நண்பர்களே,
வணக்கம்! ஓராண்டாகிறது - சீனியர் எடிட்டர் நம்மிடமிருந்து விடைபெற்று!
2012-ல் நமது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நாள் முதலாகவே பொழுதுகள் றெக்கை கட்டிப் பறப்பது போலானதொரு உணர்வு எனக்கு சதா நேரமும் இருப்பதுண்டு தான் - ஆனாலுமே இந்த கடைசி 12 மாதங்கள் புயலாய்ப் பறந்து விட்டுள்ளன. 83 வயதைக் கடந்திருந்த நிலையில் அப்பாவுக்குப் பாக்கியிருக்கக் கூடிய பொழுதுகள் ஆண்டவனின் கொடையே என்பது புரிந்திருந்தது தான்! சிரமங்கள் பலவற்றை வாழ்க்கையில் பார்த்திருந்தவருக்குச் சிரமமின்றி விடைபெறும் யோகம் கிட்டினால் போதும் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆஸ்பத்திரி விஜயத்தின் போதும் தலைதூக்கியதை மறுக்க மாட்டேன். ஆனாலும் வேதனைகளின்றிக் கிளம்பும் நல்விதி கிட்டிய பிற்பாடுமே, அப்பா விட்டுச் சென்றுள்ள அந்த வெற்றிடம் நிரம்பவே உறுத்துகிறது! ஒரு விசாலமான மரம் வீட்டிலிருக்கும் போது, அதன் நிழல் தரும் இதம் "அதான் இருக்கில்ல" என்று 'taken for granted' ஆகிப் போய் விடுகிறது! ஆனால் ஒற்றை நாள் இரவில் அது வேரோடு சாய்ந்த பின்னே - "சுள்" என்று வெயில் வதைக்கும் போது தான் இத்தனை காலமாய் அது அமைதியாய்த் தந்து வந்த ஆறுதலின் மெய்யான பரிமாணம் புரிந்திடும் போலும்!
அப்பா.....!! தனது 21-வது வயதிலேயே தந்தையாகப் பதவி உயர்வு வாய்த்து விட்டதாலோ என்னவோ, சினிமாக்களில் வரும் அந்தக் கறாரான, கண்டிப்பான டாடியாக ஒரு போதும் அவரால் இருக்க முடிந்திருக்கவில்லை. முதல் இரண்டு பிள்ளைகளும் பெண் குழந்தைகளாகியிருக்க, மூன்றாவதாய் பிறந்த ஆண் பிள்ளை என்ற விதத்தில் எனக்கு வீட்டிலும் சரி, அப்பாவிடமும் சரி, தூக்கலான பிரியம் கிட்டியது நிஜமே.வளரும் வயதுகளில் அப்பா சார்ந்த எனது பள்ளிக்கூட நினைவுகளில் வெகு சொற்பமான விஷயங்களே இடம் பிடித்திருக்கும் - simply becos அந்நாட்களில் அப்பா தனது பிசினஸில் ரொம்ப ரொம்ப ரொம்ப பிஸி. ஸ்கூலுக்குப் போக ரிக்ஷா காலை 8:30 மணிக்கு வீட்டுக்கு வந்து நிற்கும் போது அப்பாவின் குறட்டைச் சத்தம் தான் டாட்டா சொல்லும். ஒவ்வொரு இரவும் 2:00 மணி வாக்கிலேயே வீடு திரும்பியிருப்பவர் அடித்துப் போட்டார் போல் தூங்கிக் கொண்டிருப்பதில் வியப்பு தான் ஏது? மாசா மாசம் ரிப்போர்ட் கார்டில் அப்பாவிடம் கையெழுத்து வாங்குவதே ஒரு சாகசப் படலம் தான். தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி கையிலொரு பேனாவைத் திணித்தால், டீச்சர் கையெழுத்துப் போட்டிருக்கும் இடத்திலேயே கையெழுத்துப் போட முனைவார். "யப்பா... யப்பா... இங்க இல்ல அங்க" என்று குறுக்காலே கூவாது போனால் கதை கந்தல் தான்.
ஒவ்வொரு டிசம்பரின் அரையாண்டுத் தேர்வுகளின் விடுமுறைகளின் போதும் வீட்டோடு சென்னை கிளம்பி விடுவோம் - அப்பாவின் தலைமையில். அப்போது சென்னையில் ஏகப்பட்ட கஸ்டமர்களுக்கு காலண்டர்கள், நோட்புக் ராப்பர்கள் என அப்பாவின் அச்சகத்திலிருந்து சப்ளை செய்து கொண்டிருப்பார்கள் என்பதால் குறைந்தபட்சமாய் ஒரு வாரமாவது மதராசப்பட்டினத்தில் டேரா போட்டிருப்போம். எக்மோரில் ரயிலிலிருந்து இறங்கி ரூமுக்குப் போன அரைமணி நேரத்திற்கெல்லாம் அப்பா கிளம்பிப் போனாரேயானால், அதிர்ஷ்டம் இருந்தால் மதியச் சாப்பாட்டு வேளைக்கு ஏதேனும் ஒரு ஹோட்டலில் பார்த்திட முடியும், இல்லாங்காட்டி இரவு 9:00 மணிக்குத் தான். அப்போதெல்லாம் பெருநகரங்களில் மட்டுமே இங்கிலீஷ் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இரவு 9 மணிக்கு ஓட்டமாய் திரும்பிடும் கையோடு என்னை அள்ளிப் போட்டுக்கொண்டு ஏதாச்சும் ஒரு தியேட்டரின் செகண்ட் ஷோவுக்கு புறப்பட்டு விடுவோம். Star Wars, Enter the Dragon, Fist of Fury, Godzilla என்று சரமாரியாய் அந்நாட்களில் படம் பார்த்ததெல்லாமே அப்பாவுடன் தான். புத்தகங்கள் வாங்கிடவும் சென்னையில் தான் செமத்தியான வாய்ப்புகள் கிட்டிடும் எனக்கு ! சிரமங்கள் எவ்விதம் இருந்தாலும், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் கடைக்குள்ளோ ; அன்றைய கென்னெடி புக் ஸ்டோருக்குள்ளோ நுழைந்த நொடியில் கட்டுப்பாடுகள் சகலமும் காணாதே போய்விடும் ! லூசு போல நான் புக்குகளை அள்ளிக் குவிக்க, சகலத்தையும் மறுப்பின்றி வாங்கித் தந்து விடுவார்கள் ! அந்த வயதில் என்னிடமிருந்த காமிக்ஸ் + மர்ம நாவல் கலெக்ஷன் அநேகமாய் ஒரு சின்ன ஊரின் பொது நூலகத்தை விடவும் பெருசு எனலாம் !!
