நண்பர்களே,
வணக்கம்! அது என்ன மாயமோ தெரியலை - ஆனால், ஒவ்வொரு வருஷத்தின் கடைசிக் க்வார்ட்டர்களும் தெளிய வைத்துத், தெளிய வைத்து கும்மாங்குத்துக்களாய் நடுமூக்கில் இறக்குவதில் வல்லுநர்களாய் உள்ளன ! "அப்பாலிக்கா பார்த்துக்கலாம், அடுத்த மாசத்திலே பார்த்துக்கலாம்!'' என்று தள்ளிப் போகும் முரட்டுப் பணிகள் ஒரு பக்கமென்றால், மறு வருஷத்தின் அட்டவணைத் திட்டமிடல்கள் இன்னொரு பக்கம்! "அடடா.. என் பங்கு என்ன சூத்தைப் பங்கா?'' என்று அடுத்த கேள்வியோடு தீபாவளி மலர்கள் பொங்கியெழுவதோ முற்றிலுமாய் வேறொரு பக்கம்! இந்த வாட்டியோ- நான்காவதாய் ஒரு முனையிலிருந்தும் தாக்குதல் நிகழ்ந்து வருகிறது! And அது வெளுக்கும் வெளுப்போ முற்றிலுமாய் ஒரு புது உச்சம்! பெயரிலேயே ''BOMB'''' இருக்கும் போது அதன் தாக்கம் மிதமாய் இருக்கவாச்சும் முடியுமா- என்ன? Oh yes- காத்திருக்கும் "சாம்பலின் சங்கீதம்'' சார்ந்த பணிகள் தான் இந்த நொடியில் டெக்ஸ் வில்லர் அவதாரெடுத்து புடைப்பான நம்ம மூக்கை பொளேர் பொளேரென பிளந்து வருகின்றன! And இந்தப் பதிவு சுகமான அந்த சாத்துக்கள் சார்ந்ததே!
LA BOMBE!!! உலகையே கொரோனா எனும் அசுரன் கபளீகரம் செய்வதற்கு ஒற்றை மாதத்திற்கு முன்பாக ப்ரெஞ்சில் உருவான மெகா கிராபிக் நாவல் இது! மிகச் சரியாக அந்த மார்ச் 2020 நம்பளுக்கொரு பெர்சனலான மகிழ்வையுமே உள்ளடக்கி வைத்திருந்தது! அந்த மாதத்தில் தான் "பாரிஸ் புக் மார்கெட்'' என்ற பெயரில் ஒரு மூன்று நாள் புத்தகவிழா ப்ரெஞ்சுத் தலைநகரில் அரங்கேறிடவிருந்தது! And இந்தியாவில் ப்ரெஞ்சு காமிக்ஸ்களின் கொடியை உசரமாய்த் தூக்கிப் பிடிப்பதில் நமக்கே முதலிடம் என்ற விதத்தில் ப்ரெஞ்சுத் தூதரகம் அடியேனை guest of honor ஆக தங்கள் உபசரிப்பில் பாரிஸுக்கு அனுப்பிடத் திட்டமிட்டிருந்தது! So பாரிஸின் முக்கிய பதிப்பகங்களெல்லாம் நம்பளை வந்து சந்திக்க ஏதுவாய் ஏற்பாடுகள் பல செய்தும் வைத்திருந்தனர்! மிகச் சரியாக அந்த மார்ச்சில் தான் LA BOMBE ரிலீஸும் என்பது எனக்குத் தெரியும்! So 'சூட்டோடு சூடாய் அங்கேயே இதற்கான உரிமைகளை வாங்குறோம்; ஊருக்கு வந்த கையோடு கெத்து காட்டறோம்!' என்று மனசுக்குள் பெரூசாய் கோட்டையெல்லாம் கட்டி வைத்திருந்தேன்!
