Sunday, October 31, 2021

சாத்து வாங்கிய சாயந்திரமும், குதித்தெழுந்த பதிவும் !

 நண்பர்களே,

வணக்கம். சாயந்திரத்துக்குள் வேலைகளையெல்லாம் முடித்து, ஒதுக்கி வைத்து விட்டு, முறுக்கு...சிப்ஸ்... அப்பாலிக்கா யாரோவொரு அனாமதேய அன்பர் அனுப்பியிருந்த  ஒரு பெரிய Premium Giftbox-ன்  நொறுக்குத் தீனிகளையும் எட்டும் தொலைவில் வைத்துக் கொண்டு (thanks நண்பரே !!) டாணென்று ஏழரை மணிக்கு கிரிக்கெட் மேட்சைப் பார்க்க செம குஷியாய் அமர்ந்தது மட்டும் தான் ஞாபகமுள்ளது ! ஒரு முறுக்கை முழுங்கும் நேரத்துக்குள் நமது அணியில் பாதிப் பேர் முக்காடைப் போட்டபடிக்கே கிளம்பியிருக்க, சிப்ஸ் பாக்கெட்டை உடைப்பதற்குள் 20 ஓவர்களே முடிந்திருந்தன !! "இதுக்குப் பதிலா ஸ்டீல் பொழிந்து கொண்டிருந்த கவிதைகளைக் கூட ஜீரணிச்சிடலாம் போலும்" என்று தோன்றினாலும் - "ஆங்...பேட்டிங் சொதப்பியிருக்கலாம் ; பவுலிங்கில் பின்னாம விட மாட்டாங்க நம்ம ஆளுங்க !!" என்ற நம்பிக்கை ஒருபக்கம் எட்டிப் பார்த்தது ! ஆனால் இன்றைய மாலைக்கு புனித மனிடோவின் திட்டங்கள் வேறு போலும் !! "ஒரு இரும்பு தெய்வத்தின் கவிதைகளை புறக்கணிச்சிட்டா வந்தே - மவனே, இங்கேர்ந்து உன்னைத் துரத்தி விடறேனா இல்லியா பாரு ?!" என்று பவுலிங்கிலும் நம்மவர்கள் பீச்சோ பீச்சென்று பீச்சும் ஆட்டத்தைக் காட்டச் செய்து, என்னைத் தலை தெறிக்க இங்கே ஆஜர் ஆகச் செய்து விட்டார் ! ராத்திரி முழுக்க ஸ்டீல் - கொட்டையும், குழலையும் ஊதிக்கினே எத்தினி டப்பாங்குத்தைக் குத்தினாலும் பரவால்லே, இனி ஒரு ஆறு மாசத்துக்காச்சும் டி-வி பொட்டியின் பக்கமாய்த் தலை வைத்துப் படுப்பதாக இல்லை ! ஆத்தாடி...என்னவொரு மரண அடி !!

நேற்றின் பின்மாலைப் பொழுதும், இன்றைய நாளின் முழுமையும் "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டாக்கள்" இறுதி எடிட்டிங்கில் ஓட்டமெடுத்துள்ளது ! 270 பக்கங்கள் கொண்ட மெகா த்ரில்லர் எனும் போது, பிதுக்கி விட்டது வேலை ! நான் எழுதியதே என்றாலும், ஒரு கோர்வையாய் முழுக் கதையாய் வாசிக்கும் போது ஆங்காங்கே தென்பட்ட சொதப்பல்களை சரி செய்வதும் சுலபமான பணியாக இருக்கவே இல்லை ! எனக்குப் பொதுவாய் நெடும் கதைகளினுள் பணியாற்றும் போது நம்ம XIII-ன் வியாதி தொற்றிக் கொள்வதுண்டு ! "இந்தாளுக்கு கோவிந்த்சாமின்னு பேரா ? கொயந்தசாமின்னு பேரா ?" என்ற ரீதியில் சந்தேகங்கள் எழுந்திடுவதுண்டு ! இங்கோ ஒண்ணரை ஆண்டு இடைவெளிக்குப் பின்பாய்த் தொடர்ந்திடும் பணியெனும் போது - இந்தச் சிக்கல் நிரம்பவே படுத்தி எடுத்தது ! So துவக்க அறிமுகப் பக்கங்களில் பயன்படுத்தியிருந்த பெயர்களையெல்லாம் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டு அப்பப்போ அதனைப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தேன் ! And கதையை ஒரு முழு வாசிப்புக்கு உட்படுத்தும் போது - இதன் பிதாமகர்களின் விஸ்வரூபம் துல்லியமாய்த் தெரியத் துவங்கியது ! இந்தக் கதையின் துவக்கப் புள்ளியை உருவகப்படுத்திய சமயத்திலேயே கதாசிரியர் இங்கே 5 அத்தியாயங்களை தனக்குள் சிருஷ்டித்து - எந்தெந்த அத்தியாயங்களில் எந்தெந்த முடிச்சுகளை போடப் போகிறோம் ? என்பதையும் தெள்ளத்தெளிவாக ரெடி செய்திருக்க வேணும் என்பேன் !! Becos ஒற்றை முடிச்சு கூட விளக்கமின்றித் தொங்கிக் கொண்டிராது, கதை நிறைவுறும் வேளைக்குள்ளாக அத்தனைக்குமே  செம ஷார்ப்பான தீர்வுகளைத் தந்துள்ளார் ! Simply a masterpiece !! Maybe இதனை இன்னும் ரெண்டோ / மூன்றோ பாகங்களுக்கு நீட்டித்திருக்கவும் முடியும் தான் ; in fact இன்னும் கொஞ்சம் கதை மாந்தர்களைக் கூடுதலாக்கி - கதையின் வீரியத்தையுமே ஒரு மிடறு அதிகப்படுத்தியிருக்கலாம் தான் ! ஆனால் அம்சமான அளவே போதுமென்று 'சிக்' தீர்மானத்துடன் - கதாசிரியர் மிளிர்கிறார் !

And இங்கே பேனா பிடித்த அனுபவத்தினில், பைபிள் வரிகளைத் தேடுவதில் துவங்கி, லத்தீன் பாஷையின் சொற்றொடர்கள் ; அமெரிக்க அரசியல் வரலாறு ; அமெரிக்க சீரியல் கில்லர்கள் ; கொரிய யுத்தம் - என்று ஏதேதோ சமாச்சாரங்களை கூகுளில் துளாவிட்டதும் சேர்த்தி !! நிறைய ஆக்ஷன் கதைகளையெல்லாம் கையாண்டுள்ளோம் தான் ; XIII-ன் 18 பாக நீளங்களையும் பார்த்து விட்டோம் தான் ; அந்த அளவுகோளின்படிப் பார்த்தால் 270 பக்கங்கள் no big deal என்று தோணலாம் தான் ! ஆனால் நம் மத்தியில் நிரம்ப காலத்துக்கு நினைவில் நிற்கப்போகும் த்ரில்லராய் இது இராமல் போகாதென்று காதினுள் பட்சிராஜா சொல்கிறார் !! Fingers crossed !!

So அடுத்த சில நாட்களில் இன்றைய திருத்தங்களைப் போட்ட கையோடு, ஒருக்கா சரி பார்த்து விட்டு, அப்புறமாய் ஒரு உள்ளூர் பள்ளியின் சீனியர் தமிழாசிரியரிடம் பிழை திருத்தங்கள் போட மொத்தமாய் அனுப்பிட வேணும் ! இந்த  மாதம் முதலாய் அவர் நமக்கு உதவிடவுள்ளார் என்பதால் - பற்களை ஆடச் செய்யும் எழுத்துப் பிழைகள் தொடராதென்ற நம்பிக்கையுள்ளது !! ஆக FFS மெகா இதழின் ஒரு பாதி, தீபாவளி முடிந்த பிற்பாடே அச்சுக்கு கிளம்பிவிடும் !

