Powered By Blogger

Saturday, December 27, 2025

மதராசபட்டினத்துக்கு தயாரா?

நண்பர்களே,

வணக்கம்! ஜென் தத்துவத்தில் ""புடோ-ஷின்'' என்றொரு கோட்பாடுண்டு! அதாவது "அளப்பரிய ஆற்றல் கொண்ட மனது'' என்பதாக அதற்கு அர்த்தம் கொள்ளலாம்! அதன்படி ஒரு மலையானது நமக்குத் தடையே கிடையாதாம்; மாறாக அதுவொரு ஆசானாம்! ஒரு மலை போலான பணியை வெல்ல வேண்டுமெனில் மலைகளின் குணங்களையே நாம் உள்வாங்கிக்க வேணுமாம்! "ஐயையோ.. மழை கொட்டுதே; ஆத்தாடி.. பனி பொழியுதே; யப்பப்பா.. வெயில் தாக்குதே'' என்று மலைகள் ஒருபோதும் புலம்புவதில்லை தானே? அதே போல பணியின் கடுமையைக் கண்டு மிரளப்படாதாம்; இதைச் செய்து முடிக்க நிச்சயமாய் நேரம் எடுக்கும் என்பதை மனசளவில் ஏற்றுக் கொள்ளணுமாம்! பாறைகள் நிரம்பிய தடாகத்தில் நெளிந்து ஓடும் நீரைப் போல நமது முயற்சிகள் பணிகளினூடே பயணிக்க வேணுமாம்!

"ஹை.. உள்ளூர் தத்துவம்லாம் போரடிச்சிப் போயிட்டது போல.. தொர ஜென் தத்துவம்லாம் பேசுது!'' என்ற உங்களின் மைண்ட்-வாய்ஸ் கேட்குது மக்களே! இந்த ஜென் சமாச்சாரங்களை சமீபமாய் எங்கேயோ வாசிச்சுப் போட்டேன்; அதை உங்ககிட்டே இறக்கி வச்சு பீப்பீ ஊத உருப்படியாய் ஒரு சான்ஸ் கிடைக்காமலே போய்க்கிட்டிருந்தது! And மிகச் சரியாக "சாம்பலி­ன் சங்கீதம்'' வெளியாகி உங்களை வசீகரித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் சீன் போட இது சூப்பரா பொருந்தும் என்றுபட்டது! So here we are!! "நான் என்னிக்கு நியூஜிலாந்து பாக்குறது?'' என்று விவேக் கேட்பது போல, "நான்லாம் வேற எப்போ ஜென் தத்துவம் பற்றி பேசுறதாம்?''

"சாம்ப­லின் சங்கீதம்!'' 

சந்தேகமின்றி நமது குழுமத்தின் ஆகக் "கனமான'' இதழ் இது தான்! Of course தராசில் எடை போடும் "கனம்'' பற்றிப் பேசிடும் பட்சத்தில்- ஸ்லி­ப்கேஸ் சகிதம், 3 ஹார்ட் கவர் ஆல்பங்களில், 852 பக்கங்களோடு ஆர்ட்பேப்பரில் கலரில் வெளியான "இரத்தப் படலம்'' (2018-ன்) வண்ணத் தொகுப்பானது இதை விட செம கூடுதல் கனம்! ஆனால், "கனம்" என்ற பதத்தை - ஆழம்; அடர்த்தி; பிரம்மாண்டம்; கடுமை போன்ற சமாச்சாரங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்திடும் பட்சத்தில்- without an iota of doubt- "சாம்ப­லின் சங்கீதம்'' தான் முதலி­டம் பிடிக்கின்றது!

பத்துப் - பதினொறு மாதங்களுக்கு முன்பாய் உங்கள் விழிகளை என்னது போல அகலமாக விரிந்திடச் செய்ய ஏதாச்சும் பல்டி அடிச்சா தேவலாமே?! என்ற மகா வேட்கை எழுந்த நொடியில் மனசுக்கு வந்த முதல் ஆல்பம்- இந்த "music from the ashes'' தான்! இதன் பணி எவ்விதம் கடுமையாய் இருக்குமென்பது பற்றிய புரிதல்களெல்லாம் முழுமையாய் தலைக்குள் இருந்தன தான் and so வேலைக்குள் உட்புக வேண்டிய தருணத்தில் பெப்பெப்பே என்று மலைக்கலாகாது என்றுமே எனக்கு நானே சொல்லி­யும் வைத்திருந்தேன் தான்! ஆனால், நெட் பிராக்டிஸில் என்ன தான் பந்தை பொளேர்.. பொளேர்.. என்று சாத்தித் தள்ளினாலும், மேட்சில் 70.000 ஜனத்துக்கு முன்னே, 150.கி.மீ. ஸ்பீடில் நம்மை நோக்கிப் பறக்கக் கூடிய பந்தை எதிர்கொள்வதென்பது முற்றிலும் மாறுபட்ட விஷயமாச்சே?! அதுவே தான் நிகழ்ந்தது சாம்பலின் சங்கீதம் பணிகளின் போதும்! And அந்த ஜென் தத்துவம் எத்தனை சரியானதென்று உணர முடிந்தது! Simply becos பணியாற்றிய ஒவ்வொரு பக்கமுமே எனக்கு எண்ணற்ற பாடங்களை நடத்தத் தவறவில்லை! நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு நெடும் பணிகள் புதிதாக இராதிருக்கலாம் தான்; ஆனால், நமக்கோ 200 பக்கங்கள் என்பதே மெகா சீரியல் ரேஞ்ச். So 442 பக்கங்களுக்கு இத்தனை அடர்த்தியான களத்தினில் செய்திட அவசியமான இந்தப் பணி has been a real eye-opener! வடிவேல் பாணியில் சொல்வதானால் இனிமே எம்புட்டு சாத்தினாலும் தாங்கும் போலும் ; இதற்கும் மேலாக பெண்டை நிமிர்த்தக் கூடிய பணியாக எதுவுமிருக்குமென்று தோணலை! But யாருக்குத் தெரியும் - புனித மனிடோ நமது பாதையில் அடுத்ததாக எதை அனுப்பிடவுள்ளார் என்பதை?

இந்த நொடியிலோ அவர் நமக்கென ரெடி செய்யத் தீர்மானித்திருப்பவை - ஒரு வண்டி சென்னை ஸ்பெஷல் இதழ்களை!ஒவ்வொரு வருஷத்து ஜனவரியிலும் நடந்திடும் சென்னைப் புத்தகவிழா தான் ஒவ்வொரு தமிழ்ப் பதிப்பகத்தையும் ஜீவிக்கச் செய்திடும் நீரூற்று என்பதில் இரகசியங்களே நஹி! ஆண்டின் துவக்கத்தை அமர்களமாக்கிட இயன்றால் வருஷமே சிறப்பாகிடுவதை பல தடவைகள் பார்த்துள்ளோம்! And இம்முறை கிட்டத்தட்ட ஆயிரம் ஸ்டால்களுள் நாமும் பங்கேற்கிறோம் எனும் போது- மெய்யாலுமே "ஆயிரத்தில் ஒருவன்'' என்று காலரை உசத்திக் கொள்ளலாம் போலும்! 

