Powered By Blogger

Wednesday, March 09, 2022

Pray for பழனி !

 நண்பர்களே,

வணக்கம். சீக்கிரமே காலைகள் புலர்கின்றன ; கடிகார முட்கள் நொடி பிசகாது தம் கடமையைச் செய்து வருகின்றன ; நேரங்களை பார்க்காமலே வயிறு பசியினை அறிவித்து தன் கோட்டாவை வாங்கிப் போட்டுக் கொள்கிறது ; சாலைகளில் எப்போதும் போல் ஜனம் மும்முரமாய் இங்கும் அங்கும் பயணித்து வருகின்றனர் ; நகைக்கடைகளிலும் கூட்டம் ; துணிக்கடைகளிலும் நெரிசல்  ; கடிகாரங்கள் இல்லாமலேயே பறவைகள் கூட்டுக்குத் திரும்பும் வேளையில் டி-வி முன்னே நாமும் ஐக்கியம் ஆகிறோம் ; இருள் கவிழ்ந்து, கண்கள் தூக்கத்தில் செருகும் போது, இன்னொரு சராசரியான நாளானது அமைதியாய்க் கடந்திருக்கிறது ! ஆனால்...இறைவனின் சித்தம் வேறென்றிருந்து, ஒரு சிக்கலான நோயுடன் மல்லுக்கட்டுவதே தலையெழுத்தென்று ஆகிப் போனால் ??? இதோ - இன்று நமது நண்பர் பழனிவேல் படுத்த படுக்கையாய், நினைவுமின்றி, ஒற்றை அறுவை சிகிச்சையிலிருந்து அடுத்த அறுவை சிகிச்சைக்கு நடத்தி வரும் போராட்டமே வாழ்க்கையாகிப் போகும் போலும் ! 

"கணையத்தில் புற்று நோய் !" என்று போன வருஷத்தின் ஏதோவொரு தருணத்தில் பழனி என்னிடம் சொல்லியிருந்தார் ; ஆனால் கொடுமையான அந்த நோயை வென்று விட முடியுமென்ற நம்பிக்கை அவரிடம் திடமாய் இருப்பது புரிந்தது ! அதுவரை எடுத்திருந்த பரிசோதனைகள் பற்றி  ; சென்னையில் ESI-யில் செய்திடவிருந்த அறுவை சிகிச்சை பற்றி ; டாக்டர்கள் தந்திருந்த நம்பிக்கைகளைப் பற்றியெல்லாம் எனக்கு அவ்வப்போது சொல்லுவார் ! "கணேஷ்ணா வீட்டுக்கு கிட்டே தான் ஹாஸ்பிடல் இருக்கு ; அவர் வீட்டிலே தான் தங்கியிருந்தேன்" என்பார் ! கொரோனாவின் இரண்டாம் அலை மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால், இன்னும் சீக்கிரமே ஆப்ரேஷன் செய்திருக்கலாம் என்று வருத்தப்படும் போது மட்டும் லேசாகக் கம்மும் குரலானது, மறு நொடியே உற்சாகத்தோடு தொடர்ந்திடும் ! ஜனவரியில் அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளதென்ற தகவலையும் சொன்ன மனுஷன் நமது ZOOM மீட்டிங்கிலும் கலந்து கொண்டார் - பைக் ஒட்டியபடிக்கே ! "வீட்டுக்குப் பத்திரமாகப் போகும் வேலையைச் செய்யுங்க சாமீ !" என்று கழற்றி விட பெரும்பாடாகிப் போனது ! 

ஜனவரியில் ஆஸ்பிடலில் அட்மிட்டும் ஆகி, ஒன்றன் பின் ஒன்றாய்ப் பரிசோதனைகள் நடந்தேறிய தினங்களில் ரெகுலராய் இரவுகளில் update செய்து கொண்டே இருந்தார் ! அறுவை சிகிச்சைக்குச் செல்லும் தினத்தின் காலையில் கூட எப்போதுமான உற்சாகத்துடன் எனக்கு தைரியம் சொல்லி விட்டுப் போனார் ! ஆனால் ஒன்றன்பின் ஒன்றாய் complications தொடர்ந்திட, அப்புறமொரு அறுவை சிகிச்சை ; maybe நாளைக்கு மூன்றாவதாயொரு அறுவை சிகிச்சை என்று ரண அவஸ்தையில் உள்ளார் ! நினைவின்றி தொடர்ச்சியாய் வென்டிலேட்டரில் உள்ளவரின் நிலை பற்றி அவரது மனைவியிடமும், துவக்கம் முதலாய் கவனித்து வரும் டாக்டர் A.K.K. ராஜா அவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது உணர நேரிடும் இயலாமையை விவரிக்கத் தெரியவில்லை எனக்கு ! உலகின் அத்தனை செல்வங்களும் இந்த நொடியில் பயன் தராது ; பிரார்த்தனைகளால் மட்டுமே அவரை மீட்டிட முடியும் என்பது மட்டும் புரிகிறது ! 

