Powered By Blogger

Sunday, February 16, 2025

தோளில் ஒரு கரம்...!

 நண்பர்களே, 

வணக்கம். எப்போவாச்சும் ; ரொம்ப ரொம்ப எப்போவாச்சும் - ஒரு நாளின் சகல நொடிகளிலும் பெரும் தேவன் மனிடோ நமது தோள்களில் கைபோட்டபடிக்கே நம்மோடு நட்பாய், வாஞ்சையாய், ஜோக்கடித்துக் கொண்டே பொழுதைக் கடத்துவது போல் உணர்ந்திட முடியும் ! கனவில் மட்டுமே சாத்தியமாகிடும்  சமாச்சாரங்கள் மெய்யாலுமே அந்த நாளில் வரிசை கட்டி அரங்கேறிடும் ! வீட்டுக்காரம்மாவோடு கடைவீதிக்கு வண்டியில் போறீங்களா ? மிஞ்சியிருக்கும் அந்த ஒரேயொரு பார்க்கிங் ஸ்பாட் அன்றைக்கு நமக்கே நமக்காய் கிடைத்து விடும் ! முக்கியமான தத்கல் டிக்கெட் போட காலை பதினோரு மணிக்கு மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, payment gateway-ல் சக்கரம் சுத்திக்கினே இருந்து உசிரை வாங்கக்கூடாதே என்று இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு முயற்சிக்கும் போது, லொஜக்கென ரெண்டுமே லோயர் பெர்த்தாக கிடைத்து விடும் !முக்கியமானதொரு மேட்ச் பார்க்க நினைக்கும் அந்த ராப்பொழுதில் பசங்க நேரத்துக்கே தூங்கிப்புடுவாங்க...."வெளியே போவோமாடா  மாப்பிள்ளைன்னு ?" கேட்டு நண்பர்களும் அன்னிக்கி மொக்கை போட மாட்டாங்க ! காமிக்ஸ் கூரியர் வந்தால் கூட வீட்டம்மிணி பழிப்பு காட்டாம, புன்சிரிப்போட கடந்தே போயிடுவாங்க ! அட, பெருமூச்சு விட்டபடிக்கே ஸ்ரீலீலாவை இன்ஸடாவிலே பார்த்துக் கிடக்கும் அங்குசாமிகளுக்குக் கூட, அகஸ்மாத்தா பஜார் பக்கமா போறச்சே, நகைக்கடைத் திறப்புக்கென  வந்திருக்கும்  அந்த அம்மணியை தரிசிக்க அன்னிக்கு சாத்தியப்படும்னா பார்த்துக்கோங்களேன்  ! என்ன ஒரே சிக்கல் - அந்த மாதிரியான நாட்களெல்லாம் ஆயுசுக்கு ஒண்ணோ, ரெண்டோ, தபாக்கள் மாத்திரமே வாய்த்திடும் ! 

And அத்தகையதொரு தினத்தை நம்ம ஆந்தையனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை  வழங்குவோமென்று ஏஜிர் தேவன் உறையும் அஸ்கார்டில் தீர்மானம் ஆகியது போலும் ; ஒரு பெரும் கனவாய் இன்றைய பொழுதே எனக்கு ஓட்டமெடுத்துள்ளது !! Phewwwwww !!

எல்லாம் ஆரம்பித்தது ஒரு பத்து நாட்களுக்கு முன்னே ..... !

எங்களது துடிப்பான மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பினில் ராஜபாளையத்தில் முதல் "காமிக்ஸ் லைப்ரரி" துளிர் விடவுள்ளது என்ற சேதியுடன் நம்மிடம் புக்ஸ் கொள்முதல் செய்திட சில நன்கொடையாளர்கள் அணுகியிருந்தனர் ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த முயற்சியின் முழுப்பரிமாணமும் எனக்கு அந்த நொடியில் புரிந்திருக்கவில்லை. டிஸ்கவுண்ட் எவ்வளவு கொடுக்கலாம் ? ; எந்தெந்த புக்ஸ் அனுப்ப சரிப்படும் ? என்பதோடு நான் ஒதுங்கிக் கொண்டு நம்ம front office பெண்களிடம் மீதப் பொறுப்புகளை விட்டிருந்தேன் ! ஆனால் லைப்ரரி துவங்கிய ஓரிரு நாட்களிலேயே எங்கெங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வரத்துவங்கின - தொடரவுள்ள ஞாயிறன்று ஒரு "சித்திரக்கதை விழா" நடைபெறவுள்ளது & அதனில் நாமும் கலந்து கொள்ள இயலுமா ? என்ற கோரிக்கையோடு ! இந்த காமிக்ஸ் நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும்  பங்கு வகித்திருந்த எழுத்தாளர் திரு.S.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை ; பெரும் காமிக்ஸ் காதலரும், 23-ம் புலிக்கேசி திரைப்படத்தின்  டைரெக்டருமான திரு.சிம்புதேவன் அவர்கள் & சென்னையின் Fine arts College -ஐ சார்ந்த மூத்த பேராசிரியர் சிறப்பு விருந்தினர்கள் என்றும் தெரியப்படுத்தினார்கள் ! 'சரிங்க...ஆனா நான் என்ன பேசணும் ? எந்தத் தலைப்பிலே பேசணும் ?' என்று தயங்கியபடியே கேட்டேன் ! "காமிக்ஸ் பதிப்புலகில் உங்களின் அனுபவங்கள் பற்றி !" என்றார்கள் !

சரி, ரைட்டு...வர்றேன் சார் என்று சொல்லி விட்டு போனை வைத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இன்னொரு அழைப்பு : "அன்னிக்கி ஒரு சின்ன காமிக்ஸ் கண்காட்சி மாறியும் அங்கே அமைக்க முடியுமா ?" என்ற வினவல் ! "திருவண்ணாமலையில் தற்சமயமா ஒரு புத்தக விழா ஓடிக்கிட்டிருக்கே சார் ; so ஆபீசில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை & ஒரு ஞாயிற்றுக்கிழமையில்  பெண்பிள்ளைகளை ராஜபாளையத்துக்கு அழைத்து வருவதும் முடியுமா ? என்று தெரியவில்லை !" என்று ஜகா வாங்கினேன் ! "முயற்சி பண்ணிப் பாருங்க சார் - டீச்சர்களும், பெற்றோர்களுமாய் கிட்டத்தட்ட 300  to 400  பேர் வரக்கூடிய பொழுது ! உங்க புக்ஸ் இருந்தால் சிறப்பாக இருக்கும்" என்றார் !! அப்புறமும் தட்ட முடியுமா என்ன - எஞ்சியிருந்த 2 front desk பெண்களை அரை நாளுக்கு மட்டும் வூட்டில் பெர்மிஷன் கோரச்செய்து, அங்கு display செய்திட ஏதுவான புக்ஸ்களையும் பேக் பண்ண சொல்லியிருந்தேன் ! 

"ரைட்டு...அது ஆச்சு ! ஆனா மேடையில் என்ன பேசுறது ? தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற எங்களது மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியரையும், எழுத்துலக ஜாம்பவான் திரு.எஸ்ரா.அவர்களையும், பற்றாக்குறைக்கு திரைப்பட டைரெக்டரையும், வைத்துக் கொண்டு தத்துப் பித்தென்று உளறிடப்படாதே !!" என்ற டர் தொற்றிக் கொண்டது ! பற்றாக்குறைக்கு ஆசிரியப் பெருமக்கள் & மாவட்ட நிர்வாக ஆளுமைகளும் !!

மேடையில் டீ ஆத்துவது என்னவோ நமக்குப் புதிதல்ல தான் ; ஆனால் இதுவரைக்குமான அந்த அனுபவங்கள் சகலமுமே காமிக்ஸில் ஊறிப் போன நம்ம நண்பர்கள் வட்டத்தினுள் மாத்திரமே அல்லவா ? So அங்கே பெருசாய் டென்ஷன் லேது ! அப்டியே சொதப்பினாலும், வக்கீல் வண்டுமுருகன் பாணியில் "உங்களுக்குத் தெரியாத நீதியில்லை ; தெரியாத சட்டமில்லை யுவர் ஆனர் ! நீங்களா பார்த்து பண்ணிக்கோங்க !"  என்று ஜகா வாங்கிக்கொள்ளும் குஷன் அங்கு எப்போதுமே உண்டு ! ஆனால்  காமிக்ஸை கண்ணிலேயே பார்த்திருக்கா ஒரு பெரும் திரளின் முன்னே முதன்முறையாகப் பேசணும் & நமது குழுமத்துக்கு மாத்திரமன்றி, காமிக்ஸ் எனும் ரசனைக்கே அங்கு நானொரு பிரதிநிதியாகி நிற்க வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது புரிந்தது ! நான்பாட்டுக்கு  மேடையில் ஒரு சூர மொக்கையை நிகழ்த்தி விட்டு வந்தால், "போங்கடாடே...உங்க காமிக்ஸும் இப்டி தானே இருக்கும் ?" என்று அந்த ஜனம் திரும்பிக்கூடப் பார்க்காது நகர்ந்து விடுமே ?! So இந்த தபா மனசிலே தோணுறதை ஜாலியா பேசுறதுலாம் சுகப்படாது ; உருப்படியாய் ஒரு உரையினை தயார் பண்ணனும் என்று நினைத்துக் கொண்டேன் ! ஆனால் ---ஆனால் ---நாம நினைப்பதெல்லாம் அரங்கேறும் நாட்கள் தான் சொற்பமோ, சொற்பம் தானே ?! பல்வேறு அதிமுக்கிய பெர்சனல் சமாச்சாரங்கள் குறுக்கிட, வேறு எதற்குமே நேரம் ஒதுக்க முடியா அசாத்திய நெருக்கடி ! தொடரும் நாட்களின் இயன்றால் அதைப் பற்றிச் சொல்ல முயற்சிக்கிறேன் !  

