Powered By Blogger

Saturday, November 22, 2025

ல.. லா.. லா.. லாருகோ 🔥

நண்பர்களே,

வணக்கம்! இப்போதெல்லாம் ஒரு வாரயிறுதிக்குப் பதிவை எழுத மோவாயில் கைவைத்தபடியே ரோசனைகளில் ஆழ்வது போலுள்ளது - "பச்சக்' என அடுத்த வாரயிறுதியும், அடுத்த பதிவுக்கான வேளையும் புலர்ந்து நிற்கிறது! யாராச்சும், ஏதாச்சும் சொல்லி ­ Father Time கிட்டே இந்த மாதிரியான வேகத்தில் ஓட்டமெடுக்க வேணாமே- ப்ளீஸ்? என்று கோரிக்கை வைத்துப் பார்க்கலாமே? நாட்களின் ஓட்டம் மின்னலாய் அமைந்திட, மாதக் கடைசியாகும் போது காலெண்டரில் ஒவ்வொரு தாளையும் காலையில் கிழிக்கும் போதெல்லாம் வவுத்துக்குள் புளியைக் கரைக்கிறது!

And இந்த நொடியில் ப்ரெஷாக கிருஷ்ணகிரிப் பகுதிகளிலேர்ந்து ஒரு லோடு புளியை இட்டாந்து வயிற்றுக்குள் கரைத்துக் கொண்டிருப்பவர் சாட்சாத் நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லி­யனரான லார்கோ வின்ச் தான்! ஏற்கனவே நமது வாட்சப் கம்யூனிட்டியில் இந்த லார்கோ ஆல்பம் பற்றியும் ; அதனில் முக்கிய பங்கு வகிக்கும் complex ஆன பங்குச் சந்தை சார்ந்த வர்த்தகங்கள் பற்றியும் சொல்­லியிருந்தேன்! உள்ளதைச் சொல்வதானால்- 2017-ல் முதல் அத்தியாயமும், 2019-ல் இரண்டாவது அத்தியாயமும் ரிலீஸ் கண்டிருந்த ஆக்கம் இது! So. நாம் 2020-ல், அல்லது 2021-ல் இதன் மீது பாய்ந்து, அள்ளி வந்திருக்க வேண்டும் தான்! ஆனால், கொரோனோ தருணங்களது மொக்கையின் புண்ணியத்தில் தாமதப்பட்டுப் போனது. இடைப்பட்ட சமயத்திலோ CINEBOOK-ன் ஆங்கிலப் பதிப்பும் வெளியாகியிருக்க, லாக்டௌன் நாட்களின் போதே அந்தக் கோப்புகளைக் கோரிப் பெற்றிருந்தேன்! படிக்கப் படிக்க தலை கிறுகிறுவென சுற்றுவது போலவேயிருந்தது! தொடரின் பிதாமகரான ஷான் வான் ஹாம் வெளியேறியிருக்க, இந்த ஆல்பம் முதலாய் எரிக் கியகோமெடி என்ற புதியதொரு கதாசிரியர் பொறுப்பேற்றிருந்தார் ! And அவரோ பங்குச் சந்தைகளில் அரங்கேறிடும் HFT எனும் கம்ப்யூட்டர் மூலமான பரிவர்த்தனைகளைப் பின்புலமாக்கி, இடியாப்பமானதொரு சாகஸத்தை உருவாக்கியிருப்பது தெரிந்தது! ஏற்கனவே லாக்டௌனில் கேராகிக் கிடந்தவனை இந்த ஆல்பம் புதுசாய் ஒரு ரங்க ராட்டினத்தில் ஏற்றிவிட்டது போலி­ருந்தது! 'ஊஹும்.. இது வேலைக்கே ஆகாதுடா சாமி!' என்ற தீர்மானத்தில் இந்த ஆல்பத்தைத் தமிழில் வெளியிடும் எண்ணத்தை கபளீகரம் பண்ணிவிட்டேன்! நடுவாக்கில் நண்பர்கள் இது பற்றிக் கேட்க ஆரம்பித்த போது, நிலவரத்தை ஒளிவின்றிச் சொல்­லியும் விட்டேன்! பங்குச் சந்தை சார்ந்த நிபுணத்துவம் இருந்தாலொழிய இந்தத் தமிழாக்கம் சாத்தியமாகாது என்று ஒரே மட்டாய் கைகளை உசத்திவிட்டிருந்தேன்! And அப்படியே பொழுதுகளும் ஓடியிருந்தன! Until last January!

