Powered By Blogger

Sunday, April 26, 2026

ஒரு பூனையின் thug life 💪

 நண்பர்களே, 

வணக்கம்.'பொம்ம புக் தானே..? நாலு கார்ட்டூன் இருக்கப் போகுது வேற என்ன? என்பதே நம் உலகுக்கு வெளியே இருக்கக்கூடிய மிஸ்டர் & மிஸஸ் பொதுஜனத்தின் அபிப்பிராயமாக இருக்கக்கூடும்.ஆனால் ஒவ்வொரு ஆல்பத்திலும், தொடரிலும் நாம் தெரிந்துகொள்ள ஒரு வண்டி சமாச்சாரங்கள் புதுசு புதுசா இருப்பதை அவர்களுக்கு யார் புரியச் செய்வதோ?இதோ 54 ஆண்டுகால காமிக்ஸ் பாரம்பரியம் கொண்ட நமக்கே, காத்திருக்கும் ஒரு புதுத் தொடரானது ரகம் ரகமாய் புது விஷயங்களை கற்பிக்க வெயிட்டிங்.

​ஆந்த்ரோபோமார்பிக் (Anthropomorphic) என்றால் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ? அது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அது தெரியாத வார்த்தை என்பது மட்டும் தெரியும்.

​"சரியான நாய்ப்பயல்டா அவன், கிட்டக்க போனாலே கடிச்சு வச்சிடுறான்" என்று பேச்சுவழக்கில் சகஜமாய் புழங்குவது தானே?! 

"கிளி மாதிரி பிள்ளை, குரங்குக்கு வாழ்க்கைப்பட்டிருக்கு." 

"சுத்த ஊமைக்கோட்டான்யா, வாயையே திறக்க மாட்டான்." 

"சும்மா சிங்கம் மாதிரி நடந்து வர்றார் பாருயா நம்ம ஆளு" 

என்பனவெல்லாம் கூட தினப்படி பேச்சுகளின் ஒரு அங்கம் தானே? ரைட், இப்போ அந்த பேச்சு வழக்கினை அப்படியே நிஜமாக்கினால்?​ "இன்னா மேன் சொல்ற?" என்கிறீர்களா? சின்னதாய் உதாரணங்களை நம்ம காமிக்ஸ் லோகத்திலிருந்தே சொல்கிறேனே :

​வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக்கை எடுத்துக்கோங்க.....அல்லது மிக்கி மவுஸை எடுத்துக்கோங்களேன். எந்த ஊரில் ஒரு வாத்தோ, சுண்டெலியோ சொக்காய் மாட்டிக்கிட்டு, பிரட்டும், பர்க்கரும், பீட்சாவும் சாப்பிட்டுக்கிட்டு, கார் ஓட்டிக்கிட்டு லந்து அடிச்சுட்டு திரியுது?முழுக்க முழுக்க மனித இயல்புகளுடன் தானே அவை சித்தரிக்கப்பட்டுள்ளன? ஒரு துடுக்கான,கடுப்பான மனுஷன் ரோலை நம்ம டொனால்ட் டக் செய்கிறது. பரம எதிரிகளான இருவர் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டு, நான் பெருசா? நீ பெருசா?என்ற மோதல்களை நிதமும் நடத்துவதையே டாம் & ஜெர்ரி செய்கின்றன.சுருங்கச் சொன்னால் - முழுக்க முழுக்க மனித இயல்புகளைக் கொண்டே விலங்குகளால் சித்தரிக்கப்படும் சமாச்சாரங்களையே ஆந்த்ரோபோமார்பிக் என்கிறார்கள்.

