Saturday, March 29, 2025

இதுவும் கடந்து போகும்!

 நண்பர்களே,

வணக்கம்! 'இந்த நொடியில் இதெல்லாம் தேவை தானா?' என்று தோன்றலாம்! ஆனால், நமது blog வேகமெடுக்கத் துவங்கிய நாள் முதலாய் ஒவ்வொரு பதிவுக்கும் மானசீகமாய் "me the first'' என்று போட்டு வந்தது அப்பா தான் என்பது எனக்குத் தெரியும்! எத்தனையோ சனியிரவுகளில் நான் எங்கே இருக்கிறேன் என்பது கூடத் தெரிந்திராத நிலைகளில் "பதிவு எப்போ?'' என்று மெஸேஜ் அனுப்பியதும் உண்டு! So yet another சனிக்கிழமை ஆகிவிட்டதெனும் போது, நான் எழுதும் நாலோ, நாற்பதோ வரிகளை எங்கிருந்தாலும் வாசிக்க அப்பா தவற மாட்டார்களென்ற நம்பிக்கையில் பேனாவைக் கையிலெடுத்திருக்கிறேன்! And இங்கே சங்கமிக்கும் உங்கள் ஒவ்வொருவரது சந்தோஷங்களுமே அவரது ஆயுளுக்கு ஒவ்வொரு தினத்தைக் கூடுதலாக்கி, இத்தனை காலம் வாழச் செய்துள்ளது என்பதில் ஐயமே கிடையாதென்பதால் அந்த நன்றிக்கடனுக்குமே இந்தப் பதிவு!!

எங்கே ஆரம்பிப்பதென்று சத்தியமாகத் தெரியவில்லை - ஏனெனில் ஒரு 83 வருட வாழ்க்கையினைப் பதிவு செய்வதென்பது சித்திரகுப்தருக்கு மட்டுமே சாத்தியமாகிடும்! But இந்த நொடியில் சிந்தனைகளுக்குத் திரை போட கண்ணீரை அனுமதிக்காது போனால் மேலோங்குவது "அன்பு'' எனும் ஒற்றை வார்த்தை மட்டுமே! ரொம்ப ரொம்ப அரிதானது- ஒரு மனிதன் தனது ஆயுட்காலத்தில் சந்தித்து interact செய்திடும் சகலரிடமுமே அன்பு பாராட்டுவதென்பது! அப்பா அந்த அரிதான ரகம்!

*வீட்டில் அத்தனை பேருக்கும் அவர் அன்பே உருவான அப்பா!

*பணியிடத்தில் எவரையும் கஷ்டப்படுத்தியதாகச் சரித்திரமே கிடையாது!

*உறவினர்களுக்கு குறிப்பறிந்து உதவிடும் பண்பு கொண்டவர்! படிக்கும் காலத்தில் சிரமத்திலி­ருந்த ஒரு நெருங்கிய சுற்றத்தின் மகனுக்குக் கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கான கட்டணங்களை அப்பா தான் செலுத்தி வந்திருக்கிறார் என்பது அந்தப் பையன் அயல்நாட்டு வேலைக்குப் புறப்படும் நாள் வரை எனக்கே தெரியாது!

*நண்பர்கள் அனைவருக்குமே ரொம்ப ரொம்ப வாஞ்சையான "சௌந்தர்".

*வாசகர்கள் சகலரையும் உயிராய் நேசித்தவர்!

*அட.. சட்டையைப் பிடித்து கடன் தொகைகளைத் திரும்பக் கேட்ட ஈட்டிக்காரர்களிடம் கூட ஒருபோதும் முகம் கோணியவருமல்ல!

ஆக, ஒரு ஆயுட்காலத்தை அன்பெனும் அரும் வரத்தோடு கடந்துள்ள அப்பாவுக்குக் கடந்த இரண்டு தினங்களாய் கொட்டிக் குவிந்து வரும் அன்பு அஞ்சலி­கள் நெகிழச் செய்கின்றன! நமது தற்போதைய சிறு வட்டத்தையும் தாண்டி, காமிக்ஸ் வாசிப்புகளுக்கு எப்போதோ விடை தந்துவிட்டிருந்தோரும் கூட அப்பாவை நேசமாய், மதிப்போடு நினைவுகூர்ந்திருந்தது நிச்சயமாய் அவரது ஆன்மாவை புளகாங்கிதம் கொள்ளச் செய்திருக்கும்! உள்ளன்போடு, மெய்யான பிரிவுத் துயரோடு சிந்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்குமே மாய முத்துக்களாகி அப்பாவின் இனியான பயணப் பாதைகளுக்கு ஒளியூட்டும் திறனிருக்கும் என்பது உறுதி! So நேரில் வந்து அப்பாவை இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாது போனது குறித்த வருத்தங்களின்றி, உங்களது இன்றைய பிரார்த்தனைகளில் அப்பாவை ஒற்றை நிமிடத்துக்கு இருத்தினாலே - அது ஓராயிரம் நினைவஞ்சலி­களுக்குச் சமானம் என்பேன்! அது மாத்திரமன்றி அப்பாவை நீங்கள் பார்த்தது - புன்னகை பூத்த அந்த முகத்துடனாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே?!

அப்பாவுடனான எனது நினைவுகளுக்குப் பல பரிமாணங்கள் உண்டு! என்றேனும் ஒரு நாளில் அவரது நினைவுகளை அசை போட நாம் சந்திக்கச் சாத்தியமாகிடும் பொழுதுகளில் அதைப் பற்றி விசாலமாய் பேச விழைந்திடுவேன்! ஆனால், எங்களுக்கு மத்தியிலான பந்தத்தில் மேலோங்கி நின்றதாய் நான் கருதுவது- நான் வளர்ந்திட அவர் தந்த இடத்தினைத் தான்! ரொம்ப ரொம்பச் சீக்கிரமே பொறுப்புகள் என் கைகளுக்கு வர நேரிட்ட போதும் அது குறித்துத் துளியும் விசனங்களின்றி - குடும்பத்துக்கோ, தொழிலுக்கோ நான் எடுக்கும் தீர்மானங்கள் சரியாகவே இருக்குமென்ற நம்பிக்கை கொண்டிருந்தார்! "தலை இருக்கு- வால் ஆடலாமா?'' என்று எனக்கு ப்ரேக் போட என்றென்றும் அப்பா எண்ணியதே கிடையாது! அந்த நம்பிக்கைக்கும், அன்புக்கும் நான் ஆயுட்காலக் கடனாளி! நிறைய சண்டைகள் போட்டிருக்கிறேன் - தொழில் நிமித்தம்! ஆனால், ஒவ்வொரு முறையுமே விட்டுத் தந்திருந்தது அப்பா தான்! அந்த ஈகோ இல்லாத அப்பா தான் என் பிள்ளையை வழிநடத்த எனக்கு உதவிய inspiration என்பது இன்று புரிகிறது!