"இரத்தப் படலம்" மாத்திரமே (காமிக்ஸ்) உலகம் என்ற அவரது பிடிவாதங்களோடு நான் முரண்பட்டிருப்பேன் தான் ; ஆனால் இந்த நொடியில் அவர் நலமாய் எழுந்தால், இ.ப. ; ப.ப. - என எதைக் கேட்டாலும்  வெளியிடத் தயாராக இருக்கிறேன் ! பழைய உற்சாகத்தோடு எழுந்து வாங்க பழனி ; உங்களின் இ.ப.-spin-offs கோரிக்கைக்கு நான் உத்திரவாதம் ! ஜூடித் வார்னரையும் ; ஜோன்ஸையும் ; பெலிசிடியையும் ஒன்றிணைத்து ஒரு ஸ்பெஷல் இதழை போட்டுத் தாக்கிடலாம் !! போராடி, மீண்டு வாருங்கள் !! 

Guys.....இந்த நொடியில் கவலைக்கிடமாய்  உள்ள நம் நண்பருக்காக நம் பிரார்த்தனைகளை அர்ப்பணிப்போமே ? நாம் இப்போது செய்திடக்கூடியது அது ஒன்று மட்டுமே எனும் போது, அதனை உள்ளன்போடு செய்திடலாமே ப்ளீஸ் ? More things are wrought by prayer than this world dreams of - Alfred Tennyson.

113 comments:

  1. நண்பர் நலமுடன் திரும்ப இயற்கை வகை செய்யட்டும்!!!

    ReplyDelete
  2. Get well soon, dear Palani!
    With love and prayers

    ReplyDelete
  3. Remember in our prayers ! Get Well Soon Dear Pazhani !

    ReplyDelete
  4. //உலகின் அத்தனை செல்வங்களும் இந்த நொடியில் பயன் தராது ; பிரார்த்தனைகளால் மட்டுமே அவரை மீட்டிட முடியும் என்பது மட்டும் புரிகிறது !//

    Yes, a miracle can happen overnight.

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. என்னருமை நண்பர் பழனிவேல் விரைந்து நலம் பெற எல்லாம் வல்ல கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்.
    மனம் மிகவும் கனத்துக்கிடக்கிறது.நண்பர் பழனிவேல் சீக்கிரம் குணமடைந்து இல்லம் திரும்பிட இறைவனைப் பிரார்த்தியுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  7. என்னருமை நண்பா பழனி...

    எல்லாம் வல்ல பரம்பொருளே காத்தருள் பண்பானவனை...

    ReplyDelete
  8. நண்பர் பழனி அதே துள்ளலோடு மீண்டு (ம்) பழையபடி தனது உற்சாக படியில் படியேறுவார் என்ற பெரும் நம்பிக்கையுடன்

    இறைவனை மனமாற வேண்டுகிறேன்...

    ReplyDelete
  9. //;Guys.....இந்த நொடியில் கவலைக்கிடமாய் உள்ள நம் நண்பருக்காக நம் பிரார்த்தனைகளை அர்ப்பணிப்போமே //
    கண்டிப்பாக சார்...
    நண்பர் நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல பரபிரம்மத்தை பிரார்த்திப்போமாக...

    ReplyDelete
  10. XIII Spinoffs எப்படியும் வாங்கிடுவோம்... பாருங்க... என அறுவை சிகிச்சைக்கு செல்லும் முதல் நாள்... உற்சாகமாக கூறிச் சென்றார் பழனி... அவரது அயராத நம்பிக்கை நோயை வெல்ல கைகொடுக்கட்டும்...

