நண்பர்களே,
ஞாயிறு இரவு எப்போது கண்ணயர்ந்தேன் என்று எனக்கே தெரியாது...உங்களின் உற்சாகப் பதிவுகள், தொலைபேசி அழைப்புகள் என்று நிஜமானதொரு ரகளையான பொழுதாய் அன்றைய தினம் கழிந்தது. திங்களும், செவ்வாயும் பிரயாணங்கள் ; இன்டர்நெட் மல்யுத்தம் என்று சென்றிட்டதால் இப்போது வரை இங்கே தலைகாட்டிட முடியவில்லை ! இப்போதும் கூட இரு வரிகள் டைப் செய்ய இருபது நிமிடங்களுக்கு மேலாய் மொக்கை போட்ட கதை தான் !
நண்பர் ராஜ்குமார் ஆதங்கத்தோடு NEVER BEFORE ஸ்பெஷல் ன் விலை குறித்து பதிவிட்டதும், தொடர்ந்து for and against பலவிதக் கருத்துப் பரிமாற்றம் நடந்தேறிடுவதையும் இப்போது தான் பார்த்திட்டேன். ஒவ்வொரு பதிவிற்கும் தனிப்பட்ட பதிலளிக்க நான் தயார் என்ற போதிலும் "இம்சை அரசன் இன்டர்நெட் " அதனை இன்றிரவு அனுமதிக்காது என்றே தோன்றுகிறது !
நமது காமிக்ஸ் பயணத்தின் வயது 28 என்பதை இம்மாத நியூ லுக் ஸ்பெஷல் நினைவூட்டிடும். (இந்த இதழ் ஜூலை 18 முதல் அனுப்பிடப் படுமென்பதை இந்த சைக்கிள் gapல் சொல்லிவிட்டால் ஒரு வேலை முடிந்த மாதிரி ஆச்சு !)
இந்தப் பயணத்தில், நாம் விலைகளில் செய்திட்ட பரிசோதனைகள், குட்டிக் கலாட்டாக்களை சத்தியமாய் இந்தியாவில் வேறு எந்தவொரு பதிப்பகமும் செய்திருக்குமென்று எனக்குப் படவில்லை. ஒரு ரூபாய்க்கு மினி லயன் ; இரண்டு ரூபாய்க்கு ஜூனியர் லயன் - (அதுவும் முழு வண்ணத்தில் லக்கி லூக் கதையோடு ) ; டிக்ஷனரி சைசில் 5௦௦+ பக்கங்களோடு லயன் தீபாவளி மலர் ரூபாய் 10 விலையில் ; விசித்திரமானதொரு ஒடுக்க சைசில் திகில் இதழ்கள் மூன்று ரூபாய் விலைகளில் ; எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல 852 பக்கங்களில் இரத்தப் படலம் தொகுப்பு ரூபாய் 2௦௦ விலையில் என்று குரங்கு கிளைக்குக் கிளை தாவியது போல் நாம் விலைகளில் துளியும் நிரந்தரமின்றித் தாவி வந்தது எல்லோருக்கும் பரிச்சயமே. சொற்ப விலையினில் இதழ்களை வெளியிட்டு நாட்டுக்குச் சேவை செய்ததாக மார்தட்டிடுவது எனது நோக்கமல்ல ; நான் சொல்ல வருவது என்னவெனில் விலைகளைப் பொறுத்த வரை, we have come a full circle !