நமது இரண்டாவது இன்னிங்ஸும், நண்பர்களின் உற்சாகங்களும் அப்பாவுக்குமே ஒரு இரண்டாவது இன்னிங்ஸை வாழ்க்கையில் தந்திருந்தது என்பது கண்கூடு! முத்து காமிக்ஸ் துவங்கிய காலகட்டத்தில் அப்பாவுக்கு அதிலிருந்த ஆர்வமும், ஈடுபாடும்- கூட்டுத் தொழி­ன் அல்லல்களுக்கு மத்தியில் மட்டுப்பட்டுப் போயிருந்தன தான்! And அந்நாட்களில் வாசக நேசங்களையோ, உத்வேகங்களையோ மறுபக்கம் கடத்த மார்க்கங்கள் ஏதும் கிடையாதென்ற போது, பெரியதொரு பாராட்டோ, அங்கீகாரமோ அவர்களை எட்டியிருக்க வாய்ப்புமில்லை! ஆனால், இந்தப் புதுயுகத்தில் எல்லாமே சாத்தியம் என்றான போது, அப்பாவின் கண்கள் பண்டிகை நாட்களின் பட்சணங்களைப் பார்க்கும் பாலகனைப் போல பூரிப்பில் அகல விரிந்ததை நிரம்பவே உணர முடிந்தது!

கடந்த 12 ஆண்டுகளின் நமது ஆறுநூற்றிச் சொச்சம் இதழ்களில் அப்பா படிக்காதவையென்றால் அவை இந்த மார்ச் & ஏப்ர­லின் புக்ஸ் மாத்திரமே! ரொம்பவே தளர்ந்திருந்த கண்பார்வையுடனுமே அத்தனை இதழ்களையும் எப்பாடுபட்டேனும் அந்தந்த மாதங்களே படித்து விடுவாரென்பதை நம்மாட்கள் அனைவருமே அறிவர்!

*என்னிக்கு டெஸ்பாட்ச்? என்று front ஆபீஸில் கேட்டு வைப்பார்!

*எத்தனை புக் இந்த மாசம்? இது மைதீனுக்கான கேள்வி!

*புத்தகவிழாக்களில் அன்றன்றைய விற்பனை எவ்வளவு? இது ஜோதியிடம்!

*"ஈரோடு புத்தகவிழா வருது கருணையானந்தம்! உங்களை எப்போ வந்து கூப்பிட்டுக்கலாம்?!'' இது கருணையானந்தம் அங்கிளிடம்!

பொதுவாகவே நான் கல்லுளிமங்கனாக இருப்பேன் என்பதால் டின்டினின் வருகை கூட அப்பாவுக்கு இந்த வலைப்பூ வழியாகவே தான் தெரியும்! And "திபெத்தில் டின்டின்'' முதல் பிரதியை வாங்கிய தினத்தினில் அப்பா ரா முழுக்கத் தூங்கவில்லை; இதழை விடிய விடிய ரசித்தான பின்னே எனக்கு அனுப்பிய வாட்சப் மெஸேஜ் எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்றாகவே தொடர்ந்திடும்!

இந்த பிப்ரவரியில் சுகவீனத்தில் விழும் முன்பு வரையிலும் ஒரு டயரியில் எழுதிக் கொண்டே இருப்பார்! ஹாஸ்பிட­லில் அவர் இருந்த நாட்களின் போது, அதில் அப்படி என்ன தான் எழுதியிருப்பாரென்று புரட்டிப் பார்த்தால் பல நூறு ஃபோன் நம்பர்கள்! தமிழகத்திலுள்ள புக் ஷாப்ஸ்; சூப்பர் மார்கெட்ஸ்; அங்காடிகள் என எங்கிருந்தோ அவ்வளவையும் சேகரித்து அத்தனை பேரிடமும் நமது காமிக்ஸ் பற்றிப் பேசிட முனைந்திருக்கிறார் என்பது அப்புறமாய்த் தான் புரிந்தது! பற்றாக்குறைக்கு அடிலெய்ட் தமிழ் சங்கம் .. அட்லாண்டா தமிழ் சங்கம்.... நைரோபி தமிழ் சங்கம் என்று ஏதேதோ கடல் கடந்த நம்பர்களும்!!

இறுதிக்கட்டங்களின் போது இந்தக் காமிக்ஸ் உலகே அவரது சிந்தைகளில் முக்கால்வாசியை ஆக்கிரமித்திருந்ததென்று சொன்னால் மிகையில்லை! ஒவ்வொரு ஆண்டின் ஈரோட்டு வாசக சந்திப்பும் அவருக்குள் ஓராயிரம் சந்தோஷ மின்னல்களைப் பிரவாகமெடுக்கச் செய்த அதிசயங்கள்! இன்று நம்மோடு இல்லாவிடினும் சர்வநிச்சயமாய் நம்மையும், நமது "பொம்ம புக்கு''களையும், நண்பர்களையும், இந்த வலைப்பக்கத்தையும் வாஞ்சையோடு அவதானித்திடத் தவறவே மாட்டாரென்பது மட்டும் உறுதி! So நெருடல்களின்றி வாசிப்புகளைத் தொடர முயற்சியுங்கள் நண்பர்களே! 

மகிழ்வித்து மகிழ்விக்கும் துறையிலிருக்கிறோம் எனும் போது, இந்தச் சிரமத் தருணத்திலும் உங்களது புன்னகைகளே இருளினூடே தென்படும் எங்களுக்கான ஒளிக்கீற்றுகளாகிடும்! So சங்கடங்களி­லிருந்து வெளிப்பட எனக்குக் கொஞ்சம் நேரம் எடுக்குமென்றாலும் வாசிப்புகளுக்கு நேரம் தர நீங்கள் முயற்சிப்பதில் தவறில்லை என்பேன்! நேற்றே புறப்பட்டு விட்ட ஏப்ரல் இதழ்கள் இன்று உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியிருக்கும் என்பது உறுதி! இந்தத் தருணத்தில் அவற்றை வழக்கம் போல ரசிக்கும் பட்சத்தில், யார் - எப்படி எடுத்துக் கொள்வார்களோ? என்ற குழப்பங்கள் தேவையே இல்லை! Please follow your heart : அது வாசிக்கச் சொன்னால் அதைச் செய்யுங்கள் ; கொஞ்ச நாட்களுக்காவது மனதின் பாரங்கள் மட்டுப்பட அவகாசம் அவசியமென்று எண்ணிடும் பட்சத்தில் அதற்கு செவி சாயுங்கள்!

இந்த மாதம் முதற்கொண்டு செலவாகிடுவதில் ஒற்றைப் பிரதியும், பதிவுப் பக்கத்தின் மீது ஒற்றைப் பார்வை குறைவாகிப் போவதும் இயற்கையின் சித்தம் என்றாகிப் போய்விட்டதால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள சிறுகச் சிறுக முயற்சிப்போம்! கலீல் ஜிப்ராஹ்ன் சொன்னதை இங்கே நினைவு கூர்ந்திடத் தோன்றுகிறது : நதியும், கடலும் ஒன்றன் பின் ஒன்றானவை என்பது போலவே ஜனனமும்... மரணமும்!