அந்த 'ஆந்த்ரோபோமார்பிக்' சமாச்சாரத்தின் முழு பரிணாமமும் கதை நெடுக களை கட்டுவதே இந்த புதுத் தொடரின் அச்சாணி. Blacksad!!! 2000 வருஷத்தின் போது இரு ஸ்பானிஷ் படைப்பாளிகளால் பிரெஞ்சு மொழியில் உருவாக்கப்பட்ட தொடர் இது. இங்கே ஒரு பூனையார் தான் ஹீரோ.பொதுவாகவே பஞ்சதந்திரக் கதைகளைத் தாண்டிய பிற்பாடு இந்த பூனைக் கதை, முயல் கதை, ஆமைக் கதை, நரிக்கதை என்பனவற்றிற்கெல்லாம் டாட்டா சொல்லியிருப்போம். ஆனால் இங்கே நாம் சந்திக்கக் காத்திருப்பதோ 1950-களின் ரணகளமானதொரு பிரைவேட் டிடெக்டிவ்.முறைத்துக் கொண்டு நிற்கும் ஒரு கரும்பூனையின் உருவத்தில், அந்நாட்களது அமெரிக்காவின் இருண்ட பக்கங்களை அலசும் ஒரு கிளாசிக் Noir கதாநாயகன் நம்ம ஜான் Blacksad. இரண்டாம் உலக யுத்தப் போர்வீரன், இந்நாளில் தனியார் துப்பறிவாளன். 'எவனாய் இருந்தால் எனக்கென்ன?' என்று ஏறி மிதித்தபடியே போய்க்கொண்டிருக்கும் கேரக்டர். அதே சமயம் சமூகத்தின் மீது ஒரு தீராக் கோபம் கொண்டிருக்கும் கடுவனுமே. நிமிர்ந்த நடை, ஏதோ ஒரு மாமாங்கத்தில் அயர்ன் பண்ணப்பட்ட கோட், விரல்களில் அணையவே செய்யாததொரு 'தம்', கண்கள் முழுக்க 'ஏன்டா இந்த உலகமே இப்படி இருக்குது?' என்ற ரேஞ்சில் வலிகளைத் தேக்கி வைத்திருக்கும் ஒரு தீராத ரணம். இவை சகலத்தின் மறு உருவம் தான் யுவான் கனாலெஸ் (Juan Díaz Canales) மற்றும் யுவாஞ்சோ குவார்னிடோ (Juanjo Guarnido) என்ற ஸ்பானிஷ் ஆற்றலாளர்கள் உருவாக்கியிருக்கும் BlackSad!!

​இங்கே எல்லா பாத்திரங்களுமே மிருகங்கள் தான். இந்தத் தொடரில் -

🥹போலீஸ்காரர்கள் ஓநாய் உருவிலோ, வேட்டை நாய்கள் உருவிலோ சித்தரிக்கப்பட்டிருப்பர். 

🥹ஒரு தவளை திமிர்பிடித்த தொழிலதிபராக கதை நெடுக உலாவலாம். ஒரு முதலை கொடூரமான வில்லனாக இருக்கக்கூடும். 

🥹ஒரு க்யூட்டான முயல் அபலைப் பெண் கேரக்டரை சித்தரிக்கலாம்.

​பாத்திரங்கள் என்னவோ மிருகங்களாக இருந்தாலும், அவை வெளிப்படுத்தும் பேராசை, குரோதம், காதல், ரௌத்திரம், வஞ்சகம் என சகலமுமே அப்படியே இரத்தமும், சதையுமான நம்ம மனுஷப் பயல்களுடையது. 1950-களின் அந்த அமெரிக்கா, அந்தப் புகை படிந்த பார்கள், இருள் சூழ்ந்த தெருமுனைச் சந்துகள், ஊழல் கரைபடிந்த அரசியல் அதிகார மையங்கள் என பக்காவான  Film noir பாணியில், ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்திருக்கக்கூடியதொரு உலகத்தை இந்தத் தொடரில் சித்திரங்களில் கொணர்ந்திருக்கிறார்கள்.





