நண்பர்களே,
வணக்கம் புதுசாய் ஒரு நாள், புதுசாய் ஒரு பொழுது, தமிழகத்துக்கே புதுசாய் ஒரு பயண திசை.... ! Gen-Z களின் சகாப்தம் இது என்பதால், இனிமேலும் இந்த "வணக்கம், வந்தனம், நமஸ்காரமெல்லாம் எடுபடுமா என்று சொல்லத் தெரியவில்லை. So, "நல்லா இருக்கீங்களா மக்களே?" என்று ஆரம்பிப்போமா?அட, ஆரம்பம் எப்படி இருந்தாலும் நாம அரைக்கப்போற மாவு அதுவேதானே? So, "ஆகிற பொழப்பப் பாருடா தம்பி" என்று மைண்ட்வாய்ஸ் சொல்கிறது.
பொதுவாகவே வண்டியை நமது வாட்சப் கம்யூனிட்டி பக்கமாய் திருப்பிய நாள் முதலாக, இங்கே ப்ளாக்கில் புதிய இதழ்கள் பற்றிய preview-வைத் தாண்டி பெரிதாய் நான் எதுவும் எழுதுவதில்லை. In some ways, சோம்பலின் வெளிப்பாடு என்று கூட அதைச் சொல்லலாம். ஆனால் இந்த மே மாதமோ, கைகளில் மூன்றே புக்ஸ் மட்டுமே இருந்தாலும், என்னையும் அறியாமல் அவற்றைப் பற்றிப் பேச ஒரு உந்துதல் உள்ளுக்குள்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னே படைப்பாளிகளைச் சந்திக்க இத்தாலி சென்றிருந்த போது, டெக்ஸ் அலுவலகத்திற்குள் மிட்டாய் கடைக்குள் நுழைந்த கண்கள் விரிந்த குழந்தையைப் போலவே வாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அதுமட்டுமின்றி, நமது மறுவருகையின் துவக்க நாட்கள் என்னும்போது, டெக்ஸ் Universe-க்குள் இன்றைக்குப் போல் அன்று பூரணமாய் நாம் மூழ்கி இருக்கவுமில்லை. So, கதாசிரியர் மௌரோ போசெலி அவர்களைச் சில நிமிடங்கள் சந்தித்ததைத் தாண்டி, அவருடன் பெரிதாய் interact செய்திட சந்தர்ப்பமும் அமைந்து இருக்கவில்லை. ஆனால் இந்தக் கடைசி பத்து ஆண்டுகளில் வண்டி வண்டியாய் டெக்ஸ் கதைகளோடு அன்னம் தண்ணி புழங்கிய பிற்பாடு, அதிலும் மௌரோ போசெலியின் படைப்புகளில் எக்கச்சக்கத்தை ருசித்த பிற்பாடு, அந்த மனுஷனை எண்ணி மானசீகமாய் சிலை வைக்காது இருக்கவே முடியவில்லை.
கிடைத்த கொஞ்ச அவகாசத்தில் நான் அவரிடம் கேட்ட ஒரே கேள்வி: "கண்ணிலேயே பார்த்திருக்காத ஒரு யுகத்தில், கண்ணிலேயே பார்த்திருக்காத மனிதர்களுடன் அரங்கேறியதொரு சூழலைப் பற்றி இத்தனை இத்தனை கதைகளை எங்கிருந்துதான் உருவாக்க கற்பனைகள் துளிர் விடுகின்றனவோ?" என்பது மட்டுமே. சின்னதொரு புன்னகையில் பதில் சொன்னவர், என்னை டெக்ஸ் story room-க்குள் இட்டுச் சென்ற போது ஏற்கனவே திறந்து இருந்த வாய் கூடுதலாக ஓபன் ஆகியது. திரும்பிய திக்கிலெல்லாம் வன்மேற்கு சார்ந்த reference புத்தகங்கள், கோப்புகள், ரைபிள் பொம்மைகள், பிஸ்டல் பொம்மைகள், கோச் வண்டி பொம்மைகள், குதிரை மாடல்கள் என்று குவித்து வைத்திருந்தனர். அங்கே இருந்த அந்தச் சின்னச் சின்ன பொம்மைகளும் கூட அந்த காலத்தின் பிரதிபலிப்பு. ஒரு கோச் வண்டி என்றால் எப்படி இருக்கும்? ஒரு பிஸ்டல் என்றால் அதன் எடை என்ன? அதன் வடிவம் என்ன? என்று ரேஞ்சில் அவர்கள் செய்திடக்கூடிய அலசல்கள் சகலத்துக்கும் அங்கே references இருந்தன. அதே போல வன்மேற்கின் ஒவ்வொரு காலகட்டத்தையும் அங்குலம் அங்குலமாய் வாசிக்கவும், அலசி ஆராய்ந்திடவும் ஒரு டீமே அவர்களிடம் இருப்பது தெரிந்தது.
