Tuesday, January 10, 2023

தொடரும் ஒரு கனவு...!

நண்பர்களே,

வணக்கம். ஞாயிறும் சும்மா ஆயிரம்வாலா பட்டாசாய்ப் பொரிந்து தள்ளி விட்டது - சென்னைப் புத்தக விழாவினில் !! ஒரு கட்டத்தில் பில் போட்டு புக்ஸை வாங்கிப் போக நமது ஸ்டால் முன்னே பொறுமையாய் நின்ற நண்பர்களின் அணிவகுப்பு எனது ஆயுட்கால ஞாபகங்களுள் ஒன்றாய் இருக்குமென்பது சர்வ நிச்சயம் ! Was a stunning day ! வார இறுதியின் 2 நாட்களும் சுவையான கேக்காகிட, திங்கட்கிழமை அதன் மீதான செர்ரிப் பழமாகியுள்ளது - simply becos வாரத்தின் முதல் நாளில் பொதுவாகவே கூட்டம் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையை சுக்குநூறாக்கியுள்ளனர் சென்னை நண்பர்கள் ! Of course சனி, ஞாயிறின் விற்பனை நம்பர்களைத் தொட இயலாது தான் ; ஆனால் Monday was truly remarkable too !! வாரத்தின் துவக்க நாளினில் தொடச் சாத்தியமாகியுள்ள இந்த விற்பனையானது செம மெர்சலூட்டுகிறது !! ஏதோவொருவித கனவு கண்முன்னே நனவாகி வருவதான உணர்வோடு உலாற்றி வருகின்றேன் - உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகளுக்கும் எவ்விதம் கைமாறு செய்திடப் போகிறோமென்ற யோசனையுடன் !! 

ஆமா...ஆமா....ஸாகோர் பேரவைக்கு மாத்திரமன்றி, அனைவருக்குமே குஷியூட்டக் கூடிய COLOR ZAGOR கூடிய விரைவில் fast track செய்திடுவோம் தான் ! வாரயிறுதியின் பதிவினில் அது பற்றி எழுதுகிறேன் ! இப்போதைக்கு பிப்ரவரி பணிகளுக்குள் குதித்தாக வேண்டிய கட்டாயம் என்பதால் விசாலமான பதிவுக்கு இந்த நொடியினில் அவகாசமில்லை people !! பார்த்திருக்க தேதி ஜனவரி 10 ஆகியிருக்க, மண்டைக்குள் பிப்ரவரி சார்ந்த அலாரம் உரக்க ஒலிக்கத் துவங்கியாச்சு ! So அதற்கான நேரத்தினைத் துண்டு போட வழியில்லை என்பதால் இப்போதைக்கு கிளம்புகிறேன் - "தரைக்கு வந்த வானம்" என்ன சொல்கிறதென்று பார்க்க ! 

Bye all ....."எல்லாம் அழகே " & "என்றென்றும்  எலியப்பா" இப்போது ரெடியப்பா ! வியாழன் or வெள்ளி முதல் சென்னையில் நமது ஸ்டாலில் கிடைக்க வேணும் ! See you around all !


மாயாவி மறுபதிப்புகள் ஏற்கனவே ஸ்டாலில் உள்ளன !



















Sunday, January 08, 2023

ஜெய் ஜம்பிங் ஜாக் !

 நண்பர்களே,

வணக்கம். நாக்கு வறள்கிறது ....குறுக்கெல்லாம் நோவுகிறது...முட்டிகள் ஐயா..தெய்வமே...என்று கதறுகின்றன...! ஆனால்...ஆனால்...surprise ...surprise ....மனசெல்லாம் மத்தாப்பூவாய் பூரித்துக் கிடக்கின்றது ! கடந்த 10+ வருஷங்களாய் தூக்கங்களைத் தொலைத்த இரவுகளுக்கு பஞ்சமே கிடையாது ; ஞாயிறுகள், பண்டிகைகள், நாள்,பொழுது,விசேஷங்கள் என எதை எதையோ மிஸ் செய்திருக்கிறோம் தான்....ஆனால்...ஆனால்...surprise...surprise .....அவையெல்லாமே இந்த நொடியில் சந்தோஷ நினைவுகளாகவே மனதில் நிழலாடுகின்றன ! Simply becos - இது போலான ஒற்றை நாளுக்கென யுகங்களாய் தவமிருந்தாலும் தப்பே இல்லை ! Enter the சென்னை புத்தக விழா 2023-ன் முதல் வாரயிறுதி & ஒரு வரலாறு படைக்கும் விற்பனை கண்ட மாலைப்பொழுது !!  Oh yes sir.....நேற்றைய தினமானது நம் நண்பர்களை நேரில் சந்திக்கும்  குதூகலத்தினை மாத்திரமன்றி, நமக்கொரு record breaking விற்பனையினையும் நல்கிய அற்புதப் பொழுது !! ஜெய் ஸாகோராயா நமஹ !!

எப்போதும் போலவே நேற்றைக்கும், நிமிடத்துக்கொரு பரவச அனுபவமென, சந்திக்க இயன்ற ஒவ்வொரு நண்பரிடமுமிருந்தும் கொஞ்சம் மின்சாரத்தை உள்வாங்கிக் கொள்ள முடிந்ததெனில் அது மிகையே அல்ல ! கண்ணில்பட்ட ஒவ்வொரு வதனத்திலும் சந்தோஷப் பிரவாகங்கள், உள்ளத்திலிருந்து பூத்திடும் முகம் நிரப்பும் புன்னகைகள் & கண்களில் ஒரு ஆவல் !! ஸ்டாலுக்குள் கால்பதித்த ஒவ்வொரு நண்பரிடமும் 'இது நம்ம வீட்டு விசேஷம்'  என்பதான உணர்வு ததும்புவதை உணர முடிந்தது ! டெக்ஸ் ; டைகர் ; XIII ; மாயாவி ; லக்கி இத்யாதி..இத்யாதி...950 புக்ஸ் ; ஊர்ப்பட்ட தேசங்களின் படைப்புகள் - என்பனவெல்லாம் நம் சாதனைகளே இல்லீங்க ; அவையெல்லாம் அப்டிக்கா ஓரமாய்ப் போய் விளையாட வேண்டிய குட்டிப் பையன்களே ! ஆனால் இந்த 51 ஆண்டு காலப் பயணமும் நம் ஒவ்வொருவருக்குமே சொந்தமானது, இந்த பொம்ம புக் முயற்சிகளின் முழுமையிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு - என்ற அந்த உணர்வானது - சிலாகிப்புகள், விற்பனைகள், வரவு-செலவுகள் என்பனவற்றையெல்லாம் தாண்டியதொரு அசாத்திய உச்சம் !! இம்மியும் சந்தேகமில்லை - நம் ஆயுட்கால சாதனை என்பது இதைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை !! And இந்த அன்புகளுக்கு அருகதையானவர்களாய் தொடர்ந்திட, என்ன பல்டியடித்தாலும் தப்பே இல்லையென்று தோன்றுகிறது !! 

