Sunday, July 12, 2026

ஒரு ஜூனியர் சண்டே ...!

 நண்பர்களே, 

வணக்கம்.இன்னொரு ஞாயிறு and இன்னொரு பதிவுமே.​ இப்போதெல்லாம் விரல் நுனியில் வாட்ஸப் கம்யூனிட்டி இருப்பதால் இங்கு login செய்து டைப் பண்ணவெல்லாம் நம்மில் நிறைய பேருக்கு அவகாசம் / ஆர்வம்  இல்லை என்பது புரிகிறது. கூடிய சீக்கிரமே இது வெறும் தகவல் பலகையாக மாறிப் போனாலும் வியப்பில்லை என்பேன். Sad but that is reality.

​"தகவல் பலகை" எனும் தலைப்பில் இருக்கும் போது ஒரு சில ஜாலியான updates-களை இம்முறை  பகிர்ந்திடுகிறேனே !! கொஞ்ச காலமாகவே செயற்கை நுண்ணறிவு நாற்கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருப்பது உலகத்துக்கே தெரிந்த விஷயமே. அவ்வப்போது மொழிபெயர்ப்பில் ஏதாச்சும் மாற்றம் முன்னேற்றம் கண்டுள்ளதா இந்த AI அணி ? என்று நான் பரிசோதிப்பதுண்டு. ஆனால் இதர மொழிகளில் பிரித்து மேய்ந்தாலும் தமிழில் இன்னமும், 'ஏக் காவ்  மே  ஏக் கிசான் ரகு  தாத்தா' ரேஞ்சுக்கே நொண்டியடிக்கும் வேகத்திலேயே வண்டி ஓடி வருவது தெரிந்தது. ​ஆனால் சித்திரங்கள் போடும் பணிகளில் சும்மா தெறி மாசாக எக்கச்சக்க app-கள் செயல்படுவதை சமீப காலமாய் நாமெல்லாமே பார்த்து வருகிறோம். யானையை வரையச் சொன்னால் - பானையை வரைந்து வைக்கும் சித்திர ஞானமே எனக்கு. ஆனாலும் இன்றெல்லாம் நான் உருவாக்கும் நமது விளம்பரங்கள் என்ன மாதிரி என்பது உங்களுக்கே தெரியும். So செயற்கை நுண்ணறிவின் இன்னொரு பக்கம் உலகெங்கும் உள்ள Digital ஓவியர்களின் பிழைப்புகளை நாறடித்து வருவது அப்பட்டம். 

மொழிபெயர்ப்பில் ஏதாவது செய்ய முடிகிறதா என்று பார்த்துவிட்டு 'ச்சை' என்ற கடுப்பில் நான் விலகிவிட்டாலும், நமது ஜுனியர் எடிட்டர் அந்த சித்திரங்கள் போடும் லாவகத்தை நமக்கு பயன்தரும் விதமாய் பயன்படுத்த வழியுள்ளதா ? என்று தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டே இருந்தது எனக்குத் தெரியும். சொல்லப்போனால் போன வருஷத்திலிருந்தே இந்த முயற்சியினை ஜூனியர் மேற்கொண்டு வருவது எனக்குத் தெரியும் !அவ்வப்போது ஏதேனும் பக்கங்களைக் கண்ணில் காட்டும் போது, மெய்யாலுமே வாய் பிளந்து கிடந்தேன்.அழகான சில cartoon பக்கங்களும் திகில் கதைப்  பக்கங்களும் அவற்றுள் இருந்தன. "என்னது தம்பு இது ?" என்று ஆர்வம் தாங்காமல் வினவ, "கதை எனது உருவாக்கம்.... இந்த சித்திரங்கள் சகலமும் AI மூலமாய் போட்டது !" என்று ஜுனியர் பதிலளித்தார். லொட்டு லொட்டு என்று பட்டன்களைத் தட்டினால் சித்திரங்கள் தானாக வந்து விழுவதில்லை என்பதை நான் அனுபவத்தில் அந்நேரம் படித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒரு மாடஸ்டி cover-ஐ போடு என்று சொன்னால் வலது கையில் ஆறு விரல் ; இடது கையில் ஏழு விரல் என்று பரவை முனீம்மாவை வரைந்து தந்து அழிச்சாட்டியம் பண்ணி வைக்கும். அதை மாற்றச் சொல்லி ஒரு நூறு தடவை மன்றாடினாலும், மனுஷனின் மண்டைத்  தொலியை உரித்தெடுப்பதில் அப்பாச்சேக்களுக்குத்  துளியும் சளைத்ததல்ல இந்த AI - என்பதை அந்நேரம் நன்றாகவே நான் அறிந்திருந்தேன். அவ்விதம் இருக்க, ஒரு பக்கம் நிறைய படங்களை உருவாக்குவது, கதை நெடுக அவற்றை சீராய் இட்டுச் செல்வது, வர்ணம் தீட்டுவது என்பதெல்லாம் சுலபமே அல்ல என்பதை நன்றாகவே புரிந்திருந்தேன். நேராக பார்க்கும் ஒரு ஆசாமியை பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க செய்ய வேண்டுமெனில் அதற்கென AI வசம் நாம் தர வேண்டிய உத்தரவுகள் பத்து பாத்திரங்களைத் தேய்க்கும் போது ஆத்துக்காரம்மா நமக்குத் தரும்  உத்தரவுகளை விட ஜாஸ்தி என்பேன். So பின்னணியில் இருந்திருக்கக்கூடிய உழைப்பு  பற்றிப்  புரிந்து கொள்ள முடிந்தது.