ரொம்ப சீக்கிரமே பொறுப்புகளைத் தர அப்பா தயங்கியதே இல்லை. "நாடோடி ரெமி" கார்ட்டூன் சினிமா -முத்து காமிக்ஸாய் பரிமாணம் எடுத்த சமயத்தில் என்னை 13 வயதுப் பொடியனாய் அந்த முயற்சிக்குள் புகுத்தியதெல்லாம் இன்று யோசித்தாலும் மலைக்கச் செய்யும் விஷயம். அதை பிள்ளையாண்டான் மீதிருந்த நம்பிக்கை என்பதா? அல்லது ஏதேனும் சொதப்பித் தொலைத்தாலும் சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை என்பதா? சத்தியமாய் தெரிந்திருக்கவில்லை.
பள்ளிப்பருவம் முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டம் எனக்கென காத்திருந்த வேளைகளில், அப்பாவோடு ஏகமாய் உரசல்களும் உதித்தன. அவரது சகோதரர்களுடனான கூட்டு வியாபாரம் அதலபாதாளம் சென்று கொண்டிருக்க, நான் தனிக்கடை போட்டு நடத்திக் கொண்டிருந்த லயன் காமிக்ஸ் அப்பாவுக்கு மனதளவில் ஏகமாய் பூரிப்பைத் தந்திருந்தது தான். ஆனால் வெறும் பூரிப்பை கொண்டு கடன்காரர்களுக்கு வட்டி கட்ட முடியாதே?! அந்நாட்களில் சிவகாசிக்குள் முதன்முறையாக அடியெடுத்து வைத்திருந்த பேங்க் ஆப் மெஜூரா (பின்னாட்களின் ICICI) வங்கியானது - வாடகைக்கு இருந்தது - பூர்வீக வீடும் ; பின்னே முத்து காமிக்ஸின் அலுவலகமாய் இயங்கியும் வந்த ஒரு பஜார் இலக்கில்தான். அங்கேதான் அப்பாவின் அச்சகத்தின் சகல கணக்கு வழக்குகளும்! நானுமே "நம்ம இடத்துல இருக்கிற பேங்க் ஆச்சே?! வசதியாய் போச்சு!" என்ற எண்ணத்தில் அங்கேயே "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" என்ற பெயரில் கணக்கு வைத்திருந்தேன்.முதல் இரண்டு மாதங்களது தடுமாற்றங்களுக்கு பிற்பாடு லயன் காமிக்ஸ் டாப் கியரில் ஓட்டம் எடுக்கத் துவங்க, 1984-ன் கடைசியிலெல்லாம் நம்ம கணக்கில் சதா நேரமும் ஐம்பதாயிரமாவது பணம் இருப்பதுண்டு. 40 வருடங்களுக்கு முன்பான காலகட்டத்தில் அதெல்லாம் ஒரு மன்னரின் பணயத்தொகைக்கு சமானம் !.
அங்கே அப்பாவின் கணக்கிலோ தம்படி இராது. கழுத்தை நெரிக்கும் கடன்காரர்களுக்கு செக் போட்டு தந்திருக்க, அவற்றை மறுதினம் பாஸ் பண்ண பணம் புரட்ட இல்லாத அந்தரபல்டி எல்லாம் அடித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டதொரு சிரமமான நாளினில் அந்த பேங்கின் புண்ணியம் சேர்க்கும் மேலாளர் அப்பாவுக்கு போன் பண்ணி "பையன் அக்கவுண்ட்ல 50,000 இருக்குது சார், அதுல இருந்து மாற்றி விட்டாக்கா செக்கை பாஸ் பண்ணி விடலாமே" என்று சொல்லித் தொலைத்து விட்டார்.அடுத்த பத்தாவது நிமிடம் அப்பாவின் ஸ்கூட்டர் நம்ம புறாக்கூடு ஆபீசில் ஆஜர்."தலை போற அவசரம், ஒரு பத்தாயிரம் வேணும், அப்புறமாய் திருப்பித் தாரேன்" என்றபடியே அப்பா நிற்க, எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. சைக்கிளுக்குக் காற்றடிக்க ஆகும் நாலணா காசுக்கே கணக்கு எழுதி வைத்துக்கொண்டு நான் திரிந்த நாட்களவை. "பத்தாயிரம்" என்பதெல்லாம் ஒரு கிணற்றுக்குள் கிடக்கிறது என்று யாரேனும் சொல்லியிருந்தால், நீச்சல் தெரியாத நிலையிலும் கூட உள்ளாற குதித்திருப்பேன் அன்றைக்கு.பணம் தர மறுத்து நான் நின்ற அடுத்த கால் மணி நேரத்திற்கு, டென்ஷனான அப்பாவை முழுமையாய் தரிசிக்க முடிந்தது. 1984 முதல் 86 வரையிலான ஒன்றரை ஆண்டு காலத்தில், பணம் சார்ந்து இதுபோல் நிறையவே லடாய்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு மூழ்கும் கப்பலின் கேப்டன், புல்லையோ பூண்டையோ - எதையேனும் பற்றி, எப்படியாவது மீண்டு விடச் செய்யும் பிரயத்தனங்களே அவை என்பது பின்னாட்களில் எனக்குப் புரிந்தது. ஆனால் 17 வயதில் பிழைக்க வழி தேடிக்கொண்டிருந்தவனுக்கோ, தாட்சண்யம் பார்க்கும் பக்குவம் வாய்த்திருக்கவில்லை.
