Saturday, July 18, 2026

கறை நல்லது..!

நண்பர்களே,

வணக்கம் . வைகைப்புயல் வடிவேல் ஒரு படத்தில் கண்ணாடியின்  முன் நின்று கொண்டு, தனது மூஞ்சிக்கு நேராக ஒற்றை விரலை நீட்டிக் கொண்டு "உனக்கு இது தேவையா? உனக்கு இது தேவையா?" என்று கேட்பாரே, கனகச்சிதமாய் அதே சீன் தான் இந்த நொடியில் எனக்கு நினைவுக்கு வருகிறது. என்னடாப்பா விஷயம் என்கிறீர்களா? AI மூலமாய் காமிக்ஸ் என்று உருவாக்கி நாம் வெளியிடவுள்ள நேரத்தில், நம் வட்டத்தினர் என்ன சொல்வார்கள் என்பது தெரிந்திருந்துமே AI  நல்லதா, கெட்டதா? என்றதொரு சர்ச்சையை  நாமளே ஆரம்பித்து வைத்தால் - சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள மெனக்கெடுவது ஏனோ? என்று ஒரு கேள்வி எழுவது நியாயம் தானே? இந்த வாரத் துவக்கத்தில் நமது வாட்சப் கம்யூனிட்டியில் ஓடிக்கொண்டு இருந்த சர்ச்சை பற்றியே பேசுகிறேன் folks! ஆனால், இதை மிகச்சரியாக இந்த நொடியில் நான் எழுப்பியதற்கும் ஒரு காரணம் உண்டு. Becos இந்த சமூக வலைத்தளப் பிரவாக நாட்களில் ஆளுக்கொரு அபிப்ராயம் என்பது ரஸ்க் சாப்பிடுவது போல் செம மொறுமொறுப்பானது என்பதில் no secrets at all. ​So, நம் மேலுள்ள அபிமானம் காரணமாக நீங்கள் வெளிப்படுத்த தயங்கி இருக்கக்கூடிய எண்ண ஓட்டங்களை குறுகுறுப்பின்றி வெளியிட ஒரு வாய்ப்பினை நாமே உருவாக்கித் தருவதே முறை என்று நினைத்தேன். அதனால் தான் இந்த கேள்வியை AI இதழ்கள் சார்ந்த அறிவிப்புக்கு மறுதினமே எழுப்பி வைத்தேன். 

And பதில்கள் - "AI சார்ந்த முயற்சிகள் வேண்டாமே?!" என்று தான் பெரும்பாலும் இருக்கும் என்பதை யூகிப்பதில் எனக்கு இம்மியூண்டு கூட சிரமம் இருந்திருக்கவில்லை. ஒண்ணா - ரெண்டா? ஒரு நூறு மூத்திரச் சந்துகளின் அனுபவப் பாடம் மண்டையில் நிற்குமல்லவா? 

AI தேவையா, இல்லையா? என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு நான் ஒரு அப்பாடக்கரும் அல்ல, தொழில் வல்லுனரும் அல்ல. எனது வேலையும் அதுவல்ல....! மாறாக நமது காமிக்ஸ் சார்ந்த முயற்சிகளுக்கு மட்டுமே இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள், எதிர்வினைகள் பற்றிப்  பேசுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். Because all said and done, ஏழே முக்கால் கழுதை வயசுக்கு இந்தத் துறையில் குப்பை கொட்டிய பிற்பாடு கொஞ்சமே கொஞ்சமாய் கருத்து கந்சாமியாக இருந்திடும் தகுதி நேக்கு இல்லாது போனாலே வியப்பு என்பேன். And எப்போதும் போலவே ஒரு பாட்டம் பாடினால் தவிர மண்டைக்குள் உள்ளதை முழுமையாய் இறக்கி வைத்த திருப்தி நமக்கு இராது என்பதால், இது ஒரு நெடும் பதிவாகவே அமைந்திடும் folks. So, ஏதாச்சும் முக்கியமான வேலை இருந்தாலோ, OTT-ல் இன்னொரு பக்கம் படம் ஓடிக்கொண்டிருந்தாலோ, ப்ளீஸ் - அவற்றை தொடர்ந்திடுங்கள். இங்கு நான் சொல்ல விழைவது எதுவுமே பூமியை புரட்டிப் போடப் போகும்  சமாச்சாரமே கிடையாது தான்.

​"AI வேண்டாம்......மனித கற்பனையை நசுக்கி விடும் எந்த ஒரு விஷயமும் வேண்டாம், human skills-க்கு ஈடோ, இணையோ கிடையவே கிடையாது" என்றெல்லாம் நண்பர்கள் அவரவர் பாணிகளில் எழுதியிருந்தனர். அதில் எனக்குக்  கிஞ்சித்தும் மறுப்பே கிடையாது. Because நானே ஒரு அரதப்பழசான ஓல்ட் ஸ்கூல் பார்ட்டி தானே ?! இன்னமும் பேனா பேப்பரை எடுத்துக் கொண்டு பதிவில் ஆரம்பித்து, மொழிபெயர்ப்பு வரை பக்கம் பக்கமாய் கையொடிய எழுதிக்கொண்டு தானே இருக்கிறேன் ?! அநேகமாய் சிவகாசியில் சிகப்பு மை பேனாவை இத்தனை டஜன் வாங்கி இருக்கக்கூடியது நானாகத் தான் இருப்பேன் என்பதில் ஐயமே இல்லை. So, human skills பற்றியும், அவற்றால் செய்ய முடிவதை இயந்திரத்தனமான பணிகள் இட்டு நிரப்ப முடியாது என்பதையும்  சர்வ நிச்சயமாய் உணர்ந்தவனே நான்.  அதே சமயம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை எத்தனை மல்லுக்கட்டி, எத்தனை தம் பிடித்து, எத்தனை எத்தனை அணிகளாய்  நாம் திரண்டு எதிர்க்க முற்பட்டாலும், அந்த மாற்றத்தின் அழுத்தமானது அனைவரையுமே ஊதித் தள்ளிவிடும் என்பது இயற்கையின் நியதி.  

அப்படியே டைம் மெஷினை எடுத்துக்கொண்டு 42 ஆண்டுகள் பின்னே போகின்றேன். சகலமும் திறன் வாய்ந்த பணியாட்களால் நிரம்பிய அச்சுக்கூடத்தின் நடுவே உலா வந்து கொண்டிருக்கும் நாட்கள் அவை. 

😎ஒரு பக்கம் டைப்செட்டிங் பணிகளை திறன் கொண்ட கம்பாசிட்டர்கள் கையாண்டு அச்சுக்கோர்த்து, ஆர்ட்பேப்பரில் அச்சிட்டு ஆர்ட்டிஸ்ட்களிடம் ஒப்படைப்பார்கள். 

😎ஆர்ட்டிஸ்ட்கள் அதில் கர்ம சிரத்தையாய் பணி செய்து அதனை என் மேஜையில் நிரப்புவார்கள். 

😎நான் எடிட்டிங் என்று எனக்குத் தெரிந்த கூத்தை அடித்து வைத்த பிற்பாடு நேராக நெகட்டிவ் எடுக்கும் செக்ஷனுக்கு அது செல்லும். 

😎அங்கே திறன் வாய்ந்த பணியாளர்கள் ஒரு பெரிய தண்டவாளத்தின் மேல் ஓடும் மெகா சைஸ் கேமராவில், சகலத்தையும் போட்டோ எடுப்பது போல் எடுத்து, ஜில் என்று இருக்கும் ஒரு டார்க்ரூமுக்குள் போய் முழுசுமாய் இருட்டுக்குள், சில்வர் கலந்த கெமிக்கலில் போட்டு டெவலப் செய்து வெளியே கொண்டு வருவார்கள். அங்கே கொஞ்சமாய் கெமிக்கலின் பதம் மாறி இருந்தாலோ அந்த நெகட்டிவ் குப்பைக்குத் தான் போகும், மறுக்கா எடுக்க வேண்டி இருக்கும். 

😎அவ்விதம் எடுத்து வரும் நெகட்டிவ்களை அடுத்து "ரீ-டச்சிங் ஆர்டிஸ்ட்" என்ற கலைஞர்களிடம் எடுத்துப் போக வேண்டும். வண்ணத்தில் பணி செய்வதற்கென அவர்கள் உயிரைக் கொடுத்து நாட்கணக்கில் வேலை பார்ப்பார்கள். மஞ்சள், ப்ளூ, சிகப்பு, கருப்பு என நான்கு வர்ணங்களில் ஒவ்வொரு பக்கத்திற்கும் பணியாற்றித் தந்த பிற்பாடு அந்த நெகட்டிவ்களை எடுத்துக்கொண்டு போய் பிளேட் மேக்கிங் என்ற அடுத்த பிராசஸில் போய் நிற்போம்.

​😎நல்ல வாத்து முட்டைகள்  ஒரு டஜன் வாங்கி அவற்றை உடைத்து ஆம்லெட் போடுவது போல் கலகலகலவென்று கலந்து அடித்து, ஈய பிளேட்டுகள் மீது அந்த முட்டை கோட்டிங்கைத் தடவி ஒரு baking மெஷின் எனும் வெப்பமூட்டும் கருவியில் காட்டுவார்கள். அந்த முட்டை கோட்டிங் கச்சிதமாய் ஈய பிளேட்டுகள் மேல் ஏறிய பிற்பாடு, நாம் கொண்டு செல்லும் கலர் நெகட்டிவ்களை ஒன்றின் மேல் ஒன்றின் பின் ஒன்றாய் மணிக்கணக்கில் எக்ஸ்போஸ் செய்திட வேண்டும். 

😎அப்புறமாய் அந்த பிளேட்டுகளில் நெகட்டிவில் உள்ள படங்கள் இறங்கி இருப்பதைச் சரிபார்த்துவிட்டு, அதை மறுக்கா கெமிக்கல்கள் நிரம்பிய தொட்டிக்குள் போட்டு கழுவி எடுத்து கையில் கொடுப்பார்கள். ஒற்றை வர்ணத்துக்கான பிளேட் ரெடியாகவே சில மணி நேரங்கள் பிடிக்கும். 

