நண்பர்களே,
வணக்கம். பண்டிகையும் வந்தாச்சு… புதுத் துணியும் பள பளன்னு போட்டாச்சு… பட்சணங்களையும் பாரபட்சமேயில்லாமல் பதம் பார்த்தாச்சு… பட்டாசை வெடிச்சாச்சு… புதுப்படத்துக்கும் போயாச்சு… பெருசாய் ஒரு புளிச்ச ஏப்பமும் எடுத்தாச்சு… சித்தே ஜெலுசிலையும் வாய்க்குள் ஊத்தியாச்சு! அடுத்து என்னவோ? வேறென்ன – மாமூலான தினசரி வாழ்க்கை தான்! நான் குறிப்பிடும் ‘பண்டிகை‘ நமது ஈரோட்டு வாசகர் சந்திப்புத் தான் என்பதையோ - புதுத்துணிகளும்; பட்சணங்களுமாய் உணர்த்துவது புது இதழ்களையே என்பதையோ; பட்டாசும், புதுப்படமுமாய் சொல்ல முற்படுவது அன்றைய தினத்தின் நமது ரவுசுகளையே என்பதையோ புரிந்திட மங்குனி ஸ்மர்ஃப்புக்குக் கூடச் சிரமமிராது அல்லவா? So here we are – back to the routine!
ஆனால் இந்த routine குண்டுச்சட்டிக் குருதையோட்டத்தின் மத்தியில் ஒரு not so routine இதழைப் பற்றிப் பேசாது போனால் அது வரலாற்றுப் பிழையாகிப் போகுமில்லையா? So இந்த ஞாயிறின் அலசல் “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” பற்றியே!!
பொதுவாய் கதைத் தேர்வுகளின் போது ஜானர்கள் வெவ்வேறாய் இருப்பினும் – கதைகளை நான் classify செய்திட 3 ரகங்கள் இருப்பதுண்டு! பார்த்த மாத்திரத்திலோ; லேசாய் முன்னோட்டங்களைப் படிக்க முடிகின்ற போதிலோ – WOW!! என்று டாப் கியரைப் போடச் செய்யும் கதைகள் சில இருப்பதுண்டு!
- புரட்சித் தீ... பொடியன் பில்லி... சூப்பர் சர்க்கஸ் போன்ற லக்கி கதைகள்!
- நில்... கவனி... சுடு... தலைவாங்கிக் குரங்கு; பாலைவனத்தில் ஒரு கப்பல் – போன்ற TEX கதைகள்!
- தங்கக் கல்லறை; இரத்தப் படலம் (ஒரிஜினல் சுற்று); லார்கோ போன்ற ஆல்பங்கள்!
இவற்றையெல்லாம் ‘டிக்‘ அடிக்கும் போதே – தேர்தலில் கெலித்த வேட்பாளர்கள் டி.வி.களுக்குப் பேட்டி கொடுக்கக் கையோடு ரெடி பண்ணிக் கொண்டு வந்திருக்கும் நன்றியுரைகளைப் போல ஒன்றை மனசுக்குள்ளேயே நான் ஓட்டிப் பார்த்துக் கொள்ள முடியும்! நிச்சயிக்கப்பட்ட ஹிட்ஸ்!
ரகம் # 2 – ஓ.கே. ரகங்கள்! புரட்டிப் பார்க்கும் போது; நெட்டில் அலசிப் பார்க்கும் போது; சின்னதொரு முன்னோட்டத்தை மட்டும் கோரிப் பெற்றுப் பார்க்கும் போது – ‘இவை தேறிடும்‘ என்ற நம்பிக்கையை உள்ளுக்குள் விதைக்கும் கதைகள் இவை! Of course நடைமுறை சாத்தியம் காணும் சமயங்களில் results வேறு மாதிரியும் அமைந்திடுவதுண்டு தான்! ஆனால் முதற்கட்ட அலசல்களின் போது பெரியதொரு நெருடலை ஏற்படுத்தாக் கதைகளை இந்த இரண்டாவது கேட்டகரியில் அடைத்துப் பார்ப்பேன்!
ரகம் # 3 தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமானது! ‘என்னமோ இருக்குது... ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்டாக்கா ரகளையான அனுபவத்தைத் தரவல்லது‘ என்ற நம்பிக்கையை விதைக்கும் புதிரான கதை ரகங்கள் இவை!