சந்தேகங்கள் இன்றி இன்னொரு சமாச்சாரமும் நேற்றைக்குப் பதிவாகியது & "ஜம்பிங் ஸ்டார் பேரவையின்" அதிகாரபூர்வமான அதகளம் ஸ்டார்ட்டு என்பது தான் அது ! பதுங்குகுழித் தலீவரும், ரவுண்டு பன் செயலருமாய் சங்கமென்று ஒன்றை நடத்தி வந்ததை....சாரி..சாரி..கைத்தாங்கலாய் உருட்டி வந்ததை, இத்தனை காலமாய்ப் பார்த்து வரும் நமக்கு, செம யூத்தான இந்தச் சிகப்புப் பேரவை செய்திடும் அதிரடிகளை வாய் பிளந்து ரசிக்கவே நேற்றைக்கு பொழுது சரியாக இருந்தது ! தலைவர் ஸாகோர் பாபு சார் - பை நிறைய ZAGOR டி-ஷர்ட்களோடும், டப்பி நிறைய அல்வாவோடும்  கண்ணில் படும் நண்டு நஸ்கானில் ஆரம்பித்து அத்தினி பேருக்கும் பதவிகளை வாரி வழங்கிய அழகிருக்கே...அட அட அட....காண கண்கோடி போதாது !! சொல்லி வைத்தாற்போல நேத்திக்கு நானும் சிகப்புச் சட்டையோடு ஆஜராகியிருக்க - ஸ்டால் முழுக்க 'சிகப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு...டொய்யுங்..டொய்யுங்..' .என்ற மீசிக் தான் ! அநேகமாய் நாமக்கல்லில் அடுத்த M.L.A எலெக்ஷனில் புதுத் தலீவர் சுயேட்சையாய், கோடாலி சின்னத்தில் நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை - simply becos வோட்டு போடக்கூடிய அத்தினி பேருக்கும் ஏதாச்சும் பதவியினை முன்கூட்டியே அறிவித்து கவர் பண்ணும் அந்தத் திறனுக்கு நேற்று ஸ்டாலில் இருந்தோர் அனைவரும் சாட்சி !   

நேற்றைய விற்பனை highlight என்று பார்த்தால் - சந்தேகமின்றி 3 standout performers !! 

முதலாமவர் நம்ம 'தல' டெக்ஸ் தான் ! மலரைச் சுற்றும் வண்டுகளைப் போல, வரிசையாய் டெக்ஸ் இதழ்கள் அடுக்கப்பட்டிருந்த இடத்திலேயே நங்கூரமிட்டு நின்ற வாசகர்கள் அநேகர் ! 'போன வருஷத்து டெக்ஸ் full ஆ குடுங்க !!' என்று கேட்ட மஞ்சச்சட்டை காதலர்கள் எக்கச்சக்கம் !

இரண்டாவது standout performer - நம்ம V Comics !! முழுமையான பாராட்டுக்கள் ; சிலாகிப்புகள் ; வாழ்த்துக்கள் - "பிரியமுடன் ஒரு போராளி"க்கு !!

And மூன்றாம் standout performer அல்ல - performerssssss !! Yes - ஓராண்டின் முழு செட் புக்ஸ் வேணுமென்று வாங்கிப் போன நண்பர்கள் கணிசம் !! Smashing '70s - full set 5 கொண்டு வந்திருந்தோம் - காலி !! 2022 full set pack 3 கொண்டு வந்திருந்தோம் - காலி ! 2022-ல் சந்தாவுக்கு அப்பாற்பட்டு வெளியான ஸ்பெஷல் இதழ்களின் pack கொண்டு வந்திருந்தோம் - காலி !! Phew !!! அப்படியே இந்த ஜனவரியின் துவக்கங்களில் மட்டும் காலம் நின்று விட்டால் ; மறுக்கா மறுக்கா ஒரே வாரமானது தொடர்ந்து கொண்டேயிருக்க தோர்கலின் பாணியில் சாத்தியமாகிடுமெனில் - கிட்டங்கிகளைக் காலி பண்ணிவிட்டு வாயெல்லாம் பல்லாய் நின்று விடுவேனே !!  

2 ஆண்டுகளாய் தொடர்பு விட்டுப் போயிருந்த நண்பர்களில் பலர், புஜம் நோகும் பளுவிலான புக்ஸை அள்ளிப் போனதே நேற்றைக்கின் விற்பனைச் சாதனையின் பின்னணி என்பது புரிகிறது ! And இன்னொரு சந்தோஷ ஆச்சர்யம் - நேற்றைக்கு நான் பார்த்த (எனக்குப் புது) வாசகர்களில் பலரும் இளைஞர்கள் !! (ஸ்ரீபாபு சார்....ஹேப்பி அண்ணாச்சி !!) பலரும் in their late '20s & early '30s !! இவர்கள் அனைவருமே வருடாந்திர வாடிக்கையாளர்கள் மாத்திரமே - at least for now ! அனைவரின் நம்பர்களை பில் போடும் போது நம்மாட்கள் சேகரித்து வருவதால், தொடரும் பொழுதுகளில் அவர்களையும் சிறுக சிறுக நம் வட்டத்தின் ரெகுலர்களாக்கிட முயற்சித்துப் பார்க்க வேண்டும் !

நேற்றையின் top buyer திருவனந்தபுரத்தில் வசிக்கும் நண்பர் - ரூ.15000-க்கு போட்டுத் தாக்கினார் ! And அவர் காட்டிய ஆர்வமும், உற்சாகமும் simply wow !! மிகச் சரியாய் என் வயதிலானவர் ; வயதுகளெல்லாம் வெறும் நம்பர்களே என்பதை அழுத்தமாய் நேற்றைக்கு கோடிட்டுக் காட்டினார் !! 

இளம் டாக்டர் ஜோடி ; கணவர் cupboard முழுக்க காமிக்ஸ் ஆல்பங்களால் நிரப்பித் திரிவதைப் பற்றி மனைவி என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் நொடியிலேயே மனுஷன் 2022 full set-ஐ அள்ளிக் கொண்டிருந்தார் !! வாங்கி வீட்டுக் கிளம்பியவர் , திடு திடுவென திரும்பி வந்து Specials Pack ஒன்றையும் வாங்கிப் போனார் !!

'2 வருஷம் முன்னே 'தலையில்லாப் போராளி' வாங்கி குடுத்து என் நண்பன் ஒருத்தன் என்னை வாசிக்க வைச்சான்; இப்போ கிறுக்கு பிடிச்சி டெக்ஸ் full set வாங்கிட்டு இருக்கேன்' என்று சொன்னதொரு நண்பரும் யூத்தின் பிரதிநிதியே ! தமிழில் ஏழு லட்சம் வாசகர்களைக் கொண்டதொரு podcast செய்து வருகிறாராம் & அதனிலும் நம்ம 'தல' பற்றிப் பேசியுள்ளனராம் !! 

