நண்பர்களே,
வணக்கம்! "மாற்றம் ஒன்றே நிரந்தரமானது'' என்று எக்கச்சக்க தபாக்களுக்கு கேட்டிருப்போம் தான்! ஆனால், வாழ்க்கையின் சில தருணங்களுக்கு இது பொருந்தாது போலும்! அதற்கென்ன சிலபல உதாரணங்கள் சொல்லலாம்!
*பக்கத்து டேபிளுக்கு நல்லா "புஸ்'ஸென்று இளவரசரின் இடையைப் போல உப்பி, எண்ணெயே குடிக்காமல் வந்து சேரும் சன்னா படூராவைப் பார்த்து ஜொள்ளு விடும் நம்ம பழக்கம் ஒரு போதும் மாறாது!
*அதே நினைப்பில் நாமளும், அதே சன்னா படூராவை ஆர்டர் பண்ணினால், குற்றால குளியலுக்கென மாலிஷ் செய்த மொக்கைச்சாமியைப் போல - தொறுக்குத் தொறுக்கென்று எண்ணெயில் குளித்தபடியே, சப்பிப் போனதொரு வஸ்து 'பட்டூரா' என்ற பெயரில் நம்மைத் தேடி வந்து சேர்வதும் ஒரு போதும் மாறாது!
*ரைட்டு...நல்லதா லோயர் பெர்த் கிடைச்சிருக்கு.. நிம்மதியா கட்டையைச் சாய்க்கலாம்னு மனக்கோட்டையோடே ரயிலில் ஏறினால் ட்ரில்லிங் மிஷினைக் கொண்டு ப்ளாட்பாரத்தில் துளை போடும் அதே உக்கிரத்தோடு குறட்டை விடும் நீர்யானை மாமா நமக்கு நேர் மேலே மிடில் பெர்த்தில் சயனம் பண்ணுவதும் ஒருக்காலும் மாறாது!
*"நச்'னு செலெக்ஷன் பண்ணியிருக்கோம்! பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸா தூக்கி நீட்டினால், பாரியாள் அப்படியே உச்சி மோர்ந்திடுவாள் என்ற கனவோடு போனால் - டப்பியைத் திறந்து பார்த்த முதல் கணத்திலேயே அஷ்டகோணலாகிடும் வதனத்தோடு- "ஏன்யா அம்மாம் பெரிய கடையிலே வேற கலரே இல்லியா? இதை ஒரு புடவைன்னு செலக்ஷன் வேற பண்ணினீராக்கும்?'' என்று வீட்டம்மாக்கள் பாராட்டுப் பத்திரங்கள் வாசிப்பதிலுமே மாற்றமே நிகழாதே!!
இப்படியே அடுக்கிச் செல்லக் கூடிய "மாற்றங்கள் இல்லா நிகழ்வு"களோடு இன்னொன்றையுமே சேர்த்துக் கொள்ளலாம்! And அது தான் ஆகஸ்டில் ஈரோட்டில் நமக்கென நிகழ்ந்திடும் மேஜிக்! 2013 முதலாகவே ஒவ்வொரு ஆகஸ்டிலும்- புத்தகவிழா விற்பனைகள் ஒரு பக்கமெனில் உங்களைச் சந்தித்து நாங்கள் பெற்று வரும் உற்சாக மின்சாரங்கள் ஈரோட்டின் மறக்க இயலா உச்சங்கள் என்பேன்! நடப்பாண்டுமே அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல!
*சீனியர் எடிட்டர் நம்மோடில்லை..!
*ரொம்பச் சமீபமாகவே சேலத்தில் இரங்கல் கூட்டத்துக்கென சந்தித்துள்ளோம்!
*இரண்டே வாரங்களுக்கு முன்னே தான் க்ரிக்கெட் & செஸ் போட்டிகளுக்கென நண்பர்கள் ஒரு ஞாயிறை முழுசாய் செலவிட்டிருந்தனர்!