"நியூ மெக்ஸிகோ" என்று எடுத்துக் கொண்டால் அதன் வரலாறு, அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், வாழ்ந்த மனிதர்கள், சொல்லும்படியான பிரதான சம்பவங்கள் என்று குறிப்பு எடுத்துக் கொள்கிறார்கள். இதே போல அரிசோனா, டெக்சாஸ், உடாஹ், சான் பிரான்சிஸ்கோ என்று நெடுக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பான அந்தக் காலகட்டத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராயும் போது, ஒரு துக்கணூண்டு புள்ளியாய் ஏதேனும் ஒரு விஷயம் கிடைத்தால் கூட அதை இறுகப் பற்றிக் கொண்டு அதனை மேற்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். ஆக, முதல் புள்ளி அழகாய் அமைந்துவிட்டால், அப்புறமாய் அதை ரங்கோலி ஆக்கும் வேலைகளை போசெலி தெறிக்கவிடும் லாவகத்துடன் செய்து முடிக்கிறார். Of course, இதைச் சொல்வது சுலபமே; வாய் கிழியப் பேசுவதும் அதைவிட சுலபமே. 220 பக்கங்களுக்கு ஒரு சிறு புள்ளியை நீட்டிச் செல்வதென்பது அசாத்தியம் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் அதனையே வாழ்க்கையின் லட்சியமாக்கி இருக்கும் மனுஷனுக்கு இதெல்லாம் ஜகஜம் தான் போலும்.
இதோ காத்திருக்கும் "நித்திரை மறந்த நித்தியன்" கூட மௌரோ போசெலியின் yet another masterpiece. இம்முறையோ களம் மெக்ஸிகோ; அங்கு அரங்கேறும் ஒரு வினோதத் திருவிழா கதைக்கு பின்புலமாகிறது. பற்றாக்குறைக்கு மெக்சிக நாட்டுப்புற கதைகளில் புழங்கிடும் ஒரு அமானுஷ்யத் தகவலை இறுக்கமாய் பற்றிக்கொள்ளும் போசெலி, இந்த 52 பக்க கலர் கிராபிக் நாவலில் ஊடுகட்டி அடித்திருப்பது அட்டகாசம் .ஆண்டுக்கு ஒருமுறை Franco-Belgian சித்திரபாணிகளில், பக்க நீளங்களில் கதை அமைப்பினில் ஒரு டெக்ஸ் ஆல்பத்தையும் கடந்த 10-12 ஆண்டுகளாகவே போநெல்லி வெளியிட்டு வருகின்றனர். இந்த மாதம் உங்களை எட்டிட உள்ள இந்த ஆல்பமோ 2025-இல் வெளியான முயற்சி. அந்நேரமே இது என் கண்ணில் பட்டிருந்தது; நம் நண்பர்களுள் யாரோ ஒருவருமே கூட இது குறித்து வினவி இருந்தது நினைவு உள்ளது. நான் பார்த்ததெல்லாம் கதாசிரியர் யார் என்பது மாத்திரமே. போசெலி என்றிருந்த மறுநொடியில் எவ்வித தயக்கமும் இன்றி 2026-இன் பட்டியலுக்குள் இதனை முதலாவதாய் குறித்து வைத்திருந்தேன்.