​கிட்டத்தட்ட அதே சமயம் நமது வட்டத்திலுள்ள புது நண்பர் ஒருவர் AI மூலமாக தான் உருவாக்கிய ஒரு சில சித்திர சிறுகதை மாதிரிகளை எனக்கு அனுப்பி வைத்து இதை publish பண்ண முடியுமா சார் ? என்று கேட்டிருந்தார். நண்பரின் உழைப்புக்கு நாம் credit எடுத்துக் கொள்வதில் எனக்கு ஏற்பில்லை என்பதால், "இல்லைங்க நாம் இதை வெளியிடுவதாக உத்தேசம் இல்லை !" என்று மட்டும் சொல்லியிருந்தேன். ஜனவரியும் பிறந்தது, சென்னை புத்தக விழா, புது அட்டவணை என்று ஏதேதோ பணிகளுக்குள் busy ஆகிப் போனேன். மார்ச் இறுதிவாக்கில் ஒரு கத்தைப்  பக்கங்கள் எனக்கென மேஜையில் தயாராகக் காத்திருந்த போதுதான் ஜூ.எ இந்த project-ஐ பாதியில் ஆத்தி இருக்கவில்லை என்பது புரிந்தது. பல சந்தர்ப்பங்களில் வேகமாய் ஆரம்பித்துவிட்டு பணிகளின் இடர்களைக் கண்டு reverse அடிப்பது எதார்த்தம் தான் என்பதால் நான் அது பற்றி தொடர்ந்து நோண்டிக் கொண்டிருந்திருக்கவில்லை. So மார்ச்சில் அவரது உழைப்பின் பலன்களைப் பார்த்த போது, மெய்யாலுமே பக்கென்றிருந்தது. ஏழு கழுதை வயசாகியும் ஆயிரத்தி சொச்சம் இதழ்களை வெளியிட்டான பின்னும், நானாக எழுதியது என்பது ஒண்ணோ ரெண்டோ துப்பறியும் கதைகளை மட்டும் தான். Comics-க்கு கதை எல்லாம் எழுத ஒருபோதும் நான் நினைத்ததும் இல்லை, மெனக்கெட்டதும் இல்லை.ஆனால் டெக்னாலஜியின் கரம் பிடித்து Junior செய்திருந்த பணிகளைப் பார்த்த போது செம thrill ஆக இருந்தது.

என்ன - அவரது உருவாக்கம் சகலமும் ஆங்கில ஸ்கிரிப்ட்டில் இருந்தது மட்டுமே லைட்டாக நெருடியது. அதையுமே தமிழில் செய்திருந்தால் இன்னும் பிரமாதம் என்று வியந்திருப்பேன். ஆனால், புண்ணியத்துக்கு கறக்கும் மாட்டை "அர்ரே பாய் ...தும்ஹாரா எத்தனை பல் கீதுபா ?" என்று எண்ண நினைத்தால், அது கடிச்சுப் போட்டு விடும் என்பது மண்டையில் உறைத்தது. தவிர இதை நீங்களே எழுதிட்டா தேவலாமே என்று ஜூனியர் கோரிக்கை வைத்த போது மறுக்கவாவது முடியுமா ? ​So நான் பேனா எடுத்துக்கொண்டு ஊத, AI-ஐ கையில் எடுத்துக்கொண்டு ஜூனியர் சலங்கை கட்டி ஆட ஒரே ஆடலும் பாடலுமாய் செமத்தியான scene அரங்கேறியது.