2012 வரை எனது ஒரே நோக்கம், குறிக்கோள் , எல்லாமே நமது காமிக்ஸ்கள் பரவலாய் வாசகர்களைச் சென்றடைந்திட வேண்டும் ; விலை இதற்கொரு தடையாக இருந்திடக் கூடாதென்பதே ! அடிக்கடி சைஸ் மாற்றும் யுக்திகள் எல்லாமே விலையேற்றத்தைத் தவிர்த்திட, அல்லது தள்ளிப்போட்டிட நான் செய்த குட்டிக்கரணங்கள் தான். தரத்தை உயர்த்த வழியின்றி, சர்வதேசப் பதிப்பகங்களின் காமிக்ஸ்கள் ஒரு பக்கம் ஜொலிக்கும் போது, நியூஸ் பிரிண்டில் பரிதாபமாய் நாம் காட்சியளித்தாலும் உடும்புப் பிடியாய் அந்த format ஐ விட்டு அகலாமல் பிடிவாதம் பிடித்தவன் நானே. ஆனால் ஒரு நிலையில் இனி இதழ்கள் வெளியிடுவதேன்பதே சாத்தியமல்ல என்று மனதளவில் மூட்டை கட்டியது எனக்கு மட்டுமே தெரிந்த சங்கதி. விற்பனையில் தேக்கம் ; வசூலில் பரிதாபம், தமிழகத்திற்குள் ஊருக்குக் குறைந்தபட்சம் இரு முகவர்களிடமாவது பணத்தை முழுவதுமாய் இழந்த ஆற்றாமை ...கையில் தேங்கி நின்ற முந்தைய இதழ்களின் சுமை என்று திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்தது இருளே !
முழுவதுமாய் நம்பிக்கை இழந்ததொரு பிற்பகலில் பாரிஸ் நகரில் நம் பதிப்பகத்தினரை சந்திக்க வேண்டியதொரு அவசியமான சூழலில் ; அவர்களை எதிர்கொள்ளவே அஞ்சிக்கொண்டு (ராயல்டி கட்டணங்கள் எக்கச்சக்கமாய் பாக்கி இருந்தது அப்போது !!)அவர்களது அலுவலகத்தின் அருகாமையில் இருக்கும் ஒரு மழலையர் பள்ளியின் பார்க்கில் அமர்ந்து எவ்வளவு நேரம் மருகி இருப்பேன் என்பது எனக்கும், என்னை வினோதமாய்ப் பார்த்து அகன்றிட்ட அந்தக் குட்டீஸ்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும். பணம் சம்பாதிக்கும் முயற்சியில் தோற்றிடும் போது கூட எனக்கு இத்தனை வலி இருந்தது கிடையாது ; அடுத்த முறை விட்டதைப் பிடித்துக் கொண்டிடலாமென்ற நம்பிக்கையும், தைரியமும் என்னுள் உண்டு. ஆனால் இதுவோ வேறு விதமான வலி ....நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயத்தை முழுவதும் உதறிட வேண்டிய நாள் நெருங்கிட்டதோ என்ற தடுமாற்றம் ! சந்தோஷ வேளைகளில் மூளை தெளிவாய் செயல்பட்டிடுவதும், கிலியில் இருந்திடும் போது அதுவும் உறைந்து போய்விடுவதை உணர்ந்தேன்.
ஒரு மாதிரியாக தைரியத்தை வரவைத்துக் கொண்டு பதிப்பகத்தினரின் அலுவலகத்திற்குள் நுழைந்தேன் ; பஞ்சப் பாட்டுப் படித்து, பாக்கிகளை செலுத்திட அவகாசம் கேட்டிட்டேன். மிகவும் தன்மையான நபர்கள் என்பதாலும் பல வருடப் பரிச்சயமானவன் என்பதாலும் முகம் சுளிக்காமல் அவகாசம் கொடுத்தனர் ; கூடவே கொஞ்சம் சமீபத்திய பிற மொழிப் பிரசுரங்களின் மாதிரிகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி தந்தனர். பாரிஸின் மெட்ரோ ரயிலில் அவற்றைப் புரட்டப் புரட்ட என் ஆற்றாமை அதிகமானது! இந்தோனேசிய மொழியில் லக்கி லூக் கதைகள் ; சிக் பில் என்று அற்புதத் தரத்தில் முழு வண்ணத்தில், hard cover ல் அவர்களது பதிப்புகள் அற்புதமாய் இருந்தன. 'எதைத் தினால் பித்தம் தெளியுமோ ? ' என்ற நிலையில் இருந்த எனக்கு, 'குறைந்த விலை ; நிறைய வாசகர்களைச் சென்றடைவது " என்ற concept ல் சொதப்பியாகி விட்டது ; இனி தரமாய் ; அழகாய் செய்ய முயற்சிப்போமே..முகவர்களுக்குக் கடன் என்பதே வேண்டாம்; முடிந்தளவு நேரடி விற்பனையில் முயற்சிப்போமே என்று தோன்றியது.
