Powered By Blogger

Sunday, May 17, 2026

"சா.வா.ச.ப.ச. "

 நண்பர்களே, 

வணக்கம். பீத்தல் பரமசிவம் அவதார் நமக்கு என்னிக்குமே செட் ஆனது இல்லைதான். ஆனாலும், எப்போதாவது ஒரு முறை நம்ம வீரப் பிரதாபங்களைப் பற்றி நமக்கு நாமே பிபி ஊதிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இதோ இந்த "சா.வா.ச.ப.ச."  பதிவு கூட அந்த மகா சிந்தனையின் தொடர்ச்சிதான். “என்னப்பா, அந்த காலத்து லாரன்ஸ் டேவிட் கதைகளிலே வர்ற ஆ.கொ.தீ. க.  மாதிரி நீட்டமா அடுக்கிட்டு போறீயே?” என்கிறீர்களா? சொல்றேன், சொல்றேன்.

துவக்க நாள் முதலாகவே நமது அடையாளமே — in particular, லயனின் அடையாளமே — நமது அணிவகுப்பில் உள்ள அந்த அசாத்திய வெரைட்டிதான் என்பேன்.ரொம்ப சமீபத்தில் கூட ஒரு பெல்ஜியப் பதிப்பகம் புதிதாய் நம்மோடு தொடர்பு கொண்டிருந்தபோது, மாமூலாய் குசலம் விசாரித்துக் கொண்ட பிற்பாடு, ஒரு ஆச்சரிய ஈ-மெயில் அனுப்பியிருந்தார்.“உங்க வெப்சைட்டுக்கு போய் பார்த்திருந்தேன். இத்தனை இத்தனை ஐரோப்பிய, அமெரிக்க கதாபாத்திரங்களா? ஒற்றைக் குழுமத்தில் இத்தனை பேரை அறிமுகம் செய்திருக்கிறீர்களா?” என்று ரொம்பவே வியந்து சிலாகித்திருந்தார்.

நானும் ஆண்டுதோறும் எதற்கு காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறேனோ இல்லையோ, நம் மத்தியில் உலவிடும் நாயகர்களின் லிஸ்ட்டைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொள்வதுண்டு தான். அதே சமயம், நாம் அறிமுகப்படுத்திய கையோடு கழற்றியும் விட்டுள்ள நாயகர்களின் லிஸ்ட்டுமே செம நீளம்தான். பஸ்ஸிலிருந்து பாதி வழியிலேயே நாம் இறக்கிவிட்டுள்ள நாயகர்களை மட்டுமே ஏற்றிக் கொண்டு கொண்டாட ஒரு டஜன் எடிட்டர்கள்  தயாராக இருப்பர் என்பது நிஜமே. ஆனால், விராட் கோலியும், ரோஹித் சர்மாவும், சச்சின் டெண்டுல்கரும், பும்ராவும் ஆடும் டீமுக்குள் ஒரே ஒரு மிடறு குறைச்சலான ஜாலம் கொண்ட ஆட்டக்காரர்கள் நுழைவது எத்தனை அசாத்தியமோ, அத்தனை அசாத்தியமே "சாத்து வாங்கி சந்துக்குள் பதுங்கியுள்ளோர்  சங்கம் " நம் அட்டவணையில் இடம்பிடிப்பதும் என்பது புரிகிறது. So, இந்த வாரம் நாம் ஜாலியாய் பார்க்கப் போவதே நாம் கழற்றிவிட்டுள்ள "பாதி வழிப் பயண ஹீரோ / ஹீரோயின்களை மட்டுமே.

2012-க்கு பிற்பாடு நமது இரண்டாம் வருகை துவங்கிய நாளே, புதியதொரு திக்கில் வண்டியை இட்டுச் செல்ல வேண்டும் என்ற உறுதி உள்ளுக்குள் கணிசமாகவே இருந்தது. ஆரம்பத்தில் வழக்கம் போல் மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி என்று வண்டியை விட்டாலுமே எனது long term பார்வையானது சமகாலத்து கதைகள் மீதே இருந்து வந்தது. அன்று சிறுகச் சிறுக மாதத்தின் புத்தக எண்ணிக்கைகளை அதிகரிக்க சாத்தியமாகிக் கொண்டே போன போது, களங்களும் விரிவு கண்டு கொண்டே போவதை சந்தோஷமாய் புரிந்து கொண்டேன். சொல்லப்போனால் 10 ஆண்டுகளுக்கு முன்பான இதே காலகட்டத்தில் கதை தேடல்களுக்கு நான் அடித்த லூட்டிகள் சொல்லி மாளாது.

உட்புகுந்து சாதித்துக் காட்டியோர் லார்கோ, ஷெல்டன், டின்டின், டாங்கோ, ரூபின், Blue Coats என்று அடுக்கிக்கொண்டே போகலாம். In fact, ரெகுலர் தடத்தில் பழைய நாட்களின் நீட்சியாக தொடர்ந்திடுவோர் அனேகமாய் மாடஸ்தியும் கார்வினும் மாத்திரமே. பாக்கி அனைவருமே கிளாசிக் தடங்களில் exclusive ஆக தலைகாட்டி வருகின்றனர். So, 10-20 ஆண்டுகளுக்கு முன்பான நாயகர்களுக்கும் இன்றைய ஜாம்பவான்களுக்கும் இடையே துளியும் சம்பந்தமே இராது தான். ஆனால் இந்த முயற்சியினில் “வந்தோம், நின்றோம், ஓட்டமாய் ஓடினோம்” என்ற லிஸ்ட்டுமே நீளம். 10, 12 ஆண்டுகளின் அட்டவணையை முழுசுமாய் கையில் எடுத்து வைத்துக்கொண்டு புரட்டினால், maybe இன்று நான் குறிப்பிடப்போகும் நாயகர்களைக் காட்டிலும் கூடுதலாய் பெயர்கள் இருக்கவும் வாய்ப்புண்டு தான். ஆனால் நான் இப்போது இங்கு எழுதப் போவதெல்லாமே top of the head எனது நினைவுக்கு வந்துள்ள நாயகர்கள் மாத்திரமே.

ஸ்மர்ஃப்ஸ் :

மிகுந்த எதிர்பார்ப்போடு, மிகுந்த பிரயாசைகளோடு, மிகுந்த பொருட்செலவோடு வாங்கிவிட்டு ரொம்ப சீக்கிரமே மைசூர்பாகு என்று நினைத்துவிட்டு ஃபெவிகாலை வாய்க்குள் போட்டுக்கொண்டவனைப் போல் முழித்த அனுபவம் கிட்டியது நமது ஸ்மர்ஃப்ஸ் தொடரில் தான். ரொம்பவே பிரசித்தி பெற்ற, ரொம்பவே கெத்தான பதிப்பகம் - பிரத்தியேகமாய் ஸ்மர்ஃப்ஸ் கதைகளை தயாரித்து வெளியிட்டு வரும் நிலையில், அவர்களை எட்டிப்பிடித்து கையில் காலில் விழுந்து, நமது சர்குலேஷன்களை ஏற்றுக்கொண்டு கதைகளின் உரிமைகளை தரச்செய்வதற்கு அடித்த லூட்டிகளை பற்றியெல்லாம் முன்நாட்களில் பதிவு செய்திருக்கிறேன் தான். So, மறுக்கா அதே பிளேடை போட அவசியம் இராது என்றே நினைக்கிறேன். எக்கச்சக்க fanfare சகிதம் வரவழைத்த கதையானவை ஆரம்பத்தில் என்னவோ பெரிதாய் நெகட்டிவ் ரியாக்ஷன்களை வரவழைக்கவில்லை. அதற்கு முன்பாகவே இவை ஸ்கேன்லேஷன்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுற்றிக் கொண்டிருந்தவை என்பதால் ஆரம்பம் பெரிய அளவில் பிசுறு தட்டவில்லை தான். ஆனால் ரொம்ப சீக்கிரமே “கார்ட்டூன்களே பிடிக்காது” என்ற அணியினருக்கு இந்த நீலப்பொடியர்கள் வேப்பங்காயாய் கசக்கத் துவங்கிவிட்டனர். பற்றாக்குறைக்கு அந்தப்  பொடி பாஷை என்று ஒரு கட்டாயம் இருந்திட, இந்தத் தொடரினை ண்பர்களால் பெரிய அளவில் ரசித்திட முடியவில்லை.

'ஏக் தம்'மில் எட்டு ஆல்பங்களுக்கான உரிமைகளையும் வாங்கியிருந்ததால் வேறு வழியே இன்றி இரண்டோ மூன்றோ ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாய் ஸ்மர்ஃப்ஸ் வெளியிட்டு வந்தோம். ஆனால் துவக்க ஒன்றிரண்டு ஆல்பங்களுக்கு பிற்பாடு விற்பனை செம சுமார்தான். In fact, போன வருஷம் வரை ஸ்மர்ஃப் இதழ்கள் ஸ்டாக்கில் இருந்ததாய் எனக்கு ஞாபகம். இன்று நிதானமாய் யோசிக்கும்போது maybe அந்த பொடி பாஷையே இல்லாமல் நார்மலான கார்ட்டூன் ஸ்டைலில் அந்தக்  கதைகளைக்  கையாண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் தேவலாமாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. ஆனால் “கார்ட்டூனே வாணாமே ” எனும் அணிக்கு இந்த நீல பொடி உலகம் எவ்விதம் கையாண்டிருந்தாலும் ரசித்திருக்காது  என்பதே எனது gut feel.