சென்னை விழாக்களின் முதல் தாரக மந்திரமே - "மாயாவியோடு வா.. இல்லாங்காட்டி முட்டிங்காலுக்குக் கீழேயுள்ள பகுதிகளை மறந்துவிடு!'' என்பதே! ஏதோவொரு தபா சுத்தமாய் மாயாவி கையிருப்பே இல்லாது "ஸ்ப்ரிங்ரோல் ... கபாப்.. டக்கிலோ..'' என்று பந்தாவாய் கடைவிரிக்க, அப்போது வாங்கிய சாத்துக்கள் நமது வீர வரலாற்றில் ஒரு மறக்க இயலா அத்தியாயம்! So ரொம்பச் சீக்கிரமே சுதாரித்துவிட்டோம் இந்த ஜனவரிக்கென ! ஆகஸ்ட்வாக்கிலேயே நமது கிட்டங்கி விசிட் அடித்த போது, மாயாவி இருக்கும் ஷெல்ப்கள், நமது வங்கியிருப்பைப் போல காற்றாடிக் கொண்டிருந்தன! "பாதாள நகரம்'' & ""யார் அந்த மாயாவி?'' மட்டுமே black&white-ல் ரொம்பச் சொற்பமான எண்ணிக்கையில் அமர்ந்திருந்தன! அவை தவிர்த்து "ஒற்றைக்கண் மர்மம்'' கலர் இதழ் மட்டுமே! பாதாள நகரம் & யார் அந்த மாயாவியில் கூட தலா 30 பிரதிகளுக்குக் கீழே தான் ஸ்டாக் இருந்தது! முதல் நாள் மாலைக்குக் கூட அவை பற்றாதென்பது புரிந்தது! அந்த நொடியே அடிச்சுப் பிடித்து பணிகளுக்குத் துவக்கம் தந்தோம்- சமீபமாய் மறுபதிப்பு கண்டிராத ஆல்பங்களையாய் தேர்வு செய்து ரெடி பண்ணிட! So shortlist ஆனவை கீழ்க்கண்ட சாகஸங்கள்!

* மந்திர வித்தை

* தவளை மனிதர்கள்

* மாயாவிக்கோர் மாயாவி

* களிமண் மனிதர்கள்

இவை தவிரவும் இன்னும் சில மாயாவி ஆல்பங்களையும் "டிக்'' அடித்திருந்தோம் தான் - ஆனால் overkill ஆகிடவும் கூடாது; பணியாற்றுவதில் நாக்குத் தொங்கிடவும் கூடாதென்பதால் இந்த நான்கே மதி என்று தீர்மானித்தோம்!

அதைத் தொடர்ந்த சைஸ் சார்ந்த நோவு தான் "ஜிங்கு'ஜிங்கென்று தலைவிரித்தாடி மிரட்டியது! மேற்படி நான்கு கதைகளுமே ஒரிஜினலாய் இங்கிலாந்தில் VALIANT வாராந்திர இதழில் மேக்ஸி சைஸில் தொடராக வந்தவை..! So அவற்றை இயல்பாக வெளியிடுவதாயின் "யார் அந்த மாயாவி?''இப்போது வெளியான அதே சைஸில் தலா 48 பக்கங்களில் வெளியிட வேண்டியிருந்திருக்கும்! ஆனால், சிக்கல் என்னவெனில், க்ளாஸிக் ரசிகர்களுக்கு- பக்கத்துக்கு இரண்டே சித்திரங்கள் என்ற பாணியிலான பட அமைப்பே ரசிக்கிறது! அந்த லக்கி லூக் சைஸில் வெளியான "நியூயார்க்கில் மாயாவி!'' ''யார் அந்த மாயாவி?'' ஆல்பங்களெல்லாமே விற்பனையில் சோபிக்கவில்லை! "ஆஹா.. மாயாவியும் வேணும், காம்பாக்டாகவும் வேணும்" என்ற ஞானோதயம் புலர்ந்த மறுநொடியே, பக்க அமைப்புகளை மாற்றி செட் பண்ணும் பணிகளைத் துவங்கினோம்! இந்தக் குரங்குக் கூத்துக்களெல்லாமே அரங்கேறியது செப்டம்பரில்! ஒரு பக்கம் "சாம்ப­லின் சங்கீதம்'' இசைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ "மாயாவி மாமாவின் கச்சேரி''களும் நம்ம கான சபாவில் ஓடிக் கொண்டிருந்தன!

"அட்டைப்படங்கள் எல்லாமே fresh ஆக இருந்தால் தேவலாமே!'' என்ற அடுத்த மகாசிந்தனை தலைதூக்கியது! நம்ம யுனிவர்ஸ் டைரடக்கரின் புண்ணியத்தில் இரும்புக்கை மாயாத்மாவை இன்றைக்குத் தேடுவோரின் எண்ணிக்கைகளும் அதிகமாகியிருப்பதால், பழைய மாவில் மறுக்கா தோசைகளை சுட்டு அடுக்க வாணாமே என்று தோன்றியது! அப்புறமென்ன- நமது கடல் கடந்த ஓவியை பிசியானார் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு and இதோ- கீழ்க்கண்ட ராப்பர்கள் பலனாகின! So இந்தத் தபா மாயாவியார் ஒன்றுக்கு நான்காய் ஸ்லாட்களைப் பிடித்திருப்பினும், முற்றிலுமாய் ஒரு புது லுக்கோடு,  அமைந்திருப்பதைப் பார்க்கப் போகிறீர்கள்! Worth a read & worth the collection too என்பேன்!





மாயாவியின் நான்கு புக்ஸ் ரெடியானதில் கொஞ்சம் தெம்பு ஏற- புத்தகவிழாக்களின் அடுத்த டார்லி­ங் பக்கமாய் பார்வைகளை நீளவிட்டோம்! 

கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே எல்லாப் புத்தகவிழாக்களிலுமே இரும்புக்கை மாயாவிக்கு செம டஃப் போட்டி தந்து கொண்டிருப்பவர் டெக்ஸோ; டைகரோ; லார்கோவோ அல்லவே அல்ல! மாறாக வேதாள மாயாத்மா தான் ஸ்டாலுக்கு வருகை தருவோரை வசீகரித்து வருகிறார்! அதுவும் கலரில் Phantom அதிரடிகள் எனும் பட்சத்தில் ஆர்வ மீட்டர்கள் எகிறிடுகின்றன! பின்னென்ன- க்ளாஸிக் Sy Barry கதையான "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்'' இதழினையும் களமிறக்கத் தீர்மானித்தோம்! அட்டகாசமான கலரில், ஒரிஜினல் மொழியாக்கத்தோடு இந்த இதழும் "நச்' என தயாராகிவிட்டது! Again - அட்டைப்படம் தீயாய் வந்துள்ளது பாருங்களேன்! 


க்ளாஸிக் அதிரடி ஜாம்பவான்கள் புத்தக விழாக்களைக் கலகலப்பாக்கி வருகிறார்களெனில் - அதிரடிகள் செய்திடா வேறொரு க்ளாஸிக் பார்ட்டியுமே தன் பங்குக்கு ரவுண்டு கட்டி அடித்து வருவதை நடப்பாண்டில் பார்த்து வருகிறோம்! அவர் வேறு யாருமல்ல - நம்ம கபிஷன் தான்! 2025-ன் புத்தகவிழாக்களில் மாயாவிக்கும், டெக்ஸுக்கும் செம போட்டி தந்திருக்கும் கபிஷ் ஸ்பெஷ­லின் பாகம் -3 இதோ ரெடியாகிவிட்டது! வழக்கம் போல அழகான கலரில், அம்சமான ஒரிஜினல் ஓவியரின் அட்டைப்படத்துடன்! இதோ- அட்டைப்படம் + உட்பக்க preview :

கலரில் அடுத்ததாகக் கலக்கக் காத்திருப்பவரோ சற்றே சீரியஸான பார்ட்டி! And ஒருவிதத்தில் அவர் கூட புத்தகவிழா பெச­லிஸ்ட் தான்- ஆனால், ஹாரர் ஜான்ராவின் பிரதிநிதியாய் ! 

