Powered By Blogger

Sunday, May 31, 2026

ரோஸ் கோட் போட்டதொரு மதியத்தில் ...!

 நண்பர்களே, 

வணக்கம். கடையில் கூட்டம் குறைச்சலாக இருப்பதன் காரணமாய், ஆத்தும் டீயை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் சில நேரங்களில் எழுவதன் பலனாக ஞாயிறு காணாமல் போவது நிகழ்கிறது தான், மறுக்க மாட்டேன். ஆனால், வெகு சொற்ப தருணங்களில் காது வழியாக தக்காளி சட்னி வழிவதாக எனக்கே ஒரு பிரமை ஏற்படும் போதும், பதிவுக்கு விடுமுறை விட்டிருக்கிறேன். And இந்த ஞாயிறும் கூட அந்த ரகத்தில் சேர்த்து தான். ஒய் தி டொமேட்டோ சட்னி என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை guys..... ஏதேனும் ஒரு காரணத்தின் பொருட்டு, ஒரு மாதத்தில் மாமூலைக் காட்டிலும் ரொம்பவே கூடுதலாய் பேனா பிடிக்க அவசியப்பட்டு விடுவதுண்டு. விடிய விடிய எனது எழுத்தை நானே வாசிக்க நேரிடும் போது ஒரு வித அயர்ச்சி தலைதூக்கும். 'தெய்வமே, அவசியத்துக்கு எழுதியாச்சு....இனி பதிவு எனும் ஆடம்பரத்துக்கும் மறுக்கா மொக்கை போட்டே தீரணுமா ?' என்ற கேள்வியோடு பேனாவை உள்ளே போட்டு பூட்டி விடுவதுண்டு. And காத்திருக்கும் ஜூன் மாதத்திற்கென அதுவே தான் அரங்கேறியுள்ளது.

​புது அறிமுகம் ‘ரெட் கன்’ ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கதை அரங்கேறுவது நமக்குப்  பிடித்தமான கவ்பாய் உலகில் என்றாலும், இது மாமூலான bang bang ரகக் கதையே அல்ல. ஒரு சீரியல் கில்லர் கைவரிசையினைக் காட்டி வர, அவன் யார்? அவனது பின்னணி என்ன? என்ற தேடலில் இறங்கிடும் ‘ரெட் கன்’ கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் இவரது கதையை டிக் அடித்த போதே பேனா பிடிக்கும் வேலையை நாமே வைத்துக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானித்திருந்தேன். So, அங்கே ஆரம்பித்தது முதல் புள்ளி. 

தொடர்ந்ததோ, நமது ராபின் 2.0-வின் கிளைமாக்ஸ் அதிரடி. நிறையவே இது பற்றி நடுநடுவே பில்டப் கொடுத்திருக்கிறேன் தான். So, காத்திருப்பது என்னவென்று நமக்கெல்லாம் ஸ்பஷ்டமாகவே தெரியும் தான். एक வண்டி ஹைடெக் சமாச்சாரங்களோடு, ஒரு தெறிக்கும் வேகத்திலான க்ரைம்த்ரில்லர் அரங்கேறிடும் சமயம் அதனை நம் டீமில் உள்ள யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு, அப்புறமாய் எடிட்டிங்கிற்குள் குஸ்தி போடுவதைக் காட்டிலும், ஆரம்பம் முதலே பேனா பிடித்துவிட்டால் பஞ்சாயத்து கொஞ்சம் குறைச்சலாக இருக்குமே என்ற எண்ணம் நடப்பாண்டின் திட்டமிடலின் போதே தலைதூக்கி இருந்தது. In fact, மார்ச் மாதமே வந்திருக்க வேண்டிய இந்த ஆல்பம் ஜூன் வரை தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. இதனுள் புகுந்திட இருந்த 'டர்' தான் காரணம். But, இதற்குமேலும் தள்ளிப்போட இயலாது என்ற ஒரு சூழல் புலர்ந்த போது எங்கிருந்தோ பிறந்த வைராக்கியத்துடன் 'தம்' கட்டியபடியே 192 பக்க பணிக்குள் 'ஆடறா ராமா தாண்டறா ராமா' என்று பயணித்திருந்தேன். And, ரொம்பவே intense ஆன ஒரு சாகசம் என்பதால் வசனங்களில் இம்மிகூட அனலுக்கு பஞ்சமே கிடையாது - ஒரிஜினலில். So, முதல் பாகம் ஈட்டித்  தந்த நற்பெயரை இந்தக் கிளைமாக்ஸ் பாகம் தக்க வைத்திட வேண்டுமெனில், எழுத்திலும் சோம்பலின்றிப்  பரபரப்பு இருந்திட வேண்டும் என்பது புரிந்தது. So, ராபின் 2.0 புண்ணியத்தில் குறுக்கெலும்பு 2.0 தேடி அலைந்த கதையாகிப் போய்விட்டது. 

ரைட்டு, இம்மாதத்தின் மூன்றாவது கதையான தல சாகசம் சிங்கிள் ஆல்பம் தான். அதை நடுநடுவே நமக்கென பேனா பிடித்திடும் சகோதரி சமீரா எழுதட்டும் என ஒப்படைத்திருந்தேன். எழுதியிருந்தார் தான், ஸ்கிரிப்ட்டும் வந்திருந்தது தான். ஆனால் வழக்கம் போல ‘I want more emotions’ என்ற பாரதிராஜா குரல் தான் தலைக்குள் ஒலித்தது. 'உஸ்ஸ்' என்று பெருமூச்சு விட்டபடியே திருத்தங்கள் செய்திட அமர்ந்த போது, இன்னொருவரின் ஸ்கிரிப்ட்டுக்குள் தலைநுழைப்பதைக் காட்டிலும், மொத்தமாகவே மாற்றி எழுதிவிட்டால் வேலை கொஞ்சம் சுலபம் என்பது போல் 108-வது தடவையாக உணர்ந்தேன். வேறு வழியே இல்லை என்ற சூழலில், தம் கட்டி முற்றிலுமாய் புதிதாய் ஸ்கிரிப்ட் அமைக்க நேரிட்டது. முக்கால் பாகம் நாக்கு ஏற்கனவே தெருவை கூட்டிக் கொண்டிருந்த நிலையில்,GEN Z தடத்துக்கென நமது குட்டி டிடெக்டிவ்ஸின், குட்டி சாகசம் காத்திருந்தது. அதைப் பார்த்த மறுநொடி உற்சாகம் தொற்றிக்கொள்ள, செம ஜாலியாய், ரொம்பச் சீக்கிரமே பணியினை முடித்துவிட்டு, சித்த நேரம் தரையில் படுத்து விட்டத்தை நோக்கிக் கொண்டிருந்தேன்.

​'ஆஹா, பணி இன்னும் பூரணமாய் முடிந்தபாடில்லைடா தம்பி, லண்டனில் மேகி பாப்பா வெயிட்டிங் !' என்று காதுக்குள் ஒரு குரல் கேட்டது. நமது கிராஃபிக் நாவல் Twins முன்பதிவுத் தடத்தில் போன மாதமே வந்திருக்க வேண்டிய மேகி கேரிசன் இந்த ஜுனில் எப்படியும் வெளிவந்தே தீரவேண்டும் என்பதால், அந்தப் பணியினையும் ஜுனுக்கென slot in செய்து வைத்திருந்தேன். ஆரம்பத்து இரு அத்தியாயங்களுக்கும் நானே பேனா பிடித்திருக்க, இந்த மூன்றாவது பாகத்தை இன்னொருத்தரிடம் செய்யக் கொடுக்கவும் சாத்தியமாகாது என்பது புரிந்தது. Again இந்த நொடியில் நண்பர் பல்லடம் சரவணகுமாரை நினைவுகூர்ந்திடாமல் இருக்க இயலவில்லை. 2024 சென்னை காமிக் கானில் சந்தித்தபோது கூட, ஏதேதோ பேச்சின் மத்தியில் மேகி கேரிசன் translation பற்றி ஒரு ஐந்து நிமிடங்களாவது பேசியிருந்திருப்பார். So, இரண்டு கிணறுகளைத் தாண்டிய பிற்பாடு, கடைசிக் கிணற்றைத் தாண்ட ஆள் தேடுவது சுகப்படாது என்றபடிக்கே, மேகியோடு அன்னம் தண்ணி புழங்க அமர்ந்தேன். ஆரம்பத்து இரு அத்தியாயங்களும் தத்தம் விதங்களில் செம ஃப்ரீக்கியான கதைக்களங்கள் என்பதில் ஐயமே கிடையாது. In fact இதுதான் இந்த கதையின் திசை, இதுதான் இந்த கதையின் இலக்கு என்றே அல்லாது, கால் போன போக்கில் லண்டனின் வீதிகளில் மேகி அடிக்கும் ஷன்டிங்கை போலவே, கதையினூடே கிளைக்கதைகள், குட்டிக்கதைகள் என்று ஏகப்பட்ட கொப்புகளும், கிளைகளும் இருப்பதை பார்த்திருந்தோம். And இந்த கிளைமாக்ஸ் அத்தியாயத்திலுமே அதுவேதான் டெம்ப்ளேட்.