என்னதான் ஆபீஸில் அக்னி நட்சத்திரம் பிரபுவும் கார்த்திக்குமாய் முறைத்துக் கொண்டு திரிந்தாலும், வீட்டில் முற்றிலுமாய் வேறொரு சாந்த சொரூப அவதாரில் தான் அப்பா இருப்பதுண்டு. என்னை பிராங்க்பர்ட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பியதெல்லாமே அதன் நீட்சிதான்.1986 ஆகஸ்டில் அப்பாவின் கூட்டு வியாபாரம் பாகப்பிரிவினை கண்ட பிற்பாடு, one fine day 14.5 லட்சம் கடனோடு மட்டும் வெளியேறியிருந்த அப்பாவுக்கு what next ?என்ற கேள்விதான் பிரதானமாய் முன்நின்றது. நாமோ அந்நேரம் லயன் காமிக்ஸ், திகில், ஜூனியர் லயன், மினி லயன் என்பதெல்லாம் போதாதென முத்துக் காமிக்ஸையுமே சேர்த்து கட்டி இழுத்துக் கொண்டிருந்தோம். And தாத்தாவிடமிருந்த சிங்கிள் கலர் அச்சு இயந்திரத்தையுமே நம்மிடத்துக்குக் கொணர்ந்து 'ஜேஜே'வென ஓட்டிக் கொண்டிருந்தோம் தான். அப்பா நினைத்திருந்தால் அந்த ஜோதியில் ஐக்கியமாகி, பணிகளில் ஒரு பகுதியை பிரித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கலாம் தான். ஆனால் "அவன் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளில் நாம் மூக்கை நுழைத்தால் சரிவராது" என்று நினைத்தார்களா..? அல்லது கடந்த ஒன்றரை ஆண்டுகளின் உரசல்களின் வடுக்கள் அவரைத் தயங்கச் செய்தனவா..? அல்லது பரபரவென ஊர் ஊராய் ஓடிக்கொண்டிருந்தே பழகியவருக்கு ஒரு நிலையாய் அமர்ந்து நடத்த வேண்டிய தொழிலானது அத்தனை ஈர்ப்பாகத் தென்படவில்லையா...? நான் அறியேன். For a brief while, இங்கிலீஷில் காமிக்ஸ் போடலாம் எனத் தீர்மானித்து, "புஷ்பா சித்ரகதா" என்ற ஒரு கலர் இதழை ரெடி பண்ணச் செய்தார்கள். ஆனால் ஏன் என்று முழுசாய் நினைவில்லை, அதனை அப்புறமாய்த் தொடரவில்லை.
அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏதேதோ திட்டமிட்டவர், திடுமென ஒரு நாள் ஒரு தீப்பெட்டி உற்பத்திக் குழுமத்தின் அச்சகப் பிரிவில் Consultant என்ற பொறுப்பில் வேலைக்கு சேர்ந்தே விட்டார். எனக்கு சொல்லி மாளா வருத்தம் தந்த நாட்களவை. ஆனால் அப்பாவோ ஏதேதோ மெகா திட்டங்களில் உற்சாகமாகவே இருந்தார்கள். Whatever his merits were, ஆட்களை எடை போடுவதோ, பண விஷயங்களில் கராறாய் இருப்பதோ - அப்பாவின் பலங்களே அல்லதான்.ஏகமாய் உழைப்பை இறைத்த போதிலும், அந்தக் குழுமத்தினர் அதற்கான பலன்களைக் கண்ணில் காட்டவே இல்லை. ஆனாலும் முகம் சுளிக்காமல், ஓராண்டிற்குப் பின் அதே புன்னகையோடே அங்கிருந்து வெளியேறிடவும் செய்தார்கள்.
1987 முதல் 95 வரையிலான பொழுதுகள் அப்பாவின் career-ன் இருண்ட நாட்கள் எனலாம். அவரது கடன் சுமையானது நமது அச்சாணியையுமே ஆட்டிப் பார்க்கத் துவங்கியிருக்க, எனக்கும் வேறெதைப் பற்றியும் சிந்திக்க இயலா ஒரு சூழ்நிலை. சிக்கல்கள் கூடிக்கொண்டே போக, இந்த பதிப்பகம் + அச்சகம் என்ற தொழில்களானவை மாத்திரமே பிழைப்புக்குப் பற்றாதென '94 வாக்கில் மனதில் திடமாய் உறுத்தத் தொடங்கியது. தொடர்ந்த நாட்களில் ஏதேதோ சிந்தனைகளும் முயற்சிகளும் செய்தான பிற்பாடு, அச்சு இயந்திர இறக்குமதித் தொழிலினுள் புகுந்திடத் தீர்மானித்தபோதுதான் அப்பாவிடம் திரும்பவும் அந்த உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. அயல்நாடு செல்லும் வேலைகள், இங்கே பலரையும் சந்திக்க வேண்டிய பொறுப்புகள் என்றிருக்க, சந்தோஷமாய் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். அப்பாவுக்கு அயல்நாட்டுப் பயணங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல். அச்சு இயந்திரங்களைப் பார்வையிட நான் தென் கொரியா சென்றிருந்த ஒரு தருணத்தில், அங்கே தீப்பெட்டி தயாரிப்பு சார்ந்த மிஷினரி துறையிலிருந்ததொரு ஆசாமியின் பரிச்சயம் அகஸ்மாத்தாய் கிட்டியது. எனக்கோ பட்டை போட்ட குதிரை போல் - செய்துகொண்டிருக்கும் பணிகள் தவிர்த்து வேறு எதன் மீதும் பெருசாய் நாட்டங்கள் தோன்றிடுவதில்லை. ஊருக்குத் திரும்பியதொரு நாளில் அது பற்றி அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்க, ‘கண்டேன் புதுத் தொழிலை’ என்று அந்த தீப்பெட்டி தயாரிப்பு இயந்திரம் சார்ந்த துறைக்குள் முழு மூச்சாய் இறங்கி விட்டார்.
வாழ்வில் அதிர்ஷ்ட தேவதையும், காந்தி நோட்டுகளும் அப்பாவிடம் பாசமாய் புன்னகைத்த முதல் தருணம் அதுவே. 1999 வாக்கில் தென்கொரியாவில் இருந்த தீப்பெட்டி இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்தியாவுக்கான ஏஜென்சியைப் பெற்று, தீப்பெட்டிகளின் தலைநகரான சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் செம ஆர்வமாய் மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தார். வாழ்க்கையில் 60-ஐ கடக்கும் நிலையில்தான் பொருளாதார வெற்றி சாத்தியமாகிடும் என விதி தேவன் நிர்ணயம் செய்திருப்பார் போலும். அடுத்த சில பல ஆண்டுகளுக்கு மிகுந்த மகிழ்வோடு, தனிக்காட்டு ராஜாவாய், எனது மூக்கு நுழைப்புகள் துளியுமின்றி தொழிலில் செம பிஸியாக இருந்தார்.துவக்க காலங்களில் இழந்தவற்றை சன்னமாகவாவது ஈடு செய்திட வேண்டுமென, இயன்ற விதங்களில் எல்லாம் நமக்கு உதவிட தயங்கவில்லை. இதோ, இன்று நாம் பணியாற்றிடும் ஆபீஸின் மாடியினை முழுசாக உருவாக்கித் தந்ததே சீனியர் எடிட்டர் தான்.இன்று நமது டிசைனிங் செக்ஷனும் சரி, விசாலமான புத்தகக் கிட்டங்கியும் சரி, ஒரே இடத்தில் சாத்தியமாகி இருப்பதற்கு அப்பாவின் முயற்சிகளே காரணம்.