டைலன் டாக்கின் "The குட்.. பேட் & அக்ளி'' தான் இம்முறை சென்னையில் தலைகாட்டவுள்ள ஹாரர் ஆல்பம்! இது ஒரிஜினலாகவே வண்ணத்தில் உருவாக்கப்பட்ட டைலன் டாக் சிறுகதைகளின் தொகுப்பே! 32 பக்கங்கள் வீதம் மூன்று கதைகள்- ஆக 96 பக்கங்கள் என்பதே ஒரிஜினல் அமைப்பு! நாம் இதனை தனித்தனி இதழ்களாக்கிடலாமென்ற எண்ணத்தில் தான் வாங்கியிருந்தோம் ! ஆனால், இனியும் அதற்கு அனுமதி இல்லையென்றான பிற்பாடு, தொகுப்பாக சேலம் ஸ்பெஷலாக வெளியிட எண்ணியிருந்தோம்! ஆனால், சேலத்து விழா 2025-ல் லேது என்றாகிப் போன பிற்பாடு, டைலனை சென்னைக்கென slot in செய்தோம்! இங்கே தான் அடுத்த ட்விஸ்டே! 

மூன்றுமே சிறுகதைகள் தான் என்பதால் V காமிக்ஸின் எடிட்டரிடம் இவற்றின் மொழிபெயர்ப்புப் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன்! விக்ரமும் neat ஆக பணி செய்து DTP-ல் தந்திருக்க, டைப்செட்டிங் முடிந்து ரெடியாக மேஜையில் பக்கங்கள் துயில் பயின்று வந்தன ! ஒருவழியாக சாம்ப­லின் சங்கீதம்.. லார்கோ... போன்ற heavyweights-களுடனான மல்யுத்தமெல்லாம் ஓய்ந்த பிற்பாடு டைலனோடு அமானுஷ்ய உலகுக்குள் புகுந்து துளாவத் தொடங்கினேன்! முதல் கதை செம ஸ்பீடு; இரண்டாம் கதை பரக்க பரக்க முழிக்கச் செய்தது; ஆனால், மூன்றாவது கதை தான் பேந்தப் பேந்த விழிக்கச் செய்தது! கதையின் அடித்தளமே ஒரு இளம் பெண்ணுக்கு டைலன் மீது எழும் அதீத காம இச்சை தான் & கதையே அதனைச் சுற்றித் தான் பயணிக்கிறது! நம்ம ஈரோவும் "கடமை தவறமாட்டான் இந்தக் கந்சாமி' என செயல்பட, இதை வெளியிட்டால் நம்மளைத் துரத்தித் துரத்தி, துடைப்பத்தாலேயே சாத்துவார்களென்பது புரிந்தது! Of course "நாங்கள்லாம் பென்குவினுக்கே பாரசூட் போட்டு விடற ஆட்களாக்கும்?! இந்தக் கதையெல்லாம் எங்களுக்கு சப்பை மேட்டர்'' என்று ஒரு யூத் அணி சொல்லக் கூடுமென்பதை யூகிக்கவும் முடிந்தது தான்! ஆனால், ரசனைகளில் நாம் என்ன தான் முன்னேறியிருந்தாலும், இன்னமும் ஐரோப்பிய அளவீடுகளை எட்டிடவில்லை என்ற நிதர்சனம் புரிந்தது..! So அந்தக் கதை # 3-ஐ வேண்டாமெனத் தீர்மானித்து விட்டு, புக்கின் பக்கங்களையும், விலையினையும் மட்டுப்படுத்தத் தீர்மானித்தேன்! 2 கதைகள் & 64 பக்கங்கள்!

அப்புறமாய் எடிட்டிங்குள் புகுந்தால் அந்த தெறி ஸ்பீடிலான முதல் ஆல்பத்தில் கதாசிரியர் என்ன சொல்ல வருகிறாரென்பதைச் சுத்தமாய் புரிந்து கொள்ள இயலவில்லை! அசுரத்தனமாய் டைலனை வேட்டையாட முனையும் எதிராளியை இனம் காணவே முடியவில்லை! "ஆஹா.. நமக்கு மெய்யாகவே வயசாகிடுத்து.. 32 பக்கக் கதையைக் கூடப் புரிஞ்சுக்கத் தடுமாறுதே !'' என்றபடிக்கே ஜுனியர் எடிட்டரோடு கதையின் knot பற்றி விவாதித்தேன்! குறிப்பாக எனது சந்தேகப் புள்ளிகளை எழுப்பிய போது Nopes - விக்ரமிடமும் திருப்தியான பதிலி­ல்லை! நெட்டில் அலசினாலோ இந்தக் கதை பற்றி ஒற்றை வரியைத் தாண்டி எவ்விதத் தகவல்களுமே கண்ணில்படலை! So புரிஞ்சா மெரியே பீலா விட்டு கதையை அப்படியே வெளியிடுவதா? அல்லது வம்பே வாணாம்... மொத்தமாய் அந்த புக்கையே ஓரம்கட்டிவிடுவோமா? என்ற ரேஞ்சில் சிந்தனைகள் ஓடின! அட்டைப்படமெல்லாம் ரொம்பவே முன்கூட்டித் தயாராகியிருக்க, கதைக்கும் ராயல்டி செலுத்தியிருக்க, எல்லாமே விரயமாகிப் போகுமே என்ற குறுகுறுப்பு மேற்கொண்டு என்னை இந்த முடிச்சின் பின்னணி தேடித் தோண்டச் செய்தது! ஜுனியர் சொன்ன அவுட்லைனை மண்டைக்குள் ஒரு ஓரமாய் அமரச் செய்துவிட்டு, கதையையே நம்ம அண்ணாத்தே AI சகிதம் அங்குலம் அங்குலமாய், பக்கம் பக்கமாய் அலச ஆரம்பித்தேன்! சத்தியமாய் நம்ப மாட்டீர்கள்- இந்த நுண்ணறிவுச் சமாச்சாரமானது ரொம்பச் சீக்கிரமே நம்மளையெல்லாம் "அப்படி ஓரமாய் போயி வெளயாடிக்கோ தம்பி!'' என்று sideline செய்து விடுமென்பதில் துளியும் ஐயங்களில்லை! எங்களது வாசிப்பில் ஒரு குழப்பமான புள்ளியாக நின்ற சமாச்சாரத்தை சூப்பராய் முடிச்சவிழ்த்து ஒரு முழுநீள ரங்கோலி­யாக்கி, எனது சந்தேகங்கள் சகலத்துக்கும் ஸ்பஷ்டமான விடைகளை இந்தா வாய்ங்கிக்கோ என விட்டெறிந்துவிட்டது! "WOW'' என்றபடிக்கே கதையில் மறுக்கா பணி செய்தேன்! And பட்டவர்த்தனமாய் விடையை நான் அங்கே போட்டும் உடைத்திருக்கவில்லை folks! அதேசமயம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள "அம்போ'வென உங்களை விட்டு விடவுமில்லை! கொஞ்சமாய் கவனம் தந்தீர்களெனில் நிச்சயம் பிடித்து விடுவீர்கள்! So good luck people 👍!