😎அந்த பிளேட்டுகளை எடுத்துக்கொண்டு போனால் ஒற்றை ஒற்றை கலர்களாய் ஒரு நேரத்திற்கு அச்சிட்டுத் தரும் பிரிண்டிங் மெஷினில், திறமை வாய்ந்த பணியாட்கள் லைன் கட்டி நிற்பார்கள். முதலில் கருப்பு அச்சாகும், அதன் பிற்பாடு மஞ்சள், அடுத்து சிகப்பு, இறுதியாய் ப்ளூ. இந்த நான்கு வர்ணங்களையும் ஒவ்வொன்றாய் ஒவ்வொரு தடவையாய் அச்சிடுவதற்கு அந்த பிரிண்டிங் மெஷினின் ஆபரேட்டர்களின் திறன்  அபரிதமாய் அவசியம்.

​😎ரைட், அச்சாகி முடிந்ததா...? அவற்றை தூக்கிக்கொண்டு போனால் பைண்டிங்கில் வரிசையாக பசங்கள் அமர்ந்திருப்பார்கள். காகிதங்களை ஒன்றுக்கு மூன்றாகவோ நான்காகவோ கையால் சரக் சரக் சரக் என்று மடிப்பார்கள். அவ்விதம் மடித்து முடித்த பேப்பர்களை தனித்தனி அட்டியல்களாய் அடுக்கி 16 / 32 பக்கங்களாய் உள்ள ஒவ்வொரு தொகுப்பையும் சேகரிப்பார்கள். 128 பக்கம் எனில் நாலு தொகுப்புகளை இணைத்து அவற்றை பின்னடித்து அதன் பின்பாய் பசை போட்டு அட்டைப்படத்தை ஒட்டுவார்கள். 

😎இன்னொரு பக்கம் அட்டைப்பட பிராசஸோ செம லந்தானது. எங்கிருந்தாவது ஆட்டையைப் போட்ட அட்டைப்படங்களுக்கான ரெஃபரன்ஸ்களை நமது ஓவியர் மாலையப்பனிடம் எடுத்துக்காட்டி, 'இன்ன மாதிரி, இன்ன மாதிரி ஹீரோ வேணும், இந்த மாதிரி, இந்த மாதிரி பேக்ரவுண்ட் அமையணும், பின்னணி கலரிங்கிற்கு இந்த ரெஃபரன்ஸை எடுத்துக்கொள்ளணும்' என்றெல்லாம் விவரம் சொல்லி, புரிய வைப்பது ஒரு படலம் என்றால், அவர் அடுத்த 10, 12-வது நாளில் அந்த டிசைனை பிரித்து மேய்ந்து நம் கையில் தந்த பிற்பாடு செய்திடும் பிராஸஸிங் பணிகள் இன்னொரு மண்டகப்படி.

​😎உட்பக்கங்களின் கருப்பு, வெள்ளை பக்கங்களை எடுப்பது LITH என்றொரு ரக நெகட்டிவ் என்றால், அட்டைப்படங்களுக்கான கலர் நெகட்டிவுகளுக்கு PAN ஃபிலிம் என்று பெயர். அதை ரொம்பச் சொற்பமான பிராஸஸிங் கூடங்கள் மட்டுமே கையிருப்பில் வைத்திருப்பார்கள். And, அதனை துளிகூட மின்வரத்தில் ஏற்ற இறக்கம் இல்லாத சாமங்களில் எடுத்தால்தான் சுகப்படும். So, அட்டைப்பட டிசைனில் நாம் மேலே கதைகளின் பெயர்களை எழுதிய பிற்பாடு, பெயிண்டிங்கை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால், வேதாளம் உலாப் போகும் வேளைகளில் அந்த நெகட்டிவ்களை எடுப்பார்கள். அது சரியாக அமைந்துளதா ? இல்லையா ? என்பதை மறுநாள் நமது பிராஸஸிங் ஆர்ட்டிஸ்ட் போய் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிற்பாடு அதனில் ஒவ்வொரு கலராய் பணி செய்து மறுக்கா பிரிண்டிங்கிற்குப் போக வேண்டும்.

So, இத்தனை வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு ஆற்றலாளர்கள் அன்றைக்கெல்லாம் நமக்கு அவசியப்பட்டனர். 

காலச்சக்கரம் மெதுமெதுவாய் சுழல, முதலில் அடி வாங்கியது அச்சுக்கோர்ப்புத் துறை. ஈயத்திலான எழுத்துக்களைத் தேய்ந்த பிற்பாடு சென்னையில் இருக்கக்கூடிய ஃபவுண்ட்ரிகளுக்குத் திருப்பி அனுப்புவது வாடிக்கை. நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருக்கும் அந்த ஃபவுண்ட்ரி, அந்த எழுத்துக்களை உருக்கிவிட்டு மறுக்கா புதுசாய்ச் செய்து அனுப்பி வைப்பார்கள். இதெல்லாம் கொஞ்சமும் கட்டுப்படியாகாது என்ற ஒரு நிலை வந்த போது, வரிசையாய் ஃபவுண்ட்ரிகள் கடை மூடிவிட்டுப் போக, கம்ப்யூட்டரில் டைப் செய்வது எதார்த்தம் என்றாகிப் போனது.எனக்கு இன்னமும் நினைவுள்ளது, முதல் முறையாக ஏதோ ஒரு ரிப் கிர்பி சாகசத்திற்குத் தான் கம்ப்யூட்டரில் டைப்செட்டிங் செய்தது. அதுநாள் வரை ஒவ்வொரு பலூனின் அளவுக்கும் ஏற்ப அச்சுக்கோர்க்கும் போதே கம்பாஸிட்டர்கள் அந்தந்த இடங்களைப் பார்த்து, இட்டு நிரப்பித் தருவது வாடிக்கை. ஆனால் கம்ப்யூட்டரிலோ மொதுமொதுவென்று அடித்து மொத்தமாய் கையில் கொடுத்துவிடுவார்கள். ஆனாலும் நமது ஆர்ட்டிஸ்ட் டீம் கையில் இருந்ததால் எப்படியோ சமாளித்துவிட்டோம். ​சிறுகச் சிறுக ஆர்ட்டிஸ்ட்கள் டைனசர்களைப் போல சுத்தமாய்க் காணாமல் போகத் துவங்க, ஒரு கட்டத்தில் லொட்டாவோ லொட்டா! And, 2000-களின் பிற்பகுதியில் நாம் ஏற்கனவே கடையைச் சாத்த கிட்டத்தட்ட தயாராகி இருந்த நிலையில், ஓவியப் பற்றாக்குறை எனக்கு அத்தனை பெரிய பழுவாகத் தெரியவில்லை தான்.

​2011 இறுதிவாக்கில் ஜூனியர் எடிட்டர், "இக்கட ரா" என்று சொல்லி, கம்ப்யூட்டர் முன் என்னை உட்கார வைத்து, லக்கி லூக்கின் ஒரு பக்கத்திற்கு DTP அடித்து, கோரல் டிராவில் செட் செய்து, வண்ணத்திலான பக்கத்தைக் காட்டிய போது ஆந்தை முழி, அசுர முழியாகிப் போனது. "இது என்னடா கூத்து, இத்தனை பேர் இத்தனை காலம் செய்ததை இந்த ஒரு சதுர டப்பி செய்து முடித்துவிடுகிறதே!" என்று வாயைப் பிளக்கத்தான் முடிந்தது. ஆக ஒற்றைக் கம்ப்யூட்டரும், ஒரு திறன் வாய்ந்த ஆபரேட்டரும் இருந்தாலே 'ஆடரா ராமா ..தாண்டரா ராமா' என்று நமக்கான பல்டிகளை அடித்துவிடலாம் என்ற தைரியம் துளிர்விட்டதன் பிற்பாடு, நமது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியது. 

"இல்லை இல்லை இல்லை, கையால் அச்சுக்கோர்த்தால் தவிர நாம் எதிர்பார்க்கும் துல்லியம் கிடைக்காது; ஓவியர்கள் அழகாய்ப் பணி செய்தாலன்றி காமிக்ஸ் தேறாது;  திறன் வாய்ந்த பிராஸஸிங் கலைஞர்கள் இல்லாமல் டிஜிட்டலில் செய்யும் பிராஸஸிங் எல்லாம் நமக்கு லாயக்குப்படாது" என்றுதான் நானுமே துவக்கத்தில் கழுத்தைச் சாய்த்தேன். ஆனால், "இதுதான் முன்செல்லும் பாதை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இதை அரவணைக்காவிட்டால் நஷ்டம் உனக்கே" என்பதை டெக்னாலஜி பறைசாற்றியது. ​

So, அங்கு துவங்கிய நமது இரண்டாவது இன்னிங்ஸில் human skills என்பது பேனா பிடிக்கும் துவக்கக் கட்டத்தில் மட்டுமே குடிகொண்டிருந்தது. அட்டைப்படம் வரையும் கலைஞர் கூட கம்ப்யூட்டரிலேயே தான் சித்திரங்களைப் போட்டுக் கொடுத்தார். அவருமே ஒரு தோர்கல் ராப்பரில் சொதப்பித் தள்ளிய மறுநாள், நாம் கழுவிக் கழுவிக் காக்காய்க்கு ஊற்றியது இன்றைக்கும் நினைவுள்ளது. And, அந்த ஓவியர் நமக்கு போட்டுக் தந்த கடைசிச் சித்திரமாகவும் அதுவே அமைந்து போனது. இன்றைக்கோ ஒரிஜினல் ராப்பர்களை நம்மவர்கள் மேம்படுத்துகிறார்கள். and, கடந்த சில மாதங்களாக அந்தப் பணிக்கு AI வழிகாட்டியும் வருகிறது. சின்னதாய் ஒரு உதாரணம் இதோ.

IMAGE COMING......

​நீங்கள் பார்க்கும் முதல் சித்திரமானது அந்நாட்களில் நமது ஓவியர் போட்ட அட்டைப்படம். அதையே AI வசம் ஒப்படைத்து, "தம்பி டேய், காலத்திற்கு ஏற்றாற்போல இதை மாற்றம் பண்ணித் தாடா" என்ற மூணாவது நிமிடத்தில் விட்டெறிந்த சித்திரம் இது. சொல்லுங்களேன் guys, இந்த இரண்டில் உங்கள் தேர்வு எதுவாக இருக்குமோ? ஓவியர் போட்டதுதான் வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பல மடங்கு அழகானதொரு AI சித்திரத்தை ஒதுக்கத்தான் தோன்றுமா?

