நண்பர்களே,
வணக்கம். "கறுப்பை" சிலாகித்து முந்தைய பதிவென்றால், வண்ணத்தில் மிளிர்ந்ததொரு முன்னோடி இதழை ரசித்திட முயற்சிக்கும் காலப் பயணம் இம்முறை !
சமீபத்தில் எனது பீரோவை ஒதுக்கிக் கொண்டிருந்த போது 1968 -ல் நமது அபிமான Fleetway நிறுவனம் வெளியிட்டிருந்ததொரு இரும்புக்கை மாயாவியின் சாகசம் என் கண்ணில் தட்டுப்பட்டது ! முத்து காமிக்ஸில் ஏறத்தாள 35 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி மலராய் வெளிவந்த முழுநீள..முழு வண்ண சாகசமான "கொள்ளைக்காரப் பிசாசு" இதழின் ஆங்கில ஒரிஜினல் அது ! பின்னாட்களில் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் மறுபதிப்பும் கண்ட இதழ் தான் என்ற போதிலும்,The Phantom Pirate என்ற அந்த ஆங்கில ஒரிஜினலைப் பார்த்திட்ட போது என்னுள் ஏராளமான பழைய நினைவுகள் பிரவாகமாய் ஓடுவதை உணர்ந்திட முடிந்தது ! எனது நினைவுத் திறனை நான் முழுவதுமாய் நம்பிடத் தயாரில்லை ; எனினும் 1977 -ல் முத்து காமிக்ஸில் வெளிவந்த இதழ் இது என்று எனக்கொரு ஞாபகம் ; correct me if I'm wrong ப்ளீஸ் ?
அற்புதமான கதை ; மாயாவியின் மாறுதலான கதைக் களம் ; அந்தக் காலத்து வண்ண அசத்தல் என்பதையெல்லாம் தாண்டி, இந்த இதழின் ஆக்கத்தில் அடியேனின் சொற்பமான பங்கும் அந்தக் காலத்திலேயே இருந்திட்ட காரணத்தினால் இது எனக்கு நிரம்பவே பிரியமானதொரு இதழ் !
1975 -ன் தகிக்கும் மே மாதத்தில் family முழுவதையும் அழைத்துக் கொண்டு டில்லி & மும்பைக்குப் பயணமாகினார் என் தந்தை ! முத்து காமிக்ஸ் என்பது பிரமாதமான விற்பனையை கொண்டிருந்த போதிலும், என் தந்தைக்கு அது பிரதான தொழில் அல்ல ! காலெண்டர்கள் ; நோட் புக் ராப்பர்கள் அச்சிட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் தொழிலில் அதகளம் செய்து கொண்டிருந்த சமயம் அது. So டில்லியில் இருந்த பிரதான காலெண்டர் முகவர் வீட்டுத் திருமணத்தில் பங்கெடுத்து விட்டு, பின்னர் மும்பைக்கும் சென்று அங்குள்ள காலெண்டர் ஓவியர்களை சந்தித்திடுவதே என் தந்தையின் பயண நோக்கம். முழுப் பரீட்சை விடுமுறை என்பதால் எங்களையும் அழைத்துக் கொண்டு சென்றார். ரொம்பவே பொடியனாக நான் இருந்த போதிலும், நமது காமிக்ஸ் கதைகளின் ஆங்கில ஒரிஜினல்களில் இருந்து, சமயம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லிச் சொல்லி எனக்கு அவற்றின் மேல் தீவிரக் காதல் கொண்டு வந்திருந்தார் என் தந்தை. மும்பையில் பகலில் அவரது வேலைகளைப் பார்த்திட கிளம்பிப் போய் விட்டாலும், மாலைகளில் என்னை அழைத்துக் கொண்டு மும்பையின் பழைய புத்தகக் கடைகளுக்கு shunting அடிப்பது ஒரு routine ஆகி இருந்தது. அது போன்றதொரு மாலை நேர புத்தகத் தேடலின் பொது மாஹிம் பகுதியில் இருந்ததொரு லெண்டிங் லைப்ரரியில் என் கண்ணில் தட்டுப்பட்ட அந்தப் பழுப்பு நிறப் புத்தகமே இன்றைக்கும் எனது பீரோவில் துயிலும் The Phantom Pirate !
