Powered By Blogger

Friday, March 27, 2026

அப்பா...!

 நண்பர்களே,

வணக்கம்! ஓராண்டாகிறது - சீனியர் எடிட்டர் நம்மிடமிருந்து விடைபெற்று!

​2012-ல் நமது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நாள் முதலாகவே பொழுதுகள் றெக்கை கட்டிப் பறப்பது போலானதொரு உணர்வு எனக்கு சதா நேரமும் இருப்பதுண்டு தான் - ஆனாலுமே இந்த கடைசி 12 மாதங்கள் புயலாய்ப் பறந்து விட்டுள்ளன. 83 வயதைக் கடந்திருந்த நிலையில் அப்பாவுக்குப் பாக்கியிருக்கக் கூடிய பொழுதுகள் ஆண்டவனின் கொடையே என்பது புரிந்திருந்தது தான்! சிரமங்கள் பலவற்றை வாழ்க்கையில் பார்த்திருந்தவருக்குச் சிரமமின்றி விடைபெறும் யோகம் கிட்டினால் போதும் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆஸ்பத்திரி விஜயத்தின் போதும் தலைதூக்கியதை மறுக்க மாட்டேன். ஆனாலும் வேதனைகளின்றிக் கிளம்பும் நல்விதி கிட்டிய பிற்பாடுமே, அப்பா விட்டுச் சென்றுள்ள அந்த வெற்றிடம் நிரம்பவே உறுத்துகிறது! ஒரு விசாலமான மரம் வீட்டிலிருக்கும் போது, அதன் நிழல் தரும் இதம் "அதான் இருக்கில்ல" என்று 'taken for granted' ஆகிப் போய் விடுகிறது! ஆனால் ஒற்றை நாள் இரவில் அது வேரோடு சாய்ந்த பின்னே - "சுள்" என்று  வெயில் வதைக்கும் போது தான் இத்தனை காலமாய் அது அமைதியாய்த் தந்து வந்த ஆறுதலின் மெய்யான பரிமாணம் புரிந்திடும் போலும்!

அப்பா.....!! தனது 21-வது வயதிலேயே தந்தையாகப் பதவி உயர்வு வாய்த்து விட்டதாலோ என்னவோ, சினிமாக்களில் வரும் அந்தக் கறாரான, கண்டிப்பான டாடியாக ஒரு போதும் அவரால் இருக்க முடிந்திருக்கவில்லை. முதல் இரண்டு பிள்ளைகளும் பெண் குழந்தைகளாகியிருக்க, மூன்றாவதாய் பிறந்த ஆண் பிள்ளை என்ற விதத்தில் எனக்கு வீட்டிலும் சரி, அப்பாவிடமும் சரி, தூக்கலான பிரியம் கிட்டியது நிஜமே.வளரும் வயதுகளில் அப்பா சார்ந்த எனது பள்ளிக்கூட நினைவுகளில் வெகு சொற்பமான விஷயங்களே இடம் பிடித்திருக்கும் - simply becos அந்நாட்களில் அப்பா தனது பிசினஸில் ரொம்ப ரொம்ப ரொம்ப பிஸி. ஸ்கூலுக்குப் போக ரிக்ஷா காலை 8:30 மணிக்கு வீட்டுக்கு வந்து நிற்கும் போது அப்பாவின் குறட்டைச் சத்தம் தான் டாட்டா சொல்லும். ஒவ்வொரு இரவும் 2:00 மணி வாக்கிலேயே வீடு திரும்பியிருப்பவர் அடித்துப் போட்டார் போல் தூங்கிக் கொண்டிருப்பதில் வியப்பு தான் ஏது? மாசா மாசம் ரிப்போர்ட் கார்டில் அப்பாவிடம் கையெழுத்து வாங்குவதே ஒரு சாகசப் படலம் தான். தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி கையிலொரு பேனாவைத் திணித்தால், டீச்சர் கையெழுத்துப் போட்டிருக்கும் இடத்திலேயே கையெழுத்துப் போட முனைவார். "யப்பா... யப்பா... இங்க இல்ல அங்க" என்று குறுக்காலே கூவாது போனால் கதை கந்தல் தான்.

ஒவ்வொரு டிசம்பரின் அரையாண்டுத் தேர்வுகளின் விடுமுறைகளின் போதும் வீட்டோடு சென்னை கிளம்பி விடுவோம் - அப்பாவின் தலைமையில். அப்போது சென்னையில் ஏகப்பட்ட கஸ்டமர்களுக்கு காலண்டர்கள், நோட்புக் ராப்பர்கள்  என அப்பாவின் அச்சகத்திலிருந்து சப்ளை செய்து கொண்டிருப்பார்கள் என்பதால் குறைந்தபட்சமாய் ஒரு வாரமாவது மதராசப்பட்டினத்தில் டேரா போட்டிருப்போம். எக்மோரில் ரயிலிலிருந்து இறங்கி ரூமுக்குப் போன அரைமணி நேரத்திற்கெல்லாம் அப்பா கிளம்பிப் போனாரேயானால், அதிர்ஷ்டம் இருந்தால் மதியச் சாப்பாட்டு வேளைக்கு ஏதேனும் ஒரு ஹோட்டலில் பார்த்திட முடியும், இல்லாங்காட்டி இரவு 9:00 மணிக்குத் தான். அப்போதெல்லாம் பெருநகரங்களில் மட்டுமே இங்கிலீஷ் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இரவு 9 மணிக்கு ஓட்டமாய் திரும்பிடும் கையோடு என்னை அள்ளிப் போட்டுக்கொண்டு ஏதாச்சும் ஒரு தியேட்டரின் செகண்ட் ஷோவுக்கு  புறப்பட்டு விடுவோம். Star Wars, Enter the Dragon, Fist of Fury, Godzilla என்று சரமாரியாய் அந்நாட்களில் படம் பார்த்ததெல்லாமே அப்பாவுடன் தான். புத்தகங்கள் வாங்கிடவும் சென்னையில் தான் செமத்தியான வாய்ப்புகள் கிட்டிடும் எனக்கு ! சிரமங்கள் எவ்விதம் இருந்தாலும், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் கடைக்குள்ளோ ; அன்றைய கென்னெடி புக் ஸ்டோருக்குள்ளோ நுழைந்த நொடியில் கட்டுப்பாடுகள் சகலமும் காணாதே போய்விடும் ! லூசு போல நான் புக்குகளை அள்ளிக் குவிக்க, சகலத்தையும் மறுப்பின்றி வாங்கித் தந்து விடுவார்கள் ! அந்த வயதில் என்னிடமிருந்த காமிக்ஸ் + மர்ம நாவல் கலெக்ஷன் அநேகமாய் ஒரு சின்ன ஊரின் பொது நூலகத்தை விடவும் பெருசு எனலாம் !! 

ரொம்ப சீக்கிரமே பொறுப்புகளைத் தர அப்பா தயங்கியதே இல்லை. "நாடோடி ரெமி" கார்ட்டூன் சினிமா -முத்து காமிக்ஸாய் பரிமாணம் எடுத்த சமயத்தில் என்னை 13 வயதுப் பொடியனாய் அந்த முயற்சிக்குள் புகுத்தியதெல்லாம் இன்று யோசித்தாலும் மலைக்கச் செய்யும் விஷயம். அதை பிள்ளையாண்டான் மீதிருந்த நம்பிக்கை என்பதா? அல்லது ஏதேனும் சொதப்பித் தொலைத்தாலும் சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை என்பதா? சத்தியமாய் தெரிந்திருக்கவில்லை.

பள்ளிப்பருவம் முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டம் எனக்கென காத்திருந்த வேளைகளில், அப்பாவோடு ஏகமாய் உரசல்களும் உதித்தன. அவரது சகோதரர்களுடனான கூட்டு வியாபாரம் அதலபாதாளம் சென்று கொண்டிருக்க, நான் தனிக்கடை போட்டு நடத்திக் கொண்டிருந்த லயன் காமிக்ஸ் அப்பாவுக்கு மனதளவில் ஏகமாய் பூரிப்பைத் தந்திருந்தது தான். ஆனால் வெறும் பூரிப்பை கொண்டு கடன்காரர்களுக்கு வட்டி கட்ட முடியாதே?! அந்நாட்களில் சிவகாசிக்குள் முதன்முறையாக அடியெடுத்து வைத்திருந்த பேங்க் ஆப் மெஜூரா (பின்னாட்களின் ICICI) வங்கியானது - வாடகைக்கு இருந்தது - பூர்வீக வீடும் ;  பின்னே முத்து காமிக்ஸின் அலுவலகமாய் இயங்கியும் வந்த ஒரு பஜார் இலக்கில்தான். அங்கேதான் அப்பாவின் அச்சகத்தின் சகல கணக்கு வழக்குகளும்! நானுமே "நம்ம இடத்துல இருக்கிற பேங்க் ஆச்சே?! வசதியாய் போச்சு!" என்ற எண்ணத்தில் அங்கேயே "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" என்ற பெயரில் கணக்கு வைத்திருந்தேன்.முதல் இரண்டு மாதங்களது தடுமாற்றங்களுக்கு பிற்பாடு லயன் காமிக்ஸ் டாப் கியரில் ஓட்டம் எடுக்கத் துவங்க, 1984-ன் கடைசியிலெல்லாம் நம்ம கணக்கில் சதா நேரமும் ஐம்பதாயிரமாவது பணம் இருப்பதுண்டு. 40 வருடங்களுக்கு முன்பான காலகட்டத்தில் அதெல்லாம் ஒரு மன்னரின் பணயத்தொகைக்கு சமானம் !.

​அங்கே அப்பாவின் கணக்கிலோ தம்படி இராது. கழுத்தை நெரிக்கும் கடன்காரர்களுக்கு செக் போட்டு தந்திருக்க, அவற்றை மறுதினம் பாஸ் பண்ண பணம் புரட்ட இல்லாத அந்தரபல்டி எல்லாம் அடித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டதொரு சிரமமான நாளினில் அந்த பேங்கின் புண்ணியம் சேர்க்கும் மேலாளர் அப்பாவுக்கு போன் பண்ணி "பையன் அக்கவுண்ட்ல 50,000 இருக்குது சார், அதுல இருந்து மாற்றி விட்டாக்கா செக்கை பாஸ் பண்ணி விடலாமே" என்று சொல்லித் தொலைத்து விட்டார்.அடுத்த பத்தாவது நிமிடம் அப்பாவின் ஸ்கூட்டர் நம்ம புறாக்கூடு ஆபீசில் ஆஜர்."தலை போற அவசரம், ஒரு பத்தாயிரம் வேணும், அப்புறமாய் திருப்பித் தாரேன்" என்றபடியே அப்பா நிற்க, எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. சைக்கிளுக்குக் காற்றடிக்க ஆகும் நாலணா காசுக்கே கணக்கு எழுதி வைத்துக்கொண்டு நான் திரிந்த நாட்களவை. "பத்தாயிரம்" என்பதெல்லாம் ஒரு கிணற்றுக்குள் கிடக்கிறது என்று யாரேனும் சொல்லியிருந்தால், நீச்சல் தெரியாத நிலையிலும் கூட உள்ளாற குதித்திருப்பேன் அன்றைக்கு.பணம் தர மறுத்து நான் நின்ற அடுத்த கால் மணி நேரத்திற்கு, டென்ஷனான அப்பாவை முழுமையாய் தரிசிக்க முடிந்தது. 1984 முதல் 86 வரையிலான ஒன்றரை ஆண்டு காலத்தில், பணம் சார்ந்து இதுபோல் நிறையவே லடாய்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு மூழ்கும் கப்பலின் கேப்டன், புல்லையோ பூண்டையோ - எதையேனும் பற்றி, எப்படியாவது மீண்டு விடச் செய்யும் பிரயத்தனங்களே அவை என்பது பின்னாட்களில் எனக்குப் புரிந்தது. ஆனால் 17 வயதில் பிழைக்க வழி தேடிக்கொண்டிருந்தவனுக்கோ, தாட்சண்யம் பார்க்கும் பக்குவம் வாய்த்திருக்கவில்லை.

​என்னதான் ஆபீஸில் அக்னி நட்சத்திரம் பிரபுவும் கார்த்திக்குமாய் முறைத்துக் கொண்டு திரிந்தாலும், வீட்டில் முற்றிலுமாய் வேறொரு சாந்த சொரூப அவதாரில் தான் அப்பா இருப்பதுண்டு. என்னை பிராங்க்பர்ட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பியதெல்லாமே அதன் நீட்சிதான்.​1986 ஆகஸ்டில் அப்பாவின் கூட்டு வியாபாரம் பாகப்பிரிவினை கண்ட பிற்பாடு, one fine day 14.5 லட்சம் கடனோடு மட்டும் வெளியேறியிருந்த அப்பாவுக்கு what next ?என்ற கேள்விதான் பிரதானமாய் முன்நின்றது. நாமோ அந்நேரம் லயன் காமிக்ஸ், திகில், ஜூனியர் லயன், மினி லயன் என்பதெல்லாம் போதாதென முத்துக் காமிக்ஸையுமே சேர்த்து கட்டி இழுத்துக் கொண்டிருந்தோம். And தாத்தாவிடமிருந்த சிங்கிள் கலர் அச்சு இயந்திரத்தையுமே நம்மிடத்துக்குக் கொணர்ந்து 'ஜேஜே'வென ஓட்டிக் கொண்டிருந்தோம் தான். அப்பா நினைத்திருந்தால் அந்த ஜோதியில் ஐக்கியமாகி, பணிகளில் ஒரு பகுதியை பிரித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கலாம் தான். ஆனால் "அவன் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளில் நாம் மூக்கை நுழைத்தால் சரிவராது" என்று நினைத்தார்களா..? அல்லது கடந்த ஒன்றரை ஆண்டுகளின் உரசல்களின் வடுக்கள் அவரைத் தயங்கச் செய்தனவா..? அல்லது பரபரவென ஊர் ஊராய் ஓடிக்கொண்டிருந்தே பழகியவருக்கு ஒரு நிலையாய் அமர்ந்து நடத்த வேண்டிய தொழிலானது அத்தனை ஈர்ப்பாகத் தென்படவில்லையா...? நான் அறியேன். For a brief while, இங்கிலீஷில் காமிக்ஸ் போடலாம் எனத் தீர்மானித்து, "புஷ்பா சித்ரகதா" என்ற ஒரு கலர் இதழை ரெடி பண்ணச் செய்தார்கள். ஆனால் ஏன் என்று முழுசாய் நினைவில்லை, அதனை அப்புறமாய்த் தொடரவில்லை.

​அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏதேதோ திட்டமிட்டவர், திடுமென ஒரு நாள் ஒரு தீப்பெட்டி உற்பத்திக் குழுமத்தின் அச்சகப் பிரிவில் Consultant என்ற பொறுப்பில் வேலைக்கு சேர்ந்தே விட்டார். எனக்கு சொல்லி மாளா வருத்தம் தந்த நாட்களவை. ஆனால் அப்பாவோ ஏதேதோ மெகா திட்டங்களில் உற்சாகமாகவே இருந்தார்கள். Whatever his merits were, ஆட்களை எடை போடுவதோ, பண விஷயங்களில் கராறாய் இருப்பதோ - அப்பாவின் பலங்களே அல்லதான்.ஏகமாய் உழைப்பை இறைத்த போதிலும், அந்தக் குழுமத்தினர் அதற்கான பலன்களைக் கண்ணில் காட்டவே இல்லை. ஆனாலும் முகம் சுளிக்காமல், ஓராண்டிற்குப் பின் அதே புன்னகையோடே அங்கிருந்து வெளியேறிடவும் செய்தார்கள்.

​1987 முதல் 95 வரையிலான பொழுதுகள் அப்பாவின் career-ன் இருண்ட நாட்கள் எனலாம். அவரது கடன் சுமையானது நமது அச்சாணியையுமே ஆட்டிப் பார்க்கத் துவங்கியிருக்க, எனக்கும் வேறெதைப் பற்றியும் சிந்திக்க இயலா ஒரு சூழ்நிலை. சிக்கல்கள் கூடிக்கொண்டே போக, இந்த பதிப்பகம் + அச்சகம் என்ற தொழில்களானவை மாத்திரமே பிழைப்புக்குப் பற்றாதென '94 வாக்கில் மனதில் திடமாய் உறுத்தத் தொடங்கியது. தொடர்ந்த நாட்களில் ஏதேதோ சிந்தனைகளும் முயற்சிகளும் செய்தான பிற்பாடு, அச்சு இயந்திர இறக்குமதித் தொழிலினுள் புகுந்திடத் தீர்மானித்தபோதுதான் அப்பாவிடம் திரும்பவும் அந்த உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. அயல்நாடு செல்லும் வேலைகள், இங்கே பலரையும் சந்திக்க வேண்டிய பொறுப்புகள் என்றிருக்க, சந்தோஷமாய் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். அப்பாவுக்கு அயல்நாட்டுப் பயணங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல். அச்சு இயந்திரங்களைப் பார்வையிட நான் தென் கொரியா சென்றிருந்த ஒரு தருணத்தில், அங்கே தீப்பெட்டி தயாரிப்பு சார்ந்த மிஷினரி துறையிலிருந்ததொரு ஆசாமியின் பரிச்சயம் அகஸ்மாத்தாய் கிட்டியது. எனக்கோ பட்டை போட்ட குதிரை போல் - செய்துகொண்டிருக்கும் பணிகள் தவிர்த்து வேறு எதன் மீதும் பெருசாய் நாட்டங்கள் தோன்றிடுவதில்லை. ஊருக்குத் திரும்பியதொரு நாளில் அது பற்றி அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்க, ‘கண்டேன் புதுத் தொழிலை’ என்று அந்த தீப்பெட்டி தயாரிப்பு இயந்திரம் சார்ந்த துறைக்குள் முழு மூச்சாய் இறங்கி விட்டார்.

வாழ்வில் அதிர்ஷ்ட தேவதையும், காந்தி நோட்டுகளும் அப்பாவிடம் பாசமாய் புன்னகைத்த முதல் தருணம் அதுவே. 1999 வாக்கில் தென்கொரியாவில் இருந்த தீப்பெட்டி இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்தியாவுக்கான ஏஜென்சியைப் பெற்று, தீப்பெட்டிகளின் தலைநகரான சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் செம ஆர்வமாய் மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தார். வாழ்க்கையில் 60-ஐ கடக்கும் நிலையில்தான் பொருளாதார வெற்றி சாத்தியமாகிடும் என விதி தேவன் நிர்ணயம் செய்திருப்பார் போலும். அடுத்த சில பல ஆண்டுகளுக்கு மிகுந்த மகிழ்வோடு, தனிக்காட்டு ராஜாவாய், எனது மூக்கு நுழைப்புகள்  துளியுமின்றி தொழிலில் செம பிஸியாக இருந்தார்.​துவக்க காலங்களில் இழந்தவற்றை சன்னமாகவாவது ஈடு செய்திட வேண்டுமென, இயன்ற விதங்களில் எல்லாம் நமக்கு உதவிட தயங்கவில்லை. இதோ, இன்று நாம் பணியாற்றிடும் ஆபீஸின் மாடியினை முழுசாக உருவாக்கித் தந்ததே சீனியர் எடிட்டர் தான்.இன்று நமது டிசைனிங் செக்ஷனும் சரி, விசாலமான புத்தகக் கிட்டங்கியும் சரி, ஒரே இடத்தில் சாத்தியமாகி இருப்பதற்கு அப்பாவின் முயற்சிகளே காரணம்.

ரத்த நாளங்களில் அடைப்பு, அவசரமாய் சென்னை அப்போலோவில் பை-பாஸ் அறுவை சிகிச்சை என்பனவெல்லாம் 2004 கண்ணில் காட்டிய எதிர்பாராத இக்கட்டுகள். அந்நாட்களில் எல்லாம் நம்ம குடும்ப டாக்டரைத் தாண்டி துறை சார்ந்த நிபுணர்களைப் பார்ப்பதெல்லாமே பரிச்சயமற்ற சமாச்சாரங்கள் .'உங்க அப்பாவுக்கு இதயத்துல ஏதோ பிரச்சனை இருக்கா மாதிரி தோணுது, மாத்திரை தந்திருக்கேன், ரெண்டு மாசத்துல பார்க்கலாம்' என்று பேமிலி டாக்டர் சொன்னபோது, ஏனோ எனக்கு மட்டும் உள்ளுக்குள் நெருடியது. 'அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்' என்று அடம்பிடித்த அப்பாவை, "காலையிலே போய் சென்னையில் ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்த்துவிட்டு - மாலை ரயிலிலேயே ஊருக்குத் திரும்பிடலாம்" என்று தடிப்போடாத குறையாய் அழைத்துப்போனேன்.​அந்நாட்களில் என்னவென்றே தெரியாத ஸ்ட்ரெஸ் டெஸ்ட், ஆன்ஜியோகிராம் இத்யாதி இத்யாதி என்று ஏதேதோ சொன்னார்கள். பேந்தப் பேந்த முழித்தப்படியே நான் நிற்க, சென்னை MIOT மருத்துவமனையில் ஆன்ஜியோ பார்க்க அப்பாவை ஒரு வீல் சேரில் அமர்த்தி இட்டுப்போனார்கள்.கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த டாக்டர், 'இதயத்தில் ஐந்து அடைப்புகள் உள்ளன, அதில் ஒன்று 95% block, உடனடியாக பை-பாஸ் சர்ஜரி பண்ணுவது அவசியம். எங்கே பண்ணப்போறீங்க?என்பதை மட்டும் தீர்மானிச்சுக்கோங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். திகைத்துப் போய் நின்றவன், 'டாக்டர் இதை அப்பாகிட்ட உடனே சொல்லிட வேண்டாம்' என்று விண்ணப்பம் வைக்க, 'நோ நோ, அவருக்குத்தான் முதலில் சொன்னோம், அவர் தைரியமா இருக்கார் பாருங்க' என்றார். தொடர்ந்த நாட்களில் நவீன மருத்துவத்தின் மகிமையும், மன வலிமை கொண்டதொரு மனிதரின் எல்லைகளும் கைகோர்க்கும்போது நிகழும் அதிசயங்களை upclose இருந்து பார்க்க இயன்றது. அடுத்த 25 நாட்களில் சென்னை அப்போலோவில் அப்பாவுடன் துணைக்கு இருந்த பொழுதுகளில் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தைக் கண்முன்னே காண முடிந்தது. மரணத்தின் வாசலில் நின்றவரை திறமையான டாக்டர்கள் மீட்டுத் தந்த மாயாஜாலமும் நிகழ்ந்தது.அதன் பின்பான நாட்களில், போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் ஜீப்பில் உற்சாகமாய் ஏறும் வடிவேலின் அதே உத்வேகத்துடன் ஏதேதோ காரணங்களுக்காக நிகழ்ந்த ஆபரேஷன்களை அப்பா சந்தித்தார்.

2013 முதலாய் அப்பாவின் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் புலர்ந்தது என்று சொல்லலாம். அது வேறொன்றும் கிடையாது, நமது மறுவருகையும் இந்த blog-ன் உதயம் சார்ந்த மகிழ்வும் ஏற்படுத்தித் தந்திருந்த மாற்றங்கள்தான். கனவாய் மட்டுமே இருந்து வந்த தரம் ஒற்றை நாளில் நமது இதழ்களில் சாத்தியமே என்பதைக் காண இயன்ற மகிழ்வு  ஒரு பக்கம் எனில், இத்தனை காலமாய் முகமற்ற பிம்பங்களாய் மட்டுமே இருந்து வந்த வாசகர்களோடு ஒற்றை நொடியில் பேசிப் பழகி உரையாடி மகிழக் கிட்டிய வாய்ப்பு இன்னொரு பக்கம்.வாராவாரம் நான் சாமத்தில் எழுதத் துவங்கிய பதிவுகளை நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களோ இல்லையோ, கண் விழித்திருந்து வாசிக்கக் காத்திருந்த முதல் ஜீவன் அப்பாதான். நடுச்சாமத்தைத் தாண்டிய வேளைகளிலும் போன் பண்ணி, 'பிளாக் என்னாச்சு கண்ணா?' என்று வினவிய நாட்களுக்கு கணக்கே இராது.உங்களது ஒவ்வொரு பின்னூட்டம், ஒவ்வொரு கும்மி, ஒவ்வொரு பஞ்சாயத்து, ஒவ்வொரு மூ.ச வைபவம் அப்பாவுக்கு அத்துப்படி. தடிமாடு போல நான் அடுத்த பணிகளுக்குள் புகுந்திருப்பேன், ஆனால் அப்பாவோ அந்தந்தப் பதிவுகளின் துள்ளல்களிலும் எள்ளல்களிலும் இருந்து வெளிவந்திருக்க மாட்டார்.

​புத்தக விழாக்களில் உங்களைச் சந்திப்பது என்பது அப்பாவின் வாழ்க்கை அத்தியாயங்களின் உச்சபட்ச highlights என்பதில் துளியும் ஐயமிராது. எந்தச் சந்தில் எந்தச் சாத்து காத்திருக்கிறதோ என்ற கேள்வியோடே வலம் வருபவன் அடியேன் எனும்போது, அப்பாவுக்குச் சாத்தியமாகிடும் அந்த 1000% குதூகலமெல்லாம் நமக்கு ஏது? அதிலும் கருணையானந்தம் அங்கிளோடு ஈரோட்டுக்கு வரத் தொடங்கியது முதலாய் அப்பாவின் ஆயுளில் ஒரு தசாப்தமாவது விருத்தி நேர்ந்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். காரில் கிளம்பி வந்து ஹோட்டலில் தங்கிவிட்டு புத்தக விழாவை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, மறுநாள் காலையில் அரங்கில் உங்களையெல்லாம் சந்திப்பதென்பது அவரது ஆன்மாவோடு பதிந்து போன சந்தோஷப் பொழுதுகள். ஏக வேளையில் மூணு ஆபரேஷன்களைச் செய்திருந்த 2016 / 2017-ல் துணைக்கு அம்மாவையும் அழைத்துக் கொண்டு ஈரோட்டுக்கு வந்திருந்த வேளையினை இன்று நினைவுகளில் அசைபோடும்போது கண்கள் வியர்ப்பதென்னவோ நிஜமே.

And முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கென 2023-ல் ஈரோட்டில் நீங்கள் செய்திருந்த தடபுடல்கள் முற்றிலும் வேறொரு உச்சத்துக்கு அப்பாவை இட்டுச் சென்றதைக் காண முடிந்தது. அந்தக் குறும்படங்கள், 'இரும்புக்கைச் சிற்பப் பரிசு, ராட்சச கேக் என்று நாள் முழுக்க அப்பாவுக்குக் கிட்டிய மரியாதைகளும் மனநிறைவும் விண்ணுலகில் கூட மறந்திருக்காது. Thanks ever so much folks!

2023-ல் அம்மாவின் மறைவுக்குப் பின்னும் தைரியமாய் இருந்தவர், 2025-ன் பிப்ரவரி முதலே இறுதி அத்தியாயத்தைத் தொட்டிருப்பதை உணர்ந்துவிட்டார். கடைசி நாட்களில் அவரது தலையணையைச் சுற்றி இறைந்து கிடந்தவை நமது இதழ்கள் மட்டுமே. பற்றாக்குறைக்கு உலகத்தில் உள்ள அத்தனை தமிழ்ச் சங்கங்களின் விலாசங்களும்தான்.ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த தருணங்களில் கூட அவர்களுக்கெல்லாம் செல்போனில் இருந்து மெயில் அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதெல்லாம் பின்னே அவரது செல்போனை கையில் எடுத்த போதுதான் தெரிய வந்தது.

