Saturday, October 14, 2023

ஒரு புளிசாதப் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். புரட்டாசி என்பதால் கொஞ்சம் புளிசாதத்தை கட்டிக்கினு, கொறிக்க கொஞ்சம் சிப்ஸையும் அள்ளிக்கினு, தொண்டையை நனைச்சுக்க கொஞ்சமா லைம் சூசையும் போட்டுக்கினு, ராவிலே மேட்ச் பாக்கலாம்னு திட்டம் போட்டா - பரமபிதாவும், பாகிஸ்தானும் வேறு திட்டம் வைத்திருந்திருக்கின்றனர் ! இன்னிக்கி பச்சை சட்டை போட்டு வந்த அம்புட்டு பேரும் படித்துறை பாண்டி ரேஞ்சுக்கே ஆடி வைக்க, நாலு சிப்ஸை மொசுக்கும் நேரத்துக்குள்ளாற - "மேட்ச் முடிஞ்சிடுச்சி ; ஊட்டுக்குப் போங்கப்பான்னு" ஸ்டேடியம் கதவை அறைஞ்சு சாத்திப்புட்டதால், புளிசாதத்தோடே டைப்ப கிளம்பி வந்தாச்சூ ! Phew....talk about an anti-climax !!

அட, anti-climax மேட்சிலே தான் என்றில்லையே - இம்மாதத்து நமது இதழ்களிலும் தானே - at least இந்த முதல் வாரத்திலாவது ! 

* 724 பக்கங்கள் சுப்ரீமோ ஸ்பெஷலில் மட்டுமே !!

*120 பக்கங்கள் "விதி எழுதிய வெள்ளை வரிகள்" - கிராபிக் நாவலில் !

*64 பக்கங்கள் "எல்லாம் கிழமயம்" - தாத்தாஸ் கிராபிக் நாவலில் !

*128 பக்கங்கள் - சாம் வில்லரின் கதையில் (சகோதரனின் சகாப்தம்)

*32 பக்கங்கள் - டைலன் டாக் குறும் கதையில் !

1072 பக்கங்களின் வாசிப்பு காத்துள்ள இம்மாதத்தினில், புக்குகளைப் புரட்டிப் பார்ப்பதைத் தாண்டி வேறெதெற்கும் நேரம் ஒதுக்க நண்பர்களின் பெரும்பான்மைக்கு இப்போது வரை நேரம் கிட்டியிருக்கவில்லை என்பது obvious ! So "குண்டு புக்" என்ற concept எல்லாம் இந்த நொடியில் ஷாஹீன் அப்ரீதியின் பந்து வீச்சைப் போலவே சற்றே தட்டையாய் தென்பட, என்னுள் கலவையான சிந்தைகள் ! And காத்திருக்கும் புது அட்டவணையினில் இந்த நொடியின் பாடங்களை உட்புகுத்த வேண்டிய அவசியமும் புரிகிறது !! 

எது, எப்படியோ - இம்மாதத்தின் ஆன்லைன் ஆர்டர்களும் சரி, ஏஜெண்ட் ஆர்டர்களும் சரி - literally தெறி தான் ! Of course - 'தல' ஸ்பெஷலும், V காமிக்ஸ் இதழும் தான் இம்மாதத்தின் வேகப் பயணிகள் ; கி.நா.க்களின் takers சொற்பம் தான் ! "அட போவியா - வூட்டிலுள்ள பெருசுகளை சமாளிக்கவே தாவு தீருது ; இந்த அழகிலே கதையிலேயுமே மூணு பெருச்சாளிப் பெருசுகளின் வாழ்க்கைப் பயணம்லாம் எங்களுக்குத் தேவையா ?" என்று நண்பர்கள் நினைத்திருக்கலாம் என்பது புரிகிறது ! "வாசிப்பில் நொய்யு நொய்யென்ற கதைபாணிகளெல்லாம் நேக்கு ரசிக்காது !!" என்போர் தாத்தாக்களிடமிருந்து காத தூரம் விலகி இருப்பர் என்பதை யூகிக்க பெரும் சிரமமெல்லாம் இருக்கவில்லை தான் ; but yet இந்த தாத்தாக்கள் அழுகாச்சிப் பார்ட்டிகளே கிடையாது என்பதால் தான் என்னுள் ஒரு சிறு ஆதங்கம் - நண்பர்கள் இன்னும் கொஞ்சம் பரவலாய் இவர்களோடு பழகிப் பார்த்திருக்கலாமே ?! என்று !!  

In fact - வாழ்க்கையின் அந்திமத்தில் மூவரும் இருந்தாலுமே, தத்தம் பாணிகளில் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்வுகளுக்கொரு அர்த்தம் கற்பிக்க முயலும் பார்ட்டிகள் தானே - ஒவ்வொரு தாத்தாவும் ?! ஒரு பெருசு சதா நேரமும் கார்பரேட்களுக்கு எதிரான போராட்டங்களில் பிசி ; இன்னொரு தாத்ஸ் - யூனியன் ஆட்களோடு பிசி ; மூணாவதோ - பேத்தியின் பொம்மலாட்ட ஷோவில் ; குழந்தைகளை மகிழ்விப்பதில் பிசி ! So இதனை ஒரு அழுகாச்சிப் படைப்பென்று நண்பர்கள் ஒதுக்கியிருக்கக்கூடுமோ என்பது தான் உதைக்கிறது உள்ளுக்குள் !! Far from it - இந்தத் தொடரே பாசிட்டிவான பல சமாச்சாரங்களை நமக்குச் சொல்லிட முனையும் ஒரு முயற்சி அல்லவா ? பல் போன காலத்தில் காலனின் வருகையினை எண்ணிப் பதறிக் கிடப்பதற்குப் பதிலாய் தில்லாய் நடை போடும் இந்தப் பெரியவர்களை நம் சிறுவட்டம் தயக்கங்களின்றி ஏற்றுக் கொண்டால் இன்னும் குஷியாக இருக்கும் !  