*And நவம்பரில் சேலத்தில் "சாம்பலின் சங்கீதம்'' ரிலீஸுக்கென மீண்டும் சந்திக்கும் திட்டமிடலும் உள்ளது!
இந்தப் பின்னணிகளில் நடப்பாண்டின் ஈரோட்டுப் புத்தக விழாவின் முதல் வாரயிறுதியில் சந்தித்திட உங்கள் மத்தியில் பெரியதொரு ஆர்வம் அலையடிக்கவில்லை தான்! So நானுமே சகோதரியின் இல்லத்து விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு, டிக்கியை சிவகாசியிலேயே பார்க் பண்ணுவதே நலமென்று தீர்மானித்திருந்தேன்! ஆனால்... ஆனால்.. "இந்த தபா சந்திப்பு இல்லியா?'' என்ற வினாக்கள் சிறுகச் சிறுக பெருக ஆரம்பிக்க, எனக்குள் லைட்டாய் ஒரு நெருடல்! "இத்தனை வருஷத்துப் பழக்கம்... பொசுக்கென உதறிட்டோமோ?'' என்று பட்டது! சரி.. ரைட்டு.. முதல் வாரயிறுதி இல்லாங்காட்டி என்ன - மறு ஞாயிறுக்கு ஈரோட்டு விஜயத்தை வைத்துக் கொள்ளலாமென்ற நினைப்பு துளிர் விட, ஆரம்பித்தது! "ஈரோட்டுப் புத்தகவிழா க்ரூப் என்று இயங்கி வரும் வாட்சப் க்ரூப்பில் இது குறித்து லேசாக வினவிப் பார்த்த போது கூட கொட்டாவிகள் கலந்த பதில்களே கிட்டின! "ஆஹா.. அவசரப்பட்டுட்டோமோ? ஆளில்லாத கடையிலே சாயா ஆத்த வான்டடா கையை உசத்திட்டோமோ?' என்று மண்டையைச் சொறிந்தேன்!
ஒவ்வொரு முறையும் ஈரோட்டின் ஏற்பாடுகளுக்கு துவக்கம் தந்திடும் ஸ்டாலின் சாரும் பேச ஆரம்பித்திருக்க, மொத்தம் பதினெட்டு பேர் தான் ஞாயிறு சந்திப்புக்குத் தேறுவார்களென்று லிஸ்ட் போட்டிருந்தோம்! இவர்கள் நீங்கலாக - செஸ் போட்டிக்கென டெம்போவை வச்சு ஏற்பாட்டாளர்கள் கடத்தி வரக் கூடிய நண்பர்களும் தேறுவார்கள்; so மிஞ்சி மிஞ்சிப் போனால், 25 தலக்கட்டுக்களைத் தாண்டாது என்பது யூகமாக இருந்தது! போன இரண்டு வருஷங்களும் OASIS ஆரங்கில் கிட்டத்தட்ட 225+ பேர் ஆஜரான நிலையிலிருந்து இந்த இருபத்தி ஐந்து என்ற நம்பர் பொசுக்கென்று உறுத்தியது! சரி.. மொத்தமே இம்புட்டுப் பேர் தான் ஞாயிறுக்கு எனும் பட்சத்தில், ஸ்டாலின் சார் ஆபீஸிலேயே சந்திப்பு; சாப்பாடு; செஸ் போட்டி- என சகலத்தையும் கோவிந்தா போட்டுவிடலாமேயென்று மகாசிந்தனை உதயமானது! ஆனால், செஸ் போட்டிகளுக்கென பவானிசாகர் டேமைத் தவிர்த்த பாக்கி இலக்குகளையெல்லாம் ஏற்பாட்டாளர்கள் காலை -மதியம் -இரவென பரிசீலித்து வந்த நிலையில் - சின்னதாக ஏதேனுமொரு ஹாலை புக் பண்ணிவிட்டால் நம்ம சந்திப்புக்கும் சுலபம்; சதுரங்கத்துக்கும் சௌகரியம் என்று தீர்மானித்தேன்! இதெல்லாமே நடந்தது வியாழன் இரவினில்!