இந்தத் தொடரின் பாத்திரப் படைப்புகள் ஒரு புது ரகமெனில், சித்திரப் பாணிகளோ பிரமிக்கச் செய்யும் இன்னொரு உச்சம். அந்த '50களின் விண்டேஜ் கார்கள், கட்டிடங்கள், அட...காற்றில் மிதக்கும் அந்த சிகரெட் புகை கூட உயிரோட்டத்துடன் மிளிர்வதைக் காணவிருக்கிறோம். அதிலும் நாயகரான ஜான் Blacksad-ன் கண்களிலும், முகத்திலும், ஓவியர் காட்ட மெனக்கெட்டிருக்கும் உணர்ச்சிகள் செம்ம மிரட்டல் பாஸ். And ஒரு பூனைக்கே உரிய வேகம், ஆற்றல், மதியூகம் என இந்த கரும்பூனையார் அந்த டிடெக்டிவ் ரோலில் பேசும் வரிகளில் முழுக்கவே நக்கலும் பகடியும் விரவிக்கிடப்பதால், பேனா பிடிக்கும் நமைச்சலோ இப்போதே விரல்களில்.

​இந்தத் தொடரில் இதுவரை ஏழு ஆல்பங்கள் மாத்திரமே உண்டு. முதல் ஐந்து ஆல்பங்களும் ஒன்ஷாட்ஸ். ஆல்பம் 6 மற்றும் 7 சேர்ந்து ஒற்றைக் கதையாகிவிடும். ஐம்பதோ - நூறோ கதைகலெல்லாம் கொண்டுள்ள நெடும் தொடர்களின் பக்கமாய் தலைவைத்துப் படுக்கவே இப்போதெல்லாம் பயந்து பயந்து வரும் காலகட்டத்தில், இது மாதிரியான crisp தொடர்கள், ஒரு பெரும் நிம்மதியை தந்துவிடுகின்றன.

'​என்ன மேன் பூனைங்கிற ஓநாய்ங்கிற முதலைங்கிற?எங்களை பார்த்தா காக்கா வடை கேட்கிற மக்கா மாதிரியா தெரியுது என்று கேட்கிறீர்களா? No worries folks, இது காமிக்ஸ் உலகமே கொண்டாடி வரும் ஒரு மாஸ்டர்பீஸாகும்.காமிக்ஸ் உலகின் ஆஸ்கார் என கருதப்படும் "ஈஸ்னர் விருதை" இது பலமுறை தட்டிச் சென்றிருக்கிறது. அது மட்டுமன்றி பிரான்சின் ஆங்குலேம் திருவிழாவிலும் விருதுகளை குவித்து விமர்சகர்களை வியக்க வைத்துள்ளது. இதுவரை 27க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் இந்தக் கடுவன் பூனை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.​ Tamil might just be language 28!! இங்கே நாம் காணவிருப்பது வெறும் ஆக்சன் கதைகளை மட்டுமல்ல - ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியலையும், மனித உளவியலின் பரிமாணங்களையும் சேர்த்தே தான். தூரிகையில் மாயஜாலம் கற்பனைகளில் ஒரு புது சுவாசம் என்ற அடையாளங்களோடு தமிழுக்கு BlackSad வரவிருப்பதே ஒரு தனிக்கதை!

​நமது மறுவருகை துவங்கிய ஒன்றோ இரண்டோ ஆண்டுகளுக்கு பின்னேயே நண்பர் சிவகாசி சௌந்தர் இந்தத் தொடரைப் போட்டால் என்ன சார்? என்று என்னிடம் கேட்டிருந்தது நினைவுள்ளது. Blacksad தொடர் உருவான 2000-த்தின் துவக்கத்திலேயே இது பற்றி நமக்குத் தெரியும் தான்.அப்போதே ஆர்வக்கோளாறில் கோப்புகளை வாங்கிப் பார்த்துவிட்டு, நமது b&w நியூஸ் பிரிண்ட் முயற்சிகளுக்கு இது சுட்டுப்போட்டாலும் சுகப்படாது என்று ஓரம் கட்டியிருந்ததுமே நினைவிருந்தது. And கலரில், ஆர்ட் பேப்பரில், உயர்தரத்தில் மறுவருகை செய்தான பின்பும் கூட அந்த துவக்கக் காலகட்டங்களில், BlackSad போன்றதொரு மாறுபட்ட ரசனைக்கு நாம் தயாராகி இருப்பதாக எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. So சிரித்தபடிக்கே "பார்க்கலாம் சௌந்தர்" என்று தாண்டிச் சென்றிருந்தேன்.