    ReplyDelete
  11. Edi Sir..
    நண்பர் பழனி மீண்டு வருவார். மீண்டும் வருவார். எனது சாய்ராமிடம் வேண்டி கொண்டுள்ளேன்.பழனிக்கு நல்லதே நடக்கும்.நலமுடன் வருவார்.Om Sairam!.. Om Sairam!!.. Om Sairam!!!..

    ReplyDelete
  12. இறைவனின் அருளாலும், ஆசியாலும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
    🙏🙏🙏🙏

    ReplyDelete
  13. நண்பர் பழனி நலம் பெற்று மீண்டும் பழைய படி திரும்ப எனது பிரார்த்தனைகளும் ...

    ReplyDelete
  14. நண்பர் பழனிவேல் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
    🙏🙏🙏🙏

    ReplyDelete
  15. நானும் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  16. நண்பர் பழனி முழுமையாக குணம் அடைந்து நலமாக மீண்டு வர, இறைவனை வேண்டுகிறேன். நண்பர் பழனி நேயை கட்டாயமாக வென்று விடுவார்...

    ReplyDelete
  17. கண்டிப்பாக நமது நண்பர் மீண்டு வருவார் நம்மோடு இத் தளத்தில் பதிவுகள் இட்டு நலமுடன் முன்பைவிட பலமுடன் இருப்பார் என்னுடைய ஆலமரம் ஈஸ்வரன் அவரை கைவிட மாட்டார் 🙏🙏

    ReplyDelete
  18. நண்பர் பழனி விரைவில் நலம் பெற்று ,மீண்டும் நம்மிடையே வலம் வர ஷீரடி பாபா அருள் செய்ய வேண்டும் என்று பாபாவை இறைஞ்சுகிறேன்

    ReplyDelete
  19. நம்ம நண்பர் நம்மோடு மீண்டு வருவார்....
    எல்லாம் வல்ல எம்பெருமான் ஏழுமலையானை பிரார்த்திக்கிறேன்.....🙏🙏🙏🙏🙏

    மீண்டும் அவர் ஸ்பின் ஆப் கேட்பார்...

    ReplyDelete
  20. பழனிவேல் சார் நலமுடன் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  21. நண்பர் பழனிவேல் விரைந்து நலம் பெற எல்லாம் வல்ல கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  22. நண்பர் பழனி முழுமையாக குணம் அடைந்து நலமாக மீண்டு வர, இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. 🙏🙏நண்பர் பழனி மீண்டு வருவார்..👍மீண்டும் வருவார்..👍👍எல்லாம் வல்ல என் சாய்ராம் நம் பழனியை காப்பாற்றுவார்..🙏🙏🙏💐

    ReplyDelete
  24. மனது வலிக்கிறது😔
    நண்பர் பழனிவேல் மீண்டெழுந்து வர என் பிரார்த்தனைகள் 🙏🙏🙏

    ReplyDelete
  25. பழனிவேல் அண்ணன் விரைவில் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  26. God will be with you Palani. 🙏🏻🙏🏻🙏🏻. We pray for your recovery.

    ReplyDelete
  27. பழனிவேல் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  28. XIII போல் பல சோதனைகள் கண்டாலும், மீண்டு வருவீர்கள் பழனி. பூரண நலம் பெற்று ஆரோக்யமாய் தரும்பி வர் பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  29. ஆசிரியர் மற்றும் நண்பர்களது அன்பு பிரார்த்தனை மூலம் மட்டுமே பழனி மீண்டு வர முடியும். ஆண்டவா என் தம்பியை எனக்கு கொடுத்துவிடு K.V.GANESH

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அண்ணா,;உங்களுடன் நானும் பிராரர்த்திக்கிறேன்

      Delete
    2. நிச்சயமாக அண்ணா. உங்களுடன் நாங்களும் பிரார்த்திக்கின்றோம்.

      Delete
  30. வாசக நண்பர் பழனிவேல் sir மீண்டும் நல்ல முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  31. நண்பர் பழனி பூரண நலமாக அந்த பழனியாண்டவன் முருகனை மனமுருகி வேண்டிக்கொள்கிறேன் 🙏

    ReplyDelete
  32. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பழனி வேல் சார் நலமுடன் திரும்பி வாருங்கள்.

    ReplyDelete
  33. இறைவனை yaasikkirean.... Bharathi Nandheswaran...