"கடகடவென டீம் ஈரோடு களமிறங்கினர்; மளமளவென மினி அரங்குகளின் போட்டோக்களை அனுப்பி வைத்தனர்! ஒரு 40 பேர் அமரக் கூடியது போலானதொரு ஹாலே சல்லிசாய் சாத்தியமாகிட "டக்'கென்று அங்கேயே துண்டை விரித்தோம் & அதையே அறிவிப்பாகவும் செய்து வைத்தேன்! Maximum 35 பேர் வந்தாலே பெரிய விஷயம்; அதற்கேற்ப சாப்பாட்டு ஏற்பாடுகளையும் செய்திடலாமென்று சொன்னேன்!
எனக்கோ ஞாயிறன்று கிடா விருந்தென்றால் மக்கள் குஷியாகிடுவர் என்ற எண்ணம்; பச்சே நம்ம ஏற்பாட்டாளர் சைவப் - பார்ட்டி என்பதால் கிடாவுக்குத் தடா போட்டோம்! And அடியேன் அந்த சைவ மெனுவை முன்மொழியும் படலமும் இனிதே நிறைவுற்றது!
இந்த முறை வைத்தியர் ஒண்டியாளாய் தான் லேகிய டப்பியோடு ஈரோடுக்குப் பயணமாகிட வேண்டியதொரு சூழல்! ஜுனியர் எடிட்டருக்கு வேறு பெர்சனல் வேலைகள் & அப்பா இல்லாத மினி மீட்டிங்குக்கு கருணையானந்தம் அங்கிளை இழுத்தடிக்கவும் தோன்றவில்லை! So முதன்முறையாக சனி மாலையில் தனித்து ரயிலில் ஏறிய போது- கொஞ்சமாய் "பக்கோ'வென்றிருந்தது! சரி ரைட்டு- சின்ன ஹால்.. சின்ன gathering.... so பெருசாய் ஆத்த உரைக்குத் தேவையெல்லாம் இராதென்று மனசைத் தேற்றிக் கொண்டே நள்ளிரவில் ஈரோட்டில் இறங்கினேன்! VOC பார்கில் புத்தகவிழா நடந்த அந்த நாட்கள் மனசெல்லாம் ஓட்டமெடுக்க, பெருமூச்சோடு ரூமில் செட்டில் ஆனேன்! 2025 ஈரோட்டு விழாவின் விற்பனைகளோ decent ஆக இருந்தன தான்; அதே சமயம் கூரையிலேறி கூப்பாடு போடும் அளவிலுமே அதுவரை இருக்கவும் இல்லை தான் ! சரி.. இந்த முறை எல்லாமே சற்றே lowkey தான் என்று மனசைத் தேற்றியபடியே வாட்சப்பைப் பார்த்தால் - "ஞாயிறு காலை வருகை தரவுள்ளோர் லிஸ்ட் 45-ஐ தொட்டுவிட்டது " என்ற தகவல்! "ஹை.. பரால்லியே?! சாப்பாட்டைக் கூட்டி விடலாம்!' என்றபடிக்கே பதில் போட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்து போனேன்!
காலையும் புலர்ந்தது & ஒவ்வொரு ஈரோட்டு விழாவின் போதும் ஸ்டாலின் சாரின் இல்லத்தில் அரங்கேறிடும் ஒரு breakfast மீட்டிங் இம்முறையும் அதே போல துவக்கம் கண்டது! சுடச் சுட கேசரி & வடையில் ஆரம்பித்து ஆளாளுக்கு வயிற்றை ரொப்பி முடித்த சற்றைக்கெல்லாமே "மெபிஸ்டோ வருவாரா - வர மாட்டாரா?'; "Science fiction போடுவீரா ? நஹியா?'' என்ற ரேஞ்சில் கேள்விக் கணைகளோடு நண்பர்கள் "கச்சேரியைத் ' துவக்கி வைத்தனர்! பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் ஓடியதே யாருக்கும் தெரியலை and காலை பத்து மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாண்டுக்கு நேர் எதிரே அமைந்திருந்த அந்த ஹோட்டல் ஹாலில் வெளியூர் நண்பர்கள் குழுமத் துவங்க, அங்கே புறப்பட்டு விடலாமெனத் தீர்மானித்தோம்!