In fact, இது ஜனவரியிலேயே வந்திருக்க வேண்டிய ஆல்பமே. ஆனால் போன வருஷம் நமது ஈரோடு சந்திப்பின் போது, நம்ம சேலத்து டாக்டர் சார், "ஆண்டின் முதல் மாதத்தில் பொங்கல் விடுமுறைகளும் இருக்கும் போதெல்லாம் ஏதாச்சும் ஒரு தாட்டியமான டெக்ஸ் சாகசத்தை போட்டுத் தாக்குங்க சார், 'இளமையெனும் பூங்காற்று' ரேஞ்சுக்கு புசுக்கென்று முடியும் கதைகள் வேண்டாமே" என்ற கோரிக்கையை எழுப்பி இருந்தது நினைவுக்கு வந்தது. சரி, அதுவும் சரிதான். சென்ற வருடம் வந்த டெக்ஸ் கிராபிக் நாவல் அத்தனை ரம்யமில்லை எனும்போது, மறுபடியும் அந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஜனவரிக்கு எண்ணியிருந்த இந்த இதழைப் பின்தள்ளி இருந்தேன்.
பத்து நாட்களுக்கு முன்பாக இந்தக் கதைக்குள் பணி செய்ய புகுந்தபோது, பொம்மை பார்த்திருந்த அனுபவம் மட்டுமே இந்தக் கதையோடு எனக்கு இருந்தது. பெரிதாய் கதைச் சுருக்கத்தையோ, கதையை கிளைமாக்ஸ் வரையோ வாசித்துவிட்டு வேலைகளை நான் ஆரம்பிப்பதே கிடையாது. அட, பக்கத்தைப் புரட்டப் புரட்டக் கதையோடு பயணித்தால் போதும்தானே என்பதே இந்தச் சோம்பேறி மாடனின் ஆரம்ப காலம் முதலான வாடிக்கை. இங்கே கதை நெடுக மெக்ஸிகோ மண் கண்ணில்பட்டது எனக்குள் லைட்டாக ஒரு குஷியை ஏற்படுத்தியது. Because, மெக்ஸிகோவில் அரங்கேற்றிடும் சாகசங்கள் அனைத்துமே பட்டாசு ரகமே. கனடாவுமே அதேபோலதொரு களம்தானல்லவா? மெதுமெதுவாய் பணிகளுக்குள் புகுந்தபோது ஒரு விஷயம் பிரதானமாய்ப் புரிந்தது. 220 பக்கங்கள் எனும் நெடும் canvas சாத்தியமாகிடும்போது, ஒரு சாகசத்தைப் பிரம்மாண்டமாக்கிச் சொல்லும் களம் கதாசிரியர்களுக்கு வாய்க்கின்றது. ஆனால், 52 பக்கங்களே கதை சொல்லலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்போது, கிரிஸ்ப்பாகக் கதை நகர்த்தலைச் செய்திடும் லாவகம் போஸலிக்கு லாலாகடை அல்வாவைச் சாப்பிடுவது போல் என்பது ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. கோமஸ் என்றதொரு புது ஓவியரின் கைவண்ணத்தில் சித்திரங்கள் பிளஸ் கலரிங் அனல் பறக்க விட்டுக்கொண்டிருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கதையினூடே ஒரு மெல்லிய திகில் படர்வதை உணர்ந்தபோது பரபரப்பு எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. அந்த நொடியில் இது கற்பனையா? ஏதேனும் நிஜச் சம்பவமா? என்றெல்லாம் கூகுள் பண்ணி ஞானத்தை வளர்த்துக்கொள்ள நான் மெனக்கெடவில்லை. Becos, clean slate ஆனதொரு மனதுடன் போஸலியுடன் பயணம் செய்வதுதான் உசிதமாக இருக்கும் என்றுபட்டது. So, கதையின் போக்கிற்கே பயணத்தையும் மேற்கொண்டபோது கிட்டிய அனுபவம் செம ஜிலீர். Oh yes, தமிழ்ச் சினிமாக்களின் கதைக்களம் போல யூகிக்கக்கூடிய சுலபமான பிளாட்தான். ஆனாலும், ஒரு கற்பனை அல்லாத புள்ளியைக் கதைக்குள் கொணர்ந்து, அங்கு நமது நாயகர்களையும் இறக்கிவிட்டு, கதையோடு அவர்களைப் பிசிறின்றிப் பயணிக்கச் செய்யும் அந்த வித்தை மெய்மறக்கச் செய்தது நிஜமே.