    ReplyDelete
  34. நண்பர் பழனிவேல் அவர்கள் விரைந்து குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  35. இரத்தப்படலம் மீது தீராக்காதல் கொண்டிருக்கும் பழனி ஸ்பின்ஆப்' கதைகளுக்கென்றே மீண்டு(ம்) வருவார் என நம்பிக்கை கொள்வோம்.

    ReplyDelete
  36. ஏலே பழனி மக்கா சீக்கிரம் எழுந்துவா! உனது நோயை பற்றி கேள்விபட்ட நாள் முதல் உனது நினைவுதான்!

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  37. எனக்கு மிக்க நம்பிக்கை உள்ளது .. இதுலர்ந்து மீண்டு வருவேன் சகோ ஈரோடு புக்ஃபேர்க்கு என கூறி சென்றார் ..

    என் முருகன் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு கை விட மாட்டான் என்கிற நம்நிக்கை என்னுள்ளே இன்னுமும் ... தைரியமாருக்கிறேன் நான் .. மீண்டு வருவார் பழனிவேல் ..

    ===<*>


    { ஆனாலும் அந்த வெண்டிலேட்டர் எனும்போது என் அம்மா அதில் ( வெ.லே) இருந்த நினைவுகள் மேலோடுகிறது .. காக்கும் கடவுள் ணேசனும் .. தம்பி முருகனும் காத்தருள்வார்கள் என்கிற எண்ணம் என்னை விட்டு போகாது )

    ReplyDelete
  38. நம்முடைய பிரார்த்தனைகள் கண்டிப்பாய் அவரை மீட்டுக்கொண்டு வரும் எடிட்டர் சார்!

    ReplyDelete
  39. யோகி ராம் சுரத்குமார்
    யோகி ராம் சுரத்குமார்
    யோகி ராம் சுரத்குமார்
    ஜெயகுருராய;

    குருவருள் துணை நிற்கட்டும்!

    ReplyDelete
  40. நண்பர் பழனிவேல் அவர்கள் விரைந்து குணமடைய எல்லாம் வல்ல பழநி முருகனை பிரார்த்திக்கின்றேன்

    ReplyDelete
  41. விரைவில் நலம்பெற்று திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  42. நண்பர் பழனிவேல் முழுநலம் பெற்று ஆசிரியரிடம் மீண்டும் இரத்தப்படல மறுபதிப்பைக் கேட்பார். அவருக்கான நம் பிராத்தனைகளை நிச்சயமாக கடவுள் ஏற்றுக்கொள்வார். நண்பர் குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    🙏🙏🙏🙏🙏


    ReplyDelete
    Replies
    1. பழனி தெம்பாக வருவார் MAXI சைஸில் ஒரே இதழாக இரத்தப்படலம் தொகுப்பு கேட்பார் எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது

      Delete
  43. நண்பர் பழனி நலம் பெற்று மீண்டும் பழைய படி திரும்ப எனது பிரார்த்தனைகளும்....

    ReplyDelete
  44. நண்பர் பழனி விரைவில் நலம்பெற்று திரும்ப எனது பிரார்த்தனைகளும் !!!

    ReplyDelete
  45. அருமை நண்பர் பழனி, பழைய பழனியாக மீண்டும் விரைவில் வர இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏

    ReplyDelete
  46. ஆண்டவா எங்கள் நண்பனை
    எங்களிடம் கொடுத்துவிடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  47. காமிக்ஸ் மீது தீரா காதல் என்பதை விட, வெறி கொண்டவர் நண்பர் பழனி என்றே கூறலாம். நேரில் பார்ப்பவர்களுக்கு கூட வணக்கம் வைக்காத இந்த உலகத்தில், எங்கிருந்தாலும் அவ்வப்போது தொலைபசியில் குசலம் விசாரித்து விடுவார். காமிக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தால் மொபைல் சார்ஜ் தீரும் வரை அளவாளிவிடுவோம்.நமது புத்தகங்கள் கடல் கடந்த எத்தனையோ பாரசலில் அவரின் உழைப்பு உள்ளது.

    மீண்டு வருவார் இந்த போராட்டத்திலும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  48. பழனி அவர்கள் விரைவில் குணமடைய எனது குலதெய்வம் பொன் அழகு நாச்சியம்மன் இடம் வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  49. இறைவன் அருளால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று அந்த இறைவனிடம் பிராத்திக்கிறேன். மீண்டு வாருங்கள் அண்ணா...