ஜீனியஸ் லியோனார்டோ :

எத்தனை விதமான ஜானராக்களில் பயணித்தாலும் சகலத்தையும் முயற்சித்துப் பார்க்கும் ஒரு நெகிழ்வுத்தன்மை இன்றைக்கு சற்றே குறைந்திருந்தாலும், கொஞ்ச காலம் முன் வரைக்கும் நம் மத்தியில் சரளமாய் இருந்ததை மறக்கவே இயலாது. But எத்தனை பரீட்சார்த்தங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தீர்களோ, அதேபோல - பழகியதைத்  தாண்டிய வேறெதற்குள்ளும் கால் பதிக்கவே மாட்டோம் என்ற பிடிவாதமும் அன்றும் இன்றும் வேரூன்றி இருப்பதுமே  நிஜம். நான் குறிப்பிடுவது சிறுகதைகள் கொண்ட தொகுப்புகளின் மீது நமக்கிருக்கும் ஒருவித துவேஷப் பார்வை. ஒரு கதை என்றாலே முழு நீளமாய் 44 பக்கங்களுக்கு ஓடியாக வேண்டும். ஆரம்பம், கதையோட்டம், கிளைமாக்ஸ் என்றெல்லாம் பயணிக்க வேண்டும் என்பது காலமாய் ஆக்ஷன் கதைகளோடு நாம் பழகியிருந்த ஒரு template. ஆனால் ஐரோப்பாவிலோ நிலவரம் சற்றே மாறானது. அங்கே 44 பக்கங்களுக்கும் ஒற்றைப்  பக்கக்  கார்ட்டூன்களைக்  கூட தொகுத்து ஆல்பங்களாக்கி பெரிய வெற்றியும் காணச் செய்து வருகிறார்கள். அவ்விதமிருக்க இரண்டு பக்கங்கள், நான்கு பக்கங்கள், ஐந்து பக்கங்கள் என்று வெவ்வேறு நீளங்களிலான லியோனார்டோ கதைத்தொடர் நமக்கு அழகானதொரு கார்ட்டூன் அடிஷன் ஆகிடும் என்று நிரம்பவே நம்பியிருந்தேன். சொல்லப்போனால் ஜூனியர் எடிட்டருக்கு லியோனார்டோ செம ஃபேவரைட். So, அவரின் ஸ்ட்ராங்கான பரிந்துரையின் பேரில் “ஜீனியஸ் உறங்குவதில்லை”, “விடிய விடிய விஞ்ஞானி” என்று இந்த பஞ்சுமிட்டாய் தாடித்  தாத்தாவை தமிழுக்குக்  கொண்டு வந்தோம். And கதைகளும் சரி, இதழின் தயாரிப்பும் சரி, இன்றளவில் புரட்டிப் பார்க்கும்போது பிரமாதமாய் இருப்பதாகவே படுகிறது.

ஆனால்…“இது என்ன மேன்? குடுகுடுப்பாண்டியின் சட்டை போல துண்டும் துக்கடாவுமாய் ஒவ்வொரு கதையும்  உள்ளது. இதை ஒரு முழு இதழாக எப்படி படித்துத்  தொலைப்பது?” என்று நீங்கள் கடுகடுக்கத்  தொடங்கியதன் தொடர்ச்சியாக, இரண்டே இதழ்களோடு சுபம் போட்டு, தாத்தாவையும் அவரது அல்லக்கை அசிஸ்டென்ட்டையும் அவுக ஊருக்கே பேக்கப் பண்ணி அனுப்பிவிட்டோம். புத்தக விழாக்களில் லியோனார்டோ தாத்தா ஓரளவுக்கு பாப்புலர் தான். அவ்வப்போது “இதில் வேறு புது கதைகள் போடவில்லையா?” என்று வாசகர்கள் கேட்பதும் உண்டு தான். மந்தகாசமாய் சிரித்து வைத்துவிட்டு நகர்ந்து விடுவோம்.

சுட்டிப்  புயல் பென்னி :

இங்கு பெரிதாய் யாரையும் குறை சொல்ல நான் மாட்டேன். Becos இந்த பென்னி கதைகளானவை இரண்டுமே decent-ஆக விற்றன தான். So, விற்கவில்லை என்ற காரணம் காட்டி இவரை ஓரம் கட்டியதாகச்  சொல்ல முடியாது. Maybe ரெகுலர் தடத்தில் இவருக்கு பெருசாய் மவுஸ் இல்லாது போகலாம். ஆனால் பள்ளிகளுக்கும் புத்தக விழாக்களுக்கும் பென்னி செம செல்லப் பிள்ளை தான். இங்கே சிக்கல் என்னவெனில், இதுவுமே ஸ்மர்ஃப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பே. So, “இந்த வருஷத்துக்கு ஒரு புக் போட்டுக்கிறோம், இரண்டு புக் போட்டுக்கிறோம்” என்ற விதத்தில் இவர்களிடம் பேசவே இயலாது. எட்டு ஸ்மர்ஃப்ஸ் கதைகளை மொத்தமாய் வாங்கிய போது, கெஞ்சிக்  கூத்தாடி பென்னியில் இரண்டும் சேர்த்து வாங்கி இருந்தேன். So, அந்த இரண்டை போட்டு முடித்த பின்னே, அடுத்த ரவுண்ட் ஸ்மர்ஃப்ஸ்க்கு ஆர்டர் கொடுத்திருக்கும் பட்சத்தில் பென்னியினையும் வாங்கி இருந்திருக்கலாம். ஆனால், முதலுக்கே மோசம் என்ற நிலையில் சைடாக வந்த பென்னியை அப்படியே கை கழுவ நேர்ந்தது. Sad !!

ரின்டின் கேன் :

அது ஏனோ தெரியவில்லை — சாத்து வாங்கிய சந்துப் பார்ட்டிகளில் பெரும்பான்மை கார்ட்டூன் பார்ட்டிகளே. இம்முறையோ நமது நாலுகால் ஞானசூனியம் ரின்டின் கேன். லக்கி லூக் கதைகளில் குறுக்கும் நெடுக்கும் கூமுட்டையாய் வலம் வந்து கொண்டிருந்த இந்த மங்குணி நாயை நமக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அங்கே வலுவானதொரு உப கதாபாத்திரமாய் சுழன்று வந்த ரின்டின் கேன்னை ஒரு பிரத்யேகத்  தொடரில் spin-off நாயகராக்கி இருந்த போது, நமக்கு நிரம்பவே ரசிக்கும் என்று தான் எதிர்பார்த்திருந்தேன். And, இதன் மொழியாக்கத்திற்கு உயிரைக் கொடுத்து பணியாற்றவும் செய்திருந்தேன். ஆனால், லக்கியோடு ஜாலி ஜம்பரோடு வந்த நாட்களில் ஏற்றுக்கொள்ள முடிந்த நமக்கு, இந்த solo performance-ஐ ஏனோ அங்கீகரிக்க முடியவில்லை. வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு படிக்கக் கொடுக்கவும், காமிக்ஸ் எனும் சுவையை அறிமுகப்படுத்தவும் ரின்டின் கேன் பிரமாதமானதொரு தேர்வு என்பதில் எனக்கு ஐயங்களே கிடையாது. ஆனால், பொதுவான “கார்ட்டூன் பிடிக்காது” மூவ்மென்டில் ரின்டின் கேன் தடம் தெரியாமல் தொலைந்தே போய்விட்டது.

கர்னல் கிளிப்டன்

அடுத்த புலம்பலுமே இன்னொரு கார்ட்டூன் நாயகரைப் பற்றியானது. இம்முறையோ அவர் ஒரு கேரட் மீசைக்காரர். Oh yes! நான் குறிப்பிடுவது கர்னல் கிளிப்டனைத்தான். Personal-ஆக எனக்கு இந்த மொச்சைக்கொட்டை மூக்கு ஹீரோவை ரொம்பவே பிடிக்கும். அந்தக்  கதை பாணி, அந்த பிரிட்டிஷ் பின்புலம், அந்த வறண்ட நையாண்டிகள் என எல்லாமே ரசிப்புக்குரியவையாகவே எனக்கு தோன்றும். தம் கட்டி அவரை தமிழுக்குக்  கொணர்ந்தது “7 நாட்களில் எமலோகம்” சாகசம் வாயிலாக. அந்த 44 பக்கங்களது மொழிபெயர்ப்பையும் ஒற்றை நாளில் எழுதி, போட்டோவாய் எடுத்து வாட்ஸப்பில் ஊருக்கு அனுப்பிய கூத்தெல்லாம் இன்னமும் பசுமையாக நினைவில் நிற்கின்றது. ஆனால் நாலைந்து ஆல்பங்களுக்கு மேலாக கிளிப்டனால் தாக்குப் பிடிக்க முடியாது போனதே பெரும் துயரம். இங்கே முழுக்கவே anti-cartoon sentiment-ஐ நான் குறை காண மாட்டேன். ஏனெனில் பின்னே செல்லச் செல்ல கதைகளுக்குள் பெருசாய் சாரமின்றி சும்மா ஒப்புக்கு  நகைச்சுவை ஒட்டு போட்டிருப்பது போல் தோன்ற ஆரம்பித்தது. அங்கெல்லாம் வலுக்கட்டாயமாய் எக்கச்சக்க extra numbers-ஐ dial பண்ணி நானாக சிரிப்பு மூட்ட முயன்றிருந்தேன். So, ஒரு கட்டத்தில் விற்பனை ரொம்பவே தொய்வு கண்டபோது மீசைக்காரரை கொஞ்ச காலத்துக்கு ஜார்கண்ட் பக்கமாய் அனுப்பி வைக்கத்  தீர்மானித்தோம்.