லண்டனின் தட்பவெப்ப நிலை போலவே, துளியும் கணிக்க முடியாத விதத்தில் இங்கிட்டும் அங்கிட்டுமாய் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தது கதைக்களம்! காதலனுடன் live-in ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் மேகி, வழக்கம் போல் வேலை தேடி அலையும் படலங்கள் ஒருபுறமெனில், அவளது டிடெக்டிவ் நிறுவனத்தின் முதலாளி தரும் விசித்திரமான கேஸ்கள் இன்னொரு ரகம். மேகிக்குமே அந்த நக்கலும், நையாண்டிக்கும் பின்னே ஒரு காதல் நெஞ்சம் உண்டு என்பதை கதாசிரியர் இம்முறை அழகாகக் காட்டியுள்ளார். தனது பார்ட்னர் செம மாத்து வாங்கும்போது, குறுக்கே விழுந்து அவன் மேல் அடிவிழாமல் தடுக்கும் சமயம், நமது கோலிவுட் படங்களின் சென்டிமென்ட் சீன்கள்தான் நினைவுக்கு வந்தன! எங்கோ ஆரம்பித்து, ஏதேதோ ரூட்களில் பயணித்து, மொத்தமாய் புதுசாய் ஒரு திக்கில், கிளைமாக்ஸில் நிறைவு காணும் இந்தப் பணி, மெய்யாலுமே என்னை நாக்குத் தொங்கப் பண்ணிவிட்டது! ​Not because of the language or the writing style... மாறாக, கதாசிரியர் எந்தப் பக்கம் கையைக் காட்டுகிறார் ? எந்தப் பக்கம் இண்டிகேட்டரைப் போடுகிறார் ? எந்தப் பக்கம் வண்டியை விடுகிறார் ? என்று இந்த வித்தைகளில் கில்லாடியான எனக்கே செமையாகத் தண்ணீர் காட்டியுள்ளார்! So, பேனா பிடிக்கும்போது எங்கு அழுத்தம் கூடுதலாகத் தேவை ? எங்கு மேலோட்டமாய் கடந்து செல்லலாம் ? என்று இனம் காணவே, நான் மூன்று வாட்டி முடித்த ஸ்கிரிப்டை மீண்டும் சரி செய்ய வேண்டிப்போனது. ​ஆக, பக்கங்கள் 46 ஆக இருந்தபோதிலும், அதனூடே மூன்று தடவை செய்த பயணத்தால், கிட்டத்தட்ட 135 பக்கங்களில் பணி செய்தது போன்றதொரு பளு!இத்தனை கூத்துகளுக்கும் அப்புறமாய், ஒட்டுமொத்தமாய் எடிட்டிங் என நான் எழுதியதையே ஒட்டுக்கா மேஜையில் குவித்துப்போட்டு, அப்புறமும் அவற்றினூடே  திருத்தங்கள், மாற்றி எழுதுதல் என்ற ரகளைகளைச் செய்து முடித்த சமயம்... என் காதில் ஒரு வண்டி தக்காளிச் சட்னி கசிந்து கொண்டிருந்தது! ​'தப்பேயில்லை' என்று உங்களுக்கும் புரியும் என நம்புகிறேன்! 

So இத்தனைக்கும் பிறகு இன்னொரு முறை பதிவுக்கென பேனா பிடிக்க தம்மே இருக்கவில்லை தான். ஆனாலும் ஒரு முக்கியமான விஷயம் பற்றி உங்களிடம் வினவ வேண்டியிருந்ததால், "சரி ரைட்டு ஆனது ஆச்சு....மேற்கொண்டு சில பக்கங்கள் !" என்றபடியே இந்த பதிவுக்குள் புகுந்துவிட்டேன். மறுக்கா பெருசா பில்டப் தரவெல்லாம் தம் இல்லை என்பதால், நேரடியாகவே மேட்டருக்குள் புகுந்துவிடுகிறேன். வேறொன்றுமில்லை guys. நமது TERRIFIC TEX கிளாசிக் மறுபதிப்புத் தடத்தினுள் ஆறு முந்தைய black & white பதிப்புகளை அழகாய் கலரில் வெளியிட திட்டமிட்டிருந்தோம்தானே? கதைகளுக்கும், மொத்தமாய் ஆர்டர் செய்திருந்தோம் and கதைகளும் போன வாரம் வந்துவிட்டன. ஆனால் டெக்ஸ் தொடரின் நெடும் கதைகள் எந்த புக்கில் துவங்குகிறது ? எதில் பயணிக்கிறது ? எங்கு முடிவுறுகிறது ? என்று தேடிப் பிடிப்பது செம tough காரியம் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதுவும்  தொடரின் 200 வரைக்குமான நம்பருக்கு முன்பான காலகட்டத்தில், ஒரு ஆல்பத்தில் 20 பக்கங்கள், அடுத்ததில் 100, அதற்கடுத்ததில் ஒரு 30 - என்றெல்லாம் கதைகள் travel செய்வதுண்டு. So நமக்கான மறுபதிப்புக் கதைகளை தேடிப் பிடித்து ஆர்டர் செய்ததில் ஒன்று இரண்டு நம்பர்கள் தப்பாகிவிட்டதால், ஓரிரு மறுபதிப்புக்கான கதைகளுக்குப் பதிலாய் - முற்றிலும் புதிதான கதைகள் வந்து சேர்ந்துள்ளன. சகலமும் கலரில் எனும்போது இந்தப்  புதுக்கதைகளை 'ஆ'வென பராக்குப்  பார்க்கத்தான் முடிந்தது. 

நமது திட்டமிடலின்படி அச்சு அசலாய் நாம் விளம்பரப்படுத்திய அதே மறுபதிப்புகள் தான் வேண்டுமெனில் விடுபட்டுப் போயிருக்கும் ஓரிரு கதைகளுக்கு மறுக்கா ஆர்டர் கொடுத்து வரவழைத்திட வேண்டியிருக்கும். அதற்கான அவகாசமெல்லாம் உண்டு தான் ! அதே சமயம் 'ஒன்றோ இரண்டோ புத்தம் புதுக்கதைகளை உள்ளே புகுத்தினால் தப்பே இல்லை' எனும் பட்சத்தில் கைவசம் இருக்கும் இந்தப் புதுக்கதைகளை TERRIFIC TEX தடத்துக்குள்ளேயே புகுத்தி விடலாம் தான். இது பற்றி நிச்சயமாய் ஆளுக்கு ஒரு கருத்து இருக்கும் என்பதில் எனக்கு இம்மி கூட சந்தேகமே இல்லை ! So காலையே எழுந்து, மூத்திர சந்தைத் திறந்து, பிளீச்சிங் பவுடர் எல்லாம் போட்டு, வெயிலுக்கு ஒரு பந்தலையும் அமைத்துவிட்டு, தயாராகக்  காத்திருக்கிறேன். 

'பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்' எனும் பட்சத்தில் no worries, இந்தப் புதுக்கதைகளை 2027-ன் அட்டவணைக்கென மாற்றித் திட்டமிட்டுக் கொள்வேன். "இல்லைங்கண்ணா பெட்ரோமாக்ஸ் லைட் இல்லாங்காட்டி லாந்தர் விளக்கோ, LED பல்போ, தீப்பந்தமோ இருந்தா கூட நேக்கு ஓ.கே தான் !" எனும் பட்சத்தில் இந்தப்  புதுக்கதைகளை TERRIFIC TEX-க்குள் புகுத்திடலாம். இது குறித்து யார்-யார் எவ்விதம் ரியாக்ட் செய்வார்கள் ? என்பதை யூகிப்பதில் எனக்கு சிரமமே இருக்கவில்லை. எங்கிருந்தெல்லாம் தொடப்பக்கட்டைகள் பறந்து வரும் ?  பூரிக்கட்டைகள் வரும் ? என்பதை ஏற்கனவே லிஸ்ட் போட்டு வைத்தாகி விட்டது ! எங்கிருந்தெல்லாம் இதற்கு இசைவு கிட்டிடும் ? என்பதுமே என் ஞானக்கண்ணில் தெரிகின்றது. ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஞாயிறு மதியத்தில், கொஞ்சமே கொஞ்சமாய் முழியாங்கண்ணனை நாலு மாத்து மாத்தினால், தளமும் சுறுசுறுப்பாக இருந்தது போல் இருக்கும் ; என் கேள்விக்கு விடை கிடைத்தது போலவும் இருக்கும் அல்லவா? So ஒரு ரோஸ் கோட் போட்டுக்கினு, வாண்டனாக வண்டியில் ஏறி தயாராகக் காத்திருக்கிறேன் மக்களே. 

உங்களுக்கான வினா வெரி சிம்பிள். "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்" எனும் பட்சத்தில் no problems - விடுபட்டுள்ள மீதக் கதைகளுக்கு ஏற்பாடு செய்து விடலாம் ! So பின்னுட்டத்தில் "பெட்ரோமாக்ஸ்" என்று பதிவிட்டால் போதும். என்ன - மறுக்கா அவற்றிற்கென ஒரு தொகையினைத் தேற்ற வேண்டும் என்பது தான் நோவு !   

அதேநேரம் - "ஒன்றிரண்டு மறுபதிப்புகள் இன்னைக்கு இல்லாங்காட்டி நாளைக்கோ, நாளான்னைக்கோ வந்துவிட்டால் தெய்வ குற்றமெல்லாம் கிடையாது. புதுசை பேஷா உட்புகுத்தலாம் !" என்று நீங்கள் எண்ணிடும் பட்சத்தில் "LED பல்ப்" என்றோ "தீப்பந்தம்" என்றோ "லாந்தர் விளக்கு" என்றோ பதிவிட்டால் போதும். . 

"அக்காங் - பழசோடு புதுசை சேர்த்து போணி பண்ண பாக்குற. இது ஈ.பி.கோ. செக்ஷன் 676-படி மெக்ஸிகோவுக்கு பக்கத்து கொங்கணாபாளையத்தில் தூக்குதண்டனை தரவேண்டிய ரேஞ்சுக்கான குற்றமாகும். இதை நான் வன்மையாய், கொடூரமாய், தீவிரமாய், ஆவேசமாய், ஆக்ரோஷமாய் ஆரவாரமாய் , ஆர்ப்பாட்டமாய் , அதகளமாய் எதிர்க்கிறேன், கண்டிக்கிறேன்" என்று குரல் கொடுக்க மெனக்கெட வேண்டாமே ப்ளீஸ். நிலவரத்தை உள்ளதை உள்ளபடிக்கே சொல்லியுள்ளேன். இதை சரிசெய்வதும் இதையே நமக்கேற்றார்போல் தகவமைத்துக் கொள்வதும் நம் விருப்பமே. Simple as that ! So 1984 வரை போய் 'உன் புத்திய பத்தித் தெரியாதா ? உன் டகால்டி பத்தித் தெரியாதா ?' என்ற ரேஞ்சுக்கு போட்டுச்   சாத்த முகாந்திரங்கள் தேட வேண்டாமே ப்ளீஸ் ! இன்னொரு முறை பணம் தேற்ற வேணும் தானா ? என்ற தயக்கம் மட்டுமே இந்தக் கேள்வியினை உங்களிடம் முன்வைக்கச் செய்துள்ளது ! 

And end of the day - இந்த மறுபதிப்புத்  தனித்தடத்தினில் கிட்டத்தட்ட அனைத்து ரெகுலர் சந்தா நண்பர்களும் இணைந்திருப்பர் என்றே தோன்றுகிறது ! அவ்விதம் இணையாதோர் கூட, இந்தப் புதுக்கதைகளை மட்டும் ஆன்லைனிலோ, புத்தக விழாக்களிலோ வாங்கியும் கொள்ளலாமே ? என்று என் மண்டைக்குள் சிந்தனை ஓடியதை மறைக்க மாட்டேன் !  ஆனா 'வார்டன்னாலே குட்டுவோம் / குத்துவோம்' என்ற தெய்வீக அவா உள்ளோரும் நம் மத்தியில் உள்ளதால் - அவர்களின் சிந்தைகள் வேறாக இருக்கக்கூடுமென்றும் பட்டது !  Hence this ரோஸ்  கோட் !!

Moving on, ஜூன் புக்ஸ் எல்லாமே பிரிண்ட் ஆகி பைண்டிங்கில் உள்ளன. அடுத்த ஓரிரு நாட்களில் பைண்டிங் முடித்து வந்தவுடன் டெஸ்பாட்ச் ஆகிடும் folks. And, ஜூலை மாதத்து தக்காளி சட்னி தவணைக்கென இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறேன் Becos அங்கேயும் அநேகமாய் மாதத்தின் முழுமைக்கும் பேனா பிடிக்கும் பாக்கியம் நமக்கே அமையும் போல் தெரிகிறது. 

லக்கி லூக்  ஆண்டுமலர்  

தாத்தாக்கள்  

GEN Z தடம்  

FAB 5 

என்ற ரேஞ்சில் பொறுப்பை கைமாற்றி விட இயலா விதத்திலான இதழ்களே வெயிட்டிங். So லக்கியோடு பயணிக்கப் புறப்படுகிறேன். Bye all..see you around ! Have a fun evening !

148 comments:

  1. ரொம்ப நாள் கழிச்சி முதலிடம்

    ReplyDelete
  2. Haiyo...first time, lucky to be first...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள்! 😁💐💐💐

      Delete
    2. வாழ்த்துக்கள் சார்

      Delete
    3. வாழ்த்துகள் சகோ

      Delete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. பெட்ரோமாக்ஸோ, led யோ.. நமக்கு வெளிச்சம் வந்தா சரி.. அதாவது டெக்ஸ் வந்தா மட்டும் போதும்....

    ReplyDelete
  5. புத்தக திருவிழா (அ) ஆன்லைன்

    ReplyDelete
  6. புதிய கதைகளை வரவேற்கிறேன்.

    விடுபட்ட பழைய கதைகள் என்னென்ன, அவை வண்ணத்தில் எப்போது வரும் என்று சொன்னால் நண்பர்கள் பதிலளிக்க வசதியாக இருக்கும் சார்.

    ReplyDelete
  7. ///'தெய்வமே, அவசியத்துக்கு எழுதியாச்சு....இனி பதிவு எனும் ஆடம்பரத்துக்கும் மறுக்கா மொக்கை போட்டே தீரணுமா ?' ///

    உங்களுக்கு வேணா அது ஆடம்பரமா இருக்கலாம் சார்... எங்களுக்கு அது அத்தியாவசியம்! பதிவு இல்லேன்னா எதையோ இழந்தது போல ஒரு மார்க்கமாவே அன்னிக்கு பூரா சுத்திக்கிட்டிருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. இனிமே இப்டி பண்ணனுமோ - பதிவ படிக்க பைசா... 💪

      பொஸ்தவங்க பிரீ 👍

      Delete
    2. நீங்க சந்தா தொகை மட்டும் எவ்ளோன்னு சொல்லுங்க சார்... முதல் ஆளா சந்தா கட்டறேன்!!😁😁

      Delete
    3. அந்த சந்தாக்கு பேர் கூட ரெடி - "சந்துக்குள் சல்சா ".... இல்லே.. இல்லே... "The சந்துக்குள் சல்சா 💪சந்தா"!