​உள்ளுக்குள் புகுந்த பிற்பாடுதான் இதனில் எத்தனை நெளிவு சுளிவுகள் உள்ளன, எத்தனை மொக்கைகள் போட வேண்டியுள்ளன, எத்தனை bulb-கள் வாங்கித் தீர வேண்டியுள்ளது, எத்தனை மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது என்பதெல்லாம் புரிபட்டது. அட்டகாசமாய் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் தெரியும் ஒரு சமாச்சாரத்தை print போட்டு பார்த்தால் புதுசாய் கண்ணாலம் கட்டி வந்த இல்லாள் ஆர்வக் கோளாறில் செய்த அல்வாவை போல் கிலுகிலுவென்று காட்சி தரும். AI-க்குள் இருக்கும் கலைஞன் நிறைய மணிரத்னம் படம் பார்க்கும் ரகம் போலும் - சகலமும் இருட்டாகவே ஆரம்பத்தில் வருகிறது !  'சிவப்பை கூட்டு, ப்ளூவைக் குறை, பச்சையை குறை....' என்று ஏதேதோ கூத்துக்கள் அடித்துவிட்டு மறுக்கா போய் பார்த்தால் அது பதம் தப்பிய மைசூர்பாகாய் வந்து சேரும்.​ இந்த முயற்சிகளின் பின்னே எடுத்த color printout-களும், செய்த திருத்தங்களும் பற்றி தனியாக ஒரு பதிவு போடுவதென்றால் அதற்கே ஒரு மணி நேரம் வேண்டி இருக்கும். ​To cut a very long story short, ஏகப்பட்ட திருத்தங்கள், மாற்றங்கள் செய்த பிற்பாடு - இதோ junior கைவண்ணத்தில் முழுக்க முழுக்க உருவாகியுள்ள படைப்புகள் இவையே.

முதலாவதாக கையில் எடுத்த பணி ஒரு மாமனிதனின் வாழ்க்கைக் கதை பற்றியது. "சிகரம் தொட்ட சிங்கங்கள்" என்று ஆந்தை அண்ணாத்த பேர் வைத்த இந்தத் தொடர் மாற்றங்களை சாத்தியமாக்கிய சில மகா மனிதர்களை காமிக்ஸ் வடிவில் சிறுக சிறுக கண்ணில் காட்ட உள்ளது. ​Of course இதெல்லாம் அமர் சித்ர கதா - வசந்த மாளிகை காலத்திலேயே நமக்குக் கண்ணில் காட்டி விட்டன தான். ஆனால் இன்றைய நாட்களின், இன்றைய தலைமுறைகளின் சாதனை செய்த நாயகர்களை, இந்த latest technology-யின் உதவியுடன் தரிசிப்பதில் தப்பில்லை என்றே எண்ணினேன்.

இதன் தமிழ் கோப்பு இந்த நொடியில் என்  கையில் இல்லை !! எடுத்தவுடன் அதை upload செய்வேன் !

And இங்கே பிரதானமாய் ஒரு விஷயத்தை சொல்லி விட அனுமதியுங்கள் மக்களே. இந்தப்  படைப்புகளின் target audience முழுக்க முழுக்க புத்தக விழாக்களுக்கு வரும் பள்ளி மாணாக்கர்களே. இவற்றை நமது regular வட்டத்தில் ஜாலியாக ரசிக்க முடிந்தால், அது icing on the cake....அவ்வளவே ! So இதனை டின்டினோடு ஒப்பிடுவதோ, ரத்த படலம் range-க்கு hype பண்ணி விட்டு அப்புறமாய் முழிப்பதோ வேணாமே ப்ளீஸ். பசங்களுக்கான படைப்பு and முதற்கட்ட முயற்சிகளே என்ற மட்டில் எடுத்துக்கொண்டால் எல்லாம் நலமே.