சிண்டைப் பிய்த்த டைலனிடமிருந்து நெக்ஸ்ட் ஸ்டாப்- நம்ம கைப்புள்ள ஜாக் பக்கமாய்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கியிருந்த இந்த ஆல்பத்தின் சகலமுமே ஒற்றைப் பக்க gags தான்! முதல் ஆல்பத்து சாகஸங்கள் சற்றே நீளம் ஜாஸ்தியாக இருந்ததால் அவற்றை 2022 or 2023-ல் சந்தாக்களோடு விலைகளில்லா இணைப்புகளாய்த் தந்திருந்தோம்! And இந்த இரண்டாம் ஆல்பத்தை தொங்க­லிலேயே வைத்திருந்தோம் - வாகான ஒரு வாய்ப்பு அமையட்டுமே என்றபடிக்கு! சென்னைக்கென கார்ட்டூன் கோட்டாவில் நிச்சயம் ஒரு ஆல்பம் இருக்குமென்று நான் சந்தா அறிவிப்புத் தருணத்தில் சொன்னது நினைவிருந்தது! ஒரு டுபுக்கு ரோமியோவின் ஒற்றைப் பக்க gags-களைத் தான் களமிறக்கத் தீர்மானமும் செய்திருந்தேன்! ஆனால், ஒற்றைப் பக்க லொள்ளு சபாக்களைத் தான் போடுவது என்றான பிற்பாடு, கைவசமுள்ள கைப்புள்ள ஜாக்கையே வெளியிட்டாலென்ன? புதுசாய் ஒரு ஆல்பத்தை பேசி முடித்து, பணம் அனுப்பி வாங்கிடும் நோவுகள் இந்த நொடியில் மிச்சமாகுமே?! என்று தோன்றியது! So டகாரென கைப்புள்ள ஜாக் ரெடியாகத் துவங்கினார்! நண்பர் மேச்சேரி ரவிக்கண்ணன் பேனா பிடிக்க, வழக்கம் போலவே நான் உட்புகுந்து அதன் மீது எழுத்தாணி கொண்டு எழுதிட, இந்த ஜாலி­யான ஆல்பம் செம க்யூட்டாய் ரெடியாகி வருகிறது! ரொம்பவே லேட்டஸ்ட் படைப்பு என்பதால் சித்திரங்கள் & கலரிங் பட்டாசாய் பொரிகிறது! And ஒவ்வொரு பக்கத்துக்குமே ஒரு தலைப்பு தந்துள்ளேன்- சுவாரஸ்யத்தை அதிகமாக்கிட! மெய்யாலுமே decent ஆக வந்துள்ள இந்த இதழை முயற்சித்துப் பாருங்கள் folks -நிச்சயமாய் நமக்கு ரசிக்கும் & நம் வீட்டு ஜுனியர்களுக்கும் செம ஜா­லியான கதை சொல்லலுக்குப் பயன்படும் என்று தோன்றுகிறது! இது ஓ.கே.யாகிடும் பட்சத்தில், சுட்டி லக்கி ஆல்பங்களை இதே போல இறக்கிடலாம்! இதோ - அட்டகாசமான கலரில் previews!!


"இப்போவே மாயாவி 4 + வேதாளர்-1 + கபிஷ் -1 + டைலன் -1 + கைப்புள்ள ஜாக்-1 = ஆக, மொத்தம் 8 ஆச்சு! போதும்டா சொட்டையா! என்று உள்ளாற ஒரு குரல் கேட்டது! ஆனால், கிரகங்கள் ஒன்பது; மனித உடலி­ல் துவாரங்கள் ஒன்பது; நவராத்திரியின் கொலு நாட்கள் ஒன்பது; So நாமளும் அந்த நம்பரிலேயே செட்டில் ஆகிப்புடலாமென்று தோன்றியது! அப்புறமென்ன- கைவசமுள்ள எக்கச்சக்க ஆல்பங்களிடையே இன்க்கி- பிங்க்கி- பாங்க்கி போட்டுப் பார்த்தேன்- black & white-ல் ஒரு வித்தியாசமான கதைபாணியுடனான "கர்மாவின் சாலையில்..'' தான் தேர்வானது! சில பல மாதங்களுக்கு முன்பாகவே இந்த ஆல்பம் பற்றி நமது வாட்சப் கம்யூனிட்டியில் நான் முன்னோட்டம் தந்திருந்தது நினைவிருக்கலாம் :

  • ஆளில்லாத ஒரு தனிமையான அமெரிக்க நெடுஞ்சாலை! 
  • ஒற்றைக் கார்
  • அதனுள்ளே ஒற்றை ஆசாமி
  • அவனிடம் ஒரு செல்ஃபோன்! 

And மொத்தக் கதையிலுமே இது மட்டும் தான் பிரதானம்..and சித்திரங்களில் தான் செம ட்விஸ்டே! கதையின் முதல் கட்டம் முதல், முற்றும் போடும் frame வரை அந்தக் காருக்குள் இருக்கும் புள்ளையாண்டனை வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு பாவனைகளில் மட்டுமே காட்டியிருக்கிறார்கள்! செல்போனை ப்ளூடூத்தோடு கனெக்ட் பண்ணியபடியே பேசிக் கொண்டே போகும் போது, அவனது வாழ்க்கையே அந்த இரவுப் பயணத்தினில் மாறிப் போகிறது! செம வித்தியாசமான முயற்சி & black & white-ல் காத்துள்ளது இந்த கி. நா.! இன்னமும் இதனை மொழிபெயர்க்க ஆரம்பிக்கவே இல்லை & திங்கட்கிழமை நம்மாட்கள் பணிக்கு வருவதற்கு முன்பாக முடித்துத் தந்துவிடுவதாக வாக்குத் தந்திருக்கிறேன்! So ஜெய் பாகுபலி­ தான் இன்றிரவும், நாளைய பக­லும்!

And வித்தியாசமானதொரு முயற்சிக்கு நம் பங்கில் வித்தியாசமான வாசகப் பங்களிப்பினையும் கோரினாலென்ன? என்ற மகாசிந்தனை எழுந்தது! And சன்னமாய் கதையின் அவுட்லைனை மாத்திரமே சொல்­லிவிட்டு அண்ணாத்தே AI சகாயத்துடன் அட்டைப்படங்கள் உருவாக்கி அனுப்பக் கோரி நமது வாட்சப் கம்பூனிட்டியில் கேட்டிருந்தேன்! ஏகப்படட முயற்சிகளும் வந்து சேர்ந்தன & சென்னையைச் சேர்ந்த நண்பர் S.கார்த்திக்கின் ஆக்கத்தில் நாம் நிறைய பட்டி-டிங்கரிங் செய்த பிற்பாடு- படைப்பாளிகளுக்கே அனுப்பியிருந்தோம்! அவர்களும் ஓ.கே. என்று சொல்­லியிருக்க, இதோ- இந்த ராப்பரை சீக்கிரமே நமது இதழின் மேலட்டையாகப் பார்க்கப் போகிறீர்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!

ஆக, 9 சென்னை ஸ்பெஷல்களின் பின்னணி இதுதான்! இதோ- ஒன்பது இதழ்களுக்கான ஒட்டுமொத்த விளம்பரமும்! 