மேக் & ஜாக் :

இவர்களுமே கார்ட்டூனுக்கு எதிரான சுனாமியில் சிதறிப்போன yet another கூட்டணி. இதுவரை கார்ட்டூன்களில் நாம் கண்டிராத ஒரு செம வித்தியாசமான பின்புலம் இந்தக்  கதைத் தொடர்களுக்கு !! 1920களிலும் '30களிலும் சிகாகோ நகரில் நிலவிய மாஃபியா அமர்க்களங்களுக்கு மத்தியில் இந்த டிடெக்டிவ்கள் கிச்சுக்கிச்சு மூட்டியபடியே வலம் வருவது எனது நெடுநாளைய favorite. In fact, இவர்களது ஆல்பங்களை 25 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே புரட்டிப் புரட்டிப் பார்த்து நானாக ஃபயர் விட்டுக் கொள்வேன். ஒரு மாதிரியாக இவர்களை நம் மத்தியில் இறக்கிவிட காலம் கனிந்துவிட்டது என்று நம்பிக்கை துளிர் விட்டபோது, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு அட்டவணையில் நுழைத்துவிட்டேன். அதிலும் அந்த “நட(ன)மாடும் கொரில்லாக்கள்” கதையெல்லாம் இன்றைக்கும் நினைத்தாலே கெக்கபிக்க என்று சிரித்து, உருள வைக்கும் கதைக்களம். ஆனால் உங்களது பார்வைக்கோணங்கள் மாறுபட்டு அமைந்துவிட, “சரிடா பா தம்பிகளா… சிகாகோவுக்கே பொட்டிகளை கட்டுங்கள்!” என்று pack up பண்ணிவிட்டோம்.

மதியிலா மந்திரியார்

தொடரும் கார்ட்டூன் சாத்து சங்கத்தில் அடுத்த பேரானது மதியிலா மந்திரியார். இவரும் எனக்கு செம ஃபேவரிட் தான். அதுவும் அந்த ஜால்ரா பாய் சகிதம் ஒரு பக்கெட்டில் ஒரு பூதத்தை பிடித்துக்கொண்டு சுற்றும் கதையெல்லாம் all-time classic என்பேன். இவர் நமது இரண்டாம் வருகைக்கு பிற்பாடான அறிமுகம் அல்ல தான். முன்நாட்களில் இருந்தே நமக்கு பரிச்சயம் தான். So, கலரில் உயர்தரத்தில் வெளியானபோது நியாயப்படிப் பார்த்தால் உங்களது darling-ஆக இருக்க வேண்டும் தான். ஆனால், “வார்டன் என்றாலே அடிப்போம்… கார்ட்டூன் என்றாலே கடிப்போம்…” என்ற உங்களது strict சுடலைமுத்து அவதாரின் முன்னே மந்திரியார் காணாமலேயே போய்விட்டார்.

Spoon & White :

இன்னொரு பெயர் from the cartoon list — ஸ்பூன் & ஒயிட்.

இரண்டே ஆண்டுகளுக்கு முன்பாய், “சரி… இதுவும் கொஞ்சம் வித்தியாசமான பாணியாகத் தெரிகிறதே!” என்ற எண்ணத்தில் களம் இறக்கியது. சந்தானம் கலாய்க்கும் slapstick பாணியில் நெடுக இந்தக்  குள்ளவாத்து டிடெக்டிவ் லந்து பண்ணிக்கொண்டே போவது ரசிக்காமல் போகாது and, களங்களுமே செம சமகால பிரதிபலிப்புகளாய் இருப்பதால் சோடை போகாது என்ற நம்பிக்கையில் வேகவேகமாய் உரிமைகளை வாங்கி இருந்தோம். வெளியான இரு கதைகளிலுமே மொழிபெயர்ப்புக்கென ஏகமாய் மெனக்கெட்டிருந்தேன். In fact, இந்தக் கதைகளை மேலோட்டமாய் படிக்கும் போது அதன் பின்னே அவசியப்பட்டு இருந்த உழைப்பு பற்றித் தெரிந்திட வாய்ப்புகள் வெகு சொற்பமே. ஆனால், பிரெஞ்சிலான இதன் ஸ்கிரிப்ட் ரொம்பவே complicated. அவர்கள் அதில் பயன்படுத்தி இருந்த நையாண்டி வசனங்கள், அவர்களது திரை உலக லந்துகள் சார்ந்த குறியீடுகள், ஹாலிவுட் படங்களை  செய்திடும் பகடிகள் என்று பல விஷயங்கள் புதையுண்டு இருந்தன. நான் பாட்டுக்கு மேலோட்டமாய் அவற்றை தாண்டி போய்விட்டால் ஏதாச்சும் முக்கிய விஷயம் விடுபட்டு போய்விடுமோ என்ற பயத்தில், இடறும் ஒவ்வொரு இடத்திலும் விரிவாய் தேடித் தேடி “இங்கே என்ன சொல்ல வருகிறார்கள்?”, “இது எந்த context-ல் பேசப்பட்டுள்ளது?” என்பதை எல்லாம் அவதானிக்க ஏகமாய் முயற்சித்திருந்தேன்.

And, எனக்கு தெரிந்த மட்டிலும் இரு கதைகளிலுமே translation decent-ஆகவே அமைந்திருந்தது.

ஆனால், விற்பனையின் அளவுகோலில் ஆக பெரிய பூஜ்ஜியத்தை இவர்களுக்கு பரிசாக நாம் வழங்கியபோது, “ஙே…” என்ற மொழியோடு நானும் அந்த குட்டை-நெட்டை கூட்டணியோடு முழிக்க மட்டுமே சாத்தியப்பட்டது.

சுஸ்கி & விஸ்கி :

கார்ட்டூன் லிஸ்டில் இன்னொரு பேரும் உள்ளதுதான் — சுஸ்கி அண்ட் விஸ்கி ரூபத்தில். ஆனால், இங்கு இவர்களது மிக மித வெற்றியானது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கவே இல்லைதான். முதல் ஆல்பத்தை ஆரவாரமாய் அரவணைத்தீர்கள். ஆனால் அதன் பின்னே இருந்தது முழுக்க முழுக்க உங்களது nostalgia மாத்திரமே என்பதில் எனக்கு முதல் நாளிலேயே புரிந்திருந்தது. இந்தக் கதைக்களங்கள் நாம் original-ஆய் ரசித்த 1987-88க்கு பிரமாதமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் “லக்கி லூக்கைத் தவிர வேற யாரையும் இன்று கார்ட்டூன் லிஸ்டில் தீண்டக்கூட மாட்டேன்” என்ற பிடிவாதத்தில் இருக்கும் இந்நாட்களில் சுஸ்கியும் விஸ்கியும் ரொம்பவே குழந்தை பிள்ளைகளாய் நமக்குத் தோன்றுவர் என்றே எனது gut-feel சொல்லியது. இரண்டாம் ஆல்பம் முற்றிலும் புதிய கதைகளுடன் வெளிவந்தபோதே அந்த gut-feel நிஜம்தான் என்பது உற்ஜிதமானது. ரொம்ப ரொம்ப ரொம்ப சுமார் sales. So, “பழைய நினைப்புடா பேராண்டி” என்ற எண்ணத்தில் நீங்கள் கோரியிருந்ததும் புரிந்தது. இவற்றை இன்றைய காலகட்டத்தில் நமக்கு ரசிக்க சுகப்படாது என்பதுமே புரிந்தது.

சோடா

சிரிப்பு பார்ட்டிகள் பக்கமிலிருந்து கொஞ்சம் serious பார்ட்டிகள் பக்கம் போவதானால், முதலில் கைதூக்கி நிற்பவர் SODA. Again, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்த அனுபவம் இது. அட்டகாசமான கதைக்களம், அசாத்தியமான பாத்திரப்படைப்பு, செம dark-ஆன கதை சொல்லல் என்று சமகால அமெரிக்காவில் பயணிக்கும் இந்தத் தொடரை நியாயப்படிப் பார்த்தால் பெரிய அளவில் நாம் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அந்த கார்ட்டூன் பாணி ஒரு ஆக்ஷன் நாயகருக்கு செட்டாகவில்லையா? அல்லது அந்த dark-ஆன கதை சொல்லல் பிடிக்கவில்லையா? அல்லது பிஸ்டல் எடுத்தவன் pastor ஆவது ரசிக்கவில்லையா? சத்தியமாய் காரணம் தெரியவில்லை.மெய்யாலுமே கொண்டாடியிருக்க வேண்டிய தொடரை கோட்டை விட்டுவிட்டோமே என்ற வருத்தம் இன்றளவும் என்னுள் கணிசம்.