'பச்சக்' பச்சக்' என்று போட்டோக்கள் எடுக்கப்பட, வழக்கம் போல போவோர்-வருவோரின் முகங்களில் 'இத்தினி பேருக்கு இந்த கொயந்த புள்ள புக் ஸ்டாலில் இன்னா ஜோலி ?' என்ற கேள்வி நெளிவதை பார்க்க முடிந்தது ! 

ஒரு புதுமண ஜோடி !! கணவரின் ஆர்வத்துக்கு தடை சொல்ல மனமின்றி மனைவி போரடித்துப் போய் நிற்க, கணவரோ காமிக்ஸ் புதையலைக் கண்டதும் bachelor ஆகிவிட்ட குதூகலத்தில் இதை புரட்ட, அதை அள்ள, என்று ரவுண்டு கட்ட ஆரம்பித்தார் ! 

And நேற்றைக்கு கணிசமான பெண்களின் வருகையுமே இருந்தது நமது ஸ்டாலில் ! வாங்கினார்களோ, இல்லியோ - பொறுமையாய் புக்ஸை புரட்டிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது !! 

இன்னொரு highlight - வீட்டிலுள்ள குட்டீஸ்களுக்கென ஷாப்பிங் செய்திட முனைந்த டாடிக்கள் !! லக்கி லூக் ; பென்னி ; smurfs என்று வாங்கிப் போனார்கள் ! And சிண்ட்ரெல்லா புக்கைப் பார்த்து விட்டு, அந்தக் கதையை தன தந்தையிடம் ஒப்பித்த ஒரு குட்டீசின் அழகை மெய்மறந்து ரசித்தோம் - நானும், பிரசன்னாவும் ! இந்த fairytale comics முயற்சி வியர்த்தமாகிப் போச்சே என்ற ஆதங்கம் என்னுள் இருந்தது நிஜமே ; ஆனால் - இது போலான காட்சிகள் அந்த நெருடல் மீது ஒரு வாளி குளிர்ந்த நீரை ஊற்றி விடுகிறது ! எல்லாம் அழகே - இந்த காமிக்ஸ் உலகினில் எல்லாம் அழகே !!

ரைட்டு...ஞாயிறு காலையே புத்தக விழாவில் ஆஜராகக் கிளம்பிட வேணுமென்பதால் இப்போதைக்கு நடையை கட்டுகிறேன் ! And yes - இன்றைய தினத்தின் Times of India நாளிதழில் பக்கம் 2-ல் ஒரு அரைப்பக்கக் கட்டுரையை பிரசுரித்து நமக்கு செம பூஸ்ட் தந்துள்ளனர் !! ரொம்பவே பொருத்தமான தருணத்தின் நிகழ்வு என்பதால் - அதனிலுள்ள சில பிழைகளைத் தாண்டியும் மகிழ்கிறோம் !! நான் சுட்டிக் காட்டியிருந்த திருத்தங்களையும் போட்டிருந்தார்களெனில் மகிழ்வு இரட்டிப்பாகியிருக்கும் ! Anyways நமது உளமார்ந்த நன்றிகள் இந்த ஊடக ஜாம்பவானுக்கு ! 

Bye all...இன்றைய பொழுதும் ஜம்பிங் ஜாக் பேரவையின் அலப்பறைகளுடனும், விற்பனை சாதனைகளுடனும் தொடர்ந்திடும் பட்சத்தில் - "எங்கே ? எப்போது ?" பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த "ஸாகோர் கலர் Special" fast track செய்திட முனைவோம் ! ஜெய் ஜம்பிங் ஜாக் !! See you at the fair guys !! 

P.S : இத்தாலியில் கூட ஒரு செம active ஜம்பிங் ஜாக் பேரவை உள்ளது போலும் ; 60 புக்ஸ் ஆர்டர் தந்துள்ளனர் !! 

Wednesday, January 04, 2023

ஒரு ஜனவரிப் படலம் !

 நண்பர்களே,

வணக்கம். இள ரத்தம் ஏதேதோ ரூபங்களில் உட்புகும் காரணமோ என்னவோ தெரியலை, இந்த மாதமே படா பரபரப்பாய்க் கீது !! மண்டைக்குச் சாயம் பூச அவசியமில்லா எடிட்டர் ஒரு பக்கம் ; கோடாரியுடன் காட்டிலும், மேட்டிலும், செம பிரெஷாய் அதிரடி செய்யும் ஒரு இளம் மாயாத்மா மறு பக்கம் ; அப்பாலிக்கா ரெம்போ இயமையான ; துடிப்பான ; செயல் வேகமிக்க ஜம்பிங் ஸ்டார் பேரவையினரின் ஆரவாரம் இன்னொரு பக்கம், என்று தொக்காய் இந்த ஜனவரியில் வாய்த்திருக்க, ஆபீசே கடந்த சில நாட்களாய் அல்லோலம் + கல்லோலம் பட்டுக் கிடக்கின்றது ! அதிலும் இன்றைக்கு தெறி மாஸ் !! Supreme '60s சந்தாக்களுக்கான பிரத்யேக பாக்சில் - வேதாளர் ; டெக்ஸ் ; மைக் ஹாமர் & ஜம்பிங் ஸ்டாரார் என்று உங்களின் கூரியர்கள் பேக் ஆகியது ஆண்டின் முதல் டெஸ்பாட்சுக்கு செம உரமூட்டியதெனில், கிட்டத்தட்ட 200 போன்களில் இன்றைய தினம் முழுக்க நீங்கள் விசாரித்து வந்தது icing on the cake !! புக்ஸ் கைக்குக் கிடைத்த உடனே அதே ஸ்பீடில் வாசிக்கப் போவது எத்தினி பேர் ? 'பொம்ம' பாத்துப்புட்டு தலைமாட்டில் அடுக்கி வைக்கப் போவது எத்தினி பேர் ? பொட்டிகளோடு பரணில் கர்ம சிரத்தையாய் அடுக்கப் போவது எத்தினி பேர் ? என்பதெல்லாம் தெரியலை ; ஆனால் எதிர்பார்ப்பும், உற்சாகமும் கலந்த உங்களின் ஆர்ப்பரிப்புகள், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் எங்களுக்கு ராக்கெட் fuel ஏற்றிக் கொண்ட மாதிரியான ஒரு high தரத் தவறுவதில்லை ! அதிலும் காதில் கெட்சப் வழியாத குறையாய் நம்மாட்கள் இன்றைக்கு பதில் சொல்லுவதை ரூமுக்குள் குந்தியபடியே கேட்டுக் கொண்டிருந்த போது, அடிவயிற்றில் வண்ணத்துப்பூச்சிகளின் அணிவகுப்பைப் போல ஒரு இனம்புரியா ஜிலீர் உணர்வு !! வீட்டில் உள்ளோரிடம் பேசவே வாட்சப் தான் என்றாகி விட்டுள்ள இன்றைய பொழுதுகளிலும், இந்தச் சிறு காமிக்ஸ் குடும்பத்தினில் நிலவும் அந்த அன்னியோன்யம் மெய்யாலுமே ஆண்டவனின் வரமன்றி வேறேதுமில்லை ! இந்த உற்சாகமும், உத்வேகமும் தொடரும் வரையிலும் வானமும் நமக்குத் தொடும் தூரம் தான் ! Thanks a ton for all the love & support folks !!