இதுவும் கடந்து போகும்- ஆனால், எதுவும் மறந்து போகாது அப்பா! துளி எதிர்பார்ப்புமின்றி, மெய்யான உள்ளன்புடன் இந்தச் சிறுவட்டம்  உங்கள் பாதையில் விரித்திருக்கும் சிகப்புக் கம்பளத்தில் நோவுகளின்றி நீங்கள் நடைபோட புனித மனிடோ நிச்சயம் அருள் புரிவார்!

Bye all... See you around and Enjoy the books please!! 

Thursday, March 27, 2025

விடைபெற்று விட்டார் சீனியர் எடிட்டர்!

நண்பர்களே,

இன்று காலை அப்பா இறைவனடி சேர்ந்து விட்டார்கள். கடந்த 2 மாதங்களாய் பட்டு வந்த வேதனைகளில் இருந்து விடுதலை கிட்டியுள்ளது நமது சீனியர் எடிட்டருக்கு 😔😔😔😔😔!!

Rest in peace அப்பா 🙏🙏🙏.....

வாய்ப்பு அமையும் தருணத்தில் எங்கேனும் ஒரு prayer meet போல அப்பாவுக்கு ஏற்பாடு செய்து கொள்வோம் நண்பர்களே.......இந்த நொடியில் யாருக்கும் அலைச்சல் வேணாமே 🙏🙏



நமது ஆபீஸ் இன்று இயங்கிடாது.....

Saturday, March 22, 2025

எங்கும் 'தல'...!!

நண்பர்களே,

வணக்கம்! ஏதேனும் பெருநகரங்களுக்குப் போய், அங்கே பொழுதைப் போக்க வேண்டுமெனில் இப்போதெல்லாம் ஒரு உத்திரவாதமான வழிமுறை உள்ளது! "பச்சக்' என செல்லை எடுத்து Zomato அல்லது Swiggy-ன் சாப்பாட்டுக் கடை மெனுக்களைப் பார்க்க ஆரம்பித்தால் நேரம் ஓடினதே தெரியாது & கடைவாயெல்லாம் ஜலமாகிக் கிடக்கவும் நேரிடும்! நாம இறுதியில் ஆர்டர் பண்ணப் போவது ரவா கிச்சடியோ; புளிசாதமோ தான் என்றாலும்- கண்கள் அகல- "ஹை.. சிக்கனிலே இத்தினி ஐட்டமா? பன்னீரிலே இம்புட்டு ரகங்களா? ஸ்வீட்களில் இவ்ளோ வெரைட்டியா?? பர்கரா? பீட்ஸாவா? கபாபா?'' என்று ஜொள்ளை "லபக்'' "லபக்''கென்று விழுங்கியபடியே பராக்குப் பார்ப்பது ஒரு சுவாரஸ்ய அனுபவம்! And கடந்த பத்து நாட்களாய் இங்கே கிட்டத்தட்ட அதே நிலையில் தான் நானிருக்கிறேன்!

ஆன்லைன் புத்தக விழா!! 

ரெகுலர் சந்தாத் தடங்களில் அல்லாத ஸ்பெஷல் இதழ்களைக் களமிறக்கும் ஒரு சூப்பரான வாய்ப்பு! 

So இந்த சந்தர்ப்பத்தில் நம் கைவசமுள்ளவற்றி­லிருந்து எதையெல்லாம் ரெடி பண்ணலாம் ? புதுசாய் எதையெல்லாம் வாங்கிடலாம்? என்ற ஆர்வத்தில் தாறுமாறாய் combo-க்களைத் திட்டமிட்டு வருகிறேன்! காலையில் "ஏ.. சூப்பரப்பு'' என்று தோன்றும் ஒரு கூட்டணியானது, ராப்பொழுதில் குப்பைக் கூடைக்குப் போயிருக்கும் & vice versa too! அதுவும் இந்தக் கடைசி ஒரு வாரத்தில் - லோகத்தில் உருவான பொம்ம புக்குகளில் முக்காலே மூணு வீசத்தையாச்சும் பரிசீலனை செய்திருப்பேன்! நேர்த்தியான வாசிப்புக்கும் உரமிட வேண்டும்; கமர்ஷியலாகவும் அவை வெற்றி காண வேணும் எனும் போது, மண்டைக்குள் "கொய்ங்ங்ங்' என்ற குடைச்சல்! "அற்புதம்.. அட்டகாசம்..'' என்று பாராட்டுக்களை வாங்கி விட்டு- விற்பனைகளில் பேந்தப் பேந்த முழித்தல் வேலைக்கு ஆகாதல்லவா? 

அங்கே தான் "தல' டெக்ஸின் மகிமை அற்புதமாய் மிளிர்கிறது! "ஒரே பாணி.. ஒரே template.. முடிலே' என்று பெயரளவிற்கு ஒரு துக்கனுண்டு அணியினர் கானம் பாடினாலும், ஒவ்வொரு மாதத்தையும் அவர்களுமே டெக்ஸோடு தான் துவக்கிடுகிறார்கள் என்பது கண்கூடு! மீதமிருக்கும் பெரும்பான்மைக்கோ - தமிழ் காமிக்ஸின் அடையாளமே டெக்ஸ் தான் என்ற நிலை! And முகவர்கள் மத்தியிலும் சரி,  புத்தக விழாக்களின் casual வாசகர்களிடையேயும் சரி- நிரந்தர டார்லிங் நம்மவர் தான்! So இந்த ஆன்லைன் மேளாவின் தேடல்களிலும் எனக்குக் கைகொடுக்கும் ஆபத்பாந்தவராய் முதலி­ல் கரம் தூக்கி நிற்பவர் நமது இரவுக்கழுகாரே!

போன வருஷத்து இறுதியில் "தி Magic Moments ஸ்பெஷல்'' என்று கலரில் நாம் தெறிக்க விட்ட சாகஸத்துக்கு ஒரு sequel இருப்பதை அப்போதே பார்த்திருந்தோம்! And கிடைக்கும் முதல் வாய்ப்பினில் அந்த க்ளைமேக்ஸ் பாகத்தைப் போட்டே தீருவோமென்று நான் வாக்கும் தந்திருந்தேன்! "அது எப்படி ஒரு தீவட்டித் தடியன் நம்ம "தல'யை ஜெயி­லில் அடைச்சுப் போட்டுட்டு, "தேமே'ன்னு இருக்கலாம்? பயபுள்ளையை நாலு காட்டு காட்ட வேணாமா?'' என்று பொங்கிடும் நம் நண்பர்களுக்காக "The மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல்" ஆன்லைன் மேளாவின் முதல் இதழாகிடுகிறது! No surprises here I'm sure!!