தாத்ஸ் ஜாலி கி.நா. என்றால் "விதி எழுதிய வெள்ளை வரிகள்" அந்த வானவில்லின் மறுமுனை !! டார்க்கான கதை பாணி ; மிரட்டும் பின்புலங்கள் ; சோகமான முடிவு என்று பயணிக்கும் இந்த ஆல்பத்தின் முதல் தூணே அந்தச் சித்திரங்கள் தான் ! சித்திரங்களையும் உள்வாங்கியபடியே கதையோடு டிராவல் செய்வோராய் நீங்கள் இருப்பின், இது நிச்சயமாய் உங்களை மெய்ம்மறக்கச் செய்யும் என்பேன் ! என்ன - துணையாய் வரும் ஆட்களில் யார் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள நான் மொக்கை போட்டேன் ! அந்தச் சிரமம் உங்களுக்கு வேணாம் என்பதாலேயே கதை மாந்தரை அறிமுகம் செய்திடும் ஒரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம் ! லைட்டாக சந்தேகம் எழும் இடங்களில் மட்டும் 'பச்சக்' என அந்தப் பக்கத்துக்கு ஒரு தாவு தாவினீர்களெனில் - பணியில் பயணம் சுளுவாய் தொடர்ந்திடும் ! நாம் பார்த்திரா ஒரு பூமியில் ; நாம் அறிந்திரா ஒரு காலகட்டத்தில் அரங்கேறிய வாழ்க்கையின் yet another இருண்ட அத்தியாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதுமே ஒரு வித சுவாரஸ்யமாய் இருக்கக்கூடும் என்பேன் ! Why not give it a try folks ?

Of course - இன்றில்லாவிடினும் நேரம் கிட்டும் ஒரு பொழுதினில் சுப்ரீமோ ஸ்பெஷலுக்குள் புகுந்திடுவீர்களென்பதில் எனக்கு ஐயங்களில்லை ! And இங்கு உள்ள 724 பக்கங்களுள் - PATAGONIA என்ற பெயருடன் வெளியான மௌரோ போசெல்லியின் படைப்பான "வந்தார் வென்றார்" சாகசத்தினை நீங்கள் (சு)வாசிக்கப் போகும் வேளைக்கென ஆவலாய் காத்திருப்பேன் ! முற்றிலுமாய் ஒரு புது மண்ணில் ; முற்றிலுமாய் ஒரு புது அவதாரில் ; முற்றிலுமாய் ஒரு புதுப் பொறுப்பில் நம்மவர் தெறிக்க விடுவதை நீங்கள் எவ்விதம் ரசித்தீர்களென்று தெரிந்து கொள்வதில் கிடைக்கக்கூடிய ஒரு சின்ன திருப்தியினை எதிர்நோக்கியே அந்த ஆவல் ! Oh yes - 'இன்னாபா கதை இது ? வழக்கமான பாணி இல்லாம இந்த எக்ஸ்டா நம்பர்லாம் தேவை தானா ??' என்று நண்பர்களில் ஒரு அணியினர் கேட்டாலும் வியப்பு கொள்ள மாட்டேன் தான் ; but still உங்களின் எண்ணவோட்டங்களை அறிந்திட முயல்வதும் எனது பணிகளின் ஒரு அங்கம் எனும் போது - சிலாகிப்புகளோ ; சிராய்ப்புகளோ they'd all be welcome !!

















ரைட்டு....இந்த மாதத்துக் கத்தையையே கையாள நீங்கள் தடுமாறி வரும் வேளையினில் தீபாவளிக்கென காத்துள்ள 'தல' vs தளபதி battle க்கு நான் தயாராகி வருகிறேன் ! அதற்குள் ஐக்கியமாகிடப் புறப்படும் முன்பாய், உங்களுக்கு ஒரு சின்ன exercise !! 2024-க்கான அட்டவணை இன்னும் 2 வாரங்களில் ரிலீஸ் என்பதை நாமறிவோம் ! என்னிடத்தில் நீங்களிருப்பின், 2024-ன் அட்டவணையினை எவ்விதம் அமைத்திருப்பீர்களென்று காட்டுங்களேன் ப்ளீஸ் ? 

இவற்றை வழிகாட்டிகளாய் வைத்துக் கொள்ளுங்கள் :

  • +டெக்ஸ் டபுள் ஆல்பங்கள் நடப்பைப் போலவே தலா ரூ.160 விலைகளில் !
  • +லக்கி லூக் ; சிக் பில் போலான 48 பக்க கலர் இதழ்கள் தலா ரூ.120 விலைகளில் !
  • +ஏஜெண்ட் சிஸ்கோ ; ஆல்பா போலான டபுள் ஆல்பமெனில் ரூ.250 வீதம் !  
  • +Supreme '60s தனித்தட திட்டமிடலை இந்த ரெகுலர் சந்தாவோடு சேர்த்திட வேண்டாம் ; அதனை ஏப்ரலில் தனியாய் அறிவிக்க உள்ளோம் !
  • +V காமிக்ஸ் சராசரியை ரூ.90 அல்லது ரூ.100 என்ற விலையில் போட்டுக் கொள்ளுங்கள் !
  • +வழக்கம் போல மொத்த சந்தா தொகையினை ரூ.5750 என்றோ ரூ.5850 என்று வைத்துக் கொள்ளுங்கள் !