And  நாளை நம்ம சிரிப்புப் பார்ட்டீஸான ஹெர்லக் ஷோம்ஸ் & வேஸ்ட்சன் உடன் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது !! இவர்களின் இறுதி appearance ஆல்பம் என்பதால், அமர்க்களமாய் டாட்டா சொல்லி அனுப்பிட எண்ணியுள்ளேன் ! இரண்டு நாட்களுக்குள் அவர்களது மொழிபெயர்ப்பு நிறைவுற்று விட்டால் - அப்புறமாய் நமது XIII காத்திருப்பார் !! அவரை மட்டும் ஒரு நாலு நாட்களுக்குள் சமாளித்து விட்டால் - அதன் பின்பாய் FFS இதழ்களின் புக் # 1 பக்கமாய் குதித்து விடலாம் ! So குவிந்து கிடந்த "பணி மலை" அடுத்த வாரம் இந்நேரத்துக்கு - "தாண்டி முடித்த மலை"யாகியிருப்பின் - அப்புறம் ஸ்டீல் கச்சேரியில் நானுமே சேர்ந்து கொள்ள நேரமிருக்கும் !! உஷார் மக்களே !!

அப்புறமாய்  "கதை எழுதட்டா ? கவித எழுதட்டா ? பாட்டுப் பாடட்டா ?" என்று மாய்ந்து மாய்ந்து வாட்சப்பில் மெசேஜ் அனுப்பி வந்த சீனியர் எடிட்டருக்கு "GO AHEAD !" என்று பச்சை சிக்னலும் தந்து ; பதில்கள் கோரிய உங்களின் ஒரு டஜன் கேள்விகளையும் தந்தான பின்னே - ஸ்டார்டிங் ட்ரபிளோடு தடுமாறிடுபவரை அவசரப்படுத்தும் வேலை பாக்கியிருக்கும் !! "30 நாட்களில் எண்ணங்களை சுவாரஸ்ய எழுத்தாக்குவது எப்படி ?" என்ற புக்கை சீக்கிரமே சீ.எ.கரைத்துக் குடித்து விடுவாரென்ற நம்பிக்கையில் I am waitingggggg !! 

In the meanwhile - உங்களிடம் கோரிக்கைகள் guys :

1. FFS புக்கில் உங்களின் போட்டோக்கள் வேண்டுமெனில், சீக்கிரம் ப்ளீஸ் ! முன்னர் நான் சொன்ன டிசம்பர் 5 தேதிக்கு முன்பாகவே FFS புக் # 1-ம் அச்சுக்கு ரெடியாகி விடுமென்பதால் - the earlier the better folks !!

2. "வாசக நினைவலைகள்" அழகாய் எழுதி, நிறைய நண்பர்களின் flashbacks தேர்வானது நினைவிருக்கலாம் ! அந்த நண்பர்களுக்கொரு வேண்டுகோள் : ப்ளீஸ் - உங்களின் அந்தப் பின்னூட்டங்களை ஒரு மின்னஞ்சலாய்த் தட்டி விடுங்களேன்  ? நாலு நாளைக்கொரு பதிவென்று போட்டுத் தாக்கி வரும் மும்முரத்தில் உங்களின் பின்னூட்டங்கள் தாங்கிய பதிவானது பின்னே ஓடி விட்டிருக்கும் ! நேரம் செலவிட்டால் நாங்கள் அதனுள் துளாவித் தேடிடுவோம் தான் ; ஆனால் உங்களுக்கு அது சுலபப் பணியாக இருக்கும் பட்சத்தில் - please help ! 

Before I sign out - இந்த தீபாவளியைத் தெறிக்க விட்டு வரும் நமது மஞ்சச் சட்டைக்காரரின் இந்த படத்துக்கொரு கேப்ஷன் எழுதுங்களேன் - பார்க்கலாம் ? பரிசு ? அடுத்த டெக்ஸ் ஹார்ட்கவர் இதழ் - whichever that might be !! Top 3 கேப்ஷன்களுக்குப் பரிசிருக்கும் !! And ஆளுக்கு maximum மூன்றே வாய்ப்புகள் தான் !! So காட்டுங்களேன் உங்களின் வித்தைகளை guys !!

Bye all...see you around !! தீபாவளி அலசல்கள் தொடரட்டுமே ப்ளீஸ் ?

Thursday, October 28, 2021

அக்டோபரில் நவம்பர் !!

 நண்பர்களே,

வணக்கம். சொன்னதைச் செய்து காட்டிட ஏக்கமாய்க் குட்டிக்கரணங்கள் அவசியமாகிப் போக, இக்கட தலை காட்டக் கூட நேரமில்லை !! அந்தக் காரண- காரியங்கள் பற்றி நீட்டி முழக்குவதையெல்லாம் அப்புறமேட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதால் - இதோ சேதி : "பொட்டிகள் கிளம்பியாச்சூ !" இன்று மதியம் நவம்பர் இதழ்களுடனான உங்களின் டப்பிக்கள் கூரியர் ஆபீஸ்களின் நெரிசல்களுக்குள் புகுந்து விட்டன & நாளை முதலாய் பட்டுவாடாக்கள் துவங்கிட வேணும் !! Fingers crossed !! 

இம்முறை தீபாவளியின் பரபரப்பு ஒரு வாரத்துக்கு முன்னமே ஊரை அரவணைத்திருப்பதால் - திரும்பின திக்கிலெல்லாம் நம்ம தானைத் தலைவர் கவுண்டரைப் போல - "இங்கே நான் ஒரே பிசி" டயலாக்கைத் தான் ஆளாளுக்கு அள்ளி விட்டுக்கொண்டுள்ளனர் ! பைண்டிங்கில் பிசி ; சரக்கை ஏற்றிப் போகும் லோடு ஆட்டோக்கள் கூட பிசி ; கூரியரில் பிசியோ பிசி ; லாரி ஷெட்களில் தெறிக்கும் பிசி !! So இந்த பிசிக்களின் மத்தியில் புறப்பட்டுள்ள கூரியர் பார்சல்கள் இவ்வாரயிறுதிக்குள்ளாய் உங்களை எட்டிட புனித மனிடோ அருள் பாலிப்பாராக !! 

ஊரே பிஸியாயிருக்கும் போது நாம மட்டும் இளப்பமா - என்ன ? சும்மா கடந்த 4 நாட்களாய் ஆபீசே on fire !!  காத்துள்ள பணிகளின் மொத்தத்தையும் ஒரு பட்டியலிட்டுப் பார்க்க போன வார இறுதியினில் முனைந்த போது - லைட்டாக வயிற்றுக்குள் கொட கொடவென சத்தம் !! 

அடுத்த 20 நாட்களுக்குள் பூர்த்தி கண்டிட எனது பொறுப்பினில் மட்டுமே காத்திருந்தவை இவை  :

*ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" - எஞ்சி நின்ற  138 பக்கங்கள் 

"டேங்கோ" - 62 பக்கங்கள்

"(புது) வெட்டியான் ஸ்டெர்ன்" - 78 பக்கங்கள்

அலாவுதீனும், ஒரு புலானாய்வுப் பூதமும்" - 54 பக்கங்கள்

இரத்தப் படலம் - "நினைவோ ஒரு பறவை - 46 பக்கங்கள் 

ஆக சுமார் 375 + பக்கங்களின் மொழிபெயர்ப்பு ; அப்புறமாய் ஒட்டு மொத்த 600 பக்கங்களின் எடிட்டிங் ; அப்புறமாய் அந்த மாயாவியார் + ஸ்பைடர் + செக்ஸ்டன் ப்ளேக் இதழின் பணிகள் + "எலியப்பா & கோ.தோன்றும் விலையில்லா இதழ் - என்று அடையார் அனந்த பவனின் மெனு போல நீளமாய் நிற்பதை எழுதிப் பார்த்த போது, கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது !! உத்தேசமாய் இவற்றை நிறைவு செய்திடத் தேவைப்படக்கூடிய அவகாசம் எவ்வளவென்று கணக்கிடவே கை நடுங்கியது !! வாய் கிழிய வாக்குறுதிகளை அள்ளிவிட்டாச்சு ; இனி சொதப்பினால் வெளியே தலை காட்ட முடியாதென்பது புரிந்த கணத்தில் எங்கிருந்தோ பிறந்த வெறித்தனமான உத்வேகம் என்னை மட்டுமன்றி, நமது DTP டீமையுமே தொற்றிக் கொண்டது ! 

4 நாட்களில் 178 பக்கங்கள் - இது எனது பேனாவின் output !! 

4 நாட்களில் 116 பக்கங்கள் - இது நமது DTP டீமின் output !! 