​ஆனால் தாத்தாக்களிலிருந்து, ஏலியனின் ஒரு தோழனின் கதை வரை - ஒரு சிறு அணியாவது ரசிக்கும் இந்தத் தருணத்தில் BlackSad நெருடல்களைத் தராது என்ற நம்பிக்கை எனக்குத் துளிர்விட்டது.And வித்தியாசமான கதைகளை "திசைகள் நான்கு" என்றதொரு தனி லேபிலில் வெளியிட்டால் தப்பில்லை என்ற எண்ணமும் 2025-ன் இறுதிப் பகுதியில் எனக்குத் தோன்றிய சமயம், அதனில் வெளியிட முதல் இதழாக இந்த பூனையாரையே தேர்வு செய்திருந்தேன்.

​And இதற்கான உரிமைகளை அன்றைக்கே வாங்கிட கர்ணங்களை அடிக்கவும் ஆரம்பித்திருந்தோம். ஆனால் ஐரோப்பாவின் ஆகப் பிரபல புதுயுகப் படைப்புகளுள் ஒன்றான இந்தத் தொடரின் படைப்பாளிகள் அத்தனை சுலபத்தில் இசைவினைத் தெரிவிக்கவில்லை. இப்போதெல்லாம் ஐந்து, ஆறு மாதங்கள் என்பதே நமது பயணத்தில் ஐந்து ஆறு வருடங்களுக்கு இணையான மாற்றங்களைக் கண்ணில் காட்டும் வீரியம் கொண்டவைகளாக இருப்பதால் 'பசக்' என பிரேக் அடித்து, 'திசைகள் நான்கும் நாலு திசைகளிலேயே தொடரட்டும் ; கொஞ்ச நாட்களுக்காவது விஷப்பரீட்சை no என்றபடிக்கே பூனையார் சார்ந்த முயற்சிகளை பரணுக்கு ஏற்றி விட்டிருந்தேன் - இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று..! 

ஆனால் விதிதான் செம லந்து பார்ட்டியாச்சே நாம் அப்பாலிக்கா பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருக்கும் தருணத்தில் - "அது என்ன அப்பாலிக்கா? இப்போவே- இன்னைக்கே நாங்க ரெடி!" என்று படைப்பாளர்களிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது - போன வாரத்தில். ஆகா நாம சும்மா இருப்போம் என்று நினைத்தாலும் விதி விடாது போல் இருக்கே...? என்ற எண்ணத்தில், மண்டையைச் சொறிந்தேன்! "ரைட்டு, எத்தனையோ கர்ணங்களை அடித்தாச்சு... இதை மட்டும் எதுக்கு விட்டு வைப்பானேன்?" என்ற எண்ணத்தில் மறுநொடியே உரிமைகளை வாங்கியும் போட்டாச்சு. 

And so ஒரு iconic ஐரோப்பியத் தொடர் தமிழ் பேச all set. இனி இவரை "தனித்தடம் சைட் தடம்...ஓரத்தடம்... ஒரகடம்.." என்றெல்லாம் விஷப்பரீட்சைகளில் இறக்கிவிட்டு, துவங்கும் முன்பே சாத்து வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தொலைக்காது, ரெகுலர் சந்தாவிலேயே எப்படியேனும் நுழைத்து விடுவது என்ற தீர்மானத்தில் உள்ளேன். So ஒரு பூனையாரோடு பயணம் பண்ண தயாராகிக் கொள்ளுங்கள் folks! 