போன ஜனவரியில் இந்த இடியாப்ப லார்கோ சாகஸத்துக்கு அடுத்த புது ஆல்பத்தினை "இரவின் எல்லையில்'' என்று வெளியிட்டிருந்தோம்! And அந்த ஆல்பம் செமத்தியான ஹிட்! சொல்லப் போனால், 2024 வருஷத்துக்கே ஒரு எக்ஸ்ட்ரா பூஸ்ட் தந்த இதழாகவும் அது அமைந்து போனது! அப்போது லார்கோ சார்ந்த கோரிக்கைகள் மறுக்கா தலைதூக்க- மதுரை நண்பர் நாகராஜ சேதுபதி இதன் மொழியாக்கத்தினைப் பண்ணித் தர கரம் உசத்தியிருந்தார்! "ஹை..ஜாலி­... ஜாலி­.. என்றபடிக்குப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, நடப்பாண்டிக்குள் "போர் கண்ட சிங்கம்'' எனறு லார்கோவை அறிவித்திருந்தேன்! And இது ஒரிஜினலாய் நவம்பருக்கான இதழாகவே திட்டமிட்டிருந்தோம்! நமது 2026-ன் அட்டவணையினையும் இந்த இதழோடே வழங்குவது என்ற எண்ணத்தில் அட்டைப்படத்திலும் "2026-ன் அட்டவணையினை கேட்டு வாங்குங்கள்'' என்றுமே அச்சிட்டு வைத்திருந்தோம்! ஆனால், அக்டோபரில் நம்ம டெக்ஸ்+ ராபின் தீபாவளி மலர்கள் சற்றே தாமதமாக வந்ததாலும், அட்டவணையினை முன்கூட்டியே நாம் வெளியிட்டு விட்டதாலும்- லார்கோ for நவம்பர் என்பது கட்டாயமின்றிப் போய்விட்டது! தவிர, அந்த நொடியில் "சாம்பலி­ன் சங்கீதம்'' பணிகளுக்குள் கழுத்து வரை சிக்கி நின்றேன் என்பதால், கோடீஸ்வரக் கோமகனை ஆண்டின் இறுதி மாதத்துக்கு மாற்றியிருந்தோம்! And பற்பல கடல்கள், மலைகள், குளங்கள், குட்டைகளையெல்லாம் தாண்டிய பிற்பாடு "சாம்பலி­ன் சங்கீதம்'' பணிகள் நிறைவுற்றிருக்க- இந்த வாரத்தின் நடுவாக்கில் லார்கோவைக் கையிலெடுத்தேன்! 

சமீப ஆண்டுகளாகவே ஒவ்வொரு புது மொழிபெயர்ப்பாளரின் பணியினையும் கையிலெடுக்கும் போதும் தாமாய் உசந்திடும்  புருவங்கள், இம்முறையும் அதே வேலையைச் செய்து வைத்தன! ஏற்கனவே இந்த ஆல்பத்தினை DTP செய்திடும் சமயமே நம்மாட்கள் - "கொஞ்சம் வித்தியாசமா இருக்க மாதிரித் தோணுது'' என்று மெள்ள கோடிட்டுச் சொல்­லியிருந்தனர் ! நானோ LA BOMBE-ல் முத்துக் குளித்துக் கொண்டிருக்க- "பரவால்லே... செட் பண்ணுங்க, பார்த்துக்கலாம்!'' என்ற சொல்லி­ நகர்ந்திருந்தேன்!