சந்தா பேக்கிங்ஸ் ஒரு பக்கத்து ரகளைஸ் எனில், இன்னொரு பக்கமோ சென்னைக்கான கடைசி நிமிட புக்ஸ் பேக்கிங் ; பேனர்கள் ; stationery ; பிரிண்டர் ; கம்பியூட்டர் ; கிரெடிட் கார்டு மெஷின் ; bar code ஸ்கேனர் ; இத்யாதி..இத்யாதி...பேக்கிங் என்று இன்னொரு டீம் அதகளம் செய்து கொண்டிருந்தனர் ! And GPay ; PhonePe மூலமாய் பணம் தரும் நண்பர்களின் பரிவர்த்தனைகளை ஸ்டாலில் அண்ணாச்சியே தெரிந்து கொள்ள ஏதுவாய் ஒரு ஓசை எழுப்பா ஏற்பாட்டையும் ஜூனியர் எடிட்டர் செய்து தந்து விட்டார் என்பது கொசுறுச் சேதி ! "பெறப்பட்ட PayTm தொகை ரூபாய்....." என்று பக்கத்து, எதிர் ஸ்டால்கள் வரைக்கும் கூவிடாமலே, நம்மவர்களுக்கு அந்த நொடியிலேயே தகவல் தந்திடும் இந்தப் புது ஏற்பாடு ! So கூட்ட நேரத்தில் அண்ணாச்சி தடுமாற அவசியங்கள் இராதென்று நினைக்கிறேன் இனிமேல் !முந்தைய பதிவினில் நண்பர் Sowmeyan பதிவிட்டது போல, புத்தகப் பெட்டிகள் காலியாகவும், காலியான கல்லாப்பெட்டி நிறைவாகவும் திரும்பிடும் பட்சத்தில் - இந்தாண்டின் முழுசையும் ஒரு திருவிழாவாக்கி விடலாம் ! தோரணங்கள் கட்ட இருக்கவே இருக்கார்கள் யூத்தான ஜம்பிங் ஸ்டார் அணியினர் !! Fingers on the hands & toes all crossed !!

ஓ..யெஸ்...உங்களின் டப்பிகள் இன்று பின்மதியமே கிளம்பியாச்சு ! கூரியர் நண்பர்கள் மட்டும் உம்ரன் மலிக்கின் பந்துவீச்சு வேகத்துக்கு நிகராய் நாளை பட்டுவாடாக்களை நிகழ்த்தினால், சூப்பரோ சூப்பர் தான் ! அதுக்கோசரம் இன்னொருக்கா fingers crossed ! 

ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடிhttps://lion-muthucomics.com/monthly-packs/1056-january-pack-2023.html

இம்முறையும் 4 இதழ்கள் எனும் போது, உங்களின் வாசிப்புகளின் order எந்த வரிசையில் இருக்குமோ என்றறிய ஆவல் ! புக்ஸ் கிட்டிய பின்னே பதிவிடும் போது - உங்களின் பார்வைகளில் எவை - எந்த வரிசையில் உங்களை வசீகரித்தன ? என்பதைக் குறிப்பிடுங்களேன் - ப்ளீஸ் ! Just curious !! 

அப்புறம் அடியேனின் வாசிப்பு வரிசையுடன் ஜனவரி இதழ்களின் அறிமுகங்களோடு, ஒரு குட்டி வீடியோ பதிவும் நமது YouTube சேனலில் வெள்ளி or சனி upload ஆகிடும் ! And இயன்றால், சென்னையின் புத்தக விழாவில் வாரயிறுதிகளில் நமது ஸ்டால் சார்ந்த வீடியோஸ் குட்டிக் குட்டி ரீல்ஸாக ரெடி செய்ய முடிகிறதா என்றுமே பார்க்கலாம் ! ஸ்டால் பிசியாக உள்ள பொழுதுகளில் அங்கிருக்கக்கூடிய நண்பர்கள் சின்னதாய் ஒரு வீடியோ எடுத்து அனுப்பினால் நிச்சயம் உதவிடும் ! 

நமது ஸ்டால் நம்பர்ஸ் 531 & 532 நண்பர்களே ; மறவாது விசிட் அடியுங்களேன் - ப்ளீஸ் ! Bye for now ! See you around !

Tuesday, January 03, 2023

மதராஸ் அழைக்கின்றது !

 நண்பர்களே,

வணக்கம். சர்வதேசப் புத்தகத் திருவிழாவாய் நமது சென்னை விழா புலிப்பாய்ச்சல் பாயும் ஒரு மைல்கல் ஆண்டினில் நாமும் தலையை  உள்ளே புகுத்திட முடிந்திருப்பது பெரும் உவகையளிக்கின்றது ! எந்த ஆண்டும் இல்லாத கோலாகலத்தோடு, கிட்டத்தட்ட 900 ஸ்டால்களுடன் இம்முறை நந்தனம் YMCA மைதானத்தில் BAPASI விழா தூள் கிளப்பவுள்ளது ! 

And ஏற்கனவே சொல்லியிருந்தது போல நமக்கு இம்முறை டபுள் ஸ்டால் & அரங்குகளின் நம்பர்ஸ் 531 & 532. அண்ணாச்சி ; உதவியாளர் ; கம்பியூட்டர் பில்லிங் பணியாளர் மற்றும் நமது front office திருமதி.ஜோதி என உங்களை வரவேற்க நால்வரணி அங்கே காத்திருக்கும். Plus நமது 250+ காமிக்ஸ் ஆல்பங்கள், உங்கள் வருகைகளை எதிர்நோக்கி வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் ! 

***இம்முறை காமா-சோமா என்று அடுக்கப்படாமல், category ரீதியில் புக்ஸ் display செய்யப்படும் ! 

***பௌன்சர் ; தாத்தாஸ் ; பராகுடா ; டெட்வுட் டிக் போலான 18+ சமாச்சாரங்கள், வெகுஜன ரசனைக்கான புக்ஸுடன் குவிந்து கிடக்காது தமக்கென ஒரு இடம் பிடித்திருப்பர் !

