நண்பர்களே,
வணக்கம். நவீன வெட்டியான் ஸ்கோர் செய்வாரென்று எனக்கு நம்பிக்கை இருந்தது தான் ; ஆனால் கென்யா மெகா ஆல்பத்துக்கு நிகராய் ஸ்டெர்னின் "மேற்கே...இது மெய்யடா..!"வும் பேசப்படும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை ! சமீப வரவான ஸ்டெர்னின் கதைகளின் மூன்றையுமே பொறுமையாய் கொஞ்சம் புரட்டும் போது ஒரேயொரு விஷயம் மட்டுமே பிரதானப்பட்டிருப்பது தெரிகிறது ; and அந்த ஒற்றை விஷயமானது - வாழ்க்கையைச் சொல்லும் முயற்சிக்கு கதை என்பது முக்கியமல்ல என்ற கதாசிரியரின் calculated gamble தான் ! Maybe "வழியனுப்ப வந்தவன்" அறிமுக ஆல்பத்தினில் கதைக்கென கொஞ்சமாய் அடித்தளங்கள் இருந்திருக்கலாம் ; ஒரு புது தொடருக்கு வாசகர்களைப் பரிச்சயப்படுத்திட அது எப்படியும் அவசியம் தான் ! ஆனால் ஒரு சிறு நகரம், அதன் கரடு முரடான ஜனம் ; அவர்களோடு ஸ்டெர்ன், லென்னி...என்ற template அமைத்தான பிற்பாடு தொடர்ந்துள்ள ஆல்பம் # 2 & 3-ல் கதைக்கென கிஞ்சித்தும் மெனெக்கெடவில்லை என்பது கண்கூடு ! சொல்லப் போனால் நமது ஆபீஸ் முன்னான மறியல் போராட்டத்துக்கென தலீவருக்கு நம்மாட்கள் ரெடி பண்ணியிருந்த வேப்பிலை லங்கோட்டின் அளவு கூட இராது இரு ஆல்பங்களிலுமான storyline ! "காட்டான் கூட்டம்" ஆல்பத்தினில் ஸ்டெர்ன் தனது வாசிப்பு தாகத்தின் பொருட்டு கேன்சஸ் நகர் செல்லும் ஓரிரவே மொத்தக்கதையின் பின்னணி என்றால், இந்த "மே..இ.மெ" சொல்ல விழைவதோ ஒரு பிரச்சனையினை ஒரு சமூகம் கரம்கோர்த்துக் கையாளும் விதத்தினை மட்டுமே ! இவை எல்லாமே மிகையில்லா life like நிகழ்வுகளின் சித்தரிப்புகளே தவிர்த்து ஒரு முழுமையான ஹீரோ ; அவர் வசிக்கும் மண்ணில் முளைவிடும் ஒரு சிக்கல் ; அதனை ஹீரோ தீர்க்கும் படலம் - என்ற மாமூலான templates மருந்துக்கும் கிடையாது ! அதனால் தான் இந்த லேட்டஸ்ட் ஆல்பத்தினில் கூட நம்மாள் ஸ்டெர்ன் action block-களில் கூட டம்மி பீஸாய் வலம் வந்தால் தப்பில்லை என்று கதாசிரியர் அனுமதித்துள்ளார் ! அனல் பறக்கும் துப்பாக்கிச் சண்டையின் நடுவே கூட வாளியைக் கொண்டு ஒரு சாத்து ; சம்மட்டியைக் கொண்டொரு போடு என்பதோடு நாயகரின் பங்கு நிறைவுற்றாலும் இந்த பாணியிலான கதை நகர்த்தலுக்கு பங்கமில்லை என்ற படைப்பாளிகளின் நம்பிக்கை தான் இந்தத் தொடரின் அச்சாணியே !