சனியிரவிலாச்சும் கண்முழித்திருந்து prepare பண்ணலாமென்று பார்த்தால், அன்றைக்கு வீட்டில் விருந்தினர் ! 'ரைட் ரா....இருந்தா ஊருக்கு ; இல்லைன்னா சாமிக்கு !!' என்ற வடிவேல் டயலாக் தான் தூங்கப்போகும் போது மண்டைக்குள் ஓடியது !! கட்டையைக் கிடத்தினாலோ உறக்கம் பிடிக்க மறுக்கிறது !!

*சுத்த நடையில் பேசணுமா - அல்லாங்காட்டி casual ஆகப் பேசலாமா ?

*ஹாஷ்யமாய் பேசலாமா - அல்லாங்காட்டி அது மொக்கையா தோணுமா ?

*ரமணா ஸ்டைலில் புள்ளி விபரங்களையா அள்ளி விட்டா, ராஜபாளைய நாய்களை விட்டுக் கடிக்கச் செய்வார்களா ? தொப்புளை சுத்தி எட்டா ? பன்னெண்டா ?

*நம்மளை நாலாவதா பேச கூப்பிடறதா சொல்லி இருக்காங்க ! So நமக்கு முன்னே பேசுறவங்க ஏதாச்சும் காமிக்ஸ்  சார்ந்த விளக்கம் கோரிக் குறிப்பிட்டால் அதற்கான follow up நம்ம உரையில் இருக்கணுமா ?

*எவ்வளவு நேரம் பேசுனா சரியா இருக்கும் ? காமிக்ஸ் பற்றித் துளியும் தெரிந்திருக்கா ஒரு audience-ன் breaking point என்னவாக இருக்குமோ ? என்று குருதிப்புனல் கமல்ஹாசன் ரேஞ்சுக்கு யோசித்தேன் ! 

ஆற்றுப் படுகையில் புரளும் நாய்க்குட்டியைப் போல படுக்கையில் புரண்டபடிக்கே கிடந்த சமயத்தில் தலைக்குள் "இத பேசலாமோ ? அதைச் சொல்லலாமோ ?" என்று ஓடிய வெள்ளோட்டத்தை ராத்திரி மூணு மணிக்கு எழுந்து ஒரு A4 தாளில் கிறுக்கத் தொடங்கினேன் ! நமக்குத் தான் எதையுமே நறுக்குன்னு சொல்ல வராதே, கால் அவரில் எக்ஸ்டரா ஷீட் கேட்கும் நிலை எழுந்தது ! "நாசமாப் போச்சு ; இப்டி வண்டி வண்டியா எழுதிட்டுப் போய் மேடையில்  ஒப்பிச்சு வைத்தால், மக்கள் வண்ட வண்டையாய் திட்டுவார்கள் !" என்ற பயம் எழுந்தது ! கையில் இருந்த A4 தாளை பர்ர்..பர்ரேன்று கிழித்துப் போட்டுவிட்டு நாலு மணிக்கு தூங்கி வைத்தேன் ! "திபெத்தில் டின்டின்" கதையில் மட்டையாகி உறங்கும் கேப்டன் ஹேடாக்குக்கு கனவில் புரஃபஸர் கால்குலஸ் ஒரு வண்டிக் குடைகளைக் கொண்டு வந்து மொடேரென போடும் sequence போல கனவு முழுக்க ஏதேதோ மொக்கைகள் ! காலையில் 7 மணிக்கு எழுந்த போது, நாலு குவாட்டரை சாத்திய குலேபகாவலியைப் போல முகரை ரணகொடூரமாய் காட்சியளித்தது ! ஆனால்....ஆனால்...அந்த நொடியில் எனக்குத் தெரிந்திருக்காட்டியுமே இதுவொரு வரம் சுமந்த தினமாச்சே ?!!

தலைக்குள் தோன்றிய சமாச்சாரங்களை பரீட்சைக்கான பிட் பாணியில் ரத்தினைச் சுருக்கமாய் மட்டும் எழுதி வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு அசட்டு தகிரியத்தில் ஜூனியர் எடிட்டர் plus நம்ம front desk பெண்களோடு புறப்பட்டோம் ! தொடர்ந்த சகலமும் sheer theater !!   

ராஜபாளையத்தின் மையத்தில் இருந்தது காந்தி கலைமன்ற அரங்கம் ! மாவட்ட ஆட்சியரின் அற்புத நிர்வாகத்துக்கு சான்றாய் ஒன்பதே கால் மணிக்கே அரங்கில் சொல்லி மாளா கூட்டம் ! கொண்டு சென்ற காமிக்ஸ் புக்ஸ்களை அடுக்கி வைக்க மூன்று டேபிள்களை வாங்கிக் கொடுத்து விட்டு, பெண்பிள்ளைகளை அங்கே இறக்கி விட்டு விட்டு, நாஷ்டா பண்ணித் திரும்பலாம் என புறப்பட்ட சற்றைக்கெல்லாம் போனில் வெங்கடேஸ்வரி அழைத்தாள் - "சார்...மேடைக்கு உங்கள கூப்பிடுறாங்க !!" என்று ! ஓட்டமாய் போய்ப் பார்த்தால் அரங்கம் full & மேடையில் அனைவரும் ரெடி ! திருட்டு முழி முழித்தபடிக்கே ஓடிப் போய், எனக்கென போடப்பட்டிருந்த சேரில் அசடு வழிய ஒட்டிக் கொண்டு அனைவருக்கும் ஒரு கும்பிடு போட்டேன் !! பேசத் துவங்கியவர் திரு.எஸ்ரா அவர்கள் தான் !! குற்றால அருவியின் சுகம் தந்தது அவரது உரை ! And அவர் பேசப்பேச எனக்குள் சொல்லி மாளா goosebumps !!

"தமிழ் பதிப்புலகின் தலைநகரம் சென்னை என்றாலும், தமிழ் காமிக்ஸின் மையமே நமது மாவட்டத்தின் சிவகாசி தான் ! So இதுபோலானதொரு முன்னோடி முயற்சி நம்ம மண்ணில் தான் முதன்முதலில் அரங்கேறிட வேண்டும் என்ற உணர்வில் தான் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தென் !" என்று சொன்னார் !! அதுமாத்திரமன்றி, அப்பாவின் Fleetway முயற்சிகள் பற்றி, இரும்புக்கை மாயாவியைப் பற்றி, நமது லயன் காமிக்ஸைப் பற்றியெல்லாம் பேசப்பேச எனக்கு பேஸ்மெண்ட் உதறத் துவங்கியது ! எங்கோ ஒரு மூலையில், ஒரு சிறு வட்டத்துக்கென மட்டும் நாம் இயங்கி வந்தாலும், நமது முயற்சிகளின் வீரியங்கள் உரியோர்களின் கவனங்களிலிருந்து தப்பிடுவதில்லை என்பது அழுந்தப் புரிந்தது ! வரிசையாய் நமது லயன்-முத்து சார்ந்த தகவல்களை அடுக்கிக் கொண்டே ஏகப் பரிவான வார்த்தைகளை என்னை நோக்கி எஸ்ரா.சார் அனுப்பி வைக்க, குழுமியிருந்த மக்களின் கைதட்டல்கள் எனது லப் டப்பை எகிறச் செய்தது !!  கிட்டத்தட்ட அரை மணிநேரம் நீண்ட அவரது உரை நிறைவுற்ற போது "உறைபனி மர்மம்" கதையில் ஐஸாகிக் கிடக்கும் அந்த விஞ்ஞானிகள் மெரி நான் உறைந்து கிடக்காத குறை தான் ! 

அடுத்து வந்த டைரக்டர் திரு,சிம்புதேவன் அவர்கள் பேச ஆரம்பித்த சற்றைக்கெல்லாமே புரிந்தது - இவர் நமது தீவிர ரசிகர் & ரெகுலர் வாசகரும் என்பது ! அம்புலிமாமா ; வாண்டுமாமா ; பாலமித்ரா ; பூந்தளிர் ; கோகுலம் ; ராணி காமிக்ஸ் ; முத்து காமிக்ஸ் என்றெல்லாம் அழகாய் பேசியபடிக்கே சென்றவர், லயன் காமிக்ஸ் பற்றிப் பேசத்துவங்கிய நொடியில் வேறொரு கியருக்கு மாறிப் போய்விட்டார் !! லக்கி லூக் பற்றி ; டெக்ஸ் வில்லர் பற்றி ; கேப்டன் டைகர் பற்றி ; லாரன்ஸ்-டேவிட் ; மாயாவி பற்றி அடுக்கிக் கொண்டே சென்ற போது எனக்கு மேல் அன்னத்தோடு நாக்கு ஒட்டிக் கொள்ளாத குறை தான் ! சகலத்துக்கும் சிகரமாய் அவரது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக சபையினரிடம் - "நாமெல்லாம் எழுந்து நின்று லயன் காமிக்ஸ் விஜயனுக்கு இப்போது ஒரு நிமிட கரகோஷம் கொடுப்போமா - ப்ளீஸ் ?" என்று கேட்ட நொடியில் திகைத்தே போய்விட்டேன் ! மறு நொடியே மேடையில் இருந்தோரும், குழுமியிருந்தோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது எனது வாழ்க்கையே கண்முன்னே அசுர வேகத்தில் ஓடியது போலிருந்தது ! And இது சத்தியம் guys - அந்த நொடியில் எனக்கு மனதில் தெரிந்ததெல்லாமே அப்பாவின் முகமும், உங்கள் அனைவரின் மலர்ந்த முகங்களும் தான் ! அந்தக் கரவொலி சர்வ நிச்சயமாய் நமக்கானது folks ; நீங்களின்றி இங்கு நாங்களேது ? முகம் நிறைந்து புன்னகையோடு என் கையைக் குலுக்கிவிட்டு அவர் சென்று அமர்ந்த போது எனது மண்டையே blank !! 