புது ஹோட்டல்.. புது ஹால்... புதியதொரு சூழல்,.. ஆனால், நண்பர்களிடையே இழையோடிய மகிழ்வும்.., உற்சாகமும் மட்டும் துளி கூட மாற்றமின்றி தெறிக்க விட்டுக் கொண்டிருந்தது! ரொம்ப வருஷங்களுக்கு முன்னே VOC பார்க் வாசலிலிருந்த Le Jardin ஹோட்டலின் நாலாவது மாடியில் ஒரு சிறு அரங்கில் சந்தித்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தன! ஆனால், இந்த ஹாலோ அதைவிடப் பாந்தமாய் இருக்க, நண்பர்கள் கையைக் காலை நீட்டியபடியே கச்சேரியைத் துவங்கினர்! வழக்கமாய் புத்தக விழா அரங்கின் பின்னுள்ள மரத்தடியில், மாலைப் பொழுதுகளை இதுபோன்ற கேள்வி - பதில் sessions-களோடு ரகளையாக்கிடுவது வாடிக்கை! இம்முறையோ இடமும், நேரமும் தான் மாறுபட்டனவே தவிர, அந்த மின்சார மகிழ்வுகள் அல்ல!
இது போலான sessions என்றைக்குமே எனக்கு எக்கச்சக்க ரூட்களில் உங்கள் ஒவ்வொருவரின் ரசனைகளுக்குள்ளும், சிந்தனைகளுக்குள்ளும் எட்டிப் பார்க்கும் வாய்ப்புகளைத் தந்திடுவது வழக்கம்! And மனம் திறந்து நீங்கள் பேசும் போதெல்லாமே இந்த பொம்ம புக் துறைக்கு ஆரோக்கியமான ஆயுள் காத்திருப்பது புரிந்திடும்! Was no different this time too!
தங்கக் கல்லறை ஹார்ட்கவர் இதழை நம்ம புனித சாத்தான்ஜியிடம் ஒப்படைக்கும் படலத்தின் போது, துளிர்விட்ட சிரிப்பலைகளும், மகிழ்வின் பிரவாகங்களும் மதியம் இரண்டு மணி சுமாருக்கு வயிற்றுப்பாட்டைக் கவனிக்கும் பொருட்டு எழுந்திட்ட நொடி வரை இம்மி கூட மட்டுப்படவில்லை! சிலர் மதியமாய் ஊர் திரும்ப வேண்டி இருந்ததாலும், செஸ் போட்டிகளைத் துவக்கிட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாலும் கேள்வி-பதில் ரகளைகளுக்கு "சுபம்'' போட வேண்டிப் போனது! அங்கே கேட்கப்பட்டட வினாக்களை பற்றி, பதிவின் இறுதியில் பதிவிடுகிறேன்!
சுவையான லஞ்ச்.. ஐஸ்க்ரீம்.. பீடா என்று வயிறுகளையும் குளிர்வித்த பிற்பாடு, செஸ் போட்டிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டு த் துவக்கி வைத்த கையோடு, நான் ரூமுக்குத் திரும்பிய போது மணி மதியம் மூன்று! அப்படி என்ன தான் பேசியிருந்தோம் - அலசியிருந்தோம் என்பது அந்த நொடியில் உள்ளுக்குள் register ஆகியிருக்கவில்லை - ஆனால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களை காமிக்ஸின் தேடல்களில் செலவிட்டுப் புளகாங்கிதம் அடைந்திருந்தோம் என்பது மட்டும் புரிந்தது! ரெகுலராய் மீட்டிங்குகளுக்கு வந்திடும் நண்பர்களின் முகங்களில் ரோஸ் பவுடர் கலந்த புன்னகைகள் என்றால், புதுசாய் ஜோதியில் ஐக்கியமாகியிருந்தோருக்கோ தலைகால் புரியாத உற்சாகம்! துவக்கத்தில் காலை நீட்டி அமர்ந்திருந்த நண்பர்கள், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒருத்தர் மடியில் இன்னொருத்தர் உட்காராத குறையாய், நெருக்கிப் பிடித்துக் குந்திட வேண்டிப் போயிருந்தது- becos அன்றைய வரவு எண்ணிக்கை 65....!! 25-ல் ஆரம்பித்த நம்பரானது தடாலடியாய் 65-ஐ தொட்டிருக்க, ஏதேதோ பல்டிகள் அடித்து டீம் ஈரோடு சமாளித்து விட்டிருந்தனர்!