- க்ரீன் மேனர்
- பராகுடா
- நிஜங்களின் நிசப்தம்
- ஜேஸன் பிரைஸ்
போன்ற கதைகளை இந்த mysterious பட்டியலில் அடைத்திட்டுப் பார்ப்பேன்! சொதப்பினால் முகரை முழுக்க கொள கொளவென பதம் தப்பிய அல்வா அபிஷேகம் நிச்சயம் என்று தெரிந்தாலுமே – ‘எப்படியாச்சும் இதை முயற்சித்துப் பார்டா கைப்பிள்ளே!‘ என்று உள்ளுக்குள் ஒரு கட்டதுரையின் கூட்டாளி கூவிக் கொண்டேயிருப்பது இந்த ரகக் கதைகளின் ஸ்பெஷாலிட்டி! பணியாற்றுவதிலுமே maximum சவால்களும் ; உற்சாகங்களும் தொற்றிடுவது இந்த ரகம் # 3 கதைகளிலேயே ! சாத்து வாங்கினால் – ‘முட்டுச் சந்து # 118‘ என்று டயரியில் குறித்துக் கொண்டே – சுனா-பானா ஸ்டைலில் மண் ஒட்டிய மீசையைத் தடவிக்கினு ‘in 1985 when I went to frankfurt’ என்று வண்டியை ரிவர்ஸ் கியர் போட்டுத் தப்பிக் கொள்ளலாம் ! அதே நேரம் எடுத்த ரிஸ்க் ஒரு பிரமாத வெற்றியாகிடும் பட்சத்தில் - ‘யெஸ்... யெஸ்... யெஸ்... எனக்கு இதெல்லாம் முன்னமே தெரியும் !‘ என்று காலரைப் பெருமையாய்த் தூக்கி விட்டுக் கொண்டு அடுத்த மூன்று வாரங்களுக்கு ‘நாட்டாமை‘ சரத்குமார் பாணியில் கெத்தாக இப்டிக்கா – அப்டிக்கா வலம் வரலாம்! “பிஸ்டலுக்குப் பிரியாவிடை" without a doubt – இந்த ரகம் # 3-ன் பிரதிநிதியே!
இந்தக் கதையை நான் கண்ணில் கண்டது பற்றி முன்னமே எழுதியது ஞாபகமுள்ளது! So அதே புராணத்துக்கு மறு ஒலிபரப்பு தேவையில்லையே?! 5 ஆண்டு சுமாருக்கு முன்னமே இந்தத் தொடரின் முதல் ஆல்பத்தைப் பார்த்த போது – “The Gentleman who did not like Guns!” என்ற தலைப்பு எனது ஆர்வத்தைக் கிளறியிருந்தது! சும்மா கெத்தாய் பாலைவனத்தின் மத்தியில் அசல் லார்ட் லபக்தாஸ் போலவே தோரணையாய்க் குந்தியபடிக்கு டீ குடித்துக் கொண்டிருந்த கனவானின் அட்டைப்படம் – இது நிச்சயமாய் ஏதோவொரு விதப் parody என்று மனதில் படச் செய்தது! பக்கங்களைப் புரட்டிய போது நிறையவே adults only சித்திரங்கள் ஆங்காங்கே கண்ணில் பட, ‘ஆத்தாடியோவ்!‘ என்றபடிக்கே ஜகா வாங்கி விட்டேன்! தொடர்ந்த ஆண்டுகளில் ஆல்பம் # 2 ; 3 & 4 வரிசையாய் ஏர்-மெயிலில் மெகா சைஸ்களில் வந்திறங்க – பீரோவுக்குள் பகுமானமாய் அவற்றை அமுக்கி விட்டு இந்த ‘முதிர்ரசனை‘ சமாச்சாரம் ஒத்து வராது சாமி என்று நானாய் தீர்ப்புச் சொல்லிக் கொண்டேன்! ஆனால் அவ்வப்போது சபலம் தட்டத்தான் செய்யும் – “maybe இன்னொரு க்ரீன்மேனரை உதாசீனம் செய்கிறோமோ?” என்ற ரீதியில்! நடப்பாண்டின் ஈரோட்டு ஸ்பெஷல்கள் என்று எதைப் போடலாமென்ற கேள்வி எழுந்த போது – மாமூலான heavy weight நாயகர்களை சுற்றிச் சுற்றியே