So துப்பாக்கிகளைத் தூக்காமலும், சில்லு மூக்குகளுக்குச் சேதாரங்கள் நிகழ்த்தாமலும், விவேக யுக்திகளைக் கையில் எடுக்காமலும், ஒரு Wild West நாயகர் தனது இருப்பினை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்று நிரூபித்திருக்கும் ஸ்டெர்ன் - நீங்கள் தந்திருக்கும் அந்தத் தேடல் லைசென்சின் பலனே ! கிராபிக் நாவல் தடத்திலும், ஜம்போவின் free flowing தடத்திலும் நமக்குப் பரிச்சயப்பட்டு நிற்கும் நாயக / நாயக பாணிகளைத் தாண்டியும் கதைகளைத் தேடிப் பிடித்துக் கூட்டியார எனக்கு நீங்கள் தந்துள்ள அந்த சுதந்திரம் இருந்திராவிடின் நிச்சயமாய் வாய்ப்பே இருந்திராது ! கிராபிக் நாவலின் தடமோ கொஞ்சம் dark ; கொஞ்சம் அழுகாச்சி என்றிருக்க, கொரோனா தந்த முகாரி ராகங்களுக்கு மத்தியில் அந்த dark பாணிகள் மையிருட்டாய்த் தென்பட்டதில் வியப்பில்லை தான் !
ஜம்போ காமிக்ஸ் !! அழுகாச்சி லேது ; கதைக்கே முக்கியத்துவம் - என்ற பாணியிலான ஜம்போ - 2018 முதலாய் இந்த one shot தேடல்களுக்கு உரம் தந்த தனித்தடம் ! (அது ஏன் - "ஜம்போ காமிக்ஸ்" என்று பெயர் ?? என்ற கேள்வி அவ்வப்போது காதில் விழுமொரு வினவல் தான் ! VRS வாங்கிப்புட்டு டாட்டா சொல்லும் நாளொன்று புலரும் போது மறக்காமல் கேளுங்கோ ; நிச்சயமாய் பதில் சொல்லுவேன் !) ஜம்போ இதுவரைக்கும் 4 சீசன்களைப் பார்த்துள்ளதை STV உபயத்தில் பட்டியலாய்ப் பார்த்தாச்சு ! ஆனால் SMASHING '70s வருகையினைத் தொடர்ந்து அடுத்த வருஷத்திலும் ஜம்போவுக்கு இடமிராது என்பதே (தற்போதைய) நிலவரம் ! So "இந்த one shot ஜம்போ கதைத்தேடல்கள் தொடரணுமா ? அல்லது இப்போதைக்கு ஓய்வெடுக்கட்டுமா ?" என்ற கேள்வியே இந்த வாரயிறுதியின் அலசலின் topic !!
ஸ்டாக்கில் உள்ள 20 ஜம்போ ஆல்பங்களை ஆபீசில் இன்றைக்கு காலையில் பார்த்த போது கலவையான சிந்தைகள் உள்ளுக்குள் !! என்ன தான் பாசமான காக்காம்மாவாக இருந்தாலுமே, தங்கம் விற்கும் விலைக்கு, தனது இளசுகளை பொன்குஞ்சுகளாய்க் கருதுவதெல்லாம் இன்றைக்கு ரெம்போவே costly ஆன ஒப்பீடாகிடக்கூடும் ! So - 4 வருஷங்களின் இந்த "ஜம்போ" முயற்சியினை ஒட்டுமொத்தமாய்ப் பார்த்த உடனே "எனக்கு அவை அத்தனையுமே ஜூப்பர் டூப்பர் ஹிட்களாய்த் தென்பட்டன !" என்றெல்லாம் அள்ளிவிட மாட்டேன் ! மாறாக, அவற்றின் குறைகள் ; பிழைகள் ; இன்னும் better ஆக செய்திருக்கலாமோ ? என்ற நினைப்புகளே மேலோங்கின !
Anyways - இதோ அந்த ரெண்டு டஜனின் பட்டியல் :
ஜம்போ - சீசன் 1 :
1.காற்றுக்கு ஏது வேலி?- இளம் டெக்ஸ்
2.ஒரு குரங்கு வேட்டை-ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஸ்ட்சன்
3.பனியில் ஓரு பிரளயம்-James Bond 007
4.Theஆக்சன் ஸ்பெசல்- Fleetway கதைத் தொகுப்பு
5.பயணங்கள் முடிவதில்லை-ஜெரெமியா
6.நிழலும் நிஜமும்- James Bond 007
ஜம்போ சீசன் 2 :
8.தனியொருவன்...Lone ரேஞ்சர்
9.சிங்கத்தின் சிறுவயதில்...இளம் டெக்ஸ்
10.லக்கி லூக்கை சுட்டது யார் ?