To cut a long story short- பங்குச் சந்தை சார்ந்த நிபுணத்துவம் என்பது வானவில்லின் ஒரு முனை மாத்திரமே ; அதனை எல்லோருக்கும் புரியும் விதமாய் சொல்வதும், அலுப்புத் தட்டாமல், கதை சொல்லலுக்குள் அதனைப் புகுத்துவதும் வானவில்­லின் மறுமுனை என்பதும், மெது மெதுவாய்ப் புரிந்தது! பற்றாக்குறைக்கு லார்கோ கதைகளுக்கென ஒரு தனிப்பட்ட ஸ்டைல் & பாணியிருக்க, அதனையும் எழுத்துகளில் கொணர்வதென்பது மகா அத்தியாவசியம் என்பதுமே உறைத்தது! So இத்தனை நெளிவுகளும், சுளிவுகளும் இழையோடும் ஒரு பணியை புதுசாய் பேனா பிடிக்கும் நண்பரிடம் தூக்கித் தந்ததே அவருக்கு நாம் செய்த அநீதி என்றுபட்டது! 

Honestly லார்கோவின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பினை செய்திருக்கும் நபரெல்லாம் கோவில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்! இந்த ஒற்றை ஆல்பத்துக்குத் தான் என்றில்லை - தொடரின் அத்தனை ஆல்பங்களுக்கும் அந்த மனுஷன் செய்திருப்பதெல்லாம் கனவிலும் யாருக்கும் சாத்தியப்படா உச்சங்கள்! So" "இந்தாங்க சார் க்ரிக்கெட் மட்டை ; அதோ டி.வி.யிலே ஓடற ரோஹித் ஷர்மாவை நல்லாப் பார்த்துக்கிட்டு, அதே போல ஆடுங்க!'' என்று நண்பரை இக்கட்டில் மாட்டி விட்டிருப்பது புரிந்தது! To his credit அவரும் இயன்றமட்டிலும் முயற்சித்திருந்தார் தான் - ஆனால், லார்கோவுக்கென நாம் மனதளவில் போட்டு வைத்திருக்கும் உசரமான templates-களுக்கு அது போதாதென்பது புரிந்தது! So பேஸ்தடித்த மூஞ்சி சகிதம் லார்கோவின் ப்ரெஞ்ச் ; இங்கிலீஷ் ப்ளஸ் தமிழ் ப்ரிண்ட் அவுட்களோடு கடை விரித்து உட்கார்ந்தேன்!

இக்கட ஒன் குட்டிக்கதை!! இந்த Disposable needles-களெல்லாம் வந்த பிற்பாடு ஊசி போட்டுக் கொள்வதெல்லாம் அத்தனை வலி­மிகுந்த நொடிகளாகிடாது என்பது எனது அபிப்பிராயம்! Becos - நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் நாட்களில், இந்த disposable needles கிடையாது ; அனைத்தும் மெட்டல் ஊசிகள் 🤕🤕..! ஊருக்குள் "திபு திபு'வென Health inspectors புகுந்து ஆங்காங்கே தற்காலி­க முகாம்கள் அமைத்து, மெட்டல் நீடில்களைக் கொண்டு "பச்சக்- பச்சக்'' என காலரா தடுப்பூசிகள்; BCG தடுப்பூசிகள் போடும் சமயங்களிலெல்லாம் ஒரு வாரத்துக்கு ரூம் போட்டு அழலாம்! அதிலும், திருப்பதி போலான ஜனம் அதிகம் கூடிடும் புண்ணிய ஸ்தலங்களில், கோவிலி­ன் ஒவ்வொரு வாசலி­லும் தெலுங்குப்பட வில்லன்களுக்கே பேதியெடுக்க வைக்கும் டெரர் உருவங்கள், கிட்டக்க சின்னதாய் ஒரு சிம்னி விளக்கு மாதிரி ஒன்றை எரிய வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள்! அவை Bunsen's Burners..! ஊசி போடும் நீடில்களை கிருமிகளின்றி சுத்திகரிப்பு செய்யும் கடமையை ஆற்ற அந்நாட்களில் உதவிடுபவை! ஒரு நீடிலை மாட்டுவார்கள்- யாருக்காச்சும் ஒரு குத்து! அதே நீடிலை மறுநிமிஷம் அந்த விளக்கில் எரியும் ஜுவாலையில் காட்டி காய வைப்பார்கள்; மறுநொடி அடுத்த "பச்சக்'! யோகமிருந்தால் நீடில் புதுசாய் உள்ள நொடியில் நாம் ஊசி போட்டுக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்திடும் பட்சத்தில், திருப்பதியிலிருந்து திருத்தணி வரை கேட்கும் நம்ம அலறல்களோடு வேலை முடிந்து போகும்! மாறாக அந்த நீடில் தொடர்ச்சியான 'பச்சக்- பச்சக்'களில் மொட்டையாகிப் போயிருக்கும் நொடியில் நம்ம turn வந்து சேர்ந்தால் திருப்பதியி­லிருந்து நாம் எழுப்பக் கூடிய மரண ஓலம் திருநாகேஸ்வரம்- திருச்செந்தூர் வரைக்குமே கேட்கும் வாய்ப்புகள் கணிசம்! ஒரு கட்டத்தில் இந்த Bunsen's Burners-களோடு ஸ்கூல்களுக்கு வந்து, ப்ரின்சிபாலின் ரூமில் அமர்ந்தபடிக்கே ஒவ்வொரு வகுப்பிலி­ருந்தும் மாணாக்கரை லைனாக வரவைத்து ஆளாளுக்கு பூஜங்களில் ஒரு பொத்தலைப் போட்டு விடும் நாட்களில் நிஜமான டெரரை அனுபவிக்க முடியும்! நம்ம முறை வரும் வரை லைனில் காத்திருப்பதற்குள் ஆளாளுக்கு காலுக்கடியே, கண்ணீரில், வியர்வையில், இன்ன பிற திரவங்களில் ஒரு குளமே கட்டியிருப்பார்கள்! இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் எனில், அதே 'டர்'ரோடு தான் நான் லார்கோவின் பணிக்குள்ளே புகுந்தேன்! கிட்டத்தட்ட 96 பக்கங்களையுமே மாற்றி எழுதணும்... and அதுவும் தேதி 20 ஆகிப் போயிருந்த நிலையில் என்பதோடு, இது இடியாப்பமோ இடியாப்பம் என்ற புரித­ல் தான் உதறச் செய்து கொண்டிருந்தது!