இது என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், சென்னை புத்தகத் திருவிழாவின் தேதிகள் நெருங்கி இருந்தன ; விஷ்வாவும் , நண்பர்களும் பல நாட்களாய் நம்மை அங்கே stall எடுத்து விற்பனை முயற்சிகளைச் செய்திடக் கோரிய வண்ணமே இருந்தனர். 'சரி...முயற்சித்துத் தான் பார்ப்போமே' என்று சென்னைக்கு புறப்பட்டது ; வாசகர்களை நேரடியாகச் சென்றடைய ஒரு வலைப்பதிவு சுலபமான வழி என்று எனது மகன் எனக்கு உபதேசிக்க, "சரி..அதையும் ஏன் விட்டு வைப்பானேன்' என்று நான் டிசெம்பர் இறுதியில் எழுதத் துவங்கியது .... எனது 'பாரிஸ் போதிமரம்' தந்த தெளிவின் பலனாய் "லயன் Comeback ஸ்பெஷல் உருவாக்கியது - என்று ஒரே சமயத்தில் பல புதுக் கதவுகள் திறக்கப்பட்டன ! தொடர்ந்த நிகழ்வுகளுக்கு நாம் எல்லோருமே இங்கு சாட்சிகளே !
இந்த sentiment segment இப்போது உங்களின் அனுதாபங்களையோ ; ஆறுதல்களையோ சேகரித்துத் தந்திடும் பொருட்டு அல்லவே அல்ல ...விலைகளில் நாம் இன்று கண்டிருப்பது ஒரு விதமான பரிணாம வளர்ச்சி ; நம் மேல் திணிக்கப்பட்ட வளர்ச்சி என்பதை சுட்டிக் காட்டிடவே ! இன்றைக்கு திரும்பவும் பத்து ரூபாய்க்குச் சென்றிடுவது தற்கொலை முயற்சி ; அதே போல் இந்த ரூபாய் 25 விலை என்பது 'இங்குமில்லை ; எங்குமில்லை' என்றதொரு திரிசங்கு சொர்க்க நிலை . அந்த விலையில் வண்ணத்தில் வெளியிடுவதென்றால் நிச்சயமாக எந்த ஒரு பிரபல ஹீரோவின் முழுக் கதையினையும் இன்று நாம் செய்து வரும் தரத்திலோ ; வண்ணத்திலோ ; சைசிலோ செய்திட இயலாது. குறைந்த பட்சம் ரூபாய் நாற்பது என்று விலை வைத்திட அவசியப்படும் - ஒரு முழு நீளக் கதையினை மட்டும் கொண்ட இதழாக வெளியிட்டிட. மாதந்தோறும் நாற்பது ரூபாய்க்கு ஒரு இதழ் ரெகுலராக வந்தால் போதுமென நீங்கள் அபிப்ராயப்பட்டால் அது சாத்தியமே ; சுலபமுமே..! ஆனால் 'பொசுக்'கென்று படித்து முடித்து விட்டது போல் தோன்றிடும் ஒரு வெறுமையை தவிர்த்திடுவது சிரமம் என்பது எனது கருத்து. ஆகையால் தற்சமயம் நாம் செய்து கொண்டிருக்கும் நூறு ரூபாய் எனும் format ஐ மாற்றிடுவதாய் எண்ணமில்லை. அது இப்போது போலவே தொடர்ந்திடும்.
இரு தினங்களுக்கு முன்னர் ஒரு முகவர் நம் இதழ்களை விற்பனை செய்யும் பொருட்டு நண்பரொருவர் மூலம் என்னிடம் பேசிய போது 'எவ்வளவு கமிஷன் தந்திடப்படும் ?' என்று கேட்டார்...'இருபது சதவீதம்' என்று சொன்னேன் ! 'இது குறைவாச்சே..இன்னும் கூடுதலாக கொடுக்க முடியாதா ?' என்று கேட்ட போது நான் அவருக்கு நமது நேரடி விற்பனை முறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லி விட்டு, நமது தற்சமய இதழ்களின் costing-ல் விற்பனையாளர்கள் கமிஷன் என்று எதுவும் செலவினமாக கணக்குப் போட்டிடுவது கிடையாது ; அந்தக் கிரயத்திற்க்கும் சேர்த்து பக்கங்களை ; தரத்தை மேன்படுத்திவிடுகிறோம் என்று புரியச் செய்தேன். இதை நான் இங்கே சொல்லிடக் காரணம் - நம் இதழ்களில் ஒவ்வொரு முறையும் - நீங்கள் கொடுக்கும் காசுக்கு முழு நியாயம் செய்திட எங்களால் இயன்றதை செய்திடுவோமென்பதை வலியுறுத்தவே. நூறு ரூபாய் இதழாக இருப்பினும் ; நானூறு ரூபாய் இதழாக இருப்பினும் உங்கள் பணத்திற்கு நிச்சயம் ஈடானதொரு புக் உங்களுக்குக் கிடைத்திடுவதே எங்கள் priority ல் தலையாயது.