பக்கங்கள் 52 என்றாலும், பக்கம் ஒன்றிற்கு குறைந்தது எட்டிலிருந்து பத்து சித்திரங்கள் என்பதால், வசனங்களும் கணிசமே. ஆனாலும் துளி கூட தொய்வின்றி டாப் கியரில் ஆரம்பிக்கும் கதையானது முற்று என்ற புள்ளி வரையிலும் டாப் கியரிலேயே பயணிப்பதை நான் ரசித்தது போலவே நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
இந்தக் கதைப் பின்னணி பற்றி மேலோட்டமாய் ஹாட்லைனிலும் எழுதி இருக்கிறேன் தான். ஆனால் கதைக்குள் மூழ்குவதற்கு முன்பாக அதனை கூகுள் செய்வதோ, YouTube-ல் தேடுவதோ வேண்டாமே ப்ளீஸ் மக்களே. என்னவென்றே தெரியாது உட்புகுந்து ஒரு மெக்சிகன் நம்பிக்கை என்னவென்று தெரிந்துகொண்டு, அப்புறமாய் அதனை ஸ்டடி செய்து "ஓஹோ! இந்த புள்ளி இவ்விதம் தான் ஆரம்பமா?" என்று கிரகித்துக் கொள்ளுங்களேன். தலைகீழாய் செய்துவிட்டால் வாசிப்பில் நிச்சயமாய் வேகம் குன்றிவிடும். Spoiler Alert தந்துவிட்டேன், இனி உங்கள் கைகளில்.
சித்திரங்களும் டிஜிட்டல் கலரிங்கும் முற்றிலுமாய் வேறொரு லெவல். சுட்டெரிக்கும் மெக்சிகோவின் அந்த மண்ணும் சரி, அந்த ஸ்பானிஷ் ஸ்டைலிலான கட்டிடங்களும் சரி, மெக்சிக கோவ்பாய்களின் உடுப்புகளும், நாலு மண்டைக்கு சேரக்கூடியதொரு தொப்பியையும் நெடுக பார்ப்பது செமத்தியாக உள்ளது. And நடுநடுவே சில பக்கங்கள், சில பிரேம்கள் சுற்றிலும் வெள்ளை பார்டர்கள் இன்றி edge to edge இருப்பதையுமே காணப்போகிறீர்கள். So, "நடுவுல கொஞ்சம் வெள்ளை பார்டரை காணோம், பைண்டிங்கில் கோளாறு !! நடந்தது என்ன?" என்று ஒரு விசாரணைக் கமிட்டி போட்டுவிட வேண்டாமே ப்ளீஸ்.
இம்மாத்தின் அடுத்த ஹைலைட் மூன்று Top நாயக நாயகியர் பங்கேற்கும் The கோடைமலர் '26. என்னை கேட்டால் இந்த இதழுக்கு "Dark ஸ்பெஷல்" என்று கூட பெயர் வைத்திருக்கலாம். Becos, தற்செயலானதொரு ஒற்றுமையாய் மூன்று கதைகளுக்குமே டிஜிட்டல் கலரிங் பெருவாரியான டார்க் கலர்களில் செய்துள்ளனர். ஜானியின் வரிசையில் இது ரொம்ப லேட்டஸ்ட் ஆல்பம் அல்ல. So, அந்நாட்களது கலரிங் ஸ்டைல் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டாங்கோவிலோ அதன் ஓவியருக்கும் கலரிங் ஆர்டிஸ்டுக்கும் அடர்வண்ணங்களில் Light and Dark என்று பிரித்து காட்டுவதில் ஒரு அலாதி பிரியம் எப்போதுமே உண்டு. So, அங்கமும் ஏகப்பட்ட அடர்த்தியான கலரிங். இம்முறை ரூபின் ஆல்பத்திலுமே கலரிங்கில் அதே போலான பாணி தான். So, கதைகள் நெடுக Dark themes கையாளப்பட்டிருப்பதை பார்த்திடலாம். தற்செயலான இன்னொரு ஒற்றுமையாய் மூன்று கதைகளுக்குமே கதைப் பின்புலங்களுமே செம டார்க்.