And சென்னைப் புத்தகவிழாவில் எல்லோருக்கும் தர அவசியமாகிடும் 10% டிஸ்கவுண்ட் உங்களுக்குமே புத்தக விழா காலத்துக்கு இருந்திடும் folks! கூரியர் தொகைகளையும், புக்ஸ் விலைகளோடு இணைத்து, மொத்தத்திற்கு நாமொரு டிஸ்கவுண்ட் தந்தாலும், அதனைப் புரிந்து கொள்ளாது ஆங்காங்கே விமர்சனங்கள் எழுதுவதே நடைமுறையாகி வருவதைக் காண முடிகிறது ! So இனியும் அந்தப் பிழைகளைச் செய்வதாகயில்லை! புத்தக விலைகள் & அவற்றில் நாம் தரக் கூடிய டிஸ்கவுண்ட் பற்றிச் சொல்­லி விட்டு- இன்னொரு பக்கத்தில் கூரியர் கட்டணங்களைத் தனியாகத் தெரிவித்து விடவுள்ளோம்! உங்களுக்கு எந்த ஊருக்கு; எந்த சர்வீஸில் தேவையோ- அதற்கான கூரியர்/ பதிவுத் தபால் கட்டணங்களை இணைத்துக் கொண்டு; தேவையான புக்ஸிற்கு ஆர்டர் செய்திடலாம்! அல்லது நமது ஆன்லைன் ஸ்டோரில் எப்போதும் போலவே ஆர்டரும் போட்டிடலாம்! அங்கே கூரியர் கட்டணங்கள் ஆட்டோமேடிக்காக கணக்கிடப்பட்டுவிடும்!

மேஜர் சுந்தர்ராஜனாட்டம் மறுக்கா விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன் folks!

* 9 புக்ஸ் சேர்ந்து கிரயம் = ரூ.975/-

* Less : 10% டிஸ்கவுண்ட் = ரூ,100/-

* ஆக, புக்ஸ் கிரயம் = ரூ.875/-

* கூரியர் கட்டணங்களில் எவ்வித டிஸ்கவுண்டும் லேது. So ரூ.875/- என்ற தொகையோடு உங்களுக்கு எந்தச் சேவையில் ; எங்கே புக்ஸ் தேவைப்படுமோ; அதற்கான தொகையினை விளம்பரத்தில் பார்த்துக் கணிக்கிட்டுக் கொள்ளுங்கள் ப்ளீஸ் 🙏

*திங்கட்கிழமை இதுகுறித்து நம்மாட்களுடன் ஒரு விளக்கப் படலம் கோர வேணாமே- ப்ளீஸ்?! 

*சென்னை ஸ்பெஷல்ஸ் தொடரும் நாட்களில் ரெடியாகிடும் & ஜனவரி 7 முதல் டெஸ்பாட்ச் செய்திடுவோம்!


Bye all.. 2025-ஐ திரும்பிப் பார்க்கும் படலத்தை ஒரு Youtube பதிவாக்கிடலாமென்று எண்ணியிருக்கிறேன் ! டிசம்பர் 31-க்கு முன்பாக அதனை செயல்படுத்திட முயன்றிடுவேன்! 

முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் folks! ஒரு அற்புதமான ஆண்டின் பயணத்தினில் அசாத்தியமான துணைகளாக இருந்து வந்துள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் "நன்றி'' என்ற ஒற்றை வார்த்தையில் கோவிந்தா போட்டுச் செல்ல மனம் ஒப்ப மறுக்கிறது! ஆகக் குறுகிய வட்டமாக இருந்தாலும், இத்தனை உயிர்ப்போடு இந்தப் பயணத்தை மெருகூட்டி வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் மெரினா பீச்சில் லைனாக சிலைகள் வைத்தால் தான் பொருத்தமாகயிருக்கும்! ஆனால், புக்கின் முதல் பக்கத்தில் போட ஃபோட்டோக்கள் வாங்குவதிலேயே செம மண்டகப்படிகளை சந்தித்து வரும் நிலையில், சிலைகள் செதுக்க வேண்டுமெனில் அடியேன் நிரந்தரமாய் மூ.ச.வில் தான் டேரா போட வேண்டிப் போகும் என்பதால் சிலை வைக்கும் ஐடியாவினை சங்கடத்தோடு கைவிட வேண்டியுள்ளது! 

Bye all.. see you around! have a wonderful weekend! கர்மாவின் சாலையில் awaits me!

And சந்தா நினைவூட்டலுமே folks..! ஜனவரி இதழ்கள் மூன்றுமே பைண்டிங்கில் உள்ளன ; காத்திருக்கும் வாரத்தில் டெஸ்பாட்ச் துவங்கிடும்! So இன்னமும் சந்தா ரயிலில் டிக்கெட் போட்டு வைத்திருக்காத நண்பர்கள் இயன்ற வரை சீக்கிரமாய் செய்திடலாமே - ப்ளீஸ் 🙏

Saturday, December 13, 2025

டாபிக் 1 ; சப்ஜெக்ட்ஸ் 3

நண்பர்களே,

வணக்கம்! சில பயங்கள் ஒரு தொடர்கதையே..! பேச்சுப் போட்டிக்கு விடிய விடியத் தயாராகியிருந்தாலும், மேடையேறும் போது மறந்து தொலைச்சிடுமோ? என்ற பயம் ஒருநாளும் போனதில்லை! ஊருக்கெல்லாம் பத்திரிகை கொடுத்து வூட்டு விசேஷத்துக்கு உற்றார் உறவினரையெல்லாம் அழைச்ச பிறகும், "ஆள் தேறுமா? அல்லாங்காட்டி ஆளில்லாத கடையிலே டீ ஆத்துற மாதிரி ஆகிப் போயிடுமா?'' என்ற பீதி கடைசி நிமிடம் வரை உடன் பயணிக்கும்! வாசக சந்திப்புகளுக்கு நீங்கள் தவறாது ஆஜராகிவிடுவீர்கள் என்பது தெரிந்தாலுமே - ஹால் நிரம்பும் வரைக்கும் நெஞ்சம் "பக்கு.. பக்கு'' என அடித்துக் கொள்வதை நிறுத்திடாது! And மிகச் சரியாக அதுவே தான் கதை - ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் புதுச் சந்தாக்களின் சேகரிப்புகள் அரங்கேறி வரும் தருணங்களிலும் ! "வழக்கமான எண்ணிக்கையைத் தொட்டுப்புடுவோமா?'' என்று ஒவ்வொரு நாளும் உள்ளாற உடுக்கை அடித்துக் கொண்டேயிருக்கும்!

And no different this time too! இந்த முறை அக்டோபர் ஆரம்பத்திலேயே புதுச் சந்தாக்களை அறிவித்து விட்டதால், ஏதோவொரு தூரத்து மகாமகத்து நிகழ்வு அது என்பது போல் தலைக்குள் ஒரு feeling! So டிசம்பர் இதழ்களோடு 2025-ன் சந்தா நிறைவுற்ற பிற்பாடே நம்மில் பலரும் புதுச் சந்தாக்களின் சிந்தனைகளுக்குள் இறங்கிடுவர் என்பது தெரிந்தாலுமே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளின் நடனங்கள் நின்றபாடில்லை! 

நேற்றுத் தான் இந்த சீஸனின் முதல் ஜரூரான நாள் & கணிசமான சந்தாக்கள் கரம்கோர்க்கத் துவங்கின எனும் போது லைட்டாக மூச்சு விட்டுக் கொண்டேன்! இந்த நொடியில் பாதித் தொலைவை நெருங்கியிருக்கிறோம் என்பதையும் பார்க்க முடிந்தது! தொடரும் நாட்களில் சந்தாக் குடும்பத்தில் ஐக்கியமாவோர் அணி மேன்மேலும் வலுப்பெற்றால் செம குஷியாகிப் போகும்! And இப்போதே சந்தா ரயிலில் புதியவர்கள் சிலர் என்ட்ரி கொடுத்திருப்பது செம ஹேப்பி சமாச்சாரம் 💪💪! Let's join the journey guys 🙏

சந்தா பற்றிய topic-ல் இருக்கும் இந்த நொடியினில் சின்னச் சின்னதாய் சில உரத்த சிந்தனைகள் folks!