ரத்த நாளங்களில் அடைப்பு, அவசரமாய் சென்னை அப்போலோவில் பை-பாஸ் அறுவை சிகிச்சை என்பனவெல்லாம் 2004 கண்ணில் காட்டிய எதிர்பாராத இக்கட்டுகள். அந்நாட்களில் எல்லாம் நம்ம குடும்ப டாக்டரைத் தாண்டி துறை சார்ந்த நிபுணர்களைப் பார்ப்பதெல்லாமே பரிச்சயமற்ற சமாச்சாரங்கள் .'உங்க அப்பாவுக்கு இதயத்துல ஏதோ பிரச்சனை இருக்கா மாதிரி தோணுது, மாத்திரை தந்திருக்கேன், ரெண்டு மாசத்துல பார்க்கலாம்' என்று பேமிலி டாக்டர் சொன்னபோது, ஏனோ எனக்கு மட்டும் உள்ளுக்குள் நெருடியது. 'அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்' என்று அடம்பிடித்த அப்பாவை, "காலையிலே போய் சென்னையில் ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்த்துவிட்டு - மாலை ரயிலிலேயே ஊருக்குத் திரும்பிடலாம்" என்று தடிப்போடாத குறையாய் அழைத்துப்போனேன்.அந்நாட்களில் என்னவென்றே தெரியாத ஸ்ட்ரெஸ் டெஸ்ட், ஆன்ஜியோகிராம் இத்யாதி இத்யாதி என்று ஏதேதோ சொன்னார்கள். பேந்தப் பேந்த முழித்தப்படியே நான் நிற்க, சென்னை MIOT மருத்துவமனையில் ஆன்ஜியோ பார்க்க அப்பாவை ஒரு வீல் சேரில் அமர்த்தி இட்டுப்போனார்கள்.கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த டாக்டர், 'இதயத்தில் ஐந்து அடைப்புகள் உள்ளன, அதில் ஒன்று 95% block, உடனடியாக பை-பாஸ் சர்ஜரி பண்ணுவது அவசியம். எங்கே பண்ணப்போறீங்க?என்பதை மட்டும் தீர்மானிச்சுக்கோங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். திகைத்துப் போய் நின்றவன், 'டாக்டர் இதை அப்பாகிட்ட உடனே சொல்லிட வேண்டாம்' என்று விண்ணப்பம் வைக்க, 'நோ நோ, அவருக்குத்தான் முதலில் சொன்னோம், அவர் தைரியமா இருக்கார் பாருங்க' என்றார். தொடர்ந்த நாட்களில் நவீன மருத்துவத்தின் மகிமையும், மன வலிமை கொண்டதொரு மனிதரின் எல்லைகளும் கைகோர்க்கும்போது நிகழும் அதிசயங்களை upclose இருந்து பார்க்க இயன்றது. அடுத்த 25 நாட்களில் சென்னை அப்போலோவில் அப்பாவுடன் துணைக்கு இருந்த பொழுதுகளில் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தைக் கண்முன்னே காண முடிந்தது. மரணத்தின் வாசலில் நின்றவரை திறமையான டாக்டர்கள் மீட்டுத் தந்த மாயாஜாலமும் நிகழ்ந்தது.அதன் பின்பான நாட்களில், போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் ஜீப்பில் உற்சாகமாய் ஏறும் வடிவேலின் அதே உத்வேகத்துடன் ஏதேதோ காரணங்களுக்காக நிகழ்ந்த ஆபரேஷன்களை அப்பா சந்தித்தார்.
2013 முதலாய் அப்பாவின் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் புலர்ந்தது என்று சொல்லலாம். அது வேறொன்றும் கிடையாது, நமது மறுவருகையும் இந்த blog-ன் உதயம் சார்ந்த மகிழ்வும் ஏற்படுத்தித் தந்திருந்த மாற்றங்கள்தான். கனவாய் மட்டுமே இருந்து வந்த தரம் ஒற்றை நாளில் நமது இதழ்களில் சாத்தியமே என்பதைக் காண இயன்ற மகிழ்வு ஒரு பக்கம் எனில், இத்தனை காலமாய் முகமற்ற பிம்பங்களாய் மட்டுமே இருந்து வந்த வாசகர்களோடு ஒற்றை நொடியில் பேசிப் பழகி உரையாடி மகிழக் கிட்டிய வாய்ப்பு இன்னொரு பக்கம்.வாராவாரம் நான் சாமத்தில் எழுதத் துவங்கிய பதிவுகளை நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களோ இல்லையோ, கண் விழித்திருந்து வாசிக்கக் காத்திருந்த முதல் ஜீவன் அப்பாதான். நடுச்சாமத்தைத் தாண்டிய வேளைகளிலும் போன் பண்ணி, 'பிளாக் என்னாச்சு கண்ணா?' என்று வினவிய நாட்களுக்கு கணக்கே இராது.உங்களது ஒவ்வொரு பின்னூட்டம், ஒவ்வொரு கும்மி, ஒவ்வொரு பஞ்சாயத்து, ஒவ்வொரு மூ.ச வைபவம் அப்பாவுக்கு அத்துப்படி. தடிமாடு போல நான் அடுத்த பணிகளுக்குள் புகுந்திருப்பேன், ஆனால் அப்பாவோ அந்தந்தப் பதிவுகளின் துள்ளல்களிலும் எள்ளல்களிலும் இருந்து வெளிவந்திருக்க மாட்டார்.