11.சுறாவேட்டை...James Bond 007
12.அந்தியின் ஒரு அத்தியாசம...மார்ஷல் சைக்ஸ்
13.நில்..கவனி...வேட்டையாடு...Zaroff
ஜம்போ சீசன் 3 :
14.பிரிவோம் சந்திப்போம்...கி.நா.
15.நில்..கவனி..கொல்...James Bond 007
16.தனித்திரு தணிந்திரு...கி.நா.
17.மா.து.ஜே.சலாம்...கி.நா.
07.காலவேட்டையர்...கி.நா.
18.தகிக்கும் பூமி..Lone ரேஞ்சர்
ஜம்போ சீசன் 4 :
20.ஒரு தலைவனின் கதை-..ஜெரோனீமோ
21.சித்திரமும் கொலைப்பழக்கம்..கி.நா.
22.ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்- அண்டர்டேக்கர்
23.போர் முனையில் தேவைதைகள்-கி.நா.
24.உளவும் கற்று மற- மாட்டா ஹாரி
25.மேற்கே இது மெய்யடா-ஸ்டெர்ன்
பட்டியலையும் சரி, புக்குகளையும் சரி, நிறைய நேரத்துக்கு உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ! As always - ஒவ்வொரு ஆல்பத்தின் பின்னணியிலும், ஆங்காங்கே போட நேர்ந்த மொக்கைகள் சார்ந்த நினைவுகள் 'சர்ர்ர்ர்..' என்று மின்னலாய் றெக்கை கட்டின ! நினைவுகளை சற்றே உறக்கம் கிடத்தி விட்டு, இந்த 24 இதழ்களை மூன்று பிரிவுகளாய்ப் பிரித்துப் பார்க்க முனைந்தேன் - "சூப்பர் hits " ; "சுமார் ஹிட்ஸ்" & பீப்பீ ஹிட்ஸ் !" என்ற ரீதியில் !! Of course - இந்த முயற்சியினில் நீங்களும், நானும் பல இடங்களில் முரண்படக்கூடும் தான் ; but இது இந்த வாரயிறுதியின் எனது உரத்த சிந்தனைகள் மட்டுமே என்று எடுத்துக் கொண்டீர்களெனில் வேலை சுலபமாகிடும் !
முதலில் கண்ணில்படுவது - கிட்டத்தட்ட ஒவ்வொரு சீசனிலும் இடம்பிடித்திருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 007 தான் ஜம்போவில் கோலோச்சியுள்ளார் என்ற விஷயம் ! புதுயுக ஜேம்ஸ் பாண்ட் - புதிய பாணியிலும், முழுவண்ணத்திலும் தெறிக்க விட்டிருக்கும் ஆல்பங்கள் 4 வெளியாகியுள்ளன & அவற்றுள் ஒன்று ஏற்கனவே விற்றும் தீர்ந்து விட்டது ! விற்பனைகளில் ஒரு இதழ் சாதித்துள்ளதா ? சோதித்துள்ளதா ? என்பதே ஒரு ஹிட்டின் முதல் அளவுகோல் எனும் போது 007-ன் கலர் இதழ்கள் அனைத்துமே "சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் பெரிய மெனெக்கெடல்கள் ஏதுமின்றி புகுந்து விடுகின்றன ! நம்மிடம் கைவசமுள்ள 3 இதழ்களை யாரேனும் இப்போவுமே வாங்கி வருகின்றனரா, என்பது தெரியலை ; ஆனால் வெளியான சமயத்தினில் செம சுறுசுறுப்பு காட்டிய இதழ்கள் இவை என்பது நினைவுள்ளது ! So சாகாவரம் பெற்ற இந்த சீக்ரெட் ஏஜெண்டுக்கு "ஜம்போவின் தூண்களில் # 1 !!" என்ற முத்திரையை நல்குவதில் குழப்பங்கள் லேது !
4 ஹிட்களோடு முன்னணியில் நிற்பவர் மூத்தவர் ஜேம்ஸ் எனில், கீழ்க்கண்ட stats சகிதம் நிற்கும் 'சின்னவரை' சித்தே பாருங்களேன் :
இளம் டெக்ஸ் வில்லர் !