      Delete
    4. அல்லாங்காட்டி - "The குஜ்லிமஸ்து சந்தா "

      Delete
    5. சார்... 🤣🤣🤣🤣🤣😝😝

      Delete
  8. LED பல்ப்😍
    LED பல்ப்😍😍
    LED பல்ப்😍😍😍
    LED பல்ப்😍😍😍😍
    LED பல்ப்😍😍😍😍😍

    ReplyDelete
  9. TERRIFIC டெக்ஸ் ல் விடுபட்டு போன அந்தக் கதை எதுங்க சார்? (நோ.. நோ! உங்களை மூ. ச க்கு இழுப்பதற்காகக் கேட்கலைங்க சார் 😁)

    ReplyDelete

  10. துள்ளிக் குதிக்குது மனசு 🤗🤗🤗

    1.LED BULBS

    இரண்டு கதைகள் புதிய கதைகள் என்றால் லெட்பல்ப் என்று சொல்வேன் 🤗

    2.OLED (ORGANIC LIGHT EMITTING DIODE )

    மூன்று கதைகள் புதியதாக வருமாயின் OLED என்று சொல்வேன்
    🤗🤗🤗

    3.MICROLED BULBS

    நான்கு கதைகள் புதிதாக வருமாயின் மைக்ரோ லெட் என்று சொல்வேன்
    🤗🤗🤗🤗🤗
    4.QUANTUM DOTT/PEROVSKITE EMITTER
    BULBS

    ஐந்து கதைகள் புதிதாக வருமாயின் மேலே உள்ள கசாமுசா என்று வரும் பல்புகளை சொல்வேன்.🤗🤗🤗🤗🤗🤗

    4.MIT’s Nanophotonic Incandescent Bulbs:
    ஆறு கதைகளும் புதிதாக வருமாய் மேலே உள்ளதைத்தான் சொல்வேன்

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    கடைசியில் உள்ள மூன்றுமே லெட் பல்புகளை விட அதிக தொழில்நுட்பம் சார்ந்தவை.


    எல்லா புத்தகங்களுமே தவறுதலாக புதிதாக வந்திருக்கக் கூடாதா? இத்தாலி யில தப்பு பண்ணுனு தான் பண்ணாங்க அது முழுசா பெரிய தப்பா பண்ணி இருக்க கூடாதா

    புதுசுகளை சீக்கிரமாக அடிச்சு விடுங்க சார் 👍




    ReplyDelete
    Replies
    1. ///ஐந்து கதைகள் புதிதாக வருமாயின் மேலே உள்ள கசாமுசா என்று வரும் பல்புகளை சொல்வேன்.///

      🤣🤣🤣🤣🤣🤣

      Delete
    2. தப்பு - இக்கட நான் நம்பர்கள தேடுனதிலே சார் 🥹🥹!

      இதற்கென ஒரு இத்தாலிய ஆர்வலரின் site உண்டு - அங்கு தகவல்கள் துல்லியமாய் இருக்கும்! துரதிரஷ்டவசமாய் அந்த site மூணு மாதங்களாய் down 🤕 So நானாய் பாக்கித் தளங்களில் சேகரித்ததில் கொஞ்சம் சொதப்பல்ஸ்!

      Delete
    3. லத்தின் மொழியில் ஒரு சொற்றொடர் உண்டு சார்.

      FELIX CULPA

      A HAPPY FAULT அல்லது BLESSED FALL

      ஒரு apparent error ஆனால் Positive outcome.

      😊 என்னைப் பொருத்த மட்டிலும் ஆவது.





      Delete
    4. ஒன் ZEN கதை நினைவுக்கு கமிங்.... இதோ அதன் copy-paste :

      நெடுங்காலத்திற்கு முன்பு, சீனாவின் வட எல்லைப் பகுதியில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தாராம். அவரிடம் ஒரு அற்புதமான வெள்ளைக் குதிரை இருந்ததாம். அதன் அழகையும் கம்பீரத்தையும் ரசிப்பதற்காகவே சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஏராளமான மக்கள் அவரைத் தேடி வருவார்களாம்.

      ​ஒரு நாள் காலை, அந்தக் குதிரை வேலியை உடைத்துக் கொண்டு பக்கத்து நாட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பித்துவிட்டதாம்.
      ​விஷயத்தைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் முதியவரைத் தேடி வந்து, "ஐயோ, என்ன ஒரு துரதிர்ஷ்டம்! இவ்வளவு அருமையான குதிரையை இழப்பது எவ்வளவு பெரிய சோகம்!" என்று தலையசைத்து வருந்தினார்களாம்.
      ​ஆனால், வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்து பக்குவப்பட்ட அந்த முதியவர், புன்னகையுடன் அவர்களிடம் சொன்னாராம்: "துரதிர்ஷ்டமா? அதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்? விதி என்பது ஒரு பெரிய வலைப்பின்னல்; அதில் நமக்குத் தெரிவது ஒரே ஒரு நூலிழை மட்டும்தான். பொறுத்திருந்து பார்ப்போம்."

      ஒரு வாரம் கழிந்ததாம். யாரும் எதிர்பாராத விதமாக அந்த வெள்ளைக் குதிரை திடீரென்று வீட்டிற்குத் திரும்பியதாம். அது தனியாக வரவில்லை; காடுகளில் இருந்து இன்னும் ஒரு டஜன் கம்பீரமான காட்டுக்குதிரைகளையும் தன்னுடனேயே கூட்டிக்கொண்டு வந்திருந்ததாம்.
      ​அக்கம் பக்கத்தினருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டதாம்! அவர்கள் முதியவரின் வீட்டிற்கு ஓடி வந்து, "நீங்கள் சொன்னது எவ்வளவு நிஜம்! இது துரதிர்ஷ்டமே இல்லை, ஒரு பெரிய வரம்! இப்போது நீங்கள் பெரும் பணக்காரர் ஆகிவிட்டீர்கள். என்ன ஒரு அலாதியான அதிர்ஷ்டம்!" என்று கொண்டாடினார்களாம்.
      ​முதியவர் அந்தப் புதிய குதிரைகளை அமைதியாகப் பார்த்துவிட்டு, மெல்ல தோள்களை உயர்த்திச் சொன்னாராம்: "அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்? எதையும் இவ்வளவு சீக்கிரம் முடிவு செய்யாதீர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்."

      சில நாட்களுக்குப் பிறகு, முதியவரின் ஒரே மகன் அந்தக் காட்டுக்குதிரைகளைப் பழக்கப்படுத்தத் தொடங்கினானாம். அப்படி ஒரு துடிப்பான குதிரையின் மீது அவன் ஏறிச் சவாரி செய்ய முயன்றபோது, அந்தக் குதிரை மிரண்டு அவனைத் தூக்கி எறிந்துவிட்டதாம். அவன் உயிர் தப்பினானாம், ஆனால் அவனது கால் பலமாக உடைந்து, ஊனமுற்றவனாகிப் போனானாம்.
      ​வழக்கம்போல அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சோக முகத்துடன், "என்ன கொடுமை இது! உங்கள் வயோதிக காலத்தில் உங்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரே மகனின் கால் இப்படி ஊனமாகிவிட்டதே. என்ன ஒரு மோசமான விதியோ!" என்று புலம்பினார்களாம்.
      ​அதற்கும் அந்த முதியவர் சற்றும் பதற்றமின்றி, "துரதிர்ஷ்டமா? அதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்? வாழ்க்கை என்பது பல அத்தியாயங்களைக் கொண்டது. ஒரு பக்கத்தை மட்டும் படித்துவிட்டு முழுக் கதையையும் உங்களால் மதிப்பிட முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்றாராம்.

      ​அடுத்த ஆண்டே, பேரரசருக்கும் அண்டை நாட்டுப் படைத்தளபதிக்கும் இடையே ஒரு கடுமையான போர் வெடித்ததாம். ராணுவ அதிகாரிகள் கிராமம் கிராமமாகச் சென்று, போரிடத் தகுதியுள்ள அனைத்து இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகப் படையில் சேர்த்தார்களாம். அந்தப் போர் ஒரு ரத்தக் களரியாக மாறியதாம்; போர்க்களத்திற்குச் சென்ற பத்து இளைஞர்களில் ஒன்பது பேர் மாண்டார்களாம்.
      ​ஆனால், முதியவரின் மகனோ கால் ஊனமாக இருந்ததால் ராணுவத்தினரால் நிராகரிக்கப்பட்டானாம். அவன் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கி, தன் தந்தைக்கு உதவியாக நிலத்தைக் கவனித்துக் கொண்டானாம்.

      போரில் தங்கள் பிள்ளைகளை இழந்த அக்கம் பக்கத்தினர் கதறி அழுதுகொண்டே முதியவரிடம் வந்து, "உங்கள் மகன் உயிர் பிழைத்துவிட்டான். நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!" என்றார்களாம்.
      ​அதற்கு அந்த முதியவர் தன் வயல்வெளியை அமைதியாகப் பார்த்தபடி மெல்ல முணுமுணுத்தாராம்: "அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? யாருக்குத் தெரியும்?..."