ஆல்பா & சிஸ்கோ

The same goes with ஆல்பா and சிஸ்கோ. இருவருமே செம சமகால நாயகர்கள். ஒருத்தர் அமெரிக்க CIA உளவுத்துறையிலும், இன்னொருவர் French Secret Service-இலும் இருக்கும் ஏஜென்டுகள், ஆக்ஷன் நாயகர்கள். அதிரடிகளுக்கோ, சித்திர ஜாலங்களுக்கோ, புதுயுக கதை சொல்லல்களுக்கோ, ஓவிய அதகளங்களுக்கோ, digital coloring-க்கோ எவ்விதத்திலும் குறையே வைக்காத நாயக பெருமக்கள்தான். ஆனால் ஆல்பாவில் “வசனங்கள் ஜாஸ்தி, கதையோட்டத்தில் வேகம் மிதம்” என்கின்ற ரீதியில் புகார்கள். ஏஜென்ட் சிஸ்கோவிலோ ஒருவித negative streak இருப்பதாக வருத்தங்கள்.

இரண்டுமாய் சேர்ந்து தலைதூக்கிய சமயமோ “crisp reading” என்ற தாரக மந்திரத்தை நாம் கையில் எடுக்கத் துவங்கிய நாட்கள். இம்மி பிசகினாலும் சீட்டு கிழிந்துவிடும் என்ற சூழலில் அத்தனை நாயகர்களையும் கம்பி மேல் நடக்கவிட்டிருந்த போது, கொஞ்சமே கொஞ்சமாய் தடுமாறிய ஆல்ஃபாவையும் சிஸ்கோவையும் அப்படியே பொத்துனா போல் இறக்கிவிட்டு ஓரமாய் குந்தச்  செய்துவிட்டோம். நிஜமான வருத்தம் எனக்கு இந்த இருவரும் நம் மத்தியில் நெடுங்காலம் உலவாது போனதில்தான்.

மேஜிக் விண்ட் & ஜூலியா

அதே வருத்தம் மேஜிக் விண்ட் மற்றும் ஜூலியா நம்மோடு தொடர்ச்சியாய் travel செய்திட முடியாது போனதிலுமே. பொதுவாய் போனலியின் கதைகளும் சரி, கதை நாயகர்களும் சரி — சொல்லியடிக்கும் கில்லிகள். டெக்சில் துவங்கி மார்ட்டின், டைலன் டாக், சாகோர், ராபின், டெட்வுட் டிக் என்று அவர்களது ஒவ்வொரு படைப்புமே, பெயர் சொல்லி நிற்கும் சாஸ்வதங்கள். இதோ சமீபமாய் நாம் அறிமுகம் செய்துள்ள சகுவாரோ, சமுராய் தாத்தா கூட போனலியின் அசாத்தியப்  படைப்புகளே. நியாயப்படி அந்த வரிசையில் மேஜிக் விண்டும் இடம் பிடித்திருக்க வேண்டும் தான். அதிலும் கலரில் ஒருவித fantasy plus அமானுஷ்யம் கலந்த கதைகளங்கள் என்றபோது. ஆனால் அந்த சித்திரங்கள் அவ்வளவாய் ரசிக்கவில்லையா? அல்லது அந்த fantasy சற்றே ஓவராக இருந்ததும் பிடிக்கவில்லையா? சொல்ல தெரியவில்லை. “ஆத்மாக்கள் அடங்குவதில்லை” மூலம் அமர்க்களமாய் அறிமுகமான மேஜிக் விண்ட் மூன்றோ நான்கோ சாகசங்களோடு மூலை சேர்ந்துபோனது ஒரு தீரா வருத்தம் எனக்கு. நடிகை ராகுல் ப்ரீத் சிங் கையில் இந்த புக் தென்பட்டது மட்டுமே ஆறுதல் !! 

Same goes for கொடியிடை ஜூலியா too. குறிப்பாக அந்த “நின்றுபோன நிமிடங்கள்” சாகசமெல்லாம் இன்றைக்கும் நினைவில் நின்றுவிட்ட ஒரு படைப்பு.

லேடி எஸ்

புதிராய் தொடரும் இன்னொரு பெண் புலி நமது LADY S.

கதாசிரியர் ஷான் வான் ஹாம் என்ற பேரைக் கேட்டாலே நம் களங்கள் அதிர்வது வாடிக்கை தான். So, அவர் உருவாக்கிய கதாபாத்திரம் அட்டகாசமான சித்திரங்களுடன் களம் காணும்போது நாயகி பட்டையை கிளப்பி இருக்க வேண்டும் நியாயப்படி. “விடைகொடு ஷானியா” என்ற முதல் double album-ஐ வெளியிட்ட போதெல்லாம் எனக்குள் ஓராயிரம் எதிர்பார்ப்புகள் இருந்தது நிஜமே. ஆனால் கதையில் லைட்டாக fire குறைச்சல் என்ற உணர்வு பின்னே போகப்போக தலை தூக்கியதும் நிஜமே. நீங்கள் தான் அன்னப்பறவைகளுக்கு அங்கிள்களாச்சே...? பாலில் அரைக்கால் சொட்டு கலப்படம் இருந்தாலும் நொடியில் இனம் கண்டு விடுவீர்களே. லேடி S-ன் பருப்பு உங்களிடம் வேகாமல் போயே விட்டது. ஒரு வேளை "விடைகொடு ஷானியா"ன்னு தலைப்பு வைச்சது தான் தப்போ ?  அம்புட்டு சடுதியில் மெய்யாலுமே ஷானியாவுக்கு நீங்களே விட தந்திடுவீங்கன்னு எதிர்பார்க்கலை ! அடுத்த தபா - "ரா...ரா... சரசுக்கு ரா..ரா..! "என்று தலைப்பு வைத்து முயற்சிக்கலாமோ ? 

அமாயா

இன்னொரு நாயகியையும் சொல்லலாம். ஆனால் அவரை சொன்னால் என்னை விளக்கமாற்றால் சாத்துவீர்கள் என்பதால் “அமாயா” என்று உச்சரித்துவிட்டு நடையைக் கட்டி விடுகிறேன். அவரை தொடராது விட்டவன் நானே. So, அமாயாவுக்கு சாத்து வாங்கிய சங்கம் இடமே தராது.

தாத்தாஸ் அணி :

இந்தச்  சந்தில் பதுங்கிக் கிடப்போரில் எனக்கு உச்சபட்ச வருத்தத்தை தருவது ஒரே ஒரு அணி தான் — அந்த அணி மொத்தமாய் பல் போன தாத்தாஸ் அணி.

நமது இத்தனை ஆண்டுகால காமிக்ஸ் பயணத்தில், இத்தனை ஆயிரம் ஆல்பங்களுடனான travel-ல், இந்த தாத்தாக்களின் பின்புலத்துடன் இத்தனை ரம்யமானதொரு, ஆழமானதொரு, அசாத்தியமானதொரு, ஆரவாரமானதொரு தொடரை பார்த்திருக்கவே கிடையாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. எந்தத்  தொடர் தோற்றாலும் இவர்கள் தோற்கவே கூடாது. என்றே விழைந்தேன் ! "இந்தியாவுக்குள் எந்த ஒரு மொழியிலும், எந்த ஒரு எடிட்டரும் இவர்களை சுட்டுவிரலால் கூட தொட மாட்டார்கள். ஆனால், எங்கள் தமிழ் வாசகர்கள் இவர்களை ரசிக்க தவறுவதில்லை" என்று எண்ணற்ற முறைகள் காலரை தூக்கி விடவும் இந்த தாத்தாக்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஆனால் இன்றைக்கோ ஐந்து ஆல்பங்கள் கண்டுள்ள இந்தத்  தொடரை வம்படியாய் இந்த ஆண்டு இழுப்பதற்குப்  பிற்பாடு, தொடர்ந்திட ஜீவன் இருக்குமா என்று சத்தியமாய் சொல்ல தெரியவில்லை. Maybe, எனது வயதில் எனக்கு இவர்களது கதைகள் ரசிப்பதற்கும், என்னை விட 20-25 ஆண்டுகள் குறைச்சலான வயதில் உள்ளோர் ரசிப்பதற்கும் மத்தியில் ஏகமாய் வேறுபாடுகள் இருக்கக் கூடும். So, எனக்கு தங்கமாய் தெரிந்திருக்கும் சமாச்சாரம் அவர்களுக்குத் தகரமாய் தெரிவதிலும் நியாயம் இருக்கலாம். ஆனாலும், தாத்தாக்களை முழுமையாய் தொடர முடியாது, அந்தரத்தில் தொங்கவிட்டு விடுவோமோ என்ற பயம் மெய்யாலுமே வருத்துகிறது.


