Powered By Blogger

Saturday, May 19, 2012

திகில் இல்லா திகில் !


நண்பர்களே,

கோடைகள் பல தாண்டிய பின்னரும், நினைவில் 'பளிச்' என்று நின்றிடும் இன்னுமொரு இதழை நினைவு கூர்ந்திடும் முயற்சியே இந்தப் புதுப் பதிவு ! 

26 ஆண்டுகளுக்கு முன் - இதே மே மாதம் - நமது திகில் காமிக்ஸில் வெளிவந்திட்ட "பனிமலை பூதம்" உங்களில் எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியவில்லை...! ஆனால் இன்றைக்கும் எனது "பிரியமான பிரதிகள்" பட்டியலில் ஒரு பிரதான இடத்தில அமர்ந்திருக்கும் இதழ் இது ! 

திகில் இதழ் நம்பர் 5
வித்தியாசமான முயற்சிகளாய் அமைந்திட வேண்டுமென்ற முனைப்புடன் முதல் 3 இதழ்களையும் வெகு சிரத்தையோடு..சின்னச்சின்ன திகில் சிறுகதைகள்...ஒரு முழு நீள ஹாரர் கதை ; துணுக்குச் செய்திகள் என்று உருவாக்கி இருந்தோம். ஆனால் அன்றைய சமயம், 'ஒரே ஒரு முழுநீளக் கதை' என்றதொரு ரசனையைத் தாண்டி நாம் பிரவேசித்திருக்கா தருணம் என்பதால் இந்தப் புதிய முயற்சிகள் அசகாயத் தோல்விகளை சந்தித்தன ! முதல் இதழ் ஒரு curiosity -ல் முழுவதும் விற்பனையாகி விட்டது ; ஆனால் இதழ் 2 & 3 வாங்கிய தர்மஅடி இன்றைக்கும் நினைவில் நிற்கும் சமாச்சாரம் !  இன்றும் நம் வாசகராய் இருந்திட்டு வரும் ஒரு நண்பர் - துண்டும் துக்கடாவுமாய் கதைகளை வெளியிடுவது "பிச்சைக்காரன் எடுத்த வாந்தி" போல் இருப்பதாகக் கூட அபிப்ராயப்பட்டிருந்தார் - அன்று வந்திட்டதொரு போஸ்ட் கார்டு விமர்சனத்தில்! விற்பனையாளர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்திட..எனக்கோ எங்கே ஓடி ஒளிந்திடவென்று தெரியாத இக்கட்டு ! 'இது தேறுமா..சொதப்புமா ?' என்ற சந்தேகம் துளியும் இல்லாது - surefire  வெற்றி என்று நான் நினைத்திட்டதொரு ப்ராஜெக்ட் இத்தனை கேவலமாய் உதை வாங்கிடுவதைப் பார்க்கும் திராணி என்னுள் துளியும் இருந்திடவில்லை ! எல்லோரும் ஒருமுகமாய் சொன்ன சங்கதிகள் இவை தான் :

1 .பிட் பிட்டாய் உள்ள கதைகள் வேலைக்கு ஆகாது !    
2.பெரிய சைஸ் வேண்டாம்!!(பாக்கெட் சைஸ் மோகம் நம்மை ஆட்டிப்படைத்த வேளை அது )! 
3.விலை மூன்று ரூபாய் என்பது ரொம்ப ஜாஸ்தி !! 

So "Operation அந்தர்பல்டி" துவங்கிட்டது - முழு மூச்சாய் ! இதழ் நம்பர் நான்கில் மேற்படிக் குறைகள் அனைத்தையுமே நிவர்த்தி செய்ய முனைந்திருந்தேன் ! ஒரே முழுநீளக் கதையாக :பிசாசுக் குரங்கு" வெளியானது ; பெரிய சைஸ்-க்கு கல்தா கொடுத்து விட்டு புதிதாய்..ஒரு ரெண்டும்கெட்டான் சைஸ் -க்கு இறங்கி வந்திருந்தோம் ; ரூபாய் 2 .25 விலையில் !! அந்த வரிசையில் வந்திட்ட மறு இதழே - இந்தப் பதிவின் நாயகம் ! 

பெயரில் மட்டுமே (நிஜத்) திகிலைக் கொண்டிருந்த இந்த இதழின் முதற்பக்கமே...அடுத்து வரவிருந்த இரத்தப் படலத்தின் விளம்பரம் ! நண்பர் XIII பணக்குவியலை உற்றுப் பார்த்து நிற்கும் பரிச்சயமான சித்திரம் அன்றே ஒருவித எதிர்பார்ப்பை..வினாக்களை உண்டு பண்ணியது ! ஆனால் இத்தனை நீளமானதொரு தொடர் என்பதோ ; இத்தனை impact தந்திடப் போகும் கதைதொடர் என்பதையோ அன்று நான் துளியும் அறிந்திருக்கவில்லை !

"பனிமலை பூதம்" ஒரு சராசரி ஆக்க்ஷன் கதையே ."ஆஹா.ஒஹோ' வென்று சிலாகிக்கும் சங்கதிகள் அதில் அதிகம் கிடையாதென்ற போதிலும் - சுவாரஸ்யமான கதையே ! Fleetway நிறுவனத்தின் Action Library என்றதொரு தொடரிலிருந்து வந்திட்ட கதை இது ! இதோ அதன் முதல் பக்கத்தின் (சுமாரான) எனது ஸ்கேன் !

அழகாய் பாக்கெட் சைசில் வெளியிட்டிட வசதியான format -ல் இருந்திட்ட கதையை புதிய சைசுக்கு ஏற்றபடி அமைத்திட 'கச்சா முச்சா' வென எங்களது லைன் டிராயிங் ஆர்டிஸ்ட்கள் முயற்சித்திருந்தனர் !

18 பக்கங்களில் நிறைவுறும் இந்தக்கதையின் கீழே சின்னதொரு பெட்டிக்குள் பிரசுரமாகி இருந்த அன்றைய "வாசகர் கடிதங்களை" பாருங்களேன்!போஸ்ட் கார்ட்களில் வந்திடும் அன்றைய விமர்சனங்கள் ஆழமாய் இருந்திடாத போதிலும் அழகாய் இருப்பது வழக்கம் ! நம் போஸ்ட்கார்ட் விமர்சகர்களில் எவரேனும் இங்கே இருக்கிறீர்களா என்று தெரிந்திட ஆவல் எனக்கு - கையைக் கொஞ்சம் தூக்குங்களேன் சார்(s) !

சராசரியாய் ஒவ்வொரு இதழுக்கும் குறைந்த பட்சம் 50 கடிதங்கள் வந்திடும் ; அவற்றில் எதை வெளியிடுவது என்று தேர்ந்தெடுப்பது ஒரு சுவாரஸ்யமான பணியாக இருக்கும் ! "இவர் பெயர் ஏற்கனவே போன மாசம் வந்திருச்சு...திரும்பவும் வேண்டாம் " என்று அச்சுக் கோர்க்கும் எங்களது கம்பாசிடர் சொல்லிட்டால் அந்த விமர்சனம் reject ! So தபால் போட்டுவிட்டு ஆவலாய் இதழைப் பார்த்து தம் பெயரைக் காணாது அன்று வருந்திய நண்பர்கள் இங்கே இருப்பின் -  அதற்கான பழி முழுவதும் என்மேல் மாத்திரம் கிடையாது என்பதை சொல்லி வைக்கிறேன் !

தொடர்ந்திட்டது திகில் சிறுகதை "பிசாசு நடனம்" ! Fleetway  நிறுவனத்தின் "Misty " வார இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்திருந்த சிறுகதை இது ! அட்டகாசமான அதன் opening shot அட்டைபடத்திற்குப் பிரமாதமாய் அமைந்திடும் என்று நினைத்திருந்தேன் - எதிர்பார்த்தபடியே நம் ஓவியர் பின்னி பெடல் எடுத்திருந்தார் ! இங்கே வெளியிட்டுள்ள அட்டைப்படத்தின் scanning  தரம் வெகு சுமார் என்பதால் அவரது திறமைக்கு இது முழு நியாயம் செய்திடவில்லை என்பதே மெய் ! பின்னட்டையில் லயனின் கோடை மலர் விளம்பரம் வெளியிட்டிருந்தேன் !  இது பிரபல ஆங்கில எழுத்தாளரான Alistair Maclean எழுதிட்ட "ICE STATION ZEBRA " என்ற சூப்பர் ஹிட் நாவலின் அட்டைப்படத்தின் உல்டா !

நமது ஓவியரின் தயாரிப்பு இது...
அசல் 

அதைத் தொடர்ந்தது "விசித்திர உலகம் இது" என்றதொரு நிஜ சம்பவ மர்மங்கள் பற்றியதொரு தொடர்......!