And இந்த அத்தியாயத்தில் இன்னொரு highlight-ம் உண்டு! அது தான் ஓவியர் சிவிடெ­லியின் சித்திரங்கள்! ஏப்ர­லில் வரக் காத்துள்ள "சாபங்கள் சாவதில்லை'' ஆல்பத்துக்கு சிவிடெ­லியே படங்கள் போட்டுள்ளார் எனும் போது, தொடர்ந்திடவுள்ள மே மாதத்திலும் அவரது கைவண்ணம் தான்- this time in color! இன்னமும் கதைக்குள் எடிட்டிங் செய்ய நான் புகுந்திருக்கவில்லை; ஆனால், ரெடியாகக் காத்துள்ள பக்கங்களை மேலோட்டமாய் புரட்டும் போது அனல் பறப்பது தெரிகிறது! And இந்த சாகஸமும் 251 பக்கங்கள் நீளத்திலானது! Soபாகம் 1+2 ஒன்றிணைந்து இந்த மெக்ஸிகோ ரணகளத்தை 502 பக்கங்கள் கொண்டதொரு அசுர சாகஸமாக்குகிறது! இதோ- இந்த ஆல்பத்தின் உட்பக்க preview! 




ஆங்.. ஆன்லைன் மேளாவுக்கு இன்னமும் கணிசமாக அவகாசம் இருப்பதால் - வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் இதழை preview பண்ணுவோமே என்று நினைத்தேன் folks? எனக்குமே இன்க்கி-பின்க்கி-பான்க்கி போட்டுப் பார்த்து இதழ்களை உறுதி செய்திட இன்னுமே அவகாசம் கிட்டியது போலாகிடும்! Rest assured, இங்கு பேய்த்தனமாய்ப் பணிகள் ஓடி வருகின்றன என்றமட்டில் !

And talking about ஸ்பெஷல் இதழ்கள்- "சாம்பலி­ன் சங்கீதம்'' மெகா கிராபிக் நாவ­லின் முன்பதிவுகள் 160-ஐ தாண்டியாச்சு! தொடரும் பொழுதுகளில் இதே துரிதம் சீராகத் தொடர்ந்தால் - துளியும் தாமதங்களின்றி இந்தப் பெரும் கனவை நனவாக்கிடலாம்!

Back to the  ரெகுலர் தடங்கள் - ஏப்ர­லின் மூன்றாவது இதழான மர்ம மனிதன் மார்ட்டின் பக்கமாய் கவனங்களைத் திருப்புவோமா? இந்த நொடியில் நான் அதன் மொழிபெயர்ப்பில்  பக்கம் 30 வரை தான் வந்திருக்கிறேன் என்பதால் கதையின் போக்கு எவ்விதம் இருக்கவுள்ளதோ? இதன் க்ளைமேக்ஸை படைப்பாளிகள் எவ்விதம் திட்டமிட்டிருப்பரோ? என்பது பற்றியும் இம்மி கூட யூகிக்க முடியவில்லை! ஏற்கனவே சொன்னது தான் : மொழிபெயர்ப்பின் போது, நான் ஒருபோதும் கதையை முழுசாய்ப் படித்து முடிப்பதே கிடையாது! பக்கங்களை எழுதத் தேவைப்படும் போது, அப்படியே அவற்றோடு travel செய்வது தான் வாடிக்கை! But கொஞ்சமாய்  கதைக்குள் புகுந்த பிற்பாடு  "இது இப்படித் தான் போகப் போகுது.. இப்படித்தான் திரும்பப் போகுது!" என்றெல்லாம் யூகிக்க ஓரளவுக்காவது முடியும் ! ஆனால், இங்கே மார்ட்டின் கதைகளில் "சுபம்' போடும் panel-க்கு முந்தைய கட்டம் வரையுமே கதாசிரியரின் மனதை சுத்தமாய் வாசிக்கவே முடியாது தான் போலும்! So yet another மார்ட்டின் ட்ரேட்மார்க் ரகளை காத்துள்ளதென்ற நம்பிக்கை மாத்திரமே இந்த நொடியில் உள்ளுக்குள்! இதோ - ஒரிஜினல் அட்டைப்படம், நண்பர் ஜகத்தின் எழுத்துருக்களில்! And இம்முறை உட்பக்கச் சித்திரங்களுமே செம classy என்பதால் மார்ட்டின் நிஜமான ஹீரோ போல காட்சி தருகிறார்! 80 பக்க "சிக்' ஆல்பம் தான்- இம்முறையும் வாசிப்புக்கு அதிக நேரம் பிடிக்கக் கூடாது guys!



!!!!!!!!!!!!

Looking ahead இப்போதே சிறுகச் சிறுக 2026-ன் திட்டமிடல்களுக்குள்ளேயும் சிந்தனைகள் புகுந்து வருகின்றன! ஜுனியர் எடிட்டர் ஒரு ஃபார்முலாவை பரிந்துரைத்திருக்க, அதன் தோளில் உப்புமூட்டை ஏறியபடிக்கே மோட்டு வளைகளை இப்போதெல்லாம் டிசைன்-டிசைனாக முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! எப்போதுமே ஜுன்வாக்கில் கதைகளை இறுதி செய்துவிடுவோம் என்பதால் Who's in..? Who's out...? யாருக்கு எவ்வளவு ஸ்லாட்கள் ? என்பதையெல்லாம் ஏப்ரல் / மே மாதங்களுக்குள் இறுதி செய்து விடுவோம்! So உங்களுக்கு சில மேலோட்டமான கேள்விகள் ப்ளீஸ்: 

1.அடுத்த ஆண்டுக்கு எத்தனை புக்ஸ் சரிப்படும்?

அஞ்சு.. ஆறு.. என்றெல்லாம் நாம் மாதா மாதம்  அள்ளிப் பருகிய காலங்கள் லெமூரியாவோடு காணாதே போய்விட்டன என்பதால், யதார்த்தங்களோடு ஒத்துப் போகுமொரு நம்பரை பரிந்துரை பண்ணுங்களேன் ப்ளீஸ்?

2.நடப்பு அட்டவணையி­லிருந்து யாருக்கேனும் கல்தா தந்தால் நலமென்று தோன்றுகிறதா? 

If yes - யார் அந்த விளிம்பு நிலைப் பார்ட்டி?

3.நடப்பு அட்டவணையி­லிருந்து யாருக்கேனும் ஸ்லாட்ஸ் கூடுதலாக்கினால் தேவலாமென்று படுகிறதா? 

If yes- யாருக்கு?

அல்லது - இப்போது போலவே  எல்லோருமே தொடரலாமா நலமாய்?

4.தற்போதைக்கு வெளியே நிற்போரி­லிருந்து யாரையேனும் "உள்ளாற வாங்க மாப்பு'' ன்னு கூப்பிடலாம் என்பீர்களா?

 If yes- யாரை?