மனம் கும்மியடித்தது! ஒரு ஜாலியான தருணத்துக்கு ஒரு மாஸான நாயகரைக் களமிறக்கி விட்டால் ரிஸ்க்கே லேது! என்று லாஜிக் லிங்கப்பன் எனக்குள் படமெடுக்கத் துவங்கினார்! நிஜத்தைச் சொல்வதானால் டெக்ஸின் ஒரு MAXI (330 பக்க) சாகஸத்தை அதற்கென தயாரும் செய்து விட்டேன்! ஆனால் TEX போலொரு கமர்ஷியல் நாயகரை “முன்பதிவுக்கு மட்டும்“ என்ற ரகத்தில் அடைப்பது செம மொக்கையான தீர்மானமாய்த் தோன்றியது! தவிர, நமது பதிவுப் பக்கங்களையோ; இதழ்களில் நான் எழுதும் ஹாட் லைன்; வெது வெது லைனையெல்லாம் படிக்க நேரமிரா நண்பர்கள் – ஒரு புது டெக்ஸ் வெளியீட்டைப் பார்த்தால் – “இதை ஏன் சந்தாவில் எனக்கு அனுப்பலை?” என்று கண்சிவக்கக் கூடுமென்றும் பட்டது! So ரெகுலர் தடங்களின் நாயகர்களை இந்த ஈரோட்டு exclusives பக்கமாய்த் தலைவைக்க அனுமதிப்பதில்லை என்று லாஜிக் லிங்கப்பனை துணியைப் போட்டு மூடினேன்!
எனது அடுத்த choice “கென்யா” நெடும் தொடரின் தொகுப்பாய்த் தானிருந்தது! அல்லது அந்த “அமெரிக்கா” தொடர்! இவை பற்றி ஏற்கனவே இங்கே எக்கச்சக்கமான அலசல் & வாக்குப்பதிவெல்லாம் நடந்திருக்க சரியான தேர்வுகளாயிருக்குமென்று மனசில் பட்டது! So ஆண்டின் ஆரம்பத்திலேயே அவற்றின் உரிமைகள் கோரி விண்ணப்பித்திருந்தேன்! ஆனால் ஐரோப்பிய வசந்த காலம் முழுக்கவே இங்கே-அங்கே என்று சர்வதேச புத்தக விழாக்கள் ரவுண்டு கட்டுவதால் அந்த நேரங்களில் ரொம்பவே பிஸியாக இருப்பார்கள்! So கிணற்றில் போட்ட கல்லாய் எனது விண்ணப்பம் தூங்கிக் கிடக்க – ‘What next?” என்ற கேள்வி எழுந்தது! மறுக்கா சில பல துயில் பயிலும் தொடர்கள் தூசி தட்டப்பட – ‘The Gentleman who did not like guns” அந்தக் குவியலில் இணைந்து கொண்டது! ஆனால் இந்தவாட்டி அதைப் பரிசீலனை செய்யும் போது – என் உருண்டை விழிகளுக்கு அந்த அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் வேறு மாதிரித் தெரியத் துவங்கியிருந்தன! பராகுடா எனும் ஒரு “திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில்” உலாற்றிய பிற்பாடு இதெல்லாமே எலிமண்டரி ஸ்கூல் சமாச்சாரமாய்த் தோன்றுவது புரிந்தது! அந்த ஒற்றை நெருடலைத் தாண்டி இந்தத் தொகுப்பினில் எனக்குத் தயக்கங்கள் வேறெதுவும் கிடையாதென்பதால் பரபரவென “பிஸ்டலுக்குப் பிரியாவிடை” என்று அறிவித்து வைத்தேன்! And என்ன மாதிரியான coincidence அதுவோ தெரியவில்லை - நான் அறிவித்த மறு தினம் "கென்யா" தொடருக்கான காண்டிராக்டும் மின்னஞ்சலில் வந்து சேர்ந்திருந்தது !! முன்வைத்த பிஸ்டலை இனி back அடிக்க வேண்டாமே - என்றபடிக்கே தொடர்ந்திடத் தீர்மானித்தேன் !