"மெல்லிசையா.மரணத்தின் இசையா?" என்றதொரு கட்டுரையுடன் ! இதனை எழுதி இருந்த "டாக்டர் லோகநாத்" வேறு யாருமல்ல-எனது தந்தையே ! கிறிஸ்துமஸ் அன்று பிறந்த அவருக்கு எங்கள் பாட்டி "லோகநாதன்" என்று ஒரு பெயரும் வைத்திருந்தாராம் ! அந்தப் பெயரில் (கொஞ்ச காலமே வந்திட்ட) இந்தத் தொடரை எழுதியது என் தந்தையே ! 


இதழின் கடைசிக் கதையாக வந்திருந்ததும் கூட..இன்னுமொரு Fleetway தயாரிப்பே ! ஏஜெண்ட் ஜான் ஸ்டீல் துப்பறியும் "நாளை உனது நாள்" என்ற முழு நீளத் த்ரில்லர் - 1960 களின் ஒரு தயாரிப்பு.எனக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோக்களில் ஜான் ஸ்டீலும் ஒருவர் ; and  இந்தக் கதையின் யதார்த்தம் நான் மிகவும் ரசித்த விஷயம் ! 21 பக்கங்களில்...பாரிஸ் நகரில் நடந்தேறும் இந்தத் த்ரில்லரும் கூட பாக்கெட் சைஸ்-க்கு ஏற்ற வடிவத்தில் இருந்தது. பிரயத்தனப்பட்டு பெரிய சைசுக்கு மாற்றி இருந்தோம்.



இந்த இதழில் எனக்குப் பிடிக்காது போன சங்கதி...உள் அட்டைகளில் எதுவுமே அச்சிடாமல் வெள்ளையாக விட்டுவிட்டது ! அன்றைய சமயம் இதழின் விலையினை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மலிவான...ஆனால் வார்னிஷ் போட்டிடும் போது நன்றாகத் தோன்றிடும் Glazed  Newsprint எனும் காகிதத்தைப் பயன்படுத்தி வந்தோம். மெலிதாய் இருந்திடும் இந்தப் பேப்பரில் அச்சிடுவது என்பது மண்டை காயும் சமாச்சாரம்! So முன்பக்கம் அச்சிடுவதற்குள் பிராணனின் பாதி போயே போய் இருக்கும் ! இந்த அழகில் மறு பக்கம் வேறு அச்சிடவா ? என்ற கடுப்பின் பிரதிபலிப்பே இந்த வெள்ளைப் பக்கங்கள் !

இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது...எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ! இந்த இதழ் வெளி வந்த போது பூமியினில் காலடியே வைத்திருக்காத நண்பர்களும் இங்கே இருக்கத் தான் வேண்டும் !! அவர்களுக்கும் இந்த (புராதன)  இதழ் பற்றிய பதிவு உற்சாகத்தைத் தந்திட்டா ல்  எனக்கு சந்தோஷமே !

அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு (புதிய) பதிவோடு சந்திக்கிறேன் ! Adios till then guys.....!



86 comments:

  1. இந்த கதையை இதுவரை நான் படித்த ஞாபம் இல்லை.. அதவும் இல்லாமல், இதுவரை நான் வாசகர் கடிதம் எழுதியது இல்லை. அதனால என்னுடைய கைகளை துக்கவில்லை.. :)

    ReplyDelete
  2. 26 ஆண்டுகளுக்கு முந்தைய மே மாதம், 1986 எனில் நானும் இந்த இதழும் ஒன்றாக ரிலீஸ் ஆகியிருக்கிறோம் :-)

    ReplyDelete
  3. நான் படித்திருக்கிறேன் , வாசகர் கடிதம் நிறைய இதழ்களுக்கு எழுதி இருக்கிறேன் ,3 இதழ்களில் என் பெயர் வந்ததாக ஞாபகம். ஈகிள் man கடத்தல் வலையில் , danger டயபோலிக் ,மற்றும் ஒரு இதழ் ஞாபகம் இல்லை

    ReplyDelete
  4. அப்போது ஈகிள் மேன் ,ராம்போ கதைகளை தொடர்ந்து வெளியிடாத ஆசிரியரின் மேல் எனக்கிருந்த கோபம்......................

    ReplyDelete
  5. ஆசிரியருக்கு,

    நான் சிறுவயதில் இருந்த 'மல்லாகம்' என்கிற சிறு ஊரில் இருந்த லெண்டிங் லைப்ரரியில்தான் பல திகில் இதழ்களைப் படிக்கக் கிடைத்தது. எனவே சேகரித்துவைக்கும் வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால், கதைகள் ஓரளவுக்கு நினைவில் இருக்கின்றன.

    எமது பகுதிகளில் பெரும்பாலும் அடிக்கடி இடப்பெயர்வுகள் நடந்ததால் பலரதும் புத்தக சேமிப்புக்களும் அழிந்தேபோய்விட்டன. எனவே பழைய இதழ்களாகத் தேடிச்சேர்ப்பதும் இயலாதகாரியம். அழியாமல் தப்பியிருப்பவற்றைப் பாதுகாப்பதே தற்போதைக்கு சாத்தியமானதாக இருக்கிறது.

    வாசகர் கடிதம் என்று தனியாக அனுப்பியதில்லை. ஆனால் ஒரு சில ஓவியங்களோடு அனுப்பியிருக்கிறேன். ஒன்றிரண்டு பிரசுரமும் ஆகியிருக்கின்றன. ( XIII விளம்பரம் ஒன்று, ஒரு பக்க சித்திரக்கதை ஒன்று - ஆனால், அது மின்னஞ்சலில் அனுப்பியது - இன்னும் அது வெளியான புத்தகத்தை நான் பார்க்கக்கூட இல்லை; நண்பர்தான் எங்கோ வாசித்ததாக ஒரு தடவை பேசும்போது சொன்னார்).

    Theeban (SL)

    ReplyDelete
  6. உங்களைப்போல் எனக்கும் இது ஒரு மறக்க முடியாத இதழ். ஏன் என்றால் நான் வாங்கிய முதல் திகில் காமிக்ஸ் இதுதான். இதனுடன் வெளிவந்த லயன் "கோடை மலரும்" (அட்டையில் ஸ்பைடர் க்ளோசப்பில் பல்லிளிக்கும் அட்டகாசம், வாவ் - அப்போ) என்னுடைய முதல் இதழ்கள் ஆகும். பனி மலை பூதமும் சரி, அதனைத் தொடர்ந்து வந்த இரத்தப்படலமும் சரி, நான் படித்து தொலைத்த (படித்ததற்கு அப்புறம் தொலைத்த என்று படிக்கவும்) இதழ்கள்.
    இதில் வந்த கதைகள் ஞாபகம் இல்லைஎன்றாலும், வாங்கியது பக்கத்தை புரட்டியது எல்லாம் nostalgia இப்போது உள்ளது. என்னதான் நாம் இப்போது வர்ணஜாலக்கதைக்கு மாறினாலும், அப்போது உள்ள கருப்பு / வெள்ளை கதைகளை மறக்கவோ மறுக்கவோ முடியவில்லை. 86 க்கு போய்விட்டேன், அந்த நினைவுகளோடு தூங்கப்போகிறேன், வருகிறேன்.

    ReplyDelete
  7. என்னிடம் இந்த புத்தகங்கள் அனைத்தும் உள்ளன. முதல் 20 இதழ்கள் எல்லாம் செகண்ட் ஹான்டில் வாங்கியவை. கடிதம் எழுதியது மிகவும் குறைவு. ஆனால் ஒரு பக்க படக்கதை வரைந்து அனுப்பி அனைத்தும் பிரசுரமாகி உள்ளன. என்ன வரையும் திறமையை வளர்த்த லயன் காமிக்ஸ்க்கு நன்றி. முத்து காமிக்ஸ்களில் சில இதழ்கள் தவிர லயன், திகில், மினி லயன் மற்றும் ஜூனியர் லயன் இதழ்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. இதற்காக நான் சுற்றி அலைந்த தெருக்கள், ஊர்கள், மாவட்டங்கள், எழுதிய கடிதங்கள் இப்போதும் பசுமையாக நினைவில் உள்ளன. உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் எனது முழு ஆதரவு என்றும் உண்டு.

    அஸ்டிரிக்ஸ் இதழ்கள் நன்றாக இருக்கும். இப்போது வெளிவரும் பெரிய சைஸ்-ஐ விட சிறிய சைசில் வந்த இதழ்களின் கலர் காம்பினேஷன் மற்றும் சித்திர தரம் மிக அருமையாக இருக்கும். நண்பர்களே இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் விஜயன் சாருக்கு முடிவெடுக்க உதவியாக இருக்கும்.