ஆனால், 2020-ல் இந்தக் கதையை இங்கிலீஷில் முதன்முறையாக வாசித்த மண்டையனுக்கும், 2025-ன் இறுதியில் வாசித்திடும் கோமுட்டித் தலையனுக்குமிடையே ஒரு வேறுபாடு இருந்ததை சிறுகச் சிறுக ஆச்சர்யத்தோடு உணர முடிந்தது ! Oh yes- கதை அன்றைக்குப் போலவே சவாலாகத் தான் இன்றும் காட்சி தந்தது! ஆனால், இம்முறை இரண்டு சமாச்சாரங்கள் இந்த மலையேற ஒத்தாசையாகி நிற்பதை உணர முடிந்தது! முதலாவது சமாச்சாரம்- நம்ம AI நுண்ணறிவின் இன்றைய பிரவாகம்! முன்பெல்லாம் ஒரு விஷயத்தை கூகுளில் தேடி, இங்கே போய், அங்கே போயென தோண்டித் துருவ அவசியமாகிடும் விஷயங்களை - இன்றைக்கு ஒற்றை நொடியில் ChatGPT; Gemini; Perplexity; Grok- என ஒவ்வொரு நுண்ணறிவுச் செயலியும் வாழை இலை போட்டுப் பரிமாறுவதை வாய் பிளந்து பார்த்தேன்! நமது சந்தேகம் என்னவோ- அதனை இந்த அரூப அசாத்தியன்களிடம் கேட்டால், கிளிப்பிள்ளைக்குப் பாடம் நடத்துவது போல் விளக்கிப் புரிய வைத்து விடும் அதிசயத்தின் புண்ணியத்தால்- அந்தப் பங்குச் சந்தை புதிர்களில் இடரும் ஒவ்வொரு தருணத்திலும் சமாளிக்க சுலபமாகவே இருந்தது! Maybe ஐந்து ஆண்டுகளுக்கு முன்னமே இந்தச் செயலிகளெல்லாம் இருந்திருந்தால் நான் அத்தனை மிரண்டிருக்க மாட்டேனோ- என்னவோ?!