​இதோ, இன்றோடு ஓராண்டாகிவிட்டது - அப்பா விடைபெற்று. And நமது ஒவ்வொரு இதழுக்குமான முதல் வாசகர் நிரந்தரமாய் மிஸ்ஸிங். உலகம் எப்போதும் போலவே சுழன்று கொண்டுதான் இருக்கிறது ; வேளாவேளைக்கு பசியில் வயிறு உருமுவதுமே இயல்பாகவே தொடர்கிறது : யாருக்காகவும் எதுவும் இந்த புவியில் நில்லாது என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது.ஆனால் அப்பா விட்டுச் சென்றுள்ள ஓர் வெற்றிடம்தான் சூன்யமாகவே தொடர்கிறது. இங்கே ஒரு தீரா வலி என்பது - இருந்த வரையிலும் பெருசாய் கிடைத்திராத அங்கீகாரமும், பாராட்டுகளும் மரணத்துக்குப் பின்னே சமூக வலைத்தளங்களில் பிரவாகம் எடுத்ததைக் கண்ட போதுதான். முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டின் தருணத்திலோ அல்லது அப்பாவின் 80-வது அகவையின் போதோ, இந்தப்  பாராட்டுகளை மக்கள் குவித்திருக்கும் பட்சத்தில் ரசித்திட அப்பா இருந்திருப்பாரே! என்ற ஆதங்கம் தான் இன்றளவில் எனக்கு!

வாழ்க்கையில் என்றைக்குமே எனது தொழில் சார்ந்த பாதை வேறாகவே இருந்து வந்துள்ளது ! கனவுகளை ஆராதிப்பது அப்பா ; கனவுகள் மாத்திரமே சோறு போட்டிடாது என்பவன் நான் ! So நிறைய விஷயங்களில் முரண்பட்டுள்ளோம்  தான் ! நமது காமிக்ஸ் முயற்சிகளில் கூட டன்கணக்கில் யோசனைகளை சீனியர் எடிட்டர் சொல்லியிருப்பார் தான் ; ஆனால் "நடைமுறை சாத்தியம்" என்ற அளவுகோலில் அவை சொதப்பும் போது  ஓரம்கட்டியிருப்பேன் ! இருந்தாலும் அப்பா மனம் தளர்ந்த நாளே கிடையாது ! விடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்கூட ஒரு நெடும் மின்னஞ்சலில் தனது எண்ணங்களை பகிர்ந்திருந்தது தான் highlight ! தனது பரிந்துரைகளை ஏற்க முடியாது போவதன் காரணங்களை நான் விளக்கும் போது வருத்தமே இன்றி ஏற்றும் கொள்வார் ! Always sporting.....always genial !! அது தான் அப்பா !

சரி ரைட்டு... விண்ணுலகில் கொண்டாடிடும் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்பா! நமது நாயகர்களின் பிதாமகர்கள் உங்களைக் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்ல வந்திருப்பார்கள் என்றும் நம்புவேன். அவர்கள் அத்தனை பேரையும் நம் சார்பில் நலம் விசாரிக்கத் தவறாதீர்கள். Have a great birthday pa 🙏

You will be with us forever !! 


Saturday, March 14, 2026

மறுக்கா கேள்விகள் ..!

 நண்பர்களே 

வணக்கம்.GEN Z சந்தாவென்றெல்லாம் போடத் தயாரான பிற்பாடு - பழைய பஞ்சாங்கமாய் இருக்கப்படாது அல்லவா? So கடந்த பதிவு முதலாய் AI அண்ணாத்தையிடம் blog-க்கான மேட்டரைச் சொற்பொழிவாய் ஆற்றி வருகிறேன்! And நொடிப் பொழுதில் பிள்ளையாண்டன் அதனைத் தமிழில் டைப் அடித்துத் தள்ளி விடுகிறது! என்ன ஒரே சிக்கல் - நான் "ஆளே இல்லாத கடையிலே ராகிமால்ட் ஆத்துவானேன்?" என்று சொல்லி வைத்தால், அதுபாட்டுக்கு "அஞ்சரைக்குள்ள வண்டியிலே பஞ்சராகாதுனே!" என்ற ரேஞ்சுக்கு எதையாவது ஏடாகூடமாய் எழுதியும் வைக்கிறது! So ரொம்பவே சூதானமாய் இந்த AI கூட அன்னம் தண்ணி புழங்க வேணும் போலும்!  

​ரைட்டு... மார்ச்சின் நடுவாக்கில் இருக்கிறோம்! And சந்தேகமேயின்றி இது சற்றே lowkey மாதமே! டெக்ஸ் சிங்கிள் ஆல்பம்; சமீப வரவு சகுவாரோவின் சிங்கிள்  ஆல்பம்......and "மேற்கோ போ மவீரா" எனும் சிறுகதைகளின் collage என்ற கூட்டணியில் கூரையைப் பற்ற வைக்கும் firepower நிச்சயமாக ஒரு மிடறு குறைச்சலே தான்! ஆனால் ரெகுலர் தடத்தின் மொத்த இதழ்களின் எண்ணிக்கையே 30 தான் எனும் போது, எல்லா மாதங்களிலும் ஏவுகணைத் தாக்குதல் என்பது சிரமமாகிப் போகிறது! So இந்த வாரப் பதிவுமே அது சார்ந்த கேள்வி படலமே! 

And எப்போதும் போலவே கேள்விகளுக்கு முன்பாய் ஒரு disclaimer! "இதே கேள்விகளை ரெண்டு வருஷத்துக்கு முன்னமே கேட்டியேல்லே? மறுக்காலே எதுக்கு?" என்ற கண்சிவத்தல்கள் நடக்கக்கூடும் என்ற பயமே இந்த முன்ஜாக்கிரதை முத்துப்பாண்டி அவதாரின் பின்னணி !! ரசனை சார்ந்த சமாச்சாரங்களில் டெக்ஸ் வில்லரைத் தாண்டி, லக்கி லூக்கைத் தாண்டி, வேறு  ​எதுவுமே சாஸ்வதமல்ல என்பது கண்கூடு !! So ஓடிக்கொண்டேயிருக்கும் நதி நீரைப் போல நமது ரசனைகளும், நகர்ந்து கொண்டேயிருக்கவும் வாய்ப்புண்டு தானே? சில ஆண்டுகளுக்கு முன்னமே :OK" என்றோ ; "not okay" என்றோ; தென்பட்டிருக்கக்கூடிய சமாச்சாரங்களின் தற்போதைய நிலவரம் அதுவே தானா? அல்லது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா? என்பதை உறுதி செய்து கொள்ளவே இந்த repeat முயற்சி!  

நாம் இப்போது இருப்பது என்னவோ வருஷத்தின் முதல் குவார்ட்டரில் தான்; ஆனால் வருஷத்தின் இறுதிக் குவார்ட்டரில் அறிவிக்க வேண்டிய 2027 சார்ந்த திட்டமிடல்கள் ஏற்கனவே துவங்கியாச்சு! ஏகப்பட்ட பதிப்பகங்கள், தொடர்கள் என்னும்போது ஒவ்வொருவரால் எல்லோரிடமும் சாவகாசமாகப் பேசி, கதைத் தேர்வுகளைச் செய்து; கோப்புகளை வரவழைக்க எக்கச்சக்கமாய் நேரம் பிடித்து விடுகிறது. அதிலும் மார்ச் முதல் ஜூன் முடிய தேசம் தேசமாய் புத்தக விழாக்கள் நடந்திடுவதால், அங்குமிங்கும் பறந்து செல்பவர்களிடமிருந்து பதில்கள் வாங்கிட நமக்கு நிறையவே சுஷின் தேவை ! அதனால் தான் சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டியுள்ளது!  

அடுத்தாண்டின் அட்டவணையில் யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள், யாரைப் பார்த்தால் லைட்டாக அயர்ச்சியாக உள்ளதென்று தெரிந்து கொள்ளவே இந்த முயற்சி! Moreso, ஆன்லைன் கொள்முதல்களின் சமீப மாதங்களின் நம்பர்களைப் பார்க்கும்போது ஒருவித pattern புலனாகிறது!  அதனை உங்களிடமிருந்தே உறுதி செய்து கொண்டால் நலமென்று நினைத்தேன். So here goes:  

​1. கார்ட்டூன்கள் in general:

லக்கி லூக், சிக் பில் & ப்ளூ கோட் தான் தற்போதைய கார்ட்டூன் பிரதிநிதிகள்! எனது முதல் கேள்வி பொதுவானது - நாயகர் சார்ந்ததல்ல ! 

ஒரு மாதத்து அட்டவணையில் கார்ட்டூன் இதழ்கள் இடம் பிடித்திருக்கும் பட்சத்தில், உங்களது வாசிப்பில் அது பிடித்திடக்கூடிய இடம் எதுவோ ? 

(a) முதலிடம்

(b) கடைசி இடம்

(c) அவை வாங்கவே மாட்டேன்.  

​2. ப்ளூகோட்ஸ் பட்டாளம் ?

(a) ஒற்றை ஸ்லாட்டுக்கு ஓகே.

(b) இப்போதெல்லாம் இந்த அணி  ஒரு உற்சாகத்தை வரவழைப்பதில்லை!  போதுமே !

​3. டிடெக்டிவ் ரூபின்  ?

(a) கேள்வியே தேவையில்லை! நிச்சயமான தேர்வாக இருக்க வேண்டும்.

(b) ம்... ஏனோ தெரியலை. பெருசாய் ரசிக்கவில்லை!  

​4. டேங்கோ ?

(a) காலத்தின் கட்டாயம்! Yes for sure !!

(b) சுமாராகவே ரசிக்குது! அத்தனை fire ஆக இல்லை!  

​5. ரிப்போர்டர் ஜானி?

(a) வருங்கால ஜனாதிபதி வாழ்க! வரட்டும் வரட்டும்!

(b) சத்தியமா முடியலே..! ரொம்பவே ஜவ்வாகிப் போச்சு!  

​6. ஸகுவாரோ...?

(a) களமே இப்போ தான் சூடு பிடிக்குது! Carry on!

(b) பெருசாய் ஈர்ப்பில்லை..!  

​7. மாடஸ்டி பிளைசி ?

(a) பில்டப் பாதி..பீலா மீதி ! மிடிலேப்பா ...மிடிலே ...!

(b) இளவரசி இல்லாங்காட்டி கதை கந்தல்..  

​8. XIII...?

(a) டெபினிட்லி, சர்வ நிச்சயமான வாசிப்பு!

(b) பெருங்காய டப்பா..! எஞ்சியிருப்பது வாசனை தான்!  

9. ஸ்டெர்ன் ?

(a) ரொம்பவே அரிதான முத்து! நிச்சயம் தேவை.

(b) ஏனோ எனக்கு ஒட்டவே மாட்டேன்கிறார்!  

​10. கிராபிக் நாவல்கள்:

(a) வித்தியாசமான வாசிப்புக் களத்திற்கு வீரியம் ஊட்டுவதே கி.நா.க்கள் தான்! A must!

(b) கோடி ரூபாய் கொடுத்தாலும் எனக்குப் படிக்க முடியறதில்லே! வேணாம் சாமி!  

​இவையே எனக்குக் கேட்க வேண்டிய கேள்விகள் folks! ஏற்கனவே கணிசமாய் வடிகட்டின பிற்பாடே 2026-ன் அட்டவணையில் நாயக/நாயகியர் இடம் பிடித்துள்ளனர் ! So இவர்களுள் மதில் மேல் பூனை கேசாய் யாரேனும் உள்ளனரா? அல்லது இவர்களெல்லாம் சறுக்கல்களுக்கு அப்பாற்பட்டவர்களா இன்றைய சூழலில்? என்பதே நான் தெரிந்து கொள்ள விழைவது!  

​A request please : ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு நிமிடச் சிந்தனையைத் தந்த பிற்பாடு பதில் சொல்லுங்கள்! நாயக/நாயகியரின் சமீப ஆல்பங்களைப் வாங்கி / படித்து விட்டீர்களா? அல்லது அவை தொங்கலில்  உள்ளனவா ? என்பதை சற்றே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்! அதற்கேற்ப உங்களது பதில்கள் அமையட்டுமே ப்ளீஸ் ? 

​அதே போல - முதல் வாசிப்புக்கே நேரமின்றிப்  போய் வரும் இந்தக் காலகட்டத்தில், மறுவாசிப்பினை ஊக்குவிக்கும் நாயக நாயகியர் யாரேனும் இருந்தால் அதனையும் highlight செய்து தெரிவித்துவிடுங்களேன் - please ?  

​டெக்ஸ் ; லக்கி லூக்  ; டின்டின் ; சிக் பில்; டைகர்; மார்ட்டின் மிஸ்டரி; போன்ற நாயகர்களெல்லாம் கேள்விகளுக்கே அவசியமில்லாத ஜாம்பவான்கள் என்பதால் அவர்கள் ராஜ்யசபா கோட்டாவில் டைரக்டாக எம்.பி.க்கள் ஆகிவிடுகின்றனர். தேர்தல்களில் நின்று பிரச்சாரம் பண்ணும் தேவைகள் அவர்களுக்கு லேது !

அதே போல க்ளாஸிக் நாயகப் பெருமக்கள் யாருமே வீதி வீதியாய் கொடி  பிடித்துப் போய் அண்டா, குண்டாவெல்லாம் தந்து வாக்கு சேகரிக்கவும் போவதில்லை !  அவர்களது கீர்த்திகளே அவர்களது கேடயங்களாகிடும் !. So they are exempt too!  

​சொல்லுங்கள் மக்களே - மேற்படி 10 கேள்விகளுக்குப் பதில்களை ! 

Have a great weekend folks ! See you around... Bye for now !  