ஆனால், பிப்ரவரி இறுதி முதலாகவே ஐரோப்பாவில் கொரோனாவின் தாக்கம் பிசாசு வேகத்தில் ஆட்டத்தைத் துவக்க, "விழா நடக்குமா? நடக்காதா?'' என்ற கேள்வி உள்ளுக்குள் எழத் தொடங்கியது! டெம்போல்லாம் வச்சுக் கடத்தின மாதிரி பாரிஸுக்கோசரம் புது கோட்டெல்லாம் வாங்கியிருந்தேன்! "போச்சா சோணமுத்தா?'' என்று வயிற்றில் புளி கரைய ஒவ்வொரு நாளையாகக் கடத்த, ஒரு சுபயோக சுபதினத்தில் "பாரிஸில் விழா கேன்சல்'' என்ற தாக்கீதும் வந்து சேர்ந்தது! இந்நேரத்திற்குள் கொரோனாவின் பிடிக்கு பூமியில் யாருமே விதிவிலக்காகிடப் போவதில்லை என்பது இங்குமே வேகமாய்ப் புரிபட ஆரம்பித்த போது, "கோட் போட முடியலியே'' என்ற கவலையெல்லாம் பின்சீட்டுக்குப் போயிருந்தது! And அந்தக் களேபரத்தில் LA BOMBE சார்ந்த அபிலாஷைகளும் போயே போயிருந்தன ! தொடர்ந்த பொழுதுகளில் லாக்டவுண்; இந்தச் சிக்கல் - அந்தச் சிக்கல் என ஏதேதோ தாண்டவமாட, இந்த மெகா ப்ராஜெக்ட் பற்றிச் சிந்திக்க இம்மி கூட "தம்'' இருந்திருக்கவில்லை!
இன்று திரும்பிப் பார்க்கையில் 2020-ல் இந்த முயற்சி பணாலாகிப் போனதெல்லாம் ஏதோ தெய்வச் செயல் என்றே தோன்றுகிறது! Becos அன்று இதன் மீதிருந்த மோகம் மட்டுமே மூஞ்சிக்கு முன்னே "ரா.. ரா...'' என்று நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது! 452 பக்கங்கள் எனும் போது, குறுக்கைத் கழற்றவல்ல அவை சார்ந்த பணிகள் பற்றிய புரிதல் அந்த நொடியில் எனக்கு முழுசாய் இருந்திருக்கவில்லை! ஏதேதோ நிகழ்ந்து பெருசாய் சக்கை விழுந்திருக்காத பட்சத்தில் 2020-லேயே கதைக்கான உரிமைகளை வாங்கியிருப்போம்; அப்புறமாய் மோவாயைத் தடவியபடியே மல்லாந்திருப்போம்! So "சொதப்பல் கூட நல்லதே!'' என்று Surf Exel மம்மியாட்டம் எனக்கு நானே தேறுதல் சொல்லிக் கொண்டேன்!
ஆண்டுகள் ஐந்து கடந்தன... and எக்கச்சக்க இடைப்பட்ட அனுபவங்கள் தந்த பக்குவம்- நம்மைப் பலவிதங்களில் பட்டி-டிங்கரிங் பார்த்து வைத்திருந்தன! அம்பது- நூறு பக்கங்களுக்கு எழுதுறதுலாம் முற்றிலும் வேறு மாதிரி; நானூறு/ஐநூறு என்று எழுதுறலாம் முற்றிலும் இன்னொரு மாதிரி என்ற புரிதல் புலர்ந்திருந்தது. Of course - "நெதம் பத்து பக்கம் வீதம் எழுதினா மிஞ்சிப் போனா ரெண்டு மாசங்களுக்குள்ளாற முடிச்சிட முடியாதா?'' என்ற "சபலம் சடகோபன்'' அவதாரெல்லாம் எடுக்காதில்லை தான்! ஆனால், sustained ஆக, அத்தினி நாட்களுக்கு ஒற்றைப் பணியில் முனைப்பு காட்டிடுவதெல்லாம் நம்ம வயசுக்கு மீறின ஆசைடா தம்பி! என்று மண்டை எச்சரிக்கை செய்து தந்ததால் LA BOMBE பற்றி வினாக்கள் எழும் போதெல்லாம் - சூனா-பானா பாணியில் எதையாச்சும் அள்ளிவிட்டு, பஞ்சாயத்தை கலைத்து விடுவது அப்போதைய வாடிக்கை!