Phew ...நிறையவே பல்டிக்கள் அடித்துள்ளோம் கடந்த பத்தாண்டுகளில் ; ஆனால் this takes the cake !! அதிலும் - "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" மொழியாக்கம் ஒரு flow-வில் தெறிக்க ஆரம்பித்த போது - அதனை வெறெந்தக் காரணத்தின் பொருட்டும் பாழ் பண்ணிட வேண்டாமே என்ற எண்ணத்தில் blog பக்கமாய்க் கூட எட்டிப் பார்த்திட முனையவில்லை ! அதுவும் போன மார்ச்சில், லாக்டௌன் துவங்கும் முன்னே துவங்கிய பணியிது ;  கோர்வைகளில் பிசிறின்றி flow தொடர்ந்திட வேண்டுமெனில்,  மீதப்பக்கங்களை இனியொரு இடைவெளி இன்றி எழுதி முடிக்க  வேண்டுமென்று பட்டது ! 

ஒரு தினுசான மோன நிலையில் ஓட்டமெட்டிருந்த இந்த நாட்களின் மத்தியில்  காத்துள்ள 'தல' தீபாவளி மலரின் preview போடவோ ; ட்யூக்கின் அட்டைப்படம் + preview கண்ணில் காட்டவோ ; உங்களுக்கோர் அறிவிப்பைப் போட்டு வைக்கவோ கூட தோன்றவே இல்லை !! இதோ - இந்த நொடியினில் கூட என் மண்டை - வெட்டியான் ஸ்டெர்ன் & கோ. சகிதம் கேன்சஸ் சிட்டியில் தான் வேரூன்றிக் கிடக்கிறது ! புனித மனிடோ அருளியுள்ள இந்த ராக்கெட் fuel டேங்க்கில் மீதம் இருக்கும் போதே - மிச்சப் பணிகளையும் கபளீகரம் செய்து முடித்து விட்டால் - டிசம்பரில் டென்ஷனின்றி உலாற்ற இயலும் என்பதால் மறுக்கா அந்த ஓட்டத்தைத் தொடரக் கிளம்புகிறேன் guys !!

But அந்த previews போடாது கிளம்பிட மாட்டேன் தான் !! Here you go :

அட்டைப்படத்தின் சித்திரம் ஒரிஜினலே ; வர்ணங்கள் + மெருகூட்டல் மாத்திரமே நமது டிசைனர் பொன்னனின் உபயம் ! And புக்கை நேரில் பார்க்கும் போது தான் அந்த அட்டைப்பட நகாசு வேலைகள் ; மினுமினுப்புகள் புரிபடும் ! So இங்குள்ள டிசைன் நாங்கள் பணியாற்றிய base மாத்திரமே ; இதன் மீது ஒரு லோடு வேலைப்பாடுகள் நடந்துள்ளன ! 


And இதோ - ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் இளம் டெக்ஸ் + ரெகுலர் டெக்ஸ் + இளம் தேஷா + ரெகுலர் தேஷா ரகளை செய்திடும் கலர் ஆல்பத்தின் preview !!

And தொடர்வது - "பருந்துக்கொரு பரலோகம்" black & white அதிரடி மேளாவின் preview ! இந்த முறையுமே டெக்ஸ் & கிட் center stage எடுத்துக் கொள்ள பட்டாசாய்ப் பொரிகிறது ஆக்ஷன் ! 

Last but not the least - கலர் டெக்ஸ் சிறுகதை ! நிறையவே ???? களையும், !!!!!! களையும் கொணரவுள்ள இந்தச் சிறுகதையின் preview இதோ !! மீதத்தை வெள்ளித்திரையில் காண்க !

அம்சமாய், hardcover-ல் கலக்கிடும் இந்த இதழ், நமது பண்டிகை தினங்களை அதிரச்செய்திட்டால் - 'எல்லாப் புகழும் போனெல்லிக்கே !!'

Before I sign out - இதோ ட்யூக் :


என்றைக்கேனும் ஒரு தூரத்து நாளில் இந்த 'பொம்ம புக்' பெயரைச் சொல்லி அடிக்க நேர்ந்த கூத்துக்களையெல்லாம் சிறுகச் சிறுக  நினைவு கூர்ந்திட ஒரு சாவகாசப் பொழுது அமையுமாயின் - இந்நாட்களை நிச்சயமாய் வாய் பிளந்தே அசைபோடுவேன் ! Simply becos - இந்த நொடியில் எங்களணிக்குள் புகுந்திருப்பது நிச்சயமாய் ஏதோ ஒரு காஞ்சனாவோ ; முனியோ ; அரண்மனை ஆவியோ தான் !! அது எந்த ரகமாகயிருந்தாலும், சரி, அதன் முதுகில் சவாரி செய்தபடிக்கே ஒரு வண்டியோ வண்டி வேலைகளை நிறைவு செய்ததை நிச்சயமாய் ரொம்பவே ஸ்பெஷலாய் நினைவு கூர்ந்திடுவேன் !! இன்னும் பாதித் தொலைவுள்ளது guys - ஓட்டமெடுக்கிறேன் அதனுள் மீண்டும் ஐக்கியமாகிட !! Bye all...see you around !!

P.S : ஆன்லைன் லிஸ்டிங்குகள் காலையில் ரெடியாகிடும் !

அப்புறம் sorry guys - டப்பிக்குள் ரவுண்டு பன் நுழைக்க இடமில்லை !! Hardcover டெக்ஸ் திடமாயிருக்க, மீத 2 ஆல்பங்களுமே டபுள்ஸ் என்பதால் டப்பியில் திணிக்க இடமில்லை ! So சாக்லெட்டோடு இந்தவாட்டி ஒப்பேற்றிடுங்கள் - ப்ளீஸ் !!

Saturday, October 23, 2021

சின்னச் சின்ன ஆசைகள் !!

 நண்பர்களே,

வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும், லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ! "இவன் எப்போ மூட்டையைக் கட்டிக்கினு கிளம்பினானோ ?" என்று விழிக்க வேணாமே - எனது பயணம் குந்திய இடத்திலிருந்தே சாத்தியப்பட்டு வருகிறது - "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டாக்கள்"ஆல்பத்தின் புண்ணியத்தில் ! 

கதாசிரியர் இங்கே இருபதடி பாய்கிறாரெனில் - ஓவியரும் கலரிங் ஆர்டிஸ்ட்டும் நூற்றி இருபதைத் தாண்டிக் காட்டுகின்றனர் ! அதிலும் ஆக்ஷன் பிரேம்களில் 'ஆ.உஸ்கா...ஆ டிஷ்க்கா...!!" என்று குரல் கொடுக்காதது மட்டும் தான் பாக்கி ; மற்றபடிக்கு பராக்குப் பார்ப்பவனுக்கே - கேப்டன் பாணியில் லெப்ட்டை செவத்துலே ஊன்றி ரைட்டால் யாரையாச்சும் ஒரு போடு போட தோன்றுகிறது !! (சில புஷ்டியான இளவரசர்கள் முயற்சிக்க வேணாமென அறிவுறுத்தப்படுகிறது ; செவருக்கோ - சுற்றியிருப்போருக்கோ சீரியசான சேதாரம் நேரக்கூடுமென்பதால் !) நிறைய த்ரில்லர்ஸ் பார்த்திருக்கோம் தான் ; ஆக்ஷன் ஜானர் நமக்குப் புதிதே அல்ல தான் & ஏகப்பட்ட நெடும் சாகசங்களுக்கும் பரிச்சயம் கண்டவர்களே நாம் - ஆனால் இந்த 270 பக்க த்ரில்லர் முற்றிலும் வேறொரு லெவல் guys !! இது பற்றி அவ்வப்போது பதிவிட்டுள்ளேன் தான் ; ஆனால் ஈரோடு 2020 க்கென போன வருஷ மார்ச்சில் இதற்குப் பேனா பிடிக்கத் துவங்கியவன், அந்த முதல் நீண்ட லாக்டௌன் குறுக்கிட்ட போது, "ரைட்டு...அப்பாலிக்கா பாத்துக்கலாம் !!" என்றபடிக்கே இரண்டரை பாகங்களோடு மூலை சேர்த்திருந்தேன் ! ஒரு லாக்டவுனும் முடிந்து, இரண்டாவதும் முடிந்து - இனி தள்ளிப்போட வாய்ப்பே இல்லை என்றாகியுள்ள நடப்பினில், மொத்த 270 பக்கங்களையும் எடுத்து மறுக்கா வாசிக்க ஆரம்பித்த போதே ஜிவ்வென்று அந்தப் பரிச்சயமான பரபரப்பு தொற்றிக் கொண்டது ! பக்கங்களின் ஓட்டத்தோடு எனக்குள்ளான அங்கலாய்ப்புமே கூடிப் போனது !! இத்தனை தெறிக்கும் த்ரில்லரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் அடைகாக்கும்படி ஆகிப் போனதே என்ற கவலை தான் அது ! Anyways better late than never என்று சொல்லிக்கொண்டே பாகம் 4 -ன் இறுதியினை எட்டிப் பிடிக்க முனைந்துகொண்டிருக்கிறேன் ! ஒரிஜினலாய் இந்த 5  பாக சாகஸத்தின் அட்டைப்படங்கள் மட்டும் ரொம்பவே மொக்கை ரகம் ; நம்மவர்கள் கொஞ்சமாச்சும் மெருகூட்ட இயன்ற பல்டிக்களை அடித்து வருகின்றனர் ! அட்டைப்படம் மட்டும் அழகாய் அமைந்துவிட்டால் FFS -ன் புக் # 2  ரொம்ப காலத்துக்குப் பேசப்படும் இதழாய் அமைந்திடுமென்பது உறுதி ! நமது டிசைனிங் டீமுக்கு புனித மனிடோ ஆற்றல் தருவாராக ! 