இங்கே வித்தியாசமானதொரு இக்கட்டும் நமக்கு : முகம் நிறைய சோகத்துடன் கடுவன் பூனையாய் வலம் வரும் ஜான் Blacksad - தமிழில் பெயர் மாற்றினால் "பிளாக் சேட்" என்று மார்வாடி ரேஞ்சுக்குப் போய் விடுகிறது. "சாட்" என்று எழுதினாலும்  அதுவுமே சரியான பொருள்பட ஒலிக்கத் தவறுகிறது. நம்மூரில் தான் "சாட் " என்றால் இப்போதெல்லாம் பானி பூரி தானே? So "ஈயை அப்படியே தான் அடிப்பேன்" என்ற பிடிவாதம் காட்டாமல், புரிதலுக்கும், தமிழ் உச்சரிப்புகளுக்கும் சுகப்படும் விதத்தில் இவருக்கான பெயரை துளியூண்டு மாற்றினால் தப்பில்லை என்ற எண்ணத்திலும் இருக்கிறேன். Of course "நாளைக்கே உன் தலையில் நானூறு இடி விழ" என்று ஆர்வலர்களின் சாபங்கள் படையெடுக்கக்கூடும் என்பது புரியாமல் இல்லை. But ஆபரேஷன் சக்சஸ் - பேஷன்ட் போயிண்டே என்ற கதையாவதில் எனக்கு ஒருபோதும் இசைவு லேது. So Blacksad வருகிறார் - சற்றே வித்தியாசத்துடன்! எங்கே? எப்போது?என்பதை இயன்றமட்டிலும் விரைவிலேயே அறிவிப்பேன். ஆக ஒரு பூனைக்கு மணிகட்டும் நேரம் வெகு விரைவில் புலர உள்ளது. and இந்தப் பூனையோ ஒரு தக் லைஃப் பார்ட்டி என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு நடையைக் கட்டுகிறேன் folks.

காத்திருக்கும் மே 1-ஆம் தேதிக்கு ஒரு ஜாலியான பதிவில் சந்திக்கிறேன். Bye until then & have a wonderful Sunday!! See you around all!

74 comments:

  1. After a long back.. 😘😘👍💐Got First place💐😄👍😘🙏

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே.. 🙏🙏

    ReplyDelete
  3. வணக்கம் 🙏 நான் முதல் முறையாக

    ReplyDelete
  4. வெகு நாட்களுக்கு பின் புதிய ஹீரோ,தொடர்,வரவேற்கிறோம்.

    ReplyDelete
  5. Mr.Detective அல்லது
    Mr.கடுவன்.. The detective..🐱

    இந்த பெயர்கள் ஓகே வா சார் 😘

    ReplyDelete
  6. அதிரடி வீரர் ஹெர்குலீஸ் மாதிரி

    *அதிரடி கடுவன் 🐱 Mr. ஜான்*

    இது கூட nalladhaan இருக்கு சார் 👍😘

    ReplyDelete
  7. Sad இல்லாம ஜான் பிளாக் நல்லா இருக்குமே சார்

    ReplyDelete
  8. வாப்பா ப்ளாக்கேட்..

    ப்ளாக்சேடை விட நாம ப்ளாக்கேட்னே கூப்பிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதை வழிமொழிகிறேன். பிளாக் கேட் - பொருத்தமாக இருக்கிறது

      Delete
  9. ஆஹா... வாழ்த்துக்கள் sir... இந்த john black ஐ pintrest இல் பார்த்து பிரமித்தேன் sir... போட்டு விடுங்க sir... இதெல்லாம் தமிழில் நம்ம காமிக்ஸ் ல வருமா..? என்று பெருமூச்சு விட்டேன்... மீண்டும் வாழ்த்துக்கள் sir.. மனம் கனிந்த நன்றி.. ❤️❤️❤️❤️🙏🙏🙏👍👍👍

    ReplyDelete
  10. Black sad... பேர் super ங்க sir.. ❤️👍

    ReplyDelete
  11. ஞாயிறு காலை வணக்கம் அனைவருக்கும்.

    🙏🙏🙏

    ReplyDelete
  12. கரீஷ் வருகிறாரா... வரட்டும்.. வரட்டும்...

    ReplyDelete
  13. ஆர்வமுடன் காத்திருக்கிறேன் சார்....இந்த புது பாணி நாயகருக்கு.(..?)

    ReplyDelete
  14. சார் அருமையான புத்தகம்...


    But kindly try to publish them with same names..