    ReplyDelete
  50. 2013 ஈரோடு புத்தகத் திருவிழாவில் உங்களை சந்தித்தது இன்றும் நினைவில் உள்ளது பழனி, உங்கள் குட்டிப்பாப்பா வர்ஷாவை அழைத்துக் கொண்டு பல மைல்கள் பைக்கில் பயணித்து வந்தமைக்காக ஆசிரியரிடம் வாங்கி கட்டிக் கொண்டீர்கள், அப்பழக்கம் இன்றளவும் மாறவில்லை போலும்! பைக்கில் பயணித்த படியே ஜூம் மீட்டிங்கா?! ம்ம்...

    அன்றைக்குப் பிறகு நாம் பழகியதில்லை, பேசியதில்லை என்றாலும், பழனி என்றால் பதிமூன்று என்ற அளவில் அழுத்தமாகவே மனதில் பதிந்து இருக்கிறீர்கள். உங்கள் மனம் கவர்ந்த ஞாபக மறதியாளர் XIII-ஐ நினைவு கூறத்தக்க ஒரு நிகழ்வு கடந்த திங்களன்று என் வாழ்விலும் நிகழ்ந்தது. அன்றைய தினத்தின் ஒரு அரைமணி நேரத்தை அப்படியே மறந்து விட்டால் எப்படி இருக்கும் என்ற ஒரு திகிலான உணர்வை அன்று அனுபவித்தேன். விரைவில் நலமுடன் திரும்பி வாருங்கள் பழனி வாருங்கள், அதை பற்றிப் பேசுவோம்!

    பி.கு.: உண்மையைச் சொல்லி விடுகிறேன், எனது பழைய பதிவொன்றின் புண்ணியத்தில் தான் பாப்பா பெயரை நினைவுகூர முடிந்தது, மற்றபடி நினைவாற்றலில் நான் ஒரு XIV :)

    ReplyDelete
    Replies
    1. பழனி குடும்பத்தாரைப் பற்றி ஆசிரியர்:

      8 மாதக் கைக் குழந்தையையும், காமிக்ஸ் வாசிப்பிற்குத் துளிப் பரிச்சயமும் இல்லா மனைவியையும் அழைத்துக் கொண்டு 120கி.மீ. பிரயாணம் செய்து வந்த ஜோடிக்குத் தர நம் அன்பைத் தவிர வேறென்ன இருந்திட முடியும்? 

      சுட்டியை சுவைக்கத் துடிக்கும் நம் குட்டி வாசகி - என்ற தலைப்பிலான ஒளிப்படத்தைக் காண:

      http://lion-muthucomics.blogspot.com/2013/08/blog-post_14.html

      Delete
    2. நண்பர் ஸ்டாலினின் பதிவிலும் பழனி மற்றும் (ஆசிரியரின் கரங்களில் அமர்ந்திருக்கும்) வர்ஷாவின் உற்சாகத்தைக் காணலாம், இந்த இனிய நினைவுகளின் அதிர்வுகள் அவர் விரைவில் நலம் பெற உதவட்டும்:

      http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2013/08/9-11-8-2013.html

      Delete
    3. I was there in erode book fair 2013. Came only for comics. Sadly only salesman was there. Came back home

      Delete
    4. 2018 ஆ ? 2019 ஆ ? என்பது நினைவில்லை ; ஆனால் ஈரோட்டு வாசக சந்திப்பு நிகழ்விற்கு தன்னால் வர முடியாத போதிலும், தனது மனைவியையும், குழந்தைகளையும் மட்டும் அனுப்பி இருந்தார் பழனி ! யதார்த்தத்துக்குத் தொடர்பில்லாத அன்றைய பொம்ம புக் பகலில் நாமெல்லாம் ஒரு காமிக்ஸ் களேபர உச்சத்தில் லயித்திருக்க, சிறு குழந்தைகளோடு சகோதரி சுமதி சமாளித்து வந்தது இன்னமும் நினைவில் உள்ளது ! "சார்ர்ர்ர்ர்.....நான் வர முடிலே...அதனாலே வீட்டிலிருந்து சுமதியையும், புள்ளைங்களையும் அனுப்பிட்டேன் !!" என்று உற்சாகமாய் போனில் என்னிடம் நலம் விசாரிப்புமே !! அந்த நண்பர் இன்றைக்கு நினைவின்றி அல்லாடி வருவது மருகச் செய்கிறது !!