Moving on - ஆளாளுக்கு மூணு லட்டு ; நாலு லட்டு எனும் மோகங்களில் பிசியாக இருக்க, கூப்பிடு தொலைவிலுள்ள "ரவுண்டு பன் வேலை" பற்றிய எண்ணம் என்னுள் ஓடி வருகிறது ! "தீபாவளிக்கொரு ரவுண்டு பன்" என்று ஏற்கனவே அறிவித்திருக்க, பன்னும், புக்ஸும் போட்டி போட்டு ரெடியாகி வருகின்றன ! மூன்று முரட்டு புக்ஸ் நவம்பருக்கு எனும் போது பயந்து, பவ்யமாய்ப் பணிகளுக்குள் புகுந்திருந்ததன் புண்ணியத்தில் 'தல' பிரின்டிங் இவ்வாரத் துவக்கத்திலேயே நிறைவுற்றிருக்க, பைண்டிங்கில் தற்சமயம் பிஸியாய்ப் பணிகள் ரன்னிங் ! And "ஒல்லித் தல' இதோ, இன்று அச்சு நிறைவுற்ற நிலையில், திங்களன்று பைண்டிங் ஆபீசுக்குப் புறப்படவுள்ளார் ! ஹெர்மனின் புது வரவு ட்யூக் கடாசியாய் அச்சுக்குச் செல்லவுள்ளார் - திங்களன்று ! So ஏதாவது எதிர்பாரா இடர் குறிக்கிடா பட்சத்தில் வரும் விசாலக் கெயமை (28th அக்டோபர்)   புக்ஸ் இங்கிருந்து புறப்பட்டிட வேணும் ! தட்டுத் தடுமாறி "மாதத்தின் துவக்கத் தேதிக்கு புக்ஸ்" என்ற schedule-க்கு திரும்பிட முனைகிறோம் ! தெய்வமே...."கொரோனா டெல்டா sub-variant ; சூப்பரின்டென்டென்ட்" என்று மறுக்கா ஆங்காங்கே ஒலிக்கும் ஏதேதோ பூச்சாண்டிகள் நம்மூர்களுக்கு ஒரு ரவுண்ட் வராதிருக்கச் செய்யுங்களேன் - simply மிடிலே !! 

கொரோனா என்ற பெயரைச் சொல்லி மார்கெட்டில் பொதுவான விலைவாசிகள் எல்லாமே தீயாய், பேயாய் எகிறி வருவதில் ரகசியங்களில்லை தான் ; ஆனால் கடந்த முப்பது நாட்களுக்குள் பேப்பர் & அச்சுத் துறையினில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கிறுக்குத்தனங்களை சுத்தமாய் சகிக்க முடியலை !!  (நடப்பாண்டின்) பிப்ரவரி to அக்டோபர் என்ற இந்த 8 மாதங்களில், ஆர்ட்பேப்பர் விலைகள் அப்படியே இரு மடங்காகி விட்டுள்ளன ! அதுவும் கடைசி 20 நாட்களில் டன் ஒன்றுக்கு ரூ.20,000 எகிறியுள்ளது ! "சைனாவிலிருந்து சரக்கு no coming ; கண்டைனர் no getting ; உள்ளூர் மில்களுக்கு பேப்பர் செய்யும் உட்பொருட்கள் விலை climbing ; so வேணும்னா இந்த விலைக்கு இப்போ வாங்குறான் - வாங்காட்டி இடத்தைக் காலி பண்றான் - காத்தாவது வர்றான் !!" என்று சேட்டு முதலாளிகள் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமின்றி போனில் candy crush ஆடியபடிக்கே சொல்லும் போது நம்பள்க்கு பேதி தான் வர்றான் ! "ரைட்டு, சேட்டு சார் அப்டி தான் பேசுவார் ; நம்ம ஊர்க்காரனுவ நம்மளைக் கைவிட மாட்டானுங்க !!"என்றபடிக்கே அட்டைப்படங்களுக்கு நாம் பயன்படுத்தும் போர்டு வாங்கப் போனால், அங்கே முதலாளி மௌன விரதத்தில் இருந்தார் ! ஒரு காகிதத்தை மட்டும் தூக்கி நீட்டினார் ! "என்னது சார் ?" என்று கேட்டால் - "ம்ம்...படிங்கோ !!" என்பதையும் சைகையிலேயே சொல்ல - நானும் வாசிச்சேன் ! "உபயகுசலோபரி ; இப்போவும் திங்கள் முதல் எல்லா அட்டை விலைகளும் டன்னுக்கு ரூ.5500 கூட இருப்பதால், புது விலைப்பட்டியல் வரும் வரைக்கும் புதிதாய் ஆர்டர் எதுவும் எடுக்க வேண்டாம் என அன்போடு, பண்போடு, பாசத்தோடு, நேசத்தோடு, கேட்டுக் கொள்ளையடிக்கப்படுகிறது....சாரி..கொள்ளப்படுகிறது  ! - இப்படிக்கு மொள்ளை போடும் மில் முதலாளி !!" என்றிருந்தது !! நிமிர்ந்து பார்த்தால் சாந்தம் வழியும் முகத்தில் ஒரு புன்னகையோடு - "கெளம்புறது ??" என்ற கேள்வியோடு உள்ளூர் முதலாளி வீற்றிருந்தார் ! சரியாய் இரண்டே வாரங்களுக்கு முன்னே தான் டன் ஒன்றுக்கு 3500 ஏற்றி இருந்தனர் என்பது இப்போது பேச்சுக்கான சமாச்சாரமே அல்ல என்பதை அவரது வதனம் அறிவுறுத்தியது !!

புடிச்சேன் பாருங்க ஒரு ஓட்டம் - சைக்கிள் ஓட்டப் பழகிய தினங்களில் நாய் துரத்திய போது சைக்கிளைக் கீழே கடாசி விட்டு ஓடியதை விடவும் வேகமாய் ஓடி - ஊரெல்லாம் தேடி, இறுதியில் ஜூனியர் எடிட்டரின் பள்ளி சீனியர் நடத்தும் பேப்பர் ஸ்டோரில் TNPL போர்டை புது விலைகள் அமலுக்கு வரும் முன்பான விலைக்கே வாங்க ஏற்பாடு செய்து மொத்தமாய் வாங்கிக் கொணர்ந்து குவித்தாச்சு !! நாம் இதுவரைக்கும் பயன்படுத்தி வந்தது இதர லோக்கல் மில் தயாரிப்புக்களே ! ஆனால் இன்றைக்குத் தேதிக்கு அந்த லோக்கல் சரக்கின் (புது) விலையும், TNPL மில்லின் போன வாரத்து விலையும் ஒன்றே என்றான பின்னே, "டாட்டா லோக்கல் மில்ஸ் !" என்று சொல்லி விட்டோம் ! So  ஜனவரி முதலாய் இனி TNPL அட்டையே 'ஜம்'மென்று தெறிக்க விடவுள்ளது !! 

