள்ள மனிதரின் ஆற்றலைப் பார்க்கும் போது வாய் அலிபாபா குகையாகப் பிளக்கிறது! Out of the world!!! பாருங்களேன் சில பக்கங்களின் சிதறல்களை!
Before I sign off – இதோ இன்னொரு கார்பீல்ட் கார்ட்டூன்! And சிரித்தபடிக்கே நீங்களிருக்கும் வேளையில் சந்தாப் புதுப்பித்தல்களைப் பற்றிய நினைவூட்டலையும் முன்வைத்து விடுகிறேனே folks ? இன்னும் பத்தே நாட்களில் நடப்பாண்டு நிறைவுறவிருக்கும் நிலையில் – உங்களது 2018-ன் சந்தாக்கள் ஏற்கனவே நிறைவுற்றிருக்கும் ! So இது வரையிலும் 2019-ன் சந்தா எக்ஸ்பிரஸில் இடம்பிடித்திருக்கா நண்பர்கள் இன்றைக்கே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திடலாமே – ப்ளீஸ் ? சந்தா எக்ஸ்பிரஸ் இன்னமுமே கணிசமான தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதால் இதனையே ஒரு மெலிதான நினைவூட்டலாய் எடுத்துக் கொள்ளலாமே folks !
மீண்டும் சந்திப்போம்! Have an awesome Sunday! Bye for now!
