இந்தப்  பட்டியலில் கமான்ச்சேவையும் குறிப்பிடலாம். இன்னும் எனக்கு மறந்து போயிருக்கக்கூடிய சில பல நாயக, நாயகியரையும் இணைக்கலாம் தான். 

ஆங்கிலத்தில் சொல்வார்கள் : “Absence makes the heart grow fonder.” என்று .நீண்டதொரு இடைவெளி விடும்போது...... நிறைய நாட்கள் பார்க்காமலே இருக்கும் போது, நெஞ்சுக்குள் ஒரு நேசம் துளிர்விடுமாம். அதுபோல, என்றோ ஒரு தூரத்து நாளில் நாம் கழற்றி விட்டுள்ள இந்த புண்ணியவான்களில் யாரையேனும் மறுக்கா பார்க்கும் ஆவல் நமக்குப்  தோன்றிடும் பட்சத்தில், சந்திலிருந்து கூட்டுவர நானாச்சு. Of course, “நாளைக்கே எல்லாரையும் அழைத்து வந்து விடுங்கள்… தூள் கிளப்பி விடுவோம்!” என்று குரல்கள் எழும் என்பது தெரியாதில்லை. ஆனால், the proof of the pudding is in the eating என்று சொல்வார்கள். கண்ணுக்கு முன்னே மேகி காரிசனும், தாத்தாக்களும், FAB 5 கதைகளும் அல்லாடும் நிலையில், இந்த லிஸ்ட்டை பார்த்த மறுநொடியில் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்குவது இந்த நொடியின் reactions-ஆக மாத்திரமே இருந்திடக்கூடும். பார்க்கலாம் guys… நாட்களின் ஓட்டத்தோடு இவர்களை மறுக்கா பார்க்கும் ஆவலும் மெய்யாகவே நம் மத்தியில் பரவலாகிடுமா என்று. நெம்ப பெரிய டீயா ஆத்தி இருக்கேன் - கொஞ்சம் பாத்து கடைக்கு ஆதரவு கொடுங்கோ - ப்ளீஸ் !!

Bye now, See you around ! "குருதியின் கூலி"யோடு போராடப் புறப்படுகிறேன். Have a great Sunday. 

P.S : The TERRIFIC TEX சந்தா - நாற்கால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது !! கதைகள் சகலமும் வந்தாச்சு - so பணிகளைத் துவங்கப் போகிறோம் !! இயன்ற மட்டுக்குத் துரிதமாய்  சந்தாவில் இணைந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? Icing on the cake - ரெகுலர் சந்தாவில் அல்லாத பல நண்பர்களும் இம்முறை இணைந்திருப்பது !! Welcome guys !!





Wednesday, May 06, 2026

தலைவனோடு ஒரு திகில் பயணம்...!

நண்பர்களே,

வணக்கம் புதுசாய் ஒரு நாள், புதுசாய் ஒரு பொழுது, தமிழகத்துக்கே புதுசாய் ஒரு பயண திசை.... ! Gen-Z களின் சகாப்தம் இது என்பதால், இனிமேலும் இந்த "வணக்கம், வந்தனம், நமஸ்காரமெல்லாம் எடுபடுமா என்று சொல்லத் தெரியவில்லை. So, "நல்லா இருக்கீங்களா மக்களே?" என்று ஆரம்பிப்போமா?அட, ஆரம்பம் எப்படி இருந்தாலும் நாம அரைக்கப்போற மாவு அதுவேதானே? So, "ஆகிற பொழப்பப் பாருடா தம்பி" என்று மைண்ட்வாய்ஸ் சொல்கிறது. 

பொதுவாகவே வண்டியை நமது வாட்சப் கம்யூனிட்டி பக்கமாய் திருப்பிய நாள் முதலாக, இங்கே ப்ளாக்கில் புதிய இதழ்கள் பற்றிய preview-வைத் தாண்டி பெரிதாய் நான் எதுவும் எழுதுவதில்லை. In some ways, சோம்பலின் வெளிப்பாடு என்று கூட அதைச் சொல்லலாம். ஆனால் இந்த மே மாதமோ, கைகளில் மூன்றே புக்ஸ் மட்டுமே இருந்தாலும், என்னையும் அறியாமல் அவற்றைப் பற்றிப் பேச ஒரு உந்துதல் உள்ளுக்குள்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னே படைப்பாளிகளைச் சந்திக்க இத்தாலி சென்றிருந்த போது, டெக்ஸ் அலுவலகத்திற்குள் மிட்டாய் கடைக்குள் நுழைந்த கண்கள் விரிந்த குழந்தையைப் போலவே வாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அதுமட்டுமின்றி, நமது மறுவருகையின் துவக்க நாட்கள் என்னும்போது, டெக்ஸ் Universe-க்குள் இன்றைக்குப் போல் அன்று பூரணமாய் நாம் மூழ்கி இருக்கவுமில்லை. So, கதாசிரியர் மௌரோ போசெலி அவர்களைச் சில நிமிடங்கள் சந்தித்ததைத் தாண்டி, அவருடன் பெரிதாய் interact செய்திட சந்தர்ப்பமும் அமைந்து இருக்கவில்லை. ஆனால் இந்தக் கடைசி பத்து ஆண்டுகளில் வண்டி வண்டியாய் டெக்ஸ் கதைகளோடு அன்னம் தண்ணி புழங்கிய பிற்பாடு, அதிலும் மௌரோ போசெலியின் படைப்புகளில் எக்கச்சக்கத்தை ருசித்த பிற்பாடு, அந்த மனுஷனை எண்ணி மானசீகமாய் சிலை வைக்காது இருக்கவே முடியவில்லை.

கிடைத்த கொஞ்ச அவகாசத்தில் நான் அவரிடம் கேட்ட ஒரே கேள்வி: "கண்ணிலேயே பார்த்திருக்காத ஒரு யுகத்தில், கண்ணிலேயே பார்த்திருக்காத மனிதர்களுடன் அரங்கேறியதொரு சூழலைப் பற்றி இத்தனை இத்தனை கதைகளை எங்கிருந்துதான் உருவாக்க கற்பனைகள் துளிர் விடுகின்றனவோ?" என்பது மட்டுமே. சின்னதொரு புன்னகையில் பதில் சொன்னவர், என்னை டெக்ஸ் story room-க்குள் இட்டுச் சென்ற போது ஏற்கனவே திறந்து இருந்த வாய் கூடுதலாக ஓபன் ஆகியது. திரும்பிய திக்கிலெல்லாம் வன்மேற்கு சார்ந்த reference புத்தகங்கள், கோப்புகள், ரைபிள் பொம்மைகள், பிஸ்டல் பொம்மைகள், கோச் வண்டி பொம்மைகள், குதிரை மாடல்கள் என்று குவித்து வைத்திருந்தனர். அங்கே இருந்த அந்தச் சின்னச் சின்ன பொம்மைகளும் கூட அந்த காலத்தின் பிரதிபலிப்பு. ஒரு கோச் வண்டி என்றால் எப்படி இருக்கும்? ஒரு பிஸ்டல் என்றால் அதன் எடை என்ன? அதன் வடிவம் என்ன? என்று ரேஞ்சில் அவர்கள் செய்திடக்கூடிய அலசல்கள் சகலத்துக்கும்  அங்கே references இருந்தன. அதே போல வன்மேற்கின் ஒவ்வொரு காலகட்டத்தையும் அங்குலம் அங்குலமாய் வாசிக்கவும், அலசி ஆராய்ந்திடவும் ஒரு டீமே அவர்களிடம் இருப்பது தெரிந்தது.

"நியூ மெக்ஸிகோ" என்று எடுத்துக் கொண்டால் அதன் வரலாறு, அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், வாழ்ந்த மனிதர்கள், சொல்லும்படியான பிரதான சம்பவங்கள் என்று குறிப்பு எடுத்துக் கொள்கிறார்கள். இதே போல அரிசோனா, டெக்சாஸ், உடாஹ், சான் பிரான்சிஸ்கோ என்று நெடுக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பான அந்தக்  காலகட்டத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராயும் போது, ஒரு துக்கணூண்டு புள்ளியாய் ஏதேனும் ஒரு விஷயம் கிடைத்தால் கூட அதை இறுகப் பற்றிக் கொண்டு அதனை மேற்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். ஆக, முதல் புள்ளி அழகாய் அமைந்துவிட்டால், அப்புறமாய் அதை ரங்கோலி ஆக்கும் வேலைகளை போசெலி தெறிக்கவிடும் லாவகத்துடன் செய்து முடிக்கிறார். Of course, இதைச் சொல்வது சுலபமே; வாய் கிழியப் பேசுவதும் அதைவிட சுலபமே. 220 பக்கங்களுக்கு ஒரு சிறு புள்ளியை நீட்டிச் செல்வதென்பது அசாத்தியம் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் அதனையே வாழ்க்கையின் லட்சியமாக்கி இருக்கும் மனுஷனுக்கு இதெல்லாம் ஜகஜம் தான் போலும்.