செஸ் போட்டிகள் ஒரு பக்கம் ""கன்னித்தீவு' தொடரைப் போல நீண்டு செல்ல முக்கால்வாசிப் பேர் புத்தகவிழாவினை ரசித்திடப் புறப்பட்டிருந்தோம்! நாலே முக்கால் சுமாருக்கு நான் அரங்குக்குள் நுழைந்த போதே அட்டகாசமான கூட்டம் நெடுகிலும் தென்பட்டது! நாமிருந்தது முதல் வரிசையிலேயே என்பதால் - வந்திருந்த பெரும் ஜனத்திரளில் கணிசமானோர் நமது ஸ்டாலுக்குள் நுழையாது நகரவே இல்லை! இப்போதெல்லாம் ஒரு செம healthy trend-ஐ காண முடிகிறது! "காமிக்ஸா? தமிழ் காமிக்ஸா?' என்று ஊசிப் போன கருவாடைப் பார்த்தது போல் மக்கள் முகத்தைச் சுளித்த நாட்களெல்லாம் இப்போது போயே போச்சு! உள்ளே புகுந்தால் நிதானமாய் புக்ஸை ரசித்து, பிடித்த எதையேனும் வாங்கிப் போகத் தவறுவதே இல்லை! சிறுகச் சிறுக நமது tagline மெய்யாகி வருவதை உணர முடிகிறது - 7 முதல் 77 வரை அனைவருக்குமே நம்மிடம் ஏதாச்சும் இல்லாது போவதில்லை என்பதால்!
**க்ளாஸிக்ஸ் பிரியர்களுக்கு மாயாவி மாமா, ஜானி நீரோ சித்தப்ஸ் மட்டுமென்றில்லாது வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, காரிகன், சார்லி et al என்று இருப்பதால் செம ஹேப்பி!
**கமர்ஷியல் பிரியர்களுக்கு அள்ளி மாளாத நம்பரில் நாயக/நாயகியரும், இதழ்களும் நம் வசம் இருப்பதால், அவர்களும் ஹேப்பி அண்ணாச்சி!
**காமிக்ஸ்களுக்குப் புதியவர்களுக்கு டின்டின்.. லக்கி லூக் என்று கலர்புல் cocktail
**வீட்டு சுட்டீஸ்களுக்கென கபிஷ், கதை சொல்லும் காமிக்ஸ், ரின்டின் கேன், எலியப்பா என ஒரு அழகான வரிசை!
**கிராபிக் நாவல்களைத் தேடுவோருக்கோ, கென்யா.. ஒற்றை நொடி- ஒன்பது தோட்டா.. பிஸ்டலுக்குப் பிரியாவிடை etc..etc.. என்று லோடு லோடாய் ஆல்பங்கள்!
**கையில் கொஞ்சமாய் காசு வைத்திருக்கும் மாணாக்கருக்கோ ரூ.30/- விலைகளில் அட்டகாசமான கலர் இதழ்கள்!
என்று நமது collection-களில் "எல்லாமே இருக்கு- நல்லாவும் இருக்கு'' என்பதால் - ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் பாணியில் குடும்பம் குடும்பமாய் வருகை தருகின்றனர் இப்போதெல்லாம் ! மாலை ஏழு மணி சுமாருக்கு நான் ஊர் திரும்ப ரயிலைப் பிடிப்பதற்காக புத்தகவிழாவிலிருந்து கிளம்பிய வேளையில் கூட நெரிசல் இம்மியும் குறைந்திருக்கவில்லை! And அந்த ஞாயிறின் sales ஈரோட்டின் ஒற்றை தின விற்பனைக்கொரு புது உச்சமும் கூட!!