வெளியானவை - 2 இதழ்கள் !
வெளியான இரண்டே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்தவை - 2 இதழ்கள் !
அதிலும், ஜம்போவுக்குத் துவக்கம் தந்த "காற்றுக்கென்ன வேலி?" பற்றிச் சிலாகிப்பதெனில், உங்கள் காதுகளில் தக்காளிச் சட்னி கசியும் ரேஞ்சுக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு என்னால் 'தம்' கட்டியபடியே காலட்சேபம் செய்து கொண்டே செல்ல முடியும் ! சொல்லி மாளா விற்பனையும், வரவேற்பும் பெற்ற இதழ் எதுவென்பதை ஒரு போதும் மறக்க இயலாது ! So "ஜம்போவின் தூண் # 2 " என்ற அடையாளத்தை அலட்டல் அல்லாது அள்ளி ஜோப்பியில் போட்டுக் கொள்பவர் "சின்னத் தல" - இளம் டெக்ஸ் தான் !
"சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் பொட்டு வியர்வையும் சிந்திடாது, 'ஜிலோ'வென்று அடுத்ததாய் நுழையும் இருவருமே வெட்டியான் தொழில் செய்பவர்களே ; வன்மேற்கின் பிரதிநிதிகளே ; பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகின் பிள்ளைகளே & last சீசனில் ஜம்போவுக்குள் கால்பதித்த ஆசாமிகளுமே ! Enter - 'தி அண்டர்டேக்கர்" & "ஸ்டெர்ன்" !!
"ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்" - நடப்பாண்டில் தத்தித் தடுமாறிக் கொண்டிருந்த ஜம்போவுக்கு நிமிர்ந்து நிற்கவொரு திடம் தந்ததெனில், எழுந்து நின்ற ஜம்போ சீசன் 4-க்கு கேக் மீதான ஐசிங் ஆகிப் போன பெருமை ஸ்டெர்ன் தோன்றிய "மேற்கே...இது மெய்யடா!" வுக்கு நிச்சயம் உண்டு ! In fact - மும்பை இந்தியன்களின் லேட்டஸ்ட் IPL வேட்டையைப் போல முழுசுமாய் ஊற்றிக் கொள்ளாது, ஜம்போவின் சீசன் 4-க்குத் தலை தப்பிக்க ஒரு முகாந்திரம் தந்தவையே இந்த 2 இதழ்கள் தான் ! So இந்த காமிக்ஸ் வெட்டியான்களுக்கு, collective ஆக "ஜம்போவின் தூண் # 3" என்ற அடையாளத்தையும், "சூப்பர் ஹிட்ஸ்" பட்டியலுக்குள் 2 இடங்களையும் வழங்கிடுவதில் நெருடல் இருக்கவில்லை !
அடுத்ததாய் "சூப்பர் ஹிட்ஸ்" லிஸ்டுக்குள் நுழையும் இதழ் - எக்கச்சக்க சர்ச்சைகளை ஈட்டியதொரு ஆல்பமே ! பிரவாகமெடுத்த விமர்சனங்களின் பெரும்பான்மை பாசிடிவோ, நெகடிவோ - அதனை இம்மிகூடச் சட்டையே செய்திடாமல் விற்பனை எனும் அளவுகோலில் நூற்றுக்கு முன்னூற்றி நாற்பத்தியெட்டு மதிப்பெண்கள் பெற்றது - ஜெரெமியா தொடரின் "பயணங்கள் முடிவதில்லை" தான் ! பிரமாதமான தயாரிப்புத் தரம் ; புரட்டப் புரட்ட ஓவியத் தாண்டவங்களாய் விரியும் வண்ணப் பக்கங்கள் ; ஹார்ட்கவர் - என்று வெற்றிக்குத் தேவையான ஐட்டங்கள் நிறையவே இருந்தாலும், பத்தியச் சாப்பாடு ரேஞ்சில் காரமோ, வேகமோ இன்றி கதைக்களங்கள் 'தேமே' என்றிருந்ததை அலசல்களில் வெளுத்தெடுத்து இருந்தீர்கள் ! ஆனால் வெளுக்கும் வேகத்தில், வீட்டில் திருமதிகளின் பட்டுப் புடவைகளை துவைக்க Surf Excel வாங்குவதற்குப் பதிலாகவுமே "ஜெரெமியா"வை வாங்கி வைத்தீர்களோ என்னவோ - புக்ஸ் ஆறோ, ஏழோ மாதங்களிலேயே காலியாகி விட்டிருந்தன ! (அப்புறமாய், ஆங்காங்கே புழக்கடைகளில் எத்தினி பேரின் சொக்காய்கள், திருமதியினரிடம் சிக்கிக் கிழிபட்டனவோ - தெரியலை !!) So சர்ச்சைக்குரிய இதழாய் இருந்தாலுமே, ஜம்போவின் ஒரே ஹார்ட்கவர் இதழ் என்ற கூடுதல் அடையாளத்துடன், ஜம்போவின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டுக்குள் நுழைகின்ற தொடர் "ஜெரெமியா" !