புத்தக விழாக்களில் உங்களைச் சந்திப்பது என்பது அப்பாவின் வாழ்க்கை அத்தியாயங்களின் உச்சபட்ச highlights என்பதில் துளியும் ஐயமிராது. எந்தச் சந்தில் எந்தச் சாத்து காத்திருக்கிறதோ என்ற கேள்வியோடே வலம் வருபவன் அடியேன் எனும்போது, அப்பாவுக்குச் சாத்தியமாகிடும் அந்த 1000% குதூகலமெல்லாம் நமக்கு ஏது? அதிலும் கருணையானந்தம் அங்கிளோடு ஈரோட்டுக்கு வரத் தொடங்கியது முதலாய் அப்பாவின் ஆயுளில் ஒரு தசாப்தமாவது விருத்தி நேர்ந்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். காரில் கிளம்பி வந்து ஹோட்டலில் தங்கிவிட்டு புத்தக விழாவை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, மறுநாள் காலையில் அரங்கில் உங்களையெல்லாம் சந்திப்பதென்பது அவரது ஆன்மாவோடு பதிந்து போன சந்தோஷப் பொழுதுகள். ஏக வேளையில் மூணு ஆபரேஷன்களைச் செய்திருந்த 2016 / 2017-ல் துணைக்கு அம்மாவையும் அழைத்துக் கொண்டு ஈரோட்டுக்கு வந்திருந்த வேளையினை இன்று நினைவுகளில் அசைபோடும்போது கண்கள் வியர்ப்பதென்னவோ நிஜமே.
And முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கென 2023-ல் ஈரோட்டில் நீங்கள் செய்திருந்த தடபுடல்கள் முற்றிலும் வேறொரு உச்சத்துக்கு அப்பாவை இட்டுச் சென்றதைக் காண முடிந்தது. அந்தக் குறும்படங்கள், 'இரும்புக்கைச் சிற்பப் பரிசு, ராட்சச கேக் என்று நாள் முழுக்க அப்பாவுக்குக் கிட்டிய மரியாதைகளும் மனநிறைவும் விண்ணுலகில் கூட மறந்திருக்காது. Thanks ever so much folks!
2023-ல் அம்மாவின் மறைவுக்குப் பின்னும் தைரியமாய் இருந்தவர், 2025-ன் பிப்ரவரி முதலே இறுதி அத்தியாயத்தைத் தொட்டிருப்பதை உணர்ந்துவிட்டார். கடைசி நாட்களில் அவரது தலையணையைச் சுற்றி இறைந்து கிடந்தவை நமது இதழ்கள் மட்டுமே. பற்றாக்குறைக்கு உலகத்தில் உள்ள அத்தனை தமிழ்ச் சங்கங்களின் விலாசங்களும்தான்.ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த தருணங்களில் கூட அவர்களுக்கெல்லாம் செல்போனில் இருந்து மெயில் அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதெல்லாம் பின்னே அவரது செல்போனை கையில் எடுத்த போதுதான் தெரிய வந்தது.
இதோ, இன்றோடு ஓராண்டாகிவிட்டது - அப்பா விடைபெற்று. And நமது ஒவ்வொரு இதழுக்குமான முதல் வாசகர் நிரந்தரமாய் மிஸ்ஸிங். உலகம் எப்போதும் போலவே சுழன்று கொண்டுதான் இருக்கிறது ; வேளாவேளைக்கு பசியில் வயிறு உருமுவதுமே இயல்பாகவே தொடர்கிறது : யாருக்காகவும் எதுவும் இந்த புவியில் நில்லாது என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிகிறது.ஆனால் அப்பா விட்டுச் சென்றுள்ள ஓர் வெற்றிடம்தான் சூன்யமாகவே தொடர்கிறது. இங்கே ஒரு தீரா வலி என்பது - இருந்த வரையிலும் பெருசாய் கிடைத்திராத அங்கீகாரமும், பாராட்டுகளும் மரணத்துக்குப் பின்னே சமூக வலைத்தளங்களில் பிரவாகம் எடுத்ததைக் கண்ட போதுதான். முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டின் தருணத்திலோ அல்லது அப்பாவின் 80-வது அகவையின் போதோ, இந்தப் பாராட்டுகளை மக்கள் குவித்திருக்கும் பட்சத்தில் ரசித்திட அப்பா இருந்திருப்பாரே! என்ற ஆதங்கம் தான் இன்றளவில் எனக்கு!
வாழ்க்கையில் என்றைக்குமே எனது தொழில் சார்ந்த பாதை வேறாகவே இருந்து வந்துள்ளது ! கனவுகளை ஆராதிப்பது அப்பா ; கனவுகள் மாத்திரமே சோறு போட்டிடாது என்பவன் நான் ! So நிறைய விஷயங்களில் முரண்பட்டுள்ளோம் தான் ! நமது காமிக்ஸ் முயற்சிகளில் கூட டன்கணக்கில் யோசனைகளை சீனியர் எடிட்டர் சொல்லியிருப்பார் தான் ; ஆனால் "நடைமுறை சாத்தியம்" என்ற அளவுகோலில் அவை சொதப்பும் போது ஓரம்கட்டியிருப்பேன் ! இருந்தாலும் அப்பா மனம் தளர்ந்த நாளே கிடையாது ! விடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்கூட ஒரு நெடும் மின்னஞ்சலில் தனது எண்ணங்களை பகிர்ந்திருந்தது தான் highlight ! தனது பரிந்துரைகளை ஏற்க முடியாது போவதன் காரணங்களை நான் விளக்கும் போது வருத்தமே இன்றி ஏற்றும் கொள்வார் ! Always sporting.....always genial !! அது தான் அப்பா !
சரி ரைட்டு... விண்ணுலகில் கொண்டாடிடும் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள்பா! நமது நாயகர்களின் பிதாமகர்கள் உங்களைக் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்ல வந்திருப்பார்கள் என்றும் நம்புவேன். அவர்கள் அத்தனை பேரையும் நம் சார்பில் நலம் விசாரிக்கத் தவறாதீர்கள். Have a great birthday pa 🙏
You will be with us forever !!

🙏🙏🙏
ReplyDeleteகாமிக்ஸ் உள்ளவரை ஐயாவின் நினைவுகள் என்றும் எங்கும் நிறைந்து இருக்கும்🙏🙏🙏🙏🙏
ReplyDelete💐🙏🙏
ReplyDeleteஐயாவின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்🙏🙏🙏
ReplyDelete🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteGreat tribute to a legend sir....
ReplyDeleteஓம் சாந்தி 🙏🙏
ReplyDelete🥹🥹🥹🙏🙏🙏
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteநினைவஞ்சலி
ReplyDeleteஅஞ்சலிகள்...