டாக்டர் கலாமின் வாழ்க்கையை 16 பக்கங்களுக்குள் அடக்குவதென்பது next to impossible என்பது அப்பட்டமாய் புரிந்தது. ஆனால் கையில் வெறும் இருபது ரூபாயை தூக்கிக்கொண்டு வரும் பிள்ளைகளுக்கு, கலரில், ஆர்ட் பேப்பரில் அழகாய், தரங்களில் சமரசமின்றி, புத்தகங்களை வழங்க வேண்டுமெனில் பக்கங்களில் சிக்கனம் அவசியம் என்பது ஜூனியர் எடுத்த தீர்மானம். தவிர, நீண்டு செல்லும் படைப்புகளாய் உருவாக்கிடும் பட்சத்தில், AI செய்யும் லூட்டிகளை சமாளிப்பது ஊரிலிருந்து வந்திருக்கக்கூடிய மாமியாரை சமாளிப்பதை விடவும் படு சிரமமான காரியம். So keeping it short and sweet would be great என்று நினைத்தோம்.

​டாக்டர் கலாமின் இதழுக்கு அடுத்ததாக ஜூனியர் கண்ணில் காட்டியது இதோ இந்த அட்டகாசமான காமெடி ஜோடியைத்தான்.

அர்னால்டு & அப்ரசன்டி .

​இந்த இணை பிரியா நண்பர்கள் ஜோடி - முழுக்க முழுக்க ஜூனியரின் கற்பனையே. 16 பக்கங்களுக்குள் அவர்களை உலகமெல்லாம் சுற்றச் செய்வது இந்தத் தொடரின் டெம்ப்ளேட். At least எனக்குத் தெரிந்த மட்டிலாவது அப்படித்தான். மூத்தவன் அர்னால்டு வகை தொகையின்றி, ஒவ்வொரு வில்லங்கத்திற்குள்ளும் கால்பதிக்க, கூடவே போகும் அப்ரசன்டி தஸ்-புஸ்ஸென்று தவித்துக் கொண்டே பின்தொடர்வது பிரமாதமாய் இருப்பதாய் எனக்குப்பட்டது. ​இதுவரை அதனில் மூன்று தனித்தனிக்  கதைகளை ஜூனியர் உருவாக்கியுள்ள போதிலும், பேனா பிடிக்க எனக்கு அதிக அவகாசம் இல்லை என்பதால், இரண்டை மட்டுமே இப்போதைக்கு ரெடி செய்துள்ளோம்.

இங்கேயுமே பேனா பிடிக்கும் போது கூத்துக்களுக்கு பஞ்சமே இருந்திருக்கவில்லை. புடைப்பான நம்ம மூக்குதான் சும்மா இருக்காதே...? வசனங்களில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நம்பர்களை அள்ளித் தெளித்திருக்க, டைப் செட்டிங்குக்குப்  போகும்போது, "ஸார், படமே தெரியலை, முழுசும் மறைக்குது, ஏகப்பட்ட வசனம்" என்று புகார் தான் வந்தது. நாசமாய் போச்சு! என்றபடிக்கே ஸ்கிரிப்டை பழையபடிக்கு மணிரத்தினம் பட டைலாக்கைப் போல், 'பச்சக் கஜக்' என்று மாற்றியமைத்து ரெடி செய்தோம்.

இந்த இரு இதழ்கள் ஜாலியான கார்ட்டூன் பாணியிலான களங்கள் என்றால், தொடர உள்ள ராபின்ஹுட் தொடரோ ஒரு ஆக்ஷன் ஹீரோவின் உதயம்.​ராபின்ஹுட் பற்றி சில மாதங்களுக்கு முன்பாய் அட்டைப்பட ட்ரைலர் மட்டுமே கண்ணில் காட்டியிருக்க, அப்போதே, "நீதிடா, நேர்மைடா, நியாயம்டா" என்று ஆலமரத்தடியில் பஞ்சாயத்து கனஜோராகக் களை கட்டியிருந்தது நினைவிருக்கலாம். இருப்போரிடமிருந்து எடுத்து இல்லாதோரிடம் கொடுத்த ராபின்ஹுட் பற்றி இங்கிலீஷ் பாடங்களில் நாம் படித்திருக்கலாம். Maybe, அந்த வாய்ப்பு அமைந்திருக்கா பட்சத்தில் இந்தக் கானக ஹீரோவை, ஜூனியரின் கைவண்ணத்தில், அழகான வண்ணத்தில், ரசிக்கலாம். இதழ் நம்பர் ஒன்று - ராபின்ஹுட் உருவான பின்னணியின் கதை. and இதழ் நம்பர் இரண்டு - தொடரும் அவரது சாகசங்கள். இங்கே சித்திர பாணிகள் சகலமுமே செம ரியலிஸ்டிக்காக இருந்திட வேண்டும் என்பதால், ஏகமாய் உழைத்திருப்பதைப்  பார்க்கப் போகிறீர்கள் ! 