And just a few reminders :

தற்சமயம் பிரத்தியேக முன்பதிவுகள் இவற்றுக்கு ஓடிக்கொண்டுள்ளன ! இன்னமும் முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் செய்திடலாம் - ப்ளீஸ் ? 



  


Sunday, March 01, 2026

காலியாய் ஒரு கடைவாய் !

 நண்பர்களே,

வணக்கம். சின்னதாக ஒரு குவிஸ்  போட்டியோடு ஆரம்பிக்கலாங்களா?

​Quiz No.1 :

எதிர்பாராமல் வந்து எக்குத்தப்பான வெற்றிகளைக் குவித்திருக்கும் நமது பல இதழ்களின் மத்தியில் என்ன ஒற்றுமை என்பீர்களோ?

A) அதிரிபுதிரி அட்டைப்படங்கள்
B) அட்டகாச கதைக்களங்கள்
C) கடைவாய்க்குக் கட்டைவிரல்

​Quiz No.2:

எதிர்பார்த்திருந்த பல இதழ்கள் எசகுபிசகாய் கடைசி நொடியில் காணாமல் போனதன் பின்னணியில் என்ன ஒற்றுமை என்பீர்களோ?

A) கதைகளில் குழப்பங்கள்
B) தட்டையான மொழிபெயர்ப்பு
C) ஒரு வளர்ந்த மாடனின் சோம்பல்

​மேற்படி இரண்டு குவிஸ்களுக்கும் நீங்கள்  Option A பதிலினை டிக் செய்திருந்தால், உங்களது செலவிலேயே உங்களது வீட்டுக்குக் கிட்டக்க 'காமிக்ஸ் ஏரி' என்றதொரு சிலை வைத்துவிட்டு பில்லைத் தலீவரின் சங்கத்திற்கு அனுப்பி விடுங்கள்.

​Option B பதிலை டிக் செய்தோராயிருந்தால் - உங்கள் ஏரியாவின் பிரதான சாலையில் 'காமிக்ஸ் கடல்' என்றொரு சிலை வைத்துக்கொண்டு அதற்கான பில்லை இளவரசரிடம் அனுப்பி விடுங்கள்.

​அதே சமயம் இரண்டு வினாக்களுக்குமே  Option C தான் உங்களது பதிலாக இருந்திருக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்பாய் அரசாங்கத்திடம் மனு போட்டு மெரினா பீச்சில் லை-னா-ய் சிலைகள் வைக்கப் பெர்மிஷன் வாங்கிப்புட்டு 'காமிக்ஸ் சமுத்திரம்' என்று வரிசைக்குச் சிலைகளை நாமளே வச்சுப்புடலாம். நம்ம காமிக்ஸ்களின் பின்னணியைக் கரைத்துக் குடித்த விற்பன்னர்கள் என காலம் உங்களைச் சிலாகிக்கும்!

'மேட்டருக்கு வா மேன்' என்கிறீர்களா? வந்துவிட்டால் போச்சு. Becos இந்த வாரம் சொல்லவேண்டியிருக்கும் இரண்டு சமாச்சாரங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை and அந்த இரண்டுமே மேற்படி இரண்டு கேள்விகளோடும் தொடர்பும் கொண்டவை.

கதை ஆரம்பிச்சதே இந்த வாரத்தின் துவக்கத்தில் தான். மார்ச்சுக்கான டெக்ஸ்  சாகசம், 'சகுவாரோ' அதிரடி மற்றும் Gen-Z-ன் குட்டி புக் என மூன்றுமே ஜல்தியாய் ரெடியாகி இருந்தன. கலரிலான 'புதைகுழிப் பூக்கள்' மட்டுமே என் மேஜையில் இருக்க, அதனையும் சட்டுப்புட்டென்று முடித்துவிட்டால் "பிப்ரவரியில் மார்ச்" எனப் பீற்றிக்கொள்ள எல்லாமே தயாராக நின்றது.வழக்கமாய் இது போன்ற தருணங்களில் மொழிபெயர்ப்பில் மொக்கை போடல்கள் தலைதூக்கி விடுவது வாடிக்கை and அவற்றைச் செப்பனிடும் நோவை ஒப்பாரியாக நான் இறக்கி வைப்பேன். ஆனால் இம்முறையோ Ms.சுகன்யாவின் மொழியாக்கத்தில்  no complaints at all....செமையாகவே இருந்தது. ஆகச் சடுதியில் பணிகளை முடித்துவிடலாம் என்று வேலைக்குள் புகுந்தபோதுதான் கதையின் கட்டமைப்பிலேயே சில இடர்கள் இருப்பது தெரிய வந்தது. கதையின் புரிதலில் நிறையவே ஓட்டைகளும் ஆங்காங்கே கண்ணில் பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாய் 'என்னமோ நடக்கப்போகுது, ஏதோ சம்பவம் காத்திருக்குது' என்று பக்கங்களைப் புரட்டிக்கொண்டே போனால் முற்றுப்புள்ளி போட்டுவிட்டு கதாசிரியர் கிளம்பியே விட்டார்.எனக்கு இதனை எவ்விதம் எடுத்துக்கொள்வதென்றே புரியவில்லை - becos டெக்ஸும் ஒற்றை சிங்கிள் ஆல்பத்தில் மட்டுமே களம் காணும் ஒரு மாதத்தில் ரெகுலர் கலர் இதழானது தட்டையாக அமைந்து போனால், அம்மாதத்து ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவமே உதை வாங்கிடுமே என்ற பயம் அடிவயிற்றில் பந்தாய் சுருண்டது.

​இந்த ஆல்பத்தினை நான் தேர்வு செய்ததே ஒரு தனிக்கதை. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நமது ரேடாரில் இருந்து வந்த போதிலும் போடலாமா? வேணாமா? என்ற குழப்பத்திலேயே வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சரி, இங்கிலீஷ் மொழிபெயர்ப்பையாவது பண்ணி வாங்கலாம் என்றபடிக்கு நமது கோவை எழுத்தாளருக்கு அனுப்பி இருந்தேன். அவர்களோ 'இது முழுக்க முழுக்க மகளிர் ஒன்லி கதையாக உள்ளது, வித்தியாசமாகவே உள்ளது ஜி' என்று அபிப்பிராயப்பட்டிருந்தார்கள்.அடடே! பொதுவாய் டாக்புல் அண்ட் கிட் ஆர்டின் கூத்துகளைத் தவிர்த்த வேறு எந்தக் கதைக்குமே சிலாகித்துக்கொள்ளாதவர், இந்தக் கதையைப் பாராட்டியுள்ளாரே என்ற மகிழ்வில் சட்டுப்புட்டென்று உரிமைகளை வாங்கிப் போட்டோம் and 2026-ன் அட்டவணைக்குள்ளும் நுழைத்தும் விட்டாச்சு. இந்த பின்னணியில் தான் போன வாரம் முதலாய் கபாலத்தைச் சொரிந்துகொண்டிருந்தேன்.

​ரைட்டு, இதனைச் செப்பனிட கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணிட அவகாசம் கணிசமாகவே தேவைப்படும் ; நின்ற நிற்பில் இது வேலைக்கு ஆகாது என்று தலைக்குள் தீர்மானமான நொடியில் இந்த ஸ்லாட்டில் வேறு எதை நுழைப்பது என்ற குழப்பம் குடிகொண்டது.​டின் டின் இன்னும் கோப்புகள் அப்ரூவல் ஆகி இருக்கவில்லை. இளம் டைகர் ஆல்பத்திலோ வேலையே துவங்கி இருக்கவில்லை. 'குருதியின் கூலி' பைல்கள் நேற்றைக்குத் தான் வரவே செய்திருந்தன. 'ராபினின்' இரண்டு பாகத் திரில்லரிலோ பணிகள் கால்வாசி தான் முடிந்திருந்தது.So, திரும்பிய திசையெல்லாம் இடர்கள் மட்டுமே தென்பட்டன. ஏதாச்சும் மொழிபெயர்ப்பு கண்டு ரெடியாக இருந்தால் அதை அப்படியே தூக்கி இந்த ஸ்லாட்டில் நுழைத்து விடலாமே என்று பறக்கப் பறக்கப் பார்த்தால் இந்த 200 ரூபாய் விலைக்கு நியாயம் செய்யும் ஆல்பமாய் எதையுமே காணோம். தளராமல் பீரோவை தலைகீழாய் உருட்டியபோது பகீரென்று முன் நின்றதுதான் 'மேற்கே போ மாவீரா'.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னமே ரூபாய் 250 விலையில் வருவதாக இருந்த ஒரு மைல்கல் இதழ் இது என்பது 'பச்சக்' என நினைவுக்கு வந்தது. பிராங்கோ-பெல்ஜியப் படைப்புலகின் ஒரு வண்டி சமகாலப் படைப்பாளிகள் கரம் கோர்த்து இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதும் உரைத்தது.​வன்மேற்கின் ரத்தக்களரியான பரிணாம வளர்ச்சியை ஒவ்வொரு படைப்பாளி டீமும் சின்னச் சின்னக் கதைகளாய் உருவாக்கி, ஒரு 200+ வருட டைம்லைனுக்குள் கதையை நகர்த்தியிருப்பார்கள். ஒரு தங்கக் கடிகாரம் மாத்திரமே அத்தனை சிறுகதைகளிலும் இடம்பிடித்திட, அது ஒவ்வொரு காலகட்டத்தையுமாய் பார்த்திடும் ரகளைகளை, ரத்த வெள்ளங்களைத் தொகுத்திருப்பர் இந்த ஆல்பத்தில்.இந்த இதழை ஒரிஜினலாய்  அறிவித்திருந்த சமயத்தில் கருணையானந்தம் அங்கிளிடம் மொழிபெயர்த்து வாங்கி டைப்செட்  செய்தும் ரெடியாக்கி இருந்தோம். ஆனால் ரொம்பவே தட்டையான மொழிபெயர்ப்பில் ஒருவித டாக்குமெண்டரி  படம் பார்த்த உணர்வே எனக்கு அன்றைக்கு மேலெழுந்ததால், 'மேற்கே போ மாவீரா'வை 'பரணுக்கு போ பையா' என்றே சொல்ல வைத்தது.But இந்த நொடியில் ஆபத்பாந்தவனாய்த் தென்பட்ட வீரனைக் கையில் எடுத்து பட்டி டிங்கரிங் பார்த்தால் வேலை ஆகிடுமா? என்ற கேள்வியோடு வேகவேகமாய் உட்புகுந்தேன். 

Nopes, கிட்டத்தட்ட 60 சதவீதத்தையாவது முழுதுமாய் மாற்றியெழுதினால் தவிர இந்த கதை - கதைக்கு ஆகாது என்பது புலப்பட்டது.​அப்புறம் என்ன? அடுத்த இரண்டு நாட்களுக்கு மறைகழன்ற மாங்காய் மண்டையனைப் போல் விடிய விடிய பேனாவும் கையுமாய்ப் பணி செய்து கிடந்தேன். ஒருவழியாய் முதல் 60 பக்கங்களை முழுக்கவே மாற்றியெழுதிய பிற்பாடு தொடர்ந்து வரும் 40+ பக்கங்களை ரிப்பேர் பண்ணத் துவங்கினால், அடிப்படையிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பிலேயே கணிசமான சொதப்பல்களும் இருப்பது புரிய வந்தது. இன்றைக்கு அவற்றையெல்லாம் சரிபார்க்க கூகிளின் சகாயம் சாத்தியப்படுவதால் இன்றைக்கு எந்த ஒரு மொழியாக இருந்தாலும்  கூகிள்  மற்றும் AI கருவிகள் நானாச்சு என்று தோள் கொடுக்கின்றன ! 

அடுத்த ஒன்றரை நாட்களுக்கு பாக்கி நாற்பது சொச்சம் பக்கங்களைச் சரிபார்ப்பதிலேயே ஓடிவிட்டது. ஆக ஒட்டுமொத்தமாய் பிள்ளையார் சுழியிலிருந்து மங்களம் பாடும் வரை முழுமையாக மறுக்கா டைப்செட் செய்திடும் அவசியம் எழுந்து நிற்பது புரிந்தது.மறுபடியுமா? கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து பரோட்டா சாப்பிடணுமா? என்று மலைப்பாக இருந்தாலும், பாதி கிணறைத் தாண்டிய நிலையில் வேறு வழியே தெரியவில்லை. தொடர்ந்து நாட்களில் 'ஆடுறா ராமா, தாண்டுறா ராமா' என்றபடிக்கு நம் ஆட்கள் DTP பணிகளுக்குள் மூழ்கிட, எனக்கோ அட்டைப்படத்தைத் தயார் செய்ய வேண்டுமே என்ற பதட்டம்.
இதற்கான ராப்பர் டிசைன்  ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தோம் தான். ஆனால் அச்சிட்டிருக்கவில்லை. அவசரம் அவசரமாய் அந்த கோப்புகளை எடுத்துப் பார்த்தால் திருதிருவென முழிக்கத்தான் தோன்றியது. Becos அந்த ஒரிஜினல் டிசைனானது ரொம்பவே சப்பையாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு 'மொளுக்கட்டீர்' அட்டைப்படத்தோடு களம் இறங்கினால் கட்டையை கொண்டு சாத்துவீர்கள் என்பது அப்பட்டமாய் புரிந்தது.அவசரம் அவசரமாய் அமெரிக்காவிற்கு நமது ஓவியரிடம் 'ஆபத்பாந்தவராக' மாறிட கோரிக்கை விடுத்தோம். "மாப்பிள்ளை இவரே தான், ஆனால் சொக்காயை மட்டும் மாற்றித் தர முடியுமா ப்ளீஸ்? செம செம அவசரம்" என்று சொன்னோம். 'பொழுதன்னிக்கும் இவனுங்களுக்குப் பிழைப்பே இதுதானா? என்று அவர் முகம் சுளித்திருக்கலாம் தான். ஆனால் அவ்விதம் செய்யாமல் பட்டையைக் கிளப்பும் ஒரு பின்னணியைத் தயார் செய்து அனுப்பி வைத்தார். இதோ பாருங்களேன்!