    நமக்கு ஒரு உலக அரங்கிலான அங்கீகாரம் கிடைக்க அதுவே சிறந்தது...

    We are not in Pre internet days to name Tiger and Johnny for Blueberry and Ricochet.

    please Kindly consider this...

    Titin didn't allow us to change even an full stop or comma, thats the best way forward..

    Shudder to think Tintin with a name like குடுமி டாமி or something like that..

    Need Blacksad as Blacksad.

    ReplyDelete
    Replies
    1. றிகொஷே ஓங்கிக் குத்தினார்....! "

      "இந்தக் கொலையை யார் பண்ணியிருப்பாங்க ஜானி ? .

      ரண்டுக்கும் இன்றுமே வித்தியாசம் உண்டு தான் சார்....40 ஆண்டுகளுக்கு முன்னே, ஜானி அறிமுகமான நாட்களை யோசித்துப் பாருங்களேன் !

      Andy Capp என்ற பெயரை சும்மா அப்டியே தமிழில் எழுதுங்களேன் சார்? ஆண்டி என்பீர்களா? ஆன்டி என்பீர்களா? அன்டி?

      Certain western names & pronounciations in English just don't sync well with Tamil sir and they are best left alone!

      Delete
    2. Just Ric would have been enough sir. Ragasiya Veerar Ric-nu adichu vitrundeenganna padichiruppome ;-)

      Delete
    3. இன்னும் ஒண்ணும் கெட்டுப் போகலியே சார் ; மெகா சீரியல்களில் சொல்வது போல, "இன்று முதல் இவர் ரிப்போர்ட்டர் ஜானி நஹி... ரகசிய வீரர் ரிக் " என்று ஒரு card போட்டுப்புட்டா போச்சு 💪

      Delete
  15. //ரெகுலர் சந்தாவிலேயே எப்படியேனும் நுழைத்து விடுவது என்ற தீர்மானத்தில் உள்ளேன்//

    அருமை சார் 😊😍

    ReplyDelete
  16. வாழ்த்துகள் சார்💐💐💐

    ReplyDelete
  17. //So "ஈயை அப்படியே தான் அடிப்பேன்" என்ற பிடிவாதம் காட்டாமல், புரிதலுக்கும், தமிழ் உச்சரிப்புகளுக்கும் சுகப்படும் விதத்தில் இவருக்கான பெயரை துளியூண்டு மாற்றினால் தப்பில்லை என்ற எண்ணத்திலும் இருக்கிறேன்//


    Warm welcome to the decision Sir

    ReplyDelete
  18. Blacksad என சகோதரர்கள் கண்டுபிடித்து சொனனதும் நான்கு பக்கங்கள் படித்து பார்த்தேன், வசனங்கள் ஈர்த்து விட்டன, கதையும் அட்டகாசப்படத்தி விடும் என்பதை புரிய வைத்தது.

    ஆவலுடன் காத்திக்கிறேன், சார்

    ReplyDelete
    Replies
    1. சித்திரங்கள் & கலரிங் தாங்கள் கூறியது போல் டக்கர்

      அதனை தமிழில் தரிசித்திட வெயிடிங்

      Delete
    2. // சித்திரங்கள் & கலரிங் தாங்கள் கூறியது போல் டக்கர் //

      இல்ல ரம்யா, இப்படி சொல்லனும் "டாப் டக்கர்"

      Delete
  19. இந்த தொடர் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதுங்க, 100% வெற்றி பெற வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  20. //காத்திருக்கும் மே 1-ஆம் தேதிக்கு ஒரு ஜாலியான பதிவில் சந்திக்கிறேன்//


    மே மேளாவிற்கு வெயிடிங் சார்😁

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. // ​இந்தத் தொடரில் இதுவரை ஏழு ஆல்பங்கள் மாத்திரமே உண்டு. முதல் ஐந்து ஆல்பங்களும் ஒன்ஷாட்ஸ். ஆல்பம் 6 மற்றும் 7 சேர்ந்து ஒற்றைக் கதையாகிவிடும். //

    எனக்கு வேண்டும்! இது போன்ற கதைகள் ரொம்ப பிடிக்கும்! சீக்கிரம் தமிழில் கொடுங்கள் சார்!