இன்டர்நெட் என்பதோ ; தகவல் தொடர்புகளில் துரிதம் என்பதோ பரிச்சயமே இல்லாத நாட்கள் அவை என்பதால், ஒரு கதைத் தொடரில் உள்ள மொத்த இதழ்கள் எத்தனை ; அவற்றின் நிறை-குறைகள் என்ன ; போன்ற பின்னணி ஆராய்ச்சிகள் செய்வது அப்போதெல்லாம் சாத்தியமே அல்ல ! Fleetway நிறுவனத்தின் இந்திய முகவருக்கோ இதில் துளியும் ஆர்வமெல்லாம் கிடையாது ; "மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ் டேவிட் - இவை எல்லாமே அவருக்கு பில்லில் டைப் அடிக்கத் தேவையான பெயர்கள் மாத்திரமே. So நாமாகத் தேடித் பிடித்து கதைகளின் பெயரைச் சொல்லி இலண்டனிலிருந்து கதைகளை வரவழைக்கும் முயற்சிகளை அவ்வப்போது செய்திட வேண்டி இருக்கும். அன்று மாஹிம் லெண்டிங் லைப்ரரியில் அடியேன் தேடித் பிடித்த இதழை refer செய்து கதைக்கு ஆர்டர் செய்ததார்கள் நமது அலுவலகத்தில் ; எனக்கோ ஏதோ இமாலய சாதனை செய்து விட்டது போன்றதொரு பெருமிதம் !
சில மாதங்கள் இடைவெளியில் கதையின் ஒரிஜினல்கள் வந்து சேர்ந்தது ; இக்கதையினை வண்ணத்தில் வெளியிட எனது தந்தை தீர்மானித்தது எல்லாமே எனக்கு 'பளிச்' என்று நினைவு உள்ளது. அப்போதெல்லாம் கலரில் காமிக்ஸ் என்பது ஒரு rarity என்பதால், அதன் பணிகளை நான் தொடர்ச்சியாய் பராக்குப் பார்த்து வந்தேன் ! வர்ணம் பூசிட 32 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பிற்கு ஒரு ஓவியர் என்று - மொத்தம் 4 தனித்தனி ஓவியர்களிடம் பொறுப்பு தரப்பட்டது ! சிவகாசிக்கருகே இருந்திட்டதொரு பள்ளியில் டிராயிங் மாஸ்டராக பணி புரிந்ததொரு ஓவியர் நமக்கும் பகுதி நேரப் பணியாளரே ! முதல் 32 பக்கங்களை அவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது ! பக்கம் 33 - 64 நம்மிடம் இருந்ததொரு staff ஆர்டிஸ்ட் (பெயர் நினைவில் இல்லை) வசம் ! மூன்றாவது தொகுப்பு எங்களது ஸ்டார் ஆர்டிஸ்ட் ஆன தெய்வசிகாமணி வசம் தரப்பட்டது ! சமீபம் வரை நமக்குப் பணி செய்து வந்த இவர் லைன் டிராயிங் பணிகளில் அசகாய சூரர் ! துல்லியம் ; அசாத்திய நுட்பம் என்று நிரம்பவே திறமைசாலியான இவர் எக்கச்சக்கமாய் கூச்ச சுபாவம் கொண்டவர் ! யாரிடமும் ஒரு வார்த்தைக்கு மேல் பேசுவதே அரிது ! அப்போதைய முத்து காமிக்ஸ் அலுவலகம் நகரின் மையத்தில் இருந்ததொரு பெரிய கட்டிடத்தில் இருக்கும் ! நான் வாரத்தில் பாதி நாட்கள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் இங்கே நின்று விட்டு ; கொஞ்ச நேரம் ஒவ்வொருத்தரின் பணிகளையும் பராக்குப் பார்த்து விட்டே திரும்புவது வழக்கம். மாடிக்குச் செல்லும் படிகளின் நடுவில் ஒரு தாழ்வாரம் போன்ற பகுதியில் தரையில் அமர்ந்து தான் சிகாமணி வேலை செய்து கொண்டிருப்பார் !