Again 16 பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும்..! அழகான கலர், அழகான கெட்டி அட்டை, and எல்லாமே குட்டி விலைகளில். பசங்களுக்கு இவை ரூபாய் 20 விலையில், புத்தக விழாக்களில் விற்கப்படும். ஒரு காலத்தில் பிள்ளைகளாக இருந்தோர் வாங்குவதினில் விலை ரூபாய் 25 என்றாகிடும்.

இந்தச் சுற்றில் ஒரு b&w இதழுமே, ஜூனியர் உருவாக்கியிருந்தது இன்னொரு highlight. "யார் அவள்...? என்ற ஒரு மெலிதான திகில் திரில்லர் 48 பக்கங்களில், டெக்ஸ் சைஸில் ரூ. 45 விலையில் வரக் காத்திருக்கிறது. Again, இது முழுக்க முழுக்க ஜூனியரின் கற்பனையிலான உருவாக்கம். And again இரவே..இருளே.. கொல்லாதே .." ரேஞ்சுக்கு இதனை எதிர்பார்த்திட வேணாமே ப்ளீஸ் ? இங்கும்  வசனங்கள் மட்டுமே நம்மள் கி கைங்கரியம்.



 

இதோ, எல்லா இதழ்களுக்குமான அட்டைப்பட ப்ரிவியூக்கள் & உட்பக்க ப்ரிவியூக்கள்.​ இவற்றுள் ராபின் ஹுடின் இரண்டாவது இதழ் தவிர்த்து பாக்கி சகலமும் பிரிண்ட் ஆகி பைண்டிங்கில் உள்ளன. வரும் வெள்ளியன்று  கோவையில் புத்தகவிழா தொடங்கவிருக்க, நானும் ஜூனியரும், சனி காலை பராக்குப்  பார்க்க கோவைக்கு ஒரு குட்டி விசிட் அடிப்பதாக உத்தேசித்திருக்கிறோம். அந்நேரத்திற்குள் ராபின் ஹுடின் இரண்டாவது புக்கும் தயாராகி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ​So, மொத்தமாய் ஆறு இதழ்களையும் அன்றைக்கு கையில் எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்.



ஒரு மொக்கையான disclaimer-ஐ  மறுக்கா இங்கே பதிவு செய்துவிடுகிறேன் மக்களே.

​இது முழுக்க முழுக்க, எவ்வித முறைப்படியான AI சார்ந்த கற்றலும் அல்லாத புதியவரின் கைவண்ணங்களே. So, நிச்சயமாய் ஆங்காங்கே பிசிறுகளோ, பிழைகளோ இருப்பது சாத்தியமே. And இவற்றுள் எவையும் காமிக்ஸ் உலகின் ஐஸ்னர் விருதுக்கு போட்டி போடப்போகும் ரகமுமே அல்லதான். So, ஒரு புதிய முயற்சிக்கு 'தம்' கட்டி பகடிகளைப் பரிசாக்கிட வேண்டாமே ப்ளீஸ். And ஏற்கனவே சொன்னது போல, இவற்றின் டார்கெட் ஆடியன்ஸ் நாமே அல்ல. முழுக்க முழுக்க புத்தக விழாவின் இளம் தலைமுறையினரை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளவை இவை. தொடரும் நாட்களில் இந்த முதல் தொகுப்பில் உள்ள பிசகுகளை சரிசெய்திடவும், இதழ்களில் சாரம் குறைவென்றிருப்பதை சரி செய்யவும் நிச்சயம் மெனக்கெடுவோம். ​For sure a long way to go and for sure a long journey ahead.

5 x கலர் இதழ்கள் 25 ரூபாய் விலையிலும் 

1 x b&w இதழ் ரூபாய் 45 விலையிலும் 

எனும்போது - மொத்தம் ரூ. 170 ஆகிறது. 