    ReplyDelete
  23. எனது விருப்பம் இவர் ஒரிஜினல் பெயரில் வரட்டும்!

    நீங்க என்ன பேர் வேண்டும் என்றாலும் வைத்துக் கொளுங்க, முக்கியமான ஒன்று ஆனால் இவர் சீக்கிரம் வர வேண்டும், முடிந்தால் இந்த வருடமே வேண்டும்! அவ்வளவு தான்!

    ReplyDelete
  24. Superb information

    We are waiting. Consider atleast 3 books iper year

    ReplyDelete
  25. // இது காமிக்ஸ் உலகமே கொண்டாடி வரும் ஒரு மாஸ்டர்பீஸாகும்.காமிக்ஸ் உலகின் ஆஸ்கார் என கருதப்படும் "ஈஸ்னர் விருதை" இது பலமுறை தட்டிச் சென்றிருக்கிறது. அது மட்டுமன்றி பிரான்சின் ஆங்குலேம் திருவிழாவிலும் விருதுகளை குவித்து விமர்சகர்களை வியக்க வைத்துள்ளது. //

    அட! காமிக்ஸ்க்கு இப்படி எல்லாம் ஒரு விருது உண்டா சார்! ரொம்ப மகிழ்ச்சி! சீக்கிரம் இவரை தமிழ் பேச வைக்கிற வேலைய ஆரம்பிங்க சார்.

    ReplyDelete
  26. Zootopia movie மாதிரி கலெக்ஷன் ஐயா...

    தமிழ் பேசட்டும்...

    கரும்பூனையாரின் சாகசங்களுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  27. // Blacksad வருகிறார் - சற்றே வித்தியாசத்துடன்! எங்கே? எப்போது?என்பதை இயன்றமட்டிலும் விரைவிலேயே அறிவிப்பேன். //

    I'm on the edge of my seat sir.

    ReplyDelete
  28. Mr Miyaav endru vaikkavum - Dinamalar kisugisu kanakkaa superaa irukkum ;-)

    ReplyDelete
  29. BTW Warm welcome to Black Sad sir - yes and it should be in main line subscription.

    ReplyDelete
  30. ///// இது காமிக்ஸ் உலகமே கொண்டாடி வரும் ஒரு மாஸ்டர்பீஸாகும்.காமிக்ஸ் உலகின் ஆஸ்கார் என கருதப்படும் "ஈஸ்னர் விருதை" இது பலமுறை தட்டிச் சென்றிருக்கிறது. அது மட்டுமன்றி பிரான்சின் ஆங்குலேம் திருவிழாவிலும் விருதுகளை குவித்து விமர்சகர்களை வியக்க வைத்துள்ளது. ////

    சூப்பர் சார்! அப்போ கதை கண்டிப்பா பட்டைய கிளப்பும் ன்றது உறுதி!!😍😍😍😍

    ReplyDelete
  31. மரணம் மறந்த மம்மி...!


    இந்த மாதம் வந்த டெக்ஸ் வில்லரின் சாகசம் வாவ் சொல்ல வைக்கிறது.

    ஆக்ஷன் ஹீரோவான டெக்ஸ் வில்லரின், அமானுஷ்ய கதைகள் என்றாவது ஒரு நாள் தான் வரும். வரும் போது பட்டாசு கிளப்பும். அப்படிப்பட்ட ஒரு கதையே இது!


    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அமெரிக்க மண்ணில் செவ்விந்தியர்களை தன்னுடைய மாயாஜால சக்திகளால் அடிமைப் படுத்தி வைத்திருந்த mummified வில்லனை, மோரிஸ்கோவின் புண்ணியத்தில் டெக்சும், கார்சனும் எதிர்கொள்கிறார்கள்.