தொடர்ந்து பேசிய நுண்கலை கல்லூரிப் பேராசிரியரின் உரை ஓடிக்கொண்டிருக்கவே எனக்குள் டங்கு டங்கென்று நெஞ்சு அடித்துக் கொண்டிருந்தது ! ஒரு பொதுமேடையில் இத்தனை அசாத்திய சிலாகிப்புகளுக்குப் பின்பாய் எனது performance இம்மி சொதப்பலுமின்றி அமைந்திட வேணுமே என்ற பயம் தான் நெஞ்சுக்கூட்டை தெறிக்க விட்டுக்கொண்டிருந்தது ! ரைட்டு....அடுத்து நம்மளைத் தான் கூப்பிடுவாங்கன்னு தண்ணியை மடக்..மடக்குனு குடிச்சிட்டு நிமிர்ந்தால் - "அடுத்ததாக முனைவர் பிரபாவதி !" என்ற அறிவிப்பு !! ஆஹா...இன்னும் காத்திருப்புன்னா ...இன்னும் டென்க்ஷனாச்சே !" என்றபடிக்கே நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருந்தேன் ! பிரபாவின் உரையும் முடிந்திட, எழுந்திருப்போமா ? என்று எட்டிப் பார்த்தால் "கதை சொல்லும் வால்ப்பையன்" என்றொரு கலை நிகழ்ச்சி ஆரம்பித்தது ! அதில் நடித்தவரும் ஒரு முனைவர் என்பதும், அவரோடு பறையடித்தபடிக்கே பங்கேற்றவர் அவரது புதல்வி என்றும் தெரிய வந்தது !! அற்புதமாய் செய்தார் அந்த ஆற்றலாளர் ! 

இதுக்குள்ளாக மக்கள் பிஸ்கெட் ; டீ பிரேக்குக்கு இங்கும் அங்குமாய் கலைந்து கொண்டிருக்க, "சோணமுத்தா....இன்னிக்கி நீ காலி சேர்களுக்கு தான் டீ ஆத்தணும் போல !" என்று மண்டை சொன்னது ! தவிர, நேரம் 12.30-ஐ நெருங்கியிருக்க, அழகாய் பேக் செய்யப்பட மதிய உணவு ட்ரேகளும் வந்து இறங்கத் துவங்கின ! "சுனாமி சுழற்றியடிக்க, இன்னிக்கி நம்ம உரை பீப்ப்பீப்பீ தான் !" என்று நினைத்துக் கொண்டேன் ! And அந்த நொடியில் ஏதோ லைட்டாக பாரம் குறைந்தது போலிருந்தது ! ஆனால் திடுதிடுப்பென அரங்கமே attention-ல் நின்றது ; என்னவென்று பார்த்தால் முகம் முழுக்கப் புன்னகையோடு பெருமதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் உள்ளே வந்து கொண்டிருந்தார் ! பின்னே டவாலி, போலீஸ் பாதுகாப்பு - என வந்த ஆட்சியர் சார் துள்ளலோடு மேடையில் நடுநாயகமாக அமர்ந்த கணப்பொழுதில் அரங்கின் மொத்த சீதோஷ்ணுமுமே மாறிப் போனது ! இந்த ஒட்டு மொத்த முன்னெடுப்பிற்கும் மூலவரே அங்கே அமர்ந்திருக்க, கீழே இருந்த டீச்சரம்மா - "அடுத்ததாக நமது மரியாதைக்குரிய கலெக்டர் அவர்கள் பேசுவார்கள் !" என்று அறிவித்தார் ! 

ஆனால் ஆட்சியரோ - "இல்லே...விஜயன் பேசுவார் !!" என்று அறிவிக்க, மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு எழுந்தது மட்டும் தான் எனக்கு ஞாபகம் உள்ளது ! தொடர்ந்த பதினைந்தோ - இருபதோ நிமிடங்களுக்கு அங்கு நின்று உரையாற்றியது நானல்ல - உங்கள் ஒவ்வொருவரின் உந்துசக்தியும், உத்வேகங்களும் தான் ! எங்கிருந்தோ வார்த்தைகள் இரவல் கிட்டின ; ஏதோவொரு அதிசயத்தில்  உடல் மொழியில் நடுக்கம் மறைந்து போனது ; எங்கிருந்தோ பேச்சில் ஒரு கோர்வை சாத்தியமாகியது ; எங்கிருந்தோ நம் பயணத்தின் காரணகார்த்தாக்களை நினைவுகூர்ந்திடும் திறன் கிட்டியது ; எங்கிருந்தோ சபையோருடன் ஐக்கியமாகிடும் மாயம் என்வசமானது ! "இல்லமெல்லாம் காமிக்ஸ் - உள்ளமெல்லாம் மகிழ்ச்சி"எனும் தலைப்பில் நான் பேசியது சர்வ நிச்சயமாய் டாலரை பழைய சந்தை மதிப்புக்குக் கொண்டு வரும் மாயாஜாலம் அல்ல தான் ; ஆனால் நான் பயந்திருந்த மொக்கையும் அல்லவே அல்ல தான் ! முன்வரிசையில் அமர்ந்திருந்த கலெக்டரின் செயலாளர் ஒரு சின்னக்காகிதத்தில் "Please 5 minutes sir " என்று எழுதி சரியான தருணத்தில் என்னிடம் நாசூக்காய் நீட்ட - "பேச்ச குறைடா..பேச்ச குறைடா.. " என்ற அலாரத்தை உள்ளுக்குள் அலற விட்டது ! எனக்குப் பின்பாய் ஆட்சியர் அவர்களும் பேச வேண்டி இருப்பதால் "மைக் மோகனாய்" உருமாறிடப்படாது ! என்று எனக்கு நானே சொல்லி வைத்திருந்தேன் ! அந்தச் சீட்டும் சரியாக வந்து சேர, சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லி விட்டு விடை பெற்றேன் ! 

"நெகிழ்ச்சியான...உணர்வுப்பூர்வமான உரைக்கு நன்றி விஜயன் !" என்று anchoring செய்து கொண்டிருந்த பேராசிரியர் சொன்ன நொடியில் என் தோளில் புனித மனிடோவின் கரம் இருப்பது புரிந்தது !! தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிஅற்புதமாய் உரை நிகழ்த்திய பிற்பாடு அந்த விழா ஒரு நிறைவோடு நிறைவுக்கு வந்தது ! "தொடரும் காலங்களில் நம் மாவட்டத்தில் மட்டுமே 10 இடங்களில் இது போலான காமிக்ஸ் லைப்ரரிகள் உருவாக்கப் போகிறோம் !" என்று அவர் அறிவித்த போது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது !! ஆட்சியர் அவர்களும் ஒரு காமிக்ஸ் பிரியர் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தது !! And நமது வண்ண இரத்தப்படலம் தொகுப்பு + இன்னும் சிலபல புக்ஸ்களை ஒரு அழகான பார்சலாக்கி ஆட்சியருக்கு நமது அன்புடன் வழங்கினேன் !

எஸ்ரா சாருக்கோ, "நிஜங்களின் நிசப்தம்".....தாத்தா கதைகள்....திபெத்தில் டின்டின் ! டைரக்டர் சிம்புதேவன் அவர்களுக்கு "LION MAGNUM ஸ்பெஷல் ; கென்யா ; டின்டின் + இன்னும் சில புக்ஸ் !

மேடையில் இருந்து இறங்கி, அனைவரிடமும் விடைபெற்று விட்டுக்  கிளம்பிய போது "உரை மிகச் சிறப்பு !" என்று டைரக்டர் சிம்புதேவனும் கைகுலுக்கிட, என் தோள்களில் அந்த அரூபக் கரம் தொடர்வது ஊர்ஜிதமானது ! அதுவரைக்கும் என்னை யாரென்றே அறிந்திருக்காத ஆசிரியப் பெருமக்களின் முகங்களில் ஒரு ஸ்னேகமான பார்வையினையும் பார்க்க முடிந்த போது - "ஆங்...அதே தான் ! இன்னிக்கி முழுக்க இந்த தோளிலிருந்து கரம் விலகிடாது !!" என்று சொல்லிக்கொண்டேன் உள்ளுக்குள் ! விழாவினிலும், மேடையினிலும் இருந்த ஒவ்வொருவரும் லயன் காமிக்ஸ் - முத்து காமிக்ஸ் என்று உச்சரித்த ஒவ்வொரு தடவைக்கும் நமக்கு மட்டும் யாராச்சும் ஒற்றை ரூபாயாய்த் தந்திருந்தாலே - விழாவின் முடிவில் என் பாக்கெட் ஆயிரங்களில் நிரம்பியிருந்திருக்கும் !! 

ரைட்டு...புக்ஸ் பெருசாய் விற்றிருக்காது, டப்பிகளில் திரும்ப அடைத்துவிட்டுக் கிளம்பலாமென்று போனால், "ஏழாயிரம் ரூபாய்க்கு சேல்ஸ் ஆகியுள்ளது சார் !" என்று சொல்லி தெறிக்க விட்டார்கள் நம்மாட்கள் ! மேடையில் எந்தெந்த நாயகர்களைப் பற்றியெல்லாம் பேசியிருந்தோமோ - அவை சகலமும் விற்பனை கண்டிருந்தன !! கை நிறைய நமது காமிக்ஸோடு, ஆட்சியரிடம் ஆட்டோகிராப் வாங்க நீட்டியோரும் கணிசம் !! "சரி ரைட்டு..... போற வழியிலேயே இன்னிக்கி lift கேட்டு சமந்தா காத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை  !!" என்றபடிக்கே கிளம்பி அடுத்த 45 நிமிடங்களில் வீட்டுக்குத் திரும்பினோம் - ததும்பும் நிறைவான மனதோடு !! 

என்ன - வழியிலே சமந்தா தான் காத்திருக்கலை ; அது மட்டுமே ஒரு blemish on an otherwise absolutely perfect day !!

Bye all...நீங்கள் ஒவ்வொருவரும் இன்றி இந்த நாளோ, இந்தப் பயணமோ, இந்த மகிழ்வுகளோ, இந்த அங்கீகாரங்களோ, சர்வ நிச்சயமாய் சாத்தியப்பட்டிருக்காது ! உங்களுக்கு நாங்கள் பட்டிருக்கும் கடனின் அளவு ஒரு புது மாப்பிள்ளையின் தொந்தியை விடவும் வேகமாய் வளர்ந்து கொண்டே செல்கிறது !! என்றைக்கு கடன்தீர்க்கும் ஆற்றல் கிட்டப் போகிறதோ - படைத்தவருக்கே வெளிச்சம் !! 