To cut a very long story short - அட்டைப்படம்  நேற்றைக்கு பிரிண்ட் ஆகி ரெடியாகிவிட்டது. நூற்றுச்சொச்சம் பக்கங்களும் முழுமையாய் மறுபடியும் டைப்செட் செய்யப்பட்டு, நேற்று மாலை என் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளன. இதோ இன்றைக்கு இந்தப் பதிவைப் போட்ட கையோடு final எடிட்டிங்கிற்கு  அவற்றுள் புகுந்தால், நாளை அச்சுக்குச் செல்லலாம் என்பதே எனது எதிர்பார்ப்பு.​அதுவும் அத்தனை சுலபமே அல்லதான். Becos கிட்டத்தட்ட 225 ஆண்டுகள் நீண்டு செல்லும் ஒரு timeline இந்தக் கதைக்களத்தில். அந்தத் தங்கக் கடிகாரம் கைமாறி கைமாறி பயணிப்பதைப் பிசிறின்றி நகர்த்திட கதாசிரியர்கள் செய்துள்ள மெனக்கெடலினை நான் சரிவரப் புரிந்து கடத்தியாக வேண்டும்.So ஒரு டப்பா டான்ஸ் ஆடும் ஞாயிறு காத்திருப்பது புரிகிறது.
இந்தத் தாமதத்தினை தவிர்த்திருக்கலாமோ ? என யோசிக்கும் போது - கொஞ்சம் சுமாராய் அட்டைப்படம் இருந்தாலும் அவசரத்திற்குச் சரிக்கட்டிக்கொள்ளலாம் என்று சமரசம் செய்ய மண்டை மறுப்பது புரிகிறது ! இத்தனை காலம் ஆன பிற்பாடுமே - எனக்கே திருப்தி தராத ஒரு ஸ்கிரிப்ட் சகிதம் ஒரு கதையை உங்களிடம் ஒப்படைக்க தைரியம் தலைதூக்க மாட்டேன் என்கிறது. விடிய விடிய பல்டியடித்தாலும் ஒரு குறைந்தபட்ச தர அளவீட்டைத் தாண்டிடாத எதுவுமே நேரடியாய் மூத்திரச்சந்துக்கே இட்டுச் செல்லும் என்று தலைக்குள் குந்தியபடியே 'ரூல்ஸ்  ரமணிதரன்' கூக்குரல் இடுவதால் - இத்தனை அவசரத்திலும் நிதானமாகவே பணிகளைச் செய்திட வேண்டியுள்ளது folks. So காத்திருக்கும் வாரத்தில் இதழினைத் திருப்தியாய் நிறைவு செய்து உங்களிடம் கொண்டு சேர்ப்போம். அதுவரை கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் ! வியாழன் டெஸ்பாட்ச் என்று வைத்துக் கொள்ளுங்கள் !

ஆச்சா? இது இன்றைய பதிவின் முதல் பாதி.  And yes இந்தப் பதிவின் துவக்கத்தில் நான் கேட்டிருந்த குவிஸ்களுக்கும்  இந்த இரண்டாம் பாதிக்கும் சம்பந்தம் உண்டுதான். போன வாரம் ஒரு ஏழு எட்டு கதைகளின் ஆப்ஷன்ஸ் தந்து இவற்றுள் இருந்து ஏதேனும் மூன்றை மட்டும் தேர்வு செய்து சொன்னீர்களெனில் மே மாதத்து ஆன்லைன் புத்தக விழாவிற்குப் போட்டுத் தாக்கிடலாமே என்று கேட்டிருந்தேன். இப்படியும் அப்படியுமாய் ஓட்டெடுப்பில் பதில்கள் கிட்டியிருந்தன தான். ஆனாலும் நிதானமாய் உங்களது முடிவுகளைப் பரிசீலனை செய்தபோது தலைக்குள் ஒரு எண்ணம் உதித்தது. 

மாதம்தோறும் ஏகப்பட்ட புக்ஸ்களை வெளியிட்டு வந்த நாட்களெல்லாம் மலையேறி கொஞ்சகாலம் ஆச்சு என்பதில் no secrets ! இப்போதெல்லாம் at best ரெகுலர் தடத்தில் இரண்டோ மூன்றோ இதழ்கள் + Gen-Z குட்டிச் சந்தாவில் ஒற்றை புக்  என்பது தானே நிலவரம்?! ​நடப்பாண்டின் அட்டவணையில் மொத்தமே முப்பது இதழ்கள் தான் எனும்போது, ஒரு சில மாதங்களில் ரெகுலர் தடத்தில் இரண்டே இதழ்கள் வெளிவருவதுமே தவிர்க்க முடியாத நிகழ்வு என்று புரிகிறது. காத்திருக்கும் மாதங்களில் எந்தெந்த இதழ்களை எந்தெந்த மாதங்களுக்கு slot-in செய்வது என்று எழுதிப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நிறைய மாதங்கள் ஜிலோவென்று காற்றாடுவது புரிய வந்தது.சில மாதங்களிலெல்லாம் ஒரு டெக்ஸ்  + ஏதேனும் ஒரு இதழ் என்பதோடு கையைத் தட்டிவிடும் அவசியம் இருப்பதும்  தெரிந்தது. So "ஆன்லைன் மேளா" என்று சொல்லி ஒற்றை மே மாதத்தில் நாலைந்து இதழ்களைப் போட்டுத் தாக்கிவிட்டுத் தொடரக்கூடிய மாதங்களில் கையை வீசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒரு குட்டியான புதிய முன்பதிவு வழித்தடத்தை முன்மொழிய முடிந்தால் அதன் வாயிலாகச் சாத்தியமாகிடக்கூடிய இதழ்களை மாதா மாதம் ஒவ்வொன்று வீதம் add செய்தால் அந்தந்த மாதங்களின் கூரியர்களும்  புஷ்டியாகிடுமே என்று நினைக்கத் தோன்றியது.​நமக்குத்தான் மண்டைக்குள் ஏதாச்சும் மகா சிந்தனை குடியேறிவிட்டால் அப்புறம் ரிவர்ஸ் கியர் போடும் பேச்சே கிடையாதே! இதோ அந்த எண்ணத்தின் பலனாய் - we present : The FAB FIVE முன்பதிவுத் திட்டமிடல் :

​நான் ஏற்கனவே சொன்னது போல "விஷம்"  செம பெரிய பிராஜெக்ட் என்பதால் அதனை இந்த ஆட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளவில்லை.And, தல டெக்ஸ் வில்லரின் கலர் சாகசமுமே உங்கள் அனைவரது முதல் சாய்ஸாக இருந்த போதிலும் அவரை கொஞ்சமாய் ஓரங்கட்டினால் அதனிடத்தில் குறைந்தபட்சமாய் வேறு மூன்று  இதழ்களை நுழைத்துவிடலாம் என்பது புரிந்தது. தல இங்கில்லையெனில், வேறெங்கேனும் புகுந்து கொள்வார் எனும் போது அவரது சீட்டுக்கு என்றைக்குமே ஆபத்தில்லை, என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்தப் பாவப்பட்ட ஸ்டார்பவர் குறைச்சலான பசங்களோ, இப்படி ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அன்றி கரைசேரும் சாத்தியங்கள் மிகக் குறைவே.So, 'தல' வராமல் போக வாய்ப்பே இல்லை என்பதால் அவருக்குப் பதிலாக இந்தப் புது முயற்சிக்குள் மற்றவர்களை மட்டுமே நுழைத்திடத் தீர்மானித்தேன். 

ஏற்கனவே அறிவித்திருந்த இதர கதைகளோடு பெண்டிங் நிற்கும் இன்னொரு ஆல்பத்தினையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளத் தீர்மானித்தேன். அங்குமே இதே ரீதியிலான சிக்கல்தான் common factor ! மொழிபெயர்ப்பில், புரிதலில் நிறைய குறைபாடுகள் இருக்கப்போனதால அதனை அன்றைக்கு ரிப்பேர் செய்திட இந்தச் சோம்பேறி மாடனுக்குத் தீரவில்லை என்பதால் பரணுக்கு அனுப்புவதே சுலபமாய்த் தென்பட்டிருந்தது. அந்த ஆல்பம் மர்ம மனிதன் மார்ட்டின் + டைலன் டாக்  இணைந்து ஒருசேர சாகசம் புரியும் 'உலகத்தின் கடைசி நாள்'.ஆக முடங்கிக் கிடந்த அந்த இதழையுமே இந்த வாட்டி இந்த FAB FIVE திட்டமிடலுக்குள் புகுத்திடத் தீர்மானித்தேன். பல விதங்களில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த ஐந்து இதழ்களும் இந்த முன்பதிவுத் தடம் மூலமாக உங்களைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன. யாருக்கும் அசாத்திய ஸ்டார் பவர் கிடையாது தான் ; ஆனால் கதைகள்  ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் மிளிரும் திறன் கொண்டவை.So, இப்படி ஒரு தனித்தடம் அவர்களுக்குக் கிட்டிடும் பட்சத்தில் நிச்சயம் ரவுண்டு கட்டி அடிப்பார்கள் என்று எதிர்பார்த்திடலாம்.

'சரி, அன்றைக்கே இவற்றுள் பணி செய்யத் தீராத நிலையில் இன்னிக்கி இன்னா மேன் மாறிப் போச்சு ?' என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது !  அது வேறொன்றுமில்லீங்கோ - ரெகுலர் தடத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக்கொள்ளும் அவகாசம் வாய்த்திருக்கும் இந்த நடப்பாண்டில் கடைவாயைக் காலியாய் விடுவானேன்? என்று நினைத்தேன்.  அப்புறம் கடைவாய்க்குள் கட்டை விரலைத் திணிப்பது என்று ஆகிடும் பட்சத்தினில்  ஒட்டுமொத்தமாய் ஐந்து தபா திணித்துவிட்டால் ஐந்து பெண்டிங் இதழ்களுமே கரை சேர்ந்துவிடுமே என்ற ஞானோதயம் உதித்தது.​ ஆனது ஆச்சு, உருண்டோ புரண்டோ - இந்தக் கதைகள் ஒவ்வொன்றையும் கரை சேர்ப்பதை நடப்பாண்டின் சவாலாக ஏற்றுக்கொண்டால் போச்சு ! 



So  இந்த ஐந்து இதழ்களுக்குமான பிரத்யேக முன்பதிவுத் திட்டமிடலின் பின்னணி இதுவே. ரெகுலர் சந்தாக்களில் இடம்பிடித்திருக்கும் நண்பர்களுக்கு  சலுகை சாத்தியமாகிடும் வாய்ப்பு இது. அந்தந்த மாதங்களது கூரியர் இதழ்களுடன் இந்த ஸ்பெஷல் இதழ்களுமே மாதமொன்று வீதம் தொற்றிக்கொள்ளும் என்பதால், தனியாகக் கூரியருக்கெனக் கட்டணங்கள் ஏதும் செலுத்தத் தேவயிராது.ஆனால் சந்தாவில் அல்லாத நண்பர்கள் ஐந்து கூரியர் கட்டணங்களுக்குப் பணம் செலுத்திட அவசியமாகிடும். And சமீப காலத்துப் பழக்கம் போலவே இந்த முன்பதிவுகள்  strictly முன்பதிவுகளுக்கான பிரிண்ட்ரன் சகிதமே களம் கண்டிடும். ஆகையால் சாவகாசமாய் எப்போதாவது வாங்கிக்கொள்ளலாம் என்பதற்கான வாய்ப்புகள் பூஜ்யத்திற்கு மிக அருகில்.முகவர்களுமே இந்த இதழ்களைப் பொறுத்தவரையில் முன்பணம் அனுப்பினாலொழிய புக்குகள் தருவிக்க வாய்ப்புகள் இராது. இந்த ஐந்து ஆல்பங்களுமே, சூப்பர் ஸ்டார் நாயகர்கள் யாருமே இல்லாத விளிம்பு நிலை படைப்புகள் என்பதால் மறுபடியும் ரெகுலரான பிரிண்ட் ரன்னில் கணிசமாக அடித்து வைத்து கிட்டங்கியை நிரப்பிக்கொண்டு ஊர் ஊராய் தூக்கித் திரியும் அந்த டுபுக்கு பழக்கத்தை இவற்றில் தொடர்வதாக இல்லவே இல்லை.இதோ மார்ச் முதல் தேதி முதலாய் இந்த முன்பதிவுக்கென நாம் குறிப்பிட்டதொரு அவகாசத்தினை ஏற்படுத்தியுள்ளோம். அதற்குள் என்ன நம்பர் சாத்தியமாகிடுகிறதோ அதை மட்டுமே பிரிண்ட் செய்வதாக இருக்கிறோம்.