ஏதேனும் ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்து ; சர்வதேச வணிகத்தில் சைனா முன்போலவே தடையின்றிச் சரக்கு சப்ளை செய்திட வழிபிறந்து ; இங்குள்ள நடுமுதலாளிகள் தொந்திகளை இதற்கும் மேலாய்ப் பருக்கச் செய்திட வேணாமென்ற தீர்மானத்துக்கு வந்தாலொழிய - 2023 முதலாய் நாம் ஆர்ட்பேப்பருக்கு விடைகொடுத்துவிட்டு, நார்மல் தாள்களுக்கு மாற்றம் காண வேண்டியிருக்கும் !  காத்துள்ள புத்தாண்டுக்கு சிக்கல்களில்லை ; 2 மாதக் கடனில் கணிசமாய் பேப்பர் வாங்கி அடுக்கியாச்சு ; so 2022 திட்டமிட்டபடியே பயணித்திடும் ! ஏறிய விலைவாசிகள் ஏறிய வேகத்திலேயே இறங்கும் அதிசயம் நம் தேசத்துக்கு அந்நியமே என்பதால் "2023 & onwards in normal paper" என்ற மைண்ட்செட்டுக்கு நாம் சிறுகச் சிறுக மாறிக் கொள்ள வேண்டி வரும் ! For starters - புத்தக விழா ஸ்பெஷல் இதழ்களுக்கும், மறுபதிப்புகளுக்கும், நார்மல் காகிதத்தில் பழகிப் பார்க்கும் course-ல் முதல் பாகத்தை அமல்படுத்திப் பார்க்க வேண்டும் போலும் !!  Fingers crossed !

அடுத்த டிசம்பர் வரைக்குமாவது ஆர்ட்பேப்பர் தொடர்ந்திடும் என்பதால் - இதோ, தக தகக்கும் "ஒல்லித் தலையின்" preview :


ஒரிஜினல் அட்டைப்படம் - பின்னணிகளில் மட்டும் மாற்றங்களோடு ! And உட்பக்கங்கள் மோரிஸின் சித்திரங்கள், டிஜிட்டல் கலரினில் சும்மா தக தக வென மின்னுகின்றன ! ஜாலியான லக்கியின் template கதை எனும் போது மொழிபெயர்ப்பில் no நோவுகள் !! And இந்தவாட்டி "சார்வாள் ; சித்தே ; புள்ளையாண்டான் " போன்ற பதங்களுக்கு தடாவும் போட்டாச்சு ! So எப்படியும் அடுத்த batch "தடா தேர்வுகள்" சீக்கிரமே ரெடியாகிடுமென்று ஸ்டீலின் பட்சி சொல்கிறது ! வார்த்தைகளில் மாற்றங்கள் என்றான பின்னே "தாயில்லாமல் டால்டனில்லை" சாகசத்திலுமே களையெடுத்து விட்டாச்சு ! So hopefully வாசிப்பில் நெருடல்கள் இராதென்று நம்புவோம் !! இதோ - உட்பக்க previews :

மறுக்கா - லட்டுக்கள் திக்கில் திரும்பிட்டால் - "அந்த அட்டைப்பட அணிவகுப்பு + முதல் இதழின் replica முயற்சி" பற்றிய திட்டமிடல் பிரதானமாய் நிற்கிறது ! And  சமீபத்தைய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் போல இங்கு ஓட்டெடுப்பில் "வேணும் !!" என்ற அணிக்கு landslide வெற்றி கிட்டியிருப்பதால் என் வேலை இலகுவாகிடுகிறது ! So அட்டைப்படங்கள் + "இரும்புக்கை மாயாவி" முதல் இதழ் என்ற முன்மொழிவு நிஜமாகிடும் ! ஆனால் அவற்றையும் ஜனவரிக்கே என்று போட்டுத் தாக்கி ஓவராய்த் திகட்டச் செய்ய வேண்டாமே என்று நினைத்தேன் ! காத்துள்ள 2022 முழுக்கவே நமது பொன்விழா ஆண்டு தான் எனும் போது FFS இதழ்களும், SMASHING '70s - வேதாளன் ஆல்பமும் வெளியான பிற்பாடு இதை களமிறக்குவோமே guys ? அவற்றில் படிக்கப் புதிதாய் ஏதும் கிடையாதெனும் போது, "சூட்டோடு சூடாய் வந்தே தீரணும் !" என்ற கட்டாயங்கள் கிடையாது தானே ? And இதற்கென முன்பதிவு, சைடுபதிவென்றெல்லாம் எதுவும் இருந்திடாது ; "புக்ஸ் ரெடி" என ஒரு நாள் காலையில் அறிவித்த பின்னே நீங்கள் ஜாலியாய் வாங்கிக்கொள்ளலாம் - simple as that !!

அப்புறம் "புலி லட்டு" ; "ஆனை லட்டு" என்ற பற்பல முன்மொழிவுகள் காற்றில் இங்கும் அங்கும் பறப்பதைக் காண முடிந்தது ! கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமை guys - FFS பணிகளை முடித்துத் தந்தான பின்னே , காத்துள்ள டிசம்பரின் 4 கதைகளுள் மூன்று எனது பொறுப்பிலானவைகள் ! அவற்றையும் போட்டுத் தாக்கி விட்டால் - எனது மண்டைக்குள் குடியிருக்கும் அந்த "திருவாரூர் தேரிழுக்கும் முனைப்பு" சற்றே சமனப்பட்டிருக்கும் ! அந்த நொடியினில் ஒரு "லட்டு டிப்போ"வுக்கென  ஓசையின்றி ரெடியாகியுள்ள ஏற்பாடுகள் பற்றி வாய் திறக்கிறேன் ! Trust me guys - சர்க்கரை நோயுள்ள எனக்கே, நாவில் ஜாலம் ஊறச் செய்யும் சமாச்சாரமது ! So யூத்தான உங்களுக்கு விருந்து வெய்டிங் !! Before I sign out - இன்னொரு கேள்வியுமே !!

2022 முழுக்கவே உங்களுக்கான ஆண்டெனும் போது - உங்களின் கோரிக்கைகளை ; அவாக்களை இயன்ற மட்டிலும் நிறைவேற்ற இயன்ற பல்டிக்கள் அனைத்தும் அடித்திட தயாராய் இருப்போம் ! அதன் தொடர்பாய் ஒரேயொரு கேள்வி folks : 

"இந்த ஒரேயொரு விஷய(மு)ம்  நனவானால், இந்தப் பொன்விழா ஆண்டு என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்கவியலா ஆண்டாகிடும் !" என்று உங்களுக்குள் ஏதேனும் ரகசிய அவாக்கள் குடியிருப்பின் - அவற்றை பகிர்ந்திடுங்கள் ப்ளீஸ் !! உங்கள் "சின்னச் சின்ன ஆசைகள்" சாத்திய எல்லைகளுக்குள் இருந்து, அவை நம் நண்பர்களுக்கும் பிடித்திருக்குமென்ற நம்பிக்கைகளை விதைப்பதாக இருப்பின், அவற்றுக்கு சிறகுகள் தந்திட நிச்சயமாய் தயங்கிட மாட்டோம் ! 

I repeat - ஆளுக்கு ஒற்றை சின்னச் சின்ன ஆசை only !! And கல்யாண வீட்டு ஷாப்பிங் லிஸ்ட்கள் வேணாமே - ப்ளீஸ் !! Plus இல்லாதவற்றையோ, இயலாதென்று ஏற்கனவே சொல்லியுள்ளவற்றையோ கேட்டு மண்டையைச் சொறிய விட வேணாமே guys !! 

Bye all...அடுத்த பதிவில் 'தல' தீபாவளி மலர் பற்றி !! இப்போதைக்கு மறுக்கா சான் பிரான்சிஸ்கோ கிளம்பிடுகிறேன் !! See you around !!😃

Friday, October 22, 2021

ஒரு பட்டாம்பூச்சி தினம் !!