      Zen தரும் பாடம்:

      விதி என்பது தனித்தனியான பரிசுகளோ அல்லது தண்டனைகளோ அல்ல; அது ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட நிகழ்வுகளின் தொடர்ச்சி. விதியின் பலமே அதன் ரகசியத்தில்தான் இருக்கிறது.

      Delete
    5. So மூ. ச. வுக்கும் - சொகுசு ச. வுக்கும் கூட ஒரு இணைக்கும் சந்து உண்டு போலும் 🥹

      Delete
    6. வாவ்!! வாழ்க்கையின் எதார்த்ததை விளக்கிடும் அட்டகாசமான கதை சார்!! இதுபோன்ற Zen கதைகளை அடிக்கடி பதிவிட்டு எங்களைப்போன்ற Gen-Z kids ஐ உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!😍😍😍😍

      Delete
    7. நல்ல கதை சார்... இப்போதைக்கு எனக்கு தேவையான கதையும் கூட ....பத்திரபடுத்தி கொள்கிறேன்...:-)

      Delete

    8. இந்த சூழ்நிலையில் இந்த ஜென் தத்துவம் பொருந்தி வரவில்லையே சார்.

      எடப்....யார் வரும் போது 'ராவணன் மகன் டா* பி ஜி எம் மாதிரி 😊

      தவறுதலாக நடந்த ஒன்றுதானே சார்.

      டெக்ஸ் கதைகள் என்பதால் இரண்டு புது கதைகள் வருவதற்கு யாரும் பெரிய ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்கள்.. விடுபட்ட கதைகள் இரண்டும் அடுத்த வருடம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் வெளியிடப்படத்தான் போகின்றன.

      ஒரு Happy accident என்று சொல்லலாம்

      அலெக்சாண்டர் பிளமிங் ஆய்வகத்தில் நுண்ணுயிரி திரட்டு தட்டை (petri dish) - நச்சு கிருமிகள் அடங்கிய ஒரு கண்ணாடி தட்டு- தவறுதலாக திறந்து வைக்க விட அதன் மேல் படிந்த பூஞ்சையிலிருந்து வெளிப்பட்ட இனம் புரியாத ஒரு பொருள் அந்த நச்சு கிருமிகளை அழித்ததை கண்ணுற்றார். அதுதான் பெனிசிலின் என்பதாக ஒரு செய்தி உலவி வருகிறது.

      இது போல் நமக்கு நடந்ததை

      SERENDIPITY எனச் சொல்லலாம்

      தமிழில் ஆகூழ் இன்பம் அல்லது எதிர்பாராத இன்பப் பேறு 😊.


      Delete
  11. எதுவாக இருந்தாலும் ஓகே சார்.
    டெக்ஸ் கதைகள் வந்தா போதும்.
    தீப்பந்தம்.

    ReplyDelete
  12. நள்ளிரவு வேட்டை இருக்கு தான சார்...

    ReplyDelete
  13. தீப்பந்தம்
    மகிழ்ச்சியில் கூத்தாடுது மனசு

    ReplyDelete
  14. விடுபட்ட கதையை சாவகாசமாக டெக்ஸ் கிளாசிக் ல போட்டுக்கலாம்.😄🤸🤸🤸🤸🤸🕺🕺🕺🕺

    ReplyDelete
  15. நமக்கு டெக்ஸ் வந்தாலே போதும்.... அதுதான் எனக்கு தீபாவளி பொங்கல் ரம்ஜான் பக்ரீத் கிறிஸ்மஸ் 🌹🙏🌹🌹🌹🌹

    ReplyDelete
  16. ஜீலை டெக்ஸ் இல்லையா அய்யா😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  17. புதிய கதைகளை வரவேற்கிறேன் சார்....

    ReplyDelete
  18. பழசோ புதுசோ டெக்ஸ் வந்தா போதும்.கொண்டாட நாங்க ரெடி

    ReplyDelete
  19. "கதை மாறுவது"....
    மறுபதிப்பு கதைகளுக்கான எதிர்பார்ப்புடன் சந்தா கட்டிய + பல மாதங்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து - இப்போது வரவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிக கண்மணிகளுக்கு ஒரு ஏமாற்றம் தான்.
    இவர்களை தவிர்த்து "சோ வாட்" என போகும் மற்ற வாசக நண்பர்களுக்கு "ஓகே கூல்" தான்.
    கதை புதுசோ,பழசோ- "தவிர்க்க முடியாத காரணங்களால்" எனும்போது அதை ஏற்றுக் கொள்வதே சரி எனப் படுகிறது.
    அதிலிலும் டெக்ஸ் எனும்போது "டபுள் ரைட்"
    விடுபட்ட கதைகளை அடுத்த பு வி யில் ஸ்பெஷலாக போட்டால் போயிற்று.

    ஏற்கனவே FEB FIVE க்கு கருத்து கணிப்பு கேட்டபோது (February 22 post) ஒரு அட்டகாசமான டெக்ஸ் கதை ரெடியாக இருப்பதாக சொன்னீர்கள்.
    ஆனால் பெரும்பாலான வாசகர்கள் தேர்வில் அந்த டெக்ஸ் மிஸ்ஸானது.
    ஒரு வேளை அந்த டெக்ஸ் கதை போட முடிந்தால் சந்தோஷமே.

    மற்றபடி,"விடுபட்ட கதைகள் எதெது"என குறிப்பிட்டு ஒரு போஸ்ட் போட்டால் இனிமேல் சந்தா கட்டும் வாசகர்களுக்கும்,
    ஏற்கனவே கட்டிய வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்.

    இந்த மாற்றத்தால் சந்தா வரவு சுணங்காமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் டெக்ஸுக்கே tough தருவது தினப்படி அரங்கேறி வரும் அரசியல் ஆக்ஷன் தான் சார் ! டெக்சாசிலும், அரிஸோனாவிலும் பறக்கும் பொறிகளைக் காட்டிலும் தாராபுரத்தில், ஆண்டிப்பட்டியிலும் அன்றாடம் அரங்கேறும் ரகளைகளே கவனங்களை ஈர்த்து வருகின்றன !

      மற்றபடிக்கு தல பழசா ? புதுசா ? என்பதால் சந்தாக்களில் சுணக்கம் நேராது என்பதே எனது நம்பிக்கை !

      Delete
  20. Hi Editor sir,
    Please try to Write in blog every week .
    I feel missed something if I didn’t see a post.
    This is my personal request sir.

    On Tex books, I am okay for anything as long as Tex is coming sir

    My option is LED bulb

    ReplyDelete
  21. // மாறாக, கதாசிரியர் எந்தப் பக்கம் கையைக் காட்டுகிறார் ? எந்தப் பக்கம் இண்டிகேட்டரைப் போடுகிறார் ? எந்தப் பக்கம் வண்டியை விடுகிறார் ? என்று இந்த வித்தைகளில் கில்லாடியான எனக்கே செமையாகத் தண்ணீர் காட்டியுள்ளார்! //

    அப்படி போடு. உங்களுக்கே தண்ணி காட்டி விட்டார்களா. அப்ப கதை செம கிட் அடிக்க சார்.

    ReplyDelete
  22. LED பல்ப் ஒகே தான். ஆனால் அந்த விடுபட்டுப் போன கிளாசிக் கதைகளை down the line எப்போதேனும் வெளியிட்டால் நன்று.

    ReplyDelete
  23. இது சந்தோசமான விசயம் ஆயிற்றே....எனவே எல்ஈடி பல்பு...தீப்பந்தம்..லாந்தர் எல்லாத்திலியும் ஒரு டஜன் போட்டுக்குங்க சார்....:-)

    ReplyDelete
  24. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  25. LED, மெழுகுவர்த்தி, பெட்ரோமேக்ஸ், சிம்னி விளக்குன்னு எதா இருந்தாலும் ஓகே. வெளிச்சம் (டெக்ஸ்) வந்தாப் போதும்.

    ReplyDelete
  26. நள்ளிரவு வேட்டை விடுபட வேண்டாம் Sir. A top class Tex willer story. I am still having it, but in bad condition n B&W. Eagerly waiting for its color version. Thank You.