      Delete
    5. ///2018 ஆ ? 2019 ஆ ? என்பது நினைவில்லை ;///

      ---இது 2016 ஈரோடு விழாவில் சார்... பழனிக்கு லீவு கிடைக்காத சூழலில் அவரது மனைவியையும் குழந்தைகளையும் அனுப்பி இருத்தார்....

      காமிக்ஸிற்காகவே (இரத்தப்படலத்துக்காவே) வாழ்ந்து வருபவர், மீண்டும் நம்மோடு இரத்தபடல விவாதங்களில் கலந்துகொள்ளவேணும்....

      Delete
    6. என் கண்ணீரை அடக்கவும் துடைக்கவும் யார் இருக்கிறார்கள்...

      தனிமையில் அழுகிறேன்...

      ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு போய் வருகிறேன் ஒரு முறை...என்னால் இயன்றது அதுவே...

      Delete
  51. நீங்கள் யார் எனத்தெரியாது. ஆனாலும் நாம் எல்லோரும் காமிக்ஸ் குடும்பம். நநண்பரே எழுந்து வரவும்

    ReplyDelete
  52. நண்பர் பழனிவேல் விரைவில் குணமடைந்து மீண்டுவர இறைவனை வேண்டுகிறேன் .

    ReplyDelete
  53. நண்பர் பழனிவேல் விரைவில் குணமடைந்து வருவார்🙏

    ReplyDelete
  54. பழனிவேல் அண்ணா முழு உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  55. நண்பர் பழனிவேல் நலம் பெற இறவணை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  56. சகோதரர் பழனிவேல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.சாயிபாபாவை தொழுவோம் நல் ஆரோக்கியம் பெற்று மீண்டு வருவார்.

    ReplyDelete
  57. வணக்கம் நண்பர்களே
    தற்போது நமது நண்பர் பழனிவேலுக்கு செய்ய இருந்த மூன்றாவது அறுவை சிகிச்சை ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் கண்டுவருவதாலும் மேலும் இன்னும் சில மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டும் அவரது அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
    தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு நலமுடன் திரும்பி நம்மோடு மகிழ்ச்சியுடன் வலம்வர தொடர்ந்து ஆண்டவனை பிரார்த்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்...அனைத்து நண்பர்களும் கூடியதும் மகிழ்ச்சி...நம்ம பழனிட்ட அடுத்த மாதமே தொகுப்பு வேணும்னு கேட்கச் சொல்லுங்க...மருத்துவர் மார்த்தாவையும் கூடவே கேட்டு வாங்கச் சொல்லுங்க..

      Delete
  58. பழனிவேல் சாா் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்பி வரவேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏

    ReplyDelete
  59. சகோதரர். பழனிவேல். நலம்பெற. இறைவனை. வேண்டுகிறேன்

    ReplyDelete
  60. Get well soon Palani brother.
    With love and prayers

    ReplyDelete
  61. Get well soon ...hearty praying for him.....spinoff from this hudle..

    ReplyDelete
  62. Get well Palani. My prayers are with you.

    ReplyDelete
  63. பேராற்றலின் அருளால் நலம் பெறுவார்...

    ReplyDelete
  64. நண்பர் பழனிவேல் அவர்கள் நோயை வென்று மீண்டு வருவார் என்றும்,மாதாந்திர காமிக்ஸ்களை மீண்டும் நமக்கு அவர் அளிப்பார் என்றும் நம்பிக்கையோடும்...அதற்க்கு ஆண்டவனை வணங்கி அவரை நல்லபடியாக திருப்பி தந்திட வேண்டுமென வணங்கி வேண்டுகின்றோம்..