முன்னொரு காலத்தில் பெரிய புத்தகக் கடைகளுக்குள் புகுந்தால், கடையின் ஒரு கணிசமான பகுதிக்கு ஆர்ச்சீஸ் வாழ்த்து அட்டைகள் (Greeting Cards) இடம் பிடித்திருக்கும். பொங்கல், தீபாவளி, பக்ரீத், கிறிஸ்மஸ், ரம்சான், நல்ல நாள், கெட்ட நாள், திருமணம், பிறந்தநாள் என சகலத்திற்கும் ரகம் ரகமாய், வித விதமாய், கலர் கலராய் கார்டுகள் அடுக்கி வைத்திருப்பார்கள். "ராக்காயி வீட்டு கண்ணுக்குட்டி இன்னைக்கு மோ என்று கத்தியது, அதற்கு ஒரு கார்டு வேண்டும்" என்றால் கூட அங்கே கார்டுகள் வைக்கப்பட்டிருக்கும். கொஞ்சமாய் யோசியுங்கள், அவற்றையெல்லாம் எந்தக் காக்கா எங்கே தூக்கிப் போய், எங்கே பதுக்கி வைத்திருக்கக் கூடும்? Whatsapp என்றதொரு ராட்சசன் உட்புகுந்த மறுநாளில், கடுதாசி எழுதும் கலையே காணாமலே போனது. இன்றைக்கு நம்ம தலைவர் கூட ரீம் கணக்கில் பேப்பர்களை வாங்கி எழுதித்தள்ளாது, ரிலாக்ஸாய் படுத்தபடியே பத்து வரிகளைத் தட்டி விட்டு முடித்துவிடுகிறார். நல்ல நாள், பண்டிகையா? கடமை கண்ணாயிரமாய் நட்பு வட்டங்களுக்கு ஒரு வாழ்த்தை வாட்ஸப்பில் தட்டிவிட்டால், வேலை முடிந்தது. "இல்லைங்க, இந்த சைத்தானை நான் ஏத்துக்கிறதா இல்லை; நான் இன்னமும் லெட்டர் தான் போடுவேன், கிரீட்டிங் கார்டு தான் அனுப்புவேன்" என்று நம்மில் யாரேனும் சொல்லவாவது முனைகிறோமா? அட, இந்த AI சார்ந்த விவாதத்தின் துவக்கப்புள்ளியே நண்பர் அனுப்பிய வாட்சப் சேதி தானே? 

​இல்லப்பு...படைப்புகளுக்குள் AI புகுவதை தான் நாங்க எதிர்க்கிறோம் ; மற்றபடிக்கு டெக்னாலாஜியும் நாங்களும் பாய்-பாய் தான் என்கிறீர்களா? ரைட்டு...நாம் AI பக்கம் போகவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் நமக்கு வந்து சேரும் அயல்தேசக் கதைகள், அவற்றின் பின்னணிகள், அவற்றில் இருக்கக்கூடிய AI சார்ந்த உழைப்புகள் பற்றி நமக்கு ஏதாச்சும் தெரியவாவது வாய்ப்புள்ளதா ? Not at all என்பதே பதில்!

​ஒரு காமிக்ஸின் உருவாக்கம் என்பது ஒருநூறு பரிமாணங்கள் கொண்டது. புதிதாய் ஒரு கதாபாத்திரத்தை உருவகப்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்: அந்தத் தொடரில் வரக்கூடிய முக்கிய கதை மாந்தர்கள் அனைவருக்கும் உரித்தான குணாதிசயங்கள், உடல்வாகு, முகவெட்டு, கேச அழகு என்று வண்டி வண்டியான சமாச்சாரங்களை ஓவியருக்கு வழங்கி, சாம்பிள்களை வரையச் சொல்லி அவரை வாரக்கணக்கில் பெண்டை நிமிர்த்துவார்கள்.​ஹீரோ நேராகப் பார்க்கட்டும், குறுக்கால நிற்கட்டும், பின்னே திரும்பிப் பார்க்கட்டும், கையைத் தூக்கட்டும், காலை உதைக்கட்டும் என்று விதவிதமான ஆங்கிள்களில் அவரை வரைந்து சரிபார்ப்பது முதல் படி. இந்தக் கடின உழைப்புகள் எதுவுமே நாம் பார்க்கப்போகும் இறுதிப் பக்கங்களில் கிஞ்சித்தும் பிரதிபலிப்பதில்லை. ஏனெனில், இவையெல்லாமே பின்னணியில் உள்ள ஒத்திகைகள் மாதிரியானவை மட்டுமே! இன்றைக்கோ, AI வசம் அதே விவரங்களைத் தந்தால், அடுத்த பத்தாவது நொடியில் அந்த ஹீரோவின் கொள்ளுப்பேரன் எப்படி இருப்பான் ? என்பது வரை கண்ணில் காட்டிவிடும். "ஹீரோ ஓங்கி ஒரு கராத்தே வெட்டு வெட்டினார் என்றால் எப்படி இருக்கும்?" எனப் பார்க்க நினைத்தால், அவர் கராத்தே வெட்டு மட்டுமல்ல, கழுதையில் சவாரி செய்தாலுமே எவ்விதம் இருக்கும் என்று கண்முன்னே காட்டிவிடும்.

​அடுத்த கட்டமாய், ஒரு நெடுங்கதையை 50 /100, 200 அல்லது 300 பக்கங்களில் பிரித்து வரையும்போது 'Pacing the story' என்ற பணி பிரதானமானது. அதாவது, ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு, அதற்கு அடுத்ததற்கு என கதையை நகர்த்திச் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அந்தப் பணி. ஒரு லக்கி லூக் கதையென்றே வைத்துக்கொண்டால்:

  • ​அவர் ஊருக்குள் புதிதாய் வரும்போது ஒரு ஷாட் ......
  • ​அடுத்து, சலூன் தூரத்தில் தெரிவது போல இவர் வீதியில் வந்துகொண்டிருப்பது போல கதையைக் கொஞ்சம் முன்னெடுத்துச் செல்வது........
  • ​அதன்பின்பாய்ச் சலூனுக்குள் ஏதோ கலவரம் நடந்துகொண்டிருந்தால் அங்கே அடிதடி நடப்பது போலான சித்திரம்.......

​என்று ஒரு கதையை நெடுக இட்டுச் செல்வது ஒரு ஸ்கிரிப்ட்ரைட்டரின் பல வார காலத்து மண்டைக் குடைச்சலான பணி. Again, இது நமக்குக் கண்ணில் தட்டுப்படவே போவதில்லை; ஏனெனில், இதுவுமே பூர்வாங்கப் பணிகளில் சேர்த்தியானதுதான். ​ஆனால் இன்றைக்கோ, கதையின் ஸ்கிரிப்ட்டை AI வசம் தந்துவிட்டு, "இத்தனை பக்கங்களுக்கு இதை இட்டுச் செல்ல வேண்டும்" என்ற விவரத்தையும் சொல்லிவிட்டால், "ஒரு பக்கத்திற்கு எத்தனை frames வேண்டும்?" என்று மட்டுமே கேட்கும். அந்த விவரத்தையும் சொல்லிவிட்டால், கதையை நகர்த்தும் சகல பணிகளையும் அண்ணாத்தே பார்த்துக்கொள்வார். மேல் நோவ, நனைத்து சுமந்து கொண்டிருந்த பணிகளில் பலவற்றைச் சொடுக்கு போடும் நேரத்தில் முடிக்க சாத்தியமாகிவிடும் பட்சத்தில், படைப்பாளிகளுக்கு மெய்யாலுமே கவனம் தர வேண்டிய கிரியேட்டிவ்வான சமாச்சாரங்களில் ஈடுபட எத்தனை சுதந்திரமும் அவகாசமும் கிடைத்துவிடும்?! 

ஒரு மேஸ்திரி சிமெண்ட் கலவை போடுவதிலிருந்து, செங்கல்களைத் தூக்கி அடுக்குவதிலிருந்து, ஜன்னல்களைப் பொருத்துவதிலிருந்து, கதவு நிலைகளைச் சாத்துவதிலிருந்து சகலத்தையும் தானே செய்யும் அவசியமின்றி, மேற்பார்வை பார்த்தபடியே பிசிறுகளைச் சரிசெய்துகொண்டு வழிநடத்துவது என்பது எத்தனை ஆராமான விஷயம் ?. இத்தகையதொரு வாய்ப்பு கிட்டும் போது, - "இல்லீங்கோ AI இந்தப் பக்கமே வரப்படாது !"  என்று மறுக்கவாவது முடியுமா? AI என்பது பல இடங்களில் ஒரு பொதி சுமக்கும் கழுதையே தவிர, மனிதனின் கற்பனைகளை வறளச்செய்யும் ஒரு இடரே அல்ல!

​மிகச் சமீபமாய் நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் ஒரு டாம் & ஜெர்ரி வீடியோவைப் பகிர்ந்திருந்தேன். ஒன்றே முக்கால் நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோ, இந்த எலியும் பூனையும் லூட்டி அடிக்கும் கார்ட்டூன்களைப் பார்த்து ரசித்திருக்கக்கூடியவர்களின் ஈரக்குலையை உருவியெடுக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தது. ஒற்றை வரி வசனம் கூட இல்லாமலே, கண்கள் வேர்க்கவும், இதயம் இனிக்கவும் அந்த வீடியோ செய்திருந்தது. And surprise, surprise... அதை முழுக்க முழுக்க உருவாக்கியிருந்தது AI தான்! Hollywood-ன் அற்புதக் கலைஞர்களுக்கே சவால் விடும் தரத்திலிருந்த படைப்பை ஆதி முதல் அந்தம் வரை செயற்கை நுண்ணறிவால் நடத்த முடிகிறது எனில், பாராட்டுவதில் தப்பே இல்லையே மக்களே?! Credit where it's due!! ஒரு சில நாட்களுக்கு முன்பாகக் கூட பிரபல Star Wars திரைப்பட வரிசைகளை உருவாக்கியிருந்த டைரக்டர் AI தான் திரையுலகின் எதிர்காலமே, படங்கள் எடுப்பது இன்றைக்கு இதன் உதவியுடன் ரொம்பவே சுலபமாகிவிட்டது என்று சொல்லியிருந்தார். உலகத்துக்கே பொழுதுபோக்கின் முன்னோடியான Hollywood இந்த ஆற்றலை அரவணைத்து ஏற்றுக்கொள்ளும்போது, நாம் மட்டும் கோபித்துக்கொண்டு நிற்பதில் என்ன லாபம் இருக்கக்கூடும் folks?