வழக்கமாய் ஜானி கதைகளில் நெளிநெளியாய் இடியாப்பத்தை சுற்று சுற்று என்று சுற்றிவிட்டு, இறுதியில் இரண்டே பக்கங்களில் சகல முடிச்சுகளையும் அவிழ்த்துவிட்டு "சுபம்" போட்டுவிடுவார். இம்முறையும் கிட்டத்தட்ட அதே பாணி தான். ஆனால் "சுபம்" போடும் கட்டத்தில் மனம் லேசாகக் கனப்பதை தவிர்க்க இயலாது. இப்போதெல்லாமே ஜானி கதைகளை நான் தான் கையாண்டு வருகிறேன் என்பதால் ஜானி சார் மீது ஒரு பயம் கலந்த மரியாதை ஒருமிடறு தூக்கலாக இருப்பது நிஜமே. கருணையானந்தம் அங்கிள் எழுதிக் கொண்டிருந்த வரைக்கும் "ஆங்... ரைட்டு ஜானி கதைகள் என்றாலே இப்படித்தான் இருக்கும் !" என்ற நம்பிக்கையில் பெருசாய் நோண்டாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன் தான். ஆனால் இப்போதெல்லாம் புள்ளி வைக்கத் தவறினால் கூட புடனியோடு போடுவதால். ஒரு பக்கம் பிரெஞ்சு ஒரிஜினல், இன்னொரு பக்கம் ஆங்கில மொழிபெயர்ப்பு அப்புறம் சந்தேகங்களை நிவர்த்திக்க கூகிள் என்ற கையோடே எழுத வேண்டியுள்ளது. இந்த அழகில் இடியாப்பமும் நூடுல்ஸும் கலந்து தட்டில் பரிமாறப்படும் போது வாய்க்குள் நூடுல்ஸை நுழைக்கிறேனா முட்கரண்டியை மட்டுமே நுழைத்துக் கொண்டிருக்கிறேனா என்பதில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டி உள்ளது.And சமீப ஆண்டுகளில் வெளிவந்துள்ள ஜானி கதைகளுள் இம்மாதம் காத்திருக்கும் "திகில் முகமூடி" has to rank among the best என்பேன்.
நீங்கள் என்னதான் நமது புன்னகை இளவரசரை கொண்டாடினாலும் எனக்கு அவரது சில கதைகளின் மீது லைட்டான மனத்தாங்கல் உண்டு தான். இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நிறைய முறைகள் நினைத்திருக்கிறேன். ஆனால் ஒரு தெளிவான கதை நாட் கிடைத்துவிட்டால்...அதுவே மதி. பாக்கி சகலத்தையும் கதை சொல்லலில் சரி செய்து விடுவோம் என்று கதாசிரியர் சந்தேகத்திற்கு இடமின்றி establish செய்வதை இம்முறை பார்க்க முடிகிறது. திகில் முகமூடி வழக்கம் போல் கதை நெடுக வந்து போகும் மனிதர்களை எல்லாமே சந்தேக வட்டத்திற்குள் உட்படுத்தும் ஒரு murder thriller தான். இம்முறையோ ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகள் சரளமாய் அரங்கேறிட சீட்டின் நுனியில் அமர்ந்தபடியே பேனா பிடித்த பிழைப்பாகிப் போனது. And yes, கதை climax-ஐ நெருங்கிய போது மெதுமெதுவாய் கொலையாளி யார் என்பதை யூகிக்க எனக்கு சாத்தியப்பட்டது தான். ஆனால், அதை முறைப்படி கதாசிரியர் சொல்லும் தருணத்தில் துவக்கப்புள்ளிகளிலிருந்து சகலத்தையும் கனெக்ட் செய்திடும் அந்த நேர்த்தி பிரமிக்கச் செய்தது. கோடை மலரில் இம்முறை ரிப்போர்ட்டர் ஜானிக்கே முதல் ஸ்லாட் தந்துள்ளோம். அதற்கு காரணமில்லாதில்லை. இந்த இதழில் உங்கள் வாசிப்பை ஜானியிலிருந்தே துவக்கினால் சிறப்பு தான் என்பேன்.