ரயில் நிலையத்தில் என்னை இறக்கி விட நண்பர்கள் வந்திட- அங்கேயும் கொஞ்ச நேரத்திற்கு அரட்டை தொடர்ந்தது! ரயில் ஏறி மேல் பெர்த்துக்கு சர்க்கஸ் பண்ணித் தொற்றியமர்ந்த நொடியில் மனசெல்லாம் உற்சாக மத்தளம் கொட்டிக் கொண்டிருந்தது போலிருந்தது! ரீல்ஸ்.. ஷார்ட்ஸ்.. OTT.... தளங்களின் அசுர வளர்ச்சி.. யூடியூப்பின் வீச்சு என்பதன் மத்தியில் இந்த பொம்ம புக் வாசிப்பானது எத்தனை காலத்துக்கு ஜீவித்திட இயலுமோ? என்ற வினாக்கள் எப்போதாவது தலைக்குள் தாண்டவமாடுவதுண்டு! அந்த நெகடிவ் சிந்தனைகளை புறம்தள்ள நிரம்பவே பிரயத்தனப்பட வேண்டி வரும் தான்! ஆனால், ஈரோட்டில் செலவிட்ட அந்தப் பன்னிரெண்டு மணி நேரங்களானவை சுத்தமாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவராட்டம் மனதை இலகுவாக்கியிருந்தது! இந்த அன்பும், நேசமும், காமிக்ஸ் காதலும் மனிதர் உணர்ந்து கொள்ளும் ரகமே அல்ல- அதையும் தாண்டி சாத்வீகமானது என்று மண்டைக்குள், குணா கமலின் மாடுலேஷனில் ஒலித்துக் கொண்டிருந்தது!
ஊர் திரும்பி, மறுநாள் வேலைக்குத் திரும்பி, வாட்சப் க்ரூப்களில் கரைபுரண்டோடிக் கொண்டிருந்த மகிழ்வுகளை தரிசித்த போது ஒற்றை தினத்துக்கு நான் மாத்திரமன்றி அனைவருமே பால்யங்களுக்குத் திரும்பியிருந்தது புரிந்தது! ஏதேதோ ஓட்டங்கள்- பொறுப்புகள்- பாடுகளுக்குள் ஜீவித்து வரும் நமக்கெல்லாம் இந்த காமிக்ஸ் எனும் சோலை எத்தனை precious என்பதும் அந்த நொடியில் ஸ்பஷ்டமாய் புரிந்தது! இதோ- அடுத்த சந்திப்பு எப்போதென்று இப்போதே மனசு அலைபாயத் துவங்கிவிட்டது!! விண்ணில் இருந்தபடிக்கே அப்பா ஈரோட்டின் இந்த லேட்டஸ்ட் அத்தியாயத்தையும் ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்ற திட நம்பிக்கையோடு லேசாக அடைத்திருந்த தொண்டையை செருமிக் கொண்டேன்!
இல்லியே - எங்களுக்கெல்லாம் கண்கள் வியர்க்காதே ..! நாங்கள்லாம் ஸ்டீல்பாடி சித்தப்புக்கள் ஆச்சே!!
And இதோ - அன்று அலசிய சில topics :
1.டெக்ஸ் தொடரில் மெபிஸ்டோ கதைகளுக்கும் இடம் கொடுக்கலாமே? என்ற கோரிக்கை!
இது புதிதே அல்ல தான் & இது குறித்த எனது நெருடல்களிலும் இரகசியங்களே கிடையாது தான். Yet - உங்களது சிந்தனைகள் ப்ளீஸ்?
2.Science-fiction காமிக்ஸ்... இவற்றிற்கு நம் மத்தியில் என்றேனும் இடம் கிட்டுமா?