 நண்பர்களே,

வணக்கம். "சந்தோஷம்" என்பதற்கொரு உருவம் உண்டென்கில் நேற்றைய பதிவிற்கு நீங்கள் தந்துள்ள அசாத்திய வரவேற்பினில் - அதனைத் தொட்டு உணர்ந்திருக்க முடியும் ! ஒரு 'பொம்ம புக்' மட்டும் தான் ; ஒரு நூறு அன்றாடப் பொறுப்புகளுக்கு மத்தியினில் அதனை அணுகிட வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கின்றோம் தான் ; காலங்கள் மாறியிருப்பினும் சில evergreen நாயகர்களின் மறுவருகைகள் நம் முகத்தினில் ஒரு புன்னகையைப் படர விடாது போகாதென்று எதிர்பார்க்கவும் செய்தேன் தான் ; ஆனாலும் கூட நேற்றைய சந்தோஷப் பிரவாகங்கள் absolutely stunning !! இரும்புக் கவிஞரின் நூற்றுச் சொச்சம் பின்னூட்டங்களுக்கு மத்தியில் ஒரு நூற்றுச் சொச்சம் நண்பர்களின் அந்தக் கலப்படமில்லா மகிழ்வும், அன்பும், ஆனந்தமும் என்னை ரொம்பவே...ரொம்ப ரொம்பவே humble ஆக உணரச் செய்து விட்டன folks !!  "ரெண்டு கடப்பாரைகளை காலை டிபனுக்கு விழுங்கணுமே !!" என்று சொன்னால் - "தொட்டுக்க காரச் சட்னியா ? மல்லிச் சட்னியா ?" என்று மட்டுமே கேட்கும் எருமையனாகி விட்டிருக்கும் எனக்கே கூட, நேற்றைய அனுபவம் நெஞ்சினில் பட்டாம்பூச்சிகளை நாட்டியமாடச் செய்து விட்டது !! ஓராயிரம் மும்முரங்களுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும், வெறும் ஐந்தே நிமிடங்களுக்காவது ஒரு புன்னகையினை விதைக்க எனக்கு சாத்தியமாகி இருப்பின் - அது புனித மனிடோ வழங்கியுள்ள வரமாகவே இருக்கும் & இதற்கென ஓராயிர குட்டிக்கரணங்கள் அடித்தாலுமே தகும் !! Thank you for the umpteenth time guys !! 

நேற்றைய பொழுதில் பட்டாம்பூச்சிகளின் நடனத்தை நான் உணர்ந்த இரண்டாவது தருணமுமே இருந்தது தான் & அந்த முற்றிலும் எதிர்பாரா சிறு நிகழ்வினை இன்றைய உப பதிவினில் பகிர்ந்திடத் தோன்றுகிறது ! Maybe இதனில் பரவலாய் அனைவருக்குமொரு சுவாரஸ்யம் இருந்திடுமா ? என்றெல்லாம் சொல்லத் தெரியலை எனக்கு ; ஆனால் சலவைக்கு லுங்கியையும், பனியனையும் அனுப்பிய கதையைக் கூட நான் பகிர்ந்து வரும் இந்நாட்களில், கண்களைப் பனிக்கச் செய்ததொரு நிகழ்வினை பற்றிச் சொல்வது தப்பில்லை என்று பட்டது !! So here you go !!

நண்பர் ஒரு முதுகலை பொறியியல் பட்டதாரி ; டாக்டரேட் பட்டதாரியும் கூட ; அப்பாலிக்கா அரசுப் பொறியியல் கல்லூரியினில் துணைப் பேராசிரியராகவும் உள்ளவர் !! இங்கே ரெகுலராய் வருகை தந்திடும் நண்பர் ; அழகாய்க் கருத்துக்களை பகிர்ந்திடும் பண்பாளர் ! நேற்று காலை அவரிடமிருந்து வந்ததொரு மின்னஞ்சலையும், அதனிலிருந்து இணைப்பினையும் படித்த போது - தொண்டையில் ஏதோ அடைப்பது போலுணர்ந்தேன் !! முதலில் அந்த மின்னஞ்சலைப் படித்திடுங்களேன் : 

////////Sir,

During last week's pooja holidays I managed to recollect some old (comics related) memories in which the letter (hopefully from our senior editor! Kindly Confirm!) attached herewith is a testimony of everything that's been happening around (in my life) for more than three decades.

The efforts taken to write a letter to a school kid in 1995 itself is sooooo awesome/unimaginable and no words can replace what I do feel even now sir. All I remember was a verbal spat I had with my father for still being into comics during my +2 and he tore a postcard from sivakasi  in which the recent issues were listed. My father had called the Sivakasi office it seems and the result was this letter.

Still I preserve this letter and it reminds me of how (Y)our comics (with the general notion it is meant for kids!!!) treats its readers. Fabulous Sir...

Kindly convey this to the Senior editor and convey my pranams... _/\_

Awesome memories i had/having even now sir!!!

Thanks for everything!!!

Regards Ever


Dr.T.S.Murugesh M.E., Ph.D., MIE. 

Associate Professor

Department of Electronics and Communication Engineering

Government College of Engineering Srirangam

Tiruchirappalli. 620 012

////////////////////

And இதோ அந்த மின்னஞ்சலுடனான இணைப்புகள் :






Let me explain now guys : சீனியர் எடிட்டரின் கடிதமென நண்பர் எண்ணியிருந்த இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது எனது தாய்வழித் தாத்தா தான் !! 1995-ல் நமது அலுவலகம் செயல்பட்டு வந்தது அவரது இல்லத்தின் முன்பகுதியினில் எனும் போது - நானங்கு இருக்கும் நேரங்களை விடவும் தாத்தா தான் ஜாஸ்தி நேரம் இருந்திருப்பார் ! நண்பர் முருகேஷின் தந்தையார் நமது அலுவலகத்துக்கு போன் செய்து - "பையன் காமிக்ஸ்..காமிக்ஸ் என்று படிப்பைத் தொலைத்து விடுவானோ - என்று பயமாக உள்ளது ; இனிமேல் உங்கள் ஆபிசிலிருந்து அவனுக்கு காமிக்ஸ் புக் சம்பந்தமாய் எதுவும் அனுப்பிடாதீர்கள் !" என்ற ரீதியில் சொல்லியிருப்பார் போலும் !! And அந்த போனை எடுத்து பேசியது தாத்தாவாக இருந்திருக்க வேண்டும்  !! பேசி முடித்த கையோடு அன்றைய பள்ளி மாணவ நண்பர் முருகேஷுக்கு தன் கைப்பட இந்தக் கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார் !! இது எதுவுமே எனக்கு நேற்றைய பொழுது வரையிலும் தெரியாது !! அன்றைய டீனேஜரை எத்தனை அழகாய்ப் புரிந்து கொண்டு, எத்தனை ஆத்மார்த்தமாய் தாத்தா எழுதியுள்ளார் என்பதை வாசித்த போது இனமறியா உணர்வுக்குள் உள்ளுக்குள் !!

1995 எனும் போது - தாத்தா காலமாகிடுவதற்கு இரண்டரை ஆண்டுகள் முன்பான நாட்களவை & அப்போது அவருக்கு அகவை 76 இருந்திருக்க வேண்டும் !! அந்தப் பொழுதிலும்,பேராண்டியின் முயற்சிகளை அவர் ஓசையின்றி ரசித்துக் கொண்டு, தன்னால் இயன்ற விதங்களிலெல்லாம் உதவிட எண்ணியிருப்பதை நண்பர் பத்திரப்படுத்தியிருக்கும் இந்தக் கடிதம் நூற்றியோராவது தடவையாய் எனக்கு நினைவூட்டிய போது மனசு ரொம்பவே கனத்துப் போனது ! தாத்தாவின் அந்தக் கையெழுத்து எனது ஆயுட்கால ஞாபகம் & தாத்தாவின் கடைசிப் 10 ஆண்டுகளில் அவர் அதிகமாய் நேரம் செலவிட்டிருந்தது என்னோடே !! நான் பெருசாய் எதையும் படித்து சாதித்திருக்காமல் போயிருக்கலாம் தான் ; ஆனால் "தாத்தா" எனும் பல்கலைக்கழகத்தில் "வாழ்க்கை" எனும் பாடத்தைப் படித்தவன் என்பது எனது பயணத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் பிரதிபலிக்கும் உணர்வு !! அதனை நேற்றைக்கு அழுந்த உணர உதவிய நண்பர் முருகேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள் !!! You made my day sir !!