இதோ காத்திருக்கும் "நித்திரை மறந்த நித்தியன்" கூட மௌரோ போசெலியின் yet another masterpiece. இம்முறையோ களம் மெக்ஸிகோ; அங்கு அரங்கேறும் ஒரு வினோதத் திருவிழா கதைக்கு பின்புலமாகிறது. பற்றாக்குறைக்கு மெக்சிக நாட்டுப்புற கதைகளில் புழங்கிடும் ஒரு அமானுஷ்யத்  தகவலை இறுக்கமாய் பற்றிக்கொள்ளும் போசெலி, இந்த 52 பக்க கலர் கிராபிக் நாவலில்  ஊடுகட்டி அடித்திருப்பது அட்டகாசம்  .ஆண்டுக்கு ஒருமுறை Franco-Belgian சித்திரபாணிகளில், பக்க நீளங்களில் கதை அமைப்பினில் ஒரு டெக்ஸ் ஆல்பத்தையும் கடந்த 10-12 ஆண்டுகளாகவே போநெல்லி வெளியிட்டு வருகின்றனர். இந்த மாதம் உங்களை எட்டிட உள்ள இந்த ஆல்பமோ 2025-இல் வெளியான முயற்சி. அந்நேரமே இது என் கண்ணில் பட்டிருந்தது; நம் நண்பர்களுள் யாரோ ஒருவருமே கூட இது குறித்து வினவி இருந்தது நினைவு உள்ளது. நான் பார்த்ததெல்லாம் கதாசிரியர் யார் என்பது மாத்திரமே. போசெலி என்றிருந்த மறுநொடியில் எவ்வித தயக்கமும் இன்றி 2026-இன் பட்டியலுக்குள் இதனை முதலாவதாய் குறித்து வைத்திருந்தேன்.

In fact, இது ஜனவரியிலேயே வந்திருக்க வேண்டிய ஆல்பமே. ஆனால் போன வருஷம் நமது ஈரோடு சந்திப்பின் போது, நம்ம சேலத்து டாக்டர் சார், "ஆண்டின் முதல் மாதத்தில் பொங்கல் விடுமுறைகளும் இருக்கும் போதெல்லாம் ஏதாச்சும் ஒரு தாட்டியமான டெக்ஸ் சாகசத்தை போட்டுத் தாக்குங்க சார், 'இளமையெனும் பூங்காற்று' ரேஞ்சுக்கு புசுக்கென்று முடியும் கதைகள் வேண்டாமே" என்ற கோரிக்கையை எழுப்பி இருந்தது நினைவுக்கு வந்தது. சரி, அதுவும் சரிதான். சென்ற வருடம் வந்த டெக்ஸ் கிராபிக் நாவல் அத்தனை ரம்யமில்லை எனும்போது, மறுபடியும் அந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஜனவரிக்கு எண்ணியிருந்த இந்த இதழைப் பின்தள்ளி இருந்தேன்.

பத்து நாட்களுக்கு முன்பாக இந்தக் கதைக்குள் பணி செய்ய புகுந்தபோது, பொம்மை பார்த்திருந்த அனுபவம் மட்டுமே இந்தக் கதையோடு எனக்கு இருந்தது. பெரிதாய் கதைச் சுருக்கத்தையோ, கதையை கிளைமாக்ஸ் வரையோ வாசித்துவிட்டு வேலைகளை நான் ஆரம்பிப்பதே கிடையாது. அட, பக்கத்தைப் புரட்டப் புரட்டக் கதையோடு பயணித்தால் போதும்தானே என்பதே இந்தச் சோம்பேறி மாடனின் ஆரம்ப காலம் முதலான வாடிக்கை. இங்கே கதை நெடுக மெக்ஸிகோ மண் கண்ணில்பட்டது எனக்குள் லைட்டாக ஒரு குஷியை ஏற்படுத்தியது. Because, மெக்ஸிகோவில் அரங்கேற்றிடும் சாகசங்கள் அனைத்துமே பட்டாசு ரகமே. கனடாவுமே அதேபோலதொரு களம்தானல்லவா? மெதுமெதுவாய் பணிகளுக்குள் புகுந்தபோது ஒரு விஷயம் பிரதானமாய்ப் புரிந்தது. 220 பக்கங்கள் எனும் நெடும் canvas சாத்தியமாகிடும்போது, ஒரு சாகசத்தைப் பிரம்மாண்டமாக்கிச் சொல்லும் களம் கதாசிரியர்களுக்கு வாய்க்கின்றது. ஆனால், 52 பக்கங்களே கதை சொல்லலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்போது, கிரிஸ்ப்பாகக் கதை நகர்த்தலைச் செய்திடும் லாவகம் போஸலிக்கு லாலாகடை அல்வாவைச் சாப்பிடுவது போல் என்பது ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. கோமஸ் என்றதொரு புது ஓவியரின் கைவண்ணத்தில் சித்திரங்கள் பிளஸ் கலரிங் அனல் பறக்க விட்டுக்கொண்டிருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கதையினூடே ஒரு மெல்லிய திகில் படர்வதை உணர்ந்தபோது பரபரப்பு எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. அந்த நொடியில் இது கற்பனையா? ஏதேனும் நிஜச் சம்பவமா? என்றெல்லாம் கூகுள் பண்ணி ஞானத்தை வளர்த்துக்கொள்ள நான் மெனக்கெடவில்லை. Becos, clean slate ஆனதொரு மனதுடன் போஸலியுடன் பயணம் செய்வதுதான் உசிதமாக இருக்கும் என்றுபட்டது. So, கதையின் போக்கிற்கே பயணத்தையும் மேற்கொண்டபோது கிட்டிய அனுபவம் செம ஜிலீர். Oh yes, தமிழ்ச் சினிமாக்களின் கதைக்களம் போல யூகிக்கக்கூடிய சுலபமான பிளாட்தான். ஆனாலும், ஒரு கற்பனை அல்லாத புள்ளியைக் கதைக்குள் கொணர்ந்து, அங்கு நமது நாயகர்களையும் இறக்கிவிட்டு, கதையோடு அவர்களைப் பிசிறின்றிப் பயணிக்கச் செய்யும் அந்த வித்தை மெய்மறக்கச் செய்தது நிஜமே.

பக்கங்கள் 52 என்றாலும், பக்கம் ஒன்றிற்கு குறைந்தது எட்டிலிருந்து பத்து சித்திரங்கள் என்பதால், வசனங்களும் கணிசமே. ஆனாலும் துளி கூட தொய்வின்றி டாப் கியரில் ஆரம்பிக்கும் கதையானது முற்று என்ற புள்ளி வரையிலும் டாப் கியரிலேயே பயணிப்பதை நான் ரசித்தது போலவே நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இந்தக் கதைப் பின்னணி பற்றி மேலோட்டமாய் ஹாட்லைனிலும் எழுதி இருக்கிறேன் தான். ஆனால் கதைக்குள் மூழ்குவதற்கு முன்பாக அதனை கூகுள் செய்வதோ, YouTube-ல் தேடுவதோ வேண்டாமே ப்ளீஸ் மக்களே. என்னவென்றே தெரியாது உட்புகுந்து ஒரு மெக்சிகன் நம்பிக்கை என்னவென்று தெரிந்துகொண்டு, அப்புறமாய் அதனை ஸ்டடி செய்து "ஓஹோ! இந்த புள்ளி இவ்விதம் தான் ஆரம்பமா?" என்று கிரகித்துக் கொள்ளுங்களேன். தலைகீழாய் செய்துவிட்டால் வாசிப்பில் நிச்சயமாய் வேகம் குன்றிவிடும். Spoiler Alert தந்துவிட்டேன், இனி உங்கள் கைகளில். 

சித்திரங்களும் டிஜிட்டல் கலரிங்கும் முற்றிலுமாய் வேறொரு லெவல். சுட்டெரிக்கும் மெக்சிகோவின் அந்த மண்ணும் சரி, அந்த ஸ்பானிஷ் ஸ்டைலிலான கட்டிடங்களும் சரி, மெக்சிக கோவ்பாய்களின் உடுப்புகளும், நாலு மண்டைக்கு சேரக்கூடியதொரு தொப்பியையும் நெடுக பார்ப்பது செமத்தியாக உள்ளது. And நடுநடுவே சில பக்கங்கள், சில பிரேம்கள் சுற்றிலும் வெள்ளை பார்டர்கள் இன்றி edge to edge இருப்பதையுமே காணப்போகிறீர்கள். So, "நடுவுல கொஞ்சம் வெள்ளை பார்டரை காணோம், பைண்டிங்கில் கோளாறு !! நடந்தது என்ன?" என்று ஒரு விசாரணைக் கமிட்டி போட்டுவிட வேண்டாமே ப்ளீஸ்.