***என்ன வாங்குவது ? என்ற தீர்மானங்கள் பெரிதாய் உள்ளுக்குள் இல்லாது பொதுவாய் browse செய்திடும் வாசகர்களின் வசதிக்கென "EDITOR'S CHOICE" என 30 புக்ஸ் தேர்வு செய்து தந்துள்ளேன் ; அவை ஒரு குட்டி மேஜையில் இடம் பிடித்திடும் !

***And இம்முறை முதலாய் ஸ்டாலுக்கு வரும் நண்பர்களிடம், அவர்தம் மொபைல் நம்பர்களை சேகரிக்கும் முயற்சியுமே முன்னெடுக்கப்படும் - அவ்வப்போது வாட்சப்பில் updates அனுப்பும் பொருட்டு !

***SMASHING '70s வரிசையில் வேதாளர் + ரிப் கிர்பி + மாண்ட்ரேக் + காரிகன் கொண்ட full set நம்மிடம் மொத்தமே 20 தான் இருக்கும். அவை நீங்கலாய் சீரான எண்ணிக்கைகளில் அல்லாது, ரிப் கிர்பி புக்ஸ் 35 ; மாண்ட்ரேக் 60 ; காரிகன் 75 - என்பது போல் கையிருப்பு odd நம்பர்களில் உள்ளன. வேதாளர் சுத்தமாய் காலி ! So அந்த 20 complete sets தவிர்த்த மீத இதழ்கள் (ரிப் ; மாண்ட்ரேக் & காரிகன்) சென்னையில் விற்பனைக்கு வந்திடும் ! 

***முதல்முறையாக ஸ்டாலில் உங்களின் கமெண்ட்ஸ் பதிவிட ஒரு நோட்டும் இருக்கும் ! புத்தக விழா அனுபவம் சார்ந்த உங்களின் பார்வைகளை ; ஸ்டாலில் செய்திடக்கூடிய மேம்பாட்டுக்களை அதனில் நீங்கள் பதிவிடலாம் folks ! MAXI சைஸ் ; மினி சைஸ் - என்ற நமது blog பஞ்சாயத்துக்களையெல்லாம் அங்கே கொண்டு செல்ல வேண்டாமே - ப்ளீஸ் !

***மாயாவி - 4 மறுக்கா மறுக்கா மறுபதிப்புகளுடன் ஆஜராகிடுவார் - maybe by this weekend ! கைவசம் மாயாவி புக்ஸ் இல்லாது புத்தக விழாக்களுக்குப் போவதற்கே நம்மாட்கள் மிரள்கிறார்கள் என்பதால் this is for them too !! அதனில் "இமயத்தில் மாயாவி"க்கு மட்டும் புது அட்டைப்படம் !

***சில வருடங்களுக்கு முன்பாய் செய்தது போல, கலரில் கார்ட்டூன்ஸ் + சுட்டீஸ் கார்னர் புதிர்கள் கொஞ்சமாய் அச்சிட்டு வைத்துள்ளோம் - நமது அரங்கு நம்பர்ஸ் + website விபரங்களோடு ! புக்ஸ் வாங்குவோர் வீட்டு குட்டீஸுக்கு அவை ஆர்வமூட்டினால் சந்தோஷமே ! 

***அப்புறம் கதை சொல்லும் காமிக்ஸ் வரிசையில் - "எல்லாம் அழகே" புக் ரெடியாகி வருகிறது ! திங்கள்வாக்கில் அது சென்னையில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் ! And சேதி தெரியுமோ - இந்த வரிசையின் இதழ் # 2 ஆன சிண்ட்ரெல்லா கிட்டத்தட்ட stock காலி !! எனக்கே நம்ப முடியவில்லை - ஆனால் சரமாரியான புத்தக விழாக்களில் அது சூப்பராக நகன்றுள்ளது போலும் !! Phewwwwww !!

***ஜம்பிங் ஸ்டார் பேரவையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒரு வரிசை முழுக்க V காமிக்ஸ் ஆக்கிரமித்து நிற்கும் !! 

***அப்புறம் நம்ம எலியப்பா சார் - ஒரு தொகுப்பில் மினுமினுக்கக் காத்திருக்கிறார் ! இவர் நகரும் வேகத்தைப் பொறுத்து கைப்புள்ள ஜாக் !

***டைலன் டாக் - முழுவண்ண சிறுகதைகளும் புத்தக விழாவினில் நடுவாக்கில் நுழைந்திடும் - if time permits ! கலர் டெக்ஸ் சைசில் ; சின்ன விலையினில் !

ஸ்டால் கிடைக்க ஆசி தந்த பெரும் தேவன் மனிடோ, விற்பனை சிறக்கவும் வழி காட்டுவாரென்ற நம்பிக்கையோடு, நாளை சட்டி-பெட்டிகளைக் கட்டிக் கொண்டு சென்னை நோக்கிய பயணத்தினை நம்மவர்கள் துவக்கிடுகிறார்கள் ! Wish them luck ப்ளீஸ் !! And please do drop in folks !!! 

மீண்டும் சந்திப்போம் ! Bye for now !

Saturday, December 31, 2022

ஹலோ சொல்லுவோமா ஒரு முயலுக்கு ?

 நண்பர்களே,

வணக்கம். வாரத்தின் இறுதி நாள் ; மாதத்தின் இறுதி நாளும் தான் ; அட, வருஷத்தின் இறுதி நாளுமே இன்றைக்குத் தானே ? பலருக்கும் பலவித அனுபவங்களைத் தந்த ஒரு dramatic ஆண்டுக்கு விடை தரும் தருவாயில் நிற்கின்றோம் - இந்த டிசம்பர் 31-ல் !! நம்மைப் பொறுத்தவரையிலும் நீராவி எஞ்சினைப் போலவொரு நெடும் பெருமூச்சையே 2022-க்கான பரிசாய்த் தந்து வழியனுப்பத் தோன்றுகிறது ! நிறைய highs ; கொஞ்சம் lows ; எக்கச்சக்க பெண்டு கழற்றல் ; அநேக அனுபவப் பாடங்கள் என்று இந்தாண்டு கண்ணில் காட்டியுள்ள அனுபவங்கள் எண்ணிலடங்காவொரு கலவை ! நாளை புலரவிருக்கும் திருவாளர் 2023 - சீன காலெண்டர்களின்படி "முயலின் ஆண்டு" என்று அறியப்படுகிறார் ! "நளினம், அழகு, நிதானம், நிம்மதி' என்பன இந்தாண்டுக்கான குறியீடுகளாம் ! நெடும் ஆயுள்....அமைதி....வளம் பெருகுமாம் இந்த வருஷத்தினில் !! சீன சமாச்சாரங்கள் என்றாலே டெரரான சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் இந்நாட்களில், அவர்களின் இந்தப் புராதன நம்பிக்கைகளாவது பொய்க்காதென்று நம்புவோமாக !! தெய்வமே !!