ஆகஸ்ட் மாதத்து சந்தா புக்குகளோடு இவற்றையும் பெற்றிட விரும்பும் பட்சத்தில் ரூ.170 மட்டும் GPay செய்தால், இல்லம் தேடி இவையுமே வந்துடும் folks

In case இவற்றை இப்போதே பெற விரும்பினால் - கூரியர் சேர்த்து ரூ.210 

தொடரும் அடுத்த சுற்றில் இன்னும் கூடுதலாய் ஹாரர் கதைகள், பப்ளிக் டொமைனில் இருக்கக்கூடிய சில தரமான படைப்புகள் என்பனவற்றையும் இதே ரூபாய் 20, 25, 45 விலைகளில் வெளியிடத்  திட்டமிட்டுள்ளோம். நடப்பாண்டில் புது அரசின் புத்தக விழா சார்ந்த கொள்கைகள், முன்போலவே தொடரும் பட்சத்தில், நமது இந்த முயற்சிகள் இணைதளத்தில் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.

So இந்த நொடியில் கலரில் என் முன்னே மினுமினுக்கும் இதழ்களை, பழம் தின்று கொட்டை போட்டதொரு மொக்கை எடிட்டராய் ரசிக்கும் அதே நொடியில், 42 ஆண்டுகளாய் எனக்குச் சாத்தியப்பட்டிருக்கா ஒரு சமாச்சாரத்தை என் பிள்ளை சாதித்திருப்பதை நினைத்து ஜிலோவென காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் ஒரு அப்பனாகவும்,  உங்கள் முன்னே நான், 

Bye all...., ஆகஸ்ட்டின் இளம் தளபதியோடு இந்த ஞாயிறை தொடரப்  புறப்படுகிறேன். அப்புறம் இன்று மதியம் தாத்தாக்கள் சார்ந்த ஒரு கலந்துரையாடல் வீடியோ திட்டமிட்டுள்ளோம், அது எந்த மட்டும் சாத்தியப்படுகிறது ? என்பதை புனித மனிடோவே அறிவார். Wish us luck people.....  See you around...Bye for now !

60 comments:

  1. ஜீனியர் எடிட்டருக்கு பாராட்டுகள் 💐💐💐

    ReplyDelete
  2. உண்மை. ஜூனியர் எடிட்டர் கலக்கத் துவங்கி விட்டார். மிக்க மகிழ்ச்சி.. நல்வாழ்த்துக்கள் விக்ரம். சிங்கத்தின் பதாகையைத் தாங்கிப் பிடித்து களத்தில் காலாகாலத்துக்கும் முன்னோடியாகத் திகழ வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  3. இந்த புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சிறு பிள்ளைகளை உலகத்தரமிக்க கதைகள் சென்று சேர இந்த சிறு விலைகளில் ஆன புத்தகங்கள் கண்டிப்பாக உதவும். அதுவும் இளைய தலைமுறைக்கு புதுமையை கலந்து கொடுக்கும் இந்த முயற்சி நிச்சயம் நாலுகால் பாய்ச்சலாக அமைவது உறுதி.. கூடவே திகில் பழைய லோகோவுடன் அப்படியே மீள வந்தது இரசிகர்களது ஆரவாரத்துக்கு நூறு சதவீத கியாரண்டி.. கலக்குங்கள்..தொடர்ந்து..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் விக்ரம் ப்ரோ 💐💐💐

    ReplyDelete
  6. வைகறை கொலைகள் னு புத்தகம் வந்துருக்கா???

    ReplyDelete
  7. //வரும் வெள்ளியன்று கோவையில் புத்தகவிழா தொடங்கவிருக்க, நானும் ஜூனியரும், சனி காலை பராக்குப் பார்க்க கோவைக்கு ஒரு குட்டி விசிட் அடிப்பதாக உத்தேசித்திருக்கிறோம். //

    சூப்பர் நியூஸ் சார்⚡⚡⚡
    கோவை வாசகர்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

    ReplyDelete
  8. அற்புதம் சார்....அக்னி சிறகுகள் முதல் புத்தகத்த நான்தான் வாங்கனும்னு விஜயா பதிப்பகத்துக்கு நடந்தது லயன் வந்தாச்சா என நடையா நடந்ததற்கிணை....அது நமது இதழில் சூப்பர் சார்...என் கனவிதழும் கூட....கடலுக்குள் பாப்பான்னு வாண்டுமாமா நினைவு....குழந்தைகள் ஈர்க்க இதை விட அற்புதமேது...கடலும் கிழவனும்....கால் ஆஃப் வைல்டு வாய்ப்பிருந்தா 20 பக்கங்களுக்கும் அடக்காமல்....அடங்கா ஆவலுடன் ஆழ்கடலுக்குள் அப்துல் கலாம் துணையுடன்...ராபின் ஹீட்டாய் வேட்டையாடி தமிழில் தாகம் தீர்ப்போம்