இங்கொரு நிஜத்தையுமே பகிர்ந்திடல் அவசியம் என்று பட்டது ! நான் யூத்தாக இருந்த அந்நாட்களில், தாத்தாவின் சற்றே அலங்கார பாணியிலான எழுத்து நடைகளிலும், எல்லோரையும் நிறைய விசாரித்து ; நிறைய பேசும் பாங்கிலும் எனக்கு அவ்வளவாய் உடன்பாடிருந்ததில்லை ! 'இது எதுக்கு ?? இவ்ளோ நீட்டி முழக்கணுமா ?" என்று உள்ளுக்குள் தோன்றும் தான் !! ஆனால் இன்றைக்கோ தொட்டு விடும் தொலைவினில் senior citizen அந்தஸ்து எனக்கே காத்துள்ள நிலையினில், எனது அபிப்பிராயங்கள் தான் என்னமாய் மாற்றம் கண்டுள்ளன ?!! தாத்தா பேசியதும், எழுதியதும் - அவரது அனுபவங்களை ; வாழ்க்கையின் பாடங்களை ஏதோவொரு விதத்தில் சுற்றியிருப்போருக்கு pass on செய்திட அவர் எடுத்த மெனெக்கெடலே என்பது இன்றைக்குப் புரிகிறது !! அவரது வயதை எட்ட முடிந்தால் பாக்கியமே & அவரது அன்பை தொட முடிந்தால் அது வரமே என்பது இந்த நொடியில் புரிகிறது !! விண்ணுலகை நோக்கிக் கரம்கூப்புகிறேன் !!

Bye guys..."ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" பாகம் 4 அழைக்கின்றது ! See you around !!

Thursday, October 21, 2021

மூணு லட்டு தின்ன ஆசையா ?

 நண்பர்களே,

வணக்கம். பதிவு நம்பர் : 800 !! இப்போதெல்லாம் ஒரு ரவுண்டு பன்னைப் போட்டுத் தாக்கும் நேரத்தை விடவும் குறைச்சலான சமயத்தில் பதிவுகளைப் போட்டு வருகிறோம் எனும் போது 800...900...என நம்பர்கள் ஓட்டமெடுப்பதில் வியப்பில்லை தான் ! And நடப்பாண்டில் ஏற்கனவே பதிவுகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டி விட்டுள்ளதெனும் பொழுது, புத்தாண்டு பிறப்பதற்குள் அங்கும் ஏதேனுமொரு பெரிய நம்பரைத் தொட்டு நிற்போம் என்றே படுகிறது !! 

Talking of "பெரிய numbers" - இந்த உப பதிவே பிறிதொரு களத்தில் நீங்கள் தொட்டுள்ள எண்ணிக்கையினைப் பற்றியே !! And அது நமது SMASHING '70s முன்பதிவு சார்ந்த சமாச்சாரமே !! கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குள் சாத்தியப்பட்டுள்ள புக்கிங்ஸ் - இந்தத் திட்டமிடலை அழகாய்த் துவக்கிடும் உத்வேகத்தினைத் தந்துள்ளன என்று சொல்லலாம் ! And நண்பர்களின் கணிசமானோர் இந்த முன்பதிவுக் காலக்கெடுவை சற்றே நீட்டிக்கக் கோரியுள்ளதால் - புதிய deadline ஆன நவம்பர் 15-க்குள் முன்பதிவுகள் இன்னமுமே ஆரோக்கியமான நம்பராக இருந்திடுமென்ற நம்பிக்கை திடமாயுள்ளது !! Thanks as always guys !! 

ரைட்டு....SMASHING '70s முதல் இதழான  "வேதாளன் ஸ்பெஷல்" பற்றி கொஞ்சமாய் தகவல்களை கசிய விடும் நேரமிது என்று தோன்றுகிறது !! For starters - வேதாளனின் இந்த இதழுக்காக அட்டைப்படத்தினை மாத்திரமன்றி, தொடரக்கூடிய அனைத்து PHANTOM கவர்களையும், செம ஸ்டைலிஷ் ஆன ஐரோப்பிய ஓவியர் ஒருவரே செய்திடுகிறார் ! அது மட்டுமன்றி சூப்பராய் சில வேதாளன் போஸ்டர்களும் அவரது கைவண்ணத்தில் காத்துள்ளன !! And அவை நமது முன்பதிவு நண்பர்களுக்கு, நமது அன்புடன் (விலையின்றி) இருந்திடும். As advertised - இந்த முதல் ஆல்பத்தில் மொத்தம் 9 முழுநீள சாகசங்கள் இடம்பிடித்திடவுள்ளன !! And அந்த MAXI சைசில் 208 பக்கங்கள் கொண்டதொரு hard cover மாதிரியையும் ரெடி பண்ணிப் பார்த்தாச்சு ; செம கம்பீரமாக உள்ளது தான் !! So FFS சார்ந்த பணிகளுக்கு இறுதி வடிவம் தந்த பின்னே வேதாளரோடு டென்காலி கானகத்தினுள் உலாற்ற உள்ளேன் ! 

அப்புறம் இந்த க்ளாஸிக் நாயகர்களின் ஒட்டுமொத்த மறுவருகையினை சாத்தியப்படுத்தியுள்ள முன்பதிவு நண்பர்களுக்கொரு ஸ்பெஷல் நியூஸுமே !!  

ஆளுக்கொரு favorite இருந்திடும் போது, மறுபதிப்புக் கோரிக்கைகளினில் ஆளுக்கொரு ஆதர்ஷ நாயகர் இருப்பதிலும் no secrets ! வேதாளர் ஒரு ஏகோபித்த தேர்வாய் இருக்கலாம் ; பாக்கி மூவருக்கும் ஒரு லெவல் குறைச்சலான எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்   என்பதை யூகம் பண்ண பெரிய சிரமமெல்லாம் இருந்திருக்கவில்லை ! And ஒருக்கால் நான் வேதாளன் கதைகளுக்கு மாத்திரமே உரிமைகள் வாங்கியிருப்பின் - "ரிப் கிர்பி கிடையாதா ? காரிகன்லாம் கண்ணுக்குத் தெரிலியா ? மாண்ட்ரேக்லாம் மனுஷனா தெரிலியா ?" என்ற கேள்விகள் சர்வ நிச்சயமாய்த் தொடர்ந்திருக்கவே செய்யும் என்றும் தோன்றியது ! So 'ஏக் தம்மில்' 4 நாயகர்களும் என்ற போது - ஒரு பெரும் குழுமத்திடம் உரிமைகள் வாங்குவதற்கு வழி பிறந்தார் போலவும் ஆச்சு ;   'இவர் இல்லியா ? அவர் இல்லியா ?' என்ற கேள்விகளுக்கு அவசியமின்றிச் செய்தது போலவும் ஆச்சு ! In effect  - வேதாளரின் வருகைக்கு சாலையமைத்துத் தந்துள்ளோர் - இதர 3 நாயகர்களும் ; தயங்காது  முன்பதிவு செய்து இந்தத் திட்டமிடலுக்குக் கரம் நீட்டியுள்ள நீங்களும் தான் !! And அந்த அன்புக்கு நிச்சயமாய் நம் சக்திக்கு உட்பட்ட நன்றி நவிலல் அத்தியாவசியமே !! 

So -  காத்துள்ள ஒவ்வொரு SMASHING '70s  ஆல்பத்துடனுமே வண்ணத்திலானதொரு சர்ப்ரைஸ் booklet முன்பதிவு செய்திருக்கும் நண்பர்களுக்கு நமது அன்புடன் வழங்கப்படும் ! அவற்றின் content என்னவாக இருக்கும் என்பதை வேதாளரும், ரிப் கிர்பியும், மாண்ட்ரேக்கும், காரிகனும் உரிய வேளையினில் உங்களுக்கு சொல்லிடுவார்கள் !! இந்த 4 சர்ப்ரைஸ் இதழ்களும் பின்னாட்களில் ஒரு  தொகுப்பாகி, ஏதேனுமொரு புத்தக விழாவின் போது விற்பனைக்குக் கிட்டிடும் !! இது அறிவிப்பு # 1 !

And 'ஒரு லட்டின் இடத்தினில் 2 லட்டுக்கள் இருந்தால் சிறப்பே' என்பதை பேரறிஞர் பவர் ஸ்டாரின் திரைப்படம் நமக்கு போதித்திருப்பதால் அதனையும் உதாசீனப்படுத்த இயலாதன்றோ ? So here you go with அறிவிப்பு # 2 !