​And விஷயத்துக்கு வருகிறேனே, "AI நல்லது, AI வல்லது, AI நாலும் தெரிந்தது" என்றெல்லாம் நான் டமுக்கடிக்க பிரியப்படவே இல்லை. And இது ஆறு தம்மாத்துண்டு புத்தகங்களுக்கான sales pitch-ம் அல்லவே அல்ல. போன பதிவிலேயே அழுத்தம் திருத்தமாய் நான் சொல்ல முனைந்திருந்தது : இந்தப் படைப்புகளின் Target audience நாமே அல்ல என்பதைத்தான். கையில் வெறும் 20 ரூபாயை வைத்துக்கொண்டு வரும் பிள்ளைகளுக்கு அப்துல் கலாமின் ஒரு குட்டி comics-ஐ கொடுக்க முடிந்தால் அந்த மட்டிற்கு நமக்குத் திருப்தியே. "அக்கா, சிறுத்தை மனிதன் book படித்தேன், அதில் அடுத்தது வந்திருக்கா?" என்று கேட்டு வரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமே கொஞ்சமாய் அதைவிடவும் better தரத்தில் உள்ள Arnold-ஐ தந்தால் ஒரு திருப்தி.

​20 ரூபாய்க்கு இன்றைக்கு முறைப்படி உரிமைகள் வாங்கி, தரமான கதைகள் எவற்றையும் வழங்கிட கிஞ்சித்தும் வாய்ப்புக் கிடையாது. நடப்பாண்டின் Gen Z இதழ்களையே எடுத்துக்கொள்ளுங்களேன், ஒரு சிறு கதையே அந்த குட்டி size-ல் 32 பக்கங்களுக்கு ஓடிவிடுகிறது. And அதனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். அந்த விலைகளைக் கண்டாலே பிள்ளைகள் ஒதுங்கி விடுகிறார்கள் என்னும்போது, Rs.20 என்ற விலையை முதலில் நிர்ணயம் செய்து கொண்டு அதற்குள் என்ன படியும் என்றே சிந்திக்க வேண்டிப்போனது. ​நாமாகவே உருவாக்கும் சரக்கு என்னும்போது இதற்கு Royalty-யும் கிடையாது, எந்த size-இல் போடணும் போடக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் கிடையாது, இஷ்டப்பட்ட printrun சாத்தியமே. So முழுக்க முழுக்கவே பிள்ளைகளுக்கு comics சார்ந்த ஒரு பரிச்சயம் ஏற்படுத்தித் தரவே இந்த முயற்சி.

​And again, டாக்டர் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தவிர்த்த பாக்கி ஐந்து புத்தகங்களுமே ஜூனியர் எடிட்டரின்  கற்பனைக் குழந்தைகள். அந்த அர்னால்டு & அப்ரசன்டி ஜோடியினை  வரும் நாட்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால், அட்டகாசமானதொரு cartoon ஜோடியாக மிளிர்ந்திட சர்வ நிச்சயமாய் வாய்ப்புகள் உண்டு என்றே சொல்லுவேன். 

Make no mistake folks - இது நடைபழக முயற்சிக்கும் ஒரு குழந்தையின் ததக்கா புத்தக்கா நடை மாத்திரமே என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையே கிடையாது. கண்ணில் ஒரே ஒரு சொட்டு விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு பார்த்தாலே ஒரு நூறு பிழைகள் தென்படாது போகாதுதான். ஆனால் இங்கு நடைமுறை எதார்த்தம் பற்றியும் உங்களுக்குச் சொல்லிட வேண்டியுள்ளது.

கபிஷ் கதைகளை கடந்த இரு வருடங்களாக நாம் வெளியிட்டு வருவது உங்களுக்கு தெரிந்ததே. இதில் சிக்கல் என்னவெனில் இந்த தொடருக்கான உரிமைகளை வைத்திருக்கும் நிறுவனத்திடம் கபிஷின் கோப்புகள் சுத்தமாய் கிடையாது. உரிமைகள் மாத்திரமே கைமாறியுள்ளனவே தவிர ஆங்காங்கே சுற்றில் இருக்கக்கூடிய பழைய பிரதிகளிலிருந்து scan செய்து முயன்றதை ஆளாளுக்கு ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த சூழல் தொடர வேண்டாமே என்ற எண்ணத்தில் ஒரிஜினல்  ஓவியரிடமே மேற்கொண்டு புது கதைகள் உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்து பார்த்தோம். 'கபிஷ் வந்துச்சு, சீகால் ஓடுச்சு, பந்திலா  சாத்துச்சு' என்ற ரீதியில் சிம்பிளான சிறுகதைகளை எழுதி படம் போட்டுத் தருவதாக இருந்தால், 32 பக்கங்கள் கொண்டதொரு கபிஷ்  இதழுக்கு அவர்கள் கோரிய தொகை நெருக்கி Rs.50,000. யோசித்துத்தான் பாருங்களேன். இத்தனை பெரிய தொகையைத் தந்து படைப்புகளை உருவாக்கி அவற்றை போணி பண்ணுவது ஒற்றை பிராந்திய மொழியில் மட்டுமே இயங்கி வரும் நமக்கு நடைமுறைக்கு ஒத்தாவது வருமா?

இதோ இப்போது விக்ரம் ரெடி செய்துள்ள அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெறும் 16 பக்கங்கள் + இரண்டு அட்டைப்படங்கள், ஆக 18 பக்கங்கள். இந்த 18 பக்கங்களை ஒரு தரமான, ஆற்றலான ஓவியரிடம் தந்து பணி செய்திருக்கும் பட்சத்தில், குறைந்தபட்சமாய் ரூபாய் 25,000 பிடித்திருக்கும். And அது மிக நியாயமான தொகையுமே தான்! ஆனால் இந்த 25,000 ரூபாயை ஒரே ஒரு மொழியில் நாம் வெளியிட்டு ஈடு செய்வது என்பது கனவிலும் சாத்தியமாகா சமாச்சாரம். But இன்றைக்கோ, நாமே உருவாக்க முடிந்துள்ளது ; ஒரு சின்ன விலையில் பிள்ளைகளிடம் கொடுக்கவும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதுதான் நமது இந்த திட்டமிடலின் பின்னணியே தவிர, அடுத்த கட்டத்தில் நாமாக கதைகளை உருவாக்கி லயனுக்குள் / முத்துவுக்குள் புகுத்தப் போகிறோம் என்றோ நீங்கள் 'டர்'ராக அவசியமே இல்லை. உலகத்தரத்திலான படைப்புகளையே போட்டுவிட்டே, மாதா மாதம் வாசிக்க உங்களை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அமெச்சூர் முயற்சிக்கு ரெகுலர் களத்தை தந்திடுவோம் என்று மெய்யாலுமே நினைக்கிறீர்களா?

Oh yes..., வரும் நாட்களுக்கென இன்னும் நிறையவே திட்டமிடல்களோடு ஜூனியர் எடிட்டர் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். அவை முழுக்க முழுக்கவே ஆகச் சின்ன விலைகளில், சிறார்களின் கைகளைப்போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே உருவாக்கவும்படும், மார்க்கெட்டிங் செய்யவும்படும். So, இவற்றை பத்தோ, பன்னிரண்டோ வயது சிறார்களின் பார்வையில் இருந்து பார்க்கத்தான் வேண்டுமே தவிர்த்து, ப்ளூ சொக்காய் போட்டபடியே நாம் அலசிட முகாந்திரங்கள் இருப்பதாய் நான் நினைக்கவே இல்லை. நமக்குப் தேவை மிகச் சின்ன விலைகளில், அழகான சித்திரங்களுடன்  கலரிலான இதழ்கள். அவற்றை வழங்கிட அயல்நாட்டுப் படைப்புகள் சுகப்படாது எனும் போது, எஞ்சியிருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு பப்ளிக் டொமைனில் இருக்கக்கூடிய புராதன காமிக்ஸ்களை கையில் எடுப்பது, அல்லது இன்றைய டெக்னாலஜியைக் கொண்டு நாமாகவே உருவாக்க முனைவது. We chose the latter ! Simple as that!

​இந்த AI முயற்சியில் இன்னொரு வசதியுமே உண்டு. இவற்றை நாம் இஷ்டத்திற்கு டிஜிட்டலிலும் விலைகளின்றியே சுற்றில் விட முடியும். சமூக வலைத்தளங்களில் கணிசமாய் நேரம் செலவிடும் புது வாசகர்களை விலைகளில்லாத இந்த முயற்சிகள் எட்டிட முடிந்தால், அந்தமட்டிற்கு காமிக்ஸ்களுக்கு வெற்றி தானே ?1 So, மாற்றங்கள் - முன்னேற்றங்கள் என்ற முதல் நொடியில் நாம் ரிவர்ஸ் கியர் போடுவது தேவையற்ற பீதி என்பேன். டைனோசார் காலத்து ஆசாமியான நான் இன்னும் "புளகாங்கிதம் அடைந்தேன்"....ஸ்பஷ்டமாய் உணர்ந்தேன் "என்றெல்லாம் வசனங்கள் எழுதித் திரியும் வரையிலும், எதுவுமே ஒற்றை ராத்திரியில் திடுதிடுபென மாறிவிடாது. AI வரப்போகிறது என்பது சூழல் அல்ல, அது எப்போதோ வந்தே விட்டது !! எப்போதோ நம்மைச் சுற்றி ஆறாமாய் காலூன்றித் திளைத்து வருகிறது.