    டின் டின் இதழ்கள் வருவதை வரவேற்கிறேன்.

    பழைய இதழ்கள் மறு பதிப்பின் போது தயவு செய்து லக்கி லூக்கின் "பூம் பூம் படலம்" இதழை மறு பதிப்பு செய்யவும். இரு வண்ணத்தில் வந்து என்னை (அனைவரையும்) ஏமாற்றிய ஆனால் அருமையான கதையுடைய இதழ் இது.

    கடைசியாக எனக்கும் (ஹைதராபாத்) லார்கோ வந்து விட்டார். மிகவும் கசங்கிய நிலையில். சார், தயவு செய்து பேக்கிங் தரத்தை உயர்த்துங்கள் ப்ளீஸ். இதழுக்கு திருஷ்டி பட்டது போல இருந்தது. இன்னும் படிக்கவில்லை. சித்திர தரமும், நிறமும் நெஞ்சை கொள்ளை கொள்கின்றன.

    மேலும் பல முழு வண்ண இதழ்கள் வர ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    சங்கர் செ

    ReplyDelete
  8. புதைந்திருந்த நினைவுகளை தட்டி எழுப்பி விட்டீர்கள். நான் முதன்முதலில் பாக்கெட் சைஸ் ரானுவக்கதை ஒன்று படித்ததாக ஞாபகம். ராணுவ படலம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு எந்த ஒரு விசயத்திலும் இல்லாத ஈடுபாடு நமது காமிக்ஸ் மேல் தொற்றிக்கொண்டது. பல முறை கடிதம் எழுதியுள்ளேன். அதில் பல போஸ்ட் செய்யாமலேயே விட்டுவிட்டேன். பல கடிதங்கள் நமது லயன் இதழ்களில் பிரசுரமாகி உள்ளது.

    கருப்பு விதவை இதழில் வாசகர் வட்டம் பகுதியில், எனது தந்தையின் படத்தை அனுப்பி அவர் எழுதியதாக , நானாக எழுதிய பதில்களை இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். அதற்காக மட்டுமே நமது புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை கிழித்து அனுப்பினேன். ஒரு முறை லக்கி லுக் கதை ஒன்றை நானாகவே வரைந்து அலுவலகம் அனுப்பி திரும்பி வந்தது. உல்டா செஞ்சா கண்டுபிடுசிருவீங்க என்று நன்கு தெரிந்து கொண்டேன். அதுமுதல் அவ்வாறன வேலைகள் செய்வதில்லை.

    திகில் இதழ்கள் எனது சேகரிப்பில் மிகவும் குறைவாகவே உள்ளது. இங்கு தாங்கள் அப்லோட் செய்துள்ள பக்கங்களை இன்று தான் பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே,

      இளம் பிராயத்து நினைவுகளை எப்போதாச்சும் தட்டி எழுப்பிடுவதென்பது ஒரு ரம்யமான அனுபவமே...! Precious memories..!

      Delete
  9. டியர் எடிட்டர்,

    இந்த புத்தகத்தை இது வரை நான் பார்த்தது கூட கிடையாது. இதில் உங்களிடம் உண்டா என்று ஒரு கேள்வி வேறு கேட்டு வெருப்பேத்தி விட்டீர்கள். ஆனாலும் மலரும் நினைவுகள் அருமை. நண்பர்கள் கலெக்ஷனில் இரவல் வாங்கியாவது படிக்க முடியுமா என்று முயன்று பார்த்து விடுகிறேன். இப்படி ஒவ்வொரு ஆரம்ப கால புத்தகத்தின் தயாரிப்பின் பிண்ணணிகளையும் நேரம் கிடைக்கும் போது பதிவுகளாக தொடர்ந்து இடுங்கள். வெள்ளை உள் அட்டையின் மர்மம் போல பல விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  10. விஜயன் சார்,
    நீங்கள் பழைய காமிக்ஸுகள் உருவான விதம் பற்றி எழுதுவது எங்களை போன்ற பழைய வாசகர்களுக்கு மிகவும் சுவாரிசியமாக இருக்கிறது. Please continue.

    திகிலில் வந்த முதல் ரிப்போர்ட்டர் ஜானி கதையான ரத்தக்காட்டேரி மர்மம் கதைக்கு தான் நான் முதன்முதலில் போஸ்ட் கார்டு அனுப்பினேன். அதுதான் தமிழில் நான் படித்த முதல் Who done it ஸ்டைல் கதை. படங்களும் சூப்பராக இருந்தன. என்னுடைய விமர்சனம் அடுத்த இதழான மர்ம ஏரியில் வெளி வந்தது.

    முத்து காமிக்ஸில் ஐந்து காமிக்ஸுகள் தவிர நமது நிறுவனம் வெளியிட்ட அணைத்து காமிக்ஸுகளும் வைத்திருக்கிறேன் முத்து காமிக்ஸ் வார மலர் உள்பட. என்ன ஒன்று புத்தகங்களை பாதுகாக்கிறேன் பேர்விழி என்று 50% புத்தகத்தை பைண்டிங் செய்துவிட்டேன். பிறகுதான் நண்பர் முத்து விசிறி சரியான முறையில் காமிக்ஸ்களை பாதுகாக்கும் முறைகளை கூறினார் (காமிக்ஸ்களை பைண்டிங் செய்யக்கூடாது என்று). நன்றி Muthufan.

    ராஜா, பிரான்ஸ்.

    ReplyDelete
  11. இந்த கதைகளை இதுவரை நானும் படித்த ஞாபகம் இல்லை....But these are part of our upcoming comics classics rite :-)

    ReplyDelete
    Replies
    1. princebecks : Not really ! This is just a jog down memory lane...!

      Delete
  12. Replies
    1. Msakrates : துப்பறியும் ஜெரோம் - இரு பாகக் கதைகள் - Rs.10 + Rs.10

      Delete
    2. Sivappuk kanni marmam...!
      tharcheyalai oru tharkolai...!
      Reply ku thanks sir...

      Delete
  13. Puthiya ilam vasakarkal serthida
    sutti vigadan,
    gokulam,
    ithalkalil viamparam seiyalame!

    ReplyDelete
  14. ம்கூம்... படித்த ஞாபகம் இல்லை, எனது சேகரிப்பிலும் இல்லை! :)

    ReplyDelete
  15. பனி மலை பூதமா ? கேள்வி பட்டது கூட இல்லை ......அடடா நானும் ஒரு தம்மாதூண்டு போஸ்ட் கார்டு போட்டு இருக்கலாம் ..லயனில் பெயராவது வந்து இருக்கும் ....

    ReplyDelete
  16. இது Action Picture Libraryல் வந்த WildCat என்பதன் மொழிபெயர்ப்பு?? இது FleetWayல் வந்த முதல்(1969) இதழா?
    பனிமலை பூதம் படித்த ஞாபகம் உள்ளது. இந்த பூதம் உணவுக்காக நமது ஹீரோக்களின் கூடாரங்களை தாக்கி பின் ஒரு சமயம் பனி புயலிலுருந்து அவர்களை காப்பற்றுவதை போல கதை நகருமோ?
    I’m straining my memory a lot!!!
    Hmmmmm…..... பழைய இதழ்களை சந்தோசமாக அசை போடுவதில் ஒரு அபார திருப்தி.

    ReplyDelete
  17. I have read this and I think I still have it in my collection. The issue panimalai Bhootham Dhigil and is one of the ordinary not so exciting comics unlike modesty which used find its place in Dihgil. Further in my opinion it is definitely not a reprint variety.

    ReplyDelete
  18. டியர் எடிட்டர் சார் , அருமையான புத்த கம் இது. but என் collection ல் கிடை யாது. சிறு வயதில் வாடகை நூலகதில் படித்து உள்ளேன் . திகில் collection ல் என்னிடம் இருப்பது சில jhony கதையும் , பிரின்ஸ் மற்றும் பாட்மேன் கதையும் தான். சார் ஒரு சின்ன sujesstion , நிறைய பேர் sujesstion சொல்லி தங்கள் மூளை ஐ சூடாக்கி இருப்பார்கள் .அந்த வரிசையில் நானும் சிறிது சூடு ஆக்கலாம் என்று , திகில் reprint 2 &3 30 rs வ ரை ஓகே சார் . ஏன் என்றால் largo வில் திகில் reprint 1 தரம் பார்த்து மிகவும் தர்ம சங்கடம் ஆக இருந்தது . reprint மிகவும் எதிர் பார்த்தேன் .பட் scanning மிகவும் சுமார் சார் ,பேப்பர் quallity நன்றாக இருந்தும் சித்திரங்கள்?...........திகில் series ல் வேறு புதிய கருப்பு கிழவியோ or batman கதைகளோ இருந் தால், rs 100 விலை யில் அட்டகசமான சித்திரங்களோடு சூப்பர் பேப்பர் quality யோடு கொண்டு வரலாமே சார் ? யோசனை சொல்வது easy .செயல் படுத்துவது மிகவும் கடினம் என்று எனக்கு தெரியும் சார் ....பட் எங்களை மாதிரி வாசகர்களுக்கு யோசனை சொல்ல மட்டுமே தெரியும் .செயல் படுத்துவதில் உள்ள சிரமம் தாங்கள் மட்டுமே அறிந்தது ..........reprint scaning quality நன்றாக இருந் தால் மட்டுமே செயல் படுத்துங்கள் சார் , pls ........... pls ................