    ReplyDelete
  27. இரண்டுமே வேண்டும் சும்மா தக தக என்று எரியட்டும்

    ReplyDelete
  28. My vote is for "All LED bulbs". No பெட்ரோமேக்ஸ்

    ReplyDelete
  29. வெள்ளி நிலாவே விளக்காய் எரிந்தால் கூட போதும்..

    ReplyDelete
  30. LED, OLED, Tube light, Gundu bulb, Focus light. Add any other missing lights too sir 😜😃😜

    ReplyDelete
  31. LED பல்ப் அல்லது தீப்பந்தம் அல்லது லாந்தர் விளக்கு என்றாலும் எனக்கு ஓகே சார் !

    ReplyDelete
  32. தமிழ்நாட்டுல கரண்ட் கட் எப்போ வரும், எப்போ போகும்னு EB-க்கே தெரியாத நிலைமை. இந்த நேரத்துல Betromax Light, LED Light, Rechargeable Lamp எல்லாத்தையும் தாண்டி, ஒரு பழைய குண்டுப் புத்தக நியூஸ்பிரிண்ட் எடிஷன் போட்டீங்கனா அதுதான் உண்மையான Emergency Light சார்!

    கரண்ட் இல்லாத நேரத்துல கூட காமிக்ஸ் படிக்கிற அனுபவம் கிடைக்கும். Bonus-ஆ அந்த பழைய பேப்பர் வாசனையே பாதி கதையை படிச்ச திருப்தி கொடுத்துடும்! 😆

    ReplyDelete
    Replies
    1. பேஷா போட்ரலாமே - இஸ்படர் கதையோடு 💪... நீங்க ரெடியா சாரே?

      Delete
    2. பழைய பேப்பர்லயேவா.....

      Delete
    3. @vijayan தலைவரே, நம்மகிட்ட nalla கதைகள் இருக்கு. Drawing மட்டும் தான் வரல. அதான் Computer Science படிச்சேன். நீங்க ஒரு 'ஓம்' சொல்லுங்க, நம்மகிட்ட ஏகப்பட்ட script-கள் வரிசை கட்டி நிற்குது!" 😆

      Delete
  33. LED பல்ப் ஓகே சார்...

    ReplyDelete
  34. புதிய கதைகளுக்கு எவ்வளவு சார் கட்டனும் ?!

    ReplyDelete
    Replies
    1. எதுவும் கட்ட தேவை நஹி சார் - அதுக்கு பதிலா இது ; இதுக்கு பதிலா அது - என்ற நிலவரம் தான்.

      மிஞ்சிப்போனால் மொழிபெயர்ப்பு மட்டும் கூடுதல் பணி / செலவு - but ஆந்தையன் எழுதும் பட்சத்தில் செலவினம் கட்!

      Delete
    2. சரிங்க சார்,டெக்ஸ் புதுசோ பழசோ எப்போதும் ஜெயிக்கும் குதிரைதான்,உங்கள் சூழலைப் பொறுத்து முடிவெடுங்கள் சார்,வந்தா மட்டும் போதும்...

      Delete
    3. // ஆந்தையன் எழுதும் பட்சத்தில் செலவினம் கட்! //

      சிரிப்பை அடக்க முடியவில்லை சார். அலுவலகத்தில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் சார் 😄😄😄😄😄😀

      Delete
  35. விடுபட்டுப்போன கதைகள் எதுவென்று தெரிந்தால் முடிவு எடுக்க வசதியாக இருக்கும் சார் .. BECAUSE I NEED நள்ளிரவு வேட்டை AND மரண தூதர்கள் .. ONE S LOST AND ONE S IN VERY BAD CONDITION ..

    ReplyDelete
  36. இந்த டெக்ஸ் சந்தாவில் எதேனும் மாற்றம் வரும் என எதிர்பார்த்தேங்க😁😊

    புது கதைகளும் கலந்து வந்தால் மகிழ்ச்சிகள் பல😍😍😍

    சோ எனது பதில்
    +999 "லாந்தர் விளக்குகள்"



    ReplyDelete
  37. Thousand watts LIGHT EMITTING DIODE bulb


    ஆறுமே புதுசா இருந்தாலும் சந்தோசமே.

    ReplyDelete
  38. அம்மா பத்து நாட்கள் முன்பு கோடை மலர் படித்து முடித்தார். கதை முடிந்ததும் டெக்ஸ் அறிவிப்பு பக்கங்களை பார்த்தார், பார்த்தவுடன்

    அம்மா : என்னடி இது
    நான்: அது வந்து...
    அம்மா: பழசா😠
    நான் : பழசுரதான், ஆனால் நாம படிக்காத கதைகள்
    அம்மா: ஹும்ம்ம்....இதென்ன 968 பக்கங்கள் னூ போட்டுருக்கு😠?
    நான்: இல்லைம்மா, ஆறு புத்தகங்களோட மொத்தமா வர பக்கத்தோட நம்பர் அது
    அம்மா: இதென்ன 200 ரூபா😠
    நான்: கலர் ரீபிரிண்ட்ங்க அம்மா 😁😁😁😅😅
    அம்மா: ஹும்ம்ம

    அதன் பின்பு ஒன்றும் சொல்லவில்லை

    இதற்கு முன்னரே புதுசு எதேனும் வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது

    க்ளாசிக் + புதுசு கலந்து வந்தால் சந்தோசம், வீட்டிலும் நான் அடி வாங்கிட வேண்டாம் 😅😅😅

    ReplyDelete
    Replies
    1. வேணாம் வேணாம். எல்லாம பழசுதான் வேணும்.


      ரம்யா அடிவாங்கட்டும்னு இதைச் சொல்லலை மக்களே.

      Delete
    2. ஜமீனய்யா அடி கிடைத்தால் மேச்சேரி-க்கு பஸ் ஏறிடலாம்னு இருக்கேன்

      Delete
    3. எங்கூருக்கு பஸ்ஸே கிடையாது...

      Delete
    4. பஸ் தானே...நான் ஒட்டிக்கிட்டு வரேன்

      Delete
    5. உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன சந்தே..? மூ.சந்தே ?

      டோடாடாடாடாடாடாடாடாய்ங் !

      Delete
    6. மகிழ்ச்சி ரம்யா.

      Delete
    7. பஸ் இல்லாத ஊரில் ஏன்யா இருக்க, ரம்யா ஊர் பக்கம் கால் நடையாக போய் செட்டில் ஆகிடுங்க

      Delete
  39. Editor Sir,
    நேற்று வரை டெக்ஸ் கதைகளுக்கு பணம் கட்டவில்லை (பழைய கதைகள் என்பதால்). ஆனால் உங்களின் இந்த புதிய முடிவால் இன்றே பணம் அனுப்பிவிடுகிறேன். தேங்க்ஸ் சார் !

    ReplyDelete
    Replies
    1. பார்டா .....!!

      அங்கே நம்ம வாட்சப் கம்யூனிட்டியிலே ஒரு டிராக் தனியா ஓடிக்கினு இருக்கு சார் !

      Delete
    2. மகிழ்ச்சி ரட்ஜா

      Delete
  40. LED பல்ப் , தீப்பந்தம், லாந்தர் விளக்கு

    ReplyDelete
  41. பதிவு இல்லா வாரத்தை கடத்த ரொம்ப கடினமாக உள்ளதுங்க, சார்
    பதிவு படிக்க பெரும்பாலனோர் இங்க உள்ளார்கள்
    இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எதேனும் ஒரு வாரம் பதிவுக்கு லீவ் குடுத்துகோங்க
    எங்களுக்கு வாரயிறுதிகளில் பதிவு படித்து பழக்கமாயிடச்சுங்க, கண்டிப்பாக பதிவு வேண்டுங்க, சார்

    ReplyDelete
    Replies
    1. ஆளில்லாத கடையிலே டீ ஆத்தவும் நெம்ப கடினமாக உள்ளதுங்க, மேடம் !

      Delete
    2. ஏதோ பார்த்து செய்யுங்க சார். ரொம்ப வருஷமாக இந்த தளமே பொழுது போக்கு என்று பழகிவிட்டேன் சார்.

      Delete
    3. //ஏதோ பார்த்து செய்யுங்க சார். ரொம்ப வருஷமாக இந்த தளமே பொழுது போக்கு என்று பழகிவிட்டேன் சார்//

      அதே அதே சகோ

      Delete
    4. // பதிவு இல்லா வாரத்தை கடத்த ரொம்ப கடினமாக உள்ளதுங்க, சார்
      பதிவு படிக்க பெரும்பாலனோர் இங்க உள்ளார்கள் // ஆமா சார் பதிவு வரவில்லை என்றால் எதையோ இழந்தது போல இருக்கிறது.