​சின்னதொரு side track :

​இதுவரையிலும் மருத்துவத்துறையில் எழுதப்பட்டிருக்கக்கூடிய லட்சோபலட்ச புத்தகங்களையும் படித்ததொரு டாக்டர்...! இதுவரையிலும் மருத்துவத்துறையில் பிரசண்ட் செய்யப்பட்டுள்ள ஆய்வுத் தாள்களின் சகலத்தையும் கரைத்துக் குடித்ததொரு டாக்டர்...! ஆனால் ஆயுசுக்கும் கையில் ஒரு ஸ்டெதாஸ்கோப்பையோ, ஒரு தெர்மாமீட்டரையோ ஏந்திக்கூட இருக்காததொரு டாக்டர்! அவர் யார் ? 

​இந்த டாக்டர் 2027 முதலாக உலகின் முதல் நாடான அமெரிக்காவில் Clinical Assistant ஆகப் பணியாற்றப் போகிறார். அவர் வேறு யாரும் அல்ல ..... AI டாக்டர்களே ! வருஷா வருஷம் இந்தியாவிலிருந்தும், பிலிப்பைன்ஸிலிருந்தும், இன்ன பிற நாடுகளிலிருந்தும் டாக்டர்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, AI டாக்டர்களை நடைமுறைக்குக் கொண்டுவர அமெரிக்காவில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாம். ஒரு பொம்மை புக்குக்குள் AI புகுந்தாலே பதறியடிக்கின்றோம்; நமது ஆரோக்கியத்தையே அதனிடம் ஒப்படைக்கும் ஒரு நாள் புலர்ந்தால் என்னவென்போம்? Relax guys.... மாற்றங்களை தம் கட்டி எதிர்க்கும் நேரத்திற்கு, அதனை நமக்கு நல்லதொரு சேவகனாய் பயன்படுத்திக் கொள்வதே விவேகம் என்பேன். மாறாக அதனைத் தவிர்த்தே தீருவோம் எனும் பட்சத்தில், அவன் தோளிலேறி உலகமே நம்மைத் தாண்டி எங்கேயோ முன்சென்றிருக்கும். அப்புறமாய் நாம் திடுதிடுவென பின்னே விரட்டிக்கொண்டு ஓடினாலும் எட்டிப்பிடிக்க சாத்தியமாகுமா? புனித மனிடோவுக்கே வெளிச்சம்!

​நம் தடங்களில், நம் பயணங்களில் எப்போதும் போலவே கதைகளும் பணிகளும் தொடர்ந்திடும். And நாம் தேர்வு செய்து, வெளியிடும் கதைகள் சகலமுமே கிட்டத்தட்ட ஐந்தோ, பத்தோ, இருபதோ ஆண்டுகளுக்கு முன்பானவை என்னும்போது, அவற்றினுள் AI-யின் தாக்கங்கள் பெருசாய் இருக்கவும் வாய்ப்பில்லை. So, நிம்மதியாய், தைரியமாய், சலனங்களின்றி, சங்கடங்களின்றி, நெருடல்களின்றி வாசிப்புகளை நேசிப்போம். 

Bye all... இன்று காலை கோவையில் புத்தக விழாவுக்குப் போகும் முன்பாய் இந்தப் பதிவை போட நினைத்தேன் - glad I did! See you around! Have a great weekend!

அப்புறம் TERRIFIC TEX தெறிக்க விட ரெடி.... இதோ அட்டைப்பட preview 😎... சந்தா ரயிலில் நீங்க இடம் போட்டாச்சுங்களா? No time like now please 🙏



Sunday, July 12, 2026

ஒரு ஜூனியர் சண்டே ...!

 நண்பர்களே, 

வணக்கம்.இன்னொரு ஞாயிறு and இன்னொரு பதிவுமே.​ இப்போதெல்லாம் விரல் நுனியில் வாட்ஸப் கம்யூனிட்டி இருப்பதால் இங்கு login செய்து டைப் பண்ணவெல்லாம் நம்மில் நிறைய பேருக்கு அவகாசம் / ஆர்வம்  இல்லை என்பது புரிகிறது. கூடிய சீக்கிரமே இது வெறும் தகவல் பலகையாக மாறிப் போனாலும் வியப்பில்லை என்பேன். Sad but that is reality.

​"தகவல் பலகை" எனும் தலைப்பில் இருக்கும் போது ஒரு சில ஜாலியான updates-களை இம்முறை  பகிர்ந்திடுகிறேனே !! கொஞ்ச காலமாகவே செயற்கை நுண்ணறிவு நாற்கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருப்பது உலகத்துக்கே தெரிந்த விஷயமே. அவ்வப்போது மொழிபெயர்ப்பில் ஏதாச்சும் மாற்றம் முன்னேற்றம் கண்டுள்ளதா இந்த AI அணி ? என்று நான் பரிசோதிப்பதுண்டு. ஆனால் இதர மொழிகளில் பிரித்து மேய்ந்தாலும் தமிழில் இன்னமும், 'ஏக் காவ்  மே  ஏக் கிசான் ரகு  தாத்தா' ரேஞ்சுக்கே நொண்டியடிக்கும் வேகத்திலேயே வண்டி ஓடி வருவது தெரிந்தது. ​ஆனால் சித்திரங்கள் போடும் பணிகளில் சும்மா தெறி மாசாக எக்கச்சக்க app-கள் செயல்படுவதை சமீப காலமாய் நாமெல்லாமே பார்த்து வருகிறோம். யானையை வரையச் சொன்னால் - பானையை வரைந்து வைக்கும் சித்திர ஞானமே எனக்கு. ஆனாலும் இன்றெல்லாம் நான் உருவாக்கும் நமது விளம்பரங்கள் என்ன மாதிரி என்பது உங்களுக்கே தெரியும். So செயற்கை நுண்ணறிவின் இன்னொரு பக்கம் உலகெங்கும் உள்ள Digital ஓவியர்களின் பிழைப்புகளை நாறடித்து வருவது அப்பட்டம். 

மொழிபெயர்ப்பில் ஏதாவது செய்ய முடிகிறதா என்று பார்த்துவிட்டு 'ச்சை' என்ற கடுப்பில் நான் விலகிவிட்டாலும், நமது ஜுனியர் எடிட்டர் அந்த சித்திரங்கள் போடும் லாவகத்தை நமக்கு பயன்தரும் விதமாய் பயன்படுத்த வழியுள்ளதா ? என்று தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டே இருந்தது எனக்குத் தெரியும். சொல்லப்போனால் போன வருஷத்திலிருந்தே இந்த முயற்சியினை ஜூனியர் மேற்கொண்டு வருவது எனக்குத் தெரியும் !அவ்வப்போது ஏதேனும் பக்கங்களைக் கண்ணில் காட்டும் போது, மெய்யாலுமே வாய் பிளந்து கிடந்தேன்.அழகான சில cartoon பக்கங்களும் திகில் கதைப்  பக்கங்களும் அவற்றுள் இருந்தன. "என்னது தம்பு இது ?" என்று ஆர்வம் தாங்காமல் வினவ, "கதை எனது உருவாக்கம்.... இந்த சித்திரங்கள் சகலமும் AI மூலமாய் போட்டது !" என்று ஜுனியர் பதிலளித்தார். லொட்டு லொட்டு என்று பட்டன்களைத் தட்டினால் சித்திரங்கள் தானாக வந்து விழுவதில்லை என்பதை நான் அனுபவத்தில் அந்நேரம் படித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒரு மாடஸ்டி cover-ஐ போடு என்று சொன்னால் வலது கையில் ஆறு விரல் ; இடது கையில் ஏழு விரல் என்று பரவை முனீம்மாவை வரைந்து தந்து அழிச்சாட்டியம் பண்ணி வைக்கும். அதை மாற்றச் சொல்லி ஒரு நூறு தடவை மன்றாடினாலும், மனுஷனின் மண்டைத்  தொலியை உரித்தெடுப்பதில் அப்பாச்சேக்களுக்குத்  துளியும் சளைத்ததல்ல இந்த AI - என்பதை அந்நேரம் நன்றாகவே நான் அறிந்திருந்தேன். அவ்விதம் இருக்க, ஒரு பக்கம் நிறைய படங்களை உருவாக்குவது, கதை நெடுக அவற்றை சீராய் இட்டுச் செல்வது, வர்ணம் தீட்டுவது என்பதெல்லாம் சுலபமே அல்ல என்பதை நன்றாகவே புரிந்திருந்தேன். நேராக பார்க்கும் ஒரு ஆசாமியை பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க செய்ய வேண்டுமெனில் அதற்கென AI வசம் நாம் தர வேண்டிய உத்தரவுகள் பத்து பாத்திரங்களைத் தேய்க்கும் போது ஆத்துக்காரம்மா நமக்குத் தரும்  உத்தரவுகளை விட ஜாஸ்தி என்பேன். So பின்னணியில் இருந்திருக்கக்கூடிய உழைப்பு  பற்றிப்  புரிந்து கொள்ள முடிந்தது.

​கிட்டத்தட்ட அதே சமயம் நமது வட்டத்திலுள்ள புது நண்பர் ஒருவர் AI மூலமாக தான் உருவாக்கிய ஒரு சில சித்திர சிறுகதை மாதிரிகளை எனக்கு அனுப்பி வைத்து இதை publish பண்ண முடியுமா சார் ? என்று கேட்டிருந்தார். நண்பரின் உழைப்புக்கு நாம் credit எடுத்துக் கொள்வதில் எனக்கு ஏற்பில்லை என்பதால், "இல்லைங்க நாம் இதை வெளியிடுவதாக உத்தேசம் இல்லை !" என்று மட்டும் சொல்லியிருந்தேன். ஜனவரியும் பிறந்தது, சென்னை புத்தக விழா, புது அட்டவணை என்று ஏதேதோ பணிகளுக்குள் busy ஆகிப் போனேன். மார்ச் இறுதிவாக்கில் ஒரு கத்தைப்  பக்கங்கள் எனக்கென மேஜையில் தயாராகக் காத்திருந்த போதுதான் ஜூ.எ இந்த project-ஐ பாதியில் ஆத்தி இருக்கவில்லை என்பது புரிந்தது. பல சந்தர்ப்பங்களில் வேகமாய் ஆரம்பித்துவிட்டு பணிகளின் இடர்களைக் கண்டு reverse அடிப்பது எதார்த்தம் தான் என்பதால் நான் அது பற்றி தொடர்ந்து நோண்டிக் கொண்டிருந்திருக்கவில்லை. So மார்ச்சில் அவரது உழைப்பின் பலன்களைப் பார்த்த போது, மெய்யாலுமே பக்கென்றிருந்தது. ஏழு கழுதை வயசாகியும் ஆயிரத்தி சொச்சம் இதழ்களை வெளியிட்டான பின்னும், நானாக எழுதியது என்பது ஒண்ணோ ரெண்டோ துப்பறியும் கதைகளை மட்டும் தான். Comics-க்கு கதை எல்லாம் எழுத ஒருபோதும் நான் நினைத்ததும் இல்லை, மெனக்கெட்டதும் இல்லை.ஆனால் டெக்னாலஜியின் கரம் பிடித்து Junior செய்திருந்த பணிகளைப் பார்த்த போது செம thrill ஆக இருந்தது.