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar, Salem : திகில் மறுபதிப்பின் ஸ்கான்னிங் தரத்தில் என்ன shortcomings உங்களுக்குத் தென்பட்டதோ புரியவில்லை ! High Resolution-ல் அழகாக செய்யப்பட்ட பணி அது !

      Delete
    2. என்ன குற்றம் கண்டீர் டாக்டர் பொருள் குற்றமா இல்லை....... படத்தில் குற்றமா இல்லை ....மொழி பிறப்பில் குற்றமா .....வெறும் பேப்பரும் மையும் அல்ல எங்கள் மெய்யும் அது தான் .......கையெழுத்து பிரதிகளை பார்த்து எத்தனை நாளாச்சுன்னு சந்தோஷ பட்டு கொண்டு இருக்கும் வேலையில் ......

      Delete
  19. I think I recall this edition. Definitely, "நினைவோ ஒரு பறவை" for me ;-)!

    At least the story of the "music troupe" (பிசாசு நடனம்) comes back as if I read it yesterday.

    A music band goes to shoot a music video in an old mansion. The lead singer shows a lot of bravado to the curator that there are no spirits and all that... Then they shoot the video.... I remembered laughing loud at the pictures of two "ghost-like" creatures playing the "harmonium-petti"! The lead singer is in awe of those two "supporting artists". When they are reviewing the rushes later, those two characters are missing from the video... and the lead singer's hairs turn white instantaneously.....

    The final shot shows the curator watching the released video on telly with those two characters sitting next to him....
    My God... I had some very disturbing dreams that night and a few nights after, and every hanging bed sheet took the form of "பிசாசுகள் carrying a ஹார்மோனியம் பெட்டி"!

    Other stories are more hazy.... Let me கசக்கிfy my மூளை and come back.

    Thanks for being part of my childhood, Vijayan. And thanks for continuing to be part of my life still. God bless you....

    Surio.

    ReplyDelete
  20. For what it is worth, my opinion is that your overall reprint quality of the latest Thigil was very good... specially when compared with some of the pages of Thalaivangi.

    Personally though, I think we "fans" have to be reasonable about our "expectations" and our ideas on what constitutes "value for money".

    In my view, such books in English will gladly fetch a tidy sum in the flea/antique market, and there will be enough buyers for it. We Tamil comics fans are getting these books for the price of "two utthapams" or a "Chappathi+North Indian curry"!

    I am saying this to no-one in particular and everyone in general, "Guys, let us all be realistic and reasonable".

    There is no correct or appropriate "price tag" for Nostalgia... If there is anything, then it is only "value"...
    And the Director of Oglivy-Mather put it correctly in his book: "All value is Perceived Value..."

    Vijayan, you need to hire a PR guy that drives up the value of all your collections. ;-)

    Best,
    Surio.

    ReplyDelete
  21. Vijayan,
    Asterix and Obelix -- I learnt more about ancient Roman History by reading the books. It was also a side-splittingly hilarious parody of that History, so double bonanza....

    If you want to release Asterix in Tamil, you will find the Word puns extremely challenging:
    1. Get-a-fix, Vital-Statistix, Caco-fon-ix, Dogmatix,...etc...
    2. Choleric, Alembic, rhetoric, prehistoric, atmospheric, etc...
    3. My-kingdom-for-an-hos, anti-climax, Olaf time-and-a-half, dubble-o-six (Sean Connery!),

    I would be interested to know how you are going to tackle those...

    Tintin -- Those series actually hold a mirror to contemporary World History, with a "fixed-frame-of-reference" (involving Tintin and Co.). Tintin also serves as a mirror to unfolding European sensibilities to the broad World events: ... The portrayal of gypsies, the portrayal of South Americans, the portrayal of Nepalis/Indians, etc., etc. You won't find the overall translation challenging.

    Your only challenge will be in translating Captain Haddock's outrageous, outlandish and totally ficticious swear-words. bazhi-bozouk, ectoplasm, fancy-dress-fatima, anthracite, and that ever popular "Billions of bilious blue blistering barnacles in a thundering typhoon" :-D... தாங்க முடியல்லை சாமி! :-D

    Please don't ever use words along the lines of "அண்டன்க்காக்கைக்கு பொறந்தவனே", for it is both offensive and in poor taste.


    Anyway, I have placed in writing my preference for both Asterix and Tintin comics in detail.. Rest is up to you to weave your magic.....

    அன்புடன்
    Surio.

    ReplyDelete
    Replies
    1. Surio : Many thanks for the kind words - as always ! It has been my privilege being a small part of your sunshine days !

      Yes, "பிசாசு நடனம்" is indeed the tale that you have briefly recounted ! Great memory !

      As for translating Asterix & Obelix series in Tamil (if we opt to publish it) - I know it will indeed be a challenging task. But at this point in time, challenges are all the more enticing - rather than run of the mill projects ! So, if we go about doing it, I will definitely give it my best shot and more !

      Tintin is definitely not in the radar in the near future, so we will ponder over Captain Haddock's ramblings later than sooner !

      Thanks again for the passion and the warmth !! Much appreciated !