தொடர்ந்து அந்த elite பட்டியலினுள் புகும் இதழ்கள் அனைத்துமே one shots தான் ! வெவ்வேறு ஜானர்களில் இருந்தாலும், அவை அனைற்றிற்குமே பொதுவான ஒரே சமாச்சாரம் - "கதைகளின் வலு" என்பது மாத்திரமே !
**ஒரு ஓய்ந்து போன நீதிக்காவலரின் உள்ளுக்குள்ளான போராட்டத்தை காட்டியது "அந்தியின் ஒரு அத்தியாயம்" !
**அமேசானின் பரந்து விரிந்த கானகப் பின்னணியில் மிரட்டும் சித்திரங்களுடன் ஒரு ஆடுபுலியாட்டத்தைப் பார்த்தோம் - "நில்..கவனி..வேட்டையாடு" ஆல்பத்தில் !
**வன்மேற்கின் மனித முகத்தை தெறிக்கும் சித்திரங்களோடு சொல்ல முற்பட்டது "பிரிவோம்..சந்திப்போம் !"
**ஒரு தாயின் பாசப் போராட்டத்தை ஒரு சமகால யுத்த முன்னணியிலிருந்து கார்ட்டூன் பாணிச் சித்திரங்களோடு சொன்னது "மா..துஜே ஸலாம் !"
இவை நான்குமே மாஸ் ஹிட்டடித்த இதழ்கள் & ஒவ்வொன்றுமே ஒரு விதத்தில் மனித மனதின் பரிமாணங்களை அளவிட முயன்றது கண்கூடு ! So "ஜம்போவின் தூண் # 4" என்ற ஸ்டிக்கரை இந்த ரகக்கதைகளின் மீது ஒட்டுமொத்தமாய் ஒட்டிடலாம் என்பேன் !
So சூப்பர் ஹிட்ஸ் லிஸ்டினில் இடம் பிடிப்பவை 4 + 2 + 2 + 1 + 4 = 13 இதழ்கள் !!
Of course இந்த நம்பரில் உங்களில் நிறைய பேருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் தான் ; ஆனால் எனது அளவீடுகள் ரசனைகள் சார்ந்தவை மட்டுமே அல்ல எனும் போது this number of mine will stand up to scrutiny !!
*விற்பனை
*விமர்சனங்கள்
*வெளியான காலகட்டத்துக்குப் பின்புமான விற்பனை
என்பனவே எனது அளவீடுகள் ! இவை ஒவ்வொன்றிலும், மேற்படிப் 13-ம் தேறியுள்ளன !
"சுமார் ஹிட்ஸ்" பட்டியலில் இடம்பிடிக்கும் ஆல்பங்களின் சகலமுமே one shots - ஒற்றை நாயகர் LONE ரேஞ்சரைத் தவிர்த்து ! "தனியொருவன்" என்று கலரில் சீசன் 2-ல் ஆஜரான இந்த முகமூடிக்காரர் மீது நான் நிரம்பவே நம்பிக்கை கொண்டிருந்தேன் என்பது தான் நிஜம் ! இவர் நிச்சயமாய் நம் மத்தியில் ஒரு முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கை நிரம்பவே இருந்தது எனக்கு ! ஆனால் நெடும் சாகசங்களாய் இவரது கதைகள் இல்லாதது காரணமோ ; அல்லது - "ஞான் சுடும் ..பட்சே உன்னைக் காயப்படுத்தில்லா !" என்ற ஹீரோவின் அநியாய நல்லபிள்ளைத்தனம் காரணமோ தெரியலை - Lone ரேஞ்சர் எதிர்பார்த்த ஜெயத்தைத் தொடவில்லை ! 2 ஆல்பங்கள் தொகுப்புகளாய் வெளிவந்தும் - was only an average success !