என்ன - அவரது உருவாக்கம் சகலமும் ஆங்கில ஸ்கிரிப்ட்டில் இருந்தது மட்டுமே லைட்டாக நெருடியது. அதையுமே தமிழில் செய்திருந்தால் இன்னும் பிரமாதம் என்று வியந்திருப்பேன். ஆனால், புண்ணியத்துக்கு கறக்கும் மாட்டை "அர்ரே பாய் ...தும்ஹாரா எத்தனை பல் கீதுபா ?" என்று எண்ண நினைத்தால், அது கடிச்சுப் போட்டு விடும் என்பது மண்டையில் உறைத்தது. தவிர இதை நீங்களே எழுதிட்டா தேவலாமே என்று ஜூனியர் கோரிக்கை வைத்த போது மறுக்கவாவது முடியுமா ? ​So நான் பேனா எடுத்துக்கொண்டு ஊத, AI-ஐ கையில் எடுத்துக்கொண்டு ஜூனியர் சலங்கை கட்டி ஆட ஒரே ஆடலும் பாடலுமாய் செமத்தியான scene அரங்கேறியது.

​உள்ளுக்குள் புகுந்த பிற்பாடுதான் இதனில் எத்தனை நெளிவு சுளிவுகள் உள்ளன, எத்தனை மொக்கைகள் போட வேண்டியுள்ளன, எத்தனை bulb-கள் வாங்கித் தீர வேண்டியுள்ளது, எத்தனை மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது என்பதெல்லாம் புரிபட்டது. அட்டகாசமாய் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் தெரியும் ஒரு சமாச்சாரத்தை print போட்டு பார்த்தால் புதுசாய் கண்ணாலம் கட்டி வந்த இல்லாள் ஆர்வக் கோளாறில் செய்த அல்வாவை போல் கிலுகிலுவென்று காட்சி தரும். AI-க்குள் இருக்கும் கலைஞன் நிறைய மணிரத்னம் படம் பார்க்கும் ரகம் போலும் - சகலமும் இருட்டாகவே ஆரம்பத்தில் வருகிறது !  'சிவப்பை கூட்டு, ப்ளூவைக் குறை, பச்சையை குறை....' என்று ஏதேதோ கூத்துக்கள் அடித்துவிட்டு மறுக்கா போய் பார்த்தால் அது பதம் தப்பிய மைசூர்பாகாய் வந்து சேரும்.​ இந்த முயற்சிகளின் பின்னே எடுத்த color printout-களும், செய்த திருத்தங்களும் பற்றி தனியாக ஒரு பதிவு போடுவதென்றால் அதற்கே ஒரு மணி நேரம் வேண்டி இருக்கும். ​To cut a very long story short, ஏகப்பட்ட திருத்தங்கள், மாற்றங்கள் செய்த பிற்பாடு - இதோ junior கைவண்ணத்தில் முழுக்க முழுக்க உருவாகியுள்ள படைப்புகள் இவையே.

முதலாவதாக கையில் எடுத்த பணி ஒரு மாமனிதனின் வாழ்க்கைக் கதை பற்றியது. "சிகரம் தொட்ட சிங்கங்கள்" என்று ஆந்தை அண்ணாத்த பேர் வைத்த இந்தத் தொடர் மாற்றங்களை சாத்தியமாக்கிய சில மகா மனிதர்களை காமிக்ஸ் வடிவில் சிறுக சிறுக கண்ணில் காட்ட உள்ளது. ​Of course இதெல்லாம் அமர் சித்ர கதா - வசந்த மாளிகை காலத்திலேயே நமக்குக் கண்ணில் காட்டி விட்டன தான். ஆனால் இன்றைய நாட்களின், இன்றைய தலைமுறைகளின் சாதனை செய்த நாயகர்களை, இந்த latest technology-யின் உதவியுடன் தரிசிப்பதில் தப்பில்லை என்றே எண்ணினேன்.

இதன் தமிழ் கோப்பு இந்த நொடியில் என்  கையில் இல்லை !! எடுத்தவுடன் அதை upload செய்வேன் !

And இங்கே பிரதானமாய் ஒரு விஷயத்தை சொல்லி விட அனுமதியுங்கள் மக்களே. இந்தப்  படைப்புகளின் target audience முழுக்க முழுக்க புத்தக விழாக்களுக்கு வரும் பள்ளி மாணாக்கர்களே. இவற்றை நமது regular வட்டத்தில் ஜாலியாக ரசிக்க முடிந்தால், அது icing on the cake....அவ்வளவே ! So இதனை டின்டினோடு ஒப்பிடுவதோ, ரத்த படலம் range-க்கு hype பண்ணி விட்டு அப்புறமாய் முழிப்பதோ வேணாமே ப்ளீஸ். பசங்களுக்கான படைப்பு and முதற்கட்ட முயற்சிகளே என்ற மட்டில் எடுத்துக்கொண்டால் எல்லாம் நலமே.

டாக்டர் கலாமின் வாழ்க்கையை 16 பக்கங்களுக்குள் அடக்குவதென்பது next to impossible என்பது அப்பட்டமாய் புரிந்தது. ஆனால் கையில் வெறும் இருபது ரூபாயை தூக்கிக்கொண்டு வரும் பிள்ளைகளுக்கு, கலரில், ஆர்ட் பேப்பரில் அழகாய், தரங்களில் சமரசமின்றி, புத்தகங்களை வழங்க வேண்டுமெனில் பக்கங்களில் சிக்கனம் அவசியம் என்பது ஜூனியர் எடுத்த தீர்மானம். தவிர, நீண்டு செல்லும் படைப்புகளாய் உருவாக்கிடும் பட்சத்தில், AI செய்யும் லூட்டிகளை சமாளிப்பது ஊரிலிருந்து வந்திருக்கக்கூடிய மாமியாரை சமாளிப்பதை விடவும் படு சிரமமான காரியம். So keeping it short and sweet would be great என்று நினைத்தோம்.

​டாக்டர் கலாமின் இதழுக்கு அடுத்ததாக ஜூனியர் கண்ணில் காட்டியது இதோ இந்த அட்டகாசமான காமெடி ஜோடியைத்தான்.

அர்னால்டு & அப்ரசன்டி .

​இந்த இணை பிரியா நண்பர்கள் ஜோடி - முழுக்க முழுக்க ஜூனியரின் கற்பனையே. 16 பக்கங்களுக்குள் அவர்களை உலகமெல்லாம் சுற்றச் செய்வது இந்தத் தொடரின் டெம்ப்ளேட். At least எனக்குத் தெரிந்த மட்டிலாவது அப்படித்தான். மூத்தவன் அர்னால்டு வகை தொகையின்றி, ஒவ்வொரு வில்லங்கத்திற்குள்ளும் கால்பதிக்க, கூடவே போகும் அப்ரசன்டி தஸ்-புஸ்ஸென்று தவித்துக் கொண்டே பின்தொடர்வது பிரமாதமாய் இருப்பதாய் எனக்குப்பட்டது. ​இதுவரை அதனில் மூன்று தனித்தனிக்  கதைகளை ஜூனியர் உருவாக்கியுள்ள போதிலும், பேனா பிடிக்க எனக்கு அதிக அவகாசம் இல்லை என்பதால், இரண்டை மட்டுமே இப்போதைக்கு ரெடி செய்துள்ளோம்.

இங்கேயுமே பேனா பிடிக்கும் போது கூத்துக்களுக்கு பஞ்சமே இருந்திருக்கவில்லை. புடைப்பான நம்ம மூக்குதான் சும்மா இருக்காதே...? வசனங்களில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நம்பர்களை அள்ளித் தெளித்திருக்க, டைப் செட்டிங்குக்குப்  போகும்போது, "ஸார், படமே தெரியலை, முழுசும் மறைக்குது, ஏகப்பட்ட வசனம்" என்று புகார் தான் வந்தது. நாசமாய் போச்சு! என்றபடிக்கே ஸ்கிரிப்டை பழையபடிக்கு மணிரத்தினம் பட டைலாக்கைப் போல், 'பச்சக் கஜக்' என்று மாற்றியமைத்து ரெடி செய்தோம்.

இந்த இரு இதழ்கள் ஜாலியான கார்ட்டூன் பாணியிலான களங்கள் என்றால், தொடர உள்ள ராபின்ஹுட் தொடரோ ஒரு ஆக்ஷன் ஹீரோவின் உதயம்.​ராபின்ஹுட் பற்றி சில மாதங்களுக்கு முன்பாய் அட்டைப்பட ட்ரைலர் மட்டுமே கண்ணில் காட்டியிருக்க, அப்போதே, "நீதிடா, நேர்மைடா, நியாயம்டா" என்று ஆலமரத்தடியில் பஞ்சாயத்து கனஜோராகக் களை கட்டியிருந்தது நினைவிருக்கலாம். இருப்போரிடமிருந்து எடுத்து இல்லாதோரிடம் கொடுத்த ராபின்ஹுட் பற்றி இங்கிலீஷ் பாடங்களில் நாம் படித்திருக்கலாம். Maybe, அந்த வாய்ப்பு அமைந்திருக்கா பட்சத்தில் இந்தக் கானக ஹீரோவை, ஜூனியரின் கைவண்ணத்தில், அழகான வண்ணத்தில், ரசிக்கலாம். இதழ் நம்பர் ஒன்று - ராபின்ஹுட் உருவான பின்னணியின் கதை. and இதழ் நம்பர் இரண்டு - தொடரும் அவரது சாகசங்கள். இங்கே சித்திர பாணிகள் சகலமுமே செம ரியலிஸ்டிக்காக இருந்திட வேண்டும் என்பதால், ஏகமாய் உழைத்திருப்பதைப்  பார்க்கப் போகிறீர்கள் ! 