      Delete
  22. பழைய இதழ்களை பற்றி படிக்கும் போது அளவில்லாத சந்தோசம்வுண்டாகுது. 1984 ல் இருந்து காமிக்ஸ் படித்து வருகிறேன். நான் அப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தன்தருவை என்ற சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்தேன் . என் சித்தப்பா காமிக்ஸ் படிப்பார்கள் அவர்களின் சேமிப்பில் இருந்து ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தேன். என் ஆர்வத்தை பார்த்து என் தந்தை பின்னர் வாங்கி வர ஆரம்பித்தார்கள். என் தந்தை வேலையின் பொருட்டு இரண்டு தினங்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள திருசெந்தூர் சென்று வருவார்கள். வரும்பொழுது எல்லாம் லயன் ,முத்து, திகில் ,மினிலயன்,ஜூனியர் லயன், ராணி, இந்திரஜால், அப்பு, மேத்தா,jamespond ,பூந்தளிர், அம்புலிமாமா, 3d காமிக்ஸ் இப்படி ஏதாவது ஒன்று வாங்கி வருவார்கள். அப்போ எங்கள்வூருக்கு மொத்தம் 4 பஸ்தான் வரும். கடைசி வண்டி நைட் 11 :30 மணிக்கு வரும். என் தந்தை அதில் தான் வருவார்கள் .கடைசி வண்டிக்காக காத்திருந்து அது வந்ததும் என் தந்தை எனக்காக வாங்கி வரும் காமிக்ஸை கைகளில் பெற்றதும் நான் அடையும் சந்தோசத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது . இன்று சென்னையில் இரும்பு மற்றும் LCD,LED வியாபாரம் செய்கிறேன் , எவ்வளவோ லாபங்களை பார்தாகி விட்டது ,எனினும் சிறு வயதில் என் தந்தையிடம் இருந்து நான் காமிக்ஸை பெறும்போது ஏற்பட்ட சந்தோசம் வேறு எதிலும் கிடைக்கவில்லை.பஸ்ஸே வராத ஊரில் 60 கிலோமீட்டர்க்கு அப்பாலிருந்து நான் விரும்பிய காமிக்ஸ் என்னை வந்தடைந்த அதிசயம்தான் என்ன?... நான் படித்த அனைத்து காமிக்ஸ்களும் புத்தம்புதியதாக வார்னிஸ் மனம் மாறாமல் படித்ததுதான். ஆரம்ப இதழ்களில் 85 கோடைமலர் கிடைக்கவில்லை, என்னை கஷ்ட்ட படுத்த விரும்பாத என் தந்தை என் தாய் மாமனுடன் என்னை திருநெல்வேலிக்கு அனுப்பி அங்கு ஏதாவது கடையில் கிடைத்தால் வாங்கிகொள்ள சொன்னார்கள். அப்பொழுது எல்லாம் என்னை பொறுத்தவரை நெல்லைதான் இந்தியாவிலயே மிகப்பெரிய சிட்டி. புக்கை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நெல்லை டவுன் முழுவதும் நானும் என் மாமாவும் சுற்றினோம் ஆனால் கிடைக்கவில்லை. அன்று நான் அழுத அழுகையை என் மாமா இன்று வரை சொல்லுவார்.என்னை சமாதானபடுத்த, அப்போ ரிலிஸ் ஆகிஇருந்த விடுதலை மற்றும் நானும் ஒரு தொழிலாளி படத்திற்கு அழைத்துச்சென்றார்கள். இன்று வரை அந்த புக்கை நான் படிக்கவில்லை. நான் படித்த ஒரே பழைய காமிக்ஸ் டெக்ஸ்வில்லரின் பவளசிலைமர்மம் அல்லது பளிங்குசிலைமர்மம். ஆரம்பத்தில் எனக்கு அந்த புக் கிடைக்கவில்லை, என்னுடைய அண்ணனுக்கு உடல் நலமில்லை என்று நாகர்கோவில் மத்தியாஸ் ஹோஸ்பிடலில் சேர்த்திருந்தோம் அங்கு ஒரு அண்ணன் ரூம் கிளீன்பண்ண வருவார்கள்,அந்த அண்ணன் கையில் ஒருநாள் நான் அதுவரை தேடிகொண்டிருந்த புதையல் இருந்தது ,முன் பின் அட்டைகளில்லாமல் பளிங்குசிலைமர்மம் இருந்தது. கெஞ்சி கூத்தாடி அவர்களிடம் அந்த புக்கை வாங்கிக்கொண்டேன். ஒவ்வரு புக்கையும் படித்துவிட்டு அவ்வளவு ஆசையாக சேமித்து வைப்பேன்.என் சேமிப்பு மூன்று அட்டைபெட்டிகளில் நிறைந்துஇருந்தது . என் காமிக்ஸ் புதையலுக்கு என் அண்ணன் வடிவில் ஆபத்து வந்தது ,இப்போ நினைத்தாலும் தீக்கனவு போல்வுள்ளது, 90 களின் அந்த காலை விடியாமலே இருந்திருக்கலாம். நான் ஸ்கூல் சென்றிந்தபோது என் அண்ணன் அனைத்து புக்கையும் பக்கத்து ஊரில்இருந்த பழைய புத்தக கடையில் போட்டுவிட்டான். ஸ்கூலில் இருந்து வந்ததும் என்னால தாங்கிக்கொள்ள முடியவில்லை, பக்கத்துல மண்ணெண்ணெய் கேன் இருந்தது எடுத்து தலையில வூற்றிகொண்டு அருகில் எரிந்து கொண்டிருந்த அடுப்பை நோக்கி ஓடினேன்,என் அண்ணன் மற்றும் என் அம்மா என்னை பிடித்து கொண்டார்கள்.மண்ணெண்ணெய் ஊறியதால் கண்எரிச்சலுக்கு சிறிது தினங்கள் மருத்துவம் பார்த்ததுதான் மிச்சம். போன வருடம் என் தந்தை கல்லீரல் கேன்சரினால் இறந்து விட்டார்கள். கடைசி தினங்களில் அவர்களிடம் பேசி கொண்டிருக்கும்போது என்னை அரவணைத்த சிறுவயது தினங்களை அசைபோட்டு கொண்டோம்.என் தந்தையிடம் நான் கேட்காமல் போனது எனக்காக திருசெந்தூரில் எங்கு காமிக்ஸ் வாங்குவீர்கள் என்பதுதான்.சில மாதங்கள் கழித்து சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்று அனைத்து புத்தககடைகளிலும் தேடினேன் எங்கும் காமிக்ஸோ சிறுவர் புத்தகங்களோ இல்லை. எனக்கு காமிக்ஸ்ன்னா எதுவோ இல்லை அதுதான் என் சிறுவயது அடையாளம். பழைய திகிலை பற்றி ஆசிரியர் எழுதுவதை படிக்கும் போது எதையோ இழந்ததை அடைந்தது போல் உணர்கிறேன். நன்றி சார் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி மீரான் ,தங்கள் சிறு வயது காமிக்ஸ் நியாபங்களை பகிர்ந்து கொண்டதற்கு . என் சிறு வயதில் வரும் pocket money 25 காசில் vadagai நுலகத்தில் காமிக்ஸ் படிகத்தான் mudinthatu .காமிக்ஸ் வாங்க முடியலே .......மேலும் என் father க்கு money கொடுத்து கதை புத்தகமோ or காமிக்ஸ் ஒ வாங்கினால் பிடிக்காது .......நா ன் B .D .S சேலம் ல் படித்தபோது சில காமிக்ஸ் பழைய புத்தக கடையில் வாங்கினேன்...........but இப்போது சேலம் காமிக் வெறியர்கள் பிடியில் .....அவர்களோடு போட்டி போட mudiyamal ஒதுங்கி விட்டேன் ..............மற்ற நண்பர்கள் தங்கள் காமிக் anubavangalai padivu செய்தால் நன்றாக irukum .செய்வீர்களா nanbargale .........

      Delete
    2. விஜயன் அவர்களின் கடிதம் கண்டவுடன் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி பயணித்தது போல் இருந்தது........என்பதுகளின் பிற்பகுதியில் நான் அமராவதி நகர் சைனிக் பள்ளியில் படித்து வந்தேன்.......தொடர்ந்து உங்கள் வெளியீடுகளை வாங்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ,ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதும் காமிக்ஸ்களை வாங்கி குவித்து விடுவேன்....சமீபத்தில் மறைந்த என் தந்தை என் வாசிப்பு ஆர்வத்தை தொடர்ந்து ஊக்குவித்தார்....அந்தக்காலத்திய [ பெரும்பாலான ] தந்தைகளை போல் அல்லாமல் என் தந்தை நான் புத்த்ககம் வாங்க காசு கேட்டு மறுத்ததேஇல்லை..... உங்கள் குழுமத்தின் வெளியீடுகளை கண்டால் நான் வாங்காமல் விட்டதே இல்லை......ஸ்பைடரும், இரும்புக்கை மாயாவியும், ஆர்ச்சியும் , ரிப்போர்ட்டர் ஜானியும் என் நெஞ்சை கொள்ளை கொண்டார்கள்....குறுகிய காலமே வெளிவந்த ஜூனியர் லயனில் வெளிவந்த ஒவ்வொரு கதையும் பொக்கிஷம்.......திகிலில் வெளிவந்த கருப்புக்கிழவியின் கதைகளை படித்து விட்டு இரவில் '' உச்சா'' போக பயந்த காலம் நினைவுக்கு வருகிறது.....என் பள்ளி சூழ் நிலை காரண‌மாக நான் கடிதங்கள் எதுவும் எழுதியதில்லை எனினும் வாசகர்களின் படைப்பை [ பெரும்பாலும் பரட்டைத்தலை [சிங்க] ராஜா கதைகள்] ரசித்ததுண்டு..........

      Delete
    3. என் ஞாபகங்களை பொறுமையாக படித்ததற்கு ரொம்ப நன்றி டாக்டர் சார்!

      Delete
    4. ஒவொருவரின் இனிமையான நினைவுகள் எங்கோ நம்மை அழைத்து செல்வது விந்தைதான் ,சில சோகமான சுகங்கள்,சில சுகமான சோகங்கள் ,ஆனால் இனிமையான நினைவுகள்


      சில கசப்பான நினைவுகள் ,மருந்தாக காலத்தின் துணையால் மீண்டெழும் பழைய புத்தகங்களின் மறு பதிப்புகள் ,மீளவே முடியாத இழப்புகள் ,அவற்றுக்கு அருமருந்தான காலச்சக்கரத்தின் சுழற்சிகள் ,இனிமையான நினைவுகளை மீட்டெடுக்க உதவும் புத்தகங்கள் ,பகிர்ந்து கொள்ள கிடைக்கும் நண்பர்கள் (உன் சந்தோசத்தை பிறரிடம் பகிர்ந்து கொள் சந்தோசம் இரட்டிப்பாகும்,உனது சோகத்தை பிறரிடம் பகிர்ந்து கொள் சோகம் பாதியாகும்),ஆகா லயனின்

      நெடும் சோலைகளில் ராகங்கள் மீட்டி வரும் நண்பர்களுக்கு நன்றி .

      Delete
    5. Meeran : நம் வாசகர்களின் பெரும்பான்மையினர் "காமிக்ஸ் தீவிரவாதிகள்" என்பது தெரிந்ததே...ஆனால் உங்களின் பதிவு நிஜம்மாக மலைக்கச் செய்கிறது ! காமிக்ஸ் என்பது வெறும் பொழுதுபோக்கு இதழ் மட்டுமல்ல...நம் இள வயதோடு அங்கமாகிவிட்டதோர் அடையாளம் என்பது உங்களைப் போன்ற பற்பல நண்பர்கள் உணர்த்திடும் போது - பெருமிதமாக உள்ளது ! நன்றிகள் என்றும் !