ReplyDeleteகாமிக்ஸ் காதல்களை இறுது மூச்சு வரை சுவாசித்த எங்கள் ஆசானுக்கு என் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteஅவரிடம் முதலில் பேசிய வார்த்தைகள் தமிழில் இரும்புக்கை மாயாவியை தந்திட்டதிற்கு நன்றி சொன்னது.
காமிக்ஸ் மீட்டிங்கில் எப்போதும் எங்களின் காமிக்ஸ் ஆர்வங்களை கண்டு மகிழ்ந்து இருப்பார்.
எங்கள் சுவாசங்களில் எப்போதும் காமிக்ஸ் நிலைத்திருக்கும், ஆசானே.
அவரை பற்றி மேலும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி
🙏🙏🙏💐💐
🙏🙏💐
ReplyDeleteகாமிக்ஸின் அப்பாவின் பாதக்கமலத்திற்கு உலகைத்தொடர்ந்த கண்களின் மலர்வணக்கங்கள்
ReplyDeleteமுதலாமாண்டு நினைவஞ்சலி 🙏
ReplyDeleteகண்கள் கலங்குகின்றன என்று சொன்னால் அது பொய்.. மனது முழுவதும் ஏதோ ஒரு பாரம் இருந்து கொண்டே இருக்கிறது எப்பவும் இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.. எனக்கு உயிர் தந்தது என் தந்தை என்றால் காமிக்ஸ் பொறுத்தவரை எனது தந்தை சீனியர் எடிட்டர் தான்...
ReplyDeleteசொர்க்கத்தில் இருக்கும் தாங்கள் அங்கும் ஏதேனும் காமிக்ஸ் தொடங்கி அங்கு உள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்...
காமிக்ஸ் உள்ளவரை தாங்களும் எங்கள் மதிப்பிற்குரிய ( எனது முதல் ஆசான்) இன்று வரை எங்களை காமிக்ஸ் இல் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆசிரியரும் எங்கள் குடும்பத்தில் எங்களுடன் எப்போதும்.பயணம் செய்வீர்கள்...🙏🙏🙏🙏 சீனியர் எடிட்டருக்கு எனது முதலாம் ஆண்டு இரங்கலை சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏🙏
இதயபூர்வ அஞ்சலி சார்🙏🌹🙏
ReplyDelete🙏🙏
ReplyDelete🙏🙏🙏🙏
ReplyDelete🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteMy cardial salutes to the great soul who loved readers blessed by God to guide us🙏🙏🙏
ReplyDeleteHi..
ReplyDeleteநெகிழ்ச்சியான பதிவு சார்..
ReplyDelete26th
ReplyDeleteஏதோ தவம் செய்து இருக்கிறீர்கள் sir... ❤️🙏🙏
ReplyDelete..... என் அப்பனை பார்த்தால் 4,5..
வயதில் டவுசரில் ஒன்னுக்கு போகும் சிறுவன் நான் sir.. 😔😔.. இப்படியும் அப்பாக்கள் இருப்பது
நான் வளர்ந்த பிறகே அறிந்தேன்..... மனதை பிசைகிறது...😔😔❤️❤️🙏🙏
எனது அஞ்சலிகள்
ReplyDeleteகண்களை கலங்க வைத்த பதிவு. சீனியர் எடிட்டருக்கு எனது இதய பூர்வ அஞ்சலிகள்.
ReplyDelete30th
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் தலை மகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 💐💐🙏🙏🙏🙏
ReplyDelete💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ReplyDeleteதந்தையின் அறிவுரைகளும், கண்டிப்பான கட்டுப்பாடுகளும் அவர் இருந்தவரை எட்டிகாயாகதான் இருந்தது. அவர் இறந்த பின்தான் யதார்த்த உலகம் முகத்தில் அறைந்தபோதுதான் எவ்வளவு பாதுகாப்பாக இருந்திருக்கிறேன் என உணர்ந்தேன். தந்தையர்கள் நம் மனதளவில் immortal. Senior editor இன்றும் மனதில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார் 🙏🙏🙏
ReplyDeleteஒரு ஆண்டு ஆனாலும், எங்கள் மூத்த ஆசிரியரின் சிந்தனையும் தாக்கமும் எங்களுடன் தொடர்கிறது.
ReplyDeleteமுதல் ஆண்டு நினைவு நாள் — எங்கள் மூத்த ஆசிரியரின் அர்ப்பணிப்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நினைவில்.
எங்களின் குழந்தைப்பருவ கனவுகளின் விநியோகஸ்தரை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்
ReplyDeleteஇதயபூர்வ அஞ்சலிகள்....
ReplyDelete
ReplyDeleteசீனியர் எடிட்டரோடு நேரடியாக பேசிப் பழகும் வாய்ப்பு எனக்கு அமையாது போயிற்று ஆனால் வாட்சப் மூலம் அளவளாவி இருக்கிறேன்.
லயன் முத்து காமிக்ஸ் எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்ற ஒரு கனவு எப்போதுமே அவருக்கு இருந்து வந்தது. அதை எப்படி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறித்து பல ஆங்கில உலக இணைய தளங்களிலிருந்து பதிவுகளை அவர் எனக்கு அனுப்பி இருக்கிறார். எனது பாணியில் அவற்றை தமிழாக்கம் செய்து நமது அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிட சொல்லி இருக்கிறார். சில காலம் நானும் அவற்றை செய்ய முயற்சித்தேன். நேரப் பற்றாக்குறை காரணமாக நடுவில் அதை கைவிட வேண்டியதாயிற்று.
இப்படி அவர் அனுப்பி இருப்பதில் நான் முதலும் அல்ல கடைசியும் அல்ல. பல வாசகர்களிடம் அவர் இப்படி செய்ய சொல்லி இருக்கிறார். சில பதிவுகளின் சாராம்சம் குறித்து படித்த பின்னர் ஈரோட்டு இளவரசரும் ( அவருக்கும் அனுப்பி உள்ளார் ) அது குறித்து என்னிடம் வினவி இருக்கிறார்.
அவர் கண்ட கனவுகளின் அடித்தளம் பல்வேறு தரப்பினருக்கும் லயன் முத்து காமிக்ஸ் சென்றடைய வேண்டும் என்பதே.