முன்பதிவே முன்செல்லும் பாதைக்கு வெளிச்சம் - என்பதுதான் இன்றைய நிலவரம் மக்களே. டெக்ஸையும் இதில் சேர்த்துவிட்டு Super 6 போல ஆறு இதழ்களாக அமைத்திருக்கலாமே - என பற்பல திசைகளிலிருந்து சிந்தனைக் கணைகள் ஈரான் மீது ஏவப்படும் மிஸைல்களைப் போலத் தாக்கிடும் என்பது தெரியாதில்லை.ஆனால் 600 ரூபாய்க்கு ஐந்து இதழ்கள் எனச் சாத்தியமாகிடும்போது கலர் டெக்ஸை உள்ளே நுழைத்துத் தொகையை ஆயிரத்திற்கு கொண்டு செல்ல மனமொப்பவில்லை. ஏற்கனவே தாத்தாக்களும் மேகி கார்சனும் ஒரு 400 + இந்த ஐந்து இதழ்களின் பொருட்டு ஒரு 600 என்பதே தற்சமயத்திற்குப் போதும் என்று தீர்மானித்துள்ளேன்.கூடுவாஞ்சேரி போய், கும்மிடிப்பூண்டி போய், அரக்கோணம் போய், ஆந்திரா போகலாமே என்ற ரீதியிலான அகுடியாக்களின்றி தயவு கூர்ந்து திட்டமிடப்பட்டுள்ள சாலையிலேயே பயணிப்போமே ப்ளீஸ்...?!தவிரவும் எனக்கு இது வேண்டாம், இது வேண்டும் என்று pick and choose செய்திடும் வாய்ப்பு இந்தத் தனித்தடங்களில் இராது என்பது தவிர்க்க இயலா நிஜம் guys. அதன் பொருட்டும் ஆலமரத்திற்கு ஜமுக்காளம் சகிதம் ஒருக்கா கிளம்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

​ரைட், இந்தப்பதிவை நிறைவு செய்த கையோடு 'மேற்கே போ மாவீரா' பணிகளை நிறைவு செய்யப் புறப்படுகிறேன் guys. இடையிடையே இங்கே எட்டிப்பார்க்க நிச்சயம் ஆஜராவேன். Bye now...Have a great sunday !


Sunday, February 22, 2026

ஒரு பீரோ புல்லிங் படலம்!

நண்பர்களே,

வணக்கம். எங்க ஊரில் மட்டும் தானா? அல்லது பரவலாகவே இது தான் நிலவரமா? என்று தெரியவில்லை ; ஆனால் கொஞ்ச காலமாகவே காலைகளில் குளிரானது ஜொய்ங் என போட்டுத் தாக்கி வருகிறது! வாக்கிங் போனால் வீடு திரும்பும் போது கலைஞரின் குரலுடன் தான் வந்து சேர முடிகிறது! திடீரென தொற்றிக் கொண்ட 'லேட்டஸ்ட்' ஜல்ப்போடு மல்லுக்கட்டியபடியே இந்தப் பதிவினை எழுத அமர்ந்திருக்கிறேன்!

மார்ச் மாத இதழ்களின் முக்கால்வாசி பிரிண்ட் ஆகி பைண்டிங்கில் இருக்க - மகளிர் தின ஸ்பெஷலான "புதைகுழிப் பூக்கள்" மாத்திரமே இன்னமும் பெண்டிங்! அடுத்த ஓரிரு நாட்களில் அதையும் பூர்த்தி செய்து விட்டால் "பிப்ரவரியில் மார்ச்" சாத்தியமாகியிருக்கும்! பார்க்கலாம்! பட்சே - இந்த வாரப் பதிவானது இன்னும் சற்று தள்ளி காத்திருக்கும் மே மாதம் சார்ந்தது! Oh yes - மே மாதத்தின் ஆன்லைன் மேளா பற்றிய உரத்த சிந்தனையே இது! கொரோனாவின் லாக்டவுன் தினங்களில் கொஞ்சமே கொஞ்சமாய் நாம் மூச்சு விட்டுக்கொள்ளவொரு வாய்ப்பாகத் திட்டமிட்ட இந்தச் சமாச்சாரம் இப்போதெல்லாம் நமது ஆண்டின் highlight-களுள் முக்கியமானதாக வளர்ந்து நிற்பது obvious. And பொதுவாகவே கடைசி நிமிடம் வரையிலும் காத்திருக்கும் மேளாவின் புக்ஸ் பற்றி வாயைத் திறக்காமலே பெவிகால் பெத்தபெருமாளாய் வலம் வருவது வழக்கம். ஆனால் - முன்செல்லும் காலங்களில் சந்தாவின் ரெகுலர் இதழ்களைத் தவிர்த்த பிற முயற்சி(களை) முன்கூட்டியே கடைவிரித்துப் போணி செய்திடப் பார்த்தே தீரணும் என்ற அவசியம் எழுந்துள்ளதால் - 'சளசலப்பு சண்முகநாதன்' அவதார் தவிர்க்க இயலாத ஒன்றாகி உள்ளது! So அதன் நீட்சியே இந்தப் பதிவு!

மே ஆன்லைன் மேளாவின் ரேஸில் ஓடிட முதல் ஆட்களாய் தயாராகி நிற்போர் - பல் போன தாத்தாக்களும், லண்டனின் வீதிகளை அளந்திடும் மேகி கேரிஸனும் தான்! ஒன்றை மாதம் முன்னரே இந்த இரு ஆல்பங்களுக்கான முன்பதிவினை அறிவிச்சாச்சு என்பதால் அவர்கள் பாதித் தொலைவை ஏற்கனவே கடந்தாச்சு! மார்ச் 31 வரைக்கும் அவர்களுக்கு இன்னமுமே அவகாசம் இருப்பதால் சிக்கலின்றி கிராபிக் நாவல் twins கரை சேர்ந்து விடுவர் என்று நம்பிக்கையுள்ளது! அவர்கள் நீங்கலாக வேறு யாரைக் களமிறக்கலாம்? One-shots களுள் எவற்றை முன்நிறுத்தலாம்? என்ற மகாசிந்தனை என்னுள்.

And for a change - இந்தவாட்டி நானே இன்கி-பிங்கி-பாங்கி போட்டுத் தேர்வுகளைச் செய்திடாது - உங்களையே செலக்ஷன் கமிட்டியாக உருமாற்றிட விழைகிறேன்! So இந்தத் தேர்வுக்கென யாரெல்லாம் பங்கேற்க ரெடியாக உள்ளனர்? என்பதை மெதுமெதுவாய் அறிவிக்கிறேன்! அவர்களுள் யாரைத் தேர்வு செய்யலாம் ? என்ற உங்களது பரிந்துரைகள் கிட்டட்டும்! ஏகோபித்த வழிகாட்டல் கிட்டினால் சிறப்பு - சிண்டைப் பிய்த்துக் கொள்ளாது அந்தப் பாதையிலேயே பயணித்து விடலாம். But தெற்காலே கொஞ்சம், கிழக்காலே கொஞ்சம் - என்ற ரீதியில் suggestions அமைந்திடும் பட்சத்தில், இருக்கவே இருக்கும் எனது கி.பி.பா. டெக்னீக் ! அதில் இன்னொரு வசதியுமே கீது ! "அக்காங்... என்கிட்டே யோசனை கேட்டுட்டு - அதைச் செயல்படுத்தலை" என்று கண்சிவந்து மூத்திரச் சந்துகளில் பிராது கொடுக்கவும் முகாந்திரங்கள் 'ஜிலோ'வென அமைந்து விடும் அல்லவா ?!

So ஆரம்பிக்கலாமாங்களா?

அநேகமாய் கி.மு, கி.பி காலத்தின் அறிவிக்கப்பட்ட ஜம்போ காமிக்ஸின் "வைகறைக் கொலைகள்" தான் என் நினைவுக்கு வந்திடும் முதல் ஆல்பம்! சொல்லப் போனால் maybe நான்கு - ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இதன் அட்டைப்படமுமே பிரிண்ட் ஆகியாச்சு! So இந்த ஆல்பத்தினை நாம் 'டிக்' அடிக்கும் பட்சத்தில், ஜம்போவின் லோகோவோடு தான் இந்த புக் களம் காணும்! லக்கி லூக் சைசிலான பிளாக் அண்ட் ஒயிட் இதழ்; 52 பக்கங்கள் ; என்பதே இதன் template. எழுபதுகளில் பிரான்ஸில் அரங்கேறியதொரு கொலைச் சம்பவமும், அதைத் தொடர்ந்த கோர்ட் விசாரணையுமே இந்த ஆல்பத்தின் பின்னணி என்பதை முன்னரே சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! திரைப்படமாகக்கூட இந்த நிகழ்வு வெளிவந்துள்ளது என்றுமே எனது ஞாபகம் சொல்கிறது! இதழின் சிறப்பே கோட்டோவிய பாணியில் அல்லாது Grey shades சகிதம் தீட்டப்பட்டுள்ள பிரமாதமான ஓவியங்களே! இதன் மொழியாக்கம் ரொம்பவே டப்சாவாக அமைந்து போயிருந்தால் தான் திட்டமிட்டபடியே அந்நாட்களிலேயே இதழினை வெளியிடத் தீரவில்லை ! முழுசையுமே கடாசி விட்டு fresh ஆக எழுத வேண்டும் என்பது அன்றைய தேதிக்கு பெண்டைக் கழற்றும் முயற்சியாய் தென்பட்டதால் - பரணிற்கு பார்சல் பண்ணிவிட்டிருந்தேன்! இன்றைக்கும் நிலவரத்தில் மாற்றமில்லை - but ஒரு true life க்ரைம் களமானது நமக்கு ரசிக்கக் கூடுமே என்ற எண்ணமானது எனது சோம்பலை மண்டையில் தட்டுகிறது! What say மக்களே?

இதே போல அட்டைப்படமெல்லாம் ரெடியாகி, இதே போல பிளாக் அண்ட் ஒயிட்டில், இதே போல மொழியார்ப்பில் எழுந்த மொக்கைகளின் காரணத்தால் சயனத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு ஆக்‌ஷன் நாயகரே அடுத்த பார்ட்டி! "என் பெயர் அந்நியன்" என்ற தலைப்புடன் சில விளம்பரங்களில் தலைகாட்டிய இந்த மனுஷன் போனெலியின் படைப்பே! இங்குமே பிள்ளையார் சுழி முதல் சுபம் வரையிலான மொழியார்ப்பினை fresh ஆகச் செய்ய இயன்றால் மாத்திரமே கரைசேர்ந்திட முடியும் என்ற நிலவரம் ! ஒரு வித இருண்ட கதைக் களம்; கம்யூனிஸ்ட் பெர்லினின் பின்னணியில் தெறிக்க விடும் spy action - என்று இந்த கறுப்புக் கண்ணாடிக்காரரை அடையாளம் காட்டிட இயலும்! உங்களது இசைவு கிட்டினால் இவருக்கான வாடிவாசல் திறந்திடும்!

Next in line is : "கதிரவன் கண்டிரா கணவாய்"...! இதுவும் முந்தைய இரு ஆல்பங்களைப் போலவே black & white! And முந்தைய 2 ஆல்பங்களைப் போலவே வெகு சுமாரான மொழியார்ப்பினை ரிப்பேர் பண்ணிட தம் இல்லாத காரணத்தால் பரணில் துயிலும் ஆல்பம்! எனது ஞாபகம் சரியெனில் - இதிலொரு 140 பக்கத் திரில்லர் & கொஞ்சமாய் டிக்கிலோனா sequence-களும் இங்கே உண்டு! One shot ஆல்பமே - but செம பரபரப்பான களம்!

பார்வையை பீரோவின் உள்தட்டுக்குள் நீளவிட்டால் நமது ஜம்பிங் மாயாத்மாவும் குடியிருப்பது தெரிகிறது! ஊஹூம் ... நம்ம 'தல' விழுப்புரத்திலிருந்து குடிமாறியிருக்கவில்லை - நான் குறிப்பிடுவது ஸாகோர் டி-நேயின் அழகானதொரு black & white சாகசத்தினை! இதுவொரு 192 பக்க - அமானுஷ்யம் கலந்ததொரு திரில்லர்! துவக்க நாட்களின் ஸாகோர் 'மினி' படைப்புகளுக்குப் பிற்பாடு வெளிவந்திருக்கும் முழுநீள சாகசங்கள் அனைத்துமே 'ஹிட்ஸ்' என்பதால் - சாகோருக்கு கூடுதலாய் வாய்ப்புத் தரும் நோக்கில் இந்த ஆல்பத்தினை ஏதோவொரு தருணத்தில் களமிறக்கலாமே என வாங்கிப் போட்டிருந்தோம். But ரெகுலர் தடத்தில் slots ரொம்பவே சட்டை-கிழிப் படலமாகிப் போவதால் கோடாரி மாயாத்மா waiting list-ல் அமர வேண்டிப் போனது! இவர் மே மாதம் களம் காண வேண்டுமென நீங்கள் நினைத்தால் எண்: 4-ஐ அழுத்தவும்!

And of course - "விஷம்"!! 5 அத்தியாயங்கள் கொண்ட இந்த மெகா கௌபாய் களமானது கிட்டத்தட்ட 4 பாகங்கள் வரை மொழியாக்கம் முடிந்து ரெடி! But இங்கே ஒரே சிக்கல் - மொத்தமாய் 5 அத்தியாயங்களையும் ஒரே தருணத்தில் ரிலீஸ் செய்வதாகவிருந்தால் பட்ஜெட் எகிறிவிடும்! சர்வ நிச்சயமாக ரூ. 800-க்கு மேல் ஒரு விலை அமைந்து விடும் & வேறு யாருக்குமே மே மாதம் வாய்ப்பே இல்லாது போய் விடும்! So "விஷம்" ஒரு long term பிரத்யேக முன்பதிவு project ஆக்குவதே நலம் என்பது எனது எண்ணம்!

அப்படியே பீரோவைத் துழாவும் போது 2026-ன் அட்டவணையில் கடைசி நிமிடம் வரையிலும் இடம் பிடித்திருந்து, மார்டினின் கலர் ஆல்பத்துக்காக தனது ஸ்லாட்டை விட்டுக் கொடுத்த டைலன் டாக் தென்படுகிறார். "பெளர்ணமியில் ஒரு பூதவேட்டை" என்ற ஆல்பத்துக்கு நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் பெயரிடக் கோரியிருந்தது நினைவிருக்கலாம். இது அந்த ஆல்பமே. 96 பக்கங்கள் - black & white! நடப்பாண்டில் டைலனின் "The Good, The Bad & The Ugly" வெளிவருவதால் பெள. பூ. வே சற்றுத் துயிலட்டும் என எண்ணியிருந்தேன்!