மேற்படி hints சகிதம் - யார் அட்டவணைக்கு உள்ளே ? யார் நம் மனசுகளின் உள்ளே ? என்று திட்டமிட்டு இங்கே உங்களின் அட்டவணைகளாகப் போடுங்களேன் guys ? ரெடியாகியுள்ள நமது அட்டவணையோடு நெருங்கிச் செல்லும் திட்டமிடலுக்கு 2024-ன் சகல இதழ்களும் நம் அன்புடன் அனுப்பிடப்படும் ! So why not give it a shot all ?

Bye all...see you around ! Have a cool Sunday !! 

And அக்டொபர் இதழ்களுக்கு கொஞ்சம் நேரம் தந்திட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ?

P.S : மதுரை புத்தக விழாவில் நமக்கான விற்பனை 🔆🔆🔆பின்னிப் பெடலெடுத்து வருகிறது ! இம்முறை பள்ளி மாணாக்கரை அவ்வளவாய் அழைத்து வரக்காணோம் என்றாலும், overall response செம !! அடுத்த ஞாயிறு வரை தொடரும் விழாவினில் வர்ண பகவான் மட்டும் கலந்து கொள்ளாதிருந்தால் சூப்பராக இருக்கும் ! Fingers crossed !! 







Saturday, October 07, 2023

The SUPREMO is here !

 நண்பர்களே,

வணக்கம். 'தல' தாண்டவம் starts !! அக்டோபர் மாதத்தின் அத்தனை இதழ்களோடும் நேற்று உங்களின் கூரியர்கள் புறப்பட்டு விட்டன ! And துளியும் ஐயங்களின்றி இம்மாதத்தின் ஒளிவட்டத்தை கபளீகரம் செய்திட நம்ம SUPREMO ரெடி !! (நன்றி நண்பர் MKS ராம் !!) ஒண்ணே முக்கால் கிலோவுக்கு கொஞ்சமே கொஞ்சம் குறைவான எடை - இது 'தல' மெகா இதழின் வெயிட் மாத்திரமே ! இதோ - இதுவரைக்கும் கண்ணில் காட்டிடாது வைத்திருந்த அட்டைப்படம் :

இதன் பின்னணியினில் அவசியமாகிய உழைப்பும், மெனெக்கெடலும் பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கே ஒரு முழுநீளப் பதிவு தேவைப்படும் ! இந்த நொடியினில் spotlight இருந்திட வேண்டியது 75 வது அகவையினுள் அடியெடுத்து வைக்கும் நமது இரவுக்கழுகாரின் ஆதர்ஷ டீம் மீதே என்பதால் - வேறெது பற்றியும் நீட்டி முழக்கப் போவதில்லை ! Let's wish the boys a wonderful 75-th with many many more to follow !!!

And இதோ - இந்தத் தருணத்துக்கென உருவாக்கிய குட்டி வீடியோ கிளிப்புமே !!

ஆன்லைன் லிஸ்டிங்கும் இதோ ரெடி : https://lion-muthucomics.com/monthly-packs/1134-october-pack-2023.html

இரவின் பதிவில் மீண்டும் சிந்திப்போம் folks ! அதுவரையிலும் சுப்ரீமோவுடனான உங்களின் செல்பிக்களை போட்டுத் தாக்கினால் - மொத்தமாய் இத்தாலிக்கு அனுப்பிடலாம் ! இதோ STV ஆரம்பிச்சாச்சு !

Bye all...see you around ! Have a fun Saturday !!

Sunday, October 01, 2023

இதுவும் கடந்து போகட்டுமே !

நண்பர்களே, 

வணக்கம். ஏப்ரலில் ஒரு இரவுப் பொழுது அது ! எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஹாஸ்பிடலில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் சீனியர் எடிட்டர் ! வீட்டிலோ அம்மாவும் எக்கச்சக்க சுகவீனங்களோடு படுத்த படுக்கையாய் கிடக்கிறார் ! நிலமையைச் சமாளிக்க தம்பியும், நானும் ரொம்பவே நாக்குத் தள்ளிப் போயிருந்த நாட்கள் அவை ! இரவு எட்டு மணிவாக்கில் டாக்டர் ரவுண்ட்ஸ் வருவதற்காகக் காத்திருந்த வேளையில், கொஞ்ச நேரமாச்சும் வெளியே போய் காற்று வாங்கினால், மண்டைக்குள்ளான இறுக்கம் சற்றே தளருமென்று தோன்றியது ! படியிறங்கி, வாசலில் போய் நின்றால், ஜெகஜோதியாய் ஒளிவெள்ளம் என்னை வரவேற்றது ! உள்ளூர் அம்மன் கோவில் திருவிழாவுக்கு சொற்ப நாட்களே எஞ்சியிருக்க, சாலையின் இரு தரப்புகளிலும் வெளிக்கடைகள் கனஜோராய் வியாபாரம் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது !! சிவகாசியின் மையத்திலிருந்த அந்த சாலையில் அப்படியொரு ஜனத்திரளும், உற்சாகமும், பரபரப்பும் அலையடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்த போது, எல்லாமே வேறொரு உலகில் நடப்பது போலவே எனக்குத் தோன்றியது ! இங்கே மண்டைக்குள் எனக்கு இம்மியும் வெளிச்சமில்லை ; ஆனால் கண்ணெதிரே ஊரே மினுமினுத்துக் கொண்டிருந்தது ! சிந்தையில் என்னிடம் துளி கூட மகிழ்வில்லை ; ஆனால் ஊரே உற்சாகத்தில் ஓடியாடிக் கொண்டிருந்தது ! Sci-fi கதைகளில் வருவது போலான ஒரு இணைத்தடப் பிரபஞ்சத்தில் உலாவுவதான பீலிங்குடனே கொஞ்ச நேரம் அங்கே நிலைகொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்குள் நிதானம் திரும்பியது ! 'உன் வீட்டு இன்னலுக்கோசரம் உலகமே ஸ்தம்பிக்காது கண்ணா ; சந்தோஷங்களும், சங்கடங்களும் மாறி மாறிக் கதவைத் தட்டும் சமாச்சாரங்கள் and இன்று பிந்தையது உனது கதவைத் தட்டி நிற்கின்றது - அவ்வளவே ! இது வரையிலுமாவது சந்தோஷ நாட்களை மிகுதியாயும் ; சங்கட தினங்களை சன்னமாகவும் தந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நகரும் வழியைப் பாரு !' என்று உள்ளுக்குள் யாரோ சொல்வது போலிருந்தது ! படியேறி திரும்பவும் ஹாஸ்பிடலில் அப்பாவின் ரூமுக்குச் சென்ற போது அப்பாவை நிற்க வைக்க டாக்டர் முயன்று கொண்டிருந்தார் ! 'இன்னும் ஓரிரு நாட்களில் வாக்கரோடு நடக்கலாம் ; எல்லாம் ஓ.கே' என்றபடிக்கே அவர் புறப்பட்ட போது மனதின் பாரம் கொஞ்சமே கொஞ்சமாய் மட்டுப்பட்டிருந்தது போலிருந்தது !  