ஆண்டின் இந்த இறுதிப் பதிவானது, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னே துவங்கியதொரு சமாச்சாரத்தை விரைவில் ஒரு சுப க்ளைமாக்ஸுக்கு நகர்த்திட முனைந்திடும் பதிவாக இருக்கும் ! And yes - "உயிரைத் தேடி" பற்றிய பதிவே தான் இன்றைய highlight !

இப்போதெல்லாம் கி.பி...கி.மு...என்பது போல அடையாளத்துக்குச் சொல்லத் தோன்றுவது, 'மொத லாக்டௌன்' ; 'ரெண்டாது லாக்டௌன் ' என்ற கால கட்டங்களையே ! ஒன்றாவதுக்கும், இரண்டாவதுக்கும் இடைப்பட்டதொரு சோம்பலான நாளினில் "உயிரைத் தேடி" தொடருக்கான உரிமைகளை வாங்கியிருந்தோம் !  எண்பதுகளின் பிற்பகுதியில் (சரி தானுங்களா மக்களே ?) தினமலர் சிறுவர்மலரில் தொடராய் வெளி வந்து செம ஹிட்டடித்த கதை இது என்பது நம்மில் யாருக்கும் தெரியாதிராது - maybe 2K கிட்ஸ் நீங்கலாய் ! நிஜத்தைச் சொல்வதானால், இந்தத் தொடர் தினமலரில் வெளியான நாட்களில் நான் அதனைப் பெரிதாய்ப் பின்தொடர்ந்ததில்லை ! ராணி காமிக்ஸும் சரி, மேத்தா காமிக்ஸும் சரி ; தினமலரின் சிறுவர்மலர்களும் சரி, எப்போது வெளிவந்தாலும், அவற்றை மேலோட்டமாய்ப் புரட்டுவது ; எந்தக் கதைகளை வெளியிட்டுள்ளனர் ? என்பதைப் பார்க்க வேண்டியது ; அப்பாலிக்கா அவற்றுள் ஏதேனும் குறைகள் தென்படுகின்றனவா ? என்று பார்க்க மட்டுமே தோன்றிடும் ! முழுசாய் உட்புகுந்து எதனையும் வாசிக்க முனைந்ததில்லை - 'ச்சீசீ...இந்தப் பயம் புயிக்கும்' கதையாக ! So "உயிரைத் தேடி" தொடரை அன்றைக்கு சீரியஸாய் follow செய்திருக்காதவன், பின்னாட்களில் நண்பர்கள் அது பற்றிப் பேசுவதைக் காதில் வாங்க ஆரம்பித்த போது தான் இப்படியொரு weight இந்த நெடும் கதைக்கு உள்ளதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன் ! கமர்ஷியல் ஹிட்டடிக்க Fleetway தயாரிப்புகள் என்றைக்குமே உத்திரவாதமான material என்பதில் எனக்கு ஐயங்கள் இருந்ததில்லை என்பதால், அந்த லாக்டௌன் பொழுதுகளின் உருட்டல்களில் இந்தக் கதை பற்றிய பின்னணிகளை நெட்டில் தோண்டித் துருவினேன் ! எனது நல்லதிர்ஷ்டம் - இதன் கதாசிரியரை நேரில் தொடர்பு கொள்ளவொரு வாய்ப்பு கிட்டியது ! அவரிடம் கொஞ்சமாய் மின்னஞ்சல்களில் தகவல் பரிமாற்றங்கள் செய்த போதே தீர்மானித்து விட்டேன் - இது கூடையைப் போட்டு பொத்தப்பட  வேண்டிய செம வெடக்கோழி என்பதை ! தொடர்ந்த நாட்களில் கதையின் உரிமைகளைப் பெற்றான பின்னே தான் கதையையே நான் முழுதாய்ப் படிக்க முனைந்தேன் ! And கொரோனா அரக்கன் தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்நாட்களில் இந்தக் கதையினை வாசிப்பது ஒரு ஜிலீர் கிலி அனுபவமாக இருந்தது ! 

அச்சமயத்தில் நமது மொழிபெயர்ப்பு டீமில் இடம்பிடிக்க புதிதாயொரு சகோதரி முயற்சித்துக் கொண்டிருந்தார் ! IAS தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருந்தவர், கொரோனா உருவாக்கிய கட்டாய பிரேக்கில் வீட்டில் சோம்பலாய் இருக்க, அந்நேரத்தினில் நமக்குப் பேனா பிடிக்க ஆர்வம் காட்டியிருந்தார் ! அவரிடம் நான் தந்த கதை "உயிரைத் தேடி" தான் ! எல்லோருமே வீட்டில் மோட்டுவளைகளைப் பார்த்துக் கொண்டிருந்த 2021-ன் ஊரடங்கு நாட்களவை என்பதால் குறுக்கும் மறுக்குமாய் மொழிபெயர்ப்புகள், திருத்தங்கள், மறுக்கா மொழிபெயர்ப்புகள், மறுக்கா மறுக்கா திருத்தங்கள் என்ற கூத்துக்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன ! To her credit , நான் படுத்தியெடுத்த பாடுகளையெல்லாம் துளியும் முகச்சுளிப்பின்றி ஏற்றுக் கொண்டு முயற்சிகளைத் தொடர்ந்தவர், ஒரு கட்டத்தில் ரொம்பவே fluent ஆக எழுதும் ஆற்றலை வெளிப்படுத்த ஆரம்பித்தார் !! எனக்கோ செம குஷி ; ஆனால் ரொம்பவும் துள்ள வழியில்லை ; because லாக்டௌன் முடிந்த முதல் நாளில் அவர் நமது மொழிபெயர்ப்புப் பொறுப்புகளுக்கு டாட்டா காட்டிவிட்டு புறப்பட்டு விடுவார் என்பது முதலிலேயே தெரிந்திருந்த சமாச்சாரம் ! 5 மாதங்கள் எடுத்துக் கொண்டார் - முழுசாய் 184 பக்கங்களை பூர்த்தி செய்திட ! ஆனால் இறுதி output செம நீட்டாக இருந்தது & ரொம்பவே முக்கியமாய் சுலப நடையில், சுலப வாசிப்புக்கு உகந்திருந்தது !  