Next in line நமது லோன்ஸ்டார் டாங்கோ. முதல் சாகசம் முதலாகவே இவரிடம் ஒரு வித மௌனமான கோபம் குடியிருப்பதை பார்க்க முடிந்தது. "தனிமையே என் துணைவன்" என்ற பாட்டு இவருக்குமே சூட்டாகும் தான் என்றாலும், நடுவே அந்த அர்ஜென்டின போலீஸ்காரர் மரியோ பார்ட்னர் ஆகிய பிற்பாடு அந்த கோபம் சற்றே மட்டுப்பட்டிருந்ததாய் பின்னாட்களது ஆல்பங்களில் தெரிந்தது. ஆனால் இம்முறையோ மனுஷன் ஒரு ரௌத்ர தாண்டவத்தை அரங்கேற்றி இருப்பதை பார்த்திடலாம். இந்த ஆல்பத்தினுள் புகுந்திட முன்பாக முடிந்தால் அத்தியாயம் இரண்டை ஒருவாட்டி புரட்டிக்கொண்டால் கதை மாந்தர்களை அடையாளம் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பேன். OS, என்னைப்போல வெண்டைக்காய் பார்ட்டியாக நீங்கள் இல்லாதிருக்கும் பட்சத்தில், "சிவந்த மண்" சாகசத்தில் வந்து சென்ற அந்த தீவு வாசிகளை உங்களுக்கு நினைவு இருக்கவும் கூடும். முழுக்கவே பராகுவே எனும் தென்னமெரிக்க தேசத்தில் அரங்கேறிடும் இந்த சாகசம் ஒரு high voltage அடிதடி மேளா தான். டாங்கோவின் தொடரில் நாம் தற்சமயம் தொட்டிருப்பது ஆல்பம் நம்பர் ஆறு. இன்னமும் இதுவரை நாம் முயற்சித்திருக்காத ஆல்பங்கள் மூன்றே தான் பாக்கி. So, happy to see us making decent progress with this series.
கோடை மலரின் இன்னொரு highlight நமது சிகாகோ டிடெக்டிவ் அம்மணி ரூபின் தான். ரூபின் கதைகளில் எப்போதுமே ஒரு வித கனம் இருப்பது முதல் நாளிலேயே புரிந்தது. அந்த கனம் ரொம்பவே அழுத்தமாகிட கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அந்த சித்திர பாணியை semi-cartoon style-இல் அமைத்திருப்பதாக எனக்குப் படுகிறது. இதே கதையினை நார்மலான உயிரோட்டமான ஓவியங்களில் படைத்திருந்தால் படிக்க கொஞ்சம் அயர்வு ஏற்பட்டிருக்குமோ என்னவோ சொல்ல தெரியவில்லை. ஆனால் இந்த லைட்டான சித்திர பாணியில் கனமான கதைக்களங்களை சுலபமாய் ரூபின் பேலன்ஸ் செய்து விடுகிறார்.
"விடுமுறையில் விதி முடிப்போம்" ஒரு யதார்த்தமான குற்றப்புலனாய்வு. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் இங்கே அணுகுண்டு கடத்தலையோ, தேச துரோக வழக்குகளையோ நமது கேரட் கேச அம்மணி துப்புத் துலக்குவதில்லை. ஆனால் விடுமுறைக்கு வீடு செல்லும் போதும் எதிர்படும் வில்லங்கத்தை அட்டகாசமாய் அம்மணி கையாள்வதே இந்த 44 பக்க அதிரடி !! வசனங்கள் கணிசமாய் உண்டு தான், and, கடந்த சில ஆண்டுகளின் வழக்கம் போல ரூபினுக்கு முதல் கட்ட பேனா பிடிப்பு நமது டீமின் Ms.P. சுகன்யா. இரண்டாம் கட்ட பேனாப்பிடிப்பு நமது புடைத்த மூக்கர். வண்டி வண்டியாய் டயலாக்ஸ் இருந்தாலும் துளியும் அயர்வூட்டாமல் கதையை நகர்த்திச் செல்வது கதாசிரியரின் பிரதான வெற்றி என்பேன். And, கதை முடியும் அந்த இறுதி பிரேமில் வசனங்களே இன்றி இரண்டே சித்திரங்களில் அவர் சொல்ல முனையும் செய்தியும் ஒரு ஹைக்கூ கவிதை ரகம். So, மளமளவென்று வாசித்து விட்டு நகரும் வேகத்தில் சித்திரங்களையும் சில மௌனக் குறியீடுகளையும் miss பண்ணி விடாதீர்கள் மக்களே.