கதை தேர்வான பிற்பாடு அதனை மொழிபெயர்க்க ‘தம்‘ கட்டத் துவங்கிய போது மார்ச்சின் இறுதி புலர்ந்திருந்தது! சரியாக அதே வேளையின் எனது சுகவீனமும் துவக்கம் காண பராகுடா part 2 & தனியொருவன் கதைகளைப் பிசாசு போல உச்ச வேகத்தில் எழுதத் தொடங்கியிருந்தேன்! எந்த நேரத்தில் எந்த ஆஸ்பத்திரியில் படுக்கையில் ஜாகை காத்துள்ளதோ என்று தெரிந்திராத நிலையில் இந்த வேகம் தானாய்த் தொற்றிக் கொண்டது! ஆனால் பராகுடா – இரண்டாம் பாகத்தின் பணி ரொம்பவே intense ஆக அமைந்து போக, மேற்கொண்டொரு 4 பாக பிஸ்டலுக்கு பீப்பீ ஊதிட மனதிலும் உடம்பிலும் ‘தம்‘ இருப்பதாகத் தோன்றவில்லை! அப்போது தான் நமது அமெரிக்க நண்பர் மொழிபெயர்ப்புக்கொரு வாய்ப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தது! நினைவுக்கு வந்தது! “அட... சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளவொரு பார்ட்டி சிக்கியாச்சு... கூடையைப் போட்டு அமுக்கிடுடா முட்டைக் கண்ணா!” என்றபடிக்கே ஒரு சுபயோக சுபதினத்தில் தண்ணீர் தெளித்து மாலையும் போட்டு, பொட்டு வைத்து 4 பாகங்களை அவருக்கு pdf-ல் அனுப்பி வைத்தேன்! செம ஆர்வமாய் அவரும் பணிகளைத் தொடங்கச் சம்மதம் சொன்னது மார்ச் 27-ல்!
“ ‘தட தட‘வென்று பாய்ந்திட வேண்டாமே சார்... முதல் 5 பக்கங்களை எழுதியனுப்புங்கள்... பாணி; சொற்பிரயோகம் என எல்லாமே ஓ.கே.யாக இருந்தால் தொடரலாம்!” என்று ப்ரேக் போட்டேன்! தொடர்ந்த 15 நாட்களுக்கு 'சைனீஸ் சித்ரவதையென்றால்' என்னவென்றொரு செயல்முறை விளக்கம் கிடைத்திருக்கும் நண்பருக்கு! அவர் எழுதியனுப்பும் ஸ்கிரிப்டை பிரிண்ட் எடுக்க வேண்டியது; சிகப்பு மசியால் திருத்தங்களை மாங்கு மாங்கென்று போட வேண்டியது; அப்பாலிக்கா அதை ‘போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்ப வேண்டியது என்று செம பிசியாக என் குரங்கு வேலைகளைச் சிறப்பாக நடத்தினேன்! முதல் 13 பக்கங்களை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரு குட்டி யானை லோடு பேப்பரை நானும்; ஒரு நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவன் செலவிடக்கூடிய அவகாசத்தை நண்பரும் விழுங்கியிருப்போம்! ரொம்பவே நொட்டை சொல்கிறோமோ? என்று எனக்கே சமயத்துக்குத் தோன்றத் தான் செய்யும்... ஆனால் இந்தக் கதையின் funky ஸ்டைல் சித்திரங்களுக்கும்; கதாப்பாத்திரங்களுக்கும் பொருந்தும் ஒரு பாணியில் துல்லியமாய் விரல் வைக்கத் தவறினால் – கானா பாட்டுக்கு TMS குரல் கொடுத்தது போலாகிடுமே என்ற பயம் எனக்கு ! எப்படியும் இறுதியாய் நான் சகலத்தையும் திருத்தவும், எடிட் செய்யவும் போகிறேன் தான் என்றாலும் – எழுதும் போது இயன்றமட்டிலும் சரியான mould-க்கு நண்பரைத் தயார் செய்து விட்டால் அந்தமட்டுக்கு எனது நோவு குறையுமே என்ற சுயநலத்தில் குடலை உருவோ உருவென்று உருவினேன்! முதல் பாகத்தை ஒரு மாதிரியாய் முடித்து அனுப்பியது ஏப்ரல் 25க்கு என்று எனது inbox சொல்கிறது! தொடர்ந்த பாகங்களும் இதே பாணியில் மேற்கேயும் – கிழக்கேயுமாய் மின்னணு மார்க்கத்தில் பயணிக்க – 4 அத்தியாயங்களும் நிறைவு கண்டது ஜுன் 9-ல்!! பிஸ்டலுக்குப் பிரியாவிடையின் புண்ணியத்தில் – நண்பரின் தூக்கத்துக்கொரு அந்த 2 மாதங்களிலும் பிரியாவிடை தர நேரிட்டிருப்பது சர்வ நிச்சயம் ! Thanks for putting up with all my tortures sir !!
தொடர்ந்த எடிட்டிங் பணிகள் பற்றி ; அத்தனை ‘ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா‘ குட்டிக்கரணங்களுக்குப் பிற்பாடும், புதுசாய் எக்கச்சக்கப் பட்டி-டிங்கரிங் செய்து வண்டியோட்டிய அனுபவங்களை
‘ஒரு பெருமூச்சுக்குப் பின்னே‘ பதிவினில் தம் கட்டிச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்! So ஒருவழியாய் ஈரோட்டுக்கு 2 வாரங்களுக்கு முன்னமே இதழைக் கையில் ஏந்திய நொடியில் ஒருவித நம்பிக்கை அலையடித்தது – இது நிச்சயமாய் உங்களை disappoint செய்திடாதென்று ! And இதோ – MAXI லயனின் அதிரடிப் பிரவேசத்துத் தருணங்களையும் தாண்டி 'பி.பி.வி.' சோலோவாக இன்றைக்கு ஒளிவட்டத்தைத் தனதாக்கி வருவதை பார்க்கும் போது பெருமையாகவுள்ளது – on two counts : ஒரு அழகான வாசிப்பனுபவத்தை நமது பயணத்தின் ஒரு அங்கமாக்கிட முடிந்தமையில் பெருமிதம் # 1. And இத்தகைய கதைக்களங்களையும் அட்டகாசமாய் வரவேற்கும் வாசக வட்டத்தோடு தோள் உரச முடிவதில் பெருமிதம் # 2!
Digging into the album – கதையின் பன்முகத்தன்மை என்னை ரொம்பவே மிரளச் செய்தது ! And கதைமாந்தர்கள் ஒருத்தர் பாக்கியின்றி நெடுக பட்டாசாய்ப் பொரிவதை ரொம்பவே ரசித்தேன் !!
- பைரனும், ஹோக்கார்டும் ; 'கட்டிளங்காளை' டிம்மும் துவக்கப் பக்கங்களில் கதையைத் துவக்கித் தரும் செம breezy பாணி...
- ‘மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரி அறிமுகமாகும் இடம் முதலாய் கதை அடுத்த கியருக்குள் பயணிப்பது...
- ‘டம்மி பீஸ்‘ என்பதாய் காட்சி தரும் அந்தக் கிழச் செவ்விந்தியக் கதாப்பாத்திரம் – எங்கோ. எப்படியோ படித்ததொரு சமாச்சாரத்தை நினைவூட்டியது! ஆன்டன் செகோவ் எனும் பிரபல ரஷ்ய எழுத்தாளர் - நாடக ஆசிரியர் சொன்னதாம் இது; “கதையின் ஓட்டத்துக்கு உதவிடா எந்தவொரு சமாச்சாரத்தையும் சகித்திடப்படாது! மேஜையிலொரு துப்பாக்கி கிடப்பதாய்ச் சொன்னால் – அந்த ஆயுதமானது இரண்டாவதோ – மூன்றாவதோ அத்தியாயத்தில் வெடித்தாக வேண்டும்! சும்மா கதை முழுவதும் எந்தவொரு பங்கும் எடுத்துக் கொள்ளாத டம்மியாய்த் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது!”
பி.பி.வி.யின் கதாசிரியருமே இந்தக் கோட்பாட்டின் ரசிகர் போலும்! அறிமுகமாகும் போது பானை செய்யும் மிக்சர் சாப்பிடற பார்ட்டியாய் தென்படும் பெருசை – பின்னே என்னமாய் மையமாக்குகிறார்?? அந்தப் பெருசு பேசும் வசனங்கள்... ப்ளாஷ்பேக்ஸ்... வாவ்!!
- ‘நாங்களும் பரட்டை தான்... எங்க கிட்டேயும் சீப்பு இருக்கில்லே... சீவிட்டு நாங்களும் கலைச்சுக்குவோம்லே என்ற பாணியில் அலப்பரை விடும் கொள்ளையர் தலைவன் மொனோவோ!! அழகியை ஆசைநாயகியாக்கி, பின்னே அல்வாவும் வாங்கிடும் sequence செம விறுவிறு!
- அலட்டிக் கொள்ளா இங்கிலீஷ் கனவானாய் அறிமுகமாகி, அதிரடித் திட்டங்கள் வகுக்கும் ஆக் ஷன் block களில் ரகளை பண்ணி; வக்கீலாய் மதியூகம் காட்டி; அழகான மனையாளின் அமைதியான ஆத்துக்காரராய் வலம் வந்து; உயிர் பயத்தில் நம்மையும் மிரளச் செய்து, இறுதியில் சாணக்கியத்தனங்கள் பல செய்திடும் – பைரன் எனும் அந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தான் எத்தனை-எத்தனை layers?
- பைரனோடு சுற்றி வரும் அந்த மலை மாடு!! ஷப்பாடியோவ்... அதுவும் என்னவொரு offbeat பாத்திரப்படைப்பு! கதையின் துவக்கத்தைப் போலவே இறுதியிலும் பைரன் + ஹோகார்ட் இணைந்தே இருப்பதான சம்பவ அமைப்புகளை சிலாகிக்காது போக முடியுமா?
- களம் கனமானாலும், கிச்சுக் கிச்சு மூட்டும் பொருட்டு நுழைக்கப்பட்டிருக்கும் கட்டிளங்காளை.... வன்மேற்கின் வேங்கை – குதிரை லத்தியைக் கொண்டு வேட்டையை நடத்தும் டிம்! செம ஜாலியான... பாசிட்டிவ்வான பாத்திரப்படைப்பல்லவா?
– And அந்தச் சிறுமி லூஸி !!!! அந்தக் குட்டிப் பெண் தான் கதை நெடுக எத்தனை தூரத்துக்குக் கதையை நகர்த்திச் செல்கிறாள்!! கதையின் திசையே மாறிடவும் என்னமாய் உதவிடுகிறாள் ; அறியா வயதிலும் எத்தனை ஆழமான எண்ணங்களை விதைக்க வல்ல வரிகளை உதித்திடுகிறாள் ? An awesome creation !!
- Last but not the least : கதையின் மையமான மார்கோ !! இத்தனை வீரியமானதொரு பெண் கதாப்பாத்திரத்தை நாம் கடைசியாய்ப் பார்த்தது மின்னும் மரணத்தில் தான் அல்லவா ? என்னா ஒரு அழுத்தமான படைப்பு ? Hats off to the author !!
Before I wind up - ஒரு ஜாலியான எண்ணம் தோன்றியது மனதில் !! நெடு நாட்களுக்கு மனதில் தங்கிடப் போகும் இந்தக் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் வெள்ளித்திரைக்குப் புரமோஷன் கண்டால் - எந்த நடிகர்கள் / நடிகைகள் இந்த role களுக்குப் பொருத்தமாயிருப்பார்களோ ? சும்மா யூகம் செய்து பாருங்களேன் ?
And இதோ - நடப்பு ஜம்போ சீசன் # 2 -ன் இறுதித் தேர்வு (கால வேட்டையாருக்குப் பதிலான இதழ் !!) இதுவும் ஒரு வேட்டைக்களமே - இம்முறையே முழுவண்ணத்தில் !!! முதல் பக்கத்தில் டாப் கியரைத் தொடும் ஆல்பமானது சும்மா தீயாய்ப் பாய்கிறது - அசாத்தியமான சித்திரங்களோடு !!! ZAROFF - அமேசான் கானகத்தில் ஒரு ஜீவ மரண வேட்டையில் !!
Bye folks ...ஆகஸ்டின் அலசல்கள் தொடரட்டுமே ?
See you around !Have a Super Sunday !!