    ReplyDelete
  65. நண்பர் பழனிவேல் நல்ல உடல்நலத்துடன் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  66. நண்பர் பழனிவேல்
    அவர்கள் விரைந்து
    குணமடைய இறைவனை
    வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  67. நண்பர் பழனிவேல் அவர்கள் குணமடைய
    எங்கள் தெய்வம் ஐகோர்ட் மகராஜாவை வேண்டுகிறேன்

    ReplyDelete
  68. நண்பர் பழனிவேல் அவர்கள்,. குணமடைந்து, நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  69. மீண்டு வா நண்பனே, நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  70. நண்பர் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  71. பழனிவேல் பெயர் கேள்விப்பட்டுள்ளேன் முகம்தெரியாது ஆனால் காமிக்ஸ் என்ற ஒற்றை வார்த்தையில் உள்ளடிங்கியிருக்கும் நண்பர் அவருக்கு நலக்குறைவு ஏற்பட்டது மனதுக்கு மிகவும் சங்கடத்தை உண்டு பண்ணிவிட்டது அவர் விரைவில் நலமுடன் வருவார் கனிவுடன் வரவேற்போம் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏

    ReplyDelete
  72. தீவிரமாய், அதி தீவிரமாய் பிரார்த்திப்போம் all ...! ஒரு பேரதிசயம் நிகழ்ந்திட இன்றிரவு வேண்டுவோமே :-((

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் சார்.

      பிரார்த்திப்போம்.

      Delete
  73. *நண்பர்களே*,
    *ஒரு வருத்தமான செய்தி*.

    நம் நண்பர் பழனிவேல் சென்னையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். அன்னார் உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான அய்யலூர்(ஶ்ரீ ராம சமுத்திரம்)கொண்டு வரப்படுகிறது.😭😭🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. மிகவும் எதிர்பாராத அதிர்ச்சியான செய்தி 😱😱
      நான் அவரிடம் பழகியது இல்லை எனினும் இந்த பிரிவு செய்தி மனசை கனக்க வைக்குது 😭😭

      இறைவன் அவரின் குடும்பத்திற்கு துணை இருப்பராக

      Delete
    2. மிகவும் துயரமான இழப்பு....

      Delete
  74. Edi Sir..
    மனம் வலிக்கிறது..இனியவர்..
    நண்பரின் மரணம் மனதை ரணகளபடுத்துகிறது..

    ReplyDelete
  75. மிகவும் வருந்துகிறேன்..அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 😔

    ReplyDelete
  76. ஆழ்ந்த இரங்கல்கள் :(

    ReplyDelete
  77. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  78. மிகவும் வருத்தமான செய்தி... நண்பரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்... 😔😔😔😔

    ReplyDelete
  79. இதெல்லாம் பெரிய கொடுமைங்க. இறைவா உன்னைக் கண்டிக்கின்றேன். இறக்கும் வயதா இது ? நேரில் சந்தித்தது இல்லை. ஆனாலும் பண்பட்ட மனிதர் . மனம் மிகவும் வலிக்கிறது. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மனம் மிகவும் கனத்துக்கிடக்கிறது.

    ReplyDelete
  80. ஆழ்ந்த இரங்கல்கள்.
    அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  81. ஆழ்ந்த இரங்கல்கள் :(

    ReplyDelete
  82. மனதில் வலி.. ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  83. என் நண்பன் பழனிவேல்க்கு கடைசியாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை ..

    நீ சென்ற இடமெல்லாம் புன்னகை பூ பூத்ததே தவிர வேறொன்றும் நான் பார்க்க காணோம் .. கடைசியில் உன் குடும்பத்தை பூக்க வைக்காமல் மறைந்து போனாயேடா ..

    ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் என் நினைவில் வாழ்வாய் .. மிகுந்த வருத்தங்களுடன் .. 😭😭😥😥

    ReplyDelete
  84. கண்ணீர் அஞ்சலிகள். நண்பரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்மிக்கின்றேன்.
    😰😰😰😰🙏🙏🙏🙏

    ReplyDelete
  85. சென்று வா பழனி நண்பா... சொர்க்கத்தில் எனக்கு இடமிருக்குமா என்று தெரியவில்லை... ஆனால், இளவயதில் நீ படும் உபாதையை தணிக்க தன்னருகில் அழைத்து கொண்ட ஏக இறைவன் மறுமையில் தன் நெருக்கத்தில் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்.

    உன்னை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  86. சென்று வா நண்பனே!

    நண்பர்கள் தான் என் சொந்தங்கள் என்பாயே.. இத்தனை சொந்தங்களை விட்டுத் தனியே செல்ல எப்படித்தான் மனசு வந்ததோ?😔😔😔😔

    ReplyDelete
  87. மறைந்த நண்பர் பழனிவேலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் எடிட்டரின் புதிய பதிவுக்குச் செல்லுங்கள் நண்பர்களே 😔😔

    ReplyDelete