And அந்த நொடியில் தான் வான்டனாக வந்து வண்டியில் ஏறினார் - நம்ம நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள்! ஏற்கனவே 2018-ல் நம்ம இரத்தப் படலம் வண்ணத் தொகுப்புடனான இணைப்பான "புலன் விசாரணை''யின் காமிக்ஸ் அல்லாத சிரமமான பக்கங்களை, கர்ம சிரத்தையாய் மொழிபெயர்த்திருந்தவர்! So அவராய் வலிய கரம் தூக்கிய போது மின்னலாய் உரிமைகளை வாங்கிப் போட்ட கையோடு, படைப்பாளிகளிடமிருந்தே இதன் இங்கிலீஷ் பதிப்பினையும் வாங்கி மொத்தமாய் நான்கு அத்தியாயங்களையும் மொழிபெயர்த்திட அவரிடமே ஒப்படைத்துவிட்டோம்! Post 2018 - நண்பரின் எழுத்துத் திறன்கள் வேறொரு லெவல் களமாடி வருவதை அறிவேன் தான்! So நாம் மாமூலாய் குச்சி சகிதம் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரின் பின்னேயும் நின்று வேலை வாங்கும் பாணியெல்லாம் இம்முறை சரிப்படாதே என்ற "டர்'' உள்ளுக்குள்! மொழிபெயர்ப்புகளுக்கு விருதுகள் வாங்கிக் குவிப்பவரிடம் போய் நாம் புதுசாய் சொல்ல என்ன இருக்கக் கூடும்?
வாரங்கள்... மாதங்கள் ஓட்டமெடுத்தன! ஒவ்வொரு அத்தியாயமாய் முடிய, முடிய நண்பரும் ஸ்க்ரிப்டை நமக்கு அனுப்பி வைப்பார்! ஆனால், "ரயில் வரப் போகுது... கேட்டை போடப் போறாங்க'' என்பது வரைக்கும் காலாட்டிக் கொண்டிருந்து விட்டு, கடைசி நொடியில் ஓட்டமாய் ஓடுவது தான் நம்பள்கி இந்த வயதுக்கான நடைமுறை! So "மேலே இருக்கவன் பார்த்துக்குவான்..! மேலே இருக்கவன் பார்த்துக்குவான்!'' என்று நோவுகளை ஒத்திப் போடும் பயில்வான் ரங்கநாதன் பாணியில் - "ஒட்டுமொத்தமாய் பார்த்துக்கலாம்! நெருக்கவட்டிலே பார்த்துக்கலாம்!'' என்றபடியே பக்கங்களை பீரோவுக்குள் வைத்துப் பூட்டும் வேலையை மட்டுமே செய்து முடித்தேன்! ஏற்கனவே அந்தந்த மாதத்தின் பணிகளை உரிய காலத்தில் முடித்துக் கொடுப்பதிலேயே சட்டை கிழிஞ்ச கைப்புள்ளையாட்டம் இஸ்துக்கினே நடந்து கொண்டிருப்பவனுக்கு 452 பக்க heavy கி.நா, பீதியூட்டாமல் என்ன செய்யும்?