அவரது நினைவு நாளில் வரும் காலங்களில் அவர் கண்ட கனவு போல் வாசகர் எண்ணிக்கை பல்கி பெருகி விரிவடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
🙏🙏🙏🙏
ReplyDeleteசூப்பர் பதிவு சார்.
ReplyDeleteஉங்களது blog பதிவுகளில் ஆகச்சிறந்த பதிவுகளில் இன்னும் ஒன்று. மனம் நெகிழச் செய்யும் பதிவு. Awesome Sir
ReplyDeleteசீனியர் எடிட்டரை நினைவு கூறும் போதே நாங்களும் எங்கள் பால்யத்துக்கு சென்று விடுகிறோம்...
ReplyDeleteஎன்றும் மறக்க இயலாத மனிதர்....
தங்களின் வெளிப்படையான பதிவுக்கு நன்றி..
நினைவஞ்சலி.. ஐயா தங்கள் மென்மையை என்றும் மறவோம். பழகிய நிமிடங்கள் ஆயுள் வரை இனிமையாய் தொடரும்.
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteமிகவும் நெகிழ்வான பதிவு - உங்கள் வாழ்க்கை மற்றும் பயண அனுபவப் பதிவுகள் எப்போதுமே தனித்துவமானவை - அவற்றை மட்டும் ஒரு வரி விடாமல் படிக்கத் தவறுவதில்லை.
உலகிலேயே மிகவும் தாமதமாகப் புரிந்து கொள்ளப் படக் கூடிய உறவு என்றால் அது தந்தைக்கும் மகனுக்குமான உறவு தான்; நாம் அவரிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது "நீங்க செஞ்சது சரிதான்ப்பா" என்று சொல்லவோ முற்படும்போது, காலம் நம்மிடமிருந்து அந்த வாய்ப்பைப் பறித்திருக்கும். இறுதியில் நாமும் நம் தந்தையின் பிம்பமாகவே மாறிப் போகிறோம் - அன்று நாம் அவரிடம் வெறுத்த அதே குணங்களில் பலவற்றை இன்று நமக்குள் சுமந்தபடி! அன்று நாம் செய்த அதே தவறுகளை, இன்று நம் மகன்(கள்) நமக்குச் செய்யும் போது பொறுமையுடன் புன்னகைப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
🙏
ReplyDeleteஇதுவரை நாங்கள் அறியாத பல நிகழ்வுகள் பற்றி கூறி உள்ளீர்கள் சார்.
ReplyDeleteபடித்து முடிக்கும் போது கண்களில் நீர் தானாக வருகிறது. தந்தை அறியாத என் போன்றவர்களின் மீது இந்த பதிவின் தாக்கம் கொஞ்சம் அதிகம் தான்.
என்றும் அவரது நினைவுகளோடு பயணிப்போம்.
சூப்பர் சார் உங்க பதிவுகளிலே டாப் பதிவு இதுதான்....வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் விதத்தில் அழகுதான்...சூழும் சோதனைகளளும் சாதனைகளும் வேதனைகளும் யாரையும் தப்ப விடாது....
ReplyDeleteவாழ்க்கை எப்படி போனாலும் உலகே அழகு....அதை பார்க்கப்பழகு...ஒரு தந்தையார் எப்படி குழந்தைகளை வளர்க்கனும் என காட்டி விட்டீர்கள்...நிதமும் கதை கேட்டு வரும் மகனை சலித்துக் கொள்ள மாட்டேன் இனி ...
இது வரை காமிக்ஸ் தான் என மூழ்கி இருந்த எனக்கு திருமண வாழ்க்கை படிக்க விடாமல் தடை போட...உங்க எழுத்துக்கள் இல்லாமல் வாரம் கழியாமலிருந்த என்னை இந்த எலக்சன் வேறு திக்கில் கைகாட்டி இழுக்க ...ப்ளாக்குகளில் மூழ்கும் எண்ணமில்லாமல் போனாலும்...விட மாட்டேன் உன்னை என் நீங்க போடும் அட்டைகளும் திரும்ப இந்த பக்கம் இழுக்க ...இப்பதிவு இன்னோர் பாடம் எனது வாழ்க்கைக்கே ஆசிரியரே...கோடானு கோடி நன்றிகள்....விழாமலே இருக்க முடியுமா...ஆசிரியரின் அன்புப் (இரும்புப்)பிடியிலே
ஒரே வருத்தம் ...இருக்கும் போது பாராட்டியிருந்தால்...தேவையில்லை சார்...நம்ம நம்மள பாராட்டுமளவு இருந்தாலே போதும்...ஒவ்வோர் அப்பாவும் ஓர் சகாப்தம்....ஒரு பாடம் அடுத்த தலை முறைக்கு...எப்படி வாழலாம் ...வாழக் கூடாது...இதை விட வேறு என்ன தேவை...அப்பாவுக்கு மீண்டுமோர் ராயல் சல்யூட்
💐💐💐
Delete🙏🙏🙏🙏
ReplyDeleteHEART FELT TRIBUTE SIR .. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
ReplyDeleteநெகிழ்வான பதிவு ! இதயபூர்வ அஞ்சலி editor சார் !
ReplyDeleteசீனியர் எடிட்டர் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் தலைமகனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ReplyDeleteReply
அப்பாவின் ஞாபகார்த்தமாக MSP anniversary special புக் ஒண்ணு போடுங்க ஜீ
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் பிதாமகருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ReplyDelete// நம்ம புறாக்கூடு ஆபீசில் ஆஜர்."தலை போற அவசரம், ஒரு பத்தாயிரம் வேணும், அப்புறமாய் திருப்பித் தாரேன்" என்றபடியே அப்பா நிற்க, எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. சைக்கிளுக்குக் காற்றடிக்க ஆகும் நாலணா காசுக்கே கணக்கு எழுதி வைத்துக்கொண்டு நான் திரிந்த நாட்களவை. "பத்தாயிரம்" என்பதெல்லாம் ஒரு கிணற்றுக்குள் கிடக்கிறது என்று யாரேனும் சொல்லியிருந்தால், நீச்சல் தெரியாத நிலையிலும் கூட உள்ளாற குதித்திருப்பேன் அன்றைக்கு.பணம் தர மறுத்து நான் நின்ற அடுத்த கால் மணி நேரத்திற்கு, டென்ஷனான அப்பாவை முழுமையாய் தரிசிக்க முடிந்தது. //
ReplyDelete😒😒😒😒😒
எனது பெரிய அண்ணனிடம் எனது அப்பா பணம் கேட்கும் போது எல்லாம் இதே நிலைமைதான், இதனைக்கும் விருதுநகரில் உள்ள ஆபீஸ் முழுமையாக நிறுவி அனுதினமும் கஸ்டமர் பிடித்து அப்பா பெயரில் உள்ள ஆலைவலகத்தில் அவருக்கு கிடைத்த வெகுமதி இதுவே; கடைசி வரைக்கும் எனது அண்ணன் தனக்கும் தனது குடும்பத்திற்கும் சேர்ப்பதில் கவனமாக இருந்தார் 😒 தூத்துக்குடி அலுவலகம் பெரிய வருமானம் இல்லாத நிலையில் அப்பாபட்ட
கஷ்டம் மற்றும் மனஉளைச்சல் அதிகம்.