5.ஒரு சிக்கன சித்தார்த்தனாக மாறி:

ரொம்பவே அத்தியாவசியமான ஆல்பங்களுக்குத் தவிர, No to கலர் இதழ்கள் !

No to ஹார்ட் கவர் இதழ்கள் !

என்று திட்டமிட்டால் பட்ஜெட் கொஞ்சம் குறையக் கூடும்! And இதழ்களின் எண்ணிக்கையுமே  சற்றே கூடக்கூடும்! இது பற்றி உங்களின் சிந்தனை ப்ளீஸ்? சாகஸ வீரர் ரோஜரின் "நேற்றைய நகரம்'' ஒரிஜினலாக கலராக இருந்த இதழ் தான் - பச்சே அதை black & white-ல் வெளியிட்டு மிதமான வெற்றியும் கண்டோம் தானே? So அப்படியொரு முயற்சி பற்றி உங்களின் சாரமான சிந்தனைஸ் ப்ளீஸ்; வெயில் காலமென்பதால் காரம் உடம்புக்கு ஆகாது! This is just a fleeting thought ; so ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தான விளக்கம்ஸ், பால பாடம்ஸ்  என வேணாமே ப்ளீஸ் ?

6.TINTIN ?

டின்டின் இதழ்கள் - உலகளாவிய சேகரிப்பாளர்களுக்கென பறந்து வருகின்றன !! ஏஜெண்ட்களும் are loving him ! நம் மத்தியில் தெறி மாஸ் !! அடுத்தாண்டு இவருக்கு slots எப்படி ஒதுக்கலாமோ ?

மேலோட்டமான இந்த வினாக்களுக்கு உங்களின் விடைகள் தெரியப் பெற்ற பிற்பாடு specific கேள்விகளோடு பின்னொரு தினத்தில்  திரும்பிடுகிறேன்! இந்த நொடிக்கு தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ.. ச்சீசீ... தி கிரேட் ஆன்லைன் மேளா காத்திருப்பதால் அந்தப் பணிகளுள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன்! Bye all .. see you around! Have a fun weekend!

P.S : ராமநாதபுரம் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 69 ! அந்தப் பக்கங்களது நண்பர்கள் - do drop in ப்ளீஸ் ?

And "சாம்பலின் சங்கீதம்" முன்பதிவுகளில் இணைந்தாச்சா ப்ளீஸ் ?


Tuesday, March 18, 2025

விண்ணில் ஒரு பகல்!

நண்பர்களே,

வணக்கம்.திக்குமுக்காடச் செய்ததொரு தினத்தின் அந்திமத்தில் இதனை எழுத முற்படுகிறேன் folks.....! And எப்போதும் போலவே இந்தா இருக்கிற மவுண்ட் ரோடு போவதற்கு - எண்ணூர் போய், வண்ணாரப்பேட்டை சுற்றி, அம்பத்தூர் வழியா மாம்பலம் போயி, அப்பாலிக்கா மவுண்ட் ரோடை எட்டிப் பிடிக்கவே டைப்படிக்கும் விரல்கள் இழுத்துப் போகின்றன! சொல்ல நினைப்பதை சுருக்கமாய், நேரடியாய்ச் சொல்ல நமக்குத் தான் ஒரு நாளும் தீராதே! 

இன்றைய ஊர்,உலக வழக்கப்படி எங்க குடும்பத்திற்குமொரு வாட்சப் க்ரூப் உண்டு & நண்டு, சிண்டு முதற்கொண்டு அத்தினி பேருமே அதனில் ஐக்கியம். யாருக்கேனும் பொறந்த நாள் வந்திடும் பட்சத்தில் - கைக்கு சிக்கின கேக் எமோஜிக்களை எல்லாம் நம்ம உம்மாலக்கடி ஜம்பிங் தலக்கு ஈடா அள்ளித் தெளிச்ச கையோடு, அவரவர் மாமூல் வாழ்க்கைகளுக்குத் திரும்பிடுவது வாடிக்கை. 

But நமக்குன்னு பொறந்த நாள் நெருங்க நெருங்க - லைட்டா ஒரு பீதி அலையடிப்பதுண்டு! "குரூப்ல நம்ம பர்த்டேயை ஒட்டுமொத்தமா அல்லாருமே மறந்துப்புட்டா என்னாவறது? ரொம்ப பப்பி ஷேம் ஆகிடுமோ?" என்று முதல் நாள் ராவில் தோணும்! மறு நாளோ - "ஆத்துக்கார அம்மிணிக்கே நினைவு இருக்கா மாதிரி தெரிய காணோமே? நாளைக்கும் புளிக்குழம்பு வைக்கப் போறதா தானே பேசிட்டிருந்தாள்?" என்ற திகில் தாண்டாவமாடும். 

'என்னமோ போடா மாதவா'.... என்றபடிக்கே சேவல் கூவுறதுக்கு முன்னமே எழுந்து உட்கார்ந்து, செல்லை நோண்டிப்பார்த்தால் - லோகமே தன்போக்குக்கு உறங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும் - ஒரு சுடுகுஞ்சி கூட பொறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்காது!

"ஆங். Wishes சொல்லிட்டாலும் அப்டியே இந்த வயசில கிளு கிளுன்னு புடுங்கி நட்டிடப் போறோமோ? அதே குப்பையை... அதே கூடையில் இன்னிக்கும் கொட்டப் போறோம்.... விடு விடு!" என்று பல்லத் தேய்க்க கோல்கேட்டை பிதுக்க ஆரம்பிக்கும் நொடியில் புலியாங்.. புலியாங்... என்று போன் சிணுங்கும் ஓசை கேட்கும். "இல்லியே... நேக்கு இதிலேல்லாம் பெருசா ஈடுபாடோ - எதிர்பார்ப்போ இல்லியே!!" என்றபடிக்கே போனுக்குள் போனால் - பார்த்தாலே சுகரை 500-க்கு ஏற்றும் அளவுக்கு கேக் + சாக்லேட் படங்களை போட்டு "வாழ்த்துக்கள் பெரிப்பா.... மாம்ஸ்.... மாம்ப்பா..." என்று க்ரீட்டிங்ஸ் கிடக்கும்! 'ரைட்டு... நம்மளை இன்னும் காலாவதியான க்ரோஸின் பாட்டில் ரேஞ்சுக்கு நகர்த்தியிருக்கலை! புழைச்சோம்!" என்றபடிக்கே ஷவரை தொறக்கும் போது SPB பாட்டுக்கள் அருவியாய் உள்ளுக்குள் பெருக்கெடுக்கும்! 

எஞ்சி இருக்க நாலு மxxகளை ஒரு கர்ச்சீப்பால் துவட்டிட்டு சாப்பிட உட்காரும் போது, டேபிளில் கொஞ்சம் கேசரியை பார்த்தால் - ஜேசுதாசே தொண்டைக்கு குடிபெயர்ந்த குஷி விரவிடும்!! "தப்பிச்சேன்.... அம்மிணிக்கும் மறக்கலை!" என்றபடியே தட்டில் பல்லிளிக்கும் உப்மாவை கூட களிப்போடு விழுங்கும் நொடியினில் அந்தப் பிறந்தநாள்ப் பொழுது பூர்ணம் அடைந்திருக்கும்!