And வீடு திரும்பிய உடனேயே பதிவினை டைப் செய்யத்தோன்றியது தான் ; ஆனால் அந்த நொடியின் high-ல் எனது எழுத்துக்களில் நிதானம் சொதப்பிடலாகாதே என்ற பயம் மேலோங்கியது ! So கொஞ்ச நேர உறக்கம், தரைக்கு மறுக்கா கால்களைக் கொணரும் படலம் என்பனவெல்லாம் பூர்த்தி ஆன பிற்பாடு இந்தப் பதிவினை எழுதத் துவங்கினேன் ! Hopefully its not over the top !! See you around !!


P.S : பிரபாவதி எடுத்த சொற்ப போட்டோக்களும், ஒரு வீடியோவும் தவிர்த்து இந்த நொடியில் என்னிடம் வேறெதுவும் லேது ! Maybe நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் upload செய்திடுவார்களெனில் நிச்சயம் சொல்கிறேன் ! 





177 comments:

  1. இது போன்ற நிகழ்வுகள் காமிக்ஸ் உலகத்தை புது உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பது நிதர்சனம் 💐💐😘🙏

    வாழ்த்துக்கள் @Edi Sir.. 🥰😘💐🙏👍

    ReplyDelete
  2. பாதி பதிவுக்கு மேல் தாண்ட முடியலைங்க.. கண்ணில் வேர்வை பார்வையை மறைக்கிறது.. நானே அங்கே இருந்தது போல் உணர்வு..

    நெகிழ்ச்சியான.. மகிழ்ச்சியான பதிவு சார்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. //நானே அங்கே இருந்தது போல் உணர்வு..//

      நம்புங்கள் ரம்மி - நீங்கள் ஒவ்வொருவருமே நேற்றைக்கு அங்கு என்னோடு இருந்தீர்கள்!!

      Delete
  3. @Edi Sir🥰😘

    என்னதான் உலகம் முழுக்க சுற்றி புகழ் பெற்றாலும் சொந்த மண்ணில் பாராட்டு பெறுவது தனி சுகம் தான் சார்.. 🥰😘

    சந்தோசம் சார் 😄🙏💐👍

    ReplyDelete
  4. அற்புதம் சார்.. நெகிழ்வளிக்கும் பதிவு.. காமிக்ஸ் மேலும் உங்கள் மேலும் வெளிச்சம் விழுவது மகிழ்வளிக்கும் நிகழ்வு..

    ReplyDelete
    Replies
    1. வெளிச்சம் நம் மீது சார் 🙏🙏

      Delete
  5. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  6. என்றென்றும் மறக்க முடியாத நிகழ்வு ஆசிரியரே திறமையின் சிகரமான நீங்கள் இந்த சின்ன வட்டத்திற்க்குள்ளேயே சுற்றி கொண்டிருந்தது போலிருந்தது ஆனால் இன்று நடந்த இந்த நிகழ்வு ஒரு தலைமுறையையே காமிக்ஸ் எனும் இன்ப (மந்திர)உலகில் சுற்ற வைத்த சக்கரவர்த்திக்கு(மாண்ட்ரேக்) உரிய மரியாதையின் ஆரம்பம் இதுபோல் இன்னும் பல உச்சம் தொடுவீர்கள் ஆசிரியரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசிரியரே ஒரு காமிக்ஸ் ரசிகனாக(தம்பியாக) பெருமைப்படும் தருணமிது நன்றி புனித மானிடோவே

    ReplyDelete
  7. மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் இல்லை, சிறப்பான நிகழ்ச்சி, அபாரமான பதிவு... மனது ஆனந்தத்தில் மிதக்கிறது.

    ReplyDelete
  8. மிகவும் மகிழ்ச்சியான பதிவு டியர் எடி ..

    மாவட்டம் மாநிலமாக அனைத்து ஊர்களிலும் லைப்ரரி திறக்க வேண்டும் ..

    உங்ஙளின் உந்து சக்தியாக நாங்களும் உறுதுணையாக நிற்ப்போம்

    அப்பப்பா படிக்க படிக்க ஆனந்தமே இழையோடுகிறது 😍❤💛💙💚💜

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  10. நிகழ்வுகளை அருமையாக விவரிக்கும் உங்கள் நடைக்கு ஒரு சல்யூட் சார்.
    உங்களுடன் நாங்களும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற உணர்வு...

    நான் முன்பே சொன்னது போல இது/இனி தான் காமிக்ஸின் பொற்காலம்.

    பல அதிரடிகள் நடக்கட்டும் காமிக்ஸ் மழை பொழியட்டும்.

    வ.வி.கி & வ.ஒ.க.ம. பற்றிய உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. //வ.வி.கி & வ.ஒ.க.ம. பற்றிய உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்..//

      இன்னமுமே சில பல பெசல் ஐட்டங்களும் வெயிட்டிங் சார் 🤩

      Delete
    2. ஆஹா...80 என்ன சார் என்பது...தொடரட்டும் வருங்காலங்களும் பொற்காலங்களாய்

      Delete
  11. உங்களுக்கும் லயனுக்கும் கிடைக்கும் எல்லாப் பெருமைகளும் மரியாதைகளும் எங்களுக்கே கிடைப்பது போல் உணர்வதற்கான காரணம் ஏன் என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உரியவர்கள், உடைமையஸ்தர்களாய் உணர்வதில் தப்பே இல்லீங்களே சார்?!

      Delete
    2. சரியாக சொன்னீங்க ஷெரீஃப். நமக்கு மிகவும் பிடித்த நமது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பெறும் பரிசு. நாம் பெற்ற பரிசு தானே.

      Delete
    3. மறுக்க இயலாத உண்மை.

      Delete
  12. கூடிய விரைவிலேயே புதிய வாசக வட்டம் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.

    வாழ்த்துக்கள் எடிட்டர் சார் 💐💐

    ReplyDelete
  13. ப்பா.... படிக்க படிக்க விறுவிறுனு இருக்குங்க சார், விழாவில் நாங்களே கலந்து கொண்டது போல அவ்வளவு புத்துணர்ச்சி தங்கள் வரிகளில்.
    ❤️❤️❤️❤️❤️👌👏👏👏👏
    வீடியோ கிடைத்தால் அப்லோட் பண்ணுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் சார் 👍👍

      Delete
  14. செம சார்....நம்ம எதிர்பார்ப்பு வீண் போகல...சரியான தருணத்தில் ..ஓரிரண்டு கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை யென் வெளிப்பட்டது காமிக்ஸ் நா முத்துதான் லயன் தான் என

    ReplyDelete
  15. டியர் விஜயன் சார், அருமை அருமை!

    சிறுவயது தொட்டு ஹாட்லைன் வழியே உங்களை ஒரு ஆசிரியராகப் பாவித்து வந்த நம் நண்பர்களுடன், வலைப்பூ வழியே நீங்கள் ஒரு அண்ணணாகப் பழகி வருவதால், உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு அங்கீகாரமும், ஏதோ எங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்குக் கிடைப்பது போன்றதொரு பூரிப்பு!  இது அதீதப் புகழ்ச்சி அல்ல, மானசீக உணர்வு!

    நாங்கள் நேசிக்கும் தமிழ் காமிக்ஸ்களுக்கு உரியதொரு அங்கீகாரம், உங்களது இடைவிடா முயற்சிகளால் சிறுகச் சிறுக கிடைத்து வருவதும் ஒரு காரணம்! மிக்க நன்றி சார், நீங்கள் மேலும் பற்பல மேடைகளை வென்றிட வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

      Delete
    2. உள்ளத்திலிருந்து உச்சரித்திருக்கும் உங்களது வார்த்தைகள் நெகிழ்ந்திடச் செய்கின்றன கார்த்திக்!! Thanks a ton 🙏🙏

      "இதுவொரு குடும்பம் " என்று அடிக்கடி சொல்லி வரும் எனக்கே அந்த உணர்வு முன்னெப்போதையும் விடவும் நேற்றைக்கு அசாத்தியமாய் ததும்புவதை உணர முடிந்தது!

      Delete
    3. கார்த்திக் சார்.. சிறப்பாக விவரித்து விட்டீர்கள்..
      எனக்குமே விஜயன் சார் விவரித்தது போல் எங்கிருந்து பாராட்ட ஆரம்பிக்கலாம் என்று ஏதேதோ தோன்றியது..
      விஜயன் சார்...
      நிச்சயம் இது அனைவரும் மகிழத்தக்க ஒரு நிகழ்வு..
      வாழ்த்துக்கள் சார்...

      Delete
  16. Wow. Golden day for tamil comics world sir. Even we didn't have an idea of standalone comics library. S. Ramakrishnan is correct and he knows what to do. The current 20s,30s aged people are not reading any books at all. To get future readers, we have to target children and what does children like? Comics....

    And you being honored is very apt sir. Only man with 50years of tamil comics publication and still fighting all alone. Director simbudevan also a correct choice.

    And starting 10 more comics libraries will make Rajapalayam district one of the highly intelligent district in next 20 years.

    I am proud that our editor has become the primary point for a massive change in society.

    ReplyDelete
    Replies
    1. //starting 10 more comics libraries will make Rajapalayam district one of the highly intelligent district in next 20 years.//

      Oh yes sir 💥💥😍

      Delete
  17. இதுவரை எங்களுக்கான குழந்தையாய் இருந்த லயன் ,முத்து உலகமெங்கும் தமிழகத்தின்,இந்தியாவின் அடையாளமாய் அறியப்படும் காலம் நெருங்குகிறது.இது எங்கள் குடும்பம் என்ற பெருமிதத்தில் கண்களில் கண்ணீர் வழிய படித்துக் கொண்டிருக்கிறேன். இது உங்களது சாதனை என்றாலும் எங்கள் சாதனை போன்ற மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் சார் .