அம்மா விடைபெற்றுச் சென்று ஒரு வாரமாகப் போகும் இந்த வேளையில் அந்த ஏப்ரலின் இரவு தான் என் சிரத்தினுள் ஓடிடுகிறது ! அத்தனை நோவுகளோடு அம்மா செய்த யுத்தம் மட்டுமன்றி, அவரது வேதனைகளுமே முற்றுப் புள்ளி கண்டிருப்பதை ஏற்றுக்கொண்டு அவர் சென்றுள்ள இடத்தில் அமைதியும், நிம்மதியும் கிட்டிடுமென்று வேண்டுவதே முன்செல்லும் வழியென்று தலைக்குள் ஒலிக்கிறது ! So இதுவும் கடந்து போயாகிட வேண்டும் ! R.I.P. அம்மா !

Back to reality, 'தல'யின் மெகா இதழ் பைண்டிங்கில் ஒட்டி ரெடியாக உள்ளது ! தொடரவுள்ள 3 நாட்களுக்கு ஈரம் காய்ந்திட மட்டும் அவகாசம் தந்துவிட்டால் - செமத்தியான ஒரு இதழாய் உங்களை வந்து சேர்ந்திடுவதில் சிரமங்களிராது ! And தாத்தாஸ் கதையும் பைண்டிங்கில் உள்ளது ; விடுமுறைகள் முடிந்த மறு நாள் தயாராகிடும் ! இந்த ஆல்பத்தை எதெற்காக நினைவு கூர்ந்திடுவேனோ - இல்லையோ ; இதனுள் பணியாற்றிய அனுபவம் நிச்சயம் அகன்றிடாது ! வியாழன் இரவு முதலே அம்மா வென்டிலேட்டரில் இருக்க நேரிட, இனி பெரிதாய் நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை என்பதை ICU பிரிவினர் ஞாயிறு இரவன்று தயங்கியபடியே சொல்லியிருந்தனர் ! காலையில் வீட்டுக்கு கூட்டிப் போய் விடுங்களென்று ஹாஸ்பிடலில் சொன்ன  போதே காத்திருந்தது என்னவென்பது புரிந்தது ! வெளியூர்களில் இருந்த சகோதரிகளையும், அவர்களது பிள்ளைகளையும் அவசரமாய் புறப்பட்டு வரச் சொன்ன கையோடு, தொங்கிக் கொண்டிருக்கும் பணிகளையும் அவசரமாய் முடித்தாக வேண்டுமே என்பது உறைத்தது ! 62 பக்கங்கள் கொண்ட தாத்தாஸ் கதையிலோ, பத்தோ பன்னிரெண்டோ பக்கங்கள் வரை தான் அந்நேரத்துக்கு எழுதியிருந்தேன் ! பாக்கியினை ராவோடு ராவாய் முடிக்காவிடின் அம்போவாகிப் போகும் என்பது புரிந்தது ! தாத்தாஸ் கதைகளின் பாணி மாத்திரமன்றி, வசனங்களின் மிகுதியுமே எப்போதும் ஒரு சவாலாய் இருப்பதுண்டு !! பக்கங்களில் கட்டங்களும் ஜாஸ்தி ; பேசிடும் மாந்தர்களும் ஜாஸ்தி & ஏகப்பட்ட இடங்களில் கூகுளின் சகாயங்கள் அவசியமாகிடுவதுமுண்டு ! எப்படி 'தம்' கட்டி எழுதினேன் என்பது இப்போது புதிராக உள்ளது ; ஆனால் திங்கள் காலை புலர்ந்த தருணத்தில், என் கண்கள் சிவந்திருந்தன ; விரல்கள் கழன்று விழாத குறை தான் ;  ஆனால் தாத்தாக்களுடனான பயணத்தினை முடித்திருந்தேன் ! Maybe பகலில் காத்திருந்ததை தாற்காலிகமாகவாவது மறக்க எனக்கு அந்தப் பணிகளின் கடுமை அன்றிரவுக்கு அவசியமானதோ - என்னவோ ! குரங்கு பல்டிகள் நமக்குப் புதிதே அல்ல தான் ; but still இது அவற்றுள் ஒரு புது அத்தியாயம் என்பேன் - simply becos of the circumstances ! 

And முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys - தாத்தாக்களின் இந்த ஆல்பமானது ஒரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் & that's about it ! இங்கே மாமூலான காமிக்ஸ் entertainment புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது !  முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys - இதுவொரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் ; so இங்கே மாமூலான காமிக்ஸ் entertainment புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது ! "ரைட்டு...இத்தனை ஸ்பீடு பிரேக்கர்களுடனான ஒரு தொடர் நமக்கு இந்த நொடியில் அவசியம் தானா ? இந்த ஸ்லாட்டில் இன்னொரு லக்கி லூக்கையோ ; ஒரு ரிப் கிர்பியையோ ; ஏதேனுமொரு கமர்ஷியல் நாயகரை இறக்கிப்புட்டா குன்சா இருக்குமே ?" என்ற கேள்வி எழலாம் தான் ! But அதற்கான பதிலை நீங்களே போன வாரத்து வாக்கெடுப்பில் சொல்லியுள்ளீர்கள் folks !! இதோ அதன் முடிவுகள் : 



இது வரைக்குமான வோட்டெடுப்புகளில் இத்தனை நண்பர்கள் ஓட்டளிக்க மெனெக்கெட்டதில்லை ; 221 என்ற இந்த நம்பர் தான் இது வரையிலுமான பெஸ்ட் ! So அத்தகையதொரு வோட்டெடுப்பில் "புதுசு சார்ந்த தேடல்கள் என்றென்றும் அவசியமே !" என்ற தீர்ப்பு கிட்டியிருப்பதை கண்களைத் தேய்த்தபடிக்கே பார்த்திடுகிறேன் ; நிஜத்தைச் சொல்வதானால் Option # 2-க்கே மெஜாரிட்டி ஓட்டுகள் விழுந்திடுமென்றே எதிர்பார்த்திருந்தேன் ! தாறுமாறாய் இண்டிகேட்டரைப் போட்டபடிக்கே நானெல்லாம் ஆட்டோ ஓட்டும் சாலையில், நீங்களெல்லாம் JCB ஓட்டும் வித்வான்கள் என்பதை yet again நிரூபித்துள்ளீர்கள் ! பதிலிட நேரம் செலவழித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ஒரு நூறு ; நிச்சயமாய் உங்களின் அவாக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் ! And of course, புதுசு என்பதற்காகவே எதையும் இனி தேர்வு செய்திடாது - நீங்கள் எதிர்பார்த்திடும் அளவுகோல்களுக்கேற்ப சாரமும் அவற்றுள் இருக்கின்றதா? என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியபடியே பார்த்திடவும் செய்வோம் ! 

இதோ - இந்தப் புது "கமர்ஷியல் கி.நா." தேர்வினைப் போல !! 

"இதென்ன புது உருட்டா இருக்கே ?" என்கிறீர்களா ! Yes - இது நமக்குப் பிடித்தமான வன்மேற்குக் களத்தினில் அரங்கேறிடும் ஒன்-ஷாட் சாகஸம் - ரொம்பவே வித்தியாசமான கதையோட்டத்துடன் ! கண்ணைக் கசக்கச் செய்யும் சமாச்சாரங்கள் இராது ; மாறாய் கண்களை அகல விரியச் செய்யும் சித்திரங்களும், கலரிங்கும் மிரட்டிடும் ! 78 பக்கங்களில் அரங்கேறும் இந்த western சாகஸத்தில் கமர்ஷியலான அடையாளங்களும் இருந்திடும் ; "கி.நா." என்று வகைப்படுத்திட வித்தியாசமான storyline-ம் இருக்கும் ! So இதனை ஒரு கமர்ஷியல் கி.நா. என்று விழிப்பதில் தவறில்லை என்று நினைத்தேன் ! 

அதே சமயம் ஒரு கனத்த "கி.நா."வுமே உங்களை நோக்கி வெகு சீக்கிரமே வந்திடவுள்ளது ! இதோ - "விதி எழுதிய வெள்ளை வரிகள்" black & white ஆல்பத்தின் பிரிவியூ :


ஒரிஜினல் அட்டைப்படம் அப்படியே வருகிறது - கதையின் அந்த mood-ஐ பிரதிபலிக்கும் விதமாய் !! நெப்போலியன் படையுடனான மோதலைத் தொடர்ந்து ரஷ்யப் பனிக்காட்டில் உயிர்தப்பியோடும் ஒரு சிறு அணியின் ஜீவ மரணப் போராட்டத்தினை மிரளச் செய்யும் சித்திரங்களுடன் சொல்லியுள்ளனர் ! And கதைக்களம் கனமானதே என்பதால் again இதுவொரு இலகுரக வாசிப்பின் இதழாய் இராது guys ! 

தொடரும் நாட்களில், தொடரவுள்ள புத்தாண்டினில் கமர்ஷியல் குருதையில் எறியபடியே, புதுசு சார்ந்த தேடல்களையும் செய்திட எண்ணியுள்ளோம் ! So காத்துள்ள 2024 அட்டவணை மாத்திரமன்றி, காத்துள்ள பயணத்தின் template கூட ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருந்திடவுள்ளது ! Not too long a wait ; இம்மாதத்து இறுதி வாரப் பதிவினில் ரூட் 2024 பற்றிப் பார்த்திடலாமே !!

Bye all...see you around ! அம்மாவுக்காக, எங்களுக்காக பிரார்த்தித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் எங்களது நன்றிகள் உரித்தாகட்டும் ! Have a good week ahead !