      Delete
    6. நன்றிகள் பல நான்தான் உங்களுக்கு சொல்லணும் சார். ரொம்ப ரொம்ப நன்றி சார் .....

      Delete
    7. Meeraan இதுவரை மந்தியார் கலங்கியது இல்லை ஆனால் இன்று நெஞ்சை பிசைந்து விட்டீர்கள்... வாழ்க மண்ணெண்ணெய் ஊற்றிய மீரான்

      Delete
    8. மதியில்லா மந்திரியாரே:-வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  23. சார்,
    இன்று தான் லார்கோவை படித்து முடித்தேன். ஒரு முழுமையான காமிக்ஸ் படித்த திருப்தி. லார்கோ இனி முத்துவின் ஸ்டார் வரிசையில் இனைந்து விட்டார்..

    லார்கோவுடன் வந்திட்ட திகில் கதைகள் ரொம்பவே சுமார். நீங்கள் கூறிய ஏனைய இரண்டு திகில் இதழ்களும் இதே போல் தான் எனில் தற்போதைக்கு அவற்றை ஒதுக்கிவிட்டு திகிலில் வந்திட்ட முதலை பட்டாளம், பிரின்ஸ், ஜானி கதைகளுக்கு மறுபதிப்பில் முன்னுரிமை கொடுத்தால் நலம் என்பது என் கருத்து.
    (பி-கு) முதலை பட்டாளம், பிரின்ஸ் கதைகளை அப்படியே வண்ணத்தில் போட்டால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // பி-கு) முதலை பட்டாளம், பிரின்ஸ் கதைகளை அப்படியே வண்ணத்தில் போட்டால் நல்லா இருக்கும். //

      என்னுடைய ஓட்டும் இதற்க்கு கண்டிப்பாக உண்டு ;-)
      .

      Delete
  24. விஜயன் சார்

    லார்கோ - எனது மதிப்பெண்கள்

    மொழி பெயர்ப்பு - 10/10
    பிரிண்ட் குவாலிட்டி - 10/10
    அட்டை - 10/10
    எழுத்துக்கள் - 8/10

    மொத்தத்தில் - 10/10

    நாகராஜன்

    ReplyDelete
  25. // அன்றைய சமயம் இதழின் விலையினை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மலிவான...ஆனால் வார்னிஷ் போட்டிடும் போது நன்றாகத் தோன்றிடும் Glazed Newsprint எனும் காகிதத்தைப் பயன்படுத்தி வந்தோம். //

    அதனால்தான் அந்த புத்தகங்களின் அட்டைகளை இப்பொழுது தொட்டாலே போதும் உடைந்து விடுகிறது
    இனிமேல் இப்பொழுது வருவது போல கனமான அட்டைகளை உபயோகிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் :-((
    .

    .

    ReplyDelete
  26. Dear Editor,
    This issue sure kindled the memories, eventhough i haven't read this particular issue but i have read some of the "thigil" issues in my childhood days. At that time, my uncle was a big fan of comics he would buy literally every comics that was published and myself, my brother and other cousins get to read all those comics when we go there during vacation. Good times.....
    -- Karthikeyan

    ReplyDelete
  27. அன்பிற்குரிய விஜயன் ஸார்,

    தமிழில் வெளிவந்த மற்ற காமிக்ஸ் இதழ்களை பற்றிய உங்கள் கருத்துக்களை (காமிக்ஸ் ரசிகர் என்ற முறையில்) ஒரு பதிவாய் இடலாமே? உங்கள் பார்வையில் மற்ற பதிப்பகத்தாரின் காமிக்ஸ் இதழ்களை பற்றி அறிய நமது நண்பர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நினைக்கிறேன்!

    உதாரணத்திற்கு ஒரு சில: ராணி, மேத்தா/அசோக், இந்திரஜால், மேகலா, மதி, மாலைமதி... :)

    ReplyDelete
    Replies
    1. Bladepedia கார்த்திக் : விஷப் பரீட்சைகள் வேண்டாமே ! நமது இதழ்கள் தயாரான பின்பு பெரும்பாலும் என்னால் முழுமையாகப் படித்திடவே முடிவதில்லை. என் கண்களுக்குத் பிரதானமாய் தெரிந்திடுவது பிழைகள் ; குறைகள் மட்டுமே ! So - தயாரிப்பு stage-ல் உள்ள பக்கங்களையும் ; அச்சாகும் போது வந்திடும் proof-களையும் தாண்டி நான் அதிகம் பார்த்திடுவதில்லை. இது பற்றி Comeback Special-ல் கூட எழுதி இருந்தேன் !

      இந்த லட்சணத்தில் 'பிற பதிப்பகங்கள் வெளியிட்ட இதழ்களை review செய்கிறேன் பேர்வழி' என்று நான் ஏதாச்சும் எழுதி - அது ஒரு controversy ஆகிடுவதை நான் துளியும் விரும்பிடவில்லை.

      அது மாத்திரம் அல்ல...தமிழ் காமிக்ஸ்களின் மொத்த படைப்புகளைப் பற்றி என்னை விட மிக ஆழமான ஞானமும் ; ஞாபகமும் கொண்ட நண்பர்கள் உங்களிலேயே ஏராளம் ! So, அவற்றை உங்களைப் போன்ற பதிவர்களிடம் ஒப்படைத்து விட்டு, நான் 'பராக்கு' பார்ப்பதே உத்தமம் ! உசிதம் !

      Delete
  28. டியர் friends , புக் மார்க்கெட் பகுதியை நாம் இந்த ப்ளாக் ல் ஆரம்பித்தால் என்ன ? total முத்து காமிக்ஸ் செட் rs 2 லட்சம் ற்கு nri க்கு விற்ற நண்பர்களை தெரியும் ................அந்த மாதிரி பணத்திற்கு அடிமை ஆகாமல் , நம்மிடம் ஒரு காமிக்ஸ் 2 செட் or 3 செட்இருந்தால் , அதை exchange முறையில் வேறு காமிக்ஸ் வாங்கி விடலாமே ? ஏற்கனவே ,நாம் இதை லோக்கல் friends இடம் செய் யல் படுத்தி வருவதுதான் ........பட் இந்த ப்ளாக் ல் ஆரம்பித்தால் ,,நம் நண்பர்கள் வட்டம் பெரியது .........சில பல நல்ல காமிக்ஸ் கிடைக்க வழி உண்டு ....விஜயன் சார் ,தப்பாக என்ன மாட்டார் ........என்ன சொல்கிறிர்கள் நண்பர்களே .............என்ன நினை கிறிர்கள் ஸ்டீல் claw @ dr......... நீங்கள் தான் எடிட்டர் க்கே திகில் காட்டியவர் சாரி திகில் கொடுத்தவர் என்று என் காமிக்ஸ் நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது .........உண்மையா ?............

    ReplyDelete
    Replies
    1. அய்யோயோ திரும்பவும் புக் மார்க்கெட் ஆ? வேணாம் சாமி. இது வரை பட்ட காயமே இன்னும் ஆறல. அது ஜகஜால கில்லாடிகளுக்கான ஏரியா ங்க லூசு பையன் சார். மீண்டும் அந்த விஷ பரிட்சையில் இறங்குவதா? யோசியுங்கள். புத்தக ப்ரியன்

      Delete
    2. நன்றாக யோசித்து விட்டேன் நண்பரே மிக அருகில் இருக்கும் நண்பர்களுடனாவது புத்தகங்களை பகிர்ந்து கொள்ளலாமே பணம் இங்கே பிரதானமா என்ன ? புக் மார்க்கெட் பகுதி உயிர் பெறட்டுமே நண்பா?

      Delete
  29. Dear Sir,

    HARD BOUND COVER பற்றி விரைந்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும். இரத்தப்படலம் புத்தகத்தை பைண்டிங் செய்ய மட்டுமே RS 70 ஆனது. அதற்க்கு நீங்களே HARD BOUND COVER போட்டு ரிலீஸ் செய்தால் அந்த AMOUNTA நாங்க நமது புத்தகத்திற்காவது நேரடியாக கொடுத்த திருப்தி இருக்கும். அதோடு நாங்கள் BIND செய்தால் அதன் முகப்பு ஏதோ SCHOOL BOOK போல் இருக்கும். நீங்களே HARD BOUND COVER போட்டால் முன் பக்கத்தில் மேலும் ஒரு காமிக்ஸ் DESIGN கிடைக்கும். WE NEED HARD BOUND COVER AT LEAST FOR SPECIAL ISSUES. PLEASE DO CONSIDER THIS ASAP.