    ReplyDelete
    Replies
    1. // இது எங்கள் குடும்பம் என்ற பெருமிதத்தில் கண்களில் கண்ணீர் வழிய படித்துக் கொண்டிருக்கிறேன்// மிகச் சரி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இது மட்டும் என்றேயில்லை ராஜசேகரன் சார் - இன்னமும் எத்தனை உயரங்களை நாம் தொட நேரிட்டாலுமே அவை சகலத்தையும் நம் சிறுவட்டத்தின் சாதனையாகவே நான் பார்த்திடுவேன்!

      Delete
  18. Hi Editor sir, Very happy to hear sir. It's for all your hardwork and love towards comics sir. I am in 40's. I always feel at times that I miss something in my life. I feel so happy when I heard about Lion and muthu couple of years back and I don't feel now that I miss anything. Comics is everything to me if I feel happy, or stressed , it's always a companion to me. My Love and respect towards you and comics going high everyday. I wish you all success and wish our comics will reach many people .

    ReplyDelete
  19. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  20. அருமையான நிகழ்வு,மகிழ்ச்சியூட்டும் பதிவு,மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  21. Replies
    1. ஆஹா....உங்களுக்குமா ரம்யா...

      Delete
  22. Super Sir
    அருமையான நிகழ்வு
    மனதில் அழுத்தமாய்
    பதிவாகும் நாட்களில் இதுவும்
    ஒன்று நன்றிகள்
    விஜயன் Sir ,க்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் உங்கள் ஒவ்வொருவருக்கும் சார் 🙏

      Delete
  23. உணர்ச்சி பூர்வமான தருணம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை என்று சார்.

    ReplyDelete
    Replies
    1. இந்த நிலையில் மேடையில் பேச வேண்டிய சூழல் சார் எனக்கு - நினைத்துப் பாருங்களேன்!

      Delete
  24. சார் கிளம்பி வந்து விடலாமா ராஜபாளையம் என்று யோசித்தேன். இப்போது தான் வராமல் போனது பெரிய தவறு என்று தெரிகிறது.

    நீங்கள் விவரித்ததில் நாங்களும் அங்கே உங்களோடு ஸ்டேஜில் இருந்தது போல ஒரு உணர்வு.

    நன்றிகள் சார். You deserve every second of it.

    ReplyDelete
    Replies
    1. நம் வட்டத்தின் அனைவரையும் நான் ரொம்ப ரொம்ப மிஸ் செய்தது நேற்றைக்கு சார்!! அந்தப் பாராட்டு மழையில் கரம்கோர்த்து நனைந்திருந்தால் ஜென்ம சாபல்யம் சாத்தியப்பட்டிருக்கும்!

      Delete
  25. உள்ளேன் ஐயா..!!

    நெகிழ்ச்சியான தருணம்...😍😍😍

    ReplyDelete
  26. ///நாமெல்லாம் எழுந்து நின்று லயன் காமிக்ஸ் விஜயனுக்கு இப்போது ஒரு நிமிட கரகோஷம் கொடுப்போமா - ப்ளீஸ் ?" என்று கேட்ட நொடியில் திகைத்தே போய்விட்டேன் !////


    👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  27. ///"சரி ரைட்டு..... போற வழியிலேயே இன்னிக்கி lift கேட்டு சமந்தா காத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை !!" என்றபடிக்கே கிளம்பி ///

    ஹோய் ஹொய்யா.. ஹொய்யா... ஹொய் ஹொய்யா

    ReplyDelete
    Replies
    1. அட... ஒரு மனுஷன் இம்மா பீலிங்சோட வருத்தப்பட்டா அதுக்கு அனுசரணையா - "சமந்தா என்ன சார் சமந்தா.... பாருங்க பிளைட் புடிச்சி தமன்னா வந்து நிக்கப் போகுது"ன்னு ஆறுதல் சொல்லிப்போடணும்!

      அதை விட்டுப்புட்டு பாட்டு 😡😡

      Delete
    2. சமத்தா நம்ப பத்மநாபன் சாருக்கு ரொம்ப பழக்கமாம் சார்

      Delete
    3. அது என்னமோ எனக்கும், எடிட்டருக்கும் ஒரே நேரத்துல சமந்தா நினைவுக்கு வருது.

      Delete
  28. எவ்வளவு பெரிய மனிதர்.....

    எங்களுடன் மரத்தடிகளிலும் ரெஸ்ட்டாரன்டுகளிலும் ஒரு நண்பரைப்போல நடந்துகொண்ட எளிமை......

    தொப்பித் தூக்குகிறோம் விஜயன் சார்...🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. எண்ட பொன்னு மோனே....தொப்பி காத்துக்குப் பறந்திருக்கும்! நாம என்னிக்குமே அதே சாதாரண ஆந்தையன் தான், நண்பன் தான் and காலத்துக்கும் அது நிலைத்தாலே மகிழ்வேன் 🙏

      Delete
    2. மாமா@ KFC யில் சிக்கென் வாங்கி தர வேகநடை போட்டாருப்பா சார்.. அதையும் சேர்த்துக்க..

      16வயசுல வந்தேன்னு சொன்னாரு தானே... அந்த இளைஞரை ஒரு நொடி பார்த்தோம்பா சேலத்தில..

      Delete
  29. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான தருணம் சார்! நமக்கான பணியை தொடர்ந்து சிறப்பாக செய்தால் அங்கீகாரமும் புகழும் தானே வந்து சேரும் என்பது புலப்படுகிறது சார்.

      மொத்தமாக அனைவருமே வெற்றிபெற்ற மகிழ்ச்சி உங்கள் வார்த்தைகளில் புலப்படுகிறது. வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் சார்!!

      Delete
    2. For sure sir... இது ஊர் கூடி இழுக்கும் தேர் அல்லவா? அதன் பெருமைக்கு நான் மட்டும் சொந்தம் கொண்டாடுவது முறையாகாதே!

      Delete
  30. // எங்கோ ஒரு மூலையில், ஒரு சிறு வட்டத்துக்கென மட்டும் நாம் இயங்கி வந்தாலும், நமது முயற்சிகளின் வீரியங்கள் உரியோர்களின் கவனங்களிலிருந்து தப்பிடுவதில்லை என்பது அழுந்தப் புரிந்தது ! வரிசையாய் நமது லயன்-முத்து சார்ந்த தகவல்களை அடுக்கிக் கொண்டே ஏகப் பரிவான வார்த்தைகளை என்னை நோக்கி எஸ்ரா.சார் அனுப்பி வைக்க, குழுமியிருந்த மக்களின் கைதட்டல்கள் எனது லப் டப்பை எகிறச் செய்தது !! //

    ஆனந்த கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை 😊

    ReplyDelete
    Replies
    1. மேடையில் கண்களைக் கசக்கிடாமல் தாக்குப் பிடிப்பதற்குள் நாக்கு தொங்கிப் போய்விட்டது சார் 🤕🤕!

      Delete
    2. உணர்கிறேன் sir... ❤️❤️❤️

      Delete
  31. // சகலத்துக்கும் சிகரமாய் அவரது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக சபையினரிடம் - "நாமெல்லாம் எழுந்து நின்று லயன் காமிக்ஸ் விஜயனுக்கு இப்போது ஒரு நிமிட கரகோஷம் கொடுப்போமா - ப்ளீஸ் ?" என்று கேட்ட நொடியில் திகைத்தே போய்விட்டேன் ! மறு நொடியே மேடையில் இருந்தோரும், குழுமியிருந்தோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது எனது வாழ்க்கையே கண்முன்னே அசுர வேகத்தில் ஓடியது போலிருந்தது ! And இது சத்தியம் guys - அந்த நொடியில் எனக்கு மனதில் தெரிந்ததெல்லாமே அப்பாவின் முகமும், உங்கள் அனைவரின் மலர்ந்த முகங்களும் தான் ! அந்தக் கரவொலி சர்வ நிச்சயமாய் நமக்கானது folks ; நீங்களின்றி இங்கு நாங்களேது ? //

    வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத தருணம் சார். மீண்டும் ஆனந்த கண்ணீர்.

    பதிவு முழுவதுமே ஆனந்ததால் கண்கள் குளம் ஆவதை தடுக்க முடியவில்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. நேற்று மேடையில் பேசியதொரு வரி சார் :
      எங்களது ஒவ்வொரு வெற்றியினையும் தங்களது சொந்த வெற்றிகளாய்க் கொண்டாடிடும் அன்பே உருவானதொரு அணி தொடர்ந்து ஒவ்வொரு நிலையிலும் உந்திச் சென்று கொண்டே உள்ளது!

      Delete
    2. செம சார். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

      Delete
    3. உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளை பங்கு போட்டு எங்களை பெருமையடைய வைத்து விட்டீர்கள்

      Delete
  32. காமிக்ஸ் வரலாற்றின் மிக முக்கியமான தருணம் சார். உங்கள் எழுத்துகள் மூலம் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த தருணத்தில் இதனை நேரில் பார்த்து ரசிப்பதை தவற விட்டுவிட்டேன் சார்.

    ReplyDelete
  33. உண்மையிலேயே மகிழ்ச்சி கடலில் கரைய வைத்த பதிவு. சிறுக சிறுக உங்களுக்கும் நமது கமிக்சுசுக்கும் கிடைத்துவரும் அங்கீகாரம் late ஆ வந்தாலும் latest moment தான் sir. வாழ்த்துக்கள். அப்புறமென்ன இதை சிறப்பித்து ஓர் ஸ்பெஷல் போடலாம் sir

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இந்த டீலிங் கூட நல்லா இருக்கே சார் 🤔🤔🤔

      Delete
    3. கோடை ஆன்லைன் புத்தக விழா ஸ்பெஷல். இன்னும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம் சார்.

      Delete
  34. வாழ்த்துக்கள் எடி சார் ❤️

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் கார்த்திக் 👍👍

      Delete
  35. காமிக்ஸ் எனும் கனவுலகம் நிஜமானதொரு அற்புத தருணம்..
    hats off to you, and the honorable Collector Sir.