P.S : V காமிக்ஸும் பைண்டிங்கில் வெயிட்டிங் ! இங்கே சின்னதாயொரு திருத்தம் folks !! ஸாம் வில்லர் டெக்சின் அண்ணார் என்று போன பதிவில் ஏதோ ஒரு ஞாபகத்தில் தவறாகக் குறிப்பிட்டிருந்தேன் ! டெக்ஸ் தான் மூத்தவர் ; ஸாம் இளவலே ! கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணத்தில் ஸாம் வில்லர் ரொம்பவே மதிக்கத்தக்க மனிதராய் மிளிர்கிறார் ! நிச்சயமாய் 'தல' ரசிகர்களுக்கு இதுவொரு மிஸ் செய்திட இயலா இதழாய் இருந்திடுமென்பது உறுதி

Wednesday, September 27, 2023

ஒரு சங்கடச் செய்தி !

 நண்பர்களே,

வணக்கம். சுகவீனங்களுடனான நெடியதொரு போராட்டத்தினில் தோல்வியை ஒத்துக் கொண்டு அம்மா இயற்க்கையோடு ஒன்றாகிப் போய் விட்டார்கள் ! கடந்த வியாழனன்று நள்ளிரவுக்கு மேல் எதிர்பாரா நோவுகள் சுனாமியாய் தாக்கிட, அன்று தப்பிய நினைவு இறுதி வரைக்கும் திரும்பவேயில்லை ! ஏதேதோ முயற்சித்தும் இனி செய்வதற்கு ஏதுமில்லை என டாக்டர்களும் திங்களன்று கைவிரித்திட, வீட்டுக்கு அழைத்துச் சென்ற  பத்தாவது நிமிடத்தில் அம்மாவின் மூச்சு அடங்கிப் போனது ! கண்ணெதிரே ஒரு ஜீவன் விடைபெறுவதை பார்க்கும் கொடுமையோடு துவங்கிய இந்த வாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என தொடர்ந்த தினங்களில் நீண்டு வந்துள்ளது ! And சகல காரியங்களும் முடிந்த கையோடு இங்கே இப்போது ஆஜராகியுள்ளேன் ! 

மரணம் இயற்கையின் நியதியே என்றாலும், அதனை மிக நெருக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மிரளச் செய்யும் அனுபவமாய் இருப்பதை மறுக்க மாட்டேன் ! கடந்த ஐந்தாண்டுகளாகவே ஊர் ஊராய், ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாய் அலைவதே அம்மாவின் விதி என்றாகிப் போயிருந்தது. அந்த 5 ஆண்டுகளில் 9 ஆபரேஷன்கள் என்ற ரணகளங்கள் அரங்கேறிய பொழுதுகளில் - 'இந்த வேதனைக்கு ஒரு நிரந்தர விடுதலை கிட்டினால் தேவலாமே ?' என நினைக்கத் தோன்றியது நிஜமே ! ஆனால் அம்மாவின் விரல் தொடும் அண்மையில் அந்த விடுதலை நின்ற போது, அதனை வரவேற்க எங்களுக்குத் திராணியே இருக்கவில்லை தான் ! But அனுமதி கேட்டுப் பெற்றுவிட்டெல்லாம் காலன் தனது கடமைகளைச் செய்வதில்லையே ?! வந்தார் & 2 தினங்களுக்கு முன்வரையிலும் ரத்தமும், சன்னமான சதையுமாய் இருந்ததொரு ஜீவனை இன்று போட்டோவில் புன்சிரிக்கும் நினைவாய் உருமாற்றிவிட்டு தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார் !   கடைசி காலத்தில் நிறைய கஷ்டப்பட்டு விட்டார்கள் -  இனியாவது இன்னல்களின்றி நிம்மதியாய் துயில்வார்கள் என்ற பிரார்த்தனைகளுடன் வழியனுப்பியுள்ளோம் ! புனித மனிடோ காத்தருள்வாராக ! 



October புக்ஸ் வரும் வாரத்தில் பெரிய தாமதங்களின்றிப் புறப்பட்டு விடும் ! கொஞ்சமாய்ப்  பொறுத்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையுடன் கிளம்புகிறேன் all ! God be with us all !  

Saturday, September 23, 2023

பிரிவியூஸ் ஒரு தொடர்கதை !

 நண்பர்களே,

வணக்கம். மெகா டெக்ஸ் பணிகளை உருண்டு, புரண்டு ஒரு வழியாய் கரை சேர்த்தாச்சு ! 700 பக்கங்களாக துவங்கிய திட்டமிடல் 712 ஆக முன்னேறி, இப்போது 720 என்று நிறைவடைந்துள்ளது ! அதில் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் எனது பேனாவிலிருந்து எனும் போது, திருவாளர் நாக்கார் தெருவைக் கூட்டிக் கொண்டு கிடப்பதில் வியப்புகளில்லை தான் !  And அச்சும் முடிந்து, சகலமும் நாளை பைண்டிங் செல்கிறது ! அங்கே காலில் வெந்நீரை ஊற்றாது புக்ஸை நிறைவாய் முடித்து வாங்கிட இயலும் தருணத்தில் டெஸ்பாட்ச் இருந்திடும் - so அதுவரையிலும் பொறுமை ப்ளீஸ் guys ! 