    SOUNDAR, SIVAKASI

    ReplyDelete
  30. இரும்பு கரத்தானையும் கரம் பிடித்து அழைத்தமைக்கு நன்றி நண்பரே ,நானும் என் கரம் நீட்ட தயார்!!!

    ஸ்பைடரும் , ஆர்ச்சியாரும் ,பிளேடும்,soundarss ,dr ,மந்திரி ,மீரான் ,சிவா ,விஸ்கி,பிரின்ஸ் ,மந்திரியார் ,ரபிக் ,radja ,simba, ellaorudanum vijayan sir neengalum ஆவன செய்யுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      I AM ALWAYS READY TO JOIN WITH COMICS LOVERS. AND ALSO I HAVE GIVEN MY DIRECT CONTACT NOS PREVIOUSLY ALSO. IF ANY BODY WANTS TO CONTACT ME, YOU CAN CALL MY NO: 9095031022.

      SOUNDAR, SIVAKASI.

      Delete
  31. மீண்டும் ஆசிரியர் வண்ணத்தில் பெரிய அளவில் வெளி விடுவது அனைத்தையும் விட சிறப்பாயிருக்கும் .என்ன நண்பர்களே,நான் சொல்வது சரிதானே ?

    ReplyDelete
  32. Dear Vijayan, lion and muthu comics were introduced to me by my neighbor when I was young! So I don't get a chance to read all our comics, because they don't buy them regularly. My family was not allowed me to by those comics. I started buying them after I started earning. I bought many of our old comics in old paper and books stalls... :-) Even I go to any new place now-a-days, I used to check the old paper and books stalls for our comics.

    Interestingly comics played a role in my career, which made me to work on Graphics User Interface (GUI).

    ReplyDelete
  33. Dear Vijayan,
    Thanks for confirming the story. Anything you do is OK with us... ;-)

    I might send you a review of the Largo book by letter, for old times's sake. Ha ha... :-) Are you selling these books in the book shops at all?

    By the way, after all this "buildup" for Thorgal, I had to read about him in Wikipedia... Let me state my thoughts....

    தொர்கல் காமிக் வேண்டாமே? Supermanஐ உல்டா செய்திருக்கிறார்கள் ... அதுவும் வெளிப்படையாக. Only getup மாறியிருக்கிறது, Everything else is the same..... Read this plot line... Some boy crashes on a spaceship to Earth. He is brought up by another family. He has special strengths and a strong moral character. Superman was the moral pillar amongst Cold War politicians. தொர்கல் is the moral pillar among marauding, pillaging, blood thirsty Viking warriors!!!
    Thumbs down!

    தொர்கல் காமிக் வேண்டாமே, please?

    ReplyDelete
    Replies
    1. Dear Surio,
      இங்கு தொர்கள் வேண்டும் என்பவர்கள் அதை படித்து ரசித்தவர்கள். இந்த கதை தமிழில் வரவேண்டிய கதை. தொர்களுக்கு என்று ஒரு பெரிய சத்தி கிடையாது. சூப்பர்மேன் காமிக்ஸ் உல்டா கிடையாது. அழகானதொரு கதை, அருமையான வான் ஹாம்மே கதை, சித்திரம் ரோஷினி.

      Delete
    2. >> சூப்பர்மேன் காமிக்ஸ் உல்டா கிடையாது.
      Whatever I read on Wikipedia sounded very similar. Alien boy from Spaceship, adopted by someone else, skilled in archery... Strong moral code, etc etc.

      >> தொர்களுக்கு என்று ஒரு பெரிய சத்தி கிடையாது.
      OK, I see.

      >> அதை படித்து ரசித்தவர்கள். இந்த கதை தமிழில் வரவேண்டிய கதை.
      I defer to your practical point. I haven't read the book at all. So, perhaps I will bite my tongue, wait and hope. :-)

      Thanks for the clarification.

      Delete
  34. I am from Delhi. From a blog I came to know about some Lion Comics titles (spider comics) were still available with you. Are they or some other tiles in English are still available with you. If so how I can buy them.

    ReplyDelete
  35. 2000ல் ஒர் சம்பவம்? நான் அப்​போது பண்ணி​ரெண்டாம் வகுப்பு படித்து ​கொண்டிருந்​தேன், எங்கள் விட்டருகில் குடி​சை வாரியம் அதிகம் நி​றைந்தது, ஒர் எளியவர் என் விட்டருகில் மண்​ணெண்​னை உற்றிக்​கொண்டு தற்​கொ​லை ​செய்து​கொண்டார்..குடி​சையில் தீ
    ஜீவா​​லை பற்றிக்​கொண்டு, என் விட்டின் ஜன்னல்க​ளையும், பர​ணையும் ​நெருங்கி​கொண்டிருந்தது.. என் வீட்டில் எ​ல்​லோரும் பரபரப்பாக இயங்கி​கொண்டிருந்தார்கள், என் வீட்டிலுல்​லோர் அ​னைத்​தையும் அப்புரப்படுத்திக்​கொண்டிருந்தனர், நா​னோ அரக்க பறக்க காமிக்ஸ் ​சேகரிப்பு நி​றைந்த மூட்​டை​யை ​அப்புறப்படுத்திய​தை இன்னும் என் வாழ்நாளில் மறக்க இயலாது....அ​தை கண்டு அ​ணைவரும் துக்கத்​தை மறந்து சிரித்துவிட்​டோம்.

    ReplyDelete
  36. நல்ல வேலை மூட்டையை காப்பாற்றினீர்கள் இல்லை என்றால் என்னை போன்று வாரா வாரம் கடை தெருவில் அலைந்து காமிக்ஸ் தேடி கொண்டு இருப்பீகள் .....congrats Mr .மர்மம்

    ReplyDelete
  37. அடடா என் கதைய சொல்லாம விட்டுடேனே.
    .......இதோ ......என் தந்தையிடம் ஸ்பைடர் மேன் டிரஸ் கேட்டு அலைந்த காலம் உண்டு .....இப்போது தான் அவை கடைகளில் கிடைகின்றன ....''நீதி காவலன் ஸ்பைடர்'' கதையில் வரும் ஜிஸ்மோ கருவியை (ஞாபகம் இருக்கா?) பழனி முழுவதும் தேடிய நாட்கள் உண்டு ...யாரையாவது கை குலுக்கி கிழவனாக்க .......சிறு வயது லூசுத்தனத்தை கடைகாரர் எப்பிடி தான் பொருத்துகொண்டாரோ....
    நண்பர்களே பேசாமல் ஒரு நாள் ஸ்பைடர் ட்ரசுடன் போய் ஆசிரியர் முன் நின்று எப்ப விடுவீங்க அர்டினி அரக்கன் என்று கேக்க போறேன் ...

    ReplyDelete
  38. சார் தயவு செய்து word verification எடுத்து விடவும் ..
    .மீண்டும் மீண்டும் தவறாகவே ...ஐந்து ஆறு முறை டைப் செய்து நொந்து போய் விடுகிறேன் தமிழில் டைப் செய்து காப்பி செய்யும் முன் இரண்டுமே மறைந்து விடுகிறது ..வயதான காலத்தில் இது என்ன கண் பரிசோதனை
    .நண்பர்களே நீங்க என்ன சொல்றீங்க ?
    இரும்பு கையாரே என்ன சொல்றீங்க ?
    முடியல .........

    ReplyDelete
    Replies
    1. nanumthan nanbare (ithanai aangilathil solli vidugiren)

      Delete
    2. நானும்தான் மந்திரியரே,நானே மடல் வரையலாம் என நினைத்திருந்தேன்,தாங்கள் அதற்குள் அனுப்பி விட்டீர்கள் ,நீங்கள் மதி மந்திரியார் அல்லவா.அடிக்கடி மடலை அனுப்பும் போது இது ஒரு இம்சையாகவல்லோவோ இருக்கிறது

      Delete
    3. மேலும் அது prove you are not robert என்று வேறு கேட்கிறது,ஒரு வேலை எனது கரத்தை robert என வாடை பிடித்து ,எனக்கு மட்டும்தான் கேட்கிறதோ எனவல்லவா நினைத்தேன் .

      Delete
  39. நான் ஒருத்தன் இருக்குறதையே மறந்துட்டீங்களா.திகிலின் முதல் இதழை (1986 ) வாங்கி படித்தது புனித சாத்தானுக்கு இன்றும் நினைவில் உள்ளது.அப்போது எனக்கு வயது 13 .(ஹிஹி ஹி )

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி மறப்போம் ,நீங்கள் இல்லையெனில் திகிலே கிடையாதே?