    மாந்திரீக, மருத்துவ நண்பர் மோரிஸ்கோவை குசலம் விசாரிக்க கடும் - சுடும் பாலைவனத்தைக் கடந்து வரும் டெக்ஸ், கார்சன் ஜோடி, அந்த பலவனத்திற்கே tough கொடுக்கும் கிராமத்தை அடைகிறார்கள். வரவேற்க ஈ, எறும்பு கூட இல்லாமல் சவக்களையோடு வெறிச்சிட்டிருக்கும் கிராமத்தில், சுக்கா ரோஸ்ட்டை எதிர்பார்த்த கார்சனுக்குத் தான் இதில் பெருத்த ஏமாற்றம்.

    பகலில் மம்மி, இரவில் மந்திரவாதி, அடிமைகளான செவ்விந்தியர்கள், வசியம் செய்யப்பட்ட ஏவளாளிகள் என்ற கூட்டணியானது வஞ்சிக்கப்பட்ட கிராமவாசிகள், தோள் கொடுக்கும் நண்பர்கள், பயமில்லா போராளிகள் என்னும் வேறொரு கூட்டணியுடன் மோதும் கதை இது...

    இரவில் ஷாப்திகளுடன் தொடங்கும் போராட்டம், இரவும் கவிழும் முன் திட்டமிடுவதில் முடிகிறது.


    டெக்ஸ் வில்லர் மற்றும் கார்சனின் துப்பாக்கிகளுக்கு இணையாக ஜொலிக்கும் மோரிஸ்கோவின் மதியோகம் கதைக்கு வலு சேர்க்க, அவருக்கு வலு சேர்க்கிறார் இடுங்கிய கண் யூசேபியா!

    நீண்ட நாட்களுக்குப் பிறகு விமர்சனம் எழுத வாய்ப்பளித்த கதை!

    அருமை!

    9.5/10
    .

    ReplyDelete
  32. "நீண்டநாட்களுக்குப்பிறகு"விமர்சனத்தில் உங்கள்பேரை பார்த்தவுடன் நினைத்தேன் . நீங்களே சொல்லிட்டா எப்படி?

    ReplyDelete
  33. Blacksad பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சரி Valerian comic எப்போது கொண்டு வருவீங்க சார் 😀😂

    ReplyDelete
    Replies
    1. இல்லாததை தேடாமல், இருக்கதை ரசிக்கிற பக்குவம் இனிகோவுக்கு வர்றதொரு தூரத்து தினத்தில்!

      Delete
  34. Hi Editor sir,
    Thanks for bringing blacksad. The explanation you give about blacksad is very nice sir. Eagerly waiting for blacksad

    ReplyDelete
  35. //அந்த டிடெக்டிவ் ரோலில் பேசும் வரிகளில் முழுக்கவே நக்கலும் பகடியும் விரவிக்கிடப்பதால், பேனா பிடிக்கும் நமைச்சலோ இப்போதே விரல்களில்//

    அட்டகாசப்படித்திட ரெடியாக உள்ளீர்கள் , சார்

    ReplyDelete
  36. கோடை விடுமுறையில் மாங்கா சீசன் வந்திட, அல்போன்சோ மாம்பழத்தை கடிக்கும் போது வந்த சிந்தனை —
    சார், நீங்கள் ஏன் மாங்காவை தமிழில் மொழிபெயர்க்க கூடாது?
    இதனால் மேலும் Gen Z இளைஞர்களை ஈர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு தான் பழம் பழுக்கிற வரைக்கும் காத்திருந்து சாப்புடணும்னு சொல்றது!

      Delete
  37. ஜான் பிளாக் ஸாட்... வரவேற்கிறேன்

    ReplyDelete
  38. மொத்தமாக ஏழு கதைகளையும் ஒரே தொகுப்பாக போட்டுவிடுங்க சார்... நிறைய நாட்கள் காத்திருக்காமல் மொத்தமாக ரசித்து விடலாம்... புதிய கதைகள் வரும் போது அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்...

    ReplyDelete
  39. சித்திர தரம் நீங்கள் கூறியபடி அருமையாக உள்ளன. பூனையாரை வரவேற்க நகல் ரெடி.

    ReplyDelete