And இம்மாதத்தின் இன்னொரு டெக்ஸ் சாகசமும் கூட திங்களன்று அச்சுக்குச் செல்லவிருக்கிறது - நம்ம V காமிக்சின் உபயத்தில் ! சகோதரனின் சகாப்தம் - டெக்சின் அண்ணாரின் கதை ! பென்சில் மீசையும், சாந்தமான முகமுமாய் காட்சி தரும் சாம் வில்லரோடு பயணிக்க, இந்த மாதத்து V பயணச்சீட்டினை வைத்துக் காத்துள்ளது ! இதோ - ஒரிஜினல் அட்டைப்படமும், உட்பக்க பிரிவியூவும் :



மறுக்கா நினைவூட்டி விடுகிறேன் folks ; இது V காமிக்சின் வெளியீடு ! So அதற்கான இறுதி க்வாட்டர் சந்தா செலுத்தி விட்டீர்களா ? என்று ஒருவாட்டி உறுதி செய்து கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? இன்னமும் செய்திருக்கவில்லை எனில் - இதோ உள்ளது அதற்கான விபரம் : 

*ரெகுலர் சந்தாக்களில் உள்ளோர் எனில் : ரூ.325 

*அல்லாதோர் - ரூ.425

Moving on, அக்டோபரின் இதழ் # 3 - நான் ரொம்பவே எதிர்பார்த்திடும் தாத்தாக்கள் படலம் ! இதோ - லூட்டியடிக்கும் பெருசுகளின் மூன்றாவது ஆல்பத்தின் பிரிவியூ : 





Again அட்டைப்படத்துக்கு ஒரிஜினல் டிசைனே - வண்ணச் சேர்க்கையில் மட்டுமே மாற்றத்துடன் ! கதைத்தலைப்பின் எழுத்துரு - நண்பர் ஜெகத்தின் ஜாலம் ! And கதையின் ஓட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வசன நடை எப்போதும் போலவே  raw ஆகவே இருந்திடவுள்ளது ; பிரிவியூ பக்கமே அதை பறைசாற்றிடுவதைப் பார்த்திடலாம் ! 'இதை இன்னும் கொஞ்சம் நாசூக்காய் கையாண்டிருக்கலாமே ?' என்ற விமர்சனங்கள் வருமென்பதை யூகிக்க முடிந்தாலும், இந்தத் தொடரின் தன்மைக்கும், கதாப்பாத்திரங்களின் இயல்புக்கும் - 'உள்ளது உள்ளபடியே" என்ற பாணி தான் suit ஆகுமென்பது எனது நம்பிக்கை ! அது மாத்திரமன்றி, "18+க்கான வாசிப்பு" என்ற பரிந்துரை சகிதம் வந்திடவிருக்கும் ஆல்பத்துக்கு வசன பாணியில் சமரசம் செய்திட அவசியங்களும் இராதென்பது எனது திண்ணமான எண்ணம் ! So முன்கூட்டியே be prepared ப்ளீஸ் !

ஒன்றுக்கு இரண்டாய் 'தல' ஆல்பங்கள் அதிரடியாய் களமிறங்கும் மாதத்தில், பொதுவாய் வேறெந்த இதழ் வெளியானாலும் விற்பனையில் சட்னி ஆவது வாடிக்கை ! அது தெரிந்திருந்தும், ஒன்றுக்கு மூன்றாய் பெருசுகளை இம்மாதம் களமிறக்கி விட்டுள்ளேன் ! "இழக்க ஏதுமில்லை" என்பதையே வாழ்க்கையின் தாரக மந்திரமாய்க் கொண்டு பயணிக்கும் பெருசுகள், இந்த மோதலில் இருந்து  எவ்விதம் வெளிப்படுகிறார்கள் என்று பார்ப்பதே இம்மாதத்தின் எதிர்பார்ப்புகளுக்குள் எனக்குப் பிரதானமானது ! பார்ப்போமே !! 

இம்மாதம் இன்னொரு இதழும் உண்டு ; and அதுவும் வண்ண இதழே ! "பேய் புகுந்த பள்ளிக்கூடம்" என்ற 32 பக்க டைலன் டாக் கலர் த்ரில்லர் தான் அது ! சந்தாக்களோடு நாம் பிராமிஸ் செய்திருந்த 4 விலையில்லா இதழ்களின் வரிசையில் இது # 2. மீதமிருக்கும் இரண்டுமே 'டெக்ஸ்' கலர் மினிஸ் - for November & December ! அமானுஷ்யங்களை ஆய்வு செய்திடும் இந்த புதிர் ஹீரோவின் லேட்டஸ்ட் பாணியிலான கதை இது ; ரொம்பவே crisp கதைக்களம் + சித்திரங்கள் + கலரிங் என வசீகரிக்கிறது ! As usual இங்கே லாஜிக்குக்கு பெருசாய் இடம் நஹி தான் - ஆனால் மின்னலாய்ப் பறக்கும் இந்த 32 பக்க ஆல்பத்தை மறுபடியும் வாசிக்கத்  தோன்றாது போகாதென்பேன் ! 

And that winds up the October previews !!

இதோ - 2 வாரங்களுக்கு முன்னே கேட்டிருந்த மறுபதிப்புகள் சார்ந்த கேள்விக்கான உங்களின் பதில்கள் !!


80 + 47 = 127 பேர் "வாசிப்பும் உண்டு" என்று பதிலளித்திருப்பதில் மெய்யாலும் எனக்கு வியப்பே ! And 176 பேர் இதனில் பொறுப்பாய் வோட்டளித்திருப்பதை பார்க்கும் போது, the poll stands credible ! இந்த பதிலானது தானாய் எனது அடுத்த கேள்வியையும் வரவழைக்கிறது ! 