துளாவும் படலத்தின் அடுத்த கட்டத்தில் கையில் சிக்கியவர் யாரென்று தெரிந்தால் திகைத்துப் போய் விடுவீர்கள்! ஆங் ... becos அது நமக்கெல்லாமே பிராணவாயுவாய் இருந்து வரும் இரவுக்கழுகார் தான்! "ஆத்தீ... டெக்ஸ் சாகசம் துயில் பயில்வானேன் ??" என்ற கேள்வி எழலாம்! உள்ளதைச் சொல்வதானால், இந்த 224 பக்க - கலர் - ஆக்‌ஷன் மேளா தான் 2026-ன் லயன் தீபாவளி மலராக இருந்திருக்க வேண்டியது! And அந்தத் திட்டமிடலில் கதையையும் ஆர்டர் செய்து, பணமும் அனுப்பி வாங்கியாச்சு! ஆனால் அட்டவணையினை வெளியிடவிருந்த தினத்துக்கு முந்தைய இரவில் தான் '2026-ல் மெபிஸ்டோவை சர்வ நிச்சயமாய் உங்கள் கண்ணில் காட்டுவேன்...!' என ஈரோட்டு சந்திப்பின் போது உங்களுக்கு promise செய்திருந்தது நினைவுக்கு வந்தது. "ஆஹா... சுத்தமாய் மறந்தே போயிட்டியேடா எருமை!" என்று என்னை நானே கபாலத்தில் குட்டிக் கொண்டு அவசரம் அவசரமாய் மீண்டு(ம்) வந்த மாயனின் தொடர்ச்சியான கதைக்கு ஆர்டர் செய்தோம்! அட்டவணையினை வெளியிடுவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்னே செய்த மாற்றமிது! And "அசுரர்கள் அடங்குவதில்லை" என்ற அந்தத் தலைப்பினைச் சூட்ட எனக்கிருந்த அவகாசம் சில நொடிகள் மாத்திரமே! So மெபிஸ்டோ vs டெக்ஸ் - லயனின் தீபாவளிமலராகிட - அந்தக் கலர் டெக்ஸ் ஆல்பத்துக்கு இடமின்றிப் போனது. 'ரைட்டு....2027-ல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!' என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்! முழுவண்ண கலர் ஆல்பம் - ought to be ரூ. 400/- இன்னா ஒரு நிலவரம் பாருங்களேன் folks?




இன்னொரு முக்கியஸ்தர் - நம்ம டிடெக்டிவ் செக்ஸ்டன் ப்ளேக் தான் ! Fleetway நாயகரான இவரது சாகசங்கள் போன வருஷமே சேலம் புத்தக விழாவினில் வந்திருக்க வேண்டியது ! But சேலமே தள்ளிப் போய்விட்டதால் - இவரும் துயிலிங் ! இவருக்கும் ராப்பர் ரெடி !

இன்னமும் உள்ளே கிடக்கும் ஆல்பங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம் தான் - நம்மிடம் உறங்கும் கதைகளைக் கொண்டே ஓராண்டுக்கு சந்தா ரெடி பண்ணிவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ?! But இப்போதைக்கு ஓவராய் options தந்து உங்களைச் சட்டையை கிழிக்கச் செய்ய வேண்டாமே என்று நினைத்தேன்! So "எல்லாத்தையும் போடுப்பா ராசா" என்ற பதிலாக அல்லாது - தெளிவான தேர்வுகளாய் any 3 books ப்ளீஸ்?

அப்புறம் "ஆஹாங்...இதிலே எதுவும் தேறாது ; எழாது மலைக்குப் பின்னாடி இருக்கிற எட்டாவது குளத்துக்குள்ளே இருக்க ஈரோவைப் போடலாம் !" என்ற ரீதியிலான மகாசிந்தனைகளும் இப்போதைக்கு வேணாமே ப்ளீஸ் ? 

Bye all.. See you around! Have a great Sunday!
செக்ஸ்டன்  ப்ளேக் 

"வைகறைக் கொலைகள்"





கதிரவன் கண்டிரா கணவாய் 

என் பெயர் அந்நியன் !

பவுர்ணமியில் ஒரு பூத வேட்டை !


Sunday, February 15, 2026

பிப்ரவரியின் பாட்ஷா !

 நண்பர்களே,

​ஞாயிறு வணக்கங்கள். ஒரு குட்டியான பிப்ரவரியின் நடுவாக்கில் நின்று கொண்டிருக்க - காத்திருக்கும் மார்ச் இதழ்களைப் பற்றிய ப்ரிவியூவில் பிசியாவதா ? அல்லது ஒளிவட்டம் இன்னமும்  பிப்ரவரியின் புக்ஸ் மீதே தங்கிட அனுமதிப்பதா? என்ற குழப்பம் உள்ள்ளுக்குள்! So 'தென்னைமரத்திலே ஒரு குத்து - பனைமரத்திலே ஒரு குத்து' என்பது போல இப்படிக் கொஞ்சம்  ; அப்புறம் அப்படிக் கொஞ்சம் என வண்டியை ஓட்டலாமென்று தோன்றுகிறது!

​பிப்ரவரியின் சந்தோஷ highlight என்று பார்த்தோமானால் அது டெக்ஸோ - மாடஸ்டியோ அல்ல என்பதுதான் ஆச்சரிய நிஜம்! மாறாக - The KING'S SPECIAL #2 சக்கை போடு போட்டு வருவதால் "பிப்ரவரியின் பாட்ஷா" என்ற பட்டத்தை அந்த ஹார்ட்கவர் இதழே தட்டிச் செல்கிறது! பொதுவாகவே நமக்கெல்லாம் கூட்டணி இதழ்கள் மீது தீராத காதல் உண்டு என்பது தெரிந்த விஷயம் தான்! Maybe நமது அரசியல் கட்சிகளுக்கு கூட்டணி மந்திரிசபைகள் வேப்பங்காயாய் கசக்கலாம் ; ஆனால் நமக்கோ கூட்டணிகள் என்றைக்குமே கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மில்க் ஸ்வீட் பாக்ஸைப் போன்ற பல்சுவை பதார்த்தங்களே என்பதில் no secrets! So அரை டஜன் கிளாசிக் நாயகர்களை ஒரே இதழில் தரிசிக்கும் அந்த அனுபவம் பரவலாய் 'ஜே' பெற்று வருவதை விற்பனைகளில் பார்த்திட முடிகிறது! Light Reading; அதிலும் ஒவ்வொரு கதையுமே 30 to 40 பக்க நீளங்கள் தான் எனும் போது சாவகாசமாய் நேரம் கிட்டும் போதெல்லாம் ஒரு கதை என பயணிக்க இங்கு சாத்தியப்படுவது பெரிய பிளஸ் என்று தோன்றுகிறது! ஆக இந்தக் கூட்டணிப்  படலத்தின் இரண்டாவது அத்தியாயமும் smash hit என்பதால் அண்ணாச்சி செம ஹேப்பி ! காத்திருக்கும் ஏப்ரலில் The KING'S ஸ்பெஷல் #3 வெளிவந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! And அந்த ஸ்பெஷல் இதழுடன் ELECTRIC '80 தனித்தடம் பூர்த்தியாகிடும்! So இந்த நொடியில் எனது கேள்வி இதுவே folks:

​King's ஸ்பெஷலின் சீஸன் 2 - தொடரலாமா? அல்லது ஒரு பிரேக் விடலாமா?

​இதே போல வருஷத்திற்கு 3 கூட்டணி இதழ்களோடு அடுத்த ஒற்றை ஆண்டுக்குள் பயணிக்கலாமா - வேண்டாமா? பதில் ப்ளீஸ்?

பிப்ரவரியின் TEX  (என் இனிய பொய்யே) செம ஜிலோவென்று ஓட்டமெடுத்த சாகசம் &  அந்த அடங்காப் பொய்யன் செம வித்தியாசமான கதாபாத்திரம் என்பதை மறுப்பதற்கில்லை! கதையில் அடர்த்தி குறைவே என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் - ஆனால் அந்த வன்மேற்குக் களத்தில் 80 ஆண்டுகளாய் பயணம் பண்ணி வரும் TEX-க்கு கதாசிரியர்கள் தந்திட விழையும் சற்றே மாறுபட்ட கதைப் பின்னணிகளுக்கு நாம் இயன்ற மட்டிலும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதே நியாயம் என்பேன்! Oh yes - கமான்சே கிளர்ச்சி; ஆயுதக் கடத்தல்; இரத்த வெறிக் கும்பல் என்று கூடுதலான ஆக்ஷன்களுக்கு வாய்ப்பு தரக்கூடிய களங்களைக் கையிலெடுப்பது செம ஈஸியான options தான்; ஆனால் ஒரு நூறு தடவைகள்  கும்மி எடுக்கப்பட்ட  templates அவை என்பதே யதார்த்தம்! So இயன்ற திசைகளிலெல்லாம் புதுப்புது ஐடியாக்களை உருவாக்க முனைந்து வருகிறார்கள் TEX-ன் படைப்பாளிகள் என்பது தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கும் லேட்டஸ்ட் கதைகளில் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது! More power to you gentlemen! என் இனிய பொய்யே கூட செம recent படைப்பே !

பிப்ரவரியின் இளவரசி எதிர்பார்த்தபடியே செம ஹிட் என்பது தரமான தகவல்! அட்டைப்படம் பிரமாதமாய் அமையும் போதே அந்த இதழின் வெற்றி விகிதம் எகிறிடுவது வாடிக்கை! இம்முறை அட்டை மாத்திரமன்றி கதையுமே அழகாய் அமைந்து போக, makes for engrossing reading. அதிலும் அந்த அருவியில் சிக்கி கார்வினும், மாடஸ்டியும் படும் அல்லல் sequence சினிமாக்களில் வந்திருந்தாள் மிரட்டியிருக்கும் அட்டகாசம் ! And சொல்ல மறந்த செய்தி - இதன் மொழிபெயர்ப்பு Ms.P. சுகன்யா. பெரிதாய் நான் நோண்ட அவசியமின்றியே அவரது ஸ்கிரிப்ட் அழகாய் அமைந்து போனதால் - அந்த குசும்பான, நக்கலான portions-ல் மட்டும் நான் மண்டையை நுழைத்திருந்தேன்!

And சந்தேகமேயின்றி பிப்ரவரியை நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது "டைட்டானிக் தாத்தா" எனலாம்! துறுதுறுப்பான க்யூட் பேத்தியும் அவரது மம்மிப்பாவும்  (!!) சந்தோஷமாய் செலவிடும் ஒரு நாளே இந்தக் குட்டி ஆல்பம்! அழகான சித்திரங்கள் & கண்களுக்கு இதமான கலரிங்  இந்தத் தொடரின் அடையாளங்கள் எனில், அந்த அழகான கதையோட்டம் இதமான குற்றாலச் சாரலுக்குச் சமம் எனலாம்! இந்த ஆல்பத்தைப் படித்த கையோடு  ஒரு நண்பர் எனக்கு வாட்ஸ்அப்பில் செம வாஞ்சையோடு எழுதியிருந்தார். இத்தனைக்கும் அவருக்குப் பேரன்-பேத்தி பார்க்கும் வயதே அல்ல  தற்சமயம்! "பேரன்-பேத்திகள் எனக்கும் கிட்டும் நாளில் அவர்களையும்  நான் இந்த கதையில் ரோஸ் கூப்பிடுவது போலவே 'மம்மிப்பா' என்று தான் கூப்பிடச் சொல்வதாக இருக்கிறேன் சார்!" என்று எழுதியிருந்தார். நான் ஜாலியாய் எழுதி வைக்கும் சமாச்சாரம் இது போலெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை பார்க்கும் போது 'பக்கோ' என்றுள்ளது !!  சில தருணங்களில் மாங்கு மாங்கென்று காடு-மேடு-மலையெல்லாம் அலையத் தேவையே இல்லை போலும்; இத்தகைய மெலிதான படைப்புகள் கூட நெஞ்சைத் தொடும் ஆற்றல் கொண்டவை தான் போலும்! டைட்டானிக் தாத்தா - WARM WELCOME from ரோஸ் & us !!

காத்திருக்கும் மார்ச் இதழிலோ TEX ஒரு சிங்கிள் ஆல்பத்தில் வலம் வருகிறார். தலைப்பு என்னவோ "கார்சனைக் காணோம்" என்றிருக்கலாம் தான்; ஆனால் கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பவர் நமது வெள்ளிமுடியாரே ! செம லைட்டான கதை; எக்கச்சக்க ஆக்ஷன் & செம அழகான சித்திரங்கள்! இதோ ஒரிஜினல் அட்டைப்படம் - மெருகூட்டப்பட்ட வர்ணங்களில்!


மார்ச் மாதத்தில் நான் பார்க்க ஆவலாய் இருக்கும் இன்னொரு இதழ்  – "ஜாக்கி போட்ட ஓநாய் " தான் ! முன்கூட்டியே சொல்லி விடுகிறேன் folks – இது நம் வீட்டு குட்டீஸ்களுக்கு  கதை சொல்லவும் / வாசிக்கத் தந்திடவுமே  சுகப்படப் போகும் இதழ்! இதன் கதாசிரியர் Wilfrid Lupano தான் தாத்தாக்கள் தொடரின்  பிதாமகர்  & இந்த ஓநாய் கேரக்டர் கூட தாத்தாக்கள்  கதையில் தலைகாட்டும் உருப்படி தான்! பேத்தி Sophie நடத்தும் பொம்மலாட்ட நிகழ்வின் நாயகனே இந்த ஓநாய் தானே? ரொம்பவே சிம்பிளான ஒரு கதைக்களத்தில் இளைய தலைமுறைக்கென சில சின்னச் சின்ன  மெசேஜ்கள் சொல்ல முனைகிறார் கதாசிரியர். பிரெஞ்சில் மட்டுமே கிட்டத்தட்டமுக்கால் மில்லியன் பிரதிகள் விற்பனை கண்டுள்ள இந்தத் தொடரின் முதல் ஆல்பத்தின் preview இதோ!