எனக்கு - இன்று அதிகாலை பொழுது துவங்கியது மிகச் சரியாக இவ்விதம் தான்! 

Of course - ப்ளாக் பக்கமாப் போனால் ஒரு பத்துப் பதினைந்து நண்பர்களின் வாழ்த்துக்கள் நிச்சயம் இருந்திடும்! நன்றி சொன்ன கையோடு FB பக்கமாப் போனால் அங்குமொரு பத்துப் பதினைந்து அன்புப் பதிவுகள் இருந்திடுமென்று தெரியும்! So உப்மாவை ஏப்பமிட்ட கையோடு ரெண்டுக்குள்ளும் புகுந்தால் - ஊஹும்! வெட்டவெளியாய், காற்றோட்டமாய், காலியாய் கிடந்தன! "ரைட்டு... கொஞ்ச நேரம் கழிச்சு வராமப் போகாது ; அதுவரைக்கும் மார்ட்டின் இருக்க பயமேன்? " என்றபடிக்கே பணிகளுக்குள் புகுந்திட முயற்சித்தேன்! But nopes.... வேலைக்குள் ஐக்கியமாக மிடிலே! 

"நம்ம பெருசாய் சென்டிமெண்ட் பார்க்கும் பேர்வழியெல்லாம் கிடையாதே...இன்னிக்கி மட்டும் வண்டி ஏன் இப்படி மக்கர் பண்ணுது?" என்று என்னை நானே வினவிடும் பொழுது தான் மனசு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்தது! இத்தனை காலமாய் நம்பர்களாய் கடந்த அகவைகள் - இன்று 58-ல்.... அரசு ஊழியர்களின் ஓய்வு தருணத்தில் வந்து நிற்பது ஏனோ உள்ளுக்குள் லைட்டாக ஒரு பிசைதலை உருவாக்கிடுவது தான் காரணம் என்பது புரிந்தது! "மாப்பு.... இன்னா தான் சொக்காயை இன்சர்ட் பண்ணிக்கினு, மார்க்கண்டேய அவதார் எடுக்க முற்பட்டாலும், நீ சீனியர் சிட்டிசன்டியேய்!" என்று உள்மனசு செய்திடும் பிரகடனமே இன்றைக்கு போடும் மொக்கைகளின் பின்னணி என்று உணர முடிந்தது! "ரிட்டயர் ஆகணும், ஒய்வா இருக்கணும்" என்ற கனவுகள் எல்லாமே நிஜமாகிடும் நொடி தொடும் அண்மைக்கு நெருங்கும் போது பேஸ்மென்ட் இந்த மாதிரி டான்ஸ் ஆடும் என்பதை சத்தியமாய் நான் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் bottomline!

ஆட்டம் கண்ட இந்த நொடியில் கிட்டிடக் கூடிய அன்பானது, பன்மடங்கு precious என்பதும் புரிந்தது! And maybe எனது இந்த நெருடல் உங்களையும் எட்டியதோ - என்னவோ : boy.. oh.. boy.... காலையில் ஒரு ஏழே முக்காலுக்கு துவங்கிய வாழ்த்துக்களின் பிரவாகம் நண்பகலைக் கடந்தும் ஒய்ந்த பாடில்லை! 

தனிச்செய்திகளில், இங்கு நமது கம்யூனிட்டியில், FB-ல் ; பிளாக்கில் என்று இன்றைய ஒற்றைப் பொழுதில் மட்டுமே எனக்குக் கிட்டிய வாழ்த்துக்கள் + அன்பு - இந்த ஒட்டுமொத்த ஆயுட்கால அகவைகளிலுமே நான் பெற்றிராதது!! எங்கெங்கிருந்தெல்லாமோ.... வித விதமாய்.. போட்டோக்களாய்... வீடியோக்களாய்... சிம்பிளான வாழ்த்துக்களாய்.... கவித்துவமான வரிகளாய்.. நெகிழச் செய்யும் உணர்வுகளாய் இன்று நான் உணர்ந்த அன்பானது - ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பைக் காட்டிலும் விலைமதிப்பற்றது என்பேன்!!

ABSOLUTELY STAGGERED FOLKS 🙏🙏🙏🙏🙏

Oh yes. அந்தி சாயும் நேரத்துக்குள்ளாறவே - "ஹாட்லைன் எழுதணும்.... மார்ட்டின் முடிஞ்சதா..? இந்த ரூபின் ராப்பர் டிசைன் ஓகேவா? கருணையானந்தம் அங்கிளுக்கு எழுத எதை அனுப்புறது? இந்த மாசத்துக்கு பேப்பர் வாங்கணும்டோய்!" என்ற ரீதியிலான யதார்த்தங்கள் - என்னை மறுக்கா தரையில் திடமாய் காலூன்றச் செய்து விட்டன and நார்மல் சர்வீஸ் is back -up & running!! இதோ டின்டின் ஒருபக்கம் - மார்ட்டின் இன்னொரு பக்கம் - டெக்ஸ் எடிட்டிங் என்று வழக்கம் போலவே கூத்துக்கள் ஆரம்பிச்சூ!!

But ஒரு விண்ணில் மிதக்கும் பகல் பொழுதின் அனுபவம் என்னோடு நெடுங்காலத்துக்குப் பயணிக்கும் - for sure!!

இந்த எல்லைகளில்லா அன்புக்கும், நேசத்துக்கும், எதிர்பார்ப்பில்லா உற்சாகங்களுக்கும் கரம் கூப்பிய நன்றிகள் all!! உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் எனது கஜானாவின் பொக்கிஷங்கள் & இந்த நொடியில் அது நிரம்பி வழிகிறது!!

Thank you all... from the bottom of my ஹார்ட் 🙏🙏🙏



Saturday, March 15, 2025

மார்ச்சின் மத்தியில்...!

நண்பர்களே,

வணக்கம்! கதிரவன் காய்ச்சி எடுக்கத் துவங்கிட, இதோ மார்ச்சின் நடுப்பகுதியும் வந்தாச்சு! And வழக்கம் போலவே அடுத்த செட் இதழ்களுக்குள் தலைகளை நுழைத்துக் கிடக்கின்றோம்! புண்ணியத்துக்கு இந்த மாதத்தில் 31 நாட்கள் இருப்பதால் - வாசிக்க உங்களுக்கும், தயாரிக்க எங்களுக்கும் கொஞ்சமாய் கூடுதல் அவகாசமுள்ளது! So இடைப்பட்ட இந்த இரண்டு வாரங்களுக்குள் டின்டினையும், சாபம் சுமந்த சுரங்கத்தையும், தோர்கலையும் (சு)வாசிக்க முடிந்தால் சூப்பரு!