இதோ இந்த லிஸ்டை சித்தே பாருங்களேன் guys : 

  1. லார்கோ வின்ச் 
  2. வெய்ன் ஷெல்டன் 
  3. ஜில் ஜோர்டன் 
  4. மேஜிக் விண்ட் 
  5. டைலன் டாக் 
  6. ஜூலியா 
  7. டயபாலிக் 
  8. டெட்வுட் டிக்
  9. தோர்கல் 
  10. ப்ளூகோட்ஸ் பட்டாளம் 
  11. ஜானதன் கார்ட்லேண்ட் 
  12. கமான்சே 
  13. ட்யூக் 
  14. ஜெரெமியா 
  15. பெளன்சர்  
  16. Smurfs 
  17. லியனார்டோ தாத்தா 
  18. ரின்டின் கேன் 
  19. மேக் & ஜாக் 
  20. கர்னல் க்ளிப்டன் 
  21. தாத்தாஸ் 
  22. ஏஜென்ட் சிஸ்கோ
  23. C.I.A ஏஜெண்ட் ஆல்பா 
  24. SODA 
  25. டிடெக்டிவ் ரூபின் 
  26. டேங்கோ
  27. ஸாகோர்  
  28. நெவாடா 
  29. அண்டர்டேக்கர் 
  30. ரிங்கோ ஸ்டார் 
  31. ஸ்டெர்ன் 
  32. I.R.$
  33. LADY S
  34. மிஸ்டர் நோ
  35. சுட்டிப் புயல் பென்னி  

கடந்த பத்தாண்டுகளில் நாம் அறிமுகப்படுத்தியுள்ள புது நாயக / நாயகியரின் பட்டியல் இது - எனக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள இயன்றமட்டுக்கு ! For sure - இந்த லிஸ்ட்டில் இன்னமுமே ஆட்கள் இருப்பர் என்பது நிச்சயம் !!  மேற்படிப் பட்டியலில் - இப்போதும் நம் மத்தியில் உலவிடுவோர் வெகு சொற்பம் and அந்த சொற்பமுமே பெரும்பாலும் எனது பிடிவாதங்களின் பொருட்டே என்பது தான் வார்னிஷ் அடிக்காத நிஜம் ! 

"ஒரு SODA ஆல்பம் போடவா ? ஒரு ஜான் மாஸ்டர் மறுபதிப்பு வெளியிடவா ?" என்று கேட்டால் பெரும்பான்மையின் பதில் என்னவாக இருக்குமென்பது நாமெல்லாமே அறிந்ததே ! "ஒரு கிளிப்டன் கார்ட்டூன் ஆல்பம் போடவா ? அல்லது அந்த ஸ்லாட்டில் ஒரு கவ்பாய் ஆல்பம் போடவா ?" என்ற choice உங்களிடம் தந்தால் என்ன பதிலளிப்பீர்கள் என்பது தெரிந்த சமாச்சாரம்  ! "ஒரு ஆல்பா ஆல்பமா ? ஒரு ரிப் கிர்பி கதையா ?" என்று one to one மோதலை முன்மொழிந்தால் , நம்ம CIA ஏஜெண்ட் ஏதேனும் முனிசிபல் குப்பை கிடங்கில் தான் பார்சலாகிக் கிடப்பார் ! அட, "லேடி S வேணுமாங்கோ ? இயவரசி மாடஸ்டி வேணுமா ?" என்ற கேள்வியை நான் கேட்டு முடிக்கும் முன்பாகவே மாடஸ்டிக்கு தோரணமெல்லாம் கட்டி முடித்திருப்பீர்கள் ! 

நிச்சயமாய் இங்கு யாரது ரசனைகளிலும் பிழை சொல்லிடவோ / இதையெல்லாம் ரசிக்க மாட்டேங்கிறீங்களே ! என்று விசனப்படுவதோ எனது நோக்கமே அல்ல ! மாறாக - ரொம்பவே சிம்பிளான வினா என்னிடம் !!

"புதுசு என்ற தேடல்களுக்கெல்லாம் பெருசாய் அவசியங்கள் லேதுவா ? கொஞ்சம் டெக்ஸ் ; கொஞ்சம் லக்கி ; கொஞ்சம் மற்ற நாயக / நாயகியரின் கலவையிலேயே வண்டியை ஓட்டிக்கலாமா ?" என்பதே my question ! 
  • கார்ட்டூன் - "அட மொக்கை போடாதேப்பா" என்று சொல்லி விட்டீர்கள் !
  • எதிர்கால அபோகாலிப்ஸ் தொடர் - "அட நீ ஓரமா போவியா ? ஒரு ஜெரெமியாவே போதும் நைனா" என்று தீர்ப்புச் சொல்லி விட்டீர்கள் !
  • டார்க் காமெடி பாணிகள் - 'என்னமோ நீ சொல்றே...அதுக்கோசரம் படிக்கிறோம்" என்று புரிய வைத்து விட்டீர்கள் !
  • கி.நா.ஸ்  - 'அடி வாங்காம ஓடிப்புடு !' என்று அன்பாய் எச்சரித்து விட்டீர்கள் !
  • Fantasy - "புடிக்கும் ; ஆனா விற்காது !" என்று மண்டையில் குட்டுடன் சொல்லியாச்சூ !
So - எஞ்சியிருக்கும் டிடெக்டிவ் + வெஸ்டர்ன் ஜானர்களிலேயே இன்னும் கொஞ்சம் புதியவர்களைத் தேடிக் குடாயணுமா ? அல்லது 'இப்போதுள்ளோருடனே க்ளாஸிக் பார்ட்டிக்களின் புதுக் கதைகளையும் கொஞ்சமாய் தொட்டுக்கினு கொட்டும் குப்பையே மதி !' என்பீர்களா ? Honest பதில்ஸ் ப்ளீஸ் ? 

இங்கு பதிலளிக்க விரும்பா நண்பர்களுக்கென poll லிங்க் இதோ :


Bye all....see you around ! Have a good weekend !