சுமாராய்ப் போன மீத ஆல்பங்களின் லிஸ்ட் இதோ :
தனித்திரு...தணிந்திரு..!
ஒரு குரங்குச் சேட்டை..!
போர்முனையில் தேவதைகள் !
இதனில் last mentioned - "போர்முனையில் தேவதைகள்" உங்கள் விமர்சனங்களில் சாத்து வாங்கியிருப்பினும் - விற்பனைகளில் did very decently ! So "பீப்பீ லிஸ்ட்" பிரஜையாகிடாது - மத்திம லிஸ்டுக்குள் மண்டையினை நுழைத்துக் கொண்டுள்ளது ! Which means - 5 books in the "சுமார் லிஸ்ட்" !
இறுதியான அந்த "பீப்பீ லிஸ்ட்" முழுக்கவே one shots சமாச்சாரங்கள் தான் !
* லக்கி லூக்கைச் சுட்டது யார் ?
(கார்ட்டூன் நாயகரை கி,நா.பாணியில் பார்த்ததில் நம்மவர்கள் ஆகிப் போனார்கள் காண்டு ; இந்த இதழும் தலையில் போட்டுக்கொண்டது துண்டு !!)
*கால வேட்டையர்
( புய்ப்பங்களால் அநியாயத்துக்கு ஆளையே அமுக்கும் கதைக்களம் !!)
*சித்திரமும் கொலைப்பழக்கம்
(எனக்கு ஓ.கே,வென்று தோன்றிய கதை தான் ; ஆனால் ஓடவிட்டே சாத்து வாங்கித் தந்தது தான் பலனாகியது !)
*The ACTION ஸ்பெஷல் !
(சில புராதனங்கள் மியூசியங்களில் இருத்தலே தேவலாம் - என்ற யானைப்பாலை நீங்கள் எனக்குப் புகட்டிய இதழிது !)
*ஒரு தலைவனின் கதை!
(சில தலீவர்கள் பதுங்கு குழிகளுக்குள் இருப்பதே சாலச் சிறந்தது ! என்பதை புரிய வைத்த ஆல்பம் !)
"உளவும் கற்று மற !"
(என்னா அடி !!! ஆத்தாடியோவ் !!)
So 6 இதழ்கள் இந்த பீப்பீ ஊதிய லிஸ்ட்தனில் !
ஆக, 55% செம ஹிட்ஸ் ; 20% சுமார் ஹிட்ஸ் & 25% சொதப்பல்ஸ் என்பதே ரிப்போர்ட் கார்ட் சொல்லும் தகவல் ! நிச்சயமாய் 55 சதவிகிதம் என்பது நல்லதொரு நம்பர் தான் ; மறுப்பதற்கே இல்லை ! But மெனுவில் ஒரு நூறு ஐட்டங்கள் இருந்தாலும், அந்த நூறையுமே ஒரே சுவைக்குத் தினம் தினமும் தயாரிக்கத் தெரிந்திருக்கும் A2B போலான தேர்ச்சி தான் நமது லட்சியம் எனும் போது 55% மகிழ்வூட்டவில்லை - at least எனக்கு ! அது மாத்திரமன்றி, இந்த வெற்றியின் பின்னுள்ள 4 இதழ்கள் - ஜேம்ஸ் பாண்ட் 007 எனும் கமர்ஷியல் நாயகர் + "இளம் டெக்ஸ்" எனும் சுனாமியின் உபயம் என்பதையும் மறக்கலாகாது ! டூரிங் டாக்கீஸ் டெண்டு கொட்டாயில் இவர்களது சாகசங்களை ஒட்டியிருந்தாலுமே வெற்றி நிச்சயம் அல்லவா ? So ஒட்டுமொத்த வெற்றிக்கு இவர்களைத் தவிர்த்தான இதர கதைகளின் பங்களிப்பையும் பாரபட்சமின்றிப் பார்த்திடல் அவசியம் என்ற தோன்றுகிறது எனக்கு !