ஒரு சுபயோக சுபதினத்தில் நண்பரும் "finish'' என்று மொத்தத்தையும் முடித்தனுப்பியிருக்க, "ஆங்.... டைப்செட்டிங் பண்ண நாழியாகுமே? அப்போ பார்த்துக்கலாம்!'' என்று மறுக்கா மனசைத் திடப்படுத்திக் கொண்டேன்! But ஆகஸ்டும் புலர்ந்து, ஈரோட்டில் நண்பர்கள் சந்திப்பும் முடிந்த பிற்பாடு - "ஆஹா.. இடைப்பட்ட செப்டம்பர் & அக்டோபர் இரண்டு மாதங்கள் மட்டுமே பாக்கிடா புண்ணாக்கு மண்டையா! நவம்பரிலே எப்போன்னாலும் சேலம் புத்தகவிழாவை அறிவிச்சிடுவாங்க! அதுக்குள்ளே எப்பாடுபட்டேனும் பொஸ்தவத்தை ரெடி பண்ணியே தீரணுமே?!!'' என்று பகீரென உறைத்தது! அதனிடையே 336 பக்கங்களில் டெக்ஸ் & 284 பக்கங்களில் ஏஜெண்ட் ராபின் & பட்டாப்பெட்டியை உருவ வல்ல அட்டவணை finalization கூட காத்திருப்பதும் புரிந்தது!
"ஒரு மலையை இடம் மாற்ற நினைப்பவன், சிற்சிறு கற்களைச் சுமந்து போவதிலிருந்து தான் ஆரம்பித்தாகணும்!'' என்பது சீனப் பழமொழி! ரைட்டு... இனியும் மொக்கை போட்டால் சேலத்துக்கு பீப்பீபீபீ.. தான்! என்ற பயத்தோடு பணிகளுக்குள் ஐக்கியமாகிடத் தயாரானேன்!
கதாசிரியர்ஸ் Alcante & Bollee இதன் உருவாக்கத்துக்கென செய்திருக்கும் அசுரத்தனமான research & மெனக்கெடல் தான் கதைக்குள் புகுந்த ரொம்பச் சீக்கிரமே பிடரியோடு சாத்தியது! ''ஆதி முதல் அந்தம் வரை'' என்று பல இடங்களில் உவமைகளை பயன்படுத்தியிருப்போம் தான் ; ஆனால் அதற்கொரு சான்று பார்க்க நினைத்தால் அணுகுண்டின் உருவாக்கம் பற்றிய இந்தப் படைப்பை சுட்டிக் காட்டலாம் என்பேன்! Absolute awe inspiring stuff!
Oh yes - முதல் அத்தியாயத்தின் நூறு பக்கங்களைத் தான் இதுவரையிலும் கடந்திருக்கிறேன் & எப்போதும் போலவே படைப்பினை முழுசாய்ப் படிக்கவுமில்லை தான்! போகப் போக பார்த்துக்குவோமே என்ற மாமூலான குசும்பு! ஆனால், கடந்துள்ளமட்டிற்கே கதாசிரியர் பட்டுள்ள பிரயாசைகளை ஸ்பஷ்டமாய்ப் பார்த்திட இயல்கிறது! And மொழியாக்கத்தைப் பொறுத்த வரையில் A-1! நிஜம், வரலாறு, விஞ்ஞானம், அரசியல் என எக்கச்சக்கமான சங்கதிகளின் கலவை எனும் போது, அதனைக் கையாள்வது எத்தனை கடினமென்பது புரிகிறது! அதே சமயம் நம்ம மூக்கு செம புடைப்பு என்பதுமே தெரிந்த சமாச்சாரம் தானே? So கதை நகர்த்தல் ரொம்பவே வறட்சியாய் தென்பட்டிடக் கூடாதே என்ற ஆதங்கத்துடன் ஆங்காங்கே நண்பரின் ஸ்க்ரிப்ட் மீது திருத்தங்கள் போடவே செய்து வருகிறேன்! நமக்கே நமக்கான பாணியாய் நாம் கருதிடும் சமாச்சாரத்தில் சமரசம் செய்திட வேணாமே என்ற உந்துதல் உள்ளுக்குள் குத்த வைத்துக் கொண்டு, ஆட்றா ராமா.. தாண்டறா ராமா! என்று கரணம் போடச் செய்து வருகிறது!