ரைட்டு... மார்ச்-ன் பாக்கி 2 இதழ்களான "புதைகுழிப் பூக்கள்" + ஸகுவாரோவொவின் "இருளில் ஒரு நிழல்" இதழ்களுக்கான பிரிவியூவினை அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாமா? இன்றைய பகல் பொழுதில் சின்னதாயொரு Vlog ரெடி பண்ணி நமது YouTube சேனலில் ஏற்றிட நினைக்கிறேன்! So see you again soon folks! Have fun... have a lovely Sunday!

P.S : தற்போது ஓடிக் கொண்டிருக்கும் சில முன்பதிவுகள் - உங்கள் கவனங்களுக்கு folks : 



அப்புறம் தற்சமயம் நெல்லையிலும் , திருச்சியிலும் அரங்கேறி வரும் புத்தக விழாக்களில் நாம் பங்கேற்று வருகிறோம் ! அந்தப் பகுதிகளில் இருப்பின் - please do drop in மக்களே !


Saturday, January 31, 2026

பிப்ரவரி = fun

நண்பர்களே,

வணக்கம்! புது வருஷம் ஆரம்பித்தது நேற்றைக்குப் போலுள்ளது - ஆனால், அதற்குள்ளாக காலெண்டரில் ஒரு கற்றைக் காகிதங்களைக் கிழித்துவிட்டோம்!  இதோ பிப்ரவரியுமே நாளை கதவைத் தட்டக் காத்துள்ளது! சில தருணங்களில் காலத்தின் இந்த மின்னல்வேக ஓட்டமானது மூச்சிரைக்கச் செய்யத் தவறுவதில்லை! 9 சென்னைப் புத்தக விழா ஸ்பெஷல்ஸ் + 3 ரெகுலர் தடத்தின் இதழ்கள் - ஆக, மொத்தம் ஒரு டஜன் புக்ஸ் ஜனவரிக்குக் கச்சிதமாய் ரெடி பண்ணியாச்சு; and அவற்றின் பெரும் பங்கு ஹிட்ஸ் என்ற மகிழ்வோடு லைட்டா மிதப்பாய் மல்லாந்தால், "தம்பி டேய்.. அடுத்த மாசத்துப் பணிகள் வெயிட்டிங்'' என்று கபாலத்துக்குள் குரல் கேட்கின்றது!  So அடித்துப் பிடித்து ஆண்டின் இரண்டாவது மாதத்துக்கென ரெடியும் ஆகியாச்சு! Here we go with the previews!

எப்போதும் போலவே இன்ன பிற நாயக/ நாயகியரின் ஆல்பங்களை முன்நின்று இழுத்துப் போகும் எஞ்சினாக நிற்பது "தல' டெக்ஸ் தான்! "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று வாசித்திருப்போம்; அதையே நமக்கேற்ப கொஞ்சமாய் tweak செய்வதாக இருப்பின் - "டெக்ஸ் இல்லா மாதம் சப்பையே!'' எனலாம் போலும்! So காத்திருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனுமொரு மார்க்கத்தில் டெக்ஸ் & டீம் ஆஜராகிக் கொண்டே இருப்பார்களென்பது 2026-க்கான நமது தீர்மானங்களுள் பிரதானமானது! அதன் நீட்சியாய்- இதோ நடப்பு வருடத்தின் முதல் டபுள் ஆல்பம்! 224 பக்கங்களில் கதை + 8 பக்கங்களுக்கு ஹாட்லைன்;  வலையி­லிருந்து பதிவு; அடுத்த வெளியீட்டு விபரங்கள் என இம்முறை 232 பக்க இதழாக " என் இனிய பொய்யே' ' தயாராகியுள்ளது! 

டெக்ஸ் கதைகளின் பாணிகளில் ஒருவித ஒற்றுமை இருப்பினும், அவற்றின் படைப்பாளிகளுக்கேற்ப கதைகளில் சன்னமான வேற்றுமைகள் இருப்பதுண்டு! கதாசிரியர் மௌரோ போசெல்லி­ டபுள் பேரல் துப்பாக்கியைப் போலானவர் - செம கமர்ஷியல் கதையையும் உருவாக்க வல்லவர் ; அதே சமயம் இரவுக் கழுகாரையும், டீமையும் ஆர்ஜெண்டினா மண்ணுக்கும், கனேடிய வனாந்திரங்களுக்கும் அனுப்பி நாக்குத் தொங்கப் பாடுபடச் செய்யவும் தெரிந்தவர், ஆனால் Pasquale Ruju போன்ற கதாசியர்கள் அத்தனை கனங்களின்றி yet செமத்தியாக ரசிக்கும் கதைகளைப் படைக்கும் ஆற்றல் கொண்டிருக்கின்றனர்! வாசிக்க எல்லா ரகங்களும் நமக்கு ரம்யமாகவே இருந்தாலும் - பணியாற்றும் சோம்பேறி மாடனின் பார்வையில் அந்த ஜா­லியாய் ஓட்டமெடுக்கும் ரகக் கதைகள் கொஞ்சம் ஸ்பெஷல்! Simply becos மாற்றி எழுதவோ; எடிட் பண்ணவோ அவை ஆகச் சுலபமாய் இருப்பதுண்டு! இந்த பிப்ரவரியும் செம ஜாலி­யாய் ஆந்தை விழியனை வைத்திருக்கும் கதையே! அதென்ன பொய்யில் இனிப்பு? ஜீராவிலே முக்கி எடுத்த பலகாரத்தை மொசுக்கினபடியே எவனோ ஒரு பயபுள்ளை பொய் சொல்­லியிருக்குமோ? என்று நினைக்கத் தோன்றலாம்! மாறாக இந்தக் கதைக்களமே ஒரு பொய்யனைச் சுற்றிச் சுழல்கிறது! ஒரு தாய்ப் பொய் போடும் குட்டிகள் பற்பல பொய்களாய் வளர்ந்து ஒரு பெரும் இடியாப்ப சிக்கலாய் விஸ்வரூபமெடுக்க, நம்மவர்கள் களம் காணும் கட்டாயம் ஏற்படுகிறது! ஒரு செமத்தியான ஆக்ஷன் த்ரில்லர் காத்துள்ளது- அட்டகாசமான சித்திரங்களில்! Without a doubt இம்மாதத்தின் highlight என்பேன்!


பிப்ரவரியின் அடுத்த Black & white இதழில் நமது ஆதர்ஷ இளவரசியும், கர்ரீஷ் கார்வினும் போட்டுத் தாக்குகின்றனர்! மாடஸ்டியின் சில சாகஸங்கள் சூடு பிடிக்கவே பாதிக் கதை தேவைப்படுவதுண்டு; அப்புறமாய் தான் வண்டி வேகமெடுப்பதுண்டு! ஆனால், இந்த ஆல்பமோ நேர் மாறு! ஆரம்பமே டாப் கியரில் தான்! 1994ல் உருவாக்கப்பட்ட இந்த சாகஸத்தில் பெருசாய் timeline உதைக்கவில்லை! So புராதனம் எட்டிப் பார்க்காது crisp ஆகப் பயணிக்கின்றது கதை! தவிர ஆதிவாசிகள் கெட்டப்பில் இளவரசி+ கர்ரீஷ் கதையின் பாதிக்கும் மேல் சுற்றி வருவதால் கண்களுக்கும் நிரம்பவே குளிர்ச்சி வெயிட்டிங்! And அட்டைப்படமோ ஒரிஜினல் ட்ராயிங்கி­லிருந்து AI அண்ணாத்தேயின் சகாயத்தோடு நிரம்பவே மெருகூட்டப்பட்டதொன்று! பாருங்களேன் மிளிர்ந்திடும் அட்டைப்படத்தினை!





ரெகுலர் தடத்தின் மூன்றாவது இதழோ நமது GEN-Z சந்தாவினில் வெளிவந்திடும் "டைட்டானிக் தாத்தா'' Again அதே காம்பேக்ட் சைஸ்; அற்புதமான சித்திரங்கள் + கலரிங் கலவை! கதையைப் பொறுத்தவரை இது கெக்கே பிக்கே சிரிப்புக்கான களமே ஆகிடாது! ஒரு தாத்தாவும், பேத்தியும் கழிக்கும் அழகான பொழுதுகளே இந்த இதழின் அடிநாதம்! குடும்பத்தின் ஆக மூத்தவரும்; ஆகப் புதியவரும் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான பாசச் சங்கிலி­யே இந்தக் கதை வரிசையின் அழகே! அதுக்காக சென்டிமெண்ட் ரசத்தைப் பிழியும் வேலையெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது!  Is just a beautiful day in the life of a  தாத்தா & பேத்தி! இதனை GEN Z மாத்திரமன்றி- பேரன் பேத்தி எடுத்திருக்கக் கூடிய GEN X ; Y கூட ரசித்திடலாம்! மறவாமல் நீங்களும் படித்துப் பாருங்களேன் folks!




ரெகுலர் தடத்தின் இதழ்கள் நிறைவுற- Electric'80s தனித்தடத்தின் Penultimate இதழாக The King's  ஸ்பெஷல் -2 இம்மாதம் பருமனூட்ட வருகிறது! முதல் ஆல்பத்தைப் போலவே இம்முறையும்  6 க்ளாஸிக் நாயகரின் கதைகளும் இடம்பிடிக்கின்றன! வேதாளர்; ரிப் கிர்பி; & மாண்ட்ரேக்குக்கு தலா இரண்டு கதைகள் & பாக்கிப் பேருக்குத் தலா ஒரு சாகஸம் என்பது ஞாபகம்! அப்புறம் சார்லி­யின் "பேய் தீவு இரகசியம்' ' க்ளாஸிக் மறுபதிப்பு என்பது கொசுறுத் தகவல்! எல்லா சாகஸங்களுமே மித நீளக் கதைகள் தான் & சகலமுமே நேரோ நேரான கோட்டுக் கதைகளே எனும் போது - பாத்திரம் துலக்கிய கையோடோ;  துணிகளை மொட்ட மாடியில் காயப் போட்டு வந்த கையோடோ துளி குழப்பமுமின்றித் தொடர்ந்திட இங்கே சாத்தியமாகிடும்! Of course இந்த ஜாம்பவான்களெல்லாம்  VRS வாங்கிடும் வயதிலான oldies தான்- ஆனால், நமது நினைவலைகளை இதமாய்த் தட்டித் தாலாட்டும் சூட்சமம் அறிந்தவர்கள் என்பதால், இன்னமும் இவர்களுக்கான மவுசு குறையவில்லை தான்! சென்னை புத்தகவிழாவில் The King's ஸ்பெஷல் -1 ஒரு bestseller & மற்ற ரிப் ; சார்லி தொகுப்புகளுமே did pretty decent!! நீலாம்பரி பாணியில் சொல்வதானால் இந்தப் படையப்பர்களுக்கு வயசானாலும், அழகும், ஸ்டைலும் குறைந்தபாடில்லை!

இதோ- அனல் மெய்யாலுமே பறந்திடும் அட்டைப்படப் preview! உட்பக்க ப்ரிவியூக்களுமே கீழே உள்ளன! And முக்கியமான நினைவூட்டல் - இந்தத் தனித்தடத்தில் நீங்கள் subscribe செய்திருக்காத பட்சத்தில் கூரியர் கவர்களில் பருமன் குறைவாகவே இருந்திடும்!




மாடஸ்டி & டெக்ஸ் பைண்டிங்கில் உள்ளனர்! செவ்வாயன்று பணி முடிந்து வந்து சேர்ந்திட- புதன் காலையில் டெஸ்பாட்ச் இருந்திடும்! படுத்தி எடுக்கும் பல்வ­லியும், அதற்கான சிகிச்சைகளும் நடுவாக்கில் சில நாட்களைக் கபளீகரம் செய்துவிட்டதால் அது டெஸ்பாட்ச் தேதியின் தாமதமாகப் பிரதிபலி­த்துவிட்டது! பல் ஆஸ்பத்திரியின் ரிசப்ஷனில் குந்தியபடியே மாடஸ்டியை எடிட் செய்த முதல் பேமானி என்ற பெருமை அநேகமாய் வேர்ல்டு லெவ­லில் அடியேனையே சார்ந்திடும் என்று நினைக்கிறேன்!

அப்புறம் போன பதிவின் நீட்சியாய் மேகி கேரிஸன் & தாத்தாஸ் சார்ந்த limited edition முன்பதிவுக்கான படலம் இன்று முதல் துவக்கம் காண்கிறது! போன பதிவிலேயே இதைப் பற்றி நாக்குத் தொங்க விளக்கியுள்ளதால் இன்னொரு மேஜர் சுந்தர்ராஜன் அவதாருக்கு அவசியமிராதென்று நினைக்கிறேன்! So "The கிராபிக் நாவல் Twins'' உங்களது  ஆதரவை எதிர்நோக்கி வெயிட்டிங்! 60 நாட்களின் முன்பதிவுச் சாளரம் சரியாக இருக்குமென்ற நம்பிக்கையோடு களம் காண்கிறோம்! So பிப்ரவரி & மார்ச்சில் முன்பதிவுகள் & ஏப்ர­லில் தயாரிப்பு & மே மாத ஆன்லைன் மேளாவில் ஆஜர் என்பதே இந்த நொடியின் திட்டமிடல்! இந்தப் புது ரூட்டுக்கு எவ்விதம் வரவேற்பு இருக்குமோ? என்ற படபடப்போடு விடை பெறுகிறேன் all!


டின்டினும், ராபினும் ஸகுவாரோவும் ஏக காலத்தில் மேஜையை நிரப்பிக் கிடப்பதால் அவர்களோடு கரணமடிக்க கிளம்புகிறேன்! Bye all.. see you around! Have a fun Sunday.!