FFS இதழின் அறிவிப்பும் ஆச்சு ; ALL NEW நாயகர்களின் ராஜ்ஜியம் இது என்பதும் உங்கள் மத்தியில் இப்போது தெரியும் ! ஒரு ரொம்பச் சின்ன நோஸ்டால்ஜியா அணி நண்பர்களைத் தாண்டி, பாக்கி அனைவருமே இந்தத் திட்டமிடலை குஷியாய் ஏற்றுக் கொண்டிருப்பது மெய்யாலுமே உற்சாகம் கொள்ளச் செய்கிறது ! இத்தகையதொரு மைல்கல் இதழினில் களம் காணவுள்ள  புதியவர்களையும் இம்மித் தயக்கங்களுமின்றி வரவேற்கத் தயாராகியுள்ள உங்களின் உத்வேகங்களுக்கு சின்னதொரு பரிசின்றிப் போனால் எப்புடி ? 

  • And அந்தப் பரிசு - "FFS-ல் க்ளாஸிக் பார்ட்டிகள் யாருமே கிடையாதா ?" என்ற ஆதங்கம் கொண்டுள்ள நண்பர்களைக் குளிர்விக்கும் ஒன்றாய் அமைந்திட்டால் ?? 
  • And அந்தப் பரிசே, FFS - புக் # 3 ஆக அமைந்திட்டால்  ??
  • And முத்துவின் முதல் நாயகனும், ஒரு காமிக்ஸ் தலைமகனுமான இரும்புக்கை மாயாவியின்றி எந்தவொரு கொண்டாட்டமும் முழுமை காணாதென்பதால் - கொஞ்ச காலம் முன்பாய் படைப்பாளிகள் உருவாக்கியிருக்கும் ஒரு புத்தம் புது மாயாவி சிறுகதையினை FFS -ன் புக் # 3 -ல் பிரதானமாக்கிட்டால் ??
  • And அவரை மட்டும் தனியாய் அனுப்பிடாது, பேச்சுத் துணைக்கு - லயனின் சார்பினில் ஒரு யுகத்தின் சாதனை மைந்தனான ஸ்பைடராரையும் , முழு வண்ணத்தினில் அதே இதழில் இணைத்திட்டால் ??
  • And க்ளாஸிக் முத்துவின் பிரதிநிதியாய் இன்னொரு நாயகரையுமே அதே இதழில் வலு சேர்க்க களமிறக்கிட்டால்..??
  • And அந்த நாயகர் ஒரு டிடெக்டிவ் ஆக இருந்து ; "செக்ஸ்டன் ப்ளேக்" என்ற பெயருக்குப் பதில் சொல்லிடுபவராகவும் இருந்திட்டால் ??
  • And "மறுக்கா பழம் பார்ட்டிகளோடு பழம் கதைகளா ?? ஹாவ்வ்வ்வ் !!" என்று கொட்டாவி விடக்கூடிய நண்பர்களைக் கூட லயிக்கச் செய்யும் விதமாய் இந்த புக் # 3-ன் கதைகள் அனைத்துமே புத்தியானவைகளாய் ; புதிதாய் இப்போது உருவாக்கப்பட்டவைகளாய் இருக்க நேர்ந்தால் ??
  • And ஒட்டுமொத்தத் திட்டமிடலின்படி :
  • **ஒரு புத்தம் புது மாயாவி black & white சிறுகதை சாகசம்
  • **ஒரு புத்தம் புது ஸ்பைடர் சிறுகதை சாகசம் - முழுவண்ணத்தில் !
  • **ஒரு புத்தம் புது முழு நீள black & white அதிரடி - with செக்ஸ்டன் ப்ளேக் !
  • **ஒரு புத்தம் புது மிரட்டலான முழுவண்ண செக்ஸ்டன் ப்ளேக் சிறுகதை சாகசம் என்று 68 பக்க வண்ணம் + black & white கூட்டணி இதழாய் இந்த புக் # 3 அமைந்திட்டால் ...?
  • And இந்த புக் # 3 நமது அன்புடன் 2022 சந்தாதாரர்களுக்கு உண்டென்று அறிவித்தால்...?
  • And சந்தாவினில் இணையாது போனாலும், FFS  இதழுக்கு நம்மிடம் முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்குமே இந்த புக் # 3 விலையின்றி இருந்திடுமென்று அறிவித்தால்..?
  • And ஒரு கொண்டாட்டத் தருணத்து இந்த இதழினை கடைகளில் வாங்கிக்கொள்வோருமே பெற்றிடும் வகையினில் ரூ.75 என்ற விலை நிர்ணயத்துடன் - விற்பனைக்கு அனுப்பிட்டால்.. ..?

சிறப்பாக இருக்குமென்று பட்டது !!! 

  • So FFS கொண்டாட்டத்திற்கென லட்டுக்கள் இரண்டல்ல - மூன்று !! (at least லட்டு # 4 என்று ஏதேனும் என் மண்டைக்குள் உதிக்கும் வரைக்கும் !!)
  • ஒரு சிறு அடையாளமாகவேனும் மாயாவியார் இந்த மைல்கல் இதழினில் இடம் பிடித்தார் போலவும் ஆச்சு ; க்ளாஸிக் செக்ஸ்டன் ப்ளேக் ஆஜரானது போலவும் ஆச்சு (நண்பர் Arvind : this one 's for you !!)
  • ஒரு அதிரடிப் புது முயற்சிக்குத் தோள் தரத் துளியும் தயக்கங்களின்றி முன்வந்திருக்கும் உங்கள் தில்லுக்குத் தலைவணங்கிய திருப்தியும் எங்களதாகியாச்சு !!
So பணிகளோடு பணிகளாய் இந்த 68 பக்க ஆல்பத்தையும் அதிரடியாய் தயார் செய்யும் முனைப்பினில் பிஸியாகிக்குவோம் !! (ஒரு landmark வேளைக்கென மெனெக்கெடாது வேறு என்ன ஆணியினைப் பிடுங்கப் போகிறேன் ?!!) 



SEXTON BLAKE - in color !!


Before I sign out - ஒரு வேண்டுகோள் !! சமீப நாட்களில் ஆங்காங்கே கூடி வரும் உஷ்ணங்களுக்கு மெய்யான பின்னணிக் காரணம் என்னவென்பதை நான் நன்றாகவே அறிவேன் தான் ! In fact கடந்த சில வாரங்களின் சில தென்னை மர தேள் கொட்டல்களுக்கு, பனைமர நெரிக்கட்டல் எதிரொலிகள் இராது போகாது  என்பதை எதிர்பார்த்திடவே செய்தேன் ! !! And இதோ இன்றைய இந்த FFS புக் # 3 சார்ந்த அறிவிப்பு கூட பாய்லரின் கொதிநிலையினை அடுத்த லெவெலுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் பிரகாசம் என்பதையும் யூகிக்க முடிகிறது - becos அதன் பின்னணியினில் உள்ள காரணம் அப்படி !  இந்த திரைமறைவு அபத்த சதிராட்டங்களெல்லாம் ஒரு தூரத்து நினைவாகிப் போகும் ஒரு பின்னாளில் இது பற்றி பேசிடலாம் guys ! தற்போதைக்கு எனது ஒரே கோரிக்கை : 

RELAX guys !!  வார்த்தைப் போர்கள் வெறும் அக்கப்போர்களே என்பது இந்தத் தருணத்திலிருந்து விலகி நகன்றிடும் வேளையினில் புரியாது போகாது & இன்று சிந்திடும் வார்த்தைகளை மீட்க அன்றைக்கு வழியும் இராது ! So நிதானம் ப்ளீஸ் ! அதிலும் ஒரு நண்பரின் ஈடு செய்திட இயலா இழப்புகளின் வலிகளையுமே பகடியாய் பொதுவெளியில் பகிர்வது நிச்சயமாய் அவலத்தின் உச்சம் !! நிஜ வாழ்வின் நிஜ இழப்புகளின் வலிகளைத் தாண்டிட நண்பருக்கு வலு தந்த இறைவன், இந்த வேளையிலும் அவரோடு இருக்க வேண்டிக்கொள்வேன் ! And நண்பரே : இந்த அட்டைக்கத்திப் போர்களுக்கு கொஞ்ச நாட்கள் விடுமுறை தந்து விட்டு வாழ்க்கையின் நிஜங்களுடன் ; உங்கள் உறவுகளுடன் கழியுங்கள் - அவையே நிரந்தரம் ! இந்தச் சோப்புக் குமிழ் கற்பனை யுத்தங்களல்ல தானே !! God be with you !!

Bye all !! See you around !! Have a cool Thursday !!