And "சாம்பலின் சங்கீதம்'' காத்துள்ளதென்ற பயத்திலேயே டெக்ஸின் தீபாவளி மலர் பணிகளை அசுரகதியில் முடித்துவிட்டது இங்கொரு சந்தோஷப் பக்கவிளைவு! என் சர்வீஸில் ஒரு 336 பக்க டெக்ஸ் கதையை இந்தத் துரிதத்தில் முடித்ததாய் எனக்கு நினைவேயில்லை! So ஒரு தார்குச்சியை வைத்துக் கொண்டே பின்னே யாரோ நிற்பதானதொரு பிரமையே போதும் போலிருக்கு - VRS வாங்க வேண்டியவனும், இயவரசரைப் போல தொப்பையை உள்ளே இழுத்துக் கொண்டு நகர்வலம் வந்திடுவதற்கு!
எனது அனுமானம் சரியாகயிருக்கும் பட்சத்தில், செப்டம்பர் இறுதிக்குள் "சாம்பலின் சங்கீதம்'' என் மேஜையிலிருந்து பிராசஸிங்குக்கும், அச்சுக்கும் நகர்ந்திடத் தயாராகியிருக்க வேணும்! மிஞ்சிப் போனால், அக்டோபர் முதல் வாரத்தைத் தாண்டக் கூடாது! So சேலம் விழாவானது நவம்பரில் எப்போது அறிவிக்கப்பட்டாலுமே கம்பு சுத்த நாம் ரெடியாக இருப்போமென்று தோன்றுகிறது! So "டீம் சேலம்'' சீக்கிரமே களமிறங்கத் தயாராகிடலாம்!
பத்து நாட்களுக்கு முன்னமே சேலத்தில் நமது ஸ்டாலில் all-in-all ஆகச் சுழன்று வருவோரில் முக்கியமானவரான நண்பர் ரகுராமன் "ஏற்காட்டில் வச்சுக்கலாமா சார் மீட்டிங்கை?.. ஒன்லி 28 கிலோமீட்டர்ஸ் '' என்ற கேள்வியோடு தொடர்பு கொண்டிருந்தார்! "சார்... விழாவுக்கான தேதி அறிவிக்கட்டும்! அப்புறமாய் ஊருக்குள்ளேயே புத்தக விழா அரங்குக்கு அருகேயே ஏதாச்சும் இடம் தேடலாம்!'' என்று சொல்லியிருந்தேன்! வழக்கம் போல நவம்பர் இறுதி & டிசம்பர் துவக்கம் என சேலம் விழா அமைந்திடும் பட்சத்தில் செமயாய் அவகாசம் கிடைத்திடும்- இதழை அமர்க்களமாய் தயார் பண்ணிட! இப்போதைக்கு நவம்பர் வரையிலான book fair schedules வந்தாச்சு! So எப்படிப் பார்த்தாலுமே நவம்பரின் பின்பாதியில் தான் சேலம் புலரும் என்றே தோன்றுகிறது ! Fingers crossed!
முன்பதிவுகள் எக்ஸ்பிரஸில் ஏற்கனவே துண்டு போட்டு வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு மெகா "தேங்க்ஸ்'' சொன்ன கையோடு, "அப்போ பார்த்துக்கலாம்!'' என்று ஒத்திப் போட்டிருக்கக் கூடிய நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டலுமே! அடுத்த மூன்று வாரங்களுக்குள் அச்சுக்குத் தயாராகி விடுவோம் folks-- ஆக அதற்குள்ளாக முன்பதிவு செய்திட்டால் நலம்! "பயணம்'' கதை போல கடைசி நிமிட சொக்காய் கிழி படலங்களைத் தவிர்க்க இது நிச்சயம் உதவும்! Trust me when I say this :இது ஒரு landmark இதழாக இருக்கப் போவது சர்வ நிச்சயம்! இதோ - சில உட்பக்க previews :
Bye all. see you around! அங்கே மேஜையில் காத்திருப்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனும் போது இங்கே லாந்தித் திரியப்படாது தானே? Have a great weekend all!