Again 16 பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும்..! அழகான கலர், அழகான கெட்டி அட்டை, and எல்லாமே குட்டி விலைகளில். பசங்களுக்கு இவை ரூபாய் 20 விலையில், புத்தக விழாக்களில் விற்கப்படும். ஒரு காலத்தில் பிள்ளைகளாக இருந்தோர் வாங்குவதினில் விலை ரூபாய் 25 என்றாகிடும்.

இந்தச் சுற்றில் ஒரு b&w இதழுமே, ஜூனியர் உருவாக்கியிருந்தது இன்னொரு highlight. "யார் அவள்...? என்ற ஒரு மெலிதான திகில் திரில்லர் 48 பக்கங்களில், டெக்ஸ் சைஸில் ரூ. 45 விலையில் வரக் காத்திருக்கிறது. Again, இது முழுக்க முழுக்க ஜூனியரின் கற்பனையிலான உருவாக்கம். And again இரவே..இருளே.. கொல்லாதே .." ரேஞ்சுக்கு இதனை எதிர்பார்த்திட வேணாமே ப்ளீஸ் ? இங்கும்  வசனங்கள் மட்டுமே நம்மள் கி கைங்கரியம்.



 

இதோ, எல்லா இதழ்களுக்குமான அட்டைப்பட ப்ரிவியூக்கள் & உட்பக்க ப்ரிவியூக்கள்.​ இவற்றுள் ராபின் ஹுடின் இரண்டாவது இதழ் தவிர்த்து பாக்கி சகலமும் பிரிண்ட் ஆகி பைண்டிங்கில் உள்ளன. வரும் வெள்ளியன்று  கோவையில் புத்தகவிழா தொடங்கவிருக்க, நானும் ஜூனியரும், சனி காலை பராக்குப்  பார்க்க கோவைக்கு ஒரு குட்டி விசிட் அடிப்பதாக உத்தேசித்திருக்கிறோம். அந்நேரத்திற்குள் ராபின் ஹுடின் இரண்டாவது புக்கும் தயாராகி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ​So, மொத்தமாய் ஆறு இதழ்களையும் அன்றைக்கு கையில் எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்.



ஒரு மொக்கையான disclaimer-ஐ  மறுக்கா இங்கே பதிவு செய்துவிடுகிறேன் மக்களே.

​இது முழுக்க முழுக்க, எவ்வித முறைப்படியான AI சார்ந்த கற்றலும் அல்லாத புதியவரின் கைவண்ணங்களே. So, நிச்சயமாய் ஆங்காங்கே பிசிறுகளோ, பிழைகளோ இருப்பது சாத்தியமே. And இவற்றுள் எவையும் காமிக்ஸ் உலகின் ஐஸ்னர் விருதுக்கு போட்டி போடப்போகும் ரகமுமே அல்லதான். So, ஒரு புதிய முயற்சிக்கு 'தம்' கட்டி பகடிகளைப் பரிசாக்கிட வேண்டாமே ப்ளீஸ். And ஏற்கனவே சொன்னது போல, இவற்றின் டார்கெட் ஆடியன்ஸ் நாமே அல்ல. முழுக்க முழுக்க புத்தக விழாவின் இளம் தலைமுறையினரை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளவை இவை. தொடரும் நாட்களில் இந்த முதல் தொகுப்பில் உள்ள பிசகுகளை சரிசெய்திடவும், இதழ்களில் சாரம் குறைவென்றிருப்பதை சரி செய்யவும் நிச்சயம் மெனக்கெடுவோம். ​For sure a long way to go and for sure a long journey ahead.

5 x கலர் இதழ்கள் 25 ரூபாய் விலையிலும் 

1 x b&w இதழ் ரூபாய் 45 விலையிலும் 

எனும்போது - மொத்தம் ரூ. 170 ஆகிறது. 

ஆகஸ்ட் மாதத்து சந்தா புக்குகளோடு இவற்றையும் பெற்றிட விரும்பும் பட்சத்தில் ரூ.170 மட்டும் GPay செய்தால், இல்லம் தேடி இவையுமே வந்துடும் folks

In case இவற்றை இப்போதே பெற விரும்பினால் - கூரியர் சேர்த்து ரூ.210 

தொடரும் அடுத்த சுற்றில் இன்னும் கூடுதலாய் ஹாரர் கதைகள், பப்ளிக் டொமைனில் இருக்கக்கூடிய சில தரமான படைப்புகள் என்பனவற்றையும் இதே ரூபாய் 20, 25, 45 விலைகளில் வெளியிடத்  திட்டமிட்டுள்ளோம். நடப்பாண்டில் புது அரசின் புத்தக விழா சார்ந்த கொள்கைகள், முன்போலவே தொடரும் பட்சத்தில், நமது இந்த முயற்சிகள் இணைதளத்தில் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.

So இந்த நொடியில் கலரில் என் முன்னே மினுமினுக்கும் இதழ்களை, பழம் தின்று கொட்டை போட்டதொரு மொக்கை எடிட்டராய் ரசிக்கும் அதே நொடியில், 42 ஆண்டுகளாய் எனக்குச் சாத்தியப்பட்டிருக்கா ஒரு சமாச்சாரத்தை என் பிள்ளை சாதித்திருப்பதை நினைத்து ஜிலோவென காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் ஒரு அப்பனாகவும்,  உங்கள் முன்னே நான், 

Bye all...., ஆகஸ்ட்டின் இளம் தளபதியோடு இந்த ஞாயிறை தொடரப்  புறப்படுகிறேன். அப்புறம் இன்று மதியம் தாத்தாக்கள் சார்ந்த ஒரு கலந்துரையாடல் வீடியோ திட்டமிட்டுள்ளோம், அது எந்த மட்டும் சாத்தியப்படுகிறது ? என்பதை புனித மனிடோவே அறிவார். Wish us luck people.....  See you around...Bye for now !

Thursday, July 02, 2026

42 ......and Counting !!

 நண்பர்களே,

YEAR 42 and Counting....👍

வணக்கம்! இறக்கை கட்டிப் பறப்பது அண்ணாமலை சைக்கிள் மட்டுமல்ல (no அரசியலுங்கோ)– காலச் சக்கரமும் தான்! தேய்ந்து, ஓய்ந்து போன cliche-களை உவமானத்துக்கு நான் இங்கே இரவல் வாங்கப் போவதில்லை! மாறாக, டெக்னாலஜியில் நாம் கண்டுள்ள மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கொஞ்சமாய் நினைவு கூர்ந்தாலே – கடந்து சென்றிருக்கும் இந்த 500+ மாதங்களின் பரிமாணம் சுயமாகவே புரியும்!!

​1984-ல் "கத்திமுனையில் மாடஸ்டி"க்கு அச்சுக் கோர்ப்பு செய்த வேளைகளில் கிட்டத்தட்ட 240 தனித்தனி சிறு டப்பிகள் கொண்டதொரு பெரிய மர கேஸை நிறுத்தி வைத்து, ஒவ்வொரு டப்பிக்குள்ளும் ஈயத்தினாலான தமிழ் எழுத்துக்களை போட்டு வைத்திருப்பார்கள்! 'யா' எங்கே உள்ளது? 'டீ' எங்கேயுள்ளது என்றெல்லாம் நினைவில் வைத்திருக்கும் கம்பாஸிட்டர்கள் அந்த எழுத்துக்களை சேகரித்து வரிகளை உருவாக்குவார்கள்! அதன் பின்னே அந்த ஈய எழுத்துக்களில் கருப்பு மசி பூசப்பட்டு பிரிண்ட் எடுக்கப்படும்! இன்றைக்கோ – லொடடு லொடடு லொடடென்று தட்டினால் சகல பாஷைகளிலும் ஸ்கிரீன் ரெடி!

​அந்த நாட்களில் பிரிண்ட் போடப்படும் தமிழ் ஸ்கிரிப்ட்டை நமது ஆர்டிஸ்ட் டீம் கர்ம சிரத்தையாய் வெட்டி, ஒட்டி, ஓரம்-சாரங்களில் படங்களை நீட்டித்துத் தருவார்கள்! இன்றைக்கோ – again கொஞ்சம் லொட்டு.. லொட்டு.. லொட்டு!! பக்கம் ரெடி! அட, அதுவே இப்போது பூமர் ஸ்டைல் என்றாகிப் போய்விட்டது; செயற்கை நுண்ணறிவு அண்ணாத்தேயிடம் சொன்னால், கதையே எழுதி, படமும் வரைந்து, அதுவே வாசித்து, விமர்சனமும் செய்து விடும்!

​அந்த நாட்களில் ஐரோப்பிய படைப்பாளிகளிடம் பேச வேண்டுமெனில் ‘இன்டர்நேஷனல் ட்ரங்க் புக்கிங்’ என்ற பெயரில் ஒரு நான்கு மணி நேரங்களுக்கு முன்பாகவே புக்கிங் பண்ணிவிட்டு, போனின் அருகிலேயே புளிசாதத்தோடு காத்திருக்க வேண்டியிருக்கும்! அப்புறமாய் டெலக்ஸ் வந்தது; அதைத் தொடர்ந்து fax வந்தது ; பின்னே pager என்றார்கள்; next செங்கக்கட்டி போலொரு மொபைல் போன் என்றார்கள்; பிற்பாடு ஸ்மார்ட்போன் என்றார்கள் ....வாட்சப் என்றார்கள்... Wi-Fi என்றார்கள்... 3G..4G...5G என்று பற்பல G-க்கள் தகவல் தொலைத்தொடர்பை உள்ளங்கைக்குள்ளேயே கொணர்ந்து விட்டனர்!