      Delete
  40. டியர் friends ,ஜோல்னா வை எங்காவது பார்தீர்களா? மலை பகுதி க்கு காமிக்ஸ் படிக்க போச்சு ,,,, பயபுள்ள என்ன ஆச்சோ ? ஜோல்னவை தேடி மலை மலை யாய் அலைந்தது தா ன் மிச்சம்ம்............... கண்டு பிடிக்க முடியல ?........மனசு கிடந்தது அடிச்சி கிது............... ஜோல்னா வை கண்டு பிடித்து தருவோருக்கு oru பழைய முத்து காமிக்ஸ் இனா ம்.........முன் பக்கம் 20 page மிஸ்ஸிங் ,,,பின் பக்கம் 20 பேஜ் மிஸ்ஸிங் ........... கண்டு பிடித்து தகவல் சொல்வோருக்கு புறா கூரியர் மூலம் காமிக்ஸ் அனுபப்படும்........................................டேக் கேர் GUYS .........லெட்ஸ் ஸ்டார்ட் மியூசிக் .........................டொட்ட டோடோ ....டொட்ட டோடோ .............

    ReplyDelete
  41. இந்த வாரம் சன் டிவில கூட திகில் வாரம்தான்.
    கோயம்பதுரில்லிருந்து ஸ்டீல் க்ளா:- கோவை ராமகிருஷ்ணா ஹாஸ்பிட்டல் எதிரில் உள்ள புக் கடையில் நம்ம காமிக்ஸ் கிடைக்கும் ; இப்போ அங்கே சிறுவர் இதழ்கலாவது கிடைக்குதா?..

    ReplyDelete
    Replies
    1. மீரான் நீங்கள் சொல்லும் கடையில் ஒரே ஒரு முறை புத்தகம் வாங்கியுள்ளேன்,நானும் அந்த பகுதிக்கு சென்று நீண்ட நாட்களாகி விட்டன .மேலும் நான் ஆவாரம்பாளையத்தில்தான் வசிக்கிறேன் .இருப்பினும் காந்திபுரம் சென்று வாங்கத்தான் பிடிக்கும்

      Delete
    2. உங்க ரிப்ளைக்கு நன்றி ஸ்டீல் க்ளா!

      Delete
  42. எனக்கு இன்னும் லார்கோ வரலே… இந்த லட்சணத்துல சிறுவயசு ஞாபகத்த வேர கிளறுறீங்க… சுழல்முறையில படிச்சதுனால அறைக்றையா ஞாபகம் இருக்கு… ம்ம்ம்ம்… nostalgia…
    என்னோட லார்கோவின்ச் எப்ப சார் வருவார்..?

    ReplyDelete
  43. நம் போஸ்ட்கார்ட் விமர்சகர்களில் எவரேனும் இங்கே இருக்கிறீர்களா என்று தெரிந்திட ஆவல் எனக்கு - கையைக் கொஞ்சம் தூக்குங்களேன் "உள்ளேன் அய்யா ! மணலூர் பேட்டை, விழுப்புரம், புது தில்லி, தற்போது சென்னை என எங்கே இருக்கிறேனோ அங்கே இருந்தெல்லாம் போஸ்ட் கார்டில் மிக மிக சிறிய எழுத்துக்களில் கடிதம் வரைந்து உங்களுக்கு அன்பு தொல்லை கொடுத்த அதே ஜானி என்கிற ஜான் சைமன் த/பெ ஜெ. சின்னப்பன் அடியேன்தான்! "

    ReplyDelete
  44. அதில் பூத வேட்டை, இரும்புக்கை எத்தன் பற்றி மட்டும் அடிக்கடி கேட்டு கொண்டே இருந்தேன். இப்போவும் அதேதான் உங்கள் பரணில் இருந்து டெக்ஸ் வில்லரின் பூத வேட்டை கண்டு பிடித்து விட்டீர்களா? எனது பெயர் வந்த புத்தகங்கள் அனைத்தையும் சென்னை கொண்டு வந்து விட்டேன் நேரம் கிடைக்கும்போது பதிவிடுவதாக உத்தேசம். எனது பெயர் வருவதில் இத்தனை போட்டி இருந்ததா? அச்சுக் கோர்க்கும் தங்களது கம்பாசிடருக்கு என் நன்றிகளை தயவு செய்து தெரிவித்து விடுங்கள் சார் ஜி!

    ReplyDelete
  45. //"இவர் பெயர் ஏற்கனவே போன மாசம் வந்திருச்சு...திரும்பவும் வேண்டாம் " என்று அச்சுக் கோர்க்கும் எங்களது கம்பாசிடர் சொல்லிட்டால் அந்த விமர்சனம் reject//


    எனது கடிதங்கள் அதிகம் வெளிவராததற்கு காரணம் இப்பொழுதுதான் தெரிகிறது . நான் அஞ்சல் அட்டையில் எல்லாம் எழுதியது கிடையாது . அனைத்தும் நாலு பக்கம் ஐந்து பக்கம் தான் . ஒரு கடிதம் மட்டும் முதல் பாத்து ருபாய் பதிவில் ( சூப்பர் ஸ்பெசல் ) வந்தது . அதுவும் "மணி மைந்தன்" என்ற எனது புனை பெயரை " ராணி மைந்தன் " என மாற்றி வெளி இட்டு கடுப்பைவேறு கிளப்பி விட்டார் உங்கள் கம்பாசிடர்.
    இதனை நேரில் சந்தித்த பொழுது, நீங்கள் நான் சொன்னதை கேட்டு அந்த புத்தகத்தை தேடி எடுத்துவந்து படித்து பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது .

    ஒரு முக்கிய வேண்டுகோள் : அணைத்து திகில் , லயன் , மினி லயன், ஜூனியர் லயன் ஆகியவற்றை வரிசையாக இரண்டு மூன்று இதழ்கள் இணைத்து CC இல் வெளிஇட்டால் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. ப்ளீஸ் சார் பழைய இதழ்களை இணைத்து cc ல் வெளியிடுங்களேன்! கேட்கவே சந்தோசமா இருக்கு!

      Delete
    2. sir..how about reprinting karsanin kadantha kaalam...its a very special story.

      realistic..i love that..looks like our guys have forgotten this....just like thanga kallarai, this one also needs a special mention.....

      also pls try to reprint the 80's special issue..which i believe most of us dont have.

      anybody there to vote for this!

      Delete
  46. தமிழ் நாட்டின் மிக பெரிய மூன்றாவது ( சென்னை , மதுரை, ஈரோடு ) புத்தக கண்காட்சி ஆகஸ்ட் இல் ஈரோடில் நடைபெற உள்ளது . நமது காமிக்ஸ் ஸ்டால் வந்தால் நன்றாக இருக்கும் . என்னால் முடிந்த அணைத்து காமிக்ஸ் பணிவிடைகளையும் செய்ய சித்தமாக உள்ளேன் . ஆசிரியரின் பதிலை எதிர்நோக்கி .....

    ReplyDelete
  47. One letter written by me was published in "Kaarsanin Kadantha kaalam - Part 1" as S.Venkatesh. Thirumangalam. At that time I was doing my school at Thirumangalam. I was very happy and was showing that to my family and friends that my name has been published in my favourite comic book.Still those memories makes me feel something different.

    ReplyDelete
  48. first time my name appeared on the book when i won a competition in Millennium special. It brought me a good news and bad news that i never gonna forget for the rest of my life time . I had the habit of using my dad address sticker for filling sender address and append my name at the top.So when i won the competition both my name and my father name appeared on the winner list[2 competition was there]. Nearly after 2 month afterwards , a guy came to house on a Sunday evening asking for my dad .Since my father has went out , i asked him to sit down .When my father came back , he started to talk abt comics and he couldn't understand a thing.Then only we realized he actually came to see me . He told me that he has come to Madurai to attend a marriage and also told that he needed Millennium special .I told him that i will never sell a comics . He promised me that he only wanted to read it and give it back after 1 month and gave Rs 50 as security amount. After much hesitation i gave the book to him ,which was never returned to me till now . Again after 2 months another person named Kadeer approached me saying that he is comics fan . He told me he is working in Singapore and will come to India once in a year .Hence he asked me buy books for him . After he saw my comics collection , he wanted some books to read .but his time i said no siting my previous experience.He turned out to be my best comics friend till now and i am buying comics for him regularly .
    My name started to appear regularly for some times from 2004 on wards in both lion and muthu till comics till i went to chennai for my job

    ReplyDelete
  49. சார் ,ipl ல் மூழ்கி விட்டீர்களா ,அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு (புதிய) பதிவோடு சந்திக்கிறேன்,என்று கூறி விட்டு ஒரு வாரமாகியும் புதிய பதிவிடவில்லையே !

    ReplyDelete
  50. கோடையின் கடுமை அதிகம்தான் ! கோடை மலர் எப்போ சார் ?இப்போதைய கோடை மலர் உங்கள் பதிவுகள்தான் !!!

    ReplyDelete
  51. When am I going to read all these stories which I had no chance of laying my hand on.

    ReplyDelete