இம்மாதத்தில் பேனாவைத் தூக்கிக்கொண்டு நான் ஷன்டிங் அடிக்கும் மூன்றாவது இதழ் பூம் பூம் தாத்தா. இதன் target audience Gen-Z என்றாலுமே, நம் மத்தியில் உள்ள தாத்தாக்களுக்கு இது சத்தியமாய் ரசிக்காது போகாது என்பது உறுதி. Maybe, சில பல youth-களுக்கு "இதில் என்னய்யா இருக்கு?" என்று தோன்றலாம்தான். ஆனால், மனித உறவுகளின் ஒரு அழகான பரிமாணத்தை காட்சிப்படுத்தும் இந்தத் தொடர், இன்றில்லாவிட்டாலும் ஏதோ ஒரு தூரத்துப் பின்னாளியில் உங்களுக்குள் Resonate ஆகாது போகாது என்பேன்.அதிலும், அந்தக் கடைசிக் குட்டிக்கதையில் குட்டிப்பாப்பா ரோஸ் சொல்லும் செய்தி தாத்தாவுக்கு மட்டுமல்ல, நமக்குமேதான் என்று தோன்றுகிறது. இன்னொரு குட்டிக்கதையில் இன்றைய ஓட்டமோ-ஓட்டம் யுகத்தில் பெற்றோர்களுக்குமான அழகானதொரு தகவல் waiting. So, "பூம் பூம் தாத்தா" சர்வ நிச்சயமாக பூமர் தாத்தா அல்லவே அல்ல. முயற்சித்துப் தான் பாருங்களேன் folks ? And yes please, வீட்டு குட்டீஸ்களிடம் கொடுக்கவும் முயற்சியுங்களேன்.
ரைட்டு... இம்மாதத்து மூன்று இதழ்களைப் பற்றியும் பொறுப்பாய் preview செய்தாச்சு. இனி இவற்றை அலசிட உங்களையே நம்பியிருப்போம். ஒரு வண்டி இதழ்கள் காத்துள்ள ஜூன்-ல், ராபினின் "எங்கேயோ கேட்ட குரல்" மிரட்டோ மிரட்டென்று மிரட்டிக்கொண்டிருக்க, அவரோடு டிஜிட்டல் விடியலுடன் போராட இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன். Bye all, see you around. Have a great week ahead!
ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி guys : https://lion-muthucomics.com/latest-releases/1461-2026-may-pack.html
And இது TERRIFIC TEX சந்தாவுக்கான ஆன்லைன் லிங்க் : https://lion-muthucomics.com/tex-willer/1460-the-terrific-tex-for-current-subscribers.html



Hai Sir
ReplyDelete❣️😊
ReplyDeleteHi...
ReplyDeleteகாலை வணக்கம் சார்
ReplyDeleteFirst Comment 🥰
ReplyDelete😘😘💐Me in😘
ReplyDeleteTop 10
ReplyDeleteவணக்கம் சகோதரர்களே...
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete10க்குள் வந்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன் இதழ்களுக்காக....
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDelete19ஆம் நூற்றாண்டு, குதிரை கோச்சு வண்டி அனல் பறக்கும் பாலைவனம் காடுகள் துப்பாக்கிகள் செவ்விந்தியர்கள்.. எந்த நூற்றாண்டுகள் ஆனாலும் தப்பு மட்டுமே செய்வோம் செய்வதால் 4 ஆயிரம் பேர் இருந்தால் அதை தட்டிக் கேட்க நான்கு பேர் வருவார்கள்.... அப்படி நால்வர் படையுடன் களம் இறங்கி ஒவ்வொரு மாதமும் சலிப்பு தட்டாமல் கொண்டு செல்லும் டெக்ஸ் படைப்பாளிகளின் திறமைக்கு ஒரு பிக் சைட் அதிலும் டெக்ஸின் மிக முக்கிய படைப்பாளியானபோனேலின் திறமையை வியக்காமல் இருக்கவே முடியாது.... எங்கள் வாழ்க்கையில் ஒரு ஒரு வியக்கத்தக்க மனிதராகவே நிற்கின்றார் எங்கள் மனதில்.... ❤️❤️❤️❤️❤️
ReplyDelete@Edi சார் 😘💐
ReplyDeleteWish you a very Happy திருவிழா சார் 😘👍😄💐
இன்னிக்கி கருப்பட்டி முட்டாய் தான் திருவிழா பெசல் சார் - பேயா இனிக்கும் !! நாமெல்லாம் அதை பேப்பரிலே எழுதி வாசிச்சுக்கிற பார்ட்டி !!
Deleteநம்ம திருவிழா இன்னிக்கி ரெட் கன் - ராபின் என இரண்டு "R 'ஸ் கூடத்தான் !
Wow எம்மாம் பெரிய பதிவு. சும்மா தெறிக்க விடுது சார் preview. Awesome
ReplyDeleteஜானிக்காக வெயிட்டிங்
ReplyDelete