Again இதுவொரு sensitive கேள்வி...! Maybe நாம் இவற்றை முயற்சிக்க வேண்டிய காலகட்டம் வேகமாய் நெருங்குகின்றதோ என்ற எண்ணம் உள்ளுக்குள்!! AI அசுர கதியில் மாற்றங்களை நிகழ்வித்து வரும் நாட்களிவை..... கொஞ்சமேனும் நாமும் அந்த மாற்றங்களுக்கு இசைவு சொல்லணுமோ - காமிக்ஸ் வாசிப்பில்? Your thoughts folks?
3.பராகுடா பாணியில் கடலில் அரங்கேறும் கதைகளுக்கு வாய்ப்புண்டா?
நிச்சயம் உண்டு... But சிக்கலே அவ்விதக் கதைகளின் நீளங்கள் தான்! குறைந்த பட்சமாய் ₹.450 விலைகளை அவற்றிற்கு நிர்ணயிக்க வேண்டி வரும் என்ற ஒரே காரணம் தான் தடை போட்டு வருகிறது! ஏற்கனவே பல முறை சொன்னது போல, சந்தா தொகைகள் நாம் பரிச்சயம் கொண்டுள்ள தொகைகளுக்கு அதிகமாகிட அனுமதிக்கலாகாதே என்ற வரையறை தான் காலை கட்டிப் போடுகிறது! But still - கடல் கொள்ளையர் சார்ந்த கதைகள் will stay on top of our priority list!
4.கென்யா பாணியில் அடுத்த நமீபியா தொடர் என்னாச்சு ?
Nopes - கதை படு மொக்கை என்பதால் அந்த எண்ணம் dropped !
5.அந்த 1000 பக்க டெக்ஸ் ஆல்பம் ??
இது முழுக்க முழுக்கவே round figure-கள் மீதான நமது காதல் உருவாக்கும் தேடலே அன்றி, வேறில்லை ! கிளாசிக், சூப்பர்-ஹிட் மறுபதிப்புகளை 350 பக்க ஆல்பங்களாய் லயன் லைப்ரரியில், கலரில் வெளியிடுவதை தொடர்ந்தால் சிரமங்களின்றி 3 புக்சில் அந்த ஆயிரம் பக்க எண்ணிக்கையினை எட்டிப் பிடித்து விடலாம் & படிக்கவும், பத்திரப்படுத்தவும் அந்த 3 புக்ஸ் சுலபமாக அமைந்திடும். மாறாக ஏக் தம்மில் ஆயிரம் எனில் பயில்வான் ஜாடைக்கு அமைந்திடும் புக்கை கையாள்வது உங்களுக்குத் தான் சிரமமாக இருக்கக்கூடும் ! So பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா ? அல்லங்காட்டி LED பல்புகள் வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமுங்களா ? சொல்லுங்க மக்களே !
6.ஆயிரம் பக்கங்களில் இளம் டெக்ஸ் ??
Uff....இது போலான மெகா முயற்சிகளின் பெரும் பகுதி மறுபதிப்புகளாய் இருந்தால் மட்டுமே தலை தப்பிக்கும் ! முழுசுமே புதுக்கதைகள் எனில் மொழிபெயர்ப்பிலும், எடிட்டிங்கிலும் நாக்கு மாத்திரமன்றி, சகல அவயங்களும் தொங்கிப் போய் விடும் என்பது உறுதி !! So இளம் டெக்ஸ் இப்போது போலவே 3 / 4 / 5 கதைகள் கொண்ட தொகுப்புகளாகவே தொடர்ந்திடும் ! 2026 -ல் காத்திருப்பது 3 அத்தியாய சாகசம் !
7.ஜான் மாஸ்டர் ? ரெட்டை வேட்டையர் ? விஷம் ? மேகி கேரிசன் Part 3 - இவையெல்லாம் எப்போது ?
2026 for sure !!
8.இளம் டைகர் தொடரில் இன்னமும் கலரில் மறுபதிப்பு கண்டிருக்கா "இளமையில் கொல் - Part 2 & 3 " பற்றி ??