And பிரதானமான காரணம் # 2 பற்றியும் சொல்லணும் தான்! என்றைக்கோ ஒரு வேலை, ஜோலி­ இல்லாத சாவகாசப் பொழுதில் பின்திரும்பிப் பார்த்தால் எனது பணிக்காலத்தில் 2025 ஒரு ஜுப்பரான பொழுதென பளீரிடப் போவது நிச்சயம் என்பேன்! Becos- "சாம்ப­லின் சங்கீதம் பணிகளுக்கு முன்" - "சாம்பலி­ன் சங்கீதம் பணிகளுக்குப் பின்'' என முழியாங்கண்ணனை இரு அத்தியாயங்களாய்ப் பிரித்திடும் அதிசயம் இந்த நடப்பாண்டில் தான் நிகழ்ந்துள்ளது! அங்குமே நண்பர் கார்த்திகைப் பாண்டியன் முன்வந்திருக்காத பட்சத்தில் - LA BOMBE இருக்கும் திசையின் பக்கமாகக் கூட தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன்! அந்த ப்ராஜெக்ட்  நனவாகிய பிற்பாடு, அதனுள்ளுமே முழுசாய் இறங்கிப் பணியாற்றுமொரு நாக்குத் தொங்கிடும் அனுபவத்துக்குப் பிற்பாடு - லார்கோவெல்லாம் ஒரு டெரர் பார்ட்டியாகத் தெரியவே காணோம்! என்ன தான் பங்குச் சந்தை - பங்காளிச் சண்டை என்று சிக்கல்ஸ் விரவியிருந்தாலும், அடிப்படையில் அந்த லார்கோ ஸ்டைல், ஆக்ஷன், தேசம் விட்டு தேசம் நகர்ந்திடும் களங்களெல்லாம் எனது மிரட்சியை மட்டுப்படுத்த உதவிடுகின்றன! So ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே குடையைப் பார்த்து மிரளும் மாட்டைப் போல ரிவர்ஸ் கியர் போட்டவன் இன்று AI துணையுடன் மெது மெதுவாய் லார்கோவோடு வர்த்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்! 

And அந்த சர்வதேச நிதிநிர்வாகம் சார்ந்த கதைக்களத்தில்- ஈயம் பூசுனா மெரியும் இருக்கோணும், பூசாத மெரியும் இருக்கோணும் என்பதில் நிரம்பவே கவனம் காட்ட வேண்டியுள்ளது! "பாருங்கோ சார்- கம்பி மேலே நடக்குது'' என்றபடிக்கே AI கற்றுத் தரும் விஷயங்களோடு உங்களை ஒரே நாளில் பங்குச் சந்தை மேதைகளாக்கிட நான் ஓவராய் டெக்னிக்கலாகப் போட்டுத் தாக்கினால், தெறித்தடித்து ஓடிவிடுவீர்கள் என்பது புரிகிறது! So துளியும் விபரங்களில் விடுதலின்றி ; yet கதை சொல்லலோடு சுவாரஸ்யமாய் அவற்றை ஐக்கியமாக்கிடும் வித்தையை நாடி இந்த நொடியில் ஐயாம் ஒரே பிஸி! சர்வநிச்சயமாய் இதைச் செம்மையாய் செய்திட கொஞ்சம் அவகாசம் பிடிக்குமென்பதால், நவம்பரில் டிசம்பரையெல்லாம் எதிர்பார்த்திட வேணாமே ப்ளீஸ்? "சாம்பலி­ன் சங்கீதம்'' ஒரு வரலாற்று ஆவணம் எனும் போது அங்கே தகவல்களை இயல்பாய் பரிமாறினால் போதுமென்றிருந்தது! ஆனால், இதுவோ yet another கதை தான்! So, கதை சொல்லலுக்கான சகல சாமுத்ரிகா லட்சணங்களிலும் விடுதல் இருக்கலாகாதே?! ஆக இது வேறொரு விதத்திலான சேலஞ்சாக உள்ளது!