* 2026-க்கான சந்தா நண்பர்களின் ஃபோட்டோக்களை ஜனவரி (கலர்) டெக்ஸின் முதல் பக்கத்தில் ப்ரிண்ட் செய்து தருவதாகச் சொல்­லியிருந்தோம்! டிசம்பர் 20-க்கு முன்பாக ஃபோட்டோக்கள் அனுப்பிடலும் அவசியமென்று சுட்டிக் காட்டியிருந்தோம்!ஆனால், 'இதையெல்லாம் வசந்த மாளிகை 'சமயத்திலேயே பாத்தாச்சு பாஸு' என்றோ - என்னவோ,சந்தா செலுத்தியுள்ள நண்பர்கள் இதற்கென பெரிதாய் மெனக்கெடக் காணோம்! Or மறந்தும் விட்டிருக்கலாம்! சந்தாக்களுடன் தம் ஃபோட்டோக்களையும் சேர்த்து அனுப்பியுள்ளோரை, ஒற்றைக் கையின் விரல்களில் எண்ணி விடலாம்! மக்களே; இது டிசம்பர் மாதம் ; பைண்டிங்கில் தினசரி காலெண்டர் பணிகளும், புத்தாண்டு டைரிகளும் குவிந்து கிடக்கும் சீஸன்! இந்தத் தருணத்தில் சாவகாசமாய் இருந்தோமேயானால் தைப்பொங்கலுக்குத் தான் ஜனவரி புக்ஸ் கிடைக்க நேரிடும்!" விதி எழுதிய வெற்றி வரிகள்'' is all ready to go to print! உங்களது வதனப்படங்களை துரிதமாய் அனுப்பி வைத்தீர்களெனில் ஜமாய்த்துவிடலாம்! உயர் resolution-ல் படங்கள் தேவை & அவற்றை வாட்சப்பில் அனுப்ப வேண்டாம்!! ஈ-மெயில் மட்டுமே ப்ளீஸ்! 

மாறாக -

'அட, நெதத்துக்கும் பாக்குற மூஞ்சியை பொஸ்தவத்திலே வேற பாக்கணுமாக்கும்?' என்று எண்ணுவோராய் நீங்கள் இருப்பின் no problems....ப்ரீயா விட்டுப்புடலாம்!

So இது தான் Subject # 1...உங்கள் பதில்களை :

PHOTO YES

என்றோ 

PHOTO NO

என்றோ தெரிவிக்கக் கோருகிறேன் folks!

* அப்புறம் 2026 சந்தா நண்பர்களுக்கு ஒரு க்யூட் காலெண்டரும் உண்டென்று ப்ராமிஸ் செய்திருந்தோம்! இங்கும் குட்டீஸ் ரசனைக்கென ஒன்று ; பெரியோரின் ரசனைக்கென இன்னொன்று and உங்களுக்கு எது வேண்டுமென தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தோம் ! Again இங்குமே பெரிதாய் செல்ப் எடுக்கக் காணோம் தான்! So இக்கட  I have a question for you guys : 

இந்த காலண்டர் தரும் திட்டமிடல் ஓகே தானா - அல்லது இது தேவையற்ற ஆணியா?

ஜுனியர்களுக்கென டிசைன் செய்துள்ள காலெண்டர் மெய்யாலுமே செம cute ஆக வந்துள்ளது ! So காலண்டர்  ஓ.கே. தான் என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில், இந்த ஒற்றை டிசைனை மட்டுமாவது ரெடி செய்து காலேண்டராக்கி அனுப்பிடலாமென்று தோன்றுகிறது! மாறாக - இதனில் பெருசாய் பிரயோஜனம் இராதென்றே நீங்கள் கருதினால், அதை drop பண்ணி விட்டு சிவனே என அடுத்த வேலையைப் பார்க்கலாம்!

"இதெல்லாம் நான் கேட்டேனா? மருவாதியா சந்தாக்களுக்கு மட்டும் என ஒரு பிரத்தியேக புக்கை போட்டுத் தொலைக்க வேண்டியது தானே? அரையணா பிரயோஜனம் இல்லாத அன்பளிப்புகளால் யாருக்கு என்ன லாபம் மேன்?" என்ற உங்களின் ஒரு அணியின் மைண்ட்வாய்ஸ் loud & clear ஆகக் கேட்குது தான்! ஆனால் எனது இடத்திலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவது சுலபமே அல்ல என்பது தான் சிக்கலே ! முன்பு போல குட்டி டெக்ஸ் கதைகளை தனி புக்காய் போட இப்போதெல்லாம் அனுமதி லேது! So செய்வதாக இருந்தால் வேறு கதைகள் எதையாச்சும் கொண்டு முழுசாய் ஒரு புக்கை ரெடி செய்து, அதனை சந்தாவில் அல்லாதோருக்குக் கொடுக்க மாட்டோம் என்று தான் சொல்லிட வேண்டிப் போகும்! அவ்விதம் மறுப்பது நிரம்பவே வெறுப்பை ஈட்டவல்ல செயல் என்பதை முந்தைய அனுபவம் உணர்த்திடுகிறது ! முன்நாட்களில் இந்த ரீதியில் நான் பாட்டுக்கு செய்து வைத்த சில தீர்மானங்களின் தாக்கங்கள், நம்மாட்களின் சில்லுமூக்குகளை சிதறடிப்பதை கண்கூடப் பார்க்க முடிந்த பிற்பாடு - அதே தப்பை மறுக்கா செய்யலாகாது என்று தீர்மானித்தேன். "ஏன் - நாங்களும் பணம் தந்து தானே புக்ஸ் வாங்குறோம் - எங்களுக்கு மட்டும் இது ஏன் கிடையாதாம்??" என எகிறுவோரை சமாளிக்க முடியாது நம்மாட்கள் பரிதாபமாய் முழிக்க நேரிடுகிறது! End of the day,  புக்சை சந்தா மார்க்கத்திலோ, முகவர் மூலமோ, ஆன்லைனிலோ வாங்கும் சகலரும் நமது வாசகர்களே எனும் போது, "EXCLUSIVE for SUBSCRIBERS" என்று உருப்படியான இதழ் ஒன்றைத் தயாரிக்க மனசு ஒப்ப மறுக்கிறது! இந்தக் காலண்டர் option கூட நெருடலே, ஆனால் அது வாசிப்புக்கான சமாச்சாரம் அல்லவே என்று சொல்லி என்னை நானே  சமாளித்துக் கொண்டேன்!

So இந்த காலண்டர் விஷயம் is Subject # 2. சொல்லுங்களேன் folks - என்ன செய்யலாமென்று?

CALENDAR OK

என்றோ 

CALENDAR NOK

என்றோ தெரிவிக்கக் கோருகிறேன் folks!

* அப்புறம் ரூ.300/-க்கு gift voucher உண்டு & அதனைக் கொண்டு 2020-க்கு முன்பான நமது இதழ்களை வாங்கிக் கொள்ளலாமென்றுமே சொல்­லியிருந்தோம்! அந்த அறிவிப்பின் பின்னணிக் காரணமே கொரோனா காலகட்டத்துக்கு முன்பான நமது கூடுதல் ப்ரிண்ட்ரன்களின் புண்ணியத்தில் கிட்டங்கியில் குவிந்து கிடக்கும் backissues, யாருக்கேனும் அன்பளிப்பாகவாவது பயன்படட்டுமே ; அப்படியாச்சும் கொஞ்சம் இடம் காலியாகிக் கொள்ளுமே என்ற எண்ணம் தான்! ஆனால், அந்த முன்மொழிவில் பெருசாய் உடன்பாடின்றிப் போய் ஆங்காங்கே நம் தலையில் நண்பர்களில் ஒருசாரார் மத்தளம் கொட்டியது தான் அரங்கேறியது!