நான் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு எனது மாத செலவிற்கு பணம் எடுத்து விட்டு மீதி பணத்தை அப்பாவிற்கு அனுப்பி விடுவேன்; ஆனால் அந்த பணத்தில் ஒரு பைசா எடுகாமல் வங்கியில் போட்டு விடுவார், அப்படியே தேவை என்றால் என்னிடம் ஒரு முறைக்கு பலமுறை சொல்லி விடுவார், இது போக நான் ஊர் செல்லும் போது அவர் செய்த செலவு பற்றி கணக்கு காண்பிப்பார். எல்லாம் மூத்த அண்ணன் மூலம் அவர் கற்ற பாடம்😒😒😒😒
😟
Deleteலயன் 40 விழாவுக்கு ஈரோடு வந்த போது சீனியர் எடிட்டர் மற்றும் நீங்கள் தங்கி இருந்த ஓட்டலில் நானும் எனது குடும்பத்துடன் தங்கி இருந்தேன். விழாவின் அன்று காலையில் ஹோட்டலில் காலையில் உணவருந்தும் போது எனது மகனுடன் சீனியர் ஆசிரியர் மற்றும் கருணையானத்தம் அவர்கள் இருவரையும் மகனுடன் பார்த்து ஒரு சில வார்த்தகள் பேசியது மறக்கமுடியாதது.
ReplyDeleteஅன்றைய தினம் விழா மேடையில் எனது மகன் கடவுள் வாழ்த்து பாடி முடிக்கும் வரையிலும் அந்த தள்ளாத வயதிலும் சீனியர் எடிட்டர் மட்டும் கர்ணையானந்தம் அவர்கள் இருவரும் நின்று கொண்டே இருந்தது நெகிழ்ச்சி அடைய செய்தது; இருவரையும் அவன் கடவுள் வாழ்த்து பாடும் போது உட்கார்ந்து இருங்கள் சார் என்று சொல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் அந்த அமைதியான சூழ்நிலையில் அவர்களிடம் சென்று சொல்ல மனது வரவில்லை.😒
அருமை PfB!
Deleteசார். ஒவ்வொரு வருடமும்நினைவு நாளின் போது இரும்புக் கை மாயாவி மறுபதிப்பு வெளியிடுவதாக நீங்கள் கூறியதாக ஞாபகம்
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteSENIOR EDITOR SIR........ You are always with us......
ReplyDelete🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteநெகிழ்ச்சியான பதிவு.. 🙏🙏
ReplyDeleteYou will always be missed sir
ReplyDeleteOm shanthi🙏🙏
சீனியர் எடிட்டரை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள் சார். இன்று நமக்கு உரித்தான கனிகளுக்காக, அன்று விதைகளை விருட்சமாக்கியவர்..🙏🙏🙏
ReplyDeleteஉண்மை 🙏🏻
Deleteமனதை கலங்க வைத்த பதிவு.
ReplyDeleteமகனின்ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து போடுவதென்பது 80 களின் தந்தையர்களுக்கு வாழ்வின் உன்னதமான தருணம்.என் தந்தையார் எனது ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து போடும் அந்த நிமிடம்(இத்தனை வருடங்களாக நினைக்கவே இல்லாமல்) 40 வருடங்களுக்கு பிறகு தற்போது நினைவு வந்து கண்கள் கலங்கிவிட்டேன்
அருமையான, ஆத்மார்த்தமான பதிவு எடிட்டர் சார்! படிக்கும்போது கண்களை நீர் திரையிட்டது. அப்பாவுக்கே காசு கொடுக்க மறுத்துச் சண்டைப் போட்டத்தைப் போன்ற சம்பவங்களைக் கூட வெளிப்படையாய் எழுதி ஆச்சரியப் படுத்தியிருக்கிறீர்கள்!
ReplyDeleteசீனியர் எடிட்டரை ஈரோடு புத்தக விழாக்களில் சந்தித்ததும், அவரோடு உரையாடக் கிடைத்த தருணங்களும் நான் பெற்ற வரமாகவே கருதுகிறேன். சீனியர் எடிட்டருக்குப் பிடித்த வாசகர்களில் ஒருவனாக இருந்ததை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.
இனிவரும் ஈரோடு விழாக்களிலும் கூட சீனியர் எடிட்டர் அரூபமாய் நம்மோடு கலந்திருப்பார் என்றே நம்புகிறேன்!🙏🙏🙏
கண்டிப்பாக சீனியர் எடிட்டர் இதனையும் முதல் ஆளாக படித்து இருப்பார்கள் சார் 🙏🏻
ReplyDelete🙏🙏🙏
ReplyDeleteதாங்கள் தங்களது சிறு வயதில் தந்தைக்கு பண உதவி செய்யவில்லையே என நினைத்து வருந்துவது இயல்பானதே...
ReplyDeleteஆனால்
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்" என்ற திருக்குறளுக்கு உதாரணமாக சீனியர் எடிட்டர் அவர்கள் மூலமாக தொடங்கிய காமிக்ஸ் பயணம் உங்கள் மூலம் தடையின்றி தொடர்கிறது. இது நீங்கள் அவருக்கு செய்யும் மிகப் பெரிய உதவி என நாங்கள் நினைக்கிறோம்.
காமிக்ஸ் வரலாற்றில் முன்னோடி ஆகவும், தங்களுக்கு வழிகாட்டி ஆகவும் இருந்த சீனியர் எடிட்டர் அவர்கள் எப்பொழுதும் போல் உங்களை வழி நடத்துவார். . .
We die as simple humans. Senior editor died a legend.
ReplyDelete