      சும்மா சின்ன பதிவாக இருந்தாலும் சரி.

      Delete
  42. நான் இதுவரை சந்தா கட்டவில்லை. புது டெக்ஸ் கதைகள் இணைகிறது என்றால் சந்தா கட்டுவதில் மிகவும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  43. ❤️❤️❤️👍👍👍🙏🙏.

    ReplyDelete
  44. புதிய கதைகள் வந்தால் மெத்த மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ கோடுவேடு மறந்துட்டேன். தீ பந்தம் எல் இ டி

      Delete
  45. ரெட் கன் வாவ் அட்டகாசமான அறிமுகம். அருமையான ஓவியங்கள், செம்ம திரில்லர் கதை. யூனியன் பசிபிக் அமைக்கும் ரயில்வே தடத்தில் அடுத்தடுத்து நடக்கும் படு கொலைகள்.

    ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே மேலாளர் ஆக இருக்கும் ஜெனரல் டாட்ஜ், தன்னிடம் முன்பு பணியாற்றிய ரெட் கன் (நிக்கோலசை) வர சொல்கிறார்.

    ஒரு புலனாய்வு கதை தான் இது அடுத்தடுத்து ஆராய்ந்து உண்மையை நிக்கோலஸ் நெருங்கும் போது ......

    One of the best thriller I've read recently.

    இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது சொன்னால் ஸ்பாய்லர் ஆகி விடும் ஒரு வாரம் ஆகட்டும் அப்புறம் மறுபடி வருகிறேன்.

    Simply superb Sir

    எனது மதிப்பெண் 10/10

    ReplyDelete
  46. சாம்பல் நிற வானம்

    மேகி காரிசன் தொடரின் கடைசி ஆல்பம். ஏற்கனவே முதல் இரண்டு ஆல்பங்களை படித்து வைத்து விட்டதால், இந்த தம்பி யாரு? அந்த அண்ணன் யாரு? இந்த அக்கா எந்த கதையில் வந்தாங்க என்ற சந்தேகம் ஏதும் இன்றி படிக்க முடிந்தது.

    ஆனால் முதல் இரண்டு கதைகள் போல smooth sailing இல்லை இந்த முறை. ரொம்ப Carefree ஆக இருந்த மேகி, ஒருவர் மீது அன்பு கொள்ளும் போது எப்படி மாறுகிறாள், அதற்காக என்ன செய்கிறாள் என்பது தான் கதை.
    நம்ம எடிட்டர் சார் சொன்னது போல கதைக்குள் கதை, ஒரு குட்டி கதை என்று விறுவிறுப்பாக போய் கொண்டே இருக்கிறது.

    ஷீனா, மேகியை மடக்கி அந்த பணத்தை கேட்கும் போது எடுக்கும் வேகம், அந்த ஆல்பத்தை வைத்துக் கொண்டு மேகி 15 வருடத்துக்கு முந்தைய வழக்கை கண்டு பிடிப்பது, என்று ரொம்பவே சுவாரசியமாக செல்கிறது இந்த கதை.

    இன்னும் பல விஷயங்கள் சொல்லவேண்டும். சில பல experts இங்கே இருக்காங்க அவர்களின் விமர்சனத்துக்கு வெயிட்டிங்.

    One of the best mini சீரிஸ் in our Lion comics.

    இந்த கதையை கேட்டு எடிட்டர் சாரை ஒவ்வொரு வாசகர் சந்திப்பின் போதும் மண்டை தோலியை உரித்தது இன்னும் ஞாபகம் உள்ளது.

    ஒவ்வொரு முறையும் ஒரு பெஞ்ச் மார்க் செட் செய்யறீங்க மொழிபெயர்ப்பில். இது உங்களின் மகுடத்தில் இன்னும் ஒரு வைரக்கல்.

    எனது மதிப்பெண் 10/10.

    குமார் சேலம்

    ReplyDelete
    Replies
    1. //
      இந்த கதையை கேட்டு எடிட்டர் சாரை ஒவ்வொரு வாசகர் சந்திப்பின் போதும் மண்டை தோலியை உரித்தது இன்னும் ஞாபகம் உள்ளது. //

      இது எல்லாம் வேற நடந்துள்ளதா. ஆசிரியர ரொம்ப மிரட்டி இருக்கீங்க 😄

      Delete
  47. Gen Z நள்ளிரவில் மர்ம ஓசை.

    இந்த ஜூ. டி டீம் செம்ம ஃபன் எல்லா குழந்தைகளும் வேறு வேறு work shop செல்ல இவர்கள் 3 பேர் மட்டும் டிடெக்டிவ் ஒர்க்சாப்பில் இருப்பது, வாட்ச்மேன் தாத்தாவின் நாய் ஏன் குண்டாக இருப்பது என்று கண்டு பிடிப்பது, இப்போது அவர்கள் எடுக்கும் அடுத்த case ஜூல்ஸ் இன் குட்டி தம்பி நாதன் அவர்கள் தாத்தா வீட்டில் தூங்கும் போது basementil இருந்து பயங்கர சப்தம் வருகிறது அது என்ன என்று கண்டுபிடிக்க நம்ம டீம் அங்கே போகிறது. செம்ம ஜாலியான கதை. Loved it.

    குமார் சேலம்

    ReplyDelete
    Replies
    1. இது இது தான் உண்மையான காமிக்ஸ் காதல்.

      Delete
  48. பொக்கிசப் பெட்டி நேற்று வந்து விட்டது. இன்னும் டெக்ஸ், ராபின் மட்டுமே பாக்கி.

    கொலை நோக்குப் பார்வையில் இருந்து ராபின் படிக்கவேண்டும். எனவே அது தான் கடைசி இந்த மாத "மெயின் Event".

    ReplyDelete
  49. இந்த மாத டெக்ஸ் ஓவியங்களும் அருமை கதையும் அட்டகாசம். ரொம்பவே சீக்கிரம் முடிந்து விட்டது போல இருந்தது. அட்டகாசமான ஆரம்ப சண்டை அதற்கு பிறகு ஃப்ளாஷ் பேக். இந்த வருடம் வந்த டெக்ஸ்சில் one of the best. இன்று காலை ஆபீசுக்கு பெர்மிஷன் போட்டுவிட்டு படித்தேன் என்றால் பாருங்களேன்.

    ReplyDelete
  50. Received the books yesterday sir. Thank you.

    ReplyDelete
  51. குமாரு புத்தகம் எல்லாம் படிச்சி சுட சுட விமர்சனம் எல்லாம் நீங்க போட்டீங்க, அதனால நீங்க தைரியமா வழக்கமாக கேட்பதை கேட்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சார் இன்று பதிவுக் கிழமை...


      நன்றி பரணி.

      Delete
  52. Red Gun

    எனக்கு மிகவும் பிடித்தது முன் பின் அட்டை படங்கள் தான்.

    முன் அட்டைபடம்
    படத்தில், நாயகனுக்குப் பின்னால் இரயிலின் மீது விழும் பிரம்மாண்டமான கறுப்பு நிழல், அவர் மேல் இருக்கும் ஆபத்தையும், கதையின் மர்மத்தையும் ஒரே சட்டகத்தில் மிக அழகாகக் கடத்துகிறது.

    இரண்டு அட்டைகளிலுமே விளக்குகளின் வெளிச்சம் (Lantern Light) மிகத் தத்ரூபமாகக் கையாளப்பட்டுள்ளது. இருண்ட இரவில், அந்த மஞ்சள் விளக்கு ஒளியும், வானத்தில் தெரியும் அந்திப்பொழுதின் சிவப்பு-கருப்பு மேகங்களும் வெஸ்டர்ன் கதைகளுக்கே உரிய க்ளாசிக் லுக்-ஐத் தருகின்றன. அருமையான அட்டை படங்கள்.

    பின் அட்டை

    இரயில் இன்ஜினின் இரும்புச் சக்கரங்கள், தண்டவாளம், மரக்கட்டைகள் மற்றும் கவ்பாயின் ஆடையில் இருக்கும் மடிப்புகள் வரை மிகத் துல்லியமாக வரைந்துள்ளனர்.