2021-ன் பிற்பகுதியில் கிடைக்கும் ஓய்வுகளின் போதெல்லாம் நம்மாட்கள் DTP வேலைகளை செய்து முடித்திருக்க, ஒரு கத்தைப் பக்கங்களோடு "உ.தே" எனது மேஜையில் ஜாகையினைத் துவங்கியிருந்தது ! புத்தக விழாக்கள் ஒன்று பாக்கியின்றி ரத்தாகிக் கிடந்த அந்த நாட்களில், அட்டவணையினில் இடம்பிடித்திருக்காத இந்த இதழினை குறுக்காலே வெளியிட சற்றே தயக்கம் மேலோங்கியது ! Moreso நம்மைச் சுற்றிலும் அந்நேரங்களில் வைரஸ், நோய்த்தொற்று, ஆஸ்பத்திரிகள் ; வண்டி வண்டியாய் வதந்திகள் என எக்கச்சக்க நெகட்டிவ் சமாச்சாரங்கள் சுழன்றடித்துக் கொண்டிருக்க, நம் பங்குக்கு இந்த apocalypse ரக ஆல்பத்தை இறக்கிவிட்டு புண்ணியம் சேர்ப்பானேன் என்ற தயக்கத்தில் கொஞ்சம் பிரேக் விட தீர்மானித்தேன் ! 2022-ம் பிறந்தது & ரைட்டு...இந்தாண்டினில் இதனைக் களமிறக்கி விட்டுப்புடலாம் என்ற திட்டமிடலோடு அறிவிப்பினை வெளியிட்டோம் - black & white ஹார்ட் கவர் ஆல்பம் - ரூ.200 விலையில் என்று ! Truth to tell - இந்த விலையானது "உயிரைத் தேடி" திட்டமிடலின் பிள்ளையார் சுழி போட்ட தருணத்தினில் நிலவி வந்த பேப்பர் விலைகளைக் கருத்தில் கொண்டு நிர்ணயித்தது ! 2022-ன் பிற்பகுதியில் நிறையவே விலையேற்றம் இருப்பினும், இந்த cult இதழை ஒரு ஜனரஞ்சக விலையிலேயே தொடர்வது உசிதமென்று தீர்மானித்தோம் ! And இதோ - இந்த ஆல்பம் ஒரு வழியாய் ரிலீஸ் ஆகிடவுள்ள 2023-ல் இந்த இருநூறு ரூபாய் விலையானது இம்மியூண்டு சாத்தியம் கூட இல்லாததொன்று என்பது புரிந்தாலும் - 'மணந்தால் மகாதேவி' பாணிக்கு விடை தரும் உத்தேசங்கள் இல்லவே இல்லை ! So அதே இருநூறில் செம ரிச்சாக black & white இதழ் வெளியாகும் !  

Cut to a phase in end 2021 - இத்தனை மவுசுள்ளதொரு இதழ் தினமலர் சிறுவர்மலரிலேயே 2 வண்ணங்களிலும், கலரிலுமாய்க் கலந்து கட்டி வெளியாகியிருக்க, அதனை நாமும் கலர் பண்ணி வெளியிட்டால் என்ன ? என்ற கேள்வியினை நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டேயிருக்க, 'ரைட்டு, இழுக்கும் தேரை முழுசுமாய் இழுத்துப்புட்டால் போச்சு' என்ற எண்ணத்துடன் படைப்பாளிகளிடம் மறுக்கா பேச ஆரம்பித்தேன் - full color இதழையும் ஒருசேர வெளியிடுகிறோமே ? என்று ! ஆனால் அவர்கள் அதற்கு அப்போது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை ; maybe கொஞ்ச காலத்தினில் நாங்களே கலரில் வெளியிட்டாலும் வெளியிடலாம் என்பது போல சொல்லியிருந்தார்கள் ! சரி...அவர்களே கலரிங் செய்து விட்டால் செம அழகாய் இருக்கும், நமக்கும் நோவு மிச்சமே என்றபடிக்கு நான் ஒதுங்கிக் கொண்டேன் ! நிலவரம் இவ்விதமிருக்க, நடப்பாண்டினில் சில மாதங்களுக்கு முன்பாய் - "நீங்களே கலர் பண்ணி ஒரு கலர் ஆல்பத்தினையுமே வெளியிடுவதாக இருந்தால் - carry on ...! எங்களுக்கு இப்போதைக்கு இதனைக் கையில் எடுப்பது மாதிரியான திட்டமிடல் இல்லை" என்று சொல்லியொரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது ! 

அந்நேரத்துக்கோ black & white பதிப்புக்கென நமக்கு கணிசமான முன்பதிவுகள் கிட்டியிருந்தன & அட்டைப்படமும் ரெடியாகி இருந்த நிலையில் 2022 தீபாவளிக்கு ஆல்பத்தை வெளியிடும் முஸ்தீப்பில் இருந்தோம் ! But கலர் இதழுக்கும் green signal கிட்டிவிட்ட நிலையில், அதை இன்னமொரு 6 மாதங்கள் கழித்து நான் அறிவிப்பதாக இருந்தால், சாணிப்பாலைக் கரைத்துத் தலையில் ஊற்ற 'நானு..நீயு..' என்று கூட்டம் அலைமோதுமென்பதை யூகிக்க முடிந்தது ! 'ஒரு ரவுண்டு black & white-ல் சில்லறை பார்த்துப்புட்டு, இப்போ அடுத்த ரவுண்டு கலரிலே கல்லா கட்ட தீர்மானமாக்கும் ராசுக்கோல் ? ....கலர் இப்போதைக்கு நஹி என்று சொன்னதெல்லாம் பொய் தானா கோப்பால் ??' என்று ஆளாளுக்கு மொத்தியெடுக்கும் காட்சி ஒரு கணம் என் மனசில் ஓட, "ஆத்தீ...!! கருப்பு-வெள்ளை இதழின் பணிகளை அப்டியே pause போடுங்க !! கலர் ஆல்பத்துக்கான உரிமைகளை பேசிமுடித்த பிற்பாடு, கலரிங் வேலைகளையும் முடித்துக் கொண்டு, ஒரே நேரத்தில் black & white இதழ் + கலர் இதழ் என்ற திட்டமிடலோடு கிளம்பலாம் !" என்று சொல்லி வைத்தேன் ஆபீசில் ! இது எதுவுமே நம்மாட்களுக்குத் தெரியாதென்பதால் - 10 நாட்களுக்கு ஒரு தபா, "சார்...உயிரைத் தேடி எப்போ வரும்னு கேட்டு மூக்கிலே குத்துறாங்க சார் !" என்ற முகாரி ராகங்களோடு வருவார்கள் ! கொஞ்சமாய் டிஞ்சர் போட சொன்ன கையோடு நான் silent mode க்குப் போய்விடுவேன் ! 