So இங்குமே சின்னதாயொரு option! 

"Gift voucher எனக்கு ஓ.கே." எனும் நண்பர்களுக்கு, அறிவித்தது போலவே ஜனவரி இதழ்களோடு vouchers அனுப்பிடப்படும் & புத்தக விழாக்களிலோ, அல்லது நம்மிடமிருந்தோ புக்ஸ் பெற்று அந்த வவுச்சர்களை redeem செய்து கொள்ளலாம்! சேலத்து நண்பர் ரகுராம்ஜி முன்மொழிந்தது போல - பத்துப் பதினைந்து கூப்பன்களை ஒன்றிணைத்து, அவற்றிற்கான புக்ஸைப் பெற்று அந்தப் பகுதிகளின் பள்ளி நூலகங்களுக்கு அன்பளிப்பாக்கிடும் திட்டத்தையும் அழகாய் நிறைவேற்றிடலாம்!

மாறாக "எனக்கு இதிலெல்லாம் பிரியமில்லை'' எனும் நண்பர்கள், சந்தா தொகைகளில் ரூ. 200-ஐ கழித்துக் கொண்டு அனுப்பி வைக்கலாம். ஒரு சலுகையினை பொருளாய் / புக்காய் தரும் போது தானே விசனங்கள் தலைதூக்குகின்றன?! மாறாய் அதனை தொகையில் கழித்துக் கொள்ளும் option ஆகத் தந்து விட்டால், யாருக்கும் வருத்தம் இருக்கக் கூடாது என்பது எனது அபிப்பிராயம். But மூ. ச. போய் வர, இங்கும் ஏதேனும் முகாந்திரம் உள்ளதா guys? இருப்பின் சொல்லுங்கோ ப்ளீஸ்!

So கூப்பனா? அல்லது விலையில் ரூ. 200 சலுகையா ? என்ற தேர்வினை உங்களிடமே விட்டு விடுகிறோம் folks! 

*Of course ஏற்கனவே சந்தா செலுத்தி முடித்திருக்கும் நண்பர்களுக்கும் இந்த option உண்டு தான்! கூப்பன் வாணாமே? எனக் கருதுவோர் - சென்னை புத்தக விழா ஸ்பெஷல்களிலோ, மே மாத ஆன்லைன் விழா ஸ்பெஷல்களிலோ இந்த ரூ. 200-ஐ சமன் செய்து கொள்ளலாம்!

ஆக இது Subject # 3...

இதற்கான பதிலை இங்கு பதிவிட அவசியமில்லை, ஆபீஸில் சொன்னாலே மதி 👍

ரைட்டு.., இனி காத்திருக்கும் அடுத்த வாரத்து சேதி பற்றிப் பார்க்கலாமா?

சேலம் புத்தகவிழா ஒரேயடியாய் ஜனவரி 29 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால் இனி மேலும் "சாம்ப­லின் சங்கீதம்'' புக்ஸை கையில் தேவுடு காக்க வைப்பதாக இல்லை! புக் ஒன்று 1.75 கிலோ எடை இருப்பதால் மொத்த புக்ஸும் செமத்தியாய் இடத்தை ஆக்கிரமிக்கின்றன! So வரும் 18-ம் தேதிக்கு கூரியர்களில் புக்ஸை அனுப்பிடவுள்ளோம்! பேக்கிங்குக்கே நமது front office இடம் ததிகினத்தோம் போடப் போகிறது என்பதால்- எனது அறையை அடுத்த மூன்று தினங்களுக்கு நான் மறந்து விட வேணும் தான்! அசுரத்தனமான பேக்கிங் பணி நம்மாட்களுக்குக் காத்துள்ளது என்பது மட்டும் சர்வ நிச்சயம்!

And காத்திருக்கும் டிசம்பர் 21 to 28 தேதிகளில் தேனி புத்தகவிழா நடைபெறவிருக்கிறது! முதன்முறையாக நாம் அங்கு ஆஜராகிடவுள்ளோம்! Wish us luck folks!

ஜனவரியின் தோர்கலாரை சடுதியில் முடித்து அச்சுக்கு அனுப்பிட நான் நடையைக் கட்டுகிறேன் guys! டிசம்பரின் லார்கோ + இளம் டெக்ஸ் பற்றிய அலசல்களால் இந்தப் பக்கத்தினை சுறுசுறுப்பாக்கிடலாமே ப்ளீஸ்! Bye all.. see you around! Have a fun Sunday!

Saturday, December 06, 2025

டிசம்பர் பூக்கள்!

நண்பர்களே,

வணக்கம்! இராமாயணம், மகாபாரதமென்று ஆரம்பிக்கும் முன்பாக டிசம்பர் இதழ்களைப் பற்றி "பட்'டென்று சொல்லிவிடுகிறேனே folks! லார்கோவோடு தான் WWF போட வேண்டியிருக்குமென்ற எதிர்பார்ப்பு ஓரளவுக்கே மெய்யாகிப் போனது! இளம் டெக்ஸ் - 5 பாக சாகஸம் கூட நாக்குத் தொங்கும் பணிகளைக் கோரிவிட்டது! குழப்பங்கள் இல்லாத நேர்கோட்டுக் கதை தான் என்றாலும், 320பக்கங்கள் எனும் போது the sheer volume of the work குறுக்கைக் கழற்றி கையில் கொடுத்தே விட்டது! ரெகுலர் டெக்ஸை விட இளையவரின் கதைவரிசையில் எப்போதுமே சம்பாஷணைகள் ஜாஸ்தியே! And இங்கேயும் க்ரோ பழங்குடியினர்; ப்ளாக்ஃபுட் பழங்குடியினர் என்று அணி சேர்த்து காடு-மேடெல்லாம் நம்மவர் பயணிக்கிறார்! இதுவரைக்கும் "வோ'' போட்டுவிட்டு பெட்ரோல் காசும், பேட்டாவும் வாங்கிவிட்டுப் புறப்படும் சிகப்பின ஜனம் இந்தமுறை 'மைக் மோகன்' ஆன எனக்கே tough தரும் அளவிற்கு செம மாட்லாடுகிறார்கள்! எனக்கோ தேதிகளைக் கிழிக்கக் கிழிக்க வயிற்றில் புளியும் கரைந்து கொண்டிருந்தது! ஆனால், எத்தனை முயற்சித்தும், எடிட்டிங்கைத் திருப்திகரமாய் செய்திட இந்த 320 பக்கங்களும் கோரிட்ட உழைப்பைப் போடாது ஒப்பேற்ற வழியே இருக்கவில்லை! So சகலத்தையும் முடிக்கவே வியாழனாகிப் போய்விட்டது! மறுநாளே ப்ரிண்டிங்கும், முடிந்திருக்க, இன்று பைண்டிங் ஆபீஸ் வாச­லில் நம்மாட்கள் கொட்டகை போட்டு அமர்ந்துள்ளனர்! So இன்றிரவு (சனி) அல்லது ஞாயிறு பகலி­ல் புக்ஸ் ரெடியாகிவிடும் & திங்களன்று கூரியர்கள் புறப்பட்டும் விடும்! Terribly sorry all 🙏🙏 கடந்த இரண்டு மாதங்களாய் பழைய தொற்று வியாதி நம்மையும் அறியாமலே தோளில் ஏறிக் கொண்டதோ? என்ற பயம் கூட என்னைப் பீடித்துள்ளது! But முரட்டுப் பணிகள் ஒட்டுமொத்தமாய் ஆண்டின் இறுதிக்கென அணி சேர்ந்துவிட்டது தான் எதிர்பாரா இடரே! ஜனவரி முதலாய் 'பங்க்சுவல் பரமேஷ்' அவதார் உறுதி!