    Main story

    அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து, கிழக்குக் கரையையும் மேற்குக் கரையையும் இணைக்கும் பிரம்மாண்டமான இரயில்வே பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த இரயில்வே கட்டுமானப் பகுதியில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர், ஒரு விலைமாதின் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்ட உடலைக் கண்டெடுக்கிறார். இதே போன்ற சூழ்நிலையில் நடக்கும் இரண்டாவது கொலை இது என்பதால், அங்கு ஏதோ ஒரு தொடர் கொலைகாரன் (Serial Killer) உலவுவது உறுதியாகிறது.

    இந்த மர்மக் கொலைகளைப் புலனாய்வு செய்ய, முன்னாள் இராணுவ லெப்டினன்ட்டாகவும், தற்போது ஒரு தேர்ந்த பவுண்டி ஹண்டராகவும் (Bounty Hunter - பரிசுத்தொகைக்காக குற்றவாளிகளைப் பிடிப்பவர்) வாழும் டெரன்ஸ் நிகோல்ஸ் (Terence Nichols) என்பவரை அதிகாரிகள் வரவழைக்கிறார்கள்.

    துப்பாக்கி கையாளுவதில் வல்லவரான இவருக்கு "ரெட் கன்" (Red Gun) என்றொரு பட்டப்பெயரும் உண்டு. இந்த வழக்கின் உண்மைகளைத் தேடி அவர் பயணிக்கும்போது, அவருடைய சொந்தக் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளும், துரோகங்களும் நிழலாய் வந்து அவரைத் துரத்துகின்றன. அதைத் தாண்டி கொலையாளியைக் கண்டுபிடித்தாரா என்பதே விறுவிறுப்பான கதைக்களம்.

    எனக்கு நெகட்டிவ்வாக பட்டது

    அதிகப்படியான இருள்,இது சில பக்கங்களில் முகபாவனைகளைத் தெளிவாகப் பார்ப்பதில் வாசகர்களுக்குக் சற்றே சிரமத்தை ஏற்படுத்தலாம்.


    வழக்கமான பாணியில் ஒரு புதுமை: பொதுவாக வெஸ்டர்ன் கதைகள் என்றாலே மாடு மேய்ப்பவர்கள், பேங்க் கொள்ளையர்கள், இந்தியர்களுடனான மோதல் என்றுதான் இருக்கும். ஆனால், இதில் ஒரு கொடூரமான தொடர் கொலைகாரனைத் (Serial Killer) தேடும் துப்பறியும் பாணி (Investigative Thriller) கலந்திருப்பதால் கதை ஆரம்பம் முதலே சஸ்பென்ஸாக நகர்கிறது.

    Red Gun is Anti Hero

    ReplyDelete
  53. RED GUN

    இவர் என் கண்களுக்கு ஒரு ஹீரோவாக தெரியவில்லை,
    Anti hero வாங்க தான் தெரிந்தார்.

    ஆண்டி-ஹீரோக்கள் என்பவர்கள் வில்லனும் இல்லை, அதே சமயம் ஒழுக்கத்தின் உச்சமான ஹீரோவும் இல்லை. இவர்களிடம் ஹீரோக்களுக்கு உரிய நற்பண்புகள் (நேர்மை, இரக்கம், தியாகம்) குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும். ஆனால், இவர்கள் செய்யும் காரியத்தின் இறுதி நோக்கம் நல்லதாக இருக்கும்.

    சுபாவம் கோபக்காரர்கள், தங்களுக்கு என்று ஒரு தனி Personal Moral Code கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் சுயநலம், கடந்த காலக் கசப்புகள், அல்லது வஞ்சகம் இருக்கலாம்.

    நீதிக்காகச் சட்டத்தை மீறவும் தயங்க மாட்டார்கள். "அடிக்கு அடி, இரத்தத்திற்கு இரத்தம்" என்பது தான் இவர்களின் பாணி. வில்லன்களைக் கொடூரமாகத் தண்டிக்கவோ அல்லது கொல்லவோ கூடத் தயங்க மாட்டார்கள்.

    இவர்களுடைய நோக்கம் பெரும்பாலும் தனிப்பட்ட பழிவாங்கலாகவோ, அல்லது தங்களுக்குச் சரி என்று படுவதைச் செய்வதாகவோ இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அட செம எளிமையான விளக்கம்.

      Delete
  54. பெட்ரோமாக்ஸ் only

    ReplyDelete
  55. *குருதியின் கூலி...*

    ( வாசிக்காதவர்களும் வாசிக்கலாம்...)


    நீண்ட மாதங்களுக்கு பிறகு ஓர் புது நாயகர் தனது முதல் சாகஸத்திலியே மனதை மிகவும் கவர்ந்து விட்டார் என உறுதிபட சொல்வேன்....ஓர் வன்மேற்கு உலகின் பிண்ணனியில் ஓர் துப்பறியும் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் பாணியை நான் முதன் முறையாக வாசிக்கிறேன்...கதையை வாசிக்க வாசிக்க பல துப்பறியும் நாவல்களை படித்த தாக்கத்தில் இறுதியில் கொலையாளி இவனாகத்தான் இருக்கும்...இல்லை இவனாகதான் இருக்கும் என நினைத்து கொண்டே வாசிக்க இறுதியில் எதையும் எதிர்பாரா க்ளைமேக்ஸ்...குருதியின் கூலி என்ற இந்த காமிக்ஸ் படைப்பு ஓர் அட்டகாசமான காமிக்ஸ் சாகஸத்தை படித்த திருப்தியையும் கொடுத்து ஓர் அட்டகாசமான த்ரில்லர் நாவலை படித்த திருப்தியையும் கொடுத்து உள்ளது...சித்திரங்களும் அட்டைப்படமும் மொழி ஆக்கமும் வெகு சிறப்பு ...கதை முழுவதும் சித்திரங்கள் ஓர் இருண்ட பிண்ணனி கொண்டது போல் இல்லாமல் பகல் நேரத்தில் பளீச் வண்ணத்தை ஓவியர் படைத்து இருக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் வாசிக்கும் பொழுது தோன்றினாலும் இந்த கதை களனுக்கு இது தான் சரி என்றே சிறிது இருண்ட பாணி வண்ணத்தை கடை பிடித்து இருப்பார் என நினைக்கிறேன்... மொத்தத்தில் ரெட் கன்னிற்கு சிவப்பு கம்பளம் விரித்து அவரின் அடுத்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ஓர் அறிமுக நாயகர் தனது முதல் சாகஸத்திலியே மனதை கவர்ந்து அவரின் அடுத்த சாகஸம் எப்பொழுது என ஏங்க வைக்கும் நிலையை நீண்ட மாதங்களுக்கு பிறகு மிஸ்டர் ரெட்கன் ஏற்படுத்தி விட்டார்...


    வெல்கம் டெரன்ஸ் நிகோல் எனும் மிஸ்டர் ரெட் கன்....

    ReplyDelete
    Replies
    1. சூப்பர். பாசிட்டிவ் விமர்சனம்.

      Delete
  56. *இரத்தம் ஓர் நிறமே...*


    மீண்டும் ஓர் வெற்றி நடை பயணத்தில் நமது டெக்ஸ்....வழக்கமான சாரி வழக்கத்தை விட இந்த முறை டெக்ஸ்ன் சாகஸம் ஓர் பழைய அதிரடி டெக்ஸ் சாகஸத்தை வாசிப்பது போல மிக சிறப்பு எனில் கதையின் ஓவிய தரம் இன்னும் இன்னும் அழகு ...டெக்ஸ்..டைகர் மட்டுல்ல சிறுவனாக இருக்கும் கிட்டும் மிக அழகாக சித்திர தரத்தில் படைத்ததுடன் அவர்களுக்கான காட்சிகளும் சிறப்பு...அழகான அட்டைப்படம்...விறுவிறுப்பான டெக்ஸ் சாகஸம்...மிக சிறப்பான ஓவிய தரம்...என அனைத்திலும் டெக்ஸ்ன் மீண்டும் ஓர் வெற்றி படைப்பு *இரத்தம் ஓர் நிறமே..*

    ஒரே குறை எனில் இது நீண்ட சாகஸமாக இல்லாமல் சிறிது நேரத்தில் வாசித்து முடித்து விட்டோமே என்பது மட்டும்தான்... :-)

    ReplyDelete
  57. ஜூனியர் துப்பறியும் கதை படித்து விட்டேன்.

    ReplyDelete