Looking ahead சற்றே லாத்தலானதொரு ஏப்ரல் காத்திருப்பது தெரிகிறது! மாதா மாதம் 4 புக்ஸ்; சில தருணங்களில் 5 என்றெல்லாம் பழகிப் போன பின்னே - அத்தி பூத்தாற் போல ஒரு லைட்வெயிட் மாதத்தைப் பார்க்க முடியும் போது வாயெல்லாம் பல்லாகிப் போகிறது! ஆனால், அதைத் தொடர்ந்திடவுள்ள மே மாதம் வட்டியும், முதலுமாய் சுளுக்கெடுக்கத் தயாராக இருப்பதால்- இளிப்புக்கு ஒரு ப்ரேக் போட்டுக் கொண்டபடிக்கே ஏப்ரலி­ன் ப்ரிவியூவுக்குள் புகுந்திட முனைகிறேன்!

வேய்ன் ஷெல்டன்!

 2013 ஜனவரியில் எதிர்பாராதவிதமாய் நமது அணிவகுப்பினுள் புகுந்த நாயகர்! Truth to tell - முத்து காமிக்ஸின் NEVER BEFORE - ஸ்பெஷ­லின் துவக்கத் திட்டமிடல்களில் இந்த மீசைக்கார சாகஸக்காரர் கிடையாது தான்! ஆனால், நானூறு ரூபாய்க்கு புக்கை அறிவித்துவிட்டு- "இந்தப் பக்க எண்ணிக்கைகள் போதும் தானா? புக்கை கையில் ஏந்தும் நண்பர்கள்- "I want more emotions' என்று எதிர்பார்த்திடுவார்களோ?'' என்று தறிகெட்டுத் தெறிக்கவிட்ட பயத்தோடு மல்லுக்கட்டிய சமயம் ஷெல்டனையும் உட்புகுத்தினால் தேவலாமே?! என்று பட்டது! புது நாயகர்; புதியதொரு கதை பாணி; அட்டகாசமான சித்திரங்கள்; பற்றாக்குறைக்கு ஜாம்பவான் ஷான் வான் ஹாமின் கதை எனும் போது, இவரது addition நம்ம NBS-க்கு பெரும் மெருகூட்டுமென்று நம்பினேன்! 

ஜனவரி 2013-ல் வந்த NBS பட்டையைக் கிளப்பவும் செய்தது & ஷெல்டன் நம் மத்தியில் ஒரு ஸ்ட்ராங்கான நாயகராகக் கால்பதிப்பதுமே நிகழ்ந்தது! ஆனால், அவரது career graph லார்கோவைப் போலவோ; XIII-ஐப் போலவோ ஒரு உச்சத்துக்குப் போகவெல்லாம் செய்யவில்லை என்பது தான் வார்னிஷ் பூசாத நிஜமும்! இன்றளவும் எனக்கொரு புரியாத புதிர்- ஷெல்டன் தற்போதிருக்கும் லெவலிலிருந்து உசக்கே போகாதது ஏன் என்பது தான்! இவரது தொடரில் துளி விடுதலுமின்றி சகல ஆல்பங்களையும் போட்டுவிட்டோம்! எல்லாமுமே தொங்கல்களின்றி முழுமையான சாகஸங்களாகவே இருக்கப் போய் முதல் சுற்று; மூன்றாம் சுற்று என்ற பஞ்சாயத்துக்களுக்கு இங்கே இடமுமில்லை! Yet - உலகத்தையே வலம் வரும் இந்த நரைமீசை நாயகருக்கு greater அபிமானம் கிட்டாது போயிருப்பது ஏனென்பது தான் புரியில்லா! உங்களில் யாருக்கேனும் அது குறித்த காரணம் புரிந்து இருப்பின் - பகிர்ந்திடலாமே ப்ளீஸ்?!

And இதோ ஏப்ர­லில் காத்திருக்கும் ஷெல்டனின் லேட்டஸ்ட் ஆல்பத்தின் first look :

சாய்கான் புதையல்!!

இன்றைக்கு ஹோ சி மின் (HCMC) என்று அறியப்படும் வியட்நாமின் ஆகப் பெரிய துறைமுக நகரின் அந்நாட்களது பெயர் தான் சாய்கான்! வடக்கு வியட்நாம் - தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்த தேசம் யுத்தத்தில் மூழ்கிப் போனதும்; அமெரிக்கா ஒரு பார்வையாளராக 1950-களில் புகுந்து; சற்றைக்கெல்லாம் போர் எனும் சுழலுக்குள் இழுக்கப்பட்டு; 1973 வரை வியட்நாமில் செம மாத்து வாங்கியதெல்லாம் வரலாற்றின் அழிக்க இயலாப் பக்கங்கள்! கிட்டத்தட்ட 60.000 அமெரிக்க வீரர்கள் வியட்நாமில் மரணத்தைத் தழுவியது மட்டுமன்றி - அமெரிக்க சமூகத்தின் மீதே இந்த யுத்தமானது ஆறாத வடுவொன்றை விட்டும் சென்றது! 

இளவயது ஷெல்டன் அமெரிக்கக் கமாண்டாவோகச் செயல்படும் முன்கதை இருக்க, இந்தத் தொடருக்கு மீள்வருகை புரிந்திருக்கும் கதாசிரியர் வான் ஹாம்,  வியட்நாமின் கானகத்திற்குள் அவரை மறுபடியும் இழுத்துப் போகிறார்! செம சிம்பிளான கதைக்கரு; கணிசமான நிஜ நிகழ்வுகளின் பின்னணியில் எனும் போது, இந்த 46 பக்க சாகஸம் சிட்டாய்ப் பறக்கிறது! 

And "வியட்நாம் வீடு'' ட்ராமாவையும், வியட்நாம் காலனி'' படத்தையும் தாண்டிய வேறெந்தப் பரிச்சயமும் இல்லாத நண்பர்களுக்கென இந்த ஆல்பத்தில் ஒற்றைப் பக்கத்தை ஒதுக்கி - சன்னமாயொரு வரலாற்றுப் பாடத்தை கூகுளாண்டவரின் புண்ணியத்தில் நடத்திட முயற்சித்திருக்கிறேன்! ஜுஜுலிப்பா!! So ஒரு ஆக்ஷன் நாயகரின் crisp சாகஸத்தினை ரசிக்க ரெடியாகிக்கலாமா folks? (அந்த "ஜுஜுலிப்பா"வுக்கான பொருள் புரிந்திராதோர் வல்லிய அறிஞரான இயவரசரிடமோ, அவர்தம் சிஷ்யப்புள்ளயிடமோ கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்!💪)