    ReplyDelete
  9. அனைத்து புது வரவு புத்தகங்கள் கலர் மையமாக அருமையாக வந்துள்ளது வாசிக்க ஆவலாக உள்ளேன் சார் 😊😊

    ReplyDelete
  10. இதில் வார்த்துள்ள வண்ணங்களும்...இதுவரை வந்ததெல்லாம் டூப்பே. நாதான் டாப்னு நிக்குது....நன்றிகள் விக்ரம்...80 களுக்குள் நாங்க வாய் பிளந்த காமிக்ஸீக்குள் என் பிள்ளைகளுக்கும் வாய்ப்பை கொடுத்தமைக்கு...வாழ்த்துக்கள் வெற்றி பெற...தமிழ் வார்த்தைகளை வாசிக்க பள்ளியில் துவங்கிய அவனுக்கு...முதல் புத்தகமாய் அப்துல் கலாமை மும் ஆழ்கடல் அனுபவத்தையும் வாசிக்க தரப் போகிறேன்..நான் இரண்டாம் வகுப்பில் இரும்பு மனிதன் வாசித்தேன் என் மகனுக்கு முதலாம் வகுப்பிலேயே வாய்ப்பு

    ReplyDelete
  11. சிறுவயதில் ரத்னபாலா தொகுப்பில் மௌளியின் சகோதரர்கள் இப்புதையல் கிடைத்தால்...இது போல் புதையல் கதைகளுக்காய் ஏங்கிய ஏக்கம் இன்றும் தொடருதே

    ReplyDelete
  12. கண்ணா லட்டு தின்ன ஆசையா னு கேக்காமலேயே திகட்ட திகட்ட திணிக்கறீங்களே சார்.

    1)முதல்ல ஜூனியரு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்களை கோவை வாசகர்கள் சார்பாக சொல்லிடுங்க சார். "ஒரே விழாவில் இத்தனை புத்தகங்களா?" அற்புதம்.

    2) AI முதல் கதையாக அப்துல் கலாம் ஐயா கதையை போட்டது சூப்பர் செலக்சன்.

    3) ராபின் கதை கலர் பட்டைய கெளப்புகிறது.
    அதும் 1 க்கு 2 கதை சூப்பர்.

    4) எங்க பால்ய கால திகில் காமிக்ஸ்க்கு மீண்டும் உயிரூட்டியதற்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் சார்.
    தொடர்ந்து இந்த லோகோவில் திகில் கதைகளை எதிர்பார்க்கிறோம்.

    5)எல்லாத்தையும் விட முத்தாய்ப்பாக...
    //வரும் வெள்ளியன்று கோவையில் புத்தகவிழா தொடங்கவிருக்க, நானும் ஜூனியரும், சனி காலை பராக்குப் பார்க்க கோவைக்கு ஒரு குட்டி விசிட் அடிப்பதாக உத்தேசித்திருக்கிறோம்.//
    தங்கள் வருகைக்கு இனிய வாழ்த்துக்கள் சார்.❤️.

    எல்லா ஸ்பெஷல்களும் பள்ளி மாணக்கர்களுக்கானதோ இல்லையோ எங்களை சிறு வயதுக்கு கொண்டு போகும் என்பது மட்டும் உறுதி.

    ReplyDelete
  13. ஜூனியர் எடிட்டர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...கண்டிப்பாக எனது வாரிசுகள் ரசிப்பார்கள் என்பது உறுதி ..நானுமே...சித்தீரங்களும்...அட்டைப்படங்களும் அட்டகாசமாய் கண்ணை கவர்கிறது...

    ReplyDelete
  14. Kudos Vikram dear😘👍💐

    we are eagerly waiting dear😘👍💐

    ReplyDelete
  15. சார்...ஆகஸ்ட் மாத சந்தா இதழ்களோடு எனக்கு இவற்றை அனுப்பி விடுங்கள்..ரூ.170 ஜீபே செய்து விட்டேன்..:-)

    ReplyDelete
  16. 😘😘அர்நால்டும் அப்ரசண்டியும்😘
    விற்பனையில பட்டைய கிளப்ப போகுதுன்றது இப்பவே தெரியுது சார் 😘💐👍