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் ஆட்சியருக்கே சார்! சினிமாக்களில் மட்டுமே இவரைப் போலானோரைப் பார்த்திருப்போம்!! அசாத்திய மனிதர்!

      Delete
  36. Super sir .. proud and happy moment for u sir .. and all for all of us .. sometimes vr taking u for granted without understanding ur ஆளுமை ..

    ReplyDelete
    Replies
    1. Not for a minute sir.... திரைகளும் தடைகளும் இல்லாத இந்த அன்னியோன்யம் தான் நம் பலமே!

      I wouldn't want it any other way!

      Delete
  37. // "அடுத்ததாக நமது மரியாதைக்குரிய கலெக்டர் அவர்கள் பேசுவார்கள் !" என்று அறிவித்தார் !

    ஆனால் ஆட்சியரோ - "இல்லே...விஜயன் பேசுவார் !!" //

    இந்த ஒரு விஷயமே கலெக்டர் ஒரு மிக பெரிய லயன் முத்து காமிக்ஸ் ரசிகர் மற்றும் உங்கள் மேல் vaiththulay அன்பை அழகாக சொல்லுகிறது சார்.

    ReplyDelete
  38. பதிவை முழுவதுமாக படித்த பின்னர் பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிகிறது சார்

    // எப்போவாச்சும் ; ரொம்ப ரொம்ப எப்போவாச்சும் - ஒரு நாளின் சகல நொடிகளிலும் பெரும் தேவன் மனிடோ நமது தோள்களில் கைபோட்டபடிக்கே நம்மோடு நட்பாய், வாஞ்சையாய், ஜோக்கடித்துக் கொண்டே பொழுதைக் கடத்துவது போல் உணர்ந்திட முடியும் ! //

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. எடிட்டர் சார்.. நேற்றைய பொழுது உங்களது பதிவை காணாமல் நாங்கள் தளத்திலேயே காத்துக்கிடந்தோம்.. நேற்று இரவு வரை பதிவு ஏதும் வராததால் ஒரு வார இறுதியே வீணாகி விட்டதான விரக்தியிலிருந்தோம் தான்.. ஆனால் இது போன்ற பதிவுக்காக எத்தனை வார இறுதிகள் வேண்டுமானாலும் காத்துக் கிடக்கலாம் தான்!
    மொத்த அரங்கமும் உங்களுக்காக எழுந்து நின்று கைதட்டியதை படித்த கணத்தில்.. குபுக் என்று ஒரு மெல்லிய நீர்திரை கண்களை மறைத்ததை மறுக்க முடியாது சார்!🥲🥲
    ரொம்பவே லேட்டாக கிடைத்திருக்கும் அங்கீகாரம் சார் இது உங்களுக்கு! ஆனால் இதை 'better late than never' என்று பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது!
    இந்த இளம் தலைமுறைக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்த நினைக்கும் மதிப்பிற்குரிய அந்த மாவட்ட ஆட்சியருக்கும், திரு. எஸ்ரா அவர்களுக்கும், டைரக்டர் திரு சிம்பு தேவன் அவர்களுக்கும், மற்ற அனைத்து விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக கரம் கூப்பி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏💐💐

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டில் ஒரு காமிக்ஸ் மறுமலர்ச்சி ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது சார்!💐💐💐

    ReplyDelete
    Replies
    1. // எடிட்டர் சார்.. நேற்றைய பொழுது உங்களது பதிவை காணாமல் நாங்கள் தளத்திலேயே காத்துக்கிடந்தோம்.. நேற்று இரவு வரை பதிவு ஏதும் வராததால் ஒரு வார இறுதியே வீணாகி விட்டதான விரக்தியிலிருந்தோம் தான்.. ஆனால் இது போன்ற பதிவுக்காக எத்தனை வார இறுதிகள் வேண்டுமானாலும் காத்துக் கிடக்கலாம் தான்! // உண்மை உண்மை உண்மை

      Delete
    2. // இது போன்ற பதிவுக்காக எத்தனை வார இறுதிகள் வேண்டுமானாலும் காத்துக் கிடக்கலாம் தான்! //

      உண்மை

      Delete
  41. நேற்றைய நிகழ்வின் முழு வீடியோவும் கிடைத்தால் தயவு செய்து கொஞ்சம் முயற்சி செய்து எங்களுக்காக வாங்கி கொடுங்கள் சார்.. 🙏

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாள் எதிர்பாத்திருந்த ஒரு நிகழ்வை முழுவதுமாக கண்டு ரசித்திட வேண்டும் 😍😍😍😍

      Delete
    2. வீடியோவில் நீங்கள் சம்சா கலந்த ரவுண்ட் பன்னை கண்ணில் நீர் வழிய ரசித்து சாப்பிடும் காட்சி தெரிந்து விடுமே சார்... பரவாயில்லையா😂

      Delete
  42. சார் இதக்கொண்டாட மாவட்டந்தோறும் காமிக்ஸ் ஸ்பெசல்னு ஒரு அஞ்சு பத்து கதைகள்..மே மேளாக்கு முன்னோட்டமாக அடுத்தமாதம் ஆவது ஆவன செய்து ஆவென விட்டாலென்ன

    ReplyDelete
  43. ஏனென்று தெரியவில்லை பதிவைப் படிக்கும்போது ஆனந்தக்கண்ணீரும் மகிழ்ச்சி கலந்த ஒரு உணர்வும் என்னையும் அறியாமல் வந்தது. வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே🙏🙏

    ReplyDelete
  44. விஜயன் சார்,
    நாங்கள் உங்கள் தோளோடு தோளாக நின்றாலும்..
    இந்த வட்டம்தாண்டி வெளி உலகில் நமக்கு பிடித்தவர்களும்
    நம்மோடு தான் பயணித்து வருகிறார்கள் , பாராட்டுகிறார்கள் என்று அறியும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது...
    எஸ் ராமகிருஷ்ணன் மறக்க முடியாதவர் ...
    ஆனந்த விகடன் - கட்டுரையில் இ.கை மாயாவியை படித்ததை விவரித்து - அதை கதையாக எழுதிப் பழகியதை குறிப்பிட்டிருந்தார்.
    ஆத்தூர். - (கிராமம்) யில் குங்குமம் மட்டுமே கிடைத்த நிலையில் - அதில் தான் புத்தக விழாவில் எழுத்தாளர் பா.ராகவன் "கம்பேக் ஸ்பெஷல் "பற்றி குறிப்பிட்டு தெரியப்படுத்தினார்..
    இன்னும் சிம்புதேவன், மிஷ்கின், பொண்வண்ணன் - போன்றோரின் பேட்டிகள்.. என்று

    ReplyDelete
    Replies
    1. ////நாங்கள் உங்கள் தோளோடு தோளாக நின்றாலும்..
      இந்த வட்டம்தாண்டி வெளி உலகில் நமக்கு பிடித்தவர்களும்
      நம்மோடு தான் பயணித்து வருகிறார்கள் , பாராட்டுகிறார்கள் என்று அறியும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது...///

      +1

      Delete
  45. இந்த கலெக்டர் போல் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்து விட்டால், காமிக்ஸ் எனும் தீ தமிழ்நாடெங்கும் பற்றியெறியும்.
    உங்களுக்கான அங்கீகாரம் எங்களுக்கான மகிழ்ச்சி சார். சூப்பர், சூப்பர்.

    ReplyDelete
  46. இது போன்ற ஒரு நிகழ்வை நேரிலும் கண்டு ரசித்திட ஆசையாக இருக்கிறது!
    அரங்கத்தின் கடைசி வரிசையில் நின்றபடியே .. ரவுண்டு பன்னுக்குள் புதைக்கப்பட்ட சமோசாவைக் கடித்தபடிக்கே.. கண்ணிலிருந்து வழியும் நீர் எங்கள் சிவகாசி சம்முவத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தாலா அல்லது கடிக்கப்பட்ட சமோசாவின் காரத்தாலா என்று மற்றவர்களால் வித்தியாசம் காணமுடியாதபடிக்கு இருந்திட வேண்டும்..

    அப்படி ஒரு நிகழ்வுக்காக காத்திருப்போம்.. 😍😍😍😍

    ReplyDelete
  47. 💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. மனசு மகிழ்ச்சியில் நிறைந்து கிடக்கும் போது வார்த்தைகள் வெளிப்படாது என்பதை சூசகமாக சொல்கிறார் நமது மாதேஸ்வரன் ஜி!😁👍

      Delete
  48. காமிக்ஸ்கும்..உங்களுக்கும் கிடைத்த நல்லதொரு அங்கிகாரம் சார்.மிகுந்த ஆனந்தமும் பெருமையும் கூடிய தருணம்.இனி நமது காமிக்ஸ் கொஞ்சம் கொஞ்மாக ரெக்கை கட்டி பறக்கும் காலம் மிக அருகிலேயே உள்ளது என மனம் சொல்கிறது.அந்தக் காலம் வரும்போது.பழைய வாசகர்களும்..புது வாசகர்களும் உங்களைத் திக்குமுக்காட வைக்கப் போகிறார்கள்.
    💐💐💐🍰🍰🍰

    ReplyDelete
    Replies
    1. // இனி நமது காமிக்ஸ் கொஞ்சம் கொஞ்மாக ரெக்கை கட்டி பறக்கும் காலம் மிக அருகிலேயே உள்ளது என மனம் சொல்கிறது. //

      +1

      Delete
  49. இப்போதுதான் தலைநகரில் தலைமகன் கதையைப் படித்து முடித்தேன். கதை நன்றாக தான் இருந்தது.
    ஆனால் கதை படிக்க படிக்க எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. நாம் படிப்பது டெக்ஸ் வில்லர் கதையா அல்லது தளபதி டைகர் கதையா என்று.
    ஏனென்றால் இந்தக் கதையில் வரும் நபர்கள் அனைவரும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
    அதேபோல் டைகர் எப்படி யாருக்கு தெரியாமல் நகருக்குள் நுழைவார்களோ அதே மாதிரியே தான் டெக்ஸும் கார்சனும் நகருக்குள் நுழைகிறார்கள்.
    இந்த மாதிரி தோன்றியது எனக்கு மட்டும்தானா? இல்லை வேறு யாருக்கேனும் தோன்றியதா என்பதை இங்கே பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. இது வழக்கமான டெக்ஸ் கதை இல்லை சதாசிவம் ஜி! உங்களுக்கு அப்படி தோன்றியதில் வியப்பேதும் இல்லை தான்!!😁

      Delete
  50. வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்க ஆண்டவன் நிச்சயம் துணை இருப்பார்

    ReplyDelete
  51. சூப்பர் சார்.