​அட, அவ்வளவு போவானேன் folks? இரண்டு ரூபாய், மூணு ரூபாய் என்று தெருமுனைப் பெட்டிக்கடைகளில் தொங்கிய அந்த மெல்லிய நியூஸ்பிரிண்ட் காமிக்ஸ் புத்தகங்கள், இன்று பளபளக்கும் ஆர்ட் பேப்பரில், அட்டகாசமான வண்ணங்களில், ஹார்ட் கவர் பைண்டிங்கில் உங்கள் புத்தக அலமாரிகளை அலங்கரிப்பது கூட மாற்றங்களின் ஒரு மாயாஜாலம் தானுங்களே?

​பள்ளி முடிந்து வந்ததும், கையில் இருக்கும் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, புத்தகக்கடைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்ற அந்த மாலைப் பொழுதுகள் நினைவிருக்கிறதா? 'லயன் காமிக்ஸ் புதுசு வந்துருச்சாண்ணா?' என்று கேட்டு, அந்த ஸ்பைடரையோ, ஆர்ச்சியையோ வாங்கியவுடன், வீட்டுக்கு வரும் வழியிலேயே வாசித்த அந்தத் தருணங்கள் நேற்றைய நினைவுகள்! And கச்சிதமாய் வாங்கியவற்றை அம்மாவின் கண்ணில் படாமல் வீட்டுக்குள் கொண்டு செல்வது பற்றாதென, ஸ்கூல் பைக்குள் அவற்றைப் பதுக்கி எடுத்துப் போய் நண்பர்களோடு ஷேர் விட்டதெல்லாம் அலாதி! இப்போதோ – கிரெடிட் கார்டைத் தேய்த்து சில ஆயிரங்களிலான சந்தாவைக் கட்டிப்புட்டு வீடு தேடி கொரியர் வரும் போது 'நண்பன் கொடுத்த கிப்ட்மா...!' என்று  புளுகியபடிக்கே , வாசக சந்திப்புகளுக்கெல்லாம் 'ஆபீஸ் டூர்' என்று பீலா விட்டுக் கிளம்புவது இப்போதைய சாகசங்கள்!!

​இந்த நான்கு தசாப்தங்களில் நம்முடன் தான் எத்தனை எத்தனை நாயக/நாயகியர் பயணித்திருக்கிறார்கள்! ஆனால், நம் கற்பனை உலகை ஆக்கிரமித்திருந்த யாருக்கும் வயதாகவே இல்லை என்பது தான் மேட்டரே! டெக்ஸ் வில்லர் இன்றும் அதே சீற்றத்துடன், அதே நவஹோ செவ்விந்தியர்களுடன் குதிரையில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறார்! நமக்குத் தான் ஓரத்தில் ஒயிட் எட்டிப் பார்த்துவிட்டது  ; கண்களில் ரீடிங் கிளாஸ் ஏறிவிட்டது; தொப்பைகளின் விஸ்தீரணங்களும் செழிப்பாகியுள்ளன! ஆனாலும், கூட மாதத்தின் முதல் தேதிகளில் காமிக்ஸின் பார்சல் வீட்டுக்கு வரும் போது நம்முள் ஒளிந்திருக்கும் அந்தப் பாலகன் உள்ளுக்குள்ளாவது லைட்டாகத் துள்ளி குதிக்கிறான் தானே? இந்த 42 ஆண்டுகளில் நமது லயனுடனான பயணத்தின் மெய்யான சாதனையாய் அதையே பார்க்கத் தோன்றுகிறது!

​எத்தனையோ ஏற்ற-தாழ்வுகள் இந்தப் பயணத்தில் உண்டென்றாலும், நீங்கள் தந்துள்ள நிபந்தனைகளற்ற ஆதரவுகளே இந்தச் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஆதாரங்கள்! மாதம் ஒரு black & white சாணிக் காகிதப் புத்தகம் என்ற நிலையிலிருந்து, இன்று 'சாம்பலின் சங்கீதம்...' 'பயணம்' போலான பிரம்மாண்டமான கிராஃபிக் நாவல்களை ஐரோப்பிய தரத்திற்கு இணையாக வெளியிடுமளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் உங்களின் தணியாத காமிக்ஸ் தாகம் மட்டுமே!

​நாம் ஒரு விசித்திரமான, அழகான குடும்பம் என்பேன் guys! சாதி, மதம், வயது, அனுபவம், அரசியல், என அனைத்தையும் தலையைச் சுற்றி தூர வீசி விட்டிருக்கும் நம்மை, சின்னச் சின்ன கட்டங்களுக்குள் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், அவற்றில் உள்ள வசனங்களும் ஒற்றைப் புள்ளியில் இத்தனை காலமாய் இணைத்திருக்கின்றன ! புத்தகத் திருவிழாக்களில் நாம் சந்திக்கும் போது, நீங்கள் காட்டும் அந்த ஆர்ப்பாட்டமில்லாத அன்பும், உரிமையோடு நீங்கள் வைக்கும் விமர்சனங்களும்தான் இந்தப் பயணத்தின் பெட்ரோல்.... டீசல்... LPG என எல்லாமே!! சந்துகள் பல கண்டு, சந்தடியே இல்லாது சாத்துக்கள் பல வாங்கினாலும் - ‘ அந்த சிக்-பில் க்ளாஸிக்கை மறுக்கா போடுங்க; MAXI சைஸில் XIII எப்போது? ‘டைகருக்கு இன்னும் ஒரு ஸ்லாட் கூடுதலா குடுங்க’ என்றெல்லாம் நீங்கள் உரிமையோடு கேட்கும் ஒவ்வொரு தருணத்திலும், குணா கமல் போல - ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப் போன மாயமென்ன – பொன்மானே..பொன்மானே?’ என்றே பாடத் தோன்றுகிறது!

​42 ஆண்டுகள்!

​வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான மைல்கல் - வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் பருவம்! ஆனால், (தமிழ்) பதிப்புலகின் சவலைப் பிள்ளையான ஒரு காமிக்ஸ் நிறுவனத்திற்கோ - இந்தக் கால அவகாசமானது ஒரு நீண்ட, உணர்வுபூர்வமான சகாப்தம்! என்னோடு இந்த நெடிய பயணத்தில் ராப்பகலாகத் துணை நின்ற ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அச்சுக்கூட நண்பர்கள், பைண்டிங் தொழிலாளர்கள்; front ஆபீஸ் உதவியாளர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் லயன் காமிக்ஸின் ஆணிவேரான உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும் ! நீரின்றி லயன் இல்லை; இந்தப் பயணமும் இல்லை!

​நாளை என்ன நடக்கும்? தொழில்நுட்பம் நம்மை எங்கு கொண்டு செல்லும்? என்று ஆருடம் சொல்ல சத்தியமாய்த் தெரில்லீங்கோ ! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! காகிதத்தின் வாசனையும், கற்பனையின் வீச்சும், இந்த பொம்ம பொஸ்தவங்களை ரசிக்கும் உங்களைப் போன்ற காதலர்களும் இருக்கும் வரை, நம் காமிக்ஸ் உலகம் உயிர்ப்போடு இருக்கும்! And அந்தச் சித்திரக் கட்டங்களுக்குள் நம் நாயகர்கள் உங்களுக்காக மறுக்கா மறுக்கா பிஸ்டல்களை தோட்டாக்களால் நிரப்பிக் கொண்டே இருப்பார்கள்!

​Yet another ஆண்டினுள் அடியெடுத்து நடை போடுகிறோம் - நமது மாமூலான லக்கி லூக்கின் ஆண்டுமலரோடும், 'தல' டெக்ஸின் அதிரடியோடும்!! இம்மாமாதம் GEN Z தடத்தில் ஒரு தாத்தாவும், பேத்தியுமென்றால், கிராபிக் நாவல் தனித்தடத்தில் ரவுசு பண்ணும் தாத்தாஸ் trio!! இந்த variety தானே நமது அடையாளமே folks? இந்தியாவில் வேறெந்த மொழியிலோ, மாநிலத்திலோ நாம் ரசிப்பனவற்றை ரசிக்கவல்ல வாசகர்கள் யாருமே கிடையாது என்ற பெருமிதத்தில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே முன்செல்வோம்!! You have been an absolutely fabulous audience & உங்கள் துணைகளுடன் இன்னும் பற்பல மைல்கற்களை எட்டிப் பிடிக்க புனித மனிடோ அருள்புரிவாராக!! 

இதோ ஜூலை இதழ்களின் அட்டைப்படம்ஸ் & பிரிவியூஸ் !! 


ONLINE LISTING : https://lion-muthucomics.com/latest-releases/1472-2026-july-pack.html


இம்முறை தொடரின் ஒரு துவக்க நாட்களின் சாகசமும், பின்னாட்களின் சாகசமும் காம்போவாகி உள்ளன ! அதனில் அந்த லேட்டஸ்ட் சாகசமே ஹைலைட் - என்  பார்வையிலாவது !! அந்தக் காலத்தில் வன்மேற்கில் வாழ்ந்த பெல் ஸ்டார் எனும் அடாவடி அம்மணியே இந்தப் படைப்பின் துவக்கப் புள்ளி என்பது கொசுறுத் தகவல் !! 

And இம்மாத 'தல' சாகசத்திலுமே ஒரு ரியல் லைப் பார்ட்டி உண்டு - நமக்குத் பரிச்சயமான ஜட்ஜ் ராய் பீன் ரூபத்தில்..! (லக்கி லூக்கின்  - "நிதிக்குத் தலைவணங்கு" நினைவுள்ளதுங்களா ? So வன்மேற்கின் முக்கிய புள்ளிகளை இம்முறை இரு மஞ்சள் சொக்காய்க்காரர்களுமே உள்ளடக்கியுள்ளனர் !! இரண்டுமே absolute must reads என்பேன் !! 


And GEN Z சந்தாவினில் இம்முறை தாத்தா & பேத்தி சிறுகதை + டீம் ஜு.டி சிறுகதை என்ற அழகான காம்போ !



மேற்கொண்டு இன்னும் கொஞ்சம் எழுதணும் folks - முடிந்தால் இப்போவே ; இல்லாங்காட்டி நாளைக்கு காலையில்... ! So catch you again ! Bye for now !