    கலரும் படமும் கதையோட்டமும்வசனங்களும் வேற லெவல் சார் 💐😘😘😘

    ReplyDelete
  17. 😘😘அர்நால்டும் அப்ரசண்டியும்😘
    விற்பனையில பட்டைய கிளப்ப போகுதுன்றது இப்பவே தெரியுது சார் 😘💐👍

    கலரும் படமும் கதையோட்டமும்வசனங்களும் வேற லெவல் சார் 💐😘😘😘

    ReplyDelete
  18. From publisher to creator All the best junior and senior editors

    ReplyDelete
  19. வண்ணங்கள் கண்ணைப் பறிக்கின்றன. அருமையான ஆக்கங்கள். வெற்றி பெற நல்வாழ்த்துகள் 💐💐

    ReplyDelete
  20. அர்னால்டு. :ஓடு அப்ரூ

    அப்ரசண்டி. ;யோவ். நான் ஏற்கனவேஓடிக்கிட்டு தான் இருக்கேன்

    வழக்கமான மெல்லிய நகைச்சுவை ,புத்தகங்களின் வெற்றியை கட்டியம் கூறுகிறது

    ReplyDelete
  21. நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  22. Very nice initiative. Looks cool and colorful. 👍💕

    ReplyDelete
  23. very super and initiative for current generation.

    ReplyDelete
  24. புதிய முயற்சியை வரவேற்கிறேன். முதல் கதையும் நல்ல தேர்வு. நான் ஏற்கனவே ரெகுலர் சந்தாவில் இருக்கிறேன் சிறுவர்களுக்கான இந்த புத்தகத்திற்கும் சந்தாவைச் செலுத்துகிறேன்.

    இம்மாத கதைகளில் முதலிடமே தாத்தாவிற்கு தான்.

    இரண்டாம் இடம் படத்தின் மூலமும் கதை சொன்ன சாகசம் இல்லாத சாகச கதை மேரி கேரிசன் தான்.

    மூன்றாம் இடம் லக்கி லூக்.

    நான்கு வழக்கமான டெக்ஸ்.

    ரசனைகள் மாறுபடலாம். அது அவரவர் தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. தாத்தாக்களிடம் மற்ற நாயகர்கள் ஜகா வாங்குவது சந்தோஷ ஆச்சர்யம் சார் !

      Delete
  25. புதிய முயற்சியை அழகாகத் துவக்கியிருக்கும் ஜு. எடிட்டருக்கு வாழ்த்துக்கள்!!💐💐💐💐💐😍😍😍

    ReplyDelete
  26. அர்னால்ட் & அப்ரசன்டி - பெயர் தேர்வு அருமை!😂😂

    ReplyDelete
    Replies
    1. அடுத்த கதையில் அப்ரசன்டி சம்சா கொள்ளையை தடுக்குறா மெரி ஒரு கதையை உருவாக்கச் சொல்லணுமோ ?

      Delete
  27. புதிய முயற்சியை துவக்கி உள்ள ஜூனியர் எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.💐

    ReplyDelete
  28. கடைசில உங்களையும் AI use பண்ண வச்சுட்டாங்க.......

    ReplyDelete
    Replies
    1. ஒரு மகாமகம் ஆச்சு நண்பரே - படைப்பாளிகள் AI பயன்படுத்த ஆரம்பித்து !

      Delete
  29. AI மூலம் நம்மவர்களே உருவாக்கின காமிக்ஸ் - புது முயற்சி வாழ்த்துகள். சிறுவர்களுக்காக என்னும் நோக்கில் உருவாக்கப்படும் இந்தக் கதைகள் அப்துல் கலாம் போன்ற சிறந்த உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை முன்னெடுத்து செல்லவும் பயன்படட்டும். இப்போதைய சிறுவர்களுக்கு நல்ல ரோல்மாடல்கள் தேவை. சினிமா நாயகர்களை பார்த்து பார்த்து அராத்துகளாகமால் ஒரு சிறு சதவீதத்தை காப்பாற்ற இது உதவும் என நம்புவோமாக.

    ReplyDelete
    Replies
    1. ப்ளாஸ்ட்டு.... ப்ளாஸ்ட்டு...ப்ளாஸ்ட்டு..!

      Delete
  30. Hi sir ,
    Congrats for the new step using AI .
    All books front cover and inner pages looks awesome.
    Expecting more of this in future.
    Especially I liked the Thigil logo and hope Thigil stories will continue sir

    ReplyDelete