ஓசையின்றி நவம்பர் துவக்கம் முதலாய் கலரிங் பணிகளை துவக்கியிருக்க, 184 பக்கங்கள் கொண்ட இந்த ராட்சஸப் பணிக்குள் அந்த டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் ராப்பகலாய் உழைத்து வருகிறார் ! அன்றாடம் செய்து முடித்த பணிகளை என்னிடம் காட்டுவது, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் செய்து முடிப்பது - என கிட்டத்தட்ட 2 மாதங்களாய் தனது இதர வேலைகளையெல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டு இதனுள் ஒரு தவமாய்ப் பணியாற்றி வருகிறார் ! இந்தப் பணிகளைக் co-ordinate செய்திடும் பொறுப்பை நம் நண்பர்களுள் ஒரு தீவிர "உயிரைத் தேடி" fan முழுவீச்சில் ஏற்றுக் கொண்டிருக்க, என் பாடு கொஞ்சம் இலகுவாகியுள்ளது ! ஆனால் அவர்களுக்கோ எக்கச்சக்க சிவராத்திரிகள் தொடர்ந்து வருகின்றன ! டிசம்பர் 31-க்குள் கலரிங்குக்கு சுபம் போட முடிந்தால் அதன் பிற்பாடு எடிட்டிங், புராசசிங் ; அச்சு & பைண்டிங் என fast track செய்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்திட எண்ணியிருந்தோம் ! ஆனால் இந்தப் பணியின் ராட்சஸப் பரிமாணம் அதற்கு முட்டுக்கட்டை போட, இன்னமும் ஒரு 10 நாள் வேலை எஞ்சியுள்ளது ! Once that is done too - "உயிரைத் தேடி" கலர் ஆல்பம் ரூ.500 விலையிலும், black & white ஆல்பம் ரூ.200 விலையிலும் simultaneous ரிலீஸ் கண்டிடும் - நமது ஆன்லைன் புத்தக விழாவினில் (date will be announced soon!) 

  • ஏற்கனவே black & white இதழ்களுக்கு முன்பதிவு செய்துள்ளோர் அதுவே போதுமென்று எண்ணினால் - no problems, அதற்கேற்ப அனுப்பிடுவோம் !
  • ஏற்கனவே black & white இதழ்களுக்கு முன்பதிவு செய்திருந்தோர் - 'இல்லே...கலர் வருதுன்னா எனக்கு கலர் தான் வேணும் ! B & W கேன்சல் !" என்றால் again no problems, மேற்கொண்டு ரூ.300/ அனுப்பினால் அதற்கேற்பவும் அனுப்பிடலாம் !
  • 'எனக்கு b &w இதழும் வேணும், கலர் ஆல்பமும் வேணும் !' - என்று சொன்னால், மவுண்ட் ரோடில் இல்லாங்காட்டியும், மன்னார்குடி ரோட்டிலாச்சும் உங்களுக்கு ஒரு சிலை வைத்த கையோடு, அவற்றின் மீது காக்காக்கள் 'ஆய்' போய் வைக்காதிருக்க குடைகளை பிடித்தபடிக்கே நிற்போம் !!
  • And இந்த நொடியில் உடனே பணம் அனுப்ப அவசரங்களில்லை ! நிதானமாய் நமது ஆன்லைன் புத்தக விழாவின் போது உங்களுக்குத் தேவையான இதழுக்கோ / இதழ்களுக்கோ ஆர்டர் செய்து கொள்ளலாம் !!

So இதுவே திட்டமிடல் guys :



Phew....ஒரு வழியாய் அறிவிப்பை செய்தாயிற்று என்பதால், இனி அடுத்த விஷயங்களுக்குள் குதிக்கும் வேலையினைப் பார்க்கலாம் !! 

Moving on, ஜனவரியில் debut செய்திடவுள்ள V காமிக்ஸ் அட்டைப்படத்தினை உங்களிடம் காட்டச் சொல்லி 900 எடிட்டர் சொல்லியதால் - here you go :


Just look at these illustrations !!! Uffffff......!! மிரட்டல் !! ஜம்பிங் ஸ்டார் பேரவையினர் இதனை அண்ட சராச்சரங்களெங்கும் கொண்டு சேர்த்து விடும் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்வார்களென்ற நம்பிக்கை 899 & 900 க்கு உள்ளது !! 

அப்புறம் போன பதிவிலேயே நான் குறிப்பிட்ட அந்த டெக்ஸ் அட்டைப்படமும் இதோ ! கோப்பினை வாங்க மறந்து போச்சு ; so கையில் உள்ள புக்கிலிருந்து ஒரு photo !!

Before I wind up, ஒரு மாதம் முன்னே கேட்டிருந்ததொரு கேள்வியின் நீட்சி - இம்முறை உங்களுக்கு தீர்மானம் பண்ணிட இலகுவான வாய்ப்புடன் :

இதோ - அடுத்த SUPREME '60ஸ் இதழில் களமிறங்கத் தயாராக உள்ள டிடெக்டிவ் சார்லி - 2 வெவ்வேறு பக்க அமைப்புகளில் ! 



  1. சித்திரம் 1 - வழக்கமான MAXI சைஸ்....பக்கமொன்றுக்கு 12 படங்களுடன் !
  2. சித்திரம் 2 & 3 - வழக்கமான டெக்ஸ் சைஸ்....பக்கமொன்றுக்கு 6 படங்களுடன்!

இவற்றுள் எந்த அமைப்பு ஓ.கே. என்பீர்களோ folks ? 

உங்கள் பதில்களை சிம்பிளாக "12" என்றோ - "6" என்றோ இங்கு பதிவிட்டால் போதும் ! உங்களின் தேர்வுகள் மாத்திரமே ப்ளீஸ் - அவற்றின் பின்னணிக் காரணங்கள் not really needed because, அடுத்த நண்பரின் தேர்வின் மீதான விமர்சனமாய் அவை தென்படலாம் !! 

And இதோ - இன்னமுமொரு சந்தா நினைவூட்டலோடு ஞான் கிளம்புது - புத்தாண்டுக்கும், புத்தாண்டின் பணிகளுக்கும் தயாராகிக் கொள்ளும் பொருட்டு !! செம தெறி வேகத்தினில் ஓட்டமெடுத்து வரும் சந்தா சேர்க்கை தொடரும் நாட்களில் இதே வேகத்தில் பயணித்தால் - 2023 இன்னுமொரு அற்புத ஆண்டாக அமைந்திடும் நம் அனைவருக்கும் !! 



மீண்டும் சந்திப்போம் folks !! புதிதாய்ப் பிறக்கவுள்ள ஆண்டானது நம் அனைவருக்கும் நலம் + வளம் + நம் கனவுகள் அனைத்தினையும் நிஜமாக்கும் திறனையும் வழங்கிடும் ஆற்றலுடன் அமைந்திட புனித மனிடோவிடம் கரம்கூப்பி வேண்டிக் கொள்வோம் !! See you all in the NEW YEAR folks !! 

Have a wonderful wonderful New Year 's Eve & a Beautiful 2023 !! God be with us all !! 


பி.கு : நண்பர் STR போன பதிவினில் போட்டுத் தங்கியிருந்த அந்த TEX புள்ளி விபரங்கள் செம மாஸ் !! அதனை ஜனவரி டெக்ஸோடு இணைக்க வழியுண்டா ? என்று பார்க்கவுள்ளோம் !! நன்றிகள் ஒரு நூறு சார் !!