Maybe தொடரும் காலங்களின் திட்டமிடல்களில் ஜம்போவுக்கும் இடித்துப் பிடித்தாவது இடம் கிட்டிடும் பட்சத்தில், கதைத்தேர்வினில் இரட்டிப்புக் கவனம் அவசியம் என்பதும் அப்பட்டமாய்ப் புரிகிறது ! பிராங்கோ-பெல்ஜிய மனிடோ கருணை காட்டுவாராக !!
So இந்த ஜம்போ அலசலின் இறுதியினில் எனது கேள்விகள் இவையே :
1.இந்த 24 இதழ்களில் நீங்கள் வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ? (டப்ஸா பதில் சொன்னால் ஜடாமுடி ஜானதன் தொகுப்புகள் உங்கள் கனவில் ஒவ்வொரு அமாவாசைக்கும் வரும் - கபர்தார் !!)
2.இந்த ஒட்டுமொத்த ஜம்போ அனுபவத்திற்கு மார்க் போடுவதாயின் - எவ்வளவு போடுவீர்கள் ?
3.க்ளாஸிக் நாயகர்கள் (வேதாளன் & கோ,) சொல்லி வைத்து அடித்து வரும் வேளையில், ஜம்போ எனும் தேடல் மெய்யாலுமே தேவை தானா ?
4.இவர் லோன் தரப்போவதில்லை ; டிக்கிலோனா ஆடவும் வரப்போவதில்லை - ஆனால் LONE ரேஞ்சுருக்கு இன்னொருக்கா சான்ஸ் தரலாம் என்பீர்களா ?
5.இந்த 24 ஆல்ப முயற்சியில் THE BEST என்ற ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின், உங்கள் சாய்ஸ் எதுவோ ?
6.நான்கு சீசன்களுள் டாப் எது ? என்பீர்கள் ?
Before I sign out, ஒரு மகிழ்வான தகவல் : நண்பர் பழனிவேலின் குடும்பத்துக்கென நாம் இணைந்து திரட்டிய நிதி - அவரது 2 புதல்விகளின் கல்விக்கு ; மேற்படிப்புக்கு ; திருமணத்துக்கு - என்ற உதவும் விதங்களில் தேர்வு செய்யப்பட ஷேம நிதிகளில் முதலீடு செய்தாச்சு ! துவக்கம் முதலே ஒத்தாசை செய்த டாக்டர் A.K.K.ராஜா அவர்களுக்கும், முதலீட்டுக்கு வழிகாட்டிய திருப்பூர் ப்ளூபெரிக்கும், இயன்ற நிதிகளைத் தந்த அன்புள்ளங்களுக்கும், பழனியின் குடும்பத்துக்காகப் பிரார்த்தித்த நெஞ்சங்களுக்கும், நமது நன்றிகள் உரித்தாகட்டும் ! இதோ, ரொம்பச் சமீபமாய்க் கூட, அந்தப் பிள்ளைகளின் கல்விக்கென ஒவ்வொரு ஜூன் மாதத்திலும் ஒரு தொகையினை வழங்கிட நண்பர் ஒருவர் முன்வந்திருக்கிறார் ! பழனி...நீங்கள் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தினை நிரப்பிட ஒரு வாசகக்குடும்பமே தன்னால் இயன்றதைச் செய்து வருகிறது !! ஒரு தூரத்து நாளில் உங்கள் பசங்கள் அழகாய்க் கற்றுத்தேர்ந்து, வாழ்க்கையில் ஒரு அழகான இடத்தினை எட்டிப் பிடித்திடுவதை கண்டு ரசிக்க ஒரு நூறு தாய்மாமன்கள் இங்கே காத்திருப்பதை நீங்கள் மேலிருந்து தரிசிக்காமல் போக மாட்டீர்கள் ! Rest in Peace Bro !`
Bye all...see you around ! Have a fun Sunday !!
P.S : கதை சொல்லும் காமிக்ஸ் - பீன்ஸ் கொடியில் ஜாக் - 15-ம் தேதியன்று புறப்படும் !