இம்மாத்தின் அடுத்த ஹைலைட் மூன்று Top நாயக நாயகியர் பங்கேற்கும் The கோடைமலர் '26. என்னை கேட்டால் இந்த இதழுக்கு "Dark ஸ்பெஷல்" என்று கூட பெயர் வைத்திருக்கலாம். Becos, தற்செயலானதொரு ஒற்றுமையாய் மூன்று கதைகளுக்குமே டிஜிட்டல் கலரிங் பெருவாரியான டார்க் கலர்களில் செய்துள்ளனர். ஜானியின் வரிசையில் இது ரொம்ப லேட்டஸ்ட் ஆல்பம் அல்ல. So, அந்நாட்களது கலரிங் ஸ்டைல் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டாங்கோவிலோ அதன் ஓவியருக்கும் கலரிங் ஆர்டிஸ்டுக்கும் அடர்வண்ணங்களில் Light and Dark என்று பிரித்து காட்டுவதில் ஒரு அலாதி பிரியம் எப்போதுமே உண்டு. So, அங்கமும் ஏகப்பட்ட அடர்த்தியான கலரிங். இம்முறை ரூபின் ஆல்பத்திலுமே கலரிங்கில் அதே போலான பாணி தான். So, கதைகள் நெடுக Dark themes கையாளப்பட்டிருப்பதை பார்த்திடலாம். தற்செயலான இன்னொரு ஒற்றுமையாய் மூன்று கதைகளுக்குமே கதைப்  பின்புலங்களுமே  செம டார்க்.

வழக்கமாய் ஜானி கதைகளில் நெளிநெளியாய் இடியாப்பத்தை சுற்று சுற்று என்று சுற்றிவிட்டு, இறுதியில் இரண்டே பக்கங்களில் சகல முடிச்சுகளையும் அவிழ்த்துவிட்டு "சுபம்" போட்டுவிடுவார். இம்முறையும் கிட்டத்தட்ட அதே பாணி தான். ஆனால் "சுபம்" போடும் கட்டத்தில் மனம் லேசாகக்  கனப்பதை தவிர்க்க இயலாது. ​இப்போதெல்லாமே ஜானி கதைகளை நான் தான் கையாண்டு வருகிறேன் என்பதால் ஜானி சார் மீது ஒரு பயம் கலந்த மரியாதை ஒருமிடறு தூக்கலாக இருப்பது நிஜமே. கருணையானந்தம் அங்கிள் எழுதிக் கொண்டிருந்த வரைக்கும் "ஆங்... ரைட்டு ஜானி கதைகள் என்றாலே இப்படித்தான் இருக்கும் !" என்ற நம்பிக்கையில் பெருசாய் நோண்டாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன் தான். ஆனால் இப்போதெல்லாம் புள்ளி வைக்கத்  தவறினால் கூட புடனியோடு போடுவதால். ஒரு பக்கம் பிரெஞ்சு ஒரிஜினல், இன்னொரு பக்கம் ஆங்கில மொழிபெயர்ப்பு அப்புறம் சந்தேகங்களை நிவர்த்திக்க கூகிள் என்ற கையோடே எழுத வேண்டியுள்ளது. ​இந்த அழகில் இடியாப்பமும் நூடுல்ஸும் கலந்து தட்டில் பரிமாறப்படும் போது வாய்க்குள் நூடுல்ஸை நுழைக்கிறேனா முட்கரண்டியை மட்டுமே நுழைத்துக் கொண்டிருக்கிறேனா என்பதில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டி உள்ளது.And சமீப ஆண்டுகளில் வெளிவந்துள்ள ஜானி கதைகளுள் இம்மாதம் காத்திருக்கும் "திகில் முகமூடி" has to rank among the best என்பேன்.

​நீங்கள் என்னதான் நமது புன்னகை இளவரசரை கொண்டாடினாலும் எனக்கு அவரது சில கதைகளின் மீது லைட்டான மனத்தாங்கல் உண்டு தான். இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நிறைய முறைகள் நினைத்திருக்கிறேன். ஆனால் ஒரு தெளிவான கதை நாட் கிடைத்துவிட்டால்...அதுவே  மதி. பாக்கி சகலத்தையும் கதை சொல்லலில் சரி செய்து விடுவோம் என்று கதாசிரியர் சந்தேகத்திற்கு இடமின்றி establish செய்வதை இம்முறை பார்க்க முடிகிறது. திகில் முகமூடி வழக்கம் போல் கதை நெடுக வந்து போகும் மனிதர்களை எல்லாமே சந்தேக வட்டத்திற்குள் உட்படுத்தும் ஒரு murder thriller தான். இம்முறையோ ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகள் சரளமாய் அரங்கேறிட சீட்டின் நுனியில் அமர்ந்தபடியே பேனா பிடித்த பிழைப்பாகிப் போனது. And yes, கதை climax-ஐ நெருங்கிய போது மெதுமெதுவாய் கொலையாளி யார் என்பதை யூகிக்க எனக்கு சாத்தியப்பட்டது தான். ஆனால், அதை முறைப்படி கதாசிரியர் சொல்லும் தருணத்தில் துவக்கப்புள்ளிகளிலிருந்து சகலத்தையும் கனெக்ட் செய்திடும் அந்த நேர்த்தி பிரமிக்கச் செய்தது. கோடை மலரில் இம்முறை ரிப்போர்ட்டர் ஜானிக்கே முதல் ஸ்லாட் தந்துள்ளோம். அதற்கு காரணமில்லாதில்லை. இந்த இதழில் உங்கள் வாசிப்பை ஜானியிலிருந்தே துவக்கினால் சிறப்பு தான் என்பேன்.

Next in line நமது லோன்ஸ்டார் டாங்கோ. முதல் சாகசம் முதலாகவே இவரிடம் ஒரு வித மௌனமான கோபம் குடியிருப்பதை பார்க்க முடிந்தது. "தனிமையே என் துணைவன்" என்ற பாட்டு இவருக்குமே சூட்டாகும் தான் என்றாலும், நடுவே அந்த அர்ஜென்டின போலீஸ்காரர் மரியோ பார்ட்னர் ஆகிய பிற்பாடு அந்த கோபம் சற்றே மட்டுப்பட்டிருந்ததாய் பின்னாட்களது ஆல்பங்களில் தெரிந்தது. ஆனால் இம்முறையோ மனுஷன் ஒரு ரௌத்ர தாண்டவத்தை அரங்கேற்றி இருப்பதை பார்த்திடலாம். இந்த ஆல்பத்தினுள் புகுந்திட முன்பாக முடிந்தால் அத்தியாயம் இரண்டை ஒருவாட்டி புரட்டிக்கொண்டால் கதை மாந்தர்களை அடையாளம் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பேன். OS, என்னைப்போல வெண்டைக்காய் பார்ட்டியாக நீங்கள் இல்லாதிருக்கும் பட்சத்தில், "சிவந்த மண்" சாகசத்தில் வந்து சென்ற அந்த தீவு வாசிகளை உங்களுக்கு நினைவு இருக்கவும் கூடும். முழுக்கவே பராகுவே எனும் தென்னமெரிக்க தேசத்தில் அரங்கேறிடும் இந்த சாகசம் ஒரு high voltage அடிதடி மேளா தான். டாங்கோவின் தொடரில் நாம் தற்சமயம் தொட்டிருப்பது ஆல்பம் நம்பர் ஆறு. இன்னமும் இதுவரை நாம் முயற்சித்திருக்காத ஆல்பங்கள் மூன்றே தான் பாக்கி. So, happy to see us making decent progress with this series.

கோடை மலரின் இன்னொரு highlight நமது சிகாகோ டிடெக்டிவ் அம்மணி ரூபின் தான். ரூபின் கதைகளில் எப்போதுமே ஒரு வித கனம் இருப்பது முதல் நாளிலேயே புரிந்தது. அந்த கனம் ரொம்பவே அழுத்தமாகிட கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அந்த சித்திர பாணியை semi-cartoon style-இல் அமைத்திருப்பதாக எனக்குப் படுகிறது. இதே கதையினை நார்மலான உயிரோட்டமான ஓவியங்களில் படைத்திருந்தால் படிக்க கொஞ்சம் அயர்வு ஏற்பட்டிருக்குமோ என்னவோ சொல்ல தெரியவில்லை. ஆனால் இந்த லைட்டான சித்திர பாணியில் கனமான கதைக்களங்களை சுலபமாய் ரூபின் பேலன்ஸ் செய்து விடுகிறார்.

"விடுமுறையில் விதி முடிப்போம்" ஒரு யதார்த்தமான குற்றப்புலனாய்வு. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் இங்கே அணுகுண்டு கடத்தலையோ, தேச துரோக வழக்குகளையோ நமது கேரட் கேச  அம்மணி துப்புத் துலக்குவதில்லை. ஆனால் விடுமுறைக்கு வீடு செல்லும் போதும் எதிர்படும் வில்லங்கத்தை அட்டகாசமாய் அம்மணி கையாள்வதே இந்த 44 பக்க அதிரடி !! வசனங்கள் கணிசமாய் உண்டு தான், and, கடந்த சில ஆண்டுகளின் வழக்கம் போல ரூபினுக்கு முதல் கட்ட பேனா பிடிப்பு நமது டீமின் Ms.P. சுகன்யா. இரண்டாம் கட்ட பேனாப்பிடிப்பு நமது புடைத்த மூக்கர். வண்டி வண்டியாய் டயலாக்ஸ் இருந்தாலும் துளியும் அயர்வூட்டாமல் கதையை நகர்த்திச்  செல்வது கதாசிரியரின் பிரதான வெற்றி என்பேன். And, கதை முடியும் அந்த இறுதி பிரேமில் வசனங்களே இன்றி இரண்டே சித்திரங்களில் அவர் சொல்ல முனையும் செய்தியும் ஒரு ஹைக்கூ கவிதை ரகம். So, மளமளவென்று வாசித்து விட்டு நகரும் வேகத்தில் சித்திரங்களையும் சில மௌனக் குறியீடுகளையும் miss பண்ணி விடாதீர்கள் மக்களே.