இந்த நொடியில் விட்டத்தைப் பார்த்தபடிக்கே செந்தில் பாணியில் "ஹெ.. ஹெ.. ஹெ..''என்று நகைக்கத் தான் தோன்றுகிறது ! Simply becos நடப்பாண்டினில் "Crisp reading'' என்பதே தாரக மந்திரமென்ற வேட்கைகளில் தான் திட்டமிட்டிருந்தோம்! And களங்கள் சுலபமாகயிருந்தால் - எங்களது பணிகளுமே லைட்டாகிடுமே என்ற நப்பாசை மனசுக்குள் குடியேறியிருந்தது! ஆனால், நாட்களின் ஓட்டத்தோடு, எதேதோ மாற்றங்களும் நிகழ்ந்திட, ஜனவரி 2025 முதலாகவே, துணிகளைக் காயப் போட காற்றோட்டமாய் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் எனது நாக்காரே பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்! Maybe, just maybe - 2026 தான் பணிகளில் இலகுத்தன்மை நர்த்தனமாடப் போகுமொரு வஜந்த காலமாகிடுமோ- என்னமோ? Fingers crossed folks!

ரைட்டு- இதோ லார்கோவின் அட்டைப்பட ப்ரிவியூ+ உட்பக்க பிரிவியூ! பில்லியனரோடு பழகிப் பார்க்கும் படலம் முடிஞ்ச பிற்பாடு இளம் டெக்ஸ் & கார்ஸனின் 320 பக்க சாகஸத்துக்குள் டைவ் அடிச்சாகணும்! So இங்கே இதற்கு மேலாய் செலவிட நேரம் நஹி என்பதால் கிளம்புகிறேன் guys!

புறப்படும் முன்பாக வழக்கம் போலவே சந்தா சார்ந்த நினைவூட்டல்ஸ்! FAMILY சந்தாக்கள் ஏகமாய் முன்னிலை வகிக்க, நமது இலக்கில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தை கடந்தாச்சு! And இம்முறை சந்தோஷச் சேதி என்னவெனில், சந்தாக் குடும்பத்தினில் சில புதியவர்களையும் காண முடிகிறது! செம சந்தோஷம் & welcome to all ! மீத நண்பர்களும் தொடரும் நாட்களில் சந்தா 2026 ரயிலுக்கான டிக்கெட்களை போட்டு வைத்தால் இன்னும் சிறப்பு!

Bye all folks...See you around..! Have a lovely weekend!




26 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. அடடே லார்கோ செம்மையாக இருக்கப்போகுது. I'm waiting

    ReplyDelete
  4. ஆரம்பிக்கலாங்களா...!!!

    ReplyDelete
  5. புது பதிவுல கேட்கணுமுனு ,காலைல இருந்து நினச்சுகினு இருந்த கேள்விய கேட்க வேணாணு சொல்லிட்டிங்களே.சரி மனச தேத்திக்கிறோம்.உங்கள் சிரமம் புரிகிறது. டிசம்பரில் டிசம்பரே ஓ.கே.

    ReplyDelete
  6. சார்.. என்னைப்போன்றவர்களுக்கு பங்கு சந்தை பற்றிய அறிவு ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. அப்படியிருக்க, பங்காளி லார்கோ பங்குச் சந்தைச் சாகஸத்தில் பங்கு கொள்ளும் கதையைப் படிக்கப்போவது மலைமுகட்டிலிருந்து நாங்கள் bungee jump செய்வதைப்போல பயமுறுத்துகிறது!

    ஆகவே, சேலம் வாசகர் சந்திப்பில் சுடச்சுட 'சாம்பலின் சங்கீதம்' வெளியிட்ட கையோடு, 'லார்கோ கதை விளக்கச் சிறப்பு கூட்டம்' ஒன்றையும் நடத்தினீர்களேன்றால் கதையைப் படிக்க நேரிடும்போது காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டே படித்து மகிழ்வோமே சார்! 😊

    ReplyDelete
  7. பதிவை படிக்கவே தலை சுத்துதுங்க சார்,அப்ப எந்த அளவுக்கு லார்கோ நெட்டை வாங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது. இத்தனை சிரமங்களும் புத்தகம் வெளிவந்ததை பார்த்தால் காணாது போய்விடும் என்பது உள்பக்க கலரை பாத்தாலே தெரிந்து கொள்ள முடிகிறது. 4K HD யில் ஒரு மினி சினிமாவை காண ஆவலுடன் வெய்ட்டிங்.....

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்...!!!

    ReplyDelete