அவரோடு பேசுவது, அவரது வேலைகளை ரசிப்பது எனக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு ! 4 வெவ்வேறு ஓவியர்களின் கை வண்ணமும் ஒரே இதழில் இருந்திடப் போவதால் யாருடைய பணி சிறப்பாக ஸ்கோர் செய்யப் போகிறதென்று அவர்களுக்குள் ஒரு மௌனமான போட்டி நிலவியது எனக்குத் தெரியும் ! எனக்கோ எனது favorite ஆன சிகாமணி தூள் கிளப்ப வேண்டுமென்பதே ஆசை !
கடைசி 32 பக்கங்கள் நம்மிடம் பணிபுரிந்த இன்னொரு புதிரான ஓவியர் வசம் இருந்தது ! புதுக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமத்திலிருந்து வேலை தேடி வந்த அந்த நபரைப் பார்க்கும் போதே வறுமையின் தாண்டவம் அப்பட்டமாய் தெரிந்தது ! சோலையப்பன் என்ற அவர் ஓவியத்தில் துளியும் பயிற்சி இல்லாத, ஒரு பிறவிக் கலைஞன் என்றே சொல்லிட வேணும் ! அழகாக வேலை செய்து கொண்டிருக்கும் போதே சிதறும் சிந்தனைகள் மனுஷனை எங்கேயாவது இட்டுச் சென்று விடும் ; திடீரென ஒரு 3 மாதங்கள் காணாமல் போய் விடுவார் ! பின்னர் திரும்பவும் வந்து எனது தந்தையிடம் மன்றாடி பணியில் சேர்ந்திடுவார் ! பின்னாட்களில் நமது லயன் காமிக்ஸ் இதழுக்கும் மனுஷன் பணி புரிந்திட்ட நாட்களும் உண்டு ; அதே போல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய சமயங்களும் நிறையவே உண்டு !
நான்கு பேரும் கலரிங் பணிகளை நிறைவு செய்த பின் இந்த இதழுக்கான அட்டைப்படம் நமது சீனியர் ஓவியரின் கைவண்ணத்தில் தூள் கிளப்பியது ! காளியப்பா ஆர்டிஸ்ட் என்ற அந்த முதியவரே பின்னாட்களில் நமது 'கத்தி முனையில் மாடஸ்டி' ; 'மாடஸ்டி in இஸ்தான்புல்' ; 'இரும்பு மனிதன் அர்ச்சி' போன்ற லயன் இதழ்களுக்கும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்திட்டவர் ! 1984 -ல் முதன்முறையாக அவர் தீட்டிக் கொடுத்த சித்திரத்துக்கு அவர் வாங்கிட்ட கூலி ரூபாய் 60 மட்டுமே என்று சொன்னால் நம்ப முடிகிறதா என்ன ??!! இன்றைக்கும் "கொள்ளைக்காரப் பிசாசு" இதழுக்காக அவர் வரைந்த ஒரிஜினல் அட்டைப்படம் நம்மிடம் பத்திரமாக உள்ளது ! இதோ அதன் ஸ்கேன் !
முழுவண்ணத்தில் அட்டகாசமாய் வந்திட்ட இந்த இதழுக்கு "தீபாவளி வண்ண மலர்" என்ற பெயரும், ரூபாய் 1 -50 என்ற விலையும் வழங்கப்பட்டது ! விற்பனையில் தூள் கிளப்பிய இதழ்களின் பட்டியலில் பிரதானமான இடம் பிடித்த இதழ் என்பது நம் எல்லோருக்குமே இன்று தெரியும் ! வண்ணங்கள் என்பது இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு மிகவும் இலகுவாகி விட்ட சமயத்தில் , 35 ஆண்டுகளுக்கு முந்தைய அச்சுலகில் இதனை சாதித்தது எத்தனை பெரிய சங்கதி என்ற வியப்பும், மலைப்பும் என்னுள் என்றுமே தங்கிடும் ! இந்த இதழ் வெளிவந்த போதே ரசித்திருக்க வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள் இங்கிருந்தால், உங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டிடலாமே ? பின்னாட்களில் தேடித் பிடித்து இந்த இதழை வாங்கிட ; ரசித்திட முடிந்த நண்பர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் சுவையாக இருக்கும் !
See you soon folks ! Enjoy the Sunday ! ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் முன்னதாகவே !