And சகல குட்டிக்கரணங்களுக்கும் காரணமே "சாம்பலின் சங்கீதம்'' இதழோடு நடத்த நேர்ந்த மெகா சடுகுடு தான் என்பதில் no secrets! எப்படியேனும் அதனை சேலம் புத்தகவிழாவினில் நண்பர் கார்த்திகைப் பாண்டியனுடன் ரிலீஸ் செய்தே தீரணும் என்ற வைராக்கியத்தில் தான் ரெகுலர் தட இதழ்களைக் கூட சற்றே ஆறப் போட்டிருந்தேன்! ஆனால், நவம்பர் இறுதியில் துவங்கியிருக்க வேண்டிய சேலம் விழாவானது டிசம்பர் 19-க்கென மாற்றம் கண்டது! ஆனால், அதன் பிற்பாடாய் பெருசாய் எவ்விதத் தகவல்களும் லேது! ஜனவரியில் துவங்கவுள்ள சென்னை புத்தகவிழாவின் தேதிகள் கூட அறிவிக்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகளும் துவங்கியும் விட்டன! ஆனால், இந்தப் பதிவினை எழுதி வரும் நொடி வரைக்கும் சேலத்தின் திசையி­லிருந்து சலனமற்ற மௌனமே! So வரும் வாரத்தினில் ஏதேனும் நல்ல சேதி கிட்டுகின்றதா என்று பார்க்க உத்தேசித்துள்ளோம்! In case நாமெல்லாம் எதிர்பார்க்கும் good news இல்லையெனில் டிசம்பர் 18-தேதிக்கு கூரியர்களில் "குண்டை'' பேக் பண்ணி அனுப்பிடவிருக்கிறோம்! ஒரு அசாத்தியப் பணிக்கு இதுவொரு anti-climax ஆகத் தானிருக்கும் என்பது புரிகிறது; ஆனால், தயாராகி வரும் புக்கை இனியும் தேவுடு காக்கச் செய்ய மனசில்லை! தவிர 2025-ல் துவக்கிய முன்பதிவுகளுக்கு 2026 -ல் புக் என்பது நெருடுகிறது! So சேலம் விழா இருந்தால் சிறப்பு ; இல்லையேல் கூரியர் நண்பர்களே சிறப்பு விருந்தினராய் மாறி ரிலீஸ் செஞ்ச்சூ 🥹🥹!Phewwwwwwwww.....!

And இந்த நொடியில் சேலமும்; சாம்ப­லின் சங்கீதமும் சார்ந்த சன்னமான disappointments-ஐ ஓரம்கட்டி விட்டுப் பார்த்தால், உள்ளுக்குள் ஒரு செம குஷி & நிம்மதி & திருப்தி போட்டிங் தி குத்தாட்டம்! "2025 எனும் ஒரு அசாத்தியப் பரீட்சையை எழுதி முடிச்சாச்சு!'' என்ற திருப்தி உள்ளாற தாண்டவமாடிடுகிறது! 

*தேர்வை பிரமாதமாய் எழுதியிருக்கிறோமா? 

*சுமாராய் செய்திருக்கிறோமா?

*சொதப்பலாய் பண்ணிருக்கிறோமா? 

என்பதைத் தீர்மானிக்க ஜுரிக்களான உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம்! So எங்களைப் பொறுத்தவரை just being able to complete the trial - ஒரு ஜா­லிலோ ஜிம்கானா அனுபவமாக இருந்துள்ளது! 

மொத்தம் 57 இதழ்கள்..... கலரில் 33 & black & white-ல் 24! 

இந்த 2025-ல் எதிர்காலத்துக்குள் டைவ் அடித்திருக்கிறோம்.....அழிவின் விளிம்பில் நிற்குமொரு apocalyptical பிரபஞ்சத்தில் "பயணம்'' பண்ணியிருக்கிறோம்! வரலாறுக்குள் வட்டமும் அடித்துவிட்டோம்....மன்னிக்காத வடுவாகிப் போன அணுகுண்டோடும், உலக யுத்தத்தோடும்! க்ரிப்டோ கரென்சி எனும் மெய்நிகர் பணவுலகினுள் சஞ்சாரம் செய்துவிட்டோம்! பங்குச் சந்தையின் பல்வேறு பரிமாணங்களோடு பொருதியும் விட்டோம்! "அ­லிபாபாவும், 40 திருடர்களும்'' வானவில்­லின் ஒரு மழலை முனையெனில், மறுமுனையில் நிற்பனவெல்லாம் வேறு லெவல்! இந்தத் திரும்பிப் பார்க்கும் படலத்தினை விரல் நோவ எழுத இந்த நொடியில் "தம்'' லேது என்பதால் அடுத்த சில நாட்களில், சாம்பலின் சங்கீதம் பைண்டிங் முடிந்து புக் ரெடியான நாளில் ஒரு YouTube பதிவாக்கிடத் தீர்மானித்துள்ளேன்! So இந்த நொடியினில் இதோ சாம்பலி­ன் சங்கீதம் அட்டைப்பட preview : 

அப்புறம் சென்னையின் புத்தக மேளா ஜனவரி 7 to 19 தேதிகளில் என  அறிவிக்கப்பட்டு விட்டதால், அக்கட அவசியமாகிடப் போகும் இதழ்கள் பக்கமாய் கவனங்களை திருப்பி வருகிறோம் ஜல்தியாய்! கைவசம் மாயாவி சார் இல்லாமல் பட்டினத்துக்குப் போனால் சரமாரியாய் சப்பல்ஸ் பிய்ய நேரிடும் என்பதால் அவரே நமது முதல் இலக்காகிடுகிறார்! வேக வேகமாய் தயாராகி வரும் இதழ்கள் பற்றி தொடரும் வாரங்களில் சொல்லுகிறேன்! இதோ இப்போதைக்கு "தவளை மனிதர்கள் " ரெடி ஆகி விட்டார் என்பது தகவல் !

And மறுபதிப்புப் படலங்களி­ருந்து இன்னமும் ஒரு க்ளாசிக் ஜாம்பவானின் குட்டிப் பிரிவியூமே இதோ! மாயாவிக்கான மோகம் வேறொரு லெவல் என்றால், வேதாளருக்கான கெத்தும் சளைத்ததே அல்ல தான்! So ஏற்கனவே ரெடி செய்திருந்த "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்" கலரில் டிக் ஆகியுள்ளது! இதோ preview :

Bye all.. see you around.... இந்த நொடியில் ஊரில் இல்லாது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்தே டைப்பி வருவதால், இதற்கு மேல் நீட்டி முழக்காது விடை பெறுகிறேன்! See you around all - ஜனவரியின் காவியத் தலைவன் தோர்கலுமே calling! Have a good Sunday 👍

P. S: உங்களுக்கான வினா :

இந்தாண்டின் நம்ம பயணம் எவ்விதம் இருந்துள்ளது உங்களின் பார்வைகளில்?