ஏப்ர­லில் இன்னொரு highlight காத்துள்ளதென்பேன்! And அது சமீப மாதங்களில் வித்தியாசமான கதைகளாலும், சித்திர ஜாலங்களாலும் சிக்ஸர் அடித்து வரும் டெக்ஸின் அடுத்த ரகளையே தான்! இம்முறையோ ஓவியர் சிவிடெலி ­ என்பதால் - டெக்ஸும், கார்சனும் சும்மா புது மாப்பிள்ளைகளாட்டம் கதை முழுக்க ஜொலி­க்கின்றனர்! போன மாசம் சுரங்கம்- சாபம் என்ற equation எனில், இம்முறை "சாபங்கள் சாவதில்லை!'' என்று முழுங்க நம்மவர்கள் காத்துள்ளனர்! "பளிச்' சித்திரங்கள் என்ற நொடியிலேயே அந்தக் கதையில் LED பல்ப் எரிவது போல வெளிச்சமாகிப் போகிறது & இதுவொரு110 பக்க சிங்கிள் ஆல்பமே எனும் போது, வாசிப்பு அனுபவம் தாறுமாறு ஸ்பீடில் அமைந்துவிடுகிறது! "படிக்க அவகாசமில்லை'' என்று புலம்பும் நம்மாட்களுக்கு maybe இனிவரும் நாட்களில் இது போலான சிங்கிள் ஸ்கூப் ஐஸ்க்ரீம்களைத் தான் பரிமாறணுமோ?? What say மக்களே?

இதோ- ஒரிஜினல் டிசைனுக்கு வர்ண மாற்றங்கள் செய்து, நமது கடல் கடந்த ஓவியை புதிதாய் உருவாக்கியுள்ள அட்டைப்படத்தின் முதல் பார்வை! And உட்பக்கங்களின் ப்ரிவியூவும் கூட! 


2025-ன் yet another டெக்ஸ் ஹிட் லோடிங் என்பேன்!

ஏப்ர­லின் மூன்றாவது இதழான மார்ட்டினின் "சான்டா க்ளாஸைப் பார்த்தேன்' இதழுக்குள் நான் இன்னமுமே புகுந்திருக்கவில்லை என்பதால் அதற்கான முன்னோட்டம் அடுத்த ஞாயிறுக்கு!! 78 பக்கங்கள் கொண்ட Black & white சாகஸம்; இன்னமும் அதனுள் புகுந்திடக் கூட இயலவில்லை! Maybe நாளை நேரம் கிட்டின் - அடுத்த சில தினங்களிலேயே மொழிபெயர்ப்பை முடித்துவிட்டு ஜல்தியாய் ஆன்லைன் மேளா பணிகளுக்குள் "டைவ்' அடித்து விடுவேன்! மர்ம மனிதர் ரொம்பச் சோதிக்காமல் இருந்தாரெனில் பிழைத்தேன்! ஜெய் ஜாவா!

ஆன்லைன் மேளா புக்ஸ் எவையோ? என்று அவ்வப்போது நண்பர்கள் காதைக் கடிப்பதைப் பார்த்து வருகிறேன் தான்! Truth to tell - 3 பெரிய கலர் இதழ்களின் திட்டமிடல்; பணிகள் ரெடி! ஆனால், இந்த மூன்றுக்கே சுமாராய் ரூ.700/- ஆகிவிட்டதெனும் போது- மேற்கொண்டு எத்தனை காசுக்கு வெடி வைப்பதோ? என்ற யோசனை ஓடி வருகிறது! நேற்றைக்குக் கூட நமது வாட்சப் கம்யூனிட்டியில் இது சார்ந்த ஒரு கேள்வியினைக் கேட்டு, உங்களை ஓட்டுப் போடச் சொல்­லியிருந்தேன்! But அங்கே மெஜாரிட்டி ரூ.1200/- to ரூ.1500/-க்குத் திட்டமிடச் சொல்­லியிருந்தனர்! ஏற்கனவே ரூ.850/- விலையில் LA BOMBE வெடிக்கக் காத்திருக்கும் வேளையில் - இந்த ஆன்லைன் புத்தகவிழாவின் ரூபத்தில் மேற்கொண்டும் பொத்தல் போடப் பயந்து பயந்து வருது!

At the moment :ரூ.700-க்கு திட்டமிடல் ரெடி..!

மேற்கொண்டு எவ்வளவுக்குத் திட்டமிடலாம் என்பீர்கள் folks?

உங்களது பதில்களைத் தெரிந்து கொண்டால் அதற்கேற்ப அடுப்பில் அடுத்து ஏற்ற வேண்டியது பிரியாணி தேக்சாவையா? பாயாச அண்டாவையா?  கேசரி பண்ண சின்னப் பாத்திரத்தையா? என்பதை நான் தீர்க்கமாகத் தீர்மானித்துக் கொள்வேன்! Your thoughts please folks?

Before I sign out இதோ இம்மாதத்து தோர்க­லி ல் வந்திருந்ததொரு புதிரின் மீதான வெளிச்சம் :

அப்பா தோர்கலும், மகனார் ஜோலனும் மாயக் கதவுகளின் காவலர்களைத் தாண்டிய கையோடு முன்னேற வேண்டுமென்ற தருணத்தில் ஒரு புதிர் போடப்படுகிறது! "தந்தைக்கொரு தியாகம்'' ஆல்பத்தினைப் படித்திருக்கும் நண்பர்கள் இதைக் கவனித்திருக்கக் கூடும்! அந்தப் புதிரை ஜோலன் காஷுவலாகக் கையாண்டு, தாண்டிப் போக, தோர்கல் நம்மைப் போலவே பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறார்! So சொல்லுங்க மக்களே - ஜோலன் அந்தக் காவலாளியிடம் என்ன கேட்டிருப்பான்?

இங்கே பொதுவெளியில் போட்டு உடைத்துவிட்டால், பின்வரும் நண்பர்களுக்கு சுவாரஸ்யம் மட்டுப்பட்டு விடும் என்பதால் - நமது வாட்சப் கம்யூனிட்டி நம்பருக்கு (96000 61755) தனிச்செய்தியில் உங்கள் பெயர்களோடு அனுப்புங்களேன் ப்ளீஸ்? சரியான விடையினை எழுதியனுப்பும் முதல் மூன்று நண்பர்களுக்கு தலா அரைக்கிலோ அல்வா பார்சல்ல்ல்ல்ல்!!

I repeat - இதற்கான பதில்களை இங்கேயோ, வாட்சப் கம்யூனிட்டி க்ரூப்பிலோ பொதுவில் பகிர்ந்திட வேணாம்- ப்ளீஸ்! தனிச்செய்தியில் மட்டுமே!

Bye all...மார்ட்டின் கூப்பிடுவதால் நடையைக் கட்டுகிறேன்! See you around! Have a Super weekend!

பின்குறிப்பு: "சாம்ப­லின் சங்கீதம்'' முன்பதிவுகள் 130-ஐ தொட்டாச்சு!!! இன்னமும் இணைந்திரா நண்பர்கள் give it some thought ப்ளீஸ்?!