இம்மாதத்தில் பேனாவைத் தூக்கிக்கொண்டு நான் ஷன்டிங் அடிக்கும் மூன்றாவது இதழ் பூம் பூம் தாத்தா. இதன் target audience Gen-Z என்றாலுமே, நம் மத்தியில் உள்ள தாத்தாக்களுக்கு இது சத்தியமாய் ரசிக்காது போகாது என்பது உறுதி. Maybe, சில பல youth-களுக்கு "இதில் என்னய்யா இருக்கு?" என்று தோன்றலாம்தான். ஆனால், மனித உறவுகளின் ஒரு அழகான பரிமாணத்தை காட்சிப்படுத்தும் இந்தத் தொடர், இன்றில்லாவிட்டாலும் ஏதோ ஒரு தூரத்துப் பின்னாளியில் உங்களுக்குள் Resonate ஆகாது போகாது என்பேன்.அதிலும், அந்தக்  கடைசிக்  குட்டிக்கதையில் குட்டிப்பாப்பா ரோஸ் சொல்லும் செய்தி தாத்தாவுக்கு மட்டுமல்ல, நமக்குமேதான் என்று தோன்றுகிறது. இன்னொரு குட்டிக்கதையில் இன்றைய ஓட்டமோ-ஓட்டம் யுகத்தில் பெற்றோர்களுக்குமான அழகானதொரு தகவல் waiting. So, "பூம் பூம் தாத்தா" சர்வ நிச்சயமாக பூமர் தாத்தா அல்லவே அல்ல. முயற்சித்துப் தான் பாருங்களேன் folks ? And yes please, வீட்டு குட்டீஸ்களிடம் கொடுக்கவும் முயற்சியுங்களேன்.

ரைட்டு... இம்மாதத்து மூன்று இதழ்களைப் பற்றியும் பொறுப்பாய் preview செய்தாச்சு. இனி இவற்றை அலசிட உங்களையே நம்பியிருப்போம். ஒரு வண்டி இதழ்கள் காத்துள்ள ஜூன்-ல், ராபினின் "எங்கேயோ கேட்ட குரல்" மிரட்டோ மிரட்டென்று மிரட்டிக்கொண்டிருக்க, அவரோடு டிஜிட்டல் விடியலுடன் போராட இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன். Bye all, see you around. Have a great week ahead!

ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி guys : https://lion-muthucomics.com/latest-releases/1461-2026-may-pack.html

And இது TERRIFIC TEX சந்தாவுக்கான ஆன்லைன் லிங்க் : https://lion-muthucomics.com/tex-willer/1460-the-terrific-tex-for-current-subscribers.html





Friday, May 01, 2026

பைஜு இல்லேன்னா ஷெட்டி !

 நண்பர்களே,

இது நேற்றைய பதிவின் நீட்சி folks - மறவாது அதனை முதலில் வாசித்து விடுங்கள் ப்ளீஸ் ! அதன் லிங்க் :  : https://lion-muthucomics.blogspot.com/2026/04/dial-t.html

வணக்கம். காரணங்கள் எதுவாய் இருப்பினும் "TEX" என்றாலே அரங்கமே அதிர்வது இன்னமுமே தொடர்வதில் செம ஹேப்பி அண்ணாச்சி ! ஆனால் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்க முற்பட்டாலும்,  "ஒரே புக் - ஒரே கதை" என்ற பார்முலாவிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளல் அசாத்தியம் என்பது yet again நிரூபணம் காண்கிறது !! இத்தனைக்கும் தனித்தனி புக்ஸ்களாய் டெக்சின் சாகசங்களை ரசிப்பதற்கு நாம் புதியவர்களே அல்ல தான் ! 

  • இதோ போன வருஷம் கூட Magic Moments ஸ்பெஷலில் 5 மாதங்களின் இடைவெளியினில், டெக்சின் சாகசத்தினை வெளியிட்டிருந்தோம் தான் ! 
  • Again "பனிவனப் போராளிகள்" நெடும் கதை - இரு இதழ்களில் ! 
  • காத்திருக்கும் Tex தீபாவளி மலர் (அசுரர்கள் அடங்குவதில்லை) கூட நெடும் கதை in 2 ஆல்பம்ஸ் என்ற பார்முலாவில் தானே வரவுள்ளது ? 

So மறுபதிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவந்தால் should be o.k என்றே எண்ணியிருந்தேன் ! But கோப்பையில் காலியான பகுதியே பெரும்பான்மை நண்பர்களின் கண்களை உறுத்துவது  தான் சங்கடமாக உள்ளது ! 

இதே - 'ம.ம.பை.மட்டுமே' கோஷத்தினால் தான் இளம் டெக்ஸை மாதா மாதம் ஒரு தனித்தடத்தினில் இத்தாலிய ஸ்டைலில் நம்மிடையே வரக்கூடிய வாய்ப்பு புஸ்வாணமாகிப் போனது. At least மறுபதிப்புகளிலாச்சும் கொஞ்சம் flexible ஆக இருந்திடுவோமே ;  ஒரு தொடராய்  டெக்ஸை ரசிக்கும்  அனுபவமானது எவ்விதம் தான் உள்ளதென்று பார்த்திடலாமே ? என்ற அவாவே எனது திட்டமிடலின் பின்னணி ! ஒரே புக்காய்  வெளியிடக்கூடிய இதழினை இரண்டாய் பிரித்து வெளியிடும் போது  நமக்குச் செலவினங்கள் ஜாஸ்தியே ; இரண்டு அட்டைப்படச் செலவுகள் ....இரு பைண்டிங் கூலிகள் என்று ! So முன்செல்லும் நாட்களுக்கு இந்தப் பரீட்சார்த்த முயற்சி உதவிடக்கூடுமே என்ற எண்ணத்தினில் தான் செலவுகளை பொருட்படுத்தாது, தொடர்களாய் வெளியிடும் திட்டத்தையே முன்மொழிந்திருந்தோம் ! But சில விஷயங்களில் மாற்றங்களுக்கு வாய்ப்பே லேது என்பது கஜினி முகமத்துக்கே தண்ணி காட்டிடும் உங்களது உறுதிகள் காட்டிடுகின்றன !

நமது திட்டமிடல்களை, விலைகளை, இதழ்களின் எண்ணிக்கைகளை போனெலியில் தெளிவாகச் சொல்லியே உரிமைகளை வாங்கியுள்ள நிலையில் இப்போது, "இல்லீங்க சார்... கோட்டை அழிச்சிட்டு  முதல்லேர்ந்து பரோட்டா சாப்பிடலாமா ?" என்று கேட்டிட வாய்ப்பில்லை ! So the best I can replan will be as follows :

இந்த மாதம் முதல் பாகம்  & தொடரும் மாதத்தில் கிளைமாக்ஸ் பாகம் என்ற திட்டமிடலை சற்றே மாற்றிக் கொள்ளலாம் ! ஒரே மாதத்தில், ஒரே தருணத்தில், இரு அத்தியாயங்களையும் தனித்தனி இதழ்களாகவே வெளியிட்டு விடலாம் ! Which will mean : 

ஆகஸ்ட் '26

சாத்தான் வேட்டை 1 

சாத்தான் வேட்டை 2 

அக்டோபர் '26

நள்ளிரவு வேட்டை 

டிசம்பர் '26  : 

எல்லையில் ஒரு யுத்தம் 1 

எல்லையில் ஒரு யுத்தம் 2 - 

ஜனவரி '27  : 

மரண தூதர்கள் + இரும்புக்குதிரையின் பாதையில் 

(இது லயன் # 100-ல் வந்த classic கதை ; not the recent one)  

மார்ச் '27 

இரத்த முத்திரை

So மார்ச் '27 -ல் TTS முற்றுப் பெறும் விதமாய் , சீரான விலைகளில், அதே சமயம் உங்களைத் தொங்கலில் விடாதும், ஒரே மாதத்தில் அந்தந்தக் கதைகளை வாசிக்க வசதியாகவும் வெளியிட்டு விடலாம் ! என்ன - மாதமொன்று எனும் போது பணியாற்ற கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் ; but இங்கே நடு நடுவே ஒரு மாதத்தினை skip செய்கிறோமெனும் போது அது ஈடு செய்து கொள்ளும் தான் ! And நேற்றே சொன்னது போல இந்தச் சந்தா முற்றுப் பெற்ற பிற்பாடு ஒரு classy slipcase-ல் சகலத்தையும் உள்ளடக்கவும் முயற்சிக்கலாம் ! 

Of course - இது நீங்கள் எதிர்பார்த்த மமிதா பைஜு அல்ல தான் ; but இது க்ரித்தி ஷெட்டி என்று எடுத்துக் கொள்ளலாமே ? What say folks ?

Have a great long weekend all !! See you around !


P.S : TERRIC TEX சந்தாவுக்கு 2 தவணைகளிலும்  பணம் அனுப்பிடலாம் guys !