நானூறு ரூபாய்க்கு ஒரு இதழ் என்பது நாற்பது ஆண்டுகானதொரு கொண்டாட்டமாகவே தவிர, உங்கள் பாக்கெட்களில் பொத்தல் போடும் முயற்சியாக அல்லவே ?!! மளிகைக் கடையினில் பாக்கி இருக்கும் போதும் கூட பண்டிகை வந்திட்டால் வீட்டில் மைசூர்பாகு செய்திடுவது இயல்பு தானே ??பொங்கலுக்கு ஊருக்குச் செல்லும் ஆசையில் ஆம்னி பஸ்ஸில் இரு மடங்குக்கு பணம் கொடுத்தாவது டிக்கெட் எடுக்கத் தானே செய்கிறோம் ?? போத்திஸ்களிலும் ; ஜாய் ஆலுகாஸ்களிலும் வரிசையில் நின்றிடுபவர்கள் அனைவருமே ஏ.சி அறையின் சொகுசில் அமர்ந்து ஏராளமாய் சம்பாதித்து ஆன்லைனில் பணம் அனுப்பிடும் பாக்கியவான்கள் அல்லவே ! 'சிரமங்கள் நித்தம் ; சிறப்பு நாட்கள் எப்போதாவதென்று' மனதைத் தேற்றிக் கொண்டே பணத்தை சந்தோஷமாய் எண்ணுபவர்களும் நாம் தானே !
அதுவும் நமக்கு முழுதாக ஆறு மாதங்கள் அவகாசமும் உள்ளன ...இந்த இதழுக்கான பணத்தினை அனுப்பிட ! அவசியமெனில் இரு பிரிவுகளாகப் பிரித்து அனுப்பிட்டாலும் நாங்கள் பெற்றிடத் தயாரே ! வாழ்க்கையின் சிரமங்களை ; பணப் பிராண்டல்களின் வலிகளை மெய்யாக உணர்ந்து வளர்ந்திட்டவன் நான் ; பணத்தின் அருமையும், அதனை சேகரிக்க அவசியப்படும் உழைப்பையும் அறியாதவன் நானல்ல... ! இனி ஒரு சந்தர்ப்பம் இது போல் எழுந்திட பத்து வருடங்கள் ஆகிடும் ; அத்தி பூத்தாற் போல் வந்திடும் ஒரு சிறப்பு நாளுக்கு இத்தனை கிலேசம் அவசியம் தானா ?
அப்புறம் இந்த 'குறைந்த விலைக்கு கருப்பு வெள்ளையில் சாதா edition, கூடுதல் விலைக்கு வண்ணத்தில் தரமான பதிப்பு' என்பது பற்றி எல்லாம் சிந்திக்கவே நான் தயாரில்லை. 'இந்த மைசூர்பாகு விலை குறைந்தது - இதில் சக்கரையும் கிடையாது, நெய்யும் கிடையாது - கிலோ நூறு ரூபாய் தான் ' ; 'இது கிலோ நானூறு - சூப்பர் taste' என்று போர்டு போடுவதற்குச் சமானம் அது ! நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான்encourage செய்திடப் போவதில்லை !
பதிலாய்த் துவங்கியதொரு சங்கதி, பதிவாய் மாறிப் போனது - நீளம் கருதி ! 4096 எழுத்துக்களுக்கு மேல் டைப் செய்தால் அதனை ஒரு reply ஆக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது இணையதளம் !
நாளை சிந்திப்போம் folks !