    நம்ம காமிக்ஸ் காலங்கள் மீண்டும் எழும்பும்னு நம்புறோம்.

    உங்க பேச்சு காணொளிக்காக காத்திருக்கிறோம்.

    இந்த சந்தர்ப்பத்தை ஏன் நாம ஸ்பெஷல் டெக்ஸ் புத்தகத்தோட கொண்டாடக்கூடாது?.

    எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கவும்

    ReplyDelete
  52. என்ன சொல்வதென்றே தெரியவில்லைங் சார்...

    தங்களின் ஓரு பதிவின் தலைப்பை இரவில் வாங்கிக் கொள்கிறேன்...

    "வரம் வாங்கி வந்த தினங்கள்"

    வரிசையில் நேற்றைய தினத்தை இணைத்து கொள்ளலாம்...

    ஒவ்வொரு வரிக்கும் அப்படியே கண்கள் குளமாகியது...

    விஜயன் சார் முதுகுக்கு பின்னாடி நாங்களும் தொற்றி கொண்டு இருந்ததான உணர்வு...

    "நெஞ்சமெல்லாம் வண்ணம் பல"

    ReplyDelete
  53. ஏன் தங்களால் நேற்றைய மதியம் பதிவு எழுதவில்லை என புரிந்து கொள்ள முடிகிறது...

    காமிக்ஸ் உலகில் உள்ள சிறு புள்ளியான எங்களுக்கே வாசிக்கும் போது ஜிவ்வுனு இருக்கு....காமிக்ஸின் நியூக்ளியஸ் தங்களுக்கு சொல்லவா வேணும்

    இத்தனை வருடமாக பட்ட கஷ்டத்துக்கு ஐ மீன் தங்களின் கடின உழைப்புக்கு தாமதமான ஆனால் தரமான அங்கீகாரம்....

    ReplyDelete
  54. /// நமது குழுமத்துக்கு மாத்திரமன்றி, காமிக்ஸ் எனும் ரசனைக்கே அங்கு நானொரு பிரதிநிதியாகி.....//

    --- இதை தானே நாங்கள் கதறிகொண்டு இருந்தோம்...

    ஒருவழியாக இன்று மெய்ப்பிக்கப்பட்டது🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

    ReplyDelete
  55. ///"நாமெல்லாம் எழுந்து நின்று லயன் காமிக்ஸ் விஜயனுக்கு இப்போது ஒரு நிமிட கரகோஷம் கொடுப்போமா - ப்ளீஸ் ?"////

    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊
    ❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊❤️🌹💥🎆🎉🎊

    ReplyDelete
  56. ///உங்களுக்கு நாங்கள் பட்டிருக்கும் கடனின் அளவு ஒரு புது மாப்பிள்ளையின் தொந்தியை விடவும் வேகமாய் வளர்ந்து கொண்டே செல்கிறது !!/////

    ---- வேறுன்ன சார் இந்த சனம் கேட்கபோவுது.... கார்சனின் கடந்த காலத்தை தந்துட்டீங்க...

    இரத்தபடலத்தையும் தந்துட்டீங்க...

    *தங்க கல்லறை*-யும் அதே மாதிரி தந்துட்டா தொந்தி பாரம் குறைஞ்சிட போகுது...

    ReplyDelete
  57. எடிட்டர் சார்
    மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு. வாழ்த்துகள் சார் !

    ReplyDelete
  58. அருமை!! அருமை!! பதிவை படித்ததும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வு. I always admire your writing style, it just flows! You are a gifted writer Sir! Keep rocking!

    ReplyDelete
  59. //நாமெல்லாம் எழுந்து நின்று லயன் காமிக்ஸ் விஜயனுக்கு இப்போது ஒரு நிமிட கரகோஷம் கொடுப்போமா - ப்ளீஸ் ?" என்று கேட்ட நொடியில் திகைத்தே போய்விட்டேன் ! மறு நொடியே மேடையில் இருந்தோரும், குழுமியிருந்தோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிய போது எனது வாழ்க்கையே கண்முன்னே அசுர வேகத்தில் ஓடியது போலிருந்தது ! And இது சத்தியம் guys - அந்த நொடியில் எனக்கு மனதில் தெரிந்ததெல்லாமே அப்பாவின் முகமும், உங்கள் அனைவரின் மலர்ந்த முகங்களும் தான் ! அந்தக் கரவொலி சர்வ நிச்சயமாய் நமக்கானது folks//

    காமிக்ஸ் நேசம் உடைய இந்த சிறு அணிக்கு கிடைத்த ஒரு நியாமான வெற்றி. விடாமுயற்சிக்கும், கடின உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், காமிக்ஸ் நேசத்திற்கும் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  60. வாழ்த்துக்கள் ஐயா...!

    ReplyDelete
  61. Happy tears, and the way you have described events brought the function in front of us.

    ReplyDelete
  62. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  63. வாழ்த்துக்கள்🎉🎊 சார்

    ReplyDelete
  64. காமிக்ஸ் க்கு என்று தனி லைப் ரரி என்பது நம்ப முடியாத அதிசயம்... அற்புதம்... நான் சிறு வயதில் எதிர்பார்த்த நிகழ்வு என் ஐம்பதாவது வயதில் நிகழ்ந்தது. சந்தோஷம்.

    ReplyDelete
  65. "ரைட்டு...அது ஆச்சு ! ஆனா மேடையில் என்ன பேசுறது ? தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற எங்களது மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியரையும், எழுத்துலக ஜாம்பவான் திரு.எஸ்ரா.அவர்களையும், பற்றாக்குறைக்கு திரைப்பட டைரெக்டரையும், வைத்துக் கொண்டு தத்துப் பித்தென்று உளறிடப்படாதே !!" என்ற டர் தொற்றிக் கொண்டது ! பற்றாக்குறைக்கு ஆசிரியப் பெருமக்கள் & மாவட்ட நிர்வாக ஆளுமைகளும் !!

    லேட்டாக எனினும் லேட்டஸ்ட் அங்கீகாரம் சார்.. உண்மையிலேயே பெரிய அங்கீகாரம் இதுசார்.. மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  66. ஒரு வாசகனாக நெஞ்சை நிமிர்த்தி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் மொமெண்ட் இது. கலெக்டர் மற்றும் விழா அமைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  67. உங்களின் எத்தனையோ அழகான,அசரடிக்கும், நகைச்சுவை ததும்பும் பதிவுகளுக்கு மத்தியில் முழுவதும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் நிரம்பி வழியும் அற்புதமான பதிவு... ❤️

    பதிவு முடியும் வரையில் நாங்களே ராஜபாளையம் காந்தி கலைமன்ற அரங்கினுள் புனித மனிடோ அருகே நின்று அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்த்த உணர்வு👌

    Hats off to You & Lion comics Sir👑

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விக்ரம் செம்ம செம்ம

      Delete
    2. ///நாங்களே ராஜபாளையம் காந்தி கலைமன்ற அரங்கினுள் புனித மனிடோ அருகே நின்று அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்த்த உணர்வு///

      சும்மாதானே நின்னுகிட்டிருந்திருப்பீங்க.. நிகழ்வுகளையெல்லாம் வீடியோ எடுத்திருக்கலாமே?
      குறைந்தபட்சம் புனிதமனிடோவுடன் ஒரு செல்ஃபீயாவது?!!😝

      Delete
    3. நான் இல்ல சார் நாங்கள்ள்ள்... 😀

      நீங்களும் தானே அங்க இருந்திங்க... எல்லாத்தையும் பார்த்தீங்க... அப்புறம் எதுக்கு வீடியோ லாம்...😂🤪

      Delete
    4. ///Vijay @ROFL///
      புனித மானிடோ உங்க கண்ல குத்திடுவார்... அப்படிலாம் சிரிக்காதிங்க பரணி சார்😅🤗

      Delete
    5. JSVP😂😂😂😂😂👏👏👏

      ///நீங்களும் தானே அங்க இருந்திங்க... எல்லாத்தையும் பார்த்தீங்க...///

      அடக்கடவுளே!! காட்டுவாசி மாதிரி இலைதழையெல்லாம் கட்டிக்கிட்டு உங்க பக்கத்துல நின்னுகிட்டு எடிட்டர் பேசிய ஒவ்வொரு வரிக்கும் தொப்பை குலுங்க குலுங்க சிரிச்சுகிட்டிருந்தாரே.. அவரா ஆயிரமாயிரம் செவ்விந்திய கூட்டங்களின் ஆகச் சிறந்த கடவுளான புனிதமனிடோ?!! நான் ஏதோ அந்த மேடையில் பெர்பாமென்ஸ் பண்ண வந்த நாடக கலைஞர்னுல்ல நினைச்சேன்?! 😝

      Delete
    6. @E.V sir,
      சான்ஸே இல்ல, உங்க காமெடி & thinking👌👌👌😂😂😂👑

      Delete
    7. நன்றி நண்பர்களே 😇🙏☺️☺️
      JSVP இப்போதான் ஆரம்பிச்சுருக்கார்.. பாருங்க அவரோட ஆட்டத்தை!! 😁💐🤝

      Delete
    8. பார்க்கதானே போறீங்க இந்த காளியோட (விக்ரம்) ஆட்டத்த ☺️

      Delete
    9. E.V sir, உள்ளூர் ஆட்டக்காரர் உங்களுக்கு முன்னாடி அசலூர் டம்மி ஆட்டங்களெல்லாம் எடுபடாது சார்😜

      Delete
    10. பரணி ஸார், நானே ஆடி போய் இருக்கேன்...😂 நீங்கள் லாம் ( குறிப்பா மெயின் ஆட்டக் காரர் E.V சார்) ஆடுவதை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்தி கொள்கிறேன் சார்🤗🤗🤗

      Delete
  68. அருமை டியர் எடி... ஒரு மாவட்ட ஆட்சியர் நமது வாசகர் என்பது ஒரு சூப்பர் டூப்பர் ஹைலைட் என்றால், அவரோடு சேர்த்து ஒரு இலக்கிய ஆளுமை, ஒரு சினிமா பிரபலம் என்று ஒரு பெரும் படையுடன் மேடையை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்ததே பெருமை தான்.

    விரைவில் முழு வீடியோவையும் பார்த்து ரசிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம். சர்வம் காமிக்ஸ் மயம். 😎👍

    ReplyDelete
  69. //தங்க கல்லறையும் அதே மாதிரி தந்துவிட்டால் தொந்தி பாரம் குறஞ்சுடப் போகுது// . தங்கக் கல்லறை கேட்பவரின் அடையாளம் டெக்ஸ் ரசிகர் மட்டுமல்ல, லயன் முத்து காமிக்ஸின் என்சைக்ளோ மீடியா மரியாதைக்குரிய டெக்ஸ் விஜயராகவன் சார். டெக்ஸ் ரசிகராக டெக்ஸ் மறுபதிப்புதான் வேண்டும் என்று கேட்காமல் டைகரின்மாபெரும் காவியமான தங்கக் கல்லறை கேட்கும் .stvrசாரின் காமிக்ஸ் நேசத்திற்க்கு ஒரு ஸ்பெசல் பூங்கொத்து.

    ReplyDelete
  70. //குறைந்த பட்சம் புனித மனிடோவுடன் ஒரு செல்ஃபியாவது//அசத்தறிங்க செயலரே சூப்பர் டைமிங்

    ReplyDelete
    Replies
    1. 🙏தளத்தில் உங்களது தொடர் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது ராஜசேகர் ஜி!💐👍

      Delete
  71. காமிக்ஸ் உலகம் ஒரு குறுகிய வட்டம். காமிக்ஸ் கதைகள் படிப்பவர்கள் சிறுவர்கள் என்ற எண்ணம் மேதாவி களாய் நினைத்துக் கொண்டு இருக்கும் பலருக்கு உண்டு. அதை உடைத்தெறிந்து அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது மேற்படி நிகழ்வு. Classic கதைகளை ஒரு முறை ரூ 50 க்கு பதிப்பித்து விட்டு இனி இப்படிப்பட்ட மறுபதிப்பிற்கு வாய்ப்பில்லை என்று கூறியது நினைவுள்ளதா சார்?
    இப்போது பார்த்தீர்களா
    'மாற்றம் ஒன்றே மாறாதது '

    ReplyDelete
  72. 'காமிக்ஸ் வெற்றி கழகம்' தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! தமிழ் காமிக்ஸ் உலகின் தன்னிகரில்லாத வெற்றியாளர் சார் நீங்கள்!
    லட்சோப லட்சம் வாழ்த்துக்கள் காத்துக் கிடக்கின்றன சார் உங்களுக்காக!!

    ReplyDelete
  73. சூப்பர். சூப்பர். சார். வாழ்த்துக்கள். அருமையான நெகிழ்வான தருணம் சார். சீனியர் எடிட்டர், தங்களுடைய, ஜூனியர் எடிட்டரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் சார். இது ஆரம்பமே.
    💐💐💐💐👏👏👏👏👏

    ReplyDelete
  74. நெகிழ்ச்சியான பதிவு சார்.. அடிவயிறு குழைந்து போய் கிடக்கிறது.. பதிவின் நடுவினிலே கண்கள் சந்தோசத்தில் துளிர் விட்டதை தவிர்க்க முடியவில்லை.. ❤️❤️❤️❤️

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. குத்துங்க எஜமான் குத்துங்க...!

    ஸ்பூன் அண்ட் ஒயிட் ஜோடியின் இரண்டாவது சாகசமான இது, முந்தைய சாகசத்தை விட சற்றே ஆழமான புரிதலை இந்த கதைத்தொடரின் மீது விதைத்துச் சென்றுள்ளது. தலைப்பைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம், இது தேறுமா? இதெல்லாம் ஒரு தலைப்பா? என்பதே. கூடவே, ஏன் இப்படி ஒரு தலைப்பை நம்ம ஆசிரியர் வெச்சிருக்கார் என்ற கேள்வியும்!!! வழக்கம் போல கதைக்கு நியாயம் செய்யும் வகையில் தலைப்பும், தலைப்புக்கு நியாயம் செய்யும் வகையில் கதையும், இரண்டையும் தூக்கி நிறுத்தும் வசன நடையும், நம்மையும் சொல்ல வைத்து விடுகிறது - ''குத்துங்க எஜமான் குத்துங்க...! என்று...

    அமெரிக்க வரலாற்றில் சீனர்களின் தாக்கம் இருப்பதற்கு காரணம், அங்கு எழுப்பப்பட்டுள்ள சைனா டவுன்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. முதன்முதலில் உருவாக்கப்பட்ட சைனா டவுன் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளது என்பது ஒருவரி தகவல். இந்த சைனா டவுனின் ஒவ்வொரு அசைவையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் தான் நம்ம எஜமான் டான்! அவருக்கு பிள்ளையாகப் பிறந்து, சற்றும் சளைக்காத குண்டு குள்ளரிப்பயல் தான் ச்சீ தூ என்ற சின்ன எஜமான்! மகன் மீது பாசம் இருந்தாலும், அதை வன்மையாக வெளிப்படுத்தும் பெரிய எஜமான் செய்யும் நிழலுலக விஷயங்களை, குள்ளநரி வேலை செய்து குழி பறிக்க நினைக்கும் சின்ன எஜமானை வளைத்துப் போட்டு, கண்டு பிடித்து, உண்மையை உலகுக்கு உணர்த்த நினைக்கிறாள் நம்ம ஹீரோயின் பால்கனி!

    இதை வழக்கம் போல தப்பிதமாகப் புரிந்து கொள்ளும் குள்ள ஸ்பூனும், நெட்டை ஒயிட்டும் அதகளமாகக் களமிறங்குகிறார்கள். டானுடைய பையன் செய்ய நினைக்கும் ஒவ்வொன்றையும், தங்களை அறியாமலேயே இவர்கள் நிறைவேற்றி வைத்திட எஜமானுக்கோ மண்டை சூடேறுகிறது. எஜமானுடைய கோபத்தைக் கேள்விப்பட்ட ச்சீ தூ (சின்ன எஜமான்), தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டது என்று நினைக்க, உண்மையான குட்டு வெளிப்பட்டதோ பால்கனிக்கு. பால்கனி புள்ள தங்களை விட்டுட்டு ச்சீ தூ-வை உண்மையிலேயே வளைத்துப் போட்டிருப்பதன் காரணம் தெரியாத மங்குணி ஸ்பூன்-ஒயிட் ஜோடி, அவனை போட்டுத்தள்ள நினைக்கிறார்கள்.

    இதற்கிடையில், பால்கனியை சிறைபிடித்து, கட்டி வைத்து கொடுமை செய்ய தொடங்குகிறார் கிழ டான்! தங்களுக்கு போட்டியாக முளைத்த ச்சீ தூ-வை கொன்று விட்டு, இருவருக்குள் மட்டும் பால்கனிக்கான போட்டியை வைத்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள் ஸ்பூனும், ஒயிட்டும். 2 பேரும் வேறு வேறு அக்கப்போர்களை செய்து சைனா டவுனுக்குள், வஜன மழைகளுடன் நுழைகிறார்கள். அதிலும் எங்கிட்ட சரசம் பண்றதுக்குன்னே வருவானுங்களோ! என்ற வடிவேலு டயலாக் சொல்லும் போது, க்ரைம்-காமெடி தெறிக்கிறது. உங்களுக்கு எதிரா தப்பு செஞ்சது உங்க புள்ள தான், அதனால அவன குத்துங்க எஜமான் குத்துங்க என்ற விசுவாசியின் டயலாக்கும் வேற லெவல்.

    கதையின் முதல் 20 பக்கங்களில் குள்ள ஸ்பூன் துப்பாக்கிகளை ரகம் ரகமாக சொல்லி 0.40, 0.44 என்று வகுப்பெடுத்து அலப்பறை செய்தால், கதையின் கடைசி 10 பக்கங்களில் ஜிங்டி சேன் என்ற ஆள் மாறாட்டம் செய்யும் ஒயிட் அஜால்-குஜால் செட்டுக்குள் நுழைந்து தன்னுடைய அலப்பறைகளை செய்து பேர் வாங்குகிறார்.

    சைனா டவுனுக்குள் இருப்பவனெல்லாம் குங்ஃபூ தெரிந்தவனாக இருப்பானோ என்று எண்ணச் செய்யும் அந்த ப்ரென்ச் ப்ரை விற்கும் ஐரோப்பிய தடியனும், சீனனாகவே இருந்தாலும் ஜாக்கிசான், ஜெட்லி, புரூஸ்லியைத் தவிர சீன மொழியில் எதுவும் தெரியாத, ஆம்பிளைகளைக் கூட்டி வர ஓடும் அப்பிராணியும் கதையை நன்றாகவே நகர்த்திச் செல்கிறார்கள்.

    ஸ்பூன் அண்ட் ஒயிட் - தங்களிடமும் என்னவோ இருக்குன்னு சொல்ல வெச்சுட்டாங்க!

    ReplyDelete
  77. //ஸ்பூன்
    அண்ட்-. ஒயிட் -தங்களிடமும் என்னவோ இருக்குன்னு சொல்ல வெச்சுட்டாங்க.// வழக்கம்போல அசத்திட்டிங்க discoverpoo .சார்

    ReplyDelete
  78. அற்புதம்....🙏❤️... இது... நீங்கள்
    "தவமிருந்து பெற்ற வரம் " sir... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. ❤️❤️❤️....

    ReplyDelete
  79. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete