நண்பர்களே,
வணக்கம். எக்கசக்கமாய்ப் பதிவுகளைப் போட்டுத் தாக்கியிருக்கிறேன் தான்; ஆனால் ‘ஜாலிக்காண்டி‘ என்பதைத் தாண்டி மெய்யாகவே அத்தியாவசியப்படும் பதிவுகள் அமையும் போது கிடைக்கும் ஒரு சன்னமான திருப்தி அலாதியானது! கொஞ்ச காலமாகவே என் மண்டைக்குள் குடைந்து வந்த இந்த variety சார்ந்த விஷயத்தைப் போன வாரத்துப் பதிவில் இறக்கி வைத்தது உள்ளுக்குள் லேசானது போன்ற உணர்வைத் தருகிறது! Oh yes - ஒற்றை ராத்திரியில் இதற்கொரு சகல ரோக-சர்வ நிவாரணத் தீர்வெல்லாம் சாத்தியமாகாது என்பது புரிகிறது; ஆனால் கொஞ்சமாகவேணும் கிடைத்துள்ள உங்களது ரசனைகள் பற்றிய insights – தொடரும் காலங்களின் திட்டமிடல்களுக்கு ஓரளவாவது உதவிடும் என்று நம்புகிறேன்! ‘ஓரளவாவது‘ என்று நான் நீட்டி முழக்கிடக் காரணங்கள் சில உள்ளன:
1. பிரதானமாய் – தத்தம் எண்ணங்களை / நாயகத் தேர்வுகளை இங்கே பதிவிட்டுள்ள நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைச்சலே! So இதனை ஒரு முழுமையான அபிப்பிராய வெளிப்பாடாய்ப் பார்த்திடல் சிரமமே! தொடரவிருக்கும் ஏப்ரல் இதழ்களோடு இதை வழங்கி, இன்டர்நெட்டுக்கு அப்பாலுள்ள வாசகர்களின் சிந்தனைகளையும் tap செய்திட முடிகிறதா என்பதைப் பார்த்தாக வேண்டும்! And இன்னமும் கூட இங்கே மௌனத்தையே தொடர்ந்திடும் நண்பர்களும், இந்த முறையேனும் மௌன விரதத்தைக் கலைக்க முற்பட்டால் சூப்பராக இருக்கும் !
2. பதிவாகியுள்ள பட்டியல்களை பரிசீலித்தால் – TIER 3-ல் டிக்கெட் எடுக்காமலே பயணிப்பவர்களாகத் தென்படுவது மாயாவி & மும்மூர்த்திகள்! கிட்டத்தட்ட 90% நண்பர்களின் எண்ணம் இதுவே! ஆனால் கடந்த 2+ ஆண்டுகளின் விற்பனையின் நம்பரில் முதலிடத்தில் குந்திக் கிடப்பது இந்தப் பல்செட் மாட்டும் பருவத்திலிருக்கும் பிரிட்டிஷ் ராஜகுமாரர்கள் தான்! அவர்கள் நினைத்தால் நாம் பயணிக்கும் இந்த ரயிலையே ஒரே செக்கில் கிரயம் பண்ண முடியும் தான் - ஆனால் நமது ரசனைப் பார்வைகளிலோ – ‘அப்டிக்கா ஓரமாப் போயி விளையாடுங்கப்பா‘ boys ஆகவே பின்தங்கிக் கிடக்கின்றனர்! So சில தருணங்களில் ரசனை / விற்பனை அளவுகோல்கள் - என்பன துருவங்களின் தொலைவிலும் இருக்கக் கூடும் போலும் என்பதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டி வருகிறது ! மண்டையைச் சொரிந்து கொண்டே நடை போடும் படங்கள் கொஞ்சம் !
கிட்டியிருக்கும் குறைச்சலான data-வைக் கொண்டு ஒரு தோராயமான picture-ஐ நிர்ணயிக்க முயற்சித்தால் பதில்களை விடக் கேள்விகளே மிகுந்திடுவது புரிகிறது! நான் பார்த்தமட்டிற்கு அழுந்தப் பதிவாகியிருக்கும் கருத்துக்கள் சில !
* பலரது Tier 3-ல் இடம் பிடிப்பது பலதரப்பட்ட கார்ட்டூன் நாயகர்களே என்பது முதல் stat! கொஞ்ச காலமாகவே ஸ்மர்ஃப்ஸ் வெளியாகும் வேளைகளில்; ரின்டின் ஆஜராகும் நாட்களில்; க்ளிப்டன் கதைக்கும் பொழுதுகளில்; மந்திரி மாவாட்டும் தருணங்களில், சன்னமாகவோ… சத்தமாகவோ சங்டக்குரல்கள் பதிவாகி வருவதில் இரகசியமில்லை! எனது கேள்வியானது- இது ஒருவித கார்ட்டூன் மீதான அலர்ஜியா ? அல்லது குறிப்பாய் இந்த நாயகர்கள் மீதான கடுப்ஸா? ‘என்ன பண்ணினாலும் எனக்கு கார்ட்டூன் மட்டும் ரசிக்கவே மாட்டேன்குது சார்!‘ என்று என்னிடம் சொல்லியுள்ள நண்பர்கள் ஏராளம்! So தற்போதைய இந்த துவேஷமானது anti genre-ஆ ? anti hero-வா ? Maybe இவர்களுக்கு மாற்றாய் வேறு கார்ட்டூன் நாயகர்கள் தலைகாட்டினால் அதனில் உங்கள் reactions எவ்விதமிருக்குமோ ? சும்மா ஒரு curiosity -ல் தான் இதற்கான விடை தேட முனைகிறேனே தவிர, அடுத்தாண்டு கார்ட்டூன்களுக்கு முழுக்குப் போடும் எண்ணத்தில் அல்ல ! இன்றைய பொதுவான ரசனைகளுக்கும் - நாளைய தலைமுறையின் ஊக்குவிப்புக்கும் மத்தியில் பெரியதொரு லடாய் இன்றி நம் பயணம் தொடர்வது அவசியமென்பதால் - இயன்றமட்டிலும் அவரவர் எண்ணங்களை அறிந்திட ஆவல் ! So சற்றே வெளிச்சம் போடுங்களேன் guys - இந்தப் பாய்ண்ட் மீது?
* ரயிலின் பின்பக்கத்திலிருந்து ஒரே ஜம்பாய் முன்பக்கத்துக்குப் போனால் – ‘இப்போ என்னாங்கறே?‘ என்றபடிக்கு ஒரு வாட்டசாட்டமான மஞ்சளசட்டையர் அமர்ந்திருப்பது தெரிகிறது! “நீ மூணாம் பிறை கமல் மாதிரிக் குட்டிக் கர்ணம் அடிச்சுக்கோ; நாலாம் பிறை பரத் மாதிரி மண்டையிலெ கொட்டிக்கோ – உன் பாடு! ஆனாக்கா இங்கே அலுங்காமல் நான் சவாரியைச் தொடர்வேனாக்கும்!“ என்று அவர் சொல்லாமல் சொல்வது புரிகிறது !
++ஒரு லார்கோ ஆல்பத்தை உருவாக்க அவசியப்படும் குட்டிக்கரணங்களை நான் ஜெமினி ஸ்டூடியோ வாசலில் போய் போட்டிருந்தால், இந்நேரத்துக்கு யாராவது ஒரு ஸ்டண்ட் மாஸ்டரின் குழுவில் இடம் கிடைத்திருக்கும்! மொழிபெயர்ப்பில் துவங்கி வழிநெடுக களர்கிற பெண்டு சொல்லி மாளா ரகம்!
++ஒரு தோர்கல் ஆல்பத்தைத் தயாரிக்க முந்தைய பாகம்; பிந்தைய பாகம் என்று நெட்டுரு போட்டு வர வேண்டும்! அப்புறமாய் ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி வைத்துக் கொண்டு கண்ணயரும் ஒவ்வொரு தபாவும் நாலு சொட்டை உள்ளே போட்டுக் கொண்டாக வேண்டும் பணி செய்யும் போது!
++ஒரு இரத்தப் படலத்தை – அதுவும் அந்த இரண்டாம் மேஃபிளவர் சுற்றிலான கதைக்குள் புகுந்திடுவதெனில் க்ளுகோஸ் டப்பாக்கள் டஜன் கணக்கிலும், முகத்தில் தெளித்துக் கொள்ள குண்டு சோடாக்கள் ரெண்டு டஜனும் தேவைப்படும்!
ஆனால் இதெதெற்குமே அவசியங்களின்றி ; “வந்தார்… சாத்தினார்… வென்றார்!“ என்பதே தனது பாணியாகக் கொண்டுள்ள நமது இரவுக் கழுகார் ஈட்டி வரும் ‘ஹிட்ஸ்‘ பற்றி நாமறிவோம்! எனது கேள்வி இவரது வெற்றி இரகசியம் பற்றியல்ல…! மாறாக- நமது ரசனைகளுக்கும், நமது வயதுகளுக்கும் மத்தியிலான equation-க்கு வலு உண்டா – இல்லையா? என்பது பற்றியே!
கொஞ்சம் விளக்குகிறேனே:
- "பேரிக்காய் போராட்டத்தை"“ 30 ஆண்டுகளுக்கு முன்பாய் சுஸ்கி & விஸ்கியில் ரசித்தோம்! ஆனால் இன்றைக்கோ நமது நீலப் பொடியர்களைக் கண்டு தெறித்து ஓடுபவர்களைப் பார்க்க முடிகிறது !
- “"காமெடிக் கர்னலை"“ எண்பதுகளின் இறுதிகளில் குலுங்கிச் சிரித்து அரவணைத்தோம்! ஆனால் அதே மீசைக்காரரை இன்றைக்குப் பார்த்த கணத்தில் ரிவர்ஸ் கியர் போடுவோரும் உண்டு தானே ?
- புராதனம் சொட்டிய ‘செக்ஸ்டன் பிளேக்‘ கதைகள் அன்றைய b&w-ல், சாணித் தாளில் கூட ரசனைக்குரியதாய்பட்டன! ஆனால் அதே புராதனம் இன்றைக்குத் தள தள art பேப்பரில், முழு வண்ணத்தில் ஜில் ஜோர்டனின் ரூபத்தில் வலம் வரும் போது ஊரைக் காலி பண்ணிவிட்டு ஓட யத்தனிப்பது ஏனோ ?
- மீசையை முறுக்கிக் கொண்டு குள்ள மந்திரியார் ‘90-களில் நம்மிடையே ஜாலியாகக் கூத்தடித்தவர் தான்! ஆனால் இன்றைக்கோ அவர் பொருட்டு,நம்மவர்களில் ஒருசாராருக்கு ஜெலுசில் மாத்திரைகளை விழுங்கிட அவசியம் நேர்கிறது தானே?
"இதிலென்ன ஆச்சரியம் ? அந்த வயதுக்கு அது ரசித்தது! இப்போது ரசிக்கலை என்கிறீர்களா?" Super !! ஏற்றுக் கொள்கிறேன்!
ஆனால்… ஆனால்…......
வருடங்கள் 33 ஓடியிருப்பினும், ஆல்பங்கள் எக்கச்சக்கமாய் களமிறங்கியிருப்பினும் – இந்த மஞ்சள் சட்டை மாவீரரிடம் மட்டும் இந்த வயது சார்ந்த சமாச்சாரங்களெல்லாம் ஓரமாய் ஒதுங்கி விடும் மர்மம் தான் என்னவோ ? 1985-ல் ரசித்தோம் ; '95-ல் ஆராதித்தோம் ; 2005-ல் கொண்டாடினோம் ; 2015-ல் ஆர்ப்பரித்தோம் ! இங்கு மட்டும் அந்த "வயது-ரசனை" என்ற equation செயலிழந்து விடுகிறதே?! சில கதைகளை வயது பாகுபாடின்றி ரசிக்க முடிவதும் ; சிலவற்றை "இது குழந்தைப்புள்ளை மேட்டர்" என்று ஒதுக்க முற்படுவதும் ஏனென்று any thoughts ? Maybe “வயது சார்ந்த ரசனைகள்“ என்பதெல்லாம் ஒரு பிரமை தானோ? அல்லது டெக்ஸ் மாத்திரம் இந்த ஒப்பீடுகளுக்கு அப்பால் நிற்கும் ஒரு எஃகுப் பிறவியோ? ரசனைகளுள் ஒரு பொதுவான pattern தெரிகிறதென்று நினைக்கும் போது இத்தகையதொரு massive முரண் கண்ணில்படுகிறது!
ஆனால் துளியும் குழப்பமின்றிப் புலனாகும் விஷயமொன்றுள்ளது! அது தான் – “சேகரிப்பு“ என்ற பொழுதுபோக்கின் மீது குன்றி வரும் ஆர்வங்கள்! ஒட்டுமொத்தமாய் இது பொருந்துமோ - இல்லையோ ; ஒரு கணிசமான சதவிகிதத்துக்காவது இது தற்போது பொருந்தும் என்பதே எனது கணிப்பு ! Of course – இன்னமும் அந்நாட்களது சாணித் தாள் பிரதிகளைப் பழைய பேப்பர் கடைகளில் கண்டெடுக்கும் பரவசம் தொடரக்கூடும் தான் ; ஆனால் முன்போலான கொலைவெறிகளோடு தொடர்ந்திடுமா? என்பதில் I have my own doubts! ‘தொட்டுக்கோ – துடைச்சுக்கோ‘ என்று தட்டுத் தடுமாறி நமது இதழ்கள் வெளியான நாட்களில் – கண்ணில்படும் சகலத்தையும் வாங்கிட வேண்டுமென்ற அவா பரவலாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்குத் திகட்டத் திகட்ட ஆல்ப மழை பொழியும் போது – பட்ஜெட்டுகள்; ரசனைகள்; நேர அளவுகோல்கள் என பல்வேறு factors முன்சீட்டை ஆக்கிரமிக்க – அந்தச் “சேகரிப்புக் கொலைவெறி“ பின்சீட்டின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டிருக்க வாய்ப்புகளுண்டு என்பதே எனது எண்ணம் ! எதுவும் சாஸ்வதமல்ல எனும் போது – இந்த சேகரிப்பின் நாட்டமும் எத்தனை காலம் தான் தழைத்திட முடியும்?!
ஆனால் இங்கேயும் ஒரு நேரெதிர் முரணும் இருப்பதாகவே படுகிறது எனக்கு! ‘இஷ்டப்பட்டதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்‘ என்ற ரக வாசகர்கள் சிறு அணியாகவோ; மித அணியாகவோ உருவாகி வருவது ஒரு பக்கமெனில் – ‘எல்லாத்தையும் வாங்கியே தீருவேன்‘ என்ற diehard ரசிகர்களிடமே அந்த முரணைக் காண்கிறேன்! கடந்த 5+ ஆண்டுகளின் 200+ வெளியீடுகளில், maybe மறுபதிப்புகள் நீங்கலாக – பாக்கி அத்தனை வெளியீடுகளையும் வாசித்து விட்டுள்ள நண்பர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்குமென்பது அறிந்திட ரொம்பவே ஆவல் எனக்கு! மாதந்தோறும் இதழ்களைத் தடவி, உச்சி மோர்ந்து ரசிப்பது; பக்கங்களைப் புரட்டுவது; ரொம்பவே பிடித்தமான நாயக / நாயகியரின் கதையாக இருப்பின் அதனை மட்டும் உடனே படித்து விடுவது; இதர வரவுகளை "அப்பாலிக்கா பார்த்துக்கலாம்" என்று பீரோவுக்குள் பத்திரப்படுத்துவது என்பதை - நடைமுறையாகக் கொண்டிருக்கும் நண்பர்கள் சித்தே கையைத் தூக்குங்களேன் ப்ளீஸ்? இங்கே நமது வலைப்பதிவிலோ; வாட்சப் க்ரூப்களிலோ; FB-யிலோ இதழ்கள் சிலாகிக்கப்படுவதோ / சாத்தப்படுவதோ அரங்கேறும் போது, வேக வேகமாய் பீரோ சாவியைத் தேடிப் பிடித்து அவற்றை வெளியே எடுத்துப் படிப்பது சகஜ நிகழ்வு தானே folks?
எனக்கு இந்தச் சந்தேகம் எழுவது நிறைய வாசகர்களின் தொடர் மௌனத்தைத் தொடர்ந்தே! “டைப் அடிக்கத் தெரியாது / நேரமில்லை“ – என்ற மாமூலான காரணங்களைத் தாண்டி, "வாங்கிப் பத்திரப்படுத்துவதே பிரதானம்; அப்புறமாய் எப்போதாவது படிச்சுக்கலாம்”" என்றதொரு நடைமுறையுமே அவர்களது மௌனங்களின் பின்னணிகளோ ? என்று அவ்வப்போது எனக்குத் தோன்றுவதுண்டு ! அட இதுக்கோசரமாவது பதில் கொல்ல முயற்சிக்கலாமே மௌ-வா நண்பர்களே ? So சேகரிப்பில் குறைந்திடும் ஆர்வம் ஒரு பக்கம் எனில் ; “அட அதுபாட்டுக்கு பீரோவுக்குள் அழகாய் கிடந்து விட்டுப் போகட்டுமே” என்ற தயாளம் மறுபக்கம்; இந்த இரு தரப்புகளுக்கு நடுவே diehard வாசகர்கள் என்பதே இன்றைய வானவில்லின் composition என்பது என் பார்வை! என் அனுமானத்தில் பிழையிருப்பின் திருத்திடுங்களேன் ப்ளீஸ்!
கதை சார்ந்த ரசனைகளைப் பார்வையிடும் போது கௌபாய் genre என்றும் இளமையாய்த் தொடர்வது புரிகிறது! அதே போல ஆக்ஷன் அதிரடி நாயகர்களுக்கென இன்னமும் நமக்குள்ளே ஒரு இடம் காலியாக இருப்பதும் புரிகிறது! புதுப்புது பாணிகள்; கிராபிக் நாவல்கள் என்று நாம் என்னதான் கலந்துகட்டி அடித்தாலும் – அவற்றை முழுமனதோடு அரவணைப்போர் சிறுபான்மையே என்பது இன்னமும் bottom line தான்! ஒற்றை நாளில் நாமெல்லாம் கி.நா. காதலர்களாக மாறிப் போவோம் என்ற கற்பனைகளோ; அவை தான் அறிவுசார் ரசனைகள் என்ற மாயையோ நிச்சயமாய் என்னுள் கிடையாது! இன்றைக்கும் சலூனின் கூடத்தில் டெக்ஸ் யாரையாவது துவட்டி எடுக்கும் போது நம்மையும் அறியாமல் இரத்தம் வேகமாய் ஓட்டமெடுப்பது இயல்பு தானே? So ரசனைகளுக்கு ஒரு ஸ்கேல் வைத்து "இந்தந்தக் கதைகளை ரசித்தால் இத்தனை மார்க்; அந்தந்தக் கதைகளை ரசித்தால் அத்தனை மட்டுமே!" என்ற வாத்தியார் வேலை செய்திடும் எண்ணங்களெல்லாம் கையிருப்பில் இல்லை! அதற்காக - 'பழைய குருடி---கதவைத் திறடி' என்றபடிக்கு கிராபிக் நாவல் தடத்துக்கு அவசரமாய் மங்களம் பாடும் அபிப்பிராயங்களுமே லேது ! உங்கள் எண்ணங்களில் பரவலாய் வெளிப்பட்டு வரும் facts-களை முன்வைக்க மட்டுமே இந்த முனைவு ! So ஒவ்வொரு ஆண்டுமே சந்தா E தொடரவே செய்திடும் - முழு 12 இதழ் சந்தாவாக இல்லாவிடினும் !
இன்னமும் நிறையவே சேதிகளை உங்கள் “நாயகத் தரம் பிரித்தல் படலத்தில்” புரிந்து கொள்ள முடிந்தது! ஆனால் அதையே பெரும் பட்டியலாக்கி உங்கள் குடல்களை இதற்கு மேலும் பதம் பார்க்கத் தோன்றவில்லை என்பதால் கொஞ்சம் இலகுவான topic-கள் பக்கமாய் நகருவோமா?
இதோ ஏப்ரல் மாதத்து highlight மீதான முதல் பார்வை! சிக் பில் க்ளாசிக்ஸ் – 2-க்கான அட்டைப்படம் உருவானதே ஒரு ஜாலியான கதை! இதன் மீதான பணிகள் நடந்தது Valentine’s Day சமயத்தில் தான் என்பதாலோ என்னவோ – நமது ராப்பரிலும் காதல் ரசம் சொட்டோ சொட்டென்று சொட்டியது! ஒரிஜினல் டிசைன்களையே நமது டிசைனர் மெருகேற்றி என் கண்ணில் காட்டிய டிசைன்கள் ஏராளம்! அவற்றுள் நான் இறுதியாய் ‘டிக்‘ அடித்தது இதையே!
கிட் ஆர்டின் காதல் மன்னனாய் மாறும் அழகை உட்பக்கங்களிலுமே முழு வண்ணத்தில் ரசிப்பது ஒரு செம உற்சாக அனுபவமாய் இருக்கப் போவது நிச்சயமென்பேன்! ஹார்ட்கவருடன் இதழ் ‘தக தக‘ வென்று மின்னுவதை போல எனக்குப்பட்டது; ஆனால் “கராத்தே டாக்டர்” இதழைக் கூட ‘சூப்பரப்பு‘ என்று சிலாகித்தவன் நான் என்ற முறையில் – எனது ரசனைகளை, நானே சீரியஸாய் எடுத்துக் கொள்வதில்லை தான்! ஏப்ரல் பிறக்கும் முன்பாய் ‘சிக் பில் க்ளாசிக்ஸ்-2‘ உங்களை எட்டிப் பிடித்து விடுமெனும் போது – நீங்களே தீர்ப்பெழுதிடலாமே?
ஏற்கனவே சொன்னது போல – ஏப்ரலின் இதழ்கள் எல்லாமே ரெடி – டெக்ஸ் வில்லர் b&w நீங்கலாக! So சீ-க்-கி-ர-மே மாதயிறுதி நெருங்கினால் கூரியர் படையெடுப்பை ஆரம்பித்து விடுவோம்! அப்புறம் ஏப்ரல் இதழ்களில் இன்னொரு சுவாரஸ்யமும் இருந்திடப் போகிறது! ஓலைப்பாயை ஈரமாக்கும் ரின்டின் கேனைப் போல என் ஓட்டைவாயைத் திறந்து மாமூலாய் அது பற்றியும் இப்போதைக்கு மொக்கை போடாது – ஏப்ரல் வரை பொறுமை காத்திட நினைக்கிறேன்!
அப்புறம் “இரத்தப் படலம்” எக்ஸ்பிரஸ் ஒருபக்கம் ஜரூராய்த் தடதடத்து வருகிறது. கிட்டத்தட்ட பாதிப் பக்கங்கள் டைப்செட் செய்யப்பட்டுத் தயாராகிவிட்டன! Maybe ஏப்ரல் மத்திக்குள் முழுமையையும் பூர்த்தி செய்து மே இறுதியினில் அச்சுக்குத் தயாராகி விடுவோம் !
And அந்த “"புலன் விசாரணை"” வருமா – வராதா? என்ற குடைச்சலோடு அவ்வப்போது எனக்கு வாட்சப்பிலும், மின்னஞ்சல்களிலும் நினைவூட்டல்களை செய்து வரும் நண்பர்களும் இல்லாதில்லை! அதனை எங்கே- எப்போது- எவ்விதம்- என்ன விலையில் நுழைப்பது? என்ற ஆராய்ச்சிகளுக்குள் புகுவதற்கு முன்பாய் அதன் தயாரிப்புக்கென அவசியப்படக்கூடிய முயற்சிகளை மறுக்கா பரிசீலனை செய்வோமே என்று அந்தக் கோப்புகளை எடுத்துப் பார்த்தேன் நேற்றைக்கு! ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிந்தது – தலையணைகளின் உயரம் பற்றாது போயின் – அந்தக் குறையை நிவர்த்திக்க இந்த ஆல்பம் நிச்சயமாய் உதவும் என்று ! To cut a long story short – இதன் மொழிபெயர்ப்புக்கு மெனக்கெட நண்பர்கள் யாரேனும் தயாரெனில் “புலன் விசாரணையை” நிஜமாக்கிடும் சாத்தியங்களை சீரியஸாகப் பரிசீலனை செய்திட நானும் தயார்! And இத்தனை கடினப் பணியினை சும்மாக்காச்சு பண்ணச் சொல்லுவது நியாயமாகாது என்பதால் அதற்கென ரூ.10,000/- சன்மானமும் தந்திட ரெடி! 30 நாள் அவகாசமெடுத்துக் கொண்டு அந்தப் பணியை செய்து முடிக்க உங்களுள் யாருக்கேனும் திறமையும், பொறுமையும் இருப்பின் கைதூக்கிடலாமே ப்ளீஸ்? சத்தியமாய் இதன் மொழிபெயர்ப்புக்குள் முங்குநீச்சலடிக்க எனக்கு சக்தியில்லை guys! பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய் நீண்டு செல்லும் கட்டுரைப் பக்கங்களை ஒரு ஆய்வாளன் போல அணுகிடும் வயதையெல்லாம் நான் கடந்து விட்டேன் for sure! இதனை எவ்விதம் எடுத்துக் கொண்டாலும் சரி ; மறுக்கா எங்கெங்கோ வைத்துத் துவைத்துத் தொங்கப் போட்டாலும் சரி - யதார்த்தம் இதுவே! So புலமையும், பொறுமையும் ஒருங்கே கொண்டுள்ள நண்பர்கள் முன்வரின் – அவர்களது சிரமங்களை acknowledge செய்திடும் விதமாய் சன்மானம் + இதழின் முதல் பக்கத்திலும் பெயரைக் குறிப்பிட நாங்கள் ரெடி! இனி பந்து முற்றிலுமாய் உங்கள் தரப்பில்! உங்கள் கைகளிலுள்ள மட்டைகளால் அதை லாவகமாக அடித்தனுப்ப முனைவீர்களா? அல்லது அந்த மட்டைகளைக் கொண்டே மறுக்கா என் மண்டையைக் குறி பார்ப்பீர்களா? என்பதெல்லாம் உங்கள் பாடு !
Before I sign off – பிரான்கோ – பெல்ஜிய காமிக்ஸ் உலகிலிருந்து கொஞ்சமாய் லேட்டஸ்ட் சேதிகள்! நமது இத்தாலிய சூப்பர் ஸ்டார் டெக்ஸ் – பிரெஞ்சிலும் (மறுபடியும்) கால் பதிக்கவிருக்கிறார் – ஒரு வண்ண கிராபிக் நாவல் சாகஸம் மூலமாக! வெகு சீக்கிரமே ‘Montana’ என்ற ஆல்பம் பெல்ஜியத்தில் வெளியாகவுள்ளது!
And அந்த ஒற்றைக்கை அடாவடிப் பார்ட்டி பௌன்சரின் இருபாகப் புது ஆல்பமும் ரிலீஸ் ஆகிறது! இதோ அவற்றின் அட்டைப்படங்கள்! ஹ்ம்ம்ம்ம்ம